நீரை மகேந்திரன் கவிதைகள்

1.

அப்பாவின் கால்கள் மரமாகி இருந்தன!

அப்பாவின் கால்கள் ஆலமரம்போல உருக்கொண்டிருந்தன.

அதிலிருந்து கிளை பரவியிருந்தோம்

பூக்களும் கனிகளுமாக

வசந்தம் கொண்ட காலத்தில்

கீழவாடையின் கொடும் மின்னல்போல,

துயரச் செய்தியானது அப்பாவின் இழப்பு.

ஆயிரங்கரங்களில்

பலங்கொண்ட மட்டும் யாரோ மரத்தை ஆட்டினார்கள்

கொப்புகள் உதிர்ந்தன,

கூடுகள் சிதறின,

இன்றோ நாளையோ ஓட்டை உடைத்து

தலை சிலுப்பும் கானாங்குருவிகளின் கேவல்,

கொடும் மழையில் அடித்துக் கொண்டு போனது.

யாருக்கு யார் ஆதரவு ?

உடுப்புகளோடு எங்கெங்கோ ஒண்டினோம்.

எப்படிச் சொல்வது …

வேம்புக் கசப்பிலிருந்து  இன்னமும் மீளாத சுவையை?

வெப்பம் வடிந்து,

குளுமை ஏறிய உடலைக் கட்டி அழுகையில்,

அப்பாவின் கால்கள்

உறுதியான மரம் போல இறுகி இருந்தது.

2. 

சாகசக்காரிகள் அந்தரத்தில் சாகவிடுவதில்லை!

மேஜிக் நிகழ்த்தும் கலைஞன்

இரவில் இணையைத் தேடி வருகிறான்

பழகிய வனத்தின் நடைபோல,

உதடுகளில் அரும்புகிறது தேன்சிட்டின் சீட்டி.

அவள் இசைவுதான் அன்றைய வெகுமதி

கண்ணாடி முன் அடிவயிற்றைக் காட்டி நிற்கும் அப்பெண்

மத்திம கால வராகன்,

திமிர்த்த தோள்களைக் கொண்ட ஆயிரம் ஆண்டுகால நடிகை.

ஆச்சர்யமாக அன்று நட்சத்திர வானத்தைக் காட்டுகிறாள்.

அவனது நிலம் பிளந்து,

ஒரு விதை சடசடவென மேலே ஏற,

அதன் மீது இறங்குகிறது மழைத்துளி.  

சாகசக்காரன் ஒரு நிமிடம்

தனது பிடியைத் தவறவிடுகிறான்.

அது அவனது மரணமாக

உயரத்திலிருந்து கீழே விழ வைக்கும்.

அந்த கணத்தில்,

ஸ்படிக குளுமையுடன் ஒரு முத்தம்

அவனை நேர்பாதைக்குத் திரும்புகிறது.

சாகசக்காரிகள் அந்தரத்தில் சாக விடுவதில்லை.

3.

விடியலின் நிறம் நீலம்!

நீல நிறச் சட்டை அணிந்தவனை எனக்குத் தெரியும்

எப்போதும் நீலச்சட்டை…

ஒரு உடுப்பு துவைத்து உலர்த்தும் நேரத்தில்,

மற்றொரு உடுப்பும் நீலம்தான்.

நீலமே அவன் அடையாளமாக மாறியது

நீலமாகச் சிரித்தான்

நீலமாக அழுதான்

நீலமே உணவும் கழிவுமாக…

அதிலிருந்து வெளியேற நினைக்கவில்லை

அவன் தாயிடமிருந்து வந்திருந்தது.

துர்பாக்கியமாக அவள் நடுவழியில் மரித்திருந்தாள்

அவன் நீலத்தை உணரத் தொடங்கிய நாளில்,

அதுபற்றி கேட்க, அவள் இல்லை.

நீலம் எந்த சிரமத்தையும் தரவில்லை

நீலத்தில் கறை படிந்தால் கோபம் கொள்கிறான்

நீலத்தைப் போதிக்கிறான்

நீலமே இசையாக நீந்துகிறான்.

எந்த மேடையிலும்

நீலம் மட்டுமே வண்ணம் என வாதிடுகிறான்.

சில சமயம் அவனையே அவன் அறிய,

நீலமே விடியலைக் கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.