தமிழ் நவீன கவிதையின் தொடக்கக் காலமும், நவீன கவிதைகள் குறித்த  புரிதலும்.

பாரதியும் அவருக்குப் பின்னர் வந்த  மணிக்கொடி, எழுத்து போன்ற பத்திரிக்கைகளையும் அதில்  எழுதிய ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, சி.சு.செல்லப்பா, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களும் கவிஞர்களும் நவீன கவிதைகளின் பிதாமகர்களாகக் கருதலாம். எழுத்து காலகட்டத்திற்கு முன்பு   மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன், சூறாவளி போன்ற பத்திரிக்கைகள் இருந்தன. புதுக்கவிதை வடிவம் பெறுவதற்கு முன்புவரை வசன கவிதை நடை பிரபலமாக இருந்துள்ளது.

1939 ஏப்ரல் மாதம் க.நா.சு தனது சூறாவளி பத்திரிக்கையில் மயன் என்ற புனைப்பெயரில் எழுதிய மணப்பெண் என்ற கவிதையும், ஏறக்குறைய அதே காலகட்டத்தில் மணிக்கொடி இதழில் ந.பிச்சமூர்த்தி எழுதிய பெட்டிக்கடை நாரணன் என்ற கவிதையும்  புதுக்கவிதையின் தொடக்கமாகக் கருதலாம்.

நமது முந்தைய தலைமுறைக் கவிஞர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட வேற்றுமொழிகளை அறிந்து அங்குள்ள இலக்கிய வடிவத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்ததும், தமிழ் நவீன கவிதைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.   பொதுவாக அக்காலகட்டத்திலிருந்த பேசு பாஷையில் சப்த ஒழுங்குடன் கூடியதாகவும், சிலர் எதுகை மோனை நடையுடனும், வசனகவிதைகளையும், புதுக்கவிதைகளையும் எழுதினர்.

நவீன கவிதையின் தோற்றுவாயாக  மணிக்கொடி கால இதழ்களும் பின்னர் 1959ல் சி.சு.செல்லப்பாவின் எழுத்து காலகட்டத்தில் வந்த பத்திரிக்கைகளையும் குறிப்பிடவேண்டும். 1940 களில் மணிக்கொடி இதழில் எழுதப்பட்ட ந.பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடை நாரணன் என்ற கவிதை மீண்டும் சி.சு.செல்லப்பா எழுத்து பத்திரிக்கையைத் தொடங்கும்போது மறு பிரசுரம் செய்தார். புதுக்கவிதையின் தொடக்கக் காலத்திலேயே பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருகவிதை தன் பொலிவை இழக்காமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கவிதைக்கு கவிஞர்களுக்கிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து எழுத்து உள்ளிட்ட பத்திரிக்கைகளில் தமிழ் புதுக்கவிதைகள் பல்வேறு வடிவங்களில் வெளியாகத்தொடங்கின. கு.ப ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் வசன கவிதை எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் மணப்பெண் கவிதையும், பெட்டிக்கடை நாரணன் கவிதையும் மொழியில் புதிய மாற்றத்திற்கான தொடக்கமாக இருந்தது. 14.05.1939 ல் வெளியான மயனின் மணப்பெண் கவிதையிலிருந்து சில வரிகளையும், பெட்டிக்கடை நாரணன் கவிதையில் சில வரிகளையும் தற்போது வாசிப்பது இந்த அரங்கிற்கு உகந்ததாக இருக்கும்.

 முதலில் க.நா.சுவின்  கவிதை மணப்பெண் ;

திரையிட்டு மறைத்த முகமும்

பெண்மை ஏசும் பட்டாடையும்

மறைத்து வைக்கும்

உண்மை அறியாவண்ணம்

அழகி என்று

அவளை அறிவதெப்படி?

அவள் அழகி

ஆடை உடுத்தி

அழகுபடுத்தி

அலங்கரித்து

மணமேடை யேற்றிக்

கண்டின் புற்றது

நாங்கள்.

அவள் அழகைத்

திரையிட்டு மூடுவானேன்?

அழகு கண்டு

கண் மங்காதிருக்க

அவன் அதிர்ஷ்டம் கண்டு

பிறர் பொங்காதிருக்க

பின் அவளழகை உரக்கப் பாடுவானேன்?-

என்று தொடர்கிறது மயனின் கவிதை. புதுக்கவிதையின் தொடக்கக்காலத்திலேயே மனத்திறப்பு கொண்டு வெளியான கவிதையாக நினைக்க முடிகிறது.

நாரணன் பெட்டிக்கடையின்
நாமமே பரவலாச்சு.
இன்று கடன் இல்லை என்ற
எச்சரிக்கை எதிரே இருக்கும்
என் பேச்சு தேனாய்ச்சொட்டும்
குழைவிலே வாங்குவோர்கள்
வண்டாகி, பின்னர்
வாடிக்கைக்காரர் ஆக
ஆண்டிரண்டோடும் முன்னே
தத்வங்கள் பொய்க்கக்கண்டேன்.
பல தத்வங்கள் கவிழக்கண்டேன்
உயிரற்ற ஜடத்தில் பெருக்கம்
உண்டாகதென்ற கொள்கை
பொய்ப்பதை நானே கண்டேன்.

இருபது ரூபாய் முதலே
இருநூறாக மாறி
ஏற்றம் எனக்களிக்க
உருமாலை வாங்கிக்கொண்டேன்
ஓராளென ஆகிவிட்டேன்.
உருமாலை நாராயணனாய்
உருமாறி உயர்ந்தபின்னர்
அகமடியர் தெருவில் சின்ன
அங்கையற்கண்ணி மளிகைக்
கடையொன்று வைத்துவிட்டேன்.

 ஏறக்குறைய நவீன தமிழ்க் கவிதைகளின் தொடக்கமாக இருந்திருக்க இருக்கக் கூடிய இக்கவிதைகள் இரண்டும் சுய பகடியையும், ரசாவாதமான மொழியையும் கைக்கொண்டிருந்தது. எனவே இக்கவிதைகள் தமிழ்க் கவிதையின் சோதனை முயற்சிகளுக்கு முன்னோடியாக இருந்தன. இக்கவிதைகளின் வரவு ஏற்கனவே இருந்த வசனகவிதைகளுக்கும், பிரச்சார தொனியில் அமைந்த கவிதைகளுக்கும் மாற்றாகவும் இருந்தது.

 குறிப்பாகப் புதுக்கவிதையை யாப்பிலக்கணத்திற்கு கட்டுப்படாத, தன்னிச்சையாக இயங்கக்கூடிய கவிதையை சுயேச்சா கவிதை (1960 ல் எழுத்துவில் வந்த சுயேச்சா கவிதை என்ற கட்டுரையில் ) என்று பிரமிள் விவரிக்கின்றார். ஏறக்குறைய இதேபோன்று புதுமைப்பித்தனும்   கவிதை தனித்த நடையில் இயங்கக் கூடியதாக இருக்கவேண்டும் என்று எழுதியதாக பிரமிள் கூறியிருக்கிறார். முன்னதாக க.நா.சு சரஸ்வதி பத்திரிக்கையின் ஆண்டு மலர் ஒன்றில் முதன் முதலாக புதுக்கவிதை என்று பெயரிட்டு அழைக்கிறார்.

நவீன கவிதையின் பயன்பாடு என்ன, அதன் விளைவுகள்  என்பன குறித்து பல்வேறு ஆரோக்கியமான விவாதங்களையும், தர்க்கங்களையும் நமது முன்னோடிகளும், மூத்த கவிகளும்  பேசி அதிலிருந்து இன்றை நவீன கவிதை வடிவத்தை நாம் அடைந்திருக்கிறோம். இன்றைய நவீன வாழ்வில் ஒரு கவிதை வாசகனுக்குத் தரும் அம்சம் என்னவாக இருக்கக்கூடும் என்பதை மட்டும் பேசிப்பார்க்கலாம்.

உதாரணமாக பக்தி இலக்கிய காலகட்டத்தை எடுத்துக்கொண்டால்

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை யிணையடி நீழலே

நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து

நான் நடுவே

வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்

விரைகின்றேன்

ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா

அன்பு உனக்கென் மீது

ஊடகத்தே நின்றுருகத் தந்தருள் எம்

உடையானே

                         -மாணிக்கவாசகர்

இந்த இரண்டு பாடல்களும் சங்க இலக்கியப் பாட்டுகளுக்கும் நவீன தன்மைக்கும் இடையில் அமைந்துள்ளதைக் கவனிக்கலாம், இறைவனைத் தொழும் ஒரு பக்தனின் பரவச நிலையாக இதனைக் காணலாம்.

