பா.ராஜா கவிதைகள்

நிலுவை

ஏமாற்றிட
எண்ணமில்லை.
நம்பிக்கொடுத்தவர் முன்
நாணயம்
அரூபமாய்ச் சுழன்று
தள்ளாடுகிறது.
தாமதம் வேண்டாம் என
ரீங்காரமிடுகிறது
இரவுப்பூச்சி.
வாகனமில்லையே
என்றதும்
கால்கள் இருக்கிறதே
என்கிறது.
காலணி இல்லையே
பாதங்களை விடச் சிறந்த காலணி ஏது.
கால்களில் பெரு நோவு
கைகள் இருக்கிறதே.
கைகளால் எப்படி?
சரி விடு
சரீரத்தைப்
பயன்படுத்து
சாலையில் உருட்டு.

வட்ட வடிவப்பாதை

விருப்பம்
விருப்பமில்லை
என்பதற்கெல்லாம் மாறாக
முந்திச்
செல்ல
பின் சக்கரத்தால்

எப்போதும் முடிவதில்லை
என்பதே நியதி
இருந்தும்
அது
தன்னை முந்தவே
இத்தனை வேகமாய்ச்
சுழல்வதாய் எண்ணி
முன் சக்கரம் அடையும்
பதற்றமும்
கலவரமும்
இப் பயணத்திற்கானதொரு
சிறந்த வழித்துணை
அல்லது
நாணயத்தை மேல் நோக்கிச்
சுண்டும்
விளையாட்டு.

பாடல்

இசைக் கருவியை மீட்டியபடி
வாசலில் நின்று குரலெழுப்பியவருக்கு
ஸ்ரீ ராமர் வேடம் மிகப் பொருத்தமாயிருந்தது.
உள்ளிருக்கும் நான்
அன்றே தான்
கஞ்சன் வேடமிட்டிருந்தேன்.
அவரின் கீர்த்தனையில்
மனம் லயித்தாலும்
என் வேடத்திற்கு நியாயம் சேர்க்க வேண்டுமே.
எனக்குத் தெரிந்தவாறு
ஒரு பஞ்சப்பாட்டை
நானும் பாடினேன்.
திரும்பி
அடுத்த வீடு நோக்கி நடந்தார்.

நான்
தானமளிக்காதது குறித்து
அந்த வண்ண முகத்தில்
துளி வெறுப்பில்லை
சுதியில் சிறு குறையில்லை.
என் பாடல் தான்
உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

Previous articleஜீவன் பென்னி கவிதைகள்
Next articleபூவிதழ் உமேஷ் கவிதைகள்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments