பெரிய எழுத்து டான் க்விக்ஸாட் கதை -மொழிபெயர்ப்பு சிறுகதை

மூலம்: ரிவ்கா கேரன் (ஹங்கேரி)

தமிழில்: எஸ். சங்கரநாராயணன்    


 

ஒரு ஜனவரி மாத  அந்திநேர மயக்க இருள். பேராசிரியரும் அவர் மனைவியும் இஸ்லமொராதா பகுதியின் கடற்கரைப் பக்கமாக  , சாலையோர பயணியர் இல்லத்துக்கு வந்தார்கள். புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஓய்ந்து விருந்தினர் இல்லாமல் வெறிச்சிட்டிருந்தது மோட்டல். வெக்கையும் புழுக்கமுமாய் பிரதான தெருவே பாசி பிடித்து நத்தைகள் அப்பிக் கிடந்தது. கடற்கரையில் ஏறிக்கிடக்கும் தோணிகள் இடையே பெலிகன் பறவைகள் மரப்பாலத்தின் பட்டைகளில் சிலையாய்த் தவமிருந்தன.

நீண்ட பயணத்தின் களைப்பில் அவர்கள் வியர்த்து கசகசத்து அயர்ந்திருந்தார்கள். ஒரு குளியல் போட்டு, உடை மாற்றிக்கொண்டு. கீழே வந்தார்கள். உணவுப்பொருட்களையும் பானங்களையும் விற்கும் யந்திரங்களை, பனிச்சில்லுகள் கக்கும் பெட்டிகளைத் தாண்டி, நீச்சல் குளம் கடக்க, வெளியே புல்வெளி. அங்காங்கே பிளாஸ்டிக் தம்ளர்கள் சிதறி காற்றில் உயிர்கொண்டு புரண்டன. பின்பக்க கார் நிறுத்தும் இடம் ஜிலோவென்னிருந்தது. சற்று தயங்கினாற் போல அவள் நின்றாள். அங்கேயிருந்து கடலைப் பார்க்க கிளைபிரிந்தது சென்று ஒரு ஒற்றையடிப்பாதையை தந்தது. ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு ஆசுவாச நடை. சாண்டல் செருப்புகள் மணலில் சிக்காதபடி கவனமான நடை. கரை சின்னச் சின்ன அகல உப்பங்கழிகளாக ஊடறுபட்டிருந்தது. உட்காரப் போட்டிருந்த நாற்காலிகள் தாறுமாறாய்க் கிடந்தன. அவற்றில் ரெண்டை இழுத்து, தூசி தட்டிவிட்டு அமர்ந்தார்கள்.

ஸ் ஸப்பா, ஒரு வழியாஎன்றார் பேராசிரியர்.

அவள் பேசவில்லை. சுற்றிலுமான அமைதி. காற்றலைப்பில் கடல் ததும்பியபோது வண்ணங்கள் மாறின. வெளிர்நீலம், ஊதா, கருநீலம், பழுப்புஇன்னும் என்னென்னவோ குழைவுகள். அப்படியே தாமிர மெருகு.

‘ரம்மியமாத்தான் இருக்குஎன்றாள் அவள். ஆனா ஜிலோன்னிருக்கு

நாம அப்பிடி இருக்கணும்னு தானே இங்க வந்தோம், இல்லையாஎன்றார் அவர். ஜெருசலம் அப்படியாய் இல்லை. அதான் அவர்கள் கிளம்பி வந்திருந்தார்கள்.

ம்என்றாள் அவள். தகதகக்கும் வெளிச்சத்தில் அவள் கண்கள் பெரிய கடல்புறா ஒன்று சிப்பிச் சிதறல்களுக்குள் என்னவோ கிளறிக் கொண்டிப்பதையே பார்த்தன. தொடுவானத்தில் ஒரு படகு நிழலுருவம் காட்டியது. மெல்ல ஆகாயம் வைரங்களை வாரியிறைத்தது. கண்களால் அவர்கள் அவற்றையெல்லாம் அனுபவித்தபடி தங்கள் நினைவுகளுக்குள் மெல்ல அமிழ்ந்தார்கள். குப்பென எழுந்த அலை சீறி வந்து கரையைக் கடித்து உள்வாங்கியதில் வெண்சரிகை மடிப்புகள் பரந்து சுருங்கின, குழந்தை பாலருந்துகிறாப் போல அதன் சிறு சப்தம்காற்றில் வெண் சரிகையிட்ட மாதிரி, ஒரு சாக்ஸஃபோன் மேல்ஸ்தாயியில் இழைகிறது.

திரும்ப அமைதி கவிகிறது. இசை அடங்கிவிட்டது. சின்ன அலையடிப்பும் நீர் பாயும் ஒலியும் தவிர வேறு சப்தம் இல்லை. கதகதப்பான ஈர மணல். கால்களை அதில் புதைத்துக் கொண்டாள் அவள்.

திடுதிப்பென்று ஒரு ஒளிக்கற்றை அந்த இருட்டைக் கீறியது. கடல்பக்கமிருந்து வந்தது அது. கரையில் இருந்து ஒரு மின்னல் போன்ற வெளிச்சம் பதில் போல. தந்தி பாஷை சமிக்ஞை போல விரைவான பரிமாற்றங்கள்.

‘அதை கவனிச்சீங்களா,’ அவள் கேட்டாள்.

ம், என்றார் பேராசிரியர்.

‘என்ன அது,’ அவள் கேட்டாள்.

‘எனக்கு எப்படித் தெரியும்,’ அவர் பதிலாய்க் கேட்டார். யாரோ மீனவர்களாட்டம் இருக்கு.

விளக்குகள் அணைவதும் எரிவதுமாய். தொடுவான வெளி தகதகத்து மெல்ல அடர்ந்துகொண்டு வந்தது. இந்தத் தீவை நோக்கி ஒரு ஒளிப்பந்து போல அந்த ஒளிக்கற்றை சர்ரென்று வந்து…. சடாரென்று அணைந்துவிட்டது அது. கரையில் அலைகள் ஹோவென பெரிதாய் எழும்பின.

அவள் எழுந்துகொண்டாள். அறைக்குத் திரும்பிவிட நினைத்தாள். அவர் கொஞ்சம் முனங்கி, பெருமூச்சு ஒன்றை விட்டார். உடம்பைத் திரட்டி எழுந்துகொண்டு கிளம்பினார். மீனவர்கள்மெல்லச் சொன்னார். தனக்கே பேசிக்கொள்கிறாப் போலிருந்தது.

கைகோர்த்துக் கொண்டபடி அவர்கள் அறையைநோக்கித் திரும்பினார்கள். திரைச்சீலைகளும், மெத்தைவிரிப்புகளும் ஒரே துணி, ஒரே பூவேலைப்பாடு. மங்கலான அறைவிளக்கு வெளிச்சம்.

‘ம்ப்ச், ஒண்ணும் சொகமில்ல, இதைவிட நல்ல இடமா தங்கியிருக்கலாம்.’

‘சமுத்திரம் பக்கமா போணும்னு நீதானே  ஆசைப்பட்டே…’ அலர் பதில் சொன்னார்

இதைவிட பக்கத்துக்கு எங்க போறது?’

உடம்பெங்கிலுமாய் மணல் ஒட்டிக்கொண்டு கூட வந்திருந்தது. தண்ணித்தொட்டியில் அலசிக் கொண்டார்கள்.

‘ஏம்மா உனக்குப் பசிக்கலியா?’

‘ப்ச். வெளிய இறங்கவே வேணான்னு இருக்கு,’ என்றாள் அவள்.

‘பிட்சா கொண்டுவரச் சொல்லிறட்டுமா, அவர் கேட்டார்.’ அவள் தோளைக் குலுக்கிக்கொண்டாள்.

‘மேல என்ன ஊத்தலாம்,’ என்றவர், அவள் பதில் சொல்லாள் என உணர்ந்து, ‘வழக்கமானதே சொல்லிறலாந்தானே? ‘ என்றார்.

‘வழக்கமானதே,’ அவள் சிரத்தையில்லாமல் பதில் சொன்னாள். கைப்பையில் இருந்து சின்ன நோட்டுப்புத்தகத்தை எடுத்தாள். ஒண்ணுங்கீழ் ஒண்ணாக எண் கோபுரம். செலவுக் கணக்குகளைக் கூட்ட ஆரம்பித்தாள்.

அந்த மனுசன் தொலைபேசியில் கூப்பிட்டு பிட்சா கொண்டுவரச் சொன்னார்.

‘நியூயார்க்கில் கண்டபடி பணவிரயம் பண்ணிட்டம்,’ என்றாள்.

‘அதான் இப்ப வெறும் பிசாத்து பிட்சான்னு டப்பா டான்சாடிட்டது’ – ஆனால் அதை உற்சாக தொனியில் சொன்னார். நாம சின்னப் பிள்ளைங்களா, வயசு கொறஞ்சிட்டாப்ல இருக்கில்ல?

‘இல்ல’, என்றாள் அவள்.

அவர் என்னவோ தனக்குள் முணுமுணுத்தபடி முதுகுக்கு ரெண்டுதலையணையால் அணைகொடுத்துக் கொண்டார். ஃபைலை சர்ரென்று ஜிப்பை பிரித்து ஒரு காகிதக்கற்றையை வெளியே எடுத்தார்.

‘நாளைக்கு நாம கீ வெஸ்ட்டுக்குப் போலாம், ஹெமிங்வே வாழ்ந்த வீட்டைப் போய்ப் பாப்பம், என்ன இவளே’ என்றார் அவர். அவளை உற்சாகப்படுத்த அவர் கங்கணங் கட்டிக்கொண்டாப் போலிருந்தது.

பல் தெரிய அவள் சிரித்தாலும், அதில் ஒரு எரிச்சல்.

‘மறுபடியும் அந்தப் பூனைங்க….’ அவள் சொன்னாள். ‘எனக்கு பூனைன்னாலே அலர்ஜிப்பா.’ ஹெமிங்வே வீட்டில் பூனைகள் இருக்கும் என நினைத்தாளா தெரியவில்லைநாளைக்கும் இங்கயே இருப்பம். நாளைய பொழுதை கடற்கரையில் ஓட்டுவம்.

அவர் பதிலொன்றும் சொல்லவில்லை. கண்ணாடியை மாட்டிக்கொண்டார். விளக்கொளியை வாசிக்க வசதியாகச் செய்துகொண்டார். வாசிக்க ஆரம்பித்தார். அவளானால் விடுதி பற்றிய விவரங்கள் அடங்கிய பளபள அட்டையை மேய்ந்தாள்

ஒவ்வொரு கூடத்திலும் தீயணைப்பான் ரெண்டு வெச்சிருக்காங்க,’ என்றாள்.

‘ம்…’ என மென்மையாய் முணுமுணுத்தார் பேராசிரியர். கைத்தாள்களைக் கீழே பரப்பி, தன் பையிலிருந்து சில கரன்சி கோட்டுகளை உருவி மனைவியிடம் நீட்டினார்.

‘பிட்சா இப்ப வந்திரும்…’

அந்தப் பணத்தைக் கையில் வாங்கியபடியே படுக்கையில் பரப்பிக்கிடந்த மற்ற காகிதங்களை ஒருபார்வை அவள் பார்த்தாள். அதில் எதையோ வாசித்திருக்க வேண்டும்… 

செர்வான்டெஸ், என்றாள். (செர்வான்டெஸ்நாவலாசிரியர்.) ஏறத்தாழ முப்பது வருஷங்கிட்ட ஆச்சி இல்லியா? அவர் எழுதிய டான் க்விக்சாட் என்ற அதே நாவலை, இத்தனை வருஷமாவா ரசிச்சிப் படிக்கிறீர்கள்,’ என்ற எள்ளல் இருந்தது அதில்.

‘ம்… ‘ அவர் திரும்ப முனங்கினார். கொஞ்சம் சரிந்து இன்னும் வசதியாய் சாய்ந்து கொண்டார். ‘உன்னோட ஸ்படிகம் சம்பந்தப்பட்ட ஒரே வேலையில் நீ எத்தனை வருஷமா முட்டிட்டிருக்கே?’

‘அதெல்லாம் அப்பிடி ஒரே மாதிரின்னு சொல்ல முடியுமா என்ன,’ என்றாள் அவள்

ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா நாம கண்டுபிடிக்கறம்.’

‘செர்வான்டெஸ் எழுத்துல கூட புது விஷயங்கள் கிடைக்குது,’ என்றார் பேராசிரியர்.

நீ சரிமூடுல இல்ல போல…’

‘ஆமா. எனக்கென்ன ஆச்சