இன்றைக்கும் காந்தியடிகள் பொருத்தமாக இருப்பதற்கானப் பத்து காரணங்கள் ஆங்கில மூலம்: ராமச்சந்திர குஹா

(மகாத்மாவின் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு சில சிந்தனைகள்)

டுத்த வாரம், மகாத்மா காந்தியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவை அனுசரிப்போம். அவர் உயிர்நீத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றைக்கும் காந்தியார் பொருத்தமானவராக இருக்கிறாரா? இனியும் அவர் பொருத்தமானவராக இருப்பாரா? 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தில் காந்தி, அவரது வாழ்க்கை, அவரது கருத்துகள் ஏன் இன்னும் பொருத்தமானவையாகக் கருதப்படுகின்றன என்பதற்கான பத்து வலுவான காரணங்களை இந்தப் பத்தியில் நான் முன்வைக்கிறேன்.

காந்தி பொருத்தமானவர் என்பதற்கான முதல் காரணம், அநீதியான அதிகாரத்தை எதிர்ப்பதற்குப் படைபலத்தைப் பயன்படுத்தாத வழிமுறையை  அவர் இந்தியாவிற்கும் உலகிற்கும் வழங்கினார். இதில் சுவராசியம் என்னவெனில், 1906 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினொன்றாம் தேதியன்று ஜொகானஸ்பர்க்கின் எம்பயர் தியேட்டர் கூட்டத்தில் இனப் பாகுபாடு சட்டங்களுக்கு எதிராக காந்தியின் தலைமையில் அங்கிருந்த இந்தியர்கள் போராடிய போது அவர்களை நீதிமன்றம் கைது செய்யத் தீர்மானித்த சமயத்தில் சத்தியாகிரகம் என்கிற யோசனை உதயமானது.  இது நடந்து தொண்ணூற்றைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, உலக வர்த்தக மையம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. செப்டெம்பர் 11 அன்று இரண்டு நிகழ்வுகள்: ஒன்று, வன்முறையற்ற போராட்டம், தனிப்பட்ட தியாகம் மூலம் நீதி கோரியது; இன்னொன்று,  பயங்கரவாதம், படைபலம் மூலம் எதிரியை மிரட்ட முற்பட்டது.

அநீதிக்கு எதிரான எதிர்ப்பின் வடிவமாக வேறு எந்த மாற்று வழிகளைக் காட்டிலும் சத்தியாகிரகம் மிகவும் தார்மீகமானது, பயனுள்ளது என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் இதன் முதல் செயல்பாட்டுக்குப் பிறகு, காந்திய முறை பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவில் நடைபெற்ற குடிசார் உரிமைப் போராட்டம் ஆகும். 

காந்தி பொருத்தமானவர் என்பதற்கான இரண்டாவது காரணம், அவர் தனது நாட்டையும் கலாச்சாரத்தையும் நேசித்தார், அதே நேரத்தில் அதைச் சிதைக்கும் பண்புகளை உணர்ந்து அவற்றைச் சரிசெய்ய முயன்றார். வரலாற்றாசிரியர் சுனில் கில்னானி ஒருமுறை, `காந்தி ஆங்கிலேயர்களுடன் மட்டும் போராடவில்லை, அவர் இந்தியாவையும் எதிர்த்துப் போராடினார்’ எனக் குறிப்பிட்டார். அவரது சமூகமும், நம்முடைய சமூகமும் ஆழமான, பரவலான சமத்துவமின்மையால் வகைப்படுத்தப்படுவதை அவர் அறிந்திருந்தார். இந்தியர்களை உண்மையான சுதந்திரத்திற்கு மிகவும் தகுதியானவர்களாக மாற்றுவதற்கு அவரது விருப்பத்திலிருந்து எழுந்ததுதான் தீண்டாமைக்கு எதிரான அவரது போராட்டம். ஒரு முழுமையான பெண்ணியவாதியாக அவர் எந்தவொரு வகையிலும் இல்லாவிட்டாலும், பெண்களை பொது வாழ்க்கைக்குக் கொண்டுவருவதற்கு அவர் பெருமளவில் முயன்றார்.

காந்தி பொருத்தமானவர் என்பதற்கான மூன்றாவது காரணம், அவர் ஓர் இந்துவாக இருந்தபோதும் நம்பிக்கையின் அடிப்படையில் குடியுரிமையை வரையறுக்க மறுத்துவிட்டார். சாதி இந்துக்களை நெடுவாக்கில் பிரித்தால், மதம் இந்தியாவைக் கிடைமட்டமாகப் பிரித்தது. காந்தி இந்த நெடுவாக்கிலான பிரிவினைகளுக்கும் வரலாற்று ரீதியாக எதிரெதிராக இருக்கும் முகாம்களுக்கு இடையிலும் பாலங்களை உருவாக்கப் போராடினார். இந்து-முஸ்லிம் நல்லிணக்கத்தைப் பின்தொடர்வது ஒரு நிலையான கவலையாக இருந்தது; அவர் அதற்காகவே வாழ்ந்தார், இறுதியில் அதற்காகவே இறக்கவும் தயாராக இருந்தார்.

காந்தி பொருத்தமானவர் என்பதற்கான நான்காவது காரணம், குஜராத்தி கலாச்சாரத்தில் மூழ்கியிருந்தாலும், குஜராத்தி உரைநடைகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தபோதும், அவர் குறுகிய மனப்பான்மை கொண்ட பிராந்தியவாதியாக இருக்கவில்லை. தன் மதத்தைத் தவிர மற்ற மதங்களிடமும் அன்பு இருந்ததைப் போலவே, தன் மொழி அல்லாத பிற மொழிகளிடத்திலும் அன்பு இருந்தது. இந்தியாவின் மதம், மொழியியல் ஆகியவற்றின் பன்முகத்தன்மை பற்றிய அவரது புரிதல் அவர் புலம்பெயர்ந்த ஆண்டுகளில் ஆழமடைந்தது, அவருடைய நெருங்கிய தோழர்களாக இந்துக்கள் மட்டுமல்லாமல்  முஸ்லிம்களும் அல்லது பார்சிகளும்  இருந்ததோடு குஜராத்திகளைப் போலத் தமிழ் பேசக்கூடிய தோழர்களும் இருந்தனர்.

காந்தி பொருத்தமானவர் என்பதற்கான  ஐந்தாவது காரணம், அவர் ஒரு தேசபக்தர் என்பதோடு சர்வதேசவாதியும் ஆவார். இந்திய நாகரிகத்தின் செழுமையையும் பாரம்பரியத்தையும் அவர் பாராட்டியதோடு 20 ஆம் நூற்றாண்டில் எந்த நாடும் கிணற்றுத் தவளையாக இருக்க முடியாது என்பதையும் அறிந்திருந்தார். ஒருவர் தன்னை இன்னொருவரின் கண்ணாடியில் பார்க்க அது உதவியது. அவரிடம் இந்திய தேசியத்தைப் போலவே மேற்கத்திய தாக்கங்களும் இருந்தன. அவரது தத்துவ, அரசியல் கண்ணோட்டம் கோகலேக்கும் ராய்சந்த்பாய்க்கு கடன்பட்டது போலவே டால்ஸ்டாய்க்கும் ரஸ்கினுக்கும் கடன்பட்டிருந்தது. அவர் ஹென்றி, மில்லி போலக், ஹெர்மன் கல்லென்பாக், சிஎஃப் ஆண்ட்ரூஸ் ஆகியோருடன் இன வேறுபாடுகளுக்கு அப்பால் ஆழமான நட்பை வளர்த்துக் கொண்டார். இவர்கள் அனைவரும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார்கள்.

நான் இங்கே சற்றே இடைநிறுத்திக் கொண்டு, காந்தி பாரம்பரியத்தின் இந்த ஐந்து அம்சங்கள் இல்லாமல் இருந்திருக்கும்பட்சத்தில் சுதந்திர இந்தியா உண்மையில் பயணித்த வழியை விட்டு விட்டு முற்றிலும் மாறுபட்ட பாதையை எப்படித் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும் என்பதை விளக்குகிறேன். உரையாடலுக்கு ஆதரவாகக் காந்தி வன்முறையைத் தவிர்த்துவிட அது ஒரு கட்சி சர்வாதிகார நாடாக இல்லாமல் (பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் அதன் சுயநிர்ணயத்துக்காக வன்முறைப் பாதையைத் தெரிவு செய்வது  தலைவிதியாக இருந்தது) பல கட்சி ஜனநாயக நாடாக உருவாக உதவியது. காந்தியும் பி.ஆர்.அம்பேத்கர் போன்றவர்களும் பாலின, சாதி சமத்துவத்தை வலியுறுத்தியதால் இந்தக் கொள்கைகள் நமது அரசியலமைப்பில் இடம் பெற்றன. காந்தியும் ஜவஹர்லால் நேரு போன்றவர்களும் மத, மொழி சுதந்திரத்தை வலியுறுத்தியதால், இந்தியா – மற்ற பல நாடுகளைப் போலல்லாமல் – உயர்ந்த மதம், உயர்ந்த மொழியின் அடிப்படையில் குடியுரிமையை வரையறுக்கவில்லை.

அம்பேத்கர், நேரு போன்றோர் வேண்டிக் கேட்டுக்கொண்டது போல, ஜனநாயகத்தையும் மக்களில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் நெறிமுறையுடனும் சுதந்திர இந்தியாவை உருவாக்க காந்தி மட்டுமே பங்களித்தார் என்று ஒருபோதும் நான் கூறமாட்டேன். இருப்பினும், அவர் தனது தலைமையின் மூலமாக ஜனநாயகம், கலாச்சாரப் பன்மைத்துவம் மற்றும் சமூக சமத்துவம் ஆகியவற்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததன் மூலம் ஒரு முக்கிய பங்களிப்பைச் செய்தார்.

காந்தி பொருத்தமானவர் என்பதற்கான ஆறாவது காரணம், அவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதோடு அதன் முன்னோடியும் ஆவார், அவர் கட்டுப்பாடற்ற வளர்ச்சியும் நுகர்வுக் கலாச்சாரமும் கிரகத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என்று முன்கூட்டியே எச்சரித்தார். 1928 டிசம்பரில் அவர் எழுதியது போல்: “மேலை நாடுகளைப் போல இந்தியா தொழில்மயமாக்கலை மேற்கொள்வதற்கு கடவுள் தடை செய்ய வேண்டும். ஒரு குட்டித் தீவு இராச்சியத்தின் (இங்கிலாந்து) பொருளாதார ஏகாதிபத்தியம் இன்று உலகையே சங்கிலியால் கட்டுக்குள் வைத்திருக்கின்றது. 300 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு முழு தேசமும் இதேபோன்று பொருளாதாரச் சுரண்டலுக்குச் சென்றால், அது உலகை வெட்டுக்கிளிகளைப் போல அப்பட்டமாக ஆக்கிவிடும்” என்றார். தொழில்மயமாக்கலின் முன்னோடியான மேற்கத்திய நாடுகளைப் போல மூலதனம், வளம், ஆற்றல் அதிகமாகத் தேவைப்படும் பாதையைப் பின்பற்றும்பட்சத்தில் வெட்டுக்கிளிகளைப் போல சீனாவும் இந்தியாவும் உலகை வெறுமையாக்கிடவிடக்கூடும் என அச்சமாக இருக்கிறது. காந்தி தனது வாழ்க்கையிலும் பணியிலும் கட்டுப்பாடுகளையும் பொறுப்புணர்வின் நெறிமுறைகளையும் பரிந்துரைத்தார். நமது கிரகத்தின் எதிர்காலம் அதை ஏற்பதில் சார்ந்திருக்கிறது.

காந்தி பொருத்தமானவர் என்பதற்கான ஏழாவது காரணம், புதிய சந்திப்புகள், புதிய அனுபவங்கள் மூலம் அவர் தன்னை வளர்த்துக் கொள்வதற்கும் பரிணமிப்பதற்குமான திறன் அவரிடம் இருந்தது. ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் என்ற பொருளாதார நிபுணரின் பெயரில் தவறாகக் கூறப்பட்ட ஒரு பிரபலமான மேற்கோள்: “உண்மைகள் மாறும்போது, நான் என் மனதை மாற்றிக் கொள்கிறேன். நீங்கள் எப்படி ஐயா?” 1934 ஆம் ஆண்டு உண்மையிலேயே காந்தி கூறிய மேற்கோள் இதுதான்: “நான் தேவையற்ற எதுவொன்றையும் சீரானதாக உருவாக்கவில்லை. நொடிக்கு நொடி எனக்கே நான் உண்மையாக இருந்தால், என் முகத்தில் தோன்றும் அனைத்து முரண்பாடுகளையும் நான் பொருட்படுத்த மாட்டேன்’ என்பது தான்.

அவரது வாழ்நாளில், காந்தி குறிப்பாக மூன்று முக்கியமான பிரச்சினைகளில் தனது மனதை மாற்றிக் கொண்டார். அவை இனம், சாதி, பாலினம் சார்ந்ததாகும், இவை அனைத்தின் மீதும் தான் இளமைக்காலத்தில் கொண்டிருந்த தவறான எண்ணங்களை பின்னாளில் அதிக முற்போக்கான நிலைகளுக்கு ஆதரவாகக் களைந்தார். சிந்திக்காத இனவாதியாக இருந்து, கொள்கை ரீதியான இனவாத எதிர்ப்பு வாதியாக மாறினார்; சாதிப் படிநிலைகளைத் தயக்கத்துடன் சவால் விடுவதிலிருந்து  நேரடியாகவும் தடையின்றியும் அவற்றை எதிர்கொண்டார்; பெண்களுக்கு அரசியல் சாராத பங்குகளை வழங்குவதிலிருந்து, பொது வெளியிலும் சுதந்திரப் போராட்டத்திலும் அவர்கள் பங்கேற்பதை முழு மனதுடன் ஊக்குவித்தார்.

காந்தி பொருத்தமானவர் என்பதற்கான எட்டாவது காரணம், தொண்டர்களைத் தலைவர்களாக உருவாக்கும் அரிய திறமை அவருக்கு இருந்தது. அவர் திறமையை அடையாளம் கண்டு, அதை வளர்த்து, வளர்த்து, பின்னர் அது  மேலும் வளர்வதற்குத் தனித்து விட்டு விடுவார். அவரிடம் திரண்ட சீடர்கள் பலர் பின்னாளில் தாங்களே வரலாற்றை உருவாக்குபவர்கள் ஆனார்கள். ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், கமலாதேவி சட்டோபாத்யாய், சி.ராஜகோபாலாச்சாரி, ஜாகீர் உசேன், ஜே.பி.கிருபளானி, ஜே.சி. குமரப்பா, சரளா தேவி (கேத்தரின் மேரி ஹெயில்மேன்) ஆகியோரோடு மற்றும் பலர் தொண்டர்களாக இருந்து தலைவர்களாக மாறியவர்களில் அடங்குவர்.

வருங்காலத் தலைவர்களை வளர்ப்பதில் காந்தியின் திறமை, சுதந்திர இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க மூன்று பிரதம மந்திரிகளின் இயலாமைக்கு மாறாக உள்ளது. அவர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, நரேந்திர மோடி ஆகியோர். இவர்கள் குணாதிசயத்திலும் அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையிலும் தங்களுக்குள் பெரிதும் மாறுபட்டவர்கள். இருப்பினும், ஒரு வகையில் இவர்கள் ஒத்திருக்கின்றனர். அது கட்சி, அரசாங்கம், மாநிலம் ஆகியவற்றைத் தங்களோடு அடையாளப்படுத்திக்கொள்ளும் போக்கு ஆகும். நேருவை விட இந்திரா இந்த தனிப்பட்ட அதிகாரத்தை ஒரு படி மேலே கொண்டுசென்றார், மோடி இந்திராவை விட இதை அதிகமாகக் கொண்டு சென்றார். இருப்பினும் அனைவரும் தங்களை ஏதோ ஒருவகையில் தவிர்க்க முடியாதவர்களாகவும், ஈடுசெய்ய முடியாதவர்களாகவும் பார்த்தார்கள். அடுத்த தலைமுறை தலைவர்களை வளர்ப்பதற்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. (அரசியலுக்கு வெளியே, அதிகாரத்தைத் தனிப்பயனாக்கும் இந்தப் பண்பு பல இந்தியப் பெருநிறுவனத் தலைவர்கள் மற்றும் இந்திய சிவில் சமூக அமைப்புகளின் தலைவர்களின் சிறப்பியல்பு ஆகும், அவர்கள் தங்களை அவர்களுடைய நிறுவனத்தோடு அடையாளப்படுத்திக் கொள்வதை ஊக்குவித்துக் கொள்கிறார்கள்.)

காந்தி பொருத்தமானவர் என்பதற்கான ஒன்பதாவது காரணம், எதிராளியின் கண்ணோட்டத்தைக் கருத்தில் கொள்ள அவர் தயாராக இருந்ததுடன், அவர்களை அணுகி மரியாதைக்குரிய சமரசம் செய்து கொள்ளவும் தயாராக இருந்தார். எனவே, ஜின்னா, அம்பேத்கர் போன்ற அரசியல் எதிரிகளுடனும், தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் இருந்த ஏகாதிபத்திய அதிபர்களுடனும் பொதுவான நிலையைக் கண்டறியப் பல ஆண்டுகளாகப் பொறுமை காத்தார். காந்திக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லை, அறிவார்ந்த அல்லது அரசியல் வேறுபாடுகள் மட்டுமே இருந்தன, இவற்றையும் அவர் தீர்க்க முடியும் என்று அவர் நம்பினார். வெறுப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலை அவரிடம் இருந்தது.

காந்தி பொருத்தமானவர் என்பதற்கான பத்தாவது காரணம் அரசியல் வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த வெளிப்படைத்தன்மையாகும். அவரது ஆசிரமத்திற்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாம்; அவருடன் யார் வேண்டுமானாலும் விவாதம் செய்யலாம்; உண்மையில், அது இறுதியில் நடந்தது போல், எவரும் அவரை அணுகி  அவரை கொலையும் செய்யலாம் என்கிற அளவில் இருந்தது. அவருடைய காலத்திலோ அல்லது நம்முடைய காலத்திலோ மற்ற அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது இது எப்படிப்பட்ட ஒரு வித்தியாசம்!

காந்தியின் வாழ்க்கையிலிருந்து நான் இங்கு கோடிட்டுக் காட்டிய பாடங்கள் இந்த நாட்டிற்கு மட்டும் பொருத்தமானவை அல்ல. இருப்பினும், ஆக்கிரமிப்பு மதப் பெரும்பான்மை, துஷ்பிரயோகமும் காழ்ப்புணர்வும் கொண்ட அரசியல் கலாச்சாரம், தலைவர்களின் அரசாங்கங்களின் பொய்கள், பொய்களைப் பரப்புதல், இயற்கைச்சூழலை சீர்குலைத்தல், ஆளுமை வழிபாட்டு முறைகளை உருவாக்குதல் போன்ற ஒரு சூழலில் இருக்கும் இந்தியாவுக்கு இது முக்கியமானது ஆகும்.

******************************

ராமச்சந்திர குஹாவின் புதிய புத்தகம், ”ரிபல்ஸ் அகெயின்ஸ்ட் தி ராஜ் (Rebels against the Raj)”, இப்போது கடைகளில் கிடைக்கிறது.

இந்தக் கட்டுரை முதலில் தி டெலிகிராப்பில் வெளிவந்தது அதன் பின் Scroll.in என்கிற இணைய தளத்தில் ஜனவரி 29, 2023 அன்று வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.