பேட்ரிக் கவனாஹ் கவிதைகள்

  1. என் தந்தையின் நினைவாக

நான் காணும் ஒவ்வொரு வயதான மனிதரும்

என் தந்தையை  நினைவூட்டுகின்றனர்

ஒருமுறை அவர் புற்கட்டுகளை  அடுக்கிக்கொண்டிருந்தபோது

மரணத்தோடு காதலுற்றார்.

கார்டினெர் சாலையில் நான் காணும்,

நடைபாதை கல்மீது தடுமாறிச்செல்லும் அம்மனிதர்

தன் பாதிக்கண்களால் என்னை முறைத்துப்பார்த்தபடி இருந்தார்

ஒருவேளை நான் அவருடைய மகனாகவும் இருந்திருக்கலாம்

பிறகு லண்டனின் பேஸ்வாட்டரில் ஒழுங்கற்று இசைத்த

பிடில் இசைக்கலைஞரையும் எனக்கு நினைவிருக்கிறது,

அவரும் எனக்கு புதிராகவே இருந்தார்.

வண்ணமயமான, அக்டோபர் வானிலையில்,

நான் காணும் ஒவ்வொரு வயதான மனிதரும்

என்னிடம் சொல்வதுபோலிருக்கிறது

நான் ஒருமுறை உன் தந்தையாக இருந்தேன் என.

  1. * ப்ரிம்ரோஸ்

நான் அமர்ந்திருந்த கரையோரம் விளையாடும் குழந்தையொன்று

என் மனதில் சிறிய ப்ரிம்ரோஸை பூக்கச்செய்தது.

சத்தியத்தின் கையெழுத்துப் பிரதியில் அந்த சின்னஞ்சிறு பக்கத்திலிருக்கும்

களங்கமின்மைதான் இருக்கும் வளங்களிலெல்லாம் சிறந்ததெனக் கூறுவேன்.

அந்த உருமாற்றமடைந்த ஏசுவை நான் அச்சமின்றிப் பார்த்தேன்

கனிவாகவும், மிக அழகாகவும் இருந்த அவ்வொளியை,

மேலும் புனிதஆவி கையெழுத்திட்ட அச்சுடரை

நான் என் கண்ணீரின் லென்ஸ்களால் வாசித்தேன்.

பின்னர் என்பார்வை மங்கிப்போனது, சொர்க்கம்போல் ஒளிர்ந்திருந்த

அந்த ப்ரிம்ரோஸை பின்பு என்னால் காணமுடியவில்லை,

மேலும், நட்சத்திரங்களுக்கிடையில் பேய்போல விரவியிருந்தது

மரத்தின் நிழலொன்று.

சோர்வடைந்த வீரர்களைப்போல கடந்துசெல்லும் காலமானது,

புல்வெளியில் அதிசயங்களைக் காணும் தருணங்களை

அதன்பிறகு ஒருபோதும் எனக்கு வழங்கவில்லை.

* மஞ்சள் மலர்கள் கொண்ட காட்டுச் செடி

3. தலைப்புச்செய்திகளுக்கு அப்பால்

காட்டு வாத்துகள் தங்கள் கச்சிதமான வடிவத்தில்

இஞ்சிகோரின் தளவாடங்களை நோக்கிப் பறப்பதைக் காண்கிறேன்,

மேலும் நானறிவேன்

அவற்றின் இறக்கைகள் போரின் சிறகுகளைக்காட்டிலும் விஞ்சியதென்று,

அத்துடன் ஒரு மனிதனின் எளிய எண்ணங்களே அன்றைய தினத்தின்

உரத்த பொய்யாக எஞ்சியிருக்கின்றன.

பயம்கொள்ளாதே, பயம்கொள்ளாதே

நான் என் ஆன்மாவிடம் கூறிக்கொள்கிறேன்:

காலத்தின் குழப்பமான தருணமென்பது

நீரற்ற வெற்றுவாளி சலனமடைவதைப் போன்றது,

இறுதியில் போராடியவர்களில் யார் சிறந்தவரென்று

கூறப்போவது நீங்களே.

கடவுளின் வீட்டைநோக்கி விரைபவர்கள் மட்டுமே

எப்போதும் பறந்து-சென்றபடி இருக்கின்றனர்.

4. கிறிஸ்துமஸ் 1939

ஓ தொட்டிலிலாடும் தெய்வீகக் குழந்தையே

என்னுள் இருப்பது யாவும் கவிதைகளே.

இப்போது இந்த கனவானது

உனது குழந்தைப்பருவத்தை நான் காணும் கனவா

அல்லது என்னை நீ காணும் கனவா..?

ஓ தொட்டிலிலாடும் தெய்வீகக் குழந்தையே

என்னுள் பொதிந்திருக்கும் யாவும் சத்தியங்களே.

ஒருவேளை குழந்தைகளின் தத்துவத்திலிருக்கும்

ஏற்ற இறக்கத்திற்கேற்ப

என் மனநிலையும் இசைந்துபோகிறதோ என்னவோ.

ஓ தொட்டிலிலாடும் தெய்வீகக் குழந்தையே

எல்லா இறுமாப்புகளும் என்னுள்தான் இருக்கின்றன,

ஒருவேளை என் மனம் தலைவணங்கி நிற்பதுதான்

உன் தாயின் பாதங்களோ.

ஓ தொட்டிலிலாடும் தெய்வீகக் குழந்தையே

எல்லா இன்பங்களும் என்னுள்தான் அடங்கியிருக்கின்றன

எனதிந்த ஆன்மாவையே அழிவிலிருந்து காப்பாற்றியதல்லவா

உனது இந்த குழந்தைமை

ஆசிரியர் குறிப்பு :

ஐரிஷ் கவிஞரான பேட்ரிக் கவனாஹ், தனது எழுத்து வாழ்க்கையை ”ஐரிஷ் இலக்கிய மறுமலர்ச்சியின்” கடைசி ஆண்டுகளில் தொடங்கி கவிதை, புனைகதை, சுயசரிதை மற்றும்  ஏராளமான கட்டுரைகளையும் எழுதினார். ஐரிஷ்-ன் மூத்த கவியான வில்லியம் பட்லர் ஈட்ஸ்க்குப் பின்னே, கவிதையின் போக்கினை மடைமாற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர். மேற்க்கண்ட இந்த கவிதைகள் யாவும் பெங்குவின் வெளியீடான “collected Poems of Patrick Kavanagh” edited by Antoinette Quinn என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

Previous articleபூவிதழ் உமேஷ் கவிதைகள்
Next articleஇன்பா கவிதைகள்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments