சிசு விவசாயம்-காயத்ரி மஹதி

னிதன் மீதான நம்பிக்கையைக் கடவுள் கைவிடவில்லை என்பதற்கான ஆதாரம் தான் ஒவ்வொரு குழந்தையின் பிறப்பு” -மகாகவி தாகூர்.

அம்மாவைக் கொண்டாடும் சமூகமாக நாம் மாறுவதற்கு மிக முக்கியமான காரணமாகச் சொல்வதென்றால் இங்கு உள்ள அறிவார்ந்த சமூகத்தில் அடக்கப்படும் ஒடுக்குமுறையின் வெறுப்பைக் கையாள அம்மா மட்டும் தான் சொல்லிக் கொடுக்கிறார் என்று முழுமையாக நம்புகிறோம்.

ஒவ்வொரு குழந்தைகளின் வளரும் பருவத்தில் இந்தச் சமூகம் கொடுக்கும் அத்தனை அழுத்தங்களையும், வெறுப்பையும், கோபத்தையும் பழி தீர்க்க நினைக்கும் போது, அம்மாவின் அரவணைப்போடும், புடவை வாசத்தோடும் தான் புழங்கிய குழந்தைகளின் மனம் தான், வளர்ந்து எத்தனை பெரியவராக மாறினாலும், இன்னும் பல நபர்கள் சமூக நீதிகளை விட்டுக் கொடுக்காமல் இருக்கின்றனர். 

அனைத்து இன்னல்களுக்கு இடையிலும் தாய்க்காக சமூக நீதியைக் காப்பாற்றிய இந்தியாவில் தான் 2011 இல் “Moms on the Market” என்ற தலைப்புடன் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ஒரு கட்டுரை வெளியானது.

தாயே தெய்வம், தாய்மையே புனிதம் என்று கொண்டாடித் தீர்த்த, அந்த அம்மாக்கள் தான் தற்போது வாடகைத் தாயாக மாறி உலகச் சந்தையில் இந்தியாவில் அதிகமான சிசு விவசாயம் நடக்கிறது என்று போர்டு போட்டு விளம்பரம் செய்கிறார்கள்.

நம் வீடுகளில், நாம் பார்க்கும் திரைப்படங்களில் எல்லாம் எத்தனை இருள் சூழ்ந்த வீடாக இருந்தாலும் ஒரு குழந்தை இருக்கும் போது, அத்தனை இருளும் ஒளியாக மாறி விடும் என்ற அற்புதமான காட்சியைத் தான் மக்களிடம் காண்பிக்கிறோம். உண்மையில் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் எல்லாம் இருள் மறைந்து ஒளி வந்து விடுகிறதா? என்ற கேள்வியைக் கேட்டோம் என்றால், குழந்தைகளுக்குத் தேவையான எந்த ஒரு பாதுகாப்பையும் நாம் முறையாகக் கொடுக்கவில்லை என்பதே தெரிந்தும், தெரியாமலும் உள்ள விஷயமாக நாம் கடந்து போகிறோம்.

அப்படி என்றால் எத்தனை முரணாக நாம் ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டிருக்கிறோம் என்ற அறியாமைதான் நம் கண் முன்னால் கேள்வியாக நிற்கிறது. அந்த அறியாமை குணத்தோடுதான் சமூகத்தில் விதம்விதமாக எதிர்த்தும், ஆதரித்தும் குரல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. சில விஷயங்களின் வளர்ச்சியை அல்லது சில விஷயங்களின் மாற்றத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், சமூகத்தில் சில சம்பவங்கள் மிகப்பெரிய செய்தியாக மாறி நம் பார்வைக்கு வந்திருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் தான் நயன்தாரா, விக்னேஷ் அவர்கள் சேர்ந்து தங்கள் குழந்தை என்று சொன்ன ஒரு ட்வீட் தான் வைரலான செய்தியாக நம் பார்வைக்கு வந்தது. அன்றைய நாளில்  தமிழ்நாட்டில் திரும்பின பக்கமெல்லாம் வாடகைத் தாய் பற்றிப் பேசுவதைக் கேட்கிறோம். ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் கூகிளில் “Surrogacy” என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைப் பார்ப்பதற்குத் தேடுகிறார்கள் என்று கூகிள் சர்வே லிஸ்ட் நம்மிடம் காண்பிக்கிறது.

கலாச்சார காவலர்களாகிய நம்மிடம், நம் இந்திய மருத்துவத்துறையில் தாய்மை சார்ந்து நடந்த வளர்ச்சியைப் பற்றித் தெரிந்துகொள்ளாத அறியாமையைத் தான், அறிவியல் தொழில்நுட்பம் நம் தேடலைப்பற்றி பகடி செய்து சர்வே வெளியிடுகிறது.

தற்போதைய சம்பவம் என்னவென்று பார்க்கும் போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் அவர்களின் சோசியல் மீடியா பக்கத்தில் பிஞ்சுக் குழந்தையின் கால்களைக் கையில் பிடித்தவாறு இருந்த ஒரு புகைப்படத்தின் பதிவு தான் நம் மக்களுக்குப் புரிந்தும், புரியாமலும் “Surrogacy” பற்றி விவாதம் செய்ய வைத்தது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் செய்துகொண்ட திருமணம் எந்த அளவுக்கு எல்லோராலும் பேசப்பட்டதோ, அதேபோல் அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்ட முறையும் எல்லோராலும் பேசப்படுகிறது. நயன்தாராவைப் பார்த்து உடலில் தெம்பு இருக்கிறது, ஏன் நீயே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டியதுதானே என்ற கேள்வியும், ஏன் அழகு போய்விடுமா என்ற கிண்டலும் தான் மாறி மாறித் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

சரி, நயன்தாராவைக் கேள்வி கேட்பது இருக்கட்டும், அப்படியே நம் வீட்டுப் பெண்களுக்கு வருவோம். நம் வீட்டுப் பெண்களுக்குக் குழந்தை இல்லையென்று வரும்போது, நம் சமூகம் எப்போதும் பெண்ணைத் தான் குறை சொல்லிக்கொண்டு இருக்கிறது. அதற்கான மருத்துவச் சிகிச்சையும் பெண்தான் எடுக்க முன்வர வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

அந்தக் காலத்தில் ஒரு பெண்ணுக்குக் கரு உருவாகவில்லை என்றால், அந்த வீட்டில் உறவில் உள்ள பெண்கள் குழந்தை பெற்றுக் கொடுப்பார்கள். இப்போதுள்ள அறிவியல் வளர்ச்சியில் முகம் தெரியாத பெண்கள் மற்றொரு பெண்ணுக்குக் கரு உருவாக உதவிசெய்ய வருகிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

வாடகைத் தொட்டில் :

குழந்தைப் பிறப்பு என்றாலே யார் அம்மாவாகப் போகிறாரோ அவர் தான் குழந்தையைப் பெற்றுத் தருவார் என்று எல்லாரும் நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால் அறிவியல் வளர்ச்சியில் இப்படி ஒரு பெண்ணுக்காக மற்றொரு பெண் குழந்தை பெற்றுத் தருகிறார் என்று வரும் போது, நம் சமூக மக்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் கோபத்தையும், சந்தோஷத்தையும்  ஒரே தராசுத் தட்டில் நிற்கவைத்து பரவசமாகப் பார்க்கிறார்கள். ஆனால் அறிவியல் வளர்ச்சியோ பெண்ணுக்குச் சாதகமாகத் தன்னை மாற்றிக்கொண்டு, சிறு புன்னகையுடன் நம்மை அழகாய் வேடிக்கை பார்க்கிறது.

எனக்குத் தெரிந்து முதல்முறை ஒரு திரைப்படத்தில் வாடகைத் தாய் பற்றித்தெரிந்து கொள்கிறேன் என்றால், “அவன் அவள் அது” என்ற திரைப்படம் தான் ஞாபகத்தில் வருகிறது.  முக்தா ஸ்ரீநிவாசன் இயக்கிய சிவகுமார், லட்சுமி, ஸ்ரீப்ரியா நடித்த அந்தப் படத்தில் சிவக்குமாரின் விந்தணுவை எடுத்து, ஸ்ரீப்ரியாவின் கருப்பையில் வைத்து குழந்தையை உருவாக்க, மருத்துவ உதவியுடன் லட்சுமி முழுமுயற்சியாகச் செயல்படுவார்.

இன்று இதையே ட்ரடிஷனல் வாடகைத்தாய் முறை என்றும் மற்றும் கமெர்சியல் வாடகைத்தாய் முறை என்றும் இரண்டு விதமாக மருத்துவத் துறையில் சொல்கிறார்கள்.

ட்ரடிஷனல் வாடகைத் தாய் முறை என்பது ஒரு ஆணும், வாடகைத்தாய் பெண்ணும் சேர்ந்து குழந்தையை உருவாக்குவதாகும். ஏன் இதை ட்ரடிஷனல் வாடகைத்தாய் முறை என்று சொல்கிறார்கள் எனப் பார்க்கும்போது இதில் வாடகைத்தாய் மற்றும் உயிரியல் தந்தை என்று இருவர் மட்டுமே இருப்பார்கள். இதற்கு உதாரணமாக டைரக்டர் கரண் ஜோகரை எடுத்துக் கொள்ளலாம்.  அவருக்குத் திருமணம் செய்வதில் உடன்பாடு இல்லை என்பதால், தன்னுடைய விந்தணுவை எடுத்து, வாடகைத்தாய் மூலம் தனக்கான குழந்தையை உருவாக்கிக் கொண்டார். இதைத்தான் ட்ரடிஷனல் வாடகைத்தாய் முறை என்று சொல்கிறார்கள். 

கமெர்சியல் வாடகைத் தாய் என்பது, கணவனின் விந்தணுவும், மனைவியின் கருமுட்டையும் எடுத்து, வாடகைத்தாய்க்கு வந்த பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து குழந்தையை உருவாக்குவார்கள். ஏன் இதை கமெர்சியல் வாடகைத் தாய் முறை என்கிறார்கள் என்றால், உயிரியல் தாய், உயிரியல் தந்தை மற்றும் வாடகைத் தாய் என்று மூவர் இருப்பார்கள்.

இந்த முறையைத்தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் செய்து இருக்கிறார்கள்.

பெற்றோர்கள் மூவர் என்று கணக்கு வரும் போது, இந்த மூவரையும் கண்காணிக்க எத்தனை நபர்கள் மருத்துவக்குழுவில் இருக்க வேண்டும் என்றும் நம் இந்தியச் சட்டம் சொல்கிறது.

வாடகைத் தாய் அமைக்கும் மருத்துவக் குழு உறுப்பினர்கள் :

கல்கத்தாவில் உள்ள இனப்பெருக்க மருத்துவ நிறுவனத்தில் மருத்துவர் பெய்த்யா என்.சக்கரவர்த்தி தலைவராக இருக்கும் போது 19  உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு தேசிய வழிகாட்டல் அறிவுரையைத் தயாரித்தது. இதில் தனியார் ஏ.ஆர்.டி மையங்களில் உரிமையாளர்கள் அடங்கும் பெரிய குழுவும் இருந்தது. தனியார் மருத்துவமனைகளுடைய ஏ.ஆர்.டி மையங்களின் செயல்பாட்டு முறை தொடர்பாக வழிகாட்டலை உருவாக்கியது.

முதலாவது வழிகாட்டல் வரைவில் ஏ.ஆர்.டி யில் பயிற்சி பெற்ற ஒரு மகளிர் நோய் நிபுணர் (Gynaecologist), ஆடவர் நோயியலாளர் (Andrologist), மருத்துவக் கருவியலாளர் (Clinical Embryologist), ஆலோசகர் (Counselor), திட்ட ஒருங்கிணைப்பாளர் (Program Coordinator), அனுபவம் பெற்ற மகளிர் நோய் நிபுணர் (Experienced Gynaecologist) ஆகியோர் இடம்பெற்ற குழுவுக்கு மட்டுமே செயற்கைக் கருமுறை உள்ளிட்ட சிகிச்சைகளை நடத்த சட்டம் உள்ளது என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

யூமா வாசுகி அவர்கள் மொழிபெயர்த்த வாடகைத் தொட்டில் என்ற புத்தகத்தில் தான், இந்த மருத்துவக் குழுவின் உறுப்பினர்களை நமக்கு அறிமுகப்படுத்தி இருந்தார்கள்.

இந்த மாற்றம் தேவையா? தேவையற்றதா?

பெண்ணுக்குக் கர்ப்பப்பை இருப்பதால் குழந்தை பெற்றுத்தருவது அவளது கடமை என்று இருக்கும் போது, அதை வேண்டாம் என்று சொல்ல இங்கு பல காரணங்கள் பெண்களுக்கு உருவாகி வருகிறது. பல சமூக அழுத்தங்கள், தனிப்பட்ட சொந்த விருப்பங்கள் என்று பெண்கள் தங்களுக்குக் குழந்தை தேவையா, தேவையற்றதா என்று முடிவெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். சில நேரங்களில் உடல்நல பாதிப்பால் ரேடியோ தெரபி செய்துகொண்ட பெண்ணுக்குக் கர்ப்பப்பை சிதையும் போது, அவளுக்குக் குழந்தை வேண்டுமென்றால், யாரோ ஒரு பெண் மூலம் குழந்தையை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தான் அறிவியல் நமக்குச் சொல்கிறது.

எல்லாரும் ஏன் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளக்கூடாது என்று கேட்கிறார்கள். உண்மையில் நம் இந்திய சட்ட திட்டத்தில் அத்தனை எளிதாக எந்த ஒரு குழந்தையையும் தத்து எடுக்க முடியாது. அந்த அளவுக்கு நம்முடைய அரசின் சட்டங்கள், பல விதிமுறைகளைக் குழந்தையின் நலனுக்காக உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

1960-களுக்கு பின் பெண்களுக்குக் கிடைத்த கல்வியும், வேலை வாய்ப்பும் மிகப்பெரிய சுதந்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களுக்கு மரபணு ரீதியாக காலங்காலமாகக் கொடுத்த அழுத்தங்கள் எல்லாவற்றையும் பெண்கள் உடைத்துக்கொண்டே வருகிறார்கள். அதில் மிக முக்கியமாகத் திருமணம் சார்ந்த அழுத்தமும், கர்ப்பகாலம் சார்ந்த அழுத்தமும், சமையல் சார்ந்த அழுத்தமும் கட்டாயமாகப் பெண்களின் வாழ்வில் மூச்சு முட்டி திணறடித்துக் கொண்டிருந்தது.

பெண்களுக்கு மனதளவில் இந்த மொத்த அழுத்தத்தையும் உடைத்துக் கொண்டு வெளியே வருவதற்கும், தங்களுடைய மைண்ட்  பிளாக்கில் இருக்கும் பெண்ணுக்குரிய தத்துவ சித்தாந்தங்களை விலக்கி, பகுத்தறியும் சிந்தனையை ஏற்படுத்தவும் நம் கலாச்சார மாற்றமும் அறிவியல் வளர்ச்சியும் மிகவும் சாதகமாகப் பெண்களுக்கு மாற்றியுள்ளது. இந்த கலாச்சார மாற்றமும், பொருளாதார முன்னேற்றமும் பெண்களுக்குத் தேவையான விஷயங்களைத் தைரியமாகச் செய்ய வைக்கிறது.

எவையெல்லாம் பெண்கள் செய்யவேண்டிய கட்டாயமான வேலையாகச் சமூகம் வகுத்திருந்ததோ, அவை எல்லாவற்றையும் குறைத்து விட்டு, தாங்கள் கற்ற கல்வி மூலமும், தங்கள் திறமைகளைக் கண்டறிந்து, அதனை அடிப்படையாக வைத்துப் பலதுறைகளில் கவனம் செலுத்த முயல்கிறார்கள்.

அதற்கான அடிப்படை முயற்சியாக வீட்டிலுள்ள வேலைகளைக் குறைத்துக் கொண்டார்கள். வீட்டில் வேலை செய்வதற்கு ஆட்களை நியமித்தார்கள், சமையலுக்கு ஆட்களை நியமித்தார்கள் அல்லது ஆன்லைனில் சாப்பாடு ஆர்டர் செய்தார்கள். இப்படி வீடு சார்ந்த அவர்களின் நேரத்தைக் கொள்ளையடிக்கும் சில விஷயங்களைக் கொஞ்சம் மறந்து, அவர்களின் சிந்தனையைத் துறைசார்ந்த நிபுணர்களாக மாற்றுவதற்குக் கடுமையாக உழைக்கிறார்கள்.

அந்த மாற்றத்தின் அடுத்த கட்டம் தான் வாடகைத் தாயாக மாறியிருக்கிறது. இந்த மாற்றத்தைப் பெண்களும் வரவேற்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு உடல் பிரச்சினைகளைத் தாண்டி, துறைரீதியாக வளர்வதற்கு அவர்களது கர்ப்பகாலம் தடங்கலாக இருக்குமென்று நினைக்கும் பெண்கள் வந்து விட்டார்கள். அவர்களால் ஏன் இப்படிப் பேச முடிகிறது என்று ஒரு வில்லன் போல் சமூகம் பார்க்கலாம். டிஜிட்டல் உலகில் இருந்துகொண்டு இப்படி எல்லாம் பேசவில்லை என்றால்தான் நாம் ஆச்சரியமாகப் பார்க்கவேண்டும்.

டிஜிட்டல் உலகம் நம் கைக்குள்ளிருந்து அதிவேக வளர்ச்சியின் மாற்றத்தை  நம் அனைவராலும் பார்க்க முடியும் என்ற உண்மையை முதலில் நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் படி உலக நாடுகளில் டென்மார்க், பின்லாந்து போன்ற நாடுகளில் குழந்தை பிறந்த பின் கணவரும் கண்டிப்பாகச் சில மாதங்கள் அவர்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் விடுமுறை எடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள் அலுவலகத்தில் இருக்கிறது.. இதனால் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிறந்ததிலிருந்து கணவரும், மனைவியும் சேர்ந்து கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட அந்த நாட்டின் அரசாங்கம், அந்த விடுமுறையை அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கிறது.ஆனால், நம் நாட்டில் அந்த வசதி இல்லை என்பதால், ஆணின் துறைசார்ந்த முன்னேற்றம் இன்னும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஒரு பெண் கர்ப்ப காலத்தில் விடுமுறை எடுத்தால், அது அவளுக்குத் துறைரீதியான இடைவெளியை உருவாக்கி விடுகிறது. பெண்ணின் உடல் நிலைமையைத் தாண்டி, துறை வளர்ச்சிக்காகவும் பெண்கள் வாடகைத்தாய் வேண்டும் என்ற கோரிக்கைக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். இது இன்னும் அதிகமாகுமே தவிர குறைய வாய்ப்பில்லை.

அதைத்தான் நயன்தாரா தன் வாழ்வில் உள்ள நிகழ்வுகளை நம் சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறார். எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியும் முதலில் செயல்படும்போது, அளவுக்கு அதிகமான பொருளாதாரச் செலவு ஏற்படும் சூழல்தான் உருவாகும். அதனால் பொருளாதார வர்க்கத்தில் உள்ளவர்கள் மட்டுமே எந்த ஒரு அறிவியல் மாற்றத்தையும் முதலில் அனுபவிப்பார்கள். அதுவே வருடங்கள் கடக்கும் போது, அடுத்த பத்து வருடங்களில் இந்தக் கமர்சியல் வாடகைத்தாய் முறை இன்னும் பரவலாக அடுத்தகட்டத்தில் உள்ள பெண்களுக்கும் குறைந்த செலவில் செயல்படும் மருத்துவச் சிகிச்சையாக வளர்ந்திருக்கும். இன்னும் பல நயன்தாராக்கள் நம் சமூகத்தில் அறிவியல் வளர்ச்சியால் வலம் வருவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசவ வலிக்கு இத்தனை லட்சங்கள் :

இந்த வளர்ச்சி எல்லாம் வளர்ந்த மாநிலங்களில் இருக்கும் பெண்களுக்கு சரி என்று யோசிக்கும் போது, இதனால் பாதிக்கப்படுவது ஏழை எளிய பெண்கள் தான் என்று அடித்துச் சொல்லமுடியும். ஒரு சில வருடங்களுக்கு முன் குஜராத்தில் ஒரு மருத்துவமனையில் ஒரு போர்டில் ஒரு பெண்ணின் புகைப்படம் வைத்து வாடகைத் தாயின் இந்த வருடத்தின் வருமானம் “ஐந்து முதல் பத்து லட்சம்” என்று வைத்திருந்தார்கள். அப்படி கருப்பையை வழங்கினால் இத்தனை லட்சம் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்தை இன்னும் ஆழமாக விதைத்துச் செல்கிறார்கள்.

இதைப் பார்க்கும்போது, பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்குத் திருமணமாகி ஏற்கனவே ஒரு குழந்தை பெற்று இருப்பதால், மற்றொரு பிரசவம் தானே என்ற எண்ணம் மட்டும் தான் மேலோங்கி வந்து நிற்கும்.  பிரசவத்தால் வருமானம் வரும் என்ற முறை இருக்கும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் எளிதாக இதனை வேலையாக மாற்றிச் செய்ய முன் வருவார்கள்.

நம் பெண்களுக்குப் புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது, பாலியல் சார்ந்த நோய்களும் குறைவாக இருக்கும், போதைப் பழக்கமும் மிகவும் குறைவு என்பதால், வாடகைத் தாயின் உடல் நலனில் பெரிதாக கர்ப்பகாலம் சார்ந்த பிரச்சனைகள் குறைவாக இருக்கும் என்பதே மருத்துவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நம் பெண்களிடம் இருக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் எந்த அளவுக்கு விற்பனைத் தளத்திற்கு மாறி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும்போது, சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

ஒரு பக்கம் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும் என்றாலும், இனி வரும் காலகட்டங்களில் “பிராண்டட் குழந்தைகள்” வேண்டும் என்ற அளவுக்குச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். உதாரணமாக விளையாட்டில் சிறந்த குழந்தை வேண்டும் என்றும், பாட்டு பாடுவதில் சிறந்த குழந்தை வேண்டும் என்றும், நடனமாடுவதில் சிறந்த குழந்தை வேண்டும் என்றும், விஞ்ஞானி மாதிரி குழந்தை வேண்டும் என்றும் கேட்கும் காலம் நம் பக்கத்தில் தான் இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் அழகும், உடல் வடிவமைப்பும் உள்ள பெண்களுக்கு இன்னும் மார்க்கெட் அதிகரிக்கும் என்று வாடகைத்தாயின் ஏஜென்சி அமைப்பாளர்கள் சொல்கிறார்கள்.

பிரசவிக்கும் கருவியல்ல பெண் :

“மாஞ்சி” என்ற குழந்தைக்கு வாடகைத்தாய் மூலமாகப் பிறந்த “முதல் அனாதைக் குழந்தை” என்று நம் இந்தியச் சமூகம் பட்டம் கொடுத்தார்கள். ஜப்பானில் உள்ள ஒரு தம்பதியர் வாடகைத் தாய் வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து ஒரு பெண்ணைத் தேர்ந்து எடுத்தார்கள். வாடகைத் தாய் கர்ப்பமாக இருக்கும்போது, தம்பதியரோ தங்களுக்கிடையே சண்டைபோட்டு விவாகரத்து பெற்று விட்டார்கள். இங்கு இந்தியாவிலோ வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்து விட்டது. வாடகைத்தாயோ குழந்தை பெற்றுக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவரது வேலையை முறையாகச் செய்துவிட்டார் என்று தான் நாம் சொல்ல வேண்டும். ஆனால் குழந்தையோ அம்மா இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டே சிறு உதட்டால் பால் சுரக்கும் மார்பகத்தைத் தேடிக்கொண்டிருந்தது.

மாஞ்சி மாதிரி குழந்தைகள் கைவிடப்படுவதைப் பார்க்கும்போது, இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து வாடகைத்தாயைக் கேட்கும் தம்பதிகளுக்கு என்று கடுமையான இந்தியச் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

வாடகைத்தாய் சார்ந்த இந்தியச் சட்டம் :

வாடகைத்தாயாக வருபவர்களை முறையாகப் பாதுகாக்க, இந்தியச் சட்டத்தில் என்ன மாதிரியான பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கப்படும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இது வணிக ரீதியான ஒரு மாற்றமாக மாறி, பெண்களைக் குழந்தை பெற்றெடுக்கும் மெஷினாக நாம் சிறிதளவுகூட ஒரு சிந்தனையை உருவாக்கி விடக்கூடாது என்பதில் நம் சமூகம் தெளிவாக இருக்கவேண்டும்.

இது குறித்து தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் வாடகைத் தாயின் சட்டம் பற்றி விளக்கி உள்ளார். இந்தியாவில் வாடகைத் தாய் (ஒழுங்கு முறை சட்டம்) 2021 ஆம் ஆண்டு, ஜனவரி 25 முதல் அமலுக்கு வந்துள்ளது.

தம்பதியாக இருப்பவர்கள் குறைந்தது ஐந்து வருடங்கள் திருமண வாழ்வில் சேர்ந்து இருப்பவர்களாக இருக்கவேண்டும். இருவரில் யாரோ ஒருவருக்கு உடலில் பிரச்சனை இருந்தால் மட்டுமே வாடகைத்தாய் வைத்துக்கொள்ள முடியும். வாடகைத்தாயாக வருபவர்கள் அந்த தம்பதியினருக்கு உறவினராக இருக்க வேண்டும். குழந்தை வேண்டுபவர்களுக்கும், வாடகைத் தாய்க்கும் தகுதிச் சான்றிதழை மாவட்ட சுகாதார அதிகாரிகள் வழங்க வேண்டும். அத்தம்பதியினர்  வாடகைத்தாய் பெண்ணுக்குப் பிரசவ கால நேரங்களில் உடலில் ஏற்படும் சிக்கலுக்கு மருத்துவச் சிகிச்சையாக 16 மாதங்கள் மருத்துவ இன்சூரன்ஸ் செய்துதர வேண்டும்.

நயன்தாரா போல் சிலருக்கு ட்வின்ஸ் வேண்டும் என்று கேட்கும்போது, வாடகைத்தாய் ஒப்புதலுடன் ஒரு கருமுட்டை முதல் மூன்று கருமுட்டைகள் வரை வைத்து, ட்வின்ஸ் மற்றும் மூன்று குழந்தைகள் வரை அவர் பெற்றுத் தரலாம் என்று இந்தியச் சட்டம் சொல்கிறது.

இச்சட்டம் தம்பதியினருக்கு மட்டும் சாதகமாக இருக்கிறது. விவாகரத்து வாங்கியவர்களுக்கு, தன் பாலின  உறவாளர்கள், கணவன் அல்லது மனைவி இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், திருமணமாகாமல் சேர்ந்து வசிப்பவர்கள் என்று ஒரு பட்டியலிட்டு, இவர்களுக்கெல்லாம் எந்த ஒரு பெண்ணும் வாடகைத்தாயாக இருக்கக்கூடாது என்று இந்தியச் சட்டம் சொல்கிறது. இந்தச்  சட்ட  திட்டத்தை மீறுபவர்களுக்குக் காவல்துறை உதவியுடன், சட்ட ரீதியான தண்டனையை வாங்கிக்கொடுக்க முடியும்.  

ஆண், பெண் இருவரும் இணைந்து கதகதப்பின் வழியாக உணர்ந்து, ஆத்ம திருப்தியுடன் செய்ய வேண்டிய விஷயம் தான் கருவுறுதல். ஆனால் மரபுகளின் மாற்றத்தில் இந்த ஆரோக்கியம் பற்றிச் சிந்திக்க மறுக்கிறார்கள். மறுபடியும் இந்த தாம்பத்தியம் நியதிகளின் உணர்ச்சியில் இருக்க வேண்டுமானால் பெண்களுக்கு அரசும், சமூகமும் கருவுறுதலை பாரமாக நினைக்கக் கூடிய எண்ணத்தை முற்றிலும் மாற்றவேண்டும்.

தற்போது “டெக் மஹேந்திரா” மாதிரியான கம்பெனிகளில் அங்கு வேலை செய்யும் பெண்களின் குழந்தைகளுக்கென்று “குழந்தைகள் மையம்” இருக்கிறது. இதனால் குழந்தைகளை மட்டுமே கவனிக்க வேண்டுமென்ற கட்டாயம் அவர்களுக்கு மாறி விடும். இது போலவே பெண்ணுக்கு குழந்தை பிறந்த பின் ஆணுக்கும் சில மாதங்கள் கூடஇருந்து பார்த்துக் கொள்ளும் வகையில் அலுவலகங்களில் விடுமுறை அளிக்கும்போது, தம்பதியர்கள் இருவருக்கும் ஒரு நல்ல மாற்றமாக எடுத்துக்கொண்டு குழந்தையைப் பார்த்துக் கொள்வார்கள்.

உலக நாடுகளின் அத்தனை முன்னேற்றத்தையும் பார்க்கும் நம் தலைமுறைக்கு அரசு கண்டிப்பாக மாற்றங்களைச் செய்து தரவேண்டும். இதுவே வாடகைத் தாயின் அதிகரிப்பினை குறைக்கும் முயற்சியாக இருக்கும். இதற்கு உதாரணமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களின் இந்த விவகாரம் இன்னும் நம் சட்டத்தின் கையிலிருப்பதை நாம் அறிந்து கொள்கிறோம். நயன்தாராவின் சாட்சிகளை சட்டத்தின் முன் கொடுப்பதைப் பார்க்கும்போது, எந்த ஒரு விளிம்பு நிலையிலிருக்கும் பெண்ணையும் நாம் தவறாகப் பயன்படுத்த முடியாது என்ற நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.