இடம் : பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம்
கதாபாத்திரங்கள் : மோகன், மதிவாணன், ஒரு பெரியவர்
காலை நேரம் .
பேருந்துகளின் வகும் போகும் இரைச்சல், பேருந்து பிடிக்க நிற்கும் பயணிகளின் பேச்சு. வேறு வாகனங்களின் தொடர்ந்த இரைச்சல். கையில் சாப்பாட்டு பொட்டலங்களுடன் பனியன் கம்பனிக்குப் போகத் தயாராக மோகன், மதிவாணன் மற்றும் சிறுவர்களும் பெரியவர்களும்.
மோகன்: மதி என்ன யோசனை திடீர்ன்னு ..
மதிவாணன் : ரெண்டு நாள்லே ஸ்கூல் ஓபன் ஆகுது
மோகன்: ஸ்கூலுக்குப் போகணும்கற கவலையா
மதிவாணன் : கவலையில்லடா… முடிவு பண்ணனும்.
மோகன் : என்ன முடிவு
மதிவாணன் : ஸ்கூலுக்குப்போறதா இல்லே பனியன் கம்பனிக்குப் போறதான்னு
மோகன் : நான் பனியன் கம்பனிக்குத்தா. நான் முடிவு பண்ணிட்டேன்
மதிவாணன் : எனக்குக் குழப்பம். முடிவு பண்ண்னும்.
மோகன் : என்னடா குழப்பம். வாராவாரம் சனிக்கிழமையானா சம்பளம்.சினிமா பாக்க காசு கெடைக்குது, அதுவும் புது சினிமா பாக்கலாம்.சாயங்காலமானா புரோட்ட , தோசைன்னு ருசியாத் திங்கலாம். மதியம் போண்டா, காலையிலே மாலையிலே டீ, காப்பின்னு…….வூட்லே யாரும் திட்டறதில்லே.
மதிவாணன் : இதுவே போதுங்கறையா.ஸ்கூல் லீவ் வுட்டப்போ சுரேஷ் வந்து கேட்டான். சும்மாதானே இருக்கே. வாடா பனியன் கம்பனிக்குப் போலாம். லீவுலே யூனிபார்ம், புக்ஸ், நோட்ஸ் வாங்கப் பணம் சம்பாதிச்சிருவே வீட்லயும் பாரமா இருக்க வேண்டாமே. கம்பனிகளே ஆளு வேணுமுன்னு நான் வேலை செய்யற கம்பனியில் சொன்னாங்க. வர்ரியா. லீவ் கழிஞ்ச மாதிரியும் இருக்கும். வாடான்னான். சேந்தன்.
மோகன் : அதுக்கென்னடா. நல்லாத்தானே போயிட்டிருக்கு,
மதிவாணன் : நல்லாத்தா போயிட்டிருக்கு. ருசியா ஓட்டல் சாப்பாடு சாப்படறம், ஞாயித்துக்கெழமின்னா புதுப்படம்… வேலை செய்யறப்போ டேப்லே பாட்டுக, காமடி ஓடுது கேட்க முடியுது,பெண்ணுகளெ வேடிக்கை பாக்கறம்.
மோகன் : ஆமா அதுக்கென்ன
மதிவாணன் : அம்மா கூட ஜாம் ஜாம்ன்னு ஸ்கூல் தொறக்கறப்போ செல்வு பண்ணலாம். புது யூனிபார்ம், புக்ஸ்ன்னு சொன்னாங்க,,கலெக்டர் ஆபீசிலே இருந்துச் சோதனைக்கு வந்தப்போ வெளியே நம்மளெத் துரத்துனாங்க .ஓடி ஒளிஞ்சம். அதுதா வேடிக்கையா இருந்துச்சு. பதினஞ்சு வயசுக்காரங்கதா வேலை செய்ய முடியும்ன்னாங்க. நமக்கு இன்னும் பதினஞ்சு ஆகலையே
மோகன் : ஆமாமா .
மதிவாணன் : ( தனக்குள் ) குழந்தைத் தொழிலாளின்னு பேரு. தொழிலாளியா இருக்கறது கேவலமில்லெ. ஆனா படிக்கிற வயசிலெ வேலை தேவையா. மருத்துவர், பொறியாளர்ன்னு கனவெல்லா மனசிலெ இருக்குது. அதெல்லாம் படிச்சாதா முடியும். அதிக சம்பளம் வரும்… இல்லேன்னா படிச்சிட்டு வியாபாரம் கூடப் பண்ணலாம்..இப்பவே தொழிலாளியா ஆயிடுறதா.
மோகன் : என்ன மறுபடியும் கற்பனை பண்ண ஆரம்பிச்சிட்டியா ..மதிவாணன் : எதுக்காப்பலே இருக்கற போர்டெப்பாரு. அபதுல்கலாம்., அம்பேத்கார் தெரியறாங்க. அவங்கெல்லா படிச்சு பெரிய தலைவர்கள் ஆனாங்க. சாதாரணமா இருந்தா இப்பிடி போர்டிலே வருவாங்களா படிப்பில்லாமெ உயர முடியுமா இந்த சம்பளத்தெ வெச்சுட்டு வாழ்க்கையை ஓட்டணுமா. அப்பா சரிம்பார். ஆனா..
மோகன் : அப்போ குழப்பத்திலெதா இருக்கே. எனக்கெல்லா குழப்பம் இல்லடா. என்னதா படிச்சாலும் இந்த வேலைக்குத்தா வரப்போறம். படிப்பு கஷ்டமா இருக்கு. வாத்யார் கிட்ட அடி உதை வாங்க வேண்டியிருக்கு. பீஸ், புக்ஸ்ஸ்ன்னு வீட்லே பணம் வாங்கறப்போ சிரமமா இருக்கு.அதெல்லாம் நெனச்சா எதுக்குப் படிப்புன்னு இருக்கு. நாம காலேஜ் போயி படிக்க முடியுமான்னு தெரியலே. எப்பிடியும் நிக்கப்போறம்..
மதிவாணன் : அதுக்காக இப்பிடயே இருக்கணுமா . யோசிக்கறன்.
(பேருந்து ஒன்று வந்து நிற்கும் சப்தம், தபுதபுவென்று பலர் இறங்குவது ஏறுவதில் இரைச்சல்)
. மோகன் : கூட்டந்தா . பஸ்ல கூட்டமாத்தா இருக்கு .முண்டி அடுச்சு ஏறிட்டுப் போயிடலாம்
மதிவாணன் : அடுத்த்திலெ போலாம். இன்னம் நெறைய் பஸ் வருமே.
(அவர்களின் அருகில் வந்து நிற்கிறார் ஒரு பெரியவர் . கன்னங்களில் ஒடுக்கம், முகத்தில் சவரம் செய்யப்படாமல் அடர்ந்த மயிருடன் இருக்கிறார்)
பெரியவர் : தம்பி இது நல்லூர் போகுமா
(அருகில் இருக்கும் பனியன் கம்பனிக்குப் போகும் சிறுவர்களைக் கேட்கிறார் அவர்கள் பேருந்தில் முண்டியடித்து ஏற முயற்சிக்கிறார்கள்..பேருந்து விறுக்கென்று கிளம்பிச் செல்கிறது.இன்னொரு பேருந்து வந்து நிற்கிறது )
பெரியவர் : என்னப்பா இது நல்லூர் போகுமா?
(சிறுவர்களைக் கேட்கிறார் அவர்கள் பேருந்தில் முண்டியடித்து ஏற முயற்சிக்கிறார்கள்.)
பெரியவர் : சொல்லுங்கப்பா . இது நல்லூர் போகுமா?
ஒரு சிறுவன் : யாருக்குத் தெரியும் எங்களுக்குப் படிக்க வராதே. உங்களுக்கு..
( விழிக்கிறார் பெரியவர் )
பெரியவர் : தம்பிகளா இது நல்லூர் போகுமா?
ஒரு சிறுவன் : வேற யார்கிட்டையாச்சும் கேளுஙக ..ச்சை..
பெரியவர் : சின்னப்பசங்களா இருக்கீஙக. இது கூடப்படிக்கத் தெரியாதா.
ஒரு சிறுவன் : இவ்வளவு பெரியவரா இருக்கிங்க . இது கூடப்படிக்கத் தெரியாதா உங்களுக்கு..
( நாலைந்து சிறுவர்கள் சிரிக்கும் சபதம் .பெரியவரின் முகம் கறுக்கிறது. முகத்தை துண்டால் துடைக்கிறார். ..பேருந்து கிளம்பிச் செல்ல ஆயததமாகிறது. மோகன், மதிவாணன் இருக்கும் இடத்திற்கு அவர் நகர்கிறார்,,. )
பெரியவர் : தம்பிகளா இது நல்லூர் போகுமா. இந்தக்கிளம்பர பஸ்..
மோகன் : இந்த பஸ் நல்லூர் போகாதுஙக அய்யா
மதிவாணன் : நெமபர் தெரியுங்களா ,,
பெரியவர் : நெம்பரேப் பாத்தா அடையாளம் தெரிஞ்சிக்குவேன் எழுத்தேப் படிக்கத் தெரியாது.
மதிவாணன் : நெமபர் தெரியும். எழுத்துத் தெரியாதுங்களா ?
பெரியவர் : ஆமாப்பா . படிக்கலே
மதிவாணன் : ( தனக்குள் ) இவ்வளவு வயசாகியும் படிக்கத்தெரியாமெ ஒவ்வொருத்த்ர் கிட்டையும் கேட்டு அவமானப்படறார். படிப்பு இருந்தா இந்த வயசிலெ அவமானம் தேவையில்லெ. நாமளும் சரியாப் படிக்காட்டி, நல்லாப் படிக்காட்டி இந்த நெலமைதானா. எதுவும் படிக்காமெ இருந்தாலும் அவமானப்படனும். நல்லா படிக்காமெ இருந்தாலும் அவமானப்படனும். .வாழ்க்கை முழுக்க நல்லா அவமானப்படணும் . நல்ல படிப்புதா தலை நிமிர்ந்து நிற்க வைக்கும்.. படிப்புதா முக்கியம். நல்ல படிப்பு நல்ல மனிதனாப்பண்ணும்.உயர்ந்த மனிதனாப்பண்ணும். இப்பிடியே வாழ்க்கையை ஓட்டணுமா இந்த வயசிலெ இந்தப் பெரியவர் எவ்வளவு அவமானப்படறார். படிக்காததுனாலத்தானே. இது மாதிரி தினந்தோறும் அவமானப்படுவாரில்லியா , அவமானம்படவேண்டியிருக்கும்
மோகன்: டேய் மதி இந்த பஸ்சும் போகுதடா . வா முண்டி அடுச்சு ஏறிக்கலாம் .
மதிவாணன் : வேண்டாடா ( மெல்ல நடக்க ஆரம்பிக்கிறான் )
மோகன் : எங்கடா போறெ..( வேறொரு பேருந்து வந்து நிற்கிறது )
மதிவாணன் : பெரியவரே..இந்த பஸ் நல்லூர் போகுங்க ..மெல்ல போய் ஏறிக்குங்க .
( மதிவாணன் மெல்ல நடக்க ஆரம்பிக்கிறான் )
மோகன் : எங்கடா போறெ ( மதிவாணன் மெல்ல நடக்கிறான் )
மோகன் : எங்கடா போறெ.. கத்தர்ன்ன்ல்லே
மதிவாணன் : ஸ்கூலுக்கு
மோகன் : ஸ்கூல் தொறக்கறதுக்கு ரெண்டு நாள் இருக்கே
மதிவாணன் : ஆமாமா. ஸ்கூலுக்கு போறண்டா . வேலைக்கு போக வேண்டாம்ன்னு..
( மதிவாணன் விரைசலாய் நடக்க ஆரம்பிக்கிறான் . மோகன் ஸ்தம்பித்து நிற்பது போல் இருக்கிறான். பெரியவர் தட்டுத்தடுமாறி பேருந்தில் ஏறுவதைப் பார்க்கிறான்.)
-சுப்ரபாரதி மணியன்