லுலு படுக்கையில் நிர்வாணமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். படுக்கை விரிப்பு உடலைத் தழுவுவதை அவள் விரும்பியதும், அடிக்கடி உடைகளை சலவைக்குப் போடுவது தேவையில்லாத செலவை உண்டு பண்ணி விடுகிறது என்று நினைத்ததுமே அதற்குக் காரணம். ஆரம்பத்தில் இதற்கு ஹென்றி எதிர்ப்பு தெரிவிப்பான்: “இப்படியெல்லாம் அம்மணமாக படுக்கையில் படுக்கக் கூடாது; இது நாகரீகமான செயல் அல்ல; அசிங்கமானது” என்று சொல்லிப் பார்த்தான். கடைசியில் அவனுடைய மனைவியின் வழியே தன் வழி என்று அவளைப்போல தன்னையும் மாற்றிக் கொண்டான். அவன் இப்படி உடனே மாறியதற்கு அவனுடைய சோம்பேறித்தனம்தான் காரணம். அக்கம் பக்கத்தில் யாரேனும் இருந்தால் தீயைக் கிளறிவிடும் கம்பியைப் போல முகத்தை வைத்துக்கொண்டு விறைப்பாகப் பேசுவான். (குறிப்பாக அவனுக்கு சுவிஸ் நாட்டவர்களை வெகுவாகப் பிடிக்கும். அதிலும் ஜெனீவாவைச் சேர்ந்தவர்கள் என்றால் இன்னும் பிடிக்கும். அவர்கள்தான் உண்மையான மேல்தட்டு வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று நினைப்பவன். ஏனென்றால் அவர்கள்தான் காய்ந்த கட்டையைப் போன்ற முகபாவத்துடன் பேசுபவர்கள்). பொதுவாக சிறுசிறு விஷயங்களில் அவன் கவனம் செலுத்துவதில்லை. உதாரணத்திற்கு, சுத்தமாக இருப்பது அவனுக்குப் பிடிக்காது. தனது உள்ளாடைகளைக் கூட அவன் அடிக்கடி மாற்றிக்கொள்ள மாட்டான். சில சமயங்களில் லுலு அவனுடைய உள்ளாடைகளை அழுக்கு சலவைப் பையில் போடும்போது கவனித்திருக்கிறாள்- அவனுடைய தொடை இடுக்கை உரசி உரசி அவனுடைய உள்ளாடையின் ஓரங்களும் பின்புறமும் மஞ்சள் கறை படிந்து காணப்படுவதை அவள் கண்டிருக்கிறாள். தனிப்பட்ட விதத்தில் பார்க்கப் போனால் லுலு ஒன்றும் அழுக்கான விஷயங்களைக் கண்டு முகம் சுளிக்கும் ரகத்தைச் சேர்ந்தவள் அல்ல. அழுக்கான விஷயங்கள் மிகவும் அந்தரங்கமானவை என்றும், மென்மையான நினைவுகளைத் தருபவை என்றும் நினைப்பவள் அவள். உதாரணத்திற்கு சொன்னால் கக்கத்தின் மணத்தை நுகரும் சுகமான அனுபவத்தைப்போல. ஆங்கிலேயர்களின் அன்னியோன்யம் வெளிப்படாத, மணமென்ற ஒன்று இல்லாத உடல்கள் அவளுக்குப் பிடிக்காது. அப்படி இருந்தும் அவளுடைய கணவனின் சுத்தம் குறித்த கவனமின்மையை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. காரணம் அவன் தன்னைக் கவனித்துக்கொள்ளும் முறை அவளுக்கு ஏற்புடையதாக இல்லை. காலையில் பட்டும் படாமலும் பூப்போல எழுந்து அமர்ந்து கொள்வான். மண்டையில் வேறு எந்த விஷயமும் இருக்காது. ஏதாவது கனவுகள், பகல் பொழுதைப் பற்றிய நினைவுகள், குளிப்பதற்குக் குளிர்ந்த நீர், சொறிந்தால் கொடுமையான எரிச்சலைத் தரும் பிரஷின் தடித்துப்போன தூரிகை இவைதான் அவன் மண்டை நிறைய நிறைந்திருக்கும்.
லுலு மல்லாக்க படுத்தவாறு தூங்கினாள். போர்த்தியிருந்த போர்வையில் இருந்த ஓர் ஓட்டையில் தனது இடது காலின் பெருவிரலை நுழைத்திருந்தாள். அது ஓட்டையல்ல; தையல் பிரிந்ததால் உண்டான அந்த இடைவெளி அவளை எரிச்சலடையச் செய்து கொண்டிருந்தது. ‘நாளைக்கு இதை நான் சரிசெய்ய வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே அதன் நூல் முற்றிலும் பிரியும் வரை கால்விரலை வலிந்து உள்ளே நுழைத்தாள். ஹென்றி இன்னும் தூங்கவில்லை. ஆனால் அமைதியாக இருந்தான். கண்னை மூடிக்கொண்டால் தன்னை வந்து ஏதோ இறுக்கமாக அழுத்துவதைப் போல இருப்பதாகவும் விரலைக்கூட அசைக்க முடியாத அளவுக்கு ஏதோ ஒன்று தன்னை கட்டிப்போடுவதைப்போல இருப்பதாகவும் லுலுவிடம் அவ்வப்போது அவன் சொல்லி இருக்கிறான். பெரிய ஈ ஒன்று சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டது. அந்த மாதிரி மொத்தமாக அசைய முடியாமல் மாட்டிக்கொண்ட உடல் ஒன்றைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது லுலுவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இவன் மட்டும் இந்த மாதிரி பக்கவாதம் வந்து அசையாமல் கிடந்தால் காலம் முழுக்க இவனை என்னால் பார்த்துக் கொள்ள முடியும்; குழந்தையைப் போல சுத்தம் செய்ய முடியும்; அவ்வப்போது குப்புற போட்டு அவனுடைய பின்புறத்தில் ‘சப்’பென்று அறைய முடியும்; அவனுடைய அம்மா வருகின்ற நேரங்களில் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அவனை நிர்வாணப்படுத்தி, அவள் அவனை நிர்வாணமாகப் பார்க்கும்படி செய்ய முடியும்; அப்படி அவள் அவனை நிர்வாணமாகப் பார்க்க நேர்ந்தால் முகம் தரையில் மோதும் அளவுக்கு குப்புற விழுந்து விடுவாள்; அவனை அவள் அப்படிப் பார்த்து குறைந்தது பதினைந்து வருடங்களாகி இருக்கும். லுலு தனது கணவனின் இடுப்புப் பகுதியை நோக்கி கையை நீட்டி அவனது அந்தரங்கத்தில் லேசாகக் கிள்ளினாள். ஹென்றி லேசாக முனகினானே தவிர எந்த அசைவையும் காட்டவில்லை. எதற்கும் லாயக்கில்லாதவனாகி இருந்தான். லுலு சிரித்துக்கொண்டாள்: ‘ஆண்மையற்றவன்’ என்ற வார்த்தை அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது. அவள் அவனைக் காதலித்துக் கொண்டிருந்த நாட்களில் தான் சிறுமியாக இருந்தபோது படித்த “கலிவரின் பயணங்கள்” புத்தகத்தில் உள்ள படங்கள் அவள் நினைவுக்கு வரும். அதில் வருவது போல ஹென்றியை தீவின் குள்ள மனிதர்கள் கயிற்றால் கட்டி, கிடத்தியிருப்பதைப்போல கற்பனை செய்வது அவளுக்கு பிடிக்கும். ஹென்றியை அவள் ‘கலிவர்’ என்று அழைப்பாள். அது ஹென்றிக்கும் பிடிக்கும். காரணம் அந்தப்பெயர் ஓர் ஆங்கிலப் பெயர். தன்னுடைய மனைவி படித்தவள் என்ற தோற்றத்தை அது உண்டு பண்ணியதால் அது அவனுக்குப் பிடித்திருந்தது. ஒரே ஒரு கண்டிஷன். அந்தப் பெயரை அவள் உச்சரிக்கும்போது ஆங்கிலேயர்கள் உச்சரிப்பதைப் போல ஓர் இழுவையுடன் உச்சரிக்க வேண்டும். ‘கடவுளே…இதையெல்லாம் நினைத்தால் எனக்கு எரிச்சலாக வருகிறது. படித்த ஒருத்தியைத் திருமணம் செய்ய விரும்பினால் ஜான் பெடரைப் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே! அவளுடைய முலைகளைப் பார்த்தால் வேட்டைக்கு எடுத்துச் செல்லும் கொம்புகளைப் போல இருக்கும். போதாக்குறைக்கு அவளுக்கு ஐந்து மொழிகள் தெரியும். ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் ஷாவ்க்ஷில் (Sceaux) இருக்கும்போது நான் புத்தகம் படிக்கும் நேரங்களில், எந்தப் புத்தகமாக இருந்தாலும் சரி, அவனுடைய குடும்பத்தினர் என்னைப் படுத்தும் பாடு சொல்லி மாள முடியாது. என்ன படிக்கிறேன் என்பதை நோட்டம் விட ஒரு கூட்டம் முனைப்புடன் என் பின்னாடியே திரியும். அவனுடைய கடைசி சகோதரி என்னிடம் வந்து “லூஸி, இதெல்லாம் உனக்குப் புரியுமா?” என்று கேட்பாள். இதில் பிரச்சினை என்னவென்றால் நானும் பல விஷயங்களில் விஷய ஞானம் உள்ளவள்தான் என்பதை அவன் நினைத்துப் பார்ப்பதே இல்லை. சுவிஸ் மக்கள் எல்லாவிதத்திலும் சிறந்தவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அவனுடைய மூத்த சகோதரியை யாரோ ஒரு சுவிஸ் நாட்டுக்காரனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அவளும் ஐந்து குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறாள். அவர்களும் அங்கிருக்கும் மலைகளை இவனுக்கு சுற்றிக் காண்பித்து இருக்கிறார்கள். என்னுடைய உடல் வேறு மாதிரியாகப் படைக்கப்பட்டிருக்கிறது. என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. குழந்தை பெற்றுக்கொள்வது என்பது பெரிய சிலாகிக்க வேண்டிய விஷயம் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. என்னுடன் வெளியே வரும் போதெல்லாம் அவன் என்ன செய்வான் தெரியுமா? அடிக்கடி மூத்திரப்பிறைக்குள் சென்று மறைந்து கொள்வான். அவன் எப்போது வெளியே வருவான் என்று கடைகளின் கண்ணாடிகளைப் பார்த்த வண்ணம் நான் காத்துக் கிடப்பேன். அந்த நேரத்தில் என்னைப் பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றும்? பேன்ட்டை மேலே இழுத்துக்கொண்டு முழங்கால்களை கிழவனைப் போல வளைத்துக்கொண்டு அவன் வெளியே வருவான்.
லுலு போர்வையின் ஓட்டையில் இருந்து தன் கால் விரலை வெளியே எடுத்தாள். பாதங்களின் மென்மையான சதைப்பகுதியைத் தடவிப் பார்த்து, சிலிர்த்துக்கொள்ளும் சுகம் வேண்டி பாதங்களை ஒன்றோடொன்று பிணைத்துக் கொண்டாள். ஏதோ மொல மொலவென்ற சத்தம் கேட்டது. அது அவளுடைய வயிற்றில் இருந்து வரும் சத்தம். ‘இந்தச் சத்தம் என்னை வெறுப்பூட்டுகிறது. இந்தச் சத்தம் என்னுடைய வயிற்றில் இருந்து வருகிறதா அல்லது அவனுடைய வயிற்றில் இருந்து வருகிறதா என்பதை என்னால் ஒருபோதும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை.’ அவள் தனது கண்களை மூடிக்கொண்டாள். வயிற்றுக்குள் இருக்கும் திரவங்கள் தாறுமாறாக ஓடும்போது ஏற்படும் சத்தம்; மெல்லிய குழாய்கள் வழியாக ஓடும் குமிழிகளாக இருக்கலாம்; எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைதான். ரைரெட்டுக்கும் இதைப்போல பிரச்சினை இருக்கிறது. எனக்கும்கூட அந்தப் பிரச்சினை இருக்கிறது. (அதைப் பற்றி நினைத்துப் பார்க்க நான் விரும்பவில்லை. நினைத்த மாத்திரத்தில் வயிற்றுவலி வந்துவிடும் போல இருக்கிறது). ரைரெட்டுக்கு என்னைப் பிடிக்கும். ஆனால் என்னுடைய வயிற்றின் குமுறலை அவளும் விரும்பமாட்டாள். என்னுடைய குடல்வாலை ஒரு கண்ணாடிக் குடுவையில் போட்டு அவளிடம் காண்பித்தால் அவளுக்கு அதை அடையாளம் காணமுடியாது. என்னிடம் அவள் அன்பாக இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த மாதிரி கண்ணாடிக் குவளையை அவள் கையில் தந்தால் அது அவளை சலனப்படுத்தாது. இது என்னுடையதாயிற்றே என்ற உணர்வு அவளுக்கு வரப்போவதில்லை. ஒருவரைக் காதலித்தால் அவர் தொடர்பான எல்லாவற்றையும்தானே காதலிக்க வேண்டும்- உணவுக்குழாய், கல்லீரல், குடல் எல்லாவற்றையும் காதலிக்கவேண்டும். இந்த உறுப்புகளோடு நாம் பரிச்சயமற்றவர்களாக இருப்பதால் அவற்றை நம்மால் காதலிக்க முடியவில்லையோ என்னவோ. கைகளையும், மற்ற வெளியில் தெரியும் உறுப்புகளையும் நான் கண்ணால் பார்ப்பதைப்போல அவளும் பார்த்திருந்தால் ஒருவேளை அவற்றையும் காதலிக்க முடிந்திருக்கும். நட்சத்திர மீன்கள் நம்மை விட அதிகமாக காதல் செய்கின்றன; சூரிய வெளிச்சம் படும்போதெல்லாம் அவை தங்கள் வயிற்றை விரித்துக் காட்டி காற்றை உள்ளே இழுத்துக் கொள்கின்றன. நாம் அதைப் பார்க்க முடியும். அந்த மாதிரி நம்முடைய வயிற்றை தொப்புள் வழியாக நம்மால் விரித்துக் காட்ட முடியுமா? அப்படியே கண்களை மூடிக் கொண்டாள். நேற்று கேளிக்கையின்போது தெறித்த நீல நிற வளையங்களைப்போல கண்களுக்குள் நிறங்கள் பரவத் தொடங்கின.
‘அந்த வளையங்களுக்குள் ரப்பர் அம்புகளை வீசிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வீச்சுக்கும் எழுத்துகள் மின்னித்தெரியும். மின்னும் எழுத்துகளில் ஒரு நகரத்தின் பெயர் தெரியும். என்னைப் பின்புறத்தில் இருந்து நெருக்கமாக அழுத்தவேண்டும் என்ற பைத்தியக்காரத்தனமான விருப்பத்திற்காகவே டைஜன் (Dijon) நகரத்தின் பெயர் வரும்வரை என்னை அங்கே நிற்க வைத்திருப்பான். என்னை பின்புறத்தில் தட்டும் மனிதர்களை நான் வெறுக்கிறேன். எனக்குப் பின்புறம் என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. என் கண் முன்னே வராமல் எனக்குப் பின்னால் நின்று கொண்டு என் உடல் மேல் அத்துமீறல் நிகழ்த்தும் மனிதர்களை நான் சுத்தமாக வெறுக்கிறேன். திடீரென்று கைப்பிடியளவு சதைக் கோளங்களை கவ்விப் பிடிப்பார்கள்; ஆனால் அவர்கள் கையை நம்மால் பார்க்க முடியாது; அவர்கள் கைகள் மெதுவாக மேலெழும்புவதை உணர முடியும்; ஆனால் எதை நோக்கி நகர்த்துகிறார்கள் என்பதை அனுமானிக்க முடியாது. தங்களுடைய கண்கள் கொள்ளுமட்டும் அவர்கள் உங்களை ரசிப்பார்கள்; ஆனால் நம்மால் அவர்களைப் பார்க்க முடியாது. இந்த இயலாமை அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. இப்படியெல்லாம் ஹென்றிக்கு சிந்திக்கத் தெரியாது. அவன் சிந்திப்பதெல்லாம் எப்படி எனக்குப் பின்னால் வந்து நின்று கொள்வது என்பதைப் பற்றித்தான். அவன் வேண்டுமென்றே அப்படி வந்து நின்றுகொண்டு எனது பின்புறத்தை தடவ விரும்புவான் என்று எனக்குத் தெரியும். அப்படி தடவும்போது அவமானத்தால் (அவமானம் என்ற உணர்வு எனக்கு இருப்பதால்) நான் குன்றிப்போவேன் என்பது அவனுக்குத் தெரியும். அப்படி குன்றிப்போய் நிற்பது அவனுக்கு உற்சாகத்தைத் தரும். அவனைப்பற்றி நான் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை (உள்ளூர பயப்படுகிறாள்). ரைரெட்டைப் பற்றி நான் நினைத்துப் பார்க்க விரும்புகிறேன்.’
பிறகு ஒவ்வொரு மாலையும் அவள் ரைரெட்டைப் பற்றி நினைக்க ஆரம்பித்தாள். அதுவும் ஹென்றி எரிச்சலுடன் மூக்கைச் சிந்திக்கொண்டு தொண்டையைக் கமறும்போது நினைக்க ஆரம்பித்தாள். ஆனால் அவளுடைய நினைவு தடைப்பட்டது. அவளுடைய இடத்தில் இன்னொருத்தி இருப்பதைப் போல நினைத்துப் பார்ப்பாள். வெடவெடவென்ற கரிய முடிகள் அவளுடைய சிந்தைக்குள் நுழைந்து அவளை ஒருமுறை உலுக்கும். பக்கத்தில் இருந்ததைப்போல ஒரு பதற்றம் பற்றிக்கொள்ளும், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாததால் ஏற்பட்ட நடுக்கம், தெரிவது வெறும் முகம்தான் என்றால் நினைவில் இருந்து உடனே அகன்றுவிடும். இந்த மாதிரியான நினைவுகளின் அலைக்கழிப்பில் அவள் பல இரவுகள் தூங்காமல் கண்மூடாமல் விழித்திருக்கிறாள். ஒரு மனிதனின் நீள அகலங்கள் தெரிந்தபின் குறிப்பாக அவனுடைய ‘ஆண்மையின்மை’ பற்றி தெரிந்தபின் இந்த மாதிரியான சிந்தனைகள் வருவது பெரிய கொடுமை. ஆனால் ஹென்றியைப் பற்றி மட்டும் நினைத்தால் இந்தப் பிரச்சினைகள் வருவதில்லை. தலையில் இருந்து கால் விரல் வரை என்னால் அவனைப் பற்றி கற்பனை செய்ய முடியும். மிருதுவான அவனுடைய அங்கங்கள் என்னைத் தொட்டிருக்கின்றன. இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இருக்கும் வயிற்றைத் தவிர சாம்பல் நிறத்தில் இருக்கும் அவனுடைய அனைத்து உறுப்புகளும் என்னைத் தீண்டியிருக்கின்றன. நல்ல உடல்வாகு கொண்ட மனிதன் அமரும்போது வயிற்றில் மூன்று மடிப்புகள் விழும் என்று அவன் என்னிடம் சொல்லி இருக்கிறான். ஆனால் அவன் உட்கார்ந்தால் ஆறு மடிப்பு விழும். அதை இரண்டு இரண்டாக எண்ணிக் கொள்வான். மற்றவர்களைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. ரைரெட்டைப் பற்றி நினைப்பதுகூட அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
“லுலு இங்கே பார்… அழகான ஆண் ஒருவனின் உடம்பு எப்படி இருக்கும் என்று உனக்குத் தெரியாது.” என்று சொல்லுவாள். அவள் பேசுவது கேலிக்கூத்தான ஒன்றுதான் என்பது எனக்குத் தெரியும். இறுகிப்போன தசைகளுடன் இருக்கும் உடம்பைத்தான் அவள் குறிப்பிடுகிறாள். பேட்டர்சனின் உடம்பு கூட அந்த மாதிரிதான். அவன் என்னைக் அவன் உடலோடு சேர்த்துக் கட்டியணைத்தபோது கம்பளிப்பூச்சியின் மென்மையை உணர்ந்திருக்கிறேன். ஹென்றியைத் திருமணம் செய்து கொண்டது கூட அவன் பாதிரியாரைப் போல மிருதுவானவனாக இருந்தான் என்பதால்தான். மேலங்கியுடன் இருக்கும் பாதிரியார்கள் பெண்களைப்போல மென்மையானவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் காலுறைகளையும் அணிவதுண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு பதினைந்து வயதிருக்கும்போது அவர்களுடைய மேலங்கியைத் தூக்கிப்பார்த்து அவர்களுடய முழங்கால்களையும் உள்ளாடைகளையும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அவர்களுடைய கால்களுக்கிடையில் ஏதோ ஒன்று இருக்கிறது என்ற எண்ணமே அப்போது எனக்கு வேடிக்கையாக இருந்தது.
