ஒரு சிறு சொல்லும், ஒரு பெருஞ்சொல்லும்……. (ஸ்ரீ வள்ளி கவிதைகள் தொகுப்பினை முன் வைத்து)

நீ நான் எல்லாமே
பெயருக்கு முகாந்திரங்கள்
வாடாப் பூந்தோட்டம் போய்ப்
பூப்போம் வா”
– ஸ்ரீ வள்ளி

ங்கிருக்கும் ஒவ்வொரு உயிரியும் தன்னை ஒரு உயிராக உணரத் தொடங்கும்
நேரம் இயக்கமானது முழுமை பெறுகின்றது. அதன் வழியான தேடுதலும்
ஆரம்பமாகின்றது. தேடுதலில் கிடைத்தலும், கிடைக்கப் பெறாதலும் ஏக்கமாகி,
சரி செய்து கொள்ளும் விசாரணை முறையீடுகளாகத் தான் ஒரு கவிதை
பரப்பிலும், உயிரி இயங்குதலைக் கொள்கின்றது. இப்படியாகத் தான் நவீனக்
கவிதை செழுமையோடு, பன்பாங்கோடு விவாதிக்கப்படும் பல
மனோபாவங்களுக்கு உட்படுத்திக் கொள்கின்றது. ஒவ்வொரு படைப்பும் பற்பல
ஆசைகளும், நிராசைகளும் நிரம்பியது தான். இதில் கவிதைச்செயல்பாடுகள்
முழுமைப்படுத்திக் கொள்ளவே முயல்கின்றது. இதில், உன்னதம், கலைநுட்பம்,
என்றெல்லாம் பார்க்காமல் வாசிப்பனுபவமாகக் கவிதையை உட்கூறு செய்தல்
ஆழமான அர்த்தங்களைத் தரும் என்ற பார்வையில் அணுகுதல் தேவையாக
இருக்கின்றது. இங்குக் காட்சிப்பொருள்கள் அதிகம். அதில் விருப்பு, வெறுப்பு,
ஆசை, ஏக்கம், வலி, பரவசம், இடர் என்ற பகுப்புகளும் அதிகம். இப்பகுப்புகளைக்
கவிஞர்கள் வாசிப்பாளர்களுக்கும், தனக்கும் எப்படி அனுபவமாக
மாற்றுகின்றார்கள் என்பதே கவிதையின் மொழி. அது, தன்னுணர்வாக,
உரையாடலாக, அகமன, புறமன வெளியீடுகளாகப் பதிவு செய்து கொள்ளும் ஒரு
இலக்கிய வகைமையும் கூட.

சொற்களிலான செயல்பாடு மட்டுமே பல நேரங்களில் மனித மனங்களுக்கு
ஆக்கமாக அமைகின்றது.
எவ்வாறெனில்,

“மனம் எத்தனை பழைய இடம்
கதவு எத்தனை பழைய பாதுகாப்பு
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்
உருவம் எத்தனை பழைய நாடகம்”

இது போலத்தான் ஸ்ரீ வள்ளியின் கவிதைகளின் மனம் என்பது பழைய இடம் என்ற
ஒரு நிச்சயத்தைச் சுட்டுகின்றது. நிறைய அர்த்தங்கள் திரள்வதற்கான இடமும்
கூட. எல்லாவித மனங்களுக்கும் செயல் அடிப்படை. அது ஒரு மனத்தைப்
பழக்குதல். ஏன் மனத்தைப் பழக்க வேண்டுமென்று தோன்றினால்,
காலங்காலமாக மனித உயிரில் பங்கேற்றலையும், சிந்தித்தலையும்,
அறிதலையும் தருகின்றது. பழைய பாதுகாப்புக்குள் நம்மைப் பாதுகாத்துக்
கொள்ளும் இந்த உருவுக்குள் எத்தனை விதமான நிகழ்கலையான நாடகம்
அரங்கேறுகின்றது. அதற்குக் கவிதையெனும் மொழி எதார்த்தத்தை உருவாக்கி,
ஒரு ஒழுங்கமைவு செய்து கட்டமைக்கிறது. இங்கு, எல்லாமே ஆக்கப்படுத்துதல்.
ஸ்ரீ வள்ளியின் பார்வையில் மனம் பிரதானம். அதன் துணைவுகளான உடல்
சார்ந்த அனைத்தும் தினமும் மைய வெளிப்பாடுகள். இதனுள், மொழி பன்னூறு
உள்ளீடுகளைக் கொண்டது.

இதனைச் சரியான அணுகுமுறையோடு, வாசிக்கும் எழுத்தின் புரிதலோடு
ஸ்ரீவள்ளி கவிதைகளை நிகழ்கலையாக்குகிறார்.
அதனாலேயே,

“யார் என்ற உன் கேள்விக்கு
மறுமொழியை யார் தான் தரமுடியும்”

என்று கேட்டு பலரின் சிதறுண்ட கேள்விகளுக்கு புறரீதியாக யார் தான்
தரமுடியும் என வினவுவதில் நிறைய சாத்தியங்கள், காலங்காலமாக
மறைந்துள்ளன. ‘யார்’ என்பது மனித உயிரிக்கான ஓர் நிலைப்பொருள்.
அதிலிருந்து வாழ்வின் எஞ்சுதலும், இருத்தலும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
இப்படியாக ஸ்ரீ வள்ளியின் கவிதைத்தளம் அடிகொண்டு வேர் நீட்டிக்கின்றது.
இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளக் கவிதைமொழி தன்னைக் காட்சிக்குட்படுத்தும் ஒரு
மாயப் பொருள். அது வாசிப்பவருக்குப் பரவசமும் தரலாம். ஆற்றாமையும்
தரலாம். அது அவரவர் நிலைப்பாடு என்ற ரீதியில் மட்டுமே இதை அணுக
வேண்டியுள்ளது.

இந்த ‘யார்’ என்ற கேள்வி ஒவ்வொரு சூழலிலும் நகர்ந்துகொண்டே சென்று,

நாம் சென்ற இடத்தில்
கருத்த அடி கொண்ட வேங்கை மரங்களுமில்லை
அவற்றின் பூக்களைத் தேடி வரும்
கான மயில்களுமில்லை
நாம் நடந்த கடைத்தெருவோ
நிரம்பிக் கிடந்தது”

இக்கவிதை குறிப்பான ஒரு அரசியல் நிலைப்பாட்டினைப் பேசுகின்றது.
அரசியல் அடையாளங்கள் அதிகமாகக் கையகப்படுத்தியது நிலங்கள்.
நிலங்களின் மீதான அதிகாரத்தோரணை சாமானிய உயிரிகளின் மனப்பாடாக
வெளிப்படுவது தான் இந்த வரிகள். நிலமும், உயிரியும் பிரித்தறிய முடியாது
என்பது போல், அரசும் அதிகாரமும் தன் எல்லையை நேரம் வாய்க்கும்
போதெல்லாம் பிரகடனப்படுத்திப் பார்ப்பது தற்போது அன்றாடமாக மாறிப் போன
சூழலில் இங்கு எல்லாமே கோணலாக்கப்பட்ட உடற்குறியீடுகளாக உயிரிகள்
மாற்றம் கொண்டுள்ளன. இச்சாய்வுக் கோணத்தை நேர்க்கோணலாக்க ஒரு
வகையில் மொழி சாத்தியமானது தான். கவிதை அதனை உகந்த ஒன்றாக
மாற்றிக் கேள்வி கேட்க முனைகின்றது. அதனுள் ஒத்து வரக் கூடிய தன்மையும்,

ஒத்து வராத தன்மையும் இருக்கக்கூடுமென்றாலும், மனித மனத்தின் அலசல்
கவிதையில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். அதனாலேயே,

“இரைச்சல் ஓங்கிய சந்தையில்
கேட்கும் திசையை யார் தான் அறிவர்

என வினவ முடிகின்றது. கவிதையில் வெளிப்படும் கேள்வி எந்த
உள்நோக்கமுமில்லாத மனப்பதிவீடு மட்டுமே. தடையில்லாமல் சமூகப்
பார்வைக் கொள்ள படைப்பாளருக்குப் ‘புரிதல்’ மிகத் தேவையானது. சந்தையின்
கூட்டுக் குரல்களில் அடைபட்டுக் கிடக்கும் எளியவர்களின் நைந்த குரல்
தானாகவே மிகப்பெரும் சத்தத்திலிருந்து அறுந்து கொள்ளும். பின்பு,
குரல்வளையற்ற உடல் தான் உயிரியாக இங்குக் காலம் கடத்துகின்றது.
முழுமையாக்கப்பட்ட இணைப்புக் கோடுகளைக் கவிதையில் சொல்லுதல்
எதார்த்தமானது. இந்த உணர்வைப் பேதலித்த மனத்தின் அசௌகரியங்களைக்
கண்டது கண்டவாறு காட்சிப்படுத்தத் தான் வேண்டும். இப்பார்வைக் களத்தில்,

“மூச்சைத் திணறடிக்கிறது அன்றாடம்
மலையில்லாத பச்சையில்லாத
நீரோட்டமில்லாத
குருகில்லாத மீனில்லாத
பாதையில்
நீ வாகனத்தைச் செலுத்தும் போது
என்ன நினைக்க
என்ன தான் இருக்கிறது நினைக்க”

என்பதில் வருத்த தொனி தெரிந்தாலும், அழுத்தமான இதற்கெல்லாம் யார்
காரணம்? என்ற அழுத்தமும் வெளிப்பட்டுள்ளது. நீர்நிலை, வனம், இயற்கையை
அழித்தல் என்ற அரசியலைக் கவிதையாக உணர்த்துகின்றது. சமூக
தன்னுணர்வாக, சிக்கலாக என்னதான் இருக்கிறது நினைக்க எனத் தானே கேட்டு

சுமையை இறக்கி வைக்க எதார்த்தம் முன்னிற்கின்றது. இது, தற்பொழுதுக்கான
தேர்ந்த அரசியலை வலிமையாக எடுத்துரைப்பது மனித உயிரிகளிடத்தில்
தோன்றும் சமூக உணர்வுகளை மௌனிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட,
வெளிப்படுத்துதலை விரும்பாத தகர்க்கக்கூடிய பூதாகார நடைமுறைச்
சிக்கல்கள் மிக அதிகம். மூச்சைத்திணறச் செய்யும் நாட்பொழுதுகளில் நிலம்
தன்னிலையழிந்து ஒதுக்குற்றுக் கிடப்பதை முதன்மையான தன்னுணர்வாகக்
காட்டுகின்றார்.
இப்படியாக, நகரும் ஸ்ரீவள்ளி ஒரு மனப்பிடித்தத்தைத் தன் கையிலேற்றுகின்றார்.
அதில், உடலில் பதிந்துவிடும் அல்லது வெளிப்பட்டு விடும் சிறியதொரு குறிப்பு
அன்பை நிகழ்த்திச் செல்கின்றது. ஒரு அன்பைத் தொட்டு உணர்ந்து கொள்ளல்
அவ்வளவு எளிதல்ல. இரு பிரதிநிதிகளின் ஒட்டுதல், வெட்டுதல், சேர்த்தல்
என்பதற்கான கவன ஈர்ப்பினை, மனதின் அலைதல்களை நிகழ்த்தும்
சொற்கூட்டத்தில் ஸ்ரீவள்ளியின் கூற்றுப்படி சிற்றிலைக்கட்டுவதும், சிதைப்பதும்,

“குதூகலித்தலும் அழிதலும்
கைவிடப்பட்டுக் கிடத்தலும்
மறுபடியும்
எப்போதும் எதுவுமே முதன்முறை அல்ல”

என்பதில் ஆண், பெண் என்ற கட்டுப்பாட்டிற்குள் அடங்காத இரண்டு பிரம்மாண்ட
மன உருக்களின் பதிவீடு புரிதலாக்கப்பட்டுள்ளது. வாழ்தலும், பிரிதலுமான
மாற்ற இயலா இயங்கியலுக்குள் மகிழ்தல், மறைதல், நிராகரிக்கப்பட்டுக்
கிடத்தல், போன்று நிகழ்வது முதன்முறை அல்ல. இது தொடர் நிகழ்வு. இந்த
விளையாட்டில் அனுசரணையான மனநிலை மட்டுமே சம்பந்தப்பட்டவர்களைச்
சமன்படுத்துகின்றது. அந்தச் சமன்படுத்துதல் சற்று ஆசுவாசப்பட்ட நிலையில்,
எதையும் ஏந்திக் கொள்ளும் மனநிலையில் சில நிகழ்வுகளை ஜீரணித்துக்
கொள்ளும் மனநிலையில்,

“இரு துளிகள் விழுகின்றன
உண்மைக்காக ஒன்று

பொய்க்காக ஒன்று
இரண்டில் ஏதோ ஒன்றை
அந்தக்கரம் ஏந்தும் போது
அதில் நான் பொதிந்திருப்பேன்”

எனச் சொல்லி வகைப்படுத்திவிட முடியாத அன்பினுள் கொண்டு நிறுத்துகின்றது.
தன்னிலை, பிறனிலை, மேம்பட்ட நிலை எனப்பகுப்பித்துப் பார்க்கும்
மனநிலையுள், அன்பெனும் மையல் நிஜமும், மாயமுமான ஒரு கண்ணாடி தான்.
அதனாலேயே,

“உன் முன்னால் நான் ஒரு கண்ணாடி
நீ உன் கையை
அசைக்கிறாய் என்னில் அது அசைகிறது”

என்று கவிதை மொழி அமைகின்றது. இதில், மொழி தான் சேர்மானம். மொழி
தான் தனித்தாளுதல். இரு உயிரிகளின் சொல்லுறவு என்பது வாசிப்பவரின்
அனுமானத்திற்கு விடப்படுகின்றது. அவ்வளவே,
இந்நாளான பொழுதுகளில் ‘சந்தித்தல்’ ஒரு அழகான சொல். யார், யாரை,
எப்போது எவ்வேளையில் அது நடக்குமென்பது நிர்மாணிக்கப்பட்ட வரைபடங்கள்
அல்ல. மாறாக, ‘ஒப்புதல் அளித்துக் கொண்ட நம்பிக்கைகள். ஒரு
திட்டமிடப்படாத பயணக்குறிப்பின் வழுவழுப்பான பாதைகளைச் சந்திப்புகள்
நிகழ்த்தும், ஆழமாகச் சுவாசிக்கும் நிகழ்கணம். மனதில் நிறை, குறைகளாகச்
சேகரிக்கப்பட்ட நான், நீ என்ற உருக்களின் சமரசம், கோபம் வெளிப்படும்
ரகசியக்காப்பு பத்திரங்கள், தொடர் சந்திப்புகளில், உரையாடல்களில் எத்தனை
கதைகள் உருவாகும் என்று யாருக்குத் தெரியும். ஸ்ரீ வள்ளியின் யார்? என்ற ஒரு
கேள்வி இங்கு நிச்சலனமாகப் பொருந்திப் போகின்றது.

“நாம் சந்திக்கத் தான் போகிறோம் விரைவில்
அது எதேச்சையாக நடப்பதைப் போல்

பொன்காலைப் பொழுதில் நடக்கும்
கூழாங்கற்களைக் கரைகளுக்குப் பரிசளிக்கும்
ஒரு சிற்றாற்றில்
ஒரு பாறை மேல் தூண்டில்களோடு
அருகருவே சமர்வோம்”

அப்படி அமர்ந்து உரைத்தலுக்கான களங்கள் அன்பு, பகிர்தல், மகிழ்தல், கைப்பற்றி
இளைப்பாறல் எல்லாமே சிக்கலும், தீர்வுமான விசாரணைக்குட்பட்டதும்,
சாதாரணமானதுமாக நிகழும் தருணங்கள். அதன் வழியிலான தொடர்
பயணத்தில் சொற்களை இணைக்கும் ஸ்ரீவள்ளி ஒரு காட்சியினை, ஒரு
நிகழ்ச்சியினை பெருங்கணங்களாக மாற்றி கவிதையை அனுபவமாக்குகின்றார்.
எந்த முற்றுப்புள்ளியற்ற மனித உயிரிகளின் கலத்தல் மனநிலை. உடலின் மெய்
உணர்வுகளைத் திருப்பிவிடும் எதார்த்தம் அது. என்ன மாதிரியான
வெளிப்படுத்தல். கவிதையில் ஒரு பூ தான் காட்சிப்பொருள்.

“சூரியகாந்திப் பூக்களின் தோட்டத்துக்கு முன்
அவள் நிற்கிறாள்
அவன் தோட்டம் அது
ஒரு பூ சாலையை நோக்கி
வளைந்து திரும்பியிருக்கிறது
————
————-
பூவுக்குள் நுழைகிறாள்
மாலையில் அவன் வரும்போது
ஒருத்தியை நினைவுபடுத்தப் போவது

யதேச்சையானதல்ல”

எனச் சொல்வதில் நினைவு தொடர்ந்துசெல்வது, உரையாடலின் நீட்சி
வலுப்படுத்தப்பட்ட நம்பிக்கை, ததும்பும் சிலிர்ப்புகள் இவையெல்லாம்
உயிரிகளுக்கு ஏற்றவை. இருளும், வெளிச்சமும் உணர்வதில் தான் அந்தந்த
நிமிடத்துக்கான அனுபவம் என்பதை விவரணைப்படுத்துவதில் இவ்வரிகள்
பொருத்தப்பாடுடையவை.
நினைவினுள் நினைத்து நினைத்துப் பார்க்கும் ஐந்நிலத்தின் புழக்கப்பாடுகள்.
நிலங்கள் எப்போதும் பாதையைத் தான் காட்டும். நிலமும், உயிரியும் ஒன்று தான்
அது தான் வாழ்க்கை. காதலுக்கும் அது தான்.
அதனாலேயே,

“காதலில் இருப்பதென்பது
பாதையாக இருப்பது

எனச் சொல்ல முடிகின்றது. இப்படியாகத் தன்னை நீள் ஆட்சிக்குள் உட்படுத்தும் கவிதை மொழி
காலமாற்றத்தில் கூட்டு மனங்கள் சேர்ந்திசைத்த தேவைப்படும் அனுபவ
சாராம்சமாகப் பொருத்திப்பார்க்கத் தொடங்குகின்றது. இங்கு, எல்லாமே
விரும்பத்தக்க தேவைக்கான வடிவ உள்ளீடுகள் மட்டுமே. ஒவ்வொரு உயிரியும்,
ஒவ்வொரு சூழலில் ஒருவரிடம் ஒப்படைத்தலை
செய்துகொண்டுதானிருக்கிறது. அது விரும்பத்தக்க ஒப்படைப்பாக மாறும்போது
வாழ்க்கை கலையாகின்றது. மொழியே கலை. கவிதைகளில் அதுவே வழிந்து,
துடைத்து பின் வழிந்து நிலத்தில் ஈரமாகின்றது. மனித உயிரிகளின்
போர்த்தப்பட்டிருக்கும் காலத்தில் ஈரமென்பது, விரிந்துகொண்டு தானிருக்கும்.
ஸ்ரீவள்ளியின் கூற்றுப்படி

“ஒரு காலத்தில் எத்தனை காலத்தை
பார்க்க முடிகிறது?

அதைப் பொறுத்தே
திறக்கப்படுகின்றன கதவுகள்”
என்பது மட்டுமே விஷயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.