தஸ்தாவேஸ்கி ஒரு படைப்பாளியாக படுமோசமான கதாமாந்தர்களையும் நேசித்தவர். யாருக்காகவும் எந்தப் புனிதருக்காகவும் ஒரு படைப்பாளியாக எந்த சலுகையும் காட்டாதவர். காலத்தின் கருத்தோட்டங்களையும் சமூக மாந்தர்களின் அடையாளங்களையும் தனது கதையுலகத்திற்குள் கலந்தவர். மையக் கதையில் புற உலகின் எண்ணற்றக் கதைகள் வருகின்றன. கடந்த கால நம்பிக்கைகளை நிகழ்காலத்தில் வைத்து உடைத்து தூள்தூளாக்குகிறார். நம்பிக்கையின் தேவையை வற்புறுத்தவும் செய்கிறார். யதார்த்தம் உண்மையை நாடுகிறது.
ஒரு சின்ன மனரகசியத்தைக் குறைக்க 30, 40 பக்கக் கதை வழி வந்து திறக்கிறோம். இதனை நுட்பம் என்கிறோம். தஸ்தாவேஸ்கி ஒவ்வொரு பத்தியிலும் மனக்கோலத்தை உருட்டிவிடுகிறார். சிக்கலான மானிடப்பிரச்சனையை வெளிப்படையாக வைத்து மூன்று கோணங்களில் அணுகுகிறார். மரபாகப் பார்க்கப்படும் ஒரு பார்வை. மரபான நம்பிக்கையைச் சாக்காகக் கொண்டு நடிக்கும் பொய்மையைப் பார்க்கும் பார்வை. பிரச்சனைக்குக் காரணமான வேர்களைப் பார்க்கும் பார்வை. (பேய் பிடித்த ஏழை விவசாயப் பெண்கள்).
தஸ்தாவேஸ்கி ஐரோப்பிய நாவல் கலைவடிவமான நுட்பத்திற்கு எப்போதும் மெனக்கிடுவதில்லை. எடுத்தவுடனே இதயத்தைத் திறந்துதான் உள்ளே செல்கிறார். ஆலாபனை செய்து கடைசியில் திறப்பதில்லை. நாவல் முழுக்க இதயங்களைத் திறந்துவைத்தபடியே செல்கிறார்.
தஸ்தாவேஸ்கி ஒரு பக்கத்தில் சொல்லும் விசயத்தைத்தான் 20 பக்கக் கதையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் இவ்விடத்தில் சொல்லவேண்டும். 20 பக்கத்தில் கலைஞன் சொல்லும்போது அது கலையாக நம் நினைவில் வாழ்கிறது. சட்டென ஒரு பக்கத்தில் சொல்லிவிட்ட விசயமோ உண்மைதான் என்று ஏற்றுக்கொள்கிறது மனம்.
குழந்தையை இழந்த பெண்மணி, ஒரே ஒரு முறை தன் குழந்தை தன் வீட்டு முற்றத்தில் விளையாட மாட்டானா என்று இறைவனிடம் மன்றாடுகிறார். அவரும் இணங்கி கடவுளின் சந்நிதியில் ஆறுதலுக்காக குழந்தையைக் காட்டுகிறார். ஆனந்தம் கொள்கிறாள் என்றாலும் அது அவளுக்கு நிறைவாக இல்லை. என் மகன் தரைக்கு வந்து விளையாடட்டும் என்ற ஆசையைச் சொல்கிறாள். கடவுள் தாயின் அன்பை குழந்தையிடம் சுட்டிக்காட்டுகிறார். இந்த மூன்று கோணங்களைத் தாண்டி தன் தந்தையை அநாதையாக தன் தாய் விட்டுவிட்டு வந்துவிட்டாளே என்று குழந்தை வருத்தம் கொள்கிறான். ஒரு விசயத்தைத் தொட்டால் அதற்குள்ளே நான்கைந்து கோணங்களைச் சட் சட் என்று திறந்து காட்டிவிடுகிறார். அது தஸ்தாவேஸ்கியின் எழுத்துக்கலை.
பெரும்பாலும் தமிழ் நாவல்களில் கடைசி அத்தியாயத்தில்தான் எல்லாப் பிரச்சனைகளுக்கான சிக்கல் திறக்கப்படும். சா.கந்தசாமி, அசோகமித்திரன் நாவல்கள் உடனே நினைவிற்கு வருகின்றன. தஸ்தாவேஸ்கி முதல் பக்கத்திலிருந்தே மானுட அகப்பிரச்சனைகளைப் பல்வேறு பாத்திரங்கள் வழி திறந்துகாட்டிக்கொண்டே இருக்கிறார்.
தஸ்தாவேஸ்கியின் படைப்பில் எந்த இடத்திலிருந்தும் ஒரு 100 பக்கத்தையோ 50 பக்கத்தையோ படித்தால் கூட, அதில் பல்வேறு மானிட உள்ளக் குமுறல்களை – அதன் காரண காரியங்களை அறியத் தருகிறார். தமிழில் ஒரு முழு நாவலைப் படித்து முடிக்கிறபோதும் இந்த பேரனுபவம் கிட்டுவதில்லை.
ஒரு உள மருத்துவரை விட, ஒரு சமூகவியலாளரை விட ஜோசிமா என்ற, மானிடத் துயரை அறிந்த கலைஞானியால்தான் மனிதனின் நோயைத் தீர்க்க முடிகிறது. மானிட நோயைத் தீர்ப்பவனே இலக்கியவாதி. நோய் என்பது நோயல்ல, அடிப்படைத் துயரங்கள்.
கரமசோவ் சகோதரர்கள் நாவல் ஒரு வகையில் மகாபாரதக் கதைக்கு நெருக்கமானது. நூற்றுவர்களையும் பாண்டவர்களையும் ஒரே குடும்பச் சூழலில் அணுகுவது போல்தான். நன்மை தீமை என்பதை மகாபாரதத்தில் இரு பிரிவுகளாக வைக்கிறபோது தஸ்தாவேஸ்கி இரண்டையும் ஒன்றில் கண்டார். இது புதுவிதமான கரமசோவின் மகாதஸ்யக் கதை.
தஸ்தாவேஸ்கி வாழ்ந்த காலத்தில் நாடகத்தின் செல்வாக்கு ஓங்கி இருந்ததற்கான அதிக வாய்ப்பிருந்தது தெரிகிறது. அந்தத் தாக்கம் – அதாவது உரையாடல் வழி உண்மை நாடும் பார்வை; மனவிகாரங்களை வெளிப்படுத்தும் கலையாக நாடகம் இருந்தது. அந்த அம்சம் நாவலில் தொழிற்பட்டிருக்கிறது. சேக்ஸ்பியரை தஸ்தாவேஸ்கி படித்திருப்பதற்கான சாத்தியம் இருந்திருக்கலாம். செறிவூட்டப்பட்ட வாசகங்கள் சேக்ஸ்பியரிடம் உண்டு. தஸ்தாவேஸ்கியிடம் பேச்சு ஒரு கொந்தளிப்பான மனநிலையில் இயங்குகிறது. உரையாடல் என்பது ஒரு சவாலான படைப்பியக்கம். ஒரு சந்திப்பில் ஐந்து பேர். ஐந்து பேரின் மனநிலையில் பேச வைக்கிற திறன் இல்லாததினாலே நம்மூர் கதாசிரியர்கள் மொழிதலில் ஒளிந்துகொள்கிறார்கள். தஸ்தயேவ்ஸ்கி கொந்தளிப்பான மனநிலையில் ஏற்படும் எண்ண ஓட்டங்களை வலுவான உரையாடலாக மாற்றிவிடுகிறார். ஒரு கட்டத்தில் எல்லோரின் இதயங்களையும் அப்பட்டமாகத் திறந்துவைத்துவிடுகிறார்.
மாபெரும் படைப்பாளிக்கு சுற்றியிருக்கும் புற உலக அசைவுகளின் மீதும் கவனம் தேவை. புல், பூண்டு, தூசி, காற்று, வெயில், மனிதர்கள், அன்றாட செயல்கள் என்ன கோலத்தில் இருக்கின்றன என்பதில் கவனம் தேவை. தஸ்தாவேஸ்கியின் கலை சட்டென ஒரு கோட்டோவியம் போல சொல்லிவிட்டு ஆழ்மனதிற்குள் பாய்ந்துவிடுகிறது. அல்யோஷா மடத்திலிருந்து நகரத்திற்கு வரும் வழியைக் கவனித்தால் மனித அசைவுகளின் துல்லியத்தை விவரணைப்படுத்தியிருப்பதைக் காணலாம்.
நாவல் என்பது கதையல்ல. வாழ்க்கை வரலாறும் அல்ல. வாழும் வாழ்க்கையைப் பற்றிய விசாரணை. இந்த வாழ்க்கையை எப்படிப் புரிந்துகொள்வது; நேற்றைய வாழ்க்கையை நாம் எப்படி புரிந்துகொள்வது; இன்றைய சிக்கல்கள் என்னென்ன என்று ஆராய்வது; நாளைய வாழ்க்கையை எப்படி நேர்மையாகவும் கருணையுடனும் மாற்றுவது என்ற சுழலில் வைத்துத்தான் தஸ்தாவேஸ்கி தனது இலக்கியப் பிரதியை விவரிக்கிறார் (ஸ்மெர்ட்டிகோ)
மற்றொரு நாட்டின் ஆதிக்கத்தால் மதமாற்றச் சூழல் நிர்பந்திக்கப்பட்டால் என்ன நேரும் என்று விவாதம் வருகிறது. ரஷ்யப் படைவீரன் ஆசிய எல்லைப்பகுதியில் சிறைபிடிக்கப்பட்டு இஸ்லாத்திற்கு மதம் மாற நிர்பந்திக்கப்படுகிறபோது அவன் மறுக்கிறான். உடனே சித்திரவதைக்கு உள்ளாகி தோலுரிக்கப்பட்டு கொல்லப்படுகிறான். யேசுவை வாழ்த்தியபடியே இறந்ததாக கிரிகோரி ஒரு கதையைச் சொல்கிறான். அதனைக் கேட்ட அவனுடைய வளர்ப்புமகன், ‘இது மடத்தனம். என்னை அப்படிப் பிடித்து நிர்பந்தித்தால் இறைவனைப் பழித்து, ஞானஸ்தானத்தைக் கைவிட்டு புத்திசாலித்தனமாகத் தப்பித்துவிடுவேன். நீங்கள் நியாயத் தீர்ப்பு நாளில் எனக்கு தண்டனை உண்டு எனச் சொல்லலாம். கிறிஸ்து அல்லாத ஒருவனை எப்படி நியாயத் தீர்ப்புச் சொல்லி தண்டனை வழங்க முடியும்?’ என்கிறான். அதற்கும் மேலாக தண்டனை வழங்கினால் பூமியையும் பரலோகத்தையும் ஆட்சி செய்யும் வல்லமை படைத்தவரே ஆனாலும் பொய் பொய்தானே?
விவிலியத்தில் “உங்களுக்குக் கடுகுவிதை அளவுக்கு விசுவாசம் இருந்தாலும் கூட, ஒரு மலையைப் பார்த்து அந்தக் கடலை நோக்கிச் செல் என்று சொன்னால், அந்த நிமிடமே அது நகர்ந்து செல்லும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. மதம் மாற மாட்டேன் என்று உயிருக்குப் போராடுபவன் சொன்னால் கூட ஒரு இஞ்ச் நகராது என்கிறான் ஸ்மெர்டிகோ. நாத்தியத்திற்கும் ஆத்தியத்திற்குமான கருத்தியல் மோதலில் நாத்தியமே பல இடங்களில் வெல்கிறது. ஆனால் தஸ்தாவேஸ்கி மனித குலம் தழைக்க ஆத்திகத்தையே தோற்றபடி வற்புறுத்துகிறார்.
கேடுகெட்ட முதலாளி கரமசோவ் ஆகட்டும், காமத்தில் வீழ்ந்துகிடக்கும் திமித்திரி ஆகட்டும், கடவுள் வேண்டுமென்று விரும்புகிற அல்யோஷா ஆகட்டும், இருவரைக் காதலிக்கிற கேத்ரீனா ஆகட்டும், பலரைக் காதலிக்கிற குருசென்கா ஆகட்டும், கரடுமுரடாகத் திரியும் ஸ்மெர்ட்டிகோ ஆகட்டும், எல்லோரிடமும் உயிர்த்துவம் இடையறாது துள்ளந்துடிக்கிறது. மானிட சலனம் என்று கூட சொல்லலாம். நாத்திகனான இவானிடம் ஒரு இறுகிய தன்மையும், சரியோ தவறோ அடுத்தவருடன் தோழமையற்ற தன்மையும் உடையனவாகக் காட்டுகிறார்.
பெண்களிடம் வெளிப்படும் குணத்தை விதவிதமாகக் காட்டியிருக்கிறார். “என் கருத்துப்படி ஒவ்வொரு பெண்ணிடத்திலும் ஏதாவதொரு பேய்க்குணத்தை நீங்கள் காணலாம்! ஒருத்தியிடம் காணப்படும் ரசமான அந்தக் குணம் இன்னொருத்தியிடம் காணமுடியாது.” என்று பேசிக் கொள்கின்றனர்.
கரமசோவ் பக்கத்துவீட்டுக்காரன் பெலியாவ்ஸ்கியிடம் அறை வாங்கியதைப் பார்த்த மனைவி “அவனை அறையாமல் வந்தால் உன்னை ஒருபோதும் அருகில் வர விடமாட்டேன். என்னை அவனுக்கு விற்கலாம் என்றிருக்கிறாயா? ஒத்தைக்கு ஒத்தை அழை” என்று மூர்க்கமாகச் சொல்கிறாள். தனக்கு ஏற்படும் அவமானமாகக் கருதுகிறாள். தன் சுயமரியாதைக்குக் கேடு என்று நினைக்கிறாள். திரும்பப் பழிவாங்கினால்தான் அவளுக்கு நிம்மதி.
தஸ்தாவேஸ்கி மாபெரும் கலைஞன். இந்த நாவலைப் படித்துவரும்போது முதலில் இவானை வெறுத்தேன். பின்னால் அவனை நேசிக்க ஆரம்பித்தேன். கேத்ரீனாவைப் படிக்கத் தொடங்கியதும் நேசம் உண்டானது. போகப்போக வெறுப்பு உண்டானது. மீண்டும் நேசம் ஏற்பட்டது. தஸ்தாவேஸ்கி நம்மை என்னென்னவெல்லாமோ மாற்றி மாற்றி செய்கிறார். அதில் ஓடும் தர்க்க நியாயங்களால் நம்மை மாற்றி மாற்றி நிறுத்துகிறார்.
‘நீங்கள் ஒருவரை நேசிக்கும்போது அவர் ஒளிந்துகொள்ள வேண்டும். அவர் தமது முகத்தை எப்போது காட்டுகிறாரோ அப்போதே அந்த அன்பு காணாமல் போய்விடும்’ என்கிறான் இவான். உடனே எனக்கு அரசியல் தலைகள் நினைவிற்கு வந்தன.
‘வலது கை தருவது இடது கைக்குத் தெரியக்கூடாது’ இது மனித குலத்தின் மீது இயேசு காட்டிய அன்பு. இந்தப் பூமியில் சாத்தியமில்லாத ஓர் அற்புதம்’ என்கிறபோது சிறு தெறிப்புகளாக சேகுவரா, காந்தி வந்துபோனார்கள்.
‘நான் மிகுந்த வலியால் வேதனைப்படுகிறேன் என்று வைத்துக்கொள். மற்றவர் எவரும் என் வேதனையை உணரமுடியாது’ என்று சொல்கிறான் இவான். அப்படி மனித நிலைப்பாடுகளை உருட்டி உருட்டி நம்முன் விடுகிறார்.
ஒரு சம்பவத்தை எடுத்து விவரித்துக்கொண்டே வரும்போது படைப்பின் சாத்தியப்பாடுகளுக்குள் சரசரவென நுழைந்து மானுட அகத்தின் பல்வேறு கோலங்களை வெளிப்படுத்திவிடுகிறார். இது தஸ்தாவேஸ்கி என்ற ஆளுமையால் எல்லா இடங்களிலும் நிகழ்கிறது.
கடவுள் நம்பிக்கையற்ற ஜோசிமாவின் அண்ணன் மார்க்கப் அம்மாவின் விருப்பத்திற்காக ஆலயத்திற்குச் செல்கிறான். இறப்பின் தருவாயில் ‘நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறோம்’ என்கிறான். தம்பியிடம், ‘எனக்காக என் வாழ்வை சேர்த்து விளையாடிக் களித்திரு’ என்கிறான். இந்த வெளிப்பாட்டினுள்ளே ஒரு சுய விமர்சனத்தையும் கைவிட்டுப் போனக் கனவையும் காண்கிறோம்.
தமிழில் முற்போக்கு இலக்கியம் குறித்து அக்கறையுடன் பேசுகிறோம். ஆனால் தஸ்தாவேஸ்கியைப் படித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. தஸ்தாவேஸ்கி முற்போக்கைத் தான் தொடர்ந்து வலியுறுத்துகிறார். தூய இதயங்களை உண்டாக்கும் நவீன ஆத்மீகத்தை கருணை உள்ளம் கொண்ட மக்கள் சமூகத்தை, புரட்சிகரமான சமூகத்தை, தூய இறைத்துவத்தின் வழி வலியுறுத்துகிறார். கடவுளுக்கும் பக்தனுக்கும் பூசாரி தேவையில்லை என்பது தஸ்தாவேஸ்கியின் பார்வை. ஜோசிமா,
- இன்று பெருகுவது சாராயம். இன்று மது குடிப்பவர்கள் நாளை இரத்தம் குடிப்பார்கள். சொல்லுங்கள், இப்படிப்பட்டவர்களா சுதந்திர மனிதர்கள்?
- ஒரு வணிகனை அரசன் மதித்து வரவேற்கலாம். அதனால் அவனது ஊழல் இல்லாமல் போய்விடுமா?
- புரட்சிகர செயல்பாட்டுக்காகக் கைது செய்யப்பட்டவன், சிறையில் புகை பிடிக்க வழியில்லை என்றதும் புரட்சியை விட்டு வெளியே வந்தவனா, மனித குலத்திற்காகப் போராடுபவன்?
என்று முன்வைக்கும் விசாரணைகள் போல எண்ணற்ற இடங்களில் மனித குலத்தை உயர்த்துவதற்குத் தடையாக இருப்பனவற்றை எங்கும் விட்டுவைக்காமல் விமர்சனத்தை முன் வைக்கிறார்.
- வசதியாக வாழும் நிலப்பிரபுக்களும் வட்டிக்கடைக்காரர்களும் ஏற்கனவே ஊழல்வாதிகளாகக் கெட்டழிந்து போய்விட்டார்கள். தமது செல்வக் குவிப்புக்காகப் பணக்காரர்கள், ஏழைகள் முன் ஒரு நாள் தலைகுனிந்து நிற்கப் போகிறார்கள். ஏழைகள் அவர்களின் பணிவை மதித்து அவர்களை மன்னிப்பார்கள்.
- உடல் மெலிந்து நோய்கொண்ட, தோள்கள் தொங்கிப்போன சிறுவர்கள், காற்றோட்டமில்லாத தொழிலகங்கள், இயந்திரங்களின் ஓயாத இரைச்சல், நாளெல்லாம் கடும் உழைப்பு, கடுமையான ஏச்சுப்பேச்சுகள், போதை, எல்லாம் சேர்ந்து அவர்களை நாசம் செய்துகொண்டிருக்கின்றன. ஒரு சிறு பிள்ளைக்குக் கிடைக்கவேண்டியது இதுதானா?
- வறுமையும் கல்வியறிவு இல்லாமையும் காரணமாக ஒருவர் வேலைக்காரராக ஆகிவிடுவது என்ன நியாயம்? என் பணியாளனை என் குடும்பத்தின் உறுப்பினனாக ஏன் கருதக்கூடாது? நாம் அனைவரும் சமுதாயப் பணியாளர்களாக மாறினால் இது சாத்தியம்தான்.
பகுத்தறிவாளர்கள் ரஷ்ய சமூகத்தில் புரட்சி செய்து மாற்றத்தைக் கொண்டுவரும் முன் ஆத்மீகவாதிகள் மக்களிடம் இறங்கி அந்த சகோதரத்துவப் புரட்சியை விரைவாக ஏற்படுத்த வேண்டும் என்பதுதான். தஸ்தாவேஸ்கி அடிக்கடி சொல்கிறார், நாம் சகோதரர்கள் ஆகாமல் சகோதரத்துவத்தை உண்டாக்கவே முடியாது என்று. நம்மைப் புறக்கணித்த நாத்திகவாதிகளுக்கு முன் நாம் நல்ல காரியங்கள் ஆற்ற வேண்டும்.
கிறிஸ்துவை அல்ல, கிறித்துவத்தைப் புறக்கணித்துவிட்டு வாள் முனையில் புரட்சி செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. கடைசி மனிதன் கூட ஆணவம் கொண்டு மற்றவனைக் கொல்லும் அந்த நாத்திகம்.
ஜொசிமாவிடம், “நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீர்கள்? நமது வீட்டு வேலைக்காரன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து ஓய்வெடுக்க, நாம் அவனுக்குத் தேநீர் கொண்டுபோய் கொடுக்கவேண்டும் என்கிறீர்களா?” என்று ஒரு அன்பர் கேட்க, “ஏன் செய்தால்தான் என்ன?” என்று பதில் தருகிறார்.
- கோதுமை மணியை பொட்டியில் வைத்திருந்தால், எத்தனைக் காலமானாலும் அப்படியே கிடக்கும் மண்ணில் விழுந்து அழிந்தால்தான் புதிய கோதுமைப் பயிர் தளிர்க்கும்.
தஸ்தாவேஸ்கி தீமை ததும்பும் ஒவ்வொரு இதயத்தினுள்ளிருந்தும் ஒரு மகத்தான ஒளியை உண்டாக்க விரும்புகிறார். சுயநலங்களால் இருண்டுகிடக்கும் பெரும் சமூகத்திற்குள் ஒரு ஒளியை ஏற்றி முன்னே செல்கிறார். விவிலியம் அணுகாத விதத்திலும் அணுகிய விதத்திலும் இடைவெளி மிக்கப் பகுதிகளில் தஸ்தாவேஸ்கி இந்த நாவலில் தீமைகளைப் பறித்தெறிந்து உன்னதங்களை விதைத்திட முனைகிறார். கரமசோவ் சகோதரர்கள் மூலம் புதிதான ஒரு காவியத்தை நம் கையில் தருகிறார். இந்தக் காவியத்தின் விளக்கைக் கொண்டு இந்த மானுட சமூகத்தை அணுகிப் பார்க்க நம்மைப் பணிக்கிறார். ஒரு வகையில் மகத்தான, பரிசோதனை மிக்கப் பாதை இது. ‘தெய்வம் சக்தியில் இல்லை, சத்தியத்தில்தான் நிலைகொண்டிருக்கிறது’ என்கிறார்.
புதுமைப்பித்தன் நடையை மற்றொருவர் கையாள முற்படும்போது அது பிரச்சாரமாக மாறிவிடுகிறது. புதுமைப்பித்தன் விமர்சனத்தைத் தன் நடையில் கலையாக மாற்றுகிறார். அதே போலத்தான் மன ரகசியங்களைப் பாத்திரங்களின் வழி அல்லாமல் தஸ்தாவேஸ்கியே சொல்லிச் செல்லும்போதும் கலையின் அம்சத்திலிருந்து மாறுவதில்லை. விமர்சனம் கலையாவது எங்ஙனம்? பிரச்சாரமாவது எங்ஙனம்? என்பதை பெரிய ஆளுமைகள் வெகு சாகசமாகக் கைப்பற்றிவிடுகிறார்கள். உள்ளத்தை அவர்கள் பற்றிக்கொள்ளும் விதத்தில்தான் இந்த சாகசம் நிகழ்கிறது.
ஒவ்வொரு கதாமாந்தர் குறித்தும் தனித்தனியே ஆய்வு செய்யலாம். அவ்வளவு இடம் இருக்கிறது. ஒவ்வொருவரின் கடைசித்துளி ரகசியத்தைக் கூட அறியத் துடிப்பவர். கடுகளவு அன்பையும் விதந்து போற்றுபவர். ஒவ்வொரு மாந்தரின் பலவீனத்தையும் பலத்தையும் இவரைப் போல கண்டு சொன்னவர் இலக்கிய உலகில் யாருமில்லை.
குரூசென்கா விஷயத்தில் திமித்திரியின் மனோபாவம் குறித்து எழுதுகிறார். அவன் ஒரு சந்தேகப் பேர்வழிதான். அவளை விட்டுப் பிரிந்திருக்கும்போது அவனுக்குச் சந்தேகம் வந்துவிடும். ஆனால் திரும்பி வந்து பார்த்தவுடனே மனம் இளகி மயங்கிவிடுவான். சந்தேகங்கள் மாயமாய் மறைந்துவிடும். சந்தேகப்பட்டோமே என்று வெட்கப்படக் கூடச் செய்வான்.
தங்கமான மனிதர்கள் தூய அன்பு செலுத்துகின்றவர்கள், காதலிக்காக எதையும் தியாகம் செய்யக் கூடியவர்கள் என்னும் சிறப்புப் பெற்றவர்கள் கூட கேவலமான முறையில் தமது காதலிகளை உளவு பார்க்கக்கூடியவர்கள்தாம்.
தன் காதலி மற்றவனோடு கொஞ்சிக் குலாவுவதை நேரில் பார்த்தாலும் கூட இதுதான் கடைசி தடவை. இனி அவன் கண்காணாமல் ஓடிவிடுவான் என்றே அவன் ஆறுதல் அடைந்து அவளைக் கண்காணாத இடத்திற்கு அழைத்துப்போய் வாழவே ஆசைப்படுவான். இப்படி திமித்திரியின் சஞ்சலங்களை எழுதிச் செல்கிறார்.
மிகச்சிறந்த படைப்பாளி கனமான விஷயங்களை மட்டுமே ஆராயப் புகுவான். சின்னச்சின்ன விசயங்கள் மீது கவனத்தைக் குவிக்கமாட்டான். தஸ்தாவேஸ்கி கனமான விசயங்களை ஆழ்ந்து ஆராயும் மனோநிலையிலேயே சின்னச்சின்ன விசயங்களிலிருந்தும் சின்னச்சின்ன அசைவுகளிலிருந்தும் மாந்தர்களின் அகத்தின் குரூரங்களை, அன்பை வெளிப்படுத்திக்கொண்டே செல்கிறார். தஸ்தாவேஸ்கி உலகப் படைப்பாளிகளிலேயே மகத்தான மேதை. மேதை என்ற சொல்லை அவனுக்கு வழங்கிவிட்டால் பின் அச்சொல்லை இனியொருவருக்கு வழங்க முடியாது. தஸ்தாவேஸ்கி எழுதும் ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்த பட்சம் ஒரு விசயமாவது புதிய கண் கொண்டு பார்க்கப்பட்டிருக்கும். தேர்ந்த வாசகன் ஒரு படைப்பு சொல்லவரும் சாராம்சம் குறித்துப் பேசப் போய்விடுவான். ஒரு தேர்ந்த படைப்பாளி ஒவ்வொரு அணுக்களிலும் அவன் உண்டாக்கியிருக்கும் ஜீவ துடிப்பை அள்ளிக்கொண்டுதான் சாராம்சம் குறித்துப் பேசுவான். உலகப் படைப்பாளிகளில் இதற்குத் தகுதியானவர்களில் தலைமையானவன் தஸ்தாவேஸ்கி.
திமித்திரி, விடுதியில் கொண்டாட்டத்தைத் தொடங்கியபோது சுற்றியிருப்பவர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள். கொலை வழக்கில் சிக்கியதும், விசாரணை நடைபெறுகிறது. மனிதர்களின் நடிப்பு கோலோச்சுகிறது.
திமித்திரி கோக்லகோவ் அம்மையாரிடம், சாம்சோனவிடம், கிரிகோரியிடம், வனக் காவலரிடம், மர வியாபாரியிடம், குதிரை வண்டிக்காரன் ஆந்த்ரேயிடம் கனவில் செர்மாஸ்வியா காட்டில் வேட்டை நாய் துரத்துவது போன்ற எந்த கொடூரமான சூழலிலும் அவனிடம் பரிவு காட்டுவோரிடம் அப்படியே உருகிவிடுகிறது.
கோக்லகோவ் அம்மையார் திமித்திரி மீது அன்பு செலுத்துகிறார். அவன் வேறு பெண்ணிடம் காதல் வயப்பட்டுள்ளான் என்று தெரிந்ததும் வெறுத்துத் துரத்துகிறார்.
உலகப் படைப்பாளிகளின் ஆத்மார்த்தமான வாக்குமூலங்களை படைப்பின் வழி சொன்ன அவதானிப்புகளை மிக மிக பொறுப்புணர்வோடு பயன்படுத்துகிறார். சில்லரிங், சேக்ஸ்பியர், துர்கனேவ், டால்ஸ்டாய், புஷ்கின், காரல் மார்க்ஸ் (ஓரிடத்தில் காரல்) என்று அவர்களின் சிந்தனைகளைக் குறிப்பிட்டு இன்னும் ஆழத்திற்கு அழைத்துச் செல்கிறார். உலக வரலாற்றுக் குறிப்புகளை, சமூக ஆய்வுகளை எடுத்தாளுகிறார். எந்த இடத்திலும் சக படைப்பாளிகளைச் சிறுமைப்படுத்துவதே இல்லை. தன்னுடைய படைப்பு கூடுதல் பரிமாணத்திற்காகவே படைப்பாளிகளின் படைப்பால் வரும் சிந்தனைகளைக் கையாள்கிறார்.
- இன்று முதல் நானொரு எதார்த்தவாதி. ‘அது போதும்’ என்று துர்கனேவ் சொல்லவில்லையா?
- மௌனம் மட்டும் மெல்லப் பேசியது என்றானே புஷ்கின்.
- வஞ்சகம், சபலம், மோசடி இவையே பெண் மனம் என்ற யுலிசஸ்.
- நிக்கலநோகல் சொன்ன இறந்த ஆத்மாக்கள்
என்றபடி சந்தர்ப்பங்களை எடுத்தாண்டு விவாதத்தை மேலெடுப்பது இவரது பாணிகளில் ஒன்று.
அந்த நாவலில் அல்யோஷாவை பலதரப்பட்ட மக்களை சந்திக்க வைப்பதன் வழி கொடூரமான சம்பவங்களைக் காணவைக்கிறார். மனிதர்கள் திடீரென எடுக்கும் விசித்திரமான முடிவுகள் முன் அல்யோஷாவை திகைக்க வைக்கிறார். கீழ்மையான சம்பவங்களிடையே அல்யோஷா ஓடிக் கடந்தபடியே இருக்கிறான். ஏன்? சமூகத்தை நேசிக்கக்கூடிய ஒரு புரட்சிகர சிந்தனையாளனுக்கு, ஒரு நவீன யேசுவுக்கு, ஒரு நவீன காந்திக்கு, ஒரு நவீன விவேகானந்தருக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சனை என்னவென்று தெரியவேண்டும் என்பதற்காகத்தான். பக்கச் சார்பில்லாமல் அணுகத் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் அல்யோஷாவை விதவிதமான மானிட சிக்கல்களைச் சந்திக்கவிடுகிறார்.
2
வாழ்க்கை மர்மங்கள் நிறைந்ததாக விரிந்துகொண்டே இருக்கிறது. அதனுள் இறங்கிப் பார்த்தால் அபத்தங்கள் அரங்கேறும் காட்டுகள் தெரிகின்றன. சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மனிதர்கள் உதவிநாடிச் செல்கின்றனர். உதவுவதாகக் கூறி அலைக்கலைக்க விட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.
(திமித்திரி – சாம்சனோவ் – லியாகவி – ஏமாற்றம்)
காதலின் விநோதங்கள்தான் எத்தனை எத்தனை விதமாக இருக்கின்றன. மகன் திமித்திரி, தந்தை கரமசோவ் ஒரே பெண்ணை விரும்புகின்றனர். அவள் திமித்திரியுடன் பழகியபடி வேறு ஒருவனைத் தேர்கிறாள்.
கேத்ரினா மீது திமித்ரிக்குக் காதல். அவனிடமிருந்து அவளை அபகரிக்க இவான் முயல்கிறான். இருவரிடமிருந்து அவளை அபகரிக்க இளம் பாதிரியார் ரகிதின் முயல்கிறான். கேத்ரீனா ராணுவ அதிகாரியின் மகள். பெரும் செலவாளி. கடன்படுகிறாள். கடனை அடைக்க தன் உடலைத் தர முன்வருகிறாள். அவளைக் காதலால் அடைய நினைத்த திமித்திரி இக்கட்டான சந்தர்ப்பத்தில் 5,000 ரூபிளைத் தந்துவிட்டு வணங்குகிறான். இப்படியொரு பரவச நிலை.
ஓரிடத்தில் திமித்திரி கேத்ரீனாவை அவமதிக்கிறான். அடுத்து கேத்ரீனாவிற்கு வேண்டப்பட்ட முன்னாள் கேப்டனை மதுவிடுதியில் தாடியை இழுத்து அவமதிக்கிறான். கேத்ரீனா தன்னை அவமதித்த, கேப்டனை அவமதித்த திமித்திரியை அவமதிக்க ஒருவனுக்குப் பொருள் உதவியை மறைமுகமாகச் செய்கிறாள். இப்படி ஒருவித காதல் விசித்திரம் வெறித்தனத்தோடு விளையாடுகிறது.
அல்யோஷாவிற்கு கடவுள் நம்பிக்கை தீவிரமாகவே உண்டு. அதை நிரூபிக்க முடியாமல் திணறுகிறான். அல்யோஷாவின் அம்மா தீவிர பக்தை. ஒருநாள் கரமசோவ் தன் காமத்துய்ப்பிற்கு அவளை இழுக்கிறான். இறைவனை வணங்கும் அந்த நேரத்தில் அவள் அதைத் தவிர்க்கிறாள். அவள் வணங்கும் புனித மாதா சிலை மீது காறித் துப்புகிறான். கடவுள் இல்லை என்பதை இவ்விதமாக கரமசோவ் நிரூபிக்கிறான். அவனுடைய எரிச்சல் ஒரு உச்சத்திற்குப் போகிறது. அவளால் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்க முடியாமல் நடுங்குகிறாள். பெரியாரை விட கரமசோவ் கடவுள் சமாச்சாரத்தில் மூர்க்கமானவனாகத் தென்படுகிறான்.
குரூசென்காவிற்காக நகரத்தின் ஓரம் காத்திருக்கிறான் திமித்திரி. தன்னை மடக்கக் காத்திருப்பதை அறிந்த குரூசென்கா ஓடிவந்து கரமசோவ் வீட்டுப்பக்கம் ஒளியப் பார்க்கிறாள். துரத்தி வந்தவன் வீட்டில் நுழைகிறான். கரமசோவ் வீட்டில் அல்யோஷா, இவான், கரமசோவ், ஸ்மெர்ட்டிகோ, கிரிகோரி வேறொரு சர்ச்சையில் மூழ்கி இருக்கின்றனர். உள்ளே நுழைந்த திமித்திரி அப்பனிடம் அவளை எங்கே ஒளித்துவைத்திருக்கிறாய் என்று தாக்குகிறான். குருசென்கா அந்த வீட்டில் நுழையவில்லை. திமித்திரி பெரிய மோதலை நிகழ்த்திவிட்டு காதலியைத் தேடி ஓடுகிறான். அடிபட்ட அந்த நிலையிலும் கரமசோவ் குரூசென்கா அவனுக்குக் கிடைக்காததை நினைத்து மகிழ்கிறார். மட்டுமல்லாமல், “இப்போதே என்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவளிடம் நீ போய் சொல்” என்று இளைய மகன் அல்யோஷாவிடம் கெஞ்சுகிறான்.
காமத்தின் முன் தகப்பனுக்கு மகன் சலுகையோ, மகன் தகப்பனுக்கு சலுகையோ தந்துவிடமுடியாது. இருவரும் நெருங்கினால் உயிர் போகும் காரியத்திலும் துணிகின்றனர்.
தன்னை அடைய நினைக்கும் திமித்திரியை அவனுடைய ஆசைநாயகி கேத்ரீனா தன் வீட்டிற்கு அழைத்துவந்து இந்த பிரச்சனையிலிருந்து விலக்கப் பார்க்கிறாள். குரூசென்காவும் ஒரு அப்பாவி போல ஏற்றுக் கொள்கிறாள். தன்னை அனுபவித்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட இராணுவ வீரனை மீண்டும் மணமுடிக்க விரும்புவதாகச் சொல்கிறாள். ராணுவ வீரன் தன் மனைவியை இழந்து குரூசென்காவை திரும்ப மோகிக்க வருகிறான். தன் பேரழகால் கேத்ரீனா அல்யோஷா அனைவரையும் கலங்கடிக்கிறாள் குரூசென்கா. வெளிப்படையாக எளிய பெண் போல காணப்பட்டவளை கேத்ரீனா முத்தமிடுகிறாள். அழகைப் புகழ்ந்து திரும்பத் திரும்ப முத்தமிடுகிறாள். அந்த பேரன்பிற்கு குரூசென்கா கேத்ரீனாவை முத்தமிடுவது போலச் சென்று முத்தமிடுவதைத் தவிர்க்கிறாள். ‘நீ என்னை முத்தமிட்டாய். நான் உனக்கு முத்தமிடமாட்டேன். அதனை நீ வாழ்நாள் எல்லாம் நினைக்க வேண்டும்’ என்கிறாள். சண்டை மூள்கிறது. காதலின் பொருட்டு விசித்திர பெண் உலகம் ஒன்று அங்கு எழுகிறது.
திமித்திரியை சரிகட்டியதைப் போல குரூசென்காவை சரிகட்டிவிட முடியும் என்று கேத்ரீனா நினைக்கிறாள். ‘என்னை யாரும் சரிகட்டிவிட முடியாது’ என்று குரூசென்கா காட்டுகிறாள். திமித்திரி முன் வென்ற சரிகட்டல் சக பெண்ணான குரூசென்கா முன் தோற்கிறது. எதை எப்படிக் கையாள்வது? விநோதமாகிறது. ஒன்றில் அருள் உள்ளமாக வருகிறது. ஒன்றில் ஆயுதமாக வந்து தாக்குகிறது.
துறவியாக விரும்பும் அல்யோஷாவிற்கு லிசா காதல் கடிதம் எழுதுகிறாள். ஆன்மீகத்தை விரும்பும் அல்யோஷா கேத்ரீனாவை சந்திக்கும்போதும் குருசென்காவை சந்திக்கும்போதும் அவர்களின் அழகில் கிளர்ச்சி கொள்கிறான்.
தேவதூதனாக அறியப்படுகிற அல்யோஷாவாலும் பெண்களின் காதல் உள்ளத்தை அவர்களின் மர்மத்தைக் காணமுடியாமல் ஒவ்வொரு முறையும் தனது கணிப்பிலிருந்து தலைகுப்புற விழுகிறான். ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு பேய் குடிகொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு சந்திப்பிலும் பட்டவர்த்தனமாகக் காண்கிறான். ‘பெண்களின் கண்ணீரைக் கண்டு நம்பாதே’ என்கிறாள் லிசாவின் தாய். அது ஒரு நாடகம் என்கிறாள். இந்த நாவலில் காதல் என்ற சூத்திரக் கயிற்றைக் கொண்டு எந்த ஆணை எப்படி தன்னைச் சுற்றி ஆட்டங்காட்ட வைக்கலாம் என்று ஒவ்வொரு பெண்ணும் ஆடித்தீர்க்கிறார்கள்.
இதையல்லாம் விட வேடிக்கை, ஒவ்வொரு பெண்ணின் காதல் ஒரு மோதலில் நாசமாவதைக் கண்டு தாய் ஆனந்தம் அடைகிறாள். காதலால் நொறுங்கி வெளியேறும் ஆண்களைப் பாராட்டுகிறாள் லிசாவின் தாய். பெண்களின் தூய உள்ளத்தைத் தூக்கிப்பிடிக்கும் நம்முன் கரிய நடனங்களைத் தூக்கிக் காட்டுகிறார் தஸ்தாவேஸ்கி.
ஜொசிமா தனது இளமைக் காலத்தில் இராணுவ சேவையில் இருக்கும்போது ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். பின்னால்தான் தெரியவருகிறது, இவன் காதலிக்கும் முன்னமே ஒரு பெரிய நிலக்கிழார் பையனுக்கு அவளை நிச்சயித்திருப்பது. ஆனால் இவன் காதலிப்பதைத் தெரிந்து, தனது நிச்சயதார்த்த விசயத்தை சொல்லாமலேயே தவிர்க்கிறாள். இது தெரிந்த பின்னும் அவளை அடைய நிலக்கிழார் பையனை ஒற்றை ஒற்றை போருக்கு அழைக்கிறான். எவ்வளவு தூரம் ஒரு விசயம் சார்ந்து பரிசோதனை செய்ய முடியுமோ அந்த இறுதி எல்லை வரை செல்கிறார். நிகழ்த்திப் பார்க்கப் பார்க்க வெவ்வேறு ரூபங்களில் குணம் வெளிப்படுகிறது.
ஜொசிமா தன் பணியாளனைக் காரணமில்லாமல் இரு தினங்களுக்கு முன் அடித்ததை உதவியாளன் போருக்குச் செல்லும் சமயத்தில் இழுக்கிறான். ஜொசிமாவின் ஆன்மா விழித்துக் கொள்கிறது. போருக்குத் தன் உதவியாளனுடன் செல்லும் முன் மனதில் ஓர் எண்ணம் உதிக்கிறது. காரணமில்லாமல் அடித்துவிட்ட தனது பணியாளனிடம் ஓடிச்சென்று அவனது காலைப் பற்றி தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கிறான். இது ஒரு உணர்ச்சி. பாவத்தால் தோற்றுவிடக்கூடாது என்ற சஞ்சலம் அறத்தை அழைக்கிறது.
சரி நேருக்கு நேரான போருக்கு இருவரும் தயாராகிறார்கள். காதலுக்கான போர்க்காட்சி தொடங்குகிறது. முதலில் நிலக்கிழார் பையன் தன் துப்பாக்கியால் ஜொசிமாவை சுடுகிறான். குறி தவறி காதை உரசிக்கொண்டு போகிறது. அடுத்து நாம் ஜொசிமா சுடுவதைப் பார்க்கத் தயாராகிறோம். ஜொசிமா சுடாமல் துப்பாக்கியை அவன் முன் வைத்துவிட்டுத் திரும்புகிறான்.
அந்தப் பெண் பெருங்கனிவோடு ஜொசிமாவின் கையைப் பிடித்து நன்றி தெரிவிக்கிறாள். அவனும் தன் அன்பைப் பரிமாறிக்கொள்கிறான். இத்தோடும் சம்பவத்தை தஸ்தாவேஸ்கி நிறுத்தவில்லை. இதைப் பார்த்த 50 வயது செல்வந்தர் ஜொசிமாவுடன் நெருக்கமாகப் பழகுகிறார்.
ஒரு நாள் தான் காதலித்த ஒரு விதவைப் பெண் வேறொருவரைக் காதலித்து மணம் முடிக்க விரும்புவதை அறிந்து கொலை செய்துவிடுகிறார். இந்தச் சம்பவத்தைச் சொல்ல முடியாமல் தத்தளிக்கும் பகுதி வருகிறது. சொன்னபின் ஏன் சொன்னோம் என்று தத்தளிக்கும் பகுதி வருகிறது. இதற்கு என்ன பிராயச்சித்தம் என்று ஜொசிமாவிடம் வினவுகிறான். மக்கள் முன், செய்த காரியத்தைச் சொல்லி மன்னிக்க வேண்டுகிறான். மனைவி, மூன்று குழந்தைகள் தன்னைத் தவறாக நினைப்பார்களே என்று மூன்று மாதங்கள் சொல்ல முடியாமல் தவிக்கிறான். ஒரு நாள் ஜொசிமாவை சந்திக்க வந்து என்னால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க முடியவில்லை என்று சொல்லிச் செல்கிறான். சென்றவன் இரவில் திரும்பி வருகிறான். திரும்பிச் செல்கிறான். (கதையை மேலும் நிகழ்த்துகிறார்) பின் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்ட பின் மனப்பிறழ்விற்கு ஆளாகிறான். நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் கிடக்கும் அவனை ஜொசிமா சென்று பார்க்கிறான். அவன் சொல்கிறான், “ஜொசிமா, அன்று ஏன் இரவில் போனவன் திரும்ப வந்தேன் தெரியுமா? உன்னைக் கொலை செய்யத்தான். என் ரகசியம் அறிந்த ஒரே நபர் நீங்கள் என்பதால் – குடும்பம் பதறுவதைத் தாங்கமுடியாது போகுமே என்பதால் ரகசியம் கேட்ட உன்னைக் கொலை செய்யவே வந்தேன்” என்கிறான். ஒரு சம்பவத்திற்குள் எண்ணற்ற மனித அக ரகசியங்களைக் காட்டியபடியே எழுதிச் செல்கிறார்.
மனிதனைப் பாடாய்ப்படுத்தும் இந்தக் காதலின் எல்லைதான் என்ன என்று தஸ்தாவேஸ்கியும் தேடியிருக்கிறார். பிரெஞ்சுக் கனவானுடன் ஓடுவதற்கு முன் கணவனின் சொத்துக்களைத் தன் பெயருக்கு மாற்றிக்கொண்டபின் ஓட்டமெடுத்த பெண்ணைப் பற்றி பேச்சு வருகிறது.
மூவாயிரம் ரூபிள் தருவதாகச் சொன்னதும் குரூசென்காவை விட்டுத்தர வருகிறான் முன்னாள் கணவன். அவனுடைய பழைய அழகு இல்லாமை கண்டு குரூசென்காவும் ஏமாறுகிறாள். அவளுக்கு கல்கனோவின் இளமை மீது பிரியம் வருகிறது.
குரூசென்கா மீது திமித்திரிக்கு வெறித்தனமான காதல். பிளாஸ்நோ விருந்தினர் விடுதியில் ஆட்டம் பாட்டம் ஓய்ந்து தனி அறைக்குள் இருவரும் செல்லும்போது கல்கனோவ் சொல்கிறான், “அவ்வளவுதான் விஷயம்”.
3
நல்லதாக இருந்தாலும் சரி, தீயதாக இருந்தாலும் சரி, மனிதர்களின் பார்வை வேறுவேறாக இருக்கிறது. அவர்களின் மனோபாவம் அவரவர் குணத்தைக் காட்டுகிறது. தஸ்தாவேஸ்கி சர்வ சாதாரணமாக இதைக் கண்டு வெளிப்படுத்துகிறார்.
- ரஷ்ய விவசாயி இவானைப் போல சிந்திக்கிறான் என்றால் அவனுக்கு நல்ல பிரம்படி கொடுக்கவேண்டும் – கரமசோவ்
- ஊனமுற்ற லிசா எப்போதும் அம்மாவைத் துன்புறுத்திக்கொண்டே இருக்கிறாள். வீட்டுக்கு வருபவர்களையும் கலவரப்படுத்துகிறாள்.
- காதலி கேத்ரீனாவிடமிருந்து விலகிவிட்ட உணர்வை ஒரு சுதந்திர உணர்வாகக் காண்கிறான் இவான்.
- அப்பாவை கொலை செய்யாமல் போனதற்கு ‘யாரோ சிந்திய கண்ணீரால் கடவுள் மனமிரங்கியிருக்க வேண்டும். அது காலஞ்சென்ற என் அன்னையின் கண்ணீராக இருக்கலாம் அல்லது காவல் தெய்வம் விண்ணிலிருந்து என்னைக் காக்க வந்திருக்க வேண்டும். எதுவென்று தெரியவில்லை. ஆனால் சாத்தான் அங்கே தோற்கடிக்கப்பட்டான். – திமித்திரி
ஒவ்வொரு மாந்தரும் ஒவ்வொரு கணத்தில் ஒவ்வொரு விதமாக தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தியபடியே இருக்கின்றனர்.
தஸ்தாவேஸ்கி இந்த நாவலின் வழி குறைபாடுடைய சகலத்தின் மீதும் தன் விமர்சனத்தை வைத்தபடியே இருக்கிறார். எளிய மக்களுக்கு எதிரான எல்லாவற்றின் மீதும் விமர்சனத்தை வைக்கிறார்.
‘ஒரு நாத்திக சோசலிஸ்டை விட ஒரு கிறிஸ்துவ சோசலிஸ்ட் ஆபத்தானவன்’ (மியூசோவ்)
‘ஒழுக்க சீலன் என்கிற அந்த அல்யோஷாவை என்னிடம் இழுத்துவாருங்கள். அவன் அங்கியைக் கழற்றி எறிகிறேன்’ (குருசென்கா)
‘1812-ல் ரஷ்யா மீது படையெடுத்த நெப்போலியன் அடிமைப்படுத்தியிருந்தால் எவ்வளவோ நன்மைகள் விளைந்திருக்கும்’ (ஸ்மெர்டியாகோவ்)
அண்டை வீட்டாரை நேசி என்பது எவ்வளவு சாத்தியம் என்பது எனக்கு விளங்கவே இல்லை. தூரத்தில் இருப்பவர்களை நேசிப்பதே எளிதாக இருக்கிறது. (இவான்)
கடவுளைப் பற்றி இவான், ‘மனிதனைப் போன்ற ஒரு கொடிய மிருகத்தின் மூளையில் இப்படிப்பட்ட ஒரு புனிதமான நெஞ்சைத் தொடக்கூடிய அறிவார்ந்த கற்பிதம் எப்படித் தோன்றியது? அதுவும் அவனே மரியாதை செலுத்துகிற வகையில்!’ என்கிறான்.
வெளிப்படையாக ஆசிரமத்தில் எல்லோர் முன்பும் செய்த தவறைச் சொல்லி பாவமன்னிப்பு கேட்பதை மரபுவாதிகள் எதிர்க்கிறார்கள். வெளி உலகத்தில் உலவும் சாத்தான் தேவாலயத்திலும் இருக்கவே செய்கிறான். ஆசிரமத்தில் பாவமன்னிப்பு என்ற பெயரில் பொய்யாக பாதிரிமார்கள் சொல்லக் கேட்கும் சடங்குத்தன்மைதான் இருக்கிறது.
தஸ்தாவேஸ்கியின் உறுதியான கருத்து யேசுவை ஆலயத்திற்குள் வைத்து ஒடுக்காமல் மக்கள் மத்தியில் உலவ விடுங்கள் என்பதுதான். துறவிகளும் பாதிரிமார்களும் தங்கள் அதிகாரங்களை நிறுவ பொய்களை உண்மை போல கட்டவிழ்த்து விடுகின்றனர். வெகு சிலர் யதார்த்தத்திற்கு இறங்கி வருகின்றனர். சிலர் ஆவிகளையும் சாத்தான்களையும் நம்புகின்றனர். தஸ்தாவேஸ்கி பத்தொன்பதாம் நூற்றாண்டின் நவீன வளர்ச்சியை உணர்ந்துகொண்ட இன்றைய ஞானியைத் தேடுகிறார். அவரே மனித குலத்தை மேலெடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறார்.
மனிதர்களின் கொடூர எண்ணத்தை தஸ்தாவேஸ்கியால் தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. துருக்கியர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கொல்கிற வக்கிர எண்ணம் எப்படி மனிதத்துவமாக இருக்கமுடியும் என்கிறார். கணுக்கள் உள்ள பிரம்பைக் கொண்டு சொந்தக் குழந்தைகளை அடித்துத் துன்புறுத்துவதின் மறைமுக விருப்பமும், குழந்தைகள் அழுவதில் ஒரு பரவசமும் கொள்கிற இந்த சிற்றின்பப் பரவசம் உள்ளவர்களை எப்படி தாயென்றோ தந்தையென்றோ சொல்ல முடியும்? என்கிறார்.
எட்டு வயது பையன் எறிந்த கல், எஜமானனின் நாய் காலில் பட்டுவிடுகிறது. எஜமானன் அச்சிறுவனது தாயின் முன் எல்லா நாய்களையும் ஏவி ஓடவிட்டு நாய்களால் கடித்துக் குதறும் காட்சியைச் சொல்லி, இவர்களுக்கு எப்படி பாவமன்னிப்பு என்ற ஒரு ஏற்பாடு சரியாகும் என்று இவான் கேள்விகள் கேட்கிறான்.
இப்படியானவர்களுக்கு எதிர்நிலையில் மாபெரும் மானுடக் கனவையும் தஸ்தாவேஸ்கி வைக்கிறார். நாயால் குதறப்பட்டு இறந்த குழந்தையின் தாயால் நிஜத்தில் எப்படி அந்த எஜமானனை மன்னிக்க முடியும்? துருக்கியர் செய்ததை நிஜத்தில் எப்படி மன்னிக்க முடியும்? என்ற கேள்விகள் எழுகின்றன. தஸ்தாவேஸ்கி ஒரு கனவைப் புனைகிறார்.
நாவலில் யேசு வருகிறார். யாரும் தரமுடியாத அற்புத மீட்சியை செய்கிறார். மக்கள் அவர் பின்னால் திரண்டுவிடக்கூடாது என்று 90 வயது நிரம்பிய அதிகாரியால் உடனே கைது செய்யப்படுகிறார். தனிமையில் அந்த அதிகாரி யேசுவை சந்திக்கிறார். நீ வந்தது தவறு என அதற்கு அடுக்கடுக்கான காரணங்களைச் சொல்கிறார். 15 நூற்றாண்டாக உன் பெயரைச் சொல்லி அடிமையாகப் பழக்கிவிட்டோம். அற்புதம், மர்மம், அதிகாரம் என்ற அளவுகோலைக் கொண்டு ஆட்டுமந்தையாக்கிவிட்டோம். கிறித்துவின் பேரால் உலகம் முழுக்க ஒரு கட்டுக்கோப்பிற்குள் கொண்டுவந்திருப்பது சாதாரண விசயமல்ல. உன்னால் தனித்தனியாக அற்புதம் செய்யமுடியும். நாங்கள் அற்புதம் என்ற பெயரால் அனைவரையும் மண்டியிட வைத்துள்ளோம். கடவுள் இல்லை என்ற ரகசியத்தை நாங்கள் இத்தனை நூற்றாண்டுகளாகக் காப்பாற்றி வருபவர்கள். அது தெரிந்தால் எல்லாமே நிர்மூலமாகிவிடும். கடவுளின் இடத்தில் நின்று பாவம் செய்ய அனுமதிக்கிறோம். பரிகாரம் செய்கிறோம். நாங்களே தீண்டாமையை ஏற்றுக்கொள்கிறோம். எதையும் புதிதாய் சேர்த்தால் நம்பிக்கை குலைந்துவிடும். எங்களின் மிக நீண்ட அரசு, போப் என்கிற அடிமைத்தன வரலாற்று உருவாக்கத்திற்கு நாங்கள் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. இறைபக்தியை காப்பாற்றுவது லேசுபட்ட காரியமல்ல. உன் வருகையால் புதிய உலகை படைக்கவிட மாட்டோம். உன்னுடைய பதில் என்ன?” அதிகாரி கேட்கிறான். ஏதும் பேசாது எல்லாவற்றையும் கேட்ட யேசு அந்த அதிகாரியின் நெற்றியில் முத்தமிட்டு இருளில் மறைகிறார்.
ஒரு பொய்மையை எப்படி பிரமாண்டமாகக் கட்டமைத்து அதை எப்படி இறையின் பேரால் நிறுவி, மக்களை இளைப்பாற்றிக் கொண்டிருக்கிற மகத்தான காரியத்தை சுய விமர்சனத்தோடும், சுதந்திரம் ஆபத்தாக முடிந்துவிடும் என்ற அதிகாரத்துவத்தோடும் அமைந்திருக்கிற உள் விவகாரங்களை எல்லாம் வெட்டவெளிச்சமாக்குகிறார்.
(புவியரசால் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கும் இந்நாவலை, கோவை ஞானி இன்று இந்த நாவலுக்கு என்ன தேவை இருக்கிறது? என்று சிறு குறிப்பு எழுதியிருக்கிறார். இன்றுதான் இந்த நாவலுக்குத் தேவை அதிகமாக இருக்கிறது. இன்று வளர்ந்திருக்கிற மிகப்பெரிய அரசியல் கட்சிக்குள் புரையோடிப்போயிருக்கும் இன, மதவாத அம்சங்களை ஆராயும் வழியைச் சொல்கிறது. மதம், மனிதத்துவத்திற்கு எதிராக ஒரு அரசியல் சாம்ராஜ்யத்தையே கட்டமைத்திருப்பதைக் காணச் சொல்கிறது.
இந்து சமய வைதீகர்களுக்கு நேர் எதிரான நாவல். இந்து மதத்தை அரசியலின் மையமாக்கி ஆட்சியாளும் ஆட்சியாளருக்கு நேர் எதிரான நாவல். இஸ்லாம் என்ற பெயரால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் அபத்தத்திற்கு நேர் எதிரான நாவல். மதத்தை சடங்குத்தனமாகப் போதிக்கும் கிறித்துவ யந்திர மனிதர்களுக்கு நேர் எதிரான நாவல். பிற இனத்தை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட இனவெறியர்களுக்கு எதிரான நாவல்.
மனிதர்களை எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் நேசிக்கச் சொல்கிறது. அன்பு ஒன்றே மானிட வாழ்வின் மகத்துவம் என்பதை வெவ்வேறு கோணங்களில் சொல்லிக்கொண்டே செல்கிறது. ஜொசிமா வழி உண்மையான புதிரான கருணையை மட்டுமே ஏந்தும் புதிய நவீன யேசுவின் செயலை விரும்புகிறார்.)
கிறித்துவ மடங்கள் மீதும் விமர்சனங்கள் பாய்கின்றன. ஊதியக் குறைவைப் பற்றியே பேசும் பாதிரிமார்கள், நாங்கள் பூசாரித்தனத்தை விட்டால் லுத்தரன்களும் கலகக்காரர்களும் கிறித்துவத்துக்கு வரவிருந்த மந்தையை ஓட்டிக்கொண்டு போய்விடுவார்கள் என்று மிரட்டுகின்றனர். இவ்விதமான பாதிரிமார்கள் மீதும் தஸ்தாவேஸ்கி விமர்சனத்தை வைக்கிறார்.
ஏழை ராணுவக் கிழவன் உதவி கேட்டு வருகிறான். மடத்தில் பிச்சை வாங்க வந்த சன்னியாசி, நல்ல இடம் பார்த்து வந்தீர்கள் என்று கேலி செய்கிறான்.
“கடவுளின் மீது நம்பிக்கை வைக்காதவன் எவ்வாறு அவருடைய மக்கள் மீது நம்பிக்கை வைப்பான்?” என்கிறார். ரஷ்ய மக்களை தஸ்தாவேஸ்கியைப் போல காதலித்தவர்கள் யாரும் இருக்க முடியாது. உலக மக்களையும் சேர்த்தே காதலித்தவர்.
ஜொசிமோ இறந்தபின் மடாலயத்தில் சில பாதிரிமார்கள், துறவிகள் தங்கள் எண்ணங்களை உயர்வாகச் சொல்கின்றனர். ஞானியின் இறந்த உடலிலிருந்து நறுமணம் வீசும் என்று எதிர்பார்த்திருந்த சமயத்தில் பிணவாடை கசிய ஆரம்பிக்கிறது. மெல்ல துர்நாற்றமாக வியாபிக்கிறது. இந்தச் சூழலில் பிடிக்காத மற்ற துறவிகள், “நாத்தியர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் ஆத்திகர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள் என்பதுதான் முக்கியமான விசயம். ஆத்திகர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம் உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் வீழ்ச்சியில் பலருக்கும் குரூரமான ஆனந்தம் இருக்கிறது” என்கிறார் ஒரு பாதிரியார்.
வைஷிகோரியிலிருந்து வந்தவன், நோய்வாய்ப்பட்ட கணவன் அப்படியே சாகட்டும், நோயிலிருந்து விடுபட்டு எழுந்தாலும் மறுபடியும் அடிப்பான், குடிப்பான், அவன் சாகட்டும் என்கிறாள்.
ஜொசிமா திமித்திரி முன் மண்டியிட்டு வணங்கியதன் ரகசியம் கரமசோவ் மனதை நொறுக்குகிறது. அவளது அழகு பாடாய்ப்படுத்துகிறது. ஜொசிமாவின் இந்தச் செயலை ரகிதின் அப்பட்டமான நடிப்பு என்கிறான்.
பணத்தைக் கொட்டினால் குரூசென்கா கிழவன் கரமசோவுடனும் போவாள் என்கின்றனர். திமித்திரி அவளை மணமுடித்துக் கொள்ளக் கெஞ்சும்போது, ‘உன்னை மணந்துகொள்கிறேன், ஆனால் என் விருப்பப்படி எல்லா ஆண்களுடனும் இருப்பேன்’ என்கிறாள். திமித்திரி ஒத்துக்கொள்கிறான்.
‘இந்தக் குழந்தைகளைத் தனித்தனியாய்ப் பார்த்தால் தேவதூதர்கள்தான். ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் அரக்கர்கள்’ என்கிறான் முன்னாள் கேப்டன்.
‘இன்றைக்கு இது போதும், இதுதான் கடைசி பெக்’ என்று சொல்லிக்கொண்டே நான்கைந்து முறை ஊற்றிக்கொள்ளும் கரமசோவ், திமித்திரிக்கு ஒரு தொகையைக் கொடுத்து குரூசென்காவிடமிருந்து விலக்கி, தான் அடையமுடியுமா என்று யோசிக்கிறார்.
தயவு செய்து அமருங்கள் என்பது ஒரு நாடகப்பாணி. கீழை நாடுகளில் அது நாகரீகமாகப் பார்க்கப்படுகிறது.
தெய்வம் பக்தியில் இல்லை, சத்தியத்தில்தான் நிலைகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட ஒரு கொலைகாரன் குற்றத்தை ஒப்புக்கொள்கிறான்.மக்கள் “ஒரு நேர்மையாளனின் வீழ்ச்சியில் அவர்களுக்கு குரூரமான ஆனந்தம் இருந்தது” என்கிறாள் குரூசென்கா.
ரஷ்ய மேல்தட்டு மக்களிடம் உள்ள ஐரோப்பிய மோகத்தை பல்வேறு இடங்களில் சொல்கிறார். பெரிய அதிகாரிகளின் வீட்டில் பரிட் டீஸ் பந்தயக் குதிரைகளின் பெரிய ஓவியங்களை மாட்டிக் கொள்வதில் பெருமை கொள்கின்றனர். விசாரணை அதிகாரிகள் கைவிரல்களில் பெரிய பெரிய மோதிரங்களை அணிந்துகொள்கின்றனர்.
திமித்திரி தன்னை முழுவதுமாக சுய விமர்சனம் செய்துகொள்கிறான். “நான் ஆன்ம போதம் கெட்டவன், உயிரின் போதை’ ‘கடந்த கால வாழ்க்கைக்காக என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன். மிச்சம் இருக்கும் வாழ்நாள் முழுவதும் அதற்காக வேதனைப்படுகிறேன்’ தன் தந்தையைக் கொலை செய்யாமல் போனதற்குக் காரணம் தன் அன்னையின் கண்ணீராகத்தான் இருக்க முடியும் என்கிறான்.
திமித்திரி கொலைக்குற்றத்தில் சிக்கிக் கொண்டாலும் கேத்ரீனா உறவை மறைக்கப் பார்க்கிறான். அவனை நிர்வாணப்படுத்தி விசாரிக்கின்றனர். ‘என் ஆன்மாவைத் திறந்து காட்டினேன். அதற்குப் பிரதிபலனாக மற்ற பாதியில் விரலை விட்டுத் துழாவுகிறீர்களே’. விசாரணை முடிகிறது. அழகிய ஒரு குடியானவக் கனவு தூக்கத்தில் வருகிறது.
‘ஒவ்வொரு நாளும் நான் நல்லவனாகத் திருந்திட வேண்டும் என்று நெஞ்சில் அடித்துக் கொள்வேன். ஆனால் ஒவ்வொரு நாளும் தவறாமல் தீமைகள் புரிந்தேன்’ என்று தன் வாழ்க்கையை சுய விமர்சனம் செய்கிறான். ஒரு வகையில் இந்த விமர்சனம்தான் அவனுக்கு மெல்லிய ஆறுதலைத் தருகிறது.
4
அன்றைய ரஷ்ய மக்களின் எத்தனையோ வாழ்க்கைக் கோலங்களை மனம் பதைக்கக் காட்டுகின்றார். வகுப்பு விட்டு செல்லும் வழியில் ஒரு ஏழை மாணவனை ஆறு மாணவர்கள் சேர்ந்து கற்களைக் கொண்டு எறிகின்றனர். அல்யோஷா அதைத் தடுக்கிறான். உதவிக்கு வருவர் கிடைத்ததும் கல்லெடுத்து எறிகிறான். அடிக்கவும் செய்கிறான். அவனது அழுகை பெருக்கெடுக்கிறது. இந்த அல்யூஷா என்ற சிறுவன் ஏன் அப்படிச் செய்கிறான்? தனிமை, தோழமை இன்மை, ஏழ்மை, ஒதுக்கல், பயம், வெறுப்பு, எவரையும் நம்பமுடியாமை, ஏளனம் எல்லாவற்றின் வேதனை என்று காட்டுகிறார்.
அல்யோஷாவின் கண்களில் ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள், பாவம் செய்தவர்கள், பாவப்பட்டவர்கள், வேலை இழந்து சீரழிந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், முடமானவர்கள் என்று ரஷ்ய விளிம்புநிலை வா்க்கையைக் காட்டுகின்றனர். அல்யோஷா வலிந்து இவர்களுக்கு உதவி செய்பவனாகச் செல்வதில்லை. தன் வீட்டுப் பிரச்சனையை முன்னிட்டுச் செல்லும் இடங்களில் காண்கிறான், உதவுகிறான்.
மனிதர்களுள் உறைந்திருக்கும் எல்லா இழிநிலைகளையும் இந்நாவலில் போகிற போக்கில் குண்டு குண்டாக தூக்கிப்போட்டுக்கொண்டே செல்கிறார்.
பசியின் பொருட்டு, கூன் விழுந்த முன்னாள் இராணுவ வீரன், மதுபான விடுதியில் கையேந்துகிறான். அவனது தாடியைப் பற்றி மதுபான விடுதியிலிருந்து இழுத்து நடுத்தெருவிற்கு காரணமேயில்லாமல் கொண்டு வருகிறான். அவனது அழுக்கு உடை, நோய் கொண்ட தோற்றம் அப்படி செய்திருக்கலாம். அந்த கேப்டனின் குழந்தை அல்யூஷா விட்டுவிடுமாறு கெஞ்சுகிறான்.
நோய்வாய்ப்பட்ட, உடல் ஊனமுற்ற, பாதுகாப்பற்றக் குடும்பத்தைக் காப்பாற்றும் கேப்டனை சண்டைக்கு வா என திமித்திரி அறைகூவல் விடுவது வேதனையைத் தரும் செயலாக இருக்கிறது.
திமித்திரி மன்னிப்பு கோருவதற்காக அல்யோஷாவை அனுப்பியிருப்பதாக நம்பும் கேப்டன் பரிதாபமாகக் குழைகிறான். மன்னிப்பு கேட்க வைப்பதற்காக முயல்கிறேன் என்று அல்யோஷா சொன்னதும், ஓ, அவர் மன்னிப்பு கேட்கவில்லையா என்று வீரம் பேசுகிறான். இப்படி கணத்திற்கு கணம் மாறுபடும் மனித உள்ளங்களை இவ்விதமான சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
லியாகவி என்ற மரவியாபாரி பெருங்குடியில் தூங்கிக்கிடக்கிறான். திமித்திரிக்கு செர்மாஸ்வியாவில் தாய்க்குச் சேரவேண்டிய சிறிய நிலம் இருக்கிறது. இந்த மரவியாபாரி வழி விற்க முயல்கிறான். அவனை எழுப்ப முடியாது தோற்கிறான். இரவில் சோமவார் அடுப்பின் அனல் புகை விசமாக மாறுகிறது. நடு ஜாமத்தில் எழுந்து உயிருக்குப் போராடும் அந்தக் குடிகாரனைக் காப்பாற்ற வனக்காவலரை எழுப்பி அழைத்துவருகிறான். சாளரங்களைத் திறந்து நல்ல காற்று வரும்படி செய்கிறான். அந்த மரவியாபாரி மீது கம்பளி சாக்குகளைத் தண்ணீரில் நனைத்துப் போடுகிறான். இவனும் ஒரு வாளியில் தண்ணீர் எடுத்துவந்து தலையிலிருந்து கொட்டிக் கொள்கிறான்.
விடிந்தபின், ‘நான் கரமசோவின் மகன் திமித்திரி, என்னுடைய நிலம் விற்பது தொடர்பாக வந்திருக்கிறேன்’ என்று திரும்பத் திரும்ப தன் நிலையை உணர்த்த முயல்கிறான். அவன் ‘நீ யாரென்று தெரியாது. நீ ஒரு திருடன்’ என்று மூர்க்கமாகச் சொல்லி துரத்தியடிக்கிறான்.
ஒரு ரோசம். அன்றிரவு தங்கியதற்கும் ஒரு மெழுகுதிரிக்கும் தொல்லை கொடுத்ததற்கும் 50 கோப்ஸக் காசுகளை வைத்துவிட்டு வெளியேறுகிறான்.
கோக்லகோவ், சாம்சனோவ், லியாகவி, குரூசென்கா அத்துணை பேரும் திமித்திரியை கோமாளியாக்கிப் பார்க்கிறார்கள். இந்தக் காதல் செய்கிற லீலைகளைப் புரிந்தாலும் நேர் செய்யவா முடிகிறது?
ஒரு குடிகாரன் எப்படியெல்லாம் நடந்துகொள்வான் என்பதற்கு திமித்திரி உதாரணம். அவனுடைய ஊதாரித்தனம். பணமில்லாத போது எப்படியிருக்கிறான்? பணம் கிடைத்ததும் எப்படியிருக்கிறான்? இரண்டு நிலைகளில் எந்த எல்லை வரைக்கும் செல்கிறான் என்பதை அவன் செயல்கள் காட்டுகின்றன.
மனிதர்களின் திரைமறைவு ஆட்டங்களை திரைவிலக்கிக் காட்டுகிறார். மனிதர்களின் கோணங்கித்தனங்களை, குரூரப்புத்திகளை, சீண்டல்களை, அப்பாவி போன்ற நடிப்புகளை, காலை வாரி விடுதலை, அடுத்தவர் மேல் பழிபோடுதலை, முடிவெடுக்க முடியாத அல்லாட்டங்களை, காதலின் போக்கிரித்தனங்களை, வெறுப்புகளை, சதித்திட்டங்களை, அலைச்சல்களை, இப்படி ஓராயிர அகப்பிரச்சனைகளை துருவித் துருவிக் காண்கிறார், காட்டுகிறார்.
எங்கும் வழிந்துகிடக்கும் இந்த அயோக்கியத்தனங்களிடையே முட்டி மோதித்தான் மகத்துவத்தை மீட்கப் பார்க்கிறார். இந்த மகத்துவத்திலே அவர்களுக்கு மீட்சி கிடைக்கும் என உபதேசிக்கிறார். தஸ்தவேஸ்கி காட்டும் மீட்சி என்பது சுய பரிசோதனை. சுய விமர்சனம். செய்த பாவங்களை வெளிப்படையாக ஒத்துக்கொள்வது. அது எவ்வளவு கர்ண கொடூர பாவச்செயலாக இருந்தாலும் அதற்காக மனப்பூர்வமாக வருந்துவது. தண்டனையை ஏற்பது. காருண்யத்தின் ஊற்றை இதயத்தில் திறப்பது.
லிசவேத்தா என்ற குள்ளமான, வெட்டவெளியில் படுத்துறங்கும் ஊமைப்பெண். அவள் கர்ப்பம் தரிக்கிறாள். அதற்குக் காரணம் கரமசோவ். இதற்குப் பிறந்தவன் ஸ்மெர்டியாகோவ். ‘சாத்தானின் மகனுக்கும் ஒரு புண்ணியத் தாய்க்கும் பிறந்த குழந்தை நீ. கண்ணீர் சிந்தாதே! இதைக் காப்பாற்று’ என்கிறார் ஒருத்தி.
இந்த நாவலில் கரமசோவை கேடுகெட்ட மனிதராகவே எல்லா இடத்திலும் காட்டுகிறார். தஸ்தாவேஸ்கி அந்த கேடுகெட்ட மனிதன் வழியாகத்தான் தேவாலய நடவடிக்கைகளை, மானிட உறவுகளை, வெளிப்படையாக மிக வெளிப்படையாக போட்டுத் தகர்த்து எறிகிறார். அவன் ஒரு பொய்யன், ஒரு கோமாளி என்று சொல்லிக்கொண்டே ரஷ்ய வாழ்க்கையைப் பிளந்துபோடுகிறார். சேட்டைத்தனம் மிக்க இந்தப் பாத்திரத்தை, கண்ணாரக் கண்ட வாழ்க்கையின் குரூரத்தை, நாசூக்கு இல்லாமல் அப்பட்டமாக வெளிப்படுத்த கரமசோவை விளையாட விட்டிருக்கிறார். பிரபு குடும்பத்து மனநிலை கொண்ட மத்திய வர்க்கத்து வியாபாரி. ஆனால் நாற்றம் பிடித்த வாழ்க்கையில் ஊறியவர். கரமசோவ் ஒரு அயோக்கியன். திமித்திரி குடிகாரன் என்றாலும் நேர்மையானவன்.
தஸ்தாவேஸ்கி ஒவ்வொரு மாந்தர்களையும் அவர்களின் தனித்த வாழ்க்கையை நிலைநிறுத்திக்கொண்டே வந்து பொதுவெளிக்குள் நிறுத்துகிறார். சொந்தக் கதவுகளைத் திறந்து காட்டிக் கொண்டிருக்கும்போதே உங்களை அழைத்து வந்து இதற்கு மட்டுமல்ல, வேறொரு அறிதலுக்கு என்று திருப்புகிறார். அம்மாந்தர்கள் வழி ரஷ்ய தேசத்தின் சீரழிவுகளை இனம் காட்டி, சிக்கலான சுழலிலிருந்து மீட்க, மீட்சி பெற தூய இதயத்தை வற்புறுத்துகிறார். அதற்குத் தன்னை அர்ப்பணிக்கவும் செய்கிறார். ஒரு நாவலுக்காக ஒரு குடும்பத்தின் கதையை மையமாக வைத்து எழுதவில்லை. உறவுகளின் பின்னணியில் ரஷ்ய தேசத்து வாழ்க்கை நிலைகளை எழுதுகிறார். தனித்துவமான மேன்மைகளை இழந்துகொண்டிருக்கும் ரஷ்யாவை மீட்க இந்த நாவல் வழி மாபெரும் விசாரணையை முன்வைக்கிறார்.
5
தஸ்தாவேஸ்கி சீரழிந்து கிடக்கும் ரஷ்ய தேசத்தை புதுசாக உண்டாக்க விரும்புகிறார். அது சார்ந்த கனவுகள் அவருக்கு உண்டு. தேசத்தையும் தேச மக்களையும் கீழ்மையிலிருந்து விடுவித்து ஒரு உன்னதத்தை நோக்கி நகர்த்தும் கனவுகளை முன்வைக்கிறார்.
தஸ்தாவேஸ்கி விரும்புவது மரபான, சடங்குத்தனமான பேராயரை அல்ல. புதிய பேராயர். புதுசான பேராயர். உள்ளத்தைப் புதிதாக மலர்விக்கும் ஒரு புதிய ஞானி. காலத்தின் பிரச்சனையைப் புரிந்துகொண்டு புதிதான கோணத்தில் வழிநடத்தும் முற்போக்குச் சிந்தையுள்ள ஞானி. ஆத்மீக ஞானி. சமத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஞானி.
லட்சக்கணக்கான மக்கள் முன் மனப்பாடமாக பைபிள் வாசகங்களை உச்சாடனம் செய்பவர் அல்ல. ஒரு துயர் மிக்க மனிதன் அல்லது மனுஷியின் தோளில் கை போட்டு நடந்துகொண்டே ஆறுதல் சொல்பவர். மதப்பற்றற்ற சமுதாயத்திலிருந்து சர்வ வல்லமை படைத்த பிரபஞ்ச திருச்சபை தோன்றும் என்று ஜொசிமா ஓரிடத்தில் சொல்கிறான்.
ரஷ்ய தேசம் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவு இந்நாவலில் அடியிழையாக ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆன்மீகம் மிக்க அரசுவழி நடத்தப்பட வேண்டும். அதாவது மக்கள் மீது கருணை கொண்ட அரசாக இருக்கவேண்டும். ஐரோப்பிய கிறித்துவத்தை அல்ல, ரஷ்யாவின் ஆதி கிறித்துவத்தை தழுவிக் கொள்கிற அரசாக இருக்கவேண்டும். குடியிலும் கூத்திலும் அயோக்கியத்தனத்திலும் வீழ்ந்து கிடக்கும் சீரழிந்த ரஷ்ய மக்களை மீட்க வேண்டும் என்ற கனவு தஸ்தாவேஸ்கியிடம் பொங்குகிறது.
ரகிதின் சொல்கிறான், ‘அறத்தினால் வாழ்ந்தால் உலகம் வலிமை கொள்ளும். ஆத்மாவின் அமரத்துவ சித்தாந்தம் கூட அதற்குத் தேவையில்லை. யேசுவை ஆலயத்திற்குள் வைத்து ஒடுக்காமல் மக்கள் மத்தியில் உலவ விடுங்கள். அதுதான் மாற்றத்தை உண்டாக்கும். விவிலியம் அணுகாத நல்ல விசயங்களை ஏற்றுக்கொண்டு முன் நகர வேண்டும். நாம் சகோதரர்கள் ஆகாமல் சகோதரத்துவத்தை உண்டாக்க முடியாது.’ இதற்கு ஒரு தொன்மத்தை உருவாக்கிக் காட்டுகிறார்.
யேசுவைப் பறிகொடுத்த கன்னி மரியாள் நரகப் பயணம் மேற்கொள்கிறாள். நரகத்தில் பாவிகள் தீ ஏரியில் வதைபட்டு மிதக்கிறார்கள். கடவுளின் மறதிக்கு உள்ளானவர்கள். தீ ஏரியை விட்டு மேலேற முடியாமல் கதறுகிறார்கள். அந்தப் பாவிகள். அதைக் கண்ட மேரி உள்ளம் துடிக்கிறாள். ‘மிச்சம் மீதி இல்லாமல் விதிவிலக்கே இல்லாமல் அனைவரையும் மன்னிக்காவிட்டால் இந்த இடத்தை விட்டுப் போகமாட்டேன்’ என்கிறாள் ஆண்டவரிடம். யேசுவின் கைகளிலும் கால்களிலும் உள்ள காயங்களைச் சுட்டிக்காட்டி இந்தக் கொடுமை செய்பவர்களை எப்படி மன்னிப்பது என்கிறார் ஆண்டவர். கன்னி மேரி எல்லா தெய்வங்களையும் அழைத்து வந்து பூரணமாக மன்னித்துவிடும்படி வேண்டுகிறாள். இப்படி ஒரு புனைவை முன்வைக்கிறார்.
பகுத்தறிவாளர்கள் செய்கிற புரட்சியை விட ஆத்மீகவாதிகள் செய்கிற புரட்சிதான் மனித குலத்திற்கு உகந்தது என்று நம்புகிறார். அற்புதமான கற்பனைகள் மனித குலத்தை செம்மைப்படுத்தும் என்பது தஸ்தாவேஸ்கியின் எண்ணம். ஓரிடத்தில் இவானைப் பார்த்து அல்யோஷா சொல்கிறான், “நமது நவீன கால எதார்த்தவாதக் கண்ணோட்டம் உன்னைக் கெடுத்துவிட்டது. கற்பனைக்கு இடமில்லாது ஆக்கிவிட்டது” என்கிறான்.
தஸ்தாவேஸ்கியின் கனவு பூரணமான அன்பு. நேரடியான பிராயச்சித்தம். சகலவிதமான துன்ப துயரங்களையும் தஸ்தாவேஸ்கி தாய்மையுணர்வுடன் அணுகுகிறார். உலகின் எந்தத் துயரத்தைத் தாங்கிவரும் மனிதனோ மனுஷியோ தஸ்தாவேஸ்கியிடம் சென்றால் அவர்கள் தங்களையே காண்பார்கள்.
****
(2012-ல் இலக்கிய சந்திப்பில் பேசுவதற்காக எழுதப்பட்ட குறிப்பு வடிவிலான கட்டுரை. விரிவாக எழுத நினைத்து அப்படியே விடப்பட்ட கட்டுரை.)