கருப்பினத்தவனுக்கு இருப்பதைப் போன்ற அந்த விறைப்பான முடி. தொண்டைக்குள் பந்து ஒன்றைப்போல் அடைபட்டிருக்கும் துக்கம். அவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டபோது ரைரெட்டின் காதுகள் தெரிந்தன. மிகவும் சிறிய காதுகள். சிகப்பு நிறத்திலும் பொன்னிறத்திலும், இனிப்பு மிட்டாயின் நிறத்தில். அதைப் பார்த்தபோது லுலுவுக்கு பெரிதாக உற்சாகம் தோன்றவில்லை. அது தோன்றிய நேரத்தில் ரைரெட்டின் குரல் அவளுக்குக் கேட்டது. அது லுலுவுக்கு சுத்தமாகப் பிடிக்காத, கூரான நேர்த்தியான குரல். “லுலு, நீ பியரியுடன் எங்காவது ஓடி விடு. அதுதான் நீ செய்யக்கூடிய ஒரே புத்திசாலித்தனமான காரியம்” என்றாள் அவள். எனக்கு ரைரெட்டை மிகவும் பிடிக்கும். ஆனால் தான் சொல்வதெல்லாம் மிகவும் முக்கியமான முடிவுகள் போலவும் அதன்படிதான் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைப்பதும் எனக்கு எரிச்சலைத் தருகிறது. கடந்த இரவு கூட நாங்கள் கண்ணாடி மாளிகையில் இருந்த போது ரைரெட் ஏதோ கவலையுற்ற தொனியில் தான் சொல்வது என்னுடைய நல்லதற்குத்தான் என்பதைப்போல குனிந்தவாறு சொன்னாள்: “உன்னால் ஹென்றியுடன் சேர்ந்து வாழ முடியாது. ஏனென்றால் நீ அவனை காதலிக்கவில்லை. அப்படி இருக்கும்போது நீ அவனுடன் சேர்ந்திருப்பது பெருங்குற்றம்.” அவனைப் பற்றி ஏதாவது குறைகூற வாய்ப்பு கிடைக்காதா என்பதைப்போல பேசுவாள். அவள் அப்படி புறம் பேசுவது நல்லதல்ல. அவளைப் பொறுத்தவரை அவன் அவளிடம் நல்லவிதமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறான். அவனை நான் காதலிக்கவில்லை என்பது உண்மையாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ரைரெட்டுக்கு என்னிடம் வந்து அப்படிப் பேச எந்த உரிமையும் இல்லை. அவளுக்கு எல்லாமே சாதாரணமாகவும் சுலபமாகவும் தெரிகிறது. உனக்குப் பிடித்தாலும் சரி பிடிக்காவிட்டாலும் சரி. அவள் என்னை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த இடம் எனக்குப் பிடித்திருக்கிறது. அப்புறம் அவனையும் கொஞ்சம் பிடித்திருக்கிறது. காரணம் அவன் என்னுடைய கணவன். எனக்கு அவளை அடிக்க வேண்டும் போல இருக்கிறது. அவள் கொழு கொழுவென்று இருப்பதைப்பார்த்தாலே அவளை நன்றாக அடித்து காயப்படுத்த வேண்டும் போல இருக்கிறது. ஆனால் அப்படி செய்வது பெரிய குற்றம். அவள் தனது கையைத் தூக்கும்போது அவளுடைய கக்கத்தை நான் பார்த்திருக்கிறேன். முடிகள் மழிக்கப்பட்ட அவளுடைய கைகளையும் கக்கத்தையும் பார்க்க எனக்குப் பிடிக்கும். அது பாதி திறந்து இருப்பதைப் பார்க்கும்போது வாய் திறந்து இருப்பதைப்போல தெரியும். சுருண்டிருந்த முடிகளுக்குக் கீழே இருந்த கரு நீல நிறத்தில் சுருங்கிப்போன தசைப்பகுதியை லுலு பார்த்திருக்கிறாள். ‘குண்டு மினர்வா’ என்று பியரி அவளைக் கேலி செய்வதுண்டு. அவன் அப்படி அழைப்பது அவளுக்குப் பிடிக்காது. அந்த சமயம் லுலு சிரிப்பாள். லுலுவுக்கு அவளுடைய கடைக்குட்டி சகோதரன் ராபர்ட் நினைவுக்கு வருவான். ஒருநாள் பெட்டிகோட் மட்டும் அணிந்து வேறு எந்த உடையையும் அணியாமல் இருந்த போது “உன்னுடய கக்கத்தில் ஏன் முடி இருக்கிறது” என்று ராபர்ட் கேட்டான். “அது ஒரு வியாதி” என்று அவள் பதிலளித்தாள். உடை மாற்றும்போது இப்படி ஏதாவது கிண்டலாகக் கேட்பான் என்பதற்காகவே அவள் தன் தம்பி முன் உடை மாற்றுவாள். இந்த மாதிரியான கிண்டல் கலந்த வார்த்தைகளை அவன் எங்கே கற்றுக்கொண்டான் என்று அவளுக்கு ஆச்சரியமாக இருக்கும். அவன் அவளுடைய உடைகளைக் கையாளும் விதம் அலாதி. மிகவும் கவனமாக அழகாக மடித்து வைப்பான். திறமையான தேர்ந்த கைகள் அவனுக்கு. ஒருநாள் அவன் மிகப்பெரிய ஆடை வடிவமைப்பவனாக வருவான். அந்த வேலை ஒரு கவர்ச்சிகரமான வேலைதான். நான் அந்த வேலையைப் பார்த்தால் அவனுக்கு அழகான உடைகளை உருவாக்கித் தந்திருப்பேன். ஆணாகப் பிறந்தவன் உடையலங்காரப் பிரியனாக ஆக விரும்புவது கொஞ்சம் எதார்த்தமாகத் தெரியவில்லை. நான் பையனாகப் பிறந்திருந்தால் உலகம் சுற்றும் வாலிபனாகவோ பெரிய நடிகனாகவோ ஆக விரும்பியிருப்பேன். சத்தியமாக ஆடை வடிவமைக்கும் ஆளாக விரும்பியிருக்க மாட்டேன். அவன் எப்போதும் கனவுலகில் சஞ்சரிப்பவன். அதிகமாகப் பேசமாட்டான். தன்னுடைய கொள்கைகளில் வலுவான பிடிப்புடன் இருப்பான். நான் ஒரு கன்னியாஸ்திரியாகி அழகான வீடுகளுக்கு சென்று பணம் கேட்டிருக்கலாம். என்னுடய கண்கள் எல்லாம் மிருதுவான தசையைப்போல மென்மையாகி விட்டதைப்போல இருக்கிறது. நான் தூங்கப்போகிறேன். முடமுடப்பான என்னுடைய தலையங்கிக்குள் வெளிறிப்போன அழகிய என் முகத்தை நுழைத்துப் பார்த்தால் நானும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவளைப் போலத்தான் தெரிந்திருப்பேன். நூற்றுக்கணக்கான இருண்டுபோன வீட்டுத் தாழ்வாரங்களை என்னால் பார்த்திருக்க முடியும். ஆனால் வேலைக்காரி வந்து விளக்குகளை “ஆன்’ செய்துவிட்டு போயிருப்பாள். அப்புறம் அங்கிருந்த குடும்பப் புகைப்படங்களைப் பார்த்திருப்பேன். மேசைகளில் இருந்த வெண்கல சிலைகளைப் பார்த்திருப்பேன். கையில் சிறிய புத்தகம் ஒன்றையும் ஐம்பது ஃப்ராங்க் நோட்டையும் ஏந்தியவாறு அவள் வருகிறாள். “இங்குதான் இருக்கிறீர்களா சிஸ்டர்?” என்று கேட்டிருப்பாள். “மிகவும் நன்றி, கடவுள் அருள் புரியட்டும். மீண்டும் சந்திக்கும்வரை பிரிந்திருப்போம்” என்று சொல்லி இருப்பேன்.
என்னால் உண்மையான கன்னியாஸ்திரியாக இருந்திருக்க முடியாது. பஸ்ஸில் பயணம் செய்யும் நேரங்களில் எவனாவது ஒருவனை கண்ணோடு கண்ணாகப் பார்க்க வேண்டியிருக்கும். பார்த்த நொடியில் அவனும் விழுந்து விடுவான். பின்னர் என்னைப் பின்தொடர்ந்து வந்து கிறுக்குத்தனமாக எதையாவது உளறி வைப்பான். அப்புறம் நான் போலீஸைக் கூப்பிட்டு அவனை லாக் அப்பில் தள்ள வேண்டியிருக்கும். சேகரித்த பணம் எல்லாவற்றையும் நானே வைத்துக் கொண்டிருப்பேன். அதை வைத்து என்ன வாங்கியிருப்பேன்? ஏதேனும் முறிவு மருந்து வாங்கியிருக்கலாம். அப்படி செய்தால் அது அல்பம். என்னுடைய கண்கள் மிருதுவாகிக் கொண்டு வருவது எனக்குப் பிடித்திருக்கிறது. அவை நீரில் ஊறவைக்கப்பட்டிருக்கிறதோ என்று நீங்கள் நினைக்கக்கூடும். என் உடல் முழுதும் அதில் சுகம் காண்கிறதோ என்று கூட நீங்கள் நினைக்கக்கூடும். நீலக்கல்லும் வைடூரியமும் பதிக்கப்பட்டத் தலைப்பாகை திடீரென்று பயங்கரமான காளையொன்றின் தலையைப்போலத் தோன்றியது. ஆனால் லுலு பயப்படவில்லை. தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்: ‘கேன்டால் முகட்டின் பறவைகள் பறந்து வருகின்றன. கவனம்.’
நீண்ட சிகப்பு வண்ணத்தில் ஆறு ஒன்று காய்ந்துபோன நிலபரப்பில் ஓடிக்கொண்டிருந்தது. லுலு இறைச்சியைக் கூழாக்கும் மெஷினை நினைத்துக் கொண்டாள். பிறகு தலையில் அப்பிக் கொள்ளும் பசையை நினைத்துக் கொண்டாள்.
“இதெல்லாம் பெரிய தவறு”- அந்த இருட்டில் எழுந்து நேராக உட்கார்ந்தாள். கண்களைத் திறப்பதற்கு சிரமமாக இருந்தது. இவர்கள் என்னைத் துயரப்படுத்துகிறார்கள். அது அவர்களுக்குத் தெரியவில்லையா? ரைரெட் மனதில் நினைத்திருப்பது நல்ல விஷயங்கள்தான். மற்றவர்களைப் பொறுத்தவரை அவள் சொல்வதெல்லாம் ஏற்புடையதுதான். என்ன இருந்தாலும் நான் என்ன நினைக்கிறேன் என்பதையும் அவள் நினைத்துப் பார்க்க வேண்டுமல்லவா? அவன் ஒருமுறை சொன்னான்: “நீ என்னிடம் வருவாய்” கர்ணகடூரமாக கண்களை விழித்து உருட்டி என்னைப் பார்த்து சொன்னான். “நீ என்னுடைய வீட்டுக்கு வருவாய். நீ எனக்கு அப்படியே வேண்டும்” என்றான். ஏதோ வசியம் செய்பவனைப்போல அவன் பேசியபோது அவனுடைய கண்களைப் பார்க்க எனக்குப் பயமாக இருந்தது. என்னுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு பிசைந்தான்; அவனை அந்த மாதிரியான கண்களுடன் அவனைப் பார்க்கும்போது அவனுடைய மார்பு முடிகளைப் பற்றித்தான் நான் நினைப்பேன். நீ வருவாய். உன்னை அப்படியே எனக்கு வேண்டும்- இப்படியெல்லாம் அவனால் எப்படி பேச முடிகிறது? நான் ஒன்றும் நாய் அல்ல.
நான் உட்கார்ந்தபோது அவன் என்னைப் பார்த்து சிரித்தான். அவனுக்காக நான் பயன்படுத்தும் பவுடரை மாற்றிக் கொண்டேன். கண்களுக்கு மை தீட்டிக்கொண்டேன். அதெல்லாம் அவனுக்குப் பிடிக்கும் என்றுதான் மாற்றிக்கொண்டேன். ஆனால் இதை எதையும் அவன் பாக்கவில்லை. என் முகத்தைப் பார்க்காமல் என் முலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான். அது வற்றி வறண்டு கிடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அப்படி கிடந்தால் அது அவனுக்கு எரிச்சலைத் தரட்டுமே என்றுதான் அப்படி நினைத்தேன். என்னிடம் இருப்பவை ஒன்றும் பெரிதானவை அல்ல. மிகச் சிறியவைதான். நைஸில் இருக்கும் என்னுடைய வீட்டுக்கு நீ வர வேண்டும் என்றான். அந்த வீட்டில் பளிங்கினால் செய்யப்பட்ட மாடிப்படிகள் இருக்கும், அந்த வீடு கடலை நோக்கிப் பார்த்த வண்ணம் கட்டப்பட்டிருக்கும், அங்கே நாள் முழுக்க நாம் இருவரும் நிர்வாணமாகத் திரியலாம் என்றெல்லாம் சொன்னான். அம்மணமாக மாடிப்படிப்படிகளில் ஏறுவதை நினைத்தால் எனக்கு வேடிக்கையாக இருந்தது. அப்படி ஏறும்போது அவனை எனக்கு முன்னால் ஏறச் சொல்லிவிடுவேன். அப்போதுதான் அவனால் என்னைப் பார்க்க முடியாது. இல்லையென்றால் அவன் பார்க்கிற நேரத்தில் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது; அப்படியே அசையாமல் நின்று விடுவேன். இப்படியே இவன் குருடாகிவிட்டால் நன்றாக இருக்குமே என்று இதயப்பூர்வமாக வேண்டிக் கொண்டு நிற்பேன். எப்படி இருந்தாலும் இது எதுவும் எதையும் மாற்றி விடப்போவதில்லை. அவன் அங்கே இருக்கிறான் என்ற நினைப்பு வந்தாலே போதும். நான் அம்மணமாக இருப்பதைப் போன்ற உணர்வு வந்துவிடுகிறது. அவனுடைய கரங்களால் என்னைத் தூக்கினான். பார்ப்பதற்கு குரூரமானவனாக இருந்தான். “இப்போதெல்லாம் நீ என்னைப் படாதபாடு படுத்துகிறாய்” என்றான். அவன் சொன்னதைக் கேட்டு எனக்குப் பயமாக இருந்தது. “ஆமாம். உன்னை சந்தோசப்படுத்தவேண்டும் என்று நான் நினைக்கிறேன். காரிலோ படகிலோ நாம் எங்காவது பிரயாணிக்கலாம். இத்தாலிக்குப் போகலாம். உனக்கு என்ன பிரியமோ அதையெல்லாம் நான் தருகிறேன். இந்த வீட்டில் போதிய வசதிகள் இல்லை. நாம் தரையில் விரிப்பை விரித்துதான் தூங்க வேண்டி இருக்கும்.” அவனுடைய கரங்களில் நான் தூங்க வேண்டும் என்று விரும்புகிறான். அப்போதுதான் அவனுடைய உடல் வாசத்தை என்னால் நுகர முடியுமாம். அவனுடய மார்பை எனக்குப் பிடிக்கும். நல்ல அகலத்துடனும் பழுப்பு நிறத்திலும் அது இருந்தது. ஆனால் அதில் கொஞ்சம் மயிர் அடர்ந்திருந்தது. எனக்கு மார்பில் மயிர் அடர்ந்திருக்கும் ஆண்களைப் பிடிக்காது. அவனுடைய மார்பு முடி கருமையாகவும் மொசுமொசுவென்று மென்மையாகவும் இருந்தது. சில சமயம் அதை வருடப் பிடிக்கும். சில சமயங்களில் அதை நினைத்தாலே பயமாக இருக்கும். அதைத் தொடக்கூடாதென்று நான் விலகி ஓடும் சமயங்களில் அவன் என்னை பிடித்திழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொள்வான். அவனுடைய கரங்களில் நான் உறங்க வேண்டும். அதனால் அவனுடைய கரங்கள் என்னை அழுந்த அணைத்துப் பிடித்திருக்கும். அவனுடைய உடல் வாடையை நான் நுகர்வேன். இருட்டிய பிறகு கடலின் சத்தம் எங்களுக்குக் கேட்கும். அவனுக்கு ‘அது’ வேண்டுமென்றால் நடுநிசியில் கூட எழுந்து கொள்வான். நான் நோய்வாய்ப்பட்டிருக்கும் நேரங்களில் மட்டும்தான் என்னால் நிம்மதியாகத் தூங்க முடியும்.
லுலு கண்களைத் திறந்து பார்த்தாள். தெருவில் இருந்து ஜன்னல் வழியாக நுழைந்து வந்த சூரியக்கதிர்கள் ஜன்னல் திரையை சிவப்பு நிறமாக்கி இருந்தன. கண்ணாடியில் சிவப்புப் பிரதிபலிப்பு தெரிந்தது. லுலுவுக்கு அந்த சிகப்பு நிறம் பிடித்திருந்தது. அங்கிருந்த சேர் ஒன்று வெளிச்சத்தில் தாறுமாறான நிழலாக ஜன்னலின் மீது விழுந்து கொண்டிருந்தது. ஹென்றி தனது பேன்ட்டை அந்தச் சேரின் மீது போட்டிருந்தான். அவனுடைய பல் கிளிப் ஏதோ வெற்றிடத்தில் தொங்குவதைப் போல தொங்கிக் கொண்டிருந்தது. ‘அவனுக்குப் புதிதாக பல் கிளிப் ஒன்று வாங்க வேண்டும். இல்லை… இல்லை வாங்கக் கூடாது. அவனைவிட்டு விலகிப்போக நான் விரும்பவில்லை. என்னை நாள் முழுதும் முத்தமிடுவான். நான் அவனுடையவளாக இருப்பேன். அவனுடைய மொத்த இன்பமாக! அவன் என்னை நோக்கி காதல் பார்வை பார்ப்பான். இவள்தான் எனக்கு எல்லாம். இன்பமே இவள்தான் என்று நினைப்பான். அவளை அங்கும் இங்கும் தொட முடியும். நான் விரும்பும் போதெல்லாம் அந்த மாதிரி மீண்டும் மீண்டும் என்னால் செய்ய முடியும் என்று நினைப்பான்’.
போர்ட் ராயல் ஹோட்டல்.
லுலு போர்த்தியிருந்த போர்வையை ஒருமுறை உதைத்துக் கொண்டாள். போர்ட் ராயல் ஹோட்டலில் என்ன நடந்தது என்பதைப் பற்றி நினைக்கும்போது அவளுக்கு பியரி மீது வெறுப்பு மண்டியது. ஒருநாள் அவள் ஒரு புதருக்குப் பின்னால் நின்றிருந்தாள். அவன் வரைபடங்களைப் பார்த்துக் கொண்டு காரில்தான் அமர்ந்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் திடீரென்று அவளுக்குப் பின்னால் இருந்து வந்து அவள் முன்னால் தோன்றி அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.
லுலு ஹென்றியை லேசாக உதைத்தாள். உதைத்ததால் அவன் எழுந்திருக்க வேண்டும். ஆனால் எழவில்லை. ‘ம்ம்ம்’மென்ற முனகலோடு சரி. ‘யாராவது அழகான இளைஞன் ஒருவன் என்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும். அப்பழுக்கில்லாத ஒரு பெண்ணாக, இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளாமல் அவனும் நானும் கடற்கரையில் கைகோர்த்தபடி நடந்து செல்ல வேண்டும். ஒரே படுக்கையில் சேர்ந்து உறங்க வேண்டும். சகோதரன் சகோதரியைப் போல பழக வேண்டும். விடியும் வரை பேசிக் கொண்டிருக்க வேண்டும். ரைரெட்டுடன் அப்படி இருக்க விரும்புகிறேன். நினைத்துப் பார்த்தால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. பெண்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது ஒரு வேடிக்கைதான். அவளும் குண்டாக மொழுமொழுவென்று மிருதுவான தோள்களுடனும் இருக்கிறாள். அவள் ஃப்ரெஸ்னலை காதலித்தபோது எனக்கு பெரும் மன உளைச்சலாக இருந்தது. அவன் அவளை தூக்கிக் கொண்டாடியது என்னைக் கவலைக்குள்ளாக்கியது. அவளுடைய தோளுக்குள்ளும் தொடைக்குள்ளும் அவன் கைகளை விடுவதும், அவள் பெருமூச்சு விடுவதும் எனக்கு சகிக்கவில்லை. ஓர் ஆணுக்குக் கீழே வெற்றுடம்புடன் படுத்துக் கொண்டு அவனுடைய கைகள் அவளுடைய உடலெங்கும் பரவுவதை உணரும்போது அவள் முகம் எப்படிப் பரவசப்படும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். இந்த உலகின் அத்தனை பணத்தையும் எனக்குத் தந்தாலும் நான் அவளைத் தொடமாட்டேன். அவளே விரும்பினாலும், ‘எனக்கு “அது” வேண்டும்’ என்று கேட்டாலும் கூட அவளிடம் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியாது. காற்றில் மறைந்து கொள்ளும் மந்திரம் எனக்குத் தெரிந்திருந்தால் வேறு யாராவது அவளிடம் சரசம் செய்யும்போது, பரந்த அவளுடைய இளஞ்சிவப்பு நிற முழங்கால்களை மெதுவாகத் தடவும் போது, அவள் முனகும்போது மறைந்திருந்து அவள் முகம் போகும் போக்கை பார்த்து ரசிக்க முடியும். (அப்போதும் கூட அவள் மினர்வாவைப் போல தெரிகிறாளா என்று பார்க்க வேண்டும்). தொண்டை காய்ந்து போய் லுலு சிறிதாக பெருமூச்சொன்றை வெளியிட்டாள். சில நேரங்களில் நாம் என்னவெல்லாம் சிந்தித்துத் தொலைக்கிறோம்! ஒரு முறை ரைரெட் பியரி தன்னை வன்புணர்வு செய்ய விரும்புவதாகப் பொய் சொன்னாள். அதை செய்ய பியரிக்கு நானே உதவினேன். ரைரெட்டின் கைகளைப் பிடித்துக் கொண்டேன். நேற்று அவளுடைய கன்னம் சிவந்திருந்தது. சோஃபாவில் அமர்ந்திருந்தோம். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு. அவளுடைய கால்கள் ஒன்றொடொன்று பின்னிக் கிடந்தன. நாங்கள் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. பேசிக் கொள்ளப்போவதும் இல்லை.
ஹென்றி குறட்டைவிட ஆரம்பித்துவிட்டான். லுலு அலுப்பாக பெருமூச்சு விட்டுக்கொண்டாள். இதோ இங்கேதான் அருகருகே இருக்கிறோம். என்னால் உறங்க முடியவில்லை. துக்கத்தில் கிடந்து உழல்கிறேன். இவனோ நன்றாகக் குறட்டை விடுகிறான். முட்டாள். என்னை அவன் தனது கைகளில் தாங்கிக் கொண்டு, என்னைப்பார்த்து கெஞ்சலாக ‘லுலு, நீதான் எனக்கு எல்லாமே. உன்னை நான் காதலிக்கிறேன். என்னை விட்டுப் போகாதே’ என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதாதா? என்னையே அவனுக்காக நான் தியாகம் செய்துவிடுவேனே! வாழ்நாள் முழுதும் அவனுடனேயே இருந்து அவனை சந்தோசப்படுத்துவேனே!
II
ரைரெட் ‘டோம்’ ஹோட்டலின் மாடியில் அமர்ந்திருந்தாள். ஒரு கிளாஸ் ‘போர்ட்’ ஆர்டர் செய்திருந்தாள். லுலுவை நினைத்து எரிச்சலாகவும் ஆத்திரமாகவும் இருந்தது அவளுக்கு. அவர்கள் குடித்துக்கொண்டிருந்த ‘போர்ட்’டில் தக்கையின் வாசம் வந்து கொண்டிருந்தது. லுலு காஃபி குடித்துக் கொண்டிருந்ததால் அதைப் பற்றிக் கவலைப் படாமல் இருந்தாள். இருந்தாலும் சாப்பிடுவதற்கு முன்பாக பசியுடன் இருக்கும் நேரம் காஃபி அருந்துவதும் நல்லதல்ல. இங்கே அவர்கள் நாள் முழுதும் காஃபியோ காஃபி கிரீமோதான் பருகிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் வேறொன்றுமில்லை. கையில் ஒரு ஃப்ராங்க் கூட கிடையாது. அது அவர்களை மிகவும் எரிச்சல்படுத்தி இருக்க வேண்டும்.
‘என்னால் இப்படியெல்லாம் இருக்க முடிவதில்லை. ஆத்திரத்தில் அங்கிருக்கும் வாடிக்கையாளர்களின் முகத்தில் குத்திவிடுவேன். இங்கிருப்பவர்கள் யாருடனுடனும் எந்தவித உறவும் வைத்துக்கொள்ளத் தேவையில்லை. சந்திக்க விரும்பும்போதெல்லாம் இவள் ஏன் மான்ட்பர்னஸ் ஏரியாவுக்கே கூப்பிடுகிறாள். கஃபே தெ லா பெய்க்ஸ் அல்லது பாம் பாம்– இந்த இரண்டு இடங்களும் கூப்பிடு தூரத்தில்தானே உள்ளன. அங்கேயே சந்தித்தால் என்ன? நானும் என்னுடைய வேலையை முடித்துவிட்டு நேர விரயம் செய்யாமல் வந்து சேர முடியும். இங்கிருக்கும் முகங்களை அடிக்கடி பார்த்து தொலைக்க வேண்டுமே என்று நினைக்கும் போதெல்லாம் எவ்வளவு துயரமாக இருக்கிறது! ஒரு நிமிடம் கிடைத்தாலும் இங்கே நான் ஓடி வரவேண்டி இருக்கிறது. மாடியில் அப்படி ஒன்றும் எதுவும் அசிங்கமாக இல்லை. ஆனால் உள்ளே போனால்தான் அழுக்கான உள்ளாடையின் நாற்றம் வீசுகிறது. எனக்கு தோல்விகள் பிடிப்பதில்லை. அந்த மாடியில் கூட நான் ஏதோ ஒருவகையில் அங்கே பொருந்தாதவளாகத்தான் தெரிகிறேன். காரணம் நான் எப்போதுமே சுத்தமானவளாக இருப்பேன். என்னைக் கடந்து செல்லும் முகச்சவரம் கூட செய்யாத இந்த மனிதர்களின் நடுவில், அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் விழித்துக்கொண்டு நிற்கும் பெண்களுக்கு நடுவில் யாராவது என்னைப் பார்த்தால் ஆச்சரியத்தில் ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள் என்பது நிச்சயம். என்னைப் பார்த்தால் ஆச்சரியம் கொள்ளுவார்கள். ‘இவள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாள்’ என்று குழம்புவார்கள். பணக்கார அமெரிக்கர்கள் கோடைக்கு இங்கே வருவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் இப்போதெல்லாம் இங்கிலாந்துக்குச் சென்றுவிடுகிறார்கள். நம்முடைய அரசாங்கம் செயல்படும் லட்சணத்தில் இங்கே வாணிபம் மந்தகதியில் போகிறது. சென்ற வருடத்தில் இதே நாளில் என்னுடைய பணத்தில் பாதியைச் செலவழித்திருந்தேன். மற்றவர்கள் எப்படி சமாளித்தார்கள் என்று தெரியவில்லை. உனக்கே தெரியும். நான் மிகவும் திறமையாக விற்பனை செய்யும் பெண். டுயூபக் மேடம் கூட சொல்லி இருக்கிறாள். யொன்னல் இருக்கிறாளே. அவளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. அவளுக்குப் பொருட்களை திறமையாக விற்கவும் தெரியவில்லை. இந்த மாதம் அவளால் தனக்கு வர வேண்டிய கமிஷன் தொகையை சம்பாதித்து இருக்க முடியாது. நாள் முழுக்க கால்கடுக்க நின்றுவிட்டு கொஞ்சம் ஓய்வெடுக்க ஓரளவு சொகுசான கலைநயம் உள்ள நாகரீகமான சில நண்பர்களுடன் நேரச் செலவு செய்ய மனம் விரும்பத்தான் செய்யும். கண்ணை மூடிக்கொண்டு மென்மையான இசையைக் கேட்டுக்கொண்டு அப்படியே தன்னைக் கரைத்துக்கொண்டு கிடந்தால் நன்றாக இருக்குமல்லவா? அம்பாசடர் ஹோட்டலுக்கு சென்று நடனமாடிக் களிக்கும் செலவை ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை. இங்குள்ள ஒரே பிரச்சினை என்னவென்றால் இங்கிருக்கும் வெயிட்டர்கள் இங்கிதம் தெரியாதவர்கள். மலிவான ரசனை கொண்ட கூட்டத்தைக் கையாண்டு பழகிப்போனவர்கள், பழுப்பு நிற முடியுடன் எனக்கு உணவு பரிமாறினானே ஒரு சிறுவன் அவனைத் தவிர. அவன் நடந்துகொண்ட விதம் அழகு.’
இதைப்போன்ற அரைகுறை விஷயங்கள் தன்னைச் சுற்றி நடந்தால் லுலு மகிழ்ச்சியாக இருப்பாள் போல தோன்றியது. நல்ல குணங்களுடன் இங்கிதம் தெரிந்தவனாக யாரேனும் வந்துவிட்டால் இனம் புரியாத அதிர்ச்சிக்கு ஆளாகிவிடுகிறாளோ என்னவோ. அவளுக்கு லூயிஸைப் பிடிக்காது. சொல்லப்போனால் அவள் இங்கே இருப்பது அவளுக்குப் பிடித்துதான் இருக்க வேண்டும். இங்கே இருப்பவர்களில் சிலருக்கு சட்டையில் காலர் இல்லை. அசிங்கமான தோற்றத்துடன் வாயில் குழாயைப் புகைத்துக்கொண்டு அவர்கள் பார்க்கும் விதத்தைக்கூட அவர்களுக்கு மறைக்கத் தெரிவதில்லை. ஒரு பெண்ணை, தனியே கூட்டிக்கொண்டு போகும் அளவுக்கு அவர்களிடம் பணமும் இருப்பதில்லை. அங்கிருக்கும் பிரச்சினையும் அதுவல்ல. அவர்கள் பார்க்கும் பார்வையைப் பார்த்தால் அவர்கள் என்னவோ உன்னை அப்படியே விழுங்கப் போகிறார்கள் என்று நினைக்கத் தோன்றும். நீ எனக்கு வேண்டும் என்று கூட அவர்களுக்கு சொல்லத் தெரிவதில்லை. எப்படி சொன்னால் நமக்கு ரசக்குறைவில்லாமல் இருக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. அதை நினைத்தால்தான் குமட்டிக்கொண்டு வருகிறது.
வெயிட்டர் வந்தான். “உலர் ‘போர்ட்’ கொண்டு வரட்டுமா மேடம்?” என்று கேட்டான்.
“ப்ளீஸ்…கொண்டு வா”
அவன் மறுபடியும் பேசினான். நடத்தையில் ஒரு நட்பு தெரிந்தது. “இன்று பருவம் அருமையாக இருக்கிறது இல்லையா?” என்றான்.
“அப்படிச் சொல்வதற்கு இன்னும் கொஞ்ச காலம் பாக்கி இருக்கிறது” என்றாள் ரைரெட்.
“சொல்வது சரிதான். குளிர்காலம் முடியவே முடியாது என்று நீங்கள் நினைத்திருக்கக்கூடும்”
அவன் அங்கிருந்து நகர்ந்தான். அவன் செல்வதை ரைரெட் பார்த்துக்கொண்டே இருந்தாள். எனக்கு அந்த வெயிட்டரைப் பிடித்திருக்கிறது என்று அவள் நினைத்தாள். அவனுக்கு தனது எல்லை எதுவென தெரியும். நெருக்கம் காட்ட விரும்பாதவனாகத்தான் தெரிந்தான். என்னிடம் பேசும் போது மட்டும் எதையோ சொல்ல வருவதைப்போல இயல்பான நெருக்கம் காட்டுவான்.
ஒல்லியாகவும் சற்றே கூன் விழுந்த மனிதன் ஒருவன் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தான். ரைரெட் தனது தோள்களை ஒருமுறை குலுக்கிக்கொண்டு அவனை நோக்கி தனது பின்புறத்தைத் திருப்பினாள். ஒரு பெண்ணின் கண்களை நோக்கி பேச வேண்டுமென்று நினைத்தால் குறைந்தபட்சம் அவர்கள் தங்களது உள்ளாடையை மாற்றிக்கொண்டு வந்தாலாவது நன்றாக இருக்கும். என்னிடம் வந்து அவன் ஏதாவது சொல்ல நினைத்தால் கண்டிப்பாக இதை நான் அவனிடம் சொல்வேன்.
‘அவள் ஏன் இன்னும் அவனை விட்டு நீங்காமல் இருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஹென்றியைக் காயப்படுத்த அவள் விரும்பவில்லை. அப்படி நினைப்பது முட்டாள்தனம்தான். ஒரு பெண் ஆண்மையில்லாத ஒருவனுக்காக தனது வாழ்க்கையை நாசம் செய்துகொள்வதற்கு உரிமை இல்லை. ரைரெட்டுக்கு ஆண்மையில்லாத ஆண்களைக் கண்டால் ஆகாது. அது உடல் தொடர்பான விஷயம். லுலு அவனை விட்டு வெளியே வர வேண்டும் என்று ரைரெட் விரும்பினாள். லுலுவின் மகிழ்ச்சி அபாயகரமான கட்டத்தில் இருக்கிறது. அவளுடைய மகிழ்ச்சியுடன் அவள் விஷப்பரீட்சை செய்யக்கூடாது என்று அவளிடம் சொல்ல வேண்டும். ‘லுலு, உன்னுடைய மகிழ்ச்சியுடன் சூதாட்டம் விளையாட உனக்கு ஒருபோதும் உரிமை கிடையாது.’ இனிமேல் லுலுவிடம் ஒன்றும் சொல்லப்போவதில்லை. நூறு முறைக்கு மேல் நான் சொல்லி இருப்பேன். மகிழ்ச்சியாக இருக்க பிரியப்படாதவர்களை மகிழ்ச்சியாக இருக்கும்படி நிர்பந்தம் செய்ய முடியாது. தலைக்குள் வெறுமை கவிழ்ந்ததைப் போல உணர்ந்தாள் ரைரெட். அவளுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. குவளையில் இருந்த ‘போர்ட்’டை நோக்கினாள். சாக்லேட் பிசின் மாதிரி கிளாஸ் முழுக்க அது ஒட்டிக்கொண்டு நசநசவென்று காட்சியளித்தது. மண்டைக்குள் ஒரே ஒரு வார்த்தை மட்டும் முட்டி மோதிக்கொண்டிருந்தது. “மகிழ்ச்சி…மகிழ்ச்சி, மகிழ்ச்சி”- சாஸ்வதமான, பாந்தமான வார்த்தை அது.
யாராவது அவளிடம் பாரீஸ் ஸ்வைர் பத்திரிக்கை நடத்தும் போட்டியைப் பற்றிக் கருத்து கேட்டால் அந்த வார்த்தைதான் ஃப்ரென்ச் மொழியில் இருக்கும் மிகவும் அழகான வார்த்தை என்று சொல்லியிருப்பாள். யாராவது அதைப் பற்றி நினைக்கிறார்களா? சிலர் சக்தி என்கிறார்கள். சிலர் வீரம் என்கிறார்கள். அப்படிச் சொல்லக் காரணம், அவை எல்லாமே ஆண்களை மையப்படுத்திய வார்த்தைகள். அங்கே பெண்மை மையப்படுத்தப்பட்டால் பெண்கள் விரும்புவது வேறாக இருந்திருக்கும். இரண்டு பரிசுகள் வழங்கப்பட வேண்டும். ஆண்களுக்கு ஒரு பரிசு; பெண்களுக்கு ஒரு பரிசு. அப்படி இருக்கும் பட்சம் ‘கௌரவம்’ என்ற வார்த்தை மிகவும் அழகான வார்த்தையாக இருந்திருக்கும். பெண்களுக்குக் கொடுக்கப்படும் பரிசை நான் பெற்றிருப்பேன். வென்றிருந்தால் மகிழ்ச்சி என்று சொல்லி இருப்பேன். மகிழ்ச்சியும் கௌரவமும் சேர்ந்தாற்போல.
அவளிடம் சொல்லப்போகிறேன்: ‘இதோ பார் லுலு…உன்னுடைய மகிழ்ச்சியைத் தியாகம் செய்ய உனக்கு உரிமை இல்லை. அது உன்னுடைய மகிழ்ச்சி லுலு…உன்னுடய மகிழ்ச்சி” என்று சொல்வேன். பியரி நல்லவன் என்றுதான் நான் நினைக்கிறேன். உண்மையான மனிதனும் கூட. அது தவிர புத்திசாலியும் கூட. அவனுடைய புத்திசாலித்தனம் எந்த பாதகத்தையும் விளைவிக்காது’. அவனிடம் பணம் இருக்கிறது. அவளுக்காக எதையும் செய்வான். வாழ்க்கையின் சிற்சில மேடுபள்ளங்களை பெரிதுபடுத்தாமல் சரிப்படுத்தத் தெரிந்த மிகச் சில ஆண்களில் அவனும் ஒருவன். அதிகாரம் செய்யத் தெரிந்த மனிதர்களை எனக்கு பிடிக்கும். அது ஒரு தனித் திறமை. வெயிட்டர்களிடமும் ஹோட்டல் மேனேஜரிடமும் எப்படிப் பேசுவது என்பது அவனுக்குத் தெரியும். அவர்களும் அவன் சொல்வதைக் கேட்பார்கள். அப்படிப்பட்ட குணத்தைத்தான் ஆதிக்க மனோபாவம் என்பார்கள். அனேகமாக அதைப்போன்ற குணாதிசயம்தான் ஹென்றியிடம் சுத்தமாக இல்லையோ என்று தோன்றுகிறது. அடுத்து ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு, அதுவும் அப்படியொரு அப்பாவை வைத்துக்கொண்டு. லுலு தன்னை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். ஒல்லியாகவும் எடை குறைவாகவும் தோற்றமளிப்பதும், பசியோ தூக்கமோ வராத அளவுக்குப் பேணுவதும், இரவில் நாலு மணி நேரம் மட்டும் தூங்கி எழுந்து பாரிஸ் நகரம் முழுதும் ஓடியாடி பொருள்களை விற்பதும் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் கேலிக்கூத்தாக தெரியவில்லையா? கொஞ்சமாவது புத்திசாலித்தனமாக சாப்பிடுவது அவசியம் இல்லையா? ஒரு நேரத்தில் குறைவாகவும் குறிப்பிட்ட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிடுவதும் நல்லது இல்லையா? அவர்கள் இவளை நிரந்தர வியாஸ்தியஸ்தர்கள் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு பத்து வருடங்கள் தங்கி இருக்கும்படி அனுப்பப் போகிறார்கள். அப்போதுதான் இவளுக்குப் புரியும்.
மாண்ட்பர்னேஸ் சந்திப்பில் இருந்து கொஞ்சம் குழப்பமாகவே கிளம்பினாள் ரைரெட். மணி 11.20- ஐக் காட்டியது. ‘எனக்கு லுலுவைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளுடைய சுபாவம் ஏதோ கிறுக்குத்தனமாக தோன்றுகிறது. அவள் ஆண்களை விரும்புகிறாளா அல்லது ஆண்கள் இவளைப் பார்த்து விலகி ஓடுகிறார்களா என்பதை என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எதுவாக இருந்தாலும் அவள் பியரியுடன் சந்தோசமாக இருந்தாக வேண்டும். அதுதான் அவளுக்கு சென்ற வருடம் ராபட்டுடன் (அவனை ரெபுட் என்று நான் அழைப்பேன்) இருந்ததைப்போல அல்லாமல் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். இதைப் பற்றி நினைக்கும்போது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. அந்த ஒல்லிப்பாச்சான் இவளை இன்னும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறான். ஒரு தடவை இவள் திடீரென்று தலையைத் திரும்பிப் பார்த்தபோது அவன் லுலுவைக் கவனித்துக்கொண்டிருந்ததைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டாள். ராபட்டுக்கு முகம் நிறைய கரும்புள்ளிகள் இருக்கும். தனது நகங்களைக் கொண்டு அந்தப் புள்ளிகளை அவனுடைய தோலில் இருந்து இவள் நீக்குவதை பார்த்தால் சகிக்காது. அது அவளுடைய தவறு இல்லை. அழகான தோற்றம் கொண்ட ஆண் ஒருவன் எப்படி இருப்பான் என்ற அடிப்படை உண்மை கூட இவளுக்குத் தெரியாது. எனக்கு குறும்புச் சிரிப்புடன் இருக்கும் ஆண்களைப் பிடிக்கும். முதலில் அவர்களுடைய பொருட்கள் அழகாக இருக்கும். அப்புறம் அவர்களின் சட்டை, காலணிகள், மின்னும் ‘டை’ எல்லாம் அழகாக இருக்கும். சில நேரம் பண்படாத சில விஷயங்களும் இருக்கும். ஆனால் அவையும்கூட இனிமையானதாக, மிகவும் வலுவானதாக, இனிமையான வலிமையைப்போல இங்கிலாந்தின் புகையிலை மணத்தைப்போல, யூடிக்கோலனின் மணத்தைப்போல இருக்கும்… அதுவும் அவர்கள் ஷேவிங் செய்தபின் தோலில் இருந்து வரும் மணம் இருக்கிறதே… அது… அது… பெண்களின் தோலினைப்போல இருப்பதில்லை. கார்டோவான் லெதரைப் போல இருக்கிறது என்று நினைக்கத் தோன்றும். அந்த வலிமையான கரங்கள் உன்னை வளைத்துப் பிடிக்கும்போது, நீ உன்னுடைய தலையை அந்த மார்பில் வைத்து அழுத்தும்போது, தன்னை நன்றாக தயார்ப்படுத்திக்கொண்ட ஆண் ஒருவனின் இனிய அழுத்தமான வாசத்தை உன்னால் உணர முடியும். இனிமையான வார்த்தைகளை அவன் உன் காதுகளுக்குள் வந்து பேசுவான். அவர்களிடம் நல்ல விஷயங்கள் பல உண்டு. கனமான பசுத்தோலினால் செய்யப்பட்ட பூட்ஸுகள் உள்ளிட்ட பொருட்கள். அவர்கள் வந்து உனது காதுக்குள் “டார்லிங், என் அன்பே” என்று சொல்லும்போது உனக்கு அங்கேயே மயக்கம் வந்துவிடும். சென்ற வருடம் தன்னைவிட்டு ஓடிப்போன லூயிஸின் நினைவு ரைரெட்டுக்கு வந்தது. அதை நினைத்த மாத்திரத்தில் அவளது இதயம் இறுகிப்போனது: தன்னையல்லால் வேறு எந்த ஜீவனையும் நேசித்தறியா ஜென்மம் அவன். நாகரீகமே இல்லாத குணங்களின் குவியல் அவன். ஒரு மோதிரம், பொன்னிற சிகரெட் அத்துடன் ஏராளமான பைத்தியக்காரத்தனங்கள், ஆண்கள் சில நேரங்களில் மிகவும் கொடூரமாக நடந்துகொள்வதுண்டு. அதாவது பெண்களை விடவும் அதிகமாக நடந்துகொள்வதுண்டு. நாற்பது வயதுகளில் இருக்கும் ஆண் துணைக்கு ஏற்றவனாக இருப்பான். அவனால் தன்னைத்தானே கவனித்துக்கொள்ள முடியும். கிருதாவில் கொஞ்சம் நரையும், வழுவழுப்பான முதுகும், அகலமான தோள்களும், விளையாட்டு வீரனைப் போன்ற உடல்வாகும், வாழ்க்கையை அறிந்தவனாக, வாழ்க்கையில் அடிபட்டதால் கற்றுக்கொண்ட நல்ல குணங்களுடனும் இருப்பவனாக இருப்பான். லுலு இன்னும் குழந்தைதான். அவளுடைய அதிர்ஷ்டம் என்னைப் போன்ற தோழி அவளுக்குக் கிடைத்திருக்கிறாள். பியரிக்கு அவள் மீது இருக்கும் பிரியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது. என்னுடைய இடத்தில் இன்னொரு பெண் இருந்திருந்தால் இன்னேரம் இந்த விஷயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி இருப்பாள். அவனைப் பொறுமையாக இருக்கும்படி நான் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். என்னிடம் லேசாக சரசமாடும் தொனியில் அவன் பேசத்தொடங்கினால் அவன் பேசுவதில் ஆர்வம் இல்லாதவளைப் போல என்னைக் காண்பித்துக் கொள்கிறேன். அந்த நேரம் பார்த்து லுலுவைப்பற்றி பேசத் தொடங்குகிறேன். அவளைப் பற்றி நான் எப்போதும் நல்லவிதமாகவே சொல்கிறேன். அவளுக்குக் கிடைத்திருக்கும் அதிர்ஷ்டத்திற்கு அவள் முற்றிலும் தகுதியே இல்லாதவள். அது அவளுக்குப் புரிவதே இல்லை. லூயிஸ் என்னை விட்டுப்போன போது நான் எப்படி தனிமையில் இருந்தேனோ அதைப் போல இவளும் கொஞ்ச காலம் தனிமையில் இருந்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு மாலையும் வேலை முடிந்து களைப்புடன் அறைக்குத் திரும்பும்போது தன்னை ஆசுவாசப்படுத்த தோள் ஒன்று இல்லாமல் தனது அறை காலியாக இருக்கும்போது தனியாக வாழ்வது எவ்வளவு துன்பமான விஷயம் என்பதை அவளால் உணர முடியும். அடுத்த நாள் எழுந்து வேலைக்குத் தயாராகி, காண்பவர்களைக் கவரும் விதமாகப் பேசி, இந்த வாழ்க்கை வாழ்வதை காட்டிலும் செத்துப்போவது மேல் என்று நினைத்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல காட்டிக்கொண்டு வாழும் தைரியம் உனக்கு எங்கிருந்து வந்தது என்பதை நினைத்தால் உனக்கே ஆச்சரியமாக இருக்கும்.
கடிகாரம் 11.30 அடித்தது. ரைரெட் மகிழ்ச்சியைப் பற்றி நினைத்தாள். மகிழ்ச்சியின் பறவையான, காதலின் புரட்சிப் பறவையான நீலப்பறவையைப் பற்றி நினைத்தாள். பின்னர் அங்கிருந்து கிளம்பினாள். லுலு அரை மணி நேரம் தாமதமாக வந்தாள். அது அவள் வழக்கம்தான். அவள் தனது கணவனை விட்டு வரமாட்டாள். அவனை விட்டுவிட்டு வரத் தேவையான மனவலிமை அவளிடம் இல்லை. உள்ளுக்குள் அவன்பால் இருக்கும் மரியாதை காரணமாகத்தான் அவள் அவனிடம் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ‘அதே சமயம் அவள் அவனுக்குத் துரோகமிழைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். அவளை எல்லோரும் மேடம் என்று கூப்பிடுகிறவரை அவளுக்கு இதையெல்லாம் பற்றி பெரிய கவலை எதுவும் இல்லை. அவள் அவனைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் கேவலமாகப் பேசுவாள். ஆனால் அவள் பேசியதை அவளிடமே அடுத்தநாள் யாரும் சொல்லிக் காட்டிப் பேசிவிட முடியாது. அப்படியே பொங்கி விடுவாள். என்னால் ஆனமட்டும் எல்லாவற்றையும் நல்லது கெட்டது எதுவென்று அவளுக்கு சொல்லிப் பார்த்து விட்டேன்’.
***
டோம் ஹோட்டலுக்கு முன்னால் ஒரு டாக்ஸி வந்து நின்றது. லுலு அதிலிருந்து இறங்கினாள். கையில் பெரிய பெட்டி ஒன்று இருந்தது. முகம் வாடிய நிலையில் சாந்தமாக இருந்தது.
“நான் ஹென்றியை விட்டு விலகி வந்துவிட்டேன்” என்று தொலைவில் நின்றவாறு சத்தமாகக் கூவினாள்.
அருகில் வந்தாள். கையில் இருந்த பெட்டியின் கனத்தால் சற்றே குனிந்து சிரித்தாள்.
“என்ன?“ ரைரெட் நம்ப முடியாமல் கேட்டாள். “நீ சொல்வதில் குழப்பம் ஏதும்…?”
“இல்லை… எல்லாம் முடிந்துவிட்டது. அவனை விட்டு வந்துவிட்டேன்” என்று சொன்னாள் லுலு.
அவள் சொன்னதை ரைரெட்டால் இன்னும் நம்ப முடியவில்லை. “அவனுக்குத் தெரியுமா? இதை அவனிடம் சொல்லிவிட்டாயா?” என்று கேட்டாள்.
லுலுவின் கண்கள் ஒளிர்ந்தன. “அதெப்படி?” என்றாள்.
“நல்லது… நல்லது… லுலு என் செல்லக்குட்டி”
அடுத்து என்ன செய்வது என்று ரைரெட்டுக்குத் தெரியவில்லை. என்னவானாலும் லுலுவுக்கு இப்போது தேவை தைரியமான வார்த்தைகள் மட்டுமே என்று நம்பினாள்.
“நீ சொன்னது நல்ல செய்தி. எவ்வளவு தைரியமான பெண் நீ?” என்று சொன்னாள்.
அந்த மாதிரியான முடிவை எடுத்தது அப்படி ஒன்றும் கடினமான காரியம் இல்லை என்று மேலும் எதையோ சொல்ல நினைத்தாள் ரைரெட். ஆனால் சொல்லாமல் நிறுத்திக்கொண்டாள். பாராட்டு வார்த்தைகள் தந்த சுகத்தை லுலு இன்னும் கொஞ்ச நேரம் அனுபவிக்கட்டும் என்று நிறுத்திக்கொண்டாள். அவளுடைய கன்னங்களை அழுத்தமாக வருடிக்கொடுத்தாள். லுலுவின் கண்கள் பிரகாசித்தன. உட்கார்ந்து தனது பெட்டியை அருகில் வைத்துக்கொண்டாள். சாம்பல் நிறக் கோட்டும் தோலினால் ஆன பெல்ட்டும், வெளிறிய மஞ்சள் நிறத்தில் சுருட்டிய காலர் உள்ள ஸ்வெட்டரும் அணிந்திருந்தாள். தலையில் ஒன்றும் அணியவில்லை. குற்ற உணர்வும், போனால் போகிறது என்ற மன நிலையும் கலந்து தந்த ஒரு மயக்க நிலையில் அவள் இருப்பதை ரைரெட் புரிந்துதான் இருந்தாள். அப்படி ஒரு தோற்றம் வரும்படிதான் லுலுவும் நடந்துகொள்வதுண்டு. லுலுவின் அளவற்ற உற்சாக மனநிலைதான் தனக்குப் பிடித்தமானதாக இருக்கிறது என்று ரைரெட் நினைத்தாள்.
“இரண்டே கைக்குலுக்கல்களில் நான் என்ன நினைத்தேனோ அதைச் சொல்லிவிட்டேன். கேட்டதும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனான்” என்றாள் லுலு.
“நீ சொல்வதை என்னால் நம்பவே முடியவில்லை. திடீரென்று உனக்கு என்னவாயிற்று குட்டி? யாரேனும் என்னிடம் கேட்டிருந்தால் நீ அவனை விட்டு வரப்போவதில்லை என்று நேற்றிரவு என்னிடம் இருந்த கடைசி ஃப்ராங்கையும் கூட பந்தயம் கட்டியிருப்பேன்.”
“என்னுடைய குட்டித் தம்பிதான் இதற்குக் காரணம். என்னிடம் வம்பு செய்துகொண்டு இருந்தால் நான் பொறுத்துப் போயிருப்பேன். ஆனால் ஹென்றி என் குடும்பத்திடம் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டான். அதைத்தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “
“அதெல்லாம் எப்படி நடந்தது?”
“இந்த வெயிட்டர் எங்கே போய்விட்டான்?” சேரில் அமைதியில்லாமல் அமர்ந்தவாறு லுலு கேட்டாள். “டோம் ஹோட்டலின் வெயிட்டர்கள் நீ விரும்புகின்ற நேரமெல்லாம் உன்னிடம் வருவதில்லை. அந்த பழுப்பு நிற முடியுடன் இருப்பானே, அவன் இன்று நம்மைக் கவனிப்பானா?”
“ஆமாம். என் மீது அவனுக்கு ஒரு அலாதிப் பிரியம். அது தெரியுமா உனக்கு?”
“ஓ… அப்படியென்றால் கக்கூஸ் கழுவும் பெண்ணைக் கொஞ்சம் கவனி. அவளுடன் பேசும் சாக்கில் உள்ளே போகும் பெண்களைப் பார்ப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வான். அவர்கள் வெளியே வரும் போது இவன் உற்றுப்பார்க்கும் பார்வை இருக்கிறதே! பார்த்தால் உனக்கே முகம் சிவந்துவிடும். சரி அதை விடு. ஒரு நிமிடம் கொஞ்சம் அவசரமான வேலை இருக்கிறது. கீழே போய் பியரியைக் கூப்பிட வேண்டும். அவன் முகத்தைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. அந்த வெயிட்டர் வந்தால் எனக்கு ஒரு காஃபி கிரீம் ஆர்டர் செய். ஒரு நிமிடத்தில் திரும்பி வருகிறேன். வந்து எல்லாவற்றையும் சொல்கிறேன்.”
சொன்னதும் எழுந்து கொண்டாள். சில அடிகள் நடந்தபின் மீண்டும் ரைரெட்டை நோக்கி வந்தாள். “இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் ரைரெட் டார்லிங்”
“டியர் லுலு குட்டி!” என்று ஆதரவாக அவளுடைய கைகளை தனது கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டாள் ரைரெட்.
லுலு அங்கிருந்து அகன்றாள். மெதுவாக நடந்து அந்த மாடித்தளத்தைக் கடந்து சென்றாள். அவள் போவதை ரைரெட் பார்த்து கொண்டு இருந்தாள். ‘இவளால் இப்படிச் செய்ய முடியும் என்று நான் நினைக்கவே இல்லை. எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பவள். கொஞ்சம் அப்படி இப்படி என்று இருப்பவள்தான். அவளுடைய கணவனை விட்டுவிட்டு அவள் வெளியேறுவது அவளுக்கு நல்லது. என்னுடைய பேச்சைக் கேட்டிருந்தால் எப்பொழுதோ இந்த முடிவை எடுத்திருப்பாள். எப்படியோ என்னுடைய முயற்சிகளுக்குக் கிடைத்த பலன். உண்மையைச் சொல்லப்போனால் அவள் மீதான என்னுடைய தாக்கம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.’ என்று நினைத்துக்கொண்டாள் ரைரெட்.
சில நிமிடங்கள் கழித்து லுலு திரும்பி வந்தாள்.
“நான் சொன்னதைக் கேட்டதும் பியரி அப்படியே சமைந்துபோய் விட்டான். என்னவாயிற்று என்று எல்லாத் தகவல்களையும் கேட்டான். அப்புறம் தருகிறேன் என்று சொல்லிவிட்டேன். இன்று அவனுடன் மதிய உணவு சாப்பிடப் போகிறேன். நாங்கள் நாளை இரவு இங்கிருந்து கிளம்பலாம் என்று சொன்னான்.”
“உன்னை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் லுலு. சரி எல்லாவற்றையும் சீக்கிரமாக சொல்லு. நேற்று இரவுதான் முடிவு செய்தாயா?”
“நானாக எந்த முடிவும் செய்யவில்லை.” லுலு தன்னடக்கத்துடன் சொன்னாள். “எல்லாம் அதுவாக நடந்து முடிந்து விட்டது. “நடுங்கும் விரல்களால் மேசையைத் தட்டிக்கொண்டே பேசினாள். “வெயிட்டர்… வெயிட்டர்… இவன் வேற… எரிச்சலூட்டிக்கொண்டே இருக்கிறான். எனக்கு காஃபி கிரீம் வேண்டும்”
ரைரெட்டுக்கு அதிர்ச்சியாக இருந்தது. லுலுவின் இடத்தில் நான் இருந்தால் அதுவும் இந்த மாதிரியான நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தால் லுலு மாதிரி காஃபி கிரீம் என்ற ஒன்றுமில்லாத விஷயத்திற்கு ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்க மாட்டேன். லுலு மனம் கவர் பெண்தான். ஆனால் ஒரு சிறு பறவை போல எதற்கும் பயனில்லாதவளாக இருப்பது ஆச்சரியமாக இருந்தது ரைரெட்டுக்கு.
லுலு வெடிச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தவாறு சொன்னாள்: “நான் சொன்னதைக் கேட்டதும் ஹென்றியின் முகம் போன போக்கைப் பார்க்கணுமே”
“உன் தாயார் என்ன சொல்லுவாளோ தெரியவில்லையே” என்று உண்மையாகவே கவலைப்பட்டவளாய் கேட்டாள் ரைரெட்.
“என்னுடைய அம்மாவா? இதைக் கேட்டால் துள்ளிக்குதிப்பாள்.“ லுலு உறுதியுடன் சொன்னாள். “அம்மாவிடம் அவன் நாகரீகமாக நடந்துகொள்ள வில்லை. அவளுக்கும் வெறுப்பாகிவிட்டது. எப்போது பார்த்தாலும் ஏதாவது புகார் சொல்லிக்கொண்டே இருப்பான். என்னை அம்மா நல்லவிதமாக வளர்க்கவில்லை. அவள் அப்படி… அவள் இப்படி…. நான் என்னவோ பண்ணையில் வளர்ந்தவளைப்போல… உனக்குத் தெரியுமா, நான் எடுத்த முடிவுக்கு என் அம்மாவும் ஒரு விதத்தில் காரணம்.“
“அப்படியா… என்ன நடந்தது?”
“அவன் ராபர்ட்டை அறைந்துவிட்டான்”
“ராபர்ட் உன் வீட்டில் இருந்தானா?”
“ஆமாம். இன்று காலையில்தான். அம்மா அவனை கோம்பேஸிடம் பயிற்சி பெற அனுப்பலாம் என்று நினைத்திருந்தாள். இதை நான் உன்னிடம் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். நாங்கள் காலையுணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவன் உள்ளே நுழைந்துவிட்டான். ஹென்றி அவனை நன்றாக அறைந்து விட்டான்.”
“அது சரி. எதற்காக அறைந்தான்?” என்று ரைரெட் எரிச்சலுடன் கேட்டாள். தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் லுலு கதை சொல்லும் விதம் அவளுக்கு வெறுப்பாக இருந்தது.
“ஏதோ பலத்த விவாதம் அவர்களுக்குள்” என்று மொட்டையாகச் சொன்னாள் லுலு. அந்தப் பையன் யாராவது தன்னை அவமதித்தால் பொறுத்துக் கொள்ள மாட்டான். அதனால் ஹென்றியை எதிர்த்துப்பேசினான். “ஏண்டா கிழட்டு நாயே” என்று அவனுடைய முகத்தைப் பார்த்துக் கத்திவிட்டான். அதற்குக் காரணம், ஹென்றி அவனைப் பார்த்து அவன் சரியாக வளர்க்கப்படவில்லை என்று சொன்னதுதான். உனக்கே தெரியும். அந்த அளவுக்குத்தான் ஹென்றிக்குப் பேசத்தெரியும். சிரித்து சிரித்தே செத்துவிடுவேன் என்று நினைத்தேன். அப்புறம் ஹென்றி எழுந்து போய் அவனை நன்றாக அறைந்துவிட்டான். அப்போது நாங்கள் எல்லோரும் சமையலறையில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அப்போது எனக்கு வந்த ஆத்திரத்தில் அவனை நான் கொன்று போட்டிருப்பேன்.”
“ஆக நீ அங்கிருந்து கிளம்பிவிட்டாய்?”
“கிளம்பினேனா? எங்கே?” லுலு குழப்பமாகக் கேட்டாள்.
“அதற்குப் பிறகு நீ அங்கிருந்து கிளம்பி வந்துவிட்டதாக நினைத்தேன். இங்கே பார் லுலு…இந்த மாதிரி விஷயங்களை என்னிடம் சொல்லும்போது ஒரு கோர்வையுடன் சொல்ல வேண்டும். இல்லையென்றால் எனக்குப் புரியாது. இப்போது சொல்.” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் சந்தேகம் தொனிக்கும் குரலில் கேட்டாள். “நீ உண்மையாகவே அவனை விட்டு விலகிவிட்டாய். அது உண்மைதானே?”
“கண்டிப்பாக. அதைத்தானே நான் கடந்த ஒரு மணி நேரமாக உனக்கு விளக்கிக் கொண்டிருக்கிறேன்.”
“நல்லது. ஆக ஹென்றி, ராபர்ட்டை அடித்துவிட்டான். அப்புறம் என்ன நடந்தது?”
“அப்புறம்… அவனை நான் பால்கனியில் வைத்து தாழிட்டுவிட்டேன். அதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. அணிந்திருந்த பைஜாமாவைக் கூட அவன் இன்னும் கழற்றவில்லை. கண்ணாடியில் குத்திக்கொண்டே இருந்தான். ஆனால் அதை உடைக்கும் துணிவில்லை அவனுக்கு. அவன் சாதாரண அழுக்கைப் போன்றவன். அப்படியெல்லாம் செய்ய துணிவு வராது. அவனுடைய இடத்தில் நான் இருந்திருந்தால் இந்நேரம் கண்ணில் பட்ட எல்லாவற்றையும் உடைத்து சுக்குநூறாக்கி இருப்பேன். என்னுடைய தலை வெடித்து நூறு துண்டுகளாக ஆனாலும் பரவாயில்லை என்று நொறுக்கியிருப்பேன். அதன் பின் டெக்ஸியர் (நகர முக்கியஸ்தர்கள்) உள்ளே வந்தார்கள். இவன் அவர்களைப் பார்த்து கண்ணாடி வழியே ஒன்றுமே நடவாததைப் போல இதெல்லாம் தமாசுக்காக என்பதைப்போல சிரித்தான்.”
அந்த நேரம் வெயிட்டர் அவர்களைக் கடந்து சென்றான். லுலு அவனுடைய கைகளைப் பற்றினாள்.
“இங்குதான் இருக்கிறாயா? எனக்கு ஒரு காஃபி கிரீம் கொண்டு வருவதில் உனக்கு இவ்வளவு சிரமமா?” என்று கேட்டாள்.
ரைரெட்டுக்கு எரிச்சலாக இருந்தது. வெயிட்டரைப் பார்த்து பூடகமாகச் சிரித்தாள். வெயிட்டர் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றான். குற்ற உணர்வு மேலிடும் ஒரு பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு குனிந்து நின்றான். லுலுவின் மீது ரைரெட்டுக்கு லேசான கோபம் வந்தது. தனக்குக் கீழே இருப்பவர்கள் மீது எந்த விதமான சொற்பிரயோகம் செய்ய வேண்டும் என்று இவளுக்குத் தெரிவதே இல்லை. சில நேரங்களில் பதவிசாக நடந்து கொள்கிறாள். சில நேரங்களில் லூசுத்தனமாகவும் மண்டையில் ஒன்றுமே இல்லை என்பது போலவும் நடந்து கொள்கிறாள்.
லுலு சிரிக்க ஆரம்பித்தாள்.
“நான் இப்போது சிரிக்கிறேன். ஏன் தெரியுமா? ஹென்றி பால்கனியில் இன்னும் பைஜாமாவோடுதான் நின்று கொண்டிருக்கிறான். குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தான். அவனை எப்படி நான் பால்கனியில் வைத்துப் பூட்டினேன் தெரியுமா? அவன் சமையல் அறைக்குப் பின்புறம் நின்று கொண்டிருந்தான். ராபர்ட் அறை வாங்கி அழுது கொண்டிருந்தான். இவனோ அவனுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தான். ஜன்னல் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு அவனைப் பார்த்து சொன்னேன், “ஹென்றி…இங்கே வாயேன்… டாக்ஸி ஒன்று பூ விற்கும் பெண்ணை இடித்துவிட்டது” என்று கத்தினேன். உடனே வெளியே வந்து பார்த்தான். அந்தப் பூக்காரி ஸ்விஸ் நாட்டுக்காரி என்பதால் அவளை அவனுக்குப் பிடிக்கும். அவள் அவன் மீது மையல் கொண்டிருக்கிறாள் என்று கற்பிதம் செய்து கொள்வான். “எங்கே? எங்கே?” என்று கேட்டுக்கொண்டே வந்து வெளியே வந்து நின்றான். நான் மின்னல் வேகத்தில் இரண்டு அடிகள் பின்னால் வந்து அறைக்குள் நுழைந்து ஜன்னல் கதவுகளை மூடிவிட்டேன். அப்புறம் கண்ணாடிக் கதவுகள் வழியே அவனைப் பார்த்து “என் தம்பியிடம் வாலாட்டினால் உன்னைத் தொலைத்துவிடுவேன்” என்று எச்சரித்தேன். அவனை பால்கனியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகத் தவிக்கும்படி விட்டுவிட்டேன். தனது பெரிய விழிகளை உருட்டி உருட்டி கோபத்தால் சிவந்து போய் என்னைப் பார்த்துக்கொண்டு நின்றான். நாக்கை வெளியே துருத்தி அவனை எச்சரிக்கை செய்தவண்ணம் நான் ராபர்ட்டுக்கு மிட்டாயைக் கொடுத்தேன். அதன் பிறகு என்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றேன். ராபர்ட்டுக்கு முன்னால் நின்றுகொண்டு உடை மாற்றிக் கொண்டேன். அப்படி உடை மாற்றுவது ஹென்றிக்குப் பிடிக்காது என்பதால் வேண்டுமென்றே அப்படி செய்தேன். என்னுடைய கைகளையும் கழுத்தையும் ராபர்ட் முத்தமிட்டுகொண்டு இருந்தான். அவன் மிகவும் அழகு. ஹென்றி அங்கே இல்லாதது போல நாங்கள் நடந்துகொண்டோம். இந்த ரணகளத்தில் நான் குளிக்கக் கூட மறந்துவிட்டேன்”
“ஆக ஹென்றி ஜன்னலுக்கு வெளியே நிற்கிறான். என்ன சொல்லி சிரிப்பது. வார்த்தைகளே வரவில்லை.” சொல்லிவிட்டு ரைரெட் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.
திடீரென்று லுலு சிரிப்பதை நிறுத்தினாள். “அவனுக்கு குளிர்காய்ச்சல் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது” என்று நிஜமான கவலையுடன் கூறினாள். நமக்கு எப்போது பைத்தியம் பிடிக்கும் என்று நமக்குத் தெரிவதில்லை என்று குதூகலிப்புடன் சொல்லிக்கொண்டே போனாள். “என்னைப் பார்த்து முஷ்டியை மடக்கிக்கொண்டு என்னென்னவொ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொன்னதில் பாதிக்கு மேல் எனக்குப் புரியவில்லை. அப்புறம் ராபர்ட்டும் சென்றுவிட்டான். அவன் போன பிறகு டெக்ஸியர்ஸ் வந்து காலிங் பெல்லை அடித்தார்கள். அவர்கள் உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் அவன் முகம் முழுவதும் புன்னகைப் பூரிப்பு. அவர்களைப் பார்த்து தலையைக் குனிந்தான். சிரித்தான். “என் கணவன் எப்படி இருக்கிறான் பார்த்தீர்களா? தொட்டிக்குள் போடப்பட்ட மீன் குஞ்சைப் போல” என்று அவர்களைப் பார்த்து சொன்னேன். டெக்ஸியர்ஸ் அவனைப் பார்த்து கண்ணாடி வழியாக கையசைத்தார்கள். அவனைப் பார்த்து அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றும் சொல்லிக் கொள்ளவில்லை.”
“என்னால் எல்லாவற்றையும் கற்பனை செய்து பார்க்க முடிகிறது” என்று சொல்லி ரைரெட் சிரித்தாள். “அதாவது உன் கணவன் பால்கனியில். டெக்ஸியர்ஸ் சமையல் அறையில்.” இந்த வரிகளைத் திரும்ப திரும்பச் சொல்லிச் சிரித்தாள். அவளது கற்பனையில் விரிந்த காட்சியைப் பொருத்தமான நகைச்சுவை ததும்பும் விவரணையான வார்த்தைகள் கொண்டு லுலுவிடம் சொல்லிச் சிரிக்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால் வார்த்தை எதுவும் சிக்கவில்லை.
“நான் ஜன்னலைத் திறந்துவிட்டேன். ஹென்றி உள்ளே வந்தான். டெக்ஸியர்ஸ் முன்னால் என்னை முத்தமிட்டு நான் ஒரு குட்டி ஜோக்கர் என்று சொன்னான். “இவள் ஒரு குட்டி ஜோக்கர். சும்மா என்னிடம் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தாள்” என்று அவர்கள் முன்னிலையில் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு நான் சிரித்தேன். அவர்களும் பணிவாக சிரித்தார்கள். அனைவரும் சிரித்தார்கள். ஆனால் அவர்கள் சென்றதுதான் தாமதம் என்னுடைய காதுகள் கிழியும்படி ஓங்கி ஒரு அறை விட்டான். நானும் விடவில்லை. துடைப்பானை எடுத்து அவன் வாயில் அடித்தேன். அவனுடைய உதடு இரண்டாகக் கிழிந்து விட்டது”
“ஐயோ பாவம் நீ” என்றாள் ரைரெட். அவள் குரலில் கனிவு இருந்தது.
அவளுடைய இரக்கம் நிறைந்த வார்த்தைகள் தனக்குத் தேவையில்லை என்பது போல் கையை ஆட்டினாள். தன்னை நேராக நிமிர்த்திக் கொண்டு பழுப்பு நிற முடிக்கற்றையை சிலுப்பிக் கொண்டாள். அவள் கண்கள் மின்னலைத் தெறித்தன.
“அதற்கப்புறம் நாங்கள் எல்லாவற்றையும் பேசித் தீர்த்துக் கொண்டோம். அவனுடைய வாயை துணியால் துடைத்தேன். இதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை என்று அவனிடம் சொன்னேன். அவனை நான் காதலிக்கவில்லை என்பதையும் அவனை விட்டு விலக விரும்புகிறேன் என்பதையும் சொன்னேன். அதைக் கேட்டதும் அழ ஆரம்பித்துவிட்டான். நான் போய்விட்டால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சொன்னான். ஆனால் அவன் சொன்ன எதுவும் என்னைப் பாதிக்கவில்லை. உனக்கு நினைவிருக்கலாம் ரைரெட்… சென்ற வருடம் ரைன்லாண்டில் இதே மாதிரியான பிரச்சினை வந்தது இல்லையா? இதே மாதிரிதான் அப்போதும் தினம் தினம் வந்து என்னிடம் பேசினான். “இன்னும் கொஞ்ச நாளில் போர் மூளப்போகிறது. நான் அதில் போய் சேரப்போகிறேன். அப்புறம் போரில் மாண்டு போவேன். நான் செத்த பிறகு உனக்குத்தான் மிகவும் சிரமம். என்னை நீ படுத்திய பாட்டுக்கு மிகவும் வருந்துவாய்” என்றெல்லாம் பிதற்றினான். “போதும்… போதும். நீ ஆண்மையில்லாதவன். யாரும் உன்னை படையில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்று சொன்னேன். என்னை சமையலறையில் வைத்து பூட்டப்போவதாகச் சொன்னான். அப்புறம் அவனை சமாதானப்படுத்தி ஒரு மாதம் கழித்துதான் அவனை விட்டு விலகிப்போவேன் என்று வாக்கு தந்தேன். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவன் அலுவலகம் சென்றுவிட்டான். வாயில் மட்டும் துணி ஒன்று துருத்திக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அவனைப் பார்த்தால் அப்படியொன்றும் அவன் அழகாக தெரியவில்லை. அதன்பின் வீட்டு வேலைகளை நான் தான் செய்துகொண்டிருந்தேன். பருப்பை ஒரு சட்டியில் போட்டு அடுப்பில் வைத்தேன். அப்புறம் என்னுடைய பையை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டேன். கிளம்பும் முன் ஒரு பேப்பரில் நான் நினைத்ததை எழுதி அதை சமையல் அறை மேசையின் மீது வைத்துவிட்டுத்தான் கிளம்பினேன்.”
“அதில் என்ன எழுதி இருந்தாய்?”
எழுதியதைச் சொன்னபோது லுலுவுக்கு பெருமை தாங்கவில்லை. “அடுப்பில் பருப்பை வேக வைத்திருக்கிறேன். நீயே சமைத்துக்கொள். கியாஸை நீயே அணைத்துக்கொள். குளிர்பெட்டியில் கொஞ்சம் பன்றிக்கறி இருக்கிறது. எனக்கு எல்லாம் போதும் போதும் என்றாகிவிட்டது. எல்லாவற்றையும் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்” இதுதான் நான் எழுதியது.” என்றாள்.
இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். அவர்கள் சிரிப்பதைப் பார்த்து நடந்து போனவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். தாங்கள் இருவரும் சேர்ந்து அப்படி சிரிக்கும் காட்சி மற்றவர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் போலிருக்கிறது என்று ரைரெட் நினைத்தாள். இந்த நேரம் “வியல்” ஹோட்டல் மாடியிலோ ‘கஃபே டெ ல பெய்க்ஸ்’ ஹோட்டலின் மாடியிலோ இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தாள். ஒரு கணம் இருவரும் அமைதியாக இருந்தார்கள். அதற்கு மேல் அவர்களுக்கு இடையே சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை என்பதை ரைரெட் புரிந்து கொண்டாள். அவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது.
“நான் இங்கிருந்து உடனே ஓட வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு லுலு எழுந்துகொண்டாள். “பியரியை இன்று மதியம் சந்திக்கவேண்டும். இந்தப் பையை என்ன செய்வது?”
“அது என்னுடன் இருக்கட்டும். பெண்களுக்கான பொருட்கள் வைக்குமிடத்தில் சேர்ப்பித்து விடுகிறேன். அப்புறம் உன்னை எப்போது சந்திப்பது?” என்று கேட்டாள் ரைரெட்.
“சுமார் இரண்டு மணிக்கு நானே உன் வீட்டுக்கு வருகிறேன். கொஞ்சம் வேலை இருக்கிறது. பியரி எனக்குக் கொஞ்சம் பணம் தருவதாகச் சொல்லி இருக்கிறான்” என்றாள் லுலு.
லுலு அங்கிருந்து அகன்றாள். ரைரெட் வெயிட்டரைக் கூப்பிட்டாள். ஒரு கனமான அமைதி அவளிடம் குடிகொண்டது. அவர்கள் இருவரையும் நினைத்து வருத்தம் கொண்டாள். வெயிட்டர் அவளை நோக்கிப் பறந்து வந்தான். அவள் அவனை எப்போதெல்லாம் கூப்பிடுகிறாளோ அப்போதெல்லாம் அவன் காற்றாகப் பறந்து அவளிடம் வருவதைக் கவனித்தாள்.
“ஐந்து ஃப்ராங்குகள்” என்று சொல்லிவிட்டு “நீங்கள் இருவரும் மகிழ்ச்சியான நண்பர்கள். இங்கு அமர்ந்து கொண்டு நீங்கள் இருவரும் சிரித்து பேசியதை நான் கவனித்தேன்” என்று கூடுதலாகக் கொஞ்சம் பேசினான்.
இவனைப்போய் லுலு காயப்படுத்திவிட்டாளே என்று வெறுப்புடன் நினைத்துக்கொண்டாள் ரைரெட். அவன் சொன்னதைக் கேட்டு சங்கோஜம் கொண்டவளாய், “என்னுடைய தோழிக்கு காலையில் இருந்து கொஞ்சம் பிரச்சினை” என்றாள்.
“அவள் கவர்ச்சிகரமானவள்” என்று ஆத்மார்த்தமாக சொன்னான் அந்த வெயிட்டர். “மிகவும் நன்றி மேடம்” என்று சொல்லிக்கொண்டு ஆறு ஃப்ராங்குகளை பையில் போட்டுக்கொண்டு விடைபெற்றுக் கொண்டான்.
ரைரெட்டுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இந்நேரம் ஹென்றி வந்திருப்பான். லுலு எழுதி வைத்திருந்த கடித்ததைப் படித்திருப்பான். இந்தத் தருணம்தானே லுலுவுக்குத் தேவையாக இருந்தது என்று நினைத்துக்கொண்டாள்.
“நாளை மாலைக்குள் இதை எல்லாம் “ரு வாண்டாம் து தியேட்டர்” ஹோட்டலுக்கு அனுப்பி விடவும்” என்று பெரிய பணக்காரத் தோரணையுடன் லுலு கேஷியரிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள். பின்னர் ரைரெட்டை நோக்கித் திரும்பினாள்.
“எல்லாம் முடிந்துவிட்டது. நாம் போகலாம்”
“பெயரைக் கொஞ்சம் சொல்லுங்கள்” என்று கேட்டான் கேஷியர்.
“ம்ம்ம்… லூஸியேன் கிர்ஸ்பின்”
தனது கோட்டை கைகளின் மீது போட்டுக்கொண்டு ஓடத்தொடங்கினாள் லுலு. சாம்ரிட்டைன் கடையின் அகலமான படிகளில் இறங்கியோடினாள். ரைரெட்டும் அவளைப் பின்தொடர்ந்து ஓடினாள். ஓடுவதில் கவனம் இல்லாததால் அடிக்கடி தடுமாறி விழுந்தாள். தனக்கு முன்னால் நடனமாடுவதைபோல ஓடிக்கொண்டிருக்கும் நீல நிறமும் மஞ்சள் நிறமும் கலந்த மெல்லிய உருவம் ஒன்றின் வடிவம் மட்டும்தான் ரைரெட்டின் கண்களுக்குத் தெரிந்தன. அதுவும் உண்மைதான். லுலுவின் உடல் பார்ப்பதற்கு அசிங்கமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு முறையும் அவள் லுலுவை பின்னாலிருந்தோ பக்கவாட்டில் இருந்தோ பார்க்கும்போது அவளுடைய உடலில் தெரிந்த ஓர் அசிங்கமான தன்மை அவளுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. அது என்னவென்று அவளால் விளக்கமுடியவில்லை. அது எப்போதோ உள்ளுக்குள் படிந்துபோன எண்ணம். அவள் நளினமாகவும ஒல்லியாகவும் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த உடலில் ஏதோ ஓர் அசூயை மறைந்திருந்தது. என்னவென்று தெரியவில்லை. தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அவள் எந்த எல்லைக்கும் செல்கிறாள். அப்படி செய்வதை சரி என்றே வைத்துக் கொள்ளலாம். அவளுடைய பின்புறத்தைப் பார்த்தால் அவளுக்கே அசிங்கமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறாள். இருந்தும் அதை இறுக்கமாக கவ்விப்பிடிக்குமாறுதான் உடையணிகிறாள். அவளுடைய பிருஷ்டம் கூட சிறியதாகத்தான் இருக்கிறது. ஆமாம். என்னுடையதை ஒப்பிடும்போது அது மிகவும் சிறியதுதான். ஆனால் வெளியில் தெரியும் பகுதிகள் அதிகமாக இருக்கிறது. அவளுடைய மெல்லிய முதுகின் பின்புறம் அது வட்ட வடிவில் நிறைந்து நிற்கிறது. அவளுடைய கீழாடையை நிரப்பி நிற்கிறது. ஆடைக்குள் இருக்கும் அவள் பின்புறம் உருக்கி ஊற்றப்பட்டதைப் போல கெட்டியாகத் தெரிகிறது. அது மட்டுமில்லாமல் அப்படியும் இப்படியுமாக அசைய வேறு செய்கிறது.
லுலு திரும்பிப் பார்த்தாள். ஒருவரையொருவர் பார்த்து புன்னகை செய்து கொண்டார்கள். தனது தோழியின் அசூயையான உடலை அருவருப்புடனும் மனம் அடங்கிய மந்த நிலையிலும் எண்ணிப்பார்த்தாள் ரைரெட். கெட்டியான சிறிய முலைகள், மஞ்சள் நிறத்தில் பாலீஷ் செய்யப்பட்டதைப் போன்ற தோல் – தொட்டுப்பார்த்தால் அவள் உடல் ரப்பர் மாதிரி இருக்கிறது என்று சத்தியமாகச் சொல்ல முடியும் – நீண்ட தொடைகள், உடலோடு பொருந்திய நீண்ட கால்கள், நீக்ரோ பெண்ணின் உடலைப்போல என்று ரைரெட் எண்ணிக்கொண்டாள். ரும்பா நடனம் ஆடும் நீக்ரோ பெண்ணின் உடலை ஒத்திருந்தது அவள் உடல். சுற்றும் கதவருகே பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி அவளுடைய உடலின் மொத்தத் தோற்றத்தையும் ரைரெட்டுக்கு எடுத்துக் காட்டியது. லுலுவின் கைகளைப் பற்றும்போது அவள் உடல் ஒரு விளையாட்டு வீராங்கனையைப் போன்றுதான் இருக்கிறது; உடையணிந்து பார்த்தால் அவள் என்னை விட நன்றாகத் தோன்றுகிறாள்; ஆனால் அம்மணமாக இருக்கும்போது அவளை விட நான்தான் மிகவும் அழகாகவே இருப்பேன் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள் ரைரெட்.
அவர்கள் இருவரும் ஓரிரு நிமிடங்கள் பேசாமல் இருந்தார்கள். பிறகு லுலுவே பேசினாள்:
“பியரி பார்க்க அழகாக இருக்கிறான். நீயும் கூடத்தான் அழகாக இருக்கிறாய் ரைரெட். உங்கள் இருவருக்கும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என்றாள்.
ஒருவிதக் கட்டுப்பாட்டுடன்தான் அவள் அப்படி பேசினாள். ஆனால் அவள் பேசியதை ரைரெட் காதில் போட்டுக்கொள்ளவில்லை. ஒருவருக்கு எப்படி நன்றி சொல்ல வேண்டும் என்பது கூட இந்த லுலுவிற்கு தெரியாது. அந்த அளவிற்கு ஒரு மொன்னையானவள் அவள்.
“ரொம்ப போர் அடிக்குது” என்று திடீரென்று சொன்னாள் லுலு. “எனக்கு பிரா வாங்க வேண்டியிருக்கிறது”
“இங்கேயா?” ரைரெட் கேட்டாள். அந்த சமயம் அவர்கள் இருவரும் ஒரு பிரா விற்கும் கடையைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.
“இல்லை…இந்தக் கடையைப் பார்த்ததும் அதை வாங்க வேண்டும் நினைவு வந்தது. அவ்வளவுதான். ஃபிஷெர் கடைக்குப் போய் பிரா வாங்க வேண்டும்.”
“போல்வார்ட் டு மான்ட்பன்னேஸ் ஏரியாவிலா?” என்று அலறினாள் ரைரெட். “லுலு, நான் சொல்வதைக் கேள்.” அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே வார்த்தைகள் இறுகின. நாம் போல்வார்ட் டு மான்ட்பர்னேஸ் பகுதியில் சுற்றாமல் இருப்பது மிகவும் நல்லது. அதுவும் இந்த சமயத்தில். ஏனென்றால் நீ அங்கு ஹென்றியைச் சந்திக்க நேரிடலாம். அப்புறம் எல்லாம் சொதப்பலாகிவிடும்”
“ஹென்றியா?” என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டே சொன்னாள் லுலு. “கண்டிப்பாக சந்திக்கப் போவதில்லை. ஏன் கேட்கிறாய்?”
ரைரெட்டின் கன்னங்களும் நெற்றிப்பொட்டும் கோபத்தால் சிவந்தன.
“நீ இன்னமும் மாறவே இல்லை லுலு. உனக்கு ஏதாவது பிடிக்கவில்லை என்றால் அப்படி ஒன்று இருக்கிறது என்பதையே நீ சுத்தமாக மறுக்கிறாய். நீ ஃபிஷர் கடைக்குப் போக விரும்புகிறாய். அதே சமயம் போல்வார்ட் டு மான்ட்பர்னேஸ் ஏரியாவில் ஹென்றி இருக்க மாட்டான் என்றும் சொல்கிறாய். ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிக்கு அவன் அங்கே வருவான் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். அதை பலமுறை நீயே என்னிடம் சொல்லி இருக்கிறாய். ரு தே ரென் னுக்குப் போவான் என்றும் அங்கே ஒரு மூலையில் பஸ்ஸுக்காக அவன் காத்திருப்பான் என்றும் என்னிடம் சொல்லி இருக்கிறாய்.”
“முதலில் ஒன்றைப் புரிந்துகொள். இப்போது மணி ஐந்துதான் ஆகிறது. அது தவிர அவன் ஆபீஸுக்கும் போயிருக்க மாட்டான். காரணம் நான் எழுதி வைத்த துண்டு சீட்டு. அதைப்படித்து விட்டு இந்நேரம் தலை குப்புற விழுந்து கிடப்பான்.” என்றாள் லுலு.
“இருந்தாலும் லுலு…” ரைரெட் சட்டென்று ஏதோ சொல்ல வந்தாள். “இன்னொரு ஃபிஷர் கடை இருக்கிறது. அது உனக்கு தெரியுமல்லவா. ஓப்ராவுக்கு பக்கத்தில். ரூ டு க்வாட்டர் செப்டம்பரில் இருந்து தொலைவும் அதிகம் இல்லை”
“ஆமாம்” என்று லேசாக இழுத்தாள் லுலு. “அது அதிக தொலைவில் அல்லவா இருக்கிறது”
“நல்லது. எனக்கும் அந்த இடம் பிடித்தமான ஒன்று. இங்கிருந்து இரண்டு நிமிடப் பயணம்தான். மான்ட்பர்னேஸ்ஸில் இருந்து பக்கம் இல்லை”
“அவர்கள் விற்கும் பொருட்கள் எனக்குப் பிடிப்பதில்லை”
அவள் சொன்னதைக் கேட்டு ரைரெட் குழம்பிவிட்டாள். எல்லா ஃபிஷரிலும் ஒரே மாதிரியான பொருட்களைத்தானே விற்கிறார்கள்.
லுலு புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு பிடிவாதம் பிடித்தவளாக இருந்தாள். அனேகமாக ஹென்றிதான் அவள் இப்போது இந்த உலகத்தில் சந்திக்க விரும்பும் கடைசி மனிதனாக இருப்பான். அவள் அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுமென்றே நடந்து கொள்வதைப் போலத் தெரிகிறது.
“சரி…மான்ட்பர்னேஸ்ஸூக்கே போகலாம்” என்று விட்டேத்தியாக சொன்னாள் ரைரெட். “ஹென்றி பெரிய உருவம் கொண்டவன். ஆகவே அவன் நம்மைப் பார்ப்பதற்குள் நாம் அவனைப் பார்த்துவிட முடியும்”
“அதனால் என்ன? சந்திக்க நேர்ந்தால் சந்தித்துவிட்டுப் போவோம். அவ்வளவுதான். அவன் என்ன நம்மை விழுங்கவா போகிறான்” என்றாள் லுலு.
கால் நடையாகவே மான்ட்பர்னேஸ் போகலாம் என்று அடம் பிடித்தாள் லுலு. அவளுக்கு காற்று வேண்டுமாம். ரூ தே செய்ன் ஐ கடந்தார்கள். பின்னர் ரூ தே லா ஒடியான், அப்புறம் ரூ தே வாகிரார்ட். ரைரெட் பியரியைப் புகழ்ந்து கொண்டிருந்தாள். இந்த மாதிரியான சமயங்களில் அவன் நடத்தை எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது பார் என்று லுலுவிடம் சொல்லிக்கொண்டு வந்தாள்.
“பாரீஸ் எனக்கு எவ்வளவு பிடித்த நகரம் தெரியுமா? என்று அங்கலாய்த்துக் கொண்டாள் லுலு. இந்த நகரை நான் இனிமேல் எப்போது பார்க்கப்போகிறேனோ?”
“ஐயோ கொஞ்சம் அமைதியா இரேன் லுலு. நீ நைஸ் நகருக்குப் போகப்போகிறாய். நீ எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால் பாரீஸை விட்டுப்போவது கஷ்டமாக இருக்கிறதென்கிறாய்”
லுலு பதில் எதுவும் சொல்லவில்லை. வலது புறமும் இடது புறமும் மாறி மாறிப் பார்த்தாள். பிறகு சோகத்துடன் எதையோ தேடுவதுபோல் அங்கிருந்து நகர்ந்தாள்.
பிஷரை விட்டு வெளியே வரும்போது மணி ஆறு அடிப்பது கேட்டது. லுலுவின் முழங்கைகளைப் பிடித்துக்கொண்டு தன்னுடன் இழுத்துச் செல்ல முயன்றாள் ரைரெட். ஆனால் லுலு பௌமான் பூக்கடையின் முன்னால் போய் நின்று கொண்டாள்.
“இந்த ஆஷேலியா (azaleas) பூக்களைப் பாரேன். என்னிடம் நல்ல ஹால் இருந்தால் அங்கே இந்தப் பூக்களைக் கொண்டுபோய் வைப்பேன்.” என்றாள் லுலு.
“தொட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் பூக்கள் எனக்குப் பிடிக்காது” என்றாள் ரைரெட்.
அவளுக்கு அயற்சியாக இருந்தது. ரூ தே ரெய்ன் இருந்த திசையை நோக்கி தன் தலையைத் திருப்பினாள். ஒரு நிமிடம்தான். கோமாளித்தனமான ஹென்றியின் உருவம் தென்படுவதைப் பார்த்துவிட்டாள். அவன் தலையில் ஒன்றும் அணிந்திருக்கவில்லை. பழுப்பு நிற, சொரசொரப்பான துணியாலான கோட்டு ஒன்றை அணிந்திருந்தான். ரைரெட்டுக்கு பழுப்பு நிறம் பிடிக்காது. “அதோ… அங்கே பார் லுலு. அவன் வருகிறான்.” அவசரகதியில் கூறினாள்.
“எங்கே? எங்கே வருகிறான்?” என்று கேட்டாள் லுலு.
வழக்கத்துக்கு மாறாக ரைரெட்டை விடவும் அமைதியாக இருந்தாள் லுலு.
“நமக்குப் பின்னால். தெருவுக்கு அந்தப் பக்கம். ஓடு. திரும்பிப்பார்க்காமல் ஓடு”
லுலு திரும்பிப் பார்த்து விட்டாள்.
“நானும் அவனைப் பார்த்துவிட்டேன்” என்று கூவினாள்.
ரைரெட் அவளை இழுத்துக்கொண்டு போக முயன்றாள். ஆனால் லுலு விறைப்பாக நின்று கொண்டு ஹென்றியைப் பார்த்துக் கொண்டு நின்றாள். கடைசியாகச் சொன்னாள், “அவனும் நம்மைப் பார்த்துவிட்டான் என்று நினைக்கிறேன்.”
அவள் பயந்துவிட்டதைப்போல தெரிந்தது. திடீரென்று ரைரெட் இழுத்த இழுப்புக்கு இடம் கொடுத்தாள். ரைரெட் அவளைத் தள்ளிக்கொண்டு போவதை மறுதலிக்காமல் அவளுடனேயே சென்றாள்.
“புண்ணியமாகப் போகட்டும். தயவுசெய்து திரும்பிப் பார்க்காமல் வா.” மூச்சு அடங்கியவளைப் போல ரைரெட் லுலுவைப் பார்த்துச் சொன்னாள். “முதல் தெருவில் வலது பக்கம் போய் திரும்பினால் ரூ டிலாம்பர் வந்துவிடும்”
வழியில் தென்படுபவர்களை உரசியவண்ணம் இருவரும் மிக வேகமாக நடந்தார்கள். அவ்வப்போது லுலு தலையை லேசாகத் திருப்பி பின்னால் பார்த்தாள். ரைரெட்டை அவள்தான் இழுத்துக்கொண்டு போகிறாளோ என்று தோன்றும்படி ஓடினாள். அவர்கள் இன்னும் ரூ டிலாம்பர் கார்னரை சென்றடையவில்லை. அப்போதுதான் லுலுவுக்குப் பின்னால் பெரிய பழுப்பு நிற உருவம் ஒன்று வந்து நிற்பதை ரைரெட் பார்த்து விட்டாள். நிற்பது ஹென்றிதான் என்று அவளுக்குத் தெரியும். கோபத்தால் துடிக்க ஆரம்பித்தாள். லுலுவின் பார்வை தரையை நோக்கி இருந்தது. ஏதோ ஏமாற்றுக்காரியைப்போல தீர்மானமானவளாகத் தெரிந்தாள். தான் செய்தது தவறு என்று அவள் உணர்ந்திருக்கக்கூடும். ஆனால் இப்போது காலம் கடந்து விட்டது. லுலுவுக்கும் அது கெட்ட காலம் போல தோன்றியது.
அங்கிருந்து விரைந்து ஓடினார்கள். ஹென்றி அவர்களைப் பின் தொடர்ந்தான். ரூ டிலாம்பரைத் தாண்டி ஓடி, கோளரங்கம் இருக்கும் திசையில் நடந்தார்கள். ஹென்றியின் செருப்புச் சத்தத்தை ரைரெட்டால் கேட்க முடிந்தது. அந்தச் சத்தத்தோடு லேசான சீரான மெல்லிய அதிர்வும் அவனுடைய காலடி ஓசையுடன் ஒத்திசைவாக வருவதை கவனித்தாள். அது அவனுடைய மூச்சுக் காற்று. (ஹென்றி கனமாக மூச்சு விடும் பழக்கமுள்ளவன். ஆனால் இந்த அளவுக்கு அல்ல. அவர்களைப் பிடிப்பதற்காக அவன் பின்னால் ஓடி வருவதால் இருக்கலாம் அல்லது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஏற்பட்டதாக இருக்கலாம்)
அவன் இப்போது அங்கே இல்லை என்று கற்பனை செய்துகொண்டு அதற்குத் தகுந்தவாறு செயல்பட வேண்டும் என்று ரைரெட் நினைத்துக் கொண்டாள். இருந்தும் கடைக்கண்ணால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. வெள்ளைத்தாளைப்போல வெளீரென்று இருந்தான் அவன். கண்ணிமைகள் கீழே தாழ்ந்து மூடியமாதிரி இருந்தன. தூக்கத்தில் நடப்பவனைப்போல தெரிகிறான் என்று திகில் கலந்த உணர்வுடன் நினைத்துக்கொண்டாள் ரைரெட். ஹென்றியின் உதடுகள் நடுங்கிக்கொண்டு இருந்தன. கீழுதட்டின் இளஞ்சிவப்பு பகுதி மெல்லியதாக நடுங்குவது தெரிந்தது. கரகரப்பாக வெளிவரும் அவனுடைய மூச்சு இப்போது மூக்கொலியில் வெளிவரும் இசையைப்போல கேட்டது. ரைரெட்டுக்கு அசௌகரியமாக இருந்தது. அவளுக்கு ஹென்றியைப் பார்த்து பயமேதும் இல்லை. ஆனால் அவனுடைய இயலாத நிலையும் அவனுக்குள் இருந்த கடும்பற்றும் அவளுக்குக் கொஞ்சம் பயத்தைத் தந்தன. ஒரு கணம் கழித்து ஹென்றி மெதுவாக தன்னுடைய கைகளை வெளியே எடுத்து லுலுவின் கரங்களைப் பற்றினான். அழுகை முட்டிக் கொண்டு நிற்பதைப் போல உதட்டைக் கோணிக் கொண்டு நின்றாள் லுலு. கையை உதறி விடுவித்துக் கொண்டாள். நடுக்கம் இன்னும் குறையவில்லை.
ஹென்றி ‘உஸ்ஸ்’ என்று பெருமூச்சு விட்டான்.
இந்த நாடகத்தை உடனடியாக நிறுத்தியாக வேண்டும் என்று பரபரத்தாள் ரைரெட். காதுகளுக்குள் ஏதோ ‘ங்கொய்ங்’ என்று சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. லுலு ஏறக்குறைய ஓட்டமாக ஓடிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும்போது தூக்கத்தில் நடப்பவளைப்போல இருந்தது. தான் பிடித்திருந்த லுலுவின் கைகளை அக்கணத்தில் விட்டுவிட்டால் இருவரும் அருகருகே ஒன்றும் பேசாமல் சாவைப் பார்த்த பயத்தில் கண்களை மூடிக்கொண்டு ஒடுவதைப் போல தோன்றும் என்று ரைரெட் நினைத்துக்கொண்டாள்.
ஹென்றி பேசத் தொடங்கினான். அவனுடைய குரல் புதிது போலவும் கரகரப்பாகவும் இருந்தது.
“என்னுடன் திரும்பி வா” என்றான்.
லுலு பதிலேதும் சொல்லவில்லை. ஹென்றி தான் சொன்னதை மறுபடியும் குரல் மாறாமல், கரகரப்பாக உணர்வுகள் மேலிடாத தொனியில் சொன்னான்.
“நீ என்னுடைய மனைவி. என்னுடன் திரும்பி வா”
“அவளுக்கு உன்னுடன் வருவதற்குப் பிரியம் இல்லை என்பதை நீ பார்க்கவில்லையா?” என்று பல்லைக்கடித்துக்கொண்டு பேசியவாறு குறுக்கே விழுந்தாள் ரைரெட். “அவளைத் தனியாக விடு” என்று கத்தினாள்.
அவன் ரைரெட்டைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
“நான் உன்னுடைய கணவன். நீ என்னுடன் வருவதை நான் விரும்புகிறேன்” என்று சொன்னதையே மீண்டும் சொன்னான்.
“கடவுள் பெயரால் சொல்கிறேன். அவளை விட்டு விலகிப்போ” என்று கத்தினாள் ரைரெட். “இப்படி அவளைத் தொந்தரவு செய்வதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. அதனால் வாயை மூடிக்கொண்டு பேசமால் அவளை விட்டு விலகு”
அவன் ஆச்சரியம் பொங்கும் முகத்துடன் ரைரெட்டை நோக்கித் திரும்பினான்.
“அவள் என் மனைவி. என்னுடையவள். அவள் என்னுடன் வர வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான்.
அவன் லுலுவின் கைகளைப் பற்றிக்கொண்டான். இந்த முறை லுலு அவனுடைய கைகளை உதறிவிடவில்லை.
“இங்கிருந்து போய்விடு” என்று கத்தினாள் ரைரெட்.
“நான் போகமாட்டேன். இவள் போகுமிடமெல்லாம் நான் இவளைப் பின்தொடர்ந்து வருகிறேன். இவள் என்னுடன் வீட்டுக்கு திரும்ப வேண்டும்.”
கடினமாக முயற்சி செய்து பேசுபவனைப்போல பேசினான். இறுதியில் முகத்தை இறுக்கி கோணிக் கொண்டு பற்களைக் காட்டிக்கொண்டு உச்சஸ்தாயியில் கத்தினான்:
“நீ என்னுடையவள்”
அங்கிருந்த சிலர் இவன் குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தார்கள். ஹென்றி லுலுவின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆட்டினான். உதட்டின் பின்புறத்தை சுழித்துக் காட்டி மிருகம் போல உறுமினான். அதிர்ஷ்டவசமாக அந்தப் பக்கமாக காலியான டாக்ஸி ஒன்று கடந்து சென்றது. ரைரெட் அதை நோக்கி கையசைத்தாள். டாக்ஸி நின்றது. ஹென்றியும் நின்றான். லுலு தொடர்ந்து நடக்க ஆசைப்பட்டாள். ஆனால் அவளை அசையவொட்டாமல் ஆளுக்கு ஒரு புறம் அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள்.
லுலுவைத் தன் பக்கம் இழுத்தவாறு ரைரெட் உறுமினாள்: “நீ ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். வன்முறையால் நீ இவளைப் பெற முடியாது”
“அவளை விடு. என்னுடைய மனைவியை விட்டு விலகிப்போ” என்று லுலுவை எதிர்த் திசையில் இழுத்தவாறு சொன்னான் ஹென்றி. சலவைக்குப்போடும் பையைப்போல ஒன்றும் செய்யமுடியாமல் கையலாகாமல் நின்றாள் லுலு.
“உள்ளே வருகிறீர்களா இல்லையா?” என்று பொறுமை இழந்து அவசரப்படுத்தினான் டாக்ஸி டிரைவர்.
லுலுவின் கையை விட்டுவிட்டு ஹென்றியின் கைகளில் சரமாரியாக குத்த ஆரம்பித்தாள் ரைரெட். அவள் குத்துக்களை அவன் பொருட்படுத்திய மாதிரியே தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து அவன் தன் பிடியை தளர்த்திவிட்டு ரைரெட்டை வெறுமனே உற்றுப்பார்த்தான். ரைரெட்டும் அவனை உற்றுப்பார்த்தாள். அவளுடைய நினைவுகளை அவளால் அள்ளியெடுக்க முடியவில்லை. இனம் புரியாத நோய்மை ஒன்று பெரிதாக வந்து அவளை அழுத்தியது. சில நொடிகள் ஒருவரை ஒருவர் கண்ணோடு கண் வைத்துப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். இருவரிடம் இருந்தும் மூச்சு பெருமூச்சாக வெளிவந்து கொண்டிருந்தது. பிறகு ரைரெட் சுதாரித்து எழுந்து, லுலுவின் இடையைப் பற்றிக்கொண்டு இழுத்துக்கொண்டு போய் டாக்ஸிக்குள் திணித்தாள்.
“எங்கே போகவேண்டும்?” என்று கேட்டான் டாக்ஸி டிரைவர்.
ஹென்றியும் அருகே வந்தான். அவனும் அவர்களுடன் டாக்ஸிக்குள் செல்ல எத்தனித்தான். ரைரெட் பலங்கொண்ட மட்டும் அவனைப் பிடித்து வெளியே தள்ளி படாரென்று வண்டிக் கதவை சாத்தினாள்.
“வண்டியை எடு… வண்டியை எடு” என்று டிரைவரை அவசரப்படுத்தினாள். “எங்கே போக வேண்டும் என்பதை பிறகு சொல்கிறேன்.”
டாக்ஸி கிளம்பியது. ரைரெட் காரின் பின்புற சீட்டில் அமர்ந்து கொண்டாள். எவ்வளவு கேவலமான நிகழ்வு இது என்று நினைத்துக் கொண்டாள். லுலுவை நினைத்தால் அவளுக்கு வெறுப்பாக இருந்தது.
“லுலு, நீ எங்கே போக வேண்டும்?” இனிமையான குரலில் கேட்டாள்.
லுலு ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். ரைரெட் லுலுவின் கழுத்தை வளைத்துப் பிடித்தவாறு வற்புறுத்திக் கேட்பது போல மீண்டும் கேட்டாள்.
“நீ எனக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். உன்னை பியரியின் வீட்டில் கொண்டுபோய் விட்டால் சரிதானே?” என்று கேட்டாள் ரைரெட்.
லுலு லேசாக நெளிந்ததை அரைகுறை சம்மதம் என்று கருதிக்கொண்டு “நம்பர் 11, ரூ தே மெசீன்” என்றாள் ரைரெட்.
சொல்லிவிட்டு ரைரெட் திரும்பிய போது லுலு அவளை வித்தியாசமாகப் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உனக்கு இப்ப என்னடி பிரச்சி…”
“உன்னை சுத்தமாக வெறுக்கிறேன்.” என்று அலறினாள் லுலு. “எனக்கு பியரியைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கிறது. ஹென்றியைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கிறது. எனக்கு எதிராக என்னவெல்லாம் வைத்திருக்கிறீர்கள்? நீங்கள் எல்லோரும் என்னை சித்திரவதை செய்கிறீர்கள்”
கத்திவிட்டு நிறுத்தினாள். அவளுடைய அவயங்கள் மூடுபனியாக அடங்கின.
“அழு. நன்றாக அழு. அது உனக்கு நல்லது” என்று ஆழ்ந்த அமைதியுடன் சொன்னாள் ரைரெட்.
லுலு குனிந்தவாறு குலுங்கி அழுதாள். ரைரெட் அவளை தனது கரங்களில் ஏந்திக்கொண்டாள். அவ்வப்போது அவளுடைய தலைமுடியை ஆதரவாகக் கோதிவிட்டாள். உள்ளுக்குள் அவளுக்கு லுலுவின் மீது கோபமும் நம்பிக்கையின்மையும் இருந்தது. கார் நின்ற போது லுலு அழுவதை நிறுத்தியிருந்தாள். கண்ணைத் துடைத்துக்கொண்டு மூக்கின் மீது பவுடர் பூசிக்கொண்டாள்.
“என்னை மன்னித்துக்கொள்” மெல்லிய குரலில் சொன்னாள் லுலு. “எனக்கு அதிர்ச்சியான விஷயம் அது. அவனை அந்த நிலையில் என்னால் பார்க்க முடியவில்லை. அவனை அப்படிப் பார்த்தது என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது.”
“அவனைப் பார்த்தால் ஓரான்குட்டனைப் பார்ப்பதைப்போல இருந்தது” என்றாள் ரைரெட். சொல்லி விட்டு மீண்டும் அமைதியானாள்.
லுலு சிரித்தாள்.
“உன்னை நான் மீண்டும் எப்போது சந்திப்பேன்?” என்று ரைரெட் கேட்டாள்.
“ஓ! கண்டிப்பாக நாளைக்கு முன் கிடையாது. உனக்குத் தெரியுமா? பியரியால் என்னோடு வாழ முடியாது. அவன் அம்மாவைப் பார்த்தால் அவனுக்குப் பயம். நான் து தியேட்டர் ஹோட்டலில்தான் தங்கப்போகிறேன். உனக்கு சிரமம் எதுவும் இல்லையென்றால் நீ ஒன்பது மணிக்கு முன்பாக வர முயற்சி செய். ஏனென்றால் அதன்பின் நான் அம்மாவைப் பார்க்கச் சென்றுவிடுவேன்”
அதைக் கேட்டதும் முகம் வெளிறிப் போய்விட்டது அவளுக்கு. இவள் எவ்வளவு சீக்கிரமாக உடைந்துபோகப் போகிறாள் என்பதை ரைரெட் வருத்தத்துடன் நினைத்துப் பார்த்தாள்.
“இன்றிரவு தேவையில்லாமல் எதையாவது நினைத்து வருததப்பட்டுக்கொண்டு இருக்காதே” என்று அறிவுறுத்தினாள்.
“எனக்கு சொல்ல முடியாத அளவுக்கு களைப்பாக இருக்கிறது” என்றாள் லுலு. “சீக்கிரமாக என்னை திரும்பிப்போக பியரி அனுமதிப்பான் என்று நம்புகிறேன். அவனுக்கு இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் ஒருபோதும் புரிவதில்லை”
டாக்ஸி ஒன்றைப் பிடித்து ரைரெட் வீடு வந்து சேர்ந்தாள். ஏதாவது சினிமாவுக்குச் செல்லலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். நினைத்த மாத்திரத்தில் போக மனமில்லாமல் போனது. உடனே அந்தத் திட்டத்தைக் கைவிட்டாள். சேரின் மீது தனது தொப்பியைத் தூக்கி எறிந்துவிட்டு ஜன்னலை நோக்கி அடியெடுத்து நடந்து சென்றாள். அவளுடைய படுக்கை அவளைப் பிடித்து இழுத்தது. மென்மையானதாகவும் நிழல்படிந்த நிலையில் குளிர்ச்சியுடனும் தெரிந்த அவள் படுக்கை அவளுக்குத் தேவையாக இருந்தது. அதில் தன்னைக் கிடத்திக்கொண்டு, தலையணையின் மென்மையைக் காந்தலாக இருக்கும் கன்னக்கதுப்பில் வைத்து அழுத்திக்கொள்ள அவள் மனம் ஏங்கியது. ‘நான் மனவலுவுள்ளவள். லுலுவுக்கு நான் செய்த உதவிகள் எத்தனையோ. இப்போது நான் தனிமையில் வாடுகிறேன். எனக்கு உதவி செய்ய இங்கே யாருமில்லை’. கழிவிரக்கம் அவளை அரித்துத் தின்றது. வெள்ளம் போன்ற அழுகை தொண்டை வரை முட்டி நின்றதைப் போல உணர்ந்தாள். அவர்கள் எல்லோரும் நைஸ் நகருக்கு செல்கிறார்கள். இனிமேல் அவர்கள் யாரையும் என்னால் பார்க்க முடியாது. அவர்களுடைய அனைத்து சந்தோஷத்திற்கும் நான்தான் காரணம். ஆனால் என்னைப் பற்றி எவரும் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். இங்கேயே கிடந்து தினமும் எட்டு மணி நேரம் பர்மாவில் செயற்கை முத்துக்களை கூவிக்கூவி விற்று மடிந்து போக வேண்டியதுதான். அவளுடைய கண்ணீரின் முதல் துளி கன்னங்களின் வழியே வழிந்தபோது அவள் தன்னை மெதுவாக படுக்கையில் கிடத்திக்கொண்டாள். “நைஸ்”…என்று திரும்பத் திரும்ப சொல்லிப்பார்த்தாள். கட்டுடைந்து அழுதாள். “சூரிய வெளிச்சத்தில் நைஸ் நகரில்……கடற்கரை பக்கமாக…..”
III
‘உஸ்ஸ்ஸ்ஸப்பா…’
கரியதாய் இருந்தது அந்த இரவு. அந்த அறையில் யாரோ உலவுவது போல இருந்தது. யாரோ ஒரு மனிதன் செருப்புக் காலோடு உலவும் சத்தம். ஒவ்வொரு காலடிச் சத்ததையும் அவன் கவனமாக எடுத்து வைக்கிறான். அப்புறம் இன்னொரு காலை மெதுவாக எடுத்து வைக்கிறான். இருந்தும் செருப்பு லேசாக ஒலி எழுப்புவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. சிறிது நேரம் நிற்கிறான். பின்னர் கொஞ்சம் அமைதி நிலவுகிறது. பிறகு திடீரென்று அறையின் இன்னொரு மூலைக்குப் போய்விடுவதைப் போல இருக்கிறது. குறிக்கோள் ஏதுமற்ற அசட்டுத்தனமான தனது நடையை மீண்டும் துவக்குகிறான். லுலு எந்த உணர்வும் இல்லாமல் இருந்தாள். போர்த்தியிருந்த போர்வை லேசானதாகத்தான் இருந்தது. ‘உஸ்ஸப்பா’ என்று அலுத்துக் கொண்டு அவள் சத்தமாக வெளியிட்ட சத்தம் அவளுக்கே பயத்தை உண்டு பண்ணுவதாக இருந்தது.
‘உஸ்ஸப்பா… அவன் இப்போது வானத்தைப் பார்த்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு இருக்கிறான் என்று எனக்கு உறுதியாகத் தெரிகிறது. சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு வெளியே வந்து நிற்கிறான். பாரீஸ் நகரின் செந்நீல வானம் தனக்குப் பிடித்திருப்பதாகச் சொல்கிறான். சிறு அடிகள் எடுத்து வைத்து உள்ளே செல்கிறான். எல்லாவற்றையும் முடித்த பிறகு தனக்கு அழகுணர்ச்சி மிகுந்து வருவதாகச் சொல்கிறான். அதைப் பற்றி அவன் மேலும் சிந்திக்கவில்லை என்று அவன் சொன்னான். இப்போது நான்தான் எல்லாம் முடிந்து அசுத்தப்பட்டு நிற்கிறேன். வெளியே சென்றபோது என்னுடைய ஜன்னலுக்குக் கீழே நின்று அவன் விசில் அடித்ததை நான் கேட்டேன். வெறுமையுடனும் அதே சமயம் புத்துணர்வோடும் அருமையான மேலாடைகளை அணிந்துகொண்டு அவன் அங்கே நின்றிருந்தான். எப்படி நேர்த்தியாக உடையணிய வேண்டும் என்று அவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவனுடன் வெளியே செல்வதற்கு எந்தப் பெண்ணும் பெருமைப்படுவாள். அவன் என்னுடைய ஜன்னலுக்குக் கீழே நின்றுகொண்டிருந்த போது நான் இங்கே இருட்டில் நிர்வாணமாகக் கிடந்தேன். எந்த உணர்ச்சிகளும் இல்லாமல் என் அடிவயிற்றைத் தடவிக்கொண்டு கிடந்தேன். அனேகமாக அவன் விட்டு சென்ற ஈரம் இன்னும் அங்கே காயாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
ஒரு நிமிடம் வந்து உன்னுடைய அறையைப் பார்த்துவிட்டு செல்கிறேன் என்றுதான் உள்ளே வந்தான். ஆனால் இரண்டு மணி நேரம் என்னுடன் இருந்தான். துருப்பிடித்துப்போன இந்த சிறிய கட்டிலின் கால்கள் கிறீச்சிட்டுக் கதறியது. இந்த ஹோட்டலை அவன் எப்படி கண்டுபிடித்து வந்தான் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு இந்த ஹோட்டலில் ஒருமுறை அவன் தங்கி இருந்ததாகச் சொன்னான். சகல வசதிகளுடன் நான் தங்குவதற்கு இந்த ஹோட்டல் ஏதுவான இடம்தான் என்று சொன்னான். இங்கிருந்த அறைகள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தன. சிறிய அறைகள். அவற்றில் இரண்டை நான் பார்த்தேன். தட்டுமுட்டுச் சாமான்களோடு சோஃபா, சிறுமேசைகள் என்று அவ்வளவு சிறிய அறையில் நெருக்கமாக வைக்கப்பட்டிருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். எங்கும் நிறைந்திருந்தது காமத்தின் வாடை. அவன் நிஜமாகவே இரண்டு வாரங்கள் இங்கே தங்கி இருந்தானா என்று உறுதியாகத் தெரியவில்லை. அப்படியே தங்கி இருந்தாலும் தனியாகத் தங்கி இருந்தானா என்பது நிச்சயமாகத் தெரியாது. நான் இங்கே வந்து தங்கி இருப்பதால் என் மீது அவனுக்கு பெரிதாக மரியாதை இருக்குமா என்றும் தெரியவில்லை. நாங்கள் இருவரும் படி வழியாக ஏறி வரும்போது அங்கிருந்த அல்ஜீரிய வேலைக்காரன் ஒருவன் எங்களைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தானே! இவனை மாதிரி ஆட்களைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது. பார்த்தால் பயமாகவும் இருக்கிறது. என்னுடைய கால்களை உற்றுப்பார்த்தான் பின்னர் அவனுடைய அலுவலகத்திற்குள் சென்றுவிட்டான். இவர்கள் ‘அதை’த்தான் செய்யப்போகிறார்கள் என்று அவன் நினைத்திருக்கக்கூடும். கற்பனையில் எட்டக்கூடிய அத்தனை அசிங்கமான விஷயங்களையும் அவன் மனதிற்குள் நினைத்துப் பார்த்திருப்பான். அவர்களோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்ளத் துணியும் பெண்களுக்கு கிடைக்கும் அனுபவம் அவர்களின் வாழ்க்கையில் மிகப் பயங்கரமான ஒன்றாக இருக்கும். அப்படி யாரையாவது அவர்கள் பிடித்துக்கொண்டு வந்துவிட்டால் காலம் முழுக்க அந்தப் பெண் நொண்டி நடக்க வேண்டியிருக்கும். அந்த அல்ஜீரிய வேலைக்காரன் என்னைப் பற்றியும் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதையும் பற்றியும் கற்பனை செய்வதை நான் நினைத்துக் கொண்டிருப்பதாக பியரி என்னைத் தொல்லை செய்து கொண்டிருந்தான். அல்ஜீரியன் நினைப்பதைக் காட்டிலும் நான் அதிகமாக அசிங்கமாக நினைக்கிறேனாம்.
இந்த அறையில் யாரோ இருக்கிறார்கள்!’
லுலு மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டாள். கிறீச் சத்தம் திடீரென்று நின்றது. ‘என் தொடைகளுக்கு இடையே தாங்கமுடியாத வலி இருக்கிறது. கத்தி அழ வேண்டும் போல இருக்கிறது. இனிமேல் வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் அழுதுகொண்டே இருக்கப் போகிறேன். நாளை ஒருநாள் மட்டும் அழ வாய்ப்பு இருக்காது. ஏனென்றால் நாளை நான் ரயிலில் பயணம் செய்து கொண்டிருப்பேன். லுலு சட்டென்று உதட்டைக் கடித்துக்கொண்டாள். தான் ஏதும் முனகிவிட்டோமோ என்று என்று நினைத்த மாத்திரம் அவள் உடல் ஒருமுறை உதறியது. இல்லை. அது உண்மை இல்லை. நான் எதுவும் முனகவில்லை. அவன் உடல் மிகவும் கனமாக இருந்ததால் நான் மூச்சு திணறியிருப்பேன். அதனால் சத்தம் வந்திருக்கும். என் மீது அவன் கவிழ்ந்து படுக்கும்போது என்னுடைய மூச்சையும் சேர்த்தே பறித்துக்கொண்டு விடுகிறான். “என்னடி ஏதோ முனகுகிறாய்” என்று அவன் கேட்டான். ‘அதை’ செய்து கொண்டிருக்கும்போது என்னிடம் பேச்சு கொடுப்பவர்களைக் கண்டால் வெறுப்பு மண்டுகிறது. அவர்கள் எல்லாவற்றையும் மறந்து என்னிடம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அருவருப்பான விஷயங்களை பேசுவதை அவன் நிறுத்துவதே இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் முனகவே இல்லை. மேலும் எனக்கு இதைச் செய்வதில் இன்பமும் கிடைப்பதில்லை. மருத்துவரே சொல்லி இருக்கிறார். இதைச் சொன்னால் அவன் நம்பப் போவதில்லை. இந்த மாதிரியான உண்மைகளை அவர்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. பதிலுக்கு என்ன சொல்வார்கள் தெரியுமா? “உனக்கு இதை எப்படித் தொடங்க வேண்டும் என்று தெரியவில்லை. நான் சொல்லித் தருகிறேன்’ என்று ஆரம்பிப்பார்கள். நான் அவர்கள் என்ன பேசினாலும் பேசட்டும் என்று விட்டுவிடுகிறேன். இதில் இருக்கும் பிரச்சினை என்னவென்று எனக்குத்தான் தெரியும். அது முற்றிலும் மருத்துவப் பிரச்சினை தொடர்பானது. ஆனால் இந்த உண்மை அவர்களை ஆத்திரப்படுத்துகிறது’.
யாரோ மாடிப்படியேறி வந்து கொண்டிருந்தார்கள். யாரோ மீண்டும் திரும்பி வருவதுபோல இருக்கிறது. ‘கடவுளே! அவன் மட்டும் திரும்பி வந்துவிடக்கூடாது. அவனுக்கு மீண்டும் ‘அதை’ச் செய்ய வேண்டும் என்று தோன்றினால் அவனால் களைப்பின்றி செய்ய முடிகிறது. இந்தச் சத்தம் அவனுடையதல்ல. இந்தச் சத்தம் அழுத்தமாகவும் கனமானதாகவும் இருக்கிறது. அல்லது வேறு யாராவது… ஐயோ… லுலுவின் இதயம் அவள் நெஞ்சுக்கூட்டை விட்டு வெளியே வந்து விழுந்ததைப்போல இருந்தது. அந்த அல்ஜீரியனாக இருப்பானோ! நான் இங்கே தனியாக இருப்பது அவனுக்குத் தெரியும். இதோ அவன் அறைக்கதவை வந்து தட்டப் போகிறான். ஐயோ என்னால் முடியாது. என்னால் இதையெல்லாம் எதிர்கொள்ள முடியாது. கதவு தட்டுவது கீழே இருக்கும் தளத்தில் என்று நினைக்கிறேன். யாரோ ஒருவர் உள்ளே போவது தெரிகிறது. நன்றாக குடித்திருப்பது போலத் தெரிகிறது. இங்கெல்லாம் கூட தங்குவார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது. அனேகமாக அது அந்த பெண்ணாகத்தான் இருக்கும். இன்று மதியம் படியேறி வரும்போது சிகப்பு நிற முடியுள்ள பெண்ணொருத்தியைப் பார்த்தேன். போதைப்பொருள் தந்த மயக்கம் அந்தப் பெண்ணின் கண்களை விட்டு இன்னும் அகலாமல் இருந்தது.
நான் முனகவில்லை. அவன் தனது லூசுத்தனங்களை என் மீது காட்டி தொல்லை செய்து கொண்டிருந்தான். அதை எப்படி செய்ய வேண்டும் என்று அவனுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. கற்பிழக்காத குட்டிகளோடு எனக்கு தூங்கப் பிடிக்கும் என்று பீற்றிக்கொள்ளும் ஆண்கள் பயங்கரமானவர்கள். அவர்களுக்கு அந்த மாதிரியான பெண்கள் வெறும் கருவிகள் போல. இவர்களை நான் எப்படி பயன்படுத்தி விளையாடுகிறேன் பார் சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமை. என்னைத் தொந்தரவு செய்யும் மனிதர்ளை நான் வெறுக்கிறேன். என்னுடைய தொண்டை காய்ந்துவிட்டது. என்னுடைய நாவின் சுவைதிறன் இல்லாமல் போய்விட்ட மாதிரி இருக்கிறது. என் மீது அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற எண்ணமே என்னை அவமானத்தில் கூனிக்குறுக வைத்துவிடுகிறது. பியரி என்னிடம் வந்து நைச்சியமாக இன்று நாம் புதுவிதமாக முயற்சிக்க என்னிடம் ஒரு வழி உள்ளது என்று சொல்லும்போதெல்லாம் அவனை ஓங்கி அறைய வேண்டும் போல இருக்கிறது.
அட கடவுளே! இதுதான் வாழ்க்கையா? இதற்காகத்தான் இப்படி உடையணிந்து கொண்டு, குளித்து சிங்காரித்து, உன்னை அழகாகக் காட்டிக்கொண்டு, இந்தக் கருமத்தைப் பற்றி புத்தகங்கள் எல்லாம் எழுதிக் குவித்து, அதைப் பற்றியே சிட்டுக்குருவி போல நினைத்து உருகி கடைசியில் எங்கே வந்து நிற்கிறாய்? எவனோ ஒருவனுடன் அறை ஒன்றில் நுழைந்து அவன் உடலுடன் அரைகுறையாக மூச்சடைக்கும் வரை கட்டிப்புரண்டு இறுதியில் அடிவயிற்றில் பிசுபிசுவென்று ஈரமாகி சகலமும் முடிவுக்கு வந்து நிற்கும்.
எனக்குத் தூங்க வேண்டும் போல இருக்கிறது. கொஞ்ச நேரம் தூங்கினால் நாளை இரவு முழுதும் என்னால் களைப்பில்லாமல் பிரயாணிக்க முடியும். நைஸ் நகரை சுற்றிப்பார்க்க கொஞ்சம் புத்துணர்வோடு இருந்தால் நல்லது. அங்கே எல்லாம் அழகாக இருக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். குட்டி குட்டியான இத்தாலியத் தெருக்கள், சூரிய வெளிச்சத்தில் காயப்போட்டுள்ள வண்ண வண்ண ஆடைகள் இத்யாதி. நான் என்னுடைய ஓவியம் வரையும் ஸ்டாண்டை எடுத்துக்கொண்டு போய் படம் வரையத் தொடங்கி விடுவேன். அங்கிருக்கும் சிறுமிகள் நான் என்ன வரைகிறேன் என்பதை ஆவலுடன் வந்து பார்ப்பார்கள். “உச்ச்…” (அவள் தனது உடலைக் கொஞ்சம் நெட்டி முறித்தபோது படுக்கை விரிப்பில் ஈரமாகி இருந்த பகுதி அவள் பின்புறத்தில் பட்டுவிட்டது). இந்தக் கருமத்திற்குத்தான் இவன் என்னை இங்கே கொண்டுவந்து வைத்திருக்கிறான்.
ஒருத்தர் கூட என்னைக் காதலிக்கவில்லை. அவன் என்னருகில் நடந்து வந்த போது எனக்கு மயக்கம் வருவதைப் போல இருந்தது. அவனிடமிருந்து ஒரே ஒரு வார்த்தை… அன்பான ஒரே ஒரு வார்த்தைக்காக நான் காத்துக் கிடந்தேன். “உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று ஒரு வார்த்தை அவன் சொல்லி இருக்கலாம். அவனிடம் திரும்பிப் போயிருக்க வாய்ப்பில்லை என்றாலும் ஆதரவாக ஓரிரு வார்த்தைகள் பேசியிருப்பேன். நல்ல நண்பர்களாக பிரிந்திருக்கலாம். அவனுக்காக எப்படியெல்லாம் காத்துக் கிடந்தேன். அவன் என்னுடைய கைகளைப் பற்றிக்கொண்ட போது நான் ஒன்றுமே சொல்லாமல் அதை அனுமதித்தேனே! ரைரெட் கூட கோபத்தால் துடித்தாள். அவன் ஓராங்குட்டனைப் போல இருக்கிறான் என்பது உண்மையல்ல. எதற்காகவோ அவள் அவனைப் பற்றி அந்த மாதிரி கற்பனை செய்து வைத்திருக்கிறாள். அவள் அவனைத் தன் ஓரக்கண்ணால் பார்த்தவிதம் இருக்கிறதே. எவ்வளவு வெறுப்பு அந்தப் பார்வையில். அப்போதுதான் தெரிந்தது அவளால் எந்த அளவுக்கு வெறுப்பை உமிழ முடியும் என்று. இவ்வளவு இருந்தும் அவன் என் கைகளைப் பற்றிய போது நான் உடன்படத்தானே செய்தேன். அவன் விரும்பியது ‘என்னை’ அல்ல; அவன் விரும்பியது அவனது ‘மனைவியை’. ஏனென்றால் அவன் என்னைத் திருமணம் செய்திருக்கிறான். அதனால் அவன் என்னுடைய கணவனாக இருக்கிறான். என்னை எப்போது பார்த்தாலும் அவமானப்படுத்துவதே அவனுக்கு வழக்கம். என்னை விட தான்தான் புத்திசாலி என்று அடிக்கடி கூறுவான். இது வரை நடந்த அனைத்திற்கும் அவன்தான் முழுமுதல் காரணம். என்னை அவன் உயர்வாகவோ உன்னதமானவளாகவோ மதிக்காவிடினும் பரவாயில்லை. நான் அவன் கூடவே இருந்திருப்பேன். இப்போது கூட அவன் என்னை இழந்ததற்காக வருந்தமாட்டான். அழக்கூட மாட்டான். மாறாக நன்றாகக் குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருப்பான். அதைத்தான் அவனால் செய்ய முடியும். நன்றாக காலை விரித்துத் தூங்க தனக்கொரு கட்டில் இருக்கிறதே என்ற நினைப்பு மட்டும் போதும். அது அவனுக்கு மகிழ்ச்சியைத் தரப் போதுமானதாக இருக்கும்.
எனக்கு சாகப் பிடிக்கவில்லை. என்னைப் பற்றி என்னவெல்லாம் தவறாக நினைப்பானோ என்று நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. அவனைப் பார்த்து என்னால் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்ல முடியும். ஆனால் ரைரெட் பெரிய தடையாக குறுக்கே நிற்கிறாள். எப்போது பார்த்தாலும் தொணதொணவென்று பேசிக்கொண்டு பைத்தியம் பிடித்தவள் மாதிரி. இப்போது அவளுக்கு சந்தோஷம். தன்னுடைய தைரியத்தைப் பற்றி தனக்குத் தானே மெச்சிக் கொள்கிறாள். நினைப்பதற்கே எவ்வளவு அசூயையாக இருக்கிறது. கன்றுக்குட்டியைப் போல மென்மையான குணம் கொண்ட ஹென்றியிடம் வாழ்வது எவ்வளவோ மேல். நான் உடனே போக வேண்டும். அவனை ஒரு நாயைப்போல என்னால் தவிக்க விட முடியாது. யாரும் என்னை அப்படி நிர்ப்பந்திக்கவும் முடியாது. அவள் படுக்கையை விட்டு கீழே குதித்தாள். ஸ்விட்சை ஆன் செய்தாள். காலுறைகளும் செருப்பும் போதும். அவளுக்கிருந்த அவசரத்தில் தலையைக்கூட வாரிக்கொள்ள அவள் நேரம் செலவழிக்க விரும்பவில்லை. நான் அணிந்திருக்கும் கனமான கோட்டுக்கு உள்ளே நான் நிர்வாணமாக இருக்கிறேன் என்பது என்னைப் பார்ப்பவர்களுக்கு தெரியப்போவதில்லை. அந்த கோட்டு என் பாதம் வரை தொங்குகிறது. அந்த அல்ஜீரியனை நினைத்தால்தான்… இதயம் படபடக்க அவள் நின்றாள். இப்போது கதவைத் திறக்க அவனை நான் எழுப்ப வேண்டும். ஓசையெழுப்பாமல் மெதுவாக கீழே இறங்கி நடந்தாள். கவனமாக நடந்தும் அவளுடைய காலடிச் சத்தம் சன்னமாகக் கேட்டது. அலுவலகம் சென்று அதன் ஜன்னல் கதவுகளைத் தட்டினாள்.
“என்னாச்சு?” என்று கேட்டான் அந்த அல்ஜீரியன். தலைமுடி தாறுமாறாகவும் கண்கள் சிவந்தும் இருந்தன. அவனைப் பார்த்தால் அப்படி ஒன்றும் பயங்கரமானவனாகத் தெரியவில்லை.
“கதவைக் கொஞ்சம் திறக்க முடியுமா?” என்று வறண்ட குரலில் கேட்டாள்.
****
அடுத்தப் பதினைந்து நிமிடங்களில் அவன் ஹென்றியின் வீட்டுக்கதவைத் தட்டிக்கொண்டு நின்றாள்.
“யாரது?” கதவின் ஊடே உற்றுப்பார்த்தவாறு கேட்டான் ஹென்றி.
“நான்தான்”
அவன் பதிலேதும் சொல்லவில்லை. வீட்டுக்குள் என்னை அனுமதிக்க விரும்பாதவனைப்போல இருந்தது. ஆனால் அவன் கதவைத் திறக்கும் வரை நான் தட்டிக்கொண்டே இருப்பேன். இறுதியில் அக்கம்பக்கம் என்ன ஏதோ என்று பார்ப்பார்களே என்று நினைத்தானோ என்னவோ. ஒரு நிமிடம் கழித்து கதவைப் பாதியாகத் திறந்து விட்டான். மூக்கு நுனியில் வெடித்திருந்த பரு ஒன்றுடன், முகம் வெளிறியவனாய் ஹென்றி அங்கே நின்று கொண்டிருந்தான். பைஜாமா அணிந்திருந்தான். அவன் தூங்காமல் இருந்திருக்கிறான் என்று லுலு நினைத்துக்கொண்டாள். அவள் மனதில் கருணை வழிந்தது.
“உன்னை அப்படியே விட்டுவிட்டுப்போக மனமில்லை. அதனால்தான் உன்னைப் பார்க்க திரும்பி வந்தேன்” என்றாள்.
ஹென்றி ஒன்றும் சொல்லாமல் நின்றான். லுலு அவனை லேசாக இடித்து ஒதுக்கியவாறு உள்ளே நுழைந்தாள். இப்போதும் எவ்வளவு மூடனாக இருக்கிறான். எப்போதும் போல வழியை மறித்துக்கொண்டு. தன்னுடைய உருண்ட விழிகளால் அவளைப் பார்த்தான். கைகள் தொளதொளவென்று தொங்கிக் கொண்டிருந்தன. இந்த உடலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாதவனைப்போல நின்று கொண்டிருந்தான்.
‘வாயை மூடிக்கொள்… வாயை மூடு… உன்னால் உணர முடிவதைக் காண முடிகிறது. ஆனால் உன்னால் பேச முடியாது. – எச்சிலை விழுங்க முயன்றான். லுலுதான் கதவை மூட வேண்டியிருந்தது.
“நல்ல நண்பர்களாகப் பிரியலாம் என்று நினைக்கிறேன்” என்றாள்.
ஏதோ பேசுவதற்கு வாயைத் திறந்தான். திடீரென்று திரும்பி அங்கிருந்து ஓடிவிட்டான். ‘என்ன செய்கிறான் இவன்? அவனைப் பின் தொடர அவள் துணியவில்லை. அழுகிறானோ? அவன் இருமுவது அவளுக்குக் கேட்டது. குளியல் அறையில் இருக்கிறான். வெளியே வந்தபோது பாய்ந்து போய் அவனுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டாள். தன்னுடைய உதட்டை அவன் உதட்டோடு இறுக்கினாள். வாந்தி வருவதைப் போல உணர்ந்தான் ஹென்றி. லுலு வெடித்து அழத் தொடங்கினாள்.
“எனக்கு உணர்வுகள் மரத்துப்போய் விட்டது” என்றான் ஹென்றி.
“சரி. வா… படுக்கைக்குப் போகலாம்” என்று அழுதுகொண்டே சொன்னாள் லுலு. “நாளை காலை வரை நான் தங்கிவிட்டுச் செல்கிறேன்” என்றாள்.
இருவரும் படுக்கைக்குச் சென்றார்கள். அவளுடைய அறை சுத்தமாக இருந்ததையும் ஜன்னலில் தெரிந்த செந்நிற செழுமையையும் பார்த்து லுலுவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஹென்றி அவளைத் தனது கைகளில் தூக்கி ஏந்திக்கொள்வான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவன் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருந்தான். கால்களையும் கைகளையும் எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரித்து ஆணியால் அறைந்ததைப் போல கிடந்தான். பேசும்போதுகூட ஸ்விஸ் நாட்டுக்காரனிடம் பேசுவதைப்போல விறைப்பாக பேசினான். தன் இரு கைகளாலும் அவள் அவன் தலையை ஏந்திக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். “நீ மிகவும் பரிசுத்தமானவன்” என்றாள். அவன் அழத்தொடங்கினான்.
“நான் எவ்வளவு வேதனையில் இருக்கிறேன் தெரியுமா? இந்த மாதிரியான வேதனையை நான் ஒருபோதும் அனுபவித்தது கிடையாது” என்றான் ஹென்றி.
“நான் மட்டும் என்ன? நானும்தான்” என்றாள் லுலு.
அவர்கள் இருவரும் நெடுநேரம் அழுது கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து அவள் விளக்கை அணைத்தாள். அவன் தோளில் தனது தலையை சாய்த்துக் கொண்டாள். நாம் இப்படியே நிரந்தரமாக இருந்துவிட்டால் எப்படி இருக்கும்! பரிசுத்தமான, துக்கம் நிறைந்த இரண்டு அனாதைகளைப்போல. ஆனால் அது முடியாது. அப்படியெல்லாம் நிஜவாழ்க்கையில் நடப்பதில்லையே. வாழ்க்கை லுலுவைக் கிழித்துப் போடும் ஒரு பேரலையாக வந்து நின்றது. ஹென்றியின் தோள்களில் இருந்து அவளை நார்நாராகக் கிழித்துப் போடும் பேரலையைப்போல. உன்னுடைய கைகளைப் பார். எவ்வளவு பெரிய கைகள். அவை பெரிதாக இருப்பதாலேயே ஹென்றி அதைப் பற்றி பெருமைபட்டுக் கொள்வான். பாரம்பரியமான குடும்பங்களில் இருந்து வருபவர்களுக்கு கைகள் பெரிதாக இருக்குமாம் என்று சொல்வான். இனிமேல் அவன் என்னுடைய இடுப்பை வளைத்துப்பிடிக்க மாட்டான்- அவன் என்னைக் கட்டிப்பிடிக்கும்போது அவனால் தன்னுடைய விரல்களை கோர்த்துக் கொள்ள முடியும். அவனால் அப்படி செய்ய முடியும்போது என்னுருவம் குறித்து எனக்குப் பெருமையாக இருக்கும். அவன் ஆண்மையில்லாதவன் அல்ல. பரிசுத்தமானவன். கொஞ்சம் சோம்பேறி. கண்ணீரின் ஊடே லேசாக சிரித்துக்கொண்டு அவனுடைய நெற்றியில் முத்தமிட்டாள்.
“என்னுடைய பெற்றோரிடம் நான் என்ன சொல்லப்போகிறேன்? இதையெல்லாம் கேட்டால் என் அம்மா உடனே செத்துவிடுவாள்” என்றான் ஹென்றி.
மேடம் கிரிஸ்பின் அவ்வளவு லேசில் சாக மாட்டாள். மாறாக நினைத்ததை சாதிப்பவள் அவள். சாப்பிடும் நேரத்தில் அவர்கள் என்னைப் பற்றித்தான் பேசுவார்கள். அவர்கள் ஐந்து பேரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு என் மீது குற்றப்பத்திரிக்கை வாசிப்பார்கள். அதாவது எல்லாம் தெரிந்த அறிவாளிகள் மாதிரி. பதினாறு வயதில் குழந்தை முன்னால் இருக்கிறாளே என்ற இங்கிதத்தால் தங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் வெளிப்படையாகப் பேசாமல் இருப்பார்கள். அவளுக்கு எல்லாமே தெரியும் என்பதால் உள்ளுக்குள் சிரிப்பாள். அவளுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. அவள் என்னை வெறுப்பது எனக்குத் தெரியும். எல்லா கருமமும் அப்படித்தான். இங்கு இருக்கும் அனைத்துத் தோற்றங்களும் எனக்கு எதிரானவையே.
“இப்போது அவர்களிடம் எதுவும் சொல்லிவிட வேண்டாம்” என்று கெஞ்சினாள் லுலு. “நான் நைஸ் சென்றபின் சொல். குறைந்தபட்சம் என் நலன் பொருட்டு எதையும் சொல்லாதே”
“நான் சொன்னாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள்.”
சட்டென்று அவனைக் கட்டிக்கொண்டு அவன் முகம் முழுவதும் முத்தங்களைப் பதித்தாள் அவள்.
“ஹென்றி, நீ எந்தக் காலத்திலும் என் மீது அன்பாக இருந்ததே இல்லை “
“அது உண்மைதான். நான் உன்னிடம் அன்பில்லாமல்தான் இருந்தேன். நீ மட்டும் என்ன? நீயும்தான் அப்படி இருந்தாய்” என்று பதிலளித்தான் ஹென்றி.
“நான் அப்படி இருந்ததில்லை. நாம் இருவரும் எவ்வளவு துரதிர்ஷ்டசாலிகள்.” பேசும்போதே அவளுக்கு மூச்சடைப்பதைப் போல இருந்தது. சத்தமாக ஓலமிட்டு அழுதாள். சீக்கிரம் பொழுது புலர்ந்து விடும். அவள் அங்கிருந்து சென்றாக வேண்டும். உனக்கு விருப்பமானதை நீ என்றைக்குமே செய்ததில்லை. வெறுமனே பிறரின் தாக்கத்தால் அப்படி நடந்து கொண்டிருக்கிறாய்.
“நீ என்னை அப்படி விட்டுவிட்டு சென்றிருக்கக் கூடாது” என்று சொன்னான் ஹென்றி.
லுலு அதைக்கேட்டு பெருமூச்சு விட்டாள். “உன்னை நான் அளவுக்கதிகமாக நேசித்தேன் ஹென்றி”
“அதாவது இப்போது அந்த மாதிரி நேசிக்கவில்லை. அப்படித்தானே?”
“பழைய நேசிப்பு போல் இல்லை. அவ்வளவுதான்”
“யாருடன் செல்வதாக இருக்கிறாய்?”
“உனக்கு அறிமுகம் இல்லாத நபருடன்”
“எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் என்று உனக்கு எப்படித் தெரியும்?” ஹென்றி கோபத்துடன் கேட்டான். “அவர்களை எங்கே சந்தித்தாய்?”
“அதைப்பற்றி உனக்கென்ன கவலை? என் அன்பே! என் குட்டி கலிவர்! இப்போது நீ என்னுடைய கணவணைப்போல் நடந்து கொள்ளக் கூடாது”
“யாரோ ஒரு மனிதனுடன் நீ செல்லப்போகிறாய்?” ஹென்றி விம்மி அழுதான்.
“நான் சொல்வதைக்கேள் ஹென்றி. சத்தியமாகச் சொல்கிறேன். நான் யாருடனும் போகவில்லை. ஆண்கள் என்றாலே எனக்கு இப்போதெல்லாம் வெறுப்பாக இருக்கிறது. ஒரு குடும்பத்துடன் செல்கிறேன். ரைரெட்டின் நண்பர்களும் வருகிறார்கள். வயதானவர்கள். நான் தனிமையில் வாழ நினைக்கிறேன். அவர்கள் எனக்கு ஒரு வேலையைத் தேடித் தருவார்கள். ஹென்றி, உனக்கே தெரியாதா? தனிமையில் வாழ எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உனக்கு நன்றாகத் தெரியும். இது எல்லாம் எனக்கு அருவருப்பைத் தருகின்றன.”
“என்ன? அருவருப்பா? எது உன்னை அருவருப்படையச் செய்கிறது?” என்று கேட்டான் ஹென்றி.
“எல்லாமும்தான்.” அவனை முத்தமிட்டாள். “டார்லிங், நீ ஒருவன் மட்டும்தான் எனக்கு அருவருப்பைத் தராதவன்”
தனது கைகளை ஹென்றியின் பைஜாமாவுக்குள் நுழைத்து அவன் உடலை மென்மையாக வருடினாள். குளிர்ச்சியாக இருந்த அவளின் கை ஸ்பரிசம் பட்டு அவன் உடல் சிலிர்த்தது. அவளது கைகளை அவன் விலக்கி விடவில்லை. “நான் நொந்து போய் தளர்ந்துவிடுவேன்” என்று மட்டும் சொன்னான்.
அவன் உள்ளுக்குள் ஏகத்துக்கும் நொறுங்கிப் போயிருந்தான் என்பது உறுதியாகத் தெரிந்தது.
***
ஏழு மணிக்கு லுலு எழுந்தாள். அழுததால் கண்கள் கண்ணீருடன் வீங்கி இருந்தது. அயற்சியுடன் சொன்னாள்: “நான் அங்கே போயாக வேண்டும்”
“போகவேண்டுமா? எங்கே?”
“து தியேட்டர் ஹோட்டல், ரூ வாண்டாம். அந்த அழுகிப்போன ஹோட்டலுக்குத்தான்”
“என்னுடன் தங்கிவிடு”
“இல்லை. ஹென்றி. என்னை வற்புறுத்தாதே. அது முடியாது என்று நான் ஏற்கனவே உனக்கு சொல்லியிருக்கிறேன்”
வெள்ளம் உன்னை தன் போக்கில் இழுத்துச் செல்கிறது: அதுதான் வாழ்க்கை. இப்படித்தான் என்று நினைக்கவும் முடியாது. புரிந்து கொள்ளவும் முடியாது. இழுத்த இழுப்புக்கு மறுப்பு சொல்லாமல் ஓடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். நாளை நான் நைஸில் இருப்பேன். வெதுவெதுப்பான நீரில் கண்களைக் கழுவுவதற்காக பாத்ரூமை நோக்கி சென்றாள். கோட்டை எடுத்து அணிந்து கொண்டாள். உடலில் நடுக்கம் இருந்தது. விதியைப் போன்ற விஷயம் இது. இன்று இரவு ரயிலில் தூங்குவேன் என்று நம்பத்தான் என்னால் முடியும். இல்லையென்றால் நைஸை அடையும்போது எதிலாவது மோதி உயிரிழந்தாலும் ஆச்சரியமில்லை. பியரி முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி இருப்பான் என்று நினைக்கிறேன். இதுதான் முதல் வகுப்பில் நான் செய்யப்போகும் முதல் பயணம். சுற்றி நடப்பவை எல்லாம் இந்த மாதிரிதான் நடக்கின்றன. பல வருடங்களாக முதல் வகுப்பில் அமர்ந்து நீண்டதொரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போது எல்லாம் கைகூடி வருகிறது. ஆனால் அதை மகிழ்ச்சியாக சுகிக்கத்தான் முடியவில்லை. அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று அவசரம் காட்டினாள். அந்த இறுதி நிமிடங்களின் கனத்தை அவளால் தாங்கமுடியவில்லை.
“அந்த வேல்ஸ் ஆள் பற்றிய விஷயம் குறித்து என்ன செய்யப்போகிறாய்?” என்று லுலு கேட்டாள்.
அந்த வேல்ஸ் ஆள் ஹென்றியிடமிருந்து போஸ்டர் ஆர்டர் செய்திருந்தான். அது இப்போது தயாராக இருந்தது. ஆனால் அந்த ஆள் இப்போது அது தேவையில்லை என்று சொல்லிவிட்டான்.
“எனக்குத் தெரியவில்லை” என்றான் ஹென்றி.
விரிப்பு ஒன்றை போர்த்திக்கொண்டு படுத்துக்கிடந்தான். தலைமுடியும் காதுகளின் நுனியும் மட்டும் வெளியே தெரிந்தது. மெதுவாக மென்மையாக அவன் சொன்னான்: “ஒரு வாரம் முழுக்க தூங்கினால் நன்றாக இருக்கும் போல இருக்கிறது”
“குட் பை டார்லிங்” என்று விடைபெற்றாள் லுலு.
“குட் பை”
அவள் அவனை நோக்கி குனிந்தாள். விரிப்பை பின்னால் கொஞ்சம் இழுத்துவிட்டு அவன் நேற்றியில் முத்தமிட்டாள். கதவருகே போய் நின்றுகொண்டு வெகுநேரம் கதவை அடைப்பதா வேண்டாமா என்பதைப்போல நின்றாள். சிறிது நேரம் கழித்து தனது கண்களை அப்பால் திருப்பிக்கொண்டு வேகமாக தாழ்ப்பாளை இழுத்து மூடினாள். வறண்ட ஒரு குரல் உள்ளிருந்து கேட்டது. மயக்கம் போட்டு விழுந்து விடப்போகிறோம் என்று நினைத்தாள். அவளுடைய தந்தையின் சவக்குழியில் முதல் மண்வெட்டி மணல் விழுந்த போது இருந்த மனநிலையில் இருந்தாள் அவள்.
‘ஹென்றி இப்போதும்கூட என்னை ஒழுங்காக நேசிக்கவில்லை. எழுந்து வந்து கதவு வரைக்கும் என்னை வழியனுப்ப வந்திருக்கலாம். அவனே வந்து இந்தக் கதவை அடைத்திருந்தால் எனக்கு இப்போது இருக்கும் வருத்தம் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கும்.’
IV
“அவள் நடத்திக் காட்டி விட்டாள்” என்று எங்கோ பார்த்தவாறு சொன்னாள் ரைரெட். “நடத்திக் காட்டிவிட்டாள்”
அன்று மாலை ஆறு மணி இருக்கும். பியரி ரைரெட்டைக் கூப்பிட்டான். அவள் அவனை டோம் ஹோட்டலில் சந்தித்தாள்.
“நீ ஏன் இங்கே சுற்றிக்கொண்டு திரிகிறாய்? இன்று காலை ஒன்பது மணிக்கு நீ லுலுவை சந்திக்கப் போவதாக சொன்னாயல்லவா?”
“சந்தித்து விட்டேன்”
“ஏதாவது வித்தியாசமாகத் தெரிந்தாளா?”
“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அப்படி ஒன்றும் வித்தியாசமாக எதுவும் என் கண்ணுக்குத் தெரியவில்லை. கொஞ்சம் களைப்பாக இருந்தாள். நீ அவளை விட்டு போனபின் அவளால் தூங்கமுடியவில்லை என்று சொன்னாள். நைஸைப் பார்க்க போகிறோம் என்று குதூகலித்தாள். அந்த அல்ஜீரியன் வேலைக்காரனைப் பார்த்து கொஞ்சம் பயந்து போயிருந்தாள். ஒரு நிமிடம்… அவளுக்கு ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் எடுத்துவிட்டாயா என்று கூட என்னை கேட்கச் சொன்னாள். முதல் வகுப்பில் பிரயாணம் செய்வது என்பது அவளுடைய வாழ்நாள் கனவு என்று சொல்லி இருந்தாள். வாங்கினாயா?” என்றாள் ரைரெட்.
“அப்படியெல்லாம் அவள் ஒன்றும் மனதில் நினைக்கவில்லை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். குறைந்த பட்சம் அவளுடன் நான் இருந்த அந்த நேர பரிச்சயத்தில் சொல்கிறேன். அவள் அப்படியெல்லாம் ஒன்றும் நினைக்கவில்லை. அவளுடன் இரண்டு மணி நேரம் இருந்தேன். அதனால் என்னால் உறுதியாக சொல்ல இயலும். அப்படியும் ஏதாவது என் கண்ணில் படாமல் போயிருந்தால் ஆச்சரியம்தான். அவள் எதையும் வாயைத் திறந்து சொல்லும் பழக்கமில்லாதவள் என்று சொல்லி இருக்கிறாய். ஆனால் எனக்கு அவளை நான்கு வருடங்களாகத் தெரியும். எல்லாவித சூழ்நிலைகளிலும் அவள் எப்படி நடந்து கொள்வாள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு லுலுவைப் பற்றி ஆதியில் இருந்து அந்தம் வரை தெரியும்…”
“ஆக அதற்கு அப்புறம் டெக்ஸியர்ஸ்தான் அவளுடைய மனதைக் குழப்பி விட்டார்கள். வேடிக்கைதான் போ…”
சில கணங்கள் யோசித்தான். பிறகு திடீரென்று மறுபடியும் ஆரம்பித்தான். “லுலுவுக்கு அந்த முகவரியை யார் தந்தது? நான் சென்று பார்த்த ஹோட்டல் அவள் இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்காத ஒன்று”
லுலு எழுதிய கடிதம் ஒன்றை கையில் வைத்து அப்படியும் இப்படியுமாக ஆட்டிக் கொண்டிருந்தான் பியரி. அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதைப் படிக்க முடியாமல் ரைரெட் கடுப்பாகி இருந்தாள். அவனும் அதை அவளிடம் கொடுத்தபாடில்லை.
“இது உனக்கு எப்போது கிடைத்தது?” என்று கேட்டாள் ரைரெட்.
“இந்தக் கடிதமா…?” என்று கேட்டுவிட்டு விட்டேத்தியாக அதை அவளிடம் தந்தான். “இந்தா… படித்துப் பார். அனேகமாக ஒரு மணியளவில் வார்டனிடம் அவள் இதைக் கொடுத்திருக்கக்கூடும்”
அந்தக் கடிதம் மெல்லியதாய் ஊதா நிறத்தில் சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் தாளைப்போல இருந்தது.
என்னுயிரானவனே,
டெக்ஸியர்ஸ் வந்தார்கள் (அவர்களுக்கு முகவரியைத் தந்தது யாரென்று தெரியவில்லை) உனக்கு நான் மிகப்பெரிய சோகமான செய்தியைச் சொல்லப் போகிறேன். நான் எங்கும் செல்லப்போவதில்லை. என் உயிருக்குயிரான பியரி, நான் ஹென்றியுடனேயே தங்கி விடப்போகிறேன். அவன் மகிழ்ச்சியழிந்து திரிகிறான். இன்று காலை அவர்கள் அவனைப் பார்க்கச் சென்றிருந்தார்கள். அவன் கதவைக் கூட திறக்கத் தயாரில்லை. அவனைப் பார்த்தால் மனிதனைப்போலவே தெரியவில்லை என்று டெக்ஸியர் மேடம் சொன்னாள். அவர்கள் அன்பானவர்களாக இருந்தார்கள். நான் சொன்னதையும் புரிந்து கொண்டார்கள். எல்லாத் தவறுகளும் அவன் பக்கம்தான் இருக்கின்றன என்றும் சொன்னார்கள். கரடியைப் போல இருந்தாலும் நல்ல இதயம் படைத்தவன் என்று சொன்னார்கள். நான் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் புரியவைக்க அவனுக்கு அந்த மாதிரியான நிலை தேவைதான் என்றார்கள். யார் அவர்களுக்கு இந்த முகவரியைத் தந்தார்கள் என்பதை என்னிடம் அவர்கள் சொல்லவில்லை. இன்று காலை நான் ரைரெட்டுடன் ஹோட்டலை விட்டு கிளம்பும்போது அவர்கள் என்னைப் பார்த்திருக்கலாம் என்று நம்புகிறேன். அவள் என்னிடம் கேட்கப்போவது மிகப்பெரிய தியாகம் என்று டெக்ஸியர் மேடம் என்னிடம் சொன்னாள். அவள் கேட்கும் எந்த ரகசியத்தையும் நான் வெளியிட மாட்டேன் என்று அவளுக்கு தெரியும். நைஸுக்கு போக இருந்த அருமையான பயணத்தை நான் மேற்கொள்ள முடியாதது பெரிய வருத்தமாக இருக்கிறது அன்பே. ஆனால் நான் என்றும் உன்னுடையவள்தானே. அதனால் நான் இல்லாததால் நீ ஒன்றும் பெரிதாக வருத்தப்பட மாட்டாய் என்று நினைத்தேன். என் இதயமும் உனக்குத்தான்; என் உடலும் உனக்குத்தான். முன்பு நாம் சந்தித்துக்கொள்வதைப் போல இனிமேலும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளலாம். ஆனால் ஹென்றியிடம் நான் போகாவிட்டால் அவன் தற்கொலை செய்துகொள்வான். நான் அவனுக்கு மிக மிக முக்கியமானவளாகிவிட்டேன். அந்த அளவுக்கு பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்பது எனக்கு பெரிதாக மகிழ்ச்சியளிக்கவில்லை. என்னை அவ்வப்போது பயமுறுத்தும் உன்னுடைய குறுநகை தெறிக்கும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ள மாட்டாய் என்று நம்புகிறேன். நான் வருத்தப்படுவதை நீ விரும்புபவன் அல்ல. அப்படித்தானே! வெகுசீக்கிரமாக நான் ஹென்றியிடம் போய்விடுவேன். இந்த நிலையில் அவனைப்போய் பார்க்கப்போகிறேனே என்று நினைக்கும்போது ஒரு மாதிரியாக நோய்மையாக உணர்கிறேன். இருந்தாலும் அவனுடன் இருக்க வேண்டுமென்றால் எனக்கென்று சில விதிமுறைகள் இல்லாமல் இல்லை. அதைச் சொல்ல எனக்கு தைரியம் இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு சுதந்திரம் வேண்டும். அவனை நான் மனமாரக் காதலிக்கிறேன் என்று சொல்வேன். ராபர்ட்டை அவன் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்று சொல்லிவிடுவேன். அம்மாவைப் பற்றி எதுவும் தவறாக சொல்லக்கூடாது என்று சொல்லுவேன். இதைத் தாண்டி வேறு விதிகளும் உண்டு. என் உயிரானவனே! நான் பெரிய துக்கத்துடன் இருக்கிறேன். இப்போது நீ என்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் போல இருக்கிறது. எனக்கு நீ வேண்டும். உன்னைச் சேர்த்து என்னோடு இறுக்கிக் கொள்வேன். உன்னுடைய தீண்டலை என் உடல் முழுவதும் உணர விரும்புகிறேன். நாளை ஐந்து மணிக்கு டோம் ஹோட்டலில் இருப்பேன்.
இப்படிக்கு
லுலு.
“ஐயோ பாவம் பியரி”
ரைரெட் பியரியின் கைகளைப் பற்றினாள்.
“நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைக் கேள். அவளை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவளுக்கு நல்ல காற்றும் சூரிய வெளிச்சமும் தேவைப்படுகிறது. அவளாகவே இந்த வழியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டதால்… என் அம்மாவும் பயங்கரமாகக் கத்தத் தொடங்கி விட்டாள்” என்று எதையோ உளறிக்கொண்டே போனான். “நானிருக்கும் வீடு அம்மாவின் பெயரில் இருக்கிறது. அவளைத் தவிர அங்கே வேறு எந்தப்பெண்ணும் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறாள்.”
“ஆஹ்….அப்படியா?” என்று உடைந்துபோன குரலில் கேட்டாள் ரைரெட். “ஆஹ்…அதாவது எல்லாம் சரியாகத்தான் நடந்திருக்கிறது இல்லையா. அப்புறம்… எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். அவ்வளவுதானே!”
அவனது கையைக் கீழே நழுவ விட்டாள் ரைரெட் – தவறிழைத்து விட்ட குற்ற உணர்வு தன்னை மொத்தமாய் வியாபிப்பதைக்கூட உணராமல் அதை நழுவவிட்டாள்.
மூலம்: இது சார்த்தர் எழுதிய “Intimacy” என்ற குறுநாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. இந்தக் கதை இதே தலைப்புடன் இருக்கும் கதைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. ஃப்ரெஞ்ச் மொழியில் எழுதப்பட்ட இந்தக் கதை Lloyd Alexander என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Panther பதிப்பகத்தால் 1949 இல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.
ஆங்கிலம் வழியாக தமிழில்: சரவணன் கார்மேகம்