குண்டுவெடிப்புக்கு முன் ஹிரோஷிமாவைப் பார்த்திராதவர்கள் அந்த நகரம் அதற்குமுன்பு எப்படி இருந்திருக்கும் என்று நிச்சயமாக யோசிப்பார்கள்.
அகன்ற தீபகற்பமாக இல்லாதிருந்த ஹிரோஷிமாவை, ‘நாணல் சமவெளி’ என்று பொருள்படுகிற அஷிஹாரா, என்றே நெடுங்காலத்திற்கு முன் அழைத்தார்கள். அது நாணல்கள் நிறைந்த பரந்த கழிமுக நிலம். நானூறு ஆண்டுகளுக்கு முன்னான காலகட்டத்தில் நாடுகள் ஒன்றுடன் ஒன்று போர்புரிந்தபோது, பலம் மிக்க மோரி மோண்டோனரி அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார். டோகுகவாவால் துரத்தப்பட்ட மோண்டோனரி மேற்குத் திசையில் ஹாகிவரை பயணித்து இப்போதுள்ள யாமாகுசி நகராட்சியைச் சென்றடைந்தார். அவரைத் தொடர்ந்து ஹிரோஷிமாவை ஆண்ட ஃபுகுஷிமா, மாசனோரி, அந்தக் கோட்டையை மேலும் விரிவுபடுத்தினார்.
ஆனால் ஃபுகுஷிமாவின் ஆட்சியும் ஒரு தலைமுறை மட்டுமே நீடித்தது. அதன் பிறகு பதவியேற்ற அசானோவின் ஆட்சி பதின்மூன்று தலைமுறைகள்வரை செழிப்பாக நடந்தது. விசுவாசிகளின் உட்பிரிவுத் தலைவரான அசோனா நாகபோடா பிரபுதான் இந்த வரிசையின் இறுதி ஆட்சியாளராகத் திகழ்ந்தார். இந்த நீண்டகால ஆட்சி மெய்ஜி மீட்டெடுப்பின்போது முடிவுக்கு வந்தது. புரட்சி நடந்த இந்தக் காலகட்டத்தில், பக்கத்து நாடான சோஷு பெரும் பலம்பொருந்திய நாடாக எழுச்சி பெற்றது. ஆனால் அதே போன்றதொரு பேராற்றலை ஹிரோஷிமாவால் வெளிப்படுத்த இயலவில்லை. மார்குவிசினுடைய பிரபுவாகப் புதிதாகப் பட்டம் சூட்டப்பட்ட நாகாகோடோ மிகச் சிறந்த மனிதர் என்பதுடன் உயர்ந்த குணமும் உடையவர். ஆனால் அவருடைய ஆணைக்குட்பட்டுப் பணியாற்றியவர்கள் தீவிரத்தன்மை அற்றவர்களாக அறியப்பட்டனர். ஹிரோஷிமாவின் நவீனகால மக்களின் மனநிலையைப் புரிந்துகொள்வதற்கு இத் தகவல்கள் உதவும்.
ஹிரோஷிமாவின் ஆளுமை என்பது இயற்கைக் காட்சிகள் போலப் பிரகாசமாக இருக்கும். அதே சமயத்தில் பொறுப்பற்றதாகவும், யாருடனும் பழகாமல் தனிமையிலும் இருக்கும். அவர்களுடைய பேச்சு வழக்கில் சொற்கள் நுனி நாக்கில் பேசப்படும். இது வடகிழக்கு ஜப்பானின் அழுத்தமான உச்சரிப்பு முறையான டொஹோகுவுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ஒருவர் எதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமலும், எதிலும் தீவிர ஈடுபாட்டுடன் செயல்படாமலும் இருக்கும்வரை, ஹிரோஷிமா நல்ல தட்பவெப்ப சூழலில், பொருட்செல்வத்துடன், செழிப்பாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும், வாழ்வதற்கு ஏற்ற நல்ல நகரமாகவும் அவருக்கு இருக்கும்.
ஹிரோஷிமாவினுடைய இயற்கையான நில அமைப்பியலைப் பொருத்தவரை, வடக்கில் மலைத் தொடர்களுக்கு இடையேயும் தெற்கில் பெருமளவு நிலப் பகுதிகளுடைய கடலாகவும் அது பரந்து விரிந்திருந்தது. ஓடோ நதியின் ஏழு கிளைநதிகள் கழிமுக நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்த எண்ணற்ற, நவீன, வெண்ணிறமான நீண்ட பாலங்களின் வழியே மென்மையாகப் பாய்ந்தோடியது.
வெண்ணிறப் பாய்மரத் துணிகள் கட்டப்பட்ட மீன்பிடிப் படகுகளும் சிறிய பயணியர் படகுகளும் உஜைனா விரிகுடாப் பகுதிவரை படகுகள் பயணிக்கும் நதிக் கிளைகள். ஆற்றோட்டத்தின் எதிர்த் திசையில் நதியில் தோன்றும் மலைகளின் பிரதிபலிப்புகள் கண்ணைக் கூசச் செய்யும்படி இருக்கும்.
ஹிரோஷிமாவின் நதிகள் அழகானவை. அந்த அழகு எப்படிப்பட்டது என்றால் பார்ப்போரை உறக்கத்தில் ஆழ்த்தும் அமைதியான அழகுடையவை. பரந்த சமதளமான நில அமைப்பின் குறுக்கே பரவித் தவழ்கிற அந்த நீல நதிகளேகூட ஒருவேளை உறங்கிக்கொண்டு இருக்கின்றனவோ என்று நமக்குத் தோன்றும். அவை பாய்வதைப் பார்க்கவோ, பாறைகளின் மீது நதி மோதுகிற இனிய ஓசையைக் கேட்கவோ, ஆழமற்ற மிதமான நீர்ப் பரப்பை உற்றுப் பார்த்தபடி நேரத்தைக் கழிக்கவோ இயலாதபடி நம்மை மயக்கிவிட்டிருக்கும். பனிக்காலத்தின் உறைபனி நாட்களில் பனி அந்த மொத்த இடத்தையும் போர்த்தியிருக்கிறபோதுகூட தன்னைப் பார்க்கிறவர்களின் உறக்க மனநிலையை அந்த நதிகளால் தூண்டமுடியும்.
பெரும் பனிப் பொழிவுள்ள நாட்களில்தான் எனக்கு
ஹிரோஷிமாவின் நதிகளை மிகவும் பிடிக்கும். பனி, நகரங்களின் பல்வேறு பகுதிகளைப் பிரித்தெடுக்க முடியாதபடி மூடி ஒட்டுமொத்தமாக இந்தப் பூமியையே பனி உலகமாக மாற்றியிருக்கும். ஆழத்தில் உள்ள வெண்ணிற மணலும் பச்சை நிற கூழாங்கற்களும் மின்னுவது மேற்புறத்தில் தெரியும்படியான தெள்ளிய நீருடைய அந்த ஏழு நதிகளும் சாவகாசமாகத் தவழ்ந்தன. மென் மணலுடன் வறண்டுகிடந்த ஆற்றங்கரைகள் வெண்ணிறமாகவும் கூழாங்கற்கள் வெள்ளை, பழுப்பு, கரும் பச்சை நிறத்திலும் இருந்தன. வெளிர் சிகப்பு சாயம் பூசியது போன்ற ஒன்றிரண்டு கூழாங்கற்கள் எப்போதாவது அங்கு காணக் கிடைக்கும்.
தண்ணீரின் மேற்பரப்பு, மலைகளின் அடியாழத்தில் உள்ள ஏரியைப் போல மெல்லிய வெளிர் நீலத்திலிருந்தது. பனிக் காலத்தில் அது புகைபடிந்த மெல்லிய நீலக் கண்ணாடி விரிப்பு போலவோ, ஒளி ஊடுருவும் அளவுக்கு மிருதுவான பட்டால் ஆன மென்துகிலால் போர்த்தப்பட்டது போலவோ இருக்கும். அதன் மீது வீழ்கிற ஒவ்வொரு பனித் துண்டும் மென்மையாக உறிஞ்சப்பட்டுப் பின் மறைந்துபோகும்.
வரைபடத்தைப் பார்த்தால், ஹிரோஷிமா மேற்கு திசையில் இருப்பதாகக் காட்டும். ஆனால் உண்மையில் தென்பகுதிக்குரிய மிதமான வெப்பமும், மந்தமான நிதானமான வளிமண்டலமும் அந்த நகரத்துக்குச் சொந்தமாக இருந்தது. அதன் நதிகள், தென் திசையை நோக்கி ஒரு திறந்த வெளி விசிறியைப் போல நகரின் பல பகுதிகளில் பரவியிருந்ததுதான் இதற்குக் காரணம். தெற்குத் திசையிலிருந்த நதிகளைத்தவிர, அந்த நகரம் முழுக்க முழுக்க மலைகளால் சூழப்பட்டிருந்தது. தாழ்ந்த மென்மையான சரிவுகளுடன் நீண்ட தூரம் பரவியிருந்த மலைத் தொடர்கள், உறங்கும் ஒட்டகங்களின் திமில்களைப் போல இருந்தன. நெரிசலான நகரத்தின் மத்தியிலிருந்து பார்த்தால்கூட மலைகள் தெரியுமளவுக்கு எங்கெங்கு காணினும் மலைகளாக இருந்தன.
ஹிரோஷிமாவின் கோட்டையும் நகரத்தின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் வெகு அருகே தெரியக் கூடியது. சின்னஞ்சிறு பாறைத் துண்டுகளை அடித்தளமாகக் கொண்டு அது உயர்ந்து நிற்பது கம்பீரமான மலைகளின் காட்சிக்கு எதிரே நேர் முரணாகத் தோற்றமளித்தது. வெள்ளையும் கருப்பும் சாம்பலுமான நிறச் சேர்க்கையுடன் நெடிதுயர்ந்து நின்ற அந்தப் பழங்காலக் கோட்டை, சமதளமான நகரத்திலிருந்து ஒருவகையில் மாறுபட்டுத் தெரிந்தது.
ஹிரோஷிமாவின் யுவதிகளுக்கு மலையகப் பெண்களைப் போல் வெளுத்த தோலோ துடுக்குத்தனமான முகமோ கிடையாது. அவர்கள் பெரும்பாலும் கருத்த நிறமுடையவர்களே. நதிகள் அவர்களுடைய தோலின் நிறத்தைக் கருப்பாக்கிவிடுவதாகச் சிலர் சொல்வதுண்டு. அருகில் உள்ள உஜினா விரிகுடாவின் அலைகள் தினமும் பலமுறை நேரடியாக நதிக்குள் பாய்ந்துசென்று வடிவதாலும் ‘வெப்பம் உமிழ்கிற நதி’ என்கிற சொல் பொருள் நிறைந்ததாகிறது.
அங்கு வசித்த இளம்பெண்களில் பெரும்பாலும் அனைவரும் பருத்த உடல்வாகுடையவர்கள். கருங் கூந்தலும் வெண்ணிறப் பற்களுமாகத் தம் இளமைப் பருவத்தின் இறுதிக் கட்டத்திலிருந்த அந்தப் பெண்கள் வித்தியாசமான முறையில் அசைந்தசைந்து நடந்தனர். தேவையே அற்ற சமயங்களில் வேகமாக ஓடுவதுடன், மற்றவர்களைக் கிண்டலடிப்பது போல உணர்ச்சியற்ற தங்கள் கண்களால் வெறித்துப் பார்க்கும் இவர்கள், பேருந்துகளில் பயணிக்கையில் தங்கள் வாயை அகலத் திறந்தபடி செல்வர்.
நல்ல உயரமும் வசீகரமான அழகிய முகமுங்கொண்ட பெண்ணொருத்தி எப்போதாவது நம் கண்களுக்குத் தென்பட்டுவிட்டாலும் நான் முன்பே சொன்னது போல, தன் நுனி நாக்கை மட்டும் பயன்படுத்தி அவள் பேசுகிற சத்தத்தைக் கேட்ட அடுத்த நொடி, அவளிடம் மேற்கொண்டு பேசுகிற ஆசையே நமக்குத் தீர்ந்துவிடும்.
நாம் இயல்பாகப் பழகுவதற்கு ஏற்ற இத்தகைய இளம்பெண்களையும் சேர்த்து, ஹிரோஷிமாவின் மக்கள் தொகை நான்கு லட்சம் என்றும், மூன்று லட்சம் என்றும் ஐந்து லட்சம் என்றும் பற்பல எண்ணிக்கைகளில் சொல்லப்பட்டது. போர்க் காலங்களில் வெளியேற்றப்பட்டுக் கிராமங்களுக்குக் குடிபெயர்ந்த மக்களால் இந்த எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. இதற்கிடையில், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான இராணுவ வீரர்கள் நகருக்குள் புகுந்தனர். ஆகஸ்ட் ஆறாம் தேதியன்று ஏறத்தாழ நான்கு லட்சம் பேர் அங்கு இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான்கு பேருக்கு ஒரு வீடு எனும் பழமைவாய்ந்த உத்தேச மதிப்பீட்டின்படி பார்த்தால் ஹிரோஷிமாவில் ஒரு இலட்சம் வீடுகள் இருந்தன.
தீ பரவாமல் இருப்பதற்காகப் பயன்படும் தடுப்புகளை உருவாக்குவதற்காக அங்கிருந்த வீடுகள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் என அனைத்தும் தாக்குதல் நடந்த ஆகஸ்ட் ஆறாம் தேதிக்கு முன்பு இடிக்கப்பட்டுக் கிடந்தன.
ஆனால் அதே ஆகஸ்ட் ஆறாம் தேதிக்குச் சில நாட்களுக்கு முன்புகூட ரெட் கிராஸ் மருத்துவமனையினுடைய நான்காவது மாடியிலிருந்து நான் நகரத்தைப் பார்த்தேன். வீடுகள் ஒழுங்கற்ற முறையில் நெருக்கியடித்தபடி இருந்ததைக் கண்டு இப்படிப்பட்ட ஒரு இடத்தில் தீயணைப்புத் தடுப்புகளை வைப்பதாக இருந்தால் அவற்றை எங்கு வைக்கமுடியும் என்று நான் யோசித்திருக்கிறேன்.
இந்த நகரத்தின் மீதுதான் கடுங்கோடை மாதத்தில் ஒருநாள் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி விநோதமான நீலப் பேரொளி ஒன்று வானத்தில் தோன்றிப் பாய்ந்தது.
நகரின் வடகிழக்கு எல்லையில் ஹகுஷிமா எனும் பழைய குடியிருப்புப் பகுதி பல காலமாக இருந்தது. அங்கிருந்த எங்கள் வீட்டில் என் அம்மாவுடனும் தங்கையுடனும் நான் வசித்துவந்தேன். இராணுவத்தைச் சேர்ந்தவர்கள், அலுவலகப் பணியாளர்கள் என நிறையபேர் இந்த மத்திய வர்க்கப் பகுதிகளில் வசித்தனர்; இதன் பொருள் என்னவென்றால் அங்கிருந்த இல்லத்தரசிகள் பகல் முழுதும் கதவுகளை அடைத்துக்கொண்டு தன்னந்தனியாக வீட்டுக்குள்ளேயே கிடப்பர் என்பதுதான்.
என் அம்மா, தங்கை, அவளுடைய பெண் குழந்தை என எங்களுடைய வீடு முழுக்கவே பெண்களால் ஆனது. ஜூன் மாத இறுதியில் என் தங்கையின் கணவருக்கு ராணுவத்திலிருந்து இரண்டாவது முறையாக அழைப்பு வந்திருந்தது. ஆனால் அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று எங்கள் யாருக்குமே தெரியவில்லை.
புதுவருடப் பிறப்புக் கொண்டாட்டத்திற்காக நான் டோக்கியோவிலிருந்து இங்கு வந்திருந்தேன். டோக்கியோவிலிருந்த என்னுடைய வீட்டை விற்பதற்கு உதவி செய்வதற்காக யாரையாவது இங்கிருந்து அழைத்துச் செல்லும் எண்ணத்தில் மார்ச் வரை இங்கு தங்க நினைத்திருந்தேன். வெப்பமான வானிலை தொடங்கிவிட்டால் அதன்பிறகு டோக்கியோவில் எதையுமே செய்யமுடியாது. ஏனெனில் இரவும் பகலுமாகத் தொடர் வான்வெளித் தாக்குதலில் இருந்து தப்பிக்க நாம் நிலத்தடி மறைவிடங்களில் ஒளிந்துகொள்ளவேண்டியிருக்கும்.
அக்டோபர் 30 ஆம் தேதி ஒரு மழை இரவில் டோக்கியோவின் மீது முதல் குண்டு வீசப்பட்டது. வெடிகுண்டுகளாலும் எரிகுண்டுகளாலும் தொடர் தாக்குதலுக்கு உள்ளான மிஷி தண்டா, நிகான் பாஷி பகுதிகள் இரவு ஒன்பது மணி தொடங்கி காலை ஏழு மணிவரை பற்றி எரிந்தன. நான் நெரிமா பகுதியில் வசித்தேன். நவம்பர் இரண்டாம் தேதி நடந்த அடுத்த தாக்குதலில் நான் வசித்துவந்த நெரிமா பகுதியின் வானில் திடீரென எழுபது விமானங்கள் தோன்றின. அவை மேற்கு எல்லைவரை நீண்டிருந்த முசாஷி சமவெளியில் நீண்ட இடைவெளிவிட்டுக் கட்டப்பட்டிருந்த வீடுகளைக்கொண்ட பகுதிகளில் குண்டுகளையும் எரிகுண்டுகளையும் ஆங்காங்கே பரவலாக வீசின. ஒரு குடியிருப்புக்கு ஒன்றரை குண்டுகள் என்ற கணக்கில் இருநூறு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். என்னைச் சுற்றியிருந்த வீடுகள் அனைத்தும் ஒன்று புகை மண்டலமாகக் காட்சியளித்தன அல்லது முழுக்கத் தரைமட்டமாகின.
எங்கள் வீட்டுக்கு அருகே வசித்த இன்னொரு பெண் எழுத்தாளரிடம் பேசும்போது, கடற்கரை அதிகாரி டோகோ ஹேஹாச்சிரோவின் வாசகமான ‘நாம் சிறிதும் எதிர்பாராத நேரத்தில்தான் எதிரி நம் முன் தோன்றுவான்’ எனும் வரிகளை நான் விளையாட்டாகச் சொல்வதுண்டு. டோக்கியோவில் நாள் முழுக்க வீசப்பட்ட வெடிகுண்டுகளாலும் உணவுப் பற்றாக்குறையாலும் நான் மீண்டும் ஹிரோஷிமாவுக்குத் திரும்பிவிட்டேன்.
போர்க் காலங்களில் வசிப்பதற்குப் பாதுகாப்பான ஒரு இடமாக ஹிரோஷிமாவை நான் எப்போதுமே கருதியதில்லை. ஆனால் சொந்த ஊருக்கு வரும்போது வெறும் கையுடன் வரக்கூடாது என்பதற்காக நான் டோக்கியோவில் வைத்திருந்த பொருட்களை அங்கிருந்து திரும்ப எடுத்துக்கொண்டு வந்துவிடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். மார்ச் போய் ஏப்ரலும் வந்தது. ஆனால் டோக்கியோவுக்குப் பயணிப்பதில் உள்ள ஆபத்து அதிகரித்தபடியே இருந்தது. டோக்கியோவிலிருந்து கிழக்கில் ஒசாகா கோப் வரை, ஜப்பானின் கிழக்குப் பகுதிகள் முழுவதிலும் ஒரு நாள்கூட இடைவெளியின்றி குண்டுகள் பொழிந்தபடி இருந்தன.
மே மாத வாக்கில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் ரெட் கிராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் ஜூலை இருபத்தி ஆறாம் தேதிவரை அங்கிருந்தேன். நான் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தேன். ஆனால் நிலைமை சரியில்லாததால் என்னுடைய பயணம் தடைப்பட்டுக் கொண்டிருந்தது.
ஆகஸ்ட் ஆறாம் தேதி அதிகாலையில் நான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தேன். ஐந்தாம் தேதி இரவு முழுக்க யாமாகுசி மாவட்டத்திலிருந்த உபேவில் அலை அலையாகத் தொடர் குண்டுகள் வெடித்தபடி இருந்தன என்கிற வானொலி அறிக்கைகளைக் கேட்டபோது என் கண்ணெதிரே தீப் பிழம்புகள் எழுவது போலிருந்தது.
யாமாகுசி மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலிருந்த எங்களுக்கு அருகே இருந்த ஹிகாரி, குடமட்சு, ஈபே என ஒவ்வொரு நகரமாக அடுத்தடுத்து எரிந்தழிந்தன. அன்றிரவே ஹிரோஷிமாவும் தீப் பிழம்புக் கடலாக மாறியிருக்கக்கூடும். ஹிரோஷிமாவின் இன்னொரு பக்கத்திலிருந்த ஃபுகுயாமாவும் எரிகுண்டுத் தாக்குதலுக்கு ஆளானதாக அறிவித்த வானொலி, அதைத் தவறான தகவல் என்று பின்னர் திரும்பப் பெற்றது.
வான் வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஹிரோஷிமாவிலும் ஒலித்ததில் எங்கள் வீட்டினருகே இருந்தவர்கள் எந்த நொடியிலும் அங்கிருந்து தப்பிச் செல்லத் தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆகவே ஐந்தாம் தேதி இரவு தூக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது.
விடிந்ததும் சிகப்பு எச்சரிக்கை அகற்றப்பட்டது. ஏழு மணி கடந்ததும் சில நொடிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் திரும்பப் பெறப்பட்டது. நான் மறுபடியும் உறக்கத்தில் ஆழ்ந்தேன். நான் எப்பொழுதும் இரவுகளில் தாமதமாக உறங்குவதாலும் இப்போதுதான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியே
வந்திருந்ததாலும் நான் மதியம்வரை உறங்கினேன். இதனாலேயே பிரகாசமான அந்த நீலப் பேரொளி தோன்றும்வரை அவர்கள் என்னைத் தொந்தரவு செய்யவில்லை.
கொசுவலைக்குள் நான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது சிலர் ஒரு வெடிகுண்டு 8:10க்கு விழுந்ததாகவும் சிலர் 8:30க்கு விழுந்ததாகவும் சொன்னார்கள். எப்படியானாலும் கடலின் ஆழத்தில் மின்னல் பாய்வது போல் ஒரு நீல நிறப் பேரொளி என்னைச் சூழ்ந்ததாக நான் என் கனவில் உணர்ந்தேன். அதைத் தொடர்ந்து பயங்கரமான ஒரு பெருஞ்சத்தம், பூமியையே உலுக்குமளவுக்கு எழுந்தது. விளக்கத்துக்கு அப்பாற்பட்ட பெரும் இடிச் சத்தத்தின் திரள் போல அது இருந்தது. அடுத்த நொடி, பூதாகரமான பாறை ஒன்று மலை உச்சியிலிருந்து உருண்டு வீட்டின் மீது விழுந்தது போல் வீட்டின் கூரை படுவேகமாகத் தரைமீது நொறுங்கிச் சரிந்தது. நான் வந்து பார்த்தபோது அந்த இடமே நொறுங்கிக் கிடந்தது. என்னுடைய அறை, சுவர்களின் சாந்தால் உருவான தூசு மேகங்களுக்கு நடுவே கிடந்ததில் திகைத்துப் பேச்சற்று நின்றேன். அதிகாலை நேரமாகியும் பிரகாசமான சூரிய ஒளிக்குப் பதிலாக மழைக் கால மாலையின் இருள் தோன்றியது.
பனிச் சீவல்களின் மெல்லிழைகள் போல எரிகுண்டுகள் வானிலிருந்து வீழ்ந்ததாகச் சொல்லப்பட்ட குரே நகரில் நடந்த வான்வழித் தாக்குதல் அப்போது என் நினைவுக்கு வந்தது. ஜன்னல் கண்ணாடி, சுவர்கள், என்னுடைய அறைக்கும் பக்கத்து அறைக்கும் தடுப்பாக இருந்த மூங்கில் தடுப்புகளால் ஆன நெகிழ் காகிதச் சுவர்கள், மேற்கூரை ஆகிய யாவும் தகர்க்கப்பட்டு வெற்று எலும்புக்கூடுபோல மாறியிருந்த மேல் மாடியைக் கண்களை அகல விரித்துப் பார்த்தேன். சிதைவுற்ற அனைத்தும் குப்பைகளாகக் குவிந்துகிடந்த இடத்தில் எரிகுண்டுகள் ஏதாவது இருக்கின்றனவா என்று தேடினேன். இல்லை.
ஆனால் நான் படுத்துக்கிடந்த இடத்தினருகே நாற்பது அல்லது ஐம்பது எரிகுண்டுகள் வீழ்ந்துகிடந்தன. ஆனால் தீப் பிழம்போ புகையோ எதுவுமே இல்லை. நான் எப்படி இன்னும் உயிரோடு இருக்கிறேன்? இது மிக விசித்திரமாக இருந்தது. என்னுடைய பிணம் இந்தக் குவியலின் நடுவே எங்காவது கிடக்கிறதோ என்று நான் என்னைச் சுற்றிலும் தேடிப் பார்த்தேன்.
பலவிதமான துகள்கள், நொறுங்கிய கண்ணாடிச் சில்லுகள், ஓடுகளின் துண்டுகள் ஆகியவை மட்டுமே இந்த மாடி அறையில் குவியலாகக் கிடந்தன. ஆனால் என் கொசு வலை, படுக்கை, படுக்கையின் அருகே நான் வைத்திருந்த பொருட்கள், நீளம் குறைந்த குறுஞ் சட்டை, தொப்பி, என் கைக் கடிகாரம், என் புத்தகங்கள் என எதுவுமே கண்ணுக்குத் தென்படவில்லை. கிராமப்புறப் பயணம் ஒன்றிற்காக நாங்கள் பக்கத்து அறையில் வைத்திருந்த பன்னிரண்டு பயணப் பெட்டிகளின் தடமே இல்லை. யாரோ அவற்றை அங்கிருந்து எடுத்துப் போய்விட்டது போலிருந்தது.
பெரிய கண்ணாடிக் கதவுகள் பொருத்தப்பட்ட புத்தக அலமாரிகளிலிருந்த, ஏறத்தாழ மூன்றாயிரம் நூல்கள்கொண்ட என் தங்கையின் கணவருடைய நூலகம் எங்கு பறந்து போய்விட்டது என்று தெரியவில்லை. வீட்டினுள் எதுவுமே இல்லை. ஆனால் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை இடிபாடுகளுடன் நொறுங்கிக் கிடந்த வீடுகள் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட வரிசையில் கண்ணுக்குத் தெரிந்தது வழக்கத்திற்கு மாறான காட்சியாக இருந்தது. நகரின் மற்ற பகுதிகளிலும் இதே நிலைதான். ஹட்சாபோரியில் இருந்த சுகோகு ஷின்பன் செய்தித்தாளின் தலைமை அலுவலகமும், நகரேகாவாவில் இருந்த வானொலி நிலையமும் இப்போது ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடிப் போய்க் கரு நிற நிழலுருபோலத் தெரிந்தன.
அந்தச் சாலையில் கண்ணுக்குத் தென்பட்ட ஒரு வீட்டில் கற்களால் ஆன அதனுடைய கதவு மட்டுமே மிஞ்சியிருக்க, கருணையற்ற விதத்தில் அந்த வீடு தரைமட்டமாகி இருந்தது. திகைத்துப் போய்க் கதவருகே நின்றிருந்த ஒரு சிறுமி தன் மொத்த சக்தியையும் இழந்துவிட்டதைப் போலத் தெரிந்தாள். நான் நின்றிருந்த முதல் மாடி அவளுக்குத் தரையிலிருந்து தெளிவாகத் தெரிந்தது. அவள் என்னை வெறித்துப் பார்த்து ஆச்சரியமான குரலில் “ஓ!” என்றாள். பிறகு தணிந்த குரலில், “உடனடியாக அங்கிருந்து கீழே இறங்கி வந்துவிடுங்கள்” என்றாள்.
ஆனால் நான் அங்கிருந்து இறங்குவதற்கு எந்த வழியும் இல்லை. முன்பக்கமும் பக்கவாட்டிலும் இருந்த படிக்கட்டுகள் நல்ல நிலையிலிருந்தன. ஆனால் படிகள் முழுவதும் கிடந்த சுவர்களில் பதிக்கப்படும் வண்ண வடிவ ஓடுகள், மூங்கில்கள் ஆகியவற்றின் உடைந்து நொறுங்கிய குவியல்களின் உயரம் என் உயரத்தைவிட அதிகமாக இருந்தது.
என் குடும்பத்தார் யாரையாவது அழைக்குமாறு நான் அவளிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குத் தோன்றிய அதேகணம் நிச்சயமாக யாரும் வந்து என்னை அழைத்துச் செல்லப்போவதில்லை என்பதும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது.
ரத்தம் தோய்ந்த முகத்துடன் என் தங்கை பாதிப் படியேறி எப்படியோ மேலே வந்துவிட்டாள். அவளுடைய வெண்ணிற உடை கருஞ் சிவப்பு நிறச் சாயத்தில் தோய்த்து எடுத்தது போல மாறி இருந்தது. அவளுடைய தாடை ஒரு சிறிய வெண்ணிறத் துணியால் மூடப்பட்டிருந்தது. அவளுடைய முகம் சிவந்த ஊதா நிறப் பூசணி போல பருத்துக் காணப்பட்டது. அவளைப் பார்த்ததுமே நான் அவளிடம், “அம்மா உயிருடன் இருக்கிறாளா?’ என்று கேட்டேன்.
“இருக்கிறாள். நன்றாக இருக்கிறாள். அவள் உன்னை வீட்டின் பின்பக்கம் இருக்கிற கல்லறையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள். குழந்தையும் உயிருடன் இருக்கிறது. நீ உடனே வேகமாகக் கீழே இறங்கி வா” என்றாள்.
“நான் எப்படி இறங்கி வருவது? அதற்கு வாய்ப்பே இல்லாதது போலத் தெரிகிறது” என்றேன்.
என்னுடைய அம்மா உயிருடன் இருக்கிறாள் என்ற செய்தி அவ்வளவு பெரிய நிம்மதியையும், அங்கிருந்து வெளியேறுவதற்கான உறுதியையும் எனக்குத் தந்தது. படியில் இருந்தவற்றை என் தங்கை அங்கிருந்து தள்ள முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை. அவள் அதன் மீதே மயங்கி விழுந்துவிடுவாள் போல இருந்தது.
“பரவாயில்லை விடு. நீ போ. நானே இறங்கி வந்துவிடுகிறேன்” என்று அங்கிருந்து கத்தினேன்.
“நீ என் அளவுக்கு மோசமாகக் காயமடையவில்லை என்று நினைக்கிறேன். நீயே எப்படியாவது அங்கிருந்து இறங்கிவிடு” என்றாள்.
அவள் இதைச் சொன்ன போதுதான் என்னுடைய கிமோனோவின் கழுத்துப் பட்டை ரத்தத்தில் நனைந்திருப்பதை நான் பார்த்தேன். ரத்தம் என் தோளிலிருந்து மார்பு வரை சொட்டிக்கொண்டிருந்தது. நான் பல மாதங்கள் வசித்த, பத்து தரை விரிப்புகள்கொண்ட, மீண்டும் நான் திரும்பி வரவே இயலாத அந்த அறையைவிட்டு வெளியேறியபோது அதைக் கடைசியாக ஒருமுறை பார்த்தேன். எங்குமே ஒரு சிறிய கைக்குட்டைகூட என் கண்களுக்குத் தெரியவில்லை. கட்டில் இருந்த இடத்தில் எங்களுடைய சிங்கர் தையல் இயந்திரம் சுக்கல் சுக்கலாக உடைந்து கிடப்பது இப்போது என் கண்ணுக்குத் தெரிந்தது.
படிகளில் கிடந்த இடிபாடுகளுக்கு இடையே ஊர்ந்துபோகும் அளவுக்கு வழி ஏற்படுத்திக்கொண்டு நான் அங்கிருந்து கீழே வந்தேன். மேல் மாடி அளவுக்குத் தரைத்தளம் மோசமான பாதிப்படைந்திருக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு பயணத்துக்குத் தயாராக என் தங்கை எடுத்து வைத்திருந்த பெட்டிகள் நம்ப இயலாத அளவுக்கு நொறுங்கி ஒன்றன் மீது ஒன்றாகக் குப்பலாகக் கிடந்தன.
என்னுடைய பெரிய இரும்புப் பெட்டியும் என் அம்மாவின் மரப் பெட்டியும் பெரும் வேகத்தோடு வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில் தூக்கி வீசப்பட்டிருந்தன. வெடிகுண்டுத் தாக்குதல் ஏற்பட்டால் எங்கள் வீட்டின் பின்புறம் இருந்த கல்லறையில் அவற்றைப் பத்திரமாக வைக்கவேண்டும் என்று முடிவு செய்த நாங்கள், வலிமையான காரைப் பூச்சுடைய மேல்மாடியின் மூலையில் முந்தைய இரவுதான் அவற்றை வைத்திருந்தோம்.
கல்லறைக்குப் போகவேண்டும் எனில் எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தோடு இணைந்திருந்த மரப் பலகையால் ஆன வேலியைக் கடந்து செல்லவேண்டும். எங்களுக்குச் சொந்தமான இடத்திலிருந்து அந்தப் பெரிய கல்லறைக்குச் செல்ல ஒரு படல் இருந்தது. நாங்கள் வான்வழித் தாக்குதலில் இருந்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு மறைவிடமும் ஒரு சிறிய காய்கறித் தோட்டமும் அமைத்திருந்தோம். இப்போது அங்கிருந்த அனைத்துமே காற்றில் பறந்துபோய் விட்டிருந்ததால் முழுக் கல்லறையையும் என்னால் இப்போது நன்றாகப் பார்க்க முடிந்தது. கல்லறைக்கும் வீட்டுக்கும் இடையே என் அம்மா முன்னும் பின்னுமாக நடப்பது தெரிந்தது.
கல்லறை வழியாகச் சென்றால் அந்தப் பாதை அணைக்கு இட்டுச் செல்லும். கல்லால் ஆன அந்த அணையைச் சுற்றி ஒரு நீண்ட மர வேலி இருக்கும். அந்த வேலியும் காணாமல் போயிருந்தது. வழக்கமாக அந்த அணையின் கல் படிகளை என்னால் பார்க்கமுடியாது. ஆனால் இப்போது அவை என் கண்களுக்குத் தெரிந்தன. என் ஒன்றுவிட்ட சகோதரனுடைய நினைவுச் சின்னத்தின் சிகப்பு நிறக் கதவு மட்டுமே மிஞ்சி நிற்க அந்தக் கட்டிடம் மொத்தமும் தரைமட்டமாகி இருந்தது.
நான் கல்லறைக்குச் சென்று என் அம்மாவையும் தங்கையையும் பார்த்தேன்.
“ஒருவேளை அவர்கள் நினைவுச் சின்னத்தைக் குறிபார்த்துத் தாக்கினார்களோ?” என்று என் அம்மா ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகொள்வது போலக் காதருகே கிசுகிசுத்தாள். ஆனால் பல வீடுகள் அழிக்கப்பட்டிருந்தபோதும் நெருப்பே இல்லை. ஆகவே எரி குண்டுகள்தான் வீசப்பட்டிருக்கவேண்டும். இவற்றைச் சாதாரண குண்டுகள் என்று நாம் கருதவேமுடியாது. இவை இரண்டையுமே நான் டோக்கியோவில் நான் பார்த்திருக்கிறேன். இது வேறு. ஆனால் ஒன்று, வான் வழித் தாக்குதலுக்கான அபாய அறிவிப்பும் ஒலிக்கவில்லை, விமானங்கள் வந்த சத்தமும் எங்களுக்குக் கேட்கவில்லை.
எங்களைச் சுற்றி இருந்த அனைத்தும் ஒரே நொடியில் எப்படி இப்படி உருமாற்றம் பெற்றுவிட்டன? அது வான்வழித் தாக்குதலாக இருந்திருக்காது. போரோடு தொடர்பற்ற மிக வித்தியாசமான வேறெதோ ஒன்று என்று நினைத்துக் கொண்டேன். சிறு குழந்தைகளின் புத்தகங்களில் இருப்பதுபோல உலக உருண்டை சிதைவுறும் காலகட்டத்தில் உலகம் அழியும்போது நடப்பவை போல இது இருந்தது.
எல்லாவற்றின்மீதும் ஒரு அமைதி கவிழ்ந்திருந்தது. (‘அது கூச்சலும் குழப்பமும் கூடிய ஒரு சம்பவம்’ என்று செய்தித்தாள்கள் இதைக் குறித்து பிறகு எழுதின. அது எழுதியவரின் முன்முடிவு மட்டுமே. ஆனால் உண்மையில் மக்கள், மரம், செடி, கொடிகள் என அனைத்தும் ஒரே நேரத்தில் அழிந்துவிட்டதைப் போல ஒரு திகிலான அமைதி அங்கு நிலவியது)
என் அம்மா, “நாங்கள் கீழிருந்து உன்னைக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தோம். உனக்குக் கேட்கவில்லையா? ஒரு அலறல்மட்டும் கேட்டது. அவ்வளவுதான். அதன் பிறகு நிசப்தம். நாங்கள் மறுபடி மறுபடி சத்தம்போட்டு உன்னைக் கூப்பிட்டும் நீ பதில் சொல்லாமல் இருந்ததால் நீ அவ்வளவுதான் என்று நினைத்தோம்”
நான் கூச்சலிட்டதாக எனக்கு நினைவில்லை.
“நான் இங்கு கல்லறையில் நின்றுகொண்டு மேலே நிமிர்ந்து பார்த்தபோது நீ நின்றிருந்ததைக் கண்டதும் நானடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.”
நான், “நாம் எல்லோரும் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! நாம் எல்லோரும் உயிர் பிழைத்துவிட்டோம்” என்றேன்.
கைகளில் தன் முகத்தைத் தாங்கிக் கொண்டு கல்லறைச் சின்னத்தின் மீது உட்கார்ந்திருந்த என் தங்கை மயங்கிக் கீழே சரியும் நிலையிலிருந்தாள். என் அம்மா தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை என்னிடம் தந்துவிட்டு, எந்த நிமிடமும் இடிந்து கீழே விழுந்துவிடும் நிலையிலிருந்த எங்கள் வீட்டுக்குள் தண்ணீர் தேடி நுழைந்தாள். வீட்டுக்குள் நுழைய வேண்டியவள் அந்தத் தெருவைக் கடந்து எங்கள் கண் பார்வை மறையும்வரை நடந்து போய்க்கொண்டே இருந்தாள்.
பக்கத்து வீட்டினரும் எங்கள் தெருவைச் சேர்ந்த அனைவரும் கல்லறையில் ஒன்றுகூடியிருந்தனர். பெரும்பாலோனோர் வெறுங்காலுடன் இருந்தனர். அங்கிருந்த அனைவருடைய உடல்களுமே ரத்தத்தில் நனைந்திருந்தன. அந்தப் பெரிய கல்லறை மரத்தால் கட்டப்பட்ட ஒரு இனிமையான இடம். அங்கிருந்த ஒரு கல்லறைக் கல்கூடப் பெயராதது வியப்பாக இருந்தது. இப்போது அங்கு விசித்திரமான ஒரு அமைதி நிலவியது. அவர்களுடைய முகங்கள் அசைவற்றும் உணர்சிகளற்றும் இருந்தன. வழக்கம்போல அவர்கள், “நீங்கள் அனைவரும் வெளியேறிவிட்டீர்களா” “உனக்கு அவ்வளவாகக் காயம் படாதது உன்னுடைய அதிர்ஷ்டம்தான்” என்பது போன்ற விஷயங்களைத் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். குண்டுகள் பற்றியோ எரிகுண்டுகள் பற்றியோ சாம்ராஜ்ஜியத்தின் விசுவாசமான பிரஜைகள் பேசுவதற்கு அனுமதி இல்லை என்பதால் அதைப் பற்றி யாருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
எங்கள் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அக்கா சிறிது நேரத்திலேயே, “அம்மா, அம்மா, நெருப்பு நம்மை சூழப் போகிறது. நாம் இங்கிருந்து உடனே போய்விடலாம். வீட்டில் உள்ள மற்ற பொருட்களை எடுத்துக்கொள்வதற்காக நாம் காத்திருந்தால் நம் உயிர் போய்விடும். பேராசைப்படுவதற்கு இது நேரமில்லை. மற்ற ஊர்களில் இது தான் நடந்தது. ஆகவே நாம் உடனடியாக இங்கிருந்து வெளியேறவேண்டும்” என்று உரத்த குரலில் கத்தினாள்.
அவள் சொல்வது சரிதான் என்று நாங்கள் உணர்ந்துகொண்டோம். ஏதாவது நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தபடி அங்கு காத்திருப்பது அதிக ஆபத்தானது. நாங்கள் இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால், அந்தப் பெண்ணின் அம்மாவைப் போல என்னுடைய அம்மாவும் எங்களுடைய வீட்டுக்குள் சென்று பொருள்களைத் தேடத் தொடங்கிவிடுவாள். அவள் அதைச் செய்யாமல் தடுக்கவேண்டும் என்றால் உடனடியாக அங்கிருந்து கிளம்ப வேண்டும்.
தரைமட்டமாக இருந்த எங்களுடைய வீட்டினருகே, கிழக்குப் பகுதியிலிருந்து மெல்லிய புகை நிலத்தின் மீது படியத் தொடங்கியது. நான் பாதியளவு புதைந்து போயிருந்த பெட்டிகளைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்தேன். ஆனால் புதையுண்டுபோன அவற்றை வெளியே இழுக்கும் அளவுக்கு எனக்கு பலம் இல்லை. என் கையிலிருந்த குழந்தையை என் தங்கையிடம் தந்து வைத்துக்கொள்ளச் சொன்னால் அந்தச் சிறு குழந்தையின் உடல்முழுக்கக் குருதி படிந்துவிடும். ஆகவே நான் அந்தப் பெட்டிகளை எடுக்கும் என்னுடைய எண்ணத்தைக் கைவிட்டேன்.
எனக்காகச் சில பருத்திக் காற்சட்டைகளைக் கொண்டுவந்த என்னுடைய அம்மாவின் உடலில் ரத்த காயம் ஏதும் இல்லாததைப் பார்த்து நிம்மதியடைந்த நான் எட்டி அவற்றைப் பெற்றுக்கொண்டேன். வயல்களில் நடக்கப் பயன்படுத்தும் பழைய செருப்புகளை அணிந்துகொண்டு என்னுடைய தோள்களில் மூட்டையாகக் கட்டினேன். வழக்கமாக மாலை நேரங்களில் நாங்கள் எங்களுடைய பைகளை எல்லாம் நுழைவாயிலில் வைத்து விடுவோம். அப்படி நுழைவாயிலில் வைக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே சேதமாகாமலிருந்தன. நாங்கள் அனைவருமே ஒரு வாளியை எடுத்துக்கொண்டு சென்றோம். நான் ஒரு கரும்பச்சை நிறக் குடையை ஒரு கிழவி கொம்பு ஊன்றி நடப்பதுபோல எடுத்துக்கொண்டு சென்றேன். அந்தக் குடையின் நடுப்பகுதி வளைந்திருந்தது என் வீட்டைப் போலவே இருந்தது. என்னுடைய அம்மா எனக்கு மிகப் பிடித்த என் காலணிகள், ஒரு கோடைக்கால மேல் அங்கி என எனக்காகப் பல பொருட்களைக் கல்லறையில் எறிந்து பத்திரப்படுத்தி இருந்தாள்.
நாங்கள் அங்கிருந்து வேகமாகத் தப்பியோடிய போது அவை என் கண்ணில் பட்டபோதும் அவை என்னுடைய ஆசைகளுக்கு அப்பாற்பட்டவை என்பது போல அவற்றை எடுக்க நான் முயலவில்லை.
நான் அந்தப் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன் என்பதைவிட எனக்கு எதிலுமே விருப்பமற்றுப் போய்விட்டது என்று சொல்வதே சரியாக இருக்கும். தங்களுக்கு மிக விருப்பமானதும் தங்களால் எடுத்துக்கொண்டு போகக்கூடியதுமான பொருட்களைக் கூட நிறைய பேர் அங்கேயே விட்டுவிட்டு வந்ததற்குக் காரணம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். இந்த மரத்துப்போன தன்மை வெகு காலம், அதாவது ஏறக்குறைய முப்பது நாற்பது நாட்கள் கடந்த பிறகும் நீடித்தது.
என் ஒன்றுவிட்ட சகோதரனின் மனைவி நினைவுச் சின்னத்தின் சுற்றுச் சுவர் அருகே நிற்பது எங்கள் கண்களில் பட்டது. தரைமட்டமாக இருந்த நினைவுச் சின்னத்துக்கும் முழுதும் சேதமடைந்திருந்த தன்னுடைய வீட்டுக்கும் இடையில் அவள் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தாள். தன் இளம் மனைவியைத் தனியே விட்டுவிட்டு ஹிரோஷிமாவின் சிறப்புப் படைப் பிரிவில் தற்போது பணியிலிருக்கும் அவளுடைய கணவன் ஜூன் மாதத்தில் மூன்றுமுறை அவளைத் தொலைபேசியில் அழைத்துப் பேசி இருந்தான்.
நாங்கள் நினைவுச் சின்னத்தின் வாசலை அடைவதற்குள் சாலையின் வலப் பக்கத்திலிருந்த நெருப்பு எங்களை நோக்கி ஊர்ந்து வரத் தொடங்கியிருந்தது. சாலையின் இடப் பக்கத்திலிருந்த அணை இப்போது எங்கள் கண்களில் சிக்கியது. அங்கு ஐந்து அல்லது ஆறு நபர்கள் தொடர்வண்டித் தண்டவாளங்களின் மீது நிதானமாக நடந்து செல்வது தெரிந்தது. இந்தக் காட்சியைப் பார்த்ததும் நாங்கள் பயந்தது போல நெருப்பு அவ்வளவு தீவிரமாக இல்லை என்று நாங்கள் நினைத்துக்கொண்டோம்.
அடுத்ததாக முற்றிலுமாக சேதமடைந்துவிட்டிருந்த இன்னொரு பகுதியை இப்போது நாங்கள் கடந்து சென்றோம். ஆனாலும் அது எங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இது ஏதோ அன்றாடம் நிகழக்கூடிய ஒரு வழக்கமான நிகழ்வைப் போல எங்களுக்கு அது வியப்பே அளிக்கவில்லை. நாங்கள் அழவும் இல்லை. அணையை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த கும்பலை நாங்களும் நிதானமாகப் பின்தொடர்ந்து சென்றோம். அணையின் ஒரு பக்கத்தில் அரசாங்கத்துக்குச் சொந்தமான கட்டிடங்களும், அதிகாரிகளின் வீடுகளும் இருந்தன. அது நாங்கள் வசித்த ஹகுஷிமா மாவட்டத்தின் ஒரு பகுதிதான். ஆனால் அந்த வீடுகள் மிக உயர்ந்த தரத்திலானவை. எங்கள் குகெஞ்சோ பகுதியிலிருந்த வீடுகளைவிட அவை மிக ஆடம்பரமாகவும் அழகாகவும் இருந்தன. ஆனால் ஒரு மாபெரும் சக்தியால் தரைமட்டமாக்கப்பட்டவை போல அவை அனைத்துமே இப்போது தரையோடு தரையாகக் கிடந்தன. இங்கு வசித்த என்னுடைய தோழி செயேகி அயகோவின் வீடு தடயமின்றி அழிந்துபோன வீடுகளுள் ஒன்றாகி இருந்தது. வீட்டின் நிலைமை இதுவாக இருந்தால் அவளுடைய நிலைமை என்னவாகி இருக்கும்? இந்தக் கேள்வி எனக்குத் தோன்றியதுமே நான் சுற்றிலும் பார்த்தேன். ஆனால் மனிதர்கள் இருப்பதற்கான எந்தவிதமான அறிகுறியும் இன்றி அந்த இடமே அமைதியாக இருந்தது.
அணையின் கல் படிக்கட்டுகள் அதன் பின் புறமிருந்த தோட்டத்தில் தொடங்கி ஆற்றுப் படுகைவரை சென்றன. அணையருகே இருந்த அனைத்து அழகிய வீடுகளுக்கும் கல்லால் ஆன படிக்கட்டுகள் இருந்தன. அணையின் குழாய்களுக்கு அருகிலிருந்த பல பகுதிகளில் காய்கறித் தோட்டங்கள் இருந்தன. புதர்ச் செடிகளால் அமைக்கப்பட்ட வேலிகள் ஒவ்வொரு மனையையும் வேறுபடுத்திக் காட்டின. நாங்கள் சேதமடைந்த வீடுகளுக்கும் நதிப் படுகையை நோக்கிச் சென்ற படிக்கட்டுகளுக்கும் இடையே நடந்து சென்றோம். எங்கள் வீட்டுக்கும் நதிப் படுகைக்கும் இடையே மூன்று கட்டிடங்கள் அளவுக்கான தூரமே இருந்தது. அந்த நீலப் பேரொளி தோன்றி ஏறத்தாழ நாற்பது நிமிடங்கள் கடந்திருந்தன. எங்கு போவது என்று புரியாமல், குழப்பத்துடன் நாங்கள் நாற்பது நிமிடங்களாகக் கல்லறையிலேயே நின்றுகொண்டு இருந்திருக்கிறோம். வெகு நேரம் கழித்துத்தான் இவ்வளவு நேரம் கடந்துவிட்டிருந்தது என்பதையே என்னால் கணிக்க முடிந்தது.
பேரலைகளின் எழுச்சி குறைந்துவிட்டிருந்தது. வெண்ணிற மணலுக்கு அருகே நீல நிறத் தண்ணீர் மென்மையாக வழிந்தபடி இருந்தது. அகன்ற வெண்ணிறப் பரப்பில் ஆங்காங்கே வளர்ந்திருந்த நாணற்கூட்டம் தென்பட்டன. பேரலையில் அடித்துவரப்பட்டு அங்கு கிடந்த வைக்கோல் கட்டுகளும் அது போன்ற வேறு சில பொருட்களும் நதியின் மேற்புறத்தில் மிதந்தன.
இடிந்துவிழுந்த தங்கள் வீட்டின் அடியில் சிக்கிக்கொண்டவர்களைத் தவிர மற்றவர்களால் அங்கிருந்து வேகமாக ஓட முடிந்தது. இடிபாடுகளிலிருந்து இன்னமும் தீப் பிழம்புகள் மேலெழுந்து கொண்டிருந்ததால் நதிப் படுகைகளில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. ஒரு திறந்தவெளித் திரையரங்கின் பார்வையாளர்களைப் போல உட்கார்வதற்கு நல்ல இடம் தேடியபடி மக்கள் அலைந்து கொண்டிருந்தனர். தனியாக வந்த சிலர், புதர் வேலிகளின் கீழிருந்த அடர்த்தியான மரங்களின் இலைத் தொகுதிகள், தோட்டத்தின் மரங்களுக்குப் பின்னால், நதிக்கு வெகு அருகே இருந்த நதிக் கரை எனத் தங்களுக்கு விருப்பமான இடங்களில் அங்கங்கே அமர்ந்து கொண்டார்கள். நாங்கள் தோட்டத்தின் ஓரத்திலிருந்த ஒரு அத்தி மரத்தின் அடியில் உட்கார்ந்தோம். அது நதிப்புறத்தில் இருந்து வெகு தொலைவிலிருந்தது.
இப்போது நிறைய அகதிகள் அங்கு குவியத் தொடங்கினர். வெயில்படாமல் மரங்களின் கீழ் அமர்வதற்கு ஏற்ற நல்ல இடங்கள் சிறிது நேரத்திலேயே இல்லாமல் போயின. கூட்டங் கூட்டமாக நதிப் படுகைக்கு வந்த அனைவருமே காயமடைந்திருந்தனர். அடிபட்டவர்கள் மட்டுமே அங்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டதைப்போல இந்தக் காட்சி இருந்தது. அவர்களுடைய முகங்கள், கை, கால்கள் அவர்களுடைய ஆடைகள், ஆகியவற்றை வைத்துப் பார்த்து அந்தக் காயங்கள் எதனால் ஏற்பட்டன என்று முடிவெடுப்பது கடினமாக இருந்தது. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட வெட்டுக் காயங்கள் இருந்ததுடன் அனைவருடைய உடலும் ரத்தத்தில் நனைந்திருந்தது.
சிலருடைய முகங்களிலும் கை கால்களிலும் ரத்தம் இறுகிப்போய் இருந்தது. வேறு சிலரின் உடலில் இருந்து ரத்தம் சொட்டுச் சொட்டாக ஒழுகிக்கொண்டிருந்தது. அவர்கள் அனைவருடைய முகமும் அருவருப்பாக மாறிப் போயிருந்தது. நதிப் படுகையில் கூடியவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நிமிடத்திலும் அதிகரித்துக்கொண்டே போனது. அதன் பிறகு, சிறிது நேரங்கழித்து அங்கு வந்து சேர்ந்தவர்களுடைய உடலில் மிக மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களுடைய காயங்கள் தீயால் ஏற்பட்டவை என்பதை நாங்கள் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் உணரவில்லை. அங்கு தீயே இல்லை. பிறகு இவ்வளவு மோசமாக அவர்களுக்குத் தீக் காயம் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? விசித்திரமாகவும் கோபமாகவும் இருந்த அவர்களைப் பார்த்தபோது பயத்தைவிட எங்கள் மனதில் பரிதாபமே அதிகரித்தது. அரிசி முறுக்குப் பிழியும் இரும்புக் கடாயில் வைத்துப் பொறித்து எடுத்ததுபோல அவர்கள் அனைவரின் உடலிலும் ஒரே விதமான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன.
தீக்காயங்கள் ஏற்பட்டால் பொதுவாகத் தோலின் நிறம் பாதி சிகப்பாகவும் பாதி வெண்மையாகவும் இருக்கும். ஆனால் இவையோ தீயில் பொசுங்கியது போலில்லாமல் உலோகச் சட்டத்தின்கீழ் தீயில் வாட்டப்படும் உணவுப் பொருளைப் போல சாம்பல் நிறத்திலிருந்தன. பொறித்த உருளைக்கிழங்கின் தோல் உரிந்து வருவதைப்போல அவர்களுடைய சதையிலிருந்து சாம்பல் நிறத் தோல் தொங்கிக் கொண்டிருந்தது.
சிலருடைய காற்சட்டைகள் கந்தலாகியும் சிலருக்கு உள்ளாடைகள் மட்டுமே மிஞ்சி இருந்ததால் அவர்கள் அனைவருமே இடுப்புவரை ஆடையில்லாதது போலக்
காட்சியளித்தனர். தண்ணீரில் மூழ்கி இறந்துபோனவர்களைப் போல அவர்களுடைய உடல்கள் வீங்கி உப்பிப் போயும், முகங்கள் பெரும் கனத்து ஊதிப் போயும் காணப்பட்டன. உப்பி மூடிக் கிடந்த கண்களின் விளிம்புகளைச் சுற்றியிருந்த தோல் வெளிர் சிகப்பாகவும் பிளந்தும் இருந்தது. சிலருடைய கைகள், நண்டுகளின் கூரிய நகங்கள் உட்புறமாக மடிந்திருப்பது போல உப்பியும் ஊதியும் முழங்கைப் பகுதிவரை மடித்துக் கொண்டிருந்தன. இரண்டு கைகளிலிருந்தும் அடர் சாம்பல் நிறத் தோல், கந்தல் துணிகளைப் போலத் தொங்கிக்கொண்டிருந்தது. சிலர் தங்களுடைய தலைமீது கிண்ணத்தை வைத்திருந்தது போலிருந்தது. அவர்களுடைய உச்சந்தலையில் மயிர் மிஞ்சி இன்னமும் இருந்ததற்குக் காரணம் அவர்கள் அணிந்திருந்த ராணுவ வீரர்கள் அணியும் பாதுகாப்பான கவசத் தொப்பியால் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய காதருகே இருந்த மயிர் முழுக்கக் காணாமல் போயிருந்தது. தலைமுடியை அப்படியே மழித்து எடுத்தது போலக் கூர்மையான கோடு ஒன்றை அது ஏற்படுத்தி இருந்தது. பரந்த மார்புகளும் தோள்களுமுடைய இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட படைப் பிரிவைச் சேர்ந்த இளம் வீரர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
சிறிது நேரமானதும் இத்தகைய விசித்திரமான காயங்களோடு அவர்கள் நதிப் படுகையின் சுடுமணல் மீது படுத்துவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்குக் கண் பார்வை பறிபோயிருந்தது. இவ்வளவு அச்சமூட்டும் விதத்தில் அவர்கள் தோற்றமளித்தாலும் அவர்களைப் பார்த்து யாரும் பயந்து அலறாததால் அந்த இடத்தில் கூச்சலோ அமளியோ ஏற்படவில்லை. அவர்கள் கோரமாக இருந்தனர் என்ற சொல்லைக்கூட யாரும் பயன்படுத்தவில்லை. யாருமே ஒரு வார்த்தைகூடப் பேசாமல் இருந்ததும் இதற்கு ஒரு காரணம். வீரர்களும் அமைதியாகவே இருந்தனர். யாருமே வலியில் கூச்சலிடாமல், வெப்பத்தைப் பற்றிப் புகார் கூறாமல், தங்கள் பயத்தைப் பற்றிப் பேசாமல் இருந்தனர். நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அகலமான அந்த நதிப் படுகை காயமடைந்தவர்களால் நிரம்பிவிட்டது.
வெண்ணிறச் சுடு மணலின்மீது ஆங்காங்கே சிலர் நின்றுகொண்டும் உட்கார்ந்துகொண்டும் இன்னும் சிலர் பிணத்தைப் போலக் காலை நீட்டிப் படுத்துக்கொண்டும் இருந்தனர். தீக் காயமடைந்தவர்கள் மனதைக் கலங்கடிக்கிற சத்தத்துடன் தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்தனர். செயகி அயோகாவின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் மோப்பம்பிடித்தபடி நதிப் படுகையில் அலைந்து கொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாக ஆட்கள் வந்துகொண்டே இருக்கவும், நேரமாக ஆக அந்த இடத்தின் ஜனத் திரள் பேரளவுக்கு அதிகரித்தது.
அங்கு வந்த ஒவ்வொருவருமே தங்களுக்கான ஒரு சிறிய இடத்தைப் பிடித்து அமர்ந்துகொண்டனர்.
தங்களுடையது என்று பிரகடனம் செய்துகொள்வதற்காக ஒரு இடத்தைத் தேடி அடைவதில் மக்கள் எந்தச் சூழலிலுமே பொறுமையில்லாமல்தான் இருப்பார்கள்போல. வானம் மட்டுமே கூரை என்ற நிலையில்கூட ஒன்றுகூடி அமராமல், ஒரு இடத்தைத் தமக்கே தமக்கு உரிமையானது என்று ஆக்கிரமிக்க விரும்புகின்றனர். விரைவிலேயே நகரின் எல்லாப் பகுதிகளிலும் ஆங்காங்கே தீ பற்றி எரியத் தொடங்கியது. அப்போதும்கூட மொத்த ஹிரோஷிமாவுமே நெருப்பில் எரிந்து அழிந்துபோயிருக்கும் என்று மக்கள் கனவிலும் நினைக்கவில்லை. நான் ஹகுஷிமாவில்மட்டும் நடந்தது என்று நினைத்ததைப் போலவே ஒவ்வொருவரும் தத்தமது ஊரின் குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு மாபெரும் அழிவு நேர்ந்துவிட்டதாகவே நினைத்துக்கொண்டனர்.
எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த குகெஞ்சோ பகுதியில் நெருப்புத் தூண்கள் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன. அதன் பிறகு நதிப்படுகையின் மீதிருந்த ஆடம்பரமான வீடுகள், அதிகாரிகளின் வீடுகள் ஆகியன பற்றி எரியத் தொடங்கின. நதியின் எதிர்க் கரையின் மீதிருந்த வீடுகள் இப்போது வெடித்துச் சிதறின. நிகிட்சு பூங்காவின் வெண்ணிற வேலியைக் கடந்து, பெரும் உயரத்திலான தீப்பிழம்புகள் திடீரென மேலெழுந்தன. பொருட்கள் நொறுங்குவது பயங்கரமான சத்தத்துடன் அந்தத் தீப்பிழம்புகள் வழியே கேட்டது. முன்கோப குணமுடைய நான் இப்போது கடுங்கோபத்துடன், என் அம்மாவிடமும் தங்கையிடமும், “அவர்கள் ஏன் இந்த நெருப்பை உருவாக்குகிறார்கள்? இவ்வாறு நடந்தால் எவ்வளவு அழிவு ஏற்படுகிறது என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன? நெருப்பை அணைக்க நாம் எவ்வளவு பயிற்சிகள் மேற்கொண்டோம்? இது எரி குண்டுகளால் ஏற்பட்டதில்லை. இதற்குக் காரணம் கவனமின்மை மட்டுமே. வீட்டைவிட்டு வேகமாக வெளியே கிளம்புவதற்கு முன்பு மக்கள் தங்கள் அடுப்பை அணைத்திருந்தால் இது நடந்திருக்காது” என்றேன்.
எதுவும் செய்வதற்கில்லை என்பது போல என் அம்மாவும் தங்கையும் அமைதியாக இருந்தனர்.
அனைத்தையும் பொறுத்துக்கொண்டு விலகியிருக்கும் அணுகுமுறையை நான் வெறுத்தேன். அவர்களுக்குக் கோபம் வராததற்காக அவர்களைக் குற்றம் கூறும் விதமாக, “இந்த நெருப்பு ஹிரோஷிமா மக்களுக்கு ஒரு அவமானம். எல்லோரும் இப்போது நம்மைக் கேலி பேசுவர். இதுபோல் நடக்க நாம் விடவேகூடாது” என்று நான் பேசிக்கொண்டே போனேன்.
புலர்காலையிலும் வானம் இன்னும் இருண்டே இருந்தது. விமானங்களுடைய விசைப் பொறிகள் ஏற்படுத்திய உறுமல் சத்தம் சிறிது நேரம் கேட்டது. விமானங்கள் தாழப் பறந்து வீசும் தொடர் குண்டுகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கத் தயாராக இருக்குமாறு அங்கிருந்தவர்களிடையே தகவல் பரவியதும் அனைவரும் பதுங்கத் தொடங்கினர். சிலர் அடர்ந்த புதர்ச் செடிகளுக்குள் தங்கள் தலையை மறைத்துக்கொண்டனர். நதிக்குள் குதித்துவிடத் திட்டமிட்ட சிலரோ நதிப் படுகையின் மற்றோர் ஓரத்திற்கு நகர்ந்தனர். நதிப்படுகையில் வரிசையாக எரிந்து கொண்டிருந்த வீடுகளிலிருந்து எழுந்த தீப்பொறிகள், தீப்பிழம்புகள் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட வெப்பத்தைத் தாங்கமுடியாத நாங்கள் அதுவரை நின்றிருந்த அத்தி மரத்தடியைவிட்டு மணல் சூழ்ந்த நதிக்கரைக்குப் போகவேண்டியதாயிற்று.
சூரியனும் தீப்பிழம்புகளும் சேர்ந்து ஏற்படுத்திய வெப்பத்தால் நகர்ந்து நகர்ந்து நாங்கள் விரைவிலேயே தண்ணீரின் விளிம்புக்கு வந்துவிட்டோம். உடல் முழுக்கக் காயங்களுடன் மல்லாக்கப் படுத்த நிலையில் அந்தப் பகுதியெங்கும் ராணுவ வீரர்கள் காணப்பட்டனர். குளியல் துண்டுகளைத் தண்ணீரில் நனைத்துத் தரும்படி அவர்கள் அடிக்கடி எங்களிடம் கேட்டதால் நாங்கள் துணிகளை நன்றாக நனைத்து அவர்கள் மார்பின்மீது பரப்பிவைத்தோம். ஆனால் அவை சிறிது நேரத்திலேயே உலர்ந்துவிட்டன.
என் அம்மா ஒரு ராணுவ வீரனிடம்,”உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டாள்.
அவர், “நாங்கள் ஒரு ஆரம்பப் பாடசாலையில் பணியாளர்களின் தகவல்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென ஒரு பெருத்த ஓசை கேட்டது. அவ்வளவு தான். அடுத்துப் பார்த்தால், எங்களுக்கு இந்தத் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன” என்றார்.
ஒருவித சாம்பல் நிறத் தொழுநோய் ஏற்பட்டதுபோல அவர் முகம் முழுவதும் ஊதிப் போய் அங்கங்கே சதை கிழிந்திருந்தது. முரட்டுத்தனமான பரந்த மார்புடன், ஆஜானுபாகுவாக இருந்த அவருடைய இளமையான வசீகரத் தோற்றத்திற்கு இது முற்றிலும் முரண்பட்டு இருப்பதைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
தடுக்கமுடியாத பெருவேகத்துடன் நெருப்பு தீவிரமாகப் பரவியது. அருகே இருந்த புகைவண்டிப் பாலத்தின் நடுவே அன்றிரவு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஊர்தியின் விசைப் பொறியிலிருந்துகூடத் தீப்பிழம்புகள் பீறிடத் தொடங்கின. ஒன்றன்பின் ஒன்றாகப் புகைவண்டியின் கருப்பு நிறப் பெட்டிகள் வெடிக்கத் தொடங்கின. நெருப்பு கடைசிப் பெட்டியை எட்டியதும் ஒரே இடத்தில் திணித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடிப்பதுபோல நெருப்புத் தழல்களையும் பொறிகளையும் கக்கியபடி தீப்பிழம்புகளை அது மழையாகப் பொழிந்தது. உருக்கிய இரும்புக் குழம்பு சுரங்கப்பாதையின் வழியாக ஆர்ப்பரித்து ஓடுவதுபோல அது நெருப்பைத் துப்பியது. பூதாகரமான செந்தழலின் வரிசை அசோமா இசுமி வில்லா என்கிற எழிலான பூங்காவிலிருந்து ஒன்றன்மீது ஒன்றாக நதியின் இன்னொரு பக்கத்துக்கு ஊர்ந்துபோவது பாலத்தின் கீழிருந்து எங்களுக்குத் தெரிந்தது. சிறிது நேரத்தில் நதியின் மேற்புறம் பற்றி எரிவதும் மக்கள் அங்கிருந்து நதியின் இன்னொரு பக்கத்துக்குச் செல்வதும் தெரிந்தது. இப்போது நதியே எரியத் தொடங்கியதும் நதிக்கரையில் எங்களைச் சுற்றிலும் அமர்ந்திருந்தவர்கள் நதிமூலத்தை நோக்கி ஓட முயன்றனர். எங்களுக்கு நன்கு அறிமுகமான பி-29 ரகப் போர் விமானத்தின் ஓயாத உறுமல் சத்தம் தலைக்கு மேல் கேட்டுக் கொண்டிருக்க, தொடர் குண்டுகளோ, எரிகுண்டுகளோ அல்லது வழக்கமாக வீசப்படும் குண்டுகளோ எப்போது வேண்டுமானாலும் எங்கள் மீது பொழியத் தொடங்கலாம் என்று எங்களுக்குப் புரிந்தது.
தாக்குதலின் அடுத்த அலை நிச்சயமாக வரும் என்று மக்கள் உறுதியாக நம்பினர். ஆனால் என் மனதின் ஒரு பகுதி எங்கள் மீது அந்த அலை எந்தப் பொருட்களையும் வீச வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நினைத்தது.
விமானங்கள் தாழப் பறந்து வீசும் தொடர் குண்டுகளின் தாக்குதலுக்கு அஞ்சி நாங்கள் புல்வெளியிலும் நதியின் பக்கவாட்டிலும் மண்டியிட்டு மறைந்திருந்தபோது அவர்கள் வானிலிருந்து எங்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். வெட்ட வெளியிலிருந்த எங்கள் தலைக்கு மேலே புகைப்படங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. முற்றிலும் நிலைகுலைந்துபோன எங்களுடைய நகரத்தினுடைய மொத்தப் புகைப்படங்களும் அவ்வாறே எடுக்கப்பட்டன.
ஏதோ ஒரு சூறாவளி எங்களுக்கு அருகே வீசிக்கொண்டிருந்தது போலிருந்தது. எங்களை மறைமுகமாகத் தாக்கிய புயலின் கொடுங்காற்றைத் தொடர்ந்து பலத்த மழைத் துளிகள் விழத் தொடங்கின. ஒசாகா எரிந்ததால் காற்றும் மழையும் தோன்றியதாகவும், அப்போது வெய்யிலடித்தபோதும் மக்கள் குடைகளை எடுத்துக்கொண்டு தங்கள் புகலிடத்திலிருந்து வெளியே வந்ததாகவும் நான் இதற்கு முன்பு கேள்விப்பட்டிருந்தேன். ஆகவே நான் என்னுடைய பச்சை நிறக் குடையை விரித்தேன். கரு நிறத்திலிருந்த இந்த மழையுடன் எண்ணற்ற தீப்பொறிகள் வானத்திலிருந்து கொட்டின.
தீப்பொறிகள் என்று நான் நினைத்துக் கொண்டவை உண்மையில் அதிவேகமாக வீசிய காற்றில் அடித்துக்கொண்டு வரப்பட்ட கருஞ் சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்த கந்தல் துணிகளுடைய துண்டுகளும் மரத் துண்டுகளும்தான். இரவு வந்துவிட்டது போல வானம் இன்னும் கருத்துக் கொண்டேபோனது. கருநிற மேகத்திரளில் இருந்து சிகப்புப் பந்தெனச் சூரியன் தொங்கிக் கொண்டிருப்பது போலத் தெரிந்தது.
என் தங்கை என்மீது சாய்ந்தபடி கிசுகிசுப்பான குரலில், “அங்கே பார்! வானத்தில் ஒரு எரிகுண்டு ! எரிகுண்டு!” என்றாள்.
” நீ என்ன பேசுகிறாய்? அது சூரியன் என்று உன் கண்ணுக்குத் தெரியவில்லையா?” என்றேன்.
இவை அத்தனைக்கும் இடையில் முதன்முறையாக நாங்கள் பதற்றத்துடன் லேசாகச் சிரித்துக் கொண்டோம். ஆனால் அதன் பிறகு நானோ அவளோ அவ்வளவு எளிதாக வாயைத் திறக்கவே முடியவில்லை.
நான் அவளிடம், “ஒன்றிரண்டு நாட்களுக்கு நாம் எதுவும் சாப்பிட முடியாது. இப்போதைக்குச் சிறிது தண்ணீரைமட்டும் குடித்துக் கொள்வோம். சிறிது நேரம் கழித்து இன்னும் சிறிது தண்ணீர் குடிப்போம்” என்றேன்.
எந்த நேரத்திலும் நதியிலிருந்து பிணங்கள் மிதந்து வரலாம் என்று நினைத்தபடியே நான் வாளியில் தண்ணீரை நிறைத்தேன். ஆனாலும் ஒரு வெளிர்நிற வானவில் எங்கோ தொலைவில் தெரிந்தது. மழை அப்போதுதான் விட்டிருந்தது. வெளிறிய நிறத்திலிருந்த அந்த வானவில் ஏனோ திகிலைத் தந்தது.
“தண்ணீர்! தண்ணீர்! எனக்குச் சிறிது தண்ணீர் தாருங்கள்” தீக்காயம்பட்ட ராணுவ வீரர்கள் ஓயாமல் கெஞ்சினர்.
“தீக்காயம் அடைந்தவர்கள் தண்ணீர் குடித்தால் இறந்துபோய்விடுவார்கள். ஆகவே தராதே”
வீரர்களுக்குத் தண்ணீர் தரக்கூடாது என்று எச்சரித்தவர்கள், தண்ணீர் தருமாறு தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்த அந்த ராணுவ வீரர்கள் ஆகிய இருவருக்கும் இடையே மரணத்தின் மங்கிய நிழல் இப்போதே தெரியத் தொடங்கிவிட்டது.
தன் கண் முன் தோன்றிய அனைத்தையும் நிர்மூலமாக்கியபடி பிழம்புக் குன்றுகளென உயர வளர்ந்த நெருப்பு, மொத்த நகரத்தையும் அங்குலம் அங்குலமாக அழிப்பதற்காக முன்னேறியது.
வெப்பம் தாங்கமுடியாததாக இருந்தது. தொலைவிலிருந்த வீடுகளுக்கும் நெருப்பு பரவுவது தெரிந்தது. எல்லாத் திசைகளிலிருந்தும் வெடிச் சத்தமும் இடையறாது கேட்டபடி இருந்தன. ஒற்றை ஜப்பானிய விமானம்கூட வானில் தோன்றவில்லை.
அன்று நடந்த எந்தச் சம்பவமும் போருக்குத் தொடர்புடைய ஒன்றாக எங்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. போருக்கு எந்தத் தொடர்புமற்ற, நடுநிலை ஏதுமற்ற, ஒரு பெரிய தீவிரமான சக்தியால் நாங்கள் நசுக்கப்பட்டோம். சக ஜப்பானியர்களாக நாங்கள் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக் கொள்ளாமலும், ஆறுதல் வார்த்தைகளைப் பகிராமலும், கீழ்ப்படிதலுடன், அமைதியாக,எதுவும் பேசாமல் இருந்தோம். காயம்பட்டவர்களை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. அன்று இரவை எங்கு எப்படிக் கழிப்பது என்று சொல்வதற்கும் யாரும் இல்லை. நாங்கள் அங்கு தனியே கிடந்தோம்.
