காத்தாடி கவிதைகள்-லீனா மணிமேகலை

கைவிடப்பட்ட மூச்சுகளைப் 
பிடித்துப் பிடித்து
உடலுக்குள் ஏற்றுகிறேன்
ஆனாலும் எட்டு வைப்பதற்குள்
தட்டையாகிவிடுகிறது
காற்றுப் போன உடலை மூங்கிலில் கட்டி காற்றாடியாக்குகிறேன்
கயிறு என் நஞ்சுக் கொடி
மாஞ்சாவில் கலந்திருப்பது
என் எலும்புத் துகள்
பசை என் ரத்தம்
பறத்தலின் இடையில்
வரும் தலைகள் ஏன் அறுந்து விழுகின்றன
என்று என்னிடம் கேட்டுக் கொண்டு வராதீர்கள்

…….

இந்த பனிக்கால இரவில் 
வானத்தை அண்ணாந்துப் பார்க்கிறேன்
ஒவ்வொரு முறையும் வேறாக இருந்தாலும்
எப்போதும் அது வெறுமையைத் தந்ததில்லை
அன்பிருந்தாலும் நீங்கினாலும்
உடன் இருந்தவர்கள் திடும்மென சாம்பலாகியிருந்தாலும்
அரசாங்கங்கள் மாறியிருந்தாலும்
நகரமே தீப்பற்றியெரிந்தாலும்
இந்த நிலவுக்குப் பொருட்டே இல்லை
வளர்வதும் தேய்வதும் மறைவதும் தோன்றுவதுமாய்
இரவோடும் வானோடும்
ஒரு விளையாட்டைப் போல 
தன் இருப்பை
அதன் போக்கில் ஆடித் தீர்க்கிறது
என் உடலில் உறைந்திருக்கும் 
ரத்தக் குளங்களை உருக்கி
அதன் பிரதிமைகளை சேகரிக்கிறேன்
வாழ்க்கை ஸ்தம்பிக்கும்போதெல்லாம்
நிலாக்களைத் தளும்ப விட்டுக்கொள்வேன்

……

திறந்த புண்ணென 
இதயம் அப்படியே
ரணமெடுத்துக் கிடக்கட்டும்
மருந்திடவோ கட்டிடவோ 
யாரிடமும் கைகள் இல்லை
கருங்கடலின் உப்புக் காற்று அதை அரிக்க அரிக்க
விண்ணென்று வலி தெறிக்கட்டும்
நாய்களின் நாக்குகள் இன்னும் 
வெட்டப்பட வில்லை 
பாசிஸ்டுகள் இன்னும் விலங்குகளை
விட்டு வைத்திருக்கிறார்கள்
நிண ருசியில் அவற்றுக்கு மதம் பிடித்து
பயத்துக்குப் பிறந்த மனிதர்களைப் பார்த்து
ஓயாமல் குரைக்கின்றன
பறவைகள் கொத்தித் துளையிடத் துளையிட
புண் வாய் வளர்த்துப் பாடுகிறது
விருப்பமில்லையென்றாலும் 
அது உங்கள் காதுகளில் விழுந்து தொலைக்கும்
சேதிகள் செத்து வெகு காலமாகிவிட்டன

…..

இப்போதெல்லாம்
என் உடலை எப்படி எரிக்கலாம் என்ற
யோசனைகளில்
ஆழ்ந்து விடுகிறேன் 
என் கால்கள் அதிகமாக உழைத்திருக்கின்றன
எத்தனை பயணங்கள்
இன்னும் போகாத நிலங்களை நினைத்து
ஏங்கிக் கிடப்பதால் எரிய நேரமெடுக்கலாம்
இதயம் பஸ்பமாக எப்போதும் தயார்
முலைகள் யோனி போன்ற ஜனன உறுப்புகள்
ஏற்கெனவே பாதி எரிந்த நிலையில் இருப்பதால்
நெருப்புக்கு பெரிய வேலை இல்லை
முதுகெலும்பு தசைகள் இடுப்பு நரம்புகள்
எரியும்போது விசித்திரமான வாசமெழலாம் 
அவற்றின் மஜ்ஜை தன்மானத்தால் ஆனவை
மூளை விட்டு விட்டு எரியலாம்
முழுமையும் சாம்பலாக்கச் சற்றுப் பிரயத்தனம் தேவை
முகம் மூதாதையர்களுடையது
பந்தம் போலக் காய்ந்து
நெருப்பிட்டவர்களையும் குளிறகற்றி
இதப்படுத்தும்
அலையும் கூந்தலைச் சிரைத்துவிடுவது நல்லது
நெருப்புக்கு அதன் விடுதலை புரியாது
கவிதைகளை எழுதிப் பழகிய 
கைகள் தம்மைத் தாமே பெருக்கி 
கனலைத் தீர அணைத்துக் கொள்ளும்
சந்தேகமில்லை

…..

ஒரு ஜூலை நாளில்
நூறாயிரம் பேர் என்னை வன்புணர்ந்தார்கள்
புணர்ந்தவர்களை விடப்
பார்த்துக் கொண்டிருந்த உங்களின்
கண்கள் 
நினைவிலிருந்து அகலாமல்
என்னைத் துன்புறுத்துகின்றன
என்ன செய்யலாம்
என்னை ஒரு உழவு நிலமென விரிக்கிறேன்
மாடுகளைப் பூட்டுங்கள்
அவற்றின் குளம்புகள் மிதித்து மிதித்து
அந்த ஊமைக் கண்களை 
அகற்றட்டும்

….

நடு வீதியில் நின்றபடி
ஒரு விநோத விலங்கைப் போல
நகங்கள் நீண்டு வளர்ந்த கைகளால்
இதயத்தைப் பிய்த்து உருண்டையாக்கி
உண்கிறேன்
போக்குவரத்து நிலைகுலைய பெரும் சத்தம்
பைக்கை நிறுத்தி 
ஒருவன் கேட்கிறான்
எப்படி சுவை
உவர்ப்பாக இருக்கிறதென்கிறேன்
தன் சட்டைப் பையிலிருக்கும்
கெட்சப் சாஷேக்களை தந்து 
Stay strong என்றுவிட்டு
வேறு சாலைக்கு திரும்பிய அவனிடம்
Have a great day என்கிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.