லூக்கா 5:8 -வைரவன் லெ.ரா

1

ன்றைக்குக் காலை ஆறு மணி இருக்கும். இரயில் நிலையத்தில் ஒரு இருபது பேர் நின்று கொண்டிருந்தோம், நாங்கள் நின்றுகொண்டிருந்த இடம் முதலாம் நடைமேடை. அப்போது திருவனந்தபுரம் நோக்கிச் செல்ல வேண்டிய இரயில் வரவேண்டிய நேரம். அந்தப் பெண்பிள்ளையை நான் பார்த்தேன். பணிபுரிபவளாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன், நேர்த்தியான உடை உடுத்தியிருந்தாள். அது ஒரு மயில்நீல நிறத்தில் சுடிதார் போன்ற உடை. அவள்  படியிறங்கி இடதுபக்கம் செல்லுமிடத்திலிருந்து நான்காவது போடப்பட்ட கல்பெஞ்சில் அமர்ந்திருந்தாள், காதில் ஹெட்போன் இருந்தது. நான் அவள் இருக்கும் இடத்திலிருந்து இருபது மீட்டர் தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தப் பையனைப் பார்த்தேன். அவள் அருகே சென்று சண்டையிட ஆரம்பித்தான். அவனுக்கு வெளுப்பான தேகம், உயரமும் அதிகம், சிவப்பு கட்டம் போட்ட சட்டையும், நீலநிற ஜீன்ஸும் அணிந்து இருந்தான். அவர்கள் பேசிக்கொண்ட வார்த்தைகள் எனக்குக் கேட்கவில்லை. ஆனால் சண்டை என்பது புரிந்தது. ஒரு பணக்காரத் தோற்றம் அவனிடத்தில் எனக்குத் தெரிந்தது. அது அந்தப் பையனின் உடையில், நடத்தையில் எதிரொலித்தது. வழக்கத்திற்கு மாறாக அவள் அருகே சென்றவன் உரக்கக் கத்தினான். இரயில் அன்றைக்கு நேரத்திற்கு வரவில்லை. ஒருவேளை வந்திருந்தால் இந்த சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். கையில் எதை வைத்திருந்தான் எனத் தெளிவாகத் தெரியவில்லை. அந்தப் பெண்ணின் அலறல் கேட்டது, நான் அவர்களை நோக்கித் திரும்பும் போது, அந்தப் பெண் அவள் ஏற்கனவே நின்றிருந்த இடத்திலிருந்து ஒரு அடி தள்ளி தரையில் கிடந்தாள். அந்தப் பையன் எங்கே போனானோ காணவில்லை. நான் அவளின் அருகே செல்லும் போது அவளுக்கு உயிர் இருந்தது. முகத்தில் கடுமையான வெட்டுக் காயம். இரத்தம் அதிகமாக வெளியேறிக் கொண்டிருந்தது. அவளின் மொபைல் போனை என்னை நோக்கி நீட்டினாள். அதில் அப்பா எனும் எண் அழைக்கப் பட்டிருந்தது. நான் அதை வாங்கி காதில் வைக்கும் போதே எதிர்முனையில் அவர் பதட்டமாய் பேசினார். நான் நடந்த விஷயங்களைச் சொன்னேன். அதற்குள் எங்களைச் சுற்றி இரயில்வே போலீசார் சூழ்ந்து கொண்டனர்’.

2

‘அரி’ இப்படித்தான் என்னை அழைப்பார்கள். உண்மையிலே ‘ஹரி’ என்பதுதான் என் பெயர். முழுப் பெயர் ‘ஹரிஹரசுதன்’. இப்படியெல்லாம் முழுப்பெயரையும் சேர்த்துக் கூட்டி அழைக்க யாருக்கும் நேரமில்லை. அப்படி அழைத்தவர்கள் என் அம்மாவும் அப்பாவும் மட்டும்தான். அவர்களும் இன்று உயிரோடில்லை. ஒரே விபத்தில் இணைமரணம், சொந்தங்களும் அடியந்திரம் முடியவே விட்டுப் போனார்கள். ஆக ‘ஹரி’ மருவி ‘அரி’ ஆனதில் யாருக்கும் குறையில்லை.

இந்தப் பெயர் மாற்றம் நடக்கும்போது எனக்கு பதினெட்டு வயது கடந்திருந்தது. ஆரம்பத்தில் ஏதேதோ வேலைகள் செய்தவன், ஏனோ திருட ஆரம்பித்தேன், காரணம் ஏதுமில்லை. ஊரில் சிறிய திருட்டுகளைச் செய்து கொண்டிருந்தேன்.  அப்போதெல்லாம்  போலீஸ் என்னைக் கைது செய்யவில்லை. மாறாகச் செய்யாத குற்றத்திற்கு ஒருநாள் காவல் நிலையம் செல்ல நேர்ந்தது. அன்றைக்குத்தான் என் முதுகெலும்பு வளைந்து, தினம் தினம் எனக்கு வலியைக் கொடுக்க ஆரம்பித்தது. கூடவே என் வலதுகால் எப்போதும் நடக்கும்போது ஒருபக்கம் இழுத்துப் பிடிக்கும். அந்த வலியெல்லாம் என்னோடு ஒரு உறுப்பைப் போல ஒட்டிக் கொண்டது. வெட்டியெறிய முடியாத உறுப்பு. இதனாலே வழக்கம் போல என்னால் திருடமுடியவில்லை. அப்போதுதான் நான் முன்பே அறிந்த ஜான் எனும் இன்ஸ்பெக்டர் எனக்கு இந்த வேலையை அறிமுகப்படுத்தினார்.

