காற்றிலோர் கீதம்

                                     (1)

விடியற்காலை நேரத்தில் பயணமாகப் புறப்பட்டது கடைசியாக எப்போது என்று ஞாபகத்தில் பிடிபடவில்லை. சமீப வருஷங்களில் அப்படியான பயணம் வாய்க்கவும் இல்லை. உறக்கம் கலைந்துவிடும் அதிகாலைகளில் மனதிற்குள் ஒலிக்கும் இசைக்குச் சொற்களைத் தொடுத்தவாறே படுக்கையில் கிடப்பேன். இன்றைக்கோ இளங்குளிரினூடே வெந்நீரில் குளித்து நெற்றியில் விபூதியின் வாசனை மணக்க சலவை ஆடையோடு கிளம்பியதில் அபூர்வமான மனநிலை கூடிவிட்டிருந்தது.

ஊர் இன்னும் முழுதாக விழித்திருக்கவில்லை. இன்னும் சில நிமிஷங்களில் கறவைக்குச் செல்பவர்கள் நடமாட்டத்தைத் தொடங்கிவைப்பார்கள். பின்னலாடை ஆலைக்குச் செல்கிறவர்கள், பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள் என்ற வரிசையில் பிறகு அதிகரிக்கும். பெரும்பாலான வீடுகள் தோட்டங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதால் ஊர் மெலிந்துவிட்டது. முன்னிருந்த உயிர்ப்பில் கால்வாசிகூட இல்லை.

வாசலில் நின்று வழியனுப்பினாள் அம்மா.  பார்வையிலிருந்து  மறையும்வரை வழக்கம்போல் நடையிலேயே நிற்பாள். மின்னொளி படிந்த வளவில் நடந்தேன். வெந்நீர்க் குளியலால் உடலில் குளிர் உறைக்கவில்லை. வைகறையைக் குறித்த பாடல்களை மனதுக்குள் தேடினேன். அதிகாலை ஒரு காட்சிப்படிமமாக  இருந்த பாடல்கள் பலவற்றின் பல்லவிகள் வரிசையாக ஒலித்து ஓய்ந்தபோது பிரதான சாலைக்குச் செல்லும் கிளைச்சாலையில் திரும்பியிருந்தேன்.

சாலையின் மருங்குகளிலிருந்த தோட்டங்களின் வேலிப்புதைகளில் சித்திரைப்பூச்சிகளின் ஓசைகள் அடங்கிவிட்டன. விடியலின் வருகையை அவை உணர்ந்திருக்கவேண்டும். தென்னந்தோப்புகளின் உச்சிக்குட்டுகளில் கருமை அடர்ந்திருந்தது. விடியலோடு சேர்த்து அதன் பச்சையும் சற்றுநேரத்தில் துலங்கும். உழுத நிலத்தின் மண்வாசனையை முகர்ந்தவாறே தலையுயர்த்தி நட்சத்திரங்களைப் பார்த்தேன். வெளிச்சத்தில் மறைந்துநின்று இருளில் தோற்றங்கொள்ளும் நட்சத்திரங்களின் மினுக்கொளி எத்தனையோ தொலைவு கடந்துவந்து இக்கணத்தில் உயிரோடு பிணையும் ரசவாதம்.

பழகிய பாதைக்குத் தூரம் குறைவு. சீக்கிரத்திலேயே ஊர்ப்பிரிவுக்கு வந்துவிட்டேன். கடைகள் இன்னும் திறந்திருக்கவில்லை. ஊர்ப்பிரிவின் முகம் பல வருஷங்களாக மாறிவருகிறது. வடக்கே அரிசி ஆலையிலும் தெற்கே பின்னலாடை ஆலையிலும் விளக்குகள் ஒளிர்ந்தன. திருப்பூருக்கும் பழனிக்குமிடையேயான ஒற்றைச்சாலையாக இருந்தது இன்று நான்குவழி நெடுஞ்சாலையாக மாறிவிட்டது. கிழக்கும் மேற்குமாக கிளைச்சாலைகள் ஊடறுப்பதால்  நாற்சந்தியில் சமிக்ஞை விளக்குகூட வந்துவிட்டது.

பழனிக்கு ஒருநடைபோய் முருகனைப் பார்த்து வரும்படி அம்மா நச்சினாள். மறுப்பாய் சடைந்ததற்குக் கண்ணீர் விட்டாள். விவாகரத்தை நோக்கிச் செல்லும் என் திருமண வாழ்க்கையைத்  திரும்பக்கட்டிவிடும் முனைப்பில் அம்மா கிரகங்களையும் தன் மருமகளையும் துரத்துகிறாள். ஏதோவொரு தருணத்தில் சொல்லக்கூடாத சொல்லைச் சொல்லி அது ஆழமான காயத்தை உண்டாக்கிவிட மகளைத் தூக்கிக்கொண்டு சீராட்டு போய்விட்டாள் மனைவி. என் வாழ்க்கையை இயற்கையின் தன்கதியில் விட்டுவிட்டதால் கடவுள், கோவில், கிரகம், பூசை, பரிகாரம்  எதுவும் தேவைப்படவில்லை. ஆனால் அம்மா தேவைப்படுகிறாள்.  சொல்லை மீறினால் உள்ளேயே அழுந்துவாள். அதனாலேயே அவளிடம் அடங்கிவிடுகிறேன். எனக்காக எத்தனையோ தன் வாழ்க்கையில் அழுந்திவிட்டாள். அவளுக்கு நம்பிக்கையைக் கொடுக்குமானால் ஒருநடை போய்வருவதில் என்ன குறைந்துவிடப்போகிறது என்று கிளம்பிவிட்டேன்.

மேற்கூரையின் பக்கவாட்டு விளிம்புகளில் சிறிய விளக்குகள் மின்னி மின்னி மறைய வடக்கேயிருந்து பேருந்து வந்தது.  பழனியில் விசேஷ நாளென்றால் பேருந்துகளில் கூட்டம் வழியும். இன்று சாதாரண நாள்தான். அவ்வளவு கூட்டமில்லை. மூவர் அமரக்கூடிய இருக்கையின் நடைவழிமுனையில் அமர்ந்தேன்.  நடத்துநர் கொடுத்த பயணச்சீட்டைச் சட்டைப்பையில் சொருகும்போதே கவனம் பேருந்தில் ஒலித்த பாடலில் குவிந்தது. ஓட்டுநர் ரசனைக்காரர் என்பது மூன்றாவது பாட்டில் தெரிந்துவிட்டது.

ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தவனுக்கு இருபத்தைந்து வயது சொல்லலாம். கழுத்தில் காதணிபாடி சரிந்து கிடந்தது. சென்னையிலோ பெங்களூரிலோ மென்பொருள்துறையில் வேலை பார்ப்பவனாகத் தோன்றினான். கண்களை மூடியிருந்தாலும் பாடலில் லயித்திருப்பது முன்கம்பியில் மெலிதாக தாளமிட்ட விரல்களின் அசைவுகளிலிருந்து தெரிந்தது. வண்டி இடையன்கிணற்றைத் தாண்டியபோது அடுத்த பாட்டு தொடங்கியது.

அந்த இசைக்கோர்வையின் முதல் துணுக்கு செவிகளை அடைந்தவுடன் ரோமாஞ்சனம் ஏற்பட்டது. கண்களை மூடிக்கொண்டேன். ஏககணத்தில் மனக்கண்ணில் காட்சிகள் எதிரொளித்தன. உடலின் இறுக்கம் தளர்ந்து சிறகுகள் முளைத்தன. பல ஆண்டுகளாக நான் கண்ட கனவு நனவானதின் சாட்சியமாகவும் பிறகந்த நனவு கனவாகக் கலைந்ததின் சாட்சியமாகவும் அந்தப் பாடல் இருக்கிறது.  ஊனிலும் உயிரிலும் கலந்த கீதம்.  இருபத்துநான்கு வயதில் என்னுள் சூலாகி மலர்ந்தது. நான் எழுதிய ஒரே திரைப்பாடல். மொத்தத் தமிழ்நிலத்தையும் சொக்கவைத்து பதினைந்தாண்டுகள் கழிந்தபின்னும் துளியளவும் உயிர்ப்பு குறையாமல் வலைவெளியிலும் காற்றுவெளியிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. கண்களைத் திறந்தபோது அந்த இளைஞன் அனிச்சையாகச்  சொன்னான்.

“ச்சே… என்ன பாட்டு சார்? செம மியூசிக் இல்ல. அதுக்குச் சளைக்காம பாட்டும் என்ன மாதிரி எழுதிருக்கான்? இன்னும் அம்பது வருஷத்துக்கு இந்தப்பாட்டு தமிழ்நாட்ல  நிக்கும் சார்”. அவன் சொன்னபோது ஆமோதிப்பாய் தலையாட்டிவிட்டு  நீர்கோர்த்த கண்களைப் பேருந்துக்கு வெளியே திருப்பிக்கொண்டேன்.

ஞாபகங்கள் மங்கலாகப் படியத்தொடங்கும் பிராயத்திலேயே பாட்டின்மீதான பிரேமை ஏற்பட்டது. அப்பாவின் உருவம் வெளிறிய சித்திரமாய் நினைவில் உறைந்த பருவத்தில் உருவான வெற்றிடத்தை அம்மாவே நிரப்பிய நாட்களில்தான் ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஒன்றைப்போல இசையோடும் பாட்டோடும் உறவு ஏற்பட்டது. ஊர்க்கோவிலின் குழாய் ஒலிபெருக்கியிலிருந்து அதிகாலைகளில் ஒலித்த பாடல்கள்தான் நாக்கில் இசையைத்தொட்டு சேணம் வைத்தவை. மருதமலை மாமணியே முருகா, திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம். இரண்டும் மனசுக்குள் நாளெல்லாம் ஒலிக்கும்.

ஆண்குரலிலும் பெண்குரலிலும் குழுவாகவும் ஒலித்த எத்தனையோ பக்திப்பாடல்களின் வழியே கடவுளர்களுடைய கதைகளும் புகழும் அறிந்தேன். பாட்டில் இருக்கும் சொற்பொருள் உடனடியாக விளங்காவிட்டாலும் அதனுள் தொடர்ந்து புழங்கும்போது நுட்பங்கள் பிடிபட்டன. இசையின் தாளத்திலும் குரல்களின் பாவத்திலும் இருக்கும் அபாரங்களையும் சங்கதிகளையும் பெயர் தெரியாமல் உணரத்தொடங்கினேன். வளரவளர மனசுக்குள் வேறொரு சித்திரம் உருவானது. ஆற்றுநீரில் வண்ணப்பூக்கள் நிறைக்கப்பட்ட படகு மெல்ல மிதந்து நகர்கிறது. இசை ஆற்றொழுக்கான நதி, அதில் மிதந்துசெல்லும் பூக்கள் நிரம்பிய படகுதான் சொற்கள்.

பழசு புதுசு என்று வேறுபாடு இல்லாமல் வெறித்தனமாகத் திரைப்பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன். பாடல் எந்தப் பொழுதுக்குப் பொருத்தமானதென்று யோசிப்பேன். முன்னிரவுகளில் கேட்கப் பொருத்தமான பாடல்களே என் மனதிற்கு இனிமையாக இருந்தன ஆனால் முன்னிரவில் பாடல் கேட்கும் வாய்ப்பு வெகுநாள்வரை வாய்க்கவில்லை. பாட்டுக்கேட்க ஒரே புகலிடம் ரவியண்ணனின் தொட்டிக்கட்டு வீடுதான். வானம், சுவர்கள், பந்தல், பெரிய மரத்தூண்கள் எனப் பல அங்கங்கள் இணைந்த அந்த வீட்டுக்குள் இசை வேறொரு அடர்த்திகூடி ஒலிக்கும்.

அவருடைய அறைவீட்டுக்குள் சினிமா நடிகர்களின் இடுப்புயர வண்ணப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். நடிகர்களுக்கு என்று பிரத்யேகமாக வெளியாகும் மாத இதழ்கள் வழவழப்பான முகப்பு அட்டையோடு இருக்கும். அவற்றிலெல்லாம் எனக்கு ஆர்வமில்லை. பாட்டு மட்டும்தான். அவர் அப்போதுதான் சிடி ப்ளேயர் வாங்கியிருந்தார். பழைய ஒலிநாடாப்பதிவியும் செயலோடுதான் இருந்தது. அலமாரி  நிரம்ப ஒலிநாடாக்கள் அடுக்கியிருக்கும். அவருடைய இசையரங்கத்தில் எதையும் தொடக்கூடாது என்பது மட்டும் ஒரே விதி. தொடாமலே தழுவும் இசை எனக்குக் கிடைக்கையில் அந்த விதியை நான் மீறவில்லை.

நினைத்த நேரத்தில் பாட்டுக் கேட்க முடியாததுதான் ஒரே பிரச்சனை. ரவியண்ணன் வரும்வரை காத்துக்கிடக்க வேண்டும். அவர் வீட்டில் இல்லையென்றால் பாட்டும் இல்லை. ஒலிநாடாக்களின் காலம் முடிந்து குறுந்தகடுகளின் காலம் தொடங்கியிருந்தது. எனக்கும் ஒரு சிடி ப்ளேயர் வாங்கிக்கொடுக்கும்படி அம்மாவிடம் கேட்டபோது அப்புறம் பார்க்கலாம் என்று ஒரே வார்த்தையில் மறுத்துவிட்டாள். அப்பத்தாகூடச் சிபாரிசு செய்தாள்.

“ஏனம்மிணி, பாட்டாளி ஆசப்பட்டுக் கேக்கறதை வாங்கிக் கொடுத்தறது”

“சும்மா பொழுதுக்குப் பாட்டுக்கேட்டுட்டு இருந்தாப் போதுமா? படிக்க வேண்டாமா? கொஞ்சநாள் போவுட்டும்…” அம்மா உறுதியாகச் சொன்னாள். ஆனால்  நான் மனக்குன்னம் பிடித்துத் திரிவதைக்கண்டு ரவியண்ணனிடம் சொல்லி வானொலிப் பெட்டி வாங்கிக்கொடுத்தாள். பாட்டுப்பித்தோடு திரிந்தாலும் படிப்பில் சராசரிக்கும் மேலே என்பதில் அவளுக்கு ஒரு நம்பிக்கை. அவளுடைய படிப்பு நல்ல மதிப்பெண்கள் பெற்றும் பத்தாவதோடு தடைபட்டுவிட்டது. அப்பா போனபோது நான்குஏக்கர் நிலமும் ஐம்பது தென்னைமரங்களும் இருந்தன. அப்பத்தாவின் துணையோடு அம்மா விவசாயத்தில் வித்தை காட்டி வருமானம் எடுத்தாள். படித்து வேலைக்குப் போயிருந்தால் பெரிய நிர்வாகியாக இருந்திருப்பாள்.

அம்மா என் பாட்டுப்பித்தை அதட்டி எதுவும் சொல்லவில்லை. பாட்டுக் கேட்கும்போது கனவுமயமான உலகத்திற்குள் இருந்தேன். உடல், பசி, வியர்வை, இச்சைகள் எதுவுமில்லாமல் உயிர் மட்டும் ஒளியாய்ச் சுடரும் கனவுலகம். பாட்டுக் கேட்பது என்பது சொர்க்கத்தில் இருப்பதுதான். சுகம் மட்டுமே இருக்கும் இடத்திற்குத்தானே சொர்க்கம் என்று பெயர்? ஆனால் சினிமாப்பாட்டைக் கேட்கும் அனுபவத்திலிருந்த செறிவு அதே பாட்டைத் தொலைக்காட்சிப் பெட்டியில் காட்சிகளாகப் பார்த்தபோது கிடைக்கவில்லை.

பதினாறு பதினேழு வயதானபோது உடலுக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் கிளர்ச்சியைக் கொடுத்தன. மீசையோடு காமமும் காதலும் முளைத்தன. உயிருக்குள்ளும் உடலுக்குள்ளும் ஊற்றெடுத்த புதிய உணர்ச்சிகள் புதிய மனமொழியை உந்தி எழுப்பின. அந்த மனமொழி சொற்களாய் கனிந்தது. அதுவரை பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தவன் அவற்றின் மெட்டுக்களுக்கு எனது மொழியை வார்க்க ஆரம்பித்தேன். இந்த விளையாட்டு காதற்பாடல்களில்தான் தொடங்கியது.

