அவக்

காளியாத்தாள் ஒய்யாரமாகச் சப்பரத்தில் அமர்ந்துகொண்டு ஊர்சுற்றி வருவதைத் தூரத்தில் நின்று பார்த்தார் சீனிச்சாமி. ”வாழ்நாள் பூரா உன்னை தோளில தூக்கிச் சுமந்து சுத்துனேன். கடைசியில கைவிட்டுட்டீயே” என விரக்தியாய்த் தனக்குள் சொல்லிக் கொண்டார். அவர் எந்தச் சூழலிலும் தன்னை மறந்து அழுவதில்லை. சீனிச்சாமியின் அப்பா தங்கதுரை செத்தபோது கடைசியாக அழுத நினைவு அவருக்குள் இருக்கிறது. அப்போது அவருக்கு இருக்கும் வயது இருபத்தியொன்று.

இப்போதும் வயதுக் கணக்கு தெரியவில்லை. கூடவே வலது கண்ணும் தெரிந்து தொலைவதில்லை. எதிரே ஆள்வந்து நின்றால் மங்கலாகத்தான் உருவம் தெரிகிறது, ஒருகண்ணைக் கையால் மூடிப் பார்த்தால். உச்சியில் சூரியன் வந்து நிற்கையில், வெகுபக்கமாய்ப் போய்நின்று செடிகளினுடைய இலையின் முகவாட்டத்தைப் பார்த்தால் மட்டுமே வேருக்கு நீர்போகவில்லை என்பதே தெரிகிறது அவருக்கு. பார்த்த மாத்திரத்தில் காட்சிகள் எதுவுமே கழுவிவைத்த சில்வர்குண்டாவைப் போலப் பிரகாசமாகத் துலங்கவில்லை என்பதை நன்றாக உணர்ந்துமிருந்தார். ஏதோ இடதுகண் இருப்பதால், வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. மதுரையில் கண்ணாஸ்பத்திரிக்கு போய், ஐந்து நாள் தங்கி இருந்தால், சரிபண்ணிக்கொண்டு திரும்பி வந்துவிடலாம். இந்தா, அந்தாவென இழுத்து விட்டது அது. இனி போக முடியுமா? என்று யோசித்தார் சீனிச்சாமி.

பக்கத்தில் வந்து நின்ற ஈஸ்வர பண்ணாடியை அடையாளம் காண முடியவில்லை அவரால். “ஏப்பா சீனி. ஆரு ஏதுன்னு நிதானம் இல்லையா? அந்த ஆபரேஷன் சனியனை சீக்கிரம் செஞ்சு தாட்டி விட வேண்டியதுதானே? ஏயெப்பா இன்னைக்கு நூறு கெடா ஊர்ல விழுந்திருக்கு. ஊரே மங்கலமா இருக்கு. விதிப்படி பூசாரிக்கு ஒண்ணு. ஆசாரிக்கு ஒண்ணு போயிட்டா ஆசாரப்படி மிச்சம் எல்லாம் உங்காளுகளுக்குத்தானே? உனக்கு வர்றதுல எனக்கும் கொஞ்சம் குடுத்துவிடு” என்றார் ஈஸ்வர பண்ணாடி.

சீனிச்சாமி ஒருகாலத்தில் மேற்கே வண்டித் தடத்தை ஒட்டியிருக்கிற அவர் தோட்டத்திலும் வேலை பார்த்திருக்கிறார். சீனிச்சாமியின் சொந்தங்கள் கல்லுடைக்கிற வகையறா. எந்தக் காலத்தில் காளியம்மனின் ஆளுகைக்குள் வாழக் கிளம்பி வந்தார்களோ? ஊரில் நூறு குடும்பங்களாகத் தழைத்து இப்போது ஐம்பது குடும்பங்களாக வயிற்றைப் போலச் சுருங்கி விட்டனர். அவர்கள் மட்டுமா சுருங்குகிறார்கள்? காய், மரம், மயிறு, மாரென எல்லாமும் காலத்தில் சுருங்குகிறதுதானே?

பெரும்பாறைகளை வெறும் கடப்பாரையால் நெம்பி ஊக்கமாக உடைத்த வம்சம் என்பதால், இயல்பிலேயே பலசாலிகள். இப்போதுகூட ஒருகண்தான் தெரியவில்லையே தவிர, உடல்பலத்திற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை சீனிச்சாமிக்கு. ஓடியாடி இன்னும் பத்து வருடங்களுக்கு அவரால் பாடுபட்டு விடவும் முடியும்.

காளியாத்தாள் கோவில் உள்ளூர் பண்ணாடிகளுக்குப் பாத்தியப்பட்டது. இயற்கையாகவே கல்லுடைத்து உடலில் சத்து ஏறிய கூட்டம் இவர்கள் என்பதால், அந்தக் காலத்திலிருந்து இப்போதுவரை சப்பரத்தை, சீனிச்சாமியின் ஆட்களே தூக்கி ஊர் சுற்றி வருவார்கள். அதற்கு ஈடாக ஊரில் வெட்டும் கிடாக்களில் ஆசாரிக்கொண்ணு பூசாரிக்கொண்ணு போக மிச்சமனைத்தும் சீனிச்சாமியின் வகையறாவிற்குச் சொந்தமானது. தங்கள் சாதிசனத்திற்குள் அதைப் பகிர்ந்து கொள்வார்கள்.

நேர்ந்து விடுகிற கிடாக்களை காளியாத்தாள் ஊருக்குள் சுற்றிப் பார்க்க வருகையில், அவளது பார்வைக்குத் தெரிகிறபடி வெட்டிவிட்டு, அப்படியே இவர்கள் கையில் கொடுத்து விடுவார்கள். ஒவ்வொரு தையிரண்டு அன்றும் காளியாத்தாள் தவறாமல் ஊர்வலம் போய்விடுவாள். நாற்பது வருடத்திற்கு முன்பு, ஒருநாள் பொழுது மாதிரி இல்லாமல், தைமாதத்தில் நாள் முழுக்க அடைத்துக்கொண்டு மழை பெய்த அன்றும் விடாமல் அவளைத் தோளில் சுமந்து கொண்டு ஊர்சுற்றிக் காட்டினார்கள்.

