செல்வசங்கரன் கவிதைகள்

லலிதா அக்கா

எனக்குச் சின்ன வயதில் பக்கத்து வீட்டில்
லலிதா அக்கா இருந்தார்
எனக்குச் சின்ன வயதில் ரயிலில் மோதி அவர் இறந்து போனார்
எனக்குச் சின்ன வயதில் அவருக்கு கவிதா மஞ்சு என இரண்டு மகள்கள்
எனக்குச் சின்ன வயதில் கவிதா என்னைவிட வளர்ந்தவள்
எனக்குச் சின்ன வயதில் மஞ்சுவிற்கு நல்ல உருண்டை முகம்
எனக்குச் சின்ன வயதில் என்னை கவிதாவோடு சேர்த்து வைத்து
தங்கமாரியப்பன் பேசுவான்
எனக்குச் சின்ன வயதில் மஞ்சுவின் துடுக்கான பேச்சு பிடிக்கும்
இவை எல்லாவற்றையும் என்னுடைய சின்ன வயது
என்னுடைய பெரிய வயதிடம் எப்படியோ சொல்லிவிட்டது
பெரிய வயதிற்கு இப்பொழுது எல்லாம் தெரியும்
என்னுடைய பெரிய வயது சின்ன வயது கவிதாவை
கோயிலுக்கு அழைத்தது
என்னுடைய சின்ன வயது பெரிய வயது மஞ்சுவிற்கு ஹாய் சொல்லியது
அந்த சமயத்தில் வந்த ரயிலில் அடிபட்டு லலிதா அக்கா இறந்து போனார்
எங்களுடைய சிறிய மற்றும் பெரிய வயதுகளில் இருந்துகொண்டு
துயரமான இச்சம்பவத்தை நாங்கள் பார்த்தவாறிருந்தோம்

ஆச்சரிய வெங்காயம்

பரணில் இருந்த இரண்டு ஷூக்கள்
இரண்டே இரண்டு கால்களை மட்டும் பரணில்
ஏகப்பட்ட இடங்களில் அடுக்கி வைத்திருந்தன
ஒவ்வொரு இரண்டு கால்களும் அதே இரண்டு கால்கள்
அவைகள் தான் பல இடங்களில் பல தடவைகள் இருந்தன
இதில் ஆச்சரியப்பட என்ன வெங்காயம் உள்ளது
அந்த இரண்டு ஷூக்கள் தான் அதே இரண்டு கால்களை
வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு தடவைகளாக
வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்றவாறிருந்துள்ளன
மொத்தமே ஒரேயொரு தடவைதான்
அந்த ஒரேயொரு தடவை தன்னை எடுத்துக் கொண்டுபோய்
வெவ்வேறு தடவைகளில் தூக்கி வைத்தது தான்
ஆச்சரிய பெரிய வெங்காயம்

ரஸம்

பூப்போட்ட சட்டையில் உள்ள பூக்களெல்லாம்
ரொம்பவே க்ளவர்
பறித்தாயிற்று ஆனால் கீழேயே விழவில்லை
கீழேயை கீழே போட்டுவிட்டதாகச் சொல்லிப் பெருமைப்பட்டன
அந்தப் பெருமையை பழக்கடைக்காரர் அவ்வப்பொழுது
பழங்களை எடுத்துத் துடைத்து பாலிஷ் போடுவது போல
பாலிஷ் ஏற்றிக் கொண்டது
ஒருநாள் முள்வேலியைத் தாண்டி ஒருவன் எப்படியோ
அந்த தோட்டத்திற்குள் நுழைந்து விடுகிறான்
அங்கிருந்து ஒரு பூவையாவது பறித்துக் கீழே எறிவது தான்
அவனுடைய நீண்ட நாளைய திட்டம்
இந்த கோக்கு மாக்குகளுக்கு இடைப்பட்டுத் தான்
பூப்போட்ட சட்டையில் எல்லாரும் எல்லாரையும் பார்த்துக்
கைகுலுக்கிக் கொள்கிறோம்
ஒரு பூப்போட்ட சட்டை இன்னொரு பூப்போட்ட சட்டையைக்
கடந்து செல்கிறது
என்ன ரஸம் என்றே தெரியாத கொஞ்சம் கூட உப்புசப்பில்லாத
சத்தங்களைக் கடித்து விழுங்கிக்கொண்டே எவ்வளவு மொண்ணையான
ஒரு கடந்து செல்கை

கண்ணாடி நீர்நிலை

இங்கு நடந்த இந்த விபத்தைக் குறித்து ஒரு சிறிய சந்தேகம்
இதை எத்தனை பேர் இங்கிருந்து எடுத்துப் போவார்கள்
எத்தனை பேரிடம் இதை ஏற்றிவிடுவார்கள்
எத்தனை தடவை எல்லாரும் இதைச் செய்து பார்ப்பார்கள்
எத்தனை தடவை இவர்களெல்லாம் இன்னும் சாவார்கள்
இந்த கோர விபத்து பற்றி
என்னவென்றே தெரியாத ஒருவர் வருகிறார்
அவரின் கலக்கமடையாத தெளிந்த நீர்நிலையில்
அவர்கள் எல்லாரும் நன்றாக நீந்திக் கொண்டிருப்பார்கள் தெரியும்
கண்ணாடி போன்ற அந்த நீர்நிலையில் குதித்து
அவர்களோடு நானும் நீந்திச் செல்லத் துவங்கினேன்
வளையம் வளையமாக வந்து கொண்டிருந்தது அலை
நீங்கள் அலைகளில்லையென என்று மட்டும்
அவைகளிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி வெளியேறினேன்
அப்பொழுதங்கு எழுந்த ஒரு அலை இன்னொரு அலையிடம் சொன்னது
நாம் அலைகள் இல்லையென
அப்பொழுதங்கு இறந்த ஒருவர் இன்னொரு இறந்தவரிடம்
நாம் இறந்துவிட்டோம் என்றதைப் போல

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.