பார்வதி குட்டி -சாம்ராஜ் -சிறுகதை

கார்மேகம் பார்வதிகுட்டியை முதன்முதலில் பார்த்தது  ’ஒரு ஓனம் ராத்திரி’ என்ற மலையாளப் பட சூட்டீங்கில்தான். அவர் ஷேத்ராடனம் போல இடையிடையே ’தீர்த்தாடனம்’ போவதுண்டு. அப்படி போகையில் தற்செயலாய் கோவளத்தில் இரனியல் கோலப்பனை பார்த்தார். கோலப்பன், கார்மேகம் சென்னை வரும்போது பலதும் செய்து கொடுப்பவன் “முதலாளி முதலாளி” என ஒவ்வொரு வரி தொடக்கத்திலும், முடிவிலும் சொல்வான். உண்மையில் முதலாளிதான். மதுரையின் பெருந்தனக்காரர் சா.வி.கிருஷ்ணசாமியின் ஒரே புத்திரன். திரையரங்குகள், மில்கள், தோப்புகள், கல்விநிறுவனங்கள் என ஏராளமாய் உண்டு. கூடவே பணக்கார புத்திரனுக்குண்டான எல்லா போக்கிரித்தனங்களும் உண்டு. கிருஷ்ணசாமியால் அவரை திருத்த முடியவில்லை. கல்யாணம் திருத்தும் என்றார்கள். இரண்டு பிள்ளைகள் ஆகியும் நாகஜோதி (பரளி ஆ.ந.வி.ப. ராமசாமியின் மகள்) ராத்திரி பண்ணிரண்டு மணி வரை விழித்திருந்தும் கார்மேகத்தின் வண்டி இரண்டு மணிக்கு குறைந்து யூனியன் கிளப்பிலிருந்து புறப்பட்டது இல்லை.  போதையில் அவர் வண்டி லாவகமாய் திரும்புவதை தமுக்கம் முக்கில்  ராத்தங்கும் சின்னாயி வீட்டுக் கழுதைகளூம் சிலையாய் அமர்ந்திருக்கும் சங்கரதாஸ் சுவாமிகளும் நாள் தவறாது பார்ப்பார்கள்.

சா.வி.கிருஷ்ணசாமி தனக்கு நன்டகொடை கொடுத்ததை பற்றி மார்த்தாண்டம் சுந்தரம் பிள்ளை தன் நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். கார்மேகம் தன்னைச் சுற்றியிருக்கும் அடிபொடிகளுக்கு மாத்திரமே ஏதேனும் தாரை வார்ப்பார். மதுரையில் கூடுதலாக வெயில் இருப்பதாக கருதினாலோ அல்லது மலையாள மழை பார்க்க வேண்டுமென தோன்றினாலோ வண்டி ஆரியங்காவு கடக்கும். அப்படியொரு யாத்திரையில் கோவளத்தில் கோலப்பன் வாயில் துண்டின் முனையை கடித்தபடி ஓடி வந்தான் “அண்ணா எந்தானு இங்கோட்டு ஒரு யாத்ரா”

கார்மேகம் அவனை உற்று நோக்கினார் போதையில் கண் கூசியது. கடல் பகலில் மின்னிக் கொண்டிருந்தது, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கட்டடங்கள் தெரிந்தன. கடற்கரையில் ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது “என்னடா விசேஷம்” என்றார்

“ஒரு மலையாளப் படம் அண்ணா”

“என்ன படம்டா?”

“’ஒரு ஓணம் ராத்திரி’ போனவருஷம் செம்மீன் எடுத்தாங்கல்ல…அவங்க ப்ரொடெக்‌ஷன். அச்சுதன் நாயரும் ரோசியும் நாயகன் நாயகி ஆயிட்டு. இப்போ இஙகதான் ஜோலி”

“ம்..,ம்”

“அண்ணா சாயங்காலம் அங்கோட்டு வரணும். நல்ல அயிட்டங்கள் உண்டு”.

’அயிட்டத்தை’ அழுத்தி உச்சரித்தான். கார்மேகம் பதில் பேசாமல் விடுதிக்குள் போனார்.

ரிசப்சனில் யாரோ மலையாளத்தில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள். தன் அறைக்கதவை திறந்தார் கூட்டாளிகளுக்கு வேறு அறை. அவர் எப்பொழுதும் தனித்தே தங்குவார். எதிலும் ஒன்றாய் புழங்குவதில் அவருக்கு விருப்பமில்லை. தவிர்க்க முடியாத சூழலில் முதலாளாய் முடித்துக் கொண்டு வேட்டி மாத்திரம் கட்டிய வெற்று உடம்போடு தன் அறைக்கு திரும்புவார்.

அறையில் கடற்காற்று காலண்டரை இடம், வலமாக ஆட்டிக் கொண்டிருந்தது. அதனுள் இருக்கும் முண்டணிந்த மலையாளப் பெண்ணும் காற்றின் சொல்படி கேட்டுக் கொண்டிருந்தாள். வெளியே காக்கைகள் வேகமாக பறந்து கொண்டிருந்தன. அப்பா உடல்நலம் இல்லாமல் இருப்பது ஞாபகம் வந்தது அலமாரியை திறந்து பாட்டிலில் இருக்கும் மீதத்தை கிளாசில் கவிழ்த்துக் கொண்டார்.

சாயங்காலம் கோலப்பனே வந்து கூட்டிக்கொண்டு போனான். கார்மேகமும், தவசியும் மாத்திரமே போனார்கள். ஜமால் வரவில்லை என அறையிலேயே படுத்துக் கொண்டார். இருவரும் செல்வாக்கில் கார்மேகத்தை விட் எவ்வகையிலும் குறைந்தவர்கள் அல்ல.

பரபரப்பாய் வேலைகள் நடந்து கொண்டிருந்தன “அத எடுத்தோ வேகம், வேகம் லைட்டு போகுனு” எங்கும் சத்தம். கட்டம் போட்ட முண்டும் ஜாக்கெட்டும் அணிந்த பெண்கள் அந்த பக்கம் கூட்டமாய் அமர்ந்திருந்தார்கள். கோலப்பன் சாயா கொண்டு வந்து கொடுத்தான் “அண்ணா அங்க உட்கார்ந்திருக்கார்ல அவர்தான் அச்சுதன் நாயர். இங்கோட்டு இருக்கினது ரோசி” மீசையை பென்சிலால் தீட்டியது போல முஸ்லிம் கெட்டப்பில் அமர்ந்திருந்தார் அச்சுதன் நாயர். தவசி ரோசியிடமிருந்து பார்வையை விலக்கவில்லை. ரோசி இவர்களை பார்த்து ஏதோ சொல்லி சிரிப்பது போல் கார்மேகத்திற்கு தோன்றியது. கார்மேகம் வேறு பக்கம் பார்வையைத் திருப்பினார். கட்டம் போட்ட முண்டுகளின் கூட்டம்.

சடாரென மழை பெய்ய ஆரம்பித்தது இவர்கள் உட்கார்ந்திருந்த பெரிய துணிக் குடை நோக்கி முண்டணிந்த பெண்களில் சிலர் வந்தனர். ரோசியும், அச்சுதன் நாயரும் காரை நோக்கி நடந்தார்கள்.

கொஞ்ச நேரம் கழித்துதான் கார்மேகம் கவனித்தார் தன் அருகே நிற்கும் பெண்ணை. நெஞ்சுக்குள் ஏதோ பகீர் என்றது மதியம் அறையில் காற்றில் ஆடிய காலண்டர் பெண் போலவே அசப்பில் இருந்தாhள். ஒரு கணத்தில் தூரத்தே நடந்து போகும் நாயகியை காட்டிலும் அழகாக இருந்தாள். கோலப்பன் வினாடியில் கவனித்துவிட்டான். தவசி பார்வையால் குதறிக்கொண்டிருந்தார்.

பார்வதிக்குட்டி கார்மேகத்தின் பார்வையை கவனித்துவிட்டாள். ஏஜெண்ட் வக்கச்சன் தான் அவளை கூட்டிக் கொண்டு வந்திருந்தார். நெய்யாற்றங்கரையை அடுத்து ஊர். அப்பா விவசாய கூலி. ஆனால் வேலை வருடம் முழுவதும் இருக்காது. இவளுக்கு கீழ் இன்னும் மூவர். வக்கச்சன் அவள் அம்மையிடம் வாக்களித்திருந்தார் “மூணு வேளை ஊணு,  திவசத்துக்கு கூலி,  பின்ன வல்ல சான்ஸ் கிட்டியால் கேரி பிடிச்சு நாயகியாய் போகானல்லே”.  நாயகிக்குப் பின் மீன் கூடையோடு நிற்பதுதான் பல நாள் வேலை. இவளை பல காட்சிகளில் மாற்றி, மாற்றி நிறுத்தினார்கள் நால்வர் மாத்திரமே நிற்கும் காட்சிகளில் இவளை வேண்டாம் என்றார்கள். ரோசி சேச்சி மற்ற பெண்களோடு பேசுவது போல் இவளுடன் பேசுவதில்லை. அச்சுதன் சேட்டன் இரண்டொருமுறை சிரித்திருக்கிறார். மற்றொரு நடிகரான ரஞ்சன் மாஷே எப்பொழுதும் சிடுசிடுப்பாக. பார்வதிக்குட்டிக்கு ஊருக்கு போகலாம் என்றிருந்தது. வீட்டில் கஞ்சியே என்றாலும் சந்தோஷமாக குடிக்கலாம். அதுவும் இன்றைக்கு மிகவும் கூனிக்குறுகி போய்விட்டாள். அச்சுதன் சேட்டன் பணம் கொடுப்பது போல காட்சி, ரோசி சேச்சி தோழியரில் ஒருவர் வாங்க வேண்டும். இயக்குநர் இவளை வாங்க சொல்லி இருந்தார். அந்த காட்சியில் ரோசி சேச்சி கிடையாது. தற்செயலாக வந்தவள் மேனேஜர் ஜேக்கப்பிடம் ஏதோ கேட்க இவளை மாற்றி சுபைதாவை வாங்க சொன்னார்கள். பார்வதிக்குட்டிக்கு மிகவும் அவமானமாய் இருந்தது. உடனே ஊருக்கு போய்விட வேண்டுமென நினைத்தாள். கையில் பணம் இல்லை ஷாட்டில் இல்லாத மற்ற  பெண்களோடு அமர்ந்தவள் தூரத்தில் அலையில் விளையாடிக் கொண்டிருக்கும் குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கோலப்பன் அருகில் வந்து அமர்ந்தார். சுருக்கமாக பேசினார். அவளுக்கு யாரையோ பழிவாங்க வேண்டுமென தோன்றியது. ஒருமுறை நிமிர்ந்து கார்மேகத்தை பார்த்தாள் அவர் அங்கிருந்து இவளையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்களை தாழ்த்திக் கொண்டாள்.

ராத்திரி கோலப்பனே வந்து அழைத்துக் கொண்டு போனான். அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து ரெண்டு தெரு தள்ளியிருந்தது அவள் போன விடுதி. படிக்கட்டில் ஏறும்பொழுது ரூம்பாய் நிமிர்ந்து பார்த்தான். பிறகு இவர்கள் கடந்து போனார்கள் என்றே தெரியாத பாவனையில் ஜாடியில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தான்.

ஜமாலுக்கும் தவசிக்கும் ஏற்கனவே தெரிந்ததுதான். எப்பொழுதும் முதல் பூசை கார்மேகத்திற்குத்தான். கார்மேகம் தன் அறையில் கட்டிலில் வெற்று உடம்பாய் அமர்ந்திருந்தார். “அண்ணா அப்ப நான் காலையில் வரேன்” என்றபடி உள்ளே நுழையாமல் கோலப்பன் வேகமாக புறப்பட்டுப் போனான்.

கார்மேகம் அவளை வா என்று சொல்லவில்லை. கிளாசை எடுத்து ஸ்டூலில் வைத்தார் “குடிப்பியா” என்றார். இவள் தலையை வேகமாக இல்லையென்று அசைத்தாள் ஒன்றும் பேசவில்லை. கடல் அலையின் சத்தம் துல்லியமாய் கேட்டது. பார்வதிக்கு தன் நாய் குட்டனுடைய ஞாபகம் வந்தது. சத்தமில்லாமல் அழ ஆரம்பித்தாள். திடுக்கிட்டவராய் கார்மேகம் நிமிர்ந்து பார்த்தார்.

“ஏன் அழுகிற”

“இதொன்னும் எனக்கு பழக்கமில்லா”

“இது எல்லாரும் சொல்றதுதான்”

“சத்தியம் நா ஆதியமாய்ட்டு சினிமாயில் அபிநயிக்காந்தன்னே வீட்டிலின்னு இறங்கியது”

“எதுக்கு அழுகிற?”

“எண்ட பட்டி குட்டனோட ஓர்ம வந்து”

கார்மேகத்திற்கு சம்பந்தமில்லாமல் தன் மகள் ஞாபகம் வந்தது.

“கோலப்பன் எவ்வளவு சொன்னான்”

“நூறு”

கார்மேகத்திடம் முன்னூறு சொல்லியிருந்தான். கார்மேகம் எதோ தோன்றியவராக “ஏங்கூட வர்றியா” என்றார்

“எவிட”

“மதுரைக்கு”

“வந்து?”

“வந்து இரு”

பிறகு இருவரும் ஒன்றும் பேசவில்லை. கார்மேகம் சன்னல், கதவுகள் எல்லாவற்றையும் சாத்தினார். அவர் கட்டில் மேல் படுத்தார். இவள்; நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தாள். திடீரென யாரோ கதவை தடதடவென தட்டினார்கள். உட்கார்ந்தவாறு தூங்கிக் கொண்டிருந்தவள் பதற்றத்தில் நாற்காலியில் இருந்து கீழே விழப்போனாள். கார்மேகம் நிதானமாய் எழுந்து வேட்டியை இறுகக் கட்டியவாறு அவளை சைகையில் இரு என்று சொல்லிவிட்டு கதவை திறந்து வெளியே போனார்.

வெளியே ஒரே சத்தமாய் இருந்தது. தவசியும், ஜமாலும் இப்பவே அனுப்பு என்றனர். கார்மேகம் இன்று முடியாது நாளைதான் என்றார். ஜமால் தாழ்வாரத்தின் ஓரமாய் போய் புகை பிடித்தார். தவசி  அவர் அருகே போனார் இருவரும் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டார்கள். வரந்தாவின் கடைசியில் மாத்திரமே விளக்கு எரிந்தது. மற்ற இடங்கள் இருளாய் இருந்தது. இருவரும் கார்மேகத்தின் அருகே வந்தனர். “சரி நாளைக்கு விட்டுரணும் கார்மேகம். இது நல்லாயில்ல”

”ம்ம்”

இருவரும்  தங்களது அறைக்குள் நுழைந்து மடாரென கதவை சாத்தினர். இருவரும் எப்பொழுதும் தங்குவது ஒரே அறையில் தான்.

கார்மேகம் அறைக்குள் வந்தார். பார்வதிக்கு ஓரளவு வெளியே நடந்தது புரிந்திருந்தது. கார்மேகம் சிகரெட் பற்ற வைத்தார். சிகரெட்டை கையில் பிடித்தவாறு வெளியே போனவர் பத்து நிமிடம் கழித்து உள்ளே வந்து அவளிடம் “ கீழே ஒரு கருப்பு அம்பாசிடர் கார் நிக்கிது.  டிக்கியை திறந்து வெச்சிருக்கேன். அதில ஏறி உட்கார்ந்து பூட்டிக்க”

பார்வதி குட்டி ஒன்றும் பேசாமல் இறங்கிப் போனாள். டிக்கி கதவை மூடுகையில் கடற்கரையில் சூட்டிங் நடப்பது தெரிந்தது. கதவை கீழே விட்டாள் இருட்டியது.

கார்மேகம் எதிர்பார்த்தது போல தவசியும், ஜமாலும் மறுபடியும் வந்தார்கள்.

“என்ன மாப்ள எங்க குட்டி”

“போயிட்டா”

“இது என்ன நியாயம். நீர் மாத்திரம் செய்வீரு நாங்க விளக்கு புடுச்சுகிட்டு உட்கார்ந்திருக்கணுமா”

“ஜமால் பார்த்து பேசு”

கோபத்தில் ஜமாலுக்கு மூச்சிறைத்தது. தவசி மேசையை மெல்ல விரலால் தட்டிக் கொண்டிருந்தார். “புத்திசாலித்தனமா செஞ்சுபுட்டீக” என்று மாத்திரம் சொன்னார். கார்மேகம் சட்டையை போட்டார். “எங்க மாப்ள கிளம்பிட்டீக” என்றார் தவசி

“டீ குடிக்க”

“நாங்களும் வரலாமில்ல” .

கார்மேகம் யோசித்தார். வாங்க என்றார்.

ரோட்டில் ஒரு ஆள் இல்லை தலையில்  சிவப்பு துண்டோடு லோடு இறக்கி கொண்டிருப்பவர்களிடம் கேட்டார்கள் “நேரே போயி வலத்தோட்டு திரும்பு” என்றார்கள்.

வலது பக்கம் ஒரு சாயாக் கடை திறந்திருக்க. லாரிகளும் சில கார்களும் நின்றிருந்தன. மூவரும் டீயை வாங்கிக் கொண்டு கடையின் கீழ் இறங்கி நின்றனர். தவசி எங்கோ டூர் போய் திரும்பும் மலையாள குடும்பத்தின் தலைவியை ஆராயத் தொடங்கியிருந்தார். கார்மேகம் “வண்டி ரோட்டு மேல நிக்குது கீழ இறக்கி போடுறேன்” என்றபடி காரை நோக்கி நடந்தார். காரில் ஏறியவர் கியரை மாற்றி ஓட்ட ஆரம்பித்தார். முதலில் தவசிதான் கவனித்தார். “டேய் வண்டியை விட்டுட்டாருடா” “இதுல எதோ கோளாறு இருக்கு” என்றார் ஜமால்.

வண்டி நெய்யாற்றங்கரையை தாண்டிய பொழுது நிறத்தி டிக்கியை திறந்தார். “வா வந்து முன்னால உட்காரு” என்றார். சேலையை சரி செய்தவாறு கிழே இறங்க எத்தணித்தவள். வெளியே தெரிந்த கோயிலை பார்த்தவுடன் படக்கென டிக்கிக்குள் ஒடுங்கியவாறு “அய்யோ இது என்ட ஊராக்கும்” அதுதான் அவள் கடைசியாய் நெய்யாற்றங்கரையை கண்டது.

பார்வதியை மதுரையில் லாட்ஜில் தான் மூன்று நாட்கள் தங்க வைத்திருந்தார் கார்மேகம். சாப்பாடு கொண்டு வந்து தருகிற பையன் வழி அது அவருடைய லாட்ஜ் என தெரிந்து கொண்டாள். ஜமாலும், தவசியும் இரண்டாம் நாள் கார்மேகத்தோடு வந்திருந்தனர். வெளியே நின்றிருந்த ஜமாலின் கண் இவள் அறைக்குள்ளே இருந்தது. கார்மேகம் மேனேஜரோடு பேசிக் கொண்டிருக்கையில் ஜமால் இவள் ஜன்னலருகே நின்றவாறு யாரிடமோ சொல்வது போல. “இவர கல்யாணம் பண்ணா ரெண்டாந்தாரமான்னு கூட உறுதியா சொல்ல முடியாது. என்னோட வந்தா பொண்டாட்டி” என்றார். அது அவளுக்கு ஏற்கனவே தெரிந்த்து தான் கார்மேகம் எல்லாவற்றையும் ஓளிவு மறைவு இல்லாமல் அவளிடம் சொல்லியிருக்கிறார். அன்றைக்கு சூட்டிங்கில் மழையில் அவள் கண் கலங்கி நின்ற தருணம் தன் வாழ்க்கையில் ஒரு பொழுதும் மறக்க முடியாதென.

அழகர் கோவிலில் வைத்து கல்யாணம் நடந்தது. கூடிப்போனால் பத்து ஆட்கள். ஐய்யர் கார்மேகத்தை பவ்யமாய் வரவேற்றார். தல்லாகுளத்தில் மூக்கபிள்ளை தெருவில் பழைய அம்பலக்காரர் வீட்டில் அவளை குடியமர்த்தினார். அவருடைய கைத்தடி சண்முகம் அங்குதான் குடியிருந்தான். பாதுகாப்பிற்கும் ஆச்சு என கணக்கிட்டிருந்தார்.

தெருவில் அவரோடு காரில் ஏறப் போகும் பொழுதோ இறங்கி நடந்து வரும் பொழுதோ (கார் வர முடியாத அளவுக்கு சிறிய தெரு) மலையாளத்தி, மலையாளத்தி என காதில் விழுந்து கொண்டு இருக்கும் முப்பத்தைந்து வருடாமய் கேட்டுக் கொண்டேயிருக்கும் வசவு அது. துணி வெளுக்கும் சின்னக்குட்டிதான் அவளுக்கு எல்லா விஷயங்களையும் சொல்வாள். மூத்த தாரம், அவர்களின் வீடு, குழந்தைகள் படுத்த படுக்கையாயிருக்கும் மாமனாரென.

மூத்த தாரத்திற்கு இரண்டு பெரிய பையன்கள் இருந்தார்கள். அழகர் கோயில்,  தியேட்டர் என எல்லா இடத்திற்கும் காரை அனுப்பி அவளை வரச் சொல்வார். எல்லா இடத்திலும் கண்கள் அவளை விரட்டிக் கொண்டேயிருக்கும். காழ்ப்புணர்வான கண்கள் மலையாளத்தி, மலையாளத்தி என. ஒரு முறை தியேட்டரில் இவர்கள் படம் பார்க்க போனபோது. மூத்த தாரத்தின் மகன் தற்செயலாய் வந்தவன் இவளை பார்த்ததும் காரித் துப்பிவிட்டு போனான். மாமனார் இறந்த வீட்டிற்கு இவள் கைக்குழந்தையோடு போனபோது பெரும் ரகளையானது. மூத்த தாரத்தின் உறவினர்கள் இவள் வரக்கூடாது என ஆர்ப்பாட்டம் செய்ய, கார்மேகம் ”அவ அப்படித்தான் வருவா” என்றார். மூத்தவன் அவரை அடிக்க வந்தான். அவன் அம்மா ஒரு ரூமுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள். மூத்தவனை யாரோ இழுத்துக் கொண்டு போனார்கள்.

கோலப்பன் வழி வக்கச்சனை வரவழைத்து வீட்டிற்கு நல்லதொரு தொகை கொடுத்தார் கார்மேகம். அம்மா, அப்பாவை பதினைந்து வருடம் கழித்து அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு கண் ஆப்பரேசன் பண்ண வந்தபொழுதுதான் பார்த்தாள். கூட வந்த பக்கத்து வீட்டு சரோஜா சேச்சிதான் அவர்கள் சொன்ன சொற்ப தகவலை வைத்து இவர்கள் வீட்டை கண்டுபிடித்தாள். இவள் பிள்ளைகள் மூவரையும் அப்பா, அம்மா அப்பொழுதான் பார்க்கிறார்கள்.. அம்மா இவள் தலையை வருடிக் கொடுத்தபடி மலையாளத்தில் ஏதோ கேட்க இவள் தமிழிலே பதில் சொன்னாள். மூத்தவனுக்கு மாதவன் என்றும் இரண்டாமவனுக்கு மாமனார் பேரான கிருஷ்ணசாமி என்றும் மகளுக்கு யசோதா என்று பெயரிட்டிருந்தார்கள். (யசோதா என்ற பெயரில் ஏற்கனவே ஒரு தியேட்டரும் இருந்தது) மகன் மாதவன் பெயரில் தியேட்டர் கட்ட பொன்மேனியில் இடம் வாங்கி போட்டிருந்தார்.

பார்வதி குடியிருந்த வீட்டின் முகப்பில் ஸ்தாபிதம் 1939 என போட்டிருக்கும். (இதை வெகு பின்னால்தான் பார்வதி படிக்கிறாள்.) அதிலுள்ள 3 காலப்போக்கில் சற்று சரிந்து 199 என்று தகவல் சொல்லிக் கொண்டிருந்தது. கார்மேகத்தின் சாம்ராஜ்யமும் ஆட்டம் கண்டிருந்தது. நகரில் புதிய ஏசி தியேட்டர்கள் வரத் தொடங்க இவர்களின் தியேட்டரில் கூட்டம் குறையத் தொடங்கியது. செகண்ட் ரிலீஸ், பழைய படங்கள் என  தத்தளித்து கொண்டிருந்த்து

கார்மேகம் ஐயப்பன் கோயில் போயிருந்த சமயம் இவருக்குத் தெரியாமல் மேனேஜர் மலையாள பிட் படம் ஒன்று ஓட்ட அதன் பெயரில் போலீஸ் இவரை அரெஸ்ட் செய்ய தேட மலையிலிருந்து திரும்ப முடியாமல் மாலையையும் கழற்ற முடியாமல் கூடுதலாய் ஒரு மாதம் ஐயப்ப சாமியாகவே தலைமறைவாய் திரிந்தார். மூத்த தாரமும் மகன்களும் பல இடத்திற்கு இவரை நுழைய விடாமல் தடுத்தனர். (போலீஸ் தேடுதலுக்குபின் மகனின் கை இருப்பதாக தவசி அவரிடம் சொன்னார்) அற்வே அந்த வீட்டிற்கு போவதை நிறுத்தினார். என்றைக்காவது போதை கூடுதலாகும் பொழுது பார்வதியிடம் “நம்ம புள்ளைகள நல்லா வளக்கணும்னு நெனச்சேன்” மாதவன் டாக்கீஸ்க்கான இடமெல்லாம் எப்பொழுதோ விலையாயிருந்தது. ஆலத்தூர் வயலிலிருந்து வரும் நெல்லினால் சாப்பாட்டுக்கு சிக்கல் இல்லை. அம்பலக்காரர் வீட்டை எப்பொழுதோ வாங்கிப்போட்ட்தால் குடியிருப்பும் பிரச்சனை இல்லை. செலவுகளூக்கு எதையாவது விற்றுக்கொண்டிருந்தார் கார்மேகம்

பிள்ளைகள் வளர்ந்திருந்தனர். பையன்கள் இருவரும் ஓரளவுக்கு படிக்க மூன்றாமவள் யசோதாவுக்கு அறவே படிப்பு வரவில்லை பேருக்கு பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தாள். தன் அதிகபட்ச செல்வாக்கை பயன்படுத்தி இரண்டாமவனுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கினார். மூத்தவன் தொழில் செய்கிறேனென்று சென்னையில் அப்பாவை பிரதியெடுத்தான்.

மகள் யசோதா பின் வீட்டு ஆறுமுகம் மகன் சீனியோடு ஓடிப்போனாள்;. “உன்ன மாதிரிதான அவ இருப்பா” என அம்மாவின் முகத்திற்கு இரண்டாமவன் நேரே    சொன்னான். கார்மேகத்தின் கார் இன்னும் தாமதமாக யூனியன் கிளப்பிலிருந்து புறப்பட்டது.

இரண்டு மாதம் கழித்து இருவரையும் பெங்களுரில் வைத்து கண்டு பிடித்தார்கள். இருதரப்பும் பேசி ’வெட்டி’விட்டார்கள். பார்வதி யசோதாவுக்கு உடனே கல்யாணம் செய்ய வேண்டுமென்றாள். கேரளாவில் ஒன்றும் அமையாமல் கடைசியாக பெல்லாரியில் ஒரு மாப்பிள்ளையை கண்டு பிடித்தார்கள். மாப்பிள்ளை டாக்டர். பின் வீட்டு ஜன்னலை ஏக்கமாக பார்த்தபடியே கணவனுடன் காரில் ஏறிப்போனாள் யசோதா.

போன முதல் நாளிலிருந்தே கணவனுடன் பிரச்சனை பயங்கரமாய் குடிக்கிறான் என்றும் அடிக்கிறான் நிறைய பொம்பளை தொடர்பிருக்கிறது என்றும் ”உன் புருசன் தேடின மாப்பிள்ளை அவரமாதிரிதான இருப்பான்” என்றும் அம்மாவிடம் போனில் சொல்லி அழுதாள்.

மகன்கள் அப்பாவோடு பேசுவதில்லை  யசோதா தல்லாகுளம் பெருமாள் கோவில் லவுட் ஸ்பீக்கர் அலறும் ஒரு காலைப் பொழுதில் ரிக்ஷாவில் வந்து இறங்கினாள் தெருவே பார்த்தது. ”இனி அவனோடு வாழவே மாட்டேன்” என்று மறுபடியும் ஜன்னல் திறந்து பின் வீட்டை பார்க்க ஆரம்பித்தாள்.

கார்மேகம் யூனியன் கிளப் செல்வதையும் நிறுத்தி வீட்டின் பின் பக்கத்திலேயே உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தார். மூத்தவன் சென்னையிலிருந்து வரும் நாட்களில் அவர் வைத்திருக்கும் சரக்கின் அளவு  குறைந்தது. மூத்தவன் அங்கு யாரோடோ தொடுப்பிலிருக்கிறான் என்றார்கள். இரண்டாமவன்  மதுரை அரசு மருத்துவமனை டீனுடைய  மகளை காதலிக்கிறான் என்றும். அந்த வீட்டில் ஒத்துக் கொள்ளைவில்லை என்றும் அரசல் புரசலாய் காதில் விழுந்தது.

அவர். பின் பக்கத்து முருங்கை மரத்தின் கீழ் புகைத்துக் கொண்டிருந்த காலை பொழுதில் டீன்  இவர் வீடு தேடி வந்தார். சம்பிரதாயமில்லாமல் தொடங்கினார் “உங்க மகனைத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறா. தூக்க மாத்திரையை சாப்பிட்டு” அவரிடம் கேட்காமலேயே சிகரெட் எடுத்துக் கொண்டார். “நா எவ்வளவோ சொல்றேன் வேணாம்னு. உங்களுக்கு தெரியும் அய்யர் பங்களா வீடுன்னா (அவர் மூத்த தாரத்தின் வீடு) “நா கண்ண மூடிகிட்டு சரின்னுடுவே” ஒன்றும் பேசாமல் தன் ஷூவை பார்த்துக் கொண்டிருந்தவர். சடாரென எழுந்தார் “நீங்கதா உங்க மகனுக்கு சொல்லி புரிய வைக்கணும்” அடுப்படியை பார்த்தபடி நடந்து போனார். எதிரே வந்த பார்வதியை ஒரு உறைந்த பார்வையை பார்த்துவிட்டு போனார். இந்த டீன் சாதாரண மருத்துவராய் இருந்தபோதுபொழுது பல ஆண்டுகளுக்கு முன்னால் கார்மேகத்திற்கு யாரோ அறிமுகம் செய்து வைத்திருந்தார்கள் “நம்ம ஆளுகதானென்று”.

ரெண்டாமவன் நடுக்கூடத்திலிருந்து கத்தினான். “நீங்க செஞ்ச தப்புக்கு நாங்க அனுபவிக்கணுமா. அப்ப ஒழுங்கா இருந்துருக்கணும்” . பார்வதி கார்மேகத்திற்கு பாகற்காய் ஜூஸ் மிக்ஸியில் அடித்துக் கொண்டிருந்தாள். யசோதா தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று மாடி ஜன்னலை நோக்கி நடந்தாள்.

இரண்டாமவன் நந்தகோபாலும் டீன் மகளும் ஓடிப்போனார்கள். டீன் அடிக்காத குறையாக கார்மேகத்திடம் பேசிவிட்டுப் போனார். பத்து நாட்கள் கழித்து ஒரு அர்த்த ராத்தியில் நந்த கோபாலும், டீன் மகளும் வந்தார்கள். யாரிடமும் பேசவில்லை. நேரே மாடிக்கு போய் நந்தகோபாலின் ரூம் கதவை சாத்திக் கொண்டார்கள். யசோதா தன் அறையின் டி.வி சத்தத்தைக் கூட்டினாள். காலை டீன் தன் மனைவி சகிதமாய் வந்தார். சற்று நேரம் எதுவும் பேசவில்லை “ரெண்டு குடும்பமும் சேர்ந்து ஒரு ரிசப்ஷன் நடத்திடுவோம் செலவு எங்கது”. கார்மேகம் தலையை மாத்திரம் ஆட்டினார்.

பார்வதி அந்த வரவேற்புக்கு போகவில்லை மகன் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டான். கார்மேகம் பெயருக்குப் போய் பந்தி தொடங்கும் பொழுது புறப்பட்டு வந்தார். யசோதா அழைத்து போக கார் வரவில்லையென மாடிக்கு திரும்பி விட்டாள். மூத்தவன் ரெண்டாமவனவுக்கு கை விளக்காய் நின்றான்.

மருமகள் இவர்கள் யாரோடும் பேசுவதில்லை. யசோதா மீண்டும் ஏதோ படிக்க போகிறேன் என ஒரு கம்ப்யூட்டர் கிளாசில் சேர்ந்தாள். அடிக்கடி இன்ஸ்ட்டியூட்டில் டூர் போகிறார்கள் என போய் வந்தாள். மருமகள் “எல்லா அந்த சீனியோட்தான் போய்ட்டு வரா” என்றாள். பார்வதி ஒன்றும் சொல்லாது அவள் கைக்குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.

ஒரு மழை நாளில் நடு ராத்திரி கார்மேகம் குடிக்கத் தண்ணீர் கேட்க பாதி குடிக்கும் பொழுது டம்ளர் நெஞ்சில் விழுந்தது  கிருஷ்ணசாமிதான் அந்த வீட்டிற்கு பேசினான். ”நாங்க அங்க வரமாட்டோம் நீங்க இங்க கொண்டு வந்திருங்க” என்றார்கள். பார்வதி பிடிவாதமாய் காரில் ஏறினாள்; அடர்த்தியான மழை அதே பழைய கார்தான். ஸ்தாபிதம் 1902 என்ற சுவற்றின் முன் கார் நின்றது. கோட்டை போன்ற வீடு உள்ளேயிருந்து நால்வர் குடையோடு ஓடிவந்தார்கள். காரை திருப்பி நிறுத்த சொன்னார்கள் பார்வதியும் இறங்கினாள். நந்தகோபாலும் சேர்ந்து தூக்க போக அவன் தோளை தட்டி “இதோட உங்க வேல முடுஞ்சுருச்சு நாளைக்கு யாரும் இந்த வீட்டுக்கு பொண்டாட்டினோ, புள்ளையினோ வரக் கூடாது” தடாலென இரும்புக் கதவு சாத்தப்பட்டது. கதவில் தண்ணீர் ஓடியதால் சத்தம் பெரிதாய் கேட்கவில்லை   கிருஷ்ணசாமி அம்மாவை உற்று பார்த்தான் விறு, விறுவென காரை நோக்கி நடந்து  அம்மாவை பாராமலே பார்வதி மேல் தண்ணீர் தெளிக்க புறப்பட்டு போனான். எதிரே மழைக்கு பூக்கடையின் கீழ் படுத்திருந்த யாரோ பார்வதியை நோக்கி ஓடிவந்தார்கள்.

மறுநாள் பார்வதி மாத்திரம கார்மேகத்தின் போட்டோ அருகே உட்கார்ந்திருந்தாள். மாதவனும் கிருஷ்னசாமியும் சலூனில் சென்று மொட்டையடித்துக் கொண்டார்கள்.யசோதா மாடியிலிருந்து இறங்கவில்லை.

கொஞ்ச நாளில் யசோதா மேலே படிக்க போகிறேன் என்று சென்னைக்கு போனாள். “அந்த சீனி அங்கதா இருக்கானாம்ல”  என்றாள் மருமகள். நந்தகோபாலும் மாதவனும் வீட்டை இடித்து கட்டி வாடகைக்கு விடுவதெனவும், ஆறு மாசத்தில் முன் பக்கம் 4 கடை, நந்தகோபாலுக்கு ஒரு கிளினிக். கீழ் போர்சன் ரெண்டு கடையின் வாடகை மாதவனுக்கும், மேல் போர்சனில்   கிருஷ்ணசாமி இருப்பதாகவும் முடிவு செய்து கொண்டார்கள்.   கிருஷ்ணசாமி வீடு கட்டும் வரை கே.கே நகருக்கு குடிபோனான்.

பின் பக்கம் சிறிய ஷெட் போட்டார்கள் பார்வதி குட்டியின் பொருட்களை அதில் வைத்து விட்டு “நாளைக்கு இடிக்க ஆள் வந்திருவாங்க நீ இதுல இருந்துக்க’ பார்வதி குட்டி ஒன்றும் பேசாமல் நின்றாள். “கார் டிக்கிய விட இது பெருசுதான” என சொல்லிவிட்டு நந்தகேபால்  போனான்.

ரோசி சேச்சி அன்றைக்கு அந்த பணத்தை அச்சுதன் சேட்டனிடமிருந்து தன்னை வாங்கவிட்டிருக்கலாம் என பார்வதி குட்டிக்கு சம்பந்தமில்லாமல் அந்த நேரத்தில் தோன்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.