திறப்பு  

பாரீஸிலே நாம் முதலில் 18 ஆம் வட்டாரத்தில் வாழ்ந்து, இப்போது 20 ஆவதில் வாழ்கின்றோம். இரண்டையும் போதை வஸ்து வியாபாரிகள் வாங்கியுள்ளதைப் போலதான். அவர்களிற்கு எம்மையும், எமக்கு அவர்களையும் தெரிந்துள்ளபடியால் பிரச்சினைகள் இல்லை. சிலர் எமக்கு உதவிகளும் செய்வதுண்டு.

பதினெட்டாவதுதில் எமது வதிவிடம் ஆறாவது மாடியிலேயே கிடைத்தது. அது கடைசி மாடி. அமைதியிலும் அமைதி. ஒரு சத்தமும் கேட்காது. அருகில் வாழ்ந்தவர்களும் நிம்மதியானவர்களே.

ஒருநாள் கதவு தட்டுப்பட்டது. ஓர் இளம் பெண். அவளது பெயரும் தெரியாது, வயதும் தெரியாது.

“வணக்கம், நான் இந்த மாடியில்தான் வாழ்கின்றேன்”  என்றாள்  அவள்.

“வணக்கம், அது தெரியும்.”

“உங்களிடம் ஓர் உதவி கேட்கலாமா?”

“கேளுங்கள்.”

“எனது பெற்றோர் கிராமத்தில்தான் வசிக்கின்றார்கள். நான் ஒவ்வொரு மாதமும் அங்கு சென்று சில தினங்கள் தங்கி, பின்னர் இங்கு வருவேன். என்னிடம் நான் வாழும் அறையின்  இரண்டு திறப்புகள் உள்ளன. ஒரு திறப்பை நீங்கள் பாதுகாக்க முடியுமா?” எனக் கேட்டாள். 

“நிச்சயமாக.” என்று சொன்னாள் எனக்கு அருகில் நின்ற மனைவி.

திறப்பு எங்கள் கையில் வந்தது. 

அவள் போனபின் “ஏன் அவளது திறப்பை உடனடியாகவே வாங்கினாய்?” மனைவியிடம் கேட்டேன்.

“அதில் என்ன பிரச்சினை?”

“சில வேளைகளில் பிரச்சினைகளும் வரும்.”

“ஏன்?”

“தனது பெற்றோரைக் காணச் செல்லும் வேளைகளில், அவளது வீட்டில் களவு போனால்… அவள் எங்களைச் சந்தேகிப்பாளே!”

“சந்தேகம் இருந்தால் வாழவே முடியாது.”

சரி, அவள் சொல்லுவது சரியாகவும் இருக்கலாம்.

சில மாதங்களின் பின்பும்  கதவு தட்டப்பட்டது. 

ஒரு வயோதிபர். எமது வசிப்பிடத்தின் அருகில்தான் வாழ்கின்றார். 

“வணக்கம், உங்களிடம் ஓர் உதவி கேட்கலாமா?”

“வணக்கம் திருவாளரே, என்ன உதவி?”

“எனது மகன் நீண்ட ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழ்கின்றார். அவருடன் ஏற்பட்ட பிரச்சினையால், நான் பல வருடங்கள், ஆம், 15 வருடங்களிற்குமேல் தொடர்பில்லாமல் இருந்தேன். சில தினங்களின் முன் நாங்கள் சம்பாஷித்து இணைத்துள்ளோம். அவருக்கு உள்ளது மிகப்பெரிய வீடு. அடிக்கடி ஜேர்மனி வந்து ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் இளைப்பாறுங்கள் என்று கேட்டுள்ளார்…”

“மிகவும் சந்தோஷமான செய்தி.” என்றேன் நான்.

“உண்மைதான், நான் அங்குச் செல்லும் வேளைகளில் எனது திறப்பினை நீங்கள் வைத்திருக்க முடியுமா?”

எனக்குப் பின் நின்ற மனைவி “நிச்சயமாக.” என்றாள்.

அவருடைய திறப்பும்  எங்களிற்குக் கிடைத்தது.

“ஒரு பெண்ணின் திறப்பை வாங்கினோம். பின்  வேறு யாரிடமும் வாங்க வேண்டுமா?” எனச் சிறிது கோபத்தால் கடிந்து கொண்டேன்.  

“அவர் வயது போனவர். நிச்சயமாக அவருக்கு உதவிசெய்ய வேண்டும். அவர் எனது பெரிய தந்தையைப் போல.”

எமக்கு மூன்று வசிப்பிடத்தோரது திறப்புகள் கிடைத்தன. ஆனால்  பிள்ளைகள் வளரத் தொடங்கியதால் பெரிய இடம் தேவைப்பட்டது. தொழில் நிறுவனத்திற்கு நன்றி சொல்லவேண்டும். அது விரைவிலேயே எமக்கு ஒரு புதிய வசிப்பிடத்தைத் தந்தது. எனவே, திறப்புகள் தந்தவர்களிற்கே திரும்பவும் போயிற்று.

20 ஆம்  வட்டாரம்.  கிராமம் போல உள்ள ஓர் இடத்திலேயுள்ள கட்டிடத்தில்,எட்டாவது மாடியில், வசிப்பிடம் கிடைத்தது.  

சில நூற்றாண்டுகளிற்கு முன்பு, கட்டி வைத்துத் தண்டிக்கும் இடமும் எமது வசிப்பிடத்தின் அருகில்.  அது ஒரு நினைவுத் தூணாக. போதை வஸ்து விற்பவர்களையும் நான் கண்டேன்.

“முன்பு, இந்த வஸ்துக்களை விற்பவர்கள் அதிகம்”  என நடைபாதையில் கண்ட ஒருவர் சொன்னார்.

“அவர்களும் அவர்களது சமாச்சாரங்களும்.”  என்று எனது மனைவி என்னிடம் சொன்னாள்.

“எது எப்படியோ, நாம் வாழ்வது ஒரு வஸ்து உலகில்.” என நான் அவளிடம் சொன்னேன்.

எட்டாவது, அது கடைசி மாடியே. நான்கு வசிப்பிடங்கள். சத்தமே இல்லை. நாம் நால்வர் வசிப்பதால் எமது இடத்திலிருந்து, சில வேளைகளில் மற்றவர்களிற்குச் சத்தங்கள் கேட்கும்.

ஒரு மாலை நேரம். தட்டப்பட்டது கதவு. எங்கள்  முன் இரண்டு ஆண்கள். வணக்கங்களைப் பரிமாறிக் கொண்டோம்.

“நாங்கள் உங்கள் முன் வீட்டில்தான் இருக்கின்றோம். மன்னிக்கவும், உங்களிடம் முட்டைகள்  இருந்தால் நான்கினை எங்களிற்குக் கடனாகத் தரமுடியுமா? நாளை அவைகளைத் தந்துவிடுவோம்.” எனப் புன்னகையுடன் சொன்னார்கள்.

“நிச்சயமாக.” என்று மனைவி சொன்னாள்.

மறுநாளே, எங்களிற்கு இரண்டு முட்டைகள் திருப்பித் தரப்பட்டன. 

“அவர்கள் குடும்பமாக வாழ்கின்றார்கள்.” என மனைவி சொன்னாள்.

வெள்ளிக்கிழமை. நான் வேலையிலிருந்து திரும்பியபோது சில திறப்புகளை மனைவி என் முன் கிலுக்கினாள்.

“யாருடையது?”

“எங்களது வீட்டுக்கு அருகில் உள்ள முதிய பெண்ணைத் தெரியும்தானே? அவளுடையது.”

“ஏன் வாங்கினாய்?”

“தனக்கு அவ்வப்போது மறதியாம். சில திறப்புகளைக் காக்க முடியுமா எனக் கேட்டாள். வாங்கிக் கொண்டேன்.”

இந்தக் கணத்தில்தான் கதவு தட்டப்பட்டது.

அதே இரண்டு ஆண்கள். இருவர் கைகளிலும் திறப்புகள். 

“மன்னிக்கவும், பதினைந்து தினங்கள் விடுமுறையைக் கழிக்க நாங்கள் போர்த்துக்கல் செல்கின்றோம். எங்களது திறப்புகளில் ஒன்றை நீங்கள் பாதுகாக்க முடியுமா?” 

“நிச்சயமாக.” என்று மனைவி அதனைப் பெற்றுக்கொண்டாள்.

“எனக்கு எரிச்சல்  வந்தது. 

“ஒரு முதிய பெண்ணிடம் இருந்தும், இவர்களிடமும் திறப்புகளைப் பெற்றுக்கொண்டோம். இந்த மூவரையும் எங்களுக்குத் தெரியாதே?” 

“உதவி செய்வது மிகவும் முக்கியமானது.”

“இவர்கள் தமது வசிப்பிடங்களில் இல்லாதிருக்கையில் களவுகள் நடந்தால்…?” என்று நான் மீண்டும் களவு மீது சொன்னேன்.

“எமக்கு நம்பிக்கை வேண்டும். களவுகள் நிச்சயம் நடக்காது.” என்று அவள் சொன்னபோதுதான் போன் அலறியது. 

மனைவி பேசினாள்.

திருமணம் செய்து, பிள்ளைகளுடன் வாழும் எனது மூத்த மகள்  சில நிமிடங்களில் எமது வீட்டுக்கு வருவதாகச் செய்தி கிடைத்தது. 

எம்மிடம் திறப்புகளைத் தருபவர்கள் அவைகளை மீளவும் பெறுவதே இல்லை. தாம் விடுமுறையில் செல்லும்போது “பூனையைப் பார்க்க முடியுமா?”, “பூக்கண்டுகளிற்குத் தண்ணீர் விடமுடியுமா?” என்று அன்புடன் கேட்பதுண்டு. எமக்கு “முடியாது” என்று பதில் சொல்லத் தெரியாது. ஆனால் அவர்கள்  விடுமுறையில் இருந்து திரும்பி வரும்போது, நாம் கேட்காமலே மனதிற்கு உவப்பைத் தரும் பரிசுகள் கிடைப்பதுண்டு. 

மூத்த மகள்  வந்தாள்.

“நலமா, இந்தக் கோடையில் வெயில் உடலை உருக்குகின்றது.”

“ஆம், நலம்”

“உங்களுக்கு ஒன்றைத் தரவேண்டும். ஆனால் மறந்துவிட்டேன். விடுமுறைக்கான டிக்கெட்டை வாங்கியபின்தான் மறந்தது நினைவிற்கு வந்தது.”

“நீ என்ன தரப்போகின்றாய்?”

“திறப்பு.”

எனக்குள் ஓர் ஆச்சரியம் விழுந்தது. 

“திறப்பா? யாருடையது? ஏன்?”

“எங்களுடைய திறப்பு. ஒரு திறப்பு உங்களிடமிருந்தால் அது பாதுகாப்பானது. நாங்கள் எங்களதைத் தொலைத்தாலும்,  உங்களிடமுள்ளதைப் பெற்றுக் கொள்ளலாம்.”

“அது சரிதான்.” எனச் சிரித்தபடி சொன்னாள்  மனைவி. 

எங்களிடம் பெயர்கள் இணைக்கப்பட்ட   நிறையத் திறப்புக் கோவைகள் (சாவிக் கோவை)  உள்ளன. பல நிறங்கள். கருப்பு நிறம்தான் எனக்கு அதிகம் பிடிக்கும். பிறரது திறப்புகளைப் பாதுகாப்பிற்காக வாங்குதல் முதலில் சிரமமாக இருந்தாலும், இப்போது பழக்கமாகிவிட்டது என்பது விசித்திரம்தான்.

புதன்கிழமை என்றுதான் நினைவு. அந்தத் தினத்தின் இரவில் எனக்குத் தூக்கமே வரவில்லை. பல தடவைகள் எழுந்து பச்சைத் தண்ணீர் குடித்துவிட்டுத் திறப்புகள் அடுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அவைகளைப் பார்த்தேன். குறுகிய தூக்கத்தில் வந்த கனவுகளில்… திறப்புகளே விதம் விதமாக நடனமாடின. மீண்டும் விழித்தேன். முடிவில் குறை குறையாகத் தூக்கம் வந்தது. 

லீவு மறு நாள். விடிந்ததும் முதலில் பால் கோப்பி குடித்துவிட்டு அவதி அவதியாக வெளியேறினேன். ஏன்?

ஒரு சிறப்புக்கடையைத் தேடுவதற்காகவே. எனது பகுதியில் உள்ளதோ  மூடப்பட்டிருந்தது. விடுமுறையின் பின் 26 ஆம் திகதி திறக்கப்படுமாம்.

பஸ் எடுத்து வேறு இடத்திற்குச் சென்றேன்.

அங்கு ஒரு சிறிய கடை திறப்பட்டிருந்தது. சீன முகத்து இளைஞன் ஒருவன் அங்கிருந்தான்.

நான், ஏன் அங்கு நுழைந்தேன்  என்பது வசிப்பிடம் திரும்பும்போதுதான் எனது மனைவிக்குத் தெரியும்.

Previous articleமலையேற்றம்: வன்மத்தின் பதுங்குக்குழி
க.கலாமோகன்
(பி.1960) ஒரு தமிழ் எழுத்தாளர். இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்கிறார். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார். இவரது கவிதைகள் டேனிசு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.பிரஞ்சுமொழியில் புலமையுடையவர். இவரின் சில ஒட்டோவியம் புகலிட இதழ்களில் வெளிவந்துள்ளன. "தாயகம்"  சஞ்சிகையில் இவரின் பல கதைகள் வந்துள்ளன. அதே இதழில் பிரஞ்சுக் கவிதைகள் சிலவும் உள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here