தாழைப் பள்ளத்திலிருந்து மேலேறி ‘ல‘ வளைவு வரவும் கனத்த வேப்பமரத்தடியில் முருகேசன் இல்லை என்பது தெரிந்தது. அவன் வந்திருக்கக்கூடாது என்றுதான் வேகவேகமாக நைலான் சாக்குப் பையைக் கக்கத்தில் சுருட்டி வைத்தபடி வந்தான் பூமாரி. சந்தோசம் தோன்ற உடம்பை ஒரு ஆட்டு ஆட்டிக்கொண்டு நடையின் வேகத்தைக் குறைத்தான். ஒருவேளை இந்த நேரத்திற்கும் முன்பே வந்து தடவிக்கொண்டு போய்விட்டானோ என்று சந்தேகமும் வந்தது. சிறிய தார்ச்சாலையின் இருபுறமும் மழைத்துளிகள் பொட்டு பொட்டாக விழுந்து காய்ந்து கிடக்கின்றது. முன் இரவு இடிமின்னலோடு வந்த மழை மறுபடியும் ஏமாற்றி விட்டது. வேட்டி நனையும் மழை விழுந்துகூட எட்டு மாதத்திற்கு மேலாகிவிட்டது.
நடுச்சாலையில் புரட்டிப்போட்ட முள்தொட்டை இழுத்து சாலையோரம் போட்டுவிட்டு வேப்பமரத்திற்கு நெருங்கி வந்தான். பல வருடங்களுக்கு முன் வெட்டிய கொப்புகளில் எல்லாம் பருத்த பிரிமணைபோல் மரக்கூழ் பிதுக்கம் வட்டமாகத் திரண்டு தோலாகி மூடியிருக்கின்றன. குப்பென வேப்பம் பூவாசம் மூக்கைத் துளைத்தது. பூக்க ஆரம்பித்து நான்கைந்து நாட்கள்தான் ஆகின்றது.
மரத்தின் வயதிற்கு ஒத்து , வித்துக்கு ஒத்து, மண்வளத்திற்கு ஒத்து இந்த மாதம் முழுக்க முன்பின்னாகப் பூக்கும். பழைய மரம் என்பதால் முன்னதாகப் பூத்துவிட்டது. லேசாக வந்துபோன மழைக்கும் காற்றுக்கும் தரையெல்லாம் சின்ன வெண்பூக்கள் உதிர்ந்து மணக்கிறது. முந்தினநாள் உதிர்ந்த பூக்கள் மஞ்சளாக வதங்கி நிறம் மாறிக்கொண்டிருக்கின்றன. மரம் தன் பிரமாண்டமான தலையில் தனக்குத்தானே லட்சோபலட்ச வெள்ளைப் பூக்களை வான்வெள்ளிகளாய்ச் சூடிக்கொண்டு பளிச்சென நிற்கிறது.
மரத்தின் இடதுபக்கம் பிரியும் வண்டித்தடத்தில் ஏழெட்டு பாட்டில்கள் கிடந்தன. அதிலும் நான்கு பீர் பாட்டில்கள்; நான்கு குவாட்டர் பாட்டில்கள். நிறுத்திவைத்தபடி ஒரு பாட்டிலும் மற்ற மூன்றும் பக்கத்தில் தெற்கு வடக்காகத் திரும்பிக் கிடக்கின்றன. மூடிகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், கொண்டுவந்த தின்பண்டக் காகிதங்கள், பாலித்தீன்பைகள், காலியான தண்ணீர் பாக்கட் பைகள் எல்லாம் அங்கங்கு சிதறிக் கிடக்கின்றன. கருவேல மரத்தின் தூரடியில் கொஞ்சம் நிறம் மங்கியும் கிடந்தன. பச்சைக் கலர் கால்ஸ்பெர்க் பீர் பாட்டில்களை ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டான். முதன்முதலில் பச்சை பாட்டில்கள் கண்ணில் தட்டுப்பட்டுவிட்டால் அன்று நல்ல வேட்டை கிடைக்கும் என்று மற்றவர்களைப்போல நம்பிக்கையும் உண்டு. நான்காவது பாட்டிலை கவனமாகத்தான் போட்டான். பாட்டிலோடு மோதி டடங் ஒலி வந்தது.
சிலைமான் வசந்தா ஓட்டலை ஒட்டி இருக்கும். மீசைப்பாண்டி இரும்புக் கடையில் போட்டால் ஜோடி மூன்று ரூபாய்க்கும் மணலூர் வைரவன் பழைய பேப்பர் கடையில் போட்டால் ஜோடி இரண்டு ரூபாய்க்கும் வாங்குகிறார்கள். மற்ற குவாட்டர் , ஆப் பாட்டில்கள் இரண்டு ரூபாய்க்குத்தான் போகின்றன. தூர்பெருத்து கழுத்து நீண்ட பக்காடி பாட்டில்களை எடுத்துப் போட்டு சாக்கைத் தூக்கினான். டடங் டடங் டடங் கென ஒலி வந்தது.
கால்சாக்கு நிரம்பிவிட்டால் நடக்கும்போது இவ்வளவு உரசல் ஓலி வராது. லேசாக உரசினாலே கண்ணாடி மோதி உடைந்து விடுவதுபோல கணகணக்கின்றன. உடைந்துபோகுமோ என்று நினைத்தாலும் இந்த இடிப்புக்கெல்லாம் உடைந்துவிடாது கல்லூரிப் பசங்கள் வாங்கிவந்து அடித்திருக்கக்கூடும். மானிட்டர், ஓரகே, ஓல்டுமங் பாட்டில்கள் என்றால் லோடுமேன்கள், தேங்காய்மட்டை உரிப்பவர்கள் சாப்பிட்டதாக இருக்கும். பிரிட்டிஷ் பீர், விஎக்ஸ்ஒ, லாமார்ட்டின் சரக்குகளை பைனான்ஸ் விடுபவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறான். அவரவர் தகுதிக்கு ஏற்ப அடித்த பாட்டில்கள் கிடக்கும்.
காலையிலேயே வெயில் வேக்காடைக் கிளப்புகிறது. வண்டித்தடத்தின் இரண்டுபுறமும் சீமைக்கருவேல மரங்கள் ஒன்றை ஒன்று தொட்டுப் பின்னிக் கிடக்கின்றன. ஏழெட்டு வருடங்கள் முன்புவரை கூட இங்கே ஒரு போக நெல் விளைந்தது. இப்போதெல்லாம் வண்டித்தடத்தில் மாட்டுவண்டிகள் செல்வதில்லை. டூவீலர், சைக்கிள்கள்தான் செல்கின்றன. நீலக்கழுத்து மின்ன நீண்ட தோகையோடு ஆண்மயில் வண்டித்தடத்தின் குறுக்காகக் கடந்து புதருக்குள் ஓடியது. அது இந்தச் சீமைக்கருவேலப் புதருக்குள் வளைந்து வளைந்து செல்லும் இந்த ஒற்றையடிப்பாதை வழியாகத்தான் வந்திருக்கிறது. இந்த ஒற்றையடிப்பாதையில் குனிந்து சாய்ந்து முள்ளில் சிக்காமல் அந்தப் பக்கம் போனால் காளவாசல் வரும்.
நல்லூர் சின்னக்குட்டையை நெருங்க நெருங்க சத்தமாக இருந்தது. பாட்டில்கள் குலுங்க வேகமாக நடந்தான். கரையிலிருந்து, இறங்கி மண்பாதையில் ஆறு பேர் திரும்பித் திரும்பி பார்த்துச் சிரித்துக்கொண்டு வேகமாகச் சென்றார்கள். சரக்கு அடித்துவிட்டால் திரும்பிப் போகும்போது காளியண்ணன் அந்த இடத்தையே படுகலகலப்பாக்கி விடுவார். மற்றொருவன் கைலி வேட்டியை மடித்துக் கட்டியபடி கரையில் நின்று ஒரு நிமிடம் குட்டைக்குள்ளே பார்த்து பின் இறங்கி நடந்தான்.
குடிநீருக்காகப் போட்ட மோட்டார் அறைப்பக்கம் போலிஸ் நிற்பது தெரிந்தது. பூமாரி தயங்கி நின்றான். சிவக்கொழுந்து போலீசுடன் வாக்குவாதம் செய்கிறான். சுவர் ஓரம் முருகேசன் நிற்கிறான். கரிக்கட்டியால் எழுதிய சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் , தல, தளபதி, பெயர்கள் கோணல் மாணலாக இருக்கின்றன. எங்கெங்கோ சேகரித்த பாட்டில்கள் கால்பங்கு சாக்கு நிரம்ப முருகேசன் பக்கம் கிடக்கிறது. இங்கு பார்ப்பதும் காலடியில் எதையோ எத்திக்கொண்டு இரண்டு எட்டு நடந்தபடியும் இருக்கிறான். போலிசின் டூவீலர் நிற்கிறது. பூமாரி மெல்ல நடந்தான். மணி ஒன்பதிருக்கும். சுள்ளென அடிக்கிறது வெயில்.
”சார், பத்து நாளுக்கு முன்னாடிதான சார் பதினைந்தாயிரம் கட்டிட்டு வந்தேன். இப்ப பத்தாயிரம் கொடுன்னா எப்படி சார். எப்படி சார் தொழில் நடத்தறது?”
”நீ நாலெடத்தில ஆள்போட்டு பண்றது தெரியாதா? ரெண்டெடத்தில தான் விக்கிறேன்னு சொல்லிட்டு நாலெடத்தில விக்கறயில்ல. ஐயாவுக்கு தெரிஞ்சா நீ மாசாமாசம் எவ்வளவு கப்பம் கட்டணும்னு தெரியுமில்ல?”
”சார், இங்கயும் வடகம்பாலத்தில மட்டும்தான் செய்றேன். நாலு வாய்க்காலிலயும், ஆலமர முக்கிலயும் பரமு தனியாச் செய்றான் சார். ”
”அவனே சொல்றானே சிவக்கொழுந்துக்கு சம்பளத்துக்கு இருக்கேனு ”
”சார், அவன் புள்ளகுட்டிக்காரன். நான் தனியாப் பாத்துக்கிடுறேன்னு ஐயாகிட்ட சொல்லி பத்த கட்டிட்டு வந்திருக்கான் சார்.”
”கட்டுறேன்னு சொன்னான். கட்டுனானா?”
”கட்டிட்டு வந்திட்டேன்னு போன செவ்வாய்க்கிழமை சொன்னான் சார்”
”முந்தாநேத்து மடக்கிப் பிடிச்சப்ப என்னால மாச மாசம் கட்ட முடியாது சார். நான் சம்பளத்துக்குத்தான் சார் இருக்கேன்னு சொல்லிட்டான்.”
”சரி சார் அவன நேரா வச்சு கேப்போம்.”
”நீ என்ன பெரிய மமதங்கொட்டையா? ஒங்கள ஒன்னா வச்சு பஞ்சாயத்த தீக்க. நீ இப்ப பத்தாயிரத்த கட்டு இல்ல இங்க எவனும் தொழில் பண்ணக்கூடாது. இந்த நிமிசமே எல்லா நாய்களையும் கள்ளமார்க்கட் கேசில தூக்கி உள்ள போட்டிருவோம்.”
”சார்,முறையா வந்து ஸ்டேசன்ல முதல்ல முப்பதாயிரத்த கட்டிட்டுதான் சார் தொழில் தொடங்குனேன். இது கடவுளுக்கே அடுக்காது சார். அன்னிக்கு நீங்களும் இருந்தீங்க.
இப்பிடி பத்து நாளைக்கு, பதினைந்து நாளைக்கு ஒரு வாட்டி வந்து புடுங்குனா எப்படி சார். மனசாட்சி வேணாமா சார்?”
”நீ என்ன கைகாசப் போட்டா தரப்போற? பாட்டிலுக்கு 20 , 25 ன்னு ஏத்தி வச்சிதான விக்கிற. விடிய ஆறு மணிக்கி தொடங்கிர்றயல்ல. பத்து மணிக்குத்தான் கடைய தொறக்குறாங்க. நாலு மணிநேரம். எத்தன பாட்டில் விக்கிது அதுவும் இப்ப ஹைவேஸ்ல இருந்த ரெண்டு கடைய எடுத்துட்டாங்க. வேற எடத்தில அமைக்கிற வரைக்கும் நீ எவ்வளவு சம்பாதிப்பேன்னு எங்களுக்குத் தெரியாதா? பத்து கட்டு இல்லையன்னா தொழில விட்டுட்டு ஓடிப்போயிரு“”
”சார், இப்ப ரெண்டு ரூவாய் வாங்கிட்டீங்கள்ல அதுக்குமேல முடியாதுங்க சார், வேணுமன்னா அடுத்த மாசம் ஒரு அஞ்சுரூபா சேர்த்து தர்றேன். பைனான்சில எடுத்துப் போட்டுத்தான் சார் தொழில் பண்றேன். நீங்களே பண்ணச் சொல்லிட்டு, இப்ப அரி அரின்னு அரிக்கிறீங்களே சார். இது என்ன சார் பொழப்பு. இதுக்கு நீங்களே ஆள்போட்டு செய்யுங்க சார். ”
”அப்படியா? சரி நாங்களே போட்டு செஞ்சுக்கிறோம்.”
ஒரு போலிஸ்காரர் வண்டியை ஒட்டி போத்தீஸ் கட்டைப்பையில் வைத்திருந்த சரக்குகளை எடுத்து ஸ்பிலண்டர் பக்கம் வந்தபடி ‘ வண்டிய எடு சபரி ‘ என்றார்.
சிவக்கொழுந்து ”சார் இது நல்லா இல்ல சார்” என்றான்.
‘’நல்லா வேணுமன்னா ஸ்டேசனுக்கு வா” என்றார்.
சிவக்கொழுந்து அவர்களைக் குறுகுறுவென்று பார்த்தான்.
போலீஸ் வண்டி புழுதியை வாரிவிட்டு கரை மீதேறிச் சென்றது. ” தேவடியாப் பயலுக. இனத்தான்னு கூடப் பாக்க மாட்டானுவ .. இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு …” கெட்ட வார்த்தையால் கத்திப் பேசினான். ஆதாளிப் புதர் அடியில் ஒளிந்திருந்த சிவக்கொழுந்துவின் கையாள் துரைப்பாண்டி வந்தான். ”மயிராண்டி ஒன்ன தோப்புவழியாதான வரச் சொன்னேன். வெண்ணையாட்டம் கரை வழியா வந்தா அவன்களுக்குத் தெரியாதா? துரைப்பாண்டி பேசாமல் வந்து நின்றான். வேகமாகச் சென்று சுவர் சுவர் ஓரம் நின்றிருந்த முருகேசனை ஓங்கி ஒரு அறைவிட்டான். ஆத்திரம் அடங்காமல் ஒரு எத்து விட்டான். சாக்குப்பைக்கு இந்தப் பக்கம் பொத்தென விழுந்தான். ”பாட்டில் பொறுக்க வர்ற நேரத்தப் பாரு அப்பிடி என்ன உனக்கெல்லாம் கொள்ளை போகுது..” கீழே கிடந்தவனை மறுபடி உதைத்தான் துரைப்பாண்டி ” அவன் என்னப்பா பண்ணுவான் ” இழுத்துக்கொண்டு வந்தான். போலிஸ் மீது உள்ள கோவத்தை முருகேசனிடம் காட்டுகிறான். வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். தூரத்தில் நின்றிருந்தவர் இனி சரக்கு கிடைக்காது என்று தெரிந்ததும் அப்படியே குட்டையில் போகும் ஒற்றையடித் தடத்தில் வடக்காக நடந்தார். இன்னும் மூன்று மணிநேரம் பொறுக்கமுடியாது. எங்கேயாவது பிடித்து ஊற்றாமல் ஊருக்குள் கால்வைக்க மாட்டார்.
காலை ஒன்பது பத்து மணிக்கு இங்கு வந்தால் எப்படியும் முப்பது நாற்பது பாட்டில்கள் கிடைக்கும். சுற்றியிருக்கும் காளவாசலில் வேலை செய்பவர்கள், பட்டறைகளில் வேலை செய்பவர்கள், குடியை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள் இந்த இடத்திற்குத்தான் வருவார்கள்.
முருகேசன் எழுந்து ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டான். அவனுக்கு இந்த முறைதான் சட்டையும் பேண்டும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. அவனுக்கு வயிறே கிடையாது ஒட்டி உலர்ந்து போய்விட்டது. போட்டியாளனாக இருந்தாலும் அவனது முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் பொறாமை மெல்ல வடிந்து பரிவுணர்ச்சி கிளம்பும். வெயிலில் அலைந்து அலைந்து முகமே வற்றி திட்டுத்திட்டாக மங்கு விழுந்து கருத்து கிடக்கிறது. இவனைப் பார்க்கும்போதுதான் தன் முகம் ஞாபகம் வருகிறது. அப்படிக் கண்ணாடியில் பார்த்தபோது வெயிலுக்குக் கன்னம், மூக்கு, நெற்றி எல்லாம் கந்திக் கறுத்துப்போய்விட்டது தெரிந்தது.
அருகில் சென்று கேட்டான். ”பலமா அடிச்சிட்டானா?”
மெல்லத் தலையசைத்தான்.
மோட்டார் அறைப் படிக்கட்டில் கிழித்த பதினெட்டாம்படி கோடுகளில் கலவை உதிர்ந்து உதிர்ந்து கோடு அகன்றும் குறுகியும் கிடக்கின்றன.
”சட்டை பேண்ட்ட தொவச்சி போடு. உனக்கு கச்சிதமாக இருக்கு.”
”நங்கநல்லூர் டீச்சரம்மா தந்தது. இது எப்படியோ சரியா அமச்சிருச்சு.”
”புத்தூர் பக்கம் போறேன் வர்றியா?”
”வெலக்கு வரைக்கும் வர்றேன். அப்பிடியே மேக்கால காரனேந்தல் லைனுக்கு போறேன். என்றான். ஆட்களும் வண்டிகளும் ஏறி இறங்கிப் பதுங்கித் தேய்ந்து தாழ்ந்திருந்த கரையை நோக்கி நடந்தார்கள். அதிலிருந்து ஓடையாக மாறிப்போகிறது.
இந்த முருகேசனுக்கு ஒரு டீயும் பன்னும் வாங்கித் தரலாம் என்றிருந்தது. அல்லது அவனோடு சேர்ந்து சாப்பிடலாம். சிரித்தால் அகன்ற வாயில் பல் வரிசை தெரியும்.
”ரெண்டாவது எத்துனானல்ல அப்ப எந்திருச்சு நீ ஏதாவது சொல்லியிருக்கலாம்”
”இல்ல நாளைக்கி பாட்டில் பொறுக்க இங்கதானே வரணும்..”
”ஆமா நீ சொல்றதும் சரிதான்.”
சாக்கை முறுக்கி இடத்தோளுக்கு மாற்றியபோது பாட்டில்கள் டடங் டடங்கென்று சரிந்தன. வயிறு தகடாகப் பின்முதுகோடு ஒட்டிப்போய்விட்டது. சட்டை இல்லாது பார்த்தபோது எலும்புக்குத் தோல் போர்த்தியதுபோல இருந்தது. கஞ்சி இல்லாமல் வயிறு காய்ந்து காய்ந்து இரும்புத் தகடுபோல உடம்பு ஆகிவிட்டது. முகத்தில் கிள்ளி எடுக்க துளி சதையில்லை. கறுத்த கூழாங்கல்போல இறுக்கமாகத் தான் இருந்தது. ஆனால் சட்டையைப் போட்டுக்கொண்டால் நோய்நொம்பு இல்லாத உடம்பாகத்தான் தெரிகிறது அது உண்மையும் கூட.
அக்கா பிள்ளையைத்தான் முருகேசன் கட்டினான். கட்டும்போது அக்கா மகளுக்கு வயது பதினைந்து அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள். ”பதினெட்டு வயதில் அவளுக்கும் ஒரு காதல் வந்தது. எலக்ட்ரீசியன் வேலைக்கு வந்த பையன். அவனோடுதான் விருதுநகர் பக்கம் ஓடி ஒளிந்தாள். ஆறு மாதத்தில் திரும்பி வந்தாள். அவளுக்குத் தூக்கமே அத்துப்போய்விட்டது. தலைவலி வந்தால் நெற்றி நரம்புகள் புடைக்க சுவரில் மோதத் தொடங்குவாள். எந்த மாத்திரைக்கும் எந்த ஊசிக்கும் தலைவலி கட்டுப்படவில்லை. அக்காவும் மாமாவும் மில் வேலைக்குச் செல்லாமல் அவளுக்காக ஜோசியம், ஆஸ்பத்திரி , குறிகேட்க என்று அலைந்தார்கள். அப்படியும் தூக்கம் வரவில்லை. தலைவலியும் போகவில்லை. அவள் திரும்பி வந்தபின் இவன் வீட்டை விட்டுப் போய் சத்திரச் சாவடியில் படுத்தான். இப்போது சொல்கிறான் , வந்ததும் அக்கா பிள்ளைதானே என்று நான் ஆஸ்பத்திரிக்கும் கோயிலுக்கும் அழைத்துப்போயிருந்தால் சரியாயிருக்கும். சின்னப்பிள்ளை தானே அதுக்கு என்ன அறிவிருக்கும் அந்த வயதில், விடு கழுதை … மாமா நான் இருக்கேன் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் எல்லாம் கூடிவந்திருக்கும். விட்டுக்காட்டி விட்டேன். தூக்குப்போடுவதற்கு முன் பிள்ளைகளை இருபுறமும் கட்டியணைத்து மாறி மாறி முத்தமிட்டிருக்கிறாள்.
அதைப் பார்த்த அக்காவுக்கும் மாமாவுக்கும் சந்தோசமாக இருந்திருக்கிறது. இப்படிப் பண்ணுவாள் என்று நினைக்கவில்லை.
” வீட்டிற்குப் போனால் அக்கா சோறு போடுகிறாள். அப்படியும் திரும்பிப்போய் சாப்பிட்டேன். என்னமோ அக்கா பிள்ளையை நானே தூக்கில் ஏற்றிவிட்டதுபோல ஒரு நினைப்பு திரும்பத் திரும்ப வந்தது. பிள்ளைகளை வைத்துக் கொண்டு அக்கா படுகிற பாடுகளைப் பார்க்க முடியவில்லை. எங்கெங்கோ சுத்தியடித்துவிட்டு இருபது நாள் கழித்து கோழிப்பண்ணைக்குப் போகும் வழியில் இருக்கும் புளியமர ஸ்டாப்பின் நீளமான பட்டியக்கல்லில் படுத்திருந்தேன். உட்காருவதற்குத் தோதாக அடியில் கல் கொடுத்துத் தூக்கி வைத்திருப்பார்கள். நல்ல தூக்கம். அக்காவுக்கு எப்படித் தெரிந்ததோ! எழுப்பினாள். வயிற்றுப்பக்கம் அமர்ந்து முகத்தைப் பார்த்து ‘முருகேசா‘ என்றாள். என் காதுக்குள் ஒரு மௌனமான சூறாவளி காதின் துவாரத்தின் வழி இறங்கி நெஞ்சில் சர்ர்ர்ரென சுழன்று என்னைத் தூக்கியது. அவள் சட்டையைச் சற்று மேலேற்றி வயிற்றைத் தடவினாள். கல்லுக்கடியில் இரண்டு தூக்குச்சட்டிகள் இருந்தன. எனக்கு புளிக்குழம்பு பிடிக்கும் கத்தரிக்காய்ப் புளிக்குழம்பும் சோறும் கொண்டுவந்திருந்தாள். எனக்கு கண்ணீர் கதகதவென வந்துவிட்டது. ‘நீ என்னடா பண்ணுவ. நானே நல்ல எடத்தப் பாத்து கல்யாணம் பண்ணிவச்சு ஒன்ன ஒரு நெலைக்குக் கொண்டுவர்றேண்டா‘ என்றாள். அக்காவுக்கு ரெப்பையெல்லாம் நீர்கோர்த்து நின்றதைக் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. அப்புறம் வெளியேறி வந்துவிட்டேன்.” வாகை மரத்தடி கரும்புக்கடைக்கு வரும்போது சொன்னான். எப்போதோ சொன்னது, இந்தமாதிரி தினத்தில்தான் அதுவும்கூட நினைவிற்கு வருகிறது.
நொச்சியும் அரளியும் சிறு மரங்கள்போல அமர்ந்து ஓடையின் இருபுறமும் அடர்ந்து நிற்கின்றன. வலதுபுறம் மட்டும் இன்னும் ஒரு தோட்டத்தில் விவசாயம் நடக்கிறது. ஓடையை ஒட்டி ஐம்பது அறுபதாண்டுத் தென்னைகள். இந்த வறட்சியிலும் காய் நன்றாகப் பிடித்திருக்கிறது. தக்காளியின் இலைகள் கரடுதட்டி சுருண்டு அழிகிற காலத்திற்கு வந்து விட்டன. தக்காளிச் செடிகளுக்கு மேல் எங்கும் விதைகளோடு இனிக்கம்புற்கள் தலை உயர்த்தி நிற்கின்றன. தக்காளி காய் பிடித்துக் காய்ந்தபின் களைவெட்டுவது இல்லை. அதன்பின் முளைத்து வரும் களைகளைக் கைக்களையாக எடுக்கவில்லையென்றால். இப்படி தவ்வாளம் போட்டு வளர்ந்து வெள்ளாமையை அமுக்கிவிடும். நேற்று பழம் எடுத்தார்கள். ஓடைக்குள் நுழைந்துவிட்டால் தோட்டம் தெரியாது. தென்னை மரங்கள் மட்டும் உயர்ந்து நிற்பது தெரியும். ஓடை வழியாகப் போனால் அங்கங்கே பாட்டில்கள் கிடைக்கும். காஞ்சி மரத்தடியில் எப்படியும் பதினைந்து இருபது பாட்டில்கள் கிடக்கும்.
லா மார்ட்டின் பாட்டில் ஒன்று மூத்திரம் பெய்த ஈரத்தின் பக்கம் கிடந்தது. பூமாரி குனிந்து எடுத்து சாக்குப் பையில் போட்டுக்கொண்டு நடந்தான். கழுத்து உடைந்த மானிட்டர் பாட்டில் எருக்கலஞ்செடி தூருக்கடியில் கிடந்தது. முருகேசன் போத்துக்குச்சியை விலக்கி எடுத்தான். உடைந்த பாட்டில்களையும் கிலோ கணக்கில் வாங்கிக்கொள்கிறார்கள். அதற்குத் தனி ரேட்டு. கிலோ ஒரு ரூபாய். உடைந்து கத்திபோல கூர்நுனியாக இருந்தால் எடுக்கமாட்டார்கள். அந்த உருவம் திடுக்கென வேலி மறைப்பிலிருந்து வெளிப்பட்டு நின்றது. டக்கென பூமாரி நின்றான். அரளிக் குட்டையின் மறைவிலிருந்து அப்படி வந்து நின்றது பயத்தை உண்டாக்கியது. சிரிப்பு விகாரமாக இருந்தது. உதடுகள் எல்லாம் வெள்ளை விழுந்து முன்பற்கள் மூன்று இல்லாமல் வாயைத் திறந்தான். குகை வாயிலை வாய்க்குள் வைத்திருக்கிறான். ரத்தம் சுண்டிய முகத்தில் ஒருவித மினுமினுப்பு தெரிகிறது. இவனை அடிக்கடி புளிய மரத்தடியில் பார்த்திருக்கிறார்கள். வேட்டி விலக சம்பிப்போன துடைகளைக் காட்டிக்கொண்டு விதவிதமாக விழுந்துகிடப்பான். இவர்களைப் பார்த்ததும் கைகளை நடுங்கவிட்டான். நாற்பத்தைந்து வயது இருக்கலாம். அறுபது வயதுக்காரன் போல ரத்தம் சுண்டி சீக்காளியாக ஒடுங்கிப்போய்விட்டான். ”இருந்தா குடேன். ஏதாவது போட்டத்தான் முடியும். எறக்கணும். இல்லைன்னா செத்துப்போவேன்” வழி மறைத்தான். இரவடித்த சரக்குவாசம் பேச்சோடு வந்தது.
பூமாரிக்கு இன்று அப்படி பாட்டில்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. முருகேசன் சாக்கை இறக்கி வைத்து பாட்டில்களை கடாமுடாவென ஒதுக்கித் துழாவி எடுத்தான். ஒரு குவாட்டர் பாட்டிலில் பாதி இருந்தது. வாங்கியதும் அவசரமாக மூடியைத் திறந்து அப்படியே கடகடக்கென இரண்டே மடக்கில் குடித்துவிட்டு பாட்டிலைக் கொடுத்தான்.
”நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று பாடினான். உற்சாகத்தில் போகச்சொல்லி வழிகாட்டினான். ”வடக்கத்தி மாரி எப்பயும் எங்கூடதான் இருக்கா கண்ண திறந்திட்டா பாத்தியா. அவகிட்ட சொல்லிடுறேன். வேலும் சூலமா இவங்க பின்னாடி இருக்கனுமன்னு போங்கடி ராசா” மீசையைத் தடவிக்கொண்டான். பூமாரி சிரிப்பதைப் பார்த்து முருகேசனும் மெலிதாகச் சிரித்தான். வாடிய செடிக்கு நீர் ஊற்றியதும் ஒரு தெளிச்சி வருமே அப்படி மலர்ந்துவிட்டது அவன் முகம்.
இருபது நாட்களுக்கு முன்பு உரிப்பள்ளம் குடைக் கருவேல மரத்தடியில் பனிரெண்டு பாட்டில்கள் கிடந்தன. அதில் பிரிட்டன் எம்பயர் குவாட்டர் பாட்டில்கள் மூன்று திறக்காமல் அப்படியே இருந்தன. அவற்றைத் தனியாக எடுத்துவைத்தான். காலிபாட்டில்களாக விண்டேஜ் ஆப் ஒன்று, புட்ஜ் புல் ஒன்று , பைவ்தவுசன் பீர்பாட்டில்கள் கிடந்தன. பெரிய பார்ட்டியாக இருந்திருக்கும்போல. போதையில் விட்டுவிட்டார்கள், போதும் என்று விட்டுவிட்டார்களா, இருட்டில் இன்னும் சரக்கு இருப்பது தெரியாமல் விட்டுவிட்டார்களா, பேச்சு சுவாரஸ்யத்தில் மறந்து விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை. ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டான். பின்னால் சைக்கிளில் வந்தவன் காலூன்றி நின்றான் முதலில். அடுத்த நிமிசம் ”டேய் நான் அந்த மூணு பாட்டில எடுத்து வச்சிட்டு போனேன். அதுக்குள்ள நீ வந்து எடுக்கிற” சட்டென சைக்கிளை நிறுத்திவிட்டு வேகமாக வந்து தலையில் கட்டியிருந்த துண்டை உதறி மூன்று பாட்டில்களை பிடுங்கி அதில் வைத்து முடிந்தான்.
மடித்துக்கட்டிய கைலி. சதைப்பற்று வற்றிய கால்கள் ஏழைக் குடிகாரர்களுக்கு எல்லாம் உடம்பு இப்படி ஆகிவிடும் போல. பாலத்து சுவர்திண்டை ஊதினான். தூசிகூட அவ்வளவு இல்லை. சட்டையைத் தூக்கி இடுப்பில் சொருகி வைத்திருந்த மானிட்டர் பாட்டிலை எடுத்து அதில் வைத்தான். தலைமுடியைப் பின்பக்கமாக இரு கைகளால் கோதி சற்று தள்ளி வந்தான். டூவீலர் விலகிப்போனதை ஒரு மாதிரி நோட்டமிட்டு , போ போ பார்த்துகிறேன் என்று தலையசைத்தான். அங்கங்கு அமர்ந்திருந்தவர்கள் கோட்டர் ஆண்டியையே பார்த்தார்கள். ஆண்டிச்சாமி மெல்ல குவாட்டர் முன்வந்து குனிந்து முகர்ந்து உதட்டைப் பிதுக்கி நிமிர்ந்தான். தள்ளி நின்று பாட்டிலையே குறுகுறுவென்று பார்த்தான். பின் மெல்லச் சிரித்தான். அருகில் வந்து மூடியைத் திறந்து கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்து ”ஆகா எஞ் செல்லமே” என்று பாலத்தின்மீது வைத்துவிட்டு கைகளைத் தட்டி நடு தார்ச்சாலையில் வந்து நின்று ‘ஒழுக்கமாக இரு‘ என்பதுபோல ஆள்காட்டி விரலால் எச்சரிக்கை விட்டான். அதையே பார்த்துக்கொண்டு கல்லில் அமர்ந்திருந்த கிழவர் எச்சியை விழுங்கினார். ஆண்டி இடுப்பில் இரு கைகளைக் கம்பீரமாக வைத்து தெனாவெட்டாகப் பார்த்து அருகில் சென்றான். பின்பு எடுத்து நுனி மூக்கை லேசாக இடது விரலால் தொட்டபடி கடக்கடக்கடக்கென குடித்துவிட்டு பாட்டிலைத் தடுப்புச் சுவர்மேல் வைத்துவிட்டு அதற்கு ஒரு பறக்கும் முத்தத்தை உதடுகள் தொட்டு வீசினான். கோட்டர் ஆண்டியிடமிருந்து ஒரு காலி குவாட்டர் பாட்டிலைப் பெற வெகுநேரம் காத்திருக்க வேண்டும். குவாட்டர் முன் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமாக சிலாவரிசை எடுத்து இறுதியில் தொடுவான்.
பள்ளிச் சுவரோரம் அமர்ந்திருந்த சபாபதி பிள்ளையைப் பார்த்து இரண்டு கை விரல்களால் மற்றொரு குவாட்டர் இல்லை என்று விரித்து அசைத்தான். அவர் பல்லைக் கடித்தார். இத்தனை கெடுபிடிக்கிடையிலும் ஆண்டி எங்கோ குவாட்டரை பிடித்து வந்துவிட்டானே என்று கடுப்பில் இருந்தார்கள். தூரத்தில் கோட்டர் கணேஷ் சரக்கை அவரிடம் கேட்டான். ”இல்லடா” சட்டைப் பாக்கட்டை விரித்து காட்டினார். ”அங்கில்ல. டவுசர் பாக்கட்டில்ல” என்றான். ”இல்லடா” தொடை பக்கம் தடவிச் சொன்னார். ”கையை விட்டு எடுத்துக்கிறவா” கையை நீட்டினான். எப்படிக் கண்டானோ! வாங்கிப் போட்டபின்தான் அன்று அவரை விட்டான்.
பூமாரி அந்த பாட்டிலை எடுத்து சாக்கில் போட்டுக்கொண்டு புத்தூர் ஊர்ப்பக்கம் நடந்தான். முருகேசன் காரனேந்தல் பக்கம் நடந்தான்.
முதல் குழந்தை பிறந்து ஒருவருடம் கடந்ததும் அக்கா வரிச்சியூருக்குப் போகாமல் உள்ளூரில் அம்மாவுடன் கொத்து வேலைக்குப் போறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான். ஆடி பதினெட்டுக்கு ‘பூ‘ விட பெரிய வாய்க்காலுக்கு அம்மா அழைத்தாள். வைகை ஆற்றிலிருந்து வரும் கிளைவாய்க்காலுக்கு போவார்கள். ‘நீ போம்மா எனக்கு உடம்பு சடவா இருக்கு‘ என்றாள். அம்மா விளக்குமாவையும் திரியையும் தூக்குவாளியில் வைத்து எண்ணெய்த் தூக்கை ஒரு கையிலும் எடுத்துக்கொண்டு அக்காவின் சோம்பேறித்தனத்தை ஏசிவிட்டுப் போனாள். மூன்று மணி இருக்கும். ”டேய் பூமாரி, காரனேந்தல் வாய்க்கால் பள்ளம் வரைக்கும் போய்ட்டு வரலாமா? அங்கயும் தண்ணி வருதாம். வரதன பாத்து ரொம்ப நாளாச்சில்ல” என்றாள் அக்கா. ஒரு மாதத்திற்கு முன் கேரளாவில் வலுத்த மழை பெய்ததால் அதிசயமாக வைகையில் வெள்ளம் போனது.
கிளைவாய்க்கால்களில் எல்லாம் தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. அக்கா அழைத்தும் போகவில்லை.
காரனேந்தல் கைலாசம் ஐயர் தோப்புக்கு தேங்காய் சுமக்க அக்கா போவாள். கூடவே போனால் எப்படியும் ஒரு முழுத் தேங்காயைத் தின்ன ஒளித்துத் தருவாள். மூடுவிட்டகாயை அடிமரத்தில் ஓங்கிப்போட்டு சிரட்டை தெறிக்க பருப்பை மட்டும் அப்பாக எடுத்துத் தருவாள். சில சமயம் பருப்பைக் கூடு சிதையாமல் பெரிய முட்டையாகக்கூட எடுத்து விடுவாள். நீர்வற்றிப் போயிருக்கும்.
கோடை விடுமுறை வெயில் சுட்டெரித்துக்கொண்டு இருந்தது. பின் மதியத்தில் மளமளவென்று வெண்மேகம் ஏறிவந்தது. ஒருமணி நேரத்தில் திரண்டு கருத்து பட்டென இருட்டுக்கட்டியது. இடியும் மின்னலும் ஈசானத்தில் இறங்கி கிடுகிடுக்க வைத்தது. மழைக்கு முன் ஓடிவிடலாம் என்று கைக்காய்களை வாங்கி கூடையில் போட்டார்கள். வரதன் அவன் பங்குக்கு வந்த இரண்டு காய்களைக் கொண்டுவந்து அக்காவின் கூடையில் போட்டான். அக்காவைவிட இரண்டு வயது இளையவன். அக்கா சிரித்துக்கொண்டே ‘எதுக்கு இத்தன‘ என்றாளே தவிர மறுக்கவில்லை.
சூட்டிக் களத்தைத் தாண்டும்போதே இரைச்சலோடு மழை ஏறிவந்து அடித்தது. கண்மண் தெரியாமல் பெரிய துணிகளாக இறங்கி அடித்தது. ஆலமரத்தடிக்குப் போனபோது கண்ணைப் பறிக்கும் கனத்த செங்கனல் மின்னல் நெளிந்து படுவேகத்தில் இறங்கி பூமிக்குள் காலூன்றி மறைந்த நொடியில் காது செவிடாகும்படி தூரத்தில் இடி விழுந்தது. ஆலமரம் மழைக்காற்றில் அல்லோலகல்லோலமாக சாய்ந்தாடியது. காற்று நிக்கவும்தான் மரத்தடியில் நின்றிருந்தவர்களுக்கு நிம்மதி வந்தது. மரத்தடியில் நின்றிருந்தாலும் தொப்பல் தொப்பலாக நனைய வேண்டியதாகிவிட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை சாத்து சாத்து என்று சாத்தியது. மழை நிற்காததுபோல பிடித்து அடித்துக்கொண்டிருந்தது. அப்படி நினைத்தாலும் ஒருவழியாக நின்றது. கிழவிகள் நடுங்குவதைப் பார்க்க சிரிப்பு வந்தது. அதைவிட நீர் சொட்டச் சொட்ட சீலை கிழவிகளின் உடலில் ஒட்டிக் கொண்டதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. புசுக்கென அகலம் குறைந்து ஒல்லிக்குச்சி உடம்புகள் நன்றாகத் தெரிந்தன. வயக்காடு முழுக்க தண்ணீர் கடல்போல் மாறிவிட்டது. செருப்பு சேறோடு அப்பிக்கொண்டு வந்தது. செருப்பைக் கையில் பிடித்துக்கொண்டு வழுக்கி விழாமல் நடந்தார்கள்.
வாய்க்கால் பள்ளத்தில் கழுத்தளவு தண்ணீர் செடி கொடிகளைப் புரட்டிக்கொண்டு கலங்கலாக ஓடியது. கூடைகளை சப்பரக்கல் மேல் வைத்துவிட்டு வாய்க்கால் பள்ளத்தைப் பார்க்க சந்தோசமாக இருந்தது. அக்காவை ஒட்டி நின்றிருந்த வரதனிடம் இரண்டு அங்குலத்திற்கு அப்பியிருந்த சேறைக் காட்டினாள். சிரித்துக்கொண்டே வரதன் செருப்பை வாங்கி தண்ணீரில் கழுவிக் கொண்டுவந்து தந்தான். அதை அக்கா கூடையில் போட்டாள். இரண்டு இரண்டு பேராக இணைந்து பெருகி ஓடும் வாய்க்காலைக் குறுக்காகக் கடந்தார்கள்.’முதல்ல தம்பிய கடத்திவிடு’ என்றாள். வரதன் தோள்பக்கம் பிடித்துக் கடத்தினான். தாடைவரை தண்ணீர் தொட்டு நகர்ந்தது. ததும்பிப்போனாலும் தண்ணீர் பலமாக இழுக்கவில்லை. ஒருமுறை கூடைகளை மட்டும் அடுக்கி தலையில் வைத்துக் கொண்டுவந்தான். கிழவிகளை கடத்திவிட்டதும் சீலையைத் தூக்கி சுருட்டிப் பிழிந்தார்கள்.
அக்கா இறங்க பயந்துகொண்டிருந்தாள். முழங்கால் நீர் ஏற அக்கா தொடர்ந்து தண்ணீருக்குள் வர மறுத்துத் திரும்ப அந்தப்பக்கமே ஏறப்பார்த்தாள். வரதன் சட்டென அக்காவின் வலப்புற கக்கத்துவழி கையைக் கொடுத்து இழுத்து இறக்கினான். தண்ணீர் மெல்லமெல்ல மேலேற அக்காவும் வரதனை இடப்பக்கம் கைபோட்டு இறுக்கிப்பிடித்து ஒட்டி நகர்ந்து வந்தாள். நடு ஆற்றில் அப்படியே நின்றார்கள். இருவரின் தோள்களைத் தொட்டோடியது நீர். அக்காவின் முகத்தில் புருபுருவென விநோத உணர்வு படர்ந்தது கண்களில் தெரிந்தது. ஆறு வரதனை இன்னும் தள்ளி அக்காவின் இடப்பக்கம் சாய்ப்பதுபோல இருந்தது. கடக்க முடியாமல் தவிக்கிறார்களா? தண்ணீர் இழுக்கிறதா? அப்படியே போய்விட்டால்? ”அக்கா வெரசா வாக்கா” என்றான். அந்த நேரம் கரைந்து நகர்ந்தார்கள். நீரின் உயரம் குறைந்து குறைந்து உருவம் உயர்ந்து உயர்ந்து வந்தது. நீர் சொட்டச்சொட்ட வரதனின் கை மார்பில் பற்றியிருந்தது. வானம் தெளிவடைந்து கொண்டிருந்தது.
மாரியம்மன் கோயில் பக்கம் திரும்பியதும் அட்டை கொடுத்த அந்த அக்கா வீட்டுப்பக்கம் மெல்ல நடந்தான். வீட்டிற்குள் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இரண்டு மணி வெயில் வேர்த்து வழியவிட்டுக்கொண்டிருந்தது. வளலையான தெருநாய் சாக்கடை ஈரத்தில் படுத்து இளைத்துக்கொண்டிருந்தது. சாக்கில் பாதி சரக்கு சேர்ந்திருந்தது. முற்றத்துக் கொண்டியில் தொங்கும் கயிற்றின் பக்கவாட்டில் கவ்விப் பிடித்த சிட்டுக்குருவியை வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். பூமாரிக்கு நாக்கு வறண்டு உலர்ந்துபோய்விட்டது. கொஞ்சம் தயங்கி நடந்தபடி பார்த்தான். அந்த அக்கா இவனைப் பார்த்ததும் ”தம்பி இங்க வா” என்றாள். இவன் கேட்டுக்கு அருகில் செல்ல மாறிமாறி கயிற்றில் அமர்ந்த குருவி புருட்டென சந்து வழியாகப் பறந்து போனது.
நீலநிற தண்ணீர் பேரலை ஒட்டி அட்டைப்பெட்டிகள் ஆளுயரத்திற்குக் கிடந்தன. ”இதையெல்லா எடுத்துக்கோ” என்றாள். கட்டுவதற்கு கயிறும் தந்தாள். குடிக்க மக்கில் தண்ணீரும் கொடுத்தாள். மளிகைக் கடைக்கு வந்த அரசன் டிடர்ஜென்ட் சோப்பு அட்டைப்பெட்டிகளும், ஹார்லிக்ஸ் அட்டைப்பெட்டிகளுமாக இருந்தன. கிலோ பதிமூன்று ரூபாய்க்கு வாங்குகிறார்கள். அட்டைகளை இறுக்கிக் கட்ட கால்பங்கு உயரத்திற்கு வந்துவிட்டது.
”அக்கா எங்கிட்ட முப்பது ரூபாதான் இருக்குக்கா.”
”இல்ல தம்பி நீ சும்மா எடுத்துக்கோ. எலி ஒன்னு வந்து கறும ஆரம்பிச்சிடுச்சு. ஒனக்காவது பயன்படுமே. சும்மா கொண்டுபோ.” அந்த பதினைந்து கிலோ கட்டு லட்டுகணக்கா இருநூறு ரூபாய்க்குப் போனது மனசு வேண்டுமே! அந்த அக்கா வாசலில் தென்படவில்லை.
பெரிய தெருவில் போய் முட்ட கிரிக்கெட் ஆடிவிட்டு வந்த பையன்கள் கொய்யாமர வீட்டின் முற்றத்து ஓரம் பிரிந்து போவதற்கு முன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கிழக்குத் தெருவிலிருந்து அந்தக் கிறுக்கன் இரண்டு தோள்பக்கம் நான்கு சாக்குகளில் எதையெதையோ நிரப்பித் தொங்கவிட்டுக் கொண்டும் ஒரு மரப்பெட்டியைத் தனிக்கயிற்றால் தலையில் கோர்த்து இழுத்துக்கொண்டு வருகிறான். சிவலை நாய் அவனைப் பார்த்துக் குரைக்கிறது. ”கப்பலேறிப் போயாச்சு. சுத்தமான ஊராச்சு கண்ணம்மா” பாடிக்கொண்டு வருகிறான். ”நாலுபேரு நம்மள தூக்கிப்போட வராம முகம் சுளுச்சா நாம இந்த பூமிக்கு நல்லது பண்ணலன்னுதான் அர்த்தம்” என்றதும் பையன்கள் சிரிக்கிறார்கள்.
கிறுக்கனின் பற்களில் பாசம் ஏறி ஏறி அழுக்கு மஞ்சளாகிவிட்டது. நல்ல இறுக்கமான ரோஸ்நிற பேண்ட் கட்டம்போட்ட நீலநிறச் சட்டை யார் கொடுத்ததோ, நன்றாக இருந்தது. ஜிப்பைதான் இழுத்து மூடாமல் விட்டுவிட்டான். அந்தப் பையன்களைத் தாண்டியதும் ”ரங்கநாதன் இஞ்ஜினியரிங் காலேஜிக்கு பிரின்ஸ்பாலா வந்தே தீர்வேன்” என்றான். அவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள். ஒருவேளை அவர்கள் அந்தக் கல்லூரியில் படிக்கிறார்களோ என்ற சந்தேகம் வந்தது. தெரிந்து சொல்கிறானா தெரியாமல் அடித்துவிடுகிறானா என்று தெரியவில்லை.
இவன் இங்கு பக்கத்து ஊர்தான். நான்கைந்து ஊரைச் சுற்றித்தான் வருவான். கிறுக்குதான் , காரியக் கிறுக்கா என்று யாராலும் சொல்ல முடியவில்லை. விக்னேஷ் பேக்கரி முன் பேருந்துக்காக நின்றிருந்தவரிடம் ”அண்ணா , அப்பா எப்படி இருக்காரு” என்றான். ”அப்பா எறந்து ஒரு வருசமாச்சிப்பா” ”எனக்குத் தெரியாமப் போச்சே அண்ணா. நீங்க சொல்லியிருக்கணுமில்லயா” ”மறந்துபோச்சுப்பா, கோவிச்சுகிறாத.
உங்க அப்பா எப்படி இருக்காரு? ”அவரு சாகுறதுக்கு இன்னும் ரெண்டு மூணு வருசம் ஆகுமண்ணா நம்மளையெல்லாம் ஒரு ஆட்டு ஆட்டிட்டுத்தான் போவாரு” ”கையில என்ன?” ”துண்டுண்ணா சடங்கு வீட்டுல பெஞ்ச தூக்கிப் போடச் சொன்னாங்க 85 சேர தூக்கிப் போட்டேன். துண்ட கொடுத்து எல்லாத்தையும் துடைக்கச் சொன்னாங்க இந்த ராஜேந்திரன் ஒரு டன் கல்ல தூக்கச் சொன்னா தூங்குவான் தொடைக்கச் சொன்னா செய்யமாட்டான். நான் யாரு? வட்டமிடும் பறவை வானில் வீசும் மின்னல் என் கை தூசிய துடைக்குமா? ”ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை.” பாடிக்கொண்டே டாட்டா காட்டிவிட்டு பூமாரியைப் பார்த்தான். ”பங்காளி இப்படியே நேரா பாண்டிமுனி பிராய்லர் கறிக்கோழி கடைக்குப் போறீங்க எதுக்க இருக்கிற குப்பைத் தொட்டி பக்கம் போயி நில்லுங்க ஏழு பாட்டில் கிடக்கு எடுத்துட்டுப் போறீங்க” என்றான். சொன்னபடியே பாட்டில்கள் இருந்தன.
சுடுகாட்டில் காத்திருப்போர் கொட்டகையைச் சுற்றி இருந்த பாட்டில்களைப் பொறுக்கி போட்டான். இரவு நேரத்தில் இந்த இடத்தில் வந்து சாப்பிடுவார்கள். காற்றோட்டமாக அமைதியாக இருப்பதால் வந்துவிடுகிறார்கள். எவ்வளவு நேரமும் இருக்கலாம். எதை வேண்டுமானாலும் பேசலாம் பாலித்தீன் பைகளும், பிளாஸ்டிக் டப்பாக்களும் நொறுங்கிப்போன கண்ணாடிச் சில்லுகளும் பாதையெங்கும் கிடக்கின்றன. சுடுகாட்டின் உள்ளே சென்றான். சங்கம் புதர் பக்கம் த்ரி தவுசன் பீர் பாட்டில்கள் இரண்டு கிடந்தன. குடித்துவிட்டு சுழற்றிவிட்டிருப்பார்கள். தரையில் விழுந்திருந்தால் உடைந்துபோயிருக்கும். சங்கம் புதரில் விழுந்து இறங்கி இருக்கிறது. போத்து கிளையெல்லாம் பச்சைமுள். இலை நுனியிலும் முள். நீர்கோர்த்ததுபோல வெளிர் பச்சையில் சிறுசிறு காய்கள் பிடித்திருக்கின்றன. குழிமேட்டிற்குச் சற்றுத் தள்ளி சுருள்சுருளான முடி கிடக்கிறது. பழைய தலையணை. பாய் கிடக்கிறது. அங்கங்கே கிழிந்த போர்வைகளும் சட்டைகளும் மண்ணில் படிந்து இற்றுக்கொண்டிருக்கின்றன. கொட்டகையைச் சுற்றிலும் விதவிதமான பிளாஸ்டிக் மூடிகளும் ஈயமூடிகளும் கிடக்கின்றன. மூடிகளுக்கும் காசு உண்டு. ஆனால் ஒருகிலோ தேற்ற பெரும்பாடு படவேண்டும். கண்ணாடித் துண்டுகளைப் பார்த்து கவனமாக நடந்தான்.
கோல்டு பீர்பாட்டில் ஒன்று கொளுஞ்சி செடிக்கு முன் கிடந்தது. எடுத்துப் போட்டுக்கொண்டான். கூழ் கற்றாழை, பிரண்டைச் சம்பிகள் கிடக்கின்றன. அம்மா குடிநீர் பாட்டில் பாட்டில்கள் இரண்டும், அக்குவா பாட்டில் ஒன்றும் இருந்ததை எடுத்துக்கொண்டான். பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒரு கிலோ பதினைந்து ரூபாய்தான். நான்கு கிலோ ஒரு சாக்கையே நிரப்பிவிடும். தரை சூடேறிவிட்டது. தூரத்தில் கானல்கொடி அசைகிறது.
புத்தூருக்கும் மானடிக்கும் இடையில் இருக்கும் டாஸ்மாக் கடையைப் பார்த்தான். கடைதிறக்க இன்னும் அரைமணி நேரம் இருந்தது. இன்னும் ரயில் கூவல் கேட்கவில்லை. தலைக்குத் துண்டைப் போட்டுக்கொண்டு இப்போதே வந்து நிற்கிறார்கள். பக்கத்தில் தகரக் கொட்டகையில் நவீன பார் அதை மூடிவிட்டார்கள். டாஸ்மாக் கடையிலிருந்து இருநூறு அடி சுற்றளவில் பாட்டில்களைப் பொறுக்கக்கூடாது. டாஸ்மாக்காரர்களே ஆள் போட்டுப் பொறுக்கிக்கொள்கிறார்கள். ஒத்தையடிப்பாதையில் நடந்தான்.
பனையூக்குப் போவதில்லை பூமாரி. பனையூர் முக்கிலிருந்து தம்மால் வழியாக காரனேந்தல் போய்விடுவான். முக்கில் புளியமரம் இப்போதும் அதே அடர்த்தியோடு நிற்கிறது. புளி அடித்திருக்கிறார்கள். சோடை, சண்டுசவரு புளியம்பழக் கூடுகள் சிதறி உடைந்துகிடக்கின்றன. இன்னும் ஒரு
அடிப்பிற்குப் பழங்கள் கொப்புகளில் அங்கங்கே தொங்குகின்றன. பசுமை மங்கிய முற்றிய இலைகள் உதிரத் தொடங்கிவிட்டன. அந்த பெருமரத்தைத் தொட்டான். பக்குகள் சொரசொரவென கீறல்விட்டுக் கிடக்கின்றன. இன்னும் இன்னும் அடர்ந்து படர்ந்திருக்கிறது என்று நினைக்க முடியவில்லை.
எட்டாம் வகுப்பு காலாண்டு தேர்வு விடுமுறைக்கு முழுக்க வரிச்சியூர் மாமா வீட்டில்தான் பூமாரி இருந்தான். அக்காவிற்கு வரிச்சியூர் ரொம்பப் பிடிக்கும். குன்னத்தூர் செல்லும் வழியில் இருக்கும் மங்களாதேவி கோயில்மேடு பற்றிச் சொல்லும்போது பயத்தோடு கூடிய ஆர்வம் இருக்கும். வெறுமனே மேடாகத்தான் இன்னமும் இருக்கிறது. புதிய வெள்ளைச் சட்டையும், நீலநிற கெட்டி டவுசரும் டவுனில் தைத்து வாங்கி வந்து மாமா தந்தார். பஸ்ஸில் ஏறியபோது பெருமையாக இருந்தது. பழைய துணிகளைப் பெரிய மஞ்சள் பையில் திணித்துக்கொண்டு கூடுதலாக மாமா தந்த ஐந்து ரூபாயை உள் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பஸ்ஸில் வரும்போது கொண்டாட்டமாக இருந்தது. தன்னோடு படிக்கும் தன் சாதிப் பையன்கள் எவனும் இப்படியொரு சட்டையோ டவுசரோ போட்டது கிடையாது. இவனே அதுவரை போட்டதில்லை. அக்கா பார்த்தால் ஆச்சரியப்பட்டுப் போவாள். அக்காவை அம்மா அழைத்து வந்து கொஞ்ச நாட்களாக வைத்திருந்தாள். அவளுக்கு அந்த ஊர் மண் சேரவில்லை என்றோ, கரு கலைந்தது என்றோ சொன்னாள். போய் இறங்கியதும் கருப்பராயன் கோயில் கடுவன் தாத்தா வீட்டு முக்கு, மாடு விழுத்தாட்டும் களம் எல்லாம் நடக்க வேண்டும் என்று திட்டம் போட்டான். அங்குதான் கூட்டாளிகள், அண்ணன்மார்கள் பேந்தான் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
பேருந்து இறக்கிவிட்டுப் போனது மூக்கையா, சௌந்தரராஜன், ராமதுரை இவர்களோடு இன்னும் இரண்டு பேர் மரத்தடியில் நின்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் கல்லூரிக்குப் போகிறவர்கள். சினிமாவிற்குப் போகவோ, சைட் அடிக்கவோ வந்தவர்கள். இவன் தார்ச் சாலையைக் கடந்து வர ராமதுரை ‘’டேய் இங்க வாடா’’ என்றான். பக்கத்தில் போய் அண்ணாந்து பார்த்ததும் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். என்ன ஏது என்று தெரியவில்லை. பூமாரி கன்னத்தை தடவிக்கொண்டு பயம் கவ்வ அவனைப் பார்த்தான். மூக்கையா புளிய விளாரைக் கிழித்து முறுக்கி ஒடித்து வேகமாக வந்து முதுகில் சாத்தினான். சுரீர் எனப் பிடித்தது. அடி தாங்க முடியாமல் அந்த புளியம் விளாரைப் பிடிக்கப்போக சௌந்தரராஜக்கு படுகோவம் வந்துவிட்டது. ஓடிவந்து ஒரு எத்து எத்தினான். பழைய துணிப்பையோடு புழுதியில் விழுந்தான். எழுவதற்குள் மூக்கையா புளிய விளாரால் மாறிமாறி விளாச புளியமரத்துக்குப் பின்னால் ஓடிப்போய் ஒளிந்தான். ஒவ்வொரு அடிக்கும் விளாரின் நுனி சிலும்பரையாகத் தெறித்தது. ஒளியமுடியவில்லை. ‘’ஒனக்கு புதுசட்டை புது டவுசர் கேட்குதாடா? விட்டா நாளைக்கு ஊருக்குள்ள சூ கூட போட்டுவருவான்’’ மூக்கையா கத்தியபடி விரட்டிவிரட்டி அடித்தான்.
கிடுகிடுவென உடம்பு நடுங்கத் தொடங்கிவிட்டது. ‘’ அழுகை வேற வருதா நாயே’’ சொல்லிச் சொல்லி அடித்தார்கள். அடி கூடுதலாக விழுந்தது. தாங்க முடியாத வலி. அடி விழுந்த இடத்தில் எல்லாம் காந்தியது. ‘’ புதுச் சட்ட போட மாட்டேன் சாமி. போடமாட்டேன் சாமி’’ சொல்லத் தொடங்கவும் அடிப்பதை நிறுத்தினார்கள். எப்படி அப்படிச் சொல்லத் தோன்றியது என்று தெரியவில்லை. அப்படிச் சொன்னதும் அவர்களுக்கு ஆங்காரம் குறைந்தது. புதுச்சட்டை, டவுசர் எல்லாம் புழுதி என்றாலும் தைத்திருக்கும் நேர்த்தி புதுசு என்று தெரிந்தது. டவுசரையும் சட்டையையும் புளியமர மறைவில் அவிழ்த்து அவர்கள் சொன்னபடி கக்கம் கிழிந்த வயிற்றுப் பக்கம் இரண்டு பட்டன் போன சட்டையையும் பட்டன் போன காக்கி டவுசரையும் போட்டுக்கொண்டு புதிய துணிமணிகளைப் பழைய துணிகளோடு திணித்துவிட்டு வந்து நின்றான். விழுந்த அறையில் இடது கன்னம் குப்பென வீங்கிவிட்டது. ‘’தாயோளி சேரிக்குள்ள போயி ஏதாவது சொன்ன இந்த புளிய மரத்துல உடம்ப ரெண்டா வகுந்து தொங்க விட்டுருவேன்’’ என்றான் மூக்கையா. அதை இப்போதே செய்துவிடுவார்களோ என்று பயம் வந்ததும் திரும்ப அழுகை வந்துவிட்டது. ‘’பார்றா மறுபடியும் அழவா செய்யுற?’’ குண்டியில் எத்த, பூமாரி வாயை இறுகப் பொத்தி நடந்தான். திரும்ப வந்து பிடித்து அடிப்பார்களோ என்று குலைபதற தலையைக் குனிந்தபடி நடந்தான்.
அண்ணன் அதில ஒருத்தனையாவது தீர்த்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று சொன்னபோது மனசுக்கு ஆறுதலாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் வைதுவிட்டு வரலாம் என்று கிளம்பியபோது இப்படியே இருக்கட்டும், அப்பத்தான் காயம் ஆறாது என்றான். அக்கா, தடித்து வீங்கி எரியும் இடங்களில் எண்ணெய் தடவியபடி ‘ஆறு மாசத்துக்குள்ள மாரி கேட்டு கொடுக்கணும்’ என்று சாபம் விட்டாள்.
அப்புறமும் மாமா புதிய துணிமணிகள் எடுத்துத்தந்தார். பனையூருக்கு முந்தின நிறுத்தத்திலேயே இறங்கி கண்மாய்க்குள் போவான். உடுத்திவந்த புதிய துணிகளை அவிழ்த்து பையில் வைத்து பழைய துணியைப் போட்டுக்கொண்டு புளியமரத்திற்கு வருவான். இது சம்பந்தமாக வாலிபர்களோ நடுக்கட்டு வயதினர்களோ எதிரே பார்த்தால் அடித்ததில்லை. அடிவாங்கும்படி நடந்துகொண்டதில்லை.
கழுவத் தேவன் கொலையை ஒட்டி கலவரமானதில்தான் எல்லாம் நாசமானது. அக்கா இரண்டாவது கைப்பிள்ளையோடு கணபதியா பிள்ளை தோப்பை ஒட்டி ப் போகும் ஓடைக்கரை வழியாக சக்கிமங்கலத்திலிருந்து வெயில் தாழ வந்திருக்கிறாள். இப்போது போல காய்ந்து மண் சரிந்து வெறுக்கென இருக்காது. இருபுறமும் நாணல் இளம்பச்சையில் ஜராதபுரம் வரைக்கும் குகை போல அடர்ந்திருக்கும். அந்த குகையின் அடியில் இரண்டு மோட்டார் அளவு தண்ணீர் ஓடும். எங்கு பதுங்கி இருந்தான்களோ ஒருவன் பின்னால் வந்து எத்த நாணல் புதரில் குழந்தையோடு விழுந்திருக்கிறாள். வீலென குழந்தை கத்த ஒருவன் அப்படியே மூச்சையும் வாயையும் போட்டு அமுக்கியிருக்கிறான். நான்கு பேர் குதறி எடுத்துவிட்டான்கள். உடம்பெல்லாம் ரத்தம் கசியக் கசிய சீலை இல்லாமல் செத்துப்போன குழந்தையை மடியில் கிடத்தி ஓலமிட்டுக்கொண்டிருந்ததை வண்டிக்கார மாணிக்க நாயக்கர் பார்த்து தகவல் சொல்லியிருக்கிறார்.
பெரிய ஆஸ்பத்திரியில் இருந்த ஒரு வாரம் மருந்து போடவரும் நர்சிற்கு உதை விழாமல் இருக்க, இரண்டு கால்களையும் கற்றிப் பிடிக்க ஆண்கள் போக முடியாது. வார்டு கூட்டும் பெண்கள் வருவார்கள். பக்கத்துப் பெட்டிலிருந்த கிழவி அக்காவிடம் ஆதரவாகப் பேசுவாள். மருந்து போட்டு வரும்போது ”புண்ணு ராடா கொழஞ்சு நெய்யா கசியுதே. எப்படித் தாங்குறாளோ” என்றாள்.
அக்கா வீட்டிற்கு வந்தபின் அம்மா சமாளிக்க சிரமப்பட்டாள். இரண்டு சாக்கு மறைப்புகளுக்கு அந்தப்பக்கம் அக்கா அணத்துவது ஓயாமல் கேட்டும் இருபுறக் கைச்சுவர், தாழ்வார கம்புகள், தரை எங்கும் ஈக்கள் அமர்ந்திருக்கும். எட்டு வைத்தால், கை வைத்தால் பறந்து தள்ளி அமரும். அம்மா ‘தூமயகுடிக்கி மவன்க புழுத்து சாவான்கள் பாரு‘ வசையாடியபடி கோழி இறகுடன் இருக்கும் வேப்ப எண்ணெய் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு போவாள். மருந்து தடவத்தொடங்கினால் ”ஐயோ கடிக்காதிங்கடா கடிக்காதிங்கடா ” என்று அக்கா அரற்றுவாள். சில சமயம் ‘எம் பிள்ளைய எடுத்துட்டு வாடி” என்று கத்துவாள். வரவர அம்மாமேல் கோபத்தைக் காட்டினாள்.
தூங்கும் சமயத்தில் எண்ணெய் தடவலாம் என்று அம்மா உள்ளே போனாள். சாக்குக்கு இந்தப் பக்கம் அந்துண்டாக வந்து மல்லாக்க விழுந்தாள் அம்மா. பெரிய அண்ணனும் இல்லை. அப்பாவும் இல்லை. கிண்ணம் உருண்டுபோய் குளிக்கும் தட்டி ஓரம் விழுந்தது. வெறி கொண்டு எத்திய அக்கா சாக்கை வெட்டி இழுத்துப்போட்டு வந்தாள். புண் அழுத்தாமல் இருக்க லூசாக கட்டியிருந்த பாவாடை சரிந்து இறங்கிவிட்டது. மாருக்குப் போட்டுவிடும் துண்டும் இல்லை. இரு மாரிலும் வெட்டுக் காயங்கள் போல வட்டமாகப் பிளந்து சிவந்து இருந்தன. இடது தோளில் இருந்த கடி காயத்திலிருந்து ரத்தம் கொட்டியது. சொரிந்து விட்டாளோ என்னவோ.
அக்காவைப் படுக்க வைக்கப் பெரும்பாடாகிவிட்டது. விரித்திருந்த சீலை எண்ணெய்க் களிம்பேறிக் கிடக்கிறது. வேப்பஎண்ணெய் வைத்தால் ஈக்கள் மொய்க்காது. சாப்பாட்டு நினைப்பே இல்லாமல் எதையெதையோ பேசுவாள். ‘ஏய் குண்டு‘ என்று அக்காவை சந்தோசமாக அழைப்பதுண்டு. உடம்பு மெலிந்தாலும் காயங்களின் வீக்கம் குறையவில்லை. எப்படி நகங்களை சதை ஓட்ட வெட்டிவிட்டாலும் லேசாக பக்கு கட்டும் புண்ணைச் சொறிந்து ரத்தம் கசிய வைத்து விடுவாள்.
அக்காவிற்கு நேர் இளைய அண்ணன் அந்தக் கலவரத்தில் ஓடியவன்தான், இன்றைக்கு வரைக்கும் எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை. என்னென்னமோ செய்திருப்பான். ஒருவேளை செத்துத்தான் போய்விட்டானா அவனையும் எங்கோ வைத்து போட்டுத் தள்ளிவிட்டார்களா என்று தெரியவில்லை. உயிரோடு இருந்தால் இத்தனை ஆண்டுகளாக வராமலா இருப்பான்?
பூமாரி பனையூர் கண்மாயை விட்டு இறங்கினான். கணபதியாபிள்ளை, சீனிநாயக்கர், மணலூர் சண்முகம் செட்டியார் என எத்தனையோ பேர் தோட்டங்களின் நடுவே புதிய பைபாஸ் ரோடு போகிறது. மூவாயிரம் தென்னை மரங்களாவது வெட்டி வீழ்த்தியிருப்பார்கள். அத்தோடு எழுபதுக்கும் மேற்பட்ட புளியமரங்கள், பல வாகை மரங்கள் தினம்தினம் மல்லாக்க வீழ்ந்தன. இரண்டே மாதத்தில் வெட்டி எறிந்துவிட்டார்கள். மண்ணடித்து மண்ணடித்து முன்னூறு அடி அகலத்தில் பெரிய பாதையாய் போகிறது. தோட்டங்களை அழித்து அழித்து பைபாசாக மாறி இருபுறமும் போகிறது. அந்தச் சாலையில் ஏறி நடந்தான்.
பறித்த வெண்டைக்காய்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு களத்திற்குக் கொண்டுபோகிறார்கள். காய் பறித்த பக்கம் ஒரு அம்மாள் சீலையைத் தூக்கிச் சொருகி தண்ணீர் பாய்ச்சுகிறார். பூமாரி மூட்டையை சாலை ஓரம் வைத்து விட்டு, பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்துக்கொண்டு வரப்பு வழியாகச் சென்றான். தண்ணீர் வரும் வாய்க்காலில் மண்டியிட்டு அப்படியே வாய் வைத்து மடக் மடக்கென குடித்தான் அருகம்புல் வாய்க்காலின் இருபுறமும் இருப்பதால் மண்ணோடு உருண்டு வரவில்லை. மூன்று பாட்டில்களில் நீரைப் பிடித்துக்கொண்டு வந்தான். தோளில் சாக்கைத் தூக்கிப் போட்டுக்கொண்டு பைபாஸ் சாலையில் நடக்கத் தெம்பாக இருந்தது. பாதிச்சாக்கு நிரம்பினால் இத்தனை கிலோ இருக்கும், முக்கால் சாக்கு நிரம்பினால் இத்தனை கிலோ இருக்கும் என்று அனுமானித்துவிட முடியும்.
கண்டிகை, கழுவன்குளம், சாலக்குடி எல்லாம் சுற்றி முக்கால் சாக்கிற்கு சரக்கை தேத்திக்கொண்டு சிலைமான் வந்தான். கடந்த இரண்டு வருடங்களாக காலை ஆறு மணியிலிருந்தே பாட்டில்கள் விழ ஆரம்பித்துவிட்டன. அதிலும் டாஸ்மாக் கடை நேரத்தை பனிரெண்டுமணி ஆக்கியதிலிருந்து ஊர் ஊருக்குத் தொழில் செய்ய வந்து விட்டார்கள். கொலுக்கோட்டை துரைச்சாமி டாஸ்மாக் வந்தபின் சாராயம் காய்ச்சுவதை விட்டுவிட்டார்.. அந்தப் பக்கத்துக்கு ஊர்களுக்குத் தோதான சந்திப்பில் வைத்து தொழில் செய்யவேண்டியதுதானே என்று போலீஸ் தரப்பில் சொன்னதின் பேரில் இப்போது செய்கிறார்.
இரும்புக்கடை ஓரத்தில் மினி டெம்போ நின்றிருக்கிறது. டிரைவர் சாப்பிடப் போய்விட்டான். பெரிய பெரிய சாக்குகளில் நிரம்பிய பாட்டில்களை உலுக்கி வாப்பாடைமடக்கித் தைத்துக்கொண்டிருந்தார் மீசைப் பாண்டி கடைமுன் கொட்டியிருந்த பாட்டில்களின் மூடியைத் தனியாகவும் பாட்டிலைத் தனியாகவும் எண்ணிக்கை மாறாமல் தனித்தனி சாக்குகளில் போட்டாள் குருவம்மா. அவள் இங்குதான் வேலை செய்கிறாள். பூமாரி தகர மறைபோரம் கொட்டி பீர்பாட்டில்களை தனிச்சாக்கிலும் மற்ற பாட்டில்களைத் தனிச் சாக்கிலும் எண்ணிப்போட்டான்.
பிளாஸ்டிக் பாட்டில்கள் பெரிய பெரிய சாக்குகளில் நிரம்பி இருக்கின்றன. கறுத்து துருப்பிடித்த டியூப்லைட் சட்டகக் கவ்விகள் ஒரு கூட்டாக சாக்கின்மேல் கிடக்கின்றன. பழைய இரும்புக்கடைக்கு வந்துவிட்டன. உடைந்துபோன வெட் கிரைண்டர் சிவப்பு பிளாஸ்டிக் பாக்ஸ் அடிப்பகுதி முறிந்தபடி கால்முறிந்த பிளாஸ்டிக் சேர்களில் மேல் கிடக்கிறது. கடைக்குள் குவிக்கப்பட்ட பாட்டில்கள் சரிந்துகிடக்கின்றன. கடைக்கு உள் பலகை அடித்த அடுக்குகளில் ஈயப்பொருட்களான வாளிகள், எண்ணெய்ச் சட்டிகள், வட்டகைகள் அடுக்கப்பட்டிருகின்றன. வாசலின் இருபுறம், பிளாஸ்டிக் குடங்கள் தொங்குகின்றன. மஞ்சள், சிவப்பு, பச்சை, ரோஸ், அரக்கு நிறங்களில் செல்வம், ஏ. எஸ் . பிரதர்ஸ் , ஆரஞ்சு , ஆப்பிள் பெயர்களில் கம்பெனி குடங்கள், விதவிதமான நிறங்களில் இருந்தாலும் கருப்புக்குடம் மட்டும் இல்லை. நேரமாக ஆக தள்ளுவண்டிக்காரர்கள் பழைய இரும்பு, உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் பாட்டில்கள், பேப்பர்கள் கொண்டுவருவார்கள். தள்ளுவண்டிகளில் தொழில் செய்பவர்கள் இந்த ஈயப்பாத்திரங்களையும் பிளாஸ்டிக் பொருட்களையும் ஒப்பந்தத்தின் பேரில் கொண்டுசெல்கிறார்கள். தனியாகவோ, பழைய பொருட்களுக்கு மாற்றியோ கணக்கிட்டு விற்றுக்கொள்கிறார்கள். தினம்தினம் மாலை நேரத்தில் வந்து கணக்குகளைத் தருவார்கள். பூமாரிக்கு முதல்போட்டு செய்யமுடியாது. சில லயனில் திரும்பத்திரும்பப் போய்ப் பழக வேண்டும். திரும்பத் திரும்பச் சென்றால்தான் வாடிக்கையாளர்களைத் தன்வசப்படுத்த முடியும். சிறு பெரு நகரங்களில், புதிய காலனிகளில் அறிமுகமாகிப் பழக வேண்டும். அறிமுகமாகிவிட்டால் வாடிக்கையாளர்கள் பழைய பேப்பர்களையோ , உடைந்த பிளாஸ்டிக் பொருட்களையோ, கட்டிய வீட்டில் மீந்த இரும்புத் துண்டுகளையோ, பி.வி.எஸ். குழாய்களையோ, டிவி , பிரிஜ் , வாசிங்மெஷின் அட்டைப்பெட்டிகளையோ வைத்திருந்து தருவார்கள். புதிதாக லைனுக்குப் போகும் ஆட்களுக்கு அவ்வளவு சீக்கிரம் போட்டுவிட மாட்டார்கள். சைக்கிள் கேரியரில் பெரியபெட்டி செய்து இணைத்து லைனுக்குப் போகலாம். நாடாராகவோ, குறவராகவோ இருந்தால் இந்த லைன் வியாபாரத்தை வசப்படுத்தலாம். சேரி என்று தெரிந்தால் தெருவாசிகள் அவ்வளவு இணக்கமாகப் பழக மாட்டார்கள். அபூர்வமாக சில மனிதர்கள் அழைத்துத் தருகிறபோது நம்பிக்கை வரும். தொழிலாக அவர்களைப் போலச் செய்யமுடியாது.
தனித்தனியாகப் பிரித்து வைத்த சாக்கைக் கட்டாமல் ஒதுக்கிவைத்தான் பூமாரி. மீசைப் பாண்டி குவிந்திருக்கும் பாட்டில்களைச் சாக்குகளில் பிரித்துப்போடச் சொன்னார். ஒவொரு சாக்கிற்கும் இருநூறு பாட்டில்கள் குறைவில்லாமல் போடவேண்டும். பீர் பாட்டில்கள் தனி ஐட்டம். அது ஒரு கணக்கு.
பூமாரி பாட்டில்களை நிரப்பி நிமிர்த்திவைக்க மீசை தைத்தார். தைத்த மூட்டையைத் தூக்கி எடைமேடையில் வைக்க சிவப்பு எலக்ட்ரானிக்ஸ் கருவியில் எடையைக் காட்டியது. அரிசி சாக்கு அளவு என்றால் ஐம்பது கிலோவிலிருந்து ஐம்பத்தைந்துக்குள் இருக்கும். இந்த மாதிரி அவசர வேலை எப்போதாவது வந்துவிடும். வேலை செய்தால் அதற்குக் கொஞ்சம் பணம் தருவார். குருவம்மாள் நிரப்பிய சாக்குமூட்டைகளை பூமாரி தூக்கிவந்து எடைபோட்டு இறக்கிவைத்தான். தூக்கும்போதும் இறக்கும்போதும் புரட்டுவதால் கருத்துப்போய்விட்டது.
”பூமாரி, காளீஸ்வரி இரும்புக்கடையில அசோக் லைலாண்ட் பெரிய லாரியில் புள்சரக்குக்கு நம்மகிட்ட இருபது சாக்கு குறைவில்லாம கேட்டிருக்காங்க. பொடிசு, குண்டு பாட்டில்களையெல்லாம் போட்டா இன்னோரு மூட்டை தேந்திரும். அவங்கதான் வண்டிய அனுப்பியிருக்காங்க. அப்படியே வண்டியில இருந்த வாக்கில 21 மூட்டைகள லாரியில எறக்கிப்போட்டிட்டு வந்திரு. அதுக்கு பாலன் ஏதாவது தருவாரு. வாங்கிக்க. பஸ்ஸை பிடிச்சு வந்திருவயில்லயா? எடம் தெரியலைன்னா ஓனர் பூங்கனி அண்ணாச்சிய அலங்கார் தியேட்டர் ஸ்டாப்பிலேயோ, இல்லன்னா முனிச்சாலை சிக்கனல்லயே இறக்கிவிடச் சொல்றேன்.”
”அதெல்லாம் வந்துருவேன்.”
ஒருமுறை நெல்லுப்பேட்டைக்கும், ஒருமுறை ராமாயணச் சாடிவக்கும் சரக்குகளை இறக்கிப்போட்டு வந்திருக்கிறான். சிறுவயதில்கூட இரண்டுமுறை அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்கப் போயிருக்கிறான். இரவெல்லாம் அப்பாவுடன் காத்திருந்து விடியற்காலை பார்த்திருக்கிறான். பச்சைப் பட்டுடுத்தி வந்தார். ஆனாலும் அந்த வருசம் மழை இல்லை மாமாவுடன் போய் மீனாட்சியம்மன் கோயிலைப் பார்த்திருக்கிறான். பூமாரிக்கு ‘நம்ம ஊர் கிழக்குப் பக்கம்’ என்பது நங்கூரமாய் இருக்கிறது. மதுரையிலிருந்து வடக்கோ தெற்கோ மேற்கோ போகக்கூடாது. கிழக்கு நோக்கியே நடக்க வேண்டும். அதிலும் திகட்டல் ஏற்பட்டால் வைகை ஆற்றில் இறங்கி சக்கிமங்கலம் வந்தால் ஊர்வந்து சேர்ந்தது மாதிரிதான் என்று மிகச் சின்ன வயதிலேயே பாதை உறுதிப்பட்டுவிட்டது. பூமாரிக்கும் இப்படி ஏதாவது சந்தர்ப்பத்தில் மதுரை போனால்தான் உண்டு. மதுரை முனியாண்டி விலாஸ் கோழிக்கறி சாப்பிடத் தோன்றும். தேடிப்போனதெல்லாம் இல்லை.
டெம்போவின் பின் தடுக்கி கொக்கிவிலக்கி தொங்கவிடாமல் ஏந்தலாக வைத்து சாவிகளைப் போட்டான். இருபுறச் சங்கிலி ஏந்தலாக இழுத்துப் பிடித்தது. மீசைப் பாண்டியும் பூமாரியும் ஒரு மூடையைத் தூக்கி பின் தடுக்கில் வைத்து மெல்லச் சரியவிட்டனர். தூக்கிவைக்கும்போது கண்ணாடி நொறுங்கினால் உள்ளங்கையைக் குத்தி ஆழமாகப் பிளந்துவிடும். கத்தியைவிட பத்துமடங்கு பதம் உள்ளது. உடைந்த கண்ணாடிக் கூர்முனை. மூடையைத் தூக்கும் போதெல்லாம் குருவம்மா பதமாகத் தூக்கிக்கொடுத்தாள். டிரைவர் வண்டியிலிருந்து இழுத்து அடுக்க உதவினான்.
அசோக் லைலாண்ட் லாரியில் சரக்குகளை மாற்றி ஏற்றிவிட்டு பூமாரி விளக்குத்தூண் நோக்கி கிழக்குப் பக்கமாக வந்தான். மணி மூன்றரைக்கு மேலாகிவிட்டது. உடம்பு ஊற்றெடுத்துவிட்டது. கடைவாசலில் தொங்கும் சீலையின் நுனிகூட அசையவில்லை. புழுக்கம் நகரெங்கும் வியாபித்திருக்கிறது. இன்று எல்லாம் சேர்த்து 250 ரூபாய் கிடைத்தது. ஓடி ஓடி பாட்டில் பொறுக்கினால் 10 ரூபாய் வரை பிடித்துவிட முடியும். வெயிலுக்கோ மழைக்கோ சுணங்கினால் அந்தளவு சம்பாதிக்க முடியாது. பத்துத் தூண் சந்து வழியாக இரண்டு இசுலாமியச் சிறுவர்கள் ஓடிவந்து நடைபாதையில் நின்றனர். சிக்குப் பிடித்த பரட்டைத் தலையோடு திட்டுதிட்டாக அழுக்கு கறுத்தேறிக் கிடக்க மேலாடை இல்லாமல் ஒருத்தி மீனாட்சி அம்மன் கோயில் போகும் பாதையில் மேற்காகத் திரும்பினாள். அவளது மாராப்பு தரையில் விழுந்து தூசி தும்புகளை பற்றிக்கொண்டு வருகிறது. நடைபாதையில் இருந்தவர்கள் கடைகளில் நின்றிருந்தவர்கள்.
அவளைப் பார்த்து என்னவோ சொல்கிறார்கள். ஒரு வயசுப்பெண் தன் இடது கையால் ஒரு புறத்துக் கண்ணை மறைத்துக்கொண்டு வேகமாக நடந்தாள். கிறுக்கியை விலகி வளைத்துப்போன சைக்கிள்காரன் திரும்பிப் பார்த்துவிட்டு ஓட்டினான்.
நட்ட நடு ரோட்டில் வெயில் உறைக்க அழுக்கு உடம்போடு வலதுமுலை இல்லாமல் கனத்த இடதுமுலையோடு அவள் எதிர்வருவதைப் பார்த்தான். நெஞ்சு திக்கென்றது. என்னமோ திட்டிக்கொண்டு வருகிறாள். இப்படி நேருக்குநேர் ஒருத்தியைப் பூமாரி பார்த்ததில்லை. வலது முலை இருந்த இடத்தில் பெரிய பனவட்டின் விளிம்புபோல வட்டமாக அறுத்தெடுத்த தடம் நெஞ்சில் தெரிந்தது. எப்போதோ எடுக்கப்பட்டிருக்கவேண்டும். உள்ளங்கை அகலப் பெரிய தழும்பு அழுக்குப் பதிவிலும் வழவழத்து வட்டமாகத் தெரிகிறது. அவள் முனங்குவதைக் கேட்டு, ‘சரி போ ஆத்தா நீ புடுங்குனதுதான்’ என்றான் ரெடிமேடு கடையில் குச்சியோடு நின்றிருந்தவன்.
”ஒரு முலைய அறுத்திட்டா விட்டுருவேனா. திருகி எறிஞ்சேன்னா ஊரே சாம்பலாகிரும். இப்ப எறியவா பத்தினிடா நான். அந்த மீனாட்சிக்குத் தெரியும்டா நான் யாருன்னு.”
அந்தக் கடைக்காரன் வேகமாகக் குச்சியை ஓங்கிக் கொண்டுவர இடது பெருமுலை மேலெழுந்து தாழ ஒடியவள். ”டேய் இப்ப எரிச்சுப் போடவாடா. தூமயக்குடுக்கி மவனே” அடிவயிற்றிலிருந்து பெருங்கோவத்தைத் திரட்டி எடுத்துக் கத்தினாள். ”எரிச்சா பிள்ளைகளெல்லாம் கரிகிப்போகும்டா. ஆத்தாடா நான்” அவள் கத்திக்கொண்டு வருவதைப் பார்த்து பூமாரி ஒதுங்கி நின்றான். அந்த முகமும் கண்களும் என்னமோ செய்தது.
பூமாரியின் நெஞ்சின் அடியாழத்திலிருந்து ஒரு உருவம் பெருகி மேலெழுந்து வந்தது. இவ்வளவு தடித்திராத உருவம் இவ்வளவு படர்ந்திராத முகம். இவ்வளவு கருத்திராத முகம் அழுக்கில்லாத எளிய சின்னமுகம். தாவணியில் மாவு இடித்துக்கொண்டிருந்த அக்கா உலக்கையை சுவரில் சாய்த்து விட்டு, மூக்கில் ஒழுகும் ஊளையைச் சீந்தச் சொல்லி சீத்தெடுத்து உதறி
தாவணியில் துடைத்து பள்ளிக்கு அனுப்பிய கோலம் அந்தக் கணத்தில் வந்தது. கைகால்கள் வெலவெலத்துவிட்டன. அவமானம் ஈரக்குலையை அறுத்தது. சட்டென பலமற்றுப் போய்விட்ட உடம்பு வெற்றுக்கூடு போல ஆகிவிட்டது. உடல் நடுங்கியது.
”ஐயோ அக்கா..” அவளை நோக்கி ஓடினான்.
அவளும் ஓட்டமெடுத்தபடி ”டேய் கிட்டவராதே இப்பயே நெருப்ப எடுத்து வீசுவேன்” கத்திக்கொண்டு ஓடினாள்.
”அக்கா, நான் பூமாரிக்கா…”
செவியில் உரைக்கவில்லை; முந்தானையின் நுனிப்பகுதி மேலெழுந்து மேலெழுந்து தரையில் இழுபட இன்னும் வேகமாக ஓடினாள்.
-சு.வேணுகோபால்
குறிப்பு: “தாயுமானவள்” சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் இச்சிறுகதை ஆசிரியரின் உரிய அனுமதிப் பெற்று ‘பெட்டகம்’ பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.