சீனிச்சாமியின் அப்பா தங்கதுரை இருந்தவரைக்கும் வாழ்க்கை நன்றாக இருந்த நினைவு இருக்கிறது. தோப்பு துரவு என அவர் இரண்டு ஏக்கராவுக்குப் பக்கம் கொஞ்சமாக வாங்கிப் போட்டார். அதுவே வானம் போல விரிந்த நிலம் அவருக்கு. சீனிச்சாமியோடு மொத்தம் நான்கு அண்ணன் தம்பிகள், இரண்டு தங்கைகள். அப்பாவோடு யாராவது இரண்டுபேர் எந்நேரமும் விவசாயம் பார்க்க நிற்பார்கள். மற்றவர்கள் கல்லுடைக்கிற, கிணறு வெட்டுகிற வேலைக்குப் போய்விடுவார்கள், வேரை வெட்டி விடக்கூடாது என்பதைப் போல.

தங்கதுரை தினமுமே முயல் வேட்டைக்குப் போய்விடுவார். வீட்டில் எப்போது போய்ச் சட்டியைத் திறந்தாலும் முயல் கறி இருந்து கொண்டே இருக்கும். அத்தனை பிள்ளைகளையும் வரிசையில் அமரவைத்து, தேங்காய்ச் சிரட்டை அகப்பையில் கறியை அள்ளி இலையில் போடுவார். அதுவெல்லாம் அந்தக் காலம். இப்போது எல்லாம் கோவில் கெடா விருந்தில்கூட டீ கப்பில்தான் கறி வைக்கிறார்கள். கிலோ ஆயிரம் ரூபாய்க்குக் கறி விற்கிற காலம் எப்படித்தான் சமைந்து வந்ததோ? என்று நினைத்துக் கொண்டார் சீனிச்சாமி.

அப்பாவிற்குப் பிறகு இடத்தைக் கூறுபோட மனமில்லாமல், இளையவன் ஒருத்தனுக்கு எல்லோரும் மனம்கூடி எழுதிக் கொடுத்து விட்டார்கள். வெள்ளைப் பூசணி, மொச்சை, உளுந்து என அவனும் வருடம் தவறாமல் எதையாவது பக்குவம் பண்ணி, இப்போது உயிரோடு இருப்பவர்களுக்குக் கொடுத்து விடுகிறான். சீனிச்சாமியின் குடும்பத்தில் இப்போது, இவருக்கு மூத்தவரும் இளையவளும் மட்டுமே உயிரோடு இருக்கிறார்கள்.

அவர் பிள்ளை, இவர் பிள்ளை என ஒரு கூட்டமும் உருவாகி விட்டது. ஆனால் இன்னமும் தங்கதுரை குடும்பம் என்றுதான் ஊருக்குள் பெயர். “தங்கதொரை நல்ல தாட்டியான ஆளுப்பா. ஒரு சுடுசொல்லு மனுஷால் மேல எறியாம, மரியாதையா வாழ்ந்து முடிச்ச மனுஷன்” என இன்றும் சொல்வார்கள். சீனிச்சாமிக்கு அந்த மாதிரி சமயங்களில் உடம்பில் புல்லரித்து அடங்கும். அவருடைய தெய்வத்தைப் பற்றிய கதையாயிற்றே?

சீனிச்சாமி காடுகரையென அப்படியொன்றும் அப்பாவைப் போலச் சம்பாதித்து விடவில்லை. ஆனாலும் ஊரில் கௌரவமான பெயரை எடுத்து இருக்கிறார். “தங்கதுரை பையன்னு அடிச்சு சொல்லலாம். நல்ல மாரியான கொணமான ஆளுப்பா. சொன்ன சொல்லை தலையை அடமானம் வச்சாவது காப்பாத்துவான். நம்பிச் செய்யலாம்” என்பார்கள் எந்த வேலைக்காக இவரிடம் வந்தாலும்.

சீனிச்சாமியின் மனைவி ரெங்காத்தா அந்தக் காலத்தில் இவரைத்தான் கட்டுவேன் என ஒற்றைக்காலில் நின்று கல்யாணம் செய்து கொண்டாள். நிலமில்லாத இவருக்குக் கல்யாணம் செய்து கொடுக்க அந்தக் குடும்பம் ஆரம்பத்தில் விரும்பவே இல்லை. ஆனாலும் கடைசியில் வேறு வழியில்லாமல், மகளுக்காகவென ஒத்துக் கொண்டார்கள், இத்தனைக்கும் அவளைவிடப் பலவயது மூத்தவரான சீனிச்சாமியை.

குடும்பத்தை மனசாரப் பகைத்துக் கொண்டு வந்தவள் என்பதால், இதுவரைக்கும் ஒரு சுடுசொல்லைக்கூட அவளை நோக்கிப் பேசியதில்லை. வீட்டுக்குள் கால்வைத்த தினமே சாகிறவரை, விட்டாலும் படரும் வேலிக்கொடியாட்டம் அவள் பக்கம் மட்டுமே நிற்பதாக உறுதிபூண்டார். சீனிச்சாமியின் அம்மாவுமே அவளை ஒருமகளைப் போலத்தான் தாங்குவாள். வந்த புதிதில் எதற்கெடுத்தாலும் சிணுங்கிக்கொண்டு அழுது விடுவாள் என்பதால், ஏதோ தங்கத்தைத் தாங்குகிறமாதிரி அவள் சம்பந்தப்பட்ட காரியங்களில் கவனமாக இருப்பார்கள். இவருமே அந்தச் சிலையைப் போலவும் ஒரு மகளைப் போலவும் தோளில் ஏந்திக் கொண்டார் அவளை. பின்னாளில் பூர்வீக வழியில் சொத்தை விற்றதில், அவளது பங்காய் வந்த பணம் ஐந்து இலட்சம் வங்கியில் கிடந்தது. ஆனாலும் அவள் அதை முகத்தில்கூட இதுவரைக்கும் யாரிடமும் காட்டியதில்லை.

சீனிச்சாமிக்கு ஆணொன்று பெண்ணொன்று. அவருடைய மகன் சிவராசுவால், ஒரு தனித்த புங்கை மரமாய் அந்த ஊரில் தழைத்து வர முடியவில்லை. அடிப்படையிலேயே உடல் வலு இல்லாத பையனாகவும் பிறந்து தொலைத்து விட்டான். பிறந்ததிலிருந்தே ஆஸ்பத்திரிக்கு அவனைத் தூக்கிக்கொண்டு, பருவம் தவறாமல் முருகனுக்கு எடுக்கிற மாதிரி காவடி எடுப்பதே அவர்களுக்கு வேலையாகவும் போய் விட்டது.

இருபது வயதுவரை முடிந்த மட்டுக்கும் அவனும் உடல் தொல்லைகளையெல்லாம் மீறி, என்னன்னவோ தொழில் செய்து பார்த்தான் ஊரில். இனிமுடியாது என்று தோன்றவே, ஒருநாள் ரோக்கர் அடித்து விட்டான். அவனை மடியில் கிடத்தியிருந்த அன்றுகூட அழவில்லை சீனிச்சாமி, ஒருபாறாங்கல்லைப் போல அமர்ந்திருந்தார். “ஒத்த துளி கண்ணில வரலீயே. கல்லோட பொழங்கி கல்லாவே மாறிட்டான். ஆனா கண்ணை உத்து பார்த்தேன். அதுல திரண்டுகிட்டு நின்னுச்சு அத்தனை பாசமும்” என்றார் சாவு வீட்டு வாசலில் நின்ற பழனிச்சாமி.

சாவை எடுத்துப் போட்டு வீட்டுக்குள் வந்த சீனிச்சாமியிடம், “மடியில கெடத்தி வளர்த்த பாசத்துக்கு ஒரு சொட்டு கண்ணீர் வரலீயா? அதைப் பார்த்துட்டு பெத்தவ நெஞ்சு என்ன பாடுபட்டிருக்கும்” என்றாள் ரெங்காத்தாள்.

அவளைச் சமாதானம் செய்யும்படியாக என்ன சொல்ல என யோசித்து அமைதியாக நின்றார். பின், “பட்டுப் போற மரம்னு தன்னை நினைச்சிட்டான். இளங்குருத்தா நாம நட்டதை மனசில நிறைச்சுக்குவோம். என்னமோ அவன் போனது ஒருவகையில நல்லதுக்குத்தான். இருமலும் நெஞ்சடைச்சலுமா அவன் துடிக்கிறதை காணச் சகிக்கலை. தங்கச்சியை நல்ல மாதிரிக்கு கொண்டு வரணும்னு என்ட்ட அடிக்கடி சொல்லுவான். அவன் செத்து கிடந்தப்ப அந்த வைராக்கியம் எனக்குள்ளயும் வந்த மாதிரி தோணிச்சு. நாம இருக்கிற செடியை பார்ப்போம். என்ன காளியாத்தாளோட சப்பரத்தை தூக்கற உரிமை அவனோட நம்ம கையை விட்டு போயிருச்சு” என்றார். புழு, பூச்சி, ஆடுமாடென சீனிச்சாமி ஏற்கனவே நிறைய மரணங்களைக் கடந்து வந்துவிட்டதால், மரத்துப் போய்விட்டதோ என நினைத்தாள் ரெங்காத்தாள். ஆனால் நெஞ்சில் மங்கென வந்து விழுந்த கல்லை அவர்மட்டும்தானே அறிவார்?

சிவராசு செத்த போது அவனது தங்கைக்கு எட்டு வயது. அவள் பிறந்ததிலிருந்து அண்ணன், அப்பா என இருவரது தோளில்தான் நடை பழகவே செய்தாள். பெண் பிள்ளை என்றதும் யோசிக்கவே இல்லை சீனிச்சாமி, குழந்தையின் முகத்தைப் பார்ப்பதற்கு முன்பே காளியாத்தாள் எனப் பெயரை முணுமுணுத்து விட்டார்.

“அப்பா காளியாத்தாள சப்பரத்தில வச்சு தூக்கிட்டு போற மாதிரி என்னையும் தூக்கிட்டு போங்க” என மூன்று வயதில் அடம்பிடிப்பாள். சீனிச்சாமி தோளில் தூக்கி வைத்துக் கொண்டு கால்களைத் தொளதொளவென மடக்கி சப்பரம் ஆடுவதைப் போல உடலைக் குலுக்கி நடப்பார். யானை மேலொரு அம்பாரி போவதைப் போலக் குதூகலமாகச் சிரிப்பாணி காட்டுவாள்.

“பொம்பளை பிள்ளைய தகப்பன் தோள்ல ஏத்தக் கூடாதுப்பா. கால்மாட்டில கட்டி அழகு பாத்துக்கணும்” என்றார் சீனிச்சாமியின் தோஸ்து. “அப்பறம் காளியாத்தாவ எதுக்குப்பா தோள்ள தூக்கிக்கிட்டு திரியறோம்” என்றார் பதிலுக்கு. மகளுக்கு அதெல்லாம் அந்த வயதில் புரிந்திருக்குமா?

சிவராசு செத்தபிறகு, இருக்கிற இந்த ஒத்தை மரத்தை ஊர்மெச்ச ஓங்குதாங்காக வளர்த்துவிட வேண்டும் என முடிவெடுத்தார் சீனிச்சாமி. வளர வளர, அம்மைக்கும் மகளுக்கும்தான் வீட்டிற்குள் ஆகவில்லை. ரெங்காத்தாள் அந்த ஒத்தை மரத்தை வீட்டு வாசலில் வைத்து வளர்க்க நினைத்தாள். அவரோ காளியாத்தாள் கோவில் திடலில் குதிரை சிலைக்குப் பக்கத்தில் நட்டுவளர்க்க நினைத்தார். ரெட்டைத் தடம் என்றைக்குச் சேர்ந்து ஓடியிருக்கிறது?

பள்ளிக்குப் போய்விட்டு வந்ததும், அப்பாவின் இடுப்பு வேட்டியைப் பற்றிக் கொள்வாள். நடத்திக் கொண்டு போய் ஒர்ரூவா லட்டு வாங்கிக் கொடுத்து திருப்பி அழைத்துக் கொண்டு வருவார். “இப்படியே பொட்டைப் பிள்ளைய கெடுத்து வைய்யீ. நாள பின்னைக்கு போற வீட்டில லட்டு குடுப்பாங்களா நெதமும். சோத்துக்கு கடிச்சுக்க வேற இப்ப புது பழக்கம். நம்மள மாதிரி உழைப்பாளிக வீட்டுக்கு இது ஆகாது” என்பாள் அம்மாக்காரி.

“மேட்டாங்காட்டுக்காரனுக்கு குடுத்து தண்ணி சொமந்து ஊத்தவா இவளை பெத்துருக்கேன். கால் காசுனாலும் கவர்மெண்ட் காசுன்னு வர்றவனுக்குத்தான் கட்டிக் குடுப்பேன்” என்பார் இவர். தன்னால் முடிந்த மட்டும் முட்டிமோதி அவளை பத்து வரை படிக்க வைத்து விட்டார். அதற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை அவரால். தன்வழியில் வருகிற பணம் பேரன் பேத்திகளுக்குத்தான் எனத் தெளிவாகச் சொல்லிவிட்டாள் ரெங்காத்தாள். சீனிச்சாமியின் உடலுமே அக்காலத்தில்தான் தளர்வடையத் துவங்கியது. மாத வேலைக்குக் காடு ஒன்றில் பண்ணையாளாக வேலைக்குப் போகத் துவங்கினார்.

ஓடியாடிக் கொண்டு இருக்கையிலேயே அவளுக்குக் கல்யாணம் முடித்து வைத்துவிடத் திட்டமிட்டார். தன்னுடைய தங்கை மயிலாத்தாளிடம் போய் நின்றார். “ஏம்ணே இப்படி கெடந்து மருகுற. நானில்லை. இலஞ்சி பட்டீல பஞ்சாயத்து ஆபிஸ்ல வேலை பார்க்கற பையன் ஒருத்தன் இருக்கறதா சொன்னாங்க. நேர்ல போயி பேசி முடிச்சிர்றேன்” என்றாள்.

கையில் இருந்ததைத் திரட்டி முதலில் பத்து பவுன் போட்டுவிடுவது, ரெங்காத்தாள் வழியில் வரும் அந்த ஐந்து இலட்ச ரூபாய் பணத்தை, இவர்களின் கண்ணுக்குப் பிறகு அப்படியே தந்து விடுவதாகக் கல்யாண ஒப்பந்தம் போட்டார்கள். ஊரிலேயே கொஞ்சம் விபரம் கூடிப் படித்த காளியாத்தாள் தெளிவாக மாப்பிள்ளை பையனிடம் நிச்சயம் செய்த அன்றைக்கே சொல்லி விட்டாள்.

“எங்கப்பாம்மா காலம் வரைக்கும் அது பேங்க்லயே கிடக்கட்டும். எங்க போகப் போகுது? அதுக்கு நான் கியாரண்டி. இனிமே வேற யாருக்கு தரப்போறாங்க?” என்று அவள் சொன்னதை மாப்பிள்ளைப் பையன் அரைமனதாக ஒத்துக் கொண்டான். புதுக்காளை, தன்னோடு வந்ததைப் பெண்டாண்டு சினையாக்குகிற முனைப்பில் அப்போது இருந்ததால், உரசித் தலையாட்டிக் கொண்டது.

கல்யாணம் ஆனபிறகு வாராவாரம் தவறாமல் ஞாயிற்றுக் கிழமையானால், கிளம்பிப் போய் விடுவார் சீனிச்சாமி, கையில் லட்டு பொட்டலத்தோடு. “சம்பந்தகாரவுங்ககிட்ட நீ சீப்படாம திரும்ப மாட்ட” என்று சொல்கிற ரெங்காத்தாள், அளவாகத்தான் வைத்துக் கொள்வாள், மகள் வீட்டுடனான போக்குவரத்தை. அப்பா அந்தத் தடத்தில் வருகிற அருள்முருகன் பேருந்தைப் போலத் தவறாமல் வந்து விடுவார் என்பது தெரிந்து மகள் ஆட்டுக்கறிக் குழம்பு வைத்துக் காத்திருப்பாள். நாள்கிழமை தவறாத சடங்கைப் போல அது நிகழும்.

சீனிச்சாமிக்கு அப்போது மாத வேலைக்குப் போன வகையில் கையில் காசுமே புழங்கியதால், கொண்டு போய் கொடுப்பார். “அடுத்த தடவை அம்மாவ கூப்டு வாங்கப்பா. கண்ணு தேடுது” என்று மகள் சொன்ன போது அவருக்கு விளங்கவில்லை. “கல்லு மண்ணுன்னு கெடந்து மனுஷனுக்கு மூளையுமே அதை மாதிரி ஆயிருச்சு” என ரெங்காத்தாள் பேருந்து பிடித்து உடனடியாகவே கிளம்பிப் போனாள்.

பிறகே முழுகாமல் இருந்ததைத்தான் மகள் அப்படிச் சொன்னாள் எனப் புரிந்து கொண்டார். முதலில் காளியாத்தாள்தான் பேத்தியாக வந்து பிறந்தாள். அனுசுயா எனப் பேத்தியின் பெயரை தன்னுடைய எக்ஸ்.எல் வண்டியில் ஸ்டிக்கர் வைத்து எழுதி வாங்கினார் சீனிச்சாமி. வீட்டில் மொத்தம் மூன்று காளியாத்தாள்கள் என அவரது உள்ளம் பூரித்தது. பேத்தியையுமே சப்பரம் போலத் தோளில் வைத்துத் தூக்கிக்கொண்டு நடந்தார். அவளுக்கு நான்கு வயது ஆகையிலேயே, உடல் கொஞ்சம் தளர்ந்து தூக்க நிறையவே சிரமப்பட்டார் சீனிச்சாமி.

மகளுக்கு முதல் பிள்ளை பிறந்து பன்னெண்டு வருடங்களுக்குப் பிறகு இரண்டாவதாய் ஒரு ஆம்பிளைப்பிள்ளை பிறந்த போது வாழ்வின் நோக்கமே நிறைவேறி விட்டதைப் போல மனம் நிறைந்தது சீனிச்சாமிக்கு. செத்துப் போன பையனே பேரனாக வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டார். பேரன், பேத்தி என அவர் நெருங்குவதை மாப்பிள்ளையின் குடும்பம் ரசிக்கவில்லை என்பதுகூட அவருக்கு உறைக்கவில்லை. பாறாங்கல் மூளையில் குளவி கூடுகட்டத் துவங்கிய காலமது.

“பொண்ணை கட்டி குடுத்திட்டப்பறம் எதுக்கு இங்கயே ஓடியாடிக்கிட்டு இருக்காரு. பிள்ளைங்களுக்கு அப்பறம் எப்படி அவங்க அப்பா வழி சொந்தத்தோட ஒட்டுறவு இருக்கும்” என்று இன்னொரு வழியில் சொல்லி அனுப்பினார்கள். ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகான பிரசவம் என்பதால், பையன் தலை நிக்கிற வரைக்கும் அம்மா கைப்பக்குவம் தேவை என மகள் அடம்பிடித்தாள்.

ரெங்காத்தாளைக் கொண்டு போய் மகள் வீட்டில் கொஞ்சநாள் இருக்கச் சொல்லி விட்டு விட்டு வந்தார். “அதான் முதல் பிரசவத்தை நல்ல மாதிரியா முடிச்சு குடுத்துட்டோம்ல. ரெண்டாவது பிள்ளைய பேத்தியும் அவளுமே பாத்துக்குவாங்க? அப்பனும் பிள்ளையும் சேர்ந்து ஆட்டமா ஆடாதீங்க. இங்க சம்பந்தக்காரவுங்க பேச்சு கேட்க முடியலை. அங்க கிளம்பி வந்திடறேன்” என்று இவர் போனபோது. அவள் சொன்னதுகூட அவரது காதில் விழவில்லை.

”அதெல்லாம் தலை நிக்கற வரைக்கும் நீங்கதான் பாத்து கொடுத்துட்டு போகணும். சின்ன ஒரு விஷயத்துக்குக்கூட சுருண்டு படுத்துக்கிற மாதிரிதான் நீங்க உங்க பிள்ளையை வளர்த்து வச்சிருக்கீங்க” என மாப்பிள்ளை உறுதியாகச் சொல்லிவிட்டார். அப்போது அவரது அம்மா வழியிலுமே யாரும் வந்து பார்த்துக்கொள்ள முன்வரவில்லை.

சீனிச்சாமி அங்கேயும் இங்கேயும் வண்டியில் ஓடி அந்தப் பிள்ளை தலை நிற்கிறவரை பார்த்துக் கொண்டார். அந்தத் தடவை போகிற வழியில் காசுகொடுத்து கறி எடுத்துக்கொண்டுபோய் மகளிடம் கொடுத்தபோது, “அப்பா இதெல்லாம் உங்களோட வச்சுக்கோங்க. உங்க மருமகனுக்கு இதெல்லாம் பிடிக்காது. கோவிலா இருந்தாலும் அதென்ன காசு தராம மத்தவங்கட்ட வாங்கறதுன்னு நெனைப்பார்” என்றாள் ரெட்டைவடச் சங்கிலியை நீவியபடி. வெடுக்கென அதை அவள் சொன்னதைப் போல உணர்ந்தார். காசு கொடுத்து வாங்கியது என அவர் சொல்லவே முயலவில்லை. காளியாத்தாளுக்கு அன்றைக்கு கெடா வெட்டுவார்களா? என்கிற நிதானத்தைக்கூட மகள் இழந்திருந்தாள் அப்போது.

பொட்டலத்தை மடியில் வைத்துக்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல், புங்க மரத்தடியில் கட்டிலைப்போட்டு அமர்ந்தபோது, ரெங்கநாயகியும் முழங்காலைத் தடவியபடி அமர்ந்தாள். முட்டி வலி இருக்கும் போல, ஏற்கனவே அதைச் சொல்லியும் இருந்தாள். அடுத்தமுறை கோடாலித்தைலம் வாங்கிவந்து தடவி விடவேண்டுமென நினைத்தார். சேலை நுனியால் கண்களைத் துடைத்த போதுதான், அவள் அழுவது தெரிந்தது. பதற்றமாகப் போய்விட்டது அவருக்கு.

“எந்தெய்வமே எதுக்கு அழற? ரெம்ப வலியெடுக்குதா” என்றார் வாய்விட்டுச் சத்தமாக. பதில் பேசாமல் அவள் சிணுங்கிக் கொண்டிருந்தாள். பெரிய அழுகைக்கான முன்னேற்பாடுகளைத் தனக்குள் தாங்கியிருந்தது அந்தச் சிணுங்கல். ஏதோ நடந்திருக்கிறது என்பதை ஊகித்துக் கொண்டார் சீனிச்சாமி.

