சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா தன்னுடைய தலைமைப் பொறுப்பை எப்படி இழந்தது? ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன்,தமிழில் – ரா.பாலசுந்தர்

1970களிலும் 80களிலும் உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தலைமைப் பொறுப்பிலிருந்த இந்தியா இப்போது மோசமான ஒரு முன்னுதாரணமிக்க நாடாக மாறிவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கொண்டாடப்படும் இவ்வேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா இத்தனை ஆண்டுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கொள்கைகளையும் பற்றி காண்போம்.

இந்த ஆண்டு ஆஜாதி – கா – அம்ரித் – மஹாத்சோவ் எனும் பெயரில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடிவருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டங்களுக்கு நம் பிரதமரே தலைமை தாங்குகிறார். நம் நாட்டின் சாதனைகளைப் பட்டியலாகத் தொகுத்துப் பேசுவதில் பெருமைகொள்கிறோம். நம் நாடு உலகளவில் அனைத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற ஆசை நாட்டில் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பது வெளிப்படை. இப்போது தேசியவாதம் என்பது புதிய அமிழ்தமாகத் திகழ்கிறது. அரசியல் ரீதியாக இந்தியாவின் மையப்பகுதியில் வலதுகோடியில் இருப்பவர்கள், (இடது பக்கமிருந்து மிகத் தொலைவில் இல்லை) தெற்கு வரை தேசியவாதம் எனும் இந்த அமிழ்தத்தைச் சுவைக்கத் துடிக்கின்றனர்.

நாம் பேசும் தற்பெருமைகளுக்கு அப்பால் சில அடிப்படைக் கேள்விகளை நம் நாடு எதிர்கொள்ள வேண்டும் அவற்றில் முக்கியமானது வாழ்வாதாரம் சார்ந்தது. இன்று இந்த நாட்டில் சுத்தமாக, ஆரோக்கியமாக, பாதுகாப்பாக வாழ்வதற்கு வழி உள்ளதா? காலநிலை நெருக்கடிகளைச் சரிசெய்கிறோமா? பேரிடர்களை நிர்வகிக்கிறோமா? நம்முடைய காடுகள், சதுப்புநிலங்கள், மலைகள் ஆரோக்கியமாகவும் பரப்பளவில் அதிகமாகிக்கொண்டும் உள்ளனவா? நச்சுமிக்க பூச்சிக்கொல்லிகள், தொழிற்சாலைக் கழிவுகள், கனரக உலோகங்கள் போன்றவற்றை எவ்வாறு கையாள்கிறோம்? போன்ற கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளித்தாலே அம்ரித் மஹாத்சோவ் பாசாங்குத்தனமான முகமூக கிழிக்கப்பட்டுவிடும்.

141 கோடி மக்கள்தொகையுடன் உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக 2023 ஆண்டு இந்தியா திகழும். நம்முடைய நிலப்பரப்பு, சுற்றுச்சூழல், வானிலை, கலாச்சாரம் ஆகிய காரணங்களுக்காகவே இவ்வளவு பெரிய மக்கள்தொகையை இந்த நாடு தாங்குகிறது. நம்முடைய அடிப்படைத் தேவைகளான உணவு, காற்று, நீர், உடை, குடியிருப்பு, இயற்கை வளங்கள் ஆகியவை இந்த நாடே நமக்கு உருவாக்கித் தருகிறது. முக்கியமாக நம்முடைய கிராமங்களில் நூற்றாண்டுகளாக உருவாகி வந்த இயல்அறிவு ஆகியவையே நம் நாட்டின் ஆதார சக்தியாக விளங்குகின்றன.

காந்தி கூறியது போன்று இந்தியாவின் ஆன்மா இன்னும் கிராமங்களில்தான் உள்ளது. நம் நாட்டின் 70 சதவீத மக்கள் கிராமங்களில்தான் உள்ளனர். அவர்களில் 80 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்தவற்றில் ஈடுபடுகின்றனர். கிராமங்களின் நீட்சியாக இந்திய நகரங்கள் உருவாக்கப்பட்டன. அப்படியிருந்தும் இந்தியாவின் இதயமாகத் திகழ்வது விவசாயம்தான். விவசாயிகளுடனான இந்தியாவின் ஆழமான உறவைத் துண்டிக்கும் விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 2020-21ம் ஆண்டு தலைநகரில் ஆர்ப்பாட்டம் செய்தபோது விவசாயிகளுடனான இந்தியாவின் பிணைப்பைப் பார்த்தோம். இந்தியா சுற்றுச்சூழலை நம்பி வாழும் நாடாகும்.

உலகில் உள்ள முதல் 10 பல்லுயிர் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 193 நாடுகளில் 17 நாடுகளில் மட்டுமே 70 சதவீத பல்லூயிர் பெருக்கம் உள்ளது. அவற்றில் இந்தியாவும் ஒன்று. இது போன்ற காரணங்களால் இந்தியா பெரும்பல்லுயிர் நாடு என அழைக்கப்படுகிறது. உலகில் உள்ள இனங்களில் 8 சதவீதமும், 91,000 விலங்கினங்களும், 45,500 செடியினங்களும் இந்தியாவில் உள்ளன. 10 உயிர்புவியியல் பகுதிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உலகில் வேறெங்கும் இல்லாமல் நம் நாட்டில் மட்டுமே காணப்படுபவை. எதிர்காலத்தில் நான்கு லட்சம் வரையிலான இனங்கள் கண்டறியப்படலாம் என மதிப்பிடப்படுகிறது.

உலகில் உள்ள 36 பல்லுயிர் பெருக்கப் பகுதிகளில் 3 இந்தியாவில் உள்ளன. அவை இமயமலை. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இந்தோ-பர்மா பகுதி. இந்தியா சுண்டாநில பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. சுந்தரவனக் காடுகள் மற்றும் தனித்துவமான தாவரங்களையும் விலங்கினங்களையும் கொண்டுள்ள தராய்-துவார் சவானா புல்வெளிகள் ஆகியவை மற்ற இரண்டு பல்லுயிர் பெருக்க பகுதிகளாகும். புகழ்பெற்ற ரஷ்ய மரபியல் நிபுணரும் தாவர வளர்ப்பாளருமான நிகோலாய் வாவிலோவ் இந்தியாவை உலகளாவிய பயிர் பன்முகத்தன்மையின் எட்டு மையங்களில் ஒன்றாக அடையாளம் கண்டுள்ளார். நெல், கொண்டைக்கடலை, தட்டப்பயிர், அரிசி, அவரை, எள், கத்திரிக்காய், வெள்ளரிக்காய், கடுகு, கம்பு, இண்டிகோ விதைகள் போன்ற பல்வேறு தானிய வகைளின் பல்லுயிர் பெரும்பகுதியாக இந்தியா திகழ்கிறது.

பிரிட்டிஷ் அரசும் காடுகளும்

பிரிட்டிஷ் அரசு நம் நாட்டின் பெரும்பாலான இயற்கை வளங்களைக் குறிப்பாக காடுகளை வணிக லாப நோக்கங்களுக்காக அழித்துவிட்டது. அதே சமயத்தில் காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற உண்மையையும் உணர்ந்திருந்தனர். அதன் விளைவாக இந்திய காடுகள் சட்டத்தை 1865ம் ஆண்டு அமல்படுத்தினர். அதன் பின்பு 1878ம் ஆண்டு மற்றும் 1927ம் ஆண்டு இந்தச் சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டன.  ஆனால் இந்தச் சட்டங்கள் காடுகளின் வளங்களைச் சுரண்டவும் நிலத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மேலும் பாதுகாக்கவும்தான் பயன்படுத்தப்பட்டன. இத்துடன் பழங்குடியினர் காடுகளில் காலங்காலமாகச் சேகரித்து வரும் காடு சார்ந்த பொருட்களைச் சேகரிப்பதற்கும் தடை விதித்திருந்தன. 1980ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இந்திய காடுகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1988ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இந்திய காடுகள் கொள்கை பிரிட்டிஷ் ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டங்களின் வரையறையை மாற்றியது. மேலும் காடு வாழ் சமூகத்தினரை ஆதரித்தது. இருப்பினும் இந்தச் சட்டம் இன்னும் அனைவரையும் உள்ளடக்கிய சமூக மைய போக்கைக் கொண்டதாக மாற்றப்படவில்லை.

தொழில்மயமாக்கல் அல்லது அழிவு

இந்தியா சுதந்திரம் பெற்று ஜவஹர்லால் நேரு பிரதமரானதும் இந்தியா தொழில்மயமாக்கலிலும் உள்நாட்டு உற்பத்தியிலும் அதீத வளர்ச்சியைக் கண்டது. நேருவின் கொள்கைகள் இந்திய நாட்டு தயாரிப்புகளை உற்பத்தி செய்ய வழிவகுத்தது மட்டுமின்றி அவற்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கான தேவையையும் குறைத்தது. இவருடைய புகழ்பெற்ற வாசகமான தொழில்மயமாக்கல் அல்லது அழிவு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இப்போது ஆரவாரமாக பேசப்படும் ஆத்ம நிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா) எனும் திட்டத்திற்கும் வழிவகுத்தது. இந்திய நாட்டின் வளர்ச்சி கிராம மேம்பாட்டிலும் கிராம ஸ்வராஜ் என்பதிலும்தான் உள்ளது என எண்ணிய காந்திக்கு நேர்மாறான கொள்கையை உடையவர் நேரு.  சுற்றுச்சூழலுக்கு மரியாதை செலுத்தும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டவராக காந்தி இருந்தார். தொழில்மயமான இந்திய நாடு காற்று மாசுக்கும் நீர் மாசுக்கும் இந்திய சுற்றுச்சூழலை அழிப்பதற்கும் காடுகள் அழிப்பதற்கும் வழிவகுத்தது. நீர், காடு மற்றும் நிலம் சார்ந்து வாழ்ந்த சமூகங்கள் அவர்களுக்கான இயற்கை வளங்களிலிருந்து மேலும் மேலும் விலக்கப்பட்டனர். இத்தகைய விளிம்புநிலை குழுக்களை உரிமை சார்ந்த குழுக்களும் இடதுசாரிகளும் ஆதரித்ததினால் தங்கள் நீர் நிலம் காடுக்காக போராட ஆரம்பித்துவிட்டனர். சுற்றுச்சூழல், கலாச்சாரம், வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான மக்களின் ஆரம்பகட்ட போராட்டங்களாக இவை இருந்தன. இத்தகைய சமூகங்களே  சுற்றுச்சூழல் அமைப்பின் சரியான பாதுகாவலர்களாகத் திகழ்கின்றன. எல்லா வகையிலும் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் கொள்கைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பிற்குச் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளே அவற்றைச் சரிசெய்யும். ஆனால் இதற்கு இந்திராகாந்தி பிரதமராகும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

ஸ்டாக்ஹோம் மாநாடு மற்றும் பசுமை தசாப்தங்கள்

சுற்றுச்சூழல் அமைச்சராகப் பின்னாட்களில் பொறுப்பேற்ற ஜெய்ராம் ரமேஷ் இந்திராகாந்தியின் வழக்கத்திற்கு மாறான சுயசரிதை என்று அவரே சொல்லத்தக்க ஒரு புத்தகத்தை எழுதினார். இந்திராகாந்தி உண்மையிலேயே இயற்கை ஆர்வலராகத்தான் இருந்தார். மனதளவில் அவர் தன்னை அப்படித்தான் கருதினார்  என்று ஜெய்ராம் ரமேஷ் தனது புத்தகத்தில் எழுதினார். ஆனால் அரசியல் எனும் பேரலையில் இந்திராகாந்தி சிக்கிக்கொண்டார். ஆனால் இந்திராகாந்தி உண்மையிலேயே மலைகளை விரும்பியவர் காட்டுயிர்களை மனதளவில் மிகவும் நேசித்தவர். பறவைகள், கற்கள், மரங்கள் மற்றும் காடுகள் மீது விருப்பத்துடனும் நகர்மயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் காரணங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களைப் பற்றியும் ஆழமாகக் கவலைப்பட்டவர்.

 தற்செயலாக இந்த ஆண்டு இந்தியா சுற்றுச்சூழல் மீது தன்னுடைய வருத்தங்களைப் பகிர்ந்துகொண்டு உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தலைமைப் பொறுப்பை ஏற்று 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஜூன் மாதம் 1972ம் ஆண்டு ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித சுற்றுச்சூழல் மாநாட்டில்  மறக்க முடியாத உலகளாவிய செல்வாக்குமிக்க உரையை இந்திராகாந்தி ஆற்றினார்.

இந்த மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்ட ஒரே நாட்டுத் தலைவர் இந்திரா காந்தி மட்டுமே. இந்த மாநாட்டை நடத்திய ஸ்வீடன் நாட்டு பிரதமர் ஓல்ஃப் ஃபாம் ஒருவரே அங்கிருந்த மற்றொரு நாட்டுத் தலைவர் ஆவார். இவ்விரு நாட்டுத் தலைவர்களும் அணிசேரா நாட்டின் பொது அரசியல் தன்மை மற்றும் கவலைகள் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இங்கு இந்திராகாந்தி தன்னுடைய பேச்சில் வறுமையையும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் இணைத்து பேசியது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஒன்றிற்காகவே இந்த உரை இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. மக்களை ஏழைகளாக மாற்றுவதற்கு அதிக மாசு ஏற்படுத்துபவர்கள் தேவைதானே? என்று இந்திராகாந்தி கேட்டார். ஆனால் உரை இதுதொடர்பாக மட்டும் இல்லை. இன்றைய தினத்திற்குக் கூட பொருந்திப்போகின்ற சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான ஒவ்வொரு தலைப்பையும் இந்திரா காந்தியின் உரை தொட்டுச்சென்றது. அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் இந்த உரையைப் படிக்க வேண்டும். இந்திரா காந்தி உரை நிகழ்த்தி முடிந்த 50 ஆண்டுகளைக் கொண்டாடாமல் அதை ஏன் இந்த நாடு மறக்க விரும்புகிறது என்பதை இந்தக் கட்டுரை படித்து முடித்ததும் உங்களுக்குத் தெரிந்துவிடும் என்று நம்புகிறேன்.

1984ம் ஆண்டு கொடூரமான அகால மரணம் ஏற்படும் வரையில் தன்னுடைய கொந்தளிப்பான அரசியல் தசாப்தங்களுக்கு இடையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு தன்னாலான அனைத்து சிறந்த நடைமுறைகளையும் இந்திராகாந்தி எடுத்தார். 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1980ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சுற்றுச்சூழல், காடுகள், வனவிலங்குகள் தொடர்புடைய அனைத்துச் சட்டங்களுக்கும் பெரும்பாலும் இந்திராகாந்திதான் காரணமாக இருந்தார். 1980ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல்துறை பின்பு தனியாக சுற்றுச்சூழல் அமைச்சகமாக உருமாறியது. இதற்கும் இந்திராகாந்திதான் முக்கியக் காரணியாக இருந்தார். உலகளவில் பாராட்டப்பெற்ற ப்ராஜெக்ட் டைகர் என்ற புலிகளைப் பாதுகாப்பதற்கான திட்டம் மற்றும் குறைவான தகவல்களை மட்டுமே அறிந்துள்ள பிற இனங்களைப் பாதுகாப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் இந்திராகாந்தி காரணமாக இருந்தார். இவர் ஆட்சிக்காலத்தில் 1981ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காற்று மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டமும் 1974ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நீர் மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டமும் நம் நாட்டின் மாசுக் கட்டுப்பாட்டில் முக்கிய மைல்கல் ஆகும். நீர்ச்சட்டம் மூலம் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 1974ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1970களும் 1980களும் இந்திய சுற்றுச்சூழல் வரலாற்றில் பசுமை தசாப்தங்கள் என குறிப்பிடப்பட வேண்டிய முக்கியக் காலகட்டங்கள் ஆகும்.

நவயுக தாராளவாதிகளின் வருகை

இந்திராகாந்தியும் அவர் ஆட்சியின் பசுமை தசாப்தங்களும் இந்தியாவை உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய இடத்திலும் உலகத் தலைமைப் பொறுப்பிலும் கொண்டுவந்தது. ஆனால் அவரின் மகன் ராஜீவ்காந்தி 1984ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த காலகட்டத்தில் தன் தாய் போன்றே சுற்றுச்சூழலுக்கு முக்கியம் தர ஓரளவு முயன்றார். ஆனால் அன்றைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ் மற்றும் நிதியமைச்சர் மன்மோகன் சிங் அவர்கள் அறிமுகம் செய்த தாராளமயமாக்கல் கொள்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தசாப்தங்களையும் உலகளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான இந்தியாவின் தலைமைப்பொறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. பி.வி.நரசிம்மராவின் ஆட்சிக்காலம் ஐந்து ஆண்டுகள் நீடித்தது. அடல் பிகாரி வாஜ்பாயின் ஆட்சிக்காலம் தவிர மற்றவர்கள் தலைமையிலான அனைத்து ஆட்சிகளும் தாராளமயமாக்கலை முன்னுதாரணமாகக் கொண்டு அவற்றை நிலைநாட்ட முயன்றன. ஆனால் போதுமான நேரமும் வலுவான ஆட்சியும் அமையாததால் சோசியலிச தாராளமயமாக்கலை எந்த ஆட்சியாலும் தர முடியவில்லை. அதன்பிறகு 2004ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக ஆட்சிக்கு வந்தார். இவரின் ஆட்சிக்காலம் 2014ம் ஆண்டுவரை நீடித்தது. இவரின் அரசாங்கம் தாராளமயமாக்கலை மீண்டும் வலுவாக நிலைநாட்டியது. ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகப் பெரிய அடியை அதற்குப் படிதிலாக வாங்கிவிட்டது. 2013ஆம் ஆண்டு தி இந்து நாளிதழில் ராமச்சந்திர குஹா எழுதிய கட்டுரை ஒன்றில், ”மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோதும் இப்போது பிரதமராகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் மிகவும் தீவிரமான விரோதப் போக்கைக் கொண்டுள்ளார். மேலும் பொருளாதார வளர்ச்சி முக்கியமா சுற்றுச்சூழல் நிலைத்தன்மை முக்கியமா எனக் கேள்வி எழுகையில் பொருளாதார வளர்ச்சிக்கே முதன்மை முக்கியம் தரவேண்டும் என டாக்டர் சிங் வலுவாக உள்ளார்” 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் இருந்ததைத் தவிர இந்த அரசாங்கம் சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கு பெரியதாக முக்கியத்துவமே தரவில்லை. இந்திராகாந்தியின் தீவிர ஆதரவாளரான ஜெய்ராம் ரமேஷ் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வளர்ச்சி மற்றும் மேம்பாடுக்கிடையேயான போதாமைகளைச் சமப்படுத்த தன்னால் முடிந்தவரை சிறப்பாகக் கையாண்டார். இது வெளிப்படையாகப் பல சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுப்பதற்கான நிலைக்குத் தள்ளியது. ஆயினும் அவர் சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் நிர்வாகத்தைப் பாதிக்காத வண்ணம் ஜனநாயகத் தரநிலைகளையும் விஞ்ஞான கட்டுப்பாடுகளையும் புதிதாக அறிமுகம் செய்தார். பொதுமக்களுடன் இதுதொடர்பாக கலந்துரையாடினார். நன்றாகப் படித்த அறிவியல் அடிப்படையிலான கேள்விகளை எழுப்பினார், திட்டங்களை ரத்துசெய்தார் மிகவும் முக்கியமான தேசிய பசுமைத் தீர்பானையத்தை அமைத்து புறக்கணிக்கப்பட்ட வனவாசிகளின் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்தினார். 2010ம் ஆண்டு மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு தடை விதித்தார். இதுதொடர்பான இந்திய அறிவியல் அகாடெமிகளில் மோசமாக ஆய்வறிக்கைகளை நிராகரித்துவிட்டார். பொருளாதார அறிஞரான பிரதமரும் அவரது அமைச்சரவையும் கொண்டுவந்த சுற்றுச்சூழல் அழிவைத் துரிதப்படுத்திய தாராளமயமாக்கல் செயல்முறையின் பாலைவனத்தில் சோலைவனமாக இந்த இரண்டு ஆண்டுகள் இருந்தது.

2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக வலதுசாரிகட்சி ஆட்சியமைத்தது. சுற்றுச்சூழலுக்கு மிகக் குறைந்த கவனம் செலுத்தும் சகாப்தத்தின் தொடக்கமாக இந்த ஆட்சி அமைந்துவிட்டது. தேசியளவிலான தூய்மை காற்று திட்டம், நம் கங்கா நதி திட்டம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் மற்றும் சமீபத்திய தேசிய ஹைட்ரஜன் திட்டம் போன்ற பல சுற்றுச்சூழல் திட்டங்களை அறிமுகம் செய்வதாக ஒன்றிய அரசு கூறிக்கொண்டாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் அனைத்துச் சட்டங்களையும் சாதுர்யமாகவும் நுணுக்கமாகவும் இந்த அரசு வலுவிழக்கச் செய்வதைப் பார்த்து வருகிறோம்.

2014ம் ஆண்டு மோடி அரசின் முதல் முடிவுகளில் ஒன்று எளிதாகத் தொழில் தொடங்குதல் என்ற பெயரில் முதலீடுக்கான அனைத்துத் தடைகளையும் நீக்கியதுதான். அதிகமாக மாசடைந்தவை என வகைப்படுத்தப்பட்ட தொழில்துறை மண்டலங்களில் அதிக தொழிற்சாலைகளை அமைப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இந்த தடையும் இந்த அரசால் நீக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்க விதிமுறைகள்கூட எளிதாக்கப்பட்டன. அதிகாரம் வாய்ந்த 47 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய வனவிலங்கு வாரியம் 2020ஆம் ஆண்டுவரை ஒரு முறைகூட கூட்டம் நடத்தவில்லை. இந்தத் தேதி வரை 99 சதவீத விண்ணப்பங்களுக்கு தேசிய வனவிலங்கு வாரியத்தில் குறைந்தபட்ச அதிகாரத்தைக் கொண்டுள்ள நிலைக்குழுவால்தான் ஒப்புதல் வழங்கப்படுகின்றன. 2017ம் ஆண்டு ஜூலை மாதம் அரசாங்கம் ஒரு நிதி மசோதா மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் சட்டப்பூர்வ காவலாளியாக இருக்கும் தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் சுயாட்சியை அகற்ற முயன்றது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் 2019ம் ஆண்டு இந்த மசோதா ரத்து செய்யப்பட்டது.

இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் மீறல்கள் தடையின்றித் தொடரும் அதே வேளையில், அவர்களில் பெரும்பாலானோர் பொதுவிலும் நீதிமன்றத்திலும் சவால்களை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக நமாமி கங்கா திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய குர்கானில் உள்ள ஆரவல்லி மலைத் தொடர்கள் மும்பையில் உள்ள ஆரே, வாரணாசியில் உள்ள கச்சுவா ஆமைகள் சரணாலயம் ஆகியவை பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன. மத்தியப்பிரதேசத்தில் முன்மொழியப்பட்ட கென்-பெட்வா நதி இணைப்புத் திட்டமானது பன்னா புலிகள் காப்பகத்தின் 6000 ஏக்கர் நிலம் அழியும் அபாயத்திலும்  4.6 மில்லியன் மரங்கள் வெட்டப்படும் அபாயத்திலும் உள்ளன. மஹாராஷ்ட்ராவில் கொண்டுவரப்படும் விரைவு ரயில் திட்டம் ஆயிரக்கணக்கான அலையாத்திக் காடுகள் அழிக்கப்படும் அபாயத்தில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் உத்திரகாண்டில் பெரு வெள்ளமும் நிலச்சரிவுகளும் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான மக்களின் சொத்துகள் அழிக்கப்படுகின்றன. இருப்பினும் பெருமளவிலான மரங்களை வெட்டுவதற்கும், காடுகளின் பகுதிகளை அழிப்பதற்கு வழிவகுக்கும் அனைக்கட்டுகளும், பிற வளர்ச்சிகளும் அரசாங்கத்தின் ஆதரவைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டுதான் உள்ளன. மத்திய இந்தியாவில் மிகப்பெரிய காடுகளில் ஒன்றான சட்டீஸ்கரில் இருக்கும் ஹஸ்தியோ அரன்டுவின் சர்ஜூகா எனும் முதன்மை காட்டில் நிலக்கரி சுரங்கப் பகுதிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகம் இந்தப் பகுதியில் நிலச்சுரங்கம் அனுமதி இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் காலப்போக்கில் அந்த அறிவிப்பையும் விலக்கிக்கொண்டது.

2006ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு எனும் அறிவிப்பை 2020ம் ஆண்டு முற்றிலுமாக நீர்த்துப்போகச் செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. இத்தகைய செயலுக்கு நிபுணர்கள் மட்டுமின்றி மாணவர்கள் மத்தியிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத வகையிலான எதிர்ப்பின் காரணமாக அதிர்ச்சியடைந்த அரசாங்கம் இந்த யோசனையைக் கைவிட்டுவிட்டது. ஆனால் அரசாங்கமோ சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மற்ற சாக்குப்போக்குக் காரணங்களைக் கூறி பழிவாங்கினார்கள். நாட்டிற்கு அவமானம் சேர்த்ததாக தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் இந்த அரசு 2006ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை இந்த நான்கு வருடங்களில் பல்வேறு உத்தரவுகள் மூலம் பத்துக்கும் மேற்பட்ட  முறை மாற்றியமைத்து நீர்த்துப்போகச் செய்துள்ளது. சமீபத்தில் முக்கியமான மூன்று சுற்றுச்சூழல் சட்டங்களில் (நீர், காற்று சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள்) திருத்தம் செய்யப்பட்டு விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அகற்றியுள்ளது. மேலும் விதிகளை மீறுபவர்களை குற்றமற்றவர்கள் எனவும் மாற்றியுள்ளது. இத்தகைய செயல்கள் சுற்றுச்சூழல் சட்டத்தின் மிக அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான பின்னடைவு கூடாது என்பதை இந்தத் திருத்தம் மீறுவதாகக் கருதப்படுகிறது.

தண்டனை விதிப்பதற்கான வழிமுறைகள் இருந்தாலும் உலகில் உள்ள மிக மாசடைந்த நதிகளில் ஒன்று இந்தியாவில்தான் உள்ளது என்பது மறைக்கப்பட்ட உண்மை ஒன்றும் இல்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2018ம் ஆண்டு நடத்திய ஆய்வில் இந்தியாவில் உள்ள 400க்கும் மேற்பட்ட நதிகளில் 351 நதிகள் மாசடைந்துள்ளன என அறியவந்துள்ளது. உலகளவில் மோசமான காற்றுத் தரம் உள்ள 50 நகரங்களில் 35 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன. 2021ம் ஆண்டு சுவிஸ் அமைப்பான 35 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன. 2021ம் ஆண்டு சுவிஸ் அமைப்பான IQAir தயாரித்த உலகக் காற்றுத் தர அறிக்கையின்படி கடந்த நான்கு ஆண்டுகளில் உலகிலேயே அதிக மாசடைந்த தேசத் தலைநகரமாக புது டெல்லி உள்ளது என குறிப்பிட்டுள்ளது. 2019ம் ஆண்டு WaterAid Water தரக் குறியீடு படி 122 நாடுகளில் இந்தியா 120வது இடத்தில் உள்ளது.

