பணத்தின் குழந்தைகள்

ஞாயிற்றுக்கிழமை மாலை.  சூப்பர் மார்க்கெட்டில் கூட்டம் அதிகமில்லை. இரண்டேயிரண்டு குளிர்ந்த டயட் கோக் டின்களை வாங்கி, பணம் செலுத்துவதற்காக நின்றிருந்த போது வாயிலுக்கு அருகே ஒரு முதிய பிச்சைக்காரரைப் பார்த்தேன்.  உள்ளே வருகையில் அவரைப் பார்த்ததாக நினைவில்லை. ஆனால் அவர் வெகுநேரம் அங்கே நின்றிருப்பவரைப் போலத் தோன்றினார். வெகுகாலமாகக் கூட. ஓய்வு நாளின் உற்சாகம் வடிந்து, ஊரே தனது கூட்டில் அடைந்திருந்தது. சூப்பர் மார்க்கெட்டைச் சுற்றியிருந்த அடுக்கங்களின் ஜன்னல்களிலிருந்து வழிந்த சோர்வுற்ற ஒளி, சலனமற்றிருந்தது.   

வலதுகையை வாயருகே எடுத்து சென்று, தாழ்த்தி, விரல்களைக் குவித்து என்னிடம் பிச்சை கேட்டவரிடம் ஒரு கோக் டின்னைக் கொடுத்து அதை எவ்வாறு திறந்து குடிப்பதென்று விளக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.  என் வீட்டருகே இருந்த பூங்காவில், பராமரிப்பாளனின் கவுன் அணிந்த இரண்டு பெண் குழந்தைகளைத் தவிர யாருமில்லை.  அரைவட்ட வடிவிலான வெண்ணிற மின்விளக்குகளின் ஒளியில் குழந்தைகள் விளையாட்டில் மூழ்கியிருந்தன.

 நள்ளிரவுக்குப் பிறகு என் வீட்டிற்கு மேலே பறக்கும் விமானங்களின் ஓசை கேட்கத் தொடங்கியது.  சில வாரங்களாக நான் வாசித்துவந்த, ‘இமிடேசன் ஆஃப் கிறைஸ்ட்’ நூலை என் தலையணைக்கு அருகே வைத்துக் கொண்டேன். எனது உறக்கத்தின் தொலைதூரங்களில் விமானங்கள் மறையும் வரை ஒரு திட்டத்தை யோசித்தவாறு படுத்திருந்தேன்.

 திங்கட்கிழமை.  நடைப்பயிற்சியாளர்களால் நிரம்பியிருந்த பூங்காவைக் குறுக்காகக் கடந்து சென்று பணமளிப்பு இயந்திரத்தில் பத்தாயிரம் ரூபாய்களை எடுத்தேன்.  நான் நினைத்தவாறு நூறு ரூபாய் நோட்டுக்களாக இயந்திரம் பணத்தை வெளியே தள்ளியது.  நான் எப்போதும் பணமளிப்பு இயந்திரங்களில் இருந்து வெளியே வரும் தொகையை எண்ணிப் பார்ப்பதில்லை. பருவகாலத்தைக் காட்டிலும், ஒரு பணமளிக்கும் இயந்திரம் நம்பிக்கைக்கு உரியதாக மாறியிருக்கிறது.  வீட்டிற்குத் திரும்பும் போது நேற்றிரவு வகுத்திருந்த திட்டத்தை மீண்டுமொரு முறை நினைவு கூர்ந்தேன்.

 வங்கியில் எனது மேலாளரை அழைத்து விடுப்பு சொன்னேன். விடுப்பு கிடைத்ததும் என்னுடைய திட்டம் வழங்கப் போகும் அனுபவத்தின் கிளர்ச்சியைக் கற்பனை செய்தவாறு (அந்த உளநிலையை விவரிக்க சரியான இசைக்கோர்வை : ரிச்சர்ட் வாக்னரின் ‘ரைடு ஆஃப் தெ வல்கியரிஸின்’ தொடக்கப் பகுதி) குளித்து, ஒரு காஃபி போட்டுக் குடித்து விட்டு வெளியே வந்தேன்.  நான் வாடைக்குக் குடியிருந்த அடுக்ககத்தின் வாயில் கதவருகே வளர்ந்து போவோர் வருவோரை வரவேற்கும் வெட்சிப் பூச்செடியில் செந்நிறப் பூக்கள் நிறைத்திருந்தின.  பலாமரமும், புங்க மரமும் இணையாக வளர்ந்து ஒன்றின் மீது ஒன்று சாய்ந்திருந்தன. முற்றத்தின் ஓரத்தில் அசையாமல் நின்றிருந்த மாமரத்தின் காலைச் சுற்றியும் நிழல் படிந்திருந்தது.  அந்நாள் வெட்சிப் பூக்களின் கண்கள் பார்க்கத் தொடங்கியது.

