1)புகல்
பகல் வெளிச்சத்தில்
சற்றே துலக்கமாகவும்
ஆற்றவியலாத துயரமாகவும்
சுமக்கமாட்டாத பாரமாகவும்
தோன்றும்
எனது தோல்விகள்,
இயலாமைகள்,
ஏக்கப் பெருமூச்சுகள்
எல்லாவற்றையும்
மறைத்துக் கொள்ளவோ
அல்லது
மறந்தாற்போல
இருந்துவிடவோ முடிகிற
இந்த இரவுதான்
எவ்வளவு ஆறுதலானது?
உந்தன்
கண்மைக் கருப்பிலிருந்து
பிறந்து,
கார்குழல் சுருளுக்குள்
வளரும் இருள்தான்
என் மருள் நீக்கும்
மருந்து.
2) மிச்சில்
உன்னொடு
இருந்த பொழுதில்
மறந்த காலம்
முழுவதும்
உன்னைப்
பிரிந்த பிறகு,
ஒன்றுக்குப் பத்தாகத்
திரண்டு
பூதவுருக் கொண்டு
எழுந்து வந்து,
இருந்தாற் போல்
இருக்கவிடாமல்
மருட்டுகிறது.
உறக்கம் தொலைத்த
இரவுகளில்
அடைபட்டிருக்கும்
அறைச் சுவரினின்றும்
உருகி வழியும்
கடிகாரத்திலிருந்து
சொட்டும்
எண்கள்
என்னைக் கேலி செய்கின்றன.
காக்கும் கடவுள்
கைவிட்டபோதிலும்
என் தர்க்கம்
என்னைத் தவறவிடவில்லை
எனவே
சித்தம் பேதலித்து
சிந்தையற்றிருக்கும் யோகமும்
எனக்கில்லை.
மூளையின் எச்சிலை
இழைத்துப் பின்னிய
சொற்களின் வலை மத்தியில்
வந்து சிக்குமெனக் காத்திருக்கும்
வாழ்வே மிச்சம்’.
3) உற்றது
நாளை முதல்
நாமிருவரும்
சந்திப்பதற்குச்
சாத்தியமானவை
என்றெண்ணிய
எல்லா
வாய்ப்புகளையும்
வாசல்களையும்
நேற்றே
அடைத்துவிட்டோம்
ஆயினும்
அதுகாறும்
நிகழாதென
நினைத்திருந்த
அற்புதங்கள் பலவும்
அதன் பிறகுதான்
ஒவ்வொன்றாய்
நிகழத் தொடங்கியது.
ஒரு போதும்
திருத்தவியலாது
என நானே நம்பும்
எனது குறைகளைப்
பெருந்தன்மையோடு
நீ மன்னித்துவிட,
உனது பலவீனங்களைப்
பொருட்படுத்தாத
கண்ணியவானாக நான்
கடந்துசெல்கிறேன்.
இனி எப்போதும்
பார்க்க நேராமலே
போகலாம்
எனினும்
நாமிருப்போம்
ஒருவர் மறதியில்
மற்றவர் வெறுமையாக
அருமையான வரிகள்