6. காலம் எனும் மாயகண்ணாடி
நிஜம் என்னும் யதார்த்தத்தின் தளைகளைக் கடந்து போகவேண்டும் என்ற கனவே புனைவைப் பரிசளித்தது. புனைவு என்ற ஒரு வெளி தோன்றியதுமே, அதிலேறி காலத்தில் பின்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற கற்பனையே முதலில் வந்திருக்கக் கூடும் என்று கருதுகிறேன். மகாபாரதம் போன்ற புராணங்களிலேயே அத்தகைய புனைவுகள் தென்படுகின்றன. இன்று வரையிலும் கூட காலத்திலேறி பயணித்தல் என்ற செயல்பாடு ஆர்வம் குன்றாத பகுதியாக புனைவில் நிலைத்திருக்கிறது.
அறிவியல் புனைவுகள் மீகற்பனைகள் போன்றவற்றில் காலப்பயணம் என்பது தனித்துவமிக்க சுவாரஸ்யம் நிறைந்த ஒரு பரப்பு. யதார்த்தக் கதைகளில் கூட நினைவேக்கக் கதைகளுக்கென்று அதீத ஒதுக்கீடு இருப்பதுண்டு. அப்படி யதார்த்தக் கதைகளின் மூலம் நாம் நம் குழந்தைமைக்குச் சென்றுவருவதைப் போல, மீகற்பனையில் மானுடத்தின் கூட்டுமனம் நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் பின் செல்வதும், நாம் இதுவரை பார்த்திருக்காத வருங்காலத்தின் பள்ளங்களில் இறங்கிப் பார்க்கவும் முனைகிறோம்.
இயல்பாகவே காலத்தை நதி என்கிறோம், அதனாலேயே காலத்தைப் பின்னணியாகக் கொண்ட வாழ்வையும் நதி என்கிறோம். காலத்தை அம்பு என்கிறோம், நாம் சொல்லிவிட்ட சொல்லையும் அள்ள முடியாது என்கிறோம். இப்படி நமது ஒவ்வொரு நடத்தையிலும் காலம் ஊறுகிறது. அத்துடன் நாம் காலத்தைக் கண்டு கடுமையாக பயம் கொள்கிறோம். நம் வாழ்வென்னும் உறக்கத்திலிருந்து மரணம் என்கிற அலாரம் நம்மை எழுப்பிவிடுமோ என்ற பயத்துடனேயே தவித்தபடி இருக்கிறோம். மரணதேவனைக் கூட காலன் என்றுதானே வர்ணித்திருக்கிறோம், நம் தொன்மங்களில். இத்தகைய பழக்கப்பட்ட மனது இயல்பாகவே காலத்தைக் கண்டு சிலிர்க்கத்தான் செய்யும்.
திரைப்படங்களில் இன்னமுமே கவர்ச்சி குன்றாமல் பல புதிய கருத்தாங்கங்களும், புதிய மெய்யியல் கேள்விகளையும் கொண்ட காலப்பயணக் கதைகள் இந்த நூற்றாண்டிலும் வெளியாகி இருக்கின்றன. சென்ற நூற்றாண்டு இந்த காலப்பயண திரைப்படங்களுக்கான ஒரு தளத்தை அஸ்திவாரத்தை வலுவாக அமைத்தன என்று கொண்டால், இந்த நூற்றாண்டு அதை தனிப்பட்ட கதைகளுக்காக ஒவ்வொரு மானுடனுக்கும் அருகில் நுட்பத்துடன் ஒரு உருப்பெருக்கி கொண்ட காமிரா போல அமர்ந்து கொண்டு பேசும் படைப்புகளை உண்டாக்கியபடி இருக்கிறது.
காலப்பயணம் பற்றிய கட்டுரைகளில் தானாக ஒரு சுவாரஸ்யம் எழுந்து விடுகிறது, கூடவே தத்துவ மர்மங்களும். அதனால் இத்தகைய திரைப்படங்கள் மூளைக்கான புதிர் விளையாட்டுக்கள் என்றாகின்றன. உடனடியாக ஒரு பெரிய இரசிகக் கூட்டத்தை உருவாக்கும் திறன் இப்படித்தான் எழுகிறது.
இந்த கட்டுரையில் கடந்து இருபதாண்டுகளில் வெளியான முக்கியமான, அதே சமயம் வெவ்வேறு சுவாரஸ்யமான தளங்களில் தனித்து வெளிப்பட்ட ஐந்து திரைப்படங்களைப் பேசுகிறோம்.
Primer (2004) / Shane Carruth
நிகழ்காலத்தின் இருப்பில் இருக்கும் போதே, அப்புள்ளியிலிருந்து இறந்த காலத்திற்கு இடம்பெயர்வதற்கான ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை நண்பர்களது பரிசோதனைக் கூடம் ஒரு விபத்தில் கண்டறிந்து விடுகிறது. அது தற்காலத்தில் இருக்கும் முதல்நபருக்கு முன், ஆறு மணி நேரங்கள் காலக்கோட்டின் இறந்த காலத்தில் இருக்கும் நகல்நபரை முன்னிறுத்துகிறது.
இதை நேர்மறை எண்ணத்துடன் பயன்படுத்திக் கொள்ள அவன் முனைகிறான். தனது இருப்புநகல் நபரின் சிந்தனைக்கு குறுக்கீடு செய்வதாக இருந்து விடக்கூடாது என்பது அவன் தனக்கிட்டுக் கொண்ட முதல் விதி. அங்கிருந்து அவன் தனது நண்பனுடன், இந்த காலப்பயணத்தை விரிவு செய்து தானறிந்த அறிதல்களைக் கொண்டு, தன் நகல் நபரை பங்குச் சந்தை போன்ற நிதி நிறுவனங்களில் வெற்றிகரமான ஆளாக மாற்றுகிறான்.
மிகக் குறைந்த பட்ஜெட்டும் குறைவான படத்தின் நீளத்தையும் நம் விழியிலிருந்து மறைத்துவிடுகிறது கதையின் மையம். அறிவியில் வகுப்பினைப் போல கூர்ந்து கவனிக்க வேண்டிய கலைச்சொற்களும் நிறைந்திருக்கின்றன. ஷான் கார்ருத்தை மிக முக்கியமான ஒரு தனித்தன்மை கொண்ட இயக்குனராக முன்னிறுத்திய படம்.
Timecrimes (2007) / Nacho Vagilando
தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்துக்கொள்ளாதவன், எப்படி தன் தலையை வாரி, முகத்தை சீர் செய்து அழகாய் தோற்றமுறுவான். மெல்ல அவன் புறத்தை அகம் எடுத்துக் கொண்டால் என்னவாகும்.
காலத்தில் வளைவில் வேறுதிசை எடுத்து, அதிலிருந்து தானே தன்னைச் சந்தித்து திடுக்கிடும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஒரு சிறுபிழையின் துவக்கம் எப்படி பெரும்பிழைகளுக்கான தூண்டிலாகிறது. அப்பிழை ஒருவனை எப்படி ஊழின் விடாப்பிடியான கரங்களுக்குள் தள்ளி அவனை வதைக்கிறது.
ரேடியோவின் ஒரு அலைவரிசைக்குச் சரியாக மீட்டி வைக்கையில்தான் அந்த அலைவரிசை தெளிவுறக் கேட்கும். துல்லியத்துடனேயே அதிர்வுறும் காலப்பயணத்தில் நடந்தாக வேண்டி இருக்கிறது. அதன் விதிகளைச் சற்றே மீறி இளைப்பாறினாலோ, வேகம் கொண்டாலோ கடுமையான விளைவுகளைக் கடந்தாக வேண்டும். மெல்ல அதை ஒத்ததிர்வுக்குள் கொண்டுவர குற்றங்களின் துணையைத்தான் நாடவேண்டி இருக்கிறது. அதன் அந்தமோ தவிர்க்கமுடியாத பாழி.
Looper (2012) / Rian Johnson
வருங்காலத்தில் சர்வதேச கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு அணி இருக்கிறது. அவர்களுக்கு, ஒரு ஆளை தடயமின்றி தீர்த்துக் கட்ட வேண்டிய தேவை இருக்கிறது எனில், என்ன செய்யலாம், மிகவும் எளிய வழி அல்லது மிகவும் சுத்தமான கொலை முறை ஒன்று இருக்கிறது. அதுதான் காலப்பயணம்.
இறந்தகாலத்தில் இருக்கும் சிலரை, அவர்கள் ஒரு ஒப்பந்ததாரரின் மூலமாக கொலைப்பாதகப் பணிக்கு அமர்த்துகின்றனர். அவர்களே லூப்பர்கள். அவர்கள் முன், ஒரு குறிப்பிட்ட காலத்தில் முகக்கவசமணிந்த ஒரு நபர் மண்டியிட்ட நிலையில் தோன்றுவார். அவரைச் சுட்டு வீழ்த்திவிட்டு, அந்த உடலிலேயே கட்டிவைக்கப்பட்டிருக்கும் தனக்கான ஊதியத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
இந்த வெகு சுவாரஸ்யமான சாகசக் கதை, வெறும் சாகசமாக நின்று விடாமல் மரணம், தன்னிருப்பை பற்றிய கட்டுப்பாட்டை விழியறியா ஒருவன் கையில் (இறைவன் போன்ற தொனி கொண்ட) ஒப்படைப்பது போன்ற தத்துவ கேள்விகளையும் சவாலாக தன்னகத்தே எடுத்துக் கொள்கிறது.
காலச்சுழற்சி வட்டமாக ஆரம்பித்த இடத்திலேயே சென்று முடிவது என்ற வழமையான பயணத்தை வைத்துக் கொண்டு, அதில் தீவிர ஆழங்களுக்கும் சென்றுவிடாமல், அதை இலகுவான தேய்வழக்குகளால் நிரப்பியும் விடாமல் ஒரு சாகசக்கதை உருவாகி எழுந்திருக்கிறது.
Source Code (2011) / Duncan Jones
தன்னுணர்வுடன் கண்டறிந்து கொள்ள முடியாத ஓரிடத்தில் விடப்பட்டதும், அதை புரிந்து கொள்ள ஒரு மனிதன் எப்படி தன் புலன்களையும் அகத்தையும் பயன்படுத்தக் கூடும். ஒரு எட்டு நிமிட லூப்பில் பல முறை இறந்து இறந்து மீண்டும் அந்த இடத்திற்கே வந்து சேர்கிறான்.
வாழ்வின் ஒவ்வொரு நிழலிலும், பாவங்கள் செய்வதற்கேன்றே இளைப்பாறும் மனம், இன்னொரு வாழ்க்கை கிடைத்தால், அதைக் கொண்டு தன்னை ஈடேற்றிக்கொள்வேன் என்று தவிப்பது உலகளாவிய உணர்வு. அது இங்கு எட்டு நிமிட வாழ்வாகிறது.
ஒவ்வொரு வாய்ப்பிலும் முன்பை விட அதிகம் முன்னகர்கிறது அவனது கற்ற மனம். அந்த ஒவ்வொரு அடி நகர்வில் அவன் தனக்கான பிடிமானம், தன்னிருப்பிற்கான கேள்வி அல்லது அவசியம் ஏதென கண்டு கொள்கிறதும், அதைத் துரத்தி அடைவதும் சுவாரஸ்யமாகக் கொண்டு வரப்பெற்றிருக்கிறது.
ஏற்கனவே இந்த லூப் பற்றிய அற்புதமான கதை Groundhog Day வந்திருக்கிறது. ஆனாலும், இது தனது வேகமான கதைசொல்லல் முறையிலும் அதற்கு ஈடு கொடுக்கும் படத்தொகுப்பினாலும் வேறொரு இனிய அனுபவத்தைக் கொடுக்கிறது. அறிவியல் புனைவு என்ற பெயரில் பிரபஞ்சமே வெடித்துச் சிதறுவதாகவும், ஆயிரக்கணக்கான ரோபோக்கள் மனித வாழ்வை அச்சுறுத்தும் போரைத் தொடங்குவதாகவும், பிரம்மாண்ட பீலாக்கள் விட்டபடியே இருக்கும் ஹாலிவுட்டில் இத்தகையை ஐடியா சார்ந்த படங்களும் கவனிக்கப்படுவது ஆரோக்கியமானதே.
Predestination (2014) / Spierig Brothers.
Ethan Hawke–இன் வலுவான நடிப்பாற்றலை நம்பி, காலப்பயணத்தின் மிக ஆழமான கதையை முன்னெடுத்திருக்கிறார்கள். இன்று தொலைத்தொடர்களில் மிகவும் பிரபல்யமாக அறியப்பட்டு வரும் ஜெர்மன் நாட்டின் ‘டார்க்’ தொடரின் அத்தனை காலப்பயண யோசனைகளும், அதன் விளைவுகளும் இதில் ஓர்மையுடன் வந்துவிட்டன என திண்ணமாகச் சொல்லலாம். ராபர்ட் ஏ ஹேய்மேனின் சிறுகதை இதற்கு மூலமாக கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் குறித்து அறிமுகம் செய்ய வேண்டுமெனில், சாதாரணமாக இது எதிர்பாராத திருப்பங்களால் நிறைந்த படம் என்று சொல்லலாம். அதையும் தாண்டி ஒவ்வொன்றிலும் தானாய் நிரம்பி அத்தனையும் விரும்பியும் வெறுத்தும் தவிக்கும் இருமயத்தைச் சொல்லும் குறியீட்டுத் தன்மை கொண்ட படம் என்றும் குறிப்பிடலாம்.
பொதுவாக அறியப்பட்டிருக்கும் இதற்கு முந்தைய காலப்பயண சாகசத் திரைப்படங்களைப் போலவே இதிலும் ஒரு இயந்திரத்தோடு பயணம் நடக்கிறது. என்றாலும், கூடுதலாய் ஏதோ ஒரு தன்மையை படத்தின் ஒளியும் அமைப்புகளும் ஏற்படுத்தி கனவுத்தன்மையை அளிக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்தின் மாற்றத்தையும் ஒரே கண்களின் வழியே பார்க்கும் போது நிகழும் பரிமாணங்கள் ஊர்ந்து செல்லும் ஊர்களையும் நகர்ந்து செல்லும் நகரங்களையும் அதன் தகவமைப்புகளுடன் சேர்த்து படைத்திருக்கின்றன. இயக்குனர்களது முந்தைய படம் கவனிக்கப்பட்டிருந்த நிலையில் இதில் ஒரு முத்திரை வைத்து நகர்ந்தனர் எனலாம்.
- கமலக்கண்ணன்