நதிப் படுகையின்மீது செயகி அயோகாவின் ஜெர்மன் ஷெபர்ட் நாய் எந்தச் சத்தமும்போடாமல் காயமடைந்தவர்களுக்கு நடுவே இன்னும் அலைந்து கொண்டிருந்தது. அது ஹிரோஷிமாவின் மிக மூர்க்கமான நாய் என்பார்கள். ஆனால் தன்னுடைய வாலை மேலும் கீழும் ஆட்டியபடி அது இப்போது அங்கு அலைந்துகொண்டிருந்த காட்சி எதிர்த்து நிற்கும் ஆற்றல் அனைத்தையும் இழந்து துயரத்திலிருக்கிற ஒரு மனிதனைப் போலிருந்தது. செயகி அயகோவை எங்கும் காணமுடியவில்லை. நதிப் படுகைக்கு வந்ததிலிருந்து அவளையும், அவளுடன் அதே வீட்டில் வசித்துவந்த அவளுடைய மாமியாரையும், அவளுடைய பதினாறு வயது மகள் யூரிகோவையும், நான் பாதி மயக்கத்தில் தேடிக்கொண்டே இருந்தேன். ஆனால் பொழுது புலர்ந்த பிறகும் அவர்கள் அங்கிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
இரவு வந்துவிட்டது. ஆனால் எப்போது இரவு தொடங்கியது என்று உறுதியாகத் தெரியவில்லை. பகலே மிகவும் இருட்டாக இருந்ததால் எது இரவு எது பகல் என்று தெரியவில்லை. ஒருவழியாக எப்படியோ இரவு வந்தபோது நகரமும் நதிப் படுகையும் தீயின் பிரதிபலிப்பில் சிகப்பாகத் தோன்றின. இரவும் பகலும் நாங்கள் எதுவும் சாப்பிடவில்லை என்றாலும் எங்களுக்குப் பசி எடுக்கவில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குப் பிடித்தமான ஒரு இடத்தைத் தேர்வு செய்து அமர்ந்துகொண்டோம். ஆனால் வெகுநேரம் ஒரே இடத்தில் அசையாமல் இருக்க இயலவில்லை. நெருப்புப் பொறிகள், மழை, எதிரி நாட்டு விமானங்களின் ஓசை ஆகியன எங்களைத் துரத்தின. இரவில் அலைகள் அதிகமாக இருக்கும் என்று சிலர் கூறியதால் நாங்கள் காய்கறித் தோட்டங்களிலும் மணல் சூழ்ந்த நதிப்படுகைக்குப் போகும் வழியிலிருந்த அடர்த்தியான தோட்டத்து மரங்களின் அருகேயும் ஒன்று கூடினோம். புதர்ச் செடிகளின் முன், நதிப் படுகையின் எதிரே இருந்த ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்துப் படுத்தோம்.
நிறைய களைகளைப் பிடுங்கி எடுத்து அவற்றைப் பரப்பினோம். நதியால் அடித்துக் கொண்டுவரப்பட்டு மணல் சூழ்ந்த கரையில் கிடந்த வைக்கோலால் அவற்றை மூடினோம். இங்கு வரும்போது என் அம்மா குழந்தையை முதுகோடு வைத்துக் கட்டிக்கொண்டு வருவதற்காகப் பயன்படுத்திய அங்கியை அதன்மீது வைத்த பிறகு நாங்கள் நால்வரும் இந்தத் தற்காலிகத் திரையரங்கின் உயர் ரக அரங்கில் அவரவருடைய இடத்தில் படுத்துக்கொண்டோம். கொழுகொழுவென்று இருந்த அந்த எட்டு மாதக் குழந்தை நாள் முழுக்க உறங்கியும் அந்த இரவிலும் கண் மூடித் தூங்கிக்கொண்டிருந்தது. நானும் என் தங்கையும் எங்கள் கழுத்தையும் முகத்தையும் நாள் முழுக்கப் பாதுகாத்த கைக் குட்டையைக் கழற்றினோம். கோபம் கொப்பளிக்கிற எங்கள் முகங்களை இப்போதுதான் எங்களால் நன்றாகப் பார்க்க முடிந்தது. ஆனால் புன்னகைப்பதற்கான வாய்ப்பே இல்லை.
அவரவருடைய முகங்களைப் பார்க்க வாய்ப்பின்றி, ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்ததிலிருந்து சில விஷயங்கள் புரிந்தன. என் தங்கையின் முகம் வட்ட வடிவ பிரெட் துண்டு போல வீங்கிப்போயிருந்தது. அவளுடைய கருத்த பொலிவான அகன்ற கண்கள் இப்போது வெறும் பிளவுகளாக மாறியிருந்தன. அவற்றின் விளிம்புகள் அடர் கருநீல மசியின் நிறத்திலிருந்தன. ஒரு குறுக்கு வடிவ வெட்டு அவளுடைய உதட்டின் வலது முனையிலிருந்து கன்னங்கள்வரை நீண்டு, அவளுடைய மொத்த வாயையும் பக்கவாட்டில் திருப்பிக் கவிழ்த்துப் போட்ட ‘எல்’ எனும் எழுத்து வடிவத்தில் மாற்றியிருந்தது. சிறிது நேரம்கூட என்னால் உற்றுப் பார்க்கமுடியாத அளவுக்கு மிக மோசமாக இருந்தது அந்தக் காட்சி. அவளுடைய தலைமுடி எங்கள் வீட்டுச் சுவர்களிலுள்ள சிகப்பு நிறக் களிமண்ணையும் ரத்தத்தையும் பிசைந்து அப்பியது போல இருந்தது. தெருவில் பல காலமாகப் பிச்சையெடுக்கும் பெண்களைப் போல அவள் தலைமுடி காட்சியளித்தது. நாங்கள் இருவருமே அங்கங்கே கிடைத்த வித விதமான துணிகளைக்கொண்டு எங்கள் காயத்தைச் சுற்றிக் கட்டி இருந்தோம். அவை எங்களுக்கு எங்கிருந்து கிடைத்தன என்று எனக்கு நினைவில்லை. ஆனால் வரப் போகும் இலையுதிர் காலத்துக்கும் குளிர்காலத்துக்கும் தேவைப்படும் என்பதற்காக என் அம்மா ஒரு பழைய கிமோனோவின் அகன்ற கழுத்துப் பட்டையிலிருந்து ஒரு சிறு பட்டுத் துணியை எடுத்து மூன்று நாட்களுக்கு முன்பு சாயமிட்டு வைத்திருந்தாள். நாங்கள் இருவரும் அந்தத் துணியை எங்கள் தாடைக்குக் கீழ் சுற்றி உச்சந்தலையில் முடிச்சிட்டிருந்தோம். பள்ளத்தாக்கினுள் இருக்கும் ஒரு இடமொன்றிற்குள் பயணிப்பதுபோல என் இடது காதின் நடுவில் ஏற்பட்டிருந்த ஒரு ஆழமான வெட்டு என் தாடைவரை நீண்டிருந்தது.
ரத்தத்தில் தோய்ந்த முடிக் கற்றைகள் எங்கள் காயங்களைச் சூழ்ந்து மூடியிருந்தன. வீங்கி மூடிக்கிடந்த எங்கள் வாய்களைத் திறக்கக் கடினமாக இருந்தது. ஆனால் வலியைவிடப் பசை போல ஒட்டிக் கிடக்கின்ற அவற்றை அசைக்கமுடியுமா என்ற எங்கள் சந்தேகம்தான் அதற்குக் காரணம்.
பெருமுயற்சி செய்து உதடுகளை அசைத்து, “நேற்று காலை அது நடந்தபோது நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்?” என்று கேட்டேன்.
“நேற்றா? அது இன்று காலை” என்று என்னுடைய தங்கை புன்னகைத்தபோது அவளுடைய உதடுகள் சீழ்க்கை அடிப்பதுபோலிருந்தன.
இதைக் கேட்டதும் அந்த நேரத்தில் என்ன செய்துகொண்டிருந்தோம் என்று என்னுடைய அம்மாவுக்கு உடனே நினைவுக்கு வந்தது. அவள் வருத்தத்துடன், “உப்பு சேர்த்த மூங்கில் வேர்களை எடுத்து ஒரு நல்ல நாளுக்குப் பயன்படும் என்று இன்று காலை பத்திரப்படுத்தினேன். அவற்றை நம் தோட்டத்தில் விளைந்த கேரட் உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து சோயா சாற்றில் ஊற்றி வேக வைத்தேன். அது மிகச் சுவையாக இருந்தது. அதன் பிறகு ஒரு வாய் சோறு சாப்பிட்டேன். அப்போதுதான் அந்த நீலப் பேரொளி வானில் எழுந்தது” என்றாள்.
“அதைப் பார்த்ததும் உனக்கு என்ன தோன்றியது? அது வெடிகுண்டா? எரிகுண்டா?”
அம்மா, “என்னவென்று யோசிப்பதற்குள்ளாகவே அந்தப் பெருவெடிப்பு நடந்துவிட்டது. உடனே அலமாரி கீழே விழுந்தது. அந்தப் பேரொளி தாக்கியபோது நான் கீழே விழுந்தேன். என் மீது அலமாரி விழுந்தது. ஆனால் அலமாரியின் உள் அடுக்கு, அலமாரி மொத்தமாக என் மீது விழாமல் அதிர்ஷ்டவசமாகத் தடுத்தது. நான் அங்கிருந்த மேஜையோ அல்லது வேறு ஏதோவொன்றின் கீழோ கவிழ்ந்து கிடந்தேன். ஆகவே எனக்கு எதுவும் ஆகவில்லை. அதன் பிறகு உன்னுடைய அலறல் சத்தம் கேட்டது” என்றாள்.
இது நடந்தபோது
என் தங்கை, அம்மாவின் எதிரே கூடத்தில் அமர்ந்திருந்தாள். அவளும் அப்போதுதான் ஒரு வாய் சிற்றுண்டி சாப்பிட்டு இருந்தாள். அந்த நீலப் பேரொளி தோன்றியதைப் பார்த்ததும் வேகமாகப் பக்கத்து அறையிலிருந்த குழந்தையிடம் ஓடினாள். காலையில்கூட கொசுக்களின் நடமாட்டம் இருக்கும் என்பதால் குழந்தையைச் சுற்றி கொசு வலையை வைத்திருந்தாள். வேகமாக ஓடியவள் குழந்தையின்மீது விழுந்தாள். நிறைய குண்டுகள் கூடத்தில் விழுந்திருக்குமே என்று நினைத்தவள் அந்தத் திசையைத் திரும்பிப் பார்த்தாள். அதே தருணத்தில் திடீரென பெருங்காற்று வீசியது. அவளுடைய உடலிலிருந்து ரத்தம் ஒழுக ஆரம்பித்தது.
“அந்த நீலப் பேரொளி ஒரே நொடிதான் நீடித்தது. அதிவேகமாக நான் குழந்தையிடம் ஓடினேன். ஆனாலும் அப்போதும் நான் என் தலையைத் தாழ்த்திக்கொண்டு கொசு வலைக்குக் கீழே அமர்ந்ததாக எனக்கு நினைவில்லை” என்றாள்.
என் அம்மா, “இன்றைய காலை உணவு எப்படி வீணாகிப் போய்விட்டது!” என்றாள்.
“இன்று காலை என்ன நடந்தது என்று நீ நினைக்கிறாய்? என்னவென்று எனக்குப் புரியவில்லை. என்னுடைய குடையின் தண்டுப் பகுதி இதற்கு முன்பு இவ்வளவு வளைந்து இருந்ததில்லை” என்றேன்.
என்னுடைய தங்கை ஏதோ சொல்லவேண்டும் என்று நினைத்தாள்.
“ஒருவேளை அது இரசாயன குண்டாக இருக்கலாம்” என்றாள்.
“இரசாயன குண்டா? அப்படி என்றால் என்ன?” என்று கேட்டேன்.
“விஷ வாயு”
“ஆமாம். நிச்சயமாக அதுதான். ஆனால் விஷவாயுவால் வீடுகளைத் தரைமட்டமாக்கமுடியாது”
“அவர்கள் சாதாரண வெடிகுண்டுகள் விஷவாயு ஆகிய இரண்டையும் இணைத்து விட்டனர்”
என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியாமல் நாங்கள் பிதற்றிக் கொண்டிருந்தோம். தொலைவில் நெருப்பு தீவிரமாக எரிவதையும் வான் வரை விரைந்து மேலெழுவதையும் பார்க்க முடிந்தது. அந்த ஒற்றை இரவில் ஹகுஷிமா, குகெஞ்சோ, அதன் அருகிலிருந்த ஹிகாஷிமசி, நகாமசி, கிடமசி, நதிப் படுகையிலிருந்த வீடுகள் என்று ஹிரோஷிமா தன்னைத்தானே முழுமையாக எரித்துக்கொண்டது. அங்கிருந்த அனைத்துமே கருஞ்சாம்பல் நிறத்தில் மாறியிருந்தன. நதிக் கரையின் எதிரே இருந்த இரண்டு மூன்று வீடுகளில் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்குத் தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தது. அந்தக் காட்டுத் தீயின் பிழம்புகள் ராட்சதப் பாம்புகளைப் போல வளைந்து நெளிந்து ஆடின. நாள் முழுதும் எரிந்த உஷிடா பகுதியின் பிழம்புகள் இரவு வந்ததும் அலை அலையாக இருந்த மலைத்தொடர்களின் வழியே ஒவ்வொரு சிகரமாகத் தாழ்ந்தும் உயர்ந்தும் நகர்ந்தன. அது தொலைதூர நகரமொன்றின் மின் விளக்குகளைப் போலக் காட்சி தந்தது. தீப்பிழம்புகளிலிருந்து எழுந்த நெருப்புத் துண்டுகள் சிகரங்களுக்கு இடையே இருந்த இடைவெளியில் இடையறாது பறந்து பரவி, பிறகு அடுத்த சிகரத்தின்மீது எரி நட்சத்திரங்களைப் போல வீழ்ந்தன. அதன் பிறகு அந்த இரண்டாம் சிகரம் ஒரு புதிய நெருப்பை உருவாக்கியது.
இரவு தோன்றியதும் மெல்லிய முனகல் சத்தம் எங்கோ தொலைவிலிருந்து கேட்டது. சிறிது நேரத்தில் ஒரே மாதிரியான மெல்லிய முனகல் சத்தங்கள் எங்களைச் சுற்றிலும் எதிரொலித்தன.
உணவு வழங்கப்படப் போவதாக யாரோ சொன்ன செய்தி பரவியது. இரவு உணவைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாதிருந்த நாங்கள் மகிழ்ச்சியோடு கூச்சலிட்டோம்.
வேலிகளை ஒட்டி வரிசையில் நின்றிருந்த எங்களைப் பார்த்து, “நடக்கக் கூடிய நிலையில் இருப்பவர்கள் ராணுவ அணிவகுப்பு நடக்கும் மைதானத்தின் கிழக்கு மூலைக்குச் சென்று உணவைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று உற்சாகமாக ஒலித்தது ஒரு ராணுவ வீரரின் குரலாகத் தானிருக்கவேண்டும். எல்லோரும் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். நதிப் படுகையில் நகர்ந்துகொண்டிருந்த நிழல் உருவங்கள் உண்மையில் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களாக இப்போதுதான் முதல் முறையாகக் காட்சியளித்தனர். எனக்கும் என் தங்கைக்கும் உடல் முழுக்க வலித்ததால் எங்களால் நிற்கவோ நடக்கவோ இயலவில்லை. தன் அருகே நின்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருத்தியின் உதவியுடன் என் அம்மா மைதானத்தை நோக்கி நடந்துசென்றாள். நாங்கள் இருந்த இடத்திலிருந்து ராணுவ அணிவகுப்பு மைதானம் ஒரு மைல் தூரமிருக்கும். முக்கோண வடிவத்திலிருந்த நான்கு வெண்ணிற அரிசி உருண்டைகளை ஒரு துணியால் மூடி எடுத்துக்கொண்டு சிறிது நேரத்தில் என் அம்மா திரும்பிவந்தாள்.
“ஒரு விருந்துச் சாப்பாடு”
நாங்கள் மகிழ்ச்சியுடன் அந்த அரிசி உருண்டைகளைக் கைகளில் ஏந்தினோம். ஆனால் எங்களால் அவ்வளவு எளிதில் அதைத் தொட இயலவில்லை. சாப்பிடுவதற்கு அகலமாக வாயைத் திறக்க தங்கையாலும் என்னாலும் இயலவில்லை. அசைக்கமுடியாமல், பக்கவாதத்தால் பாதிப்படைந்தது போலாகி இருந்த என்னுடைய வாயைப் பல் வைத்தியரைப் போல, இடது கையின் கட்டை விரலாலும் ஆட்காட்டி விரலாலும் நான் அழுத்தித் திறந்து, என்னுடைய வலது கையால் அழுத்தி சில பருக்கைகளை உதடுகளின் வழியாக உள்ளே செலுத்தினேன்.
“டோக்கியோ பாலம் இன்னும் இருக்கிறதா?”
“இரண்டு தண்டவாளங்களும் எரிந்து போய்விட்டன. சாலை இன்னும் இருக்கிறது, ஆனால் என்ன, முழுக்கப் புடைத்துப் போய்க் கிடக்கிறது. எல்லா இடத்திலும் நிலைமை படுமோசமாக இருக்கிறது. எதுவுமே நெருப்பிலிருந்து தப்பவில்லை”
நதியின் எதிரே இருந்த வேலியின் அருகே வரிசையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மக்களின் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்ததிலிருந்து, இன்றைய பெருந்தீ ஹிரோஷிமா நகரத்தின் ஒரு ஊரைக்கூடவிடாமல் முழுமையாக அழித்துவிட்டது தெளிவாகத் தெரிந்தது. இது ஏதோ சிலரின் கவனமின்மையால் ஏற்பட்ட சிறு நெருப்பால் விளைந்தது இல்லை. எதிரி நாட்டு விமானங்கள் நகர் முழுக்க நெருப்புப் பொறிகளைச் சிதறடித்திருந்தன.
“அவர்கள் தீப் பொறிகளைச் சிதறடித்தார்களா? இந்த மொத்த இடமும் எரிந்து போனதில் வியப்பேதுமில்லை. சாதாரண குண்டுகள் என்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை நூறு இருநூறு அல்லது ஐந்நூறு ஆயிரம் என்று இருந்திருக்கும். அவர்கள் குண்டுகளை வெறுமனே வீசவில்லை. மாறாக ஊர் முழுக்கத் தெளித்திருக்கிறார்கள்”
உள்ளூர் மொழியில் ‘சிதறடித்தல்’ என்றால் குண்டுகளைக் கொத்துக்கொத்தாக அருவி போலப் பொழிதல் என்று அர்த்தம். ஆனால் எங்குமே ஒரு ஒற்றைப் பள்ளம் கூட இல்லை. அப்படியானால் அவை குண்டுகள் இல்லை என்பதை யாரும் அதுவரை உணரவே இல்லை. அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிய ஒரு சிறு யோசனையும் அவர்களுக்கு இல்லை. ஆகவே அதைப் பற்றி அவர்களால் எதுவும் பெரிதாகப்
பேசிக்கொள்ள முடியவில்லை. நாங்கள் தரையில் கால்நீட்டி அமர்ந்தோம். எங்களைச் சுற்றிலுமிருந்த காடுகளில் எரிந்து கொண்டிருந்த தீயாலும் நதியின் அடுத்த கரையில் ஏற்பட்டிருந்த பெருந்தீயினாலும் அந்த இடமே வெளிச்சமாகவும் வெப்பமாகவும் இருந்தது. சோகமான வாத்திய இசையைப் போல எங்கோ தொலைவிலிருந்து முனகல் சத்தங்கள் கேட்டன. அவற்றுடன் சேர்ந்து பூச்சிகளின் ரீங்காரமும் ஒலித்துக் கொண்டிருந்தது. இவை அனைத்துமே மிகவும் துயரமானதாக இருந்தது.
என்னுடைய உடல் முழுதும் வேதனையாலும் வலியாலும் மரத்துப் போயிருந்தது. குழம்பிக்கிடந்த என்னுடைய சிந்தனைகள் ஒருவிதமான தெளிவை எட்டியது அதி தீவிரமான, விநோதமான இந்த மரத்துப்போன உணர்வு ஏன் ஏற்பட்டது?
அந்த விசித்திரமான நீலப் பேரொளி, அதைத் தொடர்ந்து எழுந்த பெருத்த ஓசை, நகரத்தின் மொத்தப் பேரழிவு என அதிர்ச்சியுற்ற என் உடல், இவை அனைத்திற்கும் சேர்த்து மொத்தமாக ஆற்றிய எதிர்வினையே இந்த மரத்துப் போதல் என்று தோன்றியது.
இயற்பியல் கூறுகின்ற, வண்ணமும் வாசனையும் அற்ற கண்ணுக்குத் தெரியாத ஏதோவொரு பொருளோ, அல்லது இயற்பியலும் இயற்பு வேதியியலும் இணைந்த நாற்றம் வீசாத கண்ணுக்குத் தெரியாத ஒரு செயல்முறை வழியாக, விஷத்தின் மணத்தைப்போல வாசனை கொண்ட ஏதோவொன்றோ, நகரத்தின் காற்று மண்டலத்தையே எரித்துவிட்டதாக ஒரு எண்ணம் என் மனதில் தோன்றியது. கண்முன்னே தெரிந்த விஷயங்களைக் கொண்டு ஏதாவது ஒரு தெளிவு பெற்றேயாகவேண்டும் என்ற ஆசையில் எனக்கிருந்த இயற்பியல் அறிவை வைத்து நான் இதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றேன்.
காற்றில் உள்ள நைட்ரஜன் ஆக்சிஜன் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றை ஒரு குழந்தையைப் போல நான் நினைவுபடுத்திப் பார்த்தேன். எதிரி நாட்டு விமானங்கள் கண்களுக்குப் புலப்படாத உயர் அதிர்வெண் மின்காந்த அலைகள் வழியாக எலக்ட்ரான்களை அனுப்பி இருக்கவேண்டும் என்று நினைத்தேன். வாசனையோ நிறமோ அற்ற, சத்தம் ஏற்படுத்தாத இந்த மின்காந்த அலைகள் வான்வழி தோன்றி மிகப்பெரிய வெண்ணிறத் தீப்பிழம்புகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இது போன்ற வினோதமான தீக்காயங்களுடன் எப்படி இவ்வளவு பேர் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து இப்படியான ஒரு மனச் சித்திரத்தைத்தான் என்னால் வரையமுடிந்ததே தவிர இந்த மர்மமான உலகைக் குறித்து என் மனதில் வேறு எந்த எண்ணமும் தோன்றவில்லை. இத்தகைய சிந்தனைகளை என்னால் ஒழுங்கமைக்க முடிந்தது தனிச் சிறப்புமிக்க ஒன்று என்று நினைத்துக் கொண்டேன். நாங்கள் தோல்வியடைந்துவிடுவோம் எனும் வலிதரும் உணர்வின் ஆழத்தில் மூழ்கும் முன்னர் இந்த எண்ணவோட்டங்களை நான் உடனே மற்றவர்களிடம் சொல்லிவிடவேண்டும் என்றும் எனக்குத் தோன்றியது.
என்னருகே படுத்துக்கிடந்த என் தங்கையிடம் கிசுகிசுப்பான குரலில், “போர் முடிந்துவிட்டது” என்றேன்.
“நீ என்ன சொல்கிறாய்?” என்றாள்.
” நம்மால் வேறெதுவும் செய்ய முடியாது. மிஞ்சிப் போனால் ஜப்பான் இன்னும் இரண்டு மாதங்கள் தாக்குப் பிடிக்கலாம்” என்றேன்.
மலைகளில் எரிந்துகொண்டிருந்த தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து ஒரு சிகரத்திலிருந்து அடுத்த
சிகரத்துக்குப் பரவியது. இரவு நீண்டுகொண்டே இருந்தது. ஆனால் காயமடைந்தவர்களை மீட்க யாரும் வரவில்லை. பூச்சிகளின் மெல்லிய கூச்சலோடு சேர்ந்து மனிதர்களின் பலத்த முனகல் சத்தங்களும் எங்கள் அனைவரையும் சூழ்ந்தன.
ஓட யாகோ (1906)
ஆங்கிலத்தில் – ரிச்சர்ட் எச். மைனர்
தமிழில் – எஸ்.கயல்
ஓட யாகோ (1906) :
ஜப்பானின் ஹிரோஷிமா நகரைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ஓட யாகோ. (1906)
டோக்கியோவில் வசித்துவந்த ஓட யாகோ, உலகப் போரின் ஆரம்பக் கட்டத்தில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஹிரோஷிமாவில் இருந்த தன் தாயாருடன் சென்று வசிக்கத் தொடங்கினார். ஓடோவின் வீட்டுக்கு ஒரு மைல் தூரத்தில்தான் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது. குண்டு வெடித்தபோது தங்கள் வீட்டில் இருந்த ஓடோ குடும்பத்தினர் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் ஹிரோஷிமாவில் இருந்த குஜிமா என்ற இடத்துக்குக் குடிபெயர்ந்தனர். போர் ஏற்படுத்திய பேரழிவுகளை நேரடியாக அனுபவித்ததால் இவருடைய பெரும்பாலான படைப்புகள் அணுகுண்டுத் தாக்குதலை மையப்படுத்தியவை.
இவர் எழுதிய ஹாஃப் ஹியூமன் என்ற நாவல் அமைதிக்கான கலாச்சார விருதும், ஹியூமன் டேட்டர்ஸ் எனும் நாவலுக்கு பெண்களின் இலக்கியப் பங்களிப்புக்கான விருதும் பெற்றுள்ளன
அடடே அருமை. ஹிரோஷிமாவின் மீது பறந்த விமானத்தில் இருந்து அணு குண்டினை வீசியவர்…. அடுத்த நொடியே ” அய்யோ…. இத்தகைய கொடூரமான செயலை செய்த பாவியாகி விட்டேனே!” என தலையிலடித்தபடி புலம்பினாராம் என்ற தகவலை படித்த போது அவருடைய வலியை இந்த கதையை படித்த போது உணர முடிகிறது, நீல நிற நதிகள் பாய்மர படகுகள் என அழகு கண் முன்பாக எழுகிறது.