நிலைய அதிகாரி-அலெக்ஸாண்டர் புஷ்கின்

நிலைய அதிகாரிகளைச்1 சபிக்காதவர்கள் யாராவது உண்டா? அவர்களோடு சர்ச்சையில் ஈடுபடாதவர்கள் எவராவது உண்டா? ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்று, அவர்களுடைய அராஜக நடவடிக்கை, திமிர், அலட்சியப்போக்கு போன்றவற்றைப் பற்றி, ஒன்றுக்கும் உதவாத புகார்களைப் பதிவு செய்வதற்காக, அவர்களிடமே புகார்ப் புத்தகத்தைக் கோராதவர்கள் யாராவது உண்டா? பழங்காலத்து நீதிமன்றக் காரியதரிசிகளைப்போல அல்லது குறைந்தபட்சம் முரோம் காட்டின் கொள்ளையர்களைப்போல அவர்களை மனிதகுலத்தின் சாபக்கேடு எனக் கருதாதவர்கள் யார்?

சரி, நாம் இப்போது நியாயத்தின் பக்கம் நின்று பார்ப்போம். நம்மை அந்த நிலைய அதிகாரியின் இடத்தில் பொருத்தி, இன்னும் சற்றுப் பரிவோடு அவர் நிலையைப் பரிசீலிப்போம்.

நிலைய அதிகாரி என்பவர் யார்? சமூகத்தின் கடைக்கோடி வகுப்பைச் சேர்ந்த ஒரு உண்மைத் தியாகி. உடல்ரீதியான தாக்குதல்களிலிருந்து அவரைத் தற்காக்க உதவும் கேடயம்தான் அந்த அதிகாரப் பதவி. ஆனால் எல்லா நேரமும் அது உதவும் என்றும் சொல்லிவிட முடியாது. (வாசகர்களின் மனசாட்சிக்கு இந்த இடத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்).

அந்தச் சர்வாதிகாரியின், ஆம், இளவரசர் வாஸம்ஸ்கி2 அவர்களை அப்படித்தான் வேடிக்கையாகக் குறிப்பிடுவார், அந்தச் சர்வாதிகாரியின் பணிதான் என்ன? கப்பலின் கீழ்த்தளத்தில் அடைபட்டுக் காலமெல்லாம் துடுப்பு வலிக்கும் வாழ்நாள் அடிமையைப் போன்றவன் அல்லவா அவன்? அவனுக்கு இரவும் பகலும் ஓய்வு ஒழிச்சல் என்பதே கிடையாது.

அலுத்துக் களைத்துவரும் பயணிகள் தங்கள் பயணத்தின் ஒட்டுமொத்த சலிப்பையும் நிலைய அதிகாரியின் மீதுதான் இறக்குவர். சாதகமற்ற வானிலையாகட்டும், மோசமான சாலையாகட்டும், சொல்பேச்சை மதியாத வண்டியோட்டியாகட்டும், சண்டித்தனம் பண்ணும் குதிரையாகட்டும் – எதுவாக இருந்தாலும் பழி என்னவோ நிலைய அதிகாரியின் மேல்தான். நிலைய அதிகாரியின் எளிய வீட்டிற்குள் நுழைந்த கணமே பயணியின் கண்களுக்கு நிலைய அதிகாரியைப் பார்த்தால் எதிரி போலவே தோன்றும்.  எதிர்பாராத விருந்தாளியாய் வந்திருக்கும் பயணிக்கு மாற்றுக் குதிரையைக் கொடுத்து எவ்வளவு விரைவாக அவரை அங்கிருந்து அனுப்பிவைக்கிறாரோ அவ்வளவு பாக்கியசாலி அந்த நிலைய அதிகாரி. கைவசம் மாற்றுக் குதிரைகள் இல்லையென்றால்… கடவுளே! என்ன மாதிரியான வசவுகளும், மிரட்டல்களும் அவர் மீது சரமாரியாகப் பாயும்!

அடைமழை, ஆலங்கட்டி மழையென எதையும் பாராமல் அவரைக் குதிரை லாயத்துக்கு ஓடவைப்பார்கள். எந்நேரமும் சிடுசிடுப்பும் ஆத்திரமுமாக ஏவிக் கொண்டிருக்கும் பயணிகளிடமிருந்து சற்றே விடுபடும் பொருட்டு, நடுங்கவைக்கும் உறைபனிக் குளிரிலும், பனிப்புயல் வீசும் தருணங்களிலும்கூட வீட்டின் முன்பக்கத் தாழ்வாரத்தில் சற்றுநேரம் நின்று ஆசுவாசம் பெற்றுத் திரும்புவார் பரிதாபத்துக்குரிய அந்த நிலைய அதிகாரி.

ஒரு ராணுவ ஜெனரல் வருகிறார். நிலைய அதிகாரி பயந்து நடுங்கியபடி அவர் வசமிருந்த கடைசி இரண்டு குதிரைகளை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். அவற்றுள் ஒன்று அஞ்சல் அலுவலருக்கானது. ஜெனரலோ, ஒரு நன்றிகூட சொல்லாமல் குதிரைகளை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார். ஐந்து நிமிடங்கள் கழித்து வாசலில் அழைப்பு மணி! அஞ்சல் அலுவலர் அஞ்சல் குதிரைகளைப் பெறுவதற்கான ஆணையை மேஜைமீது விசிறியடிக்கிறார். நடந்தவற்றை மனத்தராசில் நிறுத்திப் பார்த்தால் நிலைய அதிகாரியின் மீது ஆத்திரம் வருவதற்குப் பதிலாக கழிவிரக்கம்தான் உண்டாகும். இன்னும் கொஞ்சம் சொல்கிறேன், கேளுங்கள்.

இருபதுவருட காலம் ரஷ்யாவிற்குள் குறுக்கும் நெடுக்குமாகக் கிட்டத்தட்ட எல்லா திக்குகளிலும் பயணம் செய்திருக்கிறேன். நிலையங்கள் இருக்கும் எல்லா சாலைகளையும் கிட்டத்தட்ட அறிவேன். பல தலைமுறைகளைச் சார்ந்த வண்டியோட்டிகளோடு எனக்குப் பரிச்சயம் உண்டு. நிலைய அதிகாரிகளைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமில்லாதவர்கள் வெகு சிலரே. வியாபார நிமித்தமாகத் தொடர்பில் இல்லாதவர்கள் சிலர். பயணத்தின்போது நான் குறிப்பெடுத்து வைத்திருக்கும், என்னுடைய கவனத்தைக் கவர்ந்த சுவாரசியமான விஷயங்களைக் கூடிய விரைவிலேயே பிரசுரமாக்குவேன் என்று நம்புகிறேன்.   

இப்போதைக்கு நான் சொல்வது ஒன்றுதான், பொதுமக்களின் பார்வைக்கு, நிலைய அதிகாரிகளின்மீது தவறான வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. அவப்பெயருக்கு ஆளான அந்த அலுவலர்கள் உண்மையில் அமைதியான சுபாவத்தினர், உதவும் இயல்பினர், சமுதாய ஒப்புரவு மிக்கவர்கள், பணிவு காட்டுவதில் தேர்ந்தவர்கள், பணத்துக்கு அதிகம் ஆசைப்படாதவர்கள். அவர்களுடனான (பயணிக்கும் பெரும்பாலான கனவான்கள் காரணமே இல்லாமல் வெறுக்கக்கூடிய) உரையாடல்கள் சுவாரசியமாகவும் தகவல் களஞ்சியமாகவும் இருக்கும். என்னைப் பொறுத்தவரை, அரசு அலுவல் நிமித்தம் பயணிக்கும் ஆறாம் வகுப்பு3 அலுவலர்களின் உரையாடல்களை விடவும் இவர்களுடனான உரையாடல்களே எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவ்வளவையும் நான் சொன்ன காரணத்தால் எனக்கு மதிப்புக்குரிய நிலைய அதிகாரிகளுள் பலர் நண்பர்கள் என்பது சொல்லாமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். இருப்பினும், அவர்களுள் ஒருவரைப் பற்றிய நினைவுகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. சூழ்நிலை ஒருமுறை எங்களை ஒன்று சேர்த்தது. என்னுடைய அன்பான வாசகர்களுக்கு நான் இப்போது அவரைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன்.

1816-ஆம் ஆண்டு மே மாதம் நான் அந்த மாகாணத்தின் வழியே பயணம் செய்ய நேர்ந்தது. இப்போது அந்தச் சாலை இல்லை. முற்றிலும் சிதைந்துவிட்டது. அப்போது நான் கீழ்மட்டப் பதவியில் இருந்தேன். நிலையங்களுக்குச் சென்று இரண்டு குதிரைகளைக் கட்டணம் செலுத்திப்பெற வேண்டும். உயர்பதவியில் இல்லாத காரணத்தால் நிலைய அதிகாரிகள் மத்தியில் எனக்குப் போதிய வரவேற்போ கவனிப்போ கிடைக்காது. அதனால் எனக்கு உரிமையானது என்று என் மனதுக்குத் தோன்றுவதை வலிந்து எடுத்துக்கொள்வதை நான் வழக்கமாக வைத்திருந்தேன். ஒருமுறை ஒரு நிலைய அதிகாரி, எனக்கென்று தயார் செய்யப்பட்டக் குதிரைகளை, அப்போது வந்த உயர் அதிகாரிக்குத் தந்துவிட்டார். இளமைத்துடிப்பும் உணர்வுவேகமும் கொண்டிருந்த நான் அவரது கயமையையும் கோழைத்தனத்தையும் கண்டு ஆத்திரம் கொண்டேன். அதெல்லாம் பழைய கதை. கவர்னருடைய விருந்தில் கலந்துகொள்ளும்போது பரிமாறுபவன் வரிசைக்கிரமமாகப் பரிமாறாமல் எனக்குப் பிரத்தியேகமான கவனிப்பை வழங்குவதை இயல்பாய் நான் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு நடந்தவை. இப்போதெல்லாம் முன்னிறுத்தப்படுவதும் பின்தள்ளப்படுவதும் அதனதன் இயல்பிலேயே நடப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

‘பதவிக்கு மரியாதை’ என்ற பொதுவிதிக்குப் பதிலாக ‘மனதுக்கு மரியாதை’ போன்ற மாற்று விதி ஏதேனும் புழக்கத்துக்கு வருமானால் நம்முடைய நிலைமை என்னாகும்? என்னென்ன பிரச்சினைகள் எழும்? விருந்தின்போது பணியாட்கள் யாருக்கு முன்னுரிமை தருவார்கள்?

இப்போது நான் சொல்லவந்த கதைக்கு வருவோம். 

அன்று வெயில் மிகக் கடுமையாக இருந்தது. அடுத்த நிலையம் சுமார் இரண்டு மைல் தூரத்திலிருந்தபோது மழை தூறத் தொடங்கியது. சற்று நேரத்தில் கன மழையாக அடித்துப் பெய்தது. நான் முழுக்க நனைந்துவிட்டேன். நிலையத்துக்கு வந்ததும் முதல் வேலையாக என்னுடைய உடைகளை மாற்றினேன். அடுத்து, கொஞ்சம் தேநீர் கேட்டேன்.

“ஏ, தூன்யா! தேநீர்ப் பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு கொஞ்சம் க்ரீம் எடுத்துக்கொண்டு வா” நிலைய அதிகாரி உரத்தக் குரலில் கத்தினார்.

தடுப்புக்குப் பின்னாலிருந்து வெளியே வந்த சுமார் பதினான்கு வயது மதிக்கத்தக்க சிறுமி வீட்டின் முன்பக்கம் ஓடினாள். அவளுடைய அழகு என்னை மிரளவைத்தது.

“உங்கள் மகளா?” நான் நிலைய அதிகாரியிடம் கேட்டேன்.

“ஆமாம், என் மகள்தான். கெட்டிக்காரி, சமர்த்து, இறந்துபோன அவளுடைய அம்மாவைப் போலவே” அவர் பெருமிதம் தொணிக்கச் சொன்னார்.

பிறகு அவர் என்னுடைய பயண அனுமதிச்சீட்டைப் பதிவு செய்யத் தொடங்கினார். நான் அவருடைய அந்த எளிய இல்லத்தில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தேன். அந்த ஓவியங்கள் ‘வழிதவறிய மைந்தன்’ கதையைப் பிரதிபலித்தன.

முதல் ஓவியத்தில் அமைதியிழந்த இளைஞன், தளர்வாடையும் இரவுக் குல்லாயும் அணிந்திருந்த முதிய தந்தையிடமிருந்து ஆசியையும் பை நிறைய செல்வத்தையும் அவசரமாகப் பெற்றுக்கொண்டு விடைபெறும் காட்சி. இரண்டாவது ஓவியம் அவனுடைய கீழ்த்தரமான வாழ்க்கையை விதவிதமான வண்ணங்களில் சித்தரித்தது. போலியான நண்பர்களும் கூச்சநாச்சமற்றப் பெண்களும் சூழ்ந்திருக்க, அவன் ஒரு மேஜையில் அமர்ந்திருந்தான். மூன்றாவது ஓவியத்தில் மிகவும் நொடித்துப்போன நிலையில் கந்தலும் முக்கோண மூலைத் தொப்பியும் அணிந்திருந்த அந்த இளைஞன் பன்றிகளை மேய்த்துக்கொண்டு, அவற்றின் உணவைப் பகிர்ந்துண்ணும் காட்சி. அவனுடைய முகத்தில் ஆழ்ந்த துயரும் தவறை உணர்ந்ததால் உண்டான கழிவிரக்கமும் வெளிப்பட்டன. கடைசி ஓவியம், அவன் தந்தையைத் தேடிவரும் காட்சியைக் குறித்தது. அதே தளர்வாடையுடனும் அதே இரவுக் குல்லாயுடனும் காட்சியளிக்கும் அந்த நல்ல மனிதர், மகனை எதிர்கொண்டு அழைக்க ஓடுகிறார். ஊதாரி மைந்தன் அவரெதிரில் மண்டியிட்டிருக்கிறான். தொலைவில் சமையற்காரர் விருந்து ஏற்பாட்டிற்காகக் கொழுத்த கன்றைக் கொல்கிறார். மூத்த மகன் எல்லோருடைய திடீர் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன என்று பணியாட்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்.

ஒவ்வொரு ஓவியத்தின் அடியிலும் பொருத்தமான ஜெர்மானிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவற்றையும் அவற்றோடு அன்று நான் அவ்வீட்டில் கண்ட பால்சம் பூத்தொட்டிகள், புள்ளிபோட்ட திரைச்சீலை, படுக்கை என என்னைச் சுற்றிலும் இருந்தவற்றை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. அடுத்து நான் அந்த நிலைய அதிகாரியைப் பார்த்தேன். உற்சாகமும் உறுதியும் வாய்ந்த, சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அம்மனிதரின் மேலங்கியில் மங்கிப்போன ரிப்பன்களோடு கூடிய மூன்று பதக்கங்கள் காட்சியளித்தன.

என்னுடைய பழைய வண்டியோட்டியின் கணக்கைக் கிட்டத்தட்ட சரிபார்த்து முடிக்கும்போது தூன்யா தேநீர்க் குவளையோடு வந்தாள். மதர்ப்புடன் காணப்பட்ட அந்தச் சின்னஞ்சிறு பெண் தன்னைப் பற்றிய என் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள விழைவதுபோல் என்னை ஏறிட்டாள். பிறகு தன் விழிகளைத் தழைத்துக்கொண்டாள். நான் அவளிடம் பேசத் தொடங்கினேன். எல்லாம் தெரிந்த பெரிய மனுஷிபோலத் துளியும் தயக்கமின்றி என் கேள்விகளுக்குப் பதில் அளித்தாள். நான் அவளுடைய அப்பாவுக்கு ஒரு கோப்பையில் மதுவை நிரப்பிக் கொடுத்தேன். பிறகு அவளுக்கு ஒரு கோப்பை தேநீர் கொடுத்துவிட்டு நானும் எனக்கு எடுத்துக் கொண்டேன். பிறகு நாங்கள் மூவரும் ஏற்கனவே பழக்கமானவர்களைப்போலச் சரளமான உரையாடலில் ஈடுபட்டோம்.

குதிரைகள் ஏற்கனவே தயாராகிவிட்டன. ஆனாலும் நிலைய அதிகாரியையும் அவருடைய மகளையும் விட்டுப்பிரிய எனக்கு மனமே வரவில்லை. ஒரு வழியாக அவர்களிடம் விடைபெற்றேன். தந்தை என்னுடைய பயணம் இனிதாக அமைய வாழ்த்தினார். மகள் வண்டிவரை வந்து வழியனுப்பினாள். தாழ்வாரத்தைக் கடக்கும்போது நின்று, அவளை முத்தமிட அனுமதி கேட்டேன். தூன்யா சம்மதித்தாள். அதன் பிறகு எத்தனையோ அற்புதமான முத்தத் தருணங்களை என்னால் கணக்கிட இயலும் எனினும் நினைவில் நீண்டகாலம் நிலைத்திருக்கும் அதைப்போன்ற மிக இனிமையான ஒன்றை இதுவரை நான் பெற்றதில்லை.

வருடங்கள் பல கடந்துவிட்ட நிலையில் மறுபடியும் சூழ்நிலை என்னை அதே சாலை வழியே அதே இடத்துக்குக் கொண்டு சென்றது. முன்பிருந்த நிலைய அதிகாரியின் மகளை மீண்டும் சந்திக்கப்போகும் நினைவு மகிழ்ச்சியை அளித்தது. “ஆனால்… அதே நிலைய அதிகாரி இப்போதும் அங்கேயே இருப்பாரா? இல்லையேல், பணிமாற்றம் பெற்றிருக்கலாம். தூன்யாவுக்கும் திருமணமாகியிருக்கலாம்” பல சிந்தனைகள் எழுந்தன. இருவரில் ஒருவர் இறந்துபோயிருக்கலாம் என்ற எண்ணம்கூட இடையிடையே மின்னல் போல் வெட்டியது.

நான் குறிப்பிட்ட அந்த நிலையத்தை முன்கணிப்போடும் வருத்தத்தோடும் நெருங்கினேன். அந்தச் சிறிய நிலையத்துக்கு முன்னால் குதிரைகள் நிறுத்தப்பட்டன. அறைக்குள் நுழைந்தவுடனேயே ஊதாரி மைந்தன் ஓவியங்களை அடையாளம் கண்டுகொண்டேன். மேஜையும் படுக்கையும் அதே இடத்தில் இருந்தன. ஆனால் ஜன்னல் சட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பால்சம் பூந்தொட்டிகளைக் காணவில்லை. மேலும் அந்த இடம் முழுவதும் அழுக்கடைந்தும் சிதிலமடைந்தும் காணப்பட்டது. நிலைய அதிகாரி தன்னுடைய ரோம அங்கிக்குள் புதைந்து தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். என்னுடைய வருகைச் சத்தம் அவரை எழுப்பிவிட்டது. அவர் எழுந்து உட்கார்ந்தார். நிச்சயமாக அவர் சிமியோன் விரின்4தான். ஆனால் எவ்வளவு வயதானவராகக் காட்சியளிக்கிறார்!

என்னுடைய பயண அனுமதிச்சீட்டைப் பதிவு செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது நான் அவரைப் பார்த்தேன். நரைத்தத் தலைமயிர், நீண்ட காலமாகச் சவரம் செய்யப்படாத முகம், அதிலிருந்த அளவுக்கு அதிகமான சுருக்கங்கள், கூன் விழுந்த முதுகு எனக் காட்சியளித்த அவரைப் பார்த்தபோது திடமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்த ஒருவரை மூன்று நான்கு வருட கால இடைவெளி அதற்குள் இவ்வளவு பலவீனமான முதியவராக எப்படி மாற்றியது என்று அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக இருந்தது. .

“உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா? நாம் ஏற்கனவே பழக்கமானவர்கள்” என்றேன்.

“இருக்கலாம், இது ஒரு நெடுஞ்சாலை. இங்கே பல பயணிகள் வருவார்கள், போவார்கள்” என்றார் அவர் சுரத்தில்லாமல்.

“உங்கள் மகள் தூன்யா நன்றாக இருக்கிறாளா?” நான் தொடர்ந்தேன்.

முதியவர் வெறுப்புடன் முகத்தைச் சுழித்தார். பிறகு “கடவுளுக்குத்தான் தெரியும்” என்றார்.

“அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதோ?” நான் கேட்டேன்.

நான் கேட்டது காதில் விழாததுபோல் அவர் என்னுடைய பயண அனுமதிச் சீட்டைப் பார்வையிட்டு அதிலிருக்கும் விவரங்களை மெல்லிய குரலில் வாசித்தார். அவரைக் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு, குடிக்க ஏதாவது வேண்டுமென்று கேட்டேன். தூன்யாவைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் என்னைத் தூண்டியது. ஒருவேளை மதுவருந்தும் நேரத்தில் அவர் தன்னுடைய இறுக்கத்தைத் தளர்த்தி என்னோடு பழையபடி உரையாடுவார் என்று நம்பினேன். நான் கணித்தது தவறாகவில்லை. நான் அவரிடம் மதுக்கோப்பையை கையளித்தபோது அவர் மறுக்கவில்லை. மது அவருடைய துயரார்ந்த மௌனத்தைக் கலைப்பதை நான் அவதானித்தேன். இரண்டாவது கோப்பையின்போது அவர் பேச ஆரம்பித்தார். அவருக்கு என்னை ஞாபகம் வந்துவிட்டது அல்லது எனக்கு அப்படித் தோன்றியது. அப்போது அவர் சொன்ன கதை ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அதே சமயம் என்னை ஆழமாகப் பாதிப்பதாகவும் இருந்தது.

“அப்படியென்றால் உங்களுக்கு என் மகள் தூன்யாவைத் தெரியும்?” அவர் ஆரம்பித்தார். “ஆனால் தூன்யாவை யாருக்குதான் தெரியாது? ஆ… தூன்யா, தூன்யா! எப்படிப்பட்டப் பெண் அவள்! இந்த வழியாகப் போகும் எல்லோருமே  அவளைப் பாராட்டுவார்கள். அவளைப்பற்றித் தவறாக ஒருவரும் ஒரு வார்த்தை சொன்னது கிடையாது. பெண்கள் அவளுக்குக் கைக்குட்டை, கம்மல் என ஒன்று மாற்றி ஒன்று பரிசாகத் தந்துகொண்டே இருப்பார்கள். கனவான்கள் பகலுணவுக்கோ இரவுணவுக்கோ நிறுத்துவதுபோல் வேண்டுமென்றே இங்கே நிறுத்துவார்கள். அவளை அப்போதுதான் நீண்டநேரம் பார்த்து ரசிக்க முடியும் என்பதுதான் உண்மை. கடுங்கோபத்தில் இருப்பவர்கூட அவள் முன்னால் அமைதியாகி என்னிடம் அன்பாகப் பேசுவார். நீங்கள் நம்புவீர்களோ, மாட்டீர்களோ, விரைவஞ்சல் ஊழியர்களும் வழக்காடுமன்றத் தகவற்தூதர்களும் தங்கள் நேரத்தைப் பொருட்படுத்தாமல் அவளிடம் அரைமணிநேரம் கூட நின்று பேசுவார்கள்.

இந்த வீட்டை நேர்த்தியாகப் பராமரித்தவள் அவள்தான். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கைப் பேணுவாள். எல்லாப் பொருட்களையும் தயாராக வைத்திருப்பாள். எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக்கொண்டாள். ஆனால் நான்? கிழட்டு முட்டாள் மாதிரி, அவளை அன்பாகப் பார்த்துக்கொண்டேனே தவிர, அந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள எனக்குத் தெரியவில்லை. நான் என் மகளை நேசிக்கவில்லையா? நான் அவளுக்குச் செல்லம் கொடுக்கவில்லையா? மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரவில்லையா? ஆனால்… முடியாது, யாராலும் கெடுவினையிலிருந்து தப்ப முடியாது. என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதிலிருந்து நழுவ முடியாது.”

அவர் கடந்துபோன துயரத்தை என்னிடம் விரிவாகச் சொல்லத் தொடங்கினார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு குளிர்கால மாலைப்பொழுது. நிலைய அதிகாரி புதிய பதிவேட்டைத்  தயார் செய்துகொண்டிருந்தார். மகள் தடுப்புக்குப் பின்னால் அமர்ந்து ஏதோ தைத்துக்கொண்டிருந்தாள். அப்போது வீட்டு வாசலில் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. மென்கம்பளிக் குல்லாயும் ராணுவச் சீருடையும் அணிந்து கழுத்துக்குட்டை சுற்றிய ஒருவன் உள்ளே நுழைந்தான். குதிரைகள் வேண்டுமென்று கேட்டான்.  அப்போது குதிரைகள் எதுவுமே நிலையத்தில் இல்லை. எல்லாக் குதிரைகளும் வெளியில் போயிருந்தன. அதைச் சொன்னவுடனேயே அவனுடைய குரலோடு சேர்ந்து சாட்டையும் உயர்ந்தது. இம்மாதிரியான சூழல்களுக்குப் பழக்கப்பட்டுப்போன தூன்யா சட்டென்று தடுப்புக்குப் பின்னாலிருந்து ஓடிவந்து, பயணியைப் பார்த்துக் கனிவோடு ‘உண்பதற்கும் குடிப்பதற்கும் ஏதாவது கொண்டுவரவா?’ என்று கேட்டாள். தூன்யாவின் வருகை வழக்கமான மாற்றத்தை உண்டாக்கியது. பயணியின் கோபம் குறைந்தது. அவன் குதிரைகள் வரும்வரை காத்திருக்கச் சம்மதித்ததோடு இரவுணவையும் கோரினான். நனைந்திருந்த குல்லாயையும், இராணுவ உடையையும், கழுத்துக்குட்டையையும் களைந்த பிறகு, அந்த இளம் வீரன் உயரமாகவும், மெலிந்த உடல்வாகுடனும் கன்னங்கரு மீசையுடனும் காட்சியளித்தான். அவன் நிலைய அதிகாரியுடனும் அவர் மகளுடனும் இயல்பாகவும் இனிமையாகவும் உரையாடத் தொடங்கினான். இரவுணவு பரிமாறப்பட்டது. அதற்கிடையில் குதிரைகள் வந்துவிட்டன. நிலைய அதிகாரியின் உத்தரவின் பேரில் பயணியின் கிபிட்காவில்5 குதிரைகளுக்குச் சேணம் பூட்டப்பட்டன. தீவனம் வைக்கப்படாமலேயே அவை தங்களுடைய அடுத்தப் பயணத்துக்கு ஆயத்தப்படுத்தப்பட்டன. குதிரைகள் தயாராக இருப்பதை அறிவிப்பதற்காக, நிலைய அதிகாரி அறைக்குள் நுழைந்தபோது அவ்விளைஞன் கிட்டத்தட்ட சுயநினைவு இல்லாமல் விசிப்பலகைமேல் கிடப்பதைக் கண்டார். அவன் சுகவீனமாக இருந்தான். தலைவலிப்பதாகச் சொன்னான். இந்த நிலையில் அவனுடைய பயணத்தைத் தொடர்வது சாத்தியமில்லை என்றானது. இப்போது என்ன செய்வது? நிலைய அதிகாரி தன்னுடைய படுக்கையில் அவனைப் படுக்க வைத்தார். நோயாளி மறுநாள் காலைக்குள் குணமாகவில்லை என்றால் அடுத்த ஊரில் உள்ள மருத்துவரை அழைக்க முடிவு செய்தார்.

மறுநாள் இளைஞனின் நிலைமை இன்னும் மோசமானது. அவனுடைய வேலையாள் மருத்துவரை அழைக்கச் சென்றான். வினிகரில் தோய்த்த கைக்குட்டையை இளைஞனின் தலையைச் சுற்றிக் கட்டுப் போட்டுவிட்டு, தையல் வேலை செய்தபடி தூன்யா அவன் பக்கத்திலேயே இருந்தாள். நிலைய அதிகாரி பார்த்தபோது அவன் மூச்சுவிடத் திணறினான். மிகவும் கஷ்டப்பட்டு சில வார்த்தைகளை உச்சரித்தான். ஆனால் இரண்டுமுறை காஃபி குடித்தான். முணகியபடி இரவுணவு கோரினான். தூன்யா அவனை விட்டுக் கொஞ்சமும் நகரவில்லை. அவன் தொடர்ச்சியாகக் குடிப்பதற்கு ஏதாவது கேட்டுக்கொண்டே இருந்தான். தூன்யா தானே எலுமிச்சைகளைப் பிழிந்து சாறு தயாரித்துக் குவளை நிறைய அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

நோயாளி அவ்வப்போது கொஞ்சம் பழச்சாறு அருந்தி உதடுகளைச் சற்றே ஈரப்படுத்திக்கொள்வான். பிறகு தூன்யாவிடம் குவளையைத் திருப்பிக் கொடுக்கும்போதெல்லாம் தன் நன்றியைத் தெரிவிப்பதுபோல் அவளுடைய கையை அழுத்திப் பிடிப்பான். மருத்துவர் இரவுணவு சமயத்தில் வந்தார். அவர் நோயாளியின் நாடியைப் பரிசோதித்துவிட்டு அவனுடன் ஜெர்மன் மொழியில் உரையாடினார். பிறகு நிலைய அதிகாரியிடம் ரஷ்ய மொழியில், ‘நோயாளியின் தற்போதைய தேவை ஓய்வு மட்டுமே. இரண்டுநாள் ஓய்வுக்குப் பிறகு அவர் பயணத்தைத் தொடரலாம்’ என்றார். ராணுவ வீரன் மருத்துவரின் வருகைக்கான கட்டணமாக இருபத்தைந்து ரூபிள் கொடுத்துவிட்டு, இரவுணவையும் அவர் தங்களோடு சேர்ந்து உண்ணுமாறு அழைப்பு விடுத்தான். மருத்துவர் சம்மதித்தார். இருவரும் அருமையான இரவுணவை உண்டுமுடித்தனர். ஒயின் குடித்தனர். பிறகு முழு திருப்தியோடு ஒருவருக்கொருவர் விடைகொடுத்தனர்.

மற்றுமொருநாள் போனது. ராணுவ வீரன் முழுவதுமாகக் குணமடைந்துவிட்டான். அவன் மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டான். நிலைய அதிகாரியிடமும் தூன்யாவிடமும் மாறி மாறி தொடர்ச்சியாகக் கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொண்டிருந்தான். ஏதேதோ பாடல்களைச் சீட்டியடித்தான். வந்துபோகும் பிற பயணிகளோடு அளவளாவினான். அவர்களுடைய வருகைப் பதிவை பதிவேட்டில் பதிந்தான். எந்த அளவுக்கு நிலைய அதிகாரியின் மனதைக் கவர்ந்திருந்தான் என்றால் மூன்றாம்நாள் அவன் புறப்படும்போது இப்படியொரு அற்புதமான விருந்தாளியை வழியனுப்ப மனமில்லாமல் அவர் வருந்தினார். 

அன்று ஞாயிற்றுக்கிழமை. தூன்யா ஞாயிறு பூசைக்குத் தேவாலயம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தாள். ராணுவ வீரனின் கிபிட்காவும் தயாராகிவிட்டது. அவன் நிலைய அதிகாரியிடம் அவருடைய உபசரிப்புக்கும் விருந்தோம்பலுக்கும் நன்றி கூறினான். தூன்யாவிடம் விடைபெற்றுக்கொண்டதோடு, அவள் விரும்பினால், ஊரின் எல்லையில் உள்ள தேவாலயம் வரையிலும் தன்னோடு வரலாம் என்றும் அழைப்பு விடுத்தான். தூன்யா தயங்கினாள்.

“நீ எதற்காகப் பயப்படுகிறாய், தூன்யா? மேன்மைக்குரிய இவர் ஒன்றும் ஓநாய் அல்லவே. உன்னைத் தின்றுவிடமாட்டார். தேவாலயம் வரையிலும் அவரோடு சென்றுவா, மகளே” நிலைய அதிகாரி மகளிடம் சொன்னார்.

தூன்யா கிபிட்காவில் ஏறி ராணுவ வீரனின் அருகில் அமர்ந்துகொண்டாள். பணியாள் படக்கென்று குதித்தெழுந்து வண்டியோட்டிக்கு அடுத்தாற்போல் அமர்ந்துகொண்டான். வண்டியோட்டி விசில் அடித்ததும் குதிரைகள் பெரும் பாய்ச்சலுடன் புறப்பட்டன.

பரிதாபத்துக்குரிய அந்த நிலைய அதிகாரிக்குத் தான் எந்த நம்பிக்கையில் தன் மகளை முன்பின் அறிந்திராத ராணுவ வீரனோடு செல்ல அனுமதித்தோம் என்பது புரியவே இல்லை. எது அவர் கண்ணைக் கட்டிவிட்டது? எது அவரை யோசிக்கவிடாமல் தடுத்தது? அரைமணி நேரம் கழிவதே பெரும்பாடானது. நேரம் செல்லச் செல்ல அவர் உள்ளத்தில் அமைதியின்மையும் அலைக்கழிப்பும் உண்டாயின. அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க இயலாமல் உள்ளுக்குள் உண்டான உறுத்தல் காரணமாக மகளைத்தேடி அவரே தேவாலயத்துக்குப் புறப்பட்டார். ஆலயத்தை வந்தடைந்தபோது, ஏற்கனவே பூசை முடிந்து மக்கள் கலைந்துவிட்டிருந்தனர். தூன்யாவை ஆலயத்தின் முகப்பிலும் வளாகத்திலும் தேடினார். எங்கும் காணவில்லை. ஆலயத்தின் உள்ளே பதற்றத்தோடு ஓடினார். பாதிரியார் திருப்பலிபீடத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார். உதவியாளர் மெழுகுத்திரிகளை அணைத்துக்கொண்டிருந்தார். இரண்டு முதிய பெண்மணிகள் ஒரு மூலையில் இன்னமும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தூன்யா அங்கு இல்லை.

தளர்ந்துபோயிருந்த அத்தந்தை பெரும் பிரயத்தனத்துடன் தன் சக்தியை ஒன்றுதிரட்டி, அந்த உதவியாளரிடம், தன் மகள் தூன்யா பூசைக்கு வந்திருந்தாளா என்று கேட்டார். உதவியாளர் அவள் வரவில்லை என்று சொன்னார். என்ன செய்வதென்று புரியாத நிலைய அதிகாரி நடைபிணமாகத் திரும்பினார். அவருக்கு ஒரே ஒரு நம்பிக்கை எஞ்சி இருந்தது. தூன்யா இளவயதுப் பெண்களுக்கே உரிய துடுக்குத்தனத்தோடு அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் அடுத்த ஊரில் இருக்கும் அவளுடைய ஞானத்தாயைப் பார்க்கச் சென்றிருக்கலாம் என்னும் எண்ணம்தான் அது.

உள்ளுக்குள் வதைக்கும் வேதனையோடும் குழப்பத்தோடும் மகளை எந்தக் குதிரை வண்டியில் வழியனுப்பி வைத்தாரோ அந்தக் குதிரைவண்டி திரும்பி வருவதற்காகக் காத்திருந்தார். வண்டி வரவில்லை. மாறாக, தூன்யாவும் ராணுவ வீரனும் இருந்த அந்த வண்டி அடுத்த ஊரைக் கடந்து சென்றுவிட்டது என்ற பயங்கரச் செய்திதான் வந்தது. அன்று மாலை அவர் தனியாகவும் மிதமிஞ்சிய போதையோடும் விடப்பட்டார். அந்த முதிய தந்தையால் தன்மகள் தன்னை விட்டுச் சென்றுவிட்ட துயரத்தைத் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. வீட்டுக்குள் நுழைந்த கணமே தன் படுக்கையில், முந்தைய தினம் அந்த ஏமாற்றுக்கார இளைஞன் படுத்திருந்த அதே படுக்கையில் விழுந்தார். நடந்தவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து பார்த்தபோது, அவன் நோய்வாய்ப்பட்டதாகச் சொன்னது எல்லாமே நாடகம் என்ற முடிவுக்கு வந்தார்.

கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலைய அதிகாரி, அடுத்த ஊருக்கு அனுப்பப்பட்டார். அவர் திரும்பிவரும்வரை அவருடைய இடத்தில் வேறொருவர் நியமிக்கப்பட்டார். ராணுவவீரனைப் பரிசோதித்த அதே மருத்துவர்தான் நிலைய அதிகாரியையும் பரிசோதித்தார். ராணுவவீரனைத் தான் பரிசோதித்தபோது அவனுக்கு உடல்ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதையும் ஏதோ கெட்ட எண்ணத்துடன்தான் அவன் அப்படி நடிக்கிறான் என்பதையும் தான் சந்தேகித்ததாகவும், அவனுடைய சாட்டை அடிக்குப் பயந்து வாயை மூடிக்கொண்டு இருந்ததாகவும் மருத்துவர் உறுதியாகச் சொன்னார். அந்த ஜெர்மானிய மருத்துவர் உண்மையைத்தான் சொல்கிறாரா அல்லது தன்னுடைய கூர்மதியைப் பறைசாற்ற விரும்பி அவ்வாறு சொல்கிறாரா என்பது தெரியவில்லை என்றாலும் அவரது கூற்று, அந்தக் கையாலாகாதத் தந்தையை எந்த விதத்திலும் ஆற்றுப்படுத்தவில்லை. ஓரளவு உடல்நிலை தேறியதும், அங்கிருந்த நிலைய அதிகாரியிடம் இரண்டு மாத விடுப்பு பெற்றுக்கொண்டு யாரிடமும் எதுவும் சொல்லாமல், மகளைத்தேடி தானே புறப்பட்டார் தந்தை. பதிவு செய்யப்பட்டிருந்த அனுமதிச் சீட்டைக்கொண்டு கேப்டன் மின்ஸ்கி6 ஸ்மோலன்ஸ்கிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றிருப்பதை அறிந்துகொண்டார். தூன்யா தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே செல்வதாகத் தெரிந்தபோதிலும் வழி நெடுக அழுதுகொண்டே சென்றதாக அவர் பயணித்த வண்டியின் வண்டியோட்டி சொன்னார்.

“முடியுமானால்… தொலைந்துபோன என் ஆட்டுக்குட்டியைக் கண்டுபிடித்து வீட்டுக்குக் கொண்டுவருவேன்” நிலைய அதிகாரி நினைத்துக்கொண்டார்.

அதே நினைவோடு அவர் பீட்டர்ஸ்பர்க்கை அடைந்தார். இஸ்மைலோவ்ஸ்கி பட்டாளத்தின்7 ஓய்வுபெற்ற கடைநிலை வீரரும் நிலைய அதிகாரியின் பழைய நண்பருமான ஒருவரின் குடியிருப்பில் தங்கித் தன் தேடுதலைத் தொடங்கினார். கேப்டன் மின்ஸ்கி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்தான் இருக்கிறான் என்பதையும் டிம்யூத் ஹோட்டலில் தங்கியிருக்கிறான் என்பதையும் விரைவிலேயே கண்டுபிடித்துவிட்டார். அவனைச் சந்திக்க முடிவு செய்தார்.

மறுநாள் அதிகாலையிலேயே புறப்பட்டு கேப்டன் மின்ஸ்கியின் குடியிருப்புக்குச் சென்றார். நுழைவுக்கூடத்தில் நின்றபடி, மேன்மைக்குரியவரைக் காண்பதற்காக ஒரு முதிய ராணுவவீரன் வந்திருப்பதாகச் சொல் என்று அங்கிருந்த ராணுவ சேவகனிடம் அறிவித்தார். பூட்ஸ்களைத் துடைத்துக் கொண்டிருந்த அவன், தங்கள் எஜமானர் இன்னமும் உறங்கிக்கொண்டிருப்பதாகவும் காலை பதினொரு மணிக்கு முன்னால் யாரையும் சந்திக்க மாட்டார் என்றும் கூறினான். நிலைய அதிகாரி திரும்பிச் சென்றுவிட்டு, சேவகன் குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் வந்தார். இரவுநேரத்துத் தளர்வாடையும் சிவப்புநிறக் குல்லாயும் அணிந்திருந்த மின்ஸ்கி தானே வெளியில் வந்தான்.

“உங்களுக்கு என்ன வேண்டும், நண்பரே?” அவன் கேட்டான்.

முதிய தந்தையின் இதயம் துடித்தது. கண்ணீர் பெருகியது. நடுங்கும் குரலில் அவர் சொன்னார், “மேன்மைக்குரியவரே! தாங்கள் எனக்கொரு பேருதவி செய்ய வேண்டும்…”

மின்ஸ்கி அவரை உற்றுப் பார்த்தான். சற்றுக் குழம்பியவனாய், அவரைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டான்.

“மேன்மைக்குரியவரே! போனது போய்விட்டது. என் மகள் தூன்யாவையாவது என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அவளை உங்களுடைய விளையாட்டுப் பொம்மையாக ஆக்கிவிட்டீர்கள். மிச்சமிருக்கும் வாழ்க்கையையும் அழித்து அவளை நாசமாக்கிவிடாதீர்கள்”

“நடந்து முடிந்த எதையும் மாற்ற முடியாது” அவன் கிட்டத்தட்ட குழம்பிய நிலையிலிருந்தான். “உங்கள் முன்னால் நான் குற்றவாளியாக நிற்கிறேன். உங்களிடம் மன்னிப்புக் கோரவும் தயாராக இருக்கிறேன். ஆனால் தூன்யாவை விட்டுவிடுவேன் என்று மட்டும் நினைக்காதீர்கள். அவள் மகிழ்ச்சியாக இருப்பாள், நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். நீங்கள் எதற்காக அவளை மீளப் பெற நினைக்கிறீர்கள்? அவள் என்னை நேசிக்கிறாள். இனி அவளால் அவளுடைய முந்தைய வாழ்க்கையை வாழ முடியாது. நடந்தவற்றை முற்றிலும் மறந்துவிட அவளாலும் முடியாது. உங்களாலும் முடியாது.”

அவன் எதையோ அவருடைய சட்டைக்கை மடிப்பினுள் திணித்துத் தள்ளியபடி, அறைக் கதவைத் திறந்தான். என்ன ஏது என்று புரிந்துகொள்வதற்குள்ளாகவே தெருவில் நின்றிருக்கக் கண்டார். அதிர்ச்சியில் உறைந்தவராய் வெகுநேரம் அவர் அப்படியே அங்கேயே நின்றிருந்தார். பிறகுதான் தன்னுடைய சட்டைக்கை மடிப்பில் ஏதோ தாள்சுருள் இருப்பதைக் கவனித்தார். வெளியில் எடுத்துப் பார்த்தபோது ஐந்தும் பத்துமாய்ப் பல ரூபிள் தாள்கள் சுருட்டிவைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. மீண்டும் அவர் கண்களில் கண்ணீர் தளும்பியது. இம்முறை கொந்தளிக்கும் ஆத்திரத்தின் கண்ணீர்! அவர் பணத்தாள்களைக் கசக்கிப் பந்தாக்கி தரையில் வீசியெறிந்தார். பூட்ஸ் கால்களால் அதை ஆத்திரம் தீரும்வரை மிதித்தார். பிறகு அங்கிருந்து விலகி நடந்தார்.

சற்று தூரம் சென்றதும் என்ன நினைத்தாரோ, நின்றார். மீண்டும் அந்த இடத்துக்குத் திரும்பினார். ஆனால் பணச்சுருள் அங்கே இல்லை. நன்கு உடையணிந்த வாலிபன் ஒருவன் அவர் திரும்பிவருவதைப் பார்த்து, அவசரமாக அங்கிருந்த நான்கு சக்கரக் குதிரைவண்டியில் தாவி ஏறி, வண்டியோட்டியிடம், “சீக்கிரம் போ” என்று கத்தினான்.

நிலைய அதிகாரி அவனைப் பின்தொடரவில்லை. அவர் தன்னுடைய ஊருக்கே திரும்பிவிட முடிவுசெய்தார். ஆனால் போவதற்கு முன்பு ஒரு முறையாவது தூன்யாவைப் பார்த்துவிட விரும்பினார். அதனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மின்ஸ்கியின் குடியிருப்புக்குச் சென்றார். தங்கள் தலைவர் யாரையும் பார்க்க மாட்டார் என்று சொன்ன சேவகன் அவரைப் பலவந்தமாய், நுழைவுக்கூடத்துக்கு வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு, கதவை அறைந்து மூடினான். நெடுநேரம் கதவுக்கு வெளியே காத்திருந்துவிட்டு, பிறகு அங்கிருந்து வெளியேறினார் நிலைய அதிகாரி.

அன்றையதினம் மாலை அவர் தூய அடைக்கல அன்னை ஆலயத்தின் பூசை முடிந்து லிட்டெனியா சாலைவழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு அழகான நான்கு சக்கரக் குதிரைவண்டி வேகமாக அவரைக் கடந்துபோனது. அது மின்ஸ்கியின் வண்டி என்பதை உடனடியாக நிலைய அதிகாரி அடையாளம் கண்டுகொண்டார். அந்த வண்டி அங்கிருந்த மூன்றுமாடிக் கட்டடத்தின் முன்னால் அதன் வாசலை ஒட்டி நின்றது. கேப்டன் மின்ஸ்கி படிக்கட்டில் ஓட்டமாக ஏறி ஓடினார். நிலைய அதிகாரியின் மனதில் சட்டென்று ஒரு எண்ணம் உதயமாகி மகிழ்ச்சி பரவியது. அவர் வண்டியோட்டியை அணுகி, “இது யாருடைய வண்டி, நண்பரே? மின்ஸ்கியுடையதுதானே?” என்றார்.

“அவருடையதேதான். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றான் அவன்.

“உங்கள் முதலாளி அவருடைய தூன்யாவுக்கு ஒரு கடிதம் தரச்சொல்லி என்னிடம் கொடுத்திருந்தார். ஆனால் தூன்யாவின் முகவரியை நான் தவறவிட்டுவிட்டேன்.” என்றார்.

“அவள் இங்கேதான் இரண்டாவது தளத்தில் குடியிருக்கிறாள். ஆனால் நீங்கள் உங்கள் கடிதத்தோடு தாமதமாக வந்துவிட்டீர்கள். இப்போது அவரே அவளுடன்தான் இருக்கிறார்.”

“அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை” நிலைய அதிகாரி படபடக்கும் இதயத்தோடு பதில் சொன்னார். “உங்களுடைய தகவலுக்கு நன்றி. என்னுடைய பணியை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று நான் அறிவேன்” அவர் சொல்லிக்கொண்டே படிகளில் ஏறினார்.

கதவு தாழிடப்பட்டிருந்தது. அவர் அழைப்புமணியை அழுத்தினார். காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் வலி நிறைந்ததாக இருந்தது. ஒரு வழியாகச் சாவி திருகப்படும் சத்தத்தைத் தொடர்ந்து கதவு திறக்கப்பட்டது. இளவயதுப் பணிப்பெண் ஒருத்தி நின்றிருந்தாள்.

“அவ்தோட்யா செமியோனோவ்னா8 இங்குதானே வசிக்கிறார்?” அவர் கேட்டார்.

“ஆமாம், உங்களுக்கு என்ன வேண்டும்?” அவள் கேட்டாள்.

நிலைய அதிகாரி பதில் எதுவும் சொல்லாமல் அறைக்குள் நுழைந்தார்.

“நீங்கள் உள்ளேபோக முடியாது. நீங்கள் உள்ளேபோக முடியாது” பணிப்பெண் அவர் பின்னாலேயே கத்திக்கொண்டு வந்தாள், “அவ்தோட்யா செமியோனோவ்யா இப்போது ஒரு விருந்தினரோடு இருக்கிறார்.”

அவளுடைய கத்தலைப் பொருட்படுத்தாமல் நிலைய அதிகாரி நேராக உள்ளே சென்றார். முதலிரண்டு அறைகளும் இருட்டாக இருந்தன. மூன்றாவது அறையில் விளக்கு எரிந்தது. திறந்திருந்த அந்த அறைக்கதவின் முன்வந்து நின்றார். அறைகலன்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்த அவ்வறையில் மின்ஸ்கி ஆழ்ந்த யோசனையோடு அமர்ந்திருந்தான். மிகவும் நளினமாக நவநாகரிக உடையணிந்திருந்த தூன்யா, சேணத்தின்மீது அமர்ந்திருப்பவளைப் போல் நாற்காலியின் கைப்பிடிமீது அமர்ந்திருந்தாள். மின்ஸ்கியை மிகுந்த கனிவோடு பார்த்தபடி, அவனுடைய கன்னங்கரிய சுருள்முடிக் கற்றையைத் தன் அழகிய விரல்களால் சுருட்டிக்கொண்டிருந்தாள்.

பாவம் அந்த நிலைய அதிகாரி! தன் மகளை இதுவரை இவ்வளவு அழகாகப் பார்த்ததே இல்லை. தன்னுடைய விருப்பத்துக்கு மாறாய் அவள் அழகை உள்ளுக்குள் வியந்தார்.

“யார் அங்கே?” நிமிர்ந்து பார்க்காமலேயே அவள் கேட்டாள்.

அவர் அமைதியாக இருந்தார். பதில் ஏதும் வராமல் போகவே, அவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள். அவ்வளவுதான். அலறியபடி மயங்கிக் கீழே விழுந்தாள். அதிர்ச்சியோடு அவளை அவசரமாகத் தூக்கச் சென்ற மின்ஸ்கியின் பார்வையில் அறை வாசலில் நின்றிருந்த முதியவர் தென்பட்டார். அவன் தூன்யாவை அப்படியே விட்டுவிட்டு, ஆவேசத்துடன் அவரைநோக்கி வந்தான்.

“உங்களுக்கு என்னதான் வேண்டும்?” பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான். “எதை அபகரிப்பதற்காக திருடனைப்போல என் பின்னாலேயே சுற்றுகிறீர்கள்? அல்லது என்னைக் கொல்ல நினைக்கிறீர்களா? இங்கிருந்து போய்த் தொலையுங்கள்” வலிமை மிகுந்த கரத்தால் அவருடைய கழுத்துப்பட்டியை முரட்டுத்தனமாகப் பிடித்திழுத்து படிக்கட்டில் கீழே தள்ளினான்.

முதிய தந்தை தங்குமிடத்துக்குத் திரும்பினார். மின்ஸ்கியின் மீது புகார் மனு அளிக்கும்படி அவருடைய நண்பர் அறிவுறுத்தினார். ஆனால் நிலைய அதிகாரி மறுத்துவிட்டதோடு, இனி இந்த விஷயத்தில் மேற்கொண்டு எதுவும் செய்யப்போவதில்லை என்றும் கூறினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் பீட்டர்ஸ்பர்க்கை விட்டுப் புறப்பட்டு ஊருக்குத் திரும்பிச்சென்று தனது வழக்கமான நிலையப் பணிகளில் ஈடுபடலானார்.

அவர் கதையின் முடிவுக்கு வந்தார். “இது மூன்றாவது வருடம். தூன்யா இல்லாமல், அவளைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாமல் நான் வாழ்ந்துகொண்டிருக்கும் மூன்றாவது வருடம் இது. அவள் உயிரோடு இருக்கிறாளா, இல்லையா என்பது அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும். எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. பயணிகளாக வரும் பொறுக்கிப்பயல்கள் மயக்கி வசப்படுத்தி, கொஞ்சநாள் அனுபவித்துவிட்டு பிறகு நிர்க்கதியாக விட்டுவிடும் பெண்களுள் அவள் முதல் பெண் கிடையாது. கடைசிப் பெண்ணும் கிடையாது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவர்களைப்போல ஏராளமான முட்டாள் பெண்பிள்ளைகள் உண்டு. இன்றைக்கு சாட்டினும் வெல்வெட்டும் உடுத்தியிருப்பார்கள். நாளை சாராயக்கடைகளின் தெருக்களில் மோசமான குடிகாரத் தறுதலைகளோடு திரிந்துகொண்டிருப்பார்கள். தூன்யாவும் அவர்களுள் ஒருத்தியாகக் கெட்டுச் சீரழிந்துவிடுவாளோ என்று நினைக்கும்போது, எனக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும் பரவாயில்லை, அவள் அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே செத்துப்போய்விடவேண்டும் என்று விரும்புகிறேன்.”

நிலைய அதிகாரியான என் நண்பர் சொன்ன கதை இதுதான். கதையின் நடுநடுவே பல தடவை கசியும் கண்களை மேலங்கியின் நுனியால் நாசுக்காகத் துடைத்தபடி சொன்னார். கதையைச் சொல்லும்போது கூடவே உள்ளேபோன ஐந்து கோப்பை மதுவும் துக்கத்தை அதிகமாகத் தூண்டிவிட்டிருந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தக் கதை என்னுடைய மனதின் அடியாழத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அவரிடமிருந்து விடைபெற்று வந்த பிறகும் வெகுகாலம் நிலைய அதிகாரியின் நினைவு என் மனதை விட்டு அகலவில்லை. அதைப் போலவே அந்தப் பாவப்பட்ட பெண் தூன்யாவையும் வெகுகாலம் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்தச் சிறிய ஊரின் வழியாக என் பயணம் அமைந்தது. சட்டென்று எனக்கு என் பழைய நண்பரின் நினைவு வந்தது. அவர் நிர்வகித்துவந்த நிலையம் இப்போது இல்லை என்று கேள்விப்பட்டேன். ‘அந்த முதிய நிலைய அதிகாரி இன்னும் உயிரோடு இருக்கிறாரா?’ என்ற என் கேள்விக்கு யாரிடமும் சரியான பதில் கிடைக்கவில்லை. நானே நேரில் சென்று விசாரித்து அறிந்துகொள்ளலாம் என்று முடிவுசெய்து பக்கத்து ஊரில் குதிரைகளை இரவல்பெற்று அவருடைய ஊருக்குக் கிளம்பினேன்.

அது ஒரு இலையுதிர்காலம். சாம்பல்நிற மேகங்கள் வானை மூடியிருந்தன. அறுவடை முடிந்த வயல்களினூடாகக் குளிர்க்காற்று வீசியது. உதிர்ந்த சிவப்பு மற்றும் மஞ்சள் இலைகள் காற்றோடு கலந்திருந்தன. நான் அந்தச் சிற்றூரை அடைந்தபோது மாலை நேரமாகிவிட்டது.

நான் நேராக நிலையத்துக்குச் சென்றேன். தாழ்வாரத்தில், முன்பொரு நாள் தூன்யா என்னை முத்தமிட்ட அந்த இடத்தில் ஒரு பருத்தப் பெண்மணியைச் சந்தித்தேன். என்னுடைய கேள்விகளுக்குப் பதில் அளித்த அவர், நிலைய அதிகாரி இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்றும் இப்போது அந்த வீடு தேறல் வடிப்பகமாக இருப்பதாகவும், தான் தேறல் வடிப்பவரின் மனைவி என்றும் சொன்னார். தேவையில்லாமல் ஏழு ரூபிள்களைச் செலவு செய்துவிட்டோமே, இங்கு வந்தது உபயோகமில்லாமல் போயிற்றே என்று என்னை நானே நொந்துகொண்டேன்.

“எதனால் அவர் இறந்துபோனார்?” நான் அப்பெண்மணியிடம் கேட்டேன்.

“குடிதான். வேறென்ன? பாவப்பட்ட தகப்பன்!” அவர் சொன்னார்.

“அவருடைய கல்லறை எங்குள்ளது?”

“ஊருக்கு வெளியே.. அவருடைய மனைவியின் கல்லறைக்குப் பக்கத்தில்”

“யாராவது எனக்கு அந்த இடத்தைக் காட்ட முடியுமா?”

“தாராளமாக. ஏ, வான்கா! பூனையோடு விளையாடியது போதும். இதோ, இந்தப் பெரிய மனிதரை கல்லறைத் தோட்டத்துக்கு அழைத்துச்சென்று, நிலைய அதிகாரியுடைய கல்லறை இருக்குமிடத்தைக் காட்டிவிட்டு வா!”

அப்பெண்மணியின் அழைப்பைக் கேட்டு, கந்தலாடையோடு செம்பட்டைத் தலைமயிரும் மாறுகண்ணுமாய் இருந்த சிறுவன் ஓடிவந்து கல்லறைத் தோட்டம் இருக்கும் திசையில் எனக்கு முன்னால் நடக்கத் தொடங்கினான்.

“இறந்துபோனவரை உனக்குத் தெரியுமா?” போகும் வழியில் அச்சிறுவனைக் கேட்டேன்.

“எனக்குத் தெரியுமாவா? அவர்தான் எனக்கு ஊதுகுழாய் செய்வதற்குச் சொல்லிக்கொடுத்தார். சாராயக்கடையிலிருந்து அவர் வெளியில் வரும்போது நாங்கள் எல்லோரும் அவர் பின்னால் ஓடிச்சென்று, “தாத்தா… தாத்தா… கொஞ்சம் பருப்பு கொடுங்க” என்று கேட்போம். அவரும் நாங்கள் கொறிப்பதற்குக் கொஞ்சம் பருப்புகளை அள்ளிக் கொடுத்துவிட்டுப் போவார். அவர் எப்போதும் எங்களோடு விளையாடுவார்.”

“இந்த வழியாகப் போகும் பயணிகள் யாராவது அவரைப் பற்றிக் கேட்கிறார்களா?”

“இப்போதெல்லாம் குறைவான பேர்தான் இந்த வழியாகப் போகிறார்கள். வரிவிதிப்பவர் எப்போதாவது இந்தப் பக்கமாகப் போவார். ஆனால் இறந்துபோனவர்களைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படமாட்டார். போன கோடைக்காலத்தில் இந்தப் பக்கமாகப்போன ஒரு சீமாட்டி பழைய நிலைய அதிகாரியைப் பற்றி விசாரித்தாள். பிறகு அவருடைய கல்லறைக்குப் போனாள்.”

“அவள் எப்படி இருந்தாள்?” நான் ஆர்வத்தோடு கேட்டேன்.

“மிகவும் அழகாக இருந்தாள். ஆறு குதிரைகள் பூட்டிய கூண்டுவண்டியில் வந்திருந்தாள். அவளோடு மூன்று குழந்தைகளும், ஒரு தாதியும் வந்திருந்தார்கள். கூடவே ஒரு சிறிய கருப்பு நாயும் இருந்தது. நிலைய அதிகாரி இறந்துவிட்டார் என்று சொன்னதுமே அவள் அழ ஆரம்பித்துவிட்டாள். பிறகு அந்தக் குழந்தைகளிடம், ‘இங்கேயே அமைதியாக உட்கார்ந்திருங்க. நான் கல்லறைக்குப் போய்விட்டு வருகிறேன்’ என்று சொன்னாள். நான் வழிகாட்டுகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவள், ‘எனக்கு வழி தெரியும்’ என்று சொல்லிவிட்டு, எனக்கு ஐந்து கோபெக் கொடுத்தாள். எவ்வளவு நல்ல சீமாட்டி!”

நாங்கள் கல்லறைத் தோட்டத்தை அடைந்தோம். திறந்தவெளியாக குறைந்தபட்ச மறைப்புமின்றி இருந்த அந்த இடத்தில் ஆங்காங்கே மரச்சிலுவைகள் நடப்பட்டிருந்தன. நிழலுக்கு அங்கே ஒரு மரம் கூட இல்லை. என் வாழ்க்கையில் அப்படிப்பட்ட மோசமான கல்லறைத் தோட்டத்தை நான் பார்த்ததே கிடையாது.

“இதுதான் நிலைய அதிகாரியின் கல்லறை” குவித்துவைக்கப்பட்டிருந்த மணல்மேட்டின் மீது தாவிக் குதித்தபடி சொன்னான் சிறுவன். மணல்மேட்டில் கருப்பு நிறத்தில் செப்பு உருவம் பொறிக்கப்பட்டிருந்த சிலுவை நடப்பட்டிருந்தது.

“இங்கேதான் அந்த சீமாட்டி வந்தாளா?” நான் கேட்டேன்.

“ஆமாம். நான் தூரத்திலிருந்து பார்த்தேன். அவள் இங்கேதான் இந்த மணல்மேட்டின் மீது படுத்துக்கிடந்தாள். ரொம்ப நேரம் அப்படியே கிடந்தாள். பிறகு அவள் ஊருக்குள் போய் பாதிரியாரை வரச்சொன்னாள். அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டாள். எனக்கு ஐந்து கோபெக்கும் கொடுத்துவிட்டுப் போனாள். எவ்வளவு நல்ல சீமாட்டி!” வான்கா சொன்னான்.

நானும் அவனுக்கு ஐந்து கோபெக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டேன். என் பயணத்தைக் குறித்தோ, ஏழு ரூபிள் செலவானதைக் குறித்தோ இப்போது என்னிடம் எந்த வருத்தமும் இல்லை.

1 நிலைய அதிகாரி (Station master or Postmaster) – 19-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் நெடுந்தொலைவு
பயணத்துக்கு குதிரை வண்டிகள் பயன்பாட்டில் இருந்தன. ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும்
பயணிகள் அந்த ஊரின் நிலையத்தில் பதிவு செய்த பிறகே பயணத்தைத் தொடரவேண்டும்.
பயணிகளுக்கு முறையான பயண அனுமதிச்சீட்டு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பதும், அதை
பதிவேட்டில் பதிவு செய்வதும், தேவைப்படுபவர்களுக்கு முக்கியமாக அரசு அதிகாரிகளுக்கு மாற்றுக்
குதிரைகளை ஏற்பாடு செய்வதும், பயணித்துக் களைத்தக் குதிரைகளுக்கு ஓய்வும் தீவனமும் அளித்து
அடுத்தப் பயணத்துக்குத் தயாராக வைத்திருப்பதும் நிலைய அதிகாரியின் பொறுப்பு. நிலைய அதிகாரி
24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்பதால் நிலையமே அவருடைய வீடாக இருக்கும்.


2 இளவரசர் வாஸம்ஸ்கி (1792-1878) – ரஷ்யாவின் பண்டைய ரூரிக் அரசவம்சத்தைச் சேர்ந்த
இளவரசரும், அற்புதமான கவிஞரும் ஆவார்.

3 ரஷ்யாவின் அரசு அலுவலர்கள் 14 வகுப்புகளாக வரிசைப்படுத்தப்பட்டிருந்தனர். பதினான்காவது
வகுப்புதான் கடைநிலை வகுப்பு.


4 சிமியோன் விரின் – கதையின் நாயகனான நிலைய அதிகாரியின் பெயர்.


5 கிபிட்கா – ரஷ்யாவில் குதிரைகள் இழுக்கும் கூண்டு வண்டியின் பெயர்


6 கேப்டன் மின்ஸ்கி – ராணுவ வீரனின் பெயர்


7 இஸ்மைலோவ்ஸ்கி பட்டாளம் – ரஷ்யப் பேரரசின் காலாட்படையைச் சேர்ந்த முதல்நிலை
பாதுகாப்புப் படைப்பிரிவின் ஒரு பகுதி.


8 அவ்தோட்யா செமியோனோவ்னா – தூன்யாவின் இயற்பெயர்.

*********

அலெக்ஸாண்டர் புஷ்கின் (1799 – 1837)

ரஷ்ய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமையான இவர் சிறந்த கவிஞர், நாடகாசிரியர் மற்றும் நாவலாசிரியர். அலெக்ஸாண்டர் புஷ்கின் நவீன ரஷ்ய இலக்கியத்தின் முன்னோடி என்று பெருமையோடு குறிப்பிடப்படுகிறார். உரைநடைக் கவிதை, வர்ணனைக் கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, கடிதங்கள் என இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் தனது முத்திரையைப் பதித்தவர். இவரது தனித்துவமான எழுத்தோட்டமும் யதார்த்தமான கண்ணோட்டமும் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கின. சொந்தப் பகை காரணமாக, பிரெஞ்சு ராணுவ அதிகாரியான ஜார்ஜஸ் டியாந்தஸ் உடன் இவரே ஏற்பாடு செய்த ஒற்றைக்கு ஒற்றை துப்பாக்கிச் சண்டையில் படுகாயமுற்று தனது 37-வது வயதிலேயே இறந்தார்.

புஷ்கினின் ‘நிலைய அதிகாரி’ சிறுகதை திரைப்படமாகவும் நாடகமாகவும் பலமுறை மறுவாக்கம் பெற்றுள்ளது.

 

Previous articleசல்பாஸ்
Next articleவீடு – நான்கு கவிதைகள்
கீதா மதிவாணன்
கீதா மதிவாணன் ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரத்தில் வசிக்கிறார். கீதமஞ்சரி எனும் வலைத்தளத்தில் தனது சிறுகதைகள், கவிதைகள், சூழலியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை எழுதி வருகிறார். இதுவரை ஒருநாள்(ஹென்றி லாசன் எழுதிய ஆஸ்திரேலியா காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பு) மற்றும் யுடா அகினாரின் மழை நிலாக் கதைகள் என்கிற ஜப்பானிய மொழிபெயர்ப்பு தொகுப்பும் வெளிவந்துள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.