குர் அதுல் ஐன் ஹைதரின் “அக்னி நதி” (கண்ணீரைப் பின் தொடர்தல்)

தினைந்து வருடம் முன்பு காசிக்குச் சென்றிருந்தேன். மணிகர்ணிகா கட்டத்தில் கங்கையின் கலங்கல் நீரில் கால் நனைத்து நின்றபோது ஒருவகையான ஊமைவலி நெஞ்சில் ஏற்பட்டது. கரையில் பாழடைந்த புராதனக் கட்டிடங்கள். கரிய திராவகத்தை உமிழும் சாக்கடைத் திறப்புகள். சரிந்த பாசிபற்றிய படிக்கட்டின் வழியாக நடந்தேன். மூதாதையருக்காக நீர்க்கடன் செய்யும் திரள். மரண மந்திரங்கள். துயரம் கப்பிய முகங்கள். இறந்துபோன ஏதோ காலத்தின் இன்றைய தோற்றங்களாகத் துறவிகள்.

மணிகர்ணிகா கட்டத்தின் ஆரவாரத்தைத் தாண்டி நடந்தேன். பிறகு தாங்க முடியாத அமைதி கனத்து வழிந்த இடமொன்றை அடைந்தேன். அங்கும் இடிந்த படிக்கட்டு. தளும்பிச் செல்லும் நதி. அதன்மீது அசையும் ஒரு தோணி. நீர்ப்பரப்பைத் தொட்டு உயர்ந்த ஒரு மீன்கொத்தி. படிக்கட்டில் நிதானமாக நீராடும் காவியுடையணிந்த சடாதாரி. சட்டென்று எங்கோ `ஹரிபோல்! ஹரிபோல்!’ என்று ஒலிகேட்டது. மரணத்தின் கட்டியம் என மனம் சிலிர்த்தது. ஒரு கணத்தில் காசியின் விசுவரூபம் எனக்குப் புலனாயிற்று.

காசி ஒரு மாபெரும் இடுகாடு. ஆனால் அங்கு வாழ்வு அனைத்து எக்காளங்களுடனும் நுரைத்துக் குமிழியிட்டபடியேதான் இருக்கிறது. எத்தனை மதங்கள், எத்தனையெத்தனை சித்தாந்த தரிசனங்கள். எத்தனை ஞானியர். அந்தப் படிக்கட்டின் முன் என் கல்வியும் கர்வமும் நுரைக்குமிழியென்று பட்டது. அந்த படிக்கட்டில் காளிதாசன் அலைந்து களைத்து வந்து அமர்ந்திருக்கக் கூடும். அங்குதான் ஜகந்நாத பண்டிதன் தற்கொலை செய்துகொண்டிருப்பான். அங்கே சுப்பையா தன் குடுமியைத் துறந்து பாரதி ஆக உருமாறியிருக்கக் கூடும். வேர்த்து தலை சுழன்று அமர்ந்துவிட்டேன். அப்போது அப்படி அதற்கு முன்பு பலதடவை நான் அமர்ந்ததுண்டு என்று தோன்றியது. பல ஜென்மங்களில் பல யுகங்களில் இன்னும் இந்த நதி ஓடும், முடிவின்றி என்று மனம் அரற்றியது. நதியைப் பார்த்திருக்கையில் காலத்திசைவெளியின் முடிவின்மையில் மனம் விரைந்தபடியே இருப்பது ஒரு பேரனுபவம்.

அவ்வனுபவத்தைத் தரும் அசாதாரணமான நாவல் ஒன்றை அடுத்த வருடமே படிக்க நேர்ந்தது, மலையாளம் மூலம். குர் அதுல் ஐன் ஹைதர் எழுதிய `அக்னி நதி.’ தமிழ் எழுத்தாளரான சௌரி 1971இல் இதை மொழிபெயர்த்தார். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது. அன்றுமுதல் இந்நாவல் தமிழில் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகிறது. எனக்கு நண்பர் கோணங்கி இந்நாவலை அறிமுகம் செய்தார்

அக்னி நதி

உத்தரப்பிரதேசத்து இஸ்லாமியப் பிரபு குடும்பத்தில் பிறந்த குர் அதுல் ஐன், அலிகட் பல்கலையில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். டெய்லி டெலிகிராப், பிபிஸி ஆகியவற்றின் நிருபராக லண்டனில் பணியாற்றிய பிறகு இந்தியா திரும்பி உருது மொழியில் எழுதத் தொடங்கினார். இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் உதவி ஆசிரியராக இந்திய இலக்கியச் சூழலில் பரவலாக அறியப்பட்டார். 1990இல் இவருக்கு ஞானபீடப் பரிசு கிடைத்தது. 1993ல் எனக்கு `சம்ஸ்கிருதி சம்மான்’ விருது கிடைத்தபோது இவரிடமிருந்து அதைப்பெறும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

அக்னி நதி ‘கௌதம நீலாம்பரன்’ என்ற இளம் பிரம்மச்சாரி ஒரு நதியை நீந்திக் கடப்பதுடன் தொடங்குகிறது. அது சரயூ அல்லது கோமதி நதி. கௌதம நீலாம்பரன் ஞானத் தேடலுடன் சாக்கியமுனி புத்தனின் அருகாமைக்காக சிராலஸ்தி முதல் பாடலிபுத்திரம் வரை அலைகிறான். அவனுடைய தேடலையும் அவனுடன் இணைத்துச் சித்தரிக்கப்படும் பிற கதாபாத்திரங்களின் தேடல்களையும் விவரித்தபடி நகர்கிறது நாவல். பிக்குணியாக விரும்பும் நிர்மலா, அவள் தோழி சம்பகா, பிக்கு ஹரிசங்கர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் தங்கள் கேள்விகளால் வழிநடத்தப்பட்டு, துரத்தப்பட்டு முன்னகர்கிறார்கள். பயணத்தில் அதன் முடிவில்லாத சாத்தியங்களில் ஒன்றில் மோதி நின்று விடுகிறார்கள், மறைகிறார்கள். அந்தத் தேடல் மட்டும் முன்னகர்கிறது.

பாடலிபுத்திரத்துப் படித்துறையில் சரயூ நதியின் அலைகளில் நீந்தும் கௌதம நீலாம்பரனைத் தொடரும் நாவல் ஒரு வரியில் நழுவி வேறு காலகட்டத்தில் அந்நதிக்கரையில் வந்து சேர்ந்த அபுல் மன்சூர் கமாலுத்தீனிடம் வந்து விடுகிறது. “சரயூ நதியின் பேரலைகள் கௌதம நீலாம்பரனின் தலைக்கு மேல் எழுந்து வியாபித்தன… மறுபக்கம் ஒருவன் குதிரையிலிருந்து இறங்கி கடிவாளக் கயிற்றை ஆலமர வேரில் முடித்தான். கறுப்பு வண்ணக் குதிரை. அவன் பெயர் மன்சூர் கமாலுத்தீன்’’. இதுதான் நாவலின் நகர்வு உத்தி. கதாபாத்திரங்களின் பெயர்கள் மாறுவதில்லை. ஆனால் மனிதர்கள் மாறிவிடுகிறார்கள். காலம் மாறி விடுகிறது மாறாமலிருப்பது நதி. அதன் ஒரே படித்துறை வழியாக வரலாறும் சுழித்தோடுகிறது. நவீன இந்தியாவில் பாட்னா நகரில் அதே படித்துறையில் கௌதம நீலாம்பர தத்தன், சாக்கிய முனி கௌதமனின் சொற்களை நினைவுகூர்கையில் முடிகிறது இந்த அபூர்வமான நாவல்.

குர் அதுல் ஐன் ஹைதரின் அக்னி நதியில் சீராக வளர்ச்சிபெறும் கதைக்கட்டுமானம் இல்லை. அல்லது நாம் அறிந்த வகையான கதை இல்லை. கௌதமநீலாம்பரனின் கதையுடன் நாவல் தொடங்குகிறது. அது புத்தரின் கோட்பாடுகள் தேசத்தைக் குலுக்கிய காலகட்டம். எங்கும் தத்துவ விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. அறுபத்திரண்டு மதங்களும் அவற்றின் உட்பிரிவுகளும் வாழ்ந்த பூமியில் சாக்கிய இளவரசனின் புதியமதமும் உருவாகிறது. கௌதம நீலாம்பரன் அந்த தத்துவ விவாதங்களால் ஈர்க்கப்படுகிறான். மறுபக்கம் காதலாலும் காமத்தாலும். அலைச்சலும் ஆவேசமும் மிக்க நாட்கள். மகதத்தை சந்திரகுப்த மௌரியன் சாணக்கியனின் உதவியுடன் கைப்பற்றும் நாட்கள். போரும் கொடுமைகளும் நிறைந்த காலகட்டம். அனைத்தையும் இழந்து தன்னைக் கண்டடையும் அவன் கடைசியில் கலையில் சரணடைகிறான். மகத்தான மோகினி சிலை ஒன்றை அவன் செய்கிறான். அதுவே அவன் வாழ்வின் உச்சமும் சாரமும். அவன் மறைகிறான்.

அடுத்த கதை பல நூற்றாண்டுகளுக்குப்பின்னர் அபுல் மன்சூர் கமாலுத்தீனின் இந்திய வருகை. ஆப்கானியர் சாரிசாரியாக இந்தியாவில் நுழைந்த காலகட்டம். சுல்தான் ஹுசேனின் தூதராக இந்தியா வந்து தொன்மையான கலைகளையும் இலக்கியத்தையும் தேடி அலைகிறான். முகலாய ஆட்சி நிறுவப்படும் போர்ச்சூழல். கமால் போர்வீரனாகிறான். பெருவெள்ளத்துரும்புபோல அலைக்கழிந்து சின்னஞ்சிறு கிராமம் ஒன்றில் ஒரு எளிய பெண்ணை மணம்புரிந்துகொண்டு வேளாண்மை செய்து மக்களைப் பெறுகிறான். கற்றதையெல்லாம் மறந்து சிந்திப்பதைத் துறந்து இசையில் தஞ்சமடைகிறான். அவனை யாரோ சில போர்வீரர்கள் சாதாரணமாகக் கொன்று வீழ்த்துகிறார்கள்.

மூன்றாவது கதை பிரிட்டிஷார் இந்தியாவில் காலூன்றிய காலகட்டம். லண்டனில் கவிதையும் தத்துவமும் பயின்று வழக்கறிஞராக எண்ணும் சிரில் பிரிட்டிஷ் ஆட்சி அளிக்கும் செல்வத்தைப்பற்றியும் போகங்களைப்பற்றியும் அறிந்து இந்தியா வந்து வணிகனாகிறான். கொள்ளை வணிகமும் ஊழலும் புரிந்து கோடிகள் திரட்டி பெண்களையும் பாரத மண்ணையும் நுகர்பொருளாக மட்டுமே கண்டு வென்று, கொண்டு, விலக்கி போகத்தில் ஆழ்ந்து திளைத்து முதிர்ந்து இறக்கிறான். தன்னந்தனியனாக. தான் அடைந்தது என்ன என்று தெரியாதவனாக. ஆனால் இழந்தது என்ன என்பதை இறுதியில் தெளிவாகவே கண்டுகொண்டவனாக.

சிரிலின் கீழ் குமாஸ்தாவாக இருக்கும் கௌதம நீலாம்பர நாத் தத்தாவின் வழியாக நீளும் கதை அவர் காசியில் கற்று பண்டிதரானதையும் அவரது மகன் காலகட்டத்தில் இந்திய சுய உணர்வு உருவாக ஆரம்பிப்பதையும் காட்டுகிறது. வங்கப்பஞ்சங்கள். கல்கத்தா நகரின் எழுச்சி. புராதன நகர்கள் சிதைந்து அழிகின்றன. புதிய காலகட்டம் பிறக்கிறது. லக்னோவில் தொடரும் கதை இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் நீள்கிறது. சிப்பாய் கலவரம். காங்கிரஸின் உதயம். இந்த இடத்தில் கதையின் போக்கு மாறுகிறது. சுருக்கமான வரலாற்றுச்சித்தரிப்புக்குப் பதிலாக விரிவான தற்கால விவரிப்பு இடம்பெறுகிறது. தலயத் , கமால், கௌதம நீலாம்பரன், ஹரிசங்கர், சம்பா ஆகியோரினூடாக இந்திய விடுதலையும் தேசப்பிரிவினையையும் இந்தியா தன்னைக் கண்டடைய நிகழ்த்தும் அலைபாய்தல்களையும் சித்தரிக்கிறது

‘1925ல் பாசேஜ் டு இந்தியா நாவலை எழுதியபோது இ.எம்.பாஸ்டர் ஒரு முஸ்லீமை இந்தியாவின் பிரதிநிதியாக உருவகித்தார். இன்று அவர் எழுதியிருந்தால் அவ்வாறு உருவகித்திருக்க மாட்டார். ஒரு இந்துவே இந்தியாவின் பிரதிநிதியாக இப்போது கருதப்பட இயலும்’. கமால் இந்நாவலில் உணரும் இச்சிக்கலையே நாவலின் இப்பகுதியெங்கும் காண்கிறோம். தேசம் என்ற பொது அடையாளம் இல்லாமலாகிறது. இரு தேசியங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. முஸ்லீம் லீகில் இணைந்து பாகிஸ்தானுக்காக வாழ்நாள் முழுக்க போராடிய கமாலின் தந்தை நவாப் லக்னோவை விட்டு அங்கே போக விரும்பவில்லை. முஸ்லீம்களுக்குத் தனிநாடு என்பது அவர் நம்பிய கோட்பாடு. லக்னோ அவரது உயிர்மூச்சான மண். ஆனால் கமால் என்றுமே பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிரி. பிரிவினைக்குப்பின்னர் தன் நாடாக இந்தியாவை நினைத்து லண்டனிலிருந்து இந்தியா வருகிறான். இங்கே அவனுக்கு வேலை இல்லை. தெரிந்த உயர் வர்கத்தினர் எவரும் இல்லை. வேலைதேடி உழன்று சலித்து அவன் வேறுவழியில்லாமல் பாகிஸ்தான் செல்கிறான். பாகிஸ்தானையே நாடாகக் கொள்கிறான்.

நாவல் மேலும் விரிந்து கிழக்குபாகிஸ்தான் வங்கதேசமாகப் பிரியும் இடம் வரை வந்து நிற்கிறது. மீண்டும் ஒரு சிரில் மீண்டும் ஒருமுறை வங்கத்துக்கு வருகிறான். மீண்டும் கொந்தளிக்கும் நதி அவனை எதிர்கொள்கிறது. சந்தால்களின் வறுமை. மதக்காழ்ப்புகள். போராட்டச் சூழல். கௌதம நீலாம்பர, ஹரிசங்கர் ஆகியோரின் அந்நியப்படல் மூலம் முடிவை நோக்கிச்செல்லும் நாவல் வரலாறு என்பது என்ன என்ற வினாவை அவர்கள் தங்கள் அளவில் எதிர்கொள்ளுவதைக் காட்டுகிறது. அன்னியமாகும் ஒருவன் அடிப்படையில் வரலாற்றிலிருந்து அன்னியமாகிறான். வரலாறென்பது பொருளிலா பேரியக்கமான கடந்தகாலமே என்று உணர்தலே அவன் அடையும் வெறுமையின் சாரம்.

கௌதமநீலாம்பரன் சிராவஸ்தியில் மௌரியர் காலத்தில் கௌதம நீலாம்பரன் செய்த அந்த மோகினிசிலையை தொல்பொருளாகக் காண்கிறான். அதை உருவாக்கிய கலை எழுச்சியைப்பற்றி எண்ணிக்கொள்கிறான். நதிக்கரையில் அதே படித்துறையில் அவன் அமர்ந்துகொண்டு நீல நீரலைகளைக் காணும் இடத்தில் இந்த நாவல் நிறைவு பெறுகிறது. “அன்னையே நான் உன் மடியில் நிற்கிறேன். நான் தோல்வி காணவில்லை. எனக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. நான் புண்படுத்தப்படவும் இல்லை. நான் முழுமையானவன். பூரணன். என்னை எவராலும் அழித்துவிடமுடியாது.”

*

அக்னி நதியின் வலிமை அதன் தாவிச்செல்லும் சித்தரிப்பில் உள்ளது. வானில் பாயும் குதிரைபோல கதை காலகட்டங்களைச் சாம்ராஜ்யங்களின் உருவாக்கத்தை அழிவைத் தொட்டுச்செல்கிறது. இதன் அமைப்பு மிக நுண்ணிய திட்டமிடல்கொண்டது. மௌரியப்பேரரசின் எழுச்சி, முகலாய வருகை, ஆங்கிலேய வருகை, சுதந்திர எழுச்சி, சுதந்திரத்துக்குப் பிந்திய தொழில்மய நவீன வாழ்க்கையின் தொடக்கம் என இது தன் கதைக்களத்தை அமைத்துள்ளது. எல்லாக் காலகட்டத்திலும் நடப்பது ஒன்றே. அதிகாரத்தின் குரூரமான போர். அழிவு. அதன் மானுட துயரம். அதையெல்லாம் கண்டு அதன் சாரமென்ன என்று ஆராயும் சிந்தனையாளர்கள். அவர்களின் அலைச்சல். தனிமை. அதனூடாகக் கலைகள் மூலம் மனிதமனம் கொள்ளும் மீட்பு. மீண்டும் மீண்டும் இதையே சொல்லிச்செல்கிறது இந்நாவல்.

பல இடங்களைச் சுருக்கமாகச் சொல்லி பெரிய காலமாற்றத்தைக் காட்டுகிறது இந்நாவல். பெரும் சரித்திர நிகழ்வுகள் போகிற போக்கில் யாரோ சொல்வதுபோலவோ முக்கியமற்ற தகவல் போலவோ சொல்லப்படுகின்றன. சாணக்கியன் என்ற பிராமணனின் உதவியுடன் தனநந்தனை வீழ்த்தி சந்திரகுப்தன் அரசேறும் செய்தி அகிலேசனின் சில சொற்கள் வழியாகக் காட்டப்படுகின்றது. பெரும் காட்சிவர்ணனைகளும் சித்தரிப்புகளும் இல்லை என்பதை ஒரு குறையாகவும் நிறையாகவும் சொல்லலாம். வரலாறென்பதே நாம் சுதாரிப்பதற்குள் நம்மைச் சூழ்ந்து தாண்டிச்சென்று பின்னர் நமக்கே செவிவழிச் செய்தியாக மாறிவிடும் ஒன்றுதான் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

அதேபோல வழிப்போக்கர்களால் இசையும் நாட்டியமும் பரத்தைமையும் கோலோச்சிய லக்னோவின் சித்தரிப்பு கௌதம நீலாம்பரநாத தத்தாவின் நோக்கில் சில காட்சிகளாகச் சொல்லப்படுகிறது. பேரழகியும் செல்வந்தர்கள் காலடியில் பணிந்து நின்றவளுமான கணிகை சம்பா சிப்பாய் கலவரத்தால் அனைத்தையும் இழந்து தெருவில் பிச்சையெடுத்து அபின் வாங்கியுண்ணும் சித்திரம் சாதாரணமாக முன்வைக்கப்பட்டு நாவல் தாண்டிச்செல்கிறது. வரலாற்று நதியின் ஓட்டத்தில் எல்லாமே வெறும் காட்சிகள் மட்டுமே.

ஆனால் இந்நாவலின் அமைப்பிலுள்ள ஒரு சமநிலையின்மை உள்ளது. இதன் வடிவத்தில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே மொத்த இந்திய வரலாற்றுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கதை சட்டென்று சமகாலத்தில் வந்து சாவகாசமாக விரிகிறது. இதன்காரணமாகக் கணிசமான வாசகர்கள் சற்று சலிப்படையக்கூடும். சமகால இந்தியாவின் வரலாற்றுப்புலம்தான் நாவல் என்றால் ஆசிரியை கதையை இங்கேயே தொடங்கி பின்னால் சென்றிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆகவே அக்னி நதியை வாசிக்கும் வாசகர்களில் ஒருசாராருக்கு அது சமகாலத்தை நெருங்க நெருங்க உருவாகும் கறாரான யதார்த்தம் பிடிக்காமலாகிறது. ஆனால் ஆசிரியையின் திட்டம் தெளிவானது. கௌதம நீலாம்பரன் ஒரு புள்ளி என்றால் கமால் இன்னொரு புள்ளி. இருவரும் வரலாறு முழுக்க நீண்டு வருகிறார்கள். இரு சரடுகளாகப் பின்னிப்பிணைந்து. தேசப்பிரிவினை அவர்களை இரண்டு துருவங்களாக மாற்றுகிறது. நாவலின் முடிவுப்புள்ளி அப்பிரிவில்தான் உள்ளது. அதை மையமாக்கி வாசிக்கையில் நாவலின் அமைப்பும் அதற்கேற்ப அமைந்திருப்பதைக் காணலாம்.

வரலாற்றின் இரு முகங்களை நாம் அடிக்கடி உணர்ந்திருப்போம். நாம் வரலாறு எனச் சாதாரணமாக உணர்வது நமக்குக் கற்பிக்கப்படும் பழங்காலம். நம்மிடமிருந்து மிக மிக விலகிய ஓர் அற்புத உலகம் அது. ஐதீகங்களின் தொன்மங்களின் உலகம். அங்கேயுள்ள எல்லாமே படிமங்களாக ஏற்கனவே மாறிவிட்டவை. பேரழிவும் துக்கங்களும் கூட கனவுச்சாயை பெற்று இனியவையாக மாறிவிட்டிருக்கின்றன. ராஜராஜசோழனும், கபிலனும், காளிதாசனும், புத்தரும் உயிருடன் நடமாடும் உலகம் என்றால் அது என்ன? நம் ஒவ்வொருவரின் ஆழத்திலும் உறைந்துள்ள நுண்ணிய கனவுலகம் தானே அது?