 முக்கியமான வழிபாட்டிடங்கள், மெஜஸ்டிக் பேருந்து நிலையம், முன்பு பிச்சைக்காரர்களைக் கவனித்திருந்த போக்குவரத்து சமிக்ஞைகளைச் சேர்த்து ஒரு பயணத்திட்டத்தை வகுத்திருந்தேன்.  நூறு பிச்சைக்காரர்களுக்கு ஆளுக்கு நூறு ரூபாய் வழங்குவதுதான் என்னுடைய திட்டம். 

 ஒரு நாளில் நூறு பிச்சைக்காரர்களின் விதவிதமான முகங்களை, அழுக்கேறிய உடைகளை, வெளிர் பிஸ்தாநிற பீழை நிரம்பிய கண்களைச் சந்திப்பதை, அதன் பிறகு நிதானமாக வீடு திரும்பவதை எளிதாகக் கற்பனை செய்து வைத்திருந்தேன் எனினும், ஒரே நாளில் நூறு பிச்சைக்காரர்களைச் சந்திப்பதில் நிறைய சிரமங்கள் இருந்தன.  கோயில்களில் சிரமம் ஏதுமில்லை.  பிசைக்காரர்கள் கோயிலின் வெளிப்புறத்தில் திருவோட்டைத் தரையில் வைத்து அல்லது துணியைத் தரையில் விரித்து அமர்ந்திருப்பார்கள்.  தாடி வளர்த்து, மஞ்சள் அல்லது காவி நிறத்திலான ஆடைகளை அணிந்திருப்பவர்களில் சந்நியாசிகளும் இருக்கலாம், பிச்சைக்காரர்களும் இருக்கலாம்.  கூன் விழுந்த கிழவிகள் கையில் தடியோடு, சீழ் வழியும் காயங்களின் மீது வெள்ளைத் துணியைக் கட்டிக் கொண்டு, கால் நீட்டி உட்கார்ந்திருப்பார்கள்.  தோல் சுருங்கிய உருவங்களில், வடிந்து போய்விட்ட அவர்களது வாழ்வின் எஞ்சியிருப்பவற்றின் நிறத்திலே பிரி பிரியாகத் திரண்டிருக்கிறது எண்ணையிடப்படாத அவர்களின் செம்பழுப்புக் கூந்தல்.  அவர்களது உயிரின் நிறமே செம்பழுப்பென்று நான் கற்பனை செய்தேன் (பழுப்புக் கூந்தலை விரல் கொண்டு மெல்ல நீவிவிடும் கற்பனைக்குப் பொருத்தமான இசை : சாய்கோவிஸ்கியின் ‘ஸ்வான் லேக் சூட், ஓப் 20’). 

மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் பிச்சைக்காரர்களையும், பொறுக்கிகளையும் வேறுபடுத்திப் பார்ப்பது சற்றே கடினம்.  குடிப்பதற்காக, கஞ்சா வலிப்பதற்காக, பாலங்களின் அடியே இரவில்  தஞ்சமடையும் நோய் முற்றி வாடி வதங்கியிருக்கும் ஆக மலினமான வேசைகளைப் பகலிலே புணர்வதற்காக அவர்கள் கையேந்துவார்கள்.  இரவெல்லாம் யாரிடமோ அடி வாங்கி வீங்கிப் போயிருந்த கன்னங்களோடு, சாலையோரத்தில் கிடந்த ஒரு செங்கல் துண்டை எடுத்து உடைத்து அதில் பல் தேய்த்து,  நசுங்கியிருந்த நெகிழிக் குடுவையில் பிடித்திருந்த  தண்ணீரில் முகங்கழுவி எதன் பொருட்டோ விரைந்து நடந்த, தெருவில் வாழும் ஒரு பெண்ணை மெஜஸ்டிக் இரயில் நிலையத்தின் அருகே ஓர் அதிகாலையில் பார்த்திருக்கிறேன்.  இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையிலிருக்கும் இரயில் நிலையமும், வழிபாட்டிடமும் பிச்சைக்காரர்களை உற்பத்தி செய்து வைத்திருக்கின்றன.  

 நூறு பிச்சைக்காரர்களைத் தேடி காலை எட்டு மணியிலிருந்து மாலை ஆறே முக்கால் மணிவரை நான் கோயில்களிலும், மசூதிகளிலும், சமிக்ஞைகளிலும், பேருந்து நிலையப் பகுதிகளிலும் அலைந்தேன்.  அன்று முழுக்க சாப்பிடக் கூடாதென்றும் முடிவு செய்திருந்தேன்.   சிலர் என்னோடு பேச முனைந்தனர்.  ஆனால் அவசரத்தினால் அல்ல பிச்சைக்காரர்கள் பேசுவதை நின்று கேட்பதற்கு எனக்குத் தயக்கம்.  மெலிதான அருவெறுப்பும் கூட. 

தெருநாய்களும் இடம்பெயர்ந்து போன கைவிடப்பட்ட கிராமங்களின் இடிந்த வீடுகளின் வெடிப்புற்ற சுவர்களின் களைக்கு இணையான களையுடைய முகங்கள் (செம்புழுதி வீசும், வெய்யில் சுட்டெரிக்கும், முட்காடுகள் நிறைந்த நிலத்திற்கான இசை :  மியூசிக் ஃபார் ஸ்ட்ரிங்ஸ், பெர்குசன் & சலஸ்டா).  வீங்கிய கைகள், முழங்காலுக்குக் கீழே கால்கள் துண்டிக்கப்பட்டவர்கள், பார்வையற்ற கண்கள், நடக்க முடியாதவர்கள், தள்ளாமையின் கைப்பிடியில் நசுங்கிக் கொண்டிருக்கும் உடல்கள்,  ஊழ் நிரம்பிய முகங்கள்.

சமிக்ஞைகளில் இப்போது இந்தியாவின் பல மூலைகளில் இருந்து வந்த பழங்குடிகள் எவை எவைற்றையோ விற்கிறார்கள்.  இரப்பர் குழந்தை பொம்மைகளை விற்று வந்த ஒரு பழங்குடிப் பெண் ஒருத்தியை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறேன்.  அன்று நள்ளிரவுக்கும் மேலே அந்த இரப்பர் குழந்தை பொம்மை என்னுடைய நினைவில் அழுந்திக் கொண்டேயிருக்க கவிதை ஒன்றை எழுதினேன்.  அந்தக் கவிதை ஒரு பார்வைக்கு பிச்சைக்காரியைப் போன்றும், மறுபார்வைக்கு அவளுடைய மெலிந்த கைகளில் இருந்த குண்டுகுண்டான இரப்பர் குழந்தை பொம்மையைப் போன்றும் இருந்தது. அந்தக் கவிதையில் ஒரு குழந்தையும் இருந்தது.

நூறாவது பிச்சைக்காரி ஒரு மூதாட்டி.  எனக்கோ அளவில்லாத பசி.  அதோடு ஒரு நாள் முழுக்க பிச்சைக்காரர்களைத் தேடித் திரிந்ததில் இந்த நகரமே பிச்சைக்காரத் தோற்றத்திலே தெரிந்தது.  பளபளக்கும் கண்ணாடியால் ஆன வானுயர்ந்த கட்டிடங்களும் அவற்றின் வழக்கமான வசீகரத்தை இழந்திருப்பதையும்,  கப்பன் பூங்காவில் பூத்திருந்த ஊதா நிற மலர்களிலுமே கூட ஒளி குறைந்திருப்பதையும் நான் பார்த்தேன். 

கசியும் புண்ணின் அருகே ஒரு மலர்.  அந்திச் சூரியனின் ஆரஞ்சு நிறம் மின்னும் கண்ணாடிக் கட்டிடத்தின் அருகே தசை வெடித்திருக்கும் வீங்கிய கை.   இந்த நகரம் குடல் வெடித்திருக்கும் ஒரு வீங்கிய வயிறு.

மெஜஸ்டிக் இரயில் நிலையத்திற்கு எதிரேயிருக்கும் சுற்றிலும் விடுதிகளால் சூழப்பட்ட  பேருந்து நிலையத்தின் கூரையின் மேலே நடந்து சென்றால்,  அதுவும் அந்தி வேளையில், சோம்பல் நிரம்பிய அழகின் முகத்தைப் பார்க்கலாம் (வேகவேமகாச் செல்லும் மனிதர்களை ஒரு முட்டைக்குள் சுழல்பவர்களாக உணர்வதற்கான இசை : சாஸ்டகோவிச்சின் ’சொனாட்டா இன் டி மைனர் ஃபார் செல்லோ & பியானோ’).   ஆனால் எனக்கோ அந்தத் தெருவோர விபச்சாரியின் கன்றிப் போய் வீங்கியிருந்த முகம்தான் நினைவில் எழுகிறது.  

நூறாவது பிச்சைக்காரியான மூதாட்டியைப் போன்ற ஒரு பிச்சைக்காரியை, அவளைப் பிச்சைக்காரி என்று சொல்ல முடியாது, ஒரு பிராமணப் பெண், சில ஆண்டுகளுக்கு முன், பசவனகுடியில் ஒரு சமிக்ஞையில் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள்.  குளித்து, சுத்தமாக இருந்தது அவளது முகம், சீலையும் அழுக்கில்லாமல்.  அனேகமாக வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு அல்லது வீட்டாரிடம் கோபப்பட்டு வெளியேறி இருக்க வேண்டும்.  அவள் பிராமணப் பெண் என்பதை ஆட்டோவில் அமர்ந்திருந்த ஒருவர் உடனடியாகக் கண்டு கொண்டு அருகேயிருக்கும் ஸ்ரீசுப்ரமண்யா மடத்தில் உணவளிக்கிறார்கள், அங்கே செல் என்று சொன்னார்.   அவளும் அவரது பேச்சைக் கேட்டு உடனடியாகச் சென்றாள்.நூறாவது பிச்சைக்காரியிடம் என்னிடமிருந்த கடைசி நூறு ரூபாய்த்தாளை அளித்தேன். அவளுக்கு ஆச்சரியம். அன்றைய நாளில் எல்லாப் பிச்சைக்காரர்களின் கண்களும் ஒன்று போலவே விரிந்ததைக் கண்டேன்.  அவர்களில் பலரும் கையில் சேரும் சில்லறைகளை உணவகங்களில் நூறு ரூபாய்க்கு தொண்ணூற்றி ஐந்து ரூபாய்கள் என்று கைமாற்றுகிறவர்கள் என்றாலும், பிச்சையாகக் கிடைக்கும் நூறு ரூபாய் முழு நோட்டு, அதுவும் என்னைப் போன்ற இளைஞன் கொடுப்பதை அவர்களால் நம்ப முடிந்திருக்காது  (ரூபாய் நோட்டைப் பார்த்து கண்கள் விரிவதற்கான இசை : பீத்தோவனின் ‘எக்மாண்ட், ஓப் 84: ஓவர்சர் இன் எஃப் மைனர்’).  ஆனால் என்னைப் பைத்தியம் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள், ஏதாவது வேண்டுதல் என்று நினைத்திருக்கலாம்.  நன்றி சொல்ல முகமன் வைக்கும் அவர்களது கைகளில் ஒன்றிரண்டு என்னை வாழ்த்தவும் செய்தன. 

 என்னுடைய திட்டத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான்.  அது தயை.  வடமொழிச் சொற்களான கிருபையும், தயையும் ஒத்த பொருளைக் கொண்டவை என்றாலும், கிருபை நம்மை செயலாற்றத் தூண்டுவதில்லை.  ஒருவரின் அல்லது ஒன்றின் வறிய நிலை கண்டு இரங்கினால் அது கிருபை மட்டுமே, ஆனால் அதை மாற்றுவதற்காக முயன்றால் அது தயை.    கிருபை எளியவர்களுக்கானது, தயை வலியவர்கள் செய்வது.

 மிகுந்த களைப்போடும் பசியோடும் என்னுடைய அறைக்குத் திரும்பி, சுடுநீரில் உடம்பையே நீவி விட்டதைப் போன்ற ஒரு குளியலை முடித்துவிட்டு குளியறையிலிருந்து வெளியே வர, கட்டிலின் மீது ஒலித்துக் கொண்டிருந்த செல்போனை எடுத்தேன்.  ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்ட என்னுடைய நண்பன்.  பல மாதங்களுக்கு முன்பு என்னிடம் கடனாக வாங்கியிருந்த பத்தாயிரம் ரூபாயைத் திருப்பி அளித்திருப்பதாகச் சொன்னான்.   அவன் இணைப்பில் இருக்கவே, வங்கியிலிருந்து வந்திருந்த குறுஞ்செய்தியை வாசித்தேன்.  பல மாதங்களாக இன்று வரும், நாளை வரும் என்று நம்பியிருந்த பணம் திரும்ப வந்துவிட்டது.  அதைச் சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.

செவ்வாய்க்கிழமை.  பணி முடிந்ததும் என்னுடைய நண்பர்கள் மூவரை வழக்கமாகச் சந்திக்கும் பிடிஎம் லே-அவுட்டிலிருக்கும் உணவகம் ஒன்றில் சந்தித்து முந்தைய நாள் நடந்தவற்றைச் சொன்னேன்.  கண்டதையும் படித்து குழப்பிக் கொண்டு கைக்காசை செலவழிக்க வேண்டாமென்று சொன்னார்கள்.  அவர்களில் யாரும் குறைந்த செலவில் விடுதலையே கிடைக்குமென்றாலும் அதை வாங்கக் கூடியவர்கள் அல்ல.

ஒரு பத்தாயிரம் நீ செலவு செய்தாய், ஒரு பத்தாயிரம் உனக்கு வந்திருக்கிறது.  இது தற்செயலே அல்லாமல், அற்புதம் ஒன்றுமல்ல.  நீ பிச்சைக்காரர்களுக்கு பணத்தைச் செலவழிக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் உன்னிடம் இருபதாயிரம் ரூபாய்கள் இருந்திருக்கும். பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன்பே தோல்வியடைபவர்களின் உணர்வுகளைப் போன்றதே நான் செய்தது என்றார்கள்.  அவர்கள் சொல்வது சரிதான் என்றாலும், கிருபை, தயை இவை இரண்டிற்கும் அடிப்படையாக இருக்கும் கருணை, இரக்கம் இவற்றைப் பற்றியெல்லாம் தர்க்க பூர்வமாக அவர்களிடம் விவாதிக்க முடியாது.  அதுவும் என்னுடைய உளநிலை கொஞ்ச நாட்களாக இவை போன்ற நடைமுறை உலக விசயங்களுக்கு அப்பால் உள்ளவற்றோடு தொடர்பு கொள்ள முயற்சிப்பதால், அதைக் குறித்து அவர்களுக்கு எவ்வளவு விளக்கிச் சொன்னாலும், ஏளனமே மிஞ்சும் என்பதால் நான் மேற்கொண்டு எதையும் விவாதிக்காமல் இதை மட்டும் சொன்னேன்.   

 ’கடவுள் நம்பிக்கையை, மதக் கருத்துக்களைப் பின்பற்றி நான் இவ்வாறு செய்யவில்லை.  இதன் தர்க்கம் எனக்கே புரியவில்லை என்றாலும்,  நூறு பிச்சைக்கார்களின் வாழ்க்கையில் அன்று நிகழ்ந்தது ஒரு அற்புதமே.  என்றாலும் இது விளையாட்டின் தீவிரத்தைப் போன்றதென்றே தோன்றுகிறது’.  என்னைப் போலவே, மூலதனப் பளபளப்பு நிரம்பியிருக்கும் அலுவலகங்களின் வழியாக தங்கள் எதிர்காலத்திற்கு இரயிலைச் செலுத்திக் கொண்டிருக்கும் என்னுடைய நண்பர்களுக்கு நான் சொன்னதின் பொருள் விளங்கவில்லை.

நாம் கேட்கிற அளவிற்கு பணம் தரவில்லை என்றால் கடவுளின் பயன்தான் என்ன?.  கிரேக்கக் கடவுளர்களின் மறுவுருவங்களைப் போன்ற பணக்காரர்களின் தயையும், என்னுடையதும் ஒன்றா?  அவர்களிடமிருந்து விடைபெற்று என்னுடைய வீட்டிற்குத் திரும்பும் வழியில் இதைத்தான் யோசித்தேன். 

  கிளாரிஸ் லிஸ்பெக்டர் ஒரு சிறுகதையில் இவ்வாறு எழுதியிருக்கிறார் :

  `…whoever imitated Christ would be lost-lost in the light, but dangerolusly lost.  Christ was the worst temptation’.

பணத்தின் குழந்தைகளில் ஒருவனான நான், லிஸ்பெக்டரின்  எச்சரிக்கையை மீறியிருக்கக் கூடாது.

Previous articleக.மோகனரங்கன் கவிதைகள்
Next articleபொறுப்பு
பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
தமிழின் நம்பிக்கை தரும் படைப்பாளிகளில் பாலசுப்ரமணியன் பொன்ராஜும் ஒருவர். ‘கனவு மிருகம்’, ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ ஆகிய இரு தொகுப்புகளும் அவரது எதிர்கால எழுத்துகளின் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துபவை. விரிவான வாசிப்பு, தத்துவப் பார்வை, சமூகப் பார்வை, விநோதப் புனைவில் ஈடுபாடு, அறிவியல் ஆர்வம், இசை என்று பல துறைகளின் விளைச்சலாக அவரது கதைகளைக் கூறலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.