மெட்டுக்களின் மீது அமர்த்திப்பார்த்த சொற்கள் ஆரம்பத்தில் பொருத்தமின்றி இடித்தன. சொற்களை எப்படிப் போட்டாலும் அவை இரண்டாந்தரமானவையாகவே தெரிந்தன. மனந்தளரவில்லை. கவிதையும் இலக்கணமும் படிக்கத் தொடங்கினேன். எதுகையும் மோனையும் சந்தமும் ஆராய்ந்தேன். நோக்கத்தில் விருப்பமும் காரியத்தில் வேட்கையும் அதிகரித்தபோது சொற்கள் பணிந்தன. சினிமாப்பாட்டின் மெட்டில் போடப்பட்ட பக்திப் பாடல்களை ஆராய்ந்தேன். பிடி கிடைத்தது.

ஐம்பது வருடங்களாகத் தமிழ்நிலத்தில் புகழ்பெற்று ஒலித்துக்கொண்டிருக்கும் திரையிசைக்கு என் சொற்களை எழுதிப்பார்க்க ஆரம்பித்தேன். வேறுபாடுகள் இன்றி எல்லா இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கேட்டாலும் என் ஊனோடும் உயிரோடும் கலந்தது இசையமைப்பாளர் ராகதேவனின் இசைதான். மண்ணின் இசை, சாஸ்த்ரீய இசை, மேற்கத்திய இசை இவற்றின் சங்கமத்தில் அவரிடமிருந்து ஊற்றெடுத்த இசைக்கு மனிதர்களின் துயரை ஆற்றுப்படுத்தும் இதம் இருந்தது. வேறெவருடைய மெட்டுக்களையும்விட அவருடைய மெட்டுக்களுக்கே என்னுடைய வரிகள் தன்னியல்பாக வந்தன.

பங்காளி நடராஜன்தான் முதல் ரசிகன். கோர்த்துச்சொல்லும் இரண்டு சாதாரண வாக்கியங்களைக்கூடப் பிரமாதம் என்று சிலாகிப்பான். ”புலவன்டா நீ பங்காளி” என்று அவன் முத்தாய்ப்பாகச் சொல்லும் வார்த்தைகள் என்னை மேலும் உருவேற்றின. இருவரும் ஒரே கல்லூரிக்குப் போனோம். அவன் கற்றது கணினி. நான் கற்றது தமிழ். என் பாட்டுப்பித்து மட்டும் குறையவில்லை. நோட்டுக்கள் நிரம்பிக் கொண்டிருந்தன. பிரபலமடையும் பாட்டுக்களின் மெட்டுக்களுக்கும் சொந்த வரிகளை எழுதிக்கொண்டே இருந்தேன்.

பாட்டோடு சேர்த்து கவனம் நவீன கவிதையின் பக்கமும் திரும்பியது. மொழியை இசைமையிலிருந்து பிரித்துவிட்டால் அதன் உயிர்ப்பு குன்றிவிடும். நவீன கவிதை சந்தத்தைக் கைவிட்டுவிட்டது. இந்த மொழியின் பேரழகான அணியான இசைமையைக் கவிதையிலிருந்து விலக்கிவிட்டால் பிறகது அருங்காட்சியக எலும்புக்கூடாகவே எஞ்சும். கவிதையை இசைமையோடு எழுதுவதை என் லட்சியமாக்கினேன். இடைநிலை மற்றும் சிற்றிதழ்களுக்கு அனுப்பிய கவிதைகள் பிரசுரமாகத் தொடங்கின.  

தமிழ் படித்து நான் என்ன செய்வேன் என்ற குழப்பமும் அச்சமும் அம்மாவுக்கு இருந்தன. ஆசிரியர் வேலைக்குப் போவேன் என்று நம்பியிருப்பாள். சினிமாவுக்குப் பாட்டு எழுதப்போகிறேன் என்றபோது அதிர்ச்சியாகிவிட்டாள். தமிழோடும் இசையோடும் வாழவிரும்பும் எனக்கு இதுவே சரியான திசை என்றேன் அவளிடம். அம்மாவின் இயல்பு என்பது என்னை மறுக்கமுடியாமல் நான் விரும்பியதை அனுமதித்துவிட்டு பிறகு அதற்கு எதிராகப் போராடுவது. என்னைத் தடுக்கமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு என் வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத்தைத் தானே உருவாக்கி வைத்துவிடும் முனைப்பில் தன்னை ஆழ்த்திக்கொண்டாள். இந்த  நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியதற்காகச் சில சமயங்களில் வெட்கினாலும் எனக்கு வேறு வழிகள் எதுவும் இருந்திருக்கவில்லை.

 (2)

சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருந்து தொடங்கி அண்ணா சாலையின் மறுமுனைவரை வேடிக்கை பார்த்தவாறே  நடந்தேன். எத்தனை விதமான கட்டிடங்கள்? வாகனங்கள்? பார்க்கச் சலிக்கவில்லை.  செழிப்பின் அத்தனை தடயங்களோடும் இருக்கும் நகரத்தின் ராஜபாட்டை. வெயிலும் புழுக்கமும்தான் பிரச்சனை. ஆரஞ்சுமிட்டாய்கள் எப்போதும் கையில் இருக்கும்.  சோர்வாகும்போது ஒன்றை எடுத்துச் சப்பினால் களைப்பு நீங்கிவிடும். பேருந்தில் செல்லும்போது காணும் கணக்காட்சிகள் நினைவில் நிற்பதில்லை. நின்று பார்த்தால்தான் முழுமை கிடைக்கிறது. ஆகவே நடந்து நடந்து நகரத்தைக் கண்டுகொண்டிருக்கிறேன்.

கே.கே.நகர் அறையிலிருந்து கிளம்புவதற்கும் திரும்புவதற்கும் மட்டுமே பேருந்து ஏறுவது. இடையில் அடையவேண்டிய தூரம் மூன்று கிலோமீட்டருக்குள் இருந்தால் பெரும்பாலும் நடைதான். சாலிகிராமமும் வடபழனியும் கே.கே நகருக்கு அருகில் இருப்பதால் பிரச்சினையில்லை. அறைக்குப் பக்கத்திலிருக்கும் செட்டிநாடு மெஸ்ஸில் சாப்பாட்டுக்குக் கணக்கு. அம்மா பணம் கொடுக்கிறாளென்று ஊதாரியாய் இருக்க முடியவில்லை. சாயங்காலம்  நாயரின் மளிகைக்கடையில் ரேகாவிடம் வாங்கும் சிகரெட் மட்டும்தான் ஆடம்பரச் செலவு.  

நடராஜனும் ரவியும் முதலில் சென்னைக்கு வந்து அறை எடுத்து மென்பொருள் நிறுவனங்களில் வேலை தேடினார்கள். ஊரிலிருந்து வந்து அவர்களோடு சேர்ந்துகொண்டேன். இருவரும் முன்னிரவெல்லாம் தங்களுக்குப் பிரச்சனையாக இருக்கும் ஆங்கிலத்தை அகராதியை வைத்து ஆராய்ந்தவாறும் தங்களிடம் கேட்கப்பட்ட கணினி சம்பந்தமான கேள்விகளை விவாதித்துக்கொண்டும் இருப்பார்கள். நான் நூலகத்திலிருந்து எடுத்து வந்த கவிதைத்தொகுப்புகளில் மூழ்கியிருப்பேன்.

வாய்ப்பு தேடுவது எப்படி என்று குழப்பமாக இருந்தது. ஆசைகளையும் கனவுகளையும் மட்டும் முதலீடாகக்கொண்டு சென்னைக்கு வந்த லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். அப்படி வந்தவர்களின் வென்ற கதைகளும் தோற்றழிந்த கதைகளும் ஏராளமாகப் புழங்குகின்றன. பிரசுரமான என் கவிதைகளின் கைப்பிரதி மற்றும் மெட்டுக்களுக்கு எழுதி வைத்திருந்த பாடல்களில் சிறந்தவை எனக் கருதிய நூறு பாடல்களின் கைப்பிரதி இரண்டையும் ஐந்து நகல்பிரதிகள் போட்டு வாய்ப்புத்தேட வைத்துக்கொண்டேன்.

எந்தெந்த பகுதியில் சினிமா பிரபலங்கள் வசிக்கிறார்கள், இயக்குநர்களின் அலுவலகங்கள் எங்கிருக்கின்றன, இசையமைப்பாளர்களின் ஒளிப்பதிவுக் கூடங்கள் எவையெவை என்ற தகவல்களைத் திரட்டியவாறு சுற்றினேன். எங்கும் உள்நுழைய முடியவில்லை. யாரையும் சந்திக்க முடியவில்லை. சினிமாவின் பிரம்மாண்டத்தையும் அதில் வாய்ப்பு தேடும் என் அப்பாவித்தனத்தையும் நினைத்து ஓரிரவில் மலைத்து அமர்ந்திருந்தபோது நடராஜன் சொன்னான்.