பெரும்பாலான சரித்திர நாவல்கள் உண்மையில் ஐதீக நாவல்களே. அபூர்வமாகச் சிலநாவல்கள் படிம நாவல்களாகின்றன. பொன்னியின் செல்வன் ஒரு ஐதீக நாவல். யவன ராணி ஒரு ஐதீக சாகச நாவல். வரலாறு என்பது ஐதீகமல்ல. ஐதீகம் என்பது விழுமியங்கள் இணைக்கப்பட்டு மறு ஆக்கம் செய்யப்பட்ட நிகழ்வு. விழுமியங்களின் சாரம் இல்லாத ‘சாதாரண’ நிகழ்வுகளின் வரிசையால் ஆனதே வரலாறு. ஆகவே அது கனவுச்சாயை இல்லாமல் கறாரான உலகியல் தன்மையுடன் இருக்கும். சிறந்த உதாரணம் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’ தமிழில் பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’

அக்னி நதியின் தொடக்கப்பகுதி ஐதீகப்பரப்பில் உள்ளது. கனவு நிகர்த்த ஓர் உலகம். சித்தரிப்பில் கூட ஒரு கனவைக் கொண்டுவர குர் அதுல் ஐன் ஹைதர் முயன்றிருப்பதைக் காணலாம். மெல்லமெல்ல கதை வரலாறாக மாறுகிறது. அப்படியே பரிணாமம் பெற்று சமகால வரலாறாக மாறுகிறது. நாம் வாழும் காலம்வரை வந்து நிற்கிறது அது. நாவல் இரு பகுதிகளாக ஒன்றோடொன்று பொருந்தாமல் இருப்பதாகவும் சிலருக்குப்படுகிறது. உண்மையில் அப்படி இரு வண்ணங்களில் அமைந்திருப்பதே இந்நாவலின் சிறப்பு. இதன் மையப்பொருளே அம்மாற்றம்தான். புத்தமதம் பித்துபோல வளரும் ஒரு காலத்தில் தொடங்கும் நாவல் சமகாலத்தில் வந்து நிற்கிறது. ஒரே படித்துறை. மீண்டும் மீண்டும் வெவ்வேறு பெயர்களில் அந்தப்படித்துறை நாவலில் வந்துகொண்டே இருக்கிறது. காலந்தோறும். ஒருகரை கனவாகவும் மறுகரை நிஜமாகவும் கொண்டு ஓடும் காலநதியில் அமைந்திருக்கும் படித்துறையாக நாவலில் அது கொள்ளும் நிறமாற்றமே இந்நாவலின் மையமாகும்.

இந்நாவலை வாசிக்கும்போது வாசகன் கொள்ள வேண்டிய கவனங்கள் பல. நேர்வாசிப்பாக ஒரு சீரான கதையோட்டமாக வாசித்து முடிக்கலாம். தேர்ந்த வாசகனின் கற்பனை ஊடுபாவாக நகர்வதற்கான பலவேறு சாத்தியங்களைக் கொண்டுள்ளது என்பதே இந்நாவலின் வலிமையாகும். பெரும்பாலான கதாபாத்திரங்கள் ஒரே பெயரில் மீளமீள வருகின்றன. ஒரே பெயர் கொண்ட கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் உள்ள பிரச்சினை என்ன என்று நோக்குவது நாவலைப் புரிந்துகொள்ள மிகவும் உதவும். முதல் கமால் தத்துவஞானம் தேடி கங்கைக்கரைக்கு வருகிறான். கடைசி கமால் வேலைதேடி அலைகிறான். ஒவ்வொருவரையும் நதி எப்படி எதிர்கொள்கிறது என்று நோக்கும் வாசகனுக்குப் பலவகையான மனத்திறப்புகள் ஏற்படும். இளவெயிலும் மழையும் கலந்த பருவத்தில் அதில் குதித்து நீந்தித் திளைத்து மறுகரை ஏறுகிறான் கௌதமநீலாம்பரன். பிரிட்டிஷ் பிரஜையான சிரில் அங்கே வரும்போது அது கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆறு இங்கே காலநதியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

தேவதேவதைகளை அதிகமறியேன்

தேவதையொன்றை நன்கறிவேன்

தீம்புனலாறு மகாநதி

தீயென இயல்பு தீரா வலிமை

மண்ணகத்தேவதை மன்னிய சினத்தள்

தண்ணாத எழுச்சியின் தனித்தலைவி

தன் பருவங்களுக்கெல்லாம் தனிநாயகி

என்ற டி எஸ் எலியட்டின் கவிதைவரிகள் முகப்பில் ஆசிரியரால் கொடுக்கப்பட்டுள்ளன. அவை இந்நாவலின் மைய கவியுருவகம் [மெட்டஃபர்] என்ன என்பதை முதலிலேயே வாசகனுக்குச் சுட்டிவிடுகின்றன. இவ்வாறு மைய உருவகம் ஒன்றை வைத்துப் புனையப்படும் நாவல்களில் அந்த மைய உருவகம் யதார்த்தத்தில் பதிந்துள்ள ஒரு பருப்பொருளாக — ஓர் இடமாகவோ பொருளாகவோ மனிதராகவோ — இருக்கும். அது நாவலெங்கும் பல்வேறு வகையில் யதார்த்தமாக விவரிக்கப்பட்டிருக்கும். கதைமாந்தருடன் பல்வேறு வகையில் தொடர்புகொண்டிருக்கும். அந்த மைய உருவகத்தை நாவல் கூறவிரும்பும் கருத்தாக எடுத்துக்கொண்டு அது நாவல் முழுக்க எப்படி இலங்குகிறது என்று நோக்குவதன் மூலமே நாம் அந்நாவலை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். கோமதியை காலநதியாக, அப் படித்துறையை அந்நதிக்கரையின் ஒரு இடமாக — என் இந்தியாவாக — வைத்துக்கொண்டு இந்நாவலைப் படிக்கும்போது நதியின் ஒவ்வொரு வர்ணனையும் கவித்துவமாக விரிவடைவதைக் காணலாம்.

இந்நாவலுக்கு வடிவ அளவிலும் தரிசன அளவிலும் பொருத்தம் கொண்ட நாவல் ஒன்று உள்ளது. 1961ல் நோபல் பரிசு பெற்ற யூகோஸ்லாவிய நாவலாசிரியர் இவோ ஆண்ட்ரிச் எழுதிய ‘ட்ரினா நதிப் பாலம்’. இருநூற்றை ஐம்பது அடி நீளமும் பத்தடி அகலமும் கொண்ட அந்தப்பாலத்தின் ஒருபக்கம் விஷ்கிராத் என்ற செர்பிய நகரம் உள்ளது. நகரத்தின் மையமே அந்தப்பாலத்திலிருந்து சற்று தள்ளித்தான். மறுபக்கம் துருக்கியர்களின் ஓட்டோமான் பேரரசு. துருக்கியர் ஐரோப்பாவில் நுழைவதற்கான வாசல் அந்தப்பாலம். ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகாலம் அந்தப்பாலம் வழியாக நடந்த போர்களையும் அப்பாலத்தை மையமாக்கி நடந்த அதிகார விளையாட்டுகளையும் சொல்லும் காவியநாவல் இது. இரு கலாச்சாரங்களுக்கிடையே இரு மதங்களுக்கு நடுவே பற்பல நூற்றாண்டுகாலம் நீண்டு நின்ற மாபெரும் அதிகாரப்போட்டியை சித்தரித்துக்காட்ட அந்தப் பாலத்தை மையமாக்கிக் கொண்டிருக்கிறார் ஆசிரியர். நாடுகளுக்கு நடுவேயான போர்களின் மானுடப் பேரழிவையும், தியாகங்களின் முடிவிலாத தொடரையும், கண்ணீரையும், கனவையும் சொல்லியிருக்கிறார். குர் அதுல் ஐன் ஹைதரின் அக்னி நதியில் வரும் படித்துறை பலவகையிலும் அந்தப்பாலத்துக்கு நிகரானதாகும்