கட்டிலில் கிடந்த அவளது கரத்தைத் தொட்ட போது, “நம்ம பிள்ளையா அது? ரெம்ப அக்குருவமா பேசுது” என்றாள். அப்படி என்ன பேசியிருப்பாள் மகள்? அதைக் கேட்கலாமா எனத் தோன்றியது அவருக்கு. “புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ள நுழையாம இருக்கற மாதிரி, மகளுக்கும் தாய்க்கும் நடக்கிற சண்டையிலயும் தலைய போட்டு ஊடாட கூடாதுப்பா. இன்னைக்கு அடிச்சுக்குவாங்க நாளைக்கு கூடிக்குவாங்க” என்று அவரது அண்ணன் முன்பு சொன்னது நினைவிற்கு வந்தது அப்போது. ஆனாலும் எதற்காக அழுகிறாள்?

ஏனோ அன்றைக்கு அவருக்கு உடனே ஊருக்குக் கிளம்ப வேண்டும் எனத் தோன்றியது. எழுந்த போது, “நானும் வந்திரவா” என்று ரெங்காத்தாள் சொன்ன போது தீவிரம் என ஒன்றை, கோடைமழைக்கு முந்தைய புழுக்கத்தைப் போல உணர்ந்தார். “வேணாம் இரு. ஒரு பத்து நாள்தான? கோவில் பொங்கலை சாக்கிட்டு வந்திரு. இல்லாட்டி பாதியில விட்டுட்டு போயிட்ட மாதிரி நினைச்சுக்குவாங்க. பிள்ளை கேட்டா  அவசரமான போன் வந்திச்சுன்னு சொல்லிரு” என்று சொல்லி விட்டுக் கிளம்பிப் போனார்.

போகிற வழியில் ஒரு இடத்தில் இவர் மீது மோதப் போகிற மாதிரி அருள்முருகன் பேருந்து வேகமாகத் தள்ளாடி வந்து கடந்து போனது. மூச்சே நின்றுவிடும் போல ஆகிவிட்டது சீனிச்சாமிக்கு. போன வாரம்தான் மூன்று பேரின் உயிரைக் காவு வாங்கி இருந்தது, ஆனாலும் திருந்தவில்லை ஓட்டுகிற வள்ளுப் பையன்கள். படபடவென வந்து விட்டதால் பக்கத்திலிருந்த புளியமர நிழலில் ஒதுங்கி வண்டியை நிறுத்தி விட்டு அமைதியாய் அமர்ந்தார்.

ரெங்காத்தாள் வெட்ட வெயிலில் சாலையில் தனியாக நொண்டியபடி நடந்து வருவதைப் போலக் கானல்நீராய் எண்ணி, பின் தலையை உதறிக் கொண்டார். காக்கையோ கழுகோ கொத்தித் தின்றுவிட்டுப் போகட்டும் என அந்தக் கறிப் பொட்டலத்தைக் கல்லொன்றின் மீது போட்டார். தான் போய்ச் சேர்ந்தாலும் ஊர் ரெங்காத்தாளைப் பார்த்துக் கொள்ளும் என அந்நேரத்தில் அவருக்கு ஏனோ தோன்றியது.

மனைவி அழுதது மனதை அறுத்துக் கொண்டே இருந்தது. பெண்தான் என்ற போதிலும் சம்பந்தகார வீட்டிற்கு இப்படிப் போய் அமர்ந்திருப்பது முறையா? ஆனாலும் அவர்கள் அழைத்துத்தானே போனோம்? அப்படியென்ன பேசிவிட்டாள் மகள்? என்றெல்லாம் சுற்றிச் சுற்றி யோசித்தார். பேத்தியின் முகமும் பேரனின் முகமும் அவருக்குள் நிறைந்த போது ஆசுவாசம் அடைந்தார்.

மகளை இன்னொரு வீட்டிற்கு அனுப்பி விட்டோம் என்கிற உணர்வே தனக்குள் வருவதில்லை என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தார். மூன்று காளியாத்தாள்கள், ஒரு சிவராசு அடங்கிய அதைத் தன்குடும்பமாகவே மனதாரக் கண்டார். ரெங்காத்தாளும் அப்படிப் பார்க்கவே விரும்பினார். ”அதெல்லாம் உன் குடும்பமா ஆகவே ஆகாது” என ரெங்காத்தாள் ஏற்கனவே சொல்லியும் இருக்கிறாள். அவளால் ஏன் தன்னைப்போல அப்படி நினைக்க முடியவில்லை என ஆழமாக யோசித்தார். மகள் இவளிடம் நன்றாகத்தானே இருந்தாள்? இப்போது மட்டும் என்ன ஆனது? என்றெல்லாம் தனக்குள் குழம்பியபடி வண்டியை எடுத்து ஓட்டிக்கொண்டு ஊருக்கு வந்து சேர்ந்தார்.

அடுத்த இரண்டு நாளிலேயே மருமகன் வீட்டிலிருந்து, திருமணத்தின் போது பேசியபடி பணத்தைக் கொண்டுவந்து தரும்படி சொன்ன போது, அவருக்கு மேலும் வித்தியாசமாகத் தோன்றியது. உடனே கிளம்பிப் போன அவரிடம், “ப்ரெண்ட்ஸோட சேர்த்து வேலை பார்த்துகிட்டே தனியா தொழில் ஒண்ணை பண்ண போறாராம்ப்பா. அவசரமா உடனே பணம் வேணும். எங்களுக்கும் குடும்பம்ணு ஒண்ணு ஆகிப் போச்சில்ல” என்றபோது அவருக்குச் சுருக்கென்று இருந்தது. ஆனால் பணிவாகத்தான் மகள் அதைச் சொன்னது போலத் தோன்றியது.

மனைவியை அழைத்துக்கொண்டு வரும் வழியில், “என்ன திடீர்னு இப்ப கேட்கிறாங்க. உண்மையிலயே பணத் தேவைதானா?” என்றார்.

“என்னன்னு தெரியலை. நான் எதையும் சொல்றதா இல்லை. அப்புறம் அப்பனையும் மகளையும் பிரிச்ச பாவம் வந்திடக் கூடாது” என்று சொல்லி விட்டு அமைதியாக பின்னால் அமர்ந்தாள். அதற்கு மேல் எதையும் பேசக் கூடாது எனத் தீர்மானம் கொண்டவராய் அமைதியாய் வண்டியை ஓட்டினார் எதிர்க்காற்று பலமாய் அடிக்கிற தெற்கு நோக்கி.

சொன்னமாதிரி இருக்க வேண்டும் என்பதால், பணத்தை வங்கியிலிருந்து எடுத்து உடனடியாகக் கொண்டுபோய்க் கொடுத்தார். தன் குடும்பத்தின் கையில்தான் கொடுக்க வேண்டுமென நினைத்துக்கொண்டு போனார். ஆனால் கூச்சமே இல்லாமல் மாமியார்க்காரி வந்து வாங்கிக் கொண்டாள். ”அத்தை அதை பீரோவில வைங்க. பின்னாடி எண்ணிக்கலாம். இந்தா வர்றேன். இருங்கப்பா கறியெடுக்க சொல்றேன்” என்றாள் மகள். விலகல் மனநிலை இல்லை என்றபோதும், அன்றைக்கு மனைவி இல்லாமல் அங்கே சாப்பிடப் பிடிக்கவில்லை அவருக்கு. என்ன இருந்தாலும் இது அவளுடைய பூர்வீகச் சொத்தில் வந்த பணம் இல்லையா? தன்னுடைய உரிமைப் பணம் போலக் கையில் ஏந்திய கூச்சமும் வந்தது அவருக்குள். ஒருவித படபடப்பான மனநிலையில் இருந்த அவர் உடனடியாகவே கிளம்பினார்.

“அம்மாட்ட சொல்லுங்கப்பா. என்னால அடிக்கடி கூப்ட முடியாது. தம்பியை வச்சிருக்கணும்ல. நீங்களுமே அவசர ஆத்திரம்ணா மட்டும் மூணு ரிங் விடாம அடிங்க. நான் எடுத்து பேசறேன். நீங்க மாசத்துக்கு ஒரு ஞாயித்துக்கிழமை மறக்காம வந்திருங்க. இவனை வச்சுக்கிட்டு சமாளிக்க முடியலை” எனக் கிளம்பும் போது சொன்ன மகளை நிதானமாக ஏறிட்டுப் பார்த்தார். அதையுமே அவள் சாதாரணமாகச் சொன்னதைப் போலத்தான் தெரிந்தது அவருக்கு.

ஆனாலும் நெருஞ்சி முள் வேட்டியோடு ஒட்டிக்கொண்டு வருவதைப்போல அந்தச் சங்கடம் அவரோடு சாலையில் பயணித்தது. வரும்போதே மனைவியிடம் இதுகுறித்துப் பேச வேண்டுமென எண்ணிக் கொண்டார்.

“எண்ணிப் பார்த்து வாங்குனாங்களா” என்று கேட்டபடியே வந்து அமர்ந்தாள் ரெங்காத்தாள்.

“எதுக்கு இப்படி பேசிப் பழகற?” என்றார் உடனடியாக சத்தத்தைச் சற்று உயர்த்தி.

“ஊர்ல நடக்கிற காரியத்தை சொல்றேன்” என்ற போது அவளது குரலில் பொருளொன்று கைவிட்டுப்போன, சலிப்பிருப்பதைக் கண்டார். அவள் பணம் அதுவென்பதாலா?

“ரெங்கு என்ன நடந்துச்சு? சரியா சொல்லு. காலம்போன காலத்தில இப்படி சுத்தி வளைச்சு பேசி என்ன பண்ணப் போறோம்? எனக்குமே நெஞ்சில யாரோ கல்லு விட்டு எறிஞ்ச மாதிரி இருக்குது. என்ன கல்லுன்னுதான் தெரியலை” என்று சொல்லிவிட்டு நெஞ்சைத் தடவினார்.

பதறிப்போய் எழுந்து பக்கத்தில் வந்தமர்ந்த அவளிடம் ஒன்றுமில்லை என்று சைகை காட்டினார். கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “அது இப்ப நம்ம பிள்ளை இல்லை. சட்டுனு மாறிருச்சு. வேற மனுஷி மாதிரி இருக்கா. அது மனசில இப்ப நாம இல்லை.” என்றாள். இதை அவள் அழாமல் சொல்கிறாளே என்கிற ஆச்சரியம்தான் முதலில் வந்தது அவருக்கு.

“நீயா கற்பனை பண்ணிக்காத. அம்மைக்கும் பிள்ளைக்கும் வர சண்டைல நான் குறுக்க வரக் கூடாது. என்னைக்காச்சும் வந்திருக்கேனா?” என்றார்.

“எதையாச்சும் சொன்னா அப்பனையும் பிள்ளையையும் பிரிச்ச பாவம் வந்து சேர்ந்திடும்” என்று சொல்லிவிட்டு எழப் போனவளின் கையைப்பிடித்துத் தடுத்து நிறுத்தினார்.

அவளுடைய கண்களைக் குறுகுறுவென பார்த்து, “எண்ட்ட உண்மையைச் சொல்லு. என்னைக்கும் நீதான் எனக்கு முதல்ல. உனக்குத் தெரியும்ல” என்றார்.

அதைக் கேட்டதும் ரெங்காத்தாள் மெதுவாக வழக்கம் போல அழத் துவங்கினாள். அழுகையினூடே, “திருப்பி நாம வந்திரக்கூடாதுன்னு தீர்மானமா இருந்தா. நாளைக்கு உங்க அம்மாவும் அப்பாவும் இங்கயே வயசான காலத்தில டேரா போட்டிருவாங்க. இப்ப இருந்தே கொஞ்சம் விலகி இருந்துக்கோ. நம்ம குடும்பம்ணு பாருன்னு அவளும் மாப்பிள்ளையும் பேசிக்கிறதை என் காதால கேட்டேன்” என்றாள்.

