நினைப்பில் நானொரு ஓவியன்
முன்பே சொல்லி இருக்கிறேன் அல்லவா?
நிஜத்திலும் நானொரு ஓவியனாகி இருந்தால்
என்னவெல்லாம் வரைந்திருப்பேன்??
முதலில் என் பொம்மையாய் வரைந்து தள்ளி இருப்பேன்…
அதில் எனக்கு ஒற்றை றெக்கை பூட்டி இருப்பேன்…
தலையில் சேவல் கொண்டை தரித்திருப்பேன்…
அன்றி, ஒரு தவளைக்கு என் தலையைப் பொருத்திப் பார்த்திருப்பேன்…
சொந்த மூக்கை இன்னுங்கூட பெரிதுபடுத்தி இருப்பேன்…
பருவம் பூத்த போது எனக்குச் சொன்ன
பாலியல் கதையில் வரும் நீ….ள ஆண் குறியைப் போல
எனக்கும் ஒன்றைச் சமைத்து அதைத் தோளில் போட்டுக் கொண்டு
சாவகாசமாய் நடந்திருப்பேன் –
அச்சமயம் மென் காற்று தீண்டச் சொகுசாகும்
என் குதத்தின் பாவனையை ஓவியத்தில் கொண்டுவரப் பார்ப்பேன்.
கோபம் முட்டும் போது அதேகுறியை அறுத்தெறிவது போலவும்
ஓர் ஓவியம்…
நான் காகம் நிறைய வரைவேன்…
எனக்குப் பிடித்த தவிட்டுக் குருவிகளையும்…
மிகவும் நைஸான கறுப்புத் தோளை எனக்குப் போர்த்திக் கொள்வேன்…
யானையைச் சின்னதாக்கிக் கொள்வேன் குட்டி பப்பி சைஸில்
பிறகு பன்றியை நேசிக்கும் மனிதர்களைப் படைப்பேன்….
என் அம்மாவைப் பெருச்சாளி
தின்பது போல் வரைந்திருப்பேன்…
அது யாராக இருக்கக்கூடும் என்று ஊகித்திருப்பேன்…
நானும் என்னை அன்னை ஆண்டாளும்
கைகோர்த்து ஆடும் நான் கண்ட கனவினைத்
தாளில் வார்த்து சட்டகம் போடுவேன்…
அதில், என் தோளிலும் அவள் தோளிலுமாய்
அமர்ந்திருக்கும் ரெண்டு பச்சைக் கிளிகளின்
வதனப் பச்சையை இஷ்டத்துடனே
இருவர் முகங்களிலும் அப்பிக் கொள்வோம்…
மறவாமல் ரெண்டு பேர் மார்பிலும் தலா ஒரு மாலை சுமப்போம்;
யாருக்காக..?
நான் மரத்தில் காய்த்துத் தொங்கும் குழந்தைகள் செய்வேன்…
கை, கால்கள் பூட்டி நடக்கும் மரம், செடி, கொடி, பழம் பண்ணுவேன்..
ஆலிஸை எனக்குப் பிடிக்கும்,
அரூபமாகி ஒரு குறிக்குள் புகுவேன்….
அங்கே போன பின் ஒரு தோற் கரும்பு உண்டு பண்ணி
அவளுக்கு உச்சமேற்றுவேன்…
என் வாய்க்குள் பிறன் கரும்பின் இனிப்பு புதைவது போல்
ஒன்று வரைந்து ரகசியமாய் வைத்துக் கொள்வேன்…
பிறகு நாலு கால், கைகள் வேண்டும் எனக்கு…
பிறகு நான் நாமமோ எதுவோ தரித்துக் கடவுளாகுவேன்…
யாருக்கு நான் வரந் தருவது.. என்ன தருவது…. என்பதைத்
தீவிரமாய் யோசித்து நேரம் போக்கும் கடவுள்தான் நான்
என்பது நான் வரைய நினைக்கும்
ஒரு கேலிப்படத்தின் உள்ளடக்கம்.
எனக்கு அரசு தந்த சைக்கிளையும்,
நான் சம்பாதித்து வாங்கிய வெஸ்பாவையும்
ஒரே சமயத்தில் ஓட்டுவது போல் வரைந்து
ரெண்டுக்கும் என் லட்டு என்று பெயரிடுவேன்…
மூக்கின் நடுச்சரத்தில் நண்டொன்றைப்
புல்லாக்கு போல் மாட்டிக் கொண்டு
ஒரு புஸ்டி உடல் கட்டையும் ஒரு நோஞ்சான் தேகத்தையும்
கற்பனை செய்வேன் அது கலீஜாய் இருக்குமா??
எனக்கொரு மீனின் ரவுண்டு கண் இருந்தால்,
எனக்குக் கைச்சட்டையில் செதில் இருந்தால்,
எனக்கொரு கழுதைக் குறி இருந்தால்,
எனக்கொரு முந்தைய வாலிருந்தால்
எனக்கு முற்றும் போது அழுத்தவென ஒரு பருவ முலை
தேவையின் போது மட்டும் முளைத்தால்…
நான் நட்சத்திரம் பார்த்து வந்தால்…
பீ வண்டாகி அதை உருட்டிக் கொண்டு போய்
பத்திரமாய் சேமித்துவிட்டுத் திரும்பினால்…
பிடிக்காதவரை ஓவியத்திலாவது நாலு சாத்து சாத்தி, மிதித்தால்
மேலும் எதுவும் காணாது மறைந்த
என் பாட்டிக்கோர் உயிர் தருவேன் நான்.
அன்றி, அவள் இழந்த பருவக் கணவனை மீட்டுத் தருவேன்.
அக்கணவனைக் கொன்று போட்ட அவன் பங்காளிமார்களை
மிகுத்திரு பாட்டியார் வதம் செய்வது போல் வரைவேன்.
சாராயத்தில் அவருக்குக் கலந்து கொடுத்த
விஷம் வாய்க்குள் போகும் போது
அஃதொரு தேளாகி, எனினும் சமத்தாகி,
சிரித்து எதுவும் பண்ணாமல்
அவர் மறு வாயின் வழியே நோகாமல் பிரசவிப்பது போல்
ஒரு புராணம் பண்ணுவேன்…
எருமை பலி தந்து – பன்றியைக் குத்திப் போட்டுக்
கூந்தல் அலைய அலையப் பம்பை உடுக்கை அடிக்க
ஆடி ஆடி ஓய்ந்து ஓய்ந்து, அவர்களை வணங்குவேன்…
எதுவும் பேசாத என் அம்மாவை கொற்றவை ஆக்குவேன்.
எங்கள் பால்யத்தில் வருசமெல்லாம் நாசியிலேறி தவிக்கச் செய்த
பொதுக்கழிப்பறையின் மல வாசத்தை அள்ளி
அதிகாரிகள் முகத்தில் பூசுவேன் தீரா வன்மம் கொண்டு.
பிறகு நான் தரிப்பேன் வள்ளலார் போலொரு வெள்ளுடை.
பிறகு நான் தரிப்பேன் ஒரு சமணனைப் போல் ஒரு நிர்வாணம்…
பிறகோ நான்: ஜோதியில் எரிவேன்…
கடலினில் ஆழ்வேன்…
கைலி கட்டி, கையில் வீணையுடன், தாடி வைத்துச்
சட்டையில்லாமல் ஒரு புதுச்சாமியார் நான்…
அப்போது வரும் அமைச்சன் என் காலில் விழுவதைக் கண்டு
நாசமாய்ப் போவாய் என்று நிஜ வாக்கு சொல்லுவேன்…
பிறகாவேன் ஒரு சிட்டுக் குருவி
பிறகாவேன் ஒரு சந்தனக் காக்கை
பிறகாவேன் ஒரு தைல மரம்
பிறகாவேன் ஒரு மனத்தக்காளிக் கொத்து
பிறகாவேன் நாவல் தனிப்பழம்
பிறகாவேன் ஆற்றின் அடிமணல் நைஸ்….
மற்றும் பிறகும் ஆவேன்
நானொரு ஈறிலியாய்…
(ஓவியர் நடேஷ் முத்துசாமிக்கு)
கவிதை அருமையாக அமைந்துள்ளது.கொஞ்சம் பகடியாய் நிறைய நன்மக்கள் வெளிப்பட்டுள்ளது..நல்லது 😅