காவி- மொழிபெயர்ப்பு சிறுகதை

மூலம் : மிர்ஸா வஹீத்

தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்

அவள் அதிகமாக சத்தமிடவில்லை. ஆனால் எனக்குத் தெரியும், உறக்கத்தில் கூட, என்னமோ சரியில்லை. அது குறித்து எனக்குக் கனவுகள் வந்திருக்கின்றன, ஆகவே எனது படுக்கையை விட்டு எழுந்து தோட்டத்தின் இறுதி முனையிலிருந்த தொழுவத்துக்கு நடந்தேன். வேகமாய்க் கடந்து போக முயன்றாலும் புற்களினூடாக நடக்கக் கடினமாயிருந்தது – அவற்றைச் சமப்படுத்த வேண்டுமென கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நினைத்திருந்தேன், ஆனால் செய்திருக்கவில்லை.

என்னைப் பார்த்ததற்கான எவ்வித ஒப்புகையோ சத்தமோ இல்லை. அவளுடைய மூக்கைச் சுற்றிலும் ஒட்டியிருந்த வைக்கோலை உதறத் தலையை மட்டும் லேசாக அசைத்தாள். மிகவும் சன்னமாய் ஒரு சத்தத்தை மட்டும் வெளியிட்டாள், மெல்லிய ஆனால் பொருட்படுத்தும்படியான சத்தம், எனக்கு நன்கு பழக்கமானதும் கூட.

வேதனையின் அறிகுறிகளேதும் தென்படுகின்றதா என அவள் முகத்தில் தேடினேன், கால்களுக்குக் கீழிருந்த தூசடர்ந்த நிலத்தையும் பார்த்தேன், பிறகு தலைக்கு மேலிருந்த பழங்காலக் கூரையையும். உபத்திரவம் தரும் எதையும் நான் பார்க்கவில்லை. திருப்தியடைந்தவனாக, தூங்கத் தயாராகும் வகையில் தனிமையில் அவளை விடுத்துக் கிளம்பினேன். வீட்டுக்குத் திரும்பி நடக்கையில், தொழுவத்துக்குப் பின்னால் அசைந்த நிழல்களை உண்மையாகவே நான் பார்த்தேனா இல்லையா எனக் குழம்பினேன்.

இங்கே, மாலைகளும், இரவுகளும், சில சமயங்களில் அதிகாலை நேரங்களும் கூட அரூபத்தோற்றங்களால் நிறைந்திருக்கும். ஒருபோதும் உங்களால் உறுதியாகச் சொல்ல முடியாது, அப்பா அடிக்கடி சொல்வார்.

தோட்டத்தின் இருபுறமுமிருந்த போப்லார் (நெட்டிலிங்கம்) மரங்கள் அமைதியோடும் திண்மையோடும் கம்பீரமாக நின்றிருந்தன; உயரமாக, கருநிறத்தில், மேலும் முழுமையான திடத்தோடு வளர்ந்த மரங்கள், பிரார்த்தனையில் வானோக்கி நீண்டிருப்பதாக அவை தோற்றமளித்தன. அம்மரங்களை என் அப்பாதான் நட்டார், இந்த உலகத்தின் நலனையும், என்றாவது ஒரு நாள் யாவும் சுதந்திரமானதாக, நிச்சயத்தன்மையோடு, மேலும் எளிமையானதாகவும் மாறும் என்பதையும் அவற்றின் உறுதியான இருப்பு எனக்குள் எப்போதும் வலியுறுத்திக் கொண்டேயிருக்கும்.

நான் மறுபடியும் உறங்கப் போனேன்.

**********

நாளை நான் கடையைச் சீக்கிரம் திறக்க வேண்டியதில்லை. சரக்கு வண்டி பத்து மணிக்கு முன்னால் வர வாய்ப்பில்லை, மேலும் நான் இல்லையென்றாலும் கூட மக்களால் ஒரு நாளை ஓட்டிவிட முடியும். அல்லது சாலையின் மறுமுனையில் உள்ள புதிய கடைக்குக்கூட அவர்கள் செல்லலாம்.

எனது கடையை நான் நேசித்தேன், அத்துடன் வீட்டிலிருந்து கிளம்பிச் செல்லும் நடையையும். சந்தையின் மற்ற கடை-முதலாளிகளுக்கு முகமன் கூறுவதற்கென பிரதானவீதி வழி செல்வேன்; இந்தச் சமூகத்தின் ஒரு பகுதியாய் இருப்பது எனக்கு உற்சாகத்தைத் தந்தது. காலைநேரக் கரைச்சல்களில் ஈடுபடுவதையும் நான் விரும்பினேன் – கடந்த ஒன்றிரண்டு வருடங்களில் சில பகட்டான கடைகளைத் திறந்ததில் சந்தைக்கு இப்போது ஒருவித ஆடம்பரத் தோற்றம் உண்டாகியிருந்தது. மேலும் இரவுகளில் அந்தக்கடைகளின் விளக்குகள் மெலிதான பால்நிற ஒளியில் சாலைகளைக் குளிப்பாட்டுவதையும் நான் ரசித்தேன். மக்களிடம் பணம் உள்ளது. சந்தை பரபரப்பாய் இயங்குகிறது.

கடை அமைந்திருக்கும் கட்டிடம் ஒன்றும் அத்தனை அற்புதமானதல்ல; உள்ளிருக்கும் பொருட்களின் மீதுதான் என் ஈர்ப்பெல்லாம். என்னுடைய தேய்ந்துபோன பச்சைநிற எஃகுப்பெட்டகம், எனது மஸ்னாண்ட் – அப்பாவின் மெத்திருக்கை – இடப்பக்கமிருக்கும் வாதுமை மரத்தால் செய்த சிறிய பெட்டி, பென்னம்பெரிய வாயு அடுப்புகள், பின்புறம் தயிருக்காக வைத்திருக்கும் மண்பாண்டங்கள், வலது மூலையின் அடுக்குகளிலுள்ள பயன்படுத்தப்படாத சல்லாத்துணிக்கட்டுகள், எனக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய நீர்த்தொட்டி, மேலும் உத்தரத்திலிருந்து பழுத்த பழங்களெனத் தொங்கும் உயர்-மின்னழுத்த விளக்குகள். என்றாலும், உத்தரத்தை எனக்குப் பிடிப்பதில்லை –  அப்பாவின் காலத்தில் அவர் பயன்படுத்திய சீமெண்ணெய் அடுப்பால் அது கருப்படித்து, பழையதாகி, இற்றுப்போய் கிடந்தது.

என்னுடைய பெயர் சுல்தான் கான், என்றாலும் பெரும்பாலான மக்கள் என்னை சல்லே சாஹ்மான் என்றே அழைத்தார்கள், அந்தப் பெயரையுடைய பாலாடைக் கட்டிகளால்தான் அப்பா புகழ்பெற்றவராயிருந்தார்.

பாம்போரில் தன்னுடைய பால் வியாபாரத்தை நிறுவுவதற்கென அப்பா தனது வாழ்நாள் முழுதும் கடுமையாக உழைத்தார், ஆனால் சொல்லிக்கொள்ளும்படியான நிலையை அடைந்த கொஞ்ச நாட்களிலேயே இறந்து போனார். முதலில், வியாபாரத்துக்குப் பொருந்தமில்லாதவனாக என்னை உணர்ந்ததால் நிறைய நஷ்டமடைந்தேன். கல்லூரியில், எனது பெரும்பான்மை நேரத்தை கவிதைகளை வாசிப்பதில் செலவிட்டதால் குடும்பத்தொழிலில் அக்கறை கொள்ளதவனாகத்தான் இருந்தேன். கடையிலும் எனது கவிதைகளை நான் தொடர்ந்தேன்: பாலும் உருதுக் கவிதைகளுமே எனக்குப் பொருத்தமானவை என்பதைப் பிற்பாடு புரிந்து கொண்டேன். என்னை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது. வீட்டை கவனிக்கவும் அவளை சரியாகப் பராமரிக்கவும் அந்த வருமானம் போதுமானதாக இருந்தது. அப்பாவின் வழி என்னை வந்தடைந்த சங்கதிகளில் நான் சந்தோசமாக உணர்ந்தது அவளிடம் மட்டும்தான், அவளோடிருப்பதும் அவளை மகிழ்ச்சியாகப் பார்ப்பதும் எனக்கு மிகுந்த திருப்தியைத் தந்தன. நான் கவிதை வாசிப்பது மட்டும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

அடைப்புப் பலகைகள் (ரோந்துப் பணியிலிருக்கும் மத்திய சேமக்காவல் படையினரை (CRPF) அச்சமூட்டி வகைதொகையற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு வழிவகுத்துவிடக் கூடாதென்பதற்காகவும், அல்லது குறைந்தபட்சம், உடனடியாகக் கிடைக்கக்கூடிய அடியைத் தவிர்ப்பதற்காகவேனும் அவற்றை நான் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் உயர்த்துவேன்), எஃகுப்பெட்டியைத் திறத்தல் (ஆறு எண்களின் சேர்மானமும் பழகிப்போன கைப்பிடியின் கிளிக்-கிளாக் சத்தமும்), அடுப்புகளை ஆயத்தம் செய்தல், மேலும் வார்மூல் நகரிலிருந்து வரும் வண்டிக்கென காத்திருத்தல் போன்றவற்றால் நிறைந்திருக்கும் காலைப்பொழுதுகள். பாலைக் கொதிக்க வைக்கும் பெரிய அலுமினிய அண்டாக்களைப் பார்ப்பதே ஒருவகைக் கொண்டாட்டம்தான். முந்தைய நாளின் இரவில் துளி பிசுக்கும் இல்லாமல் அம்ஜத்தால் அவை சுத்தம் செய்யப்பட்டிருக்கும் – இரவு நேரங்களில் சிற்சில வீடுகளுக்கும் காவல் முகாமுக்கும் பாலை எடுத்துப்போவது அவன்தான், மேலும் அந்தப்பகுதியின் செய்திகளைக் கொண்டு வருபவனும் அவனே – பளபளப்பான, தூய்மையான பாலை நிறைய அளவில் அண்டாக்களில் ஊற்றும் காட்சியையும் அந்த சத்தத்தையும் நான் மிகவும் ரசித்தேன். அடுப்புகளை ஒவ்வொன்றாகப் பற்ற வைத்து அவற்றின் முழுமையான தழலுக்கு மாற்றி வைப்பேன். நான்கு பிரமாண்டமான பட்டீலாக்களில் நன்கு கொதிக்கும் பால், முழுநிலவெனக் குமிழியிடும் வெண்ணிற நுரைக்கூட்டத்துக்குள் தேவையான அளவு நீரை ஊற்றுவேன்.

**********

ஆனால் அவள் காணாமல் போய் வெகு சீக்கிரமே மூன்று வெவ்வேறு குழுக்களுக்குப் பாத்தியப்பட்டவளாகத் திரும்பி வந்தாள். அன்றிரவு அந்தத் தொழுவத்தில் இன்னும் சிறிது நேரம் அவளோடிருந்திருக்கலாம் என நான் இப்போது நினைக்கிறேன். அப்படியென்றால் அவர்களால் அவளை இழுத்துச் சென்றிருக்க முடியாது, அல்லது நான் சத்தம் போட்டிருக்கலாம், அக்கம்பக்கம் இருந்தவர்களை எழுப்பி, ஒருவேளை அவர்களைத் துரத்தவும் செய்திருக்கலாம்.. ஆனால் மறுபடியும், யாரும் அவர்களிடம் வம்புக்கு நிற்பதில்லை: சொல்வதெனில், ஒரு லட்சியத்துக்காகத்தானே அவர்கள் சண்டையிடுகிறார்கள், எங்களுக்காகவும்.

நான், அவளின் உண்மையான உரிமையாளன், அவள் இல்லாததை எண்ணி மிகவும் வருந்தினேன், ஆனால் எனது உரிமையை நிலைநாட்டும் இடத்தில் இப்போது நானில்லை. ஒவ்வொரு நாள் காலையும் அவள் நடந்து போகக்கூடும் என அனுமானித்த பாதையில் அவளுக்குப் பிடித்தமான பதார்த்தங்களைப் பரப்பி வைத்து நான் திருப்தி கொள்ளும்படி ஆனது.

நிகழந்திருக்கக்கூடிய படுகொலையில் இருந்து தனது மத நம்பிக்கையின் புனிதச் சின்னத்தைக் காப்பாற்றி விட்டோம் என்கிற எண்ணத்தின் பிரகாச ஒளியில் அவளின் தற்போதைய உரிமையாளன் குளித்துக் கொண்டிருந்தான். (உண்மையில் நாங்கள் பசுக்களை உண்பதில்லை என்பது வேறொரு சங்கதி. அப்படி நான் உண்டால், ஏழு வருடங்களை சிறைச்சாலையில் கழிக்க நேரிடலாம். ஒருக்கால் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அதுதான் இங்குள்ள சட்டம்.) வீதியில் அலைந்த ஓரிரு கால வாழ்க்கைக்குப் பிறகு அவளைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தான், இப்போது காலை வேளைகளிலும் மாலை நேரங்களிலும் அவள் மீது உரிமை பாராட்டித் திரிந்தான், பங்கர்களின் (பதுங்கு குழி) அருகே அந்த அழகிய ஜீவன் நின்றிருக்கும் காட்சியில் அவன் லயித்திருந்தான். படைப்பிரிவு 312-ஐச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஓம்கார் நாத் த்விவேதி அந்த மிருகத்தைக் காப்பாற்றுவதைத் தற்போது தனது தலையாயக் கடமைகளில் ஒன்றாகக் கருதினான் – என்ன விலை கொடுத்தாவது. ஏற்கனவே தீர்மானித்தும் இருந்தான்: செப்டம்பர் வந்தால், தனக்கான விடுமுறை நாட்களை அவன் பயன்படுத்திக் கொள்ளலாம், இந்தியாவிலுள்ள அவனுடைய சொந்த கிராமத்துக்கு பசுவை அழைத்துப்போக மேலதிகாரிகளிடம் அனுமதி வாங்குவான், பிறகு தனது பழைய வீட்டில் அதற்கென ஒரு விசேஷமான குடிலை அமைப்பான். தான் ஏற்பாடு செய்யக்கூடிய மிகப்பெரிய கோமாதா-பூஜைக்காக நன்கு அலங்கரிக்கப்பட்டு மாலைகள் அணிந்து நிற்கும் பசுவை அவன் கற்பனை செய்தான். இப்படியாக, அவன் நினைத்துக் கொண்டான், தனது வாழ்வில் உருப்படியானதொரு விஷயத்தைச் செய்திருப்பான். என்றபோதும், நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் அப்புனித மிருகத்தின் மீது அவனுக்கிருந்த பக்தியின் அடையாளமாகவும், தினமும் இருமுறை சாலையில் நீண்ட தூரம் நடந்து செல்லவும் பாதையில் வீசியெறியப்பட்ட உணவுப்பொருட்களை மேயவும் அவளை அவன் அனுமதித்தான் – சந்தேகத்துக்கு இடம் தராமல், அவனது காவலாட்களில் மிகச்சிறந்த இருவர் எப்போதும் அவளோடு இருந்தார்கள், இவற்றையெல்லாம் அம்ஜத் சொன்னான்.

ராணுவத்தை விட்டு ஓடிப்போனவனும் புதுத்தோற்றத்தை வரித்துக் கொண்டிருந்த புதிய மீட்புப் படையின் தலைவனுமான சலீம் சோயெத் (அம்ஜத்தின் கூற்றுப்படி, காஷ்மீரில் பயிற்றுவிக்கப்பட்ட சிறுவர்கள் எழுவரும், பாகிஸ்தானில் பயிற்றுவிக்கப்பட்ட சிறுவன் ஒருவனும், சலீமும், மேலும் பயிற்றுவிக்கப்படாத  ஏழு எடுபிடி போக்கிரிச் சிறுவர்களும் அந்த அமைப்பில் இருந்தார்கள், ஒரு ஏகே 47-ஐயும் சீனத் துப்பாக்கியையும் தங்களுக்குள் அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்) தனிப்பட்ட தோல்வியின் பாரத்தில் உழன்று கொண்டிருந்தான் – ஒரு சாதாரண ராணுவத் துணையதிகாரியிடம் – பொருத்தமான தொழுவமொன்றை கண்டுபிடிக்க முடியாத ஒரே காரணத்தால். அவளை மீட்க தாக்குதலில் முழுமூச்சாக ஈடுபடலாமா எனவும் ஓரிரு முறை அவன் யோசித்தான், ஆனால் அதைச் சரியான யுக்தி என்று அவனுடைய உதவியாளர்கள் அங்கீகரிக்கவில்லை. தொழிலுக்குக் கெடுதலாக அமையலாம். சிஆர்பிஎஃப்காரனோடு அவனுக்கிருந்த தனிப்பட்ட விரோதத்தை தலைமை முகாமிலிருந்த தலைவர்கள் ரசிக்க மாட்டார்கள், என்றான் அம்ஜத்.

ஒவ்வொரு வாரமும் அல்லது தேவைப்படும்போதெல்லாம் சுவரொட்டிகளை அச்சடிக்கலாம் என சிறுவர்களோடு அவன் நடத்திய கூட்டத்தில் இறுதியாகத் தீர்மானிக்கப்பட்டது, ஒரு காஷ்மீரி பசுவை அபகரித்துக்கொண்ட இந்தியப் படைகளுக்கு எதிராகப் போராட மக்களுக்கு அழைப்பு விடுக்கும் சுவரொட்டிகள்.

பெரும்பாலான வணிகர்கள், பாம்போரின் பிரதான வீதியில் இருந்த கடைக்காரர்களும் கடத்தல்காரர்களும் கூட அவள் மீது தங்களுக்கு உரிமையிருப்பதாக நம்பினார்கள் – பங்கர்வாலாக்களின் கோபத்துக்கு ஆளாகவோ அல்லது எந்த வகையிலும் சோயெத் சிறுவர்களைச் சங்கடப்படுத்தவோ அவர்கள் நிச்சயம் விரும்பவில்லை. ஆக, உணவு மற்றும் பராமரிப்பு என்கிற வகையில், என் குழந்தை அவளுடைய வாழ்நாளின் ஆகச்சிறந்த பகுதியை வாழ்ந்து கொண்டிருந்தாள். ஆனால் பங்கருக்கு அருகிலுள்ள இரும்புக்கம்பியில் கட்டப்பட்டுக் கிடப்பதென்பது எப்போதும் வீடு சார்ந்த அவளுடைய எண்ணமாயிருக்காது. எனக்குத் தெரியும்.

ஸ்ரீநகரைச் சுற்றியிருந்த வளம்வாய்ந்த பகுதிகளில், பாம்போர் அதன் குங்குமப்பூவுக்காக மிகவும் புகழ்பெற்றது. உலகப்புகழ். காஷ்மீரின் குங்குமப்பூக்கள். உலகின் வேறெந்த மூலையிலும் வளரக்கூடிய அந்த அதியற்புத மலரின் எந்தவொரு வகைமையைக் காட்டிலும் மேலான மலர்கள் பாம்போரில் மலர்ந்தன. ஈரானில், ஸ்பெயினில், மேலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் அவற்றை வளர்ப்பதாக நான் வாசித்திருக்கிறேன். புராதனமான ஊதாநிற மலர்கள், பார்க்கும் அத்தனை கண்களும் அப்படியே வாரியணைத்துக் கொள்ளும்படியாக தரை மீது தாழ்ந்து கிடந்தன. அதன் நிறம் ஊதா அல்ல என்றும் ஒரு மாதிரியான மங்கிய இளஞ்சிவப்பு நிறமென்றும் அம்ஜத் சொல்வான். எனக்கு அதில் ஒப்புதல் இல்லை.

**********

“நாங்கள் பெரிய தொகையைக் கேட்கவில்லை, வெறும் இருபத்தைந்தாயிரம்தான்,” முதன்முதலில் என்னைச் சந்திக்க வந்த சமயத்தில் சலீம் இப்படித்தான் தொடங்கினான். நான் அவளைத் தொலைப்பதற்கு மிகச்சரியாக ஒரு வாரத்துக்கு முன்னால் இது நடந்தது.

நான் தொண்டையைச் செருமிக் கொண்டேன்.

“என்னுடைய நண்பர்கள் அனைவரும் கொடையளித்திருக்கிறார்கள். அத்தோடு இது எங்களின் தனிப்பட்ட செலவுகளுக்காக அல்ல. வெறுமனே இயக்கம் சார்ந்த சில சங்கதிகளுக்காக..”

“சிறுவர்களுக்கு புதிய பூட்ஸுகள் வாங்குவதோடு சில குடும்பங்களையும் பராமரிக்க வேண்டியுள்ளது.”

நான் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னிடம் அவ்வளவு பணமில்லை.

“தயவு செய்து எங்களைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். தேவைப்படும் சமயத்தில் நமக்கு நெருக்கமானவர்களிடம் போய் நிற்காமல் நாங்கள் வேறெங்கு போவது?”

ஆரம்பப்பள்ளியில் நாங்கள் நண்பர்களாயிருந்தோம்; அப்போது கூட அவன் என்னிடம் வம்பு செய்கிறவனாகவே இருந்தான், ஆனால் அத்தனை தீவிரமாக அல்ல.

“மேலும் என்னை நம்பு, நாங்கள் அனைவரின் வாசலிலும் போய் நிற்பதில்லை. நாங்கள் நம்புகிற, எங்களிடம் விசுவாசத்தோடு உள்ளதாக நினைப்பவர்களிடம் மட்டும்தான்.”

நான் சற்றுப் பெருமிதமாக உணர்ந்தேன்.

“உடன், யாரும் உன்னை மறுபடியும் அணுகாமலிருப்பதை நான் உறுதி செய்வேன். இதற்குப் பிறகு நிதி கேட்டு உன்னிடம் வரமாட்டார்கள்.”

உள்ளூர் கதாநாயகர்களுக்கு மத்தியில் எங்கள் கடையின் தீவான்கானேயில் (முற்றம்) அமர்ந்திருந்த அந்த மாலைப்பொழுதில் நான் செய்ய விரும்பியதெல்லாம், என் தொண்டையைச் செருமுவதுதான். அவன் முடித்தபோது, நான் பேச வேண்டிய தருணம். பேசாமலிருந்தால் நன்றாயிருக்கும் என எண்ணினேன்.

“சலீம் சாப், இது எத்தனை முக்கியமானதென்று எனக்குப் புரிகிறது. தயைகூர்ந்து என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.. ஆனால் உங்களுக்கு உதவக்கூடிய அளவு பெரிய தொகையேதும் கைவசம் இல்லை. என்னால் முடிந்ததை உங்களிடம் தருகிறேன், ஆனால், கவனியுங்கள், அது உங்களுடைய தேவைகளைச் சரிக்கட்ட போதுமான தொகையாக இல்லாதிருக்கலாம்.”

“எவ்வளவு?”

“ஐந்தாயிரம்.”

“அவ்வளவுதானா?”

“என்னை மன்னியுங்கள்.”

“கவனி, யோசித்து முடிவெடு. இது மிகவும் முக்கியமான சமாச்சாரம்.”

வேறு என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.

**********

நகரத்தின் இந்தப் பகுதியில் நிறைய தாக்குதல்கள் நடப்பதில்லை என்பதால், பங்கர், அது இருக்க வேண்டிய அளவுக்கு அலங்கோலமாக இருக்கவில்லை. அத்துடன் அது சற்று விசாலமாகத்தான் இருந்தது, கடந்த சில வருடங்களில், நகரத்தில் புற்றுக்கட்டிகளாகப் பெருகியுள்ள கொடூரங்களைப் போல. தூய்மையோடும் ஒழுங்கோடும், மணல்மூட்டைகளின் மேல் களிமண்ணை அடர்த்தியாகப் பூசியிருந்தார்கள்; பல அடுக்குகளாலான மண்குழம்பு, ஆரம்பத்தில் வந்து இறங்கிய சமயத்தில் வெறும் தற்காலிக ஏற்பாடு மாத்திரமே என அவர்கள் சொன்னதற்கு நேர்மாறாக அதுவொரு நிரந்தரமானத் தங்குமிடமாகத் தோற்றமளித்தது. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள், புரிகிறதல்லவா, தற்காலிகம் என்பார்கள், ஆனால் ஒருபோதும் கிளம்பிப்போக மாட்டார்கள். விசிஆருடன் கூடிய கிரவுண் வண்ணத் தொலைக்காட்சி ஒன்றை அவர்கள் உள்ளே வைத்திருப்பதாக அம்ஜத் சொன்னான், சாய்விருக்கையுடன் கூடிய படுக்கையையும், மேலும் எங்கு வேண்டுமானாலும் சுமந்து செல்லக்கூடிய ஒருவகை தானியங்கி கழிவறையையும். பங்கரைச் சுற்றியிருந்த சாலையின் பெரும்பகுதியை அவர்கள் முட்கம்பிகளின் பல அடுக்கைகளைக் கொண்டு வேலியிட்டிருந்தார்கள், சூரியன் பிரகாசமாய் ஒளிவீசும் நாட்களில் அந்த மொத்த அமைப்பும் சேர்ந்து மினுங்கிடும் ஒரு ரகசியப் பூங்காவெனத் தோன்றும். வேலியில் தெரியக்கூடிய அடர்த்தியான பச்சைநிற ஒளித்தீற்றலை அருகே சென்று பரிசோதித்தால் சில காலம் முன்பு அந்தப் பிரகாசமான வலைக்குள் சிக்கிக்கொண்ட ஏதோவொரு பறவையின் சிறகுகள் என்பது புரிய வரும். பூந்தொட்டிகள் (வாடும் நிலையில் உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்த சில செங்கருநீல மலர்ச்செடிகள்), தீயை அணைக்கப் பயன்படும் சிவப்புநிற அலுமினிய வாளிகள், இரண்டு பிளாஸ்டிக் இருக்கைகள், மேலும் நிலக்கரியின் மிச்சசொச்சங்களினால் உருவான சிறு குன்று ஆகியவை அந்த பங்கரின் தார்ச்சாலையுடன் கூடிய முற்றத்தினுள்ளே இருந்தன. செவ்வக இடைவெளியின் வழியாக எட்டிப் பார்த்த இயந்திரத் துப்பாக்கியின் மூக்கு மிகச்சரியாக தூசுபடர்ந்த மலர்களுக்கு மேலே நீண்டிருந்தது. இப்போதெல்லாம் ஓம்கார் அந்த “மேரா பாரத் மஹான்” பங்கருக்குள் நீண்ட நேரம் செலவிடுவதில்லை. (முன்புறத்தின் நெற்றிப்பகுதியில் – நாம் அதை கட்டிடத்தின் முகப்பு என்றே அழைக்கலாம் – இப்படி எழுதியிருக்கும், கொட்டை எழுத்துகளில், “என் இந்தியா மகத்தானது”.) மாறாக, வெளியே தனியாகக் கிடந்த இருக்கையில் அமர்ந்து தணிவான சூரியனின் வெப்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான். அவ்வப்போது, அந்தச் சிறிய முற்றத்தின் முனையிலுள்ள இரும்புக்கம்பியில் கட்டப்பட்டிருந்த எளிய பிராணியைப் பார்க்கவும் செய்வான். பங்கர்வாலி காய் – பங்கருக்கு அருகே நிற்கும் பசு, அவளுக்குத் தரப்பட்ட கவித்துவமற்ற வெகு சாதாரணமான பெயர்.     

**********

தொழுவத்திலிருந்து அவள் “மறைந்த” சில நாட்களுக்குப் பிறகு ஓர் அதிகாலையில் அவர்கள் மீண்டும் வந்தார்கள். என்ன நடந்திருக்கும் என்பதை நானறிவேன், இருந்தாலும், என்றாவது ஒருநாள் வீட்டு வாசலில் அவள் வந்து நிற்பாள் என்கிற சிறிய நம்பிக்கையை பற்றிக் கொண்டிருந்தேன்.

“உனக்கு ஒரு பசுவின் மீது ஆர்வம் இருக்கக்கூடும் என்று நினைத்தோம். அதோ, அழகாயிருக்கிறாள்தானே?”

அங்கே அவள் நின்றிருந்தாள், அழகி, தலை தாழ்ந்திருக்க, தனது அதிர்ஷ்டதிசை மாறியதை அறியாமல் கதவருகே நின்றவளின் கழுத்தைச் சுற்றியிருந்த கயிறு கைப்பிடியில் இறுகக் கட்டியிருந்தது.

“சந்தை நிலவரங்கள் எங்களுக்குத் தெரியாதென்பதால், யாரையும் சங்கடப்படுத்தாத ஒரு தொகையைச் சொல்லட்டுமா? முப்பதாயிரம். அவளுடைய மதிப்பு இன்னும் அதிகம் என்பது எனக்குத் தெரியும், ஆனால் எங்களுக்குள் ஒருவனுக்கே அவளைத் தர வேண்டும் என நினைக்கிறோம்,” சலீமின் வலது கரமாயிருந்த மனிதர்களில் ஒருவன் சொன்னான். இளவரசர் சலீம் வந்திருக்கவில்லை.

நான் அவளைப் பார்த்தேன். அவர்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள். சிரித்துக் கொண்டார்கள் என நினைக்கிறேன்.

நான் அந்தச் சலுகையை மறுதலித்தேன். எனக்குச் சொந்தமான பசுவை நான் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அவள் திரும்பி வருவாள் என்று உறுதியாக நம்பினேன்.

**********

கடத்தப்பட்ட சில நாட்களில் சலீமின் காவலில் இருந்து தப்பியபிறகு, ஒரு வெள்ளிக்கிழமையின் பிரகாசமான காலைப்பொழுதில் அவள் வீதியில் தோன்றினாள். சந்தை அப்போதுதான் உயிர்ப்புடன் இயங்க ஆரம்பித்திருந்தது. தெருவோர வியாபாரிகளும் கடைக்காரர்களும் தங்களின் வண்ணமயமான கடைகளைத் திறந்து தொழுகைக்குப் பிறகு சில மணி நேரங்கள் சுறுசுறுப்பாக நடக்கும் வியாபாரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். சந்தைக்கடைகளை அவள் பார்ப்பது இதுதான் முதல் தடவை. உங்களுக்குப் புரிகிறதுதானே, எப்போதும் நான் அவளை மிகுந்த பாதுகாப்போடு பராமரித்து வந்தேன், எங்களுக்குச் சொந்தமான தோட்டத்தைத் தவிர வேறெங்கும் நடைபழக அவளை அனுமதித்ததில்லை. அல்லாமலும், அவளுக்குத் தேவையான எல்லாமே வழங்கப்படுவதாக நான் நம்பினேன். எப்படியோ, சிறிது தயங்கினாலும், வீதியின் முக்கிய பகுதியில் அவள் மெதுவாக நடந்து சென்றாள். இறுதியில், குப்பைத்தொட்டியின் முன்னால் சென்று நின்றாள் – எங்கள் வீட்டுக்கு வெளியே அம்பாரமாய்க் குவிந்து கிடக்கும் மிச்சமீதிகளுக்கு ஒருநாளும் குறையே இருந்ததில்லை – பொருட்படுத்தும்படியான உணவுப்பொருட்கள் ஏதும் கிடக்கிறதா என முகர்ந்து பார்க்கத் தொடங்கினாள். அடிபட்ட முட்டைகோஸ்கள், தர்பூசணிகளின் மிச்சசொச்சங்கள், விற்காமல் தேங்கிய பழங்கள், மேலும் கொஞ்சம் அடர்த்தியான கீரைத்தண்டு கட்டுகள். சந்தையில் சில காய்கறிக் கடைக்காரர்களும் இருந்ததால் அவள் தேர்ந்தெடுக்க நிறைய குப்பைகள் அங்கு சேர்ந்திருந்தன. 

அவளுடைய “மறைவுக்கு” ஒன்றரை வாரத்துக்குப் பிறகு, வீதியின் வழியே நடந்து செல்லும் அன்றாடச் சடங்கு அவளுக்குப் பழகியிருந்தது, மிக மெதுவாக நடந்து, குப்பைக்கிடங்கைச் சென்றடைவாள். ஆக என் குழந்தையை மீண்டும் கைப்பற்றும் திரைக்குப் பின்பான எனது சாகசமும் இப்படித்தான் தொடங்கியது. ஒரு வேட்டைக்காரனைப் போல அவளைப் பின்தொடர்ந்தேன். என்றாலும், இது வெகுகாலம் நீடிக்கவில்லை. ஒருநாள் ஓம்காரின் ஆட்கள் அவளுடைய கழுத்தைச் சுற்றி கயிறைக் கட்டி இழுத்துக்கொண்டு போனார்கள். துப்பாக்கியை உயர்த்தி காற்றில் சுடவும் செய்தார்கள். ஏன் என்று யாருக்கும் தெரியவில்லை.

**********

அந்த வட்டாரத்தைச் சேர்ந்த பகுதிக்குள் தாங்கள் ஒரு பசுவைத் தொலைத்து விட்டோம் என்றும் மத்திம-அளவோடு, கறுப்பு-வெள்ளை நிறத்தில், நன்கு வளர்ந்த ஓர் அழகான காஷ்மீரி பசுவை யாரும் பார்க்க நேர்ந்தால் அவளைத் தொந்தரவு செய்யாமல் தனியே விட வேண்டும் என்றும் சிறுவர்கள் அவளைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள் என்றும் விரைவில் அவளைக் கண்டிபிடித்து விடுவார்கள் என்றும் உரக்க அறிவித்த ஆயிரம் சுவரொட்டிகளை சலீம் சோயெத் அச்சடித்தான். அப்படி யாரேனும் அவளிடம் வம்பு செய்தால் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

அவற்றில் ஒரு சுவரொட்டியில் அவளுடைய கறுப்பு-வெள்ளை புகைப்படம் சதுரமாக அச்சிடப்பட்டிருந்தது. வினோதமாகத் தெரிந்தாள். கான்கிரீட் மின்கம்பத்தில் ஒட்டிய மலிவான சுவரொட்டியிலிருந்து எட்டிப்பார்க்கும் ஒற்றை வண்ண மிருகம். யாரோ சிரித்தார்கள். அது அவளுடைய படம்தானா என்பதைக் கூட என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உண்மையாகவே அவளை அவன் புகைப்படம் எடுத்தானா? அல்லது ஏதேனும் மழலையர் பள்ளிப் புத்தகத்தின் ஒரு பக்கத்தை மட்டும் கிழித்து வந்திருந்தானா? வருத்தத்தோடு, நம்பிக்கையிழந்தவனாகவும் மாறிப் போனேன், சலீமின் சுவரொட்டியை பார்த்தபின் ஒருவித வெறுமை என்னைச் சூழ்ந்தது.

சந்தையிலோ, ஒவ்வொரு நாளும் அவளுக்கு சின்னச் சின்ன உணவுப்பொருட்களைத் தருவதன் மூலம் என்னுடைய நண்பர்களும் சுற்றத்தாரும் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டார்கள்.

“நான் ஒரு பை நிறைய அன்றலர்ந்த கீரையைத் தந்தேன்…”

“நேற்று மாலை மிச்சமானதையெல்லாம் அவளுக்காக விட்டு வந்தேன்…”

“என் மனைவி அவளுக்காக புத்தம்புது ஹாக்கைக் (சீமை பரட்டைக்கீரை) கொடுத்தனுப்பினாள்…”

“அவளுக்காகத்தான் நாங்கள் புல்வெளியை சுத்தம் செய்தோம்…”

மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி நின்று பேசினார்கள், காரசாரமான விவாதங்களுக்கு நடுவே எழுந்தன சில சந்தேக முணுமுணுப்புகளும். சந்தை முழுவதும்.

“ஒவ்வொரு நாளும் இந்த சாலையை அவள் கடந்து போவதை நான் பார்த்திருக்கிறேன்…”

“குப்பைக்கிடங்கின் அருகே பலமணி நேரம் அவள் அமர்ந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்…” 

“எங்கிருந்து வந்தாள் அவள்…”

“எப்போதிருந்து அவர்கள் பசுமாடுகளை வளர்க்க ஆரம்பித்தார்கள்…”

“எனக்கு உறுதியாகத் தெரியும், அவர்கள் ஏதோ…”

“உஷ்ஷ்ஷ்…”

**********

செய்வதற்கு ஏதுமில்லாததால் ஓம்கார்நாத்துக்கு எக்கச்சக்கமான நேரம் மீதமிருந்தது. ஒவ்வொரு நாளின் காலையும், பங்கருக்கு அடுத்திருந்த கடைக்குச் சொந்தக்காரனான கசாப்புக்காரனின் உதவியோடு செய்தித்தாள்களை எல்லாம் நுட்பமாக ஆராய்வான்… அதன்பிறகு, தனது வழக்கமான தினசரி ஊர்வலத்தைத் தொடங்குவான். அவன் தலைமையேற்று முன்னால் போக, அவனுக்கு இருபுறமும் இரண்டு மனிதர்கள், மற்றவர்களோ சீரான எறும்புகளின் சங்கிலியென அவனைப் பின்தொடர்வார்கள். அவர்களின் துணையுறுப்புகளாக சில எஸ்.எல்.ஆர்கள் (Self Loading Rifle), கார்பைன்கள் (எடை குறைவான தானியங்கி துப்பாக்கி), உடன் ஏகே-47களும். கடைசியாக நிற்கும் மனிதனிடம் எப்போதும் ஒரு எல்.எம்.ஜி (Light Machine Gun) இருக்கும். போகும் வழியில் எதிர்ப்படும் மனிதர்களிடம் சிற்சில வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்வான், கசாப்புக்காரன் அலி க்ளே, வேதியியல் நிபுணர் மஜீத் நாஸல், தேனீர்க்கடை அதிபர் ரஹ்மத் ப்ரூக் பாண்ட், நூரி வீடியோ பார்லரின் முதலாளி பவன் சுட்ஸி, மற்றும் வேறு சில ஆட்களிடமும்.

பிறகு மதியவுணவுக்கான நேரம் வந்து விடும். விவித் பாரதி வானொலியோடு ஒரு அருமையான பின்மதியத் தூக்கம். அவ்வப்போது தன்னுடைய நட்சத்திரங்களுக்கு நன்றி சொல்வான், நல்லவேளையாக அவனது பணியிடம் பாட்மாலோவாக இல்லாமல் பாம்போபாராக அமைந்தது.

**********

சந்தையின் பிரதான பகுதிக்கு எதிப்புறமிருந்த போப்லார்களுக்குப் பின்னால் ஒளிந்து நான் ஓம்கார்நாத்தின் ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். செய்தி சற்று பரவியிருந்த காரணத்தால் ஏற்கனவே ஒரு கூட்டம் அங்கு கூடியிருந்தது. ஓம்கார் தலைமையேற்று முன்னால் நடந்து சென்றான், எட்டு அல்லது ஒன்பது பேர் கொண்ட இரண்டு வரிசைகளில் மனிதர்கள் அவனுக்குப் பின்னால் இருபுறமும் அணிவகுத்துச் சென்றார்கள். ஒருமாதிரி நொண்டியவாறே, நடுவில், அவளும் நடந்து போனாள். அவளைப் பார்த்தால் நன்றாயிருப்பதாகத் தோன்றவில்லை. நிச்சயமாக இல்லை. 

சலீமின் அடாவடித்தனமான சுவரொட்டி பிரச்சாரத்துக்கு எதிராக ஓம்காரின் பதிலடியைப் பற்றி முந்தையநாள் மாலையே அம்ஜத் எனக்குக் கோடிட்டுக் காட்டியிருந்தான். என்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்குள் இத்தகைய அடாவடியில் ஈடுபட அவனுக்கு எத்தனை தைரியம் இருக்க வேண்டும்?

ஓம்கார் பெருமிதத்தோடு வெற்றிநடை போட்டுச் சென்றான். இயங்க மறந்து சந்தை மொத்தமாக உறைந்து நின்றது. பிரச்சினையேதும் வரலாம் என்பதால் கடைக்காரர்கள் அடைப்புப்பலகைகளைக் கீழே இறக்கி விட்டிருந்தார்கள், என்றாலும் தங்கள் திறனை வெளிப்படுத்த சலீமும் அவனுடைய சிறுவர்களும் நிச்சயம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதை பெரும்பாலான மக்கள் அறிந்திருந்தார்கள். குழப்பமான அமைதியில் மொத்தக் கூட்டமும் பார்த்தபடியிருக்க, என் பசுவின் மகத்தான அணிவகுப்பு சந்தையில் தொடர்ந்து நிகழ்ந்தது. முழுக்க அமைதியில் உறைந்தவனாக, வளர்த்தியான அந்த மரங்களுக்குப் பின்னால் நின்று நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தலையை கம்பீரமாக உயர்த்தி ஓம்கார் நடக்க அவனுடைய ஆட்களோ அலட்சியமாகப் பின்னால் நடந்து போனார்கள். தங்களுக்கு இடப்பட்ட மற்றுமோர் பணி என்பதாகவே அவர்கள் அதை எண்ணினார்கள். அவர்களின் கரடுமுரடான ராணுவச் சப்பாத்துகள், மோசமானப் பாடலைப் பாட வற்புறுத்தப்படும் லயஒழுங்கற்ற இசைக்குழுவைப் போல, எரிச்சலூட்டும் ஒரு சத்தத்தை உண்டாக்கின. அனேகமாக, தனக்கு அடுத்து நிகழப்போவது என்ன என்பதை யோசித்தவாறே, அவள் மெதுவாக நடந்தாள். அவள் என்னைப் பார்த்தால் நன்றாயிருக்கும் என எண்ணினேன்.

சூழலின் இறுக்கத்துக்கு மாறாக, நிகழவிருக்கும் வேடிக்கையைக் கொண்டாடி மகிழ அப்பகுதியின் குழந்தைகள் முடிவெடுத்தார்கள். ஆகவே, பள்ளிக்குழந்தைகளையும் தெருப்பிள்ளைகளையும் கொண்டதொரு கூட்டம் என் பசுவையும் இராணுவ வீரர்களின் பரிவாரத்தையும் தொடர்ந்து வரத் தொடங்கியது. குழந்தைகள் சிரிப்பாணிக்குள் ஆழ்ந்தார்கள். விரைவிலேயே, வீரர்கள் சத்தமாக எட்டு வைப்பதைக் கிண்டல் செய்து அவர்கள் பாடத் தொடங்கினார்கள். அணிவகுப்புப் பாடல். “லெஃப்ட், ரைட், லெஃப்ட், ரைட்… தாயேன் முட் (வலப்புறம் திரும்பு)!” அனேகமாக, கண்டிப்பான உடற்பயிற்சி ஆசிரியரின் குச்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அவர்களுடைய காலைநேரப் பயிற்சிகளின் சற்றே திருகிய வடிவமாக அந்த அணிவகுப்பு இருக்கக்கூடும்.

பிறகு மற்றொரு பாடல், “சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா..” ஒவ்வொரு வருடமும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் குடியரசுதின பகட்டுகளையும் அதோடு இணைந்து ஒலிக்கும் பாடல்களையும் நினைவுகூர்ந்து மனதாரச் சிரித்தார்கள்.

சில கீச்சுக்குரல்கள் உருதுக் கவிஞரான ஜலந்தரியின் பாடலை ஆரம்பித்தன.. “பாக் சர் ஸமீன் ஷா’த்பாத், கிஷ்வர்-ஏ-ஹசீன், ஷா’த்பாத்…” (பாகிஸ்தானின் தேசிய கீதம்) 

குழந்தைகளின் சேட்டையால் எரிச்சலுறாத அளவுக்கு சாதுரியமானவனான ஓம்கார், அந்த அணிவகுப்பை அற்புதமான முறையில் நிறைவு செய்தான், மிருகத்தைக் கொண்டு சென்று அவளுடைய வழக்கமான இரும்புக்கம்பியில் கட்டிய பிறகு சுருக்கமாக ஒரு உரை ஆற்றினான், அமைதியும் ஒற்றுமையும் எத்தனை முக்கியம் என்பதை வலியுறுத்தியதோடு, வெறுமனே ஒரு பசுவைப் பாதுகாப்பதன் மூலம் பாம்போரில் அமைதியை நிலைநாட்ட அவனும் அவனுடைய வீரர்களும் எப்படியெல்லாம் போராடுகிறார்கள் என்பதையும் உருக்கமாக எடுத்துரைத்தான்.

அந்த அணிவகுப்பு என்னுடைய முகத்திலும் புன்னகையை அரும்பச் செய்தது, மௌனத்தில் ஆழ்ந்திருந்த தசைகளின் தளர்ச்சி என்றுதான் நான் அதைச் சொல்ல வேண்டும்.

**********

அணிவகுப்புக்கான சலீமின் பதிலடி, மற்றொரு சுவரொட்டி. குறிப்பிட்டுச் சொன்னால், இந்தக் கடைசி சுவரொட்டி நேரடியாகப் படைவீரர்களை எச்சரித்தது.

“எங்களை நீங்கள் இப்படியெல்லாம் அசிங்கப்படுத்த முடியாது. தைரியமிருந்தால், வெளியேறி வந்து வெட்டவெளியில் எங்களோடு நேருக்கு நேர் மோதுங்கள். வாய் பேசவியலாத ஒரு ஜீவனைக் கட்டிப் போடுவதன் மூலம் எங்களை நீங்கள் தோற்கடித்து விட்டதாக எண்ண வேண்டாம். அந்த மணல்வீடுகள் உங்களைக் காலம் முழுவதும் காப்பாற்றப் போவதில்லை. என்னுடைய மரியாதையை இதுபோல எள்ளி நகையாடும் அனைவரையும் நாங்கள் தண்டிப்போம். நீங்கள் உணருவீர்கள், மனம் வருந்தவும் செய்வீர்கள். என் பசுவை நாங்கள் மீட்டெடுக்கும் நாள் வெகுவிரைவில் வரும், எல்லோரும் பார்க்கத்தான் போகிறீர்கள்.”

இந்தக் கடைசி சுவரொட்டியில் புகைப்படம் ஏதும் இருக்கவில்லை.

இந்த அட்டூழியத்துக்கு எதிராக பொதுமக்கள் கிளர்த்தெழுவார்கள் என ஒருவேளை சலீம் நம்பியிருக்கலாம். மந்திரக்கோலை அவன் மெல்ல அசைத்தவுடன் வெடித்துக் கிளம்பும் அதிபயங்கர கண்டன முழக்கங்கள். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. அதுவரைக்கும் உருவாக்கப்பட்ட ராணுவ முகாம்களிலேயே பெரிய முகாமுக்கு அருகில்தான் பாம்போரின் மக்கள் வாழ்ந்தார்கள். அது மட்டுமல்ல, மக்களில் ஒரு சிலருக்கு அவனைப் பற்றிய உண்மைகளும் தெரியும். நான் போப்லார்களுக்குப் பின்னால் இருந்து பார்த்தேன்.

எங்களுடைய பகுதியிலும் அதைச் சுற்றியும் எக்கச்சக்கமான போப்லார்கள் உண்டு – பிரதான வீதிகளில், தேசிய நெடுஞ்சாலையில், ராணுவ முகாமில், இடுகாட்டில், மக்கள் புழங்கும் பூங்காக்களில், மசூதியிலும் கூட வரிசையாக நின்றிருக்கும். எங்கும் நிறைந்திருந்தன. கடைசியாக நான் கணக்கிட்டபோது, சுற்றுவட்டாரத்தில் மட்டும் ஆறாயிரத்து எழுபத்து நான்கு மரங்கள் இருந்தன. எனக்குச் சொந்தமான தோட்டத்தில் பதினேழு.

**********

ஓம்கார் தன்னுடைய பழுப்புநிற ஸ்டீல் இருக்கையில் அசையாமல் அமர்ந்திருந்தான், என் பசுவைப் பார்த்தவாறே, ஒரு தெய்வீகப் புன்னகை அவன் முகத்தில் தவழ்ந்தது. சாலையில் ஆளரவம் ஏதுமில்லை. அவனுடைய ஆட்களில் பலரும் மதியநேர ரோந்துக்குப் போயிருந்தார்கள். சந்தை ஆள்வரத்தின்றி தூசியால் மூடுண்டிருந்தது. வெள்ளிக்கிழமை தொழுகைகள் அப்போதுதான் முடிந்திருந்தன. எப்போதையும் விட சன்னமாக பின்னணியில் ஒலித்த பாடல், ஏதோவொரு பழைய ஹிந்திப்பட பாடல், ஆனால் அதுவும் கூட மௌனத்தைத் துளைத்ததாகத் தெரியவில்லை. பங்கரின் உள்ளே வானொலியை யாரோ அணைக்காமல் சென்றிருந்தார்கள். நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இதற்கு முன் பயணித்திராத தடங்களிலும் குறுக்கு வழிகளிலும் தட்டுத் தடுமாறி ஒரு நிழலைப் போல முன்னேறிச் செல்வதில் நான் தேர்ந்திருந்தேன். வீடுகளுக்கும் சுவர்களுக்கும் பின்னால், மரங்கள் மற்றும் இலைதழைகளின் ஊடாக, இருளுக்குள்ளும் நிழல்களோடு இசைந்தும். நான் அவற்றை நன்கு அறிந்திருந்தேன்.

எங்கிருந்து வந்தான் என்றே தெரியாமல் தன்னந்தனியாக ஒரு மிதிவண்டிக்காரன் சாலையில் தோன்றினான். நேர்பாதையில் மெதுவாகவும் சீராகவும் நகர்ந்தான். என்னால் அவனுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லை. காவல் சதுக்கத்தை நோக்கி மெல்ல வண்டியை மெரித்துக் கொண்டிருந்தான், அல்லது அனேகமாக நான் நிற்குமிடத்தை நோக்கி. என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

தொலைவில், எண்ணற்ற குங்குமப்பூ இதழ்கள் காற்றில் அசைந்தாடின, அவை முகிழ்த்து வந்த நிலத்துக்காக மென்மையானதொரு பாடலைப் பாடுவது போல. குங்குமப்பூக்களின் நிலத்தில் வந்திறங்கும் வசந்தகாலம் அதி அற்புதமானது.

அவனை விட்டு என் கண்களை அகற்ற நான் முற்பட்ட கணத்தில், என்னால் அவளைத் தீர்க்கமாகப் பார்க்க முடிந்தது; உறக்கமேயில்லாமல் ஏதோவொரு பகற்கனவில் தொலைந்தவளாக நின்றிருந்தாள், அனேகமாக எங்கள் கடந்தகாலத்தை, வீட்டை, மேலும் நாங்கள் ஒன்றாகக் கழித்த நாட்களை எண்ணிக் கொண்டிருக்கலாம். பிரகாசமும் வெண்மையும் ஈரமும் கூடிய அந்தக் கண்கள் இன்னும் என் நினைவிலிருந்தன.

மிதிவண்டிக்காரன் காலாகாலத்துக்கும் மெரித்துக்கொண்டேதான் இருப்பான் போல, அசைவுகளில் வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்திருந்தான், எந்தப் பக்கம் போகிறான் என்பதை அருதியிட்டுச் சொல்ல முடியாத நிலையிலும் எப்படியோ என் கவனத்தைத் தக்க வைத்திருந்தான். இன்னும் அவனுடைய முகத்தை நான் பார்க்க முடியவில்லை.

ஓம்கார் மயக்கமுற்றவனைப் போல தெரிந்தான், மடிக்கப்பட்ட செய்தித்தாள் மடியில் கிடக்க இருக்கையின் மீது அசைவேயின்றி அமர்ந்திருந்தான், அவனுக்குப் பக்கத்தில் இருந்த கார்பைன் ஒரு கனத்த, கறுப்புநிறப் பாம்பைப் போல சீறியது. அவனுடைய இருப்பு, இறுக்கமாய் அணிந்திருந்த சீருடை, மேலும் அது போர்த்தியிருந்த உடல் என எதையும் நான் விரும்பவில்லை.

துயரமான அந்தச் சூழலைத் துளைத்து நுழைந்த முதல் ஒலி, சற்றும் பொருந்தாத ஓர் இயந்திரத்தனமான கிளிக் ஒலி. பிறகு காற்றினூடாக வந்த மெல்லிய ஷ்ஷ்ஷ், அத்துடன் ஒரு எஃகு வளையம் இணைக்கப்பட்டிருந்தது. குளிர் அடித்தது. திரைப்படப் பாடல் நின்றது.

பிறகு நான் அதைப் பார்த்தேன்.

தெளிவான திரளோடு அது கீழிறங்கி உருண்டது, இரண்டு அதன் பிறகு மூன்றாவது முறை, ஓம்கார்நாத்தின் இருக்கையில் இருந்து இரண்டு தப்படி தள்ளி, பங்கரினுடைய முற்றத்தில் இருந்த தார்ப்பரப்பில். தன்னுடைய மதியத்தூக்கத்தில் இருந்து விழித்தபோதும் ஓம்கார் அசையவில்லை. மாறாக, தன்னுடைய செய்தித்தாளைக் கொண்டு அந்தப் பொருளை மெல்ல உந்தித் தள்ளினான். அது உருண்டது, மிகுந்த சிரமத்தோடு ஆனால் ஒரு தெளிவான சத்தத்தோடு, அதற்கான இலக்கை விட்டு விலகி வேகமாக உருண்டு சென்றது. சுவாசிப்பதை நான் நிறுத்தினேன்.

முதலில் அவள் எதையும் கவனிக்கவில்லை, சாய்ந்து படுத்திருந்த, மந்தமான, அந்த செல்லப்பிள்ளை. இராணுவப்பச்சையில் கட்டம் கட்டமாயிருந்த பொருள் அவளுக்கு சில அங்குலங்கள் முன்னால் சென்று நின்றது. என்னால் அதற்கு மேல் யோசிக்க முடியவில்லை. பலத்தை எல்லாம் இழந்தவளைப் போல தன் தலையை மெல்ல உயர்த்தி எங்கிருந்தோ உருண்டு வந்து தனக்கு முன்னால் விழுந்திருந்த வட்டமான பொருளை அவள் கூர்ந்து பார்த்தாள்.

பிறகு அவள் அதை முகர்ந்தாள்.

மிர்ஸா வஹீத்

நாவலாசிரியர். பத்திரிகையாளர். காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். தற்போது லண்டனில் வசிக்கிறார். பிபிசி, அல் ஜஸீரா, கார்டியன், கிராண்டா, நியூயார்க் டைம்ஸ், குவெர்னிகா போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். 2011-ல் வெளியான இவருடைய முதல் நாவலான The Collaborator கார்டியன் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. அந்த வருடம் வெளியானவற்றில் சிறந்த புத்தகம் என இந்த நாவலை டெலிகிராப் அறிவித்தது. வஹீத்தின் இரண்டாவது நாவலான The Book of Gold Leaves 2014-ல் வெளியாகி தெற்காசிய இலக்கியத்துக்கான DSC Prize விருதுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டது. Saffron என்கிற இந்தக்கதை குவெர்னிகாவில் வெளியானது.

Previous articleபாமர மக்களின் கொண்டாட்டத் திருவிழா
Next articleபேதமுற்ற போதினிலே -1
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.