பூவிதழ் உமேஷ் கவிதைகள்

1.

நிலமும் பொழுதும் பழைய உயிரினம்

நரிவால் என்று செல்லமாக அழைக்கும் தினையும்

கம்பும் பாலேறினால்

காவலுக்குச் செல்லும் நான்

கிளிகளையும் கட்டை விரல் சிட்டுக்களையும்

விரட்டுவதற்குச் சலித்துக்கொள்வேன்

இரவைவிடப் பெரிய விலங்கு பகலென்று  பொருமுவேன்.

தையல்சிட்டுக்களோ

எருக்கம் விதைகள் போலக் காற்றில் மிதந்தபடியே கொறிக்கும்.

பரண்  மீது ஏறி சீமெண்ணெய் டின்னைத் தட்டுவேன்

விசிறி பறக்கும் பறவைகள்

ஒலி மட்டுப்படும்போது தாழ்வதும் பிறகு பறப்பதும்

இசை தவிர்த்த நடனம்.

பயிர் வளர்ந்தால் நிலம் வளரும் என்று சொல்லும் தாத்தாவிடம்

ஒரு நாள்,

கிளிகளை விரட்டுவதற்குப் பதிலாய்

வெட்டிவிடலாம் என்று கோபப்பட்டேன்.

காகங்களின் கால்களில் நடந்தபடி வந்த அவர்

நிலமும் பொழுதும் உலகின் பழைய உயிரினம் பிறகே மற்றவை

உன்னிடம் இருக்கும் வயிற்றை விரட்டிவிட்டு

கிளிகளை வெட்டு என்றார்.

அடுத்த விதைப்பிலிருந்து

ஒரு பிடி தினையும் கம்பும் ஊடுபயிராயின,

எவ்வளவு முயன்றும் வயிற்றை விரட்டத் தெரியாததால்.

2.

எருமைகள் நடக்கத் தெரிந்த மீன்கள்

சாமைத் தாளடியில் கிடைக்கும்

காடை முட்டைகளைச் சாணியில் பொதித்துச் சுட்டு

ஊதி ஊதி

கையும் வாயும் தின்னும் ஐப்பசி மோடத்தில்

‘எக்கா எக்கா கொஞ்சம் தாவு விடு’ -என்ற

நரிக்கதைதான் தினமும் எங்களுக்குக் கனப்பு நெருப்பு.

உடல் நகர்ந்தாலும் குளிரும்

மனசு நகர்ந்தாலும் குளிரும்

அந்நாள்களில்  உப்பால் செய்யப்பட்டவர்கள் போலவும்,

ஈர வாசனையைத் திருமணம் செய்துகொண்டவர்கள் போலவும்

இரட்டை தூல கூரை முகட்டுக்குக் கீழேயே இருப்போம்.

இருந்த ஒரே துண்டு நிலத்தில் விளைந்த

பழுத்து நனைந்த தடினிக்காய்களை

மூடவும் முடியாமல்

உனக்கவும் முடியாமல்

நாளெல்லாம் வாயின் வடிவத்தில் வார்த்தைகளைத்

தேடித் தேடி மழையைப் பனாத்தும் அம்மா

குடை என்ற சொல்லோடு மட்டும் நடந்து

நனையாமல் திரும்பிவருவாள்.

தெளிவை மனதின் நிறமாகக் கொண்டவள் போலவும்,

திரும்ப திரும்ப முளைக்கும் ஒரே தானியம் போலவும்

திரிந்து சுற்றி

மழை ஈரத்தைச் சுத்தம் செய்ய

சூரியனை எதிர்பார்த்தபடியே இருப்பாள்.

வேடனுக்குத் தெரியாமல்

கடைசி பறவையை

மரங்கள் எப்படியாவது ஒளித்து வைக்கும் ஊரில்

காகங்கள் அழுவதற்குப்

பழக்கப்பட்ட ஊரில் குடியிருக்கிறோம்~என

எப்போதும் சொல்லும் அப்பா,

புளியமரத்தடியில் வளர்ந்த சொடக்குத் தக்காளிப் பழங்களையும்

மழையில் ஊர்ந்து வரும்

செங்கால் நண்டுகளையும் சேகரித்து வருவார்.

பாம்பைக் கத்தி போலப் பயன்படுத்த

ஒரு நல்ல கைப்பிடியைத் தேடுவது போலவும்

கடையடுப்பு சாம்பலில் உள்ள

ஒளியைப் பயன்படுத்துவது போலவும்

யோசித்தபடியே இருப்பார்.

ஈரம் அணிந்து ஊரே பூஞ்சை படர்ந்திருக்கும்.

மழையில் நனையும் எருமைகளுக்கு

நடக்கத் தெரிந்த மீன்களின் சாயல் வந்துவிட்டது என்று

ஊரெங்கும் அலர் பரவத் தொடங்கியது

வானத்தில் மோடம் வெளிவாங்க

மனிதர்கள் முளைக்கும் வெயில் வந்தது.

3.

பட்டியின் தடுக்குப்படல்

கீழுக்கு கம்பங்களி தின்றுவிட்டு

மேலுக்கு சோளக்கூழோடு போய்

நினைவில் உள்ள ஆடுகளை மேய்த்தேன்.

தாகத்துக்குத் தங்கச்சி, கள்ளி-முள்ளியானை

ஒடித்துத் தின்றபோது யோசித்தேன்

உலகில் பெரும்பாலான பெண்கள்

அழகான நாக்கு உடையவர்கள்

மீதியுள்ள சிலரும்

நாக்குகளுக்கு முன்பாக சொற்களை  நீட்டியவர்கள்தான்

முட்டாள்தனங்களிலிருந்து

மின்சாரம் எடுப்பதாக இருந்தால்

என் வீட்டில் மின் தடையே இருக்காது என்று

அவர்களுக்கு எப்படித் தெரியும்?

ஐய்யய்யோ கரம்பு தாண்டிவிட்டன வெள்ளாடுகள்!

கையில் இருக்கும் ஒத்தக் கொட்டை பனம்பழத்தின்

பொய்க்கொட்டையை சூப்பி சூப்பி

வாயைச் சுற்றி மஞ்சள் பூக்க-

நாக்கைச் சுற்றி நமச்சலெடுத்துவிட்டது.

வாயைக் கழுவிவிட்டு வேகமாகப் போவதற்கு

இந்தக் குளத்தில் மூழ்கி

ஆடுகளின் அருகில் உள்ள

இன்னொரு குளத்தில் வெளிவருவதுதான் சுருக்குவழி.

ஆனால் சதுரக்கள்ளி வேலி கடந்த திருட்டு ஆடு

மூளையும் இதயமும் இல்லாத ஏழை விலங்கு போலத்

தலையைத் தூக்கிப் பார்த்தது.

பூமி என்ற மிகப்பெரிய உணவு தட்டைத்

தொரட்டியால் தட்டினேன்.

உடைந்த வாயோடு சாப்பிட

எந்த ஆட்டிற்கும் விருப்பமில்லை.

புவியீர்ப்புவிசையை அதிகம் மதிப்பதுபோல்

தலையைத் தொங்கப் போட்டபடி எல்லா ஆடுகளும் வந்தன.

பட்டியின் தடுக்குப்படல் திறந்திருந்தது.

4.

வினா-விதை புத்தகம்.

பக்கம் – 1

நன்றாக முளைக்கக் கூடிய சில மீன்கள் வேண்டும் என்று கேட்டேன்

எங்கு விதைப்பதாக உத்தேசம் என்றான் மீன்காரன்

அறுவடைக்கு எளிதாக இருக்கட்டுமே என்று வீட்டைச் சுற்றி விதைக்கலாம் என்றிருக்கிறேன் .

உன் வீடு எங்கே இருக்கிறது?

அதோ அந்தப் படகில்.

பக்கம் – 2

காதல் பறவைகள் விற்கும் வியாபாரியிடம் என்னிடம் தானியங்கள் இருக்கின்றன அதை விதைப்பதற்கு சில பறவைகள் வேண்டும் என்று கேட்டேன்

உன்னிடமே உழவு கருவிகள் இருக்கும்போது  எதற்காகப் பறவைகளை வாங்குகிறாய்?

தானும் பறந்து தன் நிழலை நிலத்தில் ஊன்றும் பறவைகளால்தான் என்  தானியங்களை  விதைக்க முடியும்.

உன் நிலம் எங்கே இருக்கிறது?

இந்தப்  புவியெங்கும்.

அதற்கு சில பறவைகள் போதாது எல்லாப் பறவைகளையும் வாங்கிக்கொள் எனக் கூண்டுகளைத் திறந்துவிட்டான்.

பக்கம் – 3

கப்பி மணலிலிருந்து எடுத்த ஒரு  கூழாங்கல்லைக்  கொடுத்து இது என்ன விதை என்று  பார்வையற்றவனிடம் கேட்டேன். வாங்கியதும்  சிறிதும் தயக்கமின்றி, இது ஆற்றின் விதை, இதற்கு நீராலான இலைகளுண்டு ஆனால் வேர்கள்தான் பொறுப்பற்றவை வளர்கின்ற இடம் தெரியாமல் வளரும்.

பக்கம் – 4

ஒரு பனைமரத்தை நீளமான விதை என்று சொல்வதில் உங்களுக்கு கருத்து மாறுபாடு உண்டா என்றுதான் அவர் பேச்சைத் தொடங்கினார். துடைப்ப குச்சிகளும் விதை என்பதிலே மாற்றுக் கருத்து இல்லாதவன் நான் என்றேன். அவர் வந்தது போலவும் வராததுபோலவும் சென்றார்.

பக்கம் – 5

பாறைகளே நம்மிடம் இருக்கும் பெரிய  விதைகள் ஆனால் அவை பூமியிலிருந்து விதைகளாகவே முளைத்து வந்தன என்பதுதான் வினோதம்.

பக்கம் – 6

ஆமையே நீ உறுதியான ஓடுள்ள விதைதானே?

இல்லையில்லை  தண்ணீர்தான் எனக்கு ஓடு.

இவ்வளவு மென்மையான ஓட்டை நான் அறிந்ததில்லை..

இருளை  ஓடாக உடைய விதைகளும் உண்டு  , காற்றை  ஓடாக உடைய விதைகளும் உண்டு., கற்பிதங்களில் இருந்துவிடுவதால் உண்மை தெரிவதில்லை என்றது ஆமை.

பக்கம் – 7

புத்தகங்களை உலர்கனி என்று சொல்லும்   நூலகர் அவற்றைத் திறந்து படிக்கும்போது இருபுற வெடிகனி  என்பார். எந்தக் கனியாவது இவ்வளவு நேர்த்தியாக வெட்டப்பட்டது  போல இருக்குமா ?  புத்தகத்தை விரித்துப் படித்தேன். சொற்களைக் கொத்துகிறாயா  கிளையில் அமர்ந்து கொள் என்று நாற்காலியைக் காட்டினார்.

இங்கிருந்து பறக்கும்போது உன் கிளையை நகர்த்திவிட்டுச் செல் என்றார்

அன்று  வேகமாக வீட்டிற்குச் சென்றேன். ஏண்டா  இப்படி அரக்கப் பறக்க வந்திருக்கிறாய் என்றாள் அம்மா, ஓர்  இருபுற வெடிகனி மேசைமேலிருந்தது.

பக்கம் – 8

இறப்பவர்கள்  கடைசி மூச்சை இழுக்கும்போது காற்றுதான் புவியின் முதல்  விதை என்று சொல்லிக்கொள்கிறார்கள். காற்றை நட்டுவைக்கும் பொருட்டே தங்களைப் புதைக்க அனுமதிக்கிறார்கள் அக்காற்றின் வேர்தான்  புவியினுள்  நீரூற்றாக ஓடுகிறது

பக்கம் – 9

ஒருவேளை புதைக்கப்பட்ட மனிதர்கள் முளைத்தால் கைகளை நீட்டுவதன் வழியேதான் முளைப்பார்கள் சில  பெண்கள் கூந்தலால் முளைக்கவும் கூடும். கால்கள் மண்ணுக்குள்ளேயே வளரும்  ஆனால் இதயத்தை மேலேற்ற முடியாததால் உள்ளேயே அமிழ்வார்கள்.

poovithal-umesh-kavithgal

Previous articleபா.ராஜா கவிதைகள்
Next articleபேட்ரிக் கவனாஹ் கவிதைகள்
Avatar
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நவலை என்னும் சிற்றூரில் பிறந்த இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சொற்களால் பொம்மை செய்பவன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இவர்- வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி என்ற கவிதைத் தொகுப்பும் மூலம் பரவலான கவனம் பெற்றார். இவர் சிறார் இலக்கியத்திலும் வலுவான தடம்பதித்து வருகிறார். தங்கக் குருவி, காடனும் வேடனும், ஊசி எலியும் ஆணி எலியும் ஆகிய மூன்று நாவல்கள் உட்பட பத்து நூல்களை எழுதியுள்ளார். அடுத்ததாக சதுரமான மூக்கு என்ற கவிதைத் தொகுப்பு நூலும் (ஆகுதி பதிப்பகம்) "a piece of moonshine at dinner" ( Writersgram publication ) என்ற ஆங்கில கவிதைத் தொகுப்பு நூலும் வெளிவந்துள்ளன. மேலும் இவர் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் இளம் படைப்பாளர் விருது, சௌமா இலக்கிய விருது, திருப்பூர் இலக்கிய விருது பெற்றுள்ளார்.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments