“நீ மாத்திரம் என்ன அதிகமாம்; நீயும் பத்துமாசந்தான் நானும் பத்துமாசந்தான்” என்று சொல்கிறது உண்டு. செல்லையாவைப் பார்த்து அப்படிச் சொல்ல முடியாது. நிஜமாகவே அவன் பதினொரு மாசம்!
மாசத்தை எண்ணுகிறதில் பொதுவாகப் பெண்களுக்கு ஒரு பலகீனம் உண்டு. 25-ம் தேதி பிறந்த குழந்தைக்கு வைகாசி மாசம் 2-ம் தேதி போய் குழந்தைக்கு வயசு என்னாகிறது என்று கேட்டால் “ரெண்டு மாசமாகிறது” என்று சொல்லி விடுவார்கள்!
ஆனால் தாயம்மாள் அப்படி இல்லை; படித்தவள், விஷயம் அறிந்தவள். எங்கள் கிராமத்தில் அதிலும் அந்தக்காலத்தில் கம்பராமாயணப் பாடல் சொல்லி அர்த்தமும் சொல்லுகிற பெண்டுகள் அபூர்வம். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது குகப்படலத்திலிருந்து ஒரு விஷயம் சொல்லிப் பாடலை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தபோது அடுப்படியில் காரியமாக இருந்த தாயம்மாள் ‘டக்’ என்று அந்தக் கவிதையின் அடிஎடுத்துக் கொடுத்தார். கிட்னாஜாரி என்று ஒருத்தர் எங்கள் ஊரில், தமிழில் திறமான புலமை உடையவர். உடைக்க முடியாத பின்னல் பூட்டுகள் கொண்ட பழம் பெரும் பாடல்களையெல்லாம் சுலபமாகப் பிரித்துப் பொருள் விளக்குவார். குகப்படலத்திலுள்ள ‘வந்தெதிரே தொழுதானை’ என்ற பாடலுக்கு அவர் சொல்லும் பொருள் ரொம்பச் சுவாரஸ்யம். அவர் மட்டுமல்ல ஊர்ப்பிரமுகர்கள் அத்தனைப்பேரும் இதில் அவர் கட்சி. முதலில் தொழுதது குகனே; பரதன் அல்ல என்று அடித்துச் சொல்லுவார்கள். இதற்கு அவர் சொல்லும் காரணம், குகன் ஒரு வேடுவன். பரதனோ ராஜகுமாரன். அதிலும் சாட்சாத் ராமபிரானுடைய தம்பி அப்பேர்பட்டவன் முதலில் குகனைக் கையெடுத்துக் கும்பிடுகிறதாவது என்று நிஜமாகவே நம்பிச் சொல்லுவார் கிட்னாஜாரி. சிறுவனான செல்லையா அவரிடம் என்ன சொல்லமுடியும்; இந்தப்பக்கம் வந்து விழுந்து விழுந்து சிரிப்பதைத் தவிர. வீட்டிலேயே செல்லையா அழகிரிசாமியானதுக்குக் காரணகர்த்தாக்கள் மூணுபேர். முதலில் அவனுடைய அம்மா, அடுத்தது இரண்டு மாமனார்கள். இவர்கள் நெருங்கிய சொந்தக்காரர்கள் அல்ல. இவனுடைய தாய்வழிப் பாட்டனார் சொக்கலிங்க ஆசாரியின் பட்டறையில் வேலை செய்வதற்கு என்று கீழ்காட்டிலிருந்து வந்தவர்கள். தங்க ஆபரணம் செய்வதில் நிபுணர்கள். இவர்களும் அழகிரிசாமியின் குடும்பத்தவரும் தெலுங்கர்களே. ஆனாலும் தமிழில் புலமை மிக்கவர்களாக இருந்தார்கள். செல்லையாவின் குடும்பம் ஆதியில் வசதியான குடும்பமாக இருந்தது. குலத்தொழிலான நகை செய்யும் தொழிலோடு ஓரேனர்* விவசாயமும் இருந்தது. ஆடம்பரமாக வாழ்ந்த குடும்பத்தில் ஒரு கல்யாணம் வந்தது; தாயம்மாளுக்கும் குருசாமி ஆசாரிக்கும். ஐந்து நாள் கல்யாணம். போடு போடு என்று செலவு செய்து நடத்தினார்கள். சுத்துப் பட்டியிலேயே இப்படிக் கல்யாணம் நடந்தது கிடையாது என்று பேசும்படியாக இருக்க வேண்டுமென்று நினைத்து நடத்தப்பட்டது. குடும்பம் இதனால் தாங்க முடியாத கடனுக்குள் சிக்கியது. நாளாவட்டத்தில் நிலங்கள் அத்தனையும் கடன் கொடுத்தவர்களிடமே போய்விட்டது. வீடும் குலத்தொழிலும் மிஞ்சியது. கெச்சட்டம் போட்டுக் கொண்டு தின்ற பறவைகள் மரத்தில் பழம் ஓய்ந்தவுடன் ஓடிப்போய் விடுவதைப் போலப் போய்விடாமல் இந்த இரண்டு மாமனார்கள் மட்டும் இங்கேயே தங்கியிருந்தது மட்டுமல்ல வேலையில்லாத காலங்களில் இவர்களோடு சேர்ந்து பட்டினியும் கிடந்தார்கள். கஷ்டகாலத்தில்தான் இவர்கள் குரல் எடுத்து வேடிக்கைப் பாடல்கள் பாடுவார்கள். நினைத்து நினைத்துச் சிரிக்கும்படியான வேடிக்கைக் கதைகள் சொல்வார்கள். ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு!!
(*ஒரனேர் – ஓர் ஏர். ஓர் ஏக்கருக்கான விவசாயம்; சுமார் இருபது ஏக்கர் நிலமும் ஒரு ஜோடி உழுவுக் காளைகளையும் அதற்கான கோப்புசங்களையும் கொண்டது.)
தங்கவேலை கிடைக்காத காலங்களில் ஐம்பொன்னில் வளையல்கள், மோதிரங்கள் செய்து விற்பார்கள். பகலில் இந்தச் சமயங்களில் வீட்டில் பெண்டுகள் யாரும் இருக்கமாட்டார்கள்; விவசாயக் கூலிவேலைக்குப் போய்விடுவார்கள். மாமனார்களின் வாய்கள் கட்டுத்தறியில் கிடந்த காளைகளை அவிழ்த்துவிட்ட மாதிரி சரமாரியாத் கதைகளை அவிழ்த்துவிடும். கதையென்றால் நீதிபோதனைக் கதைகள் அல்ல!
மாமனாரில் மூத்தவரின் பெயர் சோலைமலை ஆசாரி. அடுத்தவர் சந்திரகிரி. சொந்தப் பெயர் ஞானதாஸ் என்பது. சந்திரகிரி அவர் பிறந்த ஊர். ஆதலால் அவரை சந்திரகிரி என்றே கூப்பிடுவார்கள். இதில் ஒருவர் கதை சொல்லி முடித்ததும் அடுத்தவருக்குப் போட்டி மனோபாவம் வந்துவிடும். அதை முறியடிக்கும் படியான சுவாரஸ்யம் மிகுந்த கதையை ஆரம்பிப்பார். இப்படி அவர்கள் உட்கார்ந்து தொழிலையும் நடத்திக்கொண்டு இதையும் ஒரு தொழிலாக வைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்குள் பிரதான போட்டிகளில் முக்கியமானது – மூத்தவர் படிப்பில்லாதவர். ஆகவே இளையவருக்கு அதில் கொஞ்சம் இளப்பம்! மூத்தவருக்கோ, இவன் என்னத்தைப் படிச்சிக் கிழிச்சிட்டான், எனக்குள்ள திறமை இவனுக்கு உண்டா என்று ஓர் எடுத்தெறியும் அலட்சியம்; கவனிப்பவர்களுக்கே இந்த நுட்பம் தெரியும்.
செல்லையா வீட்டில் சிறியவர்கள் தவிர அநேகமாக ஆணும் பெண்ணும் வாயில் பொடி போட்டுக் கொள்பவர்கள். இதில் மற்றவர்களுக்குத் தெரியாமல் அடுத்தவர்களுடைய பொடிப்பட்டையிலிருந்து எடுத்துப் போடுவதில் அவர்களுக்கு மிகுந்த உற்சாகம். அப்படிக் காணாமல் எடுக்கும் போது நாம் கண்டு கொண்டால் நமுட்டுச் சிரிப்புடன் கண்ணைச் சிமிட்டுவார்கள். என்ன இருந்தாலும் உடையவருக்கு எப்படியோ தெரிந்து விடும். மூக்குப்பொடி அளவு சிமிட்டா பற்களுக்குக் காணாது. மூக்கில் இருப்பது இரண்டே துவாரம்; பல்லோ முப்பத்தி ரெண்டு. மேல்வரிசையில் இளுகிவிட்டு கீழ்வரிசைக்காக இரண்டாம் முறை எடுக்கும்போது அகப்பட்டுக் கொள்வார்கள்! அப்போது பட்டைக்கு உடையவரின் முகம் பார்க்க வேண்டிய ஒன்று. ‘பீனிகெ; பீனிகெ’ என்று அருவெறுப்போடு முகத்தை வைத்துக்கொண்டு சத்தம் போடுவார். ‘பீனிகெ’ என்ற தெலுங்கு சொல்லுக்கு சவம் என்று அர்த்தம். ஆனாலும் தமிழில் செத்த சவமே என்று ஒரு பிரயோகம் உண்டு. இதன் பூரண அர்த்தம், செத்து நாட்களாகி அழுகி நாறும் சவத்தை குறிப்பதாகும். அந்த துர்நாற்றத்தை நுகர்ந்த முகபாவம் வரும், ‘பீனிகெ’ என்று சொல்லும் போது.
காலையில் சினைத்தவக்காய் மாதிரி உப்பி இருக்கும் பொடிப்பட்டை சாய்ந்தரத்தில் வெகுவாக மெலிந்துவிடும். அந்நேரம் தான் பெரும்பாலும் இந்த நடவடிக்கைகள்! இதுக்கு மத்தியில் செல்லையா பொடிப்பட்டைகளை எடுத்து ஒளித்து வைத்தோ அல்லது ஒருவர் பட்டையை மற்றவர் பக்கத்தில் மாற்றி எடுத்து வைத்து விட்டோ, பின் நடக்கும் ‘ஆர்ப்பாட்டங்களை’க் கவனித்து அனுபவிப்பதில் ஒரு ரசனை.
இந்த இரண்டு மாமனார்கள் தவிர செல்லையாவுக்குத் தாய் மாமனார்கள் நிறையப்பேர் உண்டு . மூத்த தாய்மாமனாருக்கு அவ்வளவும் ஆண் பிள்ளைகள். “வீடு நிறைய ஆண்கள்; வீடு பூராவும் ஆண்கள்; ஒரு கப்பலுக்கு இருக்கும்படியாக.”
ஏகக்குடும்பமாக எல்லாரும் சேர்ந்தே இருந்து வந்தார்கள். அத்தனை பேருக்கும் இவன் பேரில் செல்லம் உண்டு. ஆகவே இவனை வாய் நிறைய செல்லைய்யா என்று அழைப்பார்கள். இவர்கள் வீட்டில் நல்லது பொல்லதுகளில் தான் பருக்கை* நடமாடும். மற்ற தினங்களில் மூணு நேரமும் கம்மஞ்சோறும் காபித்தண்ணியுந்தான். செல்லையாவுக்கு மட்டும் ஒரு நேரம் பலகாரம்; மற்ற நேரம் பருக்கை. இது குடும்பத்தில் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை. காரணம், இவன் இளைய தலைமுறைகளில் தலைச்சன். படிப்பில் சூட்டிகை. இவர்கள் குடும்பத்தில் யாரும் மேல்படிப்புக்கு அனுப்பப்பட்டதில்லை. செல்லையாவுக்கு மாத்திரம் இதுக்குக் காரணங்கள் இருந்தன. இடதுகை ஊனமாகிப் போனதால் குலத்தொழிலோ, விவசாய கூலி வேலையோ செய்து பிழைக்க முடியாது. படித்து ஏதாவது உத்தியோகத்துக்குத்தான் போயாக வேண்டும் என்பது ஒன்று. படிப்பில் ரொம்ப அக்கறையும் பாடங்களில் நிறைய மார்க்குகள் வாங்கியதும் ஒன்று.
*பருக்கை – நெல்லுச்சோறு
ஊனமான அவனது கை அவனது வாழ்க்கைக்கு ஒரு திருப்பமாக அமைந்தது. தாய் கூடப் பிறந்த சித்தியின் வீடு கோவில்பட்டியில் இருந்ததால் அங்கே இருந்து கொண்டு மேல்படிப்பு படிக்க தோதாக இருந்தது.
சிறிய வயசிலேயே அவனுக்குப் படைப்புத் திறன் இருந்தது. ஐந்தாவது படிக்கும் போது அவன் பிள்ளைகளோடு பஜனை விளையாட்டு விளையாடுவான். ஊர் பஜனை மடத்தில் சனிக்கிழமை இரவுதோறும் கூட்டாகப் பஜனைப் பாடல்கள் பாடுவார்கள். இதற்குத் தவறாமல் செல்லையா போவான். மார்கழி மாசம் பூராவும் அதிகாலை நேரத்தில் பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டே கிராமத்தின் தெருக்கள் வழியாக – ஒவ்வொரு முற்றிலும் நின்று நின்று – போவார்கள். இதிலும் அவன் பங்கு கொள்வான். சுருதிப்பெட்டியின் மனம் லயிக்கும் ஸ்ருதி, மத்தளத்தின் கும்கார ஓசை, மானுடக் குரல்களோடு பின்னி வரும் புல்லாங்குழல், கணீர் என தட்டும் ஜால்ராவின் ஒலி இவை அனைத்தும் சேர்ந்து குழந்தைகளின் மனசை என்னவோ செய்யும்.
பஜனை சீசன் முடிந்ததும் குழந்தைகள் அதை விளையாட்டில் விளையாடுவார்கள் . அப்போது செல்லையா சொந்தத்தில் பாடல்களைக் கற்பனையாக இட்டுக்கட்டி பாடுவான்.
அந்தக் காலத்து நாடகப் பாடல்களைப் பாடிக்காட்டும் மாமனார்கள், மேடையில் நடிகர்கள் எப்படி உடனே பாடல்களை வசனங்களையும் இட்டுக்காட்டி வெளியிடுவார்கள் என்று சொல்லும்போது செல்லையா கவனமாகக் கேட்பான்.
மாமனார் காவடிச்சந்தை ராக தாளத்தோடு சொகமாய்ப் பாடுவார்கள். கழுகுமலை திருவிழாவுக்குப் போய் வரும்போது காவடிச்சிந்து, அம்மானை முதலிய பாட்டுப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வருவார்கள் . காலணா அல்லது அரையணா விலை கொண்ட அந்த காவடிச்சிந்து பார்க்க மட்டரகமாகவும் கச்சான்புச்சான் என்று சரியாக அச்சடிக்கப்படாமலும் பா பேதங்களோடும், ஜீவனுள்ள கவிதை வார்த்தைகளை அசிங்கம் என்று நினைத்து விட்டுவிட்டு அச்சடித்தும் இருக்கும். பிற்காலத்தில் அழகிரிசாமி நல்ல ஒரு காவடிச்சிந்து பதிப்பைக் கொண்டு வந்தது இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
(பிற்காலத்தில் குருபர கவிராயர் – ஊர் குருவிக்குளம் – என்று ஒருத்தர் எங்கள் ஊருக்கு வந்து அநேக நாட்கள் தங்கியிருந்து கம்பராமாயண விரிவுரை சொன்னார். அவரோடு நெருங்கிப் பழகிய அழகிரிசாமி அவரை அடிக்கடி காவடிச்சிந்து பாடச் சொல்லிக் கேட்பான். அதோடு அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய தனிப்பாடல்கள் பலதை சொல்லச் சொல்லி – அச்சில் வராதவை – எழுதி வைத்துக் கொண்டிருந்தான். அதில் ரெட்டியார் தனக்கு பொம்பளை சீக்கு – அரையாப்பு – வந்து கஷ்டப்படுவதாகச் சொல்லும் பாடலும் ஒன்று. மகாகவி பாரதியின் கவிதைகளில் ஆங்காங்கே வரும் கரிசல் வட்டாரத்துக்கே உரிய வார்த்தைகளையும் குறித்து வைத்திருந்த இந்த இரண்டு கையெழுத்துப் பிரதிகளையும் அவனுக்குப் பிற்காலத்தில் தேடிய போது கிடைக்காமலேயே போய்விட்டது.
அவனுடைய பள்ளி நாட்களில் – இடைசெவலில் ஆறாவது முடித்துவிட்டு கோவில்பட்டி ஏ.வி. ஸ்கூலில் படிக்கும் போது – படங்கள் வரைவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான். இந்தப் பழக்கம் கடேசி வரை அவனைத் தொட்டுக்கொண்டே இருந்தது. காகிதமும் எழுதுகோலும் கைக்குக் கிடைக்கும் போதெல்லாம் பொழுது நகராத நேரங்களில் எல்லாம் ஏதாவது ஓர் உருவத்தைக் ‘கிறுக்கி’க் கொண்டிருக்கும் வழக்கம் இருந்து கொண்டிருந்தது.
அப்புறம் கொஞ்ச நாள் கவிதை அவனில் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு காவியம் ஒன்றைத் தமிழில் – தன் பங்குக்கு! – செய்துவிட வேண்டும் என்று ஆரம்பித்து அரைகுறையில் கிடந்து நின்றே போய்விட்டது.
‘குவளை’ என்ற புனைபெயரில் ஒரு தொகுதிக்கு வரும் அளவு கவிதைகள் எழுதி இருப்பான்.
அப்பொழுது கோவில்பட்டியில் கடை வைத்திருந்த கவி.க.வ கந்தசாமி செட்டியார்தான் இவன் கவிதையில் ஈடுபடக் காரணமாய் அமைந்தவர். இவனை ஒரு பாரதியாக்கி பார்க்க வேண்டும் என்று கனவு கண்டவர். எந்தக் கவிதை எழுதினாலும் இவன் முதலில் கந்தசாமி செட்டியாரிடம்தான் அரங்கேற்றுவான். அவர் இவனை ரொம்ப பாராட்டி உத்வேகப்படுத்துவார்.
இவனுடைய முதல் கவிதை கலைமகளில் வந்த அன்று எங்கள் எல்லோருக்கும் ஒரே குஷி . ஒரு ‘பார்ட்டி’யே நடத்தினோம். பின்னால் இவனுடைய கவிதைகளை எல்லாம் திரட்டி – ஒரு புத்தகம் வரும் அளவுக்கு இருக்கும் – வை.கோவிந்தனிடம் ஒப்படைத்து விட்டு மலேசியா போனான். வை.கோவிந்தனுடைய எதிர்பாரா மரணத்தினால் அது நின்று போனதோ, எப்படியோ எங்கோ அது தொலைந்தும் போய்விட்டது.
இவனுடைய வாழ்க்கையின் மத்திய காலத்தில் ரொம்பவும் செக்ஸியான நாட்டியப் பதங்களைத் திரட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தான். அவனே பல ராகங்களில் பல பதங்கள் இயற்றிப் பாடியிருக்கிறான். அவனுடைய நெருங்கிய நண்பர்களையே நாயகனாக்கி அவர்கள் பேரில் பல நாட்டியப் பதங்களைப் பாடியிருக்கிறான்.
கர்நாடக இசையை முறைப்படி கற்றுக் கொண்டான். குருமலை நாயனம் பொன்னுச்சாமி பிள்ளை காருக்குறிச்சி அருணாச்சலத்தின் ஷட்டார்)-இடம் நண்பர்களோடு சேர்ந்து இசைப் பயிற்சி பெற்றான்.
22.8.46-ல் இடைசெவலில் இருந்து இவனுடைய நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி ஓர் இடம் வருகிறது:
சங்கீத பயிற்சி:-
“நேற்று கீதம் எழுதப்பட்டிருக்கும். கண்ணன் பிறப்பு திருவிழா தடுத்து விட்டது. நாளைக்கு கீதம். உண்மைத் தொண்டை மெருகேறுகிறது. நாலுநாளாய் மேல்ஷட்ஜமம் பிடிக்கும் போது பொய்த் தொண்டை கொஞ்சம் பேசுகிறது. பெண் கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்கு ராஜமோடியாய் பிளஷர்காரில் கிளம்ப எத்தனிக்கையில் பழைய காதலன் வந்து பல்லிளிக்கிற மாதிரி, பூர்வீக சம்பந்தத்தைக் கொண்டு பொய்த்தொண்டை வந்து கொஞ்சுகிறது. ஆனால் பாரத நாடு சத்தியத்திற்குப் பெயர் போனதாய் இருக்கும்போது பொய் எவ்வளவு காலம் நிலைக்கும்?”
7-2-47-ல் எழுதிய கடிதத்தின் முடிவில் இப்படி இருக்கிறது;-
“…மறந்து விட்டேனே, நம் பரிதாபம் ஒன்று:
குறவஞ்சியில் உள்ள ‘வாகனை கண்டுருகுவதையோ’ என்ற பாட்டை நான் பிருந்தாவன ராகம் சதுஸரஜாதி திரிபுடை (திஸ்ரகதி) தாளத்தில் ஸ்வரப்படுத்தி இருக்கிறேன். பாடவும் ஆர்மோனியத்தில் வாசிக்கவும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் வாத்தியாரையாவிடம் காட்ட வெட்கமாக இருக்கிறது.”
எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு சர்வீஸ் கமிஷன் பரீட்சையிலும் தேறி கொஞ்ச நாள் வேலையில்லாமல் பக்கம் பக்கமாய் புஸ்தகங்களைப் படித்துத் தள்ளுவதே வேலையாய் இருந்தான். படிப்பதிலும் அவனுடைய வேகத்தை எங்களில் யாராலும் பின்பற்ற முடியாது. படிக்கும் போது அவனது கருவிழிகளைக் கவனித்தால் இடம் வலதுமாய் கடிகாரத்தின் பெண்டுலத்தை விட வேகமாக அசையும். நம்முடைய கண்கள் வார்த்தைகளாகக் கொத்தி விழுங்கினால் அவனுடைய கண்கள் வாக்கியங்களாக அள்ளி விழுங்கும்.
இந்தச் சமயத்தில் தான் ஓர் இன்ப விபத்தைப் போல அவன் தற்செயலாக குமாரபுரம் முத்துசாமி – இப்பொ எட்டக்காபட்டி முத்துசாமி -யைச் சந்தித்தான் அப்பொழுது அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர். அவரோடு பேசிக் கொண்டிருப்பதே ஒரு இலக்கிய அனுபவமாக இருக்கும். தேரை ‘சருக்’ போட்டு திசை திருப்புவது போல இவனை நவீன வசன இலக்கியத்தின் பக்கம் திருப்பி விட்டார் அவர். முத்துசாமி தன்னிடம் இங்கிலீஷிலும் தமிழிலும் ஒரு புத்தகச் சுரங்கமே வைத்திருந்தார். செய்யாலில் தேய்ந்து மேய்ந்து பசி அடங்காத மாடு திரண்ட மலைக்காட்டுக்குள் புகுந்த மாதிரி இருந்தது இவனுக்கு அவருடைய புத்தகங்கள்.
அந்தக் காலத்தில் ஆசிரியர் பயிற்சி பெறாதவர்களையும் வாத்திமைத் தொழிலில் ஈடுபடுத்த வழி இருந்தது. அதன்படி செல்லையா சில மாதங்கள் காளாம்பட்டி என்ற ஊரில் (இது எங்கள் ஊரிலிருந்து வடமேற்கே 3 கல் தொலைவில் இருக்கிறது) குறைந்த சம்பளத்துக்குத் தினமும் போய் வந்து வேலை பார்த்தான். வார லீவு நாட்களில் மாலை நேரத்தில் எங்கள் ஊர் வண்ணாந்துறைப் பாலத்தின் சுவர் மீது உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய புதிய வேலை சம்பந்தப்பட்ட அனுபவங்களைச் சுவையோடு சொல்லுவான். நபர்களைப் பற்றி அவன் சொல்லுவது கேட்க சுவாரசியமாய் இருக்கும். தான் வேலை பார்க்கும் பள்ளிக்கூடம் மானேஜர், ஆசிரியர் சகபாடிகள், பள்ளிப் பிள்ளைகள் (“நேத்து ஏன்டா பள்ளிக்கூடத்துக்கு வரலை?” என்று ஒரு பையனைப் பார்த்துக் கேட்டானாம். அவன் நேத்து எங்க வீட்ல தோசைக்குப் போட்டாங்க சார்; திண்ணுகிட்டே இருந்துட்டேன் சார்” என்றானாம்!) பள்ளிக்கூடத்துக்குச் சும்மா பொழுதுபோக்காக(!) வரும் கிராமவாசிகள் இவர்களைக் கொண்டு வந்து கண்முன்னால் நிறுத்துகிற மாதிரிச் சொல்லுவான்.
காளாம்பட்டியில் இருந்து இடை செவலுக்கு நடந்து வருகிற ஒத்தையடி காட்டுப்பாதையில், தான் கண்ட செடிகள் மரங்கள் பற்றியும் அங்கே வேலை செய்யும் மனிதர்கள் பற்றியும் அவர்கள் தன்னோடு பேச்சுக் கொடுத்தது பற்றியும் சொல்லுவான். கையில் தூக்குச் சட்டியுடன் தினமும் காட்டுப்பாதையில் காலை மாலை நடந்து போய் வரும் இந்த வாத்தியாரைக் கொஞ்ச நாளைக்குள் அந்த ஜனங்கள் தெரிந்து கொண்டுவிட்டார்கள். ஆகவே இவனுக்கும் பயம் இல்லை; இவனால் அவர்களுக்கும் பயம் இல்லை!
அந்தக் காலத்தில் காட்டில் வேலை செய்யும் பெண்களிடமிருந்து பாம்படத்தை அத்துக் கொண்டு ஓடுவது சாதாரணம். பிடி வாரண்டுக்குத் தப்பி காடுகளில் அலையும் கேடிகளும் உண்டு. சிப்பிப்பாறை கந்தசாமி நாயக்கர் என்ற பிரபல இயக்கக் கொள்ளைக்காரர் அந்தச் சமயத்தில் அந்தப் பகுதியில் தான் தன் சகாக்களோடு நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடிக்க ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை மூன்று ஜில்லா போலீசும் கூட்டாகச் சேர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த சமயமும் அதுவே. இப்படிச் சமயங்களில் கிராம மக்கள் பரப்பும் வதந்திகளுக்கும் திடுக்கிடும் சுவாரசியமான கதைகளுக்கும் அளவே இருக்காது. வண்ணாந்துறை பாலத்தில் இந்தப் பேச்சுக்கள் எல்லாம் வரும்.
கிராமத்தில் ஓசிப்பொடி கேட்பவர்களைப் பற்றியும் கடைகளில் போய் ஓசி பீடி கேட்பவர்களைப் பற்றியும் இவன் சுவைப்படக் கூறுவான். ஒருநாள் காலை நேரத்தில் தான் கண்ட ஒரு சம்பவத்தை அப்படியே சொன்னான்:
மன்னார் நாயக்கர் தண்ணி எடுத்துக்கிட்டிருந்தார்.
சாமி நாயக்கர் அவரை முச்சந்தியில் சந்திச்சார்.
‘என்னே மாப்பிள்ளே, அவசரமாய் தண்ணி எடுக்கயாக்கும்.’ ‘அவசரமென்ன அவசரம்; தண்ணி எடுத்தாகனுமில்லே.
‘ஆமாம் அது எடுத்திரணும். அது சரி.. நேத்து ஒம்புஞ்சைப் பக்கம் போயிருந்தேன்.’
‘அப்படியா? எப்படி இருக்கு பயிரு? உரக்காலு இல்லையா, கேக்கணுமா? கொஞ்சம் பொடி இருந்தாக் கொடேன்.’
‘பொடி இல்லையே மாமா; இனிமேல் தான் வாங்கணும். பட்டங்கள்ளாம் எப்படி இருக்கு?
‘பட்டங்களுக்குக் கேட்கணுமா; ஒண்ணு ஒண்ணரையை விடாது. புல்லே ஒனக்கு குறுக்கத்துக்கு ஆறுகோட்டை விடாது.’
‘போன வருஷம் தான் அஞ்சிதான் ஆச்சி.’
‘இந்த வருஷம் பாரு பெறகு சொல்லுவே. களுத வாயி நம நமங்கு; கொஞ்சம் போயிலயாவது இருந்தாக் கொடேன்.’
‘போயிலயும் இல்ல மாமா; இருந்தாத்தாங் கொடுத்துருவனே. இண்ணைக்கு என்ன வேலை?’
‘போகணும்ப்பா இந்த போக்கத்த பயலுக்கு, உனக்கு பயிருளவு பாக்கி இருக்கா முடிந்சுதா?’
‘இருக்கு மாமா.’
‘சரி; அப்பப் போ நேரமாகுதில்லே.’
மன்னாரு நாயக்கர் போயிட்டாரு.
பேச்சி நாயக்கர் எதுக்கே வந்தார்.
‘என்ன மாப்ளே தண்ணி எடுக்கப் போரயாக்கும்’ என்று துவக்கினாரு சாமிநாயக்கர் பேச்சை!
அப்போது இரண்டாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகி வேகமாகப் பரவிக் கொண்டு வந்தது. கிராமத்து ஜனங்கள் யுத்தம் எப்படி இருக்கும் என்பதைப் படித்த வாத்திமார்களிடம் தான் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ஒரு மத்தியான நேரம், பள்ளி இடைவேளை, சாப்பிட்டு முடித்ததும், வழக்கம் போல் ஒருத்தர் வந்து செல்லையாவிடம், “என்ன சார் யுத்தச் சமாச்சாரங்கள் எல்லாம் எப்படி இருக்கு..” என்று ஆரம்பித்தாராம்.
இவனும் அன்றைக்குள்ள நிலவரத்தைச் சாங்கோபாங்கமாய் சொல்லத் தொடங்கினானாம். அந்த வேளையில் இன்னொருத்தர் வந்தார். அவரும் இவனிடம் யுத்த சமாச்சாரங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்கிறவர்.
அந்த யுத்தச் சமயத்தில் செய்திப் பத்திரிகைகள் யுத்தத்தை ஒரு திடுக்கிடும் தொடர்கதை போல் சுவாரசியமாய் வெளியிட்டு வந்தார்கள். ஆகவே கேட்பவருக்கும் சொல்பவருக்கும் கூட உற்சாகமாக இருக்கும்.
ஒரு மட்டுக்கும் சமாச்சாரங்கள் சொல்லி முடித்ததும் முதலாவது வந்தவர் எழுந்து போய்விட்டார். ரெண்டாவது வந்தவர் கேட்டாராம், “என்ன சார்.. யுத்தச் சமாச்சாரங்கள் எல்லாம் எப்படி இருக்கும்..” என்று உட்கார்ந்து கொண்டிருக்கும் தரைப்பலகையை துடைத்துக் கொண்டே!
செல்லையா வண்ணாந்துரைப் பாலத்தில் உட்கார்ந்து இதைச் சொல்லிவிட்டு தலையில் ‘டப் டப்’ என்று அடித்துக் கொண்டு அடித்துக்கொண்ட கையை நெற்றியிலிருந்து எடுக்காமல் தலையை கையால் தாங்கிக் கொண்டு ஒரு சிரிப்பு சிரித்தான். கடகடத்த சிரிப்பு இல்லை; பொய்த்தொண்டையில் குமிழிவிடும் ஒரு சிரிப்பு அது.
இதே சிரிப்பைப் பின்னாளில் ஒருதரம் அவனிடம் கேட்டிருக்கிறேன். ஆண்டன் செக்காவின் “லேடி வித் எ டாக்” என்கிற கதையை ஒருத்தர் “நாயுடன் கூடிய சீமாட்டி” என்று தலைப்பிட்டு மொழிபெயர்த்திருந்தார். தலைப்பை படித்துவிட்டு “நாயுடன் கூடிய சீமாட்டியா; பேஷ்!” என்று சிரித்தான்.
மொழிபெயர்ப்புகளை அவன் ரொம்பக் கேலி பண்ணுவான். அந்தக் காலத்து வாத்தியார்கள் பள்ளிக்கூடத்தில் இங்கிலீஷ் சொல்லிக் கொடுப்பார்கள். ‘ஐ ஹேவ் எ சிலேட்’ என்பதற்கு நான் ஒரு “சிலேட்டை உடைத்தாய் இருக்கிறேன்” என்று தமிழிலும் அர்த்தம் சொல்லுவார்கள். செல்லையா வெளியில் வந்து சொல்லுவான், “நான் ஒரு ஸ்லைட்டை உடைத்து இருக்கிறேன்!” என்று.
சுரண்டை என்கிற ஊரில் சப்ரெஜிஸ்தர் ஆபீஸில் கிளார்க்காகப் போய்ப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்படி தபால் வந்தது. வாத்தியார் வேலையை விட்டுவிட்டு சுரண்டைக்குப் போனான்.
எப்படா லீவு வரும் என்று காத்திருந்து ஒரே ஓட்டமாக இடைசெவல் வந்து விடுவான். சுரண்டையில் தான் கண்ட விஷயங்களைப்பற்றி வண்ணாந்துறைப் பாலத்தில் பேச்சு வரும். அந்த ஊரில் ஒரு தாமரைக் குளம் இருக்காம். காலை நேரத்தில் அங்கே படித்துறையில் போய் உட்கார்ந்து அந்தச் செந்தாமரைப் பூக்களைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு சுகானுபவம் என்பான்.
அடுத்தது சப்ரஜிஸ்தார் பற்றி. கொஞ்சம் வயசானவராம். அவர் பேசுவதைப் போலவே முகத்தை வைத்துக்கொண்டு பேசிக் காட்டுவான். மேல் கீழ் பற்கள் வரிசை பிரியாமல் சேர்ந்து இருக்க உதடுகள் மட்டும் பேசும் ஓர் அபூர்வ(!) பேச்சு அது. இப்படி ஒலிகளை – விஷயங்களை – எழுத்தில் கொண்டு வர முடியாது. எழுத்து தோற்றுத்தான் போகிறது சில விஷயங்களில். போட்டோ எப்படி உண்மை மனித அழகைக் காட்ட முடியாதோ அப்படித்தான் இந்த எழுத்தும்.
அந்த ஊர் தேரைப்பற்றி, ரொம்ப மெலிந்த தேராம். ஆனால் சாமி ரொம்ப ‘சக்தி’ கொண்டதாம். ஆகவே அந்த ஊரிலும் சுத்துப்பட்டிலும் யாருக்கு உடம்புக்கு வந்தாலும், குணமானால் ‘உன் திருவிழாவில் வந்து வடம் பிடிப்பேன்’ என்று வேண்டுதல் செய்து கொள்வார்களாம்.. இதனால் தேர் சுற்றி வரும் போது ஒரு கஷ்டம்; தேவைக்கு ரொம்ப அதிகமாய் மொய்த்து வடம் பிடிப்பதால் தேர் வேகமாய் ஆட்கள் பேரிலும், மற்றதுகள் பேரிலும் வந்து எங்கே மோதிச் சேதம் ஆகிவிடுமோ என்ற பயத்தில் போலீசார், வடம் பிடிப்பவர்களைக் கோபத்தோடு பார்த்து “ஏய் இழுக்காதே! இழுக்காதே!” என்று கத்துவார்களாம். நெல்லையப்பர் கோவில் தேரை இழு இழு என்று ஜனங்களை போலீசார் அதட்டும் சம்பவத்தோடு இதை ஒப்பிட்டுச் சிரிப்பான்
சுரண்டைக்குப் பிறகு தென்காசியிலும் நாங்குநேரியிலும் சில மாதங்கள் வேலை பார்த்தான். தென்காசியில் இருந்தபோது தற்செயலாய் ஒருநாள் ராத்திரி கோவிலில் ரசிகமணி டி.கே.சி-யின் இலக்கியப் பேச்சை கேட்க நேர்ந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை குற்றாலம் போய் டி.கே.சியைப் பார்த்தானாம். அதைப்பற்றி ஒரு கடிதம் எழுதி இருந்தான். ரசிகமணியின் குரல், அவருடைய முகத்தோற்றம், பழகும் முறை, உபசரிப்பு, அவர்கள் வீட்டுச் சாப்பாடு, வேலைக்காரன் ஜமக்காளத்தை விரித்த பாங்கு, டி.கே.சி- சொல்லிய கவிதைகள் இவை பற்றியெல்லாம் விஸ்தாரமாய் சொல்லி இருந்தான். புறப்படும் போது டி.கே.சி-யிடம் படிக்க ஏதாவது புத்தகம் வேண்டும் என்று கேட்டானாம். “படிக்கிறதற்குப் புத்தகங்களே ஒன்னும் கிடையாது; வெளியில தான் ரொம்ப இருக்கு படிக்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.
நாங்குநேரியில் வேலை பார்த்த போது திருச்சி வானொலியில் இருந்து கவியரங்கத்தில் பங்கு கொள்ள அழைப்பு வந்தது. கவியரங்கின் பொதுத்தலைப்பு ‘எழில்’.
கவியரங்கம் என்று ஆரம்பித்து நடத்திய முதல் கவியரங்கம் இதுதான் தலைமை ரசிகமணி டி.கே.சி-அவர்கள். இதில் கலந்துகொண்ட முக்கிய கவிஞர்களில் ந.பிச்சமூர்த்தியும் ஒருவர். கு.ப.ராஜகோபாலன் பிச்சமூர்த்தியோடு வந்திருந்தார். இவர்களை அன்றுதான். .கு.அழகிரிசாமி அறிமுகம் செய்து கொண்டது. இது 1944 வாக்கில்.
‘உறக்கம் கொள்ளுமா?’ என்கிற முதல் சிறுதையின் மூலம் கு.அழகிரிசாமி என்ற பெயர் ‘ஆனந்த பூதினி என்ற பத்திரிகை மூலம் முதன்முதலில் தமிழ்நாட்டு வாசக உலகத்துக்குத் தெரிய வந்தது.
சின்ன வயசில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த ஒருவனுடைய இளமைக்காலத்து ஞாபகங்கள், பல வருஷங்களுக்கு அப்புறம் அவன் அதே வீட்டில் மாடியில் ஒரு நாள் இரவு தங்க நேர்ந்தபோது அந்தக் காலத்து நினைப்புகள் வந்து அவனைத் தூங்கமாட்டாமல் அலைக்கழிக்கின்றன என்பதே கதை.
கோவில்பட்டியில் அவன் சிறிய வயதில் தனது சிற்றனையின் வீட்டில் தங்கிப் படித்தான். பிறகு அவர்கள் பிழைப்பு நிமித்தம் வேறு ஊருக்குப் போய் விட்டார்கள். இவனுக்கும் படிப்பு முடிந்தது. இவன் உத்தியோகத்தில் இருந்தபோது ஒரு நாள் நாங்கள் கோவில்பட்டி போனவர்கள் தற்செயலாக அந்தத் தெரு வழியாக நடந்து போனோம். திடீரென்று இவன் ஒரு வீட்டின் முன் பரவசத்தோடு நின்றான். அந்த வீட்டின் திண்ணையில் ஒரு வயசான பொற்கொல்லர் உமி ஓட்டில் ஊதிக்கொண்டிருந்தார். அவரிடம் தனது சின்னம்மாவின் பெயரையும் சித்தப்பாவின் பெயரையும் சொல்லி, இந்த வீட்டில் அவர்கள் முன்பு குடியிருந்ததையும் சொன்னான். அந்த வயசாளியும் உடனே இவனை இன்னார் என்று கண்டு கொண்ட பரிவோடு விசாரித்தார். உடனே இவன் என்னையும் மற்றவரையும் கூட்டிக்கொண்டு வீட்டுக்குள்ளே போய் அந்தச் சிறிய வீட்டைச் சுற்றிக் காண்பித்தான். இந்த இடத்தில் தான் நாங்கள் உட்கார்ந்து சாப்பிடுவோம். நான் இங்கே உட்கார்ந்துதான் ராத்திரிகளில் படிப்பேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தவன், “இந்த இடத்தில் ஒரு செடி இருந்ததே, அது எங்கே?” என்று கேட்டான். வீட்டின் சொந்தக்காரர் அதை அப்புறப்படுத்தி விட்டதாக ஒரு மூதாட்டியினைச் சொன்னாள். அது இவன் கொண்டு வந்து நட்ட செடியாம்.
வீட்டிலிருந்து இறங்கி வந்தான். அந்தத் தெருவழியாக நாங்கள் நடந்து வரும்போது அந்த வீட்டைப்பற்றி நிறையச் சொல்லிக் கொண்டே வந்தான். பின் நாட்களில் இது அவனில் ஒரு கதையாக உருவெடுக்கும் என்று அப்போது தெரியாது; அவனுக்கும் கூட.
தி.ஜ.ரங்கநாதன் ஆசிரியராய் இருந்த ‘சக்தி’ பத்திரிக்கையில் இவனுடைய ‘பித்தளை வளையல்’ கதை வெளிவந்தது. அது இவனுடைய அசல் கதையாக வராமல் திருத்தி வெளிவந்தது இவனுக்கு ரொம்ப வருத்தம். தங்க நிறமுள்ள ஏழைப் பெண் பித்தளை வளையல் அணிந்திருப்பதும் கருப்பு நிறமுள்ள வசதியான பெண் தங்க வளையல் அணிந்திருப்பதையும் பற்றிய கதை.
கிராமத்தில் ஒரு நாள் நடந்த தெருச் சண்டையின் போது கேட்ட விஷயம்; பித்தளை வளையல் போட்டிருப்பது எவ்வளவு கேவலம் என்று ‘நிலைநாட்டப்பட்டது’ அந்தச் சண்டையில்!
‘இரவு’ என்றொரு கதை ‘பிரசண்ட விகடன்’-ல் வெளிவந்தது. நெருங்கிய ஒரு நண்பனோடும் அவனுடைய அழகில்லாத மனைவியோடும் ஊர்சுற்றுப் பிரயாணத்தின் போது, ஓர் இரவு கன்னியாகுமரி சத்திரத்தில் தங்க நேர்கிறது. விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்ட பிறகு, நண்பனின் மனைவியின் பேரில் மனக்கிளர்ச்சியும் விரசச் சிந்தனைகளும் உண்டாகின்றன. காலை ஒளி வந்ததும் அந்த எண்ணங்கள் போன இடம் தெரியாமல் ஓடிப் போகின்றன. இருட்டின் அரக்கத் தன்மையையும் ஒளியின் தேவத்தன்மையும் சொல்லும் கதை. இக்கதையின் நுட்பமான பின்னல் இலக்கிய உலகத்தில் பலரைக் கவர்ந்தது.
இந்தக் கதை வெளிவந்த சில நாட்கள் கழித்து ‘பிரசண்ட விகடன்’ பத்திரிக்கைக்கு உதவி ஆசிரியராக வந்து பதவி ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டு நிர்வாகத்திடம் இருந்து தபால் வந்தது.
சப்ரிஜிஸ்தர் ஆபீஸ் குமாஸ்தா வேலையை உடனே உதறிவிட்டு மெட்ராஸுக்குப் புறப்பட்டு விட்டான். சர்க்கார் வேலையை வேண்டாம் என்று சொன்னது வீட்டில் உள்ளவர்களுக்கு வருத்தந்தான்.
மாதம் அறுபது ரூபாய் சம்பளத்தில் ‘பிரசண்ட விகடன்’, ‘ஆனந்த போதினி’ இரண்டு பத்திரிகைகளுக்கும் உதவி ஆசிரியர் என்கிற புரூப் திருத்துகிற வேலையைச் செய்யப் புறப்பட்டு விட்டான். (ஆரம்பத்தில் மாதம் 30 ரூபாய் தான் வாங்கினான் என்று ஞாபகம்.) விலைவாசிகள் உயர்ந்து தேவைக்கு வேண்டிய பொருள்கள் கிடைக்காத யுத்தக் காலம் அது. இதுவரை கிராமத்திலேயே வளர்ந்தவன். கோவில்பட்டி கூட அந்த காலத்தில் பெயருக்கு ஏற்ப ஒரு பட்டி தான்.
பின்னால் அத்தனை வருஷங்கள் சென்னைப் பட்டினத்தில் வாழ்ந்திருந்தாலும் நகரத்தின் மேட்டிமை துளி கூட அவனிடம் ஒட்டவே இல்லை. அங்கேயும் அவன் ஒரு பழுத்த கிராமவாசியைப் போலத்தான் நடை உடை பாவனைகளில் இருந்தான். இவற்றின் உச்சம் அந்த சென்னைப்பட்டினத் தமிழ்ப் பேச்சு இவனிடம் அறவே ஒட்டாதது. அதேபோலத்தான் பேசினான். இங்கே யாரோடு அவன் தெலுங்கில் பேசினானோ அதே மாதிரி வந்த போதும் பேசினான். எங்களைச் சிரிக்க வைக்க மட்டுமே எங்களிடம் சென்னைப் பட்டினத்துத் தமிழ் மாதிரி பேசிச் சிரிக்க வைப்பான்.
மெட்ராஸ் போனதும் எழுதிய கடிதம்;-
தேதி: 31-12-43 ‘.. எனக்கு உங்களை எல்லாம் பிரிந்து வந்தது எப்படியோ இருக்கிறது… திடீர் திடீர் என்று ஊர் நினைப்பு வந்து சோர்ந்து போகிறது. இதுபோல் பிரிவுத்துயரில் நான் கஷ்டப்பட்டதே கிடையாது. என்னதான் செய்வது? தெற்கு முகமாய் பார்த்து ‘ஏ திருநெல்வேலி ஜில்லாவே! நண்பர்களே! என்று அலறட்டுமா’ என்றிருக்கிறது.
அந்த நாளில் அவனுடைய சென்னை வாழ்க்கை சந்தோஷமாக அமையவில்லை. அதை விட்டு இடை செவலுக்கு ஓடி வந்தாலும் இங்கேயும் கஷ்டம் தான். அந்தக் காலத்தில் அவன் எழுதிய கடிதங்களில் இருந்த சில பகுதிகள்:-
எனது அன்பு மிக்க..க்கு,
நான் சென்னை வந்ததும் உனக்கு எழுதிய கடிதம் கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதற்குள்ளாக இந்த கடிதத்தை எதற்கு எழுதுகிறேன் என்றால்.. எழுதாமல் எப்படி இருக்க முடியும்? கடிதம் எழுதாமல் ஒரு நாள் கூட போக்க முடியாது போலிருக்கிறது! சென்ற கடிதத்தில் நான் எழுதி இருந்த துன்பச் சமாச்சாரங்களை பின்னணியாக வைத்து, இங்கே பல நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. கிணற்றுத் தூரில் சகதி கிடந்தாலும் தண்ணீர் தெளிவாக இருப்பதில்லையா? ஆனால் சில சமயங்களில் சகதியைக் கலக்கி விட்டால் தண்ணீர் என்னவாகும்? மேலுக்குப் பார்த்தால் வாழ்க்கை சங்கடம் இல்லாமல் தான் இருக்கிறது. என்ன இருந்தாலும் தூர்வை எடுத்த கிணற்றுத் தண்ணீராக மாற முயற்சி செய்ய வேண்டாமா?
போகட்டும் ஸ்ரீ.. வழக்கம் போல என்னுடன் பழகுகிறார் . மகாபலிபுரத்திலும் சென்னையிலும் நீ தீபஸ்தம்பங்களைப் பார்த்தாய் அல்லவா? அவற்றில் வெளிச்சத்தைத் தரும் ஒளிக்கதிர் சுற்றிக் கொண்டே வருகிறது. ஒரு சமயம் வெளிச்சமாகவும் மறுசமயம் இருட்டாகவும் இருப்பதைப் போலவே தான், என் வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் விரவிக் கிடக்கின்றன. ஆனால், நான் இன்பம் என்று குறிப்பிடுவது எல்லாம் இன்பமாக வெளிக்குத் தெரியும் ‘பொய்’யைத் தான் என்று நீ எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்பது மணிக்கு எழ வேண்டியது. கிளப்பில் போய் பலகாரம் சாப்பிட்டு வந்துவிட்டு நேரம் இருந்தால் குளிக்க வேண்டியது இல்லாவிட்டால் பத்திரிக்கையை அவசர வெட்டில் அரைகுறையாகப் பார்த்துவிட்டு ஸ்ரீ துரை வீட்டுக்குச் சாப்பிடப் போக வேண்டியது. அப்புறம் ஆபீஸ் வேலை. இப்போது புதுமணி*யானதால் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வர இருட்டி விடுகிறது. வந்ததும் சாப்பிட்டுவிட்டு ஏதாவது நான்கு பக்கம் படிக்க வேண்டியது. அப்புறம் தூக்கம். இந்தத் தினசரி நியதி உனக்கே தெரிந்த கதைதான்.. இந்த லக்க்ஷணத்தில் அவசரப் படபடப்பில் ஆழ்ந்த சிந்தனையோடு தத்துவஞானம் நிறைந்த இலக்கியச் சிருஷ்டிகளை அப்போதைக்கு அப்போது ‘சுக்குக் கண்ட இடத்தில் பிள்ளை பெற்ற’ கதையாக உண்டாக்கும் முயற்சிப்பது, இது எப்படி இருக்கிறது என்று கேட்டால் ஏதோ.. என்று எதையாவது ஒன்றை உதாரணமாகச் சொல்லி வைக்க வேண்டியதுதான்!
ஆனால், இப்படியே இருப்பது என்று அர்த்தமா? நான் உன்னிடம் பேசிக்கொண்டபடியே என் சென்னை வாழ்க்கையில் சில சில சௌகரியமான – ஆபத்தான – மாறுதல்களைச் செய்ய வேண்டியது தான் வேறு வழியில்லை. அதாவது டிசம்பர் முதல் தேதி முதல் மாம்பலத்துக்குக் குடி போகிறேன். போகலாம் என்று நிச்சயமாகத் தீர்மானித்திருக்கிறேன். அறை தயாராக இருக்கிறது. மின்சாரம், கிணறு, குழாய் முதலிய வசதிகள் நிறைந்தது. கொஞ்சம் அதிகம் பணம் செலவாகும் அவ்வளவுதான். ஜனவரி முதல் தேதி முதல் கட்டாயம் கன்னிமாரே புத்தக நிலையத்தில் அங்கத்தினராகச் சேர வேண்டும். பத்துப் பதினைந்து நாட்களில் ஏதாவது ஒரு புஸ்தகம் எழுத ஆரம்பித்து விட வேண்டும். இந்த கிளிக்கூண்டில் இருந்து தப்பி ஓடி, சுதந்திரமாக உட்கார்ந்து சாப்பிட அழகான பழம் நிறைந்த ஒரு மரம் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது – இப்படி எல்லாம் திட்டங்கள் செய்து வைத்திருக்கிறேன். இந்தச் சாதாரணத் திட்டங்களை நிறைவேற்றாவிட்டால் அப்புறம் என்ன இருக்கிறது?
ஆபீஸில் முதலியார் மிகவும் அன்போடும் உரிமையோடும் நடந்து கொள்கிறார். நடந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது! நான் ஒரு மாதம் லீவு எடுத்ததில் அவருக்கு 60 ரூபாய் மிச்சம் அல்லாவா ஆகியிருக்கிறது!
எப்போதும் ஊரிலிருந்து வந்தவுடன் ஒரு 4 நாளைக்கு மனம் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் இந்தத் தடவை அப்படி இல்லை. எதற்கு என்று எனக்கே புரியவில்லை. ஒருவேளை அதிகம் ஊரில் அதிக நாள் தங்கி இருந்து விட்டு வந்ததினாலா? அல்லது சென்னை நகரம் இடைச்செவலுக்கு மந்தைப் புஞ்சையைப் போலாகி, நான் அடிக்கடி வந்து போவதால் தூரத்தின் கொடுமை குறைந்து
*புது மணி இந்தியா பூராவும் கடிகாரத்தை ஒரு மணி நேரம் பின்னுக்குத் தள்ளி வைத்தார்கள் அப்பொழுது. யுத்தக் காலம் அது.
போய்விட்டதா? எதற்கு என்று தெரியவில்லை. மனம் சற்று சங்கடமில்லாமல் இருக்கிறது. அதைப் பற்றிக் கவலைப்படவா வேண்டும்? வேண்டிய சங்கடங்கள் தாராளமாக வருவதற்கு எத்தனை நாழிகை ஆகும்?
நீ அடிக்கடி நீண்ட கடிதாசிகள் எழுதிக் கொண்டிருக்க வேண்டும். அவற்றை போதைப் பொருட்களாக வைத்துக் கொண்டுதான் நான் நாவல் எழுத வேண்டும் என்பதை மறந்து விடாதே.
நண்பர்கள் ரகுநாதனும், காசி விஸ்வநாதனும் சென்னையில் இல்லாவிட்டால் என் பாடு கஷ்டமாகிப் போய்விடும். அவர்கள் அளிக்கும் உற்சாகம்தான் சற்று சந்தோஷத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. இக்கடிதத்தை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். இவ்வளவு போதாதா? உபயோகமற்ற செய்திகளை எழுதுவதற்கு உதாரணமாக இவ்வளவு எழுதி விட்டேன். – இது போதாதா?
கு.அழகிரிசாமி.
அருமை..க்கு,
என் முந்திய கடிதம் – பேரிங் கடிதம் – கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். உனக்குக் கிடைக்காவிட்டால் எனக்குத் திரும்பி வந்திருக்கும்! உன் சிரங்கை பற்றி நீ வர்ணித்தது என் சிரங்கைப் பற்றி வர்ணித்தது போலவே இருந்தது. முகத்தைத் தவிர மற்ற அங்கங்களில் எல்லாம் எனக்கு சிரங்கினால் ஏற்படுகிற வேதனையில் பாதி கூட உனக்கு ஏற்பட்டிருக்குமா எனச் சந்தேகிக்கிறேன். இரவில் தூக்கம் இல்லை. கண் விழித்திருக்கிற நேரத்தில் கை சரீரத்தில் ஏதாவது ஒரு இடத்தில் ‘வீணை மீட்டி’க் கொண்டே இருக்கிறது. வேதனை சரீரத்தோடு நிற்கட்டுமே! கடிதத்திலும் ஏன் ஏற வேண்டும்?
இங்கே விதைப்புகள் முடிந்து காடெங்கும் இளம்பயிர்கள் பச்சை பசேல் என்று இருக்கின்றன. தினமும் கொஞ்சம் மழை பெய்கிறது. வாழ்க்கை – என்னை பொருத்தமட்டில் தானே சொல்லக்கூடும்? – வாழ்க்கை வேப்பங்காயே தான். சில நாட்களை நான் படிக்காமலேயே கூட கழித்திருக்கிறேன். ஒவ்வொரு வினாடியும் படிப்புக்கும் எழுத்துக்கும் நேரமில்லையே என்று ஏங்கிக் கொண்டு இலக்கிய முயற்சியில் ஈடுபட்ட உள்ளம் இன்று விழித்துயலில் ஆழ்ந்து விட்டது.
சக்கரவாக வர்ணத்துக்கு சாகித்தியமும் வர்ணமெட்டும் பொருத்தமாக அமைந்து விட்டன. பிரமாதமான வர்ணம், இப்போது பாடம் பண்ணுகிறேன்.
வாத்தியார் ஐயா நவராகமாலிகா வர்ணம் ஒன்று தயாரிக்கத் தொடங்கிவிட்டார். பல்லவியை சரசாங்கியிலும் கௌரி மனோகரியிலும் அமைத்து எழுதிவிட்டார். இனி, நாடக பிரியா, கோகில பிரியா, ராஜநாராயணி, ஆகிரி போன்ற ராகங்கள் இடம் பெறும்.
கு.அ
இடைசெவல்,
25-11-46
~ ~ ~
அன்புமிக்க…க்கு,
நலம்; நலம் அறிய ஆவல்.
முதலிலேயே சொல்லிவிடுகிறேன்; இது ‘பேரிங்’ கடிதம். தொட்டதெல்லாம் பொன்னான, கைக்கூழை இரந்து குடித்தாலும், பழைய வீச்சுகளை வீசித்தான் ஆக வேண்டும். வீசாவிட்டால் கை ஒடிந்தது போல இருக்கும். அதே போல வாரம் தவறினாலும் கடிதம் எழுதத் தவறாத இந்தக்கை ‘பேரிங்’ கவரின் துணைகொண்டாவது காரியத்தைச் சாதிக்க விரும்புகிறது. பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட காலத்தில் பாம்புப் புற்றிலும் கைவிடவில்லையா சடையப்ப வள்ளல்? ஆனால் அவனுக்கு அன்று நாகரத்தினம் கிடைத்தது. ஆனால் எனக்கு.. இருக்கட்டும். ஸ்ரீ சீனி நாயக்கர் அன் கோ முந்தா நாள் இரவு இங்கு திரும்பி வந்ததும், அங்குள்ள சகல செய்திகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன் . நாகர்கோவிலுக்கும், புத்தேரி ஆஸ்பத்திரிக்கும், அந்த நாஞ்சில் நாட்டு சகவாழ்வுக்கும், ஏகப்பிரதிநிதிகளாக வந்த வெற்றிலை பாக்கையும் போட்டுக் கொண்டேன். கவி என்ற உபகரணத்தின் மூலம் கவிஞன் உள்ளத்தைக் கண்டு கொள்ளுவதைப் போல, இந்த வெற்றிலை பாக்கு மூலம் நாகர்கோவிலுக்கு ஒரு மானசீக யாத்திரை போய்த் திரும்பினேன். அங்கே உன் தேகநிலை சற்று அபிவிருத்தியடைந்த சந்தோஷ மாறுதலைக் கண்டேன்; சந்தோஷத்தை அனுபவித்தேன். அது நிரந்தரமாகும் நாளை எதிர்பார்த்துத் தவித்தேன். பிறகு..
எங்கள் அப்பாவின் விவரங்களை அறிந்தேன். அவர் தருமத்தில் அங்கே சிகிச்சை பெறுவதும், நான் ‘பேரிங்’ கடிதம் எழுதுவதும் ஒரு சுதியில் லயிக்கிறது என்று சொல்லலாம் என்று நினைத்தேன் யோசித்துப் பார்த்தால் அது தப்பாகவே இருக்கிறது. இரண்டு பேர் விகாரமாகக் கத்திக் கூச்சலிட்டால் அது ஒரு சுதியில் இசைந்து விடுமோ? பலவிகாரங்களின் சேர்க்கை தான் கஷ்டம் என்பது; வறுமை என்பது. அதில் ரசம் ஏது, சோக ரசம் என்பது அனுபவிக்கக் கூடிய விஷயம். இது அனுபவிக்க முடியாத ரசவிகாரம்….
நான் பட்டணம் போகும் முன் ஒருமுறை அங்கு வர முயல்கிறேன். பட்டணத்துக்கு வெகுசீக்கிரம் நான் புறப்படுவதைத் தவிர்த்து வேறு வழி இல்லை. சீனி நாயக்கர் உனக்குச் சகல விவரங்களையும் கூறியிருப்பார். நான் பட்டினி கிடக்கிறேன் என்ற விஷயத்தைப் பிறர் சொல்லாமல் நான் சொல்லி விடுவதென்றால், அது எனக்கு அவமானமாக இல்லாவிட்டாலும், லோகோபச்சாரத்துக்கு நாசுக்கில்லையல்லவா? முக்கால்வாசி சிரங்கு போய்விட்டது . போய்விட்டதோ அல்லது அஞ்ஞாத வாசம் தான் உடலுக்குள்ளேயே செய்கிறதோ; எப்படி என்றாலும் இன்றைய நிலையில் அம்மாட்டில் சௌகரியம் தானே? ‘ஆவின மழை பொழிய’ என்ற ஒரு பாட்டை நீ கேட்டிருப்பாய். அந்தப் பாட்டில் சிரங்கை பற்றிச் சொல்லாமல் மற்ற எல்லா கஷ்டங்களையும் சொல்லியிருக்கிறது. எனக்கு இப்பொழுது சிரங்கில்லாவிட்டாலும், அந்தப் பாட்டில் உள்ள, அதற்கும் அதிகமான கஷ்டங்கள், வேதனைகள் இருக்கின்றன. வயிற்றிலும், மனத்திலும் ஏககாலத்திலல்லவா பசிகள்?
நண்ப, எழுத வேறு விஷயம் ஒன்றுமில்லை. கும்மட்டிக்காயை ஒரு ஓரத்தில் கடிக்கச் சொல்லி, உனக்கு கசப்பைத் தெரிவித்துவிட்டால் போதாதா? டஜன் கணக்கில் கும்மட்டிக்காயை தின்று தான் கசப்பைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
அடிக்கடி கடிதம் எழுது. உன் ஷேமலாபத்தைப் பற்றியே எழுது. அதைவிட இப்போது வேறு முக்கியமான செய்தி என்ன இருக்கிறது?
இப்படிக்கு,
ஒரு காலத்தில் அழகிரி சாமியாக இருந்த நான், உனக்கும் பலருக்கும் நண்பனாய் இருந்த நான்.
தாய்க்குத் தலைமகன் என்ற விதத்தில் இவனுடைய அம்மாவுக்குத் தன் குழந்தைகளில் எல்லாம் இவன் பேரில் மட்டும் ஒரு தனிப் பிரியம்.
‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற கதையில் இவன் தனது தாயார் தாயம்மாளுக்கு ஒரு கோவிலே கட்டியிருக்கிறான். அதில் மங்கம்மாள் என்ற பெண் குழந்தைப் பாத்திரம் ஒன்று தான் அந்தக் கதையில் கற்பனை. தங்களுக்கு உடன்பிறப்பாக ஒரு பெண் இல்லையே என்ற ஏக்கம் இவனுக்கும் உண்டு. அதை இப்படித் தீர்த்துக் கொண்டான்! இந்தக் கதையை இன்று படித்தாலும் கூட – சில இடங்களை – கண்கள் நனையாமல் படிக்க முடிவதில்லை என்னால்.
‘பாலம்மாவின் கதை’யில் சொல்லப்படுவது கிட்டத்தட்ட அவனுடைய அம்மாவின் கம்மல்களைப் பற்றித்தான்.
‘அழகம்மாள்’ கதையில் தன்னுடைய அம்மாவையும் அப்பாவையும் தன்னையும் வைத்தே ஒரு சித்திரம் பின்னியிருக்கிறான். அழகம்மாளும் கிருஷ்ண கோனாரும் பெரும்பாலும் இவனுடைய பெற்றோர்கள் தான்; கதை வடிவத்துக்காகச் சில இடங்களில் ஏற்ற இறக்கம் கொடுத்திருக்கிறான். ஆகவே கதையை அப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாது.
கதைகளின் மூலத்தை பொதுவாகத் தேடக்கூடாது தான்; ஆனாலும் – எவ்வளவு மறைத்தாலும் – ஒரு ஓரை தெரியவே செய்யும். அதோடு இந்த தேடல் அவனுக்கு பிடிக்காது; எனக்கும்தான்; எந்த எழுத்தாளனுக்கும்தான்;
சொந்த வாழ்க்கையைப் பற்றிய, பிறந்த வீட்டைப் பற்றிய, நெருங்கிய நண்பர்கள் பற்றி ஒட்டிய கதைகள் இவனுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.
சிறுவயசிலிருந்தே இவனுக்கு தியாகம் கீர்த்தனைகளில், அந்த இசை மெட்டுகளில் தீராத மோகம். இசைமேதை பீதோவன் பற்றி பேச்சில் குறிப்பிடும்போது, “ஜெர்மானிய தேசத்து தியாகப் பிரம்மம்” என்றே சொல்லுவான். தெலுங்கு இவனுக்கு ‘தாய்ப்பாலாக’ இருந்ததினால் தியாகராஜ கிருதிகளை ஓரளவு பொருள் உணர்ந்து அனுபவிக்கவும் முடிந்தது.
ஒரு நாள் நாகர்கோவிலில் தியாகயய்ரைப் பற்றிய படம் சினிமாப் படம் பார்க்கப் போனோம் நானும் அழகிரிசாமியும். தமிழில் இதுவரை தியாகயய்ரைப் பற்றி இரண்டு மூன்று படங்கள் வந்த ஞாபகம். அவ்வளவிலும் கதை ஒன்றுதான். படத்தைப் பார்த்து விட்டுப் பேசிக்கொண்டே புத்திரியைப் பார்த்து நடந்தோம். நல்ல நிலவு. அழகிரிசாமி சொன்னான், ‘படத்தை எடுத்தவர்கள் அவருடைய பாடல்களை மறந்து விட்டார்கள்!; அதுதான் ரொம்ப முக்கியம். பாடல்களின் அடிப்படையில் படத்தை உருவாக்கி இருக்க வேண்டும்.’ இப்படிச் சொல்லிவிட்டு சில கீர்த்தனைகளைப் பாடிக் காட்டினான். மோகன ராகத்தில் அமைந்த ‘நன்னு பாலிம்ப நடதிவச்சிதிவோ?’ (‘என்னைப் பரிபாலிக்க நடந்தே வந்தாயோ என்று ராமனை பார்த்துக் கேட்கிறார்.) தியாகய்யரை பார்க்க திருவையாறுக்கு ராமன் எப்போது வந்தான் நடந்தே? ஆனாலும் அப்படி நடந்ததாகவே அவர் சொல்லுகிறார். இதை ஒரு காட்சியாக ஏன் கொண்டு வந்திருக்கக் கூடாது? படத்துக்கு என்னை கதை எழுதச் சொன்னால் தியாகய்யரின் பாடல்கள் இருந்தே அவரது வாழ்க்கையை உருவாக்குவேன்; அது தான் நிஜமான கதையும் கூட.’ மணிமேடை ஜங்ஷனிலிருந்து புத்தேரி ஆஸ்பத்திரிக்கு நடந்து போகும்போது அவன் மனசுக்குள் விழுந்த இந்த விதைதான் பின்னால் ‘திருவேணி’ கதையாக வந்தது.
சுபாவத்தில் இவன் மிகுந்த சங்கோஜி. தன்னைச் சூழ்ந்த மனிதக் கூட்டத்துக்கு மத்தியில் ஒரு பழகிய முகம் துணைக்கு இருந்தால் அன்றி ‘தனியாக’ இருப்பது இவனுக்கு நெருப்பின் மேல் இருப்பதைப் போல் இருக்கும். குழந்தையைப் போல் பத்ரவுணர்வு தேடுகிறவன். அறிந்த முகம் பக்கத்தில் இல்லையானால் தவித்துப் போய்விடுவான்! சக பயணிகளோடு சாமானியமாக ஒட்ட மாட்டான். பெண்கள் என்றாலோ காத தூரம் ஒதுங்கி ஓடுவான். ‘ஞாபகார்த்தம்’ கதையில் வருகிற கோவிந்தராஜன் இவன் பெற்றெடுத்த அசல் பிள்ளை; அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்திருக்கிறான்.
தன் வாழ்க்கையின் அந்தரங்கங்களில் பலவற்றை இவன் மனம் திறந்து சொல்லி இருக்கிறான். சிலதை அப்படியே சீல் வைத்து ‘பாதாள அறையில்’ தள்ளிப் பூட்டி விடுவான். ‘பிரசண்ட விகடன்’-இல் இருக்கும்போது திடீரென மதுரைக்கு வந்து ஒரு பத்து நாள் தங்கி இருந்துவிட்டு இடைசெவலுக்கு வந்தான். அப்போதே இவனுக்கு ரொம்ப சிரம திசை. மெட்ராஸிலிருந்து புறப்படும் போது ஒரு காயிதம் போட்டான். ‘மதுரையில் ஒரு ஜோலி இருக்கிறது. 10 நாள் ஆகும்’ என்று சொல்லிவிட்டு ‘இது யாருக்கும் தெரிய வேண்டாம்’ என்று ஒரு வரி எழுதி இருந்தான். பஸ்ஸிலிருந்து அவன் இறங்கும்போது நான் ரோட்டில் இடைசெவல் பஸ் ஸ்டாப்பில் தற்செயலாக இருந்தேன். காய்ச்சலில் கிடந்து எழுந்திருச்சவன் மாதிரி இருந்தான். இரண்டு பேரும் ரோட்டில் இருந்து பேசிக்கொண்டே ஊருக்கு வரும்போது ‘என்ன வேலையாய் மதுரை வந்திருந்தே?’ என்று கேட்டேன். பதில் சொல்லாமல் பேசாமல் நடந்து வந்தான். அப்புறம் என்னைப் பார்த்துச் சிரிக்க முயலுவது மாதிரி தெரிந்தது. அந்தச் சலுகையால் நான் திரும்பவும் கேட்டேன். ‘இதெல்லாம் என்னத்துக்கு? பேசாமல் உன் துருத்தியை ஊதிக்கிட்டு வா’ என்றான். வற்புறுத்திக் கேட்டதன் பெயரில் ஒரு கொஞ்சம் – ஒரு ஓரை – மட்டும் சொன்னான். மதுரையில் ஒருத்தர் நாவல் எழுதி இருக்கிறாராம். அதைத் திருத்தி சரி பண்ணி எழுதிக் கொடுத்தானாம். 50 ரூபாய் கிடைத்ததாம்; சாப்பாடு இருப்பிடச் செலவு போக. அவனுடைய ஆபீஸ் முதலாளியும், சீட் எடிட்டரும் சொன்ன வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டியது ஆச்சாம். ‘நாவல் எப்படி இருந்தது?’ ஐந்து விரல் நுனிகளையும் ஒட்டவைத்து ரெண்டு தரம் உதறிக்காட்டினான். அப்புறம் பேசாமலே நடந்து வந்தான்.
மதுரையிலிருந்து நிறைய பழங்களும் பலகாரங்களும் வாங்கிக் கொண்டு வந்திருந்தான். வீட்டில் எல்லாருக்கும் அள்ளி வழங்கினான். அவர்கள் ஆவலோடு சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். முகத்தில் சந்தோஷம் இல்லை.
‘நாவல்’ எழுதிய அந்த மதுரைக்காரன் எவன்; அது வெளிவந்ததா நாசமாய் போச்சா இண்ணைக்கு வரைக்கும் தெரியலை. பின்னொரு சந்தர்ப்பத்தில் இதை நான் அறிய முற்பட்ட போதும் சொல்ல மறுத்து விட்டான். வெளியே தெரியக்கூடாது என்று ஏற்பாடாம்! 1950-ஆம் ஆண்டில் ஒட்டி கரிசல் காட்டில் ‘பிண்ணாக்குப் பஞ்சம்’ வந்தது பிண்ணாக்குப் பஞ்சம் என்றால் பிண்ணாக்கு கிடைக்காமல் ஏற்பட்ட பஞ்சம் இல்லை. சாப்பிடுவதற்கு ஒன்றுமே கிடைக்காத போது கடலைப் பிண்ணாக்கை மட்டுமே – அது ஒன்றுதான் கிடைத்தது – தின்று ஜனங்கள் உயிர் வாழ்ந்தார்கள். கொஞ்சம் வசதியாக வாழ்ந்தவர்கள், மொச்சைக் கொட்டை வாங்கி அவித்து தின்றார்கள். ஆகவே இதற்கு ‘மொச்சைக் கொட்டை பஞ்சம்’ என்றும் மற்றொரு பெயர் உண்டு. அப்போது அழகிரிசாமி இடைசெவலில் தான் இருந்தான்.
கிட்டத்தட்ட இதே காலத்தில் ஆந்திராவில் உள்ள ராயலசீமாவிலும் பஞ்சம் வந்தது. இங்குள்ள ஜனங்கள் பிழைப்பைத் தேடி வடக்கே போனார்கள். வடக்கே இருந்து பஞ்சம் பிழைக்கத் தெற்கே வந்தார்கள்.
ஒரு நாள் கோவில்பட்டி பஜாரில் கூட்டம் கூட்டமாக, சுத்தமான தெலுங்கு மொழியில் கணீர் என்ற உச்சரிப்புடன் ஆணும் பெண்ணும் பிச்சை கேட்டதை பார்க்க முடிந்தது. புதிதாகப் பிச்சை எடுக்கிறவர்கள், ‘இல்லை’ என்று சொன்னவுடனே அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள். அதோடு தயங்கித் தயங்கிக் கேட்பார்கள், அது மனதை அறுக்கும் காட்சி.
அப்பொழுது பிச்சைக்குட்டி (பின்னாளில் வில்லிசை பிரபல்யம்) கோவில்பட்டியில் வாத்தியார் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் . ஒரு நாள் நடந்ததைக் கேள்விப்பட்டு என்னிடம் சொன்னார். ‘ஒரு அம்மா ராயலசீமாவிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்கள், தனது இரு மகள்களையும் வற்புறுத்தி சிலரிடம் ஒப்படைத்ததாகவும், காலையில் அந்த அம்மாள் கையில் இரண்டு பத்து ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தது கண்டு, ஏது என்று அந்த மகள்கள் கேட்டதாகவும், ராத்திரியில் நீங்கள் நடந்து கொண்டதற்காக அவர்கள் கொடுத்த ரூபாய் என்று சொன்னதாகவும், அவர்கள் ஆச்சரியத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துத் தேவலையே’ என்று சொன்னதாகவும் சொன்ன பிச்சைக்குட்டி ‘நாள் பூராவும் பசியோடு சில பைசாக்களே சேர்த்தவர்களுக்கு இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளைப் பார்த்ததும் இது தேவலை’ என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்; பார்த்தீயளா’ என்று வருத்தத்துடன் சொன்னார்.
இதை நான் அழகிரிசாமியிடம் வந்து அப்படியே சொன்னேன். இதை அவன் கதைக்குள் கொண்டு வந்த போது ஒரு சிறிய மாற்றம் செய்தான் கதை முடிவில். அந்தப் பெண்கள் சிரித்ததாக சொல்லுகிறான். அந்தச் ‘சிரிப்பை’ திரிபுரம் எரித்த சிவனின் சிரிப்போடு ஒப்பிடுகிறான். அந்தச் சிரிப்பு திரிபுரத்தை மட்டுமே எரித்தது; இதுவோ ஜகத்தினை அழிக்கும் சிரிப்பு என்கிறான்.
இடைசெவலிலும் பஞ்சம் நடந்தது. ஆட்கள் பட்டினியில் செத்தார்கள். கிராம அதிகாரிகள் மேலாவின் சொல்படி வயிற்றோட்டத்தினால் மரணம் என்று ஜனன மரண ரிஜிஸ்தரில் பதிந்தார்கள். இந்தக் காட்சி எல்லாத்தையும் விட அழகிரிசாமிக்கு, அந்த காட்சியே மனசை மிகவும் உலுக்கியது.
இதே காலத்தில் நடந்த இன்னொரு காட்சி:-
இவனுடைய பக்கத்து வீட்டில் ஒரு பெரியம்மாள். ரொம்ப நாளைக்கு அப்புறம் இவன் அன்றுதான் மெட்ராஸிலிருந்து வந்திருந்தான். எல்லாரும் வா எப்போ வந்தே என்று கேட்கிறார்கள். அந்தப் பெரியம்மாள் இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்; வா என்று கேட்கவில்லை. பார்வை மங்கலாகி விட்டதோ என்று நினைத்து “என்ன பெரியம்மா செல்லையா வந்திருக்கிறேன்” என்று சொன்னான். அதற்கு அவள் “தெரியுது தெரியுது” என்று மட்டுமே சொன்னாள். “அப்பா வந்தியா?” என்று வாஞ்சையோடு கொண்டாடும் அந்தப் பெரியவள் இப்படிச் சொன்னது அவன் இவனுக்கு அதிர்ச்சியானாலும், காரணம் என்ன என்று விசாரித்தான் தன் அம்மாவிடம். வாழ்க்கைக் கஷ்டத்தில் செயல்படுவதை விஸ்தாரமாகக் கேட்ட பின்தான் விளங்கியது ஏழ்மை மனிதத்தை எப்படிக் கொன்றுவிட்டது என்பது. (கதை: சிற்றன்னை)
(கொல்லிப்பாவை சிற்றிதழில் வெளிவந்த இக்கட்டுரை மீண்டும் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.)