அம்ரித் மஹோத்சவ் நடைபெறும் இந்த ஆண்டில் வருந்தத்தக்க ஒரு விஷயம் நம் கவனத்திற்கு வந்துள்ளது. உலகளாவிய சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு மூலம் மதிப்பிடப்பட்ட 180 நாடுகளில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது என தெரியவந்துள்ளது. உலகளாவிய சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு எனும் அமைப்பு உலகளவில் நீடித்த வளர்ச்சியை வழங்குவதற்கான தரவு அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

பிரச்சினைக்குரிய 11 வகைகள் உட்பட 40 செயல்திறன் குறியீடுகளைப் பயன்படுத்தி காலநிலை மாற்றச் செயல்திறன், சுற்றுச்சூழல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் அமைப்பு போன்ற அடிப்படையில் நாடுகளை இந்த அமைப்பு தரவரிசைப்படுத்துகின்றன. ஒவ்வொரு நாட்டின் செயல்திறனையும் காற்றுத் தரம், கழிவு மேலாண்மை, நீர், சுகாதாரம், கன உலோகங்கள், காலநிலை மாற்றத்தைச் சரிசெய்தல், பல்லுயிர் வளம், வாழ்விடம், சுற்றுச்சூழல் சேவைகள், மீன் வளம், விவசாயம், அமில மழை, நீர் வளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடுகிறது.

1970களிலும் 80களிலும் உலகளாவிய சுற்றுச்சூழலுக்கான தலைமைப் பொறுப்பில் இருந்து இந்த 30 ஆண்டுகளில் இந்தியா உலகில் மிக மோசமாகச் செயல்படும் நாடு என்ற அளவிற்கு பலத்த வீழ்ச்சியை சந்தித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் உலகத்தின் மீதான இரண்டு தலைவர்களின் பார்வையே ஆகும்.

இந்த நிலை மாறுமா?

இந்தச் சூழ்நிலை மாறும் என்பதில் எப்போதும் நம்பிக்கை உள்ளது. இந்தியா சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் நம் சமூகம் இயக்கமாக இணைந்து தீவிரமாக ஈடுபட்டு சரிசெய்துகொள்ளும் நாடாக விளங்குகிறது. இந்த இயக்கம் என்பது கிராமவாசிகள், நம்பிக்கைக்குரிய விஞ்ஞானிகள், பழங்குடி சமூகங்கள், ஆர்வலர்கள், அதிகாரிகள் இன்னும் சில சமயங்களில் அரசியல் தலைவர்கள் போன்றவர்களால் வழிநடத்தப்படுகின்றன. பல சமயங்களில் இவர்களின் முயற்சிகளை பல்வேறு பத்திரிக்கையாளர்கள், வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக கலாச்சார தலைவர்களால் ஆதரிக்கப்படுகின்றன.

அரசாங்கங்களும் தவறாக நடந்துகொள்ளும் நிறுவனங்களும் கொண்டுவரும் அழிவுகரமான கொள்கைகளையும் செயல்முறைகளையும் எதிர்த்து இத்தகைய நூற்றுக்கணக்கான இயக்கங்கள் போராடி உள்ளன. இவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய போராட்டங்களை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்புத் திட்டத்திற்காக இமயமலை அடிவாரத்தில் இருக்கும் மண்டல் கிராமவாசிகள் மரம் வெட்ட மறுத்து 1973ம் ஆண்டு போராட்டம் நடத்தியதே சிப்கோ போராட்டம் ஆகும். இந்த போராட்டமே இன்றைய நவீன கால இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கக் காரணமாக இருந்தது. பிற்காலத்தில் வட கர்னாடக பகுதியில் அபிகோ போன்ற போராட்டங்கள் சிப்கோ போராட்டத்தின் விளைவாக நடைபெற்றது.

இதே ஆண்டு அமைதி பள்ளத்தாக்கு எனும் சைலண்ட் வேலி போராட்டம் நடைபெற்றது இது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வெப்ப மண்டல காடுகளின் பெரும்பகுதியை மூழ்கடிக்கும் வகையிலான நீர்மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றது. சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், கலை மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் தலைமையில் அறிவியில் அடிப்படையிலான போராட்டமாக இது அமைந்தது. கேரள சாஸ்தர சாஹித்ய பரிஷத் எனும் அமைப்பு பிரபலமான இந்தப் போராட்டத்தை பிரச்சாரமாக மாற்றியது. 1983ம் ஆண்டு மத்திய அரசாங்கம் இந்தத் திட்டத்தை ரத்து செய்யுமாறு கேரளா அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியது. மேலும் அமைதிப் பள்ளத்தாக்கை தேசிய பூங்காவாக அறிவித்தது. இதன் மூலம் இந்தப் போராட்டம் மிகப் பெரும் வெற்றியடைந்தது.

நர்மதை ஆற்றில் பெரிய அணை கட்டுவதற்கு எதிராக 1985ம் ஆண்டு நர்மதையைக் காப்பாற்றும் போராட்டமாக நர்மதா பச்சோவ் ஆந்தோலன் எனும் போராட்டம் தொடங்கியது. இந்த அணையினால் 2,50,000 மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துடன் தொடர்பேயில்லாத நிலத்திற்கு இடம்பெயரும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர்.  மக்களின் வாழ்வாதாரத்திற்காக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டியநிலை ஏற்பட்டது. இருப்பினும் காலப்போக்கில் அணை கட்டப்பட்டுவிட்டது என்றாலும் இந்தப் போராட்டத்தின் விளைவாக அணை கட்டும்போதும் மறுவாழ்வு பிரச்சினைகளிலும் பின்பற்ற வேண்டிய உலகளாவிய கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை அமைக்க உதவியது. அத்துடன் பெரும்பாலான சுற்றுச்சூழலுக்கு தீங்கை விளைவிக்கும் அணை கட்டப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டன.

பீகாரில் ஜங்கிள் பச்சோவ் ஆந்தோலன், கேரளாவில் பூச்சிக்கொல்லி விஷத்தைத் தடைசெய்வதற்கான போராட்டம், குஜராத்தில் தொழிற்சாலை மாசுக்கு எதிரான போராட்டங்கள், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி, ஒடிஸா, ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் சுற்றுச்சுழல் தொடர்பான விழிப்புணர்வை விரிவாக்க உதவியது. 1984ம் ஆண்டு போபாலில் உலகளவில் மிகப் பெரிய இராசயன பேரழிவு நடைபெற்றது. இந்த விபத்தால் அந்தப் பகுதியில் அப்போதிலிருந்து இப்போது வரை 37 ஆண்டுகளில் 25,000 மக்கள் இறந்துள்ளனர். இந்த விபத்தினால் குறைந்தபட்சம் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் இப்படியான ஒரு போபால் சம்பவம் நடைபெற்றுவிடக்கூடாது என போபால் மக்கள் இந்த கோர சம்பவத்தை மறக்காமல் இன்னும் நினைவில் வைத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், ஆர்வலர்கள், சாதாரண மக்கள் என அனைவரும் ஒவ்வொருநாளும் சுற்றுச்சூழலை மேம்படுத்த அனைத்து வகையிலும் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவற்றில், மரங்களை நடுதல், தண்ணீரைச் சேமித்தல், காடுகள் மற்றும் காட்டுயிர்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுத்தல், உயிரினங்கள் மீண்டும் பல்கிப் பெருகும் சூழலை உருவாக்குதல், கடல்களைப் பாதுகாத்தல் பிளாஸ்டிக், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றுக்கு மாற்று வழிகளைக் கண்டறிதல், பருவநிலை மாற்றத்தைக் குறைக்க முயற்சி எடுத்தல் எனப் பட்டியல் கணக்கில்லாமல் நீளும். அரசாங்கம் தன் பங்கிற்கு பசுமை இந்தியாவிற்கான தேசிய இயக்கம், நீடித்த விவசாயத்திற்கான தேசிய இயக்கம், காலநிலை மாற்றம் குறித்த தேசியளவிலான செயல்திட்டம், காட்டுயிர்க்கான தேசியளவிலான செயல்திட்டம், இமயமலை சுற்றுச்சூழலை நிலைப்படுத்துவதற்கான தேசியளவிலான இயக்கம் என நடைமுறைப்படுத்தி வருகிறது. கேரளாவில் இருக்கும் அரசியல் கட்சிகள் இடையூறு செய்யாமல் இருந்திருந்தால் மேற்குத்தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்கும் திட்டமும் இத்தகைய திட்டங்களில் ஒன்றாகச் செயல்பட்டிருக்கும். இப்போது கேரளா மாநிலம் முழுவதும் சுற்றுச்சூழல் அழிவைச் சந்தித்து வருகிறது.

இப்போதைய கேள்வி இந்தியா மீண்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகளாவிய தலைமைப்பொறுப்புக்கு வருமா இல்லையா என்பது தான். அதற்கான பதிலைத் தெளிவாகச் சொல்ல முடியாது. சாத்தியமும் குறைவுதான். ஆனால் அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்த காலம் என்பது சுற்றுச்சூழல் மறுகட்டமைப்பு செய்வதற்கான அரசாங்கம் அமைந்தால் மட்டுமே தலைமைப் பொறுப்பை இந்தியா அடைய முடியும். அத்துடன் சுற்றுச்சூழல் கல்விக்கு முக்கியத்துவம் தரும் அரசாங்கம், இன்னும் குறிப்பாகச் சுற்றுச்சூழலுக்கு முக்கியம் தரும் பிரதமரும்தான் நம் நாட்டிற்கு இப்போது மிக அவசியமாகத் தேவை.

ஸ்ரீதர் ராதாகிருஷ்ணன்:

ஒரு பொறியாளர்,  சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் காலநிலை தொடர்பான மேம்பாடு மற்றும் கொள்கையில் பார்வையாளர் ஆவார்.

நன்றி :The News mintue 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.