தேவதேவன் கவிதைகள்

  • பெருவெளியில்

தரையும் கூரையும்
நான்கு சுவர்களுமில்லாத
பெருவெளியில்
அழிந்துபோகக்கூடிய
தரையும் கூரையும் நான்கு சுவர்களுமாய் ஒரு வீடு
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஆங்கே தவழ்வதோ
அழியாப் பெருவெளியைத்
தாயகமாகக் கொண்டதாம்
அன்பு கருணை அறம் மெய்மை
என ஒளிரும் தேவதைகள்!


  • சின்னஞ் சிறிய மலர்

குத்தவைத்துக்
குனிந்து பார்க்கவைத்தது அவனை
இத்துணை அழகிய பூமியையும்
இத்துணை பெரிய வானத்தையும்
சொந்தமாக்கிக்கொண்ட புன்னகையுடன்
புல்லில் ஒரு சின்னஞ் சிறிய மலர்
பெண்ணின் மூக்குத்தி அளவேயானது

அவனோ தனது சக மனிதர்களாலேயே
தாழ்த்தப்பட்ட ஒருவன்
எல்லையற்ற துயர்களும் வலிகளுமானவன்
அவனுக்குத் தன் ஊரும் சொந்தமில்லை
இந்த பூமியும் சொந்தமில்லை.
இந்த வானமும் சொந்தமில்லை.

எல்லாம் ஒரு கணம் முன்புதான்.


  • பாதையில் கிடந்த மலர்

ஒரு மலர்க்கரம் நீண்டு
காதலின்பமும் பிரிவுத் துயரும் கசிய
செடியிலிருந்து தன்னைக் கிள்ளிப்
பறித்தெடுக்கும் போதில்லாத விநோதஒலி
அவள் கூந்தலிலிருந்து தவறித்
தரையில் விழுந்துவிட்ட போது
அலறி அதிர்ந்தது.

பாதையில் கிடந்த அந்த மலரைக்
குனிந்து பற்றி எடுத்தவன்
விரல்களை அடைந்ததும்
ஆ! இவன்தான்! இவன்தான்! என
தன் காதற் கடவுளையே கண்டடைந்துவிட்ட
பெருங்களிப்பில் ஒளிர்ந்தது.

அவன் விரல்களில்தான் அந்த மலர்
அவன் குருதியில்தான் பூத்ததுபோல்
எத்துணை ஒட்டுணர்வுடன்!

ஆனால் அந்த மனிதனோ
வாசனையில் கலந்திருந்த
அந்த மலர்க்கூந்தல் அழகியைத் தேடியே
கனவிலும் கற்பனையிலுமாய்த்
தன் வாணாளை வீணடித்துக்கொண்டிருப்பானோ
இரங்கத்தக்க மானுடனாய்?


  • ஒருபாலுயிரியாய்…

இரங்கத்தக்க என் ஆண்டவரே
தவறாகவே
நீர் ஆதாமைப் படைப்பதற்கு முன்பே
உம்மை நீர் நன்றாய்
அறிந்திருக்க வேண்டாமா?
எல்லாத் தீமைகளும்
உம்மிடமிருந்துதானே
ஊற்றெடுத்துப் பெருகிவிட்டன?

அதிகாரமும் அச்சமும் பேராசைகளும் கொண்டு
பிற எவ்வுயிர்களுமே விளைவித்திராத
ஒரு பெருக்கம் – வீக்கம் –
உம்மிடம் மட்டுமே – மன்னிக்கவும் –
நம்மிடம் மட்டுமே
எத்துணை பெரிய அழிவுச்சக்தியாய்த்
திரண்டுவிட்டது!

தானே பெருகிக்கொள்ளும்
ஒருபாலுயிரியாய்
ஒரு பெண்ணைமட்டுமே நீர் படைத்திருந்தால்
எத்துணை நலமும் அன்பும் அழகும்
ஆனந்தமும் கூடியிருக்கும் இப்புவனத்தில்!
இயற்கைப் பெருவெளிதான் நமக்கு
என்ன குறைவைத்திருக்கிறது?
அளவோடே பெருகி எப்படி வாழ்ந்திருக்கலாம்!

நம் குழந்தைமைக்கும் முதுமைக்கும்
இடையேயுள்ள இளமை என்பது
போட்டியும் பொறாமையும் புலனின்பங்களும்
இன்பமும் துன்பமும் வலியும் வேதனைகளுமே
கொந்தளிக்கும் போராட்டமாக இருந்திருக்குமா?
இயற்கைக்கும் மனிதனுக்குமுள்ள
உறவும் உறவின்பமும்தான் சாமான்யமானதா?

எத்துணை பெரிய முட்டாள்தனத்தைப் பண்ணிவிட்டீர்.
சரி; இனிமேல் நம் தவறுகளையெல்லாம்
களைந்துவிடுவோம்
இனி ஒரு விதி செய்வோம்
இந்த மனிதப்படைப்பை முற்றுமாய் அழித்துவிட்டு
ஓருயிரியாய் ஒரு பெண்ணைமட்டுமே படையும்.
அப்புறம்
காமுகனாக அன்றி
ஒரு காதலியாக, தாயாக, குழந்தையாக
புதிய கடவுளாகக்கூட அன்றி
சும்மா, காதலாக மட்டுமே
ஒதுங்கி நின்றுபாரும்
கரையேறாத கோபியர்களாய்க்
குளித்துக்கொண்டேயிருக்கும்
இந்த ஏவாள்களை நீர்
பார்த்துக்கொண்டேயிருந்தால் போதும்
அங்கிருந்தே எல்லாம்
தாமே பிறந்து நடக்கும்.


  • இரட்டை

ஒரே இதயமுடைய இரு கைகளில்
எப்படி இருக்க முடியும்
ஒன்று கண்ணியமாகவும்
பிறிதொன்று கொடூரமாகவும்?

இரட்டை இதயம்
இரட்டையை மய்யமாகக் கொண்டதால்
ஒன்றோடு ஒன்று
ஒருக்காலும் இணையாமலேயே
இணைந்தபடி
நெருங்கும் ஒருமைகளையெல்லாம்
கத்தரித்துக் கத்தரித்து அவர்கள்
உண்டாக்குவதெல்லாம் இரட்டை அல்லவா?
அவர்கள் இருக்கவேண்டிய இடம்தவறி
இருக்குமிடமெல்லாம் நஞ்சுவிளையும் நிலமல்லவா?

நான் வேறு நீ வேறு என்பதில்
அன்பு இல்லை; உண்மையும் இல்லையே.
நான் உன்னை வழிபடுவதிலும் விலக்கி வைத்தலிலும்
நீ என்னை அணைப்பதிலும் உதைப்பதிலும்
அன்பு இல்லை; உண்மையும் இல்லையே.
பொய்மையிலேயே
நாம் எவ்வளவு காலங்கள்தாம்
வாழ்ந்துகொண்டேயிருப்பது இந்த வாழ்வை?

நமது பக்தியும் காதலும்
அன்பின் கனிகளில்லை என்பதுதான்
எத்துணை பெரிய அவலம்?

அறத்தையும் ஒழுங்கையும்
சட்டத்தால்மட்டுமே அறிந்திருப்பதும்
அன்பில்லாத எந்த ஒரு பொருளுமே
விஷமாகக்கூடும் என்பதறியாததும்தான்
எத்துணை பெரிய அவலம்?

நமது வாழ்வெல்லாம் காலம்காலமாய்
நம் அறியாமைக்குள் மூழ்கிக்கிடக்கும்
நீடித்த சச்சரவுகளுடனும் அமைதியின்மையுடனும்
பெரும்பெரும் போர்களுடனும்
துக்கங்களுடனும் வலிகளுடனும்
தொடர்ந்துகொண்டே இருப்பதும்தான்
எத்துணை பெரிய அவலம்?


  • உலகடங்கு

இத்துணை எளிமையானதும்
இத்துணை கடினமானதும்
நாம் அடையவேண்டியதும்
அடைய முடியாதிருப்பதும்
கருணையினால் மட்டுமே
வழங்கப்படும் கொடையாக இருப்பதும்
நாம் கையகப்படுத்திக்கொள்ள முடியாத
களஞ்சியமாக இருப்பதுமாகிவிட்ட வாழ்வை
நமக்கு இயற்றிவிடத்தானா
முற்றுறுதிமிக்க கண்டிப்புடன்
நம்மை அரட்டி மிரட்டி
அறிவுறுத்திக்கொண்டிருக்கிறது இந்நோய்?

மனிதர்களிடையேயுள்ள
எல்லாச் சுவர்களையும்
உடைத்து நொறுக்கிவிட்டது அது.
மனிதனைத் தனித்திருக்கச் சொல்கிறது அது.
தனித்திருப்பதற்காகவேதான்
விலகியிருக்கச் சொல்கிறது
ஒரு மனிதனிடமுள்ள நோய்
மற்றவனிடம் தொற்றிக்கொள்ளாதிருக்கவும்
தனித்திருந்தே உணரவேண்டியவை பற்றியும்
செயல்பட வேண்டியவை பற்றியும்
தனித்திருத்தலே முழுமையோடிருத்தல் என்றும்
அறைகிறது அது.

மனிதர்கள் ஒரு குடும்பம் என்பதை
இத்துணை வலுவாக உணர்த்திவிட்ட
ஒரு பெருஞ்சொல், பெருஞ்செயல்,
உலகம் இதுவரை கண்டிருக்காத பெருங்குரல்!

மனிதர்கள் தங்கள் ஒரே லட்சியத்தையும்
வாழ்வையும் இன்றே இப்பொழுதே
கண்டேயாக வேண்டுமென உறுமும்
பெரும்போர்க்குரல்!

சமத்துவமின்மைகளால் அறமின்மைகளால்
அன்பின்மைகளால் மூடநம்பிக்கைகளால்
அளவுக்குமீறிய பொழுதுபோக்காடல்களால்
படைப்புணர்வை இழக்கச்செய்துவிடும்
அதிநுகர்ச்சிகளால்
சீர்மையற்ற இவ்வுலகப் படைப்பின்
காரணியான தங்கள் அகத்தை
ஆய்ந்துகண்டு உய்வதற்குத்தானே
தனிமைச் சிறைக்குள்ளடைத்திருக்கிறது அது?


-தேவதேவன் 

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.