மறைந்து போன மாயன்களும் அவர்களின் மர்மம் நிறைந்த வரலாறும்… றின்னோஸா

ன்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட நாளில் உலகம் அழியப்போகிறது என்ற ஒரு பரபரப்புச் செய்தி உலகமெங்கும் தீயாகப் பரவியது. சமூக ஊடகங்கள் தொடங்கி பிரபலமான பல சர்வதேச பத்திரிகைகள் வரை, இது பற்றி எழுதின. எந்தவித ஆதாரமும் இல்லாத, விஞ்ஞான ரீதியாக நிரூபணம் ஆகாத ஒன்றுக்கு எதற்காக இத்தனை முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று பார்த்தால் அதன் பின்னணியிலிருந்த பெயர் மாயன்கள்.

உலக அழிவைப் பற்றி பலதரப்பட்டவர்களும் பல்வேறு காலங்களில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவை எதற்கும் அலட்டிக் கொள்ளாத நாம் எதற்கு 2012 டிசம்பர் 21-ம் திகதி முடிவடைந்த மாயன்களின் நாட்காட்டிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோம் என்ற கேள்விக்கான விடை மாயன்கள் பற்றிய சுவாரஸ்யமான உண்மைக்குள் புதைந்துள்ளது. மாயன்களின் முடிவில்லாத கவர்ச்சிகரமான வரலாறு, இன்றும் தொடர்ச்சியாக மெக்சிகோ நோக்கி சுற்றுலாப் பயணிகளை மட்டுமல்ல, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும் ஈர்த்துக்கொண்டே செல்கிறது. பிரமாண்டமான பிரமிடுகள், பழங்கால கோவில்கள், நரபலிக் கதைகள், அசத்தலான கட்டிடக்கலை, அதி நவீன நகரங்கள், என பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் உச்சத்திலிருந்த ஒரு மிகப்பிரம்மாண்டமான பண்டைய நாகரிகத்திற்கு என்ன நடந்தது?   

இன்றைய நவீன விஞ்ஞானம் கிட்டத்தட்ட சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளுக்குள் தான் அது அசுரத்தனமான வளர்ச்சியை அடைந்தது. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இவை அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் கண்டுபிடித்திருந்தனர் என்றால் அவர்கள் எந்தளவு முன்னேற்றமான ஒரு சமூகமாக வாழ்ந்திருப்பார்கள்? கணிதம், வானியல், நகர அமைப்பு, கட்டிடக்கலை, அறிவியல், வேளாண்மை, கலை, கலாச்சாரம், விளையாட்டு என சகல துறைகளிலும் உச்சக்கட்ட வளர்ச்சி அடைந்திருந்த மாயன் இனம் சுவடே தெரியாமல் மறைந்த கதை, வலி நிறைந்த சோகக்கதை.

யார் இந்த மாயன்கள்?

இன்றைக்கு குறைந்தது 13,000 ஆண்டுகளுக்கு முன்பு, வேட்டைத் தொழில் ஈடுபட்ட பழங்குடியினர் மெசோ அமெரிக்காவில் சுற்றித் திரிந்தனர். ஸ்குவாஷ், மக்காச்சோளம் என விவசாயம் சாகுபடி செய்யத் தொடங்கி படிப்படியாக அவர்கள் முன்னேறத் தொடங்கினார்கள். இந்த முன்னேற்றத்தில், பிராந்தியத்தின் முதல் நிரந்தர குடியேற்றங்கள் வளர்ந்தன. இந்த குடியேற்றங்களில் சில, பின்னர் மெசோ அமெரிக்காவின் முதல் நகரங்களாக வளர்ந்தன. மாயன்களின் வளர்ச்சியானது, கிளாசிக் காலத்திற்கு முந்தைய காலம், கிளாசிக் காலம் மற்றும் பிந்தைய கிளாசிக் காலம் என மூன்று வெவ்வேறு காலங்களாக ஆராய்ச்சியாளர்களால் தொகுக்கப்பட்டது. மாயன்களின் வழித்தோன்றல்கள் மெசோ அமெரிக்கா முழுவதும் தொடர்ந்து வாழ்ந்தாலும், ஸ்பானிஷ் வெற்றியின் காலம் அல்லது ஸ்பானிஷ் காலனித்துவ காலம் மாயன் சகாப்தத்தின் முடிவைக் குறித்தது.

மூன்று ஆரம்பகால அமெரிக்க நாகரிகங்களில் முதலாவதும் நீண்ட காலம் நீடித்ததுமான ஒரே நாகரீகம் தான் இந்த மாயன் நாகரிகம். ஆரம்பகால மாயன்கள் கி.மு.1800-இல் மத்திய அமெரிக்காவில் தங்கள் வீடுகளை உருவாக்கி 3000 ஆண்டுகளுக்கும் மேலாக மெசோ அமெரிக்காவில் ஒரு மிக வலுவான இருப்பைத் தொடர்ந்தனர். “மாயன் பேரரசு” (“Maya empire”) என்ற சொல் மூலம் இவர்களைப் பற்றிப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டாலும் உண்மையில் மாயன்கள் நாகரீகம் தனித்தனி நகர-மாநிலங்களைத் தான் கொண்டிருந்தது. ஒவ்வொரு மாயன் குழுக்களும் ஒருவருக்கொருவர் தனித்தனியாகத் தான் ஆட்சி செய்தது வந்தனர். ஏனைய குழுக்களைப் போல நாடோடி வாழ்க்கை வாழாமல் இவர்கள் ஒரே இடத்தில் தங்கி நிரந்தர வீடுகளை வைத்திருந்தனர்.

எப்படி இருந்தார்கள் இந்த மாயன்கள்?

ஆண்கள் சுமார் 1.60 மீட்டர் உயரமும் பெண்கள் சுமார் 1.50 மீட்டர் உயரமும் கொண்டிருந்த இவர்கள் வலுவானதும், உறுதியானதுமான உடல் அமைப்பைக் கொண்டிருந்தனர். மாயன் ஆண்கள் விதம் விதமாகத் தலைமுடியை ஸ்டைலாக கட் செய்து, பேஷன் உலகில் இன்றைய இளைஞர்களுக்கே சவால் விடும் வண்ணம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வலம் வந்தனர். அவர்கள் தலையில் விலங்குகளின் முகங்களைக் குறிக்கும் இறகு தலைக்கவசங்களை அணிந்திருந்தனர்.  

உடலில்  ஓவியம் போன்ற சில உடல் அலங்காரங்களைத் தினசரி அல்லது பண்டிகை சந்தர்ப்பங்களில் வரைந்து வந்திருக்கிறார்கள். மூக்கு, உதடு, நெற்றி மற்றும் காதுகளில் விதம் விதமான ஆபரணங்களை அணிந்த மாயன் மக்கள், டெண்டல் கேரில் கூட முன்னேறி இருந்தார்கள். பற்களைப் பேணுவதிலும், சொத்தைப் பற்களை ஃபில்லிங்க் செய்யவும் கூட பல டெண்டல் உபகரணங்களைக் கண்டுபிடித்து வைத்திருந்தார்கள். மிகவும் மென்மையான பருத்தி துணியில் தைத்த ஆடைகளை அணிந்து வந்த இவர்கள், இறகுகள் விலங்குகளின் தோல்கள் கொண்டு உருவான போர்வைகளைப் போர்த்திக் கொண்டார்கள்.

மாயன்கள் எங்கே வாழ்ந்தார்கள்?  

நவீனகால மெக்சிகோவின் யுகடன் தீபகற்பத்திலும், சியாபாஸ் மற்றும் தபாஸ்கோவின் சில பகுதிகளிலும் குவாத்தமாலா, பெலிஸ், ஹோண்டுராஸின் பகுதிகள் மற்றும் எல் சால்வடாரின் சில பகுதிகளிலும் வாழ்ந்தார்கள். ஒரு அமைதியான, விவசாய மக்களாக இருந்த மாயன்கள் தாம் வாழந்த பிரதேசங்களை சக்திவாய்ந்த நகர-மாநிலங்களாக ஒழுங்கமைத்தனர். எல் மிராடோர், டிக்கால், உக்ஸ்மல், கராகோல் மற்றும் சிச்சென் இட்சா ஆகியவை மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த மாயன் நகர-மாநிலங்களில் சில. உலக நாகரீகம் வளர்வதற்கு முன்னமே அதாவது A.D.250 காலத்திலேயே மாயன்கள் நாகரீகத்தின் உச்ச கட்டத்தை அடைந்திருந்தனர். கி.பி.900 வாக்கில், மிகவும் முன்னேறிய சமூகமாக இருந்த மாயன் இனத்தினர், பெரிய கல் கட்டமைப்புகளால் நிரம்பிய நூற்றுக்கணக்கான நகரங்களைக் கட்டினார்கள். எகிப்தில் காணப்படும் உலக அதிசயங்களில் ஒன்றாக இடம் பிடித்த பிரமிடுகளுக்கு சிறிதும் குறைவில்லாத மிகப் பிரம்மாண்டமான பிரமிடுகளை தங்கள் கடவுள்களை மகிழ்விப்பதற்காக, நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அவர்கள் நிர்மாணித்தார்கள்.

மாயன்கள் பற்றிய உண்மை உலகுக்கு எப்போது முதலில் தெரிய வந்தது?

இந்த உலகம் பல விடை தெரியா மர்மங்களால் நிறைந்தது. அவை பல சமயங்களில் கண்டுபிடிக்கப்பட்ட முடியாத புதிராகவே புதைக்கப்பட்டு விடுகின்றன. மாயன்கள் பற்றிய உண்மைகளும் இவ்வாறு ஒரு காலத்தில் மண்ணோடு மண்ணாகப் புதைந்து போனது. அப்படி என்றால் இன்று மாயன்கள் இனம் பற்றி இத்தனை கண்டுபிடிப்புகளும் எப்படி வெளிவந்தன என்ற கேள்விக்கான பதில் John Lloyd Stephens மற்றும் Frederick Catherwood.

இற்றைக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, மறைந்து போன மாயன் பற்றிய ஆராய்ச்சிகளுக்கான ஆரம்பப் புள்ளியை வைத்தவர்கள் அமெரிக்க எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞருமான John Lloyd Stephens மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஓவியரும் கட்டிடக்கலைஞருமான Frederick Catherwood. அதிக வேலைப்பளு காரணமாகச் சோர்வுற்றிருந்த அமெரிக்க வழக்கறிஞர் John Lloyd Stephens தனது வைத்தியரின் ஆலோசனையின் படி ஓய்வெடுப்பதற்காக ஒரு உலக சுற்றுலாவைத் தொடங்கினார். அதே சமயம் புராதன ஆலயங்களையும் கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து சித்திரம் வரையும் Frederick Catherwood, வரலாறு பற்றிய ஒரு நூலை எழுதுவதற்காக உலகைச் சுற்றிய பயணத்தில் ஈடுபட்டிருந்தார். இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்ட ஒரு முக்கியமான நிகழ்வு மாயன்களின் வரலாற்றை நமக்கு அறிமுகம் செய்தது,

அதன் பின்னர் அமெரிக்கக் குடியரசுத் தலைவர், John Lloyd Stephens-ஐ மத்திய அமெரிக்காவின் தூதுவராக நியமித்ததைத் தொடர்ந்து, அவர் மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த மாயன்களைப் பற்றிய ஆராய்ச்சியை 1939-இல் Frederick Catherwood உடன் சேர்ந்து ஆரம்பித்தார். மாயன்கள் எனும் ஒரு அதி புத்திசாலி இனம் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகள் மெல்ல மெல்ல வெளியே வரத் தொடங்கியது.

கற்பனையிலும் எட்டாத மாயன்களின் சாதனைகள்

மாயன்கள் எனும் ஒரு மேம்பட்ட சமூகமும், அவர்கள் உருவாக்கிய அதி நவீன நகரங்களும் மண்ணுக்குள் மண்ணாகப் புதைந்து போய் கிடக்கின்றன என்ற உண்மை தெரிய வந்த பின், மளமளவென்று ஆராய்ச்சிகள் முடுக்கி விடப்பட்டன. அப்போது தான் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய ஒரு இனம் 1697 வரை வாழ்ந்திருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மை வெளிவந்தது. அகழ்வாராய்ச்சியாளர்களினால் அகழப்பட்டு வெளியே கொண்டுவரப்பட்ட பொருட்கள் ஒவ்வொன்றும் மாயன்கள் பற்றிய நம்பமுடியாத பல அதிசயங்களை அதிரடியாக அடுத்தடுத்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. 

மாயன்களின் கிளாசிக் பீரியட் அல்லது மாயன் நாகரிகத்தின் பொற்காலமான A.D. 250 காலப்பகுதியில் அவர்கள் நாகரீகத்தின் அதி உச்ச சகாப்தத்தில் நுழைந்தனர். அக்காலப்பகுதியில் பல கோவில்கள், பிரம்மாண்டமான அரண்மனைகள் கொண்ட செழிப்பான சுமார் 60 நகரங்களைக் கட்டினார்கள். மாயன்களின் முக்கிய திறமைகளில் ஒன்று அவர்களது கட்டிடங்கள் கட்டும் திறன். அரண்மனைகள், பிரமிடுகள், சடங்கு கட்டமைப்புகள் மற்றும் கோயில் கண்காணிப்பு அறைகள் என ஒரு தேர்ந்த Architech வரைந்த வரைபடத்தை, மிகவும் அனுபவம் வாய்ந்த பொறியாளரின் மேற்பார்வையில் சிறந்த கொத்தனார்களைக் கொண்டு கட்டப்பட்டது போன்ற மிக நேர்த்தியான அந்தக் கட்டிடங்கள் அனைத்தும் எந்த வித உலோகக் கருவிகளும் இல்லாமல் கட்டப்பட்டது என்பது தான் இங்கு ஹைலைட்டான ஆச்சரியம். ஏனெனில் மாயன் இனத்தைச் சேர்ந்த மக்கள் எஃகு அல்லது இரும்பு போன்ற உலோகங்களை ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை. இரும்பிற்கு பதிலாக ஆக்ஸிட்டியன் என்று அழைக்கப்படும் எரிமலை பாறைகளால் ஆன ஆயுதங்களை மட்டுமே அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

மாயன்களின் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஆட்சியாளர் இருந்தார். தங்கள் ஆட்சியாளர்களுக்கு கடவுளால் அதிகாரம் கொடுக்கப்பட்டதாகவும், ஆட்சியாளர் மூலம் கடவுளைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர்கள் நம்பினர். மாயன்களுக்கு பல்வேறு கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் இருந்தன. மழை மற்றும் புயல்களின் கடவுளாக சாக் என்பவரும், கற்றலின் மற்றும் படைப்பாளிகளின் கடவுளாக இட்சம்னா என்பவரும், இரவு மற்றும் சந்திரனின் தெய்வமாக அவிலிக்ஸ் என்பவரும் முக்கிய கடவுளாக வணங்கப்பட்டாலும், இன்னும் பல கடவுள்கள் மாயன் சமூகத்தினால் போற்றப்பட்டது.

இது வரை கண்டு பிடிக்கப்பட்ட அனைத்து நாகரீகங்களிலும் மிகவும் மேம்பட்ட எழுத்து மொழியை உருவாக்கிய ஒரே நாகரிகம் மாயன் நாகரிகம் மட்டுமே. அத்தோடு அவர்கள் கணிதம், கலை, கட்டிடக்கலை மற்றும் வானியல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினர். தற்போது நாம் பயன்படுத்தும் கணித முறை, பத்தை அடிப்படையாகக் கொண்ட தசம முறையாகும். ஆனால் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்த மாயன்கள் 20-ஐ அடிப்படையாகக் கொண்ட Vigesimal அடிப்படையில் கணிதத்தைக் கணித்தார்கள்.

கணித வரலாற்றில்  பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு ஒரு உண்மையான புரட்சி என்று கூறலாம். பண்டைய கிரேக்கர்களுக்கு பூஜ்ஜியத்திற்கான எண் இருக்கவில்லை. அதேபோல சுமேரியர்களும் பாபிலோனியர்களும் கூட பூஜ்ஜியத்தை அவ்வளவாகப் பயன்படுத்தியதாகச் சரித்திரம் இல்லை. பூஜ்ஜியமும் அதன் செயல்பாடும் முதன்முதலில் பிரம்மகுப்தாவால் 628-இல் கண்டுபிடிக்கப்பட்டது என்று தான் இது வரை படித்திருக்கிறோம் ஆனால் உண்மையில் பூஜ்ஜியத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் மாயன்கள். இவர்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தமது கணித முறையில் பூஜ்ஜியத்தை பயன்படுத்தினார்கள்.

அவ்வளவு ஏன், மாயன்களுக்கு எழுத்து முறை கூட இருந்தது. ஒலிகளையும் சொற்களையும் உருவாக்கும் ஹைரோகிளிஃபிக்ஸ் முறையை இவர்கள் பயன்படுத்தினார்கள். அவர்களின் எழுத்து அமைப்பில் 800 கிளிஃப்கள் வரை இருந்தன.

அதே போல விண்வெளி ஆராய்ச்சியிலும் மாயன்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்கான பல சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. உதாரணத்துக்கு நவீன விண்வெளி வீரர் போன்ற ஒரு ஓவியம் மாயன்கள் வாழ்ந்த குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல மத்திய அமெரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்கள் மாயன்கள் வாழ்ந்த கட்டிடங்களில் ராக்கெட் போன்ற படங்களைப் பார்த்து அப்படியே ஆடிப்போனார்கள். Milky way மற்றும் Galaxy பற்றிய ஆராய்ச்சியிலும் மாயன் சமூகம் ஈடுபட்டதற்கான பல ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நவீன விமானத்தைக் கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் தான் என உலகமே நம்பிக்கொண்டு இருக்கும் வேளையில், மெக்சிகோவில் மாயன்களின் குகைகளிலும் கட்டிடங்களிலும் கண்டு பிடிக்கப்பட்ட தங்கத்தால் செய்யப்பட்ட விமான உருவங்கள் மாயன்களின் விமான அறிவை உலகுக்கு உறுதிப்படுத்தியது. இந்த உருவங்கள் நவீன விமானங்களை ஒத்து இருப்பதாக உறுதியும் செய்யப்பட்டது.

உலகப் பிரபலம் பெற்ற மாயன் காலண்டர்

2012 டிசம்பர் 21-இல் உலகம் அழியப்போகிறது என்ற பரபரப்புக்குக் காரணமான மாயன் காலண்டர் மாயன்களின் மற்றுமொரு மகத்தான சாதனை. மிகவும் துல்லியமான இந்த நாட்காட்டியானது  இன்று உலகம் பயன்படுத்தும் நிலையான நாட்காட்டியை விட 10,000 மடங்கு மிகவும் துல்லியமானது. மாயன்கள் மூன்று வெவ்வேறு நாட்காட்டிகளைப் பயன்படுத்தினர். முதலாவது Tzolk’in எனப்படும் புனித நாட்காட்டி.  இது 260 நாட்கள் கொண்டது. நமது காலண்டர்கள் டிசம்பர் 31-இல் முடிவுற்று மீண்டும் ஜனவரியிலிருந்து ஆரம்பிப்பது போல, இது 260 நாட்களில் நிறைவுற்று மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்தது. மத விழாக்களைத் திட்டமிடுவதற்கு இந்த நாட்காட்டி பயன்பட்டது.

இரண்டாவது Haab எனப்பட்ட மதச்சார்பற்ற நாட்காட்டி. இது 365 நாட்களைக் கொண்டிருந்தது. இதில் பூமி சூரியனைச் சுற்றி வர எடுக்கும் கூடுதல் காலாண்டைக் கணக்கிடவில்லை. மூன்றாவது (Long Count) லாங் கவுண்ட் கேலெண்டர். 2012 டிசம்பர் 21-இல் முடிவடைந்த இந்த நாட்காட்டி தான் உலகம் அழியப்போகிறது என்ற பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மாயன் நாகரீகத்தின் முடிவு

இப்படிப் பல ஆச்சரியங்களைக் கொண்டிருக்கும் மாயன் நாகரிகம் எப்படி வீழ்ச்சியடைந்தது என்பதற்கான சரியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அறிவிலும், அறிவியலிலும், வளங்களிலும், செல்வங்களிலும் வளமாக ஓங்கி, செழித்து வளர்ந்த மாயன் நாகரிகம் ஒரு கட்டத்தில் இருந்த அடையாளமே தெரியாமல், ஏறக்குறைய புல், பூண்டு கூட இல்லாத அளவுக்கு அழிந்து போனது.

கிளாசிக் காலத்தின் முடிவில், அதாவது சுமார் கி.பி.900-ல் மாயன் நாகரிகத்தின் மையமாக இருந்த கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களும் – அதாவது தெற்கு தாழ்நிலப் பகுதிகள், இன்றைய வடக்கு குவாத்தமாலா மற்றும் மெக்ஸிகோ, பெலிஸ் மற்றும் ஹோண்டுராஸின் அண்டை பகுதிகள் எல்லாம் மெல்ல மெல்ல சரியத் தொடங்கியது. 8-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 925 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம் விட்டு இடம் நகர்ந்ததாகநம்பப்படும் மாயன் நாகரீகத்தின் வீழ்ச்சி சரியாக ஏன் எப்படி எப்போது நடந்தது என்பது இன்றுவரை விடை தெரியாததொரு மர்மம்.

ஒருவேளை கடுமையான வறட்சி மற்றும் காலநிலை மாற்றங்கள், அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம், அதன் காரணமாக ஏற்பட்ட வறட்சி, வெப்பநிலை உயர்வு மற்றும் பஞ்சம், அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் காரணமாக  அவர்களால் வெகு காலம் தாக்குப் பிடிக்க முடியாமல் போயிருக்கலாம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆனாலும் லட்சக்கணக்கான மாயன்கள் அழியக் காரணமாக இருந்தது ஸ்பானிஷ் படையெடுப்புகளே என்றும்  நம்பப்படுகிறது. 1500 களின் முற்பகுதியில் ஸ்பானிஷ் படையெடுப்பாளர்கள் மாயன் நகரங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்ததை அடுத்து, மாயன் நகரங்கள் படிப்படியாகச் சரிய ஆரம்பித்தன. இறுதியாக மிச்சமிருந்த சுதந்திர மாயன் நகரமான நோஜ்பேட்டன் (இன்றைய குவாத்தமாலா) 1697-இல் ஸ்பானிஷ் துருப்புக்களிடம் வீழ்ந்ததோடு மாயன்கள் எனும் ஒரு நீண்ட வரலாறு முடிவுக்கு வந்தது.

எப்போதுமே ஒரு பகுதியின் வீழ்ச்சி மற்றொரு பகுதியின் உயர்ச்சிக்கு வழிகோலும். மாயன் நகரங்களுடனான ஐரோப்பிய மோதலின் போது மாயன் நகரங்கள் கீழே விழ, ஐரோப்பா மேலும் செழித்தது. மெக்ஸிகோ போன்ற மாயன்கள் வாழ்ந்த அனைத்து பகுதிகளிலும் மாயன் மொழி மறைந்து, ஸ்பானிஷ் மொழியும் ஸ்பானிஷ் கலாச்சாரமும் பரவியது. ஒரு கட்டத்தில் மாயன்களை சுவடு தெரியாமல் மாயமாக்கிய ஸ்பானிஷ்காரர்கள், மனித வரலாற்றிலேயே மிகவும் அறிவு நுணுக்கமான ஒரு சிறந்த சமூகத்தை மண்ணுக்குள் புதைத்து முற்றுப்புள்ளி வைத்தார்கள். மாயன் எனும் மகத்தான ஒரு சமூகம் முடிவுக்கு வந்தது.

எஞ்சியுள்ள நவீன மாயன்கள்

1697-இல் ஸ்பானியர்களால் கடைசி மாயன் மாநிலம் கைப்பற்றப்பட்ட பிறகு, மிஞ்சியிருந்த மாயன் மக்கள் அவர்களுக்கு எதிரான பாகுபாடுகளைச் சகிக்க முடியாமல் ஸ்பெயினுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். ஸ்பெயினின் காலனித்துவ ஆட்சி 1821-இல் முடிவடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கூட அவர்களுக்கான அங்கீகாரத்தையோ, அவர்களுக்கு போதுமான அரசியல் பிரதிநிதித்துவத்தையோ இதுவரை வழங்கவில்லை.

இன்று சுமார் ஆறு மில்லியன் மாயன்கள் வாழ்கிறார்கள். மிகப் பெரிய மாயன் குழுக்கள் சில மெக்ஸிகோவில் காணப்படுகின்றன, அவற்றில் யுகாடெக்குகள் இட்ஸோட்சில் மற்றும் இட்செல்டால் போன்றன மிக முக்கியமானவை. பழங்குடி மாயன் மக்களுக்கும் ஸ்பானிஷ் குடியேறியவர்களுக்கும் இடையிலான நவீனமயமாக்கல் மற்றும் கலப்புத் திருமணங்கள் இருந்தபோதிலும், பல மாயன் சமூகங்கள் இன்று வரை தமது அடையாளத்தையும், பாரம்பரியங்களையும் அழியாது பேணி வருகின்றனர்.  

மாயன் நகரங்கள் சரிந்தாலும், கலாச்சாரம் மாறினாலும், ஏன் மாயன்களே  மறைந்தாலும், அவர்கள் சாதனைகள் வரலாற்றின் சுவடுகளில் எப்போதும் நிலைத்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.