முதல் பரிசு: ரட்சகன்
எழுதியவர் : கார்த்திக் பாலசுப்பிரமணியன்
கிரில் திறக்கும் சத்தம் கேட்டதும் ஜார்ஜ் ஓடிவந்து வாலாட்டி நின்றான். தூரத்தில் போகும்படி விரட்டினேன். விடாமல் பின்னால் வந்தான். பார்லிஜி வாங்கிப்போடாமல் நகரமாட்டான். எல்லாம் ஹேமி பழக்கப்படுத்தியது. ஆனால், அன்று அவனைப் பொருட்படுத்தும் மனநிலையில் இல்லை.
இரவு முழுக்கத் தூக்கமில்லை. ஹேமிகுட்டிக்கு காய்ச்சல் விட்டும் இருமல் தணியவில்லை. இரவு முழுவதும் இருமிக்கொண்டிருந்தாள். மனது முழுக்க வீடு மாறுவது அதையொட்டித் தொடுத்து நிற்கும் வேலைகள் வந்து வந்துபோகும் ஹேமியின் காய்ச்சல் என்று ஒவ்வொன்றாய் ஓடிக்கொண்டிருந்தது. ஜார்ஜ் கறிக்கடை வரை தொடர்ந்து வந்துவிட்டான்.
கறி வெட்டிக்கொண்டிருந்தவன் புதியவனாய் இருந்தான். நல்ல உயரம். ஒல்லி. நெஞ்சைத் தொடும் தாடி. நீல நிறத்தில் ஒளிரும் கண்கள். தொங்கிக்கொண்டிருந்த ஆட்டுத்தொடையிலிருந்து பிஞ்சுக் குழந்தையைக் கையாளும் லாவகத்துடன் கறியை மெதுவாகப் பிரித்து எடுத்தான்.
ஜார்ஜ் விடாமல் என் பின்னால் நுகர்ந்துகொண்டு வாலாட்டி நின்றான். கையிலிருந்த கூடையைக் கடித்து இழுக்க, ஆத்திரத்தில் கூடையாலேயே அவனை அடித்தேன். கூடை கண்களில் பட்டிருக்க வேண்டும். கத்திக்கொண்டு வெளியில் ஓடியவன் வழியில் வந்துகொண்டிருந்த வண்டியின் குறுக்கே விழுந்தான். மேலும் அடி. வண்டியின் சக்கரம் அவன் காலில் ஏறி இறங்கியது. சுதாரிக்கும் முன் அங்கிருந்து கத்தியபடி ஓடிவிட்டான். என்னவோ போலாகிவிட்டது.
பொட்டலமிட்டுக் கொடுக்கப்பட்ட கறியை வாங்கியபோது எனது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அவன் தன் நீல நிறக் கண்களால் ஏறிட்டுப் பார்த்தான். லேசாகச் சிரித்தாற்போல் தெரிந்தது.
“பெயரென்ன” என்றேன்.
அவன் சொன்னான்.
எனக்கு யேசு என்றே கேட்டது.
இரண்டாம் பரிசு: கடிதங்கள்
எழுதியவர்: விஜய ராவணன்
இது அவன் எழுதும் இருபதாவது கடிதம். இல்லை அதற்கு மேலும் இருக்கலாம். இதையும் முன்பு எழுதிய கடிதங்களோடு அலமாரியின் இரண்டாம் அடுக்கிலேயே சேர்த்து வைத்தான். மிலாவுக்கு அனுப்புவதில் இன்னும் தயக்கம் போகவில்லை என்பதைக் காட்டிலும் கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கு ஜெர்மனிக்கு கடிதம் அனுப்ப நினைப்பது மடத்தனம். மீறி அனுப்ப முயன்று பிடிபட்டால் என்ன ஆகும் என்ற பயத்தை விட அந்தக் கடிதம் கிடைத்தும் அவள் பதில் அனுப்பாவிட்டால்… இருந்தும் தொடர்ந்து எழுதினான். மதில் சுவர் இரண்டு ஜெர்மனிக்கு நடுவில் வளர்ந்து நிற்கிறது அவளின் நினைவுகளும்.
மிலாவை முதல் முறை பார்த்த தருணத்திலிருந்து அவளது உதட்டின் வெம்மையை உணர்ந்த நொடியையும் போரின் கொடியக் கரங்களில் இருவரும் பிரிந்தபின்னான முடிவிலா இரவுகளைப் பற்றியும் பெர்லின் நகரில் ரஷிய அமெரிக்க பூட்ஸ் கால்களின் புழுதி படர்ந்த நாட்களைப் பற்றியும் தனக்குத் திருமணம் முடிந்ததையும் பெண் குழந்தைக்கு மிலா என்று பெயர் வைத்ததைப் பற்றியும் எழுதினான். எப்போதும் கறுப்பு மையையே பயன்படுத்தினான். அவன் அலமாரி கடிதங்களால் நிறைந்தது.
பழுப்பேறிப் போன தன் பழைய கடிதங்களை அவன் திரும்பப் படிக்க எத்தனித்ததில்லை. சுவர் விழுந்து இரு ஜெர்மனியும் இணைந்த பின்னான நாட்களிலும் மிலாவை நேரில் சென்று பார்க்கவுமில்லை. கடிதங்களை அனுப்பவுமில்லை. ஆனால் மனதில் தோன்றிய இந்த ஆசையைப் பற்றி மேலும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று மட்டும் முடிவு செய்தான்..
மூன்றாம் பரிசு : பிம்பம்
எழுதியவர்: சரத்குமார்
கண்ணாடியின் முன்நின்று மார்புகளைப் பிசையத் துவங்குகிறாள். இமை கொட்டாமல் தன் நிர்வாண பிம்பத்தைப் பார்த்திருக்கும் அவளின் உதடு லேசாகத் திறந்திருக்கிறது. கூடிக் கொண்டே போகும் பெருமூச்சில் நிலைக்கண்ணாடி சற்றே நடுங்கி அதிரத் தொடங்கியது. மிகு விசையோடு ஒருபக்க காம்பிலிருந்து பீய்ச்சியடித்த மார்ப்பால் கண்ணாடியில் பட்டவுடன் அதிர்வுகள் அடங்கிப்போயின. எங்கும் இருள் மதுவிடுதியைச் சூழ்ந்தது. விளக்குகள் அணைந்துவிட்ட அவ்விடுதியின் மூலையில் ஒருவன் தீக்குச்சியை உரசினான். தன் மேஜைக்கு முன்னிருந்த ஓவியம் அச்சிறு ஒளியில் விழிகளுக்கு அருகில் பிரமாண்டமாக நிற்பது அவனுக்கு குழப்பமூட்டியது. சற்றுமுன்பிருந்த கொடும் இரைச்சல் காணாமல் போய் மர்மமான அமைதி விடுதியில் நிலவுவதையும் அவன் உணர்ந்தான். உற்றுப்பார்க்கையில் ஓவியத்தில் சலனங்கள் உருவாகத் தொடங்கின. தீட்டப்பட்டிருந்த பெண்ணின் மார்புகள் விரிந்து கொண்டே இருப்பதைக் கண்டான்,அதன் ஒரு காம்பு தீக்குச்சியின் நெருப்பு வரை நீண்டு அதை விழுங்கியது. மற்றொரு காம்பு கீறிச் சென்ற அவன் கழுத்திலிருந்து இரத்தம் இடைவிடாது கொட்டத் தொடங்கியது. கண்விழிக்கையில் தானிருப்பது ஒரு தீவென்று அவளால் அவதானிக்க முடிந்தது.
கடல்நீரில் முழுக்க நனைந்திருந்தாலும் மார்பில் மட்டும் தீயின் எரிச்சல் தகித்தது. தீவுக்குள் சிறிது தூரம் நடந்தாள். மனித நடமாட்டமே தென்படவில்லை.சூழ்ந்திருந்த மணற்பரப்பில் ஒரு நண்டு குழிபறித்துக் கொண்டிருந்தது. வெகுநேரமாக அது நிறுத்தாமல் தோண்டியது. சற்றைக்கெல்லாம் ஒரு பெரும் பள்ளத்தைத் தோண்டி முடித்து அவ்விடம் விட்டு அகன்றது.
எழுந்து அப்பள்ளத்துக்குள் சென்று பார்த்தாள். அதற்குள் முகம் மட்டும் வெளித்தெரிய மணலுக்குள் புதையுண்டிருந்தது ஒரு பெண்ணுடல், அதன் உதடுகள் இலேசாகத் திறந்தபடி இருந்தன. அந்த அறையே கலைந்து கிடந்தது. சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஓவியங்கள் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தன. தரையில் உடைந்த பீங்கான் நீர்க்குவளையின் சில்லுகள். சிதறிக் கிடந்த தூக்க மாத்திரைகள்….
அவள் நிர்வாணமாக இறந்து கிடந்தாள். கண்களில் இன்னும் ஜீவகளை மறையவில்லை. தவழும் குழந்தையொன்று வீறிட்டுக் கொண்டே அவளருகே வந்து மார்பில் வாய்வைத்து உறிஞ்சியது. மெதுவாகக் கண்களை மூடினாள். மார்பில் திரண்டு வந்த பால் காம்பில் சுரக்காமல் உள்ளேயே கட்டி நின்றது. ஒட்டியிருந்த இதழ்கள் இலேசாகப் பிரிந்தன. மீண்டும் குழந்தை வீரிட்டபடி கண்ணாடியில் தெரியும் அவளின் பிம்பம் நோக்கித் தவழ்ந்து நகரத் தொடங்கியது….
ஆறுதல் பரிசு 1: ‘நாளும் கிழமையும்’
எழுதியவர் : ஞா.கலையரசி
“மேம்!, இன்னிக்குள்ள வேலையை முடிச்சி, டெலிவரி கொடுத்தாகணும்; முடியலேன்னா, நாளைக்கு வரவேண்டியிருக்கும்,” என்றார், மேனேஜர்.
“அச்சச்சோ! நாளைக்குத் தீபாவளியாச்சே! கண்டிப்பா வரமுடியாது சார்! தீபாவளிக்குக்கூட லீவில்லாம, அப்பிடியென்ன வேலைன்னு, வூட்டுக்காரர் திட்டுவார்; என்னைவிட ஒனக்கு ஆபீஸ்தான் முக்கியமான்னு, பொண்ணு பயங்கரமா சண்டைபோடுவா!” என்றாள், திவ்யா.
“ஏற்கெனவே ரெண்டுதடவை, தேதியை மாத்தியாச்சு. இனிமேலேயும் நீட்டிக்கமுடியாது. மேலிடத்துல செமகடுப்புல இருக்காங்க. இந்த வாரமும் குடுக்கலேன்னா, ஆர்டர் கேன்சலாயிடும்; அதோட நம்ம ரெண்டுபேரோட சீட்டையும் கிழிச்சிடுவாங்க. எனக்குந்தான் தீபாவளியைக் குடும்பத்தோட கொண்டாடணும்னு, ஆசையாயிருக்கு; என்ன பண்றது?”
தலைவிதியை நொந்தபடி, கடுப்புடன் இருக்கைக்கு வந்தமர்ந்த, திவ்யாவுக்குக் காலையில் வேலைக்காரி சொன்னது, நினைவுக்கு வந்தது.
“தீபாவளி அன்னிக்கு வரமாட்டேன்மா. பத்துப் பாத்திரத்தையெல்லாம் போட்டுவைங்க. அடுத்தநாள் வந்து, கழுவுறேன்,”
“தோ பாரு. அன்னிக்குத்தான் நெறையா வேலையிருக்கும். நீ வரலேன்னா, யாரு எல்லாத்தையும் செய்றது? நீ வந்தே ஆகணும்; இல்லேன்னா, கொடுத்த தீபாவளிபோனசை, அடுத்தமாச சம்பளத்துல புடிச்சிடுவேன்”.
“என்னம்மா? இவ்ளோ கறாராப் பேசுறீங்க? வயத்துப்பாட்டுக்குத்தான், நாள் கெழமைன்னு பார்க்காம, ஒழைச்சி ஓடாத்தேயறோம்; வருஷத்துல ஒருநாள், புள்ளைகுட்டிகளோட சேர்ந்து, பண்டிகை கொண்டாடக்கூட, எங்களுக்குக் கொடுப்பினையில்ல; அன்னிக்கு முழுக்கத் தான்கூடவே இருக்கணும்னு, சின்னக்குட்டி ஆசையாக் கேட்டுச்சி. கோவிச்சிக்காதீங்க, நாளைக்கு வந்துடறேன்”, என்று முந்தானையில் கண்களைத் துடைத்தபடி சென்றாள், தேவகி.
கைபேசியில் தேவகியிடம் “நீ கேட்டபடி, தீபாவளியைக் கொண்டாடிட்டு, மறுநாள் வந்தாப் போதும்”. என்றாள் திவ்யா.
“நிஜமாவாம்மா? ரொம்ப சந்தோஷம்; கோவத்துல சொல்லலியே? நன்றிம்மா!,” என்றாள் தேவகி.
ஆறுதல் பரிசு 2 : இலவசம்
எழுதியவர் : வே.சுப்பிரமணியன்
மனோகரிக்கு திடீரென்று பிரசவ வலி வந்து விட்டதாகவும் உடனே மருத்துவமனைக்குப் போக வேண்டுமென்றும் மறுமுனையிலிருந்து பேசினாள் பர்வதம் அக்கா .
திருமணம் ஆகி ஆறு வருடங்களுக்குப் பிறகு அப்போதுதான் கருவுற்றிருந்தாள் மனோகரி . மருத்துவர் அடுத்த வாரம்தான் பிரசவம் இருக்கும் என்று சொல்லியிருந்தார் . நல்லவேளை ஏற்கனவே வங்கியிலிருந்த சேமிப்பை எடுத்து இருபதாயிரம் வீட்டில்தான் வைத்திருந்தான் .
பணத்தையும் அக்கா தயாராக வைத்திருந்த பைகளையும் எடுத்துக் கொண்டு மனோகரியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அக்காவும் கூட வர மருத்துவமனைக்குப் பத்து நிமிடங்களில் வந்து விட்டான் .
மனோகரியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு பிரசவ அறைக்கு வெளியே நின்று கொண்டார்கள் . கால் மணி நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர் சோமுவை அழைத்தார் .
” அறுவைசிகிச்சை செய்தாக வேண்டியதிருக்கும் . எழுபதாயிரம் பக்கம் பணம் கட்ட வேண்டியதிருக்கும் . “
அக்காவிடம் இருந்தால் தந்திருப்பாள் . “ இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன் . ” சந்திரனைப் பார்க்கப் போனான் சோமு .
சந்திரனிடமும் கையில் பணமில்லை . “ வட்டி கட்டி மாளாது . ஆஸ்பத்திரி செலவு போகப் பிரசவத்திற்கு அப்புறமும் செலவு இருக்கும் . பேசாமல் ஆட்டோவை விற்று விடு . “
ஒரு லட்சம் பேசி கையில் ரொக்கத்தைக் கொடுத்த மனோகரனே அந்த ஆட்டோவிலேயே இருவரையும் மருத்துவமனையில் இறக்கி விட்டான் .
கையில் பணத்தோடு மருத்துவமனைக்குள் நுழையும் முன் வெளியேறிய ஆட்டோவைப் பார்த்தான் சோமு . “ பிரசவத்திற்கு இலவசம் “ என்ற வார்த்தைகள் அவனைப் பார்த்து சிரித்தன .
ஆறுதல் பரிசு 3 : பொம்மை
எழுதியவர் : பவித்ரா பாண்டியராஜூ
நள்ளிரவிலிருந்தே இலேசான தலைவலி இலேசானது என்றால் சிறிய சுத்தியலால் உச்சந்தலையில் ‘மட்‘டென்று அடிக்கும் அளவு தான்.. பல நேரங்களில் காதிற்கு ஒரு இஞ்ச் நேர் மேலே குத்தூசியால் தொடர்ந்து குத்தும் உணர்வை விட இது எவ்வளவோ பரவாயில்லைதான்.
நேற்றிலிருந்து தொடர்ந்த தலைவலி இப்போது கையை வளர்த்துக் கொண்டு சம்மட்டியால் ஓங்கி ஓங்கி அடிக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாய் இறங்கி டிரில்லிங் மிசினில் துளைபோடுகிறது. கொஞ்சம் கடப்பாரையை விட்டு ஆழமாய் தோண்டுகிறது.. எவ்வளவு நேரம்தான் இந்த அரை அடி மண்டையை அடித்து நொறுக்கித் தூர்வாரிக்கொண்டிருக்குமோ? தெரியவில்லை. மரண ஓலமாய் பீரிட்டு அழ வாயைத்திறக்கும் நொடி உமிழ்நீர் நுரையாய் வழிகிறது.. இது வேறு எப்போதும் சொல்ல வருவதைச் சொல்லவிடாது. சனியன்.
சற்று இடைவெளி
இயற்கை உபாதைகளை எல்லாம் பரபரவென அம்மாவின் உதவியுடன் முடித்து என்னை ஒரு பொம்மையைப்போல் அலங்கரித்து உட்கார வைத்துவிட்டாள் அம்மா. ஆம், அம்மா தான். எல்லாவற்றிற்கும் அம்மா தான். அப்பா எப்போதாவது தூங்கும் வேளைகளில் எட்டிப்பார்த்துவிட்டுப் போவார் .. தூங்கும் போது எட்டிப்பார்ப்பது எனக்கு எப்படித் தெரியும் என்கிறீரா? நான் தான் தூங்குவதே இல்லையே.. அய்யோ இந்த தலைவலி அதை மறந்து விட்டேன்.. ஆம், இதோ இப்போது வந்துவிடும் தலைவலி..
இதோ வந்துவிட்டது தலைவலி.
கொஞ்சம் கசங்கல் துணிகளைப் பாவாடைக்குள் திணிக்கிறாள்.. அம்மா.. ஏதேதோ.. திட்டிக்கொண்டே.. “தலைவலிதான் அம்மா.. வயிற்றில் வந்துவிட்டது” சொல்லத்தான் வரவில்லை இந்த எச்சில் வேறு வழிந்தபடியே இருக்கிறது. ‘கொஞ்சம் இந்த எச்சிலை துடையேன் மா.’
என்ன இது? இதுவரை நுகர்ந்திடாத ஒரு நாற்றம்.. சன்னலைத் திறந்தால் தோட்டத்தில் தெரியும் குத்துச்செடி அது பெயர்கூட என்னவோதான்.. ம்ம்ம் கற்றாழை. அதை ஒடித்தால் வருமே அப்படி ஒரு நாற்றம்.
அச்சோ பாவம்.. அந்தத் துணிகளுக்கு அடிபட்டு விட்டது போலும்.. ஒரே ரத்தம்..
ஏதேதோ உறவுகள் பாட்டியும் வருகிறாள்.. இந்த பாட்டி எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.. சாப்பாடு ஊட்டச்சொன்னால் எப்போது பார்த்தாலும் எதையாவது கூறி அழுதுகொண்டே இருப்பாள்.. இல்லையென்றால் எரிந்து விழுந்துகொண்டே இருப்பாள்.. இப்போது இவள் ஏன் வருகிறாள்..
இவர்களுக்கு ஏதாவது என்னைப்பற்றி ரகசியமாகப் பேசவேண்டும் என்றால் என் தலைக்குப்பின்னால் போய் தான் பேசுவார்கள்.
ஏதோ ஒரு பையை எடுக்க வேண்டுமாம் அம்மா அழுதுகொண்டே சொல்கிறாள். பாட்டியும் அப்பாவும் அம்மாவை சமாதானப்படுத்துகிறார்கள். உங்களுக்கு எல்லாம் ஓர் ரகசியம் சொல்லட்டுமா? அது ரொம்ப நகைச்சுவையாக இருக்கும்.. ஆமாம்.. உண்மையாகவே நீங்கள் ரொம்ப சிரிப்பீர்கள்..
எனக்குக் காது நன்றாகவே கேட்கும் தலையும் கையும் காலும் தான் திருப்ப முடியாது.
ஆறுதல் பரிசு 4 :கருப்புசாமியும் நானும்
எழுதியவர் :மகிழ்ச்சி ஆ.ராம்குமார்
“யப்போ….”
“என்னடா கத்துர சொல்லு.”
“ஆடு குட்டி போட்டுருக்குப்பா வா. ”
“சரி, போ வர.”
“சீக்கிரம் வாப்போ..ம்..கெடா குட்டி போட்டுருக்கு.”
“சரி சும்மா வாடா பேசிகிட்டே.”
”அப்பா நா அத எப்படி கூப்புடனும்”
. “அத வா, போ, இந்தேரினு கத்துனா போதும்டா”
“ நீ லூசுப்பா, உன்ன யாராவது வா, போ, இந்தேரினு கூப்டா திரும்பி பேசுவியா?…”
”டேய் அது ஆடுடா .அதுக்கு என்ன தெரியும்?”
“ நீ தான சொன்ன ஒருத்தருக்கு எதாவது தெரிலனா, அத நமக்கு சாதகமா வச்சி யாமாத்தக் கூடாதுனு. அதா, நா ஆட்டுக்கு பேர் வக்கப் போர …ம் …”
”எதோ பன்னு. என்ன பேர்டா…?”
“இருப்பா யோசிக்கனும்ல. கருப்புசாமி எப்படி இருக்கு பேரு.?”
“அது நம்ம குடியசாமி பேருடா.”
“இருக்கட்டும்ப்பா. பெருசானா சாமிக்கி வெட்டிப்புடுவ, அதா இந்த பேரு வச்ச. இப்ப இத குடியசாமிக்கு வெட்டுனா, சாமியவே வெட்ர மாதிரி தான?”
“ சரி போ…
” கருப்புசாமிய பாத்துக்ரது தா என் வேல.. ”
“டேய் ,பள்ளிக் கூடம் ”
“அங்க எவ போவாப்பா இப்ப. அஞ்சாவுதுக்கு எதோ பெரிய பரீட்சையா அதா இனி நா போகல…”
“டேய் போய் படிடா..பள்ளிக்கூடத்துக்கு போடா… ”
சில நாள் பள்ளிக்கூடமும் கருப்புசாமியுமாக வாழ்க்கைய கழிச்சா…யப்போ கருப்புசாமிய சாமிக்கு வேன்டிவுடாதப்பா அவ நம்பக்கூடவே இருக்கட்டும் .
” சரிடா.. ”
கொஞ்ச நாள் கருப்புசாமி வளந்துட்டான். எப்படி இவன் வளந்த ..யப்பாகருப்புசாமி வளந்துட்டான் நா மட்டும் ஏ வளர்ல. ”
”டேய் அது ஆடுடா.”
“யப்போய் ஆடு சொல்லாதப்பா…”
“சரி, கருப்புசாமிலா ஒரு வருசத்துல பெரியாள வளந்துடுவான்டா. அவங்க சனம்லா அப்படிதா..”
“ம்.. நா எப்ப வளர்வ.. வுடுப்பா
”வளந்தவல்லா என்ன செஞ்சு கிழிச்சா… போடா போய் சாப்ட்டு..கருப்புசாமிக்கு புல்லப் போடு”னு சொல்லிட்டு அப்பா காட்டுக்கு போய்ட்டாரு.
ரெண்டு நாள்ல உடம்பு சரியில்லாம ஆயிடிச்சு. எனக்குப் பேச்சு இல்ல.. கண்ணத்தொரக்க முடியல..எங்கம்மாவும் அப்பாவும், ஆஸ்பத்திரிக்கும், கோயிலுக்கும் அலைஞ்சு ஓய்ஞ்சு.. குடியசாமி கோவிலுக்குப் போய் கிடா வெட்டிரனு வேண்டிக்கிட்டு வந்தாங்க. கடைசி ஆஸ்பத்திரிக்கு அலைஞ்சு ஒய்ஞ்சு போய்டாங்க…
ஒரு வேலயா சரியாச்சு… கொஞ்சு நாள் கழிச்சு எனக்குக் காது குத்த எங்க மாமா, பங்காளிங்க, நாங்க எல்லாரும் போனோம் …. கூட கருப்புசாமியவும் கூட்டு போனோம். எனக்கு அப்ப தெரியாது, அது நடக்கும்னு, அந்த கொடும நடக்கும்னு… எனக்கு மாலை போட்ட மாதிரி அவனுக்கும் போட்டாங்க.. நானும் அவனும் சந்தோசத்துல இருந்தோம் ..
எனக்குக் காது குத்துனாங்க.. அவனுக்குப் பொங்கச் சோறு வச்சி பொட்டு வச்சாங்க.. அப்பத் தெரியாது அது தா எனக்கும் அவனுக்குமான கடைசி சந்திப்புனு … அவன் போவ மறுத்தும்.. வலுக்கட்டாயமா இழுத்திப்போனாங்க.. என்ன எங்கப்பா இழுத்து புடிச்சுகிட்டாரு.
நான் கத்த கத்த கருப்புசாமி கதறக்கதற அவன வெட்டி துண்டாக்கிட்டாங்க..கொஞ்ச நேரத்துல கொழம்பாச்சு….கறியும் சோறுமா வயித்துக்குள்ள போச்சு…. எங்க குடியசாமி பாத்துக்கிட்டுதா இருந்துது…
கருப்புசாமி சாவுரத கருப்புசாமி பாத்துச்சு கடைசி வர ஒன்னு பன்ன முடியல. இந்த மனுசனுவ செயல… நானும் எங்க குடியசாமியும் கறிச்சோத்துக்கு பின்பு தனிமைப்படுத்தப்பட்டோம்….
ஆறுதல் பரிசு 5: சிறைகள்
எழுதியவர் : கமலக்கண்ணன்
சந்திற்குள் இருந்த புவனா மெஸ்ஸில் அனைவரும் என்னையே ஏளனமாய்ப் பார்ப்பதாகத் தோன்றியதும், கூனிக் குறுகியதற்கு இதற்குமுன் நான் கைதியாக இருந்ததே இல்லை என்பதும், அப்படி கற்பனைகூடச் செய்ததில்லை என்பதுமே காரணம். உலகில் எவரும் செய்யாத பிழையொன்றும் செய்துவிடவில்லையே. பட்டா மாற்றம் செய்ய ஐந்தாயிரம் கேட்டேன்! அந்த வெளங்காதவன் இப்படி விழிப்புத்துறையில் மாட்டிவிட்டதெல்லாம் ரொம்பக் கொடுமை.
பணத்தை உள்பாக்கெட்டில் வைத்ததுதான், அலுவலகத்தின் வெளியே கிறுக்கனாட்டம் தலைசொரிந்து கொண்டிருந்த இருவர் திடுமென ஓடிவந்து என் கைகளை வானம் பார்க்க அழுத்திப் பிடித்து மேசையில் வைத்தனர். நான் திமிரப் பார்த்ததும் ‘டேய், போலீஸ்டா நாங்க. ஒழுங்கா இருக்கியா இல்ல பொளேர்நு ஒன்னு கொடுக்கவா’ என்று சொன்ன விதம் என் உள்ளங்கை முதல் உடலெங்கும் வியர்த்துச் சிலிர்த்திட வைத்துவிட்டது. சிறு நடுக்கத்தைக் கட்டுப்படுத்தியவாறே ‘சார் நான் யாரையும் டிமாண்ட் பண்றதில்ல, கொடுத்தாதான் வாங்குவேன்’ என்றதும் ‘கொடுத்தா மட்டும் ஏன் வாங்குற?’ என்று படாரென அறைந்தே விட்டாற்போல் பதில் வந்தது.
பேசுவதால் எந்தப் பயனுமில்லை என்பது தெளிவானது. திடுதிடுமெனெ அலுவலகத்திற்குள் ஒரு கூட்டமே நுழைந்துவிட்டிருந்தது. அதிகாரிகளும், சாட்சிகளுமாகத்தானிருக்கும்! என் கைகள், வேதி தடவப்பட்ட ரூபாய்தாள், சட்டை என அத்தனையும் ஆய்விற்குட்படுத்தப்பட்டு, நடந்தவை அனைத்தும் வீடியோ பதிவிடப்பட்டது. நானென்ன எனக்காகவா வாங்குகிறேன், மேலிருக்கும் எல்லோருக்கும் தருவதற்காக வாங்குகிறேன் என்று சொன்னதை, தான் குறித்துக் கொள்வதாக மட்டும் ஒரு பரிதாப பார்வையுடனான அதிகாரி வாக்களித்தார்.
எனது துறையின் அத்தனை அதிகாரிகளையும் மாட்டிவிட வேண்டுமென்ற கோபக்கொந்தளிப்பின் இடையிடையே, சினிமாத்தனமாக, போலிஸிடமிருந்து துப்பாக்கியை உருவி, என்னை மாட்டிவிட்டவனைச் சுட்டுப் பொசுக்குவதாகக் கற்பனை செய்து கொள்வது என்னைக் கொஞ்சம் தணித்தது. அலுவலகத்திலிருந்து வெளியேறுகையில் ஊரே திரண்டிருந்தது. ஒரு டவலை எனக்களித்து வேண்டுமென்றால் முகத்தை மூடிக்கொள்ளலாம் என்றார் ஒருவர். முகத்தை மூடிக்கொண்டவாறே, மூடினால் மட்டுமென்ன என் புகைப்படம் நாளிதழில் வராமலா போய்விடுமென்று நினைத்துக் கொண்டேன்.
அரைகுறையாக உண்டுவிட்டு கைகழுவச் செல்கையில், என்னைத் தொடர்ந்து இருவர் வருவது, பயங்கர எரிச்சலைத் தந்தது. பாத்ரூமிற்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்ட போது, வெளியே விழிப்புத் துறையின் பேச்சு சத்தம் கேட்டதும்தான் மனசே உடைந்து போனது. ‘இந்த மாசமே ட்ரான்ஸ்ஃபர் வேணும் நு கறாரா சொல்லிட்டேன். அப்பறம் என்னத்துக்கு சொளையா அஞ்சி லட்சம் வாங்குனானாம்.’
தேர்வு செய்யப்பெற்ற குறுங்கதைகள் அனைத்தும் பிரமாதம். இயலாமை ஒன்றே வெவ்வேறு வடிவங்களில் அனைத்துக் கதைகளிலும் அடிநாதமாக இருந்து மனம் நெகிழ்த்துகிறது. பரிசு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.