“பங்காளி, நீ மொதல்ல டைரக்டர்களை குறிவை. இப்போ டாப்ல இருக்கற பத்துப்பேரு ஆபிஸ்லேயே சுத்து. அஸிஸ்டெண்ட் டைரக்டர்னாதான் தொரத்தி விடுவாங்க, பாட்டெழுதறதுக்குப் போட்டி கம்மியாத்தான் இருக்கும், உனக்குத் தெரியுமில்ல பங்காளி, சினிமாவுல வெக்கம் மானம் பாக்கக்கூடாது, மனசுல கெளரவத்தை வச்சிக்கிட்டு தொட்டாச்சுருங்கியா இருக்காதே, எங்க ரெண்டுபேரையுமே  எடுத்துக்க, இதோட முப்பது இண்டர்வியூ ஆச்சு, எங்க இங்கிலீஷப் பாத்துட்டு சிரிப்ப அடக்க ரொம்பக் கஷ்டப்படுவாங்க. ஆனா  நாங்க வுடறதா இல்ல, இப்போ ரெண்டுபேருக்கும் இங்கிலீஷ் புடிபட ஆரம்பிச்சிருக்கு, இன்னொரு முப்பது இண்டர்வியூவுக்குள்ளே எப்படியும் ஒரு சின்ன கம்பெனிலயாவது வேலை வாங்கிற முடியும்னு நம்பிக்கை இருக்கு, ஜெயிக்கணும்னா அர்ச்சுனன் கண்ணு வேணும் பங்காளி”  

சினிமா பிரபலங்களின் வீடுகளும் அலுவலகங்களும் தி.நகரில் இருக்கின்றன என்று அங்கே ஒரு சுற்று வந்தேன். பிரம்மாண்டமான சுற்றுச்சுவர்களையும் வீடுகளின் அலங்காரமான மேற்தளங்களையும் பால்கனிகளையும் மட்டுமே பார்க்கமுடிந்தது. எவ்வளவு செல்வம்? எவ்வளவு வளமை? நானும் ஒருநாள் வாழ்வேன். நான் விரும்புவதை என் தாய்த்தமிழ் கொடுக்கும். இதோ இப்போது திரைத்துறையில் செல்வாக்கோடு இருக்கும் பாடலாசிரியர் தமிழமுதன் பாடல்களைவிடச் சிறந்தவற்றை என்னால் எழுதமுடியும்.

அந்தவாரத்தில் நாளிதழில் விளம்பரம் பார்த்தேன். “கவிதையிலிருந்து கானத்துக்கு” என்று தன் புதுக்கவிதைகள் சிலவற்றைப் பாடலாக அரங்கேற்றும் நிகழ்ச்சி ஒன்றை தமிழமுதன் ஏற்பாடு செய்திருந்தார். அனுமதி இலவசம். சனிக்கிழமை மாலை.  தமிழறிந்த தலைவரும் சமூகத்தின் முக்கியஸ்தர்களும் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களும் பாடகிகளும் தமிழமுதன் கவிதைகளைப் பாடலாகப் பாடினார்கள். வளர்ந்து வரும் இசையமைப்பாளர் கெவின் இசைக்கோர்வை அமைத்திருந்தார். இனிமையான குரலுடைய இந்தப் பாடகர்களின் நாவில் என் தமிழும் ஒருநாள் ஒலிக்கும். இப்படியாகக் கனவின் வழியே நம்பிக்கைகளை நெய்தவாறு நாட்கள்தான் கழிந்தனவே தவிர இந்தத் தொழிலின் விளிம்பில் இருப்பவர்களின் தொடர்பைக் கூட ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

”என்ன பண்றே நீ? அவனுக ரெண்டு பேரும் டக்-இன் பண்ணிட்டு விடாம தினமும் ஃபைலத் தூக்கிட்டுப் போறானுக. நீ இப்படி சுத்திட்டு இருக்கே? சினிமாவுல டிரை பண்றியா?’ கூட்டமில்லாத மதியத்தில் சிகரெட் வாங்கும்போது ரேகா கேட்டாள். சிகரெட்டைப் பற்றவைத்து ஓரமாய் நின்றவாறு தலையாட்டினேன். தோற்றத்தில் மலையாளம் தெரிந்தாலும் குரல் தமிழ்தான். பார்ப்பதிலும் அவளோடு பேசுவதிலும் தனி மகிழ்ச்சி. எங்கள் பார்வைகளிலும் பேச்சிலும் சற்றே பரஸ்பரம் கிளர்ச்சியூட்டிக்கொள்ளும் விகற்பமுண்டு.

“என்ன? அஸிஸ்டெண்ட் டைரக்டரா?”

“இல்லை… பாட்டெழுத”

“அட, கவிஞனா நீ? எங்கே ஒரு கவிதை சொல்லு பாக்கலாம்”

”இப்படி சட்டுனு கேட்டா எப்படிச் சொல்றது? அப்பறமா சொல்றேன்”

“நீ கவித சொல்லி அது எனக்குப் புடிச்சிருந்தா அன்னிக்கு ஒரு சிகரெட் ஃப்ரீ”

“இவ்வளவு இரக்கத்தோட இருந்தீனா நாயர் சொத்து அழிஞ்சுபோயிடும்”

வாய்விட்டுச் சிரித்தவள் தொடர்ந்தாள். “தெரியுமில்ல? இந்த ஏரியாவுல தடுக்கி விழுந்தா சினிமா ஆளுகதான். ஏதாவது வொர்க் பண்ணிக்கிட்டே சைடுல டிரை பண்ணு, இல்லீனா சர்வைவ் பண்ணமுடியாது”

அவள் சொல்வது புரிகிறது. பசியோடும் கனவின் மீதான வேட்கையோடும் எத்தனையோ பேர் இங்கே சினிமாவை சுமந்து திரிகிறார்கள். இதில் என் பாதையை எப்படிக் கண்டடைவது? திட்டம் தெரியாமல் குழம்பினேன். எழுபது கவிதைகளுக்குப் பக்கமாகப் பிரசுரமாகியிருக்கின்றன. சில பத்திரிகைகளின் உதவி ஆசிரியர்களைத் தெரியும். நேரில் சந்தித்தால் எழுதிய கவிதைகளுக்காக நின்று பேசுவார்கள். பத்திரிகையில் வேலை தேடலாம். கவிதைகளைத் தொகுப்பாகப் பதிப்பிக்க முயற்சி செய்யலாம். இடையில் ஊருக்குப் போயிருந்தபோது இளைத்துப் போயிருந்த அம்மா ஊருக்கே திரும்ப வந்துவிடும்படி நச்ச ஆரம்பித்துவிட்டாள்.

“செய், ஏதாவது செய்” மனசுக்குள் சதா முணுமுணுப்பு.

பிரபல வெற்றிப்பட இயக்குநர் எஸ்.சேது சேத்துப்பட்டில் தன் அலுவலகத்தில் புதுப்படக் கதைவிவாதத்தில் இருக்கும் துப்புக் கிடைத்துக் காத்திருந்தேன். என்னைத் துரத்துவதற்கு அவருடைய உதவியாளர்கள் செய்த முயற்சிகள் பலனளிக்காமல் உள்ளே போய்விட்டார்கள். அசையாமல் அங்கேயே நின்றிருந்தவன் அவர் காரிலிருந்து இறங்கியபோது வணக்கம் வைத்தேன்.

“சார், நான் கவிஞர்…”

பார்க்க மறுக்கும் முகத்தோடு முன்னகர்ந்துவிட்டார். என் குரல் அப்படியே அமுங்கிவிட்டது. அதற்குள் உதவியாளர்கள் ஓடிவந்து அவரைச் சுற்றிக் குழுமிவிட்டார்கள். கும்பல் உள்ளே போனபின் கடைசி உதவியாளன் போலிருந்தவன் மட்டும் நிதானமாகச் சொன்னான்.

“ஸார் டிஷ்கஷன்ல பிஸியா இருக்காரு, யாரையும் பார்க்க மாட்டாரு. சான்ஸ் கேட்டு வந்தீங்களா? ஏற்கெனவே பன்னிரெண்டு பேர் இருக்கோம். அட்ரஸ் கொடுத்துட்டுப் போங்க, இன்பார்ம் பண்றோம்”

“இல்ல அஸிஸ்டெண்டா இல்ல, பாட்டெழுதறக்கு”

“ஓ…” குறுகுறுப்போடு பார்த்தவன் சொன்னான்.

“அது இன்னும் கஷ்டமாச்சே? ஸாரோட காம்பினேஷன் தெரியுமில்ல. பத்துப் படத்துக்கும் ஒரே மியூஸிக் டைரக்டர், ஒரே பாடலாசிரியர். இத்தனை படத்துல தமிழமுதனத் தவிர வேறயாரும் பாட்டெழுதியதில்ல, எல்லா ஆல்பமும் எப்படி ஹிட்டுனு தெரியுந்தானே? செண்டிமெண்ட் ஜி செண்டிமெண்ட். டைரக்டர் மாத்த மாட்டாரு. அது என்ன கவிதைகள் ஃபைலா? வேணா கொடுங்க. நான் மைண்டல வைச்சிக்கிறேன்”

”இல்ல நானே பாத்துக்கறேன். தேங்க்ஸ்”

அது அப்படி முடிந்தது.

இலக்கியக் கூட்டங்களுக்குப் போனேன். திரைப்பட விழா நடந்தது. நான்குநாட்கள் உலகப்படங்கள் பார்த்தேன். பாட்டு இல்லாத படங்களில் எந்தெந்த இடத்தில் பாட்டு வைக்கமுடியும் என்று யோசிப்பது வேடிக்கை வினோதமாக இருந்தது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், பாடலாசிரியர்கள் எனப் பல முகங்களைப் பார்த்தேன். பிரெஞ்ச் தாடிகள், நீண்ட சிகை வளர்த்த அறிவுஜீவிகள் காட்சிகளினிடையே வாய்நிறைய சிகரெட் புகையோடு படங்களை விவாதித்தனர். என்ன? ஒவ்வொருவரைச் சுற்றிலும் வளையங்கள். இந்த வளையங்களில் ஏதேனும் ஒன்றுக்குள் நுழைந்துவிட்டால் சினிமாவுக்குள் நுழைந்ததுபோலத்தான்.

ஆறுமாதங்களில் ஓரிரு நண்பர்கள் அறிமுகம் ஏற்பட்டாலும் அவை நட்பாக வலுவடையவில்லை. காரியார்த்தமாக மனிதர்களைப் போஷிக்க எனக்குத் தெரியவில்லை. மனிதர்களைப் பராமரிப்பதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது. இப்படிப்பட்டவனுக்கு எப்படி சினிமா சரியாக வரும்? கவிதைத்தொகுப்பின் வழியே என் அடையாளத்தை உருவாக்கவேண்டும். வெறுமனே கதவுகளை முட்டுவதில் பயனில்லை. மனிதர்களோடு புழங்கிப் பழகவேண்டும். அதுவொரு தனிக்கலை. இதற்கெல்லாம் இன்னும் சில வருஷங்கள் தேவைப்படும், அதுவரை எப்படி அம்மாவைச் சமாளிப்பேன்? நான் களைப்படைந்த தருணத்தில்  நம்பிக்கையூட்டும் நன்னிமித்தமாக நடராஜனுக்கும் ரவிக்கும் கிண்டியிலிருந்த சிறிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. மாதம் நாலாயிரத்து எண்ணூறு ரூபாய் சம்பளம். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு அவர்கள் சாட்சியாக இருக்கையில் நான் மனந்தளரக்கூடாது.

அன்றைய நாட்களின் அதிகாலைகளில் உறக்கமின்மையால் அவதிப்பட்டேன். பின்னிரவில் உறக்கம் தெளிந்தால் விடியும்வரை உறக்கம் வருவதில்லை. அதிகாலையில் உலகம் ஆழ்ந்து உறங்குகையில் எனக்கு இப்படியொரு சிக்கல் ஆனாலும் உடலில் களைப்போ அசதியோ இல்லை. மனதில் கவிதைகளைக் கோர்த்துக்கொண்டு கிடப்பேன். ஐந்துமணிக்கு பல்துலக்கி நீர் குடித்துவிட்டு நடைபோக ஆரம்பித்தேன். பொழுதின் புழுக்கத்திலிருந்தும் மனதின் வெக்கையிலிருந்தும் காலைநடை ஆசுவாசப்படுத்தியது. அப்படியான தருணத்தில்தான் இயக்குநர் வெற்றிச்செல்வனைக் கண்டேன். முதல்படம் மிகப்பெரிய வெற்றி. இரண்டாவது படுதோல்வி. மூன்றாவது நஷ்டமின்றித் தப்பித்தது. சமீபமாக அவரிடமிருந்து எந்தப் புதுப்பட அறிவிப்புமில்லை.

சிறுநம்பிக்கை துளிர்த்தது. ஐந்துமணிக்குத் தொடங்கி ஆறுமணிக்கு முடிவடையும் நடைப்பயிற்சியில் அவரைத் தொந்தரவூட்டுவது சரியானதாக இருக்காது. ஆகவே அவரைப் பின்தொடர்ந்து வீட்டைக் கண்டுபிடித்தேன். என் அறையிலிருந்து நான்கு தெருக்கள் தள்ளி பூச்செடிகளும் சிறுமரங்களும் நிறைந்த தனி காம்பவுண்டுக்குள் மாடிவீடாக இருந்தது. சனிக்கிழமை நூலகத்திற்குச் சென்றுவிட்டு முற்பகல் பதினொன்றரை மணிக்கு அவருடைய வீட்டின் அழைப்புமணியை அழுத்தினேன். வாசிப்பதற்காக அன்றைக்குத் தாகூர் மற்றும் பாப்லோ நெரூதாவின் மொழிபெயர்ப்புக் கவிதைகளை எடுத்து வந்திருந்தேன். என்னுடைய கவிதைகள், பாடற்பிரதிகள் இரண்டும் கையிலிருந்தன. வெற்றுமார்பில் துண்டோடும் லுங்கியோடும் வெளியே வந்தவருக்கு வணக்கம் வைத்தேன். அவருடைய முதல்பார்வை என் கைகளிலிருந்த புத்தகங்களின் மீது விழுந்தது.

“ம்.. சொல்லுங்க”

“சார், என்னோடு பேர் கணேஷ் திருஞானம். வாய்ப்புக்காக…”

“தம்பி. ரூல் நெம்பர் ஒன். சான்ஸ் கேக்கறதுக்கு ஆபிஸுக்குத்தான் போகணும். இப்படி வீட்டுக்கு வந்து பிரைவசிய கெடுக்கக்கூடாது. பேர் என்ன சொன்னீங்க கணேஷ் திருஞானம்? கவிதை எழுதற ஆள்தானப்பா நீங்க?”

அவர் என்னை அறிந்திருப்பது ஆச்சரியத்தையும் புளகாங்கிதத்தையும் கொடுத்தது.

“ஏற்கெனவே ஏழெட்டுப்பேர் இருக்காங்கப்பா. அதுவும்போக எங்கையில் இப்ப படமில்லை. அடுத்த படம் எப்போன்னு தெரியாது. மூணுமாசம், ஆறுமாசம் இல்லீனா ஒரு வருஷம்கூட ஆகலாம். வேற யார்கிட்டயாவது டிரை பண்ணுங்க”

“சார், அஸிஸ்டெண்ட்டா இல்ல, பாடலாசிரியர் ஆகணும்னுதான் முயற்சி பண்ணிட்டிருக்கேன்” சொல்லியவாறே கையிலிருந்த நகல் தொகுப்புகளை நீட்டினேன்.

“இருக்கட்டும்யா, உன் கவிதைகள இதழ்கள்ல வாசிச்சிருக்கேன். நீ தரமான கவிஞன்தான். அஸிஸ்டெண்டா கேட்டீனாக்கூட வேலை செய்யச் சொல்லிருவேன். பாட்டு எழுதுறுதனா அதுக்கு மியூசிக் டைரக்டரையும் கன்வின்ஸ் பண்ணனும்ப்பா”

“சார், டைரக்டர்தானே கேப்டன். நீங்க மனசு வைச்சா நடக்காதா?”

“தம்பி… சினிமாவைப்பத்தி பொதுவெளில இருக்கற அபிப்ராயங்களை மொதல்ல கைவிடுங்க” சிரித்தவாறு சொன்னவரின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தேன். சட்டென்று அவருடைய விளிப்பு ஒருமைக்கு மாறியது.

”சரிப்பா. கவிதை வேற, பாட்டு வேற. இதுல மீட்டருக்குள்ள மேட்டரு கொடுக்கணும். நீ சிற்பியா இருந்தாலும் அம்மி கொத்தத் தயங்கக்கூடாது”

“மெட்டுக்கும் நல்லா எழுதுவேன் சார்”

“நம்பிக்கையெல்லாம் சரிதாம்ப்பா. அடுத்தபடம் உறுதியானா எதாவது பாக்கலாம். டச்ல இரு.” தலையாட்டியவாறு மறுபடியும் நகல்களை நீட்டினேன்.

”சார் , இதுல என்னோடு பிரசுரமான கவிதைகளும் பிரபலமான மெட்டுக்களுக்கு நான் எழுதுன பாடல்களும் இருக்கு. உங்க வாசிப்புக்காக சார்”

”விடமாட்டேங்கறியே. சரி கொடு” வாங்கிக்கொண்டார். நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தேன். திரும்பிப் பார்த்தபோது அவர் காம்பவுண்ட் கேட்டைச் சாத்திவிட்டு உள்ளே போவது தெரிந்தது. அரைநாள் அலுவலகம் முடித்துவிட்டு வந்த நடராஜனிடமும் ரவியிடமும் சொன்னேன்.

“நீ வேணா பாரு பங்காளி. இனி அதிர்ஷ்டக்காத்து உன் பக்கம் அடிக்கப் போகுது”

அது அதிர்ஷ்டமோ அல்லது தற்செயல்களின் பிசிரற்ற ஒழுங்கமைவோ நடராஜன் சொன்னது பலித்துவிட்டது. அவ்வப்போது வெற்றிச்செல்வனைச் சந்தித்துக்கொண்டிருந்தேன். பத்துநாள் கழித்து வரும்படி ஒரு தேதியைச் சொல்வார். காலைநடைக்கு அவர் இப்போது வருவதில்லை. அந்த வெள்ளிக்கிழமை நாளிதழின் சினிமாப்பகுதியில் அவருடைய அடுத்தபடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட தகவல் வெளியானது. மறுநாள் அதிகாலையிலிருந்து அவர் வீட்டுக்கு வெளியே காத்திருந்து வெளியே வருகையில் வணக்கம் வைத்தேன்.

“வாய்யா கணேஷ். உன்னத்தான் நெனைச்சிட்டு இருந்தேன். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை படத்தோட பூஜையும் ரெக்கார்டிங்கும் ஃபிக்ஸ் ஆயிருக்கு.  நாலு பாட்டு தமிழமுதன் எழுதறார். உனக்கு ஒரு பாட்டு கொடுக்கலாம்னு இருக்கேன். இசையமைப்பாளர் ராகதேவன் பத்தி தெரியுந்தானே? மேதை. உனக்கு அதிர்ஷ்டமய்யா. இத கெட்டியா புடிச்சுக்கோ. தமிழ்நாட்டையே முணுமுணுக்க வைக்கணும் பாத்துக்கோ. சாலிகிராமத்தில் ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு வெள்ளிக்கிழமை காலைல நேரமே வந்துடு”

படபடவென்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். உள்ளே மகிழ்ச்சியின் புதுவெள்ளம் கரைபுரண்டது. தமிழ்நிலத்தைத் தாலாட்டும் ராகதேவனின் இசையிலா நான் என் முதல் பாடலை எழுதப்போகிறேன்? அறிந்தவர் தெரிந்தவர் எல்லோரிடமும் தகவலைச் சொல்லி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள நினைத்தாலும் அடக்கி வாசிக்கச் சொல்லி மனதின் மறுகுரல் அறிவுறுத்தியது. துயரத்தை மென்று விழுங்குவதைவிடச் சந்தோஷத்தை உள்ளே புதைத்துக்கொள்வது கடினமான காரியம்.

அந்த ஒருவாரமும் கனவைப் போலிருந்தது. இதோ சிலநாட்களுக்கு முன் இந்தப் பிரம்மாண்டமான கோட்டைக்கு வெளியே அடையாளமற்ற கும்பலில் ஒருவனாக இருந்தேன். சட்டென்று எல்லாம் மாறி இதோ ராகதேவனின் அறைக்கு வெளியே காத்திருக்கிறேன். உள்ளறையிலிருந்து வெளிவந்த இயக்குநர் கண்ணசைத்து அழைத்தார். மெல்லிய பதட்டத்தோடு நுழைந்தேன். அறைக்குள் எல்லாமே வெண்மை. தும்பைப்பூ வெண்மையில் வேட்டி ஜிப்பாவோடும் வழுக்கைக்குக் கீழான நெற்றியில் குங்குமச்சிவப்பும் துலங்க ஆர்மோனியத்தின் முன்னே அவர் அமர்ந்திருந்தார். எங்கிருந்தோ ஒரு அரூபக்கரம் என் முதுகை உந்தித்தள்ள அவருக்குமுன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி எழுந்தேன்..

”அடடே.. எழுந்திரு, நல்லாருப்பே” புன்முறுவலோடு ஆசி சொன்னார். இயக்குநரின் இதழ்க்கடையோரமும் புன்னகை தேங்கியது. எழுந்து ஓரமாகக் கைகட்டி நின்றவனை அமரச்சொன்னபோது மெத்தையின் கீழே விளிம்பில் அமர்ந்துகொண்டேன். ஒரு பிரம்மாண்டத்தின் முன்நிற்பதை உணர்ந்து என் உடல்மொழி தானாகவே பவ்யத்தில் குழைந்துவிட்டது.

“உனக்கு முதல் பாட்டா? என்னய்யா வெற்றி? டூயட்தானே? சிச்சுவேஷனும் மங்கலமாத்தானே இருக்கு? சொன்னவர் என்னை மொத்தமும் ஊடுருவும் ஒரு பார்வை பார்த்தார். உள்ளே உயிர் அதிரும் வேகம் அவருக்குத் தெரிந்துவிட்டது.

”குரு, பையனுக்கு தண்ணி கொடுய்யா” உதவியாளரிடம் கைகாட்டினார். நீரை அருந்தியபின் மனம் சமனப்பட்டது. இயக்குநர் பாட்டுக்கான முன்னோட்டத்தை விளக்கியபோது ராகதேவனின் கரங்கள் ஆர்மோனியத்தை மீட்டின. முப்பதே நொடிகள். அவருடைய கரகரப்பான குரலில் பல்லவிக்கான மெட்டு தத்தகாரத்தில் எழுந்தது. இது அற்புதம். என் மனசு கூவியது. ராகதேவன் இயக்குநரைப்  பார்த்தார். அவர் திருப்தியாய் தலையசைக்க அறைக்குள் இப்போது அனைவரின் பார்வையும் என்மீது திரும்பியது.

நல்ல கலைக்குப் பூரணக் கணிதமுண்டு. மனம் மெட்டை அளந்து கணித்தது. வல்லினம் மெல்லினம் இடையினம், குறில், நெடில்… மெட்டில் எது எங்கே தொடுக்கப்படவேண்டும் என்று தீர்மானம் வந்தபின் உயிர் தன்வெளிப்பாடாய் சொற்களை மொழிந்தது. ஐந்தே நிமிஷங்களுக்குள் ஆறு பல்லவிகளை உரக்கச் சொல்லியவாறு வேறு யாரோ பிள்ளையார் சுழி இட்டிருந்த தாளில் எழுதி நீட்டிவிட்டு இருவரையும் பார்த்தேன். ராகதேவன் சொற்களோடு மெட்டை இசைத்தபோது ஆறு பல்லவிகளுமே பிசிறின்றி மெட்டில் அமர்ந்தன.  மலர்ச்சியான அங்கீகாரப் பார்வையைக் கொடுத்தவர் திரும்பத்திரும்பப் பாடி பல்லவியை இழைத்தபோது மிகப்பெரிய வெற்றியை அடையப்போகும் பாடலின் இனிய மென்னதிர்வுகள் அந்த அறைக்குள் சூழ்ந்தது. அடுத்த பதினைந்து நிமிஷத்தில் முழுப்பாடலும் தயாராகிவிட்டது. பல்லவியிலும் சரணத்திலும் ஓரிரு சொற்களின் வரிசையில் சிறிய மாற்றத்தை ராகதேவன் செய்தபோது பாடலுக்கு இன்னும் வசீகரம் கூடிவிட்டது.

”லஞ்சுக்கு அப்றம் ரெக்கார்டிங் போயிரலாம் வெற்றி. அந்த இண்டர்வெல் ப்ளாக்குக்கு முன்னாடி வர்ற டூயட்டை யாரு எழுதப்போறா?” சரசரவென்று தாளில் இசைக்குறிப்புகளை எழுதி உதவியாளரிடம் நீட்டியவாறு கேட்டார்.

”மத்த நாலையும் தமிழமுதன்தான் எழுதறார். நாளைக்கு அவர் வரும்போது பாருங்க. இதுக்கே கொதிச்சுடுவார்.  நீங்க ஒருவார்த்தை சொல்லி அவர சமாதானப்படுத்தணும்” என் மீது ஓரப்பார்வையை வைத்தவாறு இயக்குநர் சொன்னார்.

”சரிய்யா” அவர் புன்சிரிப்போடு நகர்ந்துவிட்டார்.

”ஒன்…டூ..த்ரீ…” ராகதேவன் விரல்களைச் சொடுக்குகிறார். நீண்டு ஆலாபனை செய்யும் குழலோசை. பிறகு அதனோடு இணையும் வயலின்களின் இழைவு. நூலளவு மௌன இடைவெளியில் எழும் பெண்குழுவினர் கோரஸ் ஹம்மிங். அங்கிருந்து தொடங்கும் பல்லவி. அபாரம். பல்லவிக்கு முந்தைய இந்த மென்னிசையே உயிரை வருடிவிட்டது. காதல் திளைப்பின் துள்ளலில் ஆண் இருக்கிறான். பாடகரின் முகத்தில் நளினம் நடனமிடுகிறது.  அபாரமான சொற்கட்டைப் பாராட்டுமுகமாகப் பாட்டினூடே என்னைப் பார்த்துக் கட்டைவிரலை உயர்த்தினார். தாளமிடும் விரல்களோடு ராகதேவனும் புன்னகைக்கிறார். பெண்ணுக்குள் காதலின் சிதறாத பூரணம். அருவிச்சாரலின் ஈரக்குளிர்மையை பாடகியின் குரல் உருவாக்குகிறது. ஐந்தே நிமிஷங்கள். பதிவு முடிந்துவிட்டது. நிறையப்பேர் கண்களாலும் புன்னகையாலும் வாழ்த்தையும் பாராட்டையும் வெளிப்படுத்தினார்கள். இயக்குநரிடம் விடைபெற்றுக் கிளம்பும்போது திரும்பவும் ராகதேவனை விழுந்து வணங்கினேன்.

“அடுத்த பௌர்ணமிக்கு என்ன வந்து பாரு”

(3)

நடராஜனுக்குப் போதையில் கண்கள் சொருகிவிட்டன. தனக்கு வேண்டாமென்று சைகை காட்டிவிட்டு சோபாவில் சுருண்டு உறக்கத்திற்குள் அமிழத் தொடங்கிவிட்டான். தட்டில் மிச்சமிருந்த இறைச்சித்துண்டுகளில் ஒன்றை எடுத்து மென்றேன். அபாரமான சுவை. இதுதான் கடைசி லார்ஜ் என்று மனசுக்குள் சொல்லியவாறு  ரெமி மார்டினை ஊற்றிக்கொண்டேன். குடிப்பதில் ஆர்வமில்லை. ஆனால் வருஷங்களின் இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு நடராஜனின் வற்புறுத்தலைத் தவிர்க்கமுடியவில்லை.

மகன்களின் பள்ளி விடுமுறையை ஒட்டி குழந்தைகளோடு நடராஜனின் மனைவி ஊருக்குப் போயிருந்தாள். எப்போதும் பிஸியாக இருக்கும் அவனுக்கு இன்றைக்குத்தான் நேரம் வாய்த்து பேச்சு நள்ளிரவு வரை நீண்டுவிட்டது. அவனிடமிருந்து சன்னமான குறட்டையொலி எழவும் அறையின் பிரகாசமான விளக்குகளை அமர்த்திவிட்டு இருளான பால்கனிக்கு வந்தேன். சுற்றிலும் விண்ணுயர்ந்த நவீனமான அப்பார்ட்மெண்ட்டுகள். நடராஜன் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறான். அவனுக்கு அர்ச்சுனனின் கண். வாழ்க்கையில் உயரத்திற்குப் போய்விட்டவன் உலகத்தைப் பலமுறை சுற்றிவிட்டான்.

சென்னைக்கு பதினைந்து வருஷத்திற்குப் பிறகு வந்திருக்கிறேன். இதோ, ஒருவாரம் கழிந்தாயிற்று. நாளைக்கோ நாளை மறுநாளோ திரும்பக் கிளம்பவேண்டியதுதான். பாட்டு, இலக்கியம், கவிதை என எல்லாவற்றிலிருந்தும் விலகிவிட்டேன். நீண்டகாலமாக மனசுக்குள் நிகழும் சுயவிசாரணையினால் முன்னம் முக்கியத்துவம் பெற்றிருந்த உலகியல் நடைமுறைகள். சடங்குகள், மதிப்பீடுகள் இவையெல்லாம் இன்றைக்கு எனக்கு சாரமிழந்துவிட்டன. நோய்த்தனிமை கொடுக்கும் இருண்ட மனப்பயணங்களை மேற்கொள்ளும் ஒருவர் பிறகெப்போதும் அதே பழைய மனிதர் அல்ல. பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் அந்த சாலைவிபத்தில் சிக்கியபோது வாழ்க்கையின் நிலையாமை கொடுத்த மனநடுக்கங்களாலும் உடலின் வலியினாலும் மனதில் மிஞ்சியிருந்த கனவுகள் மடிந்துவிட்டன.

முதல் பாடல் பதிவான நாளன்று ராகதேவன் அடுத்த பௌர்ணமிக்கு வந்து தன்னைச் சந்திக்கச் சொல்லியிருந்தார். இடையில் பதினைந்து நாட்கள் இருந்தன. அம்மாவோடும் அப்பத்தாவோடும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள ஊருக்குப் போனேன். எனக்குத் தரையில் கால்பாவவே இல்லை. எதிர்காலத்தில் அடையப்போகும் புகழையும் செல்வத்தையும் குறித்த கனவுகள் இரவுபகலாய் சூழ்ந்திருந்தன. மேடேறிவிடுவான் என்பதுபோல் அம்மாவுக்குக்கூட ஏதோவொரு சிறுநம்பிக்கை. விபத்தில் மட்டும் சிக்காமலிருந்தால் தமிழ்நிலத்தை என்றென்றும் தாலாட்டக்கூடிய பலநூறு பாடல்களையாவது எழுதியிருப்பேன்.

வழக்கமாக அம்மாதான் போவாள். அன்று என்னிடம் கொடுவாய் போய் மளிகை சாமான்கள் வாங்கி வரச்சொன்னாள். டிவிஎஸ் பிஃப்டியை எடுத்துப்போனேன். திரும்ப வரும்போது வலசு கரைக்கு அருகில் பின்னாலிருந்து வந்த லாரி மோதிவிட்டது. ஓட்டுநர் தூக்கக்கலக்கத்தில் இருந்தான் என்பது பின்னர் தெரிந்துகொண்ட தகவல். தலையில் பலத்த அடி. கைகால்களில் எலும்புமுறிவு. மறுபிழைப்பு. வலி, இரத்தம், கவிச்சி, மருந்துகள், மாத்திரைகள், பணத்திற்கான அலைச்சல் என்று வாழ்க்கையின் இருண்ட மறுபக்கத்தைப் பார்த்தேன்.

மீளுவதற்கு இரண்டரை வருஷங்களாயிற்று. படமும் பாடலும் வெளியாகி பெரிய வெற்றி. பாட்டைக் குறித்தும் எனக்கு ஏற்பட்ட விபத்தைக் குறித்தும் வந்திருந்த நான்கைந்து பத்திரிக்கைச் செய்திகளை சேகரித்து வைத்திருந்த நடராஜன் நான் தேறியபின் அவற்றை எடுத்துவந்து காட்டினான். திரும்பச் சென்னைக்குச் செல்வது குறித்த கேள்வி எழுந்தபோது முடிவெடுக்க முடியவில்லை. அம்மா நிச்சயம் அனுமதிக்கமாட்டாள் என்பது ஒருபக்கத்தில் இருந்தாலும் இரண்டரை வருஷங்களாக செவிகளில் மௌனம் மட்டுமே கேட்கிறது. கவிதையும் சொற்களும் என்னிடமிருந்து உதிர்ந்துவிட்டன. எதையும் கற்பனை செய்யமுடியவில்லை. எழுதிய பாடலை கேட்க நேரும்போது எழும் மனச்சலனம் சில நாட்களில் தானாகவே அடங்கிவிடும். அந்த விபத்துக்குப் பின் அம்மா என் வயதையும் பொருட்படுத்தாமல் என்னைப் பொத்திப் பாதுகாக்க ஆரம்பித்தாள். திருமணம், குடும்பம் குழந்தை என்று வேறொரு கதியில் வாழ்க்கை நகர அதன் போக்கில் பல வருஷங்கள் கழிந்துவிட்டன.

இப்போது சென்னை வந்தது பழைய நினைவுகளை மீட்டும் சிறிய ஆசையினால்தான். முடிந்தால் இயக்குநர் வெற்றிச்செல்வனையும் இசையமைப்பாளர் ராகதேவனையும் பார்க்க நினைத்திருந்தேன். இயக்குநர் அதற்குப்பிறகு நான்கைந்து படங்கள் செய்திருந்தாலும் காலப்போக்கில் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. தொலைக்காட்சியில் பேச்சரங்கம் நடத்தச்சென்றவர் பல வருஷங்களாக வெற்றிகரமாகத் தொடர்கிறார். அவர் சென்னையில் இல்லை. நிகழ்ச்சிப் பதிவுக்காக வெளிநாடு சென்றிருக்கும் தகவலை அவருடைய முகநூல் பக்கத்தைப் பார்த்துவிட்டு நடராஜன் சொன்னான். பார்க்காவிட்டால் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை என்ற மனநிலைதான் எனக்கு. கே.கே.நகரின் தெருக்களில் ஒரு முற்பகல் அலைந்துவிட்டு வந்தேன். எல்லாம் அடையாளம் மாறியிருந்தன. நாயரின் மளிகைக்கடை இருந்த இடத்தில் அப்பார்ட்மெண்ட் இருந்தது. ரேகா எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. யாரையும் விசாரிக்கவும் விரும்பவில்லை.

இந்த இடைப்பட்ட வருஷங்களில் யுகமாற்றம் ஏற்பட்டுவிட்டது. நகரமும் மாறிவிட்டது. இணையமும் தொழில்நுட்பமும் புதிய விஷயங்களை உருவாக்க பெருந்தொற்றும் ஊரடங்கும் வந்துபோய் மனிதர்களின் வாழ்க்கை மாறியிருக்கிறது. இலக்கியமும் சினிமாவும் மட்டும் விதிவிலக்கா? எனக்குப் பழக்கமில்லாத திசையில் அவை வெகுதூரம் முன்னே சென்றுவிட்டன. குறும்படங்கள் செல்வாக்கடைந்து வீழ்ந்தும் விட்டன. ஓ.ட்டி.ட்டி, பைட்ஸ், ரீல்ஸ், ஷார்ட்ஸ் எனக் காட்சி வடிவின் புதிய பிரயோகங்கள் வந்துவிட்டன. உடனடி  நுகர்வுக்குத் தயாராகக் கொடுக்கப்படவேண்டும் என்பதே வெற்றிகரமான தொழில்முறைமையாக இருக்கையில் ஊனப்பட்ட குதிரையான நான் ஒதுங்கிவிட்டது நல்லதுதான்.

இன்று காலையில் ராகதேவனை சந்தித்துவிட்டு வந்திருந்தேன். எண்பதைக் கடந்த வயதில் தோற்றத்தில் கனிந்திருந்தார். இளம் இசையமைப்பாளர்கள் புகழ்பெற்று அவருக்கான திரைவாய்ப்புகள் ஏறத்தாழ நின்றுவிட்டாலும் அதையெல்லாம் கடந்த ஆன்மீகமான மனநிலையில் இருந்தார். ஆனால் தினமும் எட்டுமணிக்கு தன் ஸ்டூடியோவுக்கு வருவதை மட்டும் நிறுத்தவில்லை. ஞாபகமாய் ரோஜா மாலை வாங்கிக்கொண்டேன்.

முன்அனுமதி இல்லாமல் யாரும் அவரைப் பார்க்கமுடியாது என்றார் வாயிற்காவலர். ஆனால் அன்றைக்கு அவருடைய வாசல் ஆட்களற்று நிசப்தமாகத்தான் இருந்தது. நான் இன்னார் என்ற விவரத்தைச் சொல்லவும் சற்று மனமிரங்கி ஓரமாய் நிற்க அனுமதித்தார். வெள்ளைநிறக் கார் வந்து நிற்க இறங்கியவரின் தோற்றம் அதே தும்பைப்பூ வெண்மையில் இருந்தது. முன்னால் நகர்ந்தவனை ஏறிட்டார். மாலையை அணிவித்துவிட்டு காலைத்தொட்டு வணங்கி நிமிர்ந்தவனை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.

“ஐயா, நான் கணேஷ் திருஞானம், பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி…”

பார்வையிலிருந்த உன்னிப்பு கனிந்து நூலளவு மலர்ச்சியானது.

“வா”

வரவேற்பறைக்குள் நுழைந்தவர் காத்திருக்கச் சொல்லிவிட்டு பூஜையறைக்குள் நுழைந்துவிட்டார். உதவியாளர் ஆர்மோனியத்தை எடுத்துச்சென்று அவர் அறைக்குள் வைத்துவிட்டுப் போனார். எங்கும் தூய்மை. இசையின் கருவறை நிசப்தம். ஐந்து நிமிஷங்கள் கழிந்தபின் வெளியே வந்தார்.

“என்னய்யா நல்லாருக்கியா? உடம்பெல்லாம் சௌக்கியமா இப்ப? என்ன பண்ணிட்டு இருக்கே?”

“ஊரோட இருக்கேங்க. சென்னைல நண்பனைப் பார்க்க வந்தேங்க ஐயா, அப்படியே உங்களையும் பாத்து வணங்கிட்டுப் போகலாம்னு”

“ம்ம்… பெரிய ஆளா வந்திருக்கவேண்டியவன் நீ. சரஸ்வதி எண்ணம் வேறமாதிரி ஆயிடிச்சி. திரும்ப ஏதாவது பண்ண நினைக்கறியா?”

“இல்லீங்கய்யா” அவசரமாக மறுத்தேன். ஒரு நிமிஷம் மௌனம். நான் அவர் கண்களையே பார்த்தேன். அவர் என்னை உற்றுப்பார்த்தார். அந்த பௌர்ணமி கூடியிருந்தால் ஒருவேளை பல மகத்தான பாடல்கள் சாத்தியப்பட்டிருக்கலாம்.

“சரிய்யா, சும்மா இருக்காத. ஏதாவது பண்ணு. உங்கிட்ட மொழி இருக்கு. இப்ப படமே பண்ணலேன்னாலும் நான் எதுக்கு தினமும் ஸ்டூடியோவுக்கு வர்றேன்? நோட்ஸ் எழுதறேன்? மனசு வேலை செஞ்சுக்கிட்டே இருக்கணும். புழங்கலேன்னா பாழடைஞ்சிடும். காரியத்தோட விளைவு இல்ல, காரிய அனுபவந்தான் வெற்றி. தேடல் இருக்கறவன சரஸ்வதி கைவிடமாட்டா. அவளக் கும்பிடு”

விடைபெறும்போது ராகதேவன் கூறிய வாக்கியத்தை நினைத்தவாறே மிச்சமிருந்த விஸ்கியை சரித்துக்கொண்டேன். திரும்பவும் எழுத நான் முயற்சி செய்யவேண்டும் என இந்தச் சிலநாட்களில் நடராஜன் நூறுமுறையாவது சொல்லியிருப்பான். சொற்களின் பச்சையம் திரும்பவும் எனக்குள் படருமா? புதிதான நவீனத்தோடு என் இதயத்திலிருந்து கவிதை பிறக்குமா? தமிழ்நிலத்துக்குக் கொடுப்பதற்கு இன்பமூட்டும் கற்பனைகள் என்னிடம் மீதமிருக்கின்றதா? தெரியாது. அதைக்குறித்து பதட்டங்களும் புகார்களும் இல்லை. ஆனால் வெற்றி தோல்வி குறித்த கவலையின்றி இன்னொரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. கண்களை மூடிக்கொண்டவனின் காதுகளுக்குள் ஒரு பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

             

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.