பிளவு – கார்த்திகைப் பாண்டியன் -சிறுகதை

 

 

யரமாய் நின்றிருந்த மரத்தேரின் சக்கரங்கள் இறந்தகாலத்தில் உறைந்திருந்தன. செங்குத்தான சூரியனின் கிரணங்கள் வீதியைச் சுட்டெரிக்க தேரின் நிழல் அகலமான அதன் அடிபாகத்தின் கீழ் ஒளிந்து கிடந்தது. உடலில் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்தபடி ஒரு கடையின் முன்னால் வேய்ந்திருந்த ஓலைக்கொட்டகையின் கீழ் ஒதுங்கினேன். கூரையினுடைய சல்லடைக்கண்களின் வழி உள்ளே நுழைந்த ஒளி முகத்தில் வெதுவெதுப்பாய் விழுந்து கண்கள் கூசியது. தலையைத் தாழ்த்தி பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். மட்டரக சிகரெட்டின் காட்டமான புகையில் உடல் சற்றே தளர்ந்து ஆசுவாசமானது. வாழ்வில் எத்தனை சங்கதிகள் வந்தாலும் புகையும் சுயசம்போகமும் தரும் சுகமே அலாதிதான். புகைத்துக்கொண்டே அன்றைய தினம் வசூலுக்குப் போக வேண்டிய கடைகளை மனதுக்குள் பட்டியலிட்டேன். மகால் அருகிலிருக்கும் கடைகளை முதலில் முடிக்கலாம் என்றெண்ணி சிகரெட்டை வீசி விட்டு நடக்கத் தொடங்கினேன்.

 

விளக்குத்தூணின் வியாபாரிகளையும் தள்ளுவண்டிகளையும் தாண்டி கற்சந்துக்குள் நுழைகையில் சாலையின் ஓரமாகக் கிடந்த மனிதர் கண்களில் தட்டுப்பட்டார். தகதகக்கும் தார்ச்சாலையின் வெப்பத்தில் குண்டிச்சூடு உணராமல் உடைகள் கலைந்து அலங்கோலமாகக் கிடந்தவரை என்னால் அடையாளம் காண முடிந்தது. மூட்டை தூக்கும் மாரிச்சாமி அண்ணன். நான்கைந்து நாட்களாக கடைப்பக்கமே வரக்காணோம் என்று தேடியவரை சாலையில் இந்தக்கோலத்தில் பார்க்க நேரிடும் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. குனிந்து அவரை எழுப்ப முயன்றேன். “ஒங்களுக்குத் தெரிஞ்சவரா தம்பி.. சரியான தண்ணி.. தெனக்கர குடிச்சிருக்காப்ல.. காலைலேர்ந்து இங்கனதான் கெடக்காப்டி.. நடுரோட்டுல கெடந்தவர நம்ம பசங்கதான் ஓரமா இழுத்துப் போட்டானுக.. இப்போதைக்கு எழுப்ப முடியாது. செரமம்.” அருகில் கரும்புஜூஸ் விற்கும் அண்ணாச்சி அலுத்துக்கொண்டார்.

 

நிமிர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். மனிதர்கள் அவரவர் வியாபாரத்தில் மும்முரமாயிருந்தார்கள். தெரிந்தவர்கள் யாரும் அக்கம் பக்கத்தில் இல்லை. அப்படித் தெரிந்தவர்களும்கூட பெரிதாய் ஏதும் அவர் மீது அக்கறை காட்டுவார்களெனத் தோன்றவில்லை. மூட்டையை உலுக்குவது போல தோளை பலமாக அசைத்து மாரியை எழுப்ப முயன்றேன். மாரி புரண்டு திரும்பிப் படுத்தாரேயொழிய எழவில்லை. மெல்ல உடலைப் பிடித்திழுத்து அருகில் நிழலாயிருந்த பகுதிக்குள் அவரைக் கிடத்தி விட்டு பிறகு அங்கிருந்து நகர்ந்தேன். தொடர்ந்து அடுத்தடுத்து போக வேண்டிய கடைகள் மூளையை ஆக்கிரமிக்க மாரியை மறந்து வசூலுக்குள் நுழைந்தேன்.

 

மாலை நேரச் சூரியன் மங்கிய ஒளிக்கற்றைகளால் தன்னிருப்பை உறுதி செய்து கொண்டிருக்க என் கடையில் அமர்ந்திருந்தேன். இறுக்கமான காற்றோடு வானில் மேகங்கள் திரள ஆரம்பித்தன. நரகக்குகையிலிருந்து வெளியேறிப் பறக்கும் வவ்வால்களின் பரபரப்போடு மனிதர்கள் வீதியில் ஓடிக் கொண்டிருந்தார்கள். மழையின் முதல் துளி பூமியைத் தீண்டுமுன் தங்களுக்கான வேலைகளை முடித்து விடும் அவசரம். கண்ணுக்குப் புலப்படாத ஏதோவொரு மிருகம் அவர்களை துரத்துவதாகவும் அதன் பிடியிலிருந்து தப்ப அனைவரும் மிரண்டோடுவதைப் போலவும் கற்பனை செய்தேன். சிரிப்பாகவும் சற்று பிரமிப்பாகவும் இருந்தது. வாழ்க்கையென்பது வெறுமனே மூச்சு விடத்தானா என்று அச்சலாத்தியாகவும் வந்தது. பிறகு எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன்: நாம் புரிந்து கொண்டிருப்பது ஒன்றுமில்லை, ஒன்றுமேயில்லை. ஒருபோதும் நம்மால் எதையும் புரிந்து கொள்ளவும் முடியாது. வீதியொரமாய் மயங்கிக் கிடந்த மாரியின் முகம் சட்டென்று மனதின் ஓரத்தில் கறுப்பு வெள்ளை புகைப்படமாய் மின்னி மறைய பெருமூச்சொன்றை உதிர்த்து மற்ற கடைகளில் காட்ட வேண்டிய மாதிரிகளை எடுத்துக்கொண்டு கடையை விட்டு வெளியேறினேன்.

 

எழுகடல் வீதியில் சுற்றியலைந்து இறுதியாக வடக்கு மாசி வீதிக்குள் நுழைந்தவன் அதிர்ந்து நின்றேன். மாரி இப்போது டெலிபோன் ஆபிசுக்கு அருகிலிருந்த முட்டுச்சந்துக்குள் விழுந்து கிடந்தார். வெளிவீதிகளின் வியாபாரிகள் தங்கள் அவசரத்தை தணித்துக்கொள்ளும் மூத்திரச்சந்து அது. அவரருகில் சென்று பார்த்தேன். முனையின் சுவரிலிருந்து நீளக்கோடாய் வழிந்த மூத்திரமும் பெய்தோய்ந்த மழையும் சேர்ந்து ஒரு குழியில் குளமெனத் தேங்கியிருக்க அங்கே முகம் பதித்துக் கிடந்தார். ஈர முகத்தில் பாதி திறந்திருந்த கண்களுக்குக் கீழே ஈக்கள் கூட்டமாக மொய்த்துக் கொண்டிருந்தன. மூத்திரவாடையையும் மீறி அவரிடமிருந்து எழுந்தது மதுநாற்றம். மறுபடியும் குடித்துவிட்டு வந்து விழுந்திருக்க வேண்டும். மிகுந்த வேதனையோடு தலையில் அடித்துக் கொண்டேன். ஒருபோதும் அவரை நான் இப்படிப் பார்த்ததில்லை. நன்றாகயிருந்த மனிதருக்கு என்ன ஆனது? எது அவரைத் துரத்துகிறது? கண்ணுக்குப் புலப்படாத அந்த மிருகம் எங்கிருக்கிறது? தெளிந்த பிறகு கடைக்கு வரச்சொல்லி விசாரிக்க வேண்டும் என்று எண்ணியபடி நகர்ந்தேன்.

 

லாரிகளுக்கு அனுப்பும் மூட்டைகளை சிட்டை போட்டு வண்டியேற்றி முடித்தபோது இரவு மணி பதினொன்று ஆகியிருந்தது. நாளின் அசதியனைத்தும் சேர்ந்து நுரையீரலின் ஒவ்வொரு துளையும் புகைக்காக ஏங்கின. மொட்டைகோபுர முனிக்கு எதிர்த்தாற்போல இருக்கும் சந்தின் காபிக்கடைதான் வழக்கமாகப் போகுமிடமென்பதால் அங்கே நடக்கத் தொடங்கினேன். ஒரு கையில் டீ கிளாசும் மறுகையில் சிகரெட்டுமாக இருட்டுக்குள் நான் ஒதுங்க அருகிலிருந்த வீட்டின் படிகளில் நிழலாய் ஒரு உருவம். உற்றுப்பார்த்தேன். மாரி அங்கே அமர்ந்திருந்தார். நிமிர்ந்து என்னைப் பார்த்து பின் கண்களைத் தாழ்த்திக்கொண்டார். “தம்பி.. ஒரு சோடா வாங்கிக்கிடவா..” என் பதிலை எதிர்பார்க்காமல் எழுந்து கடையினருகே போய் நின்றார். கண்களில் கேள்வியோடு கடைக்காரர் என்னைப் பார்த்தார். நான் தலையசைத்தேன். கொப்பளித்துப் பொங்கிய சோடாவை ஊற்றி முகத்தைக் கழுவியவர் பிறகு கொஞ்சமாகத் தொண்டையிலும் சரித்துக் கொண்டார். இறுக்கமாயிருந்த மாரியின் உடல் சற்றே தளர்ந்ததாகத் தோன்றியது.

 

நான் அவரருகே சென்று பேச முற்பட்டபோது எங்கோ பின்னாலிருந்து ஒரு விசில் சத்தம் கிளம்பியது. வெகு நீளமான, மிகச்சரியான இடைவெளிகளில் ஊதப்படும் விசிலின் ஓசை. அந்தக்கணம் மாரியின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னைத் திடுக்குறச் செய்தன. ரத்தச்சிவப்பில் இருந்த கண்களில் கிலி படர்ந்து முகம் விகாரமாகியது. உடல் வெடவெடத்து நடுங்கி இடுப்பின் கைலியை எடுத்து முகத்தை மூடிக்கொண்டார். நான் குழப்பமாக பின்னால் திரும்பிப் பார்த்தேன். வழக்கமான இரவுநேரப் பாராவுக்காக காவலர்கள் மீனாட்சி கோவிலைச் சுற்றி வந்தார்கள். கோயிலைச் சுற்றியிருக்கும் அனைவரும் பழகிய விசயம்தான். மீண்டும் நான் மாரியிடம் திரும்பினேன். வீதியில் கசிந்த மிகச்சிறிய ஒளியிலிருந்தும் விலகியோடி இருட்டுக்குள் நுழைந்து அருகிலிருந்த ஒல்லியான மரத்தண்டின் பின்னால் ஒளிந்து கொள்வதாய் நின்றார். கிளைகளின் நடுவில் முகத்தைப் புதைத்து மறைக்க முயன்றவரின் உடல் அதீதமாக நடுங்குவதை என்னால் இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. மெல்ல அவரை நெருங்கி தோளைத் தொட்டேன். விசில் சத்தம் மெல்லத் தேய்ந்து மறைந்த பிறகே மாரி நிமிர்ந்து என் கண்களுக்குள் பார்த்தார்.

 

மாரிக்கு வயது நிச்சயம் ஐம்பதைத் தாண்டியிருக்கும். மிகவும் எளிமையான மனிதர். எப்போதும் சிரித்தபடி தானிருக்கும் இடத்தையும் தன்னைச் சுற்றியுள்ள மக்களையும் உயிர்ப்போடு வைத்திருப்பவர்.

 

மாரியின் சிறு வயதிலேயே ராமநாதபுரம் பக்கமிருந்த ஏதோவொரு கிராமத்திலிருந்து பிழைப்புக்காக மதுரை வந்து சேர்ந்தது அவருடைய குடும்பம். முதன்முதலில் தனக்குக் கிடைத்த வேலையைப் பற்றிச் சொல்லும்போது மாரிக்கு எப்போதும் வார்த்தைகள் தடுமாறும். ஊரின் ரேகைகள் புரிபடாத பத்து வயது சிறுவனால் என்ன செய்திட முடியும்? தினமும் பெரியார் நிலையத்தின் அருகேயிருக்கும் பாலத்தில் சென்று நிற்பான் அந்தச் சிறுவன். ரிக்‌ஷாக்காரர்களும் சுமைவண்டிக்காரர்களும் பாலத்தில் ஏற முடியாமல் தவங்கும்போது துடுப்புப்போட்டு தள்ளிவிடுவதுதான் அவனுக்குக் கிடைத்த முதல் வேலை. வண்டிக்காரர்கள் சிரித்துக்கொண்டே தந்த காலணாக்களும் அரையணாக்களும் அவனுள் நம்பிக்கையை விதைத்தன. ஒரு ரசவாதியைப் போல இந்த நகரமும் அதன் மனிதர்களும் மாரியின் வாழ்க்கையை மாற்றியமைத்தார்கள். கடைசியில் தூசிபடிந்த வெளிவீதிகள் அந்தப் பாதங்களை பிசிபிசுப்போடு ஏற்றுக்கொள்ள அவரது உள்ளங்கால்கள் இந்நிலத்தில் வேர்பிடித்து நின்றன. சொல்லிக் கொள்ளும்படியானதொரு வாழ்க்கையை தனக்கு சாத்தியப்படுத்தியது இந்த நகரம்தானென்பதை எப்போதும் மாரி நெகிழ்ச்சியோடு சொல்வார். “மனசுல நம்பிக்கையும் ஒடம்புல தெம்பும் இருந்தா போதும் தம்பி.. மதுர மீனாட்சி யாரையும் காப்பாத்துவா..”

 

மாரிக்கு வாழ்க்கையில் முக்கியமான விசயங்கள் இரண்டு. முதலாவது அவருடைய செல்ல மகள் வாணி. தாயை இழந்த பெண். ஒரு டெய்லரிங் கடையில் வேலை பார்த்தாள். சீக்கிரமே நல்லதொரு இடமாகப் பார்த்து அவளை கட்டிக்கொடுக்க வேண்டுமென்பது அவருடைய வாழ்வின் ஆதாரம். அவருக்குப் பிடித்த மற்றுமோர் சங்கதி சினிமா.

 

அனைத்து மதுரைக்காரர்களையும் போல மாரியும் சினிமாவை நேசித்தார். வாரத்தில் ஐந்து நாட்கள் உயிரைக்கொடுத்து வேலை பார்த்தாரென்றால் மீதி இரண்டு நாட்களும் தியேட்டர்களில் கழியும். அதிலும் அவருடைய ரசனை கொஞ்சம் வித்தியாசமானது. ஊரின் அனைத்து ரிக்‌ஷாக்களில் படமாகவும் வண்டியோட்டிகளின் தோள்களில் பச்சையாகவும் உலகம் சுற்றும் வாலிபன் வீற்றிருந்த காலத்தில்  மாரியின் வண்டியில் மட்டும் தெய்வமகன் சிரித்துக் கொண்டிருந்தார். “பிறவி நடிகன் தம்பி.. அழச்சொன்னா பக்கத்துல சுவர் எங்க இருக்குன்னு தேடுற ஆளு கிடையாது.. கண்ணக் கசக்குனாப்லன்னு வைங்க.. ஊரே அவரோட சேர்ந்து அழும்..” ஒற்றை ஆளாக எதிர்த்தரப்பு ரசிகர்களோடு மல்லுக்காட்டுவார். பெரும்பாலும் பழைய படங்களே அவருக்கு விருப்பமாயிருந்தன. எங்கே போட்டாலும் அவற்றை தேடிச்சென்று பார்ப்பார். சென்ட்ரல் போன்ற தியேட்டர்களெல்லாம் உங்களை நம்பித்தான் இருக்கின்றன என்று கிண்டல் செய்தாலும் கண்டுகொள்ள மாட்டார். மூட்டைகளை ஒவ்வொன்றாக அடுக்கியபடி தான் பார்த்த படங்களையெல்லாம் ஒவ்வொரு காட்சியாக அவர் விவரிப்பது அத்தனை சுவாரசியமாக இருக்கும். கண்கள் விரிய தானும் அந்தப்படத்தில் ஒரு கதாபாத்திரம் என்பதைப் போல உணர்ச்சி பொங்க நடித்துக் காட்டுவார். அதற்காகவே வணிக வீதிகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் சேர்த்து வைத்திருந்தார்.

 

நீலப்படங்கள் பார்ப்பதிலும் அவருக்கு அலாதி பிரியமிருந்தது. அது பற்றி கேட்டால் ஒரு வினோதமான இளிப்பு மாரியின் உதடுகளில் வந்து அமர்ந்து கொள்ளும். “என்ன கிடைக்குதுன்னு பார்த்தா ஒண்ணுமேயில்ல தம்பி.. ஆனா பழகிருச்சு.. ஒரு வாரம் போகலைன்னா கூட கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிரும் பார்த்துக்கிடுங்க..” சொல்லி விட்டு விக்கி விக்கிச் சிரிப்பார். எந்தத் திரையரங்கில் படம் ஓடுகிறது, நீலப்படக்காட்சிகளை எப்போது திரையிடுவார்கள், இடைவேளைக்கு முன்பா அல்லது பின்பா என எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார். அது பற்றிச் சொல்லவும் அவரிடம் ஏராளமான கதைகள் இருக்கும். “முத்துப்பட்டில ஒரு டூரிங் டாக்கீஸ் தம்பி. மூணு மாசம் திறந்திருக்கும், அடுத்த மூணு மாசம் சீல் வச்சிருவானுங்க. சாயங்காலம் நைட்டுன்னு ரெண்டே ஷோ தான். ஆனா தரம், பார்த்துக்கிடுங்க. அஞ்சு ரூபாக்கு மேல சல்லிக்காசு வாங்க மாட்டான். படம் போடுறதுக்கான சிக்னல்னு சொல்லி ஒரு பாட்டு போடுவான் பாருங்க.. அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிட உரிமையடா.. கொழாய்ல அந்தப் பாட்ட ஓட விட்டான்னா படம் போடப்போறான்னு அர்த்தம். எனக்கு என்னவோ அதைக் கேட்கும்போதெல்லாம் குச்சிக்காரன்களுக்காகவே போடுறானுகளோன்னு தோணும். நீ எத்தனை தடவ சீல் வச்சாலும் நான் பிட்ட ஓட்டுவேண்டான்னு.. ஹா ஹா ஹா..”

 

மொத்தத்தில் மாரியைப் பற்றி சொல்வதானால் வாழ்வின் பாரங்கள் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளாத வெள்ளந்தியான மனிதர்.

 

ருநாள் காலையில் வேலைக்குப்போன மாரியின் பெண் அன்றிரவு வீடு திரும்பவில்லை. தனக்கான வேலைகளை முடித்து அவர் வீட்டுக்கு வருகையில் நேரம் பத்து மணியைத் தாண்டியிருந்தது. எப்போதும் சுடுசோறுடன் தனக்காகக் காத்திருக்கும் மகள் வீட்டில் இல்லை என்பது சங்கடத்தில் ஆழ்த்தியது மாரியை. அக்கம்பக்கத்து வீடுகளில் விசாரித்தபோதும் ஒன்றும் புரிபடவில்லை. ஒருவேளை அவனியாபுரத்தில் இருக்கும் அத்தை வீட்டுக்குப் போயிருப்பாளோ? அவசர அவசரமாக செல்போனில் அழைத்தார். அங்கும் அவள் வரவில்லை என்றே பதில் கிடைத்தது. அன்றிரவு முழுதும் மகளை எதிர்பார்த்து வீட்டுவாசலில் அவர் தூங்காமல் உட்கார்ந்திருந்தார்.

 

விடிந்தவுடன் தனக்குத் தெரிந்த இடங்களில் எல்லாம் சென்று தேடினார். எங்கும் அவள் கிடைக்கவில்லை. வேலை பார்க்கிற இடத்துக்கும் போகாமல் வாணியினுடைய செல்போனும் அணைந்திருக்க பயம் ஒரு புகைமண்டலமாய் மாரியின் மனதைச் சூழ்ந்தது. வாணி மிகவும் நல்ல பெண். அவரறிந்து எந்தத் தவறும் செய்யக்கூடியவளில்லை. அவளுக்கு என்ன நடந்திருக்கக்கூடுமென்பதாய் பலவித எண்ணங்கள் மனதுக்குள் தோன்ற மனிதர் முழுதாய் உடைந்து போனார். இறந்த மனைவியின் முகம் நினைவில் நிழலாடியது. வேறு வழியின்றி போலிசில் சென்று கம்ப்ளெய்ண்ட் கொடுக்கலாம் என்கிற முடிவை வந்தடைந்தார்.

 

காவல் நிலையம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. கட்டிடத்தின் சிவப்புநிறக் கற்களைப் போலவே அங்கிருந்த மனிதர்களின் முகங்களும் இறுகிக்கிடந்தன. அவர்களின் மத்தியில் நுழைவது மாரியை மிகவும் அசௌகரியமாக உணரச் செய்தது. எழுத்தரிடம் சென்று மகள் காணாமல் போனதைச் சொன்னார். அவரை நிமிர்ந்து பார்த்த மனிதரின் கண்கள் எகத்தாளத்தில் மிதந்தன. இன்ஸ்பெக்டர் இரவுதான் வருவாரென்றும் அப்போது வந்து புகார் தரும்படியும் கரகரப்பான குரலில் சொன்னார். மீண்டும் ஒருமுறை அந்தக் கட்டிடத்துக்குள் நுழைவதென்பது மாரிக்குள் பீதியை உண்டாக்கியது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களின் பெரும்பகுதியைத் தான் அங்குதான் கழிக்கப்போகிறோம் என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

 

வீட்டுக்குப் போக பிரியமின்றி மாரி எதிரேயிருந்த சைக்கிள் ஷெட்டில் போய் அமர்ந்தார். திருட்டு வாகனங்கள் சிதைவுற்று அங்கங்கே சரிந்து கிடந்தன.  இருள் சூழும் நேரமென்பதால் வானம் தெளிவில்லாமல் இருந்தது. முந்தைய இரவு சரியாகத் தூங்காத காரணத்தால் உடலாலும் மனதாலும் மிகவும் சோர்வாயுணர்ந்தார். நம்பிக்கையை அவர் முற்றாய் இழக்கவிருந்த தருணத்தில் மிகுந்த சத்தத்தோடு இன்ஸ்பெக்டரின் வாகனம் வளாகத்துக்குள் நுழைந்தது. உள்ளே போன அதிகாரி வெளியேறி வருவதற்காக மாரி வாசலில் போய் நின்று கொண்டார். சிறிது நேரம் கழித்து வெளியேறி வந்த இன்ஸ்பெக்டர் அங்கே நின்றிருந்தவரைப் பார்க்காதது போல வேகவேகமாக நடந்தார். மாரி அவர் பின்னால் ஓடினார். “என்னய்யா..” குரலில் எரிச்சல் மண்ட இன்ஸ்பெக்டர் மாரியைத் திரும்பிப் பார்த்தார். அவருடைய வலது கன்னத்தில் சுண்டு விரலளவு நீண்டதாய் ஒரு வடு இருந்தது. முறுக்கிய மீசைக்குப் பின்னால் கன்னங்கள் பிதுங்கி வழிந்தன. வெட்டுப்பட்ட ஆட்டினுடையதைப் போலிருந்த கண்கள் மாரியின் முகத்தில் நிலைத்து வெறித்தன. அச்சத்தை மறைத்தபடி மகள் காணாமல் போனதை மாரி விளக்க முகத்தில் எந்தவிதமான உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் இன்ஸ்பெக்டர் கேட்டுக்கொண்டார். “இப்போ ரவுண்ட்ஸ் போறேன்.. கொஞ்ச நேரத்துல வந்துடுவேன். எழுதிக் குடுத்துட்டுப் போ. அப்படியே உன்னோட போன் நம்பரையும் சொல்லிரு. பாக்கலாம்..” புகையினடுவே பெருத்த சத்தத்தோடு வாகனம் கிளம்பிச் சென்றது.

 

விடை தெரியாத கேள்விகள் மாரியின் மூளைக்குள் பிள்ளைப்பூச்சியாய் குடைந்தன. தனக்குள் புலம்பியபடி வீட்டை வந்தவர் மின்சாரமில்லாமல் அது இருளுக்குள் மூழ்கியிருப்பதைக் கண்டார். சின்னதொரு அகல் விளக்கை தேடியெடுத்து ஏற்றி வைக்க வெளிச்சம் மெல்ல அறையை நிறைத்தது. எரியும் தீபச்சுடரைப் பார்த்தபடியே சுவரில் சாய்ந்தமர்ந்தார். எதிர்த்திசையின் சுவரிலாடிய வினோத நிழல்கள் அவருக்கு பீதியூட்டின. யோசனைகளின் அழுத்தத்தில் பைத்தியம் பிடிக்குமோ எனுமளவு பயமாயிருந்தது. ஒன்றும் செய்ய முடியாமல் கண்களை இறுக மூடிக்கொண்டார்.

 

அன்றிரவும் மாரியால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அரைகுறைத் தூக்கத்தில் அவருக்கோர் கனவு வந்தது. அதுவொரு மலைப்பிரதேம். எங்கோவொரு பாறையின் உச்சியில் மகள் நின்றிருப்பதை அவர் பார்த்தார். அவள் கண்களில் இருந்து தொடர்ச்சியாக கண்ணீர் வழிந்தது. ஆனால் அந்த நீர்த்துளிகள் தரை தொடுமுன்பே உறைந்து பனித்துளியென மாறி தரையில் விழுந்து சிதறின. சற்று தொலைவில் நின்று அவர் அவளைப் பார்க்கிறார். விடைபெறுவது போல அவள் மெல்ல தனது கைகளை காற்றில் அசைக்கிறாள். இறுதியாக அவளின் உடல் நகர்ந்து பள்ளத்தில் வீழ்கிறது. மாரி கத்த முயற்சிக்கிறார். ஆனால் முடியவில்லை. உதடுகள் மௌனமாய் வெறுமனே அசைகின்றன. கால்கள் சிலையாய் மாறிப்போக அவரால் அங்கிருந்து நகரமுடியவில்லை. அவளது உடல் காற்றில் ஆடியபடி கீழே போகிறது. சட்டென்று விழிப்பு தட்ட எழுந்து கொண்டார். உடல் நடுங்கியது. இதுவொரு தீக்கனவு. கனவு மட்டுமே. உண்மையாயிருக்க முடியாது.  தன் மகள் எப்படியும் மீண்டு வருவாள் என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு படுத்தார்.

 

றுநாள் காலை பத்து மணிக்கு ஸ்டேசனுக்கு வரும்படி மாரிக்கு அழைப்பு வந்தது. மகளைப் பற்றி ஏதேனும் தெரிய வந்திருக்குமோ? ஆனால் காவல் நிலையத்தில் வேறொரு அதிகாரி இருந்தார். முன்னவரைப் போலில்லாமல் இவருடைய முகம் ஒரு குழந்தையைப் போல கனிந்திருந்தது. தன் முன்னால் எதிர்பார்ப்போடு வந்து நின்ற மாரியிடம் புன்னகைத்தபடி கேட்டார். “சொல்லுய்யா.. எதுக்கு ஒம்மவள கொலை பண்ண? அவள எங்க பொதச்சு வச்சிருக்க?”

 

மாரி அதிர்ந்தார். அந்த வார்த்தைகள் அவருக்குள் முழுதாய் இறங்கவும் புரியவும் சற்று நேரம் ஆனது. நங்கூரத்தின் கூர்முனையென அந்தக்கேள்வி இதயத்தில் நிலைகுத்தி நின்றது. அவருடைய கண்கள் கலங்கின. “அய்யா.. என்ன சொல்றீங்க.. எம்மவள நான் எதுக்குக் கொல்லப்போறேன்..” வார்த்தைகள் குழறி அவரால் கோர்வையாகப் பேச முடியவில்லை. மனதின் ஆழத்தில் செவிக்கு எட்டாத தொலைவில் பலத்த சத்தத்தோடு எதுவோ விழுந்து உடைந்தது. சுக்கு நூறாய் வெடித்துச் சிதறியதாகவும் உடல் முழுவதும் நெருப்பில் அணுஅணுவாய் வெந்து சாவதாகவும் உணர்ந்தார்.

 

எதிரே நின்றிருந்த அதிகாரியின் முகம் சற்றும் மாறவில்லை. அப்போதும் அந்தப் புன்னகையை விடாமல் அணிந்திருந்தார். “உங்களப் பத்தித் தெரியாதாடா? பொண்ணு எவனோடயாவது ஓடியிருப்பா. ஒங்களுக்கு சாதி முக்கியமாப் பட்டிருக்கும். அவளக் கொன்னிருப்ப. கேக்க யாருமில்லாத அனாதைங்கதான… சொல்லு. மவள மட்டும்தான் கொன்னியா இல்ல அவ கூட இருந்தவனையுமா? ஒருவேள ரெண்டு பேரும் படுத்துக் கெடந்தப்ப பார்த்தியா.. எங்க பொதச்ச.. நீயா சொல்லிரு பாப்பம்..” பேச்சினூடாக வார்த்தைகளின் மரியாதை குறைவதும் மாரிக்குப் புரிந்தது.

 

“நான் எதுக்குய்யா..” வார்த்தைகளை முடிக்குமுன்பாகவே மிகுந்த விசையோடு அதிகாரியின் கைகள் அவர் மேல் இடிபோல் இறங்கின. “தாயளி.. ஒங்கள மாதிரி எத்தன பேரைப் பார்த்திருப்பேன்.. ஓரமாப் போய் ஒக்காருடா.. ஒன்னய எப்படி உண்மையச் சொல்ல வைக்கணும்னு எனக்குத் தெரியும்..” பெருமூச்சு வாங்கப் பேசி முடித்தவர் அங்கிருந்து அகன்றார். அழுதபடியே மாரி அருகிலிருந்த பெஞ்சில் சென்று உட்கார்ந்தார். அதிகாரியின் குரல் உள்ளே ஒலித்துக் கொண்டேயிருந்தது. தப்பிக்க முடியாத சுழலுக்குள் சிக்கியவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள ஏதாவது கையில் சிக்காதா என்று துழாவுவதைப் போல விரக்தியில் மூழ்கிய மனம் நம்பிக்கை தரும் ஏதேனும் ஒன்றுக்காக ஏங்கித் தவித்தது. சுற்றிலும் யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று நிமிர்ந்து பார்த்தார். யாருமில்லை. பாலைவனத்தில் தனித்து விடப்பட்டவனாய் உணர்ந்தார். திடீரென்றுதான் அவருக்குத் தோன்றியது. ஒருவேளை நேற்று சந்தித்த இன்ஸ்பெக்டர் வந்தால் தான் சொல்வதை நம்பக்கூடும் என்கிற சிறு நம்பிக்கை அவருக்குள் துளிர்த்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு வாசலைப் பார்த்து அமர்ந்தார்.

 

மாலையில் திரும்பி வந்த இன்ஸ்பெக்டரிடம் தன் வீங்கிய முகத்தைக் காட்டி புலம்பினார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட அந்த அதிகாரி ஒரு கான்ஸ்டபிளை அழைத்து மாரியின் வீட்டைப் போய் பார்த்து வரச் சொன்னார். எதற்கெனத் தெரியாவிட்டாலும் அதிகாரியின் வார்த்தைகளுக்காக மாரி மற்றைவரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார்.

 

மெஜூரா காலேஜ் பாலத்தின் கீழ் பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்த ரயிலடியோரமாய் இருந்தது மாரியின் வீடு. கிட்டத்தட்ட குடிசை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரேயொரு அறை. சாமான்கள் அனைத்தும் அவர் போட்டுச்சென்றது போல அப்படியே கிடந்தன.

 

வீட்டின் உள்ளே இடதுபக்கம் துணி கட்டி மறைவாயிருந்த பகுதிதான் குளியலறையாய் இருக்க வேண்டும். வாணியின் கிழிந்த புடவை குளியலறையை மறைக்கும் திரைச்சீலையாய்த் தொங்குவதை கான்ஸ்டபிள் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். “ஏய்யா.. இங்கதா குளியல்னா வெளிக்கி இருக்க எங்க போவீங்க..” ரயிலடியோரப் புதர்களைச் சுட்டி மாரியின் விரல்கள் நீண்டன.

 

அடுப்படியில் ஒரு மஞ்சப்பைக்குள் பாட்டில்கள் கிடைத்தன. கான்ஸ்டபிள் அவற்றை கவனமாக எடுத்து வைத்துக் கொண்டார். வீட்டின் உள்ளேயிருந்த சில சொற்பப் பாத்திரங்களைத் தவிர அங்கங்கே சில புத்தகங்கள் சிதறிக்கிடந்தன. நடிகைகளின் படங்களைப் பெரிதாய் அச்சிட்டும் விற்கும் சினிமா பத்திரிக்கைகள். ஆர்வத்தோடு அந்த புத்தகங்களை எடுத்துப் புரட்டிய கான்ஸ்டபிள் ஒரு பழங்காலப் பொருட்களைச் சேகரிப்பவனின் கவனத்தோடு எடுத்து ஒரு பையில் பத்திரப்படுத்தினார். பிறகு மெல்ல மாரியை நெருங்கி கிசுகிசுப்பான குரலில் சொன்னார். “புரியாத ஆளா இருக்கியேய்யா.. காலைல வந்த ஆபிசர் தானா உன்ன அடிச்சதாவா நினைக்குற? எல்லாம் நம்ம அய்யா சொல்லித்தான்யா. நீதான் தப்பு பண்ணின்னு எங்களுக்குத் தெரிஞ்சு போச்சு. ஒனக்கு ஒரு நாள் டைம். ராத்திரி பூரா இங்கனயே உக்கார்ந்து யோசி. உண்மைய ஒத்துக்க. அதுதான் உனக்கு நல்லது. தப்பி ஓடலாம்னு மட்டும் நினைக்காதே.. ஈசியா புடிச்சுருவோம்..” மனம் மொத்தமாக இடிந்து போக அப்படியே தரையில் அமர்ந்தார் மாரி. துயரத்தின் உச்சத்தில் சட்டென்று அந்த அதிகாரியின் மீது கடுங்கோபம் மூண்டது. பிறகு வேகவேகமாக அந்தக்கோபம் மகளின் மீது திரும்பியது. அந்த கேடுகெட்ட முண்டை காணாமல் போகாமலிருந்தால் தனக்கு இது நேர்ந்திருக்குமா? இறுதியில் அந்தக்கோபம் சுய இரக்கத்தில் வந்து முடிய ஓவென கதறியழத் தொடங்கினார்.

 

போலிஸ் ஸ்டேசனில் அனைவரும் கூடியிருந்தார்கள். மாரி கைகளைக் கட்டி கூனிக்குறுகி அவர்களின் நடுவில் நின்றிருந்தார். மேசையில் அவருடைய சாமான்கள் பரத்தி வைக்கப்பட்டிருந்தன. அவர் வீட்டின் புகைப்படங்கள், பாட்டில்கள், மற்றும் புத்தகங்கள். அவரிடமிருந்த செல்போனையும் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

 

நடுநிலையாய் நின்றிருந்த அதிகாரி பேசத் தொடங்கினார். அவருடைய கண்கள் மாரியையும் மேசையின் மீதிருந்த சாமான்களையும் மாறி மாறித் துளைத்தன. “உன் வீட்டுல கிடச்ச புத்தகங்களப் பார்த்தியா? எல்லாத்துலயும் நடுப்பக்கத்துல எவளோ ஒருத்தி அவுத்துப்போட்டு நிக்குறா. உன் செல்போனுல பூரா நடிகைங்க படம். கூலிக்கு சுமை தூக்குறவனுக்கு அப்படி என்னடா வெல அதிகமான செல்போன்? பிட்டுப்படம் பாக்கவா? உன்னப் பத்து கூட இருக்குற ஆளுகக்கிட்ட விசாரிச்சா கதை கதையா சொல்றானுங்க. பிட்டு படம் ஓட்டுற தியேட்டர் ஒண்ணு விடாம ஐயா ஆயுள் மெம்பராம்ல.. என்ன நடந்துச்சுன்னு தெளிவாச் சொல்றேன் கேட்டுக்க.. உம்பொண்டாட்டி செத்து பல வருசம் ஆச்சு. சரியா.. ஒனக்கோ உடம்பு பொம்பள தேடிருக்கு. அதுக்குத்தான் அப்பப்ப இந்த சினிமா, புத்தகம் எல்லாம். வீட்டுலயே வளர்ந்த பொண்ணு இருக்கா. அவ குளிக்கும்போது பாக்குறதுக்கு வசதியாத்தான் கிழிஞ்ச சேலையக் கட்டி விட்டுருக்க.. இல்லையா? சரக்குப் பழக்கம் வேற.. அது உள்ள போனாத்தான் மனுச மக்க வித்தியாசம் தெரியாதே? ரொம்ப நாளா மக மேல உனக்குக் கண்ணு. நாள் பார்த்து அவளை ஏதோ செஞ்சிருக்க… தாங்க மாட்டாம அவ செத்துப் போயிட்டா. எங்கயோ அவள மறைச்சு வச்சுட்டு நம்ம மேல சந்தேகம் வரக்கூடாதுன்னு நீயா நல்ல புள்ள மாதிரி எங்ககிட்ட வந்து கம்ப்ளெயிண்ட கொடுக்குற. ஏண்டா மயிரு.. எங்களையெல்லாம் பார்த்தா உனக்குக் கேனப்பொச்சாட்டம் தெரியுதா?” அதிர்ச்சியில் உறைந்து ஊமையாய் மாரி நின்றிருக்க அவர் தொடர்ந்தார். “ஒழுங்கா உண்மையா ஒத்துக்கிட்டு இடத்தைக் காமிச்சின்னா மணம்பெத்து போவ.. இல்ல மவனே அடிச்சே கொன்னுருவேன்..” பேசி முடிக்கையில் அதிகாரியின் புருவங்களில் முத்து முத்தாக வியர்த்திருந்தது. அவற்றைத் துடைத்துக் கொண்டே மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். மாரியின் பொருட்களை ஒரு பாலிதீன் பைக்குள் போட்டுக் கட்டிய கான்ஸ்டபிள் அதை பத்திரமாக மேசையில் கொண்டு வைத்தார். எவ்விதமான எதிர்வினையும் இல்லாமல் உணர்ச்சிகள் மரத்து அப்படியே நின்றிருந்தார் மாரி. ஒருவேளை இதையெல்லாம் எதிர்பார்த்திருந்தாரோ என்பது போல எதுவும் பேசாமல் ஓரமாகச் சென்று அமர்ந்து கொண்டார்.

 

எத்தனை நேரம் கழிந்ததென்று தெரியவில்லை. திடீரென்று செல்போன் அலறியது. மாரி துடித்துத் தவ்வியெழுந்தார். அந்த இசை வாணிக்கென அவர் பிரத்தியேகமாகப் பயன்படுத்தும் இசை. மேசை மீதிருந்த பாலிதீன் பைக்குள் அவருடைய செல்போன் நடுங்கிக் கொண்டிருந்தது. யார் அழைப்பதென்று எடுத்துப் பார்த்தார் கான்ஸ்டபிள். “ஹலோ… என்னம்மா.. அப்படியா.. நீ இப்போ எங்க இருக்க.. சரி சரி.. உங்கப்பாக்கிட்ட பேசு..” அசட்டையான பார்வையை மாரி மீது வீசியவர் அருகில் வரும்படி சைகை செய்தார்.

 

அவரை நெருங்கிய மாரி நடுங்கும் தன் கைகளால் செல்போனை வாங்கினார். “ம்மா.. வாணிம்மா..” குரல் தழுதழுத்தது. மகள் இன்னும் உயிரோடுதானிருக்கிறாள். கிணற்றிலிருந்து ஒலிப்பதாக மற்றவளின் குரல் கேட்டது. தான் ஒரு பையனை விரும்பியதாகவும் அப்பா ஒத்துக்கொள்ள மாட்டார் என்கிற பயத்தில் அத்தை வீட்டுக்கு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாகவும் சொன்னாள். “நான் அவனியாபுரத்துக்கு போன் பண்ணிக் கேட்டேனேம்மா..” எதுவும் பேச விரும்பாமல் மறுமுனை அமைதியாக இருந்தது.

 

நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த போலிஸ்காரர்களின் முகத்தில் எந்த சலனமுமில்லை. சற்றும் தங்களுக்கு சம்பந்தமில்லாத நாடகமொன்றின் பார்வையாளர்களாய் வெறுமனே நின்றிருந்தார்கள். மாரி அழுதுகொண்டே செல்போனை கான்ஸ்டபிளிடம் கொடுத்தார். “எம்மவ பத்திரமா இருக்காய்யா..” போலிஸ்காரர் கேலியாகச் சொன்னார். “நாந்தா மொதல்லயே சொன்னேனேய்யா.. ஏதாவது லவ் மேட்டராத்தான் இருக்கும்னு.. போ.. உன்னோட சாமானை எல்லாம் எடுத்துக்கிட்டு கெளம்பு.. இனியாவது பொண்ண பத்திரமாப் பார்த்துக்க..” முதல்நாள் பார்த்த புன்னகை அவருடைய முகத்தில் இன்னும் உறைந்திருந்தது.

 

வீட்டின் முன் தடுமாறித் திகைத்து நின்றிருந்தார் மாரி. உள்ளே நுழைய பயமாக இருந்தது. மாபெரும் சிலந்தி வலையொன்றில் சிக்கிக்கொண்ட சிறு பூச்சியாய் தன்னை உணர்ந்தார். தயக்கத்தோடு உள்ளே நுழைந்து சுவரோரமாகத் தான் எப்போதும் அமருமிடத்தில் சென்று அமர்ந்தார். சுற்றிலும் பார்க்க ஏதோவொன்று நிறம் மாறியிருப்பதான உணர்வு. மனதுக்குள் போலிஸ்காரர்கள் சொன்ன வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன. முதன்முதலில், அந்த வார்த்தைகளைக் கேட்ட தருணத்தில் உணர்ந்த வேதனையைப்போல வேறெப்போதும் அவர் உணர்ந்ததில்லை. எப்படி அவர்களால் அதைச்சொல்ல முடிந்தது? உயிருடன் ஒரு மனிதனை எரிப்பது போல அவரை சுட்டெரிக்கும் வார்த்தைகள். நகக்கண்ணில் ஊசி பாய்ந்ததாக வலி மனதை ஊடுருவித் தாக்கியது.

 

அந்த வீட்டுக்குள் வாணியை நினைவூட்டும் விசயங்கள் நிறைய இருந்தன அல்லது அத்தனை விசயங்களும் அவருடைய மகளின் நினைவுகளைச் சுமந்திருந்தன. சிறுவயது முதல் அவள் ஓடியாடிய வீடு. பெரிய மனுஷியானவளுக்கு சடங்கு சுற்றியதும் கூட இந்த வீட்டில்தான். கொடியில் காய்ந்த உடைகள், அங்ஙனத்தில் கழுவாமல் கிடந்த பாத்திரங்கள், சுவரில் கண்ணாடிக்குக் கீழே ஒட்டப்பட்டிருந்த பொட்டுகள், அடுப்படிச் சுவர்களின் எண்ணெய்ப்பிசுக்கு.. அனைத்தும் அவருக்கு வாணியை நினைவூட்டின. ஞாபகங்களின் தீவிரம் தாளாமல் கண்களை மூடினார். மூடிய இமைகளுக்குள் மெல்லிய வெளிச்சத் துணுக்குகள் மிதந்தன. அவற்றைத் தாங்க முடியாமல் எப்போதும் இருளுக்குள் இருக்க விரும்புவதைப் போல அவர் கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக்கொண்டார்.

 

தொலைவில் எங்கோ ஒலித்த ஒலிபெருக்கியின் சத்தம் மாரியைக் கலைத்தது. விழித்துப் பார்க்கையில் தனக்கு மிகவும் பழக்கப்பட்ட இடத்தில் இருந்தார். வறண்டு கைவிடப்பட்ட விளைநிலமொன்றின் நடுவில் நட்சத்திரங்களின் கீழே ஒரு பிரம்மாண்டமான மிருகம் போல அந்த டூரிங் கொட்டாய் நின்றிருந்தது. “அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிட உடமையடா..” ஒலிபெருக்கியின் குரல் காதுகளை நிறைக்க மாரி திகிலுற்றார். தான் எப்படி இங்கு வந்தோம் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. கால்கள் தடுமாறி மெல்ல தியேட்டரை நோக்கி நடந்தார். பாளம் பாளமாய் பிளந்து கிடந்த நிலத்தில் வெறுங்கால்களுடன் நடப்பது சிரமமாயிருக்க பாதையில் கவனம் செலுத்தி அங்கங்கே கிடந்த கருவேல முட்கள் குத்தாமல் நடக்க முயன்றார். அடியெடுத்து வைக்க முடியாத அளவுக்கு பாதங்கள் கனத்து பாரமாகத் தெரிந்தன. கட்டுக்கடங்காமல் திரிந்த நினைவுகளின்  மீதும் அவர் கவனம் கொள்ள வேண்டியிருந்தது. சமாளித்து நடந்து தியேட்டரின் முற்றத்தை வந்தடைந்தார்.

 

அந்த வளாகம் மொத்தமும் ஆள் நடமாட்டமின்றி காலியாகயிருந்தது. தியேட்டர் வாசலில் நின்று பணம் வாங்குபவன், சைக்கிள் ஸ்டாண்டில் இருப்பவன் மற்றும் பலகாரங்கள் விற்பவன் என யாரையும் காணவில்லை. கண்ணுக்குப் புலப்படாத மாய மனிதர்களின் நாடகமொன்றில் தெரியாமல் தானும் உள்ளே நுழைந்து விட்டதாக அவருக்குத் தோன்றியது. அச்சம் இப்போது மெல்ல மாரியை விட்டு விலகியிருக்க அடுத்து என்ன நடக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாயிருந்தார். ஒலிபெருக்கியின் பாடல் சட்டென்று நின்று தியேட்டரினுள்ளே எரிந்து கொண்டிருந்த ஒரே மஞ்சள் நிற குண்டுபல்பும் அணைந்தது. ஒரு அருவியின் சத்தத்தோடு ஆப்பரேட்டர் அறையிலிருந்து புறப்பட்ட ஒளிவெள்ளத்தால் திரையில் படம் ஓட ஆரம்பித்தது. எப்போதும் செய்வதைப்போல திரைக்கு அருகில் சென்று மணலைக் குவித்து மாரி அதன் மீது அமர்ந்து கொண்டார். யாரோவொரு நடிகன் வெளிநாடு சென்று வந்த ஆவணப்படம். சிறிது நேரம் கழித்து எங்கிருந்தோ ஒலித்த மணியோசை கேட்டு மாரியின் புலன்கள் கூர்மையாயின. துண்டுப்படங்கள் ஓட்டுவதற்கான சமிக்ஞை. திரையில் மெல்ல காட்சிகள் மாறின.

 

ஒரு சிறிய குடிசை வீட்டுக்குள் நுழையும் காமிரா அதன் ஒடுங்கியதொரு பகுதியை நோக்கி விரைந்தது. கிழிந்த கசங்கிய புடவை திரைச்சீலையாய்த் தொங்கும் குளியலறைக்குள் யாரோ குளித்துக் கொண்டிருந்தார்கள். மின்சாரம் பாய்ந்தது போல மாரியின் உடல் விரைக்க நிமிர்ந்தமர்ந்தார். அந்த இடம் அவருக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாகத் தென்பட்டது. சட்டென்று புரிந்தது. அது அவருடைய வீடு. திரைச்சீலையை விலக்கி உள்ளே நுழைந்த காமிரா அந்தப்பெண்ணின் முகத்தில் நிலைத்து நின்றது. பின் மெல்ல அவளுடல் முழுதும் ஒரு நாகத்தைப் போல படர்ந்து ஊர்ந்தது. குளிப்பதற்காக அணிந்திருந்த உள்ளாடையின் முடிச்சுகளை காமிராவை நோக்கிச் சிரித்தபடி மெல்ல அவள் அவிழ்க்கத் தொடங்கினாள். விம்மும் மார்புகளும் வளைவுகளும் திரையை நிறைத்தன. மாரி பதறியெழுந்து அலற முற்பட்டார். ஆனால் வார்த்தைகள் வெளிவராமல் அவருடைய உதடுகளுக்குள்ளாகவே முடங்கின. பலவீனமான சொற்களில் எதிர்ப்பை முணுமுணுத்தபடி கண்களைத் திரையிலிருந்து அகற்ற முடியாமல் அவர் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணுக்குப் புலப்படாததொரு மாயநதி அவருடைய உலகை மொத்தமாகச் சுழற்றியடித்தது. அதனை எதிர்ப்பதாக அவருடைய மனம் எதிர்த்திசையில் சுழல முயன்றது. சுழன்று சுழன்று மனதின் தர்க்கங்களோடு போராடி வளைந்து நெளிந்து எதிர்த்து சட்டென்று ஒரு நொடியில் தன்னை முற்றிலுமாய்த் தொலைத்து நின்றது. புனிதங்களால் நிரப்பப்பட்ட உறவுகளின் எல்லையை அந்தப்படம் மெல்ல மெல்ல அரித்துத் தின்றது.

 

தவு தட்டப்படும் சத்தம் கேட்டு மாரி பதறியெழுந்தார். வீட்டில்தானிருக்கிறோம் என்கிற நிதானம் பிடிபட சற்று நேரமானது. கதவின் மறுபக்கம் ஏதோவொரு குரல் கேட்டது. ஆனால் குரலை வைத்து ஆளை அடையாளம் காண முடியவில்லை. மெதுவாக நடந்து கதவினருகே வந்து நின்றார். இப்போது அவரால் வெளியிலிருந்து ஒலிக்கும் குரலைத் துல்லியமாகக் கேட்க முடிந்தது. உடல் நடுங்கியது. ஒருகணத்தில் அவர் அந்தக் குரலை அடையாளம் கண்டுகொண்டார். வெளியே வாணியின் குரல் தழுதழுத்து ஒலித்தது. மாரியின் மனதுக்குள் ஆயிரமாயிரம் எண்ணங்கள் மலையாய்க் குவிந்து நின்றன. என்ன செய்வதென்று தெரியாமல் கற்சிலையாக உறைந்து நின்றிருந்தார். திணறடிக்கும் குழப்பங்களிலிருந்து வெளியேறி நிதானித்து மெல்ல கதவைத் திறந்தார்.

 

வாணி அங்கே மணக்கோலத்தில் நின்றிருந்தாள். அவளது மாப்பிள்ளையும் உடன் வந்திருந்தான். அப்பா என்று கதறிக்கொண்டே வேகவேகமாக ஓடி வந்து காலில் விழுந்தவளைத் தொட்டுத் தூக்கினார். ஒரு கணம் வாஞ்சையோடு முகத்தை உற்று நோக்கியவர் சட்டென்று வெறி கொண்டவராய் அவளை உதறித் தள்ளினார். வாணி அலறியபடி கீழே விழுந்தாள். அவளைப் பார்க்காமல் பின்புறமாகத் திரும்பி நின்று கொண்டார். “வேணாம்.. எங்கேயாவது போயிரு.. நல்லாயிரு.. ஆனா என்கிட்ட வராதே.. என்ன ஒருநாளும் இனி நீ அப்பான்னு கூப்பிடக்கூடாது” விம்மலும் அழுகையுமாக நடுங்கும் குரலில் கத்தினார். அவள் வெளியேறிச் சென்ற பிறகும் வெகு நேரம் அவருடைய கதறல் அந்த வீட்டுக்குள் கேட்டுக் கொண்டேயிருந்தது.

 

நிலா வெளிச்சத்தில் நான் மாரியின் முகத்தைப் பார்த்தேன். அவர் பார்வை எங்கோ தொலைதூரத்தில் நிலைகுத்தியிருந்தது. நான் அவரைப் பிடித்து உலுக்கினேன். சடாரென்று என்பக்கமாகத் திரும்பிப் பார்த்தார். மிருகத்தின் வன்மம் அந்தக் கண்களில். பிறகு அவற்றில் கண்ணீர் பெருக்கெடுத்து கண்கள் குளமாயின. இப்போது வன்மம் மறைந்து அங்கே கழிவிரக்கம் மட்டுமே மிச்சமிருக்க மாரியின் தலை தாழ்ந்தது. வார்த்தைகள் வெடித்துக் கிளம்பின. “அந்தத் தேவுடியா பசங்க பேசுன பேச்சையெல்லாம் கேட்டபொறவு என்னால எம்மகள மகளா மட்டும் பாக்கவே முடியல தம்பி..” முகத்திலறைந்து கொண்டு அழ ஆரம்பித்தார். நான் ஏதும் பேசாமல் வெறுமனே அவரைப் வெறித்தபடி நின்றிருந்தேன்.

 

2 COMMENTS

  1. கார்த்திகை பாண்டியனின் பிளவு – நல்ல கதை, நம்மையும் பிளவு படச் செய்து மாரி அவ்வாறில்லையென சொல்கிறது.
    இப்படியெல்லாம் நடக்குமாங்குற பிளவு ஏற்படுத்துகிறது. நடக்குமென நிசம் சொல்கிறது. எனக்குப் பிடித்துள்ளது.

  2. இந்த கதை சினிமா மோகம் தாண்டி சுய ஒழுக்கத்தை சமூக கேள்விகளால் கட்டமைக்கிறது .மாரியின் சினிமா ஆசை (பிட்டுபடம்) யதார்த்த உலகியல் என்று போதும் கடைசி தருணங்களில் மனவியல் போக்கையும் சுட்டுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.