அய்லீன்

வெள்ளை சுடிதார் டாப்ஸும், ப்ளூ ஜீன்ஸும் அணிந்திருந்த அந்த இளம்பெண் முகமெங்கும் அடர் நீல நிற வண்ணமும், சிவப்பு வண்ணமும் வேர்வையுடன் கலந்து ஊதா நிறத்தில் வழிந்தோடியது. கண்கள் இரண்டும் கிறங்கி மூடியிருக்க, ஸ்பீக்கரில் ஒலித்த ஹிந்திபாடலின் இசைக்கேற்ப இரண்டு கைகளிலும் சுட்டுவிரல்களை உயர்த்தியபடி அழகாக ஆடிக்கொண்டிருந்தாள். பொன் நிறத்தில் சாயமேற்றியிருந்த அவளது போனிடெயில் முடியும் சாயத்தில் குளித்திருந்தது. திட்டுத்திட்டாக வண்ணங்கள் அவளது வெண்ணிற குர்தாவில் உறைந்திருக்க ஒரு பட்டாம்பூச்சியைப் போல் அவள் ஆடிக்கொண்டிருந்தாள். ராதையைச் சுற்றியிருக்கும் கிருஷ்ணர்கள் என அவளைச் சுற்றி நான்கு இளைஞர்கள் ஆடிக்கொண்டிருந்தனர். இந்தியாவிலிருந்து, ஜப்பான் வந்து பயிலும் பல்கலைக்கழக மாணவர்களாக இருக்கக் கூடும். அங்கிருந்த அனைவருமே தம்முடைய இயல்பான கூச்சத்தை விட்டு, கொண்டாட்ட மனநிலையில் திளைத்திருந்தனர். வண்ணங்களுக்குள் ஒளிந்துகொள்வது எத்தனை பெரிய விடுதலை என்று தோன்றியது. நிறைய வட இந்தியப் பெண்கள் வெள்ளை டிஷர்ட் அல்லது வெள்ளை குர்தாக்களையே அணிந்திருந்தனர். ஹோலி பண்டிகைக்கு வெள்ளை நிற உடைகள்தான் பாந்தமென்று தோன்றியது. வண்ணங்களின் ஆட்டத்தை அதன் போக்கில் நிகழவிடுவது வெள்ளை உடைகள்தான். ஹோலி பண்டிகைக்கு அடர் வண்ணத்தில் உடையணிவது வண்ணங்களுக்கு எதிரான முகம் திருப்புதல்.

நிசிகசாய் மெட்ரோவின் அருகிலேயே இருக்கும் அந்த பூங்கா மைதானம் முழுவதும் வண்ணங்களால் நிரம்பியிருந்தது. இந்திய உணவகங்கள் அமைத்திருந்த ஸ்டால்களிலிருந்து பாவ்பாஜியின் வாசம் வீசியது. ஸ்பீக்கரிலிருந்து இந்தி, தமிழ் தெலுங்கு என கலந்துகட்டிப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. நான்கு வயது மகனைக் கழுத்தில் அமர வைத்துக்கொண்டு ஒரு அப்பா ஆடிக்கொண்டிருந்தார். இருகைகளிலும் அப்பாவின் தலைமுடியை இறுக்கிப் பிடித்தபடி அந்தப் பையன் உற்சாகமாகக் கத்தினான்.

“இந்தியப் பெண்கள், அழகிகள்”, என்றார் ஜோசப், ஒயினைக் குடித்தபடி.

“ஆம், இந்தியப் பெண்கள் மிகவும் அழகானவர்கள்” என்று பதில் சொன்னான் மேத்யூ. மேத்யூ தானாக எதுவும் சொல்வதில்லை. ஜோசப் சொல்வதை அங்கீகரித்து மறுபடியும் வேறு வார்த்தைகளில் அதையே மறுமொழியாகச் சொல்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்தான் மேத்யூ.

ஒரு பேப்பர் தட்டில் நிறைய தந்தூரி சிக்கன் துண்டுகளை வாங்கிவந்தார் வெங்கடேஷ். ஒயினுடன் இதைச் சாப்பிட்டுப் பாருங்கள் என்று ஜோசப்பிடம் காட்டினார். ஸ்டைலாக ஒரு சிறிய துண்டை சாப்ஸ்டிக்கில் எடுத்துச் சுவைத்து “டெலிசியஸ்”, என்றார் ஜோசப். கையில் ஒரு துண்டை எடுத்துக்கொண்டிருக்கும்போதே, “ஆம் அருமையான சுவை” என்றான் மேத்யூ.

இரண்டு ஜெர்மானியர்கள் முக்கியமான பிஸினஸ் விஷயமாகப் பேச வருகிறார்கள் என்று வெங்கி சொன்னபோது, நல்ல உயரமான அத்லெட்டிக் உடலமைப்புகொண்ட இரு வெள்ளையர்களைக் கற்பனை செய்துவைத்திருந்தேன். இருவரும் வந்து சேர்ந்தபோதுதான் ஜெர்மனியில் கறுப்பினத்தவர்களும் இருக்கிறார்கள் என்பது ஞாபகம் வந்தது. இந்த ஹோலி கூட்டத்தில் என்ன பிசினஸ் பேசப் போகிறார்கள் என்று குறுகுறுப்பு ஓடிக்கொண்டிருந்தது.

வெங்கியைப் பொறுத்தவரை இப்படி அடிக்கடி சிலரை அறிமுகப்படுத்துவார். மிகப்பெரிய திட்டங்களைப் பேசுவார்கள் அவர்கள். பிறகு, சத்தமே இருக்காது. என்ன ஆனது என்று வெங்கியிடம் கேட்டால், “பைப்லனில் இருக்கு”, என்பார். ஜப்பானில் இந்துக்கோவில் கட்டவேண்டுமென்று ஒரு அமெரிக்க இந்தியரை அழைத்து வந்தார் வெங்கி. சிலமுறை கூட்டங்கள் நடந்தது. கோவிலுக்கான வரைபடமொன்றைக் காட்டினார் அந்த அமெரிக்க இந்தியர். அதுவோ ஸ்ரீரங்கம் கோவில் அளவுக்குப் பெரியதாக இருந்தது.  ஜப்பானின் பூகோள அமைப்பு பற்றி எந்தப் புரிதலும் இல்லாதவர் அவர் என்பது உடனே புரிந்தது. கோவில் பற்றிய சந்திப்புகள் என்பதால் குடி வேறு கிடையாது எனவே, சில மாதங்களில் வெங்கி விரக்தியடைந்தார். பிறகு காணாமல்போன அந்த அமெரிக்க இந்தியரை, பல மாதங்களுக்குப் பிறகு வேறு ஒரு தமிழ்ச்சங்க ஆட்களுடன் இந்திய உணவகத்தில் பார்த்தேன்.  அங்கு அமர்ந்து அதே கோவில் வரைபடத்தை விளக்கிக்கொண்டிருந்தார் அவர். சரிதான் பூசலார் வகையறா போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

ஜோசப், வெள்ளை நிற டீஷர்ட்டை நீல நிற ஜீன்ஸ் பேண்டில் டக் இன் செய்து மேலே லெதர் ஜாக்கெட் அணிந்திருந்தார். தலைக்கு மேலே கிரீடம் போல் கறுப்பு நிற வட்டத் தொப்பியும், லெதர் ஷூவும் அணிந்திருந்தார். அனைத்துமே விலை உயர்ந்தவை என்று தெரிந்தது. ஜோசப்பின் எல்லா அசைவுகளிலும் ஒரு நிதானம் இருந்தது. கூர்ந்து கண்களைப் பார்த்துப் பேசினார்.

மேத்யூ பளீர் வெள்ளை சட்டையும் கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தான். மிகமெல்லிய பாலியெஸ்டர் துணியிலான வெள்ளை சட்டை காற்றில் அலைந்துகொண்டேயிருந்தது. அப்படிப் பறக்கும்போதெல்லாம் அதிலிருந்து எழும்பிய அம்பர் வகை வாசனைத் திரவியத்தின் நறுமணம் நாசியைத் தழுவியது. அவன் நடை உடை என எல்லாவற்றிலும் இளமைக்குரிய துள்ளல் இருந்தது.

பூங்காவில் பாடல்கள் உச்சஸ்தாயில் ஒலிக்கத் தொடங்கியது. எங்கெங்கும் வண்ணமும், சிரிப்பும் விரவியிருந்தது. கூட்டம் தம்மை மறந்து ஆடிக்கொண்டிருந்தது. திடீரென்று லுங்கி டான்ஸ் லுங்கி டான்ஸ் என்ற பாடல் ஒலிக்க, கூட்டத்திலிருந்து ஓடிவந்த சந்தீப், வெங்கியை வாங்கண்ணே என்று ஆட அழைத்தான். வெங்கியும் பீர் பாட்டிலைக் கையில் பிடித்தபடி நடனம் ஆடுவதாக நினைத்துக்கொண்டு கைகளை மட்டும் அசைத்தார். ஜோசப்பிடமும் ஆடும்படி கோரினார். ஜோசப் வெறுமனே புன்னகைத்துத் தலையை மட்டும் இசைக்கேற்ப அசைத்தார். மேத்யூ உற்சாகமாகிச் சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டைக் கீழே வைத்துவிட்டு ஆடத்தொடங்கினான். அவனை உற்றுப்பார்த்தபோது ஏதோ வார்த்தைகளை முணுமுணுப்பது தெரிந்தது. ஒலிபரப்பாகும் பாடலுக்குச் சம்பந்தமில்லாமல் தன்னுடைய மொழியிலான ஒரு பாடலை அவன் முணுமுணுத்தபடி ஆடிக்கொண்டிருந்தான்.

மேத்யூவை நெருங்கி, என்ன பாடல் அது என்று கேட்டேன். ஆட்டத்தை நிறுத்தாமல் “லாக்கோவின் டோண்ட் கோ மை பேபி ” என்றான். ப்ரெஞ்ச் பாடல் என்றாலும் ஆங்காங்கே ஆங்கில வரிகள்.

நீ என்னவள் ஆனதால்

நான் புனிதமானேன் பெண்ணே

என்னை விட்டு நீங்காதே !

என்ற வரிகளைத் தொடர்ந்து முணுமுணுத்தான்.

பியர் கிளாஸை நிரப்பிக் கொடுத்தேன். “தேங்க்யூ மை ப்ரெண்ட்” என்றான். காதலில் இருக்கிறாயா? என்று கேட்டேன். சட்டென்று கைப்பேசியை அழுத்தி, நீண்ட ஆற்றின் கரையில் நின்றிருந்த, அழகான ஆப்பிரிக்கப் பெண்ணைக் காட்டி “அய்லீன்”, என்றான். படிய வாரிய சுருள் கூந்தல், பெரிய உதடுகளுடன், எந்த கள்ளமும் இல்லாத அய்லீனுடைய சிரிப்பு அத்தனை அழகாக இருந்தது. அய்லீன் நின்றிருந்த அந்த நதியின் கரையில் ஒரு மரம் இருந்தது. ஒரு மரத்தில் இத்தனை கிளைகள் இருக்க முடியுமா? உலகின் ஆதித் தாய் தனது அத்தனை கைகளையும் கொண்டு இந்த பிரபஞ்சத்தை அணைத்துக்கொள்ள முயல்வதுபோல் அந்த மரம் தனது கிளைகளை விரித்திருந்தது. அந்தக் கைகளுக்குள் தஞ்சமடைந்தவள் போல் அய்லீன் நின்றிருந்தாள்.

“எங்களுடைய கேமரூன் நாட்டின் மிகப்பெரிய நதி, சனாகா” என்றான் மேத்யூ.

ஜோசப் தன்னுணர்வு வந்தவராக, வெங்கியிடம் கைக்கடிகாரத்தைக் காட்டி நேரமாகிறது என்றார். கையில் பிடித்திருந்த கிளாஸைக் கீழே வைப்பதுபோல் சென்று ஆடிக்கொண்டிருந்த மேத்யூவையும் முறைத்தார். உடனே பெட்டிப்பாம்பாய் மேத்யூவும் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டு ஜோசப் பக்கம் வந்து நின்றான். வெங்கி, என்னிடம் அருகிலிருக்கும் உணவகத்துக்குச் சென்று பேசலாம் என்றார். நால்வரும் பூங்காவிலிருந்து வெளியே வந்தோம். வசந்தத்தின் வருகையை அறிவிக்கப் பூங்காவில் வாசலில் இருந்த சகுரா மரத்திலிருந்து வெள்ளையும் இளஞ்சிவப்பும் கலந்த பூக்கள் பூத்துக் குலுங்கின. சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு டாக்ஸியை நிறுத்தி அருகிலிருக்கும் ஒரு இத்தாலிய உணவகத்துக்குச் செல்லச் சொன்னேன்.

பூங்காவிலிருந்து எழுந்த ஓசையும், நிரம்பியிருந்த கூட்டத்தையும் பார்த்து மிரண்ட டாக்ஸி டிரைவர், ”இவ்வளவு இந்தியர்கள் கூடியிருக்கிறீர்களே, என்ன விழா?” என்று கேட்டார். வண்ணங்களைக் கொண்டாடும், ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களைப் பூசி மகிழும் பண்டிகை. என்று அவருக்குப் புரியும்படி சொன்னேன். வண்ணங்களின் விழாவா? என்று தனக்குள் முணுமுணுத்துச் சிரித்துக்கொண்டே காரை எடுத்தார். மாலை நேரமென்பதால் இத்தாலிய உணவகத்தில் அதிகம் கூட்டமில்லை. நான்கு பேர் அமரும் வகையில் ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தோம். உட்காரப் போன வெங்கி குடித்திருந்த மதுவால் நிலைதடுமாறினார். ஆர்டர் எடுக்க வந்த ஜப்பானியனிடம் மீண்டும் குடிக்க பீர் கொண்டுவரச்சொன்னார். உடனடியாக நான்கு கிளாஸுகளில் நுரைபொங்க பீர் வந்தது. நால்வரும் நிதானமாகப் பருகினோம். இன்னமும் மேத்யூ அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.

வெங்கி, ”நீங்கள் பேச விரும்பும் விஷயத்தை இங்கு தாராளமாகச் சொல்லலாம்.” என்றார்.

சுற்றும் முற்றும் பார்த்தார் ஜோசப். பிறகு முகத்தில் கோபம் தெரிய “ என்ன விளையாடுகிறீர்களா மிஸ்டர் வெங்கி?. நாங்கள் மிகப்பெரிய பிஸினஸ் பற்றித் தனியே பேச விரும்புகிறோம். நீங்கள் வெட்டவெளி பூங்காவிற்கு அழைக்கிறீர்கள். பிறகு பொதுமக்கள் கூடியிருக்கும் உணவகத்தில் பேசச் சொல்கிறீர்கள். நீங்கள் ஒருவேளை இந்த விஷயத்தில் ஈடுபாடு இல்லாதவர்களாக இருந்தால் சொல்லிவிடுங்கள். எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். இந்த விஷயத்தில் அதிக நேரம் எங்களுக்கு இல்லை”, என்று கொதித்தார்.  

வெங்கி, ”என்னடா இது?” என்பது போல் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். மேத்யூ குடித்துக்கொண்டிருந்த பீர் கிளாஸைக் கீழே வைத்துவிட்டு, கையிலிருந்த கறுப்பு பிரீஃப்கேஸை கிளம்ப ஆயத்தமாவதுபோல் கையில் எடுத்துக்கொண்டான்.

ரகசியமாகப் பேசவேண்டுமென்ற ஜோசப்பின் கோரிக்கையில் சுவாரஸ்யமடைந்தேன். “ஏன் வெங்கி பேசாமல், அருகிலிருக்கும் வெஸ்டார்ன் விடுதியில் ஒரு ரூம் எடுத்துவிடுவோமே”, என்று கேட்டேன். ஆம், அதுதான் சரியானது என்றார் ஜோசப். வெங்கியும் உடனே சரி என்றார். மறுபடியும் டாக்ஸி பிடித்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையில் தனியாக இருந்த அந்த விடுதிக்கு வந்தோம். இம்மாதிரியான நெடுஞ்சாலை விடுதிகள் காதலர்களுக்கானது. நாங்கள் சென்றபோது, வரவேற்பறையில் ஒரு இளஞ்சோடி அறைக்கான படிவத்தை நிரப்பிக்கொண்டிருந்தனர்.

அறைக்குள் நுழைந்தவுடன், குளிர்சாதனப்பெட்டியிலிருந்து ஒரு அசாஹி பியர் டின்னை எடுத்து வந்து ஜோசப் அருகே வைத்தான் மேத்யூ.

அங்கிருந்த ஷோபாவில் நடுநாயகமாக அமர்ந்தார் ஜோசப். அவருடைய அனைத்து தோரணைகளிலும் “நான்தான் இங்கு பாஸ்” என்பதைச் சொல்லிக்கொண்டேயிருந்தார்.

சிறிய மௌனத்திற்குப் பின், “கேமரூன் நாட்டைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?” என்று கேட்டார் ஜோசப்.

வெங்கி என்னைப் பார்த்தார். “ஆம். மத்திய ஆப்பிரிக்க நாடு. முதலில் ஜெர்மானிய காலனியாகவும் பிறகு ப்ரெஞ்ச் காலனியாகவும் இருந்தது அல்லவா? ப்ரெஞ்ச் தானே தேசிய மொழி” என்றேன், பெருமையுடன்.

எந்த மாற்றமும் முகத்தில் காண்பிக்காமல், “ஆம். அதே கேமரூன் நாடு தான். கேமரூனில் இருநூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மொழிகள் உண்டு”, என்றார் ஜோசப்.

சில நொடிகள் கழித்து, “கேமரூனில், பல ஆண்டுகள் மந்திரியாக இருந்த மேபாங்கோ சென்ற வருடம் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார் ” என்றார் ஜோசப்.

ஆப்பிரிக்க நாடுகளில் அவ்வப்போது இப்படி நிகழ்வது தானே?.

மேபாங்கோ 38 மில்லியன் டாலர் ஊழல் செய்துவிட்டார் என்று 30 வருடம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார் ஜோசப்.

முப்பத்தெட்டு மில்லியன் டாலரா? கேமரூன் பொருளாதாரம் வீழ்ந்து கிடப்பதில் ஆச்சர்யமில்லை. சரி, இந்தச் செய்திக்கும் நீங்கள் வெங்கியைத் தொடர்பு கொண்டதற்கும் என்ன தொடர்பு ஜோசப்?

“மேபாங்கோ என்னுடைய தாய் மாமன்”, என்றான் ஜோசப். கையில் வைத்திருந்த பேப்பர் கட்டிங்கை எங்களிடம் நீட்டினார் மேத்யூ.

எங்களுடைய ஆச்சர்யத்தைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசினார் ஜோசப்.

மாட்டிக்கொண்ட 38 மில்லியன் டாலரில் பத்து மில்லியன் டாலர் பணத்தை ஜப்பானில் முதலீடு செய்யவிரும்புகிறார் என்னுடைய மாமா. சில வருடங்களில் அரசியல் சூழல் மாறும். பிறகு ஏதோ வகையில் அவர் சிறையிலிருந்து வந்துவிடுவார். அதுவரை பணம் பாதுகாப்பான முதலீடாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்.

ஜோசப், வெங்கியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்க, மெதுவாகக் கூகுளில் மேபாங்கோ என்று உள்ளிட்டுத் தேடினேன். ஆறு மாதம் முன்பு அவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது, 38 மில்லியன் டாலர் ஊழல் எல்லாமே செய்திகளாக இருந்தது.

பத்து மில்லியன் டாலர், என்றால் ஏறக்குறைய 80 கோடி ரூபாய் என்று முணுமுணுத்தார் வெங்கி.

அந்தப் பணத்தைப் பாதுகாப்பான முதலீடாக நீங்கள் வைத்திருக்க முப்பது சதவிகிதம் உங்களுடைய பங்காக அளிக்கப்படும் என்றார் ஜோசப்.

ஏறக்குறைய 20 கோடி ரூபாய் என்று கணக்குப்போட்ட வெங்கி, நாங்கள் பெரிய ரிஸ்க் எடுக்கிறோம். முப்பது சதவிகிதம் பத்தாது. நாற்பது சதவிகிதமென்றால் பேசலாம், என்றார் வெங்கி.

இல்லை, முப்பது சதவிகிதமென்று தான் எங்களுக்கு உத்தரவு. ஆனால் உங்களுடைய கோரிக்கையை நான் மேலே சொல்லுவேன் என்றார் ஜோசப்.

என்னைப் பார்த்துப் பெருமையுடன் கண்ணடித்தார் வெங்கி.

சரி, பணத்தை எப்போது கொண்டு வருவீர்கள் ? என்று கேட்டார் வெங்கி.

பதில் சொல்லாமல் மேத்யூவைப் பார்த்தார் ஜோசப். மேத்யூ எழுந்து உடனே பாத்ரூம் உள்ளே சென்று எதையோ உருட்டினான். பிறகு அங்கிருந்த சிறு மக்கில் கொதி நீர் பிடித்து பவுடர் போல எதையோ அதில் கொட்டிக் கலக்கி எங்களிடம் கொண்டு வந்தான்.

தன்னிடமிருந்த கறுப்பு ப்ரிப்கேஸைத் திறந்து ஒரு காக்கி நிற உறையை வெளியே எடுத்தார் ஜோசப். கச்சிதமாக அதன் உறையைக் கிழித்தெடுத்தார். பிறகு நிதானமாக ஒரு கறுப்பு நிறத் தாளை உள்ளிருந்து இருவிரலால் உருவி எடுத்தார். மேத்யூ அந்தத் தாளைப் பயபக்தியுடன் வாங்கி அந்தப் பிளாஸ்டிக் மக்கிலிருந்த தண்ணீரில் விட்டான். கறுப்பு நிறம் லேசாக உரிந்து வந்தது. ஜோசப் தனது ஆட்காட்டி விரல் நகத்தால் மிக மென்மையாக அந்தத் தாளைச் சுரண்டினார். இப்போது கருப்பு நிறம் ஒரு ஓரத்தில் முழுவதுமாக உறிந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பச்சை வண்ணத்தில் பெஞ்சமின் ப்ராங்க்ளின் வெளிவந்தார். அமெரிக்க 100 டாலர் நோட்டு தண்ணீரில் ஊறி மேலே மிதந்தது.

வெங்கி திகிலில் அமர்ந்திருந்தார். இப்படித்தான் பத்து மில்லியன் டாலரையும் உள்ளே கொண்டு வருவீர்களா? என்று கேட்டார். ஸ்கேன்னரில் மாட்டிக்கொள்ளாதா? என்று அவரே கேட்டுக்கொண்டார்.

ஜோசப் எதுவும் பேசாமல் சிகரெட்டைப் பற்றவைத்தார். சரி, இப்போது நாங்கள் சொல்லும் பிஸினஸ் புரிகிறதா என்று கேட்டார். மேத்யூ பெருமையாகத் தனது பாஸை பார்த்துக்கொண்டிருந்தான்.

இப்படி எல்லா பணத்தையும் ஏற்கனவே கொண்டுவந்துவிட்டீர்களா? என்று கேட்டார் வெங்கி.

“இவர் என்ன சொல்கிறார் பார் மேத்யூ”, என்று பெரிதாகச் சிரித்தார் ஜோசப். உடனே மேத்யூவும் உத்தரவு கிடைத்தது போல் சேர்ந்து சிரிக்கத் தொடங்கினான். சட்டென்று ஜோசப் சிரிப்பை நிறுத்த மேத்யூவும் சிரிப்பைப் பாதியில் நிறுத்த எத்தனிக்க அவனுடைய முகம் கோணியது. “என்ன மிஸ்டர் வெங்கி விளையாடுகிறீர்களா? அவ்வளவு எளிதாகப் பணத்தை முழுவதுமாகக் கொண்டுவந்துவிட முடியுமா? அதற்குத்தான் நமது பார்ட்னர்ஷிப் தேவைப்படுகிறது ”, என்றார்.

எங்கள் நாட்டில் ஒரு சில அதிகாரிகளைச் சரிக்கட்ட வேண்டியிருந்தது. அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம். இங்குள்ள சிலரையும் சரி செய்தாகிவிட்டது. அதற்கு இங்குள்ள பணமாக ஒரு முப்பதாயிரம் டாலர் வரை தேவை. அதை நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்.

இறுதியாக வந்து சேர்ந்துவிட்டார்கள் என்று பெருமூச்சும் சிரிப்பும் ஒருங்கே என்னுள் எழுந்தது. வெங்கி எதுவும் சொல்லிவிடுவதற்கு முன் முந்திக்கொள்ள வேண்டுமென்கிற அவசரத்தில், “முப்பதாயிரம் டாலர் எல்லாம் எங்களால் கொடுக்க முடியாது. பணத்தைக் கொண்டு வந்தீர்கள் என்றால், நாங்கள் முதலீடு செய்ய உதவுவோம். அதுவே நாங்கள் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்” , என்றேன்.

வெங்கி மௌனமாக என்னைப் பார்த்தார்.

பத்து மில்லியன் டாலரில் நாற்பது சதவிகிதம் என்றால் எவ்வளவு என்று யோசித்தீர்களா? அதற்கு இந்த முப்பதாயிரம் டாலர் எல்லாம் ஒரு பொருட்டா ? என்று கேட்டார் ஜோசப். யாரிடமும் கேட்காமல் பத்து சதவிகிதம் கமிஷனை அவர் உயர்த்தியிருந்தார்.

ஏமாற்றமும், வருத்தமும் கலந்த குரலில், “நீங்கள் பணத்தைக் கொண்டுவந்தால், அதைப் பாதுகாப்பாக முதலீடு செய்யத்தானே அந்த நாற்பது சதவிகிதம்”, என்றார் வெங்கி.

மேத்யூவை நிமிர்ந்து பார்த்தார் ஜோசப். மேத்யூ ப்ரிப்கேஸில் அந்த நூறு டாலர் நோட்டைப் பத்திரமாக எடுத்து வைத்தான். ப்ரிப்கேஸை மூடி கையில் எடுத்துக்கொண்டு கிளம்பப் போவது போல் எழுந்து நின்றான்.

முப்பதாயிரம் டாலர் உடனடியாகத் தேவையில்லை மிஸ்டர் வெங்கி. முதலில் ஒரு ஐயாயிரம் டாலர் இருந்தால் கூடச் சமாளித்துவிடலாம் என்றார் ஜோசப். அவர் கவனமாக என்னைத் தவிர்ப்பது புரிந்தது.

இல்லை, நாங்கள் பணம் எதுவும் தர முடியாது ஜோசப், என்றேன்.

சரி, அப்போது நாம் கிளம்பலாம் மேத்யூ என்றார் ஜோசப். அவருடைய குரல் தளர்ந்திருந்தது. கடன் கேட்க வந்தவர் போல் மாறியிருந்தார் ஜோசப். சட்டென்று அவரது உயரம் சின்னதானது போல் ஒரு குறுகல் தெரிந்தது.  மேத்யூ, எதுவும் பேசாமல் நகர்ந்து கதவருகே சென்று நின்றுகொண்டான்.

எங்களுக்கு வேறு பார்ட்னர்ஸ் இங்குக் கிடைப்பார்கள், வெங்கி. நீங்கள் நல்ல வாய்ப்பை இழக்கிறீர்கள். இப்போதைய தேவை இரண்டாயிரம் டாலர் அளவுதான். பிறகு நாம் பேசிக்கொள்ளலாம். கண்களில் இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்த நம்பிக்கையுடன் வெங்கியைப் பார்த்தார் ஜோசப்.

“இல்லை, நாங்கள் பணம் எதுவும் தரமுடியாது, பணத்தைக் கொண்டுவந்தால் பாதுகாப்பாக முதலீடு செய்ய உதவுவோம்”, என்றார் வெங்கி.

ஜோசப்பை விட அதிக ஏமாற்றம் மேத்யூவின் முகத்தில் தெரிந்தது. “நல்லது, நாங்கள் இதைப் பற்றிக் கலந்தாலோசித்துச் சொல்கிறோம்”, என்றார் ஜோசப். இருவரும் சோர்வாக வாசல் நோக்கி நடந்தார்கள். சனாகா நதியோரம் அந்த அழகிய மரத்தின் அடியில் சிறுமிக்குரிய சிரிப்புடன் நிற்கும் அயிலீன் ஞாபகத்தில் எழுந்தாள்.

(பதிமூன்று மோதிரங்கள்,யாவரும் பதிப்பகம்)

Previous articleஞானப் பழம்
Next articleஅதோ…சைபீரிய நாரை
ரா.செந்தில்குமார்
ரா.செந்தில்குமார் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர். 1976 ஆம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்தவர். ஜப்பான், டோக்கியோவில் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இசூமியின் நறுமணம் மற்றும் பதிமூன்று மோதிரங்கள் என இரு சிறுகதை தொகுப்புகள் வெளியாகி பரவலானக் கவனத்தைப் பெற்றுள்ளது. சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.