“அது நாட்டு நடப்பில சகஜம்தானம்மா? தப்பு ஒண்ணும் இல்லையே? நாம எதுக்கு அங்க போகப் போறோம்?” என்றார்.

“அது சகஜம்னு எனக்குத் தெரியாதா? மாப்பிள்ளை சொல்லட்டும். இவ அதுக்கு தலையாட்டிக்கக்கூட செய்யட்டும். ஆனா மனசால அப்படி நினைக்கக் கூடாது இல்லியா?” என்றாள்.

“அதெப்படி மனசார நினைக்கும்? நம்ம பிள்ளை வார்த்தைதான் நமக்கு கணக்கு. அது என்ன சொல்லுச்சு?” என்றார்.

”மாப்பிள்ளை நல்ல பாம்பு மாதிரி படம் எடுத்துத்தான் ஆடச் சொன்னார். ஆனா அவ கொத்திட்டா. தொப்புள் கொடியை அறுத்து விட்டிரணும்னு முடிவோடயே கொத்திட்டா. நாம இப்ப அசிங்கமா போச்சு அவளுக்கு. கையில காசு புரள்றதால வேற பக்கம் தேடுது அவளுக்கு” எனச் சொல்லிவிட்டுத் தனது அழுகையின் வேகத்தைக் கூட்டினாள்.

”நம்ம பிள்ளை கையில காசோட இருந்து பொழைக்குறது நமக்கு பெருமைதானே? அவங்க ரெண்டு பேரும் சண்டை சச்சரவு இல்லாம இருந்தா சரிதானே? நாம பேசாம இங்க இருந்துக்குவோம். என்னைக்காச்சும் நல்லநாள் பொழுதுமா போயி பார்த்திட்டு வருவோம். இதுல மனசு விலகுற அளவுக்கு என்ன வந்திச்சு?” என்று அவர் மென்மையாகச் சொன்னாலும், உள்ளுக்குள் உதறலோடுதான் இருந்தார்.

ஏனெனில் அதற்கு முன் அவளது பல அழுகைகளைப் பார்த்திருக்கிறார் என்றாலும், இப்போதைய அழுகைக்குப் பின்னால் ஆழமான வலி இருப்பதைப் பார்த்தார், அடிவாங்கிய நாய் ஊளையிட்டு அழுவதைப் போல, வலியின் முனகல் அவருக்குத் தீர்மானமாகத் தெரிந்தது. அதுகூடத் தெரியாமல் எப்படி ஒரு நீண்ட தாம்பத்யம் நடந்து முடிந்திருக்கும்?

தன்கைப்பிடித்து அந்த வீட்டிற்குள் நுழைந்த காலத்திலிருந்து ஒருநாளும் இப்படி வலியோடு அவளை அழவிட்டதில்லை என்பது அப்போது நினைவிற்கு வந்தது. திரட்டித் திரட்டி யோசித்துப் பார்த்த போதும், இப்படியான அழுகைக்கு முன்தடமே இல்லை அவர்களுடைய வாழ்வில் என்று தோன்றியது அவருக்கு. ”என்ன நம்பி வந்தவளை இப்படி வலியோட அழவச்சிட்டேனே” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டார்.

ரெங்காத்தாள் தலையைக் குனிந்து தாரை தாரையாகக் கண்ணீர் வடித்துத் தேம்பிக் கொண்டிருந்தாள். “என்னைக்கும் சொல்றதுதான். நீதான் எனக்கு முதல்ல” என்றார். கண்களைச் சேலையைக் கொண்டு அழுத்தமாகத் துடைத்துவிட்டு,

“கறியெடுத்து தட்டுல போட்டு சாப்டுகிட்டு இருந்தப்ப, காணாதத கண்டமாறி அவக் அவக்குன்னு திங்கறத பாருன்னு அவ புருஷன்ட்ட சொன்னதை கேட்டேன்” என்றாள்.

”சும்மா சொல்லிருப்பா. அவளும் அப்படி ஒரு காலத்தில இந்த வீட்டில சாப்பிட்டவதான?” என்றார். “அவ சும்மா சொல்லலை” என்று சொல்லிவிட்டு, நிமிர்ந்து அவரைப் பார்த்து, “கோயில்ல ஓசி கறிக்கு அலைஞ்ச பழக்கம் குளிப்பாட்டி நடுவில வச்சாலும் விடாதுன்னா. ஒருகாலத்தில எப்படி வாழ்ந்தவ நானு?” என்று சொல்லிவிட்டு அவர்களது ஓட்டுவீடு அதிரப் பெருங் குரலெடுத்து அழத் துவங்கினாள்.

அந்தத் தீயின் சூட்டைத் தாளமுடியாத சீனிச் சாமி வீட்டைவிட்டு வெளியே இறங்கிச் சாவடியை நோக்கி நடந்தபோதுதான் எதிரே சப்பரத்தில் காளியாத்தாள் அவரை நோக்கி நடந்து வந்தாள். அவளைத் தோளில் தூக்கிச் சுமந்த காலம் அவரது காலடியில் வந்து விழுந்தது. “பல்லும் போயிருச்சு. சொல்லும் போயிருச்சு. ஆட்டுக்கறி திங்கறதை விட்டுட்டேன். இனிமே உரிமைக்கறி வாங்குறதா இல்லை” எனப் பக்கத்திலிருந்த ஈஸ்வர பண்ணாடியிடம் சொன்னார்.

பிறகு நிதானமாக அந்தக் காரியத்தைச் செய்தார். அதுவரை தாங்கியிருந்த அந்தச் சப்பரத்தை ஆட்டாமல் குலுக்காமல், மனசிலிருந்து இறக்கி வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல், ரெங்காத்தாளை நோக்கி நடந்தார்.

அவரது முகத்தைப் பார்க்க வெட்கமாக இருந்தது காளியாத்தாவிற்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.