மரணம்


றையின் மூலையில் மரணம் தன் கால்களைப் பரப்பியபடி நின்று கொண்டிருந்தது. அதன் கைகள் அந்தரத்தில் நீள்வாக்கில் படர்ந்திருந்தன. அது நின்றிருந்த மூலை மற்ற இடங்களை விட இருண்டும் சில்லென்றும் இருந்தது. அவ்வறையின் நடுவேயிருந்த இரட்டைக் கட்டிலில் நீலவிளக்கொளியின் நிழற்தீற்றல்களாய்த் துயில் கொண்டிருந்த அவர்களின் உடற்கூறுகள் சரியாய் புலப்படவில்லை. அதற்கான தேவையும் இருக்கவில்லை. பெற்றோர்களுக்கு இடையில் படுத்திருந்த குழந்தையின் மீது மரணத்தின் பார்வை மென்மையாய் படிந்தது. நிறைந்த உடலும் ததும்பிய கன்னக்கதுப்புகளுமாக ஒருக்களித்துத் துயின்று கொண்டிருந்த அக்குழந்தையை எந்த வகையிலும் அச்சுறுத்த அது விரும்பவில்லை. 

     அம்மாவின் கை குழந்தையின் மென்வயிற்றில் பரவி, சகலலோகத்திலிருந்தும் புறப்பட்டு தன் குட்டிமகளை நோக்கி வரக்கூடிய தீமைகளிலிருந்து காப்பதான பாவனையில் அவளைத் தன்னுடன் இழுத்து அணைத்திருந்தது. முந்தின இரவு மின்இணைப்புகளைக் கைகளால் தடவிப் பார்க்கத் துவங்கிய மகளின் விளையாட்டு அவளை மிரட்டியிருந்தது. மகளின் கைகளுக்கு எட்டும் வகையில் அதை வைத்திருந்த தன் மீது சினம் உண்டாக, சட்டெனப் பாய்ந்து மகளைத் தூக்கினாள். தன் விளையாட்டு கலைந்து போன அதிர்வில் குழந்தை வீறிடத்துவங்கினாள். அந்த அழுகைக்கு மன்னிப்புக் கேட்பதாய் அவளின் அணைப்பு வழக்கத்தைவிட ஒருபிடி கூடுதலாய் இறுகியிருந்தது. அவ்விறுக்கமும் தாயின் இதயத்துடிப்பும் தந்த கதகதப்பில் குழந்தையின் கனவில் சிவப்பு மற்றும் மஞ்சள் பலூன்கள் தோன்றி வானை நோக்கிப் பறந்தன. அதைத் தொடர்ந்தோடிய குழந்தையின் முகத்தில் மென்னகை படர்ந்தது. மறுபக்கமாக உறங்கிக் கொண்டிருந்த தந்தையின் முகம் தன் பட்டு இளவரசியை நோக்கி வரும் ராட்சசர்களை இரண்டாகப் பிளந்துவிடப்போகும் தீவிரபாவனையில் இருந்தது. 

இன்னமும் நேரமிருந்தது.

     மரணம் கட்டிலை நெருங்கியது. குழந்தையிடமிருந்து கிளம்பிய சிறுநீர் ஊறிய டயப்பரின் வாசம் அதன் உணர்வுகளை இளக்கின. குழந்தைகளுடன் சம்பந்தப்பட்ட எந்த வாசமும் அதன் மனதைக் கிளர்வுற வைப்பதாய் இருந்தது. உறக்கத்திலிருந்த குழந்தையைப் பார்த்தபடி சற்றுநேரம் மெய்மறந்து நின்றது அது. அடுத்துச் செல்லக்கூடிய உலகொன்றும் சுவாரஸ்யம் குறைந்ததல்ல என்றாலும் அக்குழந்தை இன்னும் சில நாட்கள் இங்கு இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தந்த தவிப்பில் ‘பச்’சென்ற ஒலியுடன் தன் குளிர்ந்து இறுகியிருந்த உதடுகளைச் சுருக்கி விரித்தது. குழந்தை விரட்டிக் கொண்டிருந்த சிவப்பு பலூன்களில் ஒன்றை இழுத்து அதன் கரங்களில் கொடுத்தது. தான் அணிந்திருந்த உடையின் நிறத்திலிருந்த பலூனைப் பிடித்துக் கொண்டதும் ஏற்பட்ட கொண்டாட்டத்தில்  கிளுக்கென்றது குழந்தை. அம்மா, கண்களைத் திறக்காமலேயே அதை இன்னமும் இறுக்கமாய் அணைத்து தன் பக்கம் இழுத்து முத்தமிட்டாள். தந்தையின் முகத்தசைகள் இப்போது தளர்ந்திருந்தன. 

     மரணம் கட்டிலின் ஓரத்தில் அப்பாவையொட்டி அகலமான ரிப்பனைப் போல நீண்டிருந்த இடத்தில் அமர்ந்து கொண்டது. அடுத்த நாள் தனக்கு முற்றிலும் வேறுபட்டதாய் அமையப் போவதை அறிந்திருக்காத அப்பாவின் முகத்தில் இப்போது கனிவு நிறைந்திருந்தது. அந்தப் பாவனை கலையாமல் மரணத்திற்கு எதிர்புறமாய் புரண்டு படுத்துக்கொண்டார். 

     எப்பொழுதும் போல சமிஞ்சைகளைக் கொடுத்து விட்டு தான் இங்கு நுழைந்திருந்தது மரணம். பூமியின் எல்லையை அது தொட்ட போதே அம்மாவின் கனவில் நாகங்கள் துரத்தின. குழந்தைக்குத் தடுப்பூசி போட வீட்டை விட்டு வெளிக்கிளம்பிய நாளில் வாசற்படியில் கால் தடுக்க அம்மாவின் கால் சிறுவிரலின் நகம் பெயர்ந்தது. சற்று அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டு கிளம்பிய அவளைப் பார்த்து அப்போது புன்னகைத்தது மரணம்.

     தெருமுனைக்குள் அது நுழைந்த போது அவர்களின் இருப்பிடம் உருவாவதற்கு முன்பு அங்கு வசித்து வந்த பாம்பு குடும்பங்கள் ஒன்றிலிருந்த வயதான நாகத்திற்குத் தங்களின் முன்னால் இருப்பிடத்தைக் காணும் இச்சை உண்டானது. தன் நீண்டு பெருத்த உடலை நெளித்தும் வளைத்தும் ஊர்ந்து வந்த அது, தான் வழக்கமாய் சட்டை உரித்துப் போடும் இடத்திலிருந்த சலவை இயந்திரத்திற்கு அடியில் சற்று நேரம் இளைப்பாறியது. இடம் போதாமல் அதன் வால் பகுதி அவ்வியந்திரத்திற்கு வெளியே நீண்டிருந்தது. பின்னர், தான் முதல் முதலாக முட்டையிட்ட இடம், தன் குஞ்சுகள் பொறித்த இடமென்று நினைவுத்தடத்தில்  பதிந்திருந்த இடங்களிலெல்லாம் ஊர்ந்து பழகிய வாசத்தைத் தேடியது. புதிதாய் போடப்பட்டிருந்த பளிங்கு தரையினூடாக பயணித்த பரிட்சயமான அதிர்வுகளை உணர்ந்த அது அவ்விடத்தில் கடந்து போன வாழ்வின் நினைவுத்துண்டுகளில் திளைத்தது. அந்த மயக்கத்தில் மெல்ல அது அடுத்து நுழைந்த அறைக்குள் படுத்திருந்த குழந்தையைப் பார்த்ததும் சில வினாடிகள் நிதானித்தது. குழந்தையின் மென் தோலிலிருந்து கிளம்பிய பால் வாசனை அதன் நாசியை நிறைக்க அது தந்த போதையில் சற்றே தடுமாறியது. எந்த இனத்தைச் சேர்ந்த குட்டிகளானாலும் அழகு தானே! இளம் குழந்தைகள் பாம்புகளை எதிரிகளாய் நினைப்பதில்லை. அவற்றிற்கு ஊர்வன நடப்பன பறப்பன எல்லாம் இயற்கைப் பொம்மைகள். குழந்தைகளின் கரங்கள் தங்களின் வாலைப் பற்றி சுழற்றியாட்டுவதை பாம்புகள் விரும்பவே செய்கின்றன. குழந்தையின் கைகளில் சிக்குண்ட நேரம் தமது நஞ்சுப்பல் அதன் பிஞ்சு மேனியில் பதிந்திடாத வகையில் வாயைக் கெட்டியாக மூடிக் கொள்ளும் தன்மையை மானுடர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதில் பாம்புகளுக்கு வருத்தமுண்டு. இத்தலைமுறைப் பாம்புக் குட்டிகளுக்கு இத்தகு அனுபவங்கள் கிடைப்பதில்லை. தற்காப்பே அவற்றிற்கு முதன்மையாக போதிக்கப்படுகின்றன. அவையும் தங்களின் இயல்பை மறந்து மனிதர்களிடமிருந்து ஒதுங்கிப் போவதற்கு கற்று வருகின்றன. வயதான பாம்புகளால் பழையவற்றை மறக்கமுடிவதில்லை.  

     குழந்தை படுத்திருந்த கட்டிலின் மரக்கால்களைப் பற்றி அதன் மீது சுழன்றேறித் தன் வால் அதன் கைகள் சிக்குமாறு வைத்து குழந்தையைக் கண்கொட்டாமல் பார்க்கத்துவங்கியது அந்த நாகம். அடுத்த சில நொடிகளில் கேட்ட வீரென்ற அலறலின் அதிர்வுகள் காற்றில் பரவி அதன் தோலின் மேற்பரப்பையடைய, தன்னுணர்வு பெற்ற நாகம் சரசரவென ஊர்ந்து தண்ணீர் பொந்துக்குள் நுழைந்து மறைந்து கொண்டது. தண்ணீர் பீய்ச்சியும் குச்சியால் கிளறியும் அங்கிருந்து அதை வெளிக்கிளப்ப முயன்றவர்களின் முயற்சிகளில் சிக்காமல் அது சுவருடன் ஒட்டிப் படுத்துக் கொண்டது. நீல இரவுவிளக்கின் ஒளிபடர்ந்து மினுக்கிய தோலுடன்   பத்திரமாய் வெளியேறியது.   

     அன்றைய தினம் தனக்கு நாக தோஷம் இருப்பது நெடுநாட்கள் கழித்து அப்பாவின் நினைவிற்கு வந்தது. அவர்கள் நாகாத்தம்மன் கோவிலுக்குக் குழந்தையுடன் சென்று பாலூற்றி முட்டை வைத்து வழிபட்டார்கள். அடிக்கடி சகுனம் பிறழ்வதை அம்மாவின் மனம் சரியாகப் பிடித்துக் கொண்டது. மனதில் ஒரு பதட்டத்துடனேயே வளைய வந்த அம்மா சிலகாலம் ஊருக்குச் சென்று வருவதாய் அப்பாவிடம் சொன்னாள். அவர்கள் பெட்டிகட்டுவதைப் பார்த்து மரணம் புன்னகைத்தது. 

     மரணம் கட்டிலின் விளிம்பின் அமர்ந்த நேரம் அறையில் குளிர் இன்னமும் அதிகமானது. அம்மா எழுந்து அருகிலிருந்த தண்ணீர்க் குவளையிலிருந்து  நீரை அருந்திவிட்டு கனவில் சிவப்பு பலூனைப் பற்றித் துயிலும் குழந்தைக்கு அருகில் மீண்டும் படுத்துக் கொண்டாள். தன் போர்வைக்குள் குழந்தையை இழுத்து நெருக்கமாகக் கட்டிக் கொண்டாள். அவளது உள்மனம் எதையோ உணர்ந்து விட்டிருக்க வேண்டும். தன் கர்ப்பப்பைக்குள் மீண்டும் குழந்தையைச் செலுத்திவிடுபவள் போல இருந்தது அவளின் அணைப்பு. படுக்கையின் அசைவு ஏற்படுத்திய சலனத்தில் அப்பா கழிவறை பக்கம் நகர, இப்போது குழந்தையை ஒட்டி மரணம் படுத்துக் கொண்டது. அதன் கரங்கள் குழந்தையின் மீது படரத் துவங்கின. 


  • ஹேமா

நன்றி- ஓவியம் : Jorge Chamorro

Previous articleநூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் – 6
Next articleஇராவணத் தீவு – பயணத் தொடர் 4
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
4 Comments
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
charu
charu
2 years ago

Very nice story. Very different approach. New way of thinking. Was biting the nail till the end

நரேஷ்
நரேஷ்
2 years ago

அருமை !♥💐

Vidhya Arun
Vidhya Arun
2 years ago

சொற்களில் இருந்த செறிவு இறுதிவரை படிக்கத்தூண்டியது. முடிவு குழந்தையின் மரணம் என்பது வலியாக இருந்தது. ஆரம்பத்தில் பெற்றோர் மரணித்துவிட்ட அறையில் பிள்ளை மட்டும் இருக்கிறதோ என்று நினைத்தேன்

Vijay Vanaraja MURUGAN
Vijay Vanaraja MURUGAN
2 years ago

தங்களின் எழுத்து வன்மைக்கும், நடைக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..
மரணம்,பாம்பு இரண்டும் குழந்தை மீது கொண்ட கரிசனம் மெய்சிலிர்க்க வைக்கிறது..

கதையின் முடிவைக்கண்டு ஏனோ கண்கள் நனைந்தது; உச்சந்தலை சிலிர்த்தது!!

“தன் கரங்கள் குழந்தை மீது படர துவங்கிய அந்நேரம்,அந்த மரணத்திற்கும் இதே உணர்வுதான் இருந்திருக்குமோ!?”