மனிதர் மறக்கவிரும்பும் அனைத்தையும்

நினைக்க வைக்கும் தேவதை அவள்…

என்று ஆசிரியர் எடுத்துக் கொடுத்திருக்கும் வரி. வரலாறு மனிதர்கள் மறக்க நினைக்கும் விஷயங்களும் நினைக்க விரும்பும் விஷயங்களும் பிரித்துக்காண முடியாமல் கலந்துள்ள பெருங்கலவை. வரலாற்றை ஒவ்வொரு கணமும் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான். தான் வாழும் வாழ்க்கை வரலாற்றின் இயல்பான தொடர்ச்சி என்று நம்ப தன் சிந்தனையின் கடைசித்துளி வரை செலவழிக்கிறான். வரலாற்றுக்கு ஒரு சாரம், ஒரு திசைவழி உண்டு என்றும் அது இயற்கையின் இயற்கையை ஆளும் இறைவனின் இச்சை என்றும் நம்ப விழைகிறான். இதையே வரலாற்றுவாதம் [ ஹிஸ்டாரிசிசம்] என்று நவீன சிந்தனை சொல்கிறது. வரலாற்றுவாதம் மூலமே தன் வாழ்க்கைக்கு ஒரு பொருளை மனிதன் தேடமுடியும். அரசியல் சமூகவியல் கோட்பாடுகள், தரிசனங்கள் எல்லாமே வரலாற்றுக்குப் பொருள்கொள்ள மனிதன் உருவாக்கியவை. ஆனால் அப்படி ஒரு பொருள் உண்மையாகவே வரலாற்றுக்கு உண்டா?

“முழுவரலாறும் ஆழங்காணமுடியாத ஒரு கடல். அதில் நீயும் நானும் இலைகளைப்போல அல்லாடிக்கொண்டிருக்கிறோம். எனக்கு முன்னால் அறியப்பட்டுள்ள தகவல்களுக்கு நான் பொறுப்பாளியா என்ன?” என்று வரலாற்றை எழுத முற்படும் ஹரிசங்கர் கேட்கிறான். இந்துக்களுக்கு வரலாறு இல்லை. ஒரு மனிதனின் வாழ்வென்பது எரிந்து அணையும் சுடர். ஆகவே அவன் உடலும் எரிந்தழிவதே முறை. வாழ்க்கையைத் தத்துவங்களாக்கி அவற்றை மட்டுமே எஞ்சவிடுவது இந்துக்களின் முறை

ஆனால் எதிர்காலத்துக்காகக் கல்லறைகளை உருவாக்கும் இஸ்லாமியர்களுக்கு வரலாறு என்பது கல்லறைகளின் கதை மட்டுமே “இவ்வளவு அரும்பெரும் சிறப்புகள் இருந்தும் இவ்வளவு அறிந்தும் மனிதகுலம் நாசம் அடைந்தே வருகிறது. மனித ரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரணகளங்கள் வெறியாவேசத்துடன் பரவுகின்றன. வரலாற்றில் அவனுக்கு எவ்வளவுக்கு ஆர்வம் இருந்ததோ அவ்வளவுக்கு இப்போது அருவருப்பு ஏற்பட்டுவிட்டது. அவன் சுல்தான்களின் ஆட்சி, அவர்களின் காலம், கோலம் அனைத்தையும் மறந்துவிடவே விரும்பினான்” கமால் அறியும் வரலாறு அர்த்தமற்ற ஆதிக்க வெறிமட்டுமே.

கௌதம நீலாம்பரன், கமால் இருவருமே கடைசியில் கலைகளில் தான் சென்று அணைகிறார்கள். வரலாறு கொந்தளித்து எரிந்து அணைகிறது. தடையங்களாக இடிபாடுகளையும், கல்லறைகளையும் விட்டுவிட்டுச் செல்கிறது. அந்த காலகட்டத்தின் ஆத்மாவின் பதிவுகள் என கலைகள் மட்டுமே எஞ்சுகின்றன.

வரலாறு ஒரு நதி. அதன் ஓட்டத்தைக் காணமுடிகிறது. நம் அறிவைக்கொண்டு அதன் ஓட்டத்துக்கு ஒரு நோக்கத்தை உணர முடியவில்லை. அதன் ஓட்டத்தைக் காணும்தோறும் நாம் அற்பமானவர்களாகச் சிறுத்து நமது உள்ளத்துச் சாரங்களை நிழந்து வெறுமைகொண்டு அதன் கரையில் நிற்கிறோம். அக்னி நதி அந்த வெறுமையின் தரிசனத்தை அளிக்கும் நாவல்.

[அக்னி நதி _ குர் அதுல் ஐன் ஹைதர், தமிழில்: சௌரி; நேஷனல் புக் டிரஸ்ட்]

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Jan 29, 2007

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.