தி.ஜானகிராமன் மகளுடன் ஒரு நேர்காணல்


 கனலி கலை இலக்கிய இணையதளத்தின் “தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழு”க்காக  தி.ஜானகிராமனின் மகளான உமா சங்கரி அவர்களிடம் எடுக்கப்பட்ட  சிறப்பு நேர்காணல் இது

  • அப்பா என்று சொன்னவுடன் உங்கள் மனதில் வந்து போகும் இனிமையான நினைவுகள் எது எது?

அப்பா, அம்மா என்றால் பொதுவாக எல்லா குழந்தைகளுக்கும் அன்பும் பாசமுமாகத்தானே இருக்கும்! எனக்கும் அப்படியே.

சின்ன வயதில் உடம்பு சுகமில்லாதபோது யாராவது பக்கத்தில் உட்கார மாட்டார்களா என்று தோன்றும். அம்மாவுக்கு எப்போதும் வேலை நிறைய இருக்கும். அப்பா ஆபிசிலிருந்து வருவதற்காகக் காத்திருப்பேன். “ உமா குட்ஸ், உமா குட்சிஸ்” என்று அப்பா வரும்போதே அழைத்துக் கொண்டு வருவார். உடம்பு உடனே சரியாகிவிட்டாற்போல் இருக்கும். ஒரு முறை அம்மா ஊரில் இல்லை, அப்போது அப்பாதான் வேளா வேளைக்குக் கஞ்சியும் ரசம் சாதமும், ஹார்லிக்சும் மாறி மாறி பண்ணிக் கொடுத்தார்.

  • உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பம் பற்றியும் கூற முடியுமா ? முக்கியமாக உங்கள் அம்மா மற்றும் உடன் பிறந்தவர்களைக் குறித்தும் கூறுங்கள்.

அம்மா எல்லோருடன் அன்பாகப் பழகுவாள். அப்பாமீது அன்பும் மதிப்பும் அதிகம்; அப்பாவுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோரையும் நன்றாகவே உபசரிப்பாள். அண்ணாக்களுக்கும் அப்பாவிடம் நிறைய அன்பும் மரியாதையும் உண்டு. வீட்டில் கட்டுப்பாடு என்று ஒன்றும் பெரிதாக இருந்தது இல்லை. அவர்களாகவே அப்பாவுக்கு இது அது பிடிக்காது என்று அவற்றைச் செய்ய மாட்டார்கள்.

  • அப்பா ஒரு எழுத்தாளர் என்று எந்த வயதில் தெரிந்து கொண்டீர்கள்? அப்படித் தெரிந்தவுடன் அவரின் படைப்புகள் வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்ததா? அவரின் எந்த படைப்பை முதல் முறையாக வாசித்தீர்கள்?

எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து அப்பா எழுத்தாளர் என்பது புரிந்திருந்தது. எந்த படைப்பை வாசித்தேன் என்று அவ்வளவாக ஞாபகம் இல்லை, ஆனால் பத்து வயது இருக்கும்போது மலர் மஞ்சம் வாசித்ததாக ஞாபகம் வருகிறது. அப்போது அதைப் புரிந்து கொள்ளும் வயது இல்லை, அதில் வரும் பாலி என்ற சிறுமியின் விளையாட்டைப் படித்தபோது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

  • அப்பா தனது வாசிப்பு பற்றியும், இலக்கியப் படைப்புகளைப் பற்றியும் குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவாரா?

தன்னுடைய படைப்புகளைப் பற்றி எங்களுடன் மட்டுமில்லை, யாருடனும் பேச மாட்டார். உலக இலக்கியப் படைப்புகளை எல்லாம் எங்களுக்கு அவரே அறிமுகப் படுத்தினார். நான் பி. ஏ முடிக்குமுன்பே அமெரிக்க- ஐரோப்பிய- ரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளைப் பலவற்றைப் படித்துவிட்டிருந்தேன். இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளையும் மொழிபெயர்ப்பு இருந்தால் அவற்றையும் படித்துக் கொண்டிருந்தோம். பிராப்ளம் என்னவென்றால் இந்தியப்  படைப்பாளர்களுடைய  படைப்புகளுக்கு மொழிபெயர்ப்புகள் அதிகம் இருந்ததில்லை.

தி.ஜானகிராமன் | அவரின் மனைவி | மகள் உமா சங்கரி | மகன் ராதா ரமணன்
  • உங்கள் அம்மாவுக்கு தனது கணவர் எழுத்தாளராக இருந்தது பற்றி எதாவது கருத்துக்கள் அல்லது முரண்பாடுகள் இருந்ததா?

இல்லவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் பெருமையாக இருந்தது, அப்பாவின் எழுத்துகளை விரும்பி படிக்கும் வாசகியாக அம்மா இருந்தாள்.

  • அப்பா எப்படி தனது படைப்புகள் எழுதுவார்.? அவர் எழுதுவதை அருகிலிருந்து பார்த்து இருப்பீர்கள் என்பதால் கேட்கிறோம்.

மதராசில் அப்பாவுக்கு மாடியில் ஒரு அறை இருந்தது. அங்கே ஒரு பிரம்பு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து ஒரு எழுதும் பலகையை (pad) வைத்துக் கொண்டு எழுதுவார். எப்போதுமே இரவுகளில்தான் எழுதுவார். இரவு இரண்டு மணி வரை தூங்க மாட்டார். எழுதுவதோ படிப்பதோ-எல்லாம் இரவு வேளையில் தான். தில்லியில் சில சமயம் தன் ஆபிஸ் அறையில் உட்கார்ந்து எழுதுவார்.

  • அவர் எழுதிய காலத்தில் அவர் மீது வெளிவந்த விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொண்டார். ?

விமர்சனங்களைப் பொருட்படுத்தினால் எழுதவே முடியாது என்பது அவருடைய கருத்து. ஆதலால் விமர்சனங்களைப் படிப்பாரே தவிர அதை சீரியசாக எடுத்துக் கொள்ளவே மாட்டார்.

  • அந்த விமர்சனங்களைப் பற்றி குடும்ப உறுப்பினர்களிடம் பேசி இருக்கிறாரா? 

அறவே இல்லை.

  • உங்களுக்குத் தெரிந்த அப்பாவின் இலக்கிய நண்பர்களை பற்றிச் சொல்ல முடியுமா?

அப்பாவுக்கு பல பேர் இலக்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பேர் பேராக சொன்னால் பட்டியல் மிகப் பெரியதாகிவிடும்.

  • அப்பாவைத் தேடி வீட்டுக்கு அவரின் வாசகர்கள் வருவார்களா? அப்படி வந்தால் அவர்களை அப்பா எப்படி எதிர் கொள்வார்? 

பல பேர் வாசகர்கள் வருவார்கள். அவர்களையெல்லாம் ஆதரவாக அன்புடன் விசாரிப்பார். புகழ்ந்தாலும் சரி, கடுமையாக விமர்சித்தாலும் சரி, அதையெல்லாம் புன்னகையுடன் எதிர்கொள்வார். உண்மையில் அவர் தன்னுடைய படைப்புகளைப் பற்றி பேசுவதையே தவிர்ப்பார். வந்தவர்களின் வாழ்க்கை, அவர்களுடைய பிரச்சினைகள், பொது விஷயங்கள், அரசியல், இசை, போன்றவற்றைப் பற்றித்தான் பேச்சு நடக்கும்.

  • அப்பாவின் டெல்லி வாழ்க்கை பற்றி உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்ல முடியுமா? 

தில்லியில் இருந்தபோது அவர் நாடு முழுவதும் ஒவ்வொரு மாகாணத்திற்கும் கல்வி ஒலிபரப்பைப் பலப்படுத்துவதற்காக உத்தியோகப் பூர்வமாகச் சென்றிருக்கிறார். பல வெளி நாடுகளுக்கும் போக வாய்ப்புகள் வந்தன. ஹிந்துஸ்தானி இசைக் கச்சேரிகள், பற்பல கண்காட்சிகள், திரைப்பட விழாக்கள், நாடக விழாக்கள் -இவையெல்லாம் சென்று பார்ப்பதற்கு அவருக்கும் எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தன. நிறைய நண்பர்களும்  வருவார்கள், அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்.

  • அப்பாவிற்குச் சங்கீதம் ஞானம் நிறையவே இருந்திருக்கிறது. வீட்டில் இதைப்பற்றி உங்கள் அனைவருடனும் எவ்விதமாக கலந்துரையாடினார்?

வீட்டில் எப்போதும் ரேடியோவில் சங்கீதம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.  சங்கீதம் பற்றி நிறைய பேசுவார், பாடவும் பாடுவார்.

  • பொதுவாக இலக்கியத்தில் அதிக ஈர்ப்பு உள்ள எழுத்தாளர்களுக்கு குடும்ப உறவுகளில் detachment இருக்கும் என்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இதன் அடிப்படையில் குடும்பத்தினருடன் தி.ஜானகிராமன் எவ்விதத்திலிருந்தார் எனக் கூற முடியுமா?

எல்லாக் காரியத்தையும் தலை பொறுப்பாகவும், சிரத்தையுடன் செய்யும் குணம் அவருக்கு. அதனால் குடும்பம், நண்பர்கள், வேலை, எழுத்து- எதுவானாலும் சரி- தலை பொறுப்பாகச் செய்து வருவார். எதையும் அலட்சியம் செய்ததில்லை. அந்த காலத்தில் வீட்டிற்கு ஐந்தாறு குழந்தைகள் இருந்தன. உறவினர்களின் குழந்தைகளும் வந்து தங்கிக் கொண்டிருப்பார்கள். தனியாக தன் மனைவியையோ குழந்தைகளையோ கவனிப்பது வழக்கம் இல்லை. இந்த காலத்தில் குடும்பங்கள் தனிக் குடும்பங்களாக இருக்கின்றன. வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை விசேஷமாக வளர்க்கிறார்கள். ஹோம்வொர்க் செய்வது, பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு விடுவது, குழந்தைகளின் வருங்காலத்தைப் பற்றி கவலைப் படுவது- இதெல்லாம் அந்த காலத்தில் பெரும்பாலும் கிடையாது. ஒரு முப்பது நாற்பது வருஷத்தில் குடும்ப அமைப்பு எத்தனை மாறி விட்டது!

  • அப்பாவின் கடைசி நாட்கள் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா? முக்கியமாக எழுதுகிற சூழலுக்கு ஏற்ற சரியான மனநிலை அப்போது அவருக்கு இருந்ததா?

ரிடையரான பிறகு அவர் மதராசில் வந்து இருந்தபோது, நான் ஹைதராபாத்தில் இருந்தேன். எழுதுகிற சூழ்நிலை பற்றி பாதகம் இல்லையென்றே நினைக்கிறேன். ஆர்.கே நாராயணனைப் பற்றி ஒரு டிவி சீரியல் செய்யத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லாமல் போய்விட்டது. அவ்வளவுதான்.

  • இலக்கியத்தைப் பொருத்தவரை ‘கடைசி வரை இதைச் செய்ய முடியவில்லை’ என்கிற வருத்தம் எதாவது அவருக்கு இருந்ததா?

இருந்ததோ என்னவோ எனக்குத் தெரியாது.

  • அப்பா இவ்வளவு எழுதிக் குவித்துள்ளார். ஆனால், அதில் இன்றும் உங்களுக்குப் பிடித்தது என எதைச் சொல்வீர்கள்? முக்கியமாகச் சிறுகதைகள் அல்லது நாவல்களில் உங்கள் தேர்வு எதுவாக இருக்கும் ?

எனக்கு எல்லாக் கதைகளும் நாவல்களும் பிடிக்கும். சில அவ்வளவு நன்றாக அமைந்திருக்காமல் போகலாம், சில மிக ஸ்ரேஷ்டமாக இருக்கலாம். அப்பாவுடைய எழுத்துகள் மட்டுமல்ல, யார் நன்றாக எழுதினாலும் எனக்குப் பிடிக்கும். ஆனால் சந்தர்ப்ப வசமாக எனக்கு முப்பது வருடங்களாகத் தற்காலத் தமிழ் இலக்கியத்துடன் தொடர்பு விட்டுப் போய்விட்டது.

  • தி.ஜா-வின் நூற்றாண்டு தொடங்கிவிட்டது, இந்த நூற்றாண்டில் அப்பா எப்படி நினைவு கூறப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

திஜாவின் எழுத்துகளை விரும்பி வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருத்தி. வாசகர்கள் எப்படி நினைவு கூற நினைக்கிறார்களோ அதுதான் சரி. நல்ல உன்னதமான இலக்கியம் என்பது ஒரு கற்பனை உலகம்தான்; ஒரு விதமான மாயலோகம்தான்; ஆனால் அது நம்மை ஊக்குவித்துப் பல பெரிய செயல்களைச் செய்யத் தூண்டுகிறது; தற்கால சமூகக் கட்டுப்பாடுகளைப் பக்கத்தில் வைத்து விட்டு சுதந்திரமாக எண்ண, சுதந்திரமான கருத்துகளை முன்வைக்க, செயல்பட, கலாச்சார- சமூக பிரச்சினைகளை முன் வைக்க, தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் தன்னை மாற்றிக் கொள்ள, தன் வருங்காலத்தை அமைத்துக் கொள்ள – இது போன்ற பல வித்தைகளைச் செய்கிறது. உன்னதமான இலக்கியத்தை யார் படைத்தால் என்ன? யார் படைத்தாலும் அவர்களை சிரம் வணங்கிக் கும்பிடத் தோன்றுகிறது.


நேர்கண்டவர் : க.விக்னேஷ்வரன்

2 COMMENTS

  1. ஒரு படைப்பாளர்களின் உள் வாயிலை திறக்கப்பட்டுள்ளது

  2. ஒரு உன்னதமான இலக்கியம் நம்மை ஊக்கப்படுத்தி மென்மேலும் மெருகூட்டும்….தி.ஜா மெருகூட்டுகிறார்…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.