“இன்னியும் மாடியேறி களவு பண்ணமுடியுமால கள்ளப் புண்டாமோனே.. சொல்லத கேளு.. ஒரு கொறையும் இல்லாம நான் பாத்துகிடுகேன்.. ரிஸ்க் எடுக்க வேலையும் இல்ல மக்ளே.. இந்த வேலையப் பாக்க ஆரம்பிச்ச, இனி உனக்கு போலீஸ் துணையுமுண்டு கேட்டியா..கைலயும் நாலு காசு பொறளும்”

காவல்நிலையத்திலிருந்த இரண்டு நாட்களும் ஜான் இன்ஸ்பெக்டர் தான் என்னைக் கவனித்துக் கொண்டார்.

“பிள்ள, இன்னும் களவாண்டுட்டு அழஞ்சன்னு வையி.. இடது காலயும் முறிச்சு விட்ருவானுவோ.. நீ போலிசுக்கு ஈசி டார்கெட்டுடே”

வெகுநாட்களுக்கு பிறகு என்னிடம் அக்கறை கொண்டது போலான ஒரு பிம்பம் அவரிடம் இருந்தது. எனக்கும் வேறு வழியுமில்லை. ஒப்புக் கொண்டேன்.

“இதாக்கும் ஐ விட்நெஸ்” ஜான் என்னை கைக்காட்டி சொல்ல, வெளுத்த முடி நீதிபதி என்னையே வெறித்துப் பார்த்தார். பிறகு என்னை அவ்வப்போது பார்க்க நேர்ந்தது. அவருக்கும் பழகிவிட்டது. அதன்பிறகு என்னை நேரில் சந்திக்க நேர்ந்தால் மறுக்காமல் அவர் முகத்தில் புன்னகையிருக்கும். சிலநாட்களில் ஜான் என்னையும் அவருடன் சேர்த்து மதுவிடுதிக்கெல்லாம் அழைத்துச் சென்றார். அவர் எனக்குச் சட்ட திட்டங்கள், அதன் பயன்கள், நான் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றிய வகுப்பெடுப்பார். பொறுமையான, அதே நேரத்தில் தந்திரங்கள் நிறைந்த வகுப்பு. அடுத்ததாக நாங்கள் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளுக்குச் செல்வோம். அவருக்கு ஏசி அறையில் வெளியூர் அழகிகள் இருந்தால், எனக்கோ ஏசி போடாத அறையில் உள்ளூர் அழகிகள் இருந்தார்கள்.

எங்கே என் முதுகு உடைக்கப்பட்டு நான் பெரும்வலியோடு சுற்றி சுற்றி வந்தேனோ! அங்கே ஒரு நிரந்தரமான வேலை. எல்லோரையும் போலத் தினந்தோறும் உடல் வலிக்கும், மூளையைப் போட்டுப் பிதுக்கும் வேலையில்லை. எப்போதாவது போலீஸ் என்னை அழைக்கும்போது காவல்நிலையம் செல்ல வேண்டும், எல்லாம் மேஜையில் தயாராக இருக்கும். காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் நானும் ஒருமுறை படிப்பேன். கொஞ்சம் மக்கர் பண்ணுவேன். பிறகு அதைக் கொஞ்சம் எனது டைரியில் குறிப்பெடுத்துக் கொள்ளுவேன். கையெழுத்துப் போட்டதும் பாதி சம்பளம் கிடைக்கும். அதைக் கொடுப்பவர்களை நேரில் கண்டதுமில்லை. அதனால் ஏற்படப் போகும் எந்த சம்பவத்திற்கும் நான் பொறுப்பேற்கப் போவதுமில்லை. இப்படியே தொடர்ந்தது. நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டியிருந்தால் அதையும் முடித்து மீதி சம்பளத்தை வாங்கிக் கொள்வேன். இதன் பின்னால் உள்ள எந்த ஒரு சட்ட திட்டங்களையும் நான் ஆராய முற்பட்டதுமில்லை, போக இது போன்ற விஷயங்களில் வக்கீல்களின் தலையீடும் இருப்பதால் எதுவும் தப்பாய் நடக்க வாய்ப்புமில்லை. மாதத்திற்கு ஒருநாளோ, சிலசமயம் இரண்டு நாட்களோ வேலை இருக்கும்.

ஒரு அலுவலகம் சென்று வருபவனைப் போல உடைகள் மாறியதில் கொஞ்சம் கொஞ்சமாக நானும் மாறி மாறிப் போனேன். திருடனாய் இருக்கும் போது அநியாயத்திற்கு அவிழ்த்துவிடும் கெட்டவார்த்தைகள் எனக்குள் அமிழ்ந்து போயின. அவை போகும் போது என்னிடம் இருந்த ஏதோ ஒன்றை உருவிக்கொண்டு சென்றுவிட்டன. அப்பாவையோ, அம்மையையோ பற்றி அதிகம் சிந்திக்க நேரமுமில்லை. வாரத்தில் அதிகநாட்கள் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களோடு இருப்பேன், இல்லையேல் ஏதாவதொரு வக்கீல் அலுவலகத்தில் இருப்பேன், அவர்களுக்கு வழக்கிற்குத் தேவையான உதவிகளை என்னளவில் செய்வேன், அதற்கும் அவர்கள் பணம் கொடுப்பார்கள். எனக்குள் இருந்த திருடன் அப்படியே ஆனால் மாறுவேடத்திலிருந்தான். அவனுக்கு எல்லோரின் கரிசனமும் கிடைத்தது. போலீசார் அவனைத் துரத்துவதுமில்லை, வக்கீல்கள் அவனைத் திட்டுவதுமில்லை, நீதிபதிகள் எந்த போதனையும் சொல்வதில்லை.

‘ஆந்தயன்’ என்னைப் போன்ற ‘விட்நெஸ்’களுக்கு காவல் துறை கொடுத்த பட்டப் பெயர். ஜானைத் தவிர ஏனையோர் இப்படித்தான் என்னை அழைத்தனர். எந்த வழக்கிற்கும் அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து ‘ஐ விட்நெஸ்’ அல்லது ‘விட்நெஸ்’ இல்லையென்றால், நேரில் நான் போக வேண்டியிருக்கும். வழக்கின் போக்கு, யாருக்குச் சாதகம் என்றெல்லாம் நான் கவலைப் பட்டதுமில்லை. உண்மையிலே அது எனக்குத் தேவைப்படவில்லை. எத்தனையோ வழக்குகள் என்னாலே முடிக்கப்பட்டன. சில சமயங்களில் போலீஸ் எனக்கு அதிகம் காசு கொடுப்பார்கள், அப்போதுதான் அந்த வழக்கின் ஆதாயம் தெரியும். ஆனால் எப்போதுமே நான் பிரதிவாதி, எதிர்வாதிகளை நேரில் சந்தித்ததில்லை. அப்படி ஒன்று நடக்க காவல்துறையினர் ஆசைப்பட்டதுமில்லை.  சிலசமயம் என்னைத் தவிர ‘ஐ விட்நெஸ்’க்கு வேறு ஆட்களும் சில வழக்குகளுக்குத் தேவைப்படுவார்கள். அவர்கள் நிஜத்தில் சம்பவம் நடந்த இடத்திலிருந்தவர்களாய் இருப்பார்கள். ஆனாலும் என்னைப் போல நேர்த்தியான விஷயங்கள் அவர்களின் ரிப்போர்ட்டில் இருக்காது.

இருப்பினும் முதல்முறை ஒரு பெண் தலைவிரி கோலத்தில் நீதிமன்ற வளாகத்திலே மண்ணை வாரிப் போட்டு, என்னைத் திட்டியது கொஞ்சம் என்னைப் பயமுறுத்தியதை மறுப்பதற்கில்லை. கனவுகளில் கூட அந்த முகம் தலைவிரிக் கோலத்தோடு வர ஆரம்பித்தது.

“எனக்க வீட்டுக்காரரு களவாண்டத நீ கண்டயால.. தொட்டி பிராடுப் பயல.. மொதலாளி பயக்க குஞ்ச நக்கி பொழைக்கதுக்கு நாண்டுட்டு சாகலாமே.. எம் புருஷன் கூட வேலப் பாக்கவனுக்குன்னு தானல உழச்சாரு.. நீ கட்டமண்ணா போவ.. உனக்க வம்சம் தழைக்காது”

அவளின் சாபம் எந்தவிதத்தில் என்னைப் பாதித்தது. ஒரு திருடனை நான் காட்டிக் கொடுத்ததாலா? இல்லை திருடனல்லாத ஒருவனைத் திருடன் என்று பொய்ச் சாட்சியம் சொன்னதாலா?. உண்மையில் இந்தப் புதிய வேலையில் யாருமே என்னைத் திட்டியதில்லை. யாரோ ஒருவரின் போலச் செய்த வாழ்க்கையில் என்னுடைய குறுக்கீடு எதைச் சீர்க்குலைக்கிறது. இது ஒருவித பதட்டத்தைக் கொடுக்கிறது, அதன் மூலம் உடல் முழுக்க நடுங்கச் செய்கிறது. உண்மையிலே உடலில் எவ்வித வலியையும் கொடுப்பதில்லை. மாறாக எதையுமே நிதானமற்று செய்யத் தூண்டுகிறது. குழம்பித் தவித்த வேளையில் ஜான் என்னைக் குடிக்க அழைத்தார்.

“சாமி கும்பிடுவியா பிள்ளே”

“எந்த சாமிய கும்பிட சொல்லுகேறு”

“ஜெபிடே.. இனி டெய்லி நைட் ஜெபி.. ஆண்டவரு என்ன மயித்துக்கு இருக்காரு.. நம்ம பாவத்தலாம் சுமக்க தானடே.. எல்லாவனும் அவருட்ட தானே தள்ளிவிடுகான்.. நீயும் தள்ளிவிட்டா என்ன தப்பு.. நாளைக்கு காலைல பைபிள் கொண்டாறேன்..வெசனப்படப்பிடாது கேட்டியா”

“அதுலாம் ஒன்னும் இல்ல.. அந்தப் பொம்பள பேசினது ஒருமாறி இருக்கு.. அந்த யூனியன் லீடர் நல்லவனோ!.. கேஸ் முடிஞ்சு வாரப்போ எல்லாவனும் கெடந்து கொமையான்.. என்னையப் பாத்து மொறைக்கான்.. எவனா இருந்தா என்ன? எல்லாவனும் ஏதோ விதத்துல கள்ளப் புண்டாமவனுங்கதான்.”

“கொளம்பி தவிச்சு ஒரு மயிரும் ஆகப் போகது கெடயாது.. உனக்கு என் மொவனுக்கா வயசுதான இருக்கும்.. மெச்சூர் ஆகலைல்லா.. ரெண்டு மாசத்துக்க முன்னாடி ஒரு பய உனக்க கால்மாட்டுல விழுந்து அழுதான், ஓர்ம இருக்கா.. அவனுக்க வீட்டுக்காரி கைல கெடந்த வளையல கெழட்டி தந்தா.. அதையும் யோசிச்சு பாரு.. கெட்டிக்காரப் பிள்ளேலா டே நீ..”

ஒரு சிறுமியின் பாலியல் வழக்கில் நான் சொல்லிய பொய்ச் சாட்சி இன்றும் ஞாபகம் இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட பையனுக்கு வயது இருபது தான் இருக்கும், ஒருவிதத்தில் அவனைப் பார்த்தபொழுது பரிதாபமாய் இருந்தது. பேந்தப் பேந்த விழித்தபடி நீதிபதியின் முன்னே நின்றான். இன்ஸ்பெக்டர் ஜான், எனக்கு அந்த சிறுமியின் புகைப்படத்தைக் காட்டி, வழக்கு பற்றிய முழுவிவரத்தையும் தெளிவாகக் கூறினார். என்னுடைய சாட்சியம் இந்த வழக்கிற்கு எவ்வளவு முக்கியமானது என்பதனையும் விளக்கிக் கூறினார். இறுதியாக வழக்கில் நாங்கள் எதிர்பார்த்தபடியே தீர்ப்பு கிடைத்தது. அந்தப் பையனை என் முன்னே விலங்கிட்டு சிறைக்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்ற வளாகத்தில் நிற்கும் போது என் கால்களில் விழுந்து அழுத ஒல்லியான அந்த மனிதனை இன்ஸ்பெக்டர், சிறுமியின் அப்பா என்று அறிமுகப்படுத்தினார். என் கைகளைப் பற்றிக் கொண்டு நின்றவர் எதுவுமே பேசவில்லை. அவனது மனைவி என்னைப் பார்த்து “நீரு நல்லா இருப்பீரு..ஆண்டவருக்க கிருப எப்போவும் ஒனக்குண்டு” சொல்லிமுடித்தும் அவளின் அழுகை நிற்கவில்லை. உண்மையில் அங்கிருந்து நகரவே முயன்றேன். கண் முன்னே இரண்டு பெண்கள், ஒருத்தி தலைவிரி கோலத்தில் ஏசினாள், இன்னொருத்தி ஆசீர்வதிக்கிறாள். இரண்டாவதை நியாயப்படுத்திக் கொள்வது, என்னை எதிலிருந்தோ விடுவிக்கிறது, எது விடுவிக்கிறதோ அதைத் தொடர்வதில் தப்பில்லை என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

3

என்னுடைய திருமணம் நகரின் மையத்திலுள்ள சிறிய மண்டபத்தில் நடந்தது. பெரும்பாலும் வந்தவர்கள் போலீஸ், வக்கீல், கிரிமினல், ஏன் சில நீதிபதிகளும் தான். ‘விட்நெஸ்’ஸில் சிலநேரம் வக்கீல்களுக்கும் நான் தேவைப்படுவேன், ஆனால் அதன் கேஸ்களின் சிக்கல்கள் என்னைப் பயமுறுத்தும். எனவே எளிய கேஸ்களைத் தவிர மற்றவற்றை நான் தவிர்த்துவிடுவேன். என் மனைவி நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கு எடுபிடி வேலை பார்த்துக் கொண்டே சட்டமும் படித்துக் கொண்டிருந்தாள். அவளின் காது, கத்தியைப் போலக் கூறானது. அவள் சாதாரணமாகச் செய்யும் எந்த வேலையும் பிரதிபலன் எதிர்பார்த்துப் பண்ணக் கூடியது. அவளிடத்தில் எப்போதும் எனக்கு இரண்டாம் இடம்தான். ஏன் இந்த திருமணமும் அவள் முடிவுசெய்ததுதான். அவளுக்கு என்னுடைய தேவையெல்லாம் அவள் விரும்புகிற நேரம், மற்றும் அவளின் எண்ணவோட்டத்தை பொறுத்துத்தான். நீதிமன்றத்தில் ஒருவேளை நாங்கள் சந்தித்தாலும் அதிகம் பேசிக் கொள்ள மாட்டோம். அவளைக் கட்டிய பிறகு என்னுடைய பணப்பரிவர்த்தனைகளை அவளே கையாண்டாள். நான் ஆஜராகப் போகும் வழக்குகளின் பட்டியல் முதல் வாரமே அவள் கையிலிருக்கும். முதலில் அதிலிருக்கும் சிக்கல்களை ஆராய்வாள், பிறகே ரிப்போர்ட்டில் என்ன எழுதியிருக்கிறது என்பதனை தெளிவாகச் சொல்லிக் கொடுப்பாள். அவளைக் கட்டிய பிறகு என்னுடைய வேலையில் எவ்வித குழப்பங்களும் நிகழவில்லை, உண்மையைச் சொன்னால் அவள் அனுமதிக்கவில்லை.

அவளின் கடந்தகாலத்தைப் பற்றிப் பேசுவதை எப்போதும் விரும்பமாட்டாள். கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் மகள். அவளின் அம்மா இறக்கும் வரை அவளின் தந்தையைப் பற்றி ஒரு வார்த்தை திட்டியதாக அவளுக்கு ஞாபகம் இல்லை என்றே கூறுவாள். அவள் படித்தது எல்லாமே கிறிஸ்துவ மடத்தில் தான். கல்லூரி படித்த பிறகு அங்கிருந்து வெளியேறிவிட்டாள். அவளுக்குக் கடவுளைப் பற்றி அதிகம் தெரிந்த விஷயம் ‘அவர் பாவிகளை மன்னிப்பார்’.

எங்களுக்குள் காதல் இருந்ததா? ஏன் திருமணம் செய்தோம் என்பதற்கெல்லாம் விடையில்லை. ஒரு மழைக்கால முன்மதிய இடைவேளையில் ஒரு வக்கீல் அலுவலகத்தில் அவளைச் சந்தித்தேன். பிரிதொரு முறை அதே வக்கீல் அலுவலகத்தில் இன்னொரு வழக்குக்காக சந்தித்தபொழுது அவளே நேரடியாகத் திருமணம் பற்றிப் பேசினாள். இருவருக்குமே எங்களைத் தவிர்த்து முடிவு எடுப்பதில், ஆலோசனை கேட்க ஆட்கள் யாருமில்லை. இருந்தும் ஜானிடம் ஒரு வார்த்தை கேட்கத் தோன்றியது. நான் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போதே என் கைகளைப் பற்றி “ரொம்ப சந்தோஷம்டே.. நல்லப் பெண்பிள்ள தான்.. சகல ஐஸ்வரியமும் ரெண்டு பேருக்கும் கெடைக்கட்டும்” என்றார். எளிதாக எல்லாம் நடைபெற்றது. முதல் இரண்டு வருடம் அதிகம் சம்பாதிக்க வேண்டும், இதை மட்டுமே அடிக்கடிச் சொல்லுவாள். இரண்டு வருடம் கழித்தே எங்களுக்குக் குழந்தை பிறந்தது. மூன்று மாதங்கள் மட்டுமே எங்களோடு வாழ்ந்த குழந்தை, அதற்குப் பிறகு இறந்துபோனது. மருத்துவர் கூறிய காரணங்கள் எனக்கு ஏற்புடையதாய் இல்லை. என் கைகளுக்குள் புரண்டபடியே உறங்கிய குழந்தையை சவக்குழியில் இறக்கும்போது நான் பதறிப்போனேன். ‘எப்படி கருணைமிக்க தெய்வங்கள் குழந்தைகளைக் கொல்கின்றன?’. எனக்குத் தெய்வ நம்பிக்கையோ, கர்மவினைகள் மேலே பயமோ இல்லை. ஆனாலும் துஷ்டி கேட்க வந்தவர்கள் அந்த இறைவனையே திட்டினார்கள். குழந்தை இறந்து இரண்டு வார காலத்திலேயே அவள் இயல்பு நிலைக்குத் திரும்பியது போல நடிக்க ஆரம்பித்தாள், இரவுகளில் குழந்தை உறங்கிய தொட்டில் வேஷ்டியைக் கையில் பிடித்துக் கொண்டே உறங்குவாள்.

இரண்டு பெண்களின் வார்த்தைகள் எப்போதும் என்னிடம் பத்திரமாய் இருந்தன. ஒன்று என்னைக் காரிருளில் தள்ளும், மற்றொன்று அதிலிருந்து எழுப்பி வாரியணைக்கும். இருந்தும் சிலநாட்கள் வீட்டை விட்டு வெளியேறினேன். மூன்று நாட்கள் எங்கெல்லாமோ சுற்றினேன். கைகளில் காசும் இருந்தது. ஆனால் திருமணம் கழிந்த பிறகு என் வாழ்க்கையை நான் தீர்மானித்தபடியே வாழ இயலவில்லை. என்னுடைய எல்லாத் தேவைகளுக்கும் அவள் வேண்டும். பெரும்பாலும் நான் எடுக்கும் முடிவு அவளுடையதாக இருக்கும். பிடித்தம் இல்லாத ஒருத்தியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தேன். பிறகு அவளிடமே சென்றுவிட்டேன். மீண்டும் எனது ‘விட்நெஸ்’ வேலையைத் தொடர்ந்தேன். இது ஒருவிதத்தில் நான் ஏற்றுக்கொண்ட ஒன்றுதானே, யாரோ ஒருவர் கூறுவதைக் கேட்டு அப்படியே ஒப்பிக்கிறேன். அது உண்மையோ! பொய்யோ! நான் சொல்லவில்லை. ஏன் அதை என் எண்ணங்களிலிருந்து உருவாக்கவில்லை. ஆக, அது என்னுடையது அல்ல. இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருந்தது. அவளும் நானும் இனி குழந்தை வேண்டாமென முடிவெடுத்தோம்.

4

நகரின் முக்கியப் பகுதியில் நாங்கள் வீடு வாங்கினோம். என் மனைவி வக்கீல் ஆகிவிட்டாள். ‘விட்நெஸ்’ வேலைக்கு என்னை அவள் அனுமதிப்பதில்லை, ஒரு வக்கீலின் கணவன் இப்படி அலைவதில் விருப்பமில்லையாம். மாறாக நகரில் உள்ள முக்கியமான கிளப் ஒன்றில் என்னை செயலாளர் ஆக்கிவிட்டாள், இயக்கியது அவள்தான். இன்ஸ்பெக்டர் ஜான் பணிஓய்வு வாங்கிவிட்டார். அவரை அடிக்கடி நான் சந்திப்பதுண்டு. அவரின் பிள்ளைகள் அயல்நாட்டில் இருந்தார்கள். எல்லாமும் அதன்போக்கிலே போய்க் கொண்டிருந்தது. வழக்கத்திற்கு மாறாக என் மனைவி தேவாலயம் செல்ல ஆரம்பித்துவிட்டாள். ஞாயிறு என்னையும் அழைப்பாள், சிலசமயம் கூடச் செல்வேன். பைபிளின் சில வசனங்களை வாசிக்கச் சொல்லுவாள், ஏதேனும் ஒருபக்கத்தை விரித்துப் படிப்பேன். சில அதிகாரங்கள், சில வசனங்கள். அது நான் செய்ய ஆரம்பித்த பிழை. அதிலும் ‘யாத்திராகமம் 23’-ஐ நான் படித்திருக்கக் கூடாது.

என்னிடம் வார்த்தைகள் குறைந்தன. என் செயல்களின் வேகம் குறைந்து மந்தநிலையில் உழன்றேன். இதற்கெல்லாம் காரணம் நான் கண்ட கனவுகள், எல்லாமுமே முடிவில் துர்மரணங்களை கண்முன்னே நிஜத்தைப் போல விரிக்கும். அதில் பிணமாய் நான், மனைவி, ஜான், சில நீதிபதிகள், நீதிமன்றத்தில் நான் கண்ட வேறு முகங்கள் பாடையில் கிடக்கும். கடைசியில் அவர்களின் முகம் இறந்து போன என் குழந்தையின் முகமாய் மாறும். குழந்தை இறந்து இரண்டு மூன்று வருடத்திலேயே அதன் முகம் மறந்து போனது,  ஒவ்வொரு கனவிலும் ஒரு புதிய முகம், ஆனால் எல்லாமுமே என் குழந்தைதான்.

ஒரு வாதையைப் போல ஆனேன். நான் இதற்கு முன் ஆஜரான வழக்குகளை ஆராய ஆரம்பித்தேன்.  அதன்பிறகே முகவரிகளை கண்டுபிடித்து நேரில் சென்றும் பார்க்க ஆரம்பித்தேன். அவர்களுக்கு நான் யாரென்ற அடையாளம் தெரியவில்லை, ஒவ்வொரு வழக்கும் நீண்ட பிரயாணம், அதில் பாதிவழி வரை கூட பயணித்த அதிதியை யாருக்கும் ஞாபகமில்லை. இரவுகளில் பைபிள் வாசிக்க ஆரம்பித்தேன்.

இரவெல்லாம் நீண்டுபோகும் கூட்ஸ் இரயிலைப் போல, நான் எண்ணி முடிக்கும் ஒவ்வொரு பெட்டி முடியவும் அதே பெட்டி மீண்டும் வருவது போலத் தொடரும். வக்கீல் மனைவிக்கு அடுத்த வாங்கிப் போட வேண்டிய மனையின் வில்லங்கங்களை சரி பார்க்கவே நேரம் இருந்தது.

5

ஜான் அவர் வீட்டிற்கு என்னை அழைத்தார். வக்கீல் சொல்லியிருப்பாள்.

“கிழடு தட்டிட்டுட்டு இருக்குல்லா மோனே.. பிள்ளயப் பாக்கணும்ன்னு தோணிச்சு..” நரைத்த மயிர், சட்டையணியாமல் அமர்ந்திருந்தார்.

நான் அமைதியாகவே இருந்தேன்.

“பிள்ளய பேயு அடிச்சிட்டோ”

மீண்டும் அதே அமைதியைத் தொடர்ந்தேன்.

“சமயத்துல நாம பண்ண காரியங்க பேயும் பூதமுமா பயமுறுத்தும்.. நாம பயறக் கூடாது.. ஆண்டவரு இருக்காருல்லா.. அவரு பாத்துப்பாரு”

“உங்களுக்கு ஞாபகம் இருக்கா, அந்த யூனியன் லீடர் கேசு”

“அறியும்டே..”

“என்கிட்ட சொல்லலியே”

“மக்ளே.. நாம அடியாள்.. அரசாங்க உத்தியோகம் பாக்குற அடியாள் அவளோதான்.. நீயும் வாங்குன காசு எல்லாம் அரசாங்கம் மூலமா கெடைக்கிற மாதிரிதான்”

“அவன ஸ்டேஷன்ல ரெண்டு ராத்திரி வச்சிருக்கீங்க..பொறவு ஜாமீன்ல போனவன்.. ரெண்டு மூனு வாரத்துல செத்துப் போயிருக்கான்.. இப்போ அவனுக்க குடும்பம் எங்க இருக்குன்னே தெரியல” நிதானமாகச் சொன்னேன்.

“அவனுக்க ரத்தம் எனக்க கைலயும் உண்டு பிள்ளே.. இப்போ என்ன பாவம் பிடிச்சா வாழுகேன்.. நீ அறியாததா? பிள்ளைகளு கல்ஃப்ல சம்பாதிக்கு.. எனக்கும் ஒரு சோக்கேடு கெடயாது”

“ஆனா, அந்தப் பொம்பள சொன்னது மாறி எனக்க வம்சம் தழைக்கலையே”

“முட்டாள மாறி பேசாத பிள்ளே.. உம்பிள்ளைக்கு இருதயத்துல ஓட்டையாக்கும்.. அதாக்கும் இறந்தது.. பாவம், தப்பு பண்ணவிய பிள்ளைகளுக்கி மேல பிடிக்கனும்ன்னா, ஒலகமே பாவிகளா நெறைஞ்சு வழியும்” அவர் என்னைச் சமாதானம் பண்ண ( செய்ய )  முயல்கிறார் என்பது புரிந்தது. எனக்குச் சீக்கிரமே இறந்துவிட கூடாதா? என்று தோன்றியது. எதுவுமே கேக்காது, எங்குமே நிச்சலனம்.

“கேளு பிள்ளே.. ஆண்டவர குருசுல அரஞ்சு போட்டானியன்லா.. என்ன எழவுக்கு ரெண்டு பக்கமும் கள்ளன்மாறா போட்டானுவ..”

“எதுக்கு அவரையும் கள்ளன்னு ப்ரூப் பண்ணவா?”

“அதுவும் சரிதான்.. ரெண்டுல ஒருத்தன் நல்லவனாம், மத்தவன் கெட்டவனாம்.. நெசம் என்னத் தெரியுமா பிள்ளே.. ரெண்டு கள்ளன்மாறும் ஒருத்தந்தான்… செஞ்ச தப்ப நெனச்சு மனசுக்குள்ள கொமையக் கூடிய ஒருத்தன்.. அதான் செஞ்சுடேன்ல்லா.. நீங்களும் குருசுல அரஞ்சு போட்டாச்சுல்லா, போல தேவிடியாப் பயக்களா அப்படின்னு சொல்லக் கூடிய இன்னொருத்தன்.. நடுவுல ஆண்டவரு.. அவருக்கு நடுக்குருசுல்லா.. எல்லாவனுக்க குறுக்குலயும் குருசு கெடக்கு.. மண்டைல ஒடமுள்ளு க்ரீடம் இருக்கு.. ஓங்கி ஓங்கி சவுக்கு கயிற வச்சி அடிக்க ஆட்காரு இருக்கு.. ”

எதுவும் சொல்லாமல் கைகளைப் பிசைந்தவர், “உமக்க வாழ்க்கைய நீ வாழ்ந்தாச்சு.. நீ தப்பு பண்ணேன்னு நினைக்கியா? போ தர்மம் பண்ணு.. அதான் இப்போ வசதியா தான இருக்கு.. ஆனா இந்த வசதி எங்க இருந்து வந்திச்சின்னு பிள்ளைக்கு எப்போவும் நியாபவம் இருக்கணும்”. இருவரும் பேசிக்கொள்ளாமல் சிலநிமிடங்கள் இருந்தோம், பிறகு நாங்கள் பழைய கதைகள் கொஞ்சம் பேசினோம். அவரின் வார்த்தைகள் கொஞ்சம் தெம்பைக் கொடுத்தது.

வீட்டிற்கு வந்ததும் மனைவியிடம் பேச ஆரம்பித்தேன். சொத்து வாங்குவதில் அவளோடு அலைய ஆரம்பித்தேன். அவள் ஏற்கனவே வாங்கிய மனைக்கு என்னை அழைத்துச் சென்றாள். ஒரு ஏக்கருக்கு இடம் வாங்கியிருந்தாள். அங்கே ‘கர்த்தர் இல்லம்’ எனும் யாருமற்றவர்களுக்கு இல்லம் ஆரம்பிக்கப் போகிறேன் என்றாள். இதன்மூலம் வருமான வரியை அதிகம் மிச்சம் பிடிக்கலாம் எனச் சொல்லும்போதுதான் என் மனுஷியாகத் தெரிந்தாள்.

ஒரு நாடோடி வாழ்க்கை எனக்குத் தேவைப்பட்டது, அவளின் அனுமதியோடு. இந்தியா முழுக்க சுற்றினேன். பாக்கெட்டில் எப்போதும் சிறிய கையடக்க அளவிலான பைபிள் ஒன்றை வைத்திருப்பேன்,  தோனும் போது அதிலிருந்து ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்து சில வசனங்களை வாசிப்பேன். இரயில்கள் குலுங்கிச் செல்லும் போது குழந்தையைப் போல உணர்ந்தேன். இரவுகளில் அதிகம் குடித்தேன், விரும்பினால் அந்த ஊரின் சிவப்பு விளக்கு பகுதிகளுக்குள் சென்று திரும்பினேன். காலையோ அங்கிருக்கும் கோயில்களுக்குச் சென்றேன், குழந்தைகளைக் கண்டால் கொஞ்சினேன். ஒரு புது முகமூடியை அணிந்துகொண்டேன். ‘கர்த்தர் இல்லம்’ எழுப்பப்பட்டதை மனைவி சொன்னாள். பாராளுமன்ற உறுப்பினர் திறந்துவைத்தாராம், பெருமை பீத்தினாள்.

6

திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து புனே வழியாக லோனாவாலா செல்லத் திட்டமிட்டு இருந்தேன். இரயில் நிலையத்தில் அப்போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. கண் முன்னே ஒரு குற்றத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு, ஆனால் கொடுமையான ஒன்றாக இருந்தது. இளம்பெண் ஒருத்தி துடித்துக் கொண்டிருந்தாள். யாருமே அருகே செல்லவில்லை. சிலநொடிகள் எல்லோருமே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம் என்பது தான் சரியானதாக இருக்கும். எனக்குள் இருந்த ‘ஐ விட்நெஸ்’ அப்போதுதான் வெளியே வந்தான்.

தயங்கித் தயங்கி அருகே சென்றேன். அவளுக்கு உயிர் இருந்தது. என்னை நோக்கி கைப்பேசியை நீட்டினாள். அவளின் அப்பா எதிர்முனையிலிருந்தார். எல்லாமுமே வேகமாக நகர்ந்தது. இரயில்வே போலீசார் வந்தனர். என்னைத் தள்ளி நிற்கச் சொன்னார்கள். ஸ்ட்ரெச்சரில் அவளைத் தூக்கிச் செல்லும் போது உயிரோடிருந்தாள். அவளை அங்கே பார்த்த பொழுது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தேன்.இரயிலை வேண்டுமென்றே தவறவிட்டேன். காவல் நிலையம் சென்றேன். என்னை அழைக்கும் வரை காத்திருந்தேன்.

“ஆராக்கும் நேருல கண்டது..” நான் கைநீட்டி எழும்ப முயன்றேன். “உக்காரும் சார்.. யோவ் அவருட்ட ரிட்டன் ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கும்.. நேருல பாத்தத எழுதுங்க சார்” சப்-இன்ஸ்பெக்டர் சொன்னார்.

காகிதத்தில் முதல்முறையாக உண்மையை எழுதினேன்.

காகிதத்தை சப்-இன்ஸ்பெக்டரிடம் நீட்டினேன். வாங்கியவர் அதை இன்ஸ்பெக்டரிடம் கொடுக்க அவர் அறைக்குள் நுழைந்தார். பூரணத்தை உணர ஆரம்பித்தேன்.

இன்ஸ்பெக்டர் வெளியே வந்தார். அவருக்கு என்னை ஏற்கனவே தெரியும். ஜான் இன்ஸ்பெக்டராக இருக்கும் போது ஹெட் கான்ஸ்டபிளாக இருந்தவர். என்னைக் கண்டதும்,

“அட நம்ம ஆந்தையன்ல்லா உக்காந்துருக்கான்.. என்னடே மறுபடியும் தொழிலுக்கு வந்துட்டியா..மண்டக்கடி ஆகும்னு நெனச்சேன்..முருகா தப்பிச்சேன்.. மேடம் தான் வக்கீல் ஆச்சே.. அவாள் தான் இந்த கேஸ எடுக்க போறாளாம்.. நீ சட்டிய கவுத்துருவ போலலா இருக்கு..”

நான் மெதுவாக “நெஜமா நான் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்தேன்..திருவந்திரம் போக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. அப்போ கண்டத எழுதியிருக்கேன்..பொய் ஒன்னும் இல்லயே” சொன்னேன்.

“சார் அரிச்சந்திரன்லா.. செவப்பு சட்டை, நீல கலரு ஜீன்ஸ்.. பைய நல்ல கலருன்னு எழுதியிருக்க.. ஆனா ரயில்வே போலீஸ் கருத்த பைய, சாரம் கட்டியிருந்தான்னுல்லா எழுதி இருக்கு.. என்னடே வேற யாருட்டயும் காசு வாங்கிட்டியா”

எனக்குக் கோபம் வந்ததை நான் காட்டிக் கொள்ளவில்லை. “இதான் நான் பாத்த ரிப்போர்ட்..” சொல்லிவிட்டு அமைதியாக எழுந்துநின்றேன்.

அவர் யாருக்கோ அலைப்பேசியில் அழைத்தார். பேசிக் கொண்டே என்னிடம் நீட்டினார். மறுமுனையில் என் மனைவி “அவரு எழுதிக் கொடுக்க பேப்பர்ல சைன் போட்டு கொடுங்க.. அப்புறம் திருவந்திரம் போறிங்களா! இல்ல வீட்டுக்கு வாரீங்களா..”, என் பதிலுக்காகக் காத்திருந்தாள். “சரி..சைன் போட்டுட்டு வீட்டுக்கு வாரேன்” சொல்லிவிட்டு அலைப்பேசியை இன்ஸ்பெக்டரிடம் நீட்டினேன். நளியாய் சிரித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் காகிதத்தில் ரிப்போர்ட் எழுதிக் கொண்டிருந்தார். நான் பாக்கெட்டில் கைவிட்டு பைபிளை எடுத்து, ஒரு பக்கத்தைத் திறந்தேன். வாசிக்க ஆரம்பித்தேன்.

…“ஆண்டவரே என்னை விட்டு அகன்றுபோகும். நான் ஒரு பாவியான மனுஷன்”. (லூக்கா 5:8)

வசனத்தை வாசித்து முடிக்கவும், இரண்டு பெண்களின் வார்த்தைகளும் ஒரேநேரத்தில் ஒலித்தன.