இத் தன்மைதான் பாரதியில்

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்த நல்லறிவு வேண்டும்

பண்ணிய பாவமெல்லாம்

பரிதிமுன் பனியைப்போல

நன்னிய நின்முன்னிங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்.

பாரதி குறிப்பிடுவதும் பரவசத்திற்கும் பக்திக்கும் இடைப்பட்ட தெளிந்த அறிவுதான் கவிதையின் மொழி.

.

தமிழ் நவீன கவிதையின் தொடக்கம் இவ்வாறு இருத்தது. பண்டிதப்போக்கும், இலக்கணமும், செய்யுள் வடிவமும், யாப்பும் விடுபட்டு ஒருவாறாகப் புதுக்கவிதை வரவு நிகழ்ந்தது. இக்காலகட்டத்திற்குப் பின்  உத்தேசமாக பிரமிள், நகுலன், சி.மணி, ஞானக்கூத்தன், ஷண்முகசுப்பையா, சுந்தர ராமசாமி உள்ளிட்ட பலர்  தொடர்ந்து புதுக்கவிதைகள் முயற்சிகளைச்செய்தனர்.  இவைதான் அற்புதமான மொழி நடைகளிலும், படிம அடுக்குகளிலும், அரசியல் பகடிகளாகவும், சுய பகடியும், தத்துவ விசாரத்துடனும் இன்றும் நீள்கிறது.

பிரமிளின் புகழ் பெற்ற காவியம் கவிதையை, நகுலன், ஞானக்கூத்தன்    ஆகியோரின் சிறிய கவிதைகளை இங்கு வாசிக்கிறேன்.

படிமக்கவிதைக்கு ஒரு எடுத்துக்காட்டாக பிரமிளின்

பாலை என்கிற ஒரு கவிதை

பார்த்த இடமெங்கும்

கண்குளிரும்

பொன்மணல்

என் பாதம் பதித்து

நடக்கும் இடத்தில் மட்டும்

நிழல்தேடி

என்னோடு அலைந்து

எரிகிறது

ஒரு பிடி நிலம். – பிரமிள்

நகுலனின் ஒரு கவிதை;

”யாருமில்லாத பிரதேசத்தில்

என்ன நடந்துகொண்டிருக்கிறது

எல்லாம். – நகுலன்

கையெழுத்து

மறையும் வேளை

என்று சொல்லுகிறார்கள்

பிரமலிபியும்

என்றுகூடச்

செல்லத்தோன்றுகிறது –நகுலன்

”திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்

தலையை எங்கே வைப்பதாம் என்று

எவனோ ஒருவன் சொன்னான்

களவு போகாமல் கையருகே வை” என்றார் ஞானக்கூத்தன்.

இக்கவிதை மரபு கூடிய விரைவில்  நூற்றாண்டு காணவிருக்கும் நவீன புதுக்கவிதை தன்னை பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தியுள்ளதை நாம் காணலாம். கவிதையின் அகவொளி  பல்வேறு கவிஞர்களின் வாழ்க்கையின் வாயிலாகவும், மொழியின் வாயிலாகவும் மாற்றப்படுத்திக்கொள்கிறது .அது

படிமக்கவிதை, தத்துவார்த்த கவிதை, இருத்தலியல் நோக்குகொண்ட கவிதை, படிமக் கவிதை, பின்நவீனத்துவக் கவிதை, பின் காலனியக் கவிதை எனப் பல அடையளங்களைக்கொண்டு மாறியுள்ளது. கலையும், இலக்கியமும், இன்னபிற படைப்பாக்கங்களும் நவீன வாழ்விற்கு எந்த பலனையும் தராமல் போவது போலத்தோன்றலாம், அது உண்மையல்ல மனித குலத்தின் இந்த அளவிற்கான நாகரீகச் செயல்பாடுகளுக்கும், பண்பாட்டுத் தன்மைகளுக்கும், குண வார்ப்புகளுக்கும் மறைமுகமான காரணங்களாக இருந்து வருகின்றன.

 நீரில் தெரியும் நெற்கதிர்கள்

சொர்க்கத்தின் விளைச்சல்கள்

அவற்றை நாம் நேரடியாக

அறுவடை செய்யமுடியாது

என்ற தேவதேவனின் வரிகளைப்போலக் கலை இலக்கியங்களின் நேரடிப்பலன்களை நாம் காண இயலாது, ஆனால் அறுவடை இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.