1. வெந்து தணியாத ஒரு காடு
சொல்
இன்னும் எவ்வளவு நேரம்
இந்தப் புல்லாங்குழலை
இப்படி
வாசித்துக்கொண்டே இருக்கப்போகிறாய்?
சொல்கிறேன்
இந்தப் புல்லாங்குழல்
மீண்டும்
மூங்கில் மரமாய்த் திரும்பும் வரைக்கும்
அம்மரம்
மூங்கில் புதராய்ச் செழிக்கும் வரைக்கும்
அப்புதர்
மூங்கில் வனமாய்ப் பெருகும் வரைக்கும்
அவ்வனத்தின் பச்சையை
கருங்குயில் ஒன்று
உச்சியில் அமர்ந்து
கூவும் வரைக்கும்
2. குலசாமி
வேகவேகமாய்
படியிறங்கிக் கொண்டிருக்கின்றன
என் கால்கள்
படிகளின் நடுவே
உடைந்து
உதிர்ந்து
இல்லாமல் போய்விட்ட ஒரு படி
இமைக்கணத்தில்
என் குலசாமியானது
அதற்கு அடுத்த படியிலிருந்து
மெல்ல மெல்ல
படியிறங்கிக் கொண்டிருக்கிறேன்
நான்
3. ஒரு குருவி கொத்தும் அளவுதான்
உச்சிப் பாறையின்
பிரார்த்தனை
எத்தனை கனமோ
சரியாக
அத்தனை கனம் தான்
அடிவாரத்துக் கூழாங்கல்லின்
பிரார்த்தனையும்
அவ்விரு பிரார்த்தனைகளையும்
கொத்தி
வாய் கவ்விக்கொண்டு
வான் பறந்து செல்லும்
குருவி சொன்னது
எனக்கு
4. எழுந்து வரும் ஈரேழு புவனங்கள்
கருவறை திருமுன்
எனக்கு முன்னும்
தரிசனம் பார்த்து முடித்துச்
சென்று கொண்டிருக்கிறார்கள்
எனக்குப் பின்னும்
தரிசனம் பார்க்க
வந்து கொண்டிருக்கிறார்கள்
எனக்கு
முன்னும் பின்னும்
கடந்து கொண்டிருப்பவர்களின்
எவர் முகமும்
எனக்கு
அடையாளம் தெரியப்போவதில்லை
ஆனால் என்னோடு
அதிகபட்சம்
எட்டு நிமிடங்கள்
இருபது பேர்கள்
தரிசனம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
இதுவரை எனக்கு
அறிமுகமில்லாத
அந்த இருபது முகங்களையும்
உற்றுப் பார்க்கப்
பயமாக இருக்கிறது
உற்றுப் பார்த்தால்?
இருபது பிறவிகள் எழுந்து வருகிறது
இருபது உறவுகள் எழுந்து வருகிறது
இருபது வாழ்வுகள் எழுந்து வருகிறது
இருபது உலகங்கள் எழுந்து வருகிறது
5. உங்கள் கண்கள் சொல்வதையே நீங்களும் சொல்கிறீர்கள்
கிளையில்
ஆடிக் கொண்டிருக்கும்
அந்தக் குருவிக் கூடு
ஒரு கனமழைக்கு
முன்னும்
பின்னும்
ஒன்று போலத்தான்
ஆடிக் கொண்டிருக்கிறது
ஆனால்
அந்தக் கூட்டுக்குள் இருக்கும்
எந்த ஒரு குருவியின்
கண்களும்
அப்படிச் சொன்னதில்லை
உங்களிடம்
6. பொற்பறவைகள்
என் அறையின்
அகல் திரியில்
அணைந்த பிறகு
ஏற்றப்படும்
ஒவ்வொரு சுடருக்கும்
என் பெயரை
மீண்டும் மீண்டும்
புதிதாக
அறிமுகம் செய்யவேண்டி
இருப்பதை வைத்துத்தான்
இதை உங்களுக்குச் சொல்கிறேன்
ஓர் அகல் திரி நுனியில்
வந்தமர்வது
ஒரே பறவை
அல்ல
7. அசைவுகளை நடனத்திற்கு இழுத்து வரும் நளினம்
இமைக்காது
பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
அசைவுகள்
அசைவுகள்
அசைவுகள்
ஒன்றாய்
பத்தாய்
நூறாய்
ஊறிப் பெருகிக்கொண்டே இருக்கும்
அசைவுகள்
எதிர்பாரா
இமைக்கணத்தில்
என் கண்களின் மீது
தாவிக் குதித்துச் செல்கிறது
ஒரு பச்சைத் தவளை
கடவுளே
இப்போது
அந்த அசைவுகள்
அத்தனையும்
நடனம்
நடனம்
நடனம்
8. பூக்களை அல்ல என் நடையைத்தான் நசுக்குகிறேன்
நாலு கழுதை வயதாகிவிட்டது
இப்போதும்
அதிகாலை வேளைகளில்
சரியாக நடப்பதற்கு
அதாவது
தத்தி தத்தி நடப்பதற்கு
என் பாதங்களுக்குக்
கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
புலரியில்
என் குடிசை முற்றம்
முழுதும்
காம்புதிரும்
அதிதூய முருங்கைப் பூக்கள்
அத்தனையும்
முட்டைக் கண்களாகித்
தத்தி தத்தி நடைபயிலும்
என் பாதங்களைத்
தள்ளி நின்று
வேடிக்கை பார்க்கின்றன
9. தீட்சண்யம்
யாரும் பார்த்துவிடவில்லை தானே?
யாரும் பார்த்துவிடவில்லை தானே?
என்று பதறி
விரல்நுனிகள் நடுநடுங்கக்
கதவிடுக்கில் கண் புதைத்து
வெளியே
பார்த்துக் கொண்டிருக்கும்
உன்னை
இமை மூடாது
பார்த்துக்கொண்டே இருக்கின்றன
என் சூரியனும்
என் நிலவும்
10. பொய்வனம்
ஒரு காட்டைப் போல
நடித்துக் காட்டிக்கொண்டே
இருக்கின்றன
எல்லாத் தோட்டங்களும்
இன்றுவரை
எந்த ஒரு தோட்டத்தையும்
அறிந்திருக்கவில்லை
எந்த ஒரு காடும்
தோட்டத்திலிருந்து
காட்டிற்கும்
காட்டிலிருந்து
தோட்டத்திற்கும்
ஊடே திரியும்
பறவைகள்
வாய் திறப்பதுமில்லை
ஆனாலும் என்ன?
அத்தனை
கனிமரங்களுக்கும்
தெரிந்தேதான் இருக்கிறது
சகலமும்
11. தொடு குரல்
என் பக்கத்தில்
உறங்கிவிட்டிருக்கிறாள்
அவள்
கும்மிருட்டில் என்னோடு
நெடுநேரம் பேசியிருந்த
அவளின் குரல்
அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே
எடை கொண்டு
தனியாக உருத்திரண்டு
என் இன்னொரு பக்கத்தில்
படுத்துக் கொண்டது
அவளைவிடவும்
இனிப்பாய் இருக்கிறது
அவள் உறங்கிவிட்ட பிறகும்
உறங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கும்
அவளின் குரல்
ஒரு கணமும் மங்காத
அதன் பரவசம்
நாநுனி நீட்டித் தீண்டுகிறது
என் கன்னங்களில்
இதோ
அவளை விட்டுவிட்டுக்
கொஞ்ச நேரத்திற்கு
அவள் குரலை
அணைத்துக்கொள்கிறேன்.