அந்த நாயின் ரோமம்
அந்த நாய் இல்லை. நாங்கள் அதை நினைத்து ஏங்கினோம். வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும் போது குரைக்கும் ஒலியில்லை. நாங்கள் தாமதமாக வீட்டுக்கு வரும்போது எங்களுக்காக யாரும் காத்திருக்கவில்லை. அவனுடைய வெள்ளை ரோமம் எங்களுடைய ஆடைகளிலும் வீட்டைச் சுற்றிலும் ஆங்காங்கே இப்போதும் உதிர்ந்து கிடப்பதைப் பார்க்கிறோம். நாங்கள் அவற்றைக் கையில் எடுக்கிறோம். அவற்றைத் தூர வீச வேண்டும். ஆனால் அவனுக்குச் சொந்தமானவற்றுள் அது ஒன்றுதான் இப்போது எஞ்சியிருக்கிறது. நாங்கள் அவற்றை வீசி எறிவதில்லை. எங்களுக்கு ஒரு துளி நம்பிக்கை இருந்தது – தேவையான அளவுக்கு அவற்றை நாங்கள் சேகரித்துவிட்டால் எங்கள் நாயை மறுபடி அங்கு வரவழைத்துவிடலாம் என்பதே அது.
அந்த சமையல்காரி கற்பித்த பாடம்
இன்று நான் ஒரு மிகப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டேன்; என்னுடைய சமையல்காரி தான் என் ஆசிரியை. இருபத்தி ஐந்து வயதான ஃபிரெஞ்சுப் பெண் அவள். லூயி ஃபிலிப் இப்போது நம்முடைய அரசர் இல்லை என்றும் நாம் ஒரு குடியரசு என்பதும் அவளுக்குத் தெரியவில்லை என்பதை அவளிடம் பேசும்போது நான் கண்டுபிடித்தேன். அவர் அரியணையைத் துறந்து இத்துடன் ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன. அவர் இப்போது அரசராக இல்லை என்கின்ற உண்மை குறித்து தனக்கு சிறிதளவு கூட ஆர்வமில்லை- இவை தான் அவளுடைய சொற்கள்.
நான் என்னை ஒரு புத்திசாலி மனிதன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவளுடன் ஒப்பிடும்போது நான் ஒரு முட்டாள்.
அந்த இரவில் விழித்திருத்தல்
அந்நிய நகரத்தின் இந்த விடுதியில் எனக்குத் தூக்கம் வரவில்லை. நேரம் ஆகிக் கொண்டிருந்தது. முன்னிரவு இரண்டு மணி, பிறகு மூன்று, அதற்குப்பின் நான்கு மணி ஆனது. நான் இருட்டில் படுத்துக் கொண்டிருக்கிறேன். என்ன பிரச்சனை? ஓ! வழக்கமாக என் பக்கத்தில் படுக்கும் அவனைக் காணாத தவிப்பாக இருக்கலாம். பிறகு அருகில் எங்கோ ஒரு கதவு மூடப்படும் ஓசை கேட்கிறது. இன்னொரு விருந்தாளி வெகு தாமதமாக விடுதிக்கு வந்திருக்கிறார். என் கேள்விக்கான பதில் இப்போது என்னிடம் இருந்தது. நான் அவருடைய அறைக்குச் சென்று அவருடைய படுக்கையில் அவருக்குப் பக்கத்தில் படுத்துக் கொள்வேன். பிறகு என்னால் நிச்சயமாகத் தூங்க முடியும்.
அந்த மோசமான நாவல்
என்னுடைய பயணத்தின்போது படிப்பதற்காக நான் என்னுடன் கொண்டு வந்திருந்த சுவாரஸ்யமற்ற, புரிந்து கொள்வதற்கு கடினமான இந்த நாவலைப் படிப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதைப் படிப்பதற்காகப் பலமுறை திரும்பத்திரும்ப நான் அதனிடம் செல்கிறேன். ஒவ்வொரு முறையும் அதைக் கண்டு நான் அச்சம் கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் சென்ற முறையை விட இம் முறை சிறப்பு என்று சொல்ல அதில் எதுவும் இல்லை என்பதைக் கண்டடைகிறேன். இப்போது அது கிட்டதட்ட ஒரு பழைய நண்பனைப் போல ஆகிவிட்டிருந்தது. என்னுடைய பழைய நண்பன் ஒரு மோசமான நாவல்.
அந்தக் குழந்தை
அவள் தன்னுடைய குழந்தையை நோக்கிக் குனிந்தாள். அவள் அதை விட்டு நகர முடியாது. குழந்தை ஒரு மேசையின் மீது படுக்க வைக்கப்பட்டு இருந்தாள். அவள் குழந்தையின் இன்னொரு புகைப்படத்தை எடுக்க விரும்பினாள். ஒருவேளை இதுவே கடைசியாக இருக்கலாம். புகைப்படம் எடுத்து முடிக்கும் வரை அந்தக் குழந்தை தன் வாழ்க்கையில் இதுவரை அசையாது இருந்ததே இல்லை. அந்தக் குழந்தைக்குச் சொல்வது போல் “புகைப்படம் எடுக்கும் கருவியை எடுத்து வருகிறேன், நகர்ந்துவிடாதே” என்று அவள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
-லிடியா டேவிஸ்
தமிழில் : கயல்
ஆசிரியர் குறிப்பு:
லிடியா டேவிஸ் தமது சிறு கதைகளின் மூலமாக புகழ் பெற்றிருக்கும் தற்கால அமெரிக்க எழுத்தாளர். இவர் சிறுகதைகளைத் தவிர புதினங்கள், கட்டுரைகள் எழுதியதுடன் ப்ரெஞ்சிலிருந்தும் பிற மொழிகளில் இருந்தும் புகழ்பெற்ற நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். 2013 ஆண்டுக்கான மேன் புக்கர் சர்வதேசப் பரிசையும் வைட்டிங் விருதையும் வென்றுள்ளார்.
உணர்வுச்செறிவான குறுங்கதைகள். சிறப்பான தமிழாக்கம்.
அந்த நாயின் ரோமம்
அந்த மோசமான நாவல் கதைகள்
திரும்பவும் மனதில் படரும். ரோமங்கள் சேகரிப்பு இழந்ததை பெறுவதற்கான எத்தனிப்புதான்.