“குரு – க்ஷேத்ரம்” – சிறுகதை


குரு

ணங்குகிறேன். தாங்கள் விதித்தபடியே தங்களையல்லாது, தங்களை நான் குருவாய் வரித்த பாவனையை வணங்குகிறேன். தாங்கள் ஏன் என் கனவில் வரவில்லை? தங்கள் உருவத்தை வெகுவாயும் மனத்தில் விளம்பிக் கொண்டு தாங்கள் வரவேணும், வரவேணும் என வேண்டி வேண்டிக் கிடந்தேன். தரிசனம் கிட்டவில்லை. தாங்கள் உருவங்களைக் கடந்த நிலையை எய்து விட்டதால், மறுபடியும் கனவிலும் கட்டுப்பட தங்களுக்கு மனமில்லையோ? ஆனால், “நீ முழு நம்பிக்கையோடும் உண்மையுடனும் என்னை நினைத்தால், நான் அப்போதே உன் கனவில் தோன்றக்கூடும்” என்று சொன்னீர்களே! எனக்கு நம்பிக்கையும், உண்மையும் போதவில்லையா? தங்கள் மனம் இரங்கவில்லையா?

மன்னியுங்கள்! மன்னியுங்கள்! தங்களை இரக்கமற்றவர் என்று நான் கனவிலும் நினைத்து உய்வேனோ? உங்கள் அடைக்கல வார்த்தைகளை மறைக்க முடியுமோ?” பூமியே வீடு, ஆகாசமே கூரையாயிருக்கையில், வந்தவனைப் போ என்றோ போவானை இரு என்று சொல்லவோ நான் யார்?” என்றீர்களே! தாங்கள் இருக்கையில், தங்கள் இரக்கத்தை நான் அறியவில்லை. இப்பொழுது சந்தேகங்கள் எழுகின்றன. நாம் அலைந்த இடங்களில், பகலில், மரத்தடியிலும், இரவில் மடத்திலும் என்னை நிறுத்திவிட்டு, தாங்கள் எடுத்து வந்த பிச்சை பூராவுமே சில சமயங்களில் என்னிடம் கொடுத்துவிட்டு, “எனக்குப் பசிக்கவில்லை” அல்லது “வயிறு சரியில்லை” என்று திருப்பிப் படுத்துக் கொண்ட போதெல்லாம் உண்மையைச் சொன்னீர்களோ? என் வயிறு பசியாதிருக்க, நீங்கள் பட்டினி கிடந்தீர்கள். எனக்காக வயிறு ஒடுங்கியே, தங்கள் புறப்பாடு அவசரப்பட்டுவிட்டதென்றே நினைக்கிறேன். தங்களையல்லாது, தங்களைக் குருவாய் நான் வரித்த பாவனையை வணங்குகிறேன். ஆனால் என் வயிற்றின் பொருட்டு பொய் சொன்னீர்கள். என்னால் உயிர் விட்டீர்கள், இப்படி எண்ணும் என் எண்ணத்தின் துணிச்சலை மன்னியுங்கள். எண்ணமே இல்லாது இருக்க என்னால் முடியவில்லை. பாபமோ, துணிச்சலோ எண்ணியது எண்ணியதுதான். அல்லது; எனக்கு மறதியை அருளுங்கள். ஆனால் தங்கள் ஆத்மா, தங்கள் கடைசி மூச்சில் ஏறிக் கொண்டு, புறப்படுகையில், என் செவியைத் தங்கள் உதட்டசைவின் மேல் குனிந்துக் கேட்ட தங்கள் இறுதிக் கட்டளை:

“…ற வாதே.”

`முதலெழுத்தைக் காற்றோ, இலைகளின் சலசலப்போ விழுங்கிவிட்டது. அதனால் என்ன? எதை மறவாதே என்று விதித்தீர்கள்? பின்னராயினும், என் கனவிலோ, தாங்கள் விட்டுச் சென்ற தங்கள் சொற்ப உடைமைகளிலோ இதுவரை விளக்கம் கிட்டவில்லை. ஒரு தடவை நாம் ஆற்று மணலில் உட்கார்ந்திருந்தோம். இருந்தாற்போல் இருந்து தாங்கள், “மணலைக் குவித்து அதில் குச்சியை ஒளித்துக் கண்டு பிடிக்கலாம்.” என்றீர்கள். எனக்கு வெட்கமாயிருந்தது. “நாம் என்ன குழந்தைகளா?” என்றேன். “பின் நாம் என்ன பெரியவர்களா? பெரியவர்கள், குழந்தைகளை அளக்கும் உன் கோல் எது? குழந்தையாயிருக்க வலிக்கிறதா? இருக்கத்தான் முடியுமா? வெளியில் சொன்னால் வெட்கக்கேடு, நாம் பெரியவர்களும் இல்லை. பெரிய பதவியைத் தேடி வந்திருக்கிறாய். வெட்கப்பட்டால் முடியுமா? வா, வா…” விளையாடினோம்;  சுவாரஸ்யமாய்த்தானிருந்தது.

நம்மிடையில், நாம் குவித்த அவ்வளவு சிறிய மணல் கரையுள், எப்படி அவ்வளவு தினுசுகளில் தங்களால் ஒளிக்க முடிந்தது? என் வியப்பை தங்களிடம் நான் வெளியிட்டபோது, தாங்கள் குச்சியை ஒளித்த இடத்தின் மேல் கையை அறைந்து ஊன்றிக் கொண்டு, “ஆத்ம நாதா, நான் இப்படி ஆகுமுன், ஒரு ஜேப்படி” என்றீர்கள். எனக்குக் கண்ட அதிர்ச்சியில் என்னையறியாமலே என் கைகள் சடக்கென்று இழுத்துக் கொண்டன. ஆனால் அதைக் கண்டு கொள்ளாதது போல், மேலும்: “இதுவரை நான் கையும் பிடியுமாய் அகப்பட்டுக் கொண்டதில்லை. ஒளிக்கவும், ஒளிக்கும் இடங்களும் எனக்கு அற்றுப்படி. சரி குச்சியைத் தேடுவோம்….” ஆனால் குச்சி அகப்படவில்லை. மண் குவியலையும் அதன் சுற்றுப்புறங்களையும் சல்லடை போட்டு சலித்துப் பார்த்தாயிற்று. ஊஹூம், கிடைக்கவில்லை. ஆனால், இதற்காக ஏன் தங்களுக்குத் திடீரெனக் கொஞ்சம்கூட அவசியம், ஏன், நியாயம் கூட இல்லாத இவ்வளவு பரபரப்பு, திகில்? “இது விளையாட்டு. கெட்டுப்போனது மாணிக்கம், வைரம் இல்லை” என்று ஒரு முறைக்கு இருமுறையாய் நான் ஞாபகமூட்டியும், நீங்கள் தேறவில்லை. அன்றுதான் எனக்கு நினைவு தெரிந்து, உங்கள் அன்புக் குரல் சற்று தடித்தது. நான் விளையாடவே இல்லை, உன்னை நான் விளையாடவே அழைக்கவில்லை. ‘விளையாட்டு’ என்கிற வார்த்தையே என் வாயில் வரவில்லை. சரியாய் நினைவு படுத்திக் கொள். எனக்கு விளையாட்டே கிடையாது. மாணிக்கமும் வைரமும் எனக்கேதுக்கு? அவரவர்க்கு அவரவர் மதிப்பு. ஒளித்த பொருள் மாணிக்கமோ வைரமோ, வெறும் நெருப்புக் குச்சியோ – காணோம் என்றால் என்ன அர்த்தம்? அதைக் கண்டு பிடிக்க முடியாவிட்டால், அது இல்லை என்று அர்த்தமா?” எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “இல்லை, அதற்குக் காலும் கையும் முளைத்து. தானே ஒளிந்து கொண்டது என்று அர்த்தம்” என்றேன். உங்கள் முகம் சட்டென மாறியதைக் கண்டதும் தான் நான் இழைத்த அவமரியாதை புரிந்தது. “வாய்க் கொழுப்பை மன்னித்து விடுங்கள்” என்று உங்கள் பாதங்களில் என் தலையை வைக்கக் குனிந்தேன். ஆனால் நீங்கள் தடுத்துவிட்டீர்கள். உங்கள் பார்வை, எனக்குப் பின்னால், தன் நிழல்கூட படாது நின்று, உங்களுக்கு மாத்திரம் படும் எதையோ வெறித்தது. முகம் வெடித்து விடும் போல் உப்பிற்று. “ஆத்மநாதா, நீ சொன்னது உண்மை, உண்மை. முக்காலும் உண்மை. அது ஒளிந்து கொண்டது. ஆத்மநாதா நான் ஏமாந்து போனேண்டா-” குழந்தை போல் விக்கி விக்கி அழுதீர்கள். தங்கள் துயரம் தங்களை எரிக்கையில், பார்க்க பயமாயிருந்தது. அதன் அனல் என்மேல் வீசுகையில், என்னுடைய நெஞ்சுள் ஏதோ இளகிப் புரண்டு, இடறிற்று.

நாம் தேடியது குச்சியா? யாவதிலும் ஒளிந்து கொண்டிருக்கும் அர்த்தம் இது தானா? அதைத் தேடுவதும் இதுதானா? அன்று இரவு இருப்பே கொள்ளவில்லை. புரண்டு முனகினேன். மையிருளில் எதிர்த் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் உங்கள் வடிவக் கோடுகள் தெளிவிலாது தெரிந்தன. லேசாக இலை அசைந்தால் கூட உயிர் பிசகும் மோனம். எதிர்த் திண்ணையிலிருந்து, பல மைல்களுக்கப்பாலிருந்து உங்கள் குரல் எட்டிற்று. “ஆத்மா, தூங்குகிறாயா?” “விழித்துக் கொண்டு தானிருக்கிறேன்.” “ஆத்மா, நான் இப்படி ஆகுமுன் ஒரு பெரிய ஜேப்படி.” நான் பதில் பேசவில்லை. நான் பேசவே என்ன இருக்கிறது! கருவானில் ஒரு நட்சத்திரம் – ஒரே நட்சத்திரம்! தனித்து நிலைகலைந்து ஊசலாடுகிறது. அதன் தவிப்பு பீதியை விளைவிக்கிறது. யாருடைய நட்சத்திரம்?

“அப்போது என் பிழைப்பே அதுதான். இதற்குக் கூட்டில் வேலை செய்தால் தான் ஆபத்துக் குறைவு. ஆனால் நான் தனியாய்த்தான் வேலை செய்தேன். நான் எப்பவுமே தனி. நிறையோ குறையோ, எனக்குப் பங்கு இஷ்டமில்லை. அகப்பட்டுக் கொள்ளாதவரையில், அகப்பட்டதெல்லாம் என்னுடையது. அகப்பட்டுக் கொண்டால்? அதுவும் என்னுடையதுதான். நம்பினவன் காட்டிக் கொடுத்து விட்டான் என்கிற சந்தேகத்துக்கு வழியில்லை அல்லவா? காரியம் எப்படியோ, அதைத் தனியாய்ப் புரிவதில் இந்த நிறைவு, தூய்மை காணலாம். எது விளைந்தாலும் என்னுடையது, யாருக்கும் பங்கு இல்லை. ஆனால், அதிர்ஷ்டம் ஒன்றே போல் இருக்குமா? ஒரு சமயம் பத்து ரூபாய் நோட்டு கிடைக்கும். ஒரு சமயம் வெறும் வண்ணான் சீட்டை, பணத்தை விடப் பத்திரமாய் பையில் ஒளித்து வைத்திருக்கும். கடைசி சமயம் – (எதற்கும் ஒரு கடைசி உண்டே!) ஒரு ‘பர்ஸ்’ அடித்தேன். என் ஆளின் மேல் வைத்த ஆரம்ப இலக்கை நழுவவிடாது. பின் தொடர்ந்து கொண்டே வந்து, தகுந்த சமயத்தில் கூட்டத்தில் பின்னாலிருந்து தள்ளி, அவன் மேல் விழுந்தடித்து ஓடுகையிலேயே அவன் ஜேபியுள் இரண்டு விரலைவிட்டு, தகடால் கிழித்து பர்ஸை வெளிப்படுத்தி, பறித்துக் கொண்டு, மடக்கி மடக்கி இந்தச் சந்தில் புகுந்து, அந்தச் சந்தில் திரும்பி, சிட்டாய்ப் பறந்தேன். அனுபவத்திற்குத்தான் அந்த வேகம் புரியும். கடைசியில், ஒரு குளத்தங்கரைப் படிக்கட்டில் உட்கார்ந்து, களவாடிய பர்ஸில் இருந்த பணத்தை, ஓடிவந்த மூச்சு இரைக்க இரைக்க எண்ணினேன். சில்லரையை விட்டுத்தள்ளு, பத்து ரூபாய் நோட்டுகள் சரியாய் முப்பது. நன்றாய்ப் பழகிய நோட்டுக்கள். நாலு பக்கமும் வீசி எறியாமல் நாலுபேர் கவனம் என் மேல் படாது செலவழித்தால், என் ஒண்டிக் கட்டைக்கு நாலு மாதங்களுக்குக் கவலையில்லை. எடுக்கிற விரல் துரு ஏறாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலை தவிர கோவில் ஸ்தூபியைப் பார்த்து, பர்ஸை கண்ணில் ஒற்றிக் கொண்டேன். மாலை மறையும் நேரம். கோவிலில் சாயங்கால தீபாராதனையின் கொட்டு முழங்கிற்று. நீராழி மண்டபத்துள் திடுக்கென்று ஒரு விளக்கு ஏற்றிக் கொண்டது. தோலும் சதையும் மெலிந்த ஒரு கிழவர், தலைமேல் கூப்பிய கைகளுடன் படித்துறை மேல் ஏறி வருகிறார் ஒரு மாத்வ மாமி தீர்த்தப்ரதட்சணம் செய்கிறாள். என் மனம் திடீரென, எனக்கே வியப்பாயிருந்த ஒரு நிம்மதியை அடைந்தது. மறுநாள் காலை, அதே குளத்தின் பக்கமாய்ப் போய்க் கொண்டிருந்தேன். படித்துறையில் ஒரு சின்ன கூட்டம். நாலைந்து கைகள் ஜலத்தில் சுட்டிச் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தன. காண்பித்த இடத்தில், ஒரு பெரிய துணிக் கொப்புளம் மிதந்தது. இந்த வேடிக்கையில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியுமா? மூணு தாண்டில் ஜலத்தின் விளிம்பையடைந்து நோக்கினேன். சிரம் மேல் கூப்பிய கைகளுடன் ஒரு உருவம் குப்புற மிதந்தது. நான் இரண்டாந்தரம் பார்க்க அவசியமேயில்லை. நேற்று நான் ‘ஜேப்படி’த்த சாக்ஷாத் அதே ஆள். எத்தனையோ தடவை களவாடிவிட்டு, பொருளைத் தோற்றவனுடன் சேர்ந்து, விளம்பரமாய் அவன் பொருளை தேடியிருக்கிறேன். அவன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கையில் நான் தைரியம்தர அவன் முதுகைத் தட்டியிருக்கிறேன். நான் நடத்தும் நாடகம் எனக்கே வேடிக்கையாக, சிரிப்பாயிருக்கும். ஆனால் இதுவரை எவனையும் அவன் சாவுக்கு அனுப்பியதில்லை. திக்பிரமை பிடித்து நின்றேன். கடைசி நிமிஷத்தில் முழுகி முழுகி எழுகையிலும் கூப்பிய கை பிரியாமல் இருக்கமுடியுமா? நான் காண்பது கண்கட்டு வித்தையா? எந்த மானத்தைக் காப்பாற்ற இந்தப் பணத்தை நம்பியிருந்தானோ அந்தப் பணத்தை இழந்ததால், உயிரைத் துறக்கும் அளவுக்கு உயிர் மேல் நம்பிக்கையிழந்தவன், உயிரினும் பெரிதாய் நம்பிக்கை வைத்து, சாவிலும் அவன் வணங்கிய அது எது?  அப்போதிலிருந்து இன்னும் என் கேள்விகளுக்குப் பதில் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆத்மா, உன்னால் சொல்ல முடியுமா? பதில்கள் இருக்குமோ? நான் தேடுவது சமாதானங்கள் அல்ல; சமாதானத்தைத் தேடுபவன் சமாதானம் அடைய மாட்டான்; எனக்கு வேண்டியது பதில். பதில் கிடைத்தவனுக்குத்தான் சமாதானம் கிட்டும்.” நான் பதில் பேசவில்லை. நான் பேசவே என்ன இருக்கிறது? அந்த நட்சத்திரம் இன்னமும் தனியாய்த் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

அந்த நிமிஷமே எனக்கு அம்மா, மனோவின் நினைவு எழுந்தது. அவ்வெழுச்சி வேகம் வயிறு குமட்டிற்று. எழுந்து உட்கார்ந்து நெற்றியை அமுக்கிப் பிடித்துக் கொண்டேன். அம்மா என்ன செய்கிறாளோ? முதலில் இருக்கிறாளோ இல்லையோ? ஏற்கெனவே தள்ளாமை. அவள் போகும் வரையிலாவது நான் காத்திருக்கலாம். மனோ என்னைக் காணோமே என்று மனமொடிந்து எங்கேயாவது குளம், கிணறைத் தேடிவிட்டாளோ? நான் வீட்டை விட்டுக் கிளம்பியபோது மனோ மூன்று மாத கர்ப்பிணி. அவள் தனக்கேதேனும் இழைத்துக் கொண்டால் அந்த பாவம் வேறு எங்கு போகும்? என்னைத்தானே சேரும்? குடும்பத்தை விட்டு வந்த பிறகு மறுபடியும் குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களுக்கு எனக்கு உரிமையுண்டோ? உண்டோயில்லையோ, எண்ணியது எண்ணியது தான். எண்ணமே இல்லாது இருக்க முடியவில்லையே! உண்மையில் நாம் எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம்? நானே எதற்காக மனைவியை விட்டு, வீட்டை விட்டு வந்தேன்? இப்பொழுதுதான் இந்தக் கேள்வி சந்தேகமாய் மாறி நெஞ்சு முள்ளில் இடறி உறுத்த ஆரம்பிக்கிறது. உயர, தூரத்தில் கவிழ்ந்து தத்தளிப்பது என் நட்சத்திரந்தானோ? இரவு பூரா புரிந்தும் புரியாததுமாய் எண்ணங்கள் எரிந்து எரிந்து, கீழ்வானில் சாம்பல் பூக்கிறது. நீங்கள் எதிர்த் திண்ணையில் கல்லாய்ச் சமைந்திருக்கிறீர்கள். இரவு முழுவதும் உங்கள் கண்ணும் இமைக்கவில்லை. அன்றிலிருந்து நீங்கள் இளைத்துக் கொண்டே வருகிறீர்கள். நாளுக்கு ஒரு இம்மி, ஆனால் நிச்சயமாய். மௌனம் தன் சிறகுகளை விரித்து, உங்கள் மேல் இறங்கியிருக்கிறது. உங்களிடம் ஒரு விரக்தியைக் காண்கிறேன். உங்களை உங்களிடமிருந்து கழற்றி எதற்கோ சமர்ப்பித்துவிட்டு, பிறகு அதன் இஷ்டத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். எதனிடம் அதன் இஷ்டத்திற்கு உங்களை ஒப்படைத்துக் கொண்டு விட்டீர்களோ, அது உங்களைக் கற்கண்டுக் கட்டியாய்ச் சப்புகிறது. நீங்கள் கரைகிறீர்கள். இப்படியே ஒரு நாள் காணாமல் போய்விடுவீர்கள் என்று எனக்கு திண்ணமாய்த் தெரிந்துவிட்டது. எனக்கு இப்படி எல்லாம் தோன்றுவதேனோ அறியேன். சாதாரணமாய், நான் என்னைச் சுற்றி கண்கூடாய்க் காணும் பொருள்களைப் பற்றிய எண்ணங்களின் தடத்தை மீறி சிந்திக்கச் சக்தியிலேன். எனக்குத் தோன்றுவதெல்லாம் சரியோ தப்போ, நிச்சயமாய், உங்களுக்குள் ஏதோ நேர்ந்து கொண்டிருக்கிறது. ஏதோ விலக்க முடியாதது. விபரீதமானது. மெலிய, மெலிய, பனி விலகினாற்போல், சட்டையுரித்தாற்போல், மெருகு ஏற்றினாற்போல் உங்கள் உடலில் ஒரு துலக்கம் காண்கிறது. காந்த விளக்கின் திரிபோல் முகத்தில் நீல ஒளி குளுமையாய் வீசுகிறது. எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. திகிலாயிருக்கிறது. உங்களை விட்டு அகலவும் மனம் இல்லை. பாதி ராத்திரியில், உங்கள் இடத்தில், நீங்கள் இல்லாமல் போய்விடுவீர்களோ என்ற பயத்திலேயே திடுக் திடுக்கென விழித்துக் கொள்கிறேன். நீங்கள் இருக்கிறீர்கள். இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ஏதோ இருப்பதால் இருக்கிறீர்கள். ஏன் இருக்கிறீர்கள்? என்று தோன்றுகிறது. தோன்றலாமோ? எதையோ எதிர்பார்த்துக் கொண்டு, அதற்காகக் காத்திருக்கிறீர்கள்.

*** ஓரிரவு. ஒரு சத்திரத்துத் திண்ணையில் தங்கியிருக்கிறோம். நான் சரியாய்ப் படுக்காது சுவரில் சாய்ந்து கொண்டிருக்கிறேன். கால் தூக்கத்திலும், அரைத் தூக்கத்திலும் என் தலை ஆடுகையில், ‘வீல்’ என்று ஒரு குழந்தையின் வீறல் கேட்டு, திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறேன். சுற்று முற்றும் பார்க்கிறேன். உங்கள் முகம் என் பக்கம் திரும்புகிறது. ஆசியில் உங்கள் கை உயர்கிறது. உங்கள் முகத்தில் தவழும் புன்னகையின் ஒளி கண் கூசுகிறது. தலை குனிகிறேன். ***

அம்மாவுக்குப் பிடித்தமான வாய் வழக்கு ஒன்று. “ஆமாம் – ஆணுக்கு அழகு என்ன வேண்டிக் கிடக்கு? ஆனை கறுத்தாலும் ஆயிரம் பொன். உங்கப்பா நெருப்பைக் குளிப்பாட்டினாப் போல் தான் இருப்பார். அவர் உடம்பில் அவர் வாய் ஒண்ணுதான் சிவப்பு, புகையிலையும் வெற்றிலையும் போட்டுக் குதப்பி எங்களுக்கு என்ன குறைஞ்சு போச்சாம்?” அம்மா சிவப்பு, நெருப்புச் சிவப்பு. அப்பா எப்படியிருப்பார் என்று அறியேன். அவர் போனபின் தான் நானே பிறந்தேன். அம்மா தன்னைக் கொண்டாடிக் கொள்வதற்காக, அப்பாவைக் கொண்டாடுகிறாளா? இல்லை அப்பாவை ஏளனம் செய்கிறாளா? இல்லை தன் வாழ்க்கைக் கொடுமைக்குத் தன்னைத் தேற்றிக் கொள்கிற தினுசு இப்படியா? அல்லது உண்மையாகவே தான் சொன்னபடி எண்ணினாளா – எதுவும் எனக்கு நிச்சயமாய்த் தெரியவில்லை.

*** ஆனால் உங்களை இப்பொழுது பார்க்கையில், ஆண்களுக்கு ஏன் அழகு இல்லை? என்றே தோன்றுகிறது. உங்கள். அழகு பிரமிக்கத்தக்கதாயிருக்கிறது. உங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குப் புல்லரிக்கின்றது. புரியாததோர் வேட்கை ஏற்படுகிறது. இது நல்லதா பொல்லாததா, இருக்கலாமா கூடாதா இதனுடைய அர்த்தம்தான் என்ன? நான் எதில் மாட்டிக் கொண்டேன்? – என் மனம் குழம்பித் தவிக்கிறது. எப்படியும் எண்ணியது எண்ணியது தான். ஆயிரம் அடக்கினாலும் தோன்றினது தோன்றியதுதான். அழகு என்பதே என்ன? விழி, நிறம், உடல் அங்க அமைப்புகளின் எடுப்பா? அல்லது; அன்பு, தயை, ஆண்மை, சாந்தம், கருணை, இவை போன்ற உயர்ந்த குண விசேஷங்களின் வெளித் தோற்றத்தின் சிறப்பா? அல்லது, இரண்டுமா? சத்தியம்? சத்தியத்தைக் கண்டவர் யார்? கண்டவர் சொன்னவர் யார்?ஆனால் இப்பொழுது உங்களிடமிருந்து வெளிப்படும் உள்ளொளியைத்தான் அழகாய்க் காண்கிறேன். இந்த அழகை உங்கள் முகத்தில் காண்கிறேனோ? அதன் இனிமையிலா? அல்லது உங்கள் மௌனத்திலா? தெரியவில்லை. இவையெல்லாவற்றையும் மீறி அது பிரகாசிக்கின்றது. அது உங்களிடத்தில் இல்லை. இனி நீங்களே அதில்தான் இருக்கிறீர்கள். உங்கள் உடற்கண்களிலிருந்தே புறப்பட்டு உங்கள் காலடி ஆதாரத்தையே அது வெட்டியாகிவிட்டது. எதிலோ மாட்டிக் கொண்டு அதில் மூழ்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதிலிருந்து தப்ப உங்களுக்கு இனி வழியில்லை. நான் பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பயமாயிருக்கிறது. ஆனால் உங்கள் முகத்தில் கொஞ்சமும் பயமில்லை. துளிக்கூட துக்கமில்லை. சந்தோஷமில்லை. ஏதோ ஒரு தெளிவுதான் தெரிகிறது. நீங்கள் தூங்குகிறார்கள்? நீங்கள் உங்கள் உடம்பைக் கீழே சாய்த்து நான் பார்த்து எவ்வளவோ நாட்களாகிவிட்டன. அதை நிறுத்தி விட்டீர்கள். இரவில் நான் கண்ணயரும்போதும், இடையிலோ, விடிவிலோ, விழிப்பு வரும் போதெல்லாம் உங்களைப் பார்ப்பேன். அசைவற்று உட்கார்ந்து கொண்டேயிருக்கிறீர்கள்.

ஒரு சமயம், நாம் ஒரு நந்தவனத்தில் பாழ் மண்டபத்தில் இரவு தங்கியிருக்கிறோம். இரவெல்லாம் சரியான தூக்கம் இல்லை. விடிவேளையில் கண் அயர்ந்துவிட்டேன். எனக்கு விழிப்பு வந்தபோது நன்றாகப் பொழுது புலர்ந்து விட்டது. உங்களைக் காணோம். அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருக்கிறேன். என்றேனும் ஒருநாள் இம்மாதிரி நேர்ந்துவிடும் என்கிற திகில் என் நெஞ்சத்தில் வேரூன்றி விட்டது. ஆனால், பூச்செடிகளுக்கிடையில் வளைந்த பாதையில் மெதுவாய் நடந்து வருகிறீர்கள். செவ்வானத்திலிருந்தே, மேகங்களின் படிக்கட்டின் வழி, நீங்கள் இறங்கி வந்திருப்பதாய் எனக்கு ப்ரமை தட்டுகிறது. கண்ணைக் கசக்கிக் கொள்கிறேன். ஒரு சூர்யகாந்திப் பூ காற்றில் அசைந்து தங்கள் பக்கமாய் தலையை ஆட்டுகிறது. அதன் எதிரில் நீங்கள் தயங்கி நிற்கிறீர்கள். அது அப்பனைக் கண்ட குழந்தை போல் தங்கள் பக்கமாய் சாய்ந்து, இன்னும் பரபரப்பாய் நர்த்தனம் ஆடுகிறது. உங்கள் முகத்தில் புன்னகை தவழ்கிறது. ஒற்றை நாடியாய் – அம்பு போல் நிமிர்ந்த முதுகும், மார்மேல் கட்டிய கைகளும் தகதகக்கும் உங்கள் மேனியும், உங்கள் முகத்தின் தேஜஸ் – திடீரென்று உங்களிடம் ஒரு தரிசனம் மலர்கிறது. அதைக் கண்ட எனக்கு மயிர் கூச்செறிகிறது. நீங்கள் மெதுவாய் நகர்கிறீர்கள். நந்தவனத்தில் ஓடும் வாய்க்காலை நோக்கி நடக்கிறீர்கள். நீங்கள் அந்தண்டை போனதும் நான் எழுந்துபோய் அந்தப் பூவண்டை நின்றேன். மெய்யாவே இவ்வளவு பெரிய முகம் நான் பார்த்ததில்லை. விரல்களை அகல விரித்த ஒரு பெரிய உள்ளங்கையளவிற்கு காற்றின் கிறுக்கில், முக வேற்றுமையுள்ள குழந்தை போல் அது அஞ்சி, பின்னுக்கு வாங்கிற்று. திடீரெனத் தாங்கமுடியாததோர் வேட்கை என்னைக் கவ்விற்று. அதை எட்டினேன். எட்ட எட்ட தலையை ஆட்டிக் கொண்டு அது இன்னும் பின்னுக்கு வாங்கிக் கொண்டே போயிற்று. நானே கொஞ்சம் குள்ளம். அதன் பக்கமாய் சாய்ந்து சாய்ந்து, கால் கட்டை விரல்கள் மேல் நின்று, எட்டி அதைப் பறித்து விட்டேன். பறிக்க எட்டியது பிடிக்க எட்டவில்லை. செடியின் அந்தண்டைப்புறம் அடர்ந்த புதர் நடுவே அது தலையுருண்டு, சரிந்து விழுந்துவிட்டது. ஏமாற்றத்தில் சலிப்பும் வெறுப்பும் கோபமும் அடைந்து திரும்பி வாய்க்காலை நோக்கி நடந்தேன். படித்துறையில் நீங்கள் விழுந்து கிடக்கிறீர்கள். மார்மேல் வலது கையை அழுத்தியபடி, இடது கையின் முழங்கை மேல் உடம்பை ஊன்றிக் கொண்டு மார்வலியில் வளைந்து வளைந்து ஊசலாடுகிறீர்கள், உங்கள் முதல் ரத்தம் வடிந்து சுண்ணாம்பாய் வெளுத்திருக்கிறது. பதறி ஓடி வந்து உங்களை அணைத்து என்மேல் சார்த்திக் கொண்டேன். “ஆத்மா, ஆத்மா. ஏன் அந்தக் குழந்தையைக் கொன்றாய்?” உங்களுக்கு மூச்சடைக்கிறது. குரல் கம்மிவிட்டது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “நான் ஒன்றுமே பண்ணவில்லையே! எந்தக் குழந்தையை?” “அந்தப் பூ உன்னை என்ன பண்ணிற்று?” உங்களுக்கு எப்படித் தெரிந்தது? அந்த வியப்புகூட உடனே தோன்றவில்லை. “தெரியாமல் செய்துவிட்டேன், தெரியாமல் செய்து விட்டேன்” என்றுதான் திரும்பத் திரும்ப வாயில் வருகிறது. “ஆத்மா, எதையுமே கொல்லாமல் அனுபவிக்க முடியாதா? ஏன் இப்படி பிள்ளைக்கறி தின்று கொண்டேயிருக்கிறோம்?” “தெரியாமல் செய்து விட்டேன்; என்னை மன்னித்து விடுங்கள்.” கருணை சொட்டும் உங்கள் முகத்தில் வேர்வை ஜல கண்டமாய் கொட்டுகிறது. “மன்னிக்க நான் யார்? என் மன்னிப்பு அழித்ததைத் திரும்பத் தருமா? ஆத்மா, உலகம் முழுதும் வியாபகம் ஒரு உயிர் – ஒரே உயிர்தான். அதன் உருவங்கள் தாம் பல்வேறு, ஒரு இடத்தில் கழுத்தை முறித்தால், உயிரின் வேதனையில் இன்னொரு இடத்தில் மார் உடைகிறது. நீ அங்கே பூவைப் பறித்ததும், இங்கே நான் விழுந்து விட்டேன்.” எனக்கு அழுகை வந்துவிட்டது. வெட்கமற்று தேம்பித் தேம்பி அழுகிறேன். “ஆத்மா. என்னை மன்னிப்புக் கேட்பதைவிட நீ அழுது, உன்னையே மன்னிப்புக் கேட்டுக் கொள்வதுதான் நியாயம். உன் காரியங்களின் எடையை அறிய நீயிருக்கையில் நான் யார்? நான் அறிவதால் உனக்கு என்ன பயன்? நீ அழுது. நீயே அறி. அவரவர் வழி அவரவருடையது. ஆத்மா, என் வழியின் முடிவு நெருங்கி விட்டது.” “அப்படிச் சொல்லாதேயுங்கள் – சொல் – லாதே – யுங்கள் நான் என் செய்வேன்?” நீங்கள் புன்னகை புரிகிறீர்கள். “நீ செய்வதற்கு என்ன இருக்கிறது?” சற்று நேரம் இருவரும் பேசாமல் இருக்கிறோம். என் குரல் மெலிந்து வருகிறது. “என் மேல் கோபமா?” “கோபம், மன்னிப்பு – எவ்வளவு அர்த்தமற்ற வார்த்தைகள்!” உங்கள் குரலில் அசதி தட்டுகிறது. “செலுத்த இடமில்லாமல் நான் கோபத்தை வைத்துக்கொண்டு என் செய்வது? துயரமாய் மாற்றினாலாவது சுமையைத் தாங்கலாம், கோபத்தைத் தாங்க இயலாது.” எனக்கு நன்றாய்ப் புரிந்துவிட்டது. அநியாயமாக நான் உங்களைக் கொன்றுவிட்டேன். என் சுமையை உங்கள் மேல் தாக்கி, அதனடியில் உங்களை நான் நசுக்கி விட்டேன். மறுபடியும் அழுகை பீறிடுகிறது. பாதி இரவில் விழித்துக் கொள்கிறேன். இருளிலிருந்து உங்கள் குரல் மெத்தென்று வந்து என்னை அணைக்கிறது. “ஆத்மா, சௌக்கியமாயிரு.” என் எலும்பு உருகுகிறது. ஆயினும் ஏன் திடீரென இந்த ஆசி? என் கைகள் உங்களை நோக்கித் துழாவுகின்றன. “ஏன். என்னைத் தனியே விட்டு விட்டுப் போய்விடப் போகிறீர்களா?” “எங்கே போவது? உடல் கழன்றாலும் உயிர் இருந்து கொண்டேதானிருக்கிறது. குழந்தாய், மௌனம் என்னை அழைக்கிறது. பேச்சுக்கு விடை பெற்றுக் கொள்ளுமுன் உன்னிடம் சொல்லிக் கொள்கிறேன். ஆத்மா சௌக்யமாயிரு! – சௌக்கியமாயிரு!” இதுவே முடிவின் ஆரம்பம்.

நான் எடுத்து வந்த பிட்சையை எதிரே வைக்கிறேன். அதை அப்படியே என்னிடம் திருப்பி விடுகிறீர்கள். விளங்காது விழிக்கிறேன். அன்றிலிருந்து உங்களுக்கு ஆகாரமில்லை. தாங்கள் எதையும் தொடுவதில்லை. உங்களுக்கு ஆகாரம் செல்லவுமில்லை. ஒரு நாள் வலுக்கட்டாயமாய் நான் ஊட்டியே பார்க்கிறேன். உள்ளேயே இறங்காமல், கடைவாயில் வழிகிறது. நீங்கள் புன்னகை புரிகிறீர்கள். இனி எதற்கும் பதில், உங்கள் புன்னகைதான். இரவு முழுவதும் உங்களுக்குத் தூக்கமில்லை. நாள் முழுவதும் ஆகாரமில்லை. ஆனால் களைப்பின்றி வளைய வருகிறீர்கள். நீங்கள் இப்போது யார் கண்ணிலும் படக்கூட விரும்பவில்லை. ஜன நடமாட்டமில்லாத பாதைகளையும் ஏகாந்தமான இடங்களையுமேதான் தேடுகிறீர்கள். நீங்களே உங்களுக்கு அன்னியராகி விட்டீர்கள். அந்த அதிசயத்தைப் பார்க்கிறேன்.

சாலையோரத்தில் ஒரு அடர்த்தியான மாமரத்தடியில் தங்கியிருக்கிறோம். பட்டை வீறும் கோடை வெய்யிலில் காற்றின் அனலில் மூச்சு அடைத்துத் தலை சுற்றுகிறது. கானல் நடு நடுங்குகிறது. எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது. அன்று ஏனோ பிட்சை ஒரு கவளம் கூட கிடைக்கவில்லை. முன்பின் அறிகுறியிலாது நீங்கள் திடீரென எழுந்து நடக்கிறீர்கள். என்னைப் பார்க்காமல் நடக்கிறீர்கள். உங்கள் புன்னகையின் புதிரை எப்படி விடுவிக்க முடியும்? நானும் பின் தொடர்கிறேன். வெய்யிலில் என் முதுகு கன்றிப் போகிறது. ஆனால் நீங்கள் நிலவில் நடப்பது போல நிதானமாய் நடக்கிறீர்கள். உங்கள் தோள்களில் நீலச் சுடர்கள் பிறந்து ஆடுகின்றன. கண்ணைக் கசக்கிக் கொள்கிறேன். ஆனால் சற்று நேரத்துக்கெல்லாம், மீண்டும் அதே தோற்றம். சாலையோரத்தில் ஒரு பிச்சைக்காரி உட்கார்ந்திருக்கிறாள். அழுகிச் சொட்டும் உடல், ஒரு ஓட்டுச் சில்லால் தோளைச் சுரண்டிக் கொள்கிறாள். நீரும் ரத்தமும் கசிகின்றன. நேரே அவளிடம் போய் நிற்கிறீர்கள். இமைகள் கூழையாகிவிட்ட அவள் கண்கள் கூசி, இடுங்கி, உங்களை ஏற இறங்க நோக்குகின்றன. அடையாளம் கண்டு கொண்டாற்போல் அவைகளில் ஒரு வெளிச்சம். துள்ளி எழுந்து உங்கள் மேல் விழுந்து இறுக அணைத்துக் கொள்கிறாள். வியாதியில் தடித்த உதடுகள் உங்கள் வாயைக் கவ்விக் கொள்கின்றன. உங்கள் உயிரை, ஒளியை அவள் உறிஞ்சிக்குடிக்கும் கோரத்தை ஸஹிக்க முடியாமல் முகத்தைப் பொத்திக் கொள்கிறேன். கொக்கரிக்கும் சிரிப்பு. கண்களிலிருந்து என் கைகளையெடுத்தபோது அவளுடைய அடையாளம் கூடக் காணோம். நீங்கள் குன்றி, குறுகி, கருகி, சப்பிய தோலாய் வாடி, வதங்கி, சுருண்டு கீழே விழுந்து கிடக்கிறீர்கள். அலறிக் கொண்டே. உங்களை வாரி மரத்தின் நிழலுக்கு எடுத்துத் தூக்கிச் சென்று, அங்கு மெதுவாய்க் கிடத்துகிறேன். உங்களுக்கு பிரக்ஞையில்லை. திடீரென ஈ காக்கை கூட சொல்லி வைத்தாற்போல் அந்தப் பக்கம் காணோம். காற்று கூட அசையவில்லை. ஊமையாய் உங்கள் அருகில் உட்கார்ந்திருக்கிறேன். இந்தச் சமயத்தில் என் உணர்ச்சி எனக்குத் தெரியவில்லை. நெஞ்சையே ஒழித்துப் பெருக்கித் துடைத்து வைத்திருக்கிறது. வெய்யில் சாய்கிறது. பிற்பகல் மாலையாகிறது. தென்றல் கிளம்புகிறது. இலைகள் சலசலக்கின்றன. ஆகாயத்தில் மேகங்கள் நகர ஆரம்பிக்கின்றன. என் பார்வை அங்கிருந்து உங்கள் மேல் இறங்கிய போது தங்கள் விழிகள் என்னைச் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றன. அவைகளில் ஒளி வெகு வேகமாய் மங்கிக் கொண்டிருக்கிறது. உதடுகள் மெதுவாய் அசைகின்றன. அவை மேல் செவியைச் சாய்த்துக் கேட்கிறேன். “…றவாதே -” அவ்வளவுதான்; தங்கள் கருணைக் கண்கள் மூடி விட்டன. குபீரென தங்கள் உடலிலிருந்து தாழம்பூவையொத்து, ஆனால் அது இலாது, அதனினும் மயக்கமாய், அமானுஷ்யமான பரிமளம் கிளம்புகிறது. அதை நினைக்கும் போதெல்லாம் இப்பவும் நான் மணக்கிறேன். நீங்கள் மலர்ந்துவிட்டீர்கள்.

[ads_hr hr_style=”hr-fade”]

க்ஷேத்ரம்

ங்களையல்லாது, தங்களை நான் குருவாய் வரித்த பாவனையை வணங்குகிறேன். நேற்று என் கனவில் வந்தீர்கள். வினோதமான கனா. சமுத்திரக் கரையோரமாய், அவசர அவசரமாய்ப் பூமியைத் தோண்டுகிறேன். ஆழமாய்த் தோண்டுகிறேன். கிட்டத்தட்ட ஒரு ஆள் உயரத்திற்குத் தோண்டிய பிறகு ஒரு பெட்டி கைக்குத் தட்டுகிறது. அதை ஒரு கருநாகம் அணைத்துக் கொண்டிருக்கிறது. என்னைக் கண்டதும் மேலே ஏறிவருகிறது. வந்ததும் அதைக் கடலிலிருந்து ஒரு அலைமோதி வந்து தன்னுடன் இழுத்துச் சென்றுவிட்டது. முக்கி முனகி தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு பள்ளத்திலிருந்து மேலேறுகிறேன். விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் உடலில் முன்னிலும் தகதகப்பு ஏறியிருக்கிறது. புன்னகை புரிகிறீர்கள்.

ஆத்மா, என்ன பண்ணுகிறாய்!” “கண்டு பிடித்துவிட்டேன் ஸ்வாமி!” “ஓ!” எனக்கு மூச்சுத் திணறுகிறது. தலை வயிற்றுள் புதைந்துவிடும் போல் கனம் அழுத்துகிறது. “ஒரு கை கொடுங்களேன்!” நீங்கள் கை கொடுக்கவில்லை. என் பேச்சு காதில் விழாதது போல் வெறுமே என்னைப் பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள். அதை நானே கீழேயிறக்குகிறேன். கனம் இழிந்ததும், தலை கிர்ர் என்கிறது. கனிவுடன் என்னை நோக்குகிறீர்கள். “ரொம்பவும் சிரமப்பட்டு விட்டாய்!” எனக்குப் பெருமிதம் பொங்குகிறது. என் அருகில் வந்து முதுகைத் தட்டிக் கொடுக்கிறீர்கள். ஆனால் உடனேயே உங்களை சந்தேகத்துடன் பார்க்கிறேன். இதென்ன, பங்குக்கு அஸ்திவாரமா? “ஆத்மா, பெட்டி அகப்பட்டுவிட்டால் போதுமா, அதைத் திறக்க வேண்டாமா?” பெட்டியைப் பூட்டியிருக்கிறது. அதனால் என்ன? சுற்று முற்றும் பார்க்கிறேன். பத்தடி தூரத்தில் ஒரு பாறாங்கல் கிடக்கிறது. அதைக்கொண்டு பெட்டியை உடைக்க முயல்கிறேன். பெட்டி மேல் கல்லை மோதும் போதெல்லாம் உள்ளிருக்கும் பொருள்கள் இனிய ஓசையுடன் குலுங்குகின்றன. வேர்வையில் தெப்பமாகி விட்டேன். ஆனால் பெட்டி மூடி இம்மிகூட நகர்ந்து கொடுக்கவில்லை. நீங்களும் எனக்கு உதவி புரியவில்லை. சௌகரியமாய்க் காலை மடித்து மணல்மேல் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் பார்க்க எரிச்சலாய்க் கூட வருகிறது. ஒரு கைகூட கொடுக்காமல் பங்குக்கு மாத்திரம் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? “ஆத்மா, உடைக்கவோ வரவில்லை. சாவி எங்கே தேடு.” நான் உடனே அவசர அவசரமாய் பள்ளத்தில் இறங்கித் தேடுகிறேன். அங்கேயில்லை. சாவியை வேறெங்கே வைத்திருக்கிறதோ? “ஆத்மா, இந்தப் பெட்டியை உடைக்க முடியாது. சாவி கொண்டுதான் திறக்க முடியும், மெதுவாய், லகுவாய், கொஞ்சலாய், ஒரு திருப்பில் திறக்கும் சாவி! ஒரே சாவி! சாவி! சாவி!! சாவி!!!…..நீங்கள் அப்படிச் சொல்கையில், அப்படியே திறந்து விட்டால், உள்ளிருக்கும் பொருள்களை நினைக்கையில், நாக்கில் ஜலம் ஊறுகிறது. சாவகாசமாய் நீங்கள் எழுகிறீர்கள். “ஆத்மா!” “என்ன?” “அந்தப் பாம்பு! அதில் தான் சாவி!” எனக்குப் புரியவில்லை. “அதுதான் சாவியை விழுங்கி விட்டு புதையலுக்குக் காவலாய் இருந்திருக்கிறது.” நீங்கள் சொல்வது நியாயமாய், உண்மையாய்ப்படுகிறது. இனி என் செய்வது? பாம்பைத்தான் அலை அடித்துக் கொண்டு போய்விட்டதே! ஏமாந்து போனேன். உடைக்கவும் முடியாது. திறக்கவும் முடியா பெட்டிக்கா இத்தனை காத்திருந்து பாடுபட்டேன்! பெட்டியை எந்த முட்டாள் எடுத்துக் கொண்டு போனால் என்ன, சாவி என்னிடம்தானே இருக்கிறது என்ற பிரஹஸ்பதியின் கதை நினைவுக்கு வந்தது. ஒரு வேளை அவன் மெய்யாவே ப்ரஹஸ்பதிதானோ! நீங்கள் அந்தப் பெட்டியை உங்கள் காலால் எற்றி ஒரு உதை விடுகிறீர்கள். பந்து போல் அது உயர எழும்பி சுழன்று கொண்டே போய் நடுக்கடலில் விழுகிறது. அது விழுந்த இடத்தில் அலைகள் மலைபோல் விசிறி எழுகின்றன. திரும்பிப் பார்க்கிறேன். நீங்கள் நின்ற இடத்தில் நீங்கள் இல்லை. ***

நீங்கள் உங்களுக்கென்று எதையும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் சம்சாரிதான்; உங்களோடு நான் இருந்தேனே! உங்களுக்கு ஒரு பணிவிடை நான் செய்ததில்லை. செய்யவும் நீங்கள் விட்டதில்லை. ஆனால் நீங்களோ என்னைக் கூட்டிலிருந்து விழுந்துவிட்ட குஞ்சைப்போல் காப்பாற்றி வந்தீர்கள். இப்பொழுது என்னைத் தனியாய் விட்டுச் சென்று விட்டீர்கள். நீங்கள் இருக்கும் வரை தெரியவில்லை. இப்பொழுது உணர்கிறேன். ஆனால் நான் மாத்திரம் மனோவைத் தனியாய் விட்டு வந்துவிடவில்லையா? மூன்று மாத கர்ப்பிணி.மனோ இப்போது அடிக்கடி மனதில் வந்து நிற்கிறாள். மேனி அழகிட்டிருக்கிறது. மேல் மூச்சு வாங்குகிறது. நிறைந்த விழிகள் என்னைக் குற்றம் சாட்டுகின்றன. நான் செய்தது நியாயமோ? பிறகு எனக்கே தோன்றுகிறது. இல்லை – நீங்கள் தோற்றுவிக்கிறீர்கள். சில சமயங்களில் நேரும் செய்கைகள், தோன்றும் எண்ணங்கள். என் செயலோ, தற்செயலோ இல்லை. நீங்கள் நெஞ்சை உலுக்குகிறீர்கள், எண்ணங்கள் உதிர்கின்றன. நியாயம் அநியாயம், பாபம் புண்ணியம், நல்லது கெட்டது, இவையெலாம் அப்புறம், அவையே இருக்கின்றனவோ இல்லையோ? என் வைராக்ய பலம் எந்த மட்டும் இருக்கிறது? அது எவ்வளவு தாங்கும்? அதுதான் முக்கியம். அதுவேதான் அது. அதுவன்றி எதுவுமில்லை. எது அது அது தான் புரியவில்லை. மூளை குழம்புகிறது. என் எண்ணங்களை நானே நூற்று, என் மேலேயே பின்னிக் கொண்டு, அவை இன்னதெனக் கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.

பசிக்கிறது. பசிக்கிறது. எப்பவும் பசித்துக் கொண்டேயிருக்கிறது. நீங்கள் இருந்தவரை எனக்கு வயிற்றுக் குறைவேயில்லை. ஆனால் இப்பொழுது, நான் ஓட்டை ஏந்தி ஊமையாய் நின்றால் யார் போடுகிறார்கள்? “நீ நோவாமல் தின்று மேனி மொழு மொழுவென வளரத்தான், நாங்கள் எங்கள் உடம்பைக் கசக்கிப் பிழிகிறோமா? எங்களுக்குக் குடும்பம் இல்லையா? உனக்கு உழைத்துப் போடத்தான் அர்ப்பணமாகியிருக்கிறோமா? இந்த வயசில் யாரை ஏமாற்றடா பண்டார வேஷம்?” இன்னும் என்னென்னவோ ஏசி, சீறி விழுகிறார்கள். இன்று ஒருவன், அவனுக்கு என்ன ஆத்திரமோ மடிக்கொம்பால் என் முதுகில் இரண்டு போட்டே விட்டான். ஆண்டவனே! அவனைக் கூப்பிட்டு விட்டால் அவன் வந்துவிட முடியுமா? இல்லை. பக்தி வந்து விடுமா? பக்தி வேண்டாம். அவன் வேண்டாம். எண்ணத்தின் வைராக்கியம் தான் வேண்டும். அது எந்த மட்டும் இருக்கிறது? எவ்வளவு நீ தாங்குவாய்? நீ தேடுவது உன்னை வந்து அடையும் போது, அதை ஏந்த எந்த மட்டுக்கும் பாத்திரமாயிருக்கிறாய்? உன் க்ஷேத்ரம் – பூமி – எது? பூமிக்கேற்ற பயிர். பயிருக்கேற்ற பூமி. உன் பூமியில் எது விளையும்? என் செவிகளை விரல்களால் அடைத்துக் கொண்டால் உங்கள் குரல் கேட்கிறது. எண்ணங்கள் என்னுடையவை. குரல் உங்களுடையது. உங்கள் அருகாமையில் உங்கள் வெளிச்சம் என் மேல் விழுந்து கொண்டிருந்த வரை, என் இருள் எனக்குத் தெரியாமலிருந்தது. இப்போது என் தனிமையில் என் இருள் அதிலிருந்து வழியும் என் கறைகள், கறைகளின் நிழல்கள், நிழல்கள் தீட்டும் உருஉருவங்கள், உருவங்கள் – உயிர் கொண்டு, இரவு, பகல், வேளை இலாது காட்டும் பேய்கள் – எல்லாம் ஆடி என்னைப் பயமுறுத்துகின்றன. உங்கள் குரல் கேட்டுக் கொண்டிருந்த வரையில் இவைகளை நான் பாராட்டவில்லை. ஆனால், ஒரு நாளிரவு திடீரென எனக்குப் பயங் கண்டது. எதனால், என்ன, எப்படி, ஏன், எதைக் கண்டு, என்று விவரமாய்த் தெரியாது. வீட்டில் பெண்டு ஒண்டியாய் இருக்கையில், ஒரு அன்னியன் பேசாமல் உள்ளே புகுந்து, கதவைத் தாளிட்டுக் கொண்டாற் போல் பயம் என் உள் புகுந்ததை என் தூக்கத்தில் உணர்ந்து, வாய் குழறியபடியே விழித்துக் கொண்டேன். உங்களைக் கூப்பிடுவதாக நினைப்பு. ஆனால் உங்கள் குரல் என்னுள் கேட்கவில்லை. அது திடீரென்று, தூர, தூர வெகுதூரம் சென்றுவிட்டது. அதன் தூரம் இன்னும் நீண்டு கொண்டேயிருந்தது. அதனால் என்னுள் நேர்ந்த வெறிச்சிலேயே விழித்துக் கொண்டேன். என் வீடு காலியானதும், அதில் என்குரல் எழுப்பிய எதிரொலிகளே என்னை எழுப்பியிருக்கின்றன. என்ன வாய் குழறிக்கொண்டு எழுந்தேன்? அந்த சமயத்தைத் திரும்பத் திரும்ப நினைவில் திருப்பினேன். திடீரென அந்த ஒலி ஞாபகத்தில் எழுந்தது. உங்களுடைய பெயர் அல்ல. நினைப்பு அப்படி. வாயிலிருந்து புறப்பட்டது: “மனோ!” இது என்ன ஜாலம்?

*** என்னவோ தெரியவில்லை, இன்று மனம் உவகை நிரம்பியிருக்கிறது. என்னுள் யாரோ கோலமிடுகிறார்கள். யாரோ பந்தாடுகிறார்கள். நெஞ்சு அப்படி துள்ளுகிறது: உடம்பெலாம் பிய்த்துப் பிடுங்குகிறது. கண் விழித்ததே முதல் ஏதோ பண்டிகை தினம் போல், வேளையிலேயே ஒரு அழகு மிளிர்கிறது. காலை வெய்யில் தினத்தைவிட இன்னும் பொன்னாயிருக்கிறது. ஒரு வாசற் குறடில் கால்களைச் சோம்பல் முறித்து நீட்டியபடி கண்களை மூடி, ஒரு பூனை படுத்திருக்கிறது. அதன் மேல் இரு குட்டிகள் விழுந்து புரண்டு விளையாடுகின்றன. சாட்டை போலும் சுழலும் தாயின் வாலை நிறுத்தப் பார்க்கின்றன. ஆனால் வால் எப்படியோ அவைகளின்பிடிக்கு நழுவி ஒரு சமயம் அவைகளை அணைத்து, ஒரு சமயம் அவைகளினிடையில் சுழல்கிறது. இந்த விளையாட்டு அலுத்ததும் குட்டிகள் தாமே ஒன்றோடொன்று கட்டிப் புரண்டு உருள்கின்றன. என்னை மறந்து வெகுநேரம் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். இன்று விழித்த வேளை நல்ல வேளையேதான். ஒரு வீட்டில் அழைத்து, கூடத்தில் உட்கார்த்தி இலை போட்டு சாதம் போடுகிறார்கள். ஒரு வயதான அம்மாள் பரிமாறுகிறாள். “வேணுங்கறதைக் கேட்டு வாங்கிச் சாப்பிடு; உன் தாயைப் போல் எண்ணிக்கோடாப்பா -” எனக்குப் பேச முடியவில்லை. உதடுகள் நடுங்குகின்றன. ஓரங்களில் உறுத்திக் கொண்டு விழிகள் நிறைகின்றன. இலைமேல் தலை கவிழ்கிறது. திடீரெனப் பசிகூட இல்லை. சொல் நெஞ்சுவரை நிரம்பியிருக்கிறது. இலையில் அன்னம் துல்லியமாய், மலராய்க் குவிந்திருக்கிறது. சுற்றி, கறி, கூட்டு, வறுவல், பச்சடி, பருப்பு எல்லாம். நெய் ஊற்றிய இடத்தில் சாதத்தின்மேல் பளபளக்கிறது. இம்மாதிரி இலையில் சாதத்தை முறையாகப் பார்த்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன! இந்த உணர்ச்சியிலேயே நெஞ்சடைக்கிறது. இலையில் அன்னத்தை இப்படிக் காணும் ஏற்பாடே ஒரு தனி அழகாயிருக்கிறது. அதில் ஒரு தருமம் தெரிகிறது. சாதத்தைப் பிசைந்தால் கலைந்து விடுமே என்று கலைக்கக் கூட மனம் வரவில்லை.

பிற்பகல். மெதுவாக நடந்து கொண்டிருக்கிறேன். சாலையோரத்தில், மரத்தடியில் ஒருத்தி மெய்மறந்து தூங்குகிறாள். அவளுடைய வாயோரம் எச்சில் வழிகிறது. அவள் குழந்தை அவளிடம் விளையாடிக் கொண்டே பால் குடித்துக் கொண்டிருக்கிறான். கொழ கொழவென்ற குழந்தையின் உடலில் பால் வடிகிறது. அவனைப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். என்னைக் கண்டதும் வாயை எடுத்து விட்டுத் திரும்பி என்னைப் பார்த்துச் சிரிக்கிறான். அவனுக்கு இப்போது பால் வேண்டியில்லை. வயிறு முட்டியிருக்கிறது. என் நெஞ்சில் ஏதோ பிராண்டுகிறது. காலையில் கண்ட பூனைக் குட்டிகளா? எனக்கு, என் மனோவுக்கு என்ன பிறந்திருக்கும்? பெண்ணா? பிள்ளையா? மாலை வருகிறது. அத்துடன் பயங்கள், சந்தேகங்கள், குழப்பங்கள் எல்லாம் கூடவே வருகின்றன. உற்சாகம் முறுக்குத் தளர்ந்து, வேகம் குறைந்து, அடியோடு விழுந்தும் விடுகிறது. மனதில் ஏதோ அலுப்பு தட்டுகிறது.

இரவுக்கு ஒரு வீட்டுத் திண்ணையில் ஒதுங்குகிறேன். வாசற் கதவையடைத்தாகி விட்டது. ஆனால் உள்ளே இரைச்சல் கேட்கிறது. “ஓஹ்ஹோ! அவ்வளவு தூரம் என்னை எதிர்த்துக் கேட்க ஆயிடுத்தா? கொஞ்சம் நிதானத்திலேயே இரு. அவன் வரட்டும் சொல்றேன். உன் குதிகால் மண் என்று நினைச்சுண்டிருக்கையா? நான் பிள்ளையாய்ப் பெற்றுக் கொடுத்தப்பறந்தாண்டீ உனக்கு ஆம்படையான், ஞாபகம் வெச்சுக்கோ” “என்னம்மா இது? யார் இல்லேன்னா? நான் ஒண்ணுமே சொல்லவில்லையே?” “இல்லை, இல்லை இதுக்கு ஒரு வழி பிறந்துதான் ஆகணும். அவன் பாவம், ஊரிலேருந்து வந்தவுடனே தர்க்கம் பண்ணுவானேன்னு விட்டு வெச்சா, நீ அதுக்குள் அவன் மண்டையைத் திறந்து உண்டை ஏத்தி, ஒண்ணுக்கொன்பதாய் உபதேசம் பண்ணிடுவே – உன்னைத் தெரியுண்டீ நேக்கு: நன்னாத் தெரியும்!” இருந்து இருந்து இங்கு வந்து தங்கினோமா? ஆனால் நேரம் ஆகிவிட்டது. ரொம்பவும் அலுப்பாயிருக்கிறது. திடீரென்று தூக்கம் கண்ணிமைகளை அழுத்துகிறது. சண்டையும் என்னவோ, சட்டென அடங்கிவிட்டது. அயர்ந்து தூங்கிவிட்டேன்.

ஸ்னானம் செய்து. உடலின் அசதி தீர்ந்தாற் போல், ஒரு புது உணர்ச்சியுடன் விழிப்பு வந்தது. இன்னும் விடியவில்லை. வாசற்கதவு க்றீச்சிட்டுக் கொண்டு மெதுவாய் நகர்ந்து கொண்டே திறந்தது. ஒரு உருவம் என்னருகே வந்து திண்ணைத் தூணைக் கட்டிக் கொண்டு அதன் மேல்சாய்ந்து நின்றது: நீண்ட இமைகளில், நீண்டு சுருண்ட ரப்பைகளின் கீழிருந்து, பெரிய கருவிழிகள் என்னைத் துயரத்துடன் நோக்கின: மேலாக்கு காற்றில் படபடவென அடித்துக் கொண்டது. முன்றானைக் கொடுக்கு என் முகத்தில் பட்டது. எனக்கு உடல் வெலவெலத்தது. திண்ணையிலிருந்து குதித்து ஓட்டமாய் ஓடினேன். ஒருமுறை திரும்பிப் பார்த்தேன். அவ்வுருவம் நிலைமாறவில்லை. அதன் பார்வை மாறவில்லை. திரும்பாமல் ஓடினேன். ஓடிக் கொண்டேயிருந்தேன்.

என் ஓட்டம் நின்றாகிவிட்டது. ஆனால் நான் இன்னும் உள்ளே போகவில்லை. வாசல் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறேன். வாசற் கதவு தாளிட்டிருக்கிறது. உள்ளே மனோவின் குரல் கேட்கிறது. குழந்தையைக் கொஞ்சுகிறாள். “அது ஷமத்துடீது! அரக்கு ஷமத்து! கொள்ளை ஷமத்து! வண்டி ஷமத்து! ‘இங்கா’ குடிச்சுட்டு தூங்கப் போறதுடீது அது!” எனக்கு உடல் பரபரக்கிறது. பலத்தைக் கூட்டிக் கொள்கிறேன். நினைவை நிலை நிறுத்திக் கொள்ளப் பார்க்கிறேன். பௌர்ணமி நிலவில் வானத்தில் நட்சத்திரக் கொள்ளை நடக்கிறது. அத்தனை நட்சத்திரங்களினிடையிலும், என் நட்சத்திரம் எனக்கு அடையாளம் தெரிகிறது. அன்று போல் நிலை குலைந்து தத்தளிக்கவில்லை. ஒரு வெள்ளை மேகத்தை வெற்றியுடன் சவாரி செய்கிறது. அதைப் பார்த்து நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் என் நிலை வந்தடைந்தாகிவிட்டது. அப்போது, நீங்கள் உங்கள் நிலையை அடையுமுன் அருளிய உங்கள் இறுதி வார்த்தை நினைவில் எழுகிறது. மூளையில் இதுவரை ஏதோ அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்து இப்போது விடுபட்ட முதலெழுத்துடன், உங்கள் சொல் முழுமையின் வெற்றியுடன் எழுகிறது. “இறவாதே” புரிகிறது. உங்களையலாது உங்களைக் குருவாய் வரித்து பாவனையை வணங்குகிறேன். உள்ளிருந்து குழந்தையின் மழலைக் குரல் அழைக்கிறது.


  • லா.ச.ராமாமிருதம்

3 COMMENTS

  1. வாசித்து முடித்து நீண்டநேரமாகியும் இதிலிருந்து மீள முடியவில்லை. கிடைத்தற்கரிய கதையை வாசிக்கக் கொடுத்தமைக்குக் கனலிக்கு நன்றி.

    • லா.ச.ராமாமிருதம் அவர்களின் சிறுகதை ‘குரு-ஷேத்ரம்’ கனமான கதை.மனசு சமநிலைக்கு வர சற்று நேரம் தேவை படுகிறது. அருமையான படைப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.