வேகமாக வளர்ந்துவரும் கரங்களின் வெம்மைகள்
சிறிய சிரிப்பில் அதிகாரத்தைக் கடந்து செல்வதற்குப் பழகியிருந்தவர்கள்,
ஒரு போருக்கு முன்பாகத் தங்களது உடைகளை உலர்த்தி
அடுக்கி வைத்துக்கொள்கின்றனர்.
*
கொடூர கணங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள்,
போர் துவங்குவதற்குச் சற்று முன்பாகத் தங்களது
உடல் முழுவதும் குண்டுகளைச் சுற்றிக்கொள்கின்றனர்.
*
அடைக்கலத்திற்கென ஏதோவொரு வாசலைத் தட்டிக்கொண்டிருந்தவர்கள்,
போரில் சரணடைந்த உடல்களின் காயங்களுக்கு மருந்து
கட்டிக்கொண்டிருக்கின்றனர்.
*
ஒவ்வொரு முறையும் சில இரக்கங்களுக்கென கையேந்தி நின்றிருந்தவர்கள்,
ஒரு போருக்குப் பின்பாகப் பிணங்களைக் கணக்கெடுக்கும் தாள்களை
இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருக்கின்றனர்.
*
சில உயிரற்ற உடல்களைத் தழுவிக்கொண்டிருந்தவர்களோ,
பெரும் அழுகைகளின் சொற்களைக் கொண்டு
இந்த உலகின் ஏதேனுமொன்றை நிரப்புவதற்கு
சதா முயன்று கொண்டிருக்கின்றனர்.
எதுவுமற்ற துயரத்தில்,
நிச்சயமற்ற இந்தப் பூமிப்பந்தின் சகலத்திலிருந்தும்
வேகமாக வளர்ந்து வரும் சில கரங்களின் வெம்மைகளை
அவர்கள் நேசிக்க முயல்கின்றனர்.
நிரந்தரமான ஒரு ஆறுதலின் வடிவத்தை
இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அழுவதைப்
போலிருக்கிறதது.
கசங்கிய உலகினை நேர்த்தியாக மடித்துக் கொண்டிருப்பவன்
பழக்கப்பட்ட இந்தக் கசப்புகள் தான்
ஒவ்வொரு இரவிலும்
நட்சத்திரங்களாக மினுங்கிக் கொண்டிருக்கின்றன.
1.
மிகச்சுலபமாக அறுபடும் இந்தப் பிரியங்களின் மென்மைகளைத்
தடவிக்கொண்டிருக்கும் போது தான்
அன்பின் நிழற்படமொன்று தவறி விழுந்துடைகிறது.
2.
நெருக்கமான துரோகங்களைப் பாடலாக்குபவன்,
ஒரு காய்ந்த மலரை வாசனையுள்ளதாக மாற்றும் போது
சருகொன்று நகர்ந்து அதனிருப்பை அர்த்தப்படுத்துகிறது.
3.
கசப்பின் அளவை வாழ்நாள் முழவதும் அளந்து கொண்டு வந்தவன்
ஒரு சாலையில் தவறவிடப்பட்ட நாய்குட்டியொன்றை
பிரியமானவரிடம் கொண்டு சேர்க்கிறான்.
4.
துண்டாக்கப்பட்ட ஒரு தலையிலிருக்கும் கண்கள்
அவ்வளவு தூரத்திலிருந்து விழும் மழைத்துளிகளை
வெறித்துக்கொண்டிருப்பதுவே
கசப்பின் கனிந்த வடிவமெனப்படுகிறது.
5.
சிறிய விசயங்களைத் திறப்பவன்
தான் கொண்டுவந்த அற்புதங்கள் தீர்ந்தவுடன்
எல்லோரின் ஞாபகத்திலிருக்கும் ஒரு நிம்மதியை
சிறு செடியென நீட்டுகிறான்.
6.
ஒரு பிரார்த்தனையின் காய்ந்த வடிவம்,
ஒரு பழுப்பு இலையின் சாயலுடையது தான்.
7.
அன்றாடத்தின் வெறுப்புகளை சிறுசிறு மாத்திரைகளாக்குபவன்
துருப்பிடித்த வலிகளை அர்த்தமென விழுங்கச் சொல்கிறான்.
உலகின் குரல்வளைகளை ஒவ்வொன்றாகக் கிழிப்பதற்கு
அவனிடம் வேறேதும் ஆயுதங்களில்லை.
8.
ஒரு பெரும் துயரத்தைச் சமப்படுத்துவதற்கென
தன்னை முழுவதுமாகக் காலியாக்கிக் கொண்டவன்,
ஒரு பள்ளத்தாக்கின் காய்ந்த புல்லாகவும்
ஒரு மண்டையோட்டின் சிரிப்பாகவும்
ஆகிக் கொள்கிறான்.
9.
கனிந்த துரோகமொன்று கிழிந்து கிடப்பதைப் பார்ப்பவன்
கண்ணீரின் மென்மையை அதற்குள் வைத்து தைத்து முடிக்கிறான்.
வலியின்றி முறியும் ஒரு இதயத்தின் லாவகத்தைத் தான்
நீங்கள் அருகாமையில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
10.
சட்டைப் பொத்தான்களை மேலும் கீழுமாக போட்டிருந்தவன்,
சிலுவைகள் பதிந்திருக்கும் சுவருக்கருகில்
தன்னுடலைக் கிடத்தியிருக்கிறான்.
தேவமகனின் சுவரொட்டியைப் போலிருக்கிறதது.