நான் அவளைக் கண்மூடித்தனமாகக் காதலித்தேன்! நாம் எதற்காகக் காதலிக்கிறோம்? இந்த உலகத்தில் ஒருவரை மட்டும் பார்த்து, அவரை மட்டும் உயிராய் நினைத்து, நம் இதயத்தினுள் ஒரே ஆசையாய் அவரைக் கொண்டு, அவர் பெயரை மட்டும் உச்சரிக்கும் உதடுகளோடு வாழ்ந்து… இதெல்லாம் விசித்திரமானதல்லவா? காதலிப்பவரின் பெயர் நம் மனதின் ஆழத்திலிருந்து ஒரு நீரூற்றாய் ஓயாமல் மேலெழுந்து, உதடுகளின் மேல் நின்று, நம்மைத் திரும்ப திரும்பச் சொல்ல வைத்து, நிறுத்தாமல் அதையே முணுமுணுக்க வைத்து, அது நம் பிரார்த்தனையாகிறது.
நான் எங்கள் கதையைச் சொல்லப்போவதில்லை. காதல் எப்போதும் ஒன்றுதான்… அதற்கு எப்போது ஒரே கதைதான். நான் அவளைச் சந்தித்தேன், காதலித்தேன். அவ்வளவுதான். நான் மென்மையான அவளது கைகளில், ஸ்பரிசத்தில், பார்வையில், ஆடைகளில், பேச்சில்… அவளிடமிருந்து வந்த அனைத்திலும் உறைந்து, கட்டுப்பட்டு, சிறைப்பட்டு, பகலிரவு தெரியாமல்… இறந்தேனா வாழ்கிறேனா என்று தெரியாமல்… இந்த உலகத்தில்தான் இருக்கிறேனா அல்லது வேற்று கிரகத்தில் இருக்கிறேனா என்று தெரியாமல் ஒரு வருடம் வாழ்ந்தேன்.
அவள் இறந்துவிட்டாள். எப்படி? எனக்குத் தெரியாது, எனக்கு அதற்குமேல் தெரியாது.
மழை பெய்த அந்த மாலையில், அவள் சொட்டச் சொட்ட நனைந்து வீடு திரும்பினாள். அடுத்த நாள் அவள் இருமிக் கொண்டிருந்தாள். ஒரு வாரம் தொடர்ந்து இருமி, படுத்த படுக்கையானாள்.
என்ன நடந்தது? எனக்கு அதற்குமேல் தெரியாது.
டாக்டர்கள் வந்தார்கள். மருந்து எழுதிக் கொடுத்தார்கள், சென்றார்கள். மருந்து வாங்கி வரப்பட்டது. ஒரு பணிப்பெண் அவளை மருந்து குடிக்க வைத்தாள். அவளின் கைகள் சூடாக இருந்தன. அவளின் நெற்றி கொதிப்பாகவும், ஈரமாகவும் இருந்தது. அவளின் பார்வை ஒளிர்ந்தும், சோகமாகவும் இருந்தது. நான் அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவளும் என்னிடம் பேசினாள். நாங்கள் என்ன பேசினோம்? எனக்குத் தெரியாது. நான் சுத்தமாக மறந்துவிட்டேன். நடந்த அனைத்தையும் மறந்துவிட்டேன்! அவள் இறந்துவிட்டாள். நான் அவளின் கடைசி மூச்சைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். பலவீனமான கடைசி மூச்சு அது. அதைக் கண்ட அந்த பணிப்பெண் என்னிடம் “ஐயோ!” என்றாள். எனக்கு உடனே புரிந்துவிட்டது!
அதற்குமேல் எனக்கு ஒன்றும் தெரியாது. பிறகு நான் சந்தித்த பாதிரியார் கேட்டார்: “உங்கள் காதலியா?”. அவர் கேட்டது அவளை அவமதிப்பதாக எனக்குத் தோன்றியது. அவள்தான் இறந்துவிட்டாளே, அவளைப் பற்றிக் கேட்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. நான் அவரை வெளியே துரத்திவிட்டேன். மற்றொரு நல்லவர் வந்தார். அவர் மிகவும் மென்மையானவராகத் தெரிந்தார். அவர் என்னிடம் அவளைப்பற்றிப் பேசும்போது நான் அழுதுவிட்டேன்.
அவளது இறுதிச் சடங்கு பற்றி ஆயிரம் விஷயங்கள் என்னிடம் ஆலோசிக்கப்பட்டது. எனக்கு எதுவுமே புரியவில்லை. இருந்தாலும், அந்த சவப்பெட்டியும், அதில் அவளை வைத்து அடித்த சுத்தியின் சத்தமும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஐயோ! கடவுளே!
அவள்! அந்த சவக்குழி! அவள் அதில் அடக்கம் செய்யப்பட்டாள்! சில நண்பர்கள் வந்தார்கள். நான் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டேன். தலைதெறிக்க ஓடினேன்! பின், சில தெருக்களில் பல மணி நேரம் நடந்தேன். அதன் பிறகு நான் வீட்டிற்குத் திரும்பினேன். மறுநாள் நான் பயணம் செய்யப் புறப்பட்டேன்.
நேற்றுதான் பாரிஸுக்குத் திரும்பி வந்தேன்.
என் அறையை – எங்கள் அறையை, எங்கள் படுக்கையை, எங்கள் பொருட்களை – மீண்டும் நான் பார்த்தபோது, ஒருவர் இறந்தபின் ஒரு வீடு எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது. மீண்டும் துக்கத்தால் ஆட்கொள்ளப்பட்டேன். ஜன்னலைத் திறந்து, தெருவில் கிட்டத்தட்ட குதித்திருப்பேன். வீட்டிலிருந்த பொருட்கள், அவளைக் கட்டிப் பாதுகாத்த சுவர்கள், சுவரின் பிளவுகளிலுள்ள கண்ணுக்குத் தெரியாத அவளின் ஆயிரக்கணக்கான அணுக்கள், அவளின் சதை, அவளின் மூச்சு… இவற்றுக்கு இடையில் இருக்க முடியாமல், என் தொப்பியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டேன். வாசல் கதவை நெருங்கும்போது, ஹாலில் இருந்த பெரிய கண்ணாடியைச் சட்டென்று பார்த்தேன். அதில் தினமும் அவள் கால் விரல்களிலிருந்து தலை முதல் தன்னையே பார்த்துக்கொள்வாள். வெளியே போகும்போது, தன் அலங்காரம் முழுவதையும் – காலணியிலிருந்து, சிகை அலங்காரம் வரை – அனைத்தும் சரியாக அழகாக இருக்கிறதா என்று பார்ப்பாள்.
அடிக்கடி அவளைப் பிரதிபலித்த அந்த கண்ணாடியின் முன் நின்றேன். அவள் உருவம் பதிந்த கண்ணாடியே திரும்ப திரும்ப நினைவுக்கு வந்தது.
நான் அங்கே நின்று, நடுங்கிக் கொண்டிருந்தேன். கண்கள் அந்தத் தட்டையான, ஆழமான, வெறுமையான கண்ணாடியைப் பற்றிக் கொண்டது. உணர்ச்சி மிகுந்த என் கண்களைப் போலவே, என்னைப் போலவே, அதுவும் அவளை முழுமையாய் உள்ளடக்கியிருந்தது. அது நான் விரும்பிய அவளைப் போல் இருந்தது. நான் அதைத் தொட்டேன், அது குளிர்ந்திருந்தது! ஓ! நினைவு! நினைவு! சோகமயமான கண்ணாடி, எரியும் கண்ணாடி, வாழும் கண்ணாடி, கொடூரமான கண்ணாடி… அதுவே என்னை எல்லாச் சித்திரவதைகளையும் அனுபவிக்க வைத்தது! நினைவுகள் நழுவி, மறைந்துபோகும் பனிக்கட்டியைப் போல, அவளின் பாசத்திலும், அவளின் அன்பிலும்! தன் உள்ளத்திலிருந்த, தன் முன்னே நடந்த, தான் சிந்தித்த, தான் நினைத்த அனைத்தையும் மறக்கும் இதயம் கொண்டவர்கள் சந்தோஷமானவர்கள்! நான் துன்புறுகிறேன் !
என்னையும் மீறி நான் வெளியே சென்றேன். என்னை அறியாமலே, எனக்கு விருப்பமில்லாமலே, கல்லறையை நோக்கிச் சென்றேன். நான் அவளுடைய எளிய கல்லறையை, பளிங்குக் கல்லாலான சிலுவையைப் பார்த்தேன். அதிலிருந்த சொற்கள்: “அவள் நேசித்தாள், நேசிக்கப்பட்டாள், இறந்தாள்”
அவள் அங்கிருந்தாள், அதனடியில் அழுகியிருந்தாள்! என்ன கொடுமை! என் நெற்றி நிலத்தில் பட, நான் அழுதுகொண்டிருந்தேன்,
நான் நீண்ட நேரம் அங்கேயே இருந்தேன். பின், மாலைப் பொழுதானதை நான் உணர்ந்தபோது, வினோதமான, முட்டாள்தனமான, தீவிரமான ஒரு ஆசை என்னைப் பற்றியது. இரவை அவள் சமாதியில், அழுதுகொண்டே, அவளுடன் கழிக்க விரும்பினேன். கடைசி இரவு! ஆனால் என்னைப் பார்த்து விடுவார்களே! என்னைத் துரத்தி விடுவார்களே! என்ன செய்வது? நான் தந்திரமாக யோசித்தேன். எழுந்து, இந்த தொலைந்து போனவர்களின் நகரத்தில் அலைந்தேன். நடந்துகொண்டே இருந்தேன். நாம் வாழும் நகரத்திற்குப் பக்கத்திலுள்ள இந்த நகரம் எவ்வளவு சிறியது! இருந்தும் உயிருள்ளவர்களை விட இறந்தவர்களே அதிகம். நான்கு தலைமுறையாக வாழும் நமக்குத்தான் பெரிய வீடுகளும், தெருக்களும் தேவைப்படுகிறது. விடியும் பொழுதைப் பார்க்க, தண்ணீர் மற்றும் திராட்சை மதுவைக் குடிக்க, மற்றும் வெளியில் உட்கார்ந்து சாப்பிட நமக்குப் பரந்துபட்ட இடம் தேவைப்படுகிறது.
தலைமுறை தலைமுறையாய், வெவ்வேறு நிலையில் இறந்தவர்களுக்குக் கிட்டத்தட்ட எதுவுமே இல்லை. ஒரு களம்கூட இல்லை! பூமி அவர்களைத் திரும்பப் பெறுகிறது மற்றும் மறதி அவர்களை அழிக்கிறது. பிரியாவிடை!
உபயோகப்படுத்தப்பட்டிருந்த கல்லறையின் எல்லையில், எதிர்பாராமல் கைவிடப்பட்டிருந்த கல்லறை ஒன்றைக் கண்டேன். எப்போதோ இறந்தவர்கள் மண்ணோடு மண்ணாக ஆகியிருந்த இடம். சிலுவைகள் கூட தாமாகச் சிதைந்திருந்த இடம். புதிதாக வரப்போகிறவர்களைப் புதைக்க வேண்டிய இடம் அது. அங்கு, மனித சதை ஊட்டமளித்து தாமாகவே வளர்ந்திருந்த ரோஜாக்கள் மற்றும் அடர்ந்து திடமாய் வளர்ந்த சிப்ரஸ் மரங்களைக் கண்டேன்.
நான் தனியாக இருந்தேன். தனிமையில் இருந்தேன். ஒரு முதிராத மரத்தில் பதுங்கிக்கொண்டேன். அதன் அடர்ந்த, கருமையான கிளைகளுக்கு இடையில் நான் என்னை முழுவதுமாக மறைத்துக்கொண்டேன்.
ஒரு உடைந்த கப்பலின் மாலுமி அதன் அழிவில் எஞ்சியதைப் இறுக்கமாகப் பிடித்தது போல், ஒரு மரக்கிளையைப் பிடித்துக் காத்திருந்தேன் நான்.
இரவு இருண்டு, காரிருள் ஆனபோது, பதுங்கியிருந்த இடத்தை விட்டு நான் வெளியேறி, இறந்தவர்கள் புதைந்திருந்த நிலத்தின் மேல் கவனமாக, மெதுவாக, சத்தமில்லாமல் நடக்க ஆரம்பித்தேன்.
நான் வெகுநேரம் வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்தேன். என்னால் அவளது சமாதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கைகளை விரித்து, திறந்த கண்களுடன், சமாதிகளைக் கைகளால், கால்களால், முட்டியால், மார்பால், தலையால் முட்டிச் சென்றேன். அவள் சமாதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை! ஒரு குருடனைப் போலத் தடவி, உணர்ந்து வழியைத் தேடினேன். கற்களை, சிலுவைகளை, இரும்பு வேலிகளை, கண்ணாடி கிரீடங்களை, வாடிய மலர்மாலைகளைத் தொட்டுணர்ந்தேன்! எழுத்துகளைக் கடந்து வரும்போது, என் விரல்களால் பெயர்களைப் படித்தேன். மோசமான இரவு! பயங்கரமான இரவு! என்னால் அவள் சமாதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை!
நிலவு இல்லை! என்ன இரவு இது! நான் பயந்தேன். இந்தக் குறுகிய பாதையில், வரிசையான இரண்டு சமாதிகளின் நடுவில், கொடூரமான பயம்! சமாதிகள்! சமாதிகள்! சமாதிகள்! எங்கும் சமாதிகள் ! வலப்பக்கம், இடப்பக்கம், என் முன்னால், என்னைச் சுற்றி, எல்லாத் திசையிலும், சமாதிகள்! நான் அதனொன்றின் மேல் அமர்ந்தேன். என் முட்டிகள் மிகவும் சோர்வுற்று இருந்ததால், அதற்குமேல் என்னால் நடக்க முடியவில்லை. என் இதயம் துடிப்பதை என்னால் கேட்க முடிந்தது! பிறகு என்னால் இன்னொரு சத்தத்தையும் கேட்க முடிந்தது! என்ன அது? என்னவென்று சொல்லமுடியாத தெளிவற்ற சத்தம்! எங்கிருந்து வருகிறது இந்தச் சத்தம்? பீதியடைந்த என் தலையிலிருந்தா? ஊடுருவ முடியாத இந்த இரவிலிருந்தா? அல்லது இந்த மர்மமான நிலத்திலிருந்தா? மனித பிணங்கள் விதைக்கப்பட்ட நிலத்திற்கடியிலிருந்தா? என்னைச் சுற்றிலும் பார்த்தேன்!
எவ்வளவு நேரம் நான் அங்கே இருந்திருப்பேன்? எனக்குத் தெரியவில்லை. நான் திகிலில் முடங்கியிருந்தேன். நான் பெரும் பயத்தில் கத்தத் தயாராக இருந்தேன். சாகவும் தயாரானேன்.
திடீரென்று நான் அமர்ந்திருந்த பளிங்காலான கற்பலகை நகர்வது போலத் தோன்றியது. நிச்சயமாக அது நகர்ந்தது! யாரோ அதைத் தூக்குவது போல் இருந்தது. நான் தாவி பக்கத்து சமாதியின் மேல் குதித்து அதை பார்த்து மிரண்டு போனேன். ஆம், நான் குதித்து வந்திருந்த கல் நேராக நிற்பதைப் பார்த்தேன். அதில் இறந்திருந்தவர் தோன்றினார், வெறும் எலும்புக்கூடு வளைந்த முதுகுடன் அங்கு இருந்தது. அந்த இரவு அடர்ந்து இருந்தாலும், நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். நன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிலுவையில் இருந்ததை என்னால் படிக்க முடிந்தது:
“இங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர் ஜாக் ஒலிவன், ஐம்பத்தொன்று வயதில் இறந்தார். அவர் தன் சொந்தங்களை நேசித்தார். நேர்மையானவர். நல்லவர். கர்த்தரின் சமாதானத்தில் இறந்தார்.”
இறந்தவரும் சமாதியின் மேல் எழுதியிருந்ததைப் படித்தார். பின் அவர், பாதையிலிருந்த ஒரு சிறிய கூர்மையான கல்லை எடுத்து, அதன் மேல் தேய்த்தார். இல்லாத கண்களால் பார்த்து, செதுக்கப்பட்ட எழுத்துகளைச் சற்றுநேரத்தில் முழுவதுமாக அழித்தார். எரியும் தீக்குச்சியை வைத்து சுவரில் வரைவதைப் போல், ஆள்காட்டி விரல் எலும்பினால் ஒளிரும் எழுத்துகளை அவர் எழுதினார்:
“இங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர் ஜாக் ஒலிவன். ஐம்பத்தொன்று வயதில் இறந்தார். தன் தந்தையின் சொத்துக்கு ஆசைப்பட்டு, அவரைக் கொன்றார். அவர் மனைவியைக் கொடுமைப்படுத்தினார், அவர் குழந்தைகளை இம்சை செய்தார். மற்றவரை ஏமாற்றி, சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் திருடி, கெட்டவனாக இறந்து போனார்”
அதை எழுதி முடித்ததும், இறந்தவர் அசைவின்றி தான் எழுதியதைப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் திரும்பிப் பார்த்தபோது, அனைத்து கல்லறைகளும் திறக்கப்பட்டிருந்தன. எல்லாப் பிணங்களும் அங்கிருந்து வெளியேறி, அவர்களது பெற்றோர்களால் சமாதிக்கல்லில் செதுக்கப்பட்டிருந்த பொய்யை அழித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை உணர்ந்தேன்.
அங்கிருந்த எல்லாருமே சொந்தங்களைக் கொடுமைப் படுத்தியவர்களாக, வெறுக்கத்தக்கவர்களாக, நேர்மையற்றவர்களாக, கபடதாரிகளாக, பொய்யர்களாக, வஞ்சகர்களாக, அவதூறு பேசுபவர்களாக, பொறாமை கொண்டவர்களாக, திருடர்களாக, ஏமாற்றுபவர்களாக, வெட்கக்கேடான செயல்களைச் செய்தவர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால், இங்கே அவர்கள், நல்ல தந்தைகளாக, பற்றுள்ள மனைவிகளாக, அர்ப்பணிப்புள்ள பெண்களாக, கற்புக்கரசிகளாக, நேர்மையான வணிகர்களாக, குற்றமற்றவர்களாக அழைக்கப்பட்டார்கள்.
அவர்கள் எல்லாரும், இந்த உலகம் புறக்கணித்த அல்லது புறக்கணிப்பதுபோல் பாவனை செய்யும் கொடூரமான, மோசமான, உண்மையை, ஒரே நேரத்தில், அவர்களின் நித்தியவீட்டு முகப்பில் எழுதினார்கள்.
அவளும் அவளது சமாதியில் ஏதோவொன்றை எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றியது. இப்போது எந்தப் பயமும் இல்லாமல், பாதி திறந்திருந்த சவப்பெட்டிகள், பிணங்கள் மற்றும் எலும்புக்கூடுகளுக்கு இடையில், நிச்சயமாக அவளைக் கண்டுபிடித்துவிடுவேன் என்று நம்பி ஓடினேன்.
தூரத்திலிருந்தே, சவச்சீலையில் மூடப்பட்டிருந்த முகத்தைப் பார்க்காமலே, அவளிருந்த சமாதியைக் கண்டுபிடித்துவிட்டேன்.
பளிங்காலான சிலுவையில் முன்னால் எழுதப்பட்டிருந்தது:
“அவள் நேசித்தாள், நேசிக்கப்பட்டாள், இறந்தாள்”
ஆனால் இப்போது நான் அங்கே படித்தது:
“ஒரு நாள் தன் காதலனை ஏமாற்றி வேறொருவனுடன் வெளியே சென்றபோது அவள் மழையில் நனைந்து இறந்து போனாள்.”
மறுநாள் காலையில், சமாதியின் பக்கத்திலிருந்து யாரோ என்னை உயிரற்ற நிலையில் கொண்டுசென்றதாகத் தெரிந்தது.
–கி தே மாப்பசான்
தமிழில் – சஞ்சீவி ராஜா
இறந்தவள் என்ற இந்த எழுத்துப் பிரதி இதுவரை கற்பனை செய்திராத புதிய உலகங்களின் வாசல்களைத் திறந்து வைக்கிறது.
கருணையோடு இதனைத் தமிழுக்குத் தந்த கரங்களுக்கும் இலவசமாக இந்த எழுத்துலகங்களை நமக்கு அறிமுகப் படுத்தும் கனலிக்கும் நன்றி.
பாசாங்குகளும் பாவனைகளும் இல்லாத மொழிநடை கதைக்கருவோடு சிறப்பாகப் பொருந்திப் போவதையும் இங்கு கட்டாயமாகக் குறிப்பிட்டாக வேண்டும்.
மர்மம், திகில், அமானுஷ்யங்கள் எல்லாம் தரும் அனுபவங்கள் இதுவரை நாம்(ன்) அதிகம் அறிந்திராதவை. பெரிதும் பரீட்சயமில்லாதவை. புதிய உலகங்களை அறிமுகப்படுத்தி புதுமையான அநுபவங்களை உணரச் செய்யும் உங்கள் எல்லோரினதும் மொழிப்பணி இனிது வாழ்க!
நேசித்தாள் நேசிக்கப்பட்டாள் இறந்தாள் என்ற சொர்தொடரில், “இறந்தாள்” என்ற சொல் மயான பகுதியில் நிலையான்மையை நிறுவி கொண்டு இருக்கிறது.
வாழும்பொழுது தேவை படுகிற பரந்துபட்ட இடம் மற்றும் இறந்த பின்னான களமற்ற நிலையும் ; நினைவுகளும் காலத்தால் அழிக்கப்பட்டு விடும் என்ற நிதர்சனமும் இந்திய நிலையான்மை மரபு ஒத்து இருக்கிறது.
மொழிபெயர்ப்பு நேரடியாக இல்லாது, எழுத்தாளரின் உணர்வையும் கருவையும் மொழி கடந்து வாசகருக்கு கடத்துகிறது.
நல்லனுபவ வாசிப்பிற்கு நன்றி