”தோன்றும் வடிவத்தில் எழுதுவது மட்டுமே கவிதைகள் அல்ல” – க.மோகனரங்கன் உடனான நேர்காணல்


கவிஞர், விமர்சகர், கட்டுரையாளர், சிறுகதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என பன்முக  இலக்கிய ஆளுமையாளராக இலக்கியத்தின் அனைத்து தளங்களிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் க.மோகனரங்கன். ஈரோடு மாநகரைச் சார்ந்தவர். மீகாமம், இடம் பெயர்ந்த கடல், சொல் பொருள் மௌனம், அன்பின் ஐந்திணை, மைபொதி விளக்கு மற்றும் குரங்கு வளர்க்கும் பெண் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். கனலி கலை இலக்கிய இணைய இதழுக்காக கவிஞர் வே.நி.சூர்யாவும்,  ‘கனலி’ – க.விக்னேஷ்வரனும் இணைந்து தொகுத்த கேள்விகளுக்கு மின் -அஞ்சல் மூலமாக க.மோகனரங்கன் அளித்த நேர்காணல் இது.

[ads_hr hr_style=”hr-fade”]

1), நீங்கள் எழுதத்தொடங்கியது எப்போது? அப்போது உங்களுக்குப் பின்புலமாக இருந்த எழுத்துக்களைக் குறித்துச் சொல்லுங்கள்.

எனக்கு நொய்ந்த உடல் என்பதால் பள்ளிப் பிராயத்தில் விளையாட்டுகளை விலகி நின்று வெறுமே வேடிக்கை பார்ப்பவனாகவே இருந்தேன். அது இயல்பாகவே என்னை வாசிப்பிடம் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். ஆனால் புத்தகங்களில் முதலில் என்னை ஈர்த்தது சித்திரங்களே . சிறுவர் மலர்கள், காமிக்ஸ் மற்றும் வாரப் பத்திரிகைகளிலும் வந்த சித்திரங்களை, கார்பன் தாள் வைத்து அச்சொட்டாகப் பிரதி செய்வதிலிருந்து , பிறகு கண்களால் பார்த்துக்கொண்டே கைகளால் வரைவது வரை ஒரு பருவம் கழிந்தது .

‘என்னவாகப் போகிறாய்?’ என்று வீட்டுக்கு வந்த என் உறவினர் ஒருவர் கேட்டபோது , ‘கல்லூரியில் சேர்ந்து ஓவியம் படித்துவிட்டு, பெரிய ஓவியனாகப் போகிறேன்’ என்று சொல்லி, என் அப்பாவையும் அந்த உறவினரையும் ஒருசேரத் திடுக்கிட வைத்த நினைவு இருக்கிறது. பிறகெப்போது வண்ணங்களும் கோடுகளும் சார்ந்த மயக்கம், வார்த்தைகளுக்குத் தடம் மாறியது என்று துல்லியமாக நினைவில் இல்லை. உள்ளூர் நூலகம் உண்மையிலேயே ஒரு கொடுப்பினை. நூலகர் அப்பாவின் நண்பராக இருந்தது கூடுதல் சகாயம்.துப்பறியும் கதைகள் சரித்திர, சமூக நாவல்கள் என்ற வரிசைக்கிரமத்தில் இருந்து வளர்ந்து,கண்ணில்பட்டது கையிற்கு எட்டியது என்று, அங்கே நான்கு அலமாரிகளில் நிரம்பி இருந்த சகலத்தையும் புரிந்தும் புரியாமலும் படித்துத் தள்ளிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வாசிக்கக் கிடைத்த வைரமுத்து, மேத்தா கவிதை நூல்கள் சொற்களின் மீதான ஒரு புதிய மயக்கத்தை உருவாக்கின. குறிப்பாக நா.காமராசனின் ‘ கருப்பு மலர்கள்’ , ‘சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள்’ போன்ற புத்தகங்களில் உள்ள கவிதைகளை வாசித்தபோது, அதே மாதிரியாக சில வரிகளை இரகசியமாக எழுதிப்பார்க்கும் குறுகுறுப்பை அவை எனக்குள் ஏற்படுத்தின. அப்போது பள்ளி தமிழாசிரியராக வந்திருந்த புலவர் குருலிங்கம் பாடப்புத்தகத்தைத் தாண்டி பலவற்றையும் வகுப்பில் பேசுபவராக , தமிழுணர்வை சங்கில் வைத்து எங்களுக்குப் புகட்டிக் கொண்டிருந்தார். அவர் தன் கற்பித்தல் வழியே பாடப்புத்தகத்திலிருந்த செய்யுள்களையும், இலக்கணத்தையும் இனியதொரு அனுபவமாக்கினார் . அதன்பிறகு கவிதை என்ற வடிவில் எழுதப்பட்ட எல்லாவற்றையும் தேடிப்பிடித்துப் படிப்பவனாக நான் மாறி விட்டிருந்தேன்.

 

2) எழுதுவதற்கு உகந்த வீட்டுச்சூழல் உங்களுக்கு அப்போது இருந்ததா?

பள்ளிப்படிப்பிற்குப் பிறகு நான் வீட்டில் இருந்த காலம் மிகக் குறைவே. தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டயப்படிப்பு முடித்த சில மாதங்களிலேயே , மாலை நேரக் கல்லூரியில் மேலே படிப்பைத் தொடர வசதியாக, தற்காலிக வேலை ஒன்றில் சேர்ந்துவிட்டேன் அது முதற்கொண்டு நண்பர்களுடனான அறைவாசம்தான். எனவே என் வாசிப்பிற்கும் எழுத்திருக்கும் உகந்த சூழலே எனக்கு நிலவியது. எவ்விதமான தடையும் நான் உணர்ந்ததில்லை. மேற்படிப்பு முடியவும் அவ்வேலையே நிரந்தரமாகவும் சரியாக இருந்தது. அது மேலதிகமான பொழுதையும் பொருளாதார சுதந்திரத்தையும் எனக்குத் தந்தது. திருமணத்திற்குப் பிறகும் அந்த சுதந்திரத்திற்கு எப்பழுதும் நேரவில்லை. என் மனைவி அவ்வப்போது என்னிடம் வேறு எதற்காகவாவது சண்டை போட்டாலுமே கூட, அவர் அதற்காக என் புத்தகங்களைக் காரணம் காட்டிப் பழிப்பதில்லை. அந்த வகையில் எனக்குப் படிப்பதற்கும் எழுதுவதற்கும் எல்லாவகையான சுதந்திரமும் சூழலும் எப்போதுமிருந்தது.

 

3) உங்களுடைய முதல் கவிதை பற்றிய நினைவுகளை எங்களுக்குச் சொல்ல முடியுமா?

நான் கல்லூரியில் படிக்கும் போது 1984 அல்லது 85 ஆக இருக்கும். அப்துல் ரகுமான் பல்வேறு அயல்மொழி கவிதைகளை அறிமுகப்படுத்தும் விதமாக ஜூனியர் விகடன் வார இதழில் தொடர்ந்து நூறு வாரங்கள் வரையிலும் ஒரு நெடுந்தொடர் எழுதிவந்தார். அது வரையிலுமான எனது கவிதை பற்றிய புரிதலை அழித்து வேறொன்றாக மாற்றியது அக்கட்டுரைகள். அதே சமயத்தில் தான் மீராவின் ‘அன்னம் விடு தூது’ இதழ் வரத் தொடங்கியது. பழைய புத்தகக் கடைகளில் கண்டெடுத்த கணையாழி, தீபம் இதழ்கள், அன்னம் புத்தக மையத்தில் முதன்முதலாகக் காசு கொடுத்து வாங்கிய ‘நவகவிதை’ வரிசை புத்தகங்கள் இவற்றையெல்லாம் படித்த உத்வேகத்தில் என்னாலும் எழுதமுடியும் என நம்பினேன். அப்படி எழுதிய முதல் கவிதை ‘ஜன்னல்’ , 1987 ஜூலை கணையாழி இதழில் வெளிவந்தது. பிறகு தொடர்ந்து சில மாத இடைவெளிகளில் மூன்றோ நான்கோ கவிதைகள் கணையாழியிலேயே வெளிவந்தன. தோன்றுவதைத் தோன்றும் வடிவத்தில் எழுதுவது மட்டுமே கவிதைகள் அல்ல என்ற தெளிவு அதன்பிறகே எனக்குக் கிடைத்தது.

4) நீங்கள் முதன்முதலில் படித்த நவீன இலக்கியப் புத்தகம் என்ன? அது எந்த மாதிரியான தாக்கங்களை உங்களுக்குள் ஏற்படுத்தியது.?

நவீன இலக்கியம் குறித்த புரிதலும் தெளிவும் ஏற்படுவதற்கு முன்பாகவே, ஒன்பதாம் வகுப்பு கோடை  விடுமுறையில் உள்ளூர் நூலகத்திலிருந்து நான் எடுத்துப் படித்த ‘இருபது வருடங்கள்’ நாவல்தான் நான் வாசித்த முதல் இலக்கியப் படைப்பாகும்.

அப்போதைய எனது வாசிப்பிற்கு அது பெருமளவு அலுப்பூட்டுவதாகவே இருந்தது. நியூ பிரிட்டன் தீவுகளில் அகப்பட்டுக்கொண்ட  நாயகனான டாக்டர் கேசவ ராவ் அங்கிருந்து மீண்டு வருவதற்காகச் செய்யும் சாகச முயற்சிகள் மாத்திரம் விறுவிறுப்பாகவும் வித்தியாசமாகவும் இருந்த நினைவு. பிறகு நாவலாசிரியர் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் நூற்றாண்டை ஒட்டி ‘தமிழினி’ பதிப்பகம் அந்த நாவலை மீளவும் பதிப்பித்த போதே அதன் இலக்கிய முக்கியத்துவம் பற்றி அறியமுடிந்தது. தமிழில் வெளியான காந்தியுக நாவல்களில் ‘இருபது வருடங்கள்’ முன் வரிசையில் வைக்கத் தகுந்தது.  இதில் வெளிப்பட்டிருக்கும் இலட்சியவாதமும், சமூக  மாற்றத்திற்கான தன்னலமில்லாத அர்பணிப்புணர்வும், மனிதர்களின்  நல்லியல்புகளின் மீதான இயல்பான  நம்பிக்கையும், மிகையில்லாத நகை உணர்வும் இந்நாவலைத் தனித்  தன்மையுடையதாக்குகின்றன.  நவீனத்துவ நாவல்களுக்கேயுரிய முரண் தர்க்கம் மற்றும் அழகியல் வரையறைக்குள் அவ்வளவாகப் பொருந்தாமையாலோ என்னவோ இந்த நாவல் அதன் காலத்தில் அதிகமும் பேசப்படாமல் போயிற்று.

 

5) மிகக்குறைவாக ஆனால், செறிவான கவிதைகளை எழுதிவருபவர் நீங்கள். இந்த குறைவாக எழுதுதல் என்பதைப் பற்றிச் சொல்லுங்கள். அடிப்படையில் உங்களுடைய கவிதை உங்களுக்குள் எப்படி உருவாகிறது?

எதேச்சையாக மனதில் உருக்கொள்ளும் ஒரு காட்சிப் படிமம் அல்லது சொற்றொடர் அதுவே மூலம். அதை நினைவுக்குள் வைத்து நெருடிக்கொண்டே இருக்க, ஒரு தெளிவில்லாத உருவம் திகைந்து வரும். பிறகு காகிதத்தில் எழுதவும், அறுதியாக சில சொற்களைத் திருத்தவும் மாற்றவும் செய்ய வேண்டும். எழுதிய பின் சில சமயங்களில் அக்கவிதையின் ஈர்ப்பு சட்டென வடிந்துவிடவும் கூடும் . எனக்கு முழு நிறைவு கிட்டாத வரை அவற்றைப் பிரசுரிக்க முனைப்புக் காட்ட மாட்டேன். சில சமயங்களில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் முழுமைடையும் ,

பல போது வார, மாதக்கணக்கில் கூட இந்த முறைப்பாடு நீண்டு விடும். வடிவம் முழுமை பெறாத கவிதையின் பகுதிகளை, ஒரு நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கி வைத்திருப்பேன். ஏதேனும் எழுத வேண்டும்போது அதை எடுத்துப் புரட்டினால் ஏதோ ஒரு வரியில் மனம் தடுக்கி, புதிதாக எழுத முடிவதும் உண்டு. தொடர்ச்சியாகவும் நிறையவும் நிறைவாகவும் எழுத முடிகிறவர்கள் மீது எனக்கு வியப்புடன் கூடிய பொறாமை உண்டு. ஆனால் என் இயல்பிற்கு நிறைய எழுதுவது என்பது எனக்குப் பொருந்தி வருவதில்லை.

 

6) ஒரு கவிதையை எழுதத் துவங்கும்போதே, அது குறித்த முழுமையான உருவம் உங்களிடம் இருக்குமா? 

பல சமயங்களில் இருப்பதில்லை. பால்வெலரியின் கூற்று ஒன்றின் படி , கடவுளர்கள் கருணை கொண்டு எப்போதாவது ஒரு வரியை நமக்கு இலவசமாக அருளுகின்றனர்.  மீதத்தை நாம்தான் முயன்று துலக்கிக் கொள்ள வேண்டும். அபூர்வமாக சில குறுங்கவிதைகள் முழு வடிவில் தோன்றுவதுண்டு.

 

7) உங்களுடைய கவிதைகளுக்கு நீங்கள் வாழும் நிலம் எந்தளவு உபயோகமாக இருக்கிறது?. உங்கள் கவிதைகளின் தரைதளம் எங்கேயிருக்கிறது?

இதுதான் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட முடியாவிட்டாலும் கூட எனது கவிதைகளுக்கு நிச்சயமாக ஒரு நிலம் இருக்கிறது என்றுதான் நம்புகிறேன். அது நான் முன்பு இருந்த, இப்போது வாழ்கிற அல்லது இடையே பயணங்களின் ஊடாக கண்டும் காணாது கடந்த பல்வேறு நிலப்பகுதிகளின் கலவையாக அது இருக்கலாம். அதுவும்கூட நேரடியான காட்சியாக அல்லாமல் மனதின் பிரதிபலிப்பாகவே தட்டுப்பட்ட தட்டுப்படக் கூடும். முப்பது சொச்சம் கவிதைகளை மாத்திரமே கொண்ட எனது முதல் தொகுப்பைப் படித்து விட்டு எனது நண்பன் சொன்னது; இதில், ஆள் அரவமற்ற பழைய கோவில்களைப் பற்றிய சித்திரம் நிறைய வருகிறது. அந்த அவதானிப்பு என்னை வெகுவாக ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில், யாரேனும் அழைத்தால் அன்றி கோயில்களுக்குப் போகும் பழக்கம் இல்லாதவன் நான். அப்படியிருக்க, அந்த சித்திரங்கள் அதுபற்றிய போதம் இன்றியே கவிதைக்குள் வந்தமர்ந்தவைதாம். என் கவிதைக்குள்ளிருக்கும் நிலம் அல்லது தரத்தளம் என்பதுவும் இவ்விதமாகவே இருக்கும்.

 

8) கவிதையின் கவிஞனின் வேலையாக இன்றைக்கு என்ன இருக்கமுடியும்?

ஒரு கவிஞன் அல்லது கவிதையின் வேலை என்பது வாசிப்பவனின் அழகியல் உணர்வு அல்லது ரசனையை நுட்பமாகப் பாதிப்பதுதான். அது மறைமுகமாக அவனது நீதி உணர்வையும் செயல்களையும் பாதிக்கும். அதன் தொடர்ச்சியான பட்டாம்பூச்சி விளைவாக அது சமூகத்தையும் வரலாற்றையும் காலத்தையும் பாதிக்கும் என நாம் நம்பலாம்.

 

9) உங்கள் கவிதையின் ஆன்மிகம் என்ன?

திட்டமிட்ட பெரிய நோக்கங்கள் எதுவும் என் கவிதைகளுக்கு கிடையாது. நான் சமீபத்தில் வாசித்த போலந்து கவிஞரான ஆடம் ஜெக்காவெஸ்கியின் சிறிய கவிதை ஒன்றில் வரும் ஒரு வரி ‘பெரிய விஷயங்கள் ஒரு கணமேனும் சிறியவற்றுள் தங்குகின்றன‘. அவ்வாறான அபூர்வமான கணங்களை மொழியினூடாக அகப்படுத்த முயல்வது, முடியாவிடின் அவற்றை அடையாளம் காட்டவாவது எத்தனிப்பது இவையெல்லாம் எழுதத் தொடங்கும்போது அடி மனதில் கசிந்திடும் ஆசைகள். அரிதாகவே அவை எழுத்தில் நிறைவேறும்!. ‘வியத்தலும் இலமே!; இகழ்தல் அதனினும் இலமே!’ என்கிற மனவிரிவும் அதன் பாற்பட்ட ஒப்புரவுமே எனது கவிதையின் ஆன்மீகமாக வெளிப்பட நான் விரும்புகிறேன்.

 

10) நீங்கள் சாரம்சவாதியா?

இலக்கியத்தை மேலதிகமாக புரிந்துகொள்ள உதவும் ஒரு கருவி என்கிற அளவிலேயே நான் இலக்கிய கோட்பாடுகளையும் அதை விவரிக்கும் கருத்தாக்கங்களையும் எனக்கு எட்டிய அளவிற்குப் படித்திருக்கிறேன். மற்றபடி அவற்றைக் கறாரான ஒரு வாழ்வு நோக்காகவோ படைப்பு உத்தியாகவோ விரித்துக் கொள்ளும் அளவிற்கு அவற்றில் முறையான படிப்போ ஆழமான புரிதலோ எனக்கு கிடையாது. எனவே, எனது எழுத்தில் சாராம்ச வாதத்தின் சாயலை நீங்கள் உணர்ந்தால் அது எனது வாசிப்பின் தூரத்து நிழல்களாகவோ அல்லது போதமற்ற பிரதிபலிப்பாகவோதான் இருக்கும்.

11) மரபிலயக்கத்தின் நினைவை அள்ளிக்கொண்டு வரும் கச்சிதமான மொழி. இசைமையுள்ள வரியமைப்புகள். செவ்வியலான பாடுபொருட்கள். இவை நீங்கள் உங்கள் முதல் கவிதைத் தொகுப்பிலிருந்து பராமரித்து வரும் அம்சங்கள் எனத் தோன்றுகிறது.
நீங்கள் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் தமிழ் நவீன கவிதை அதன் வடிவ அளவில் சொல்லல் முறையில் ஒரு சுதந்திரமான இடத்தை (நல்ல மற்றும் மோசமான வகையிலும்) நோக்கி பெருமளவில் நகரவும் செய்தது. அப்போதும் நீங்கள் மேலே குறிப்பிட்ட அம்சங்களையே விடாப்பிடியாகப் பின்தொடர்ந்து கொண்டிருந்தீர்கள். இதன் பின்புலம் என்ன என்று சொல்ல முடியுமா?

ஆர்வம் மிக்க வாசகனாக, கவிதையில் சாத்தியமாகும் எல்லா வகைமைகளையும் வடிவங்களையும் உவந்து கற்பவனாகவே நான் இருக்கிறேன். குறிப்பாக, சங்கம் மற்றும் பக்தி காலகட்ட கவிதைகள், தனிப் பாடல்கள், மொழியாக்கக் கவிதைகள் ஆகியவற்றில் எனக்குக் கூடுதலான நாட்டம் உண்டு. நவீன கவிதைகளில் எனது உணர்வுப்பூர்வமான ஒன்றுதலுக்கு அப்பால் இருக்கும் கவிதைகளைக்கூட, அவற்றிலிருந்து புதிதாக எதையேனும் கற்றுக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையோடு, நான் நிதானமாகவே வாசிக்கிறேன். ஆனால் எழுதுதல் என்பது வேறு ஒரு முறைப்பாட்டிற்குள் வருவது. எனது உணர்வு, சிந்தனை, கற்பனை ஆகியவை கலந்து அகவயமாக உருவாவது எனது வெளிப்பாட்டு மொழி. அதில் என் சொந்த உத்தேசத்தையும் தாண்டி, மொழி தனது நினைவுகளின் சேகரத்திலிருக்கும் சில துளிகளையும் சேர்த்து, என் வரிகளினூடாக தன்னிச்சையாகப் பிரதிபலிப்பதைத் தவிர்க்க முடியாது என்றே எண்ணுகிறேன்.

கவிதையின் முதன்மையான நோக்கம், அது நமது புரிதலின் தர்க்கத்திற்கு முன்பாகவே உணர்வின் தளத்தைத் தீண்டுவதுதான் என்றால் சொற்களின் இந்த பிரதிபலிக்கும் தன்மை, தொனி, அவற்றின் இணைவு ஆகியவற்றிற்கு அதில் முக்கிய பங்கு இருப்பதாகவே கருதுகிறேன். எழுதுவதற்காக நான் தேர்ந்து கொண்ட தனிப்பட்ட உத்தி இது. இதைப் பொதுமைப்படுத்தி வாதிட மாட்டேன். தவிரவும், எனது முதல் இரண்டு தொகுப்பில் உள்ள காட்சிப் படிமங்கள் நிறைந்த அடர்த்தியான மொழியிலிருந்து சமீபத்திய தொகுப்பில் நெகிழ்வானதும் நேரடியானதுமான ஒரு சொல்லல் முறைக்கு, எனது கவிதைகள் நகர்ந்து வந்துள்ளன என்றே கருதுகிறேன்.

 

12) உங்கள் மீது பாதிப்பை உண்டு பண்ணிய, உங்கள் கருத்துலகை வடிவமைத்த, நீங்கள் ஆதர்சம் என எண்ணும் எழுத்துக் கலைஞர்கள் குறித்துச் சொல்லுங்கள்.

ஓரளவிற்கு நாம் பக்குவம் அடைந்த பிறகு நாம் தேடிப் படிக்கும் நூல்கள் வழியாக நமக்கு அறிமுகமாகி நமது சிந்தனைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறவர்கள் ஒருவகையினர். இவர்களை மறைமுகமான ஆசிரியர்கள் எனலாம் . அவர்களது பெயர்கள் அடங்கிய பட்டியல் மாறிக்கொண்டே இருப்பது. நமது ஆர்வத்தையும் அவர்களுக்காக நாம் ஒதுக்கும் நேரத்தையும் பொருத்து நீளக் கூடியது.

நம் கருத்துகள் அவ்வளவாக முதிர்ச்சி அடைந்திராத நமது இளம்பருவத்தில், நாம் நேரடியாகச் சந்தித்துப் பழகி அறிந்து கொள்ள நேரிடுபவர்கள் இன்னொரு வகையான ஆசிரியர்கள். இவர்களிடமிருந்து குறுகிய காலத்திற்குள்ளாகவே நாம் நிறைய கற்கமுடியும். நான் வாசிக்கவும் எழுதவும் தொடங்கிய காலத்தில் அவ்வாறாக எனக்கு அமைந்த ஆசிரியர்கள் என்று பலரைச் சொல்லலாம். பிரம்மராஜன், ஆர் சிவகுமார், ஜெயமோகன், பாவண்ணன், நாஞ்சில் நாடன், கலாப்ரியா, தேவதேவன், சுகுமாரன், யுவன் ஆனந்த், தேவதச்சன், வசந்தகுமார் , ராஜசுந்தர்ராஜன், ஆர்.குப்புசாமி ஆகியோர் அவர்களுள் முதன்மையானவர்கள்.

எனது ஐயம் அல்லது வினா எவ்வளவு எளியதாகவும் அபத்தமானதாகவும் இருந்த போதிலும், அதைப் பொருட்படுத்தி அவர்கள் உரையாடினார்கள். வாசிப்பின் வழியாக நான் அடைந்த உணர்வுகளை மேலதிகமாக பகுத்து, வகுத்து பலவிதமான கருத்துகளாக அவற்றைத் தொகுத்துக் கொள்ள கற்றுத் தந்தவர்கள் இவர்களே.

குறிப்பாக பிரம்மராஜன் தர்மபுரியிலும் ஒகேனக்கலிலும் நடத்திய கவிதை பட்டறைகள், ஜெயமோகன் ஊட்டி நாராயண குருகுலத்தில் நிகழ்த்திய தமிழ் மலையாள கவிஞர்களின் சந்திப்புகள் , காலச்சுவடு சேலத்தில், நாகர்கோயிலில் ஒழுங்கு செய்த கருத்தரங்குகள் ஆகியவை எனக்குப் பல வகையிலும் முக்கியமானவை. நான் வாசிப்பிலிருந்து, எழுத்திற்கு இவர்களில்லாமல் இவ்வளவு எளிதாக நகர்ந்திருக்கமாட்டேன்.

13) எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் நடந்த மார்க்சியத்துக்கும் நவீனத்துவத்துக்கும் இடையிலான மற்றும் இன்ன பிற கோட்பாட்டு விவாதங்கள் மீது உங்களுக்கு என்னவிதமான மனப்பதிவு அப்போது இருந்தது? அவை உங்கள் எழுத்துகளை செழுமைப்படுத்த உதவியிருக்கின்றனவா ?

எண்பதுகள் வரையிலும் கூட இலக்கியத்தில் இரண்டு பிரிவுகளே பிரதானமாக இருந்தது . ஒன்று படைப்பு முன்னிறுத்தும் அழகியலையும் மற்றது அது பேசும் அரசியலையும் முதன்மைப்படுத்தி விவாதிப்பவை . மார்க்சியம், நவீனத்துவம் தவிர எண்பதுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக அலைகள் போல் வந்த அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவம் போன்ற கோட்பாட்டு அறிமுகங்கள் மேற்சொன்ன பிரிவினையில் பெரும் உடைப்புகளை ஏற்படுத்தின. பெண்ணிய சிந்தனைகளும், தலித் எழுச்சியும் விளிம்புநிலை கதையாடல்களும் பல புதிய திறப்புகளைத் தீவிர இலக்கியப் பரப்பிற்குள் கொண்டு வந்து சேர்த்தன. படைப்பைக் காட்டிலும் கோட்பாடு முன்நிற்பது போல ஒரு தோற்றம் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் இருந்தது உண்மை. அதன் பாரதூரமான விளைவுகள் படைப்பாக்கத்திலும் எதிரொலிக்கவே செய்தன. மையப்படுத்தப்பட்ட ஒருபடித்தான அழகியல் என்றில்லாமல், இயல்பாகவே பலகுரல் தன்மையும் வேறுபட்ட நிலக் காட்சிகளும் எடுத்துரைப்புகளும் இன்றைய படைப்பில் இடம்பெறக் காரணமாக அமைந்தவை , அன்று சிற்றிதழ்களில் நடைபெற்ற கோட்பாட்டு விவாதங்கள்தாம் என்றால் அது மிகையாகாது. நான் நேரடியாக எனது எழுத்தில் பின்பற்றுகிற கோட்பாடு என்று எதுவும் இல்லை. ஆனால் வாசிப்பின் வழியாக ஒரு எழுத்தாளன் அடைகிற பார்வை மாற்றம் என்பது மறைமுகமாகவாவது அவன் எழுத்துக்களில் எதிரொலிக்கவே செய்யும் என்று நம்புகிறேன். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

 

14) அணுக்கம், தாபம், தவிப்பு, நினைவின் முணுமுணுப்புகள், அகங்கார மோதல்கள் என உறவுகளுக்கு இடையில் உள்ள தருணங்கள் உங்கள் கவிதைகளில் தொடர்ச்சியாக வெளிப்பாடு கண்டபடியே இருக்கின்றன. ஒரு வகையில் மானுட வாழ்க்கையில் அத்தகைய தருணங்கள் முடிவிலி தானே? அத்தகைய தருணங்களின் புதிரை அவிழ்த்துவிட முடியும் என நம்புகிறீர்களா?

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , இந்த வாழ்வின் தருணங்கள் பலவற்றையும் அர்த்தமுள்ளதாகவோ அல்லது அபத்தமாகவோ மாற்றி விடக்கூடிய தன்மை , நாம் உருவாக்கிக் கொள்கிற உறவுகளுக்கு உண்டு. எவ்வளவு புத்தி பூர்வமாக பிறகு நம்மால் யோசிக்க முடிந்தாலும், நிகழ்வின் தருணங்களில் நம்மைப் பின்னின்று இயக்குவது பெரும்பாலும் உணர்ச்சிகளே. நீங்கள் கூறுவதைப்போல முடிவற்ற புதிர்கள்தாம் அவை. அவற்றை முற்றாக அவிழ்த்துவிட முடியாது என்பதே அதன் வசீகரம். முடிவற்ற அந்த புதிர்த்தன்மையே, திரும்பத்திரும்ப அதை நோக்கி நாம் ஈர்க்கப்படவும் நகரவும் காரணமாக இருக்கலாம்!. நாம் பெறவும் இழக்கவும் உறவுகளை விட மதிப்புள்ளதாக என்ன இருந்துவிடப் போகிறது இவ்வாழ்வில்? எத்தனை முறை என்ன விதமாகத் தீர்வு காண முயற்சித்தாலும், ஒவ்வொரு முறையும் வேறு விடையைத்தான் வாழ்க்கை நமக்குத் தருகிறது.

 

15) மீகாமம் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளின் வரிகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வரிக்கு ஒரு வார்த்தைதான் எனும் அளவுக்கு. இதை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறீர்கள்? இசைமைக்காகவா? நிறுத்தத்திற்காகவா? சற்றே விரிவாகச் சொல்லுங்கள்.?

முதலிரண்டு தொகுப்புகளுக்குப் பிறகு கொஞ்சக் காலம் கவிதை எழுதாமல் இருந்தேன். அப்பொழுது நிறையக் கட்டுரைகள் எழுத வாய்த்தது. அந்த இடைவெளியை நானே தான் விரும்பிய ஏற்படுத்திக் கொண்டேன். பிறகு கவிதைக்குத் திரும்பும்போது, நெகிழ்வும் நேரடித்தன்மையும் கூடியதொரு மொழியைப் பயன்படுத்த விரும்பினேன். குறிப்பாகச் சொற்களின் ஒலிப்பு மற்றும் அதன் காரணமாகக் கூடிவரும் தொனி வேறுபாடுகள் மூலமாக அதன் அர்த்த தளத்தில் உணர்வுகளின் நிற பேதத்தை உருவாக்க முயன்றிருக்கிறேன். இதனால் முன்னிலும் என் கவிதைகளின் வாசிப்புத் தன்மை கூடி இருப்பதாக ஒரு உணர்வு எனக்கு உண்டு.

 

16) தமிழில் தீவிரமாக விமர்சனம் சார்ந்து எழுதிவந்தவர்களில் நீங்களும் ஒருவர். சொல் பொருள் மௌனம், மைபொதி விளக்கு போன்ற நூல்கள் அதற்குச் சாட்சி. ( ஆனால் சமீபமாக நீங்கள் அதிலிருந்து சற்றே ஒதுங்கியிருப்பது போலத் தோன்றுகிறதே?) இன்றைய விமர்சனச் சூழல் எப்படி இருக்கிறது? அதன் போதாமைகளாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு கறாரான அர்த்தத்தில் என்னை விமர்சகன் என்று சொல்லிக் கொள்ள நான் வெகுவாக தயங்குவேன். காரணம் ஒரு நல்ல விமர்சகனுக்குரிய பல துறைசார்ந்த பரந்த வாசிப்பு எனக்குக் குறைவு . தவிரவும் வாசிப்பதில் இருக்கக்கூடிய திளைப்பு அதைப்பற்றி வகுத்தும் தொகுத்தும் எழுதுவதில் எனக்கு இல்லை. ஒரு நூலைக் குறித்து விமர்சனம் அல்லது அறிமுகம் எழுதுகிற நேரத்தில் இன்னும் இரண்டு நூல்களை வாசித்து விடலாம் என்பதுவே என் எண்ணமாக இருக்கிறது. தவிரவும் கட்டுரைகள் எழுதும்போது கவிதைகளை விட்டு விலகிப் போவதாகவும் ஒரு குற்ற உணர்வு. எனவே, அதிலிருந்து சற்று ஒதுங்கி இருக்கிறேன். தமிழில் முன்பு போல விமர்சனம் அதிகமாக வெளி வருவதில்லை என்று ஒரு மனப்பதிவு உள்ளது. இது ஒரு தோற்றம் மட்டுமே முக்கியமான விமர்சகர்கள் பலரும் இப்போதும் நூல் விமர்சனம் எழுதவே செய்கிறார்கள் !.ஆனால் , அவர்கள் அன்றாட அரசியல் சார்ந்தும் அதிகம் எழுதுவதால் இலக்கிய விமர்சனம் குறைந்த விட்டதைப் போல ஒரு உணர்வு நமக்கு இருக்கிறது. இளம் தலைமுறையில் விமர்சனம் எழுதுபவர்கள் என்று குறைந்தது பத்து பேர்களையாவது என்னால் பட்டியலிட முடியும். அது தவிர முகநூலிலும் அரங்குகளிலும் நூல்களை அறிமுகப்படுத்தி கட்டுரைகள் எழுதும் வாசிக்கும் இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர். பதிப்புத் துறையில் நிகழ்ந்திருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்றைக்கு நூல் வெளியீடு மிகவும் எளிதாகி உள்ளது. கிண்டிலில் சுயமாகவே ஒருவர் தன் நூலை வெளியீட்டுக் கொள்ளவும் செய்யலாம். எனவே முன்னைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான நூல்கள் வெளியாகின்றன. எனவே அவற்றின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது வரக்கூடிய விமர்சனம் குறைவாகத் தோன்றலாம்.

நிகழ்காலம் எப்பொழுதும், வரையறைக்கு உட்படுத்த முடியாததாகவும் குழப்பமானதாகவுமே தோற்றம் தரும்.  ஆனால் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பிப் பார்த்தால் அவற்றைப் பற்றி திடமான மதிப்பீடுகள் உருவாகியிருப்பது நமக்குத் தெரியவரும் . இது இலக்கிய விமர்சனத்திற்கும் பொருந்தும்.

 

17) கவிதையில் கவிஞர் வெளிப்படாமல் இருப்பது சாத்தியமா? முழுக்க முழுக்க புறவயமான (objective) கவிதை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? சற்று விரிவாகப் பகிர்ந்து கொள்ள இயலுமா?

ஓரிரு கவிதைகளை வேண்டுமானால் ஒரு உத்தியாக அப்படி ஒரு நிலையில் நின்று ஒருவர் எழுதிப் பார்க்கலாம். ஆனால் தொடர்ந்து எழுதும் போது ஒரு கவிஞருக்கு என்று ஒரு நோக்கு , மொழிதல் முறை ஆகியவை அவரை அறியாமலே உருவாகி வரவே செய்யும். அந்த தனித்தன்மை தான் அவரது அடையாளமாக பிறகு எஞ்சவும் செய்யும். என் பார்வைக்கும் பழக்கத்திற்கும் அப்பால் பெரியதொரு பரப்பு உலகில் எஞ்சி இருக்கவே செய்யும் ! அது குறித்த தெளிவும் ஆர்வமும் இருக்கும்பட்சத்தில், நான் இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் புறவயமாக நகர்ந்து எழுதலாம் அவ்வளவு தான் சாத்தியம்.

 

18) பிரசுரிப்பதற்கு முன் உங்கள் கவிதைகளை முன்னிட்டு நண்பர்களுடன் விவாதிப்பது உண்டா?

பெரும்பாலும் அப்படிச் செய்வது இல்லை . ஏனெனில் எழுதி முடிக்கும் வரையிலும் என்னவாக அது உருவம் பெறப் போகிறது என்கிற திடம் எனக்கே இருக்காது. எழுதும் விஷயம் சார்ந்து ஏதேனும் தகவல் மேலதிகமாக தேவைப்பட்டால், அப்போது நண்பர்களைத் தயங்காமல் அணுகுவேன்.

 

19) டால்ஸ்டாயா ? தஸ்தாயெவ்ஸ்கியா ? இருவரில் யார் உங்களுக்கு அணுக்கமானவர்? ஏன் என்றும் சொல்லுங்கள்.

டால்ஸ்டாயை வாசிப்பது என்பது பயணிகள் ரயில் ஒன்றில் ஜன்னலோரம் அமர்ந்தபடி மாறிவரும் நிலக்காட்சிகளின் ஊடாக நெடுந்தூரம் வரை பயணிப்பது போன்றது. அதற்கான நேரமும் பொறுமையும் இருந்தால் அது தரும் அசாதாரணமான அனுபவம் உங்களுக்குள் கனியும். தஸ்தாவெஸ்கியை வாசிப்பது என்பது ஒரு ரோலர் கோஸ்டரில் ஏறி தலைகுப்புற விழுந்தெழுந்து பயணிப்பது போன்றது.

 

உங்களுடைய திடம்,  திசை எல்லாவற்றையும் சுழற்றி எறிந்து உங்களது மனச்சமனிலையை குலையச் செய்துவிடும். ஒருவர் மனித அகத்தின் ஆழத்தையும் இருட்டையும் பிடித்துக் காட்டினால் இன்னொருவரோ அதன் அகலத்தையும் அதன் போக்கில் திரண்டு வரும் ஒளியையும் சுட்டி நிற்கிறார். தொடக்கத்தில் என் இளமையில் என்னை வெகுவாக கவர்ந்தவர் தஸ்தாவெஸ்கிதான். அந்த ஈர்ப்பு இன்னமும் குறையவில்லை. எனினும் இப்போது இந்த நடுவயதின் தனிமையில் டால்ஸ்டாய் முன்னிலும் கூடுதலாக என்னை நெருங்கி வருகிறார்.  இருவருமே ஒரு இலக்கிய வாசகன் தவறவிடக்கூடாத பெருநிதியங்கள்தாம்.

 

20) உங்களுக்கு பிடித்தமான மறக்கவே இயலாத கவிதை வரி ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் எதைச் சொல்வீர்கள்.?

ஈராயிரம் வருடங்களுக்கும் மேலான பழமை உடைய ஒரு மொழியில் மறக்கவே இயலாத வரிகள் என்று பட்டியலிட்டால் பல நூறு தேறும். அவற்றுள் ஒன்றை மாத்திரம் சொல்வது என்பது பெரிதும் தடுமாற்றம் தரக்கூடியது.

எனினும் உடனடியாக நினைவில் எழும் சில வரிகளை இங்கே சுட்டுகிறேன்.

அ) “தீதும் நன்றும் பிறர் தர வாரா” – புறநானூறு.

ஆ) “பொழுது இடை தெரியின் பொய்யே காமம்” – குறுந்தொகை.

இ) “புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பிலார் குரல்”  – திருக்குறள்.

ஈ ) “பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்.”  – திருவாய்மொழி.

உ) “யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே”  – திருவாசகம்

ஊ) “தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ”  – கம்பராமாயணம்.

எ) “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”  – சிலப்பதிகாரம்.

ஏ ) “நானெனும் பொய்யை நடத்துவோன் நான்”  – பாரதி.

ஐ) “திசை கண்டேன் வான் கண்டேன் உட்புறத்தைச் சரிந்தன பலப்பலவும் கண்டேன்” – பாரதிதாசன்.

 

21) காகிதத்தின் முன்பக்கத்துக்குப் பின்பக்கம் என்பது போல இன்றைக்கு மனிதன் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறான். தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு படைப்பாளி பெறக்கூடிய சாதக பாதகங்களாக என்ன இருக்க முடியும்? செய்திகளும் தகவல்களும் அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல எந்நேரமும் நம்மை வந்தடைந்து (நம் அனுமதி இல்லாமல் கூட) கொண்டிருக்கிறது. இன்னும் கூர்மையாகக் கேட்கப்போனால் உங்கள் நேரத்தையும் கவனத்தையும் அகமொழியையும் எப்படிப் பாதுகாத்துக்கொள்கிறீர்கள்?

தொழில்நுட்பம், குறிப்பாக இணையமும் அலைபேசியும் உபயோகத்திற்கு வந்த பிறகு, அவை வாசிப்பையும் பிரசுரத்தையும் வெகுவாக பரவலாகி இருக்கிறது. போன தலைமுறை எழுத்தாளர்கள், எதிர்பார்ப்பு ஏதுமின்றி பல ஆண்டுகள் எழுதிய பிறகு அடைந்த அங்கீகாரத்தை, இன்று ஒரு அறிமுக எழுத்தாளர் எளிதில் பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த சாத்தியம் ஆழமான வேர்களுடைய நீடித்து நிற்கும்படியான படைப்புகளுக்குத் தேவையான பொறுமையையும் காத்திருத்தலையும் எழுதுபவர்களுக்கு இல்லாமலாக்கி விடுகிறதோ என்ற ஐயத்தையும் உருவாக்கியிருக்கிறது. மேம்போக்கான தகவல்கள் நிரம்பிய எளிமையான விவரணைகளுடன் கூடிய எழுத்துக்களும் அதிகம் வரவே செய்கின்றன. கால ஓட்டத்தில் அவை காணாமல் ஆகிவிடும் என்பதால் அவை குறித்து கவலைப்படவும் தேவையில்லை. இது போன்ற சூழலின் சாதக பாதகங்களைக் கடந்துதான் இக்காலத்திற்கான இலக்கியம் உருவாகி நிலைபெறும்.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, இந்த மெய் நிகர் உலகம் நாம் நிஜ உலகில் ஊடாடும் நேரத்தையும் பரப்பையும் வெகுவாக குறைத்து விட்டிருக்கிறது. இது இக்காலத்தின் தவிர்க்கமுடியாத நெருக்கடியாகவே உருவெடுத்திருக்கிறது. மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் இல்லாத ஒரு மனிதன் இன்றைய சூழலில் ஒரு அடையாளமிலியாகவே கருதப்படுவான். இதுபற்றிய விழிப்புணர்வோடு இருப்பதுவும் பிடிவாதமாக வேறு வகையிலான பொழுதுபோக்குகளைப் படிப்பது, இசை கேட்பது, பயணிப்பது எனத் தக்க வைத்துக் கொள்வதன் வாயிலாக முழுவதுமாக இல்லாவிடினும் ஓரளவு நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம்.

 

22) சமீபமாக, ஹிந்தி கவி பிஹாரியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் நீலமணிக் கிண்ண நீரில் தோன்றும் நிலா எனும் தலைப்பில் நீங்கள் மொழியாக்கம் செய்து தொகுப்பாக்கம் கண்டிருக்கிறது. இந்தக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்ததிற்குக் காரணங்கள் ஏதாவது உண்டா? நீங்கள் மொழியாக்கம் செய்வதற்கு ஒரு படைப்பை நீங்கள் எதன் அடிப்படையில் தேர்வுச் செய்கிறீர்கள்?

பிஹாரியின் ‘சத்யசாயி’ என்ற நூலின் ஆங்கிலப் பதிப்பில் இருந்து சில கவிதைகளை ‘சொல்புதிது’ இதழுக்காக முன்பு மொழிபெயர்த்திருந்தேன். பக்தி இலக்கியத்தில், இறைக் காதல் எவ்விதமாக வெளிப்படுகிறது என்பது குறித்த சிறப்புப் பகுதியில் வேறு பல கவிதைகளோடு அவையும் வெளியாகின. நமது சங்கப் பாடல்களில் அகத்திணை பாடல்களை இக்கவிதைகள் பேரளவு ஒத்திருந்தாலும், இவற்றில் இறைச்சிப் பொருளோ இயற்கை படிமங்களோ பெரிய அளவில் இல்லை . ஆனால் உடலை முன்னிறுத்தி காதலையும் காமத்தையும் வெளிப்படையாகப் பேசுபவையாக இருந்தன. அதன் நேரடித் தன்மையும் கவித்துவமும் இக் கவிதைகளை மொழிபெயர்க்க என்னைத் தூண்டியது. தனிப்பட்ட முறையில் அது எனக்குக் கவிதையின் சித்தரிப்பு மொழி மற்றும் செய்நேர்த்தி எவ்வாறெல்லாம் அமைகிறது என்பதை அறிய உதவும் பயிற்சியாகவும் அமைந்தது.

நண்பர்கள் செங்கதிர் மற்றும் கோபாலகிருஷணனுடன் இணைந்து ரேமாண்ட் கார்வரின் கதைகளை மொழிபெயர்க்கத் தொடங்கியபோது கிடைத்த அனுபவங்கள் மூலமாகப் பல தெளிவுகளை அடைய முடிந்தது. தொடர்ந்து  ‘குரங்கு வளர்க்கும் பெண்’ என்ற மொழியாக்கச் சிறுகதைத் தொகுப்பிற்குக் கதைகளைத் தேர்வு செய்வதிலும் மொழிபெயர்ப்பதில் எனக்கு ஏற்பட்ட ஐயங்களைக் களையவும் அவ்விருவரும் மிகவும் உதவியாக இருந்தனர்.

23) ஒரு விமர்சகராகச் சமகால கவிதைகளைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? சற்றே விரிவாகச் சொல்லுங்கள்?

கவிதை என்றில்லை சிறுகதை நாவல் போன்றவற்றிலும் கூட, கடந்தகால சாதனைகளுடன் ஒப்பிட நிகழ்காலத்தில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்பது போன்ற எண்ணமே நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. ஆனால், உண்மையில் எல்லாக் காலத்தையும் போலவே இப்பொழுதும் ஆழமான முன்நகர்வுகள் கவிதையில் நிகழ்ந்தே வருகிறது.

மேலெழுந்தவாரியாக நோக்குகையில் கடலின் மேற்பரப்பு மாற்றம் எதுவும் இல்லாதது போலக் காட்சியளித்தாலும், அதன் ஆழத்தில் உள்ளோடிக் கலக்கும் நீரோட்டங்களால், அதன் தட்ப வெப்பமும் அழுத்தமும் உப்புத் தன்மையும் தொடர்ந்து மாறுவது போலவே, இன்றைய கவிதையின் பொருண்மையும் மொழிதலும் காலத்தையொட்டி மாறிவருகிறது. உரைநடைக்கு நெருக்கமான மொழி என்பதை பொதுத் தன்மையாகச் சுட்டினாலும் அதைக்கொண்டு அகப்படும் தருணங்களில் நுட்பமான மாறுதல்களையும் பிரத்தியேகமான நிலவியல், பருவநிலை, வினை படு அடையாளங்களைக் கொண்டதாகவும் இன்றைய கவிதைகள் விளங்குகின்றன.

24) இந்தியக் கவிதை என்று ஒன்று இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா?

கவிதையின் ஆதாரமான இயங்குதளம் அடிப்படையான மானுட உணர்வுகளே என்பதால், எந்த மொழியில் எழுதப்பட்டாலும் அது உலகின் பிற மூலையிலுள்ள இன்னொரு மனிதனைப் பாதிக்கும் வல்லமை கொண்டதாகவே இருக்கும் எனலாம். இந்தப் பொதுத்தன்மை சிறுகதை, நாவல் போன்றவற்றைக் காட்டிலும் கவிதைகளில் கூடுதலாக இருக்கும். நிலப்பரப்பு, வழிபாட்டு நம்பிக்கைகள், பிறப்பு இறப்பை ஒட்டிய சடங்குகள், பயணம் கலாச்சார தொன்மங்கள், ஆகியவற்றின் பரிவர்த்தனை காரணமாக பல்வேறு மாநில மொழிகளில் எழுதப்பட்டாலும் அவற்றில் இந்தியக் கவிதை என்கிற பொது அடையாளத்தையும் உருவகிக்க முடியும் என்றே நம்புகிறேன்.

 

25) மனநெருக்கடியான தருணங்களை நீங்கள் எப்படிக் கடந்து வருகிறீர்கள்? அப்படிப்பட்ட தருணங்களுக்கு என்றே தொடர்ச்சியாகப் பராமரித்து வரும் மீளும் வழிகள் என்று ஏதும் உங்களுக்கு இருக்கிறதா ?  

வேலை, படிப்பு, நண்பர்கள், குடும்பம் என எனது புழங்கு வெளிகள் எல்லாவற்றிலும் பெரிய அழுத்தங்கள் எதுவும் இல்லாததால் ஒரு சீரான வாழ்க்கையைத்தான் நான் வாழ்ந்து வருகிறேன்.

அரிதாக எப்போதாவது நெருக்கடிகள் வரும் பட்சத்தில் முடிக்காமல் அரைகுறையாக வைத்திருக்கும் ஏதேனும் எழுத்து வேலையில் மூழ்கிவிடுவேன். அல்லது நண்பர்களைச் சந்தித்து அளவளாவி விட்டுத் திரும்பினால் போதும். சிலசமயங்களில் சிறிதும் பெரிதுமான பயணங்கள் எனது உற்சாகத்தை மீட்க உதவும். அவ்வகையில் தமிழினி நண்பர்களோடும், ஈரோடு இலக்கிய சுற்றம் நண்பர்களுடனும் செய்த பயணங்கள் பல இனிய நினைவுகளைக் கொண்டவை.

 

26) இன்றைக்கு ஒட்டுமொத்த மானுடமும் எதிர்கொள்ளும் அடிப்படையான நெருக்கடிகளாக ஆன்மிக சிக்கல்களாக நீங்கள் எவற்றைச் சொல்வீர்கள்?

 தொழில் நுட்பமும் தகவல் தொடர்பு சாதனங்களும் போக்குவரத்து வசதிகளும், நம்மை இட ரீதியாகவும் கால அளவிலும் நெருக்கமாகப் பிணைத்து வைத்திருக்கும் இக்காலகட்டத்தில்தான், நாம் மென்மேலும் தனியர்களாக உணர்கிறோம். நிறைவையும் மகிழ்வையும்  நம் உள்ளிருந்தும் உணர்விலிருந்தும் தேடிக் கொள்ள இயலாமல் வெளியே குவிந்திருக்கும் பொருட்களினின்றும் நுகர்வின் மூலம் அடைய முயல்கிறோம். எவ்வளவுக்கு வெற்றிகரமான மனிதர்கள் ஆகிறோமோ அவ்வளவுக்கு வெறுமையை உணர்கிறோம்.

 

27) சரி. கடைசியாக இந்த கேள்வியை முன்வைக்கிறோம். கலை இலக்கியம் இல்லையென்றால் மானுட வாழ்வு எப்படி இருந்திருக்கும்? அப்படிப்பட்ட மானுடத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க இயல்கிறதா?

கலையும் இலக்கியமும் வெறும் பொழுதுபோக்கு என்கிற அடிப்படை நிலையிலும் கூட, ஏதோ வகையில் மனிதர்களை ஆற்றுப்படுத்தவும் குணப்படுத்தவும் செய்கின்ற ஒன்றாகவே இருக்கிறது.

தன்னுள் உணரும் நிறைவின்மையை இட்டு நிரப்பும் விதமாகவே ஒருவன் படைப்பு வெளிக்குள்  ஒரு உற்பத்தியாளனாகவோ அல்லது நுகர்வோனாகவோ வருகிறான். மனிதனுடைய இச்சை, எதிர்பார்ப்பு ஆசை, அச்சம், ஏமாற்றம், இழப்பு,  மகிழ்ச்சி, துயரம் ஆகிய உணர்வுகளைக் கையாளுவதற்கு இவற்றைக் காட்டிலும் ஏதுவான குறுக்கு வழி ஏதும் இல்லை. அப்படிக் கலை இலக்கியங்களை உருவாக்கிக்கொள்ளவும் அவற்றை உணர்ந்து அனுபவிக்கவும் இயலாததாக  நம் மூளையின் திறன் அமைந்திருந்தால், நாம் விலங்குகளினின்றும் சற்று மேம்பட்ட இனமாகப் பரிணாமத்தில் நீடித்து இருப்போம். ஆனால், இப்போது இருக்கும் மனிதர்களைப் போல அல்ல என்றே தோன்றுகிறது.


நேர்காணல் கேள்விகள்: 

 • வே.நி.சூர்யா
 • க.விக்னேஷ்வரன்

[tds_note]

நன்றி:

புகைப்படங்கள்:  மதன் ராமலிங்கம்.

[/tds_note]

6 COMMENTS

 1. கவிஞர் க.மோகனரங்கனின் நேர்காணல் சிறப்பு. எப்போதும் போல் ஒரு அடங்கிய குரலில் ஆழ்ந்த விஷயங்களை சொல்லி இருக்கிறார். மிகவும் விரிவான கவிதைப் பற்றிய கருத்துருவாக்கம்..அவருடைய
  புராதான கோவில் சிற்பங்கள் பின்னனியில் பேசும் கவிதைகள் அக்கோவில்களைப் போலவே ஆழகும் செழுமையும் கூடியது. வாழ்த்துக்கள் மோகன்.கனலி நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.

 2. திரு மோகனரங்கன் அவர்களுடனான நேர்காணல்

  என்ன சொல்ல

  கடற்கரை ஓரத்தில் நின்று கடலை பிரமிக்கறோமே..
  அப்படி ஒரு பிரமிப்பு !

 3. செறிவான கேள்விகளும் மனத்தின் ஆழத்திலிருந்து வெளிப்படும் நேர்மையான பதில்களுமாய் சிறப்பானதொரு நேர்காணல். கவிஞர் மோகனரங்கன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

 4. முதலில் கவிதைகளில் இந்தக் கவிஞர், பிறகு நேர்பழக்கத்தில் இந்த மனிதர் எப்படி இப்படி ஆழமானவராக இருக்கிறார் என்று வியந்திருக்கிறேன். இந்த அமைதியான ஆழத்திற்கு அகத்தையும் புறத்தையும் கவனித்து உள்வாங்கி அவற்றில் மிகுதியையும் உள்ளே இருத்திக்கொண்டு கொஞ்சமேகொஞ்சம் வெளிப்படுத்துவதால்தான் என்று எண்ணுகிறேன். பனிப்பாறை. உணர்ச்சியேத்தல் (sensational) விதமாக ஒன்றைப் பேசமாட்டார்; எழுதமாட்டார். புகழ்நாடிச் செயல்பட்டும் கண்டதில்லை.

  முதலிலேயே கவிதை தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொண்டு எழுதவைப்பதில்லை; ஒரு சொல்லோ சொற்றொடரோதான் அந்த உத்வேகத்தைத் தருகிறது என்னும் கருத்துக்கு வழிமொழிகிறேன்.

  ஒரு கூட்டத்தில் பேசவேண்டியிருந்தால் இவருடைய விமர்சன நூல்களை எடுத்து வாசித்துப் பார்ப்பது என் வழக்கம்.

  “கனலி”க்கு நன்றி!

 5. அற்புதமான நேர்காணல். திரு.மோகனரங்கன் படைப்புக்க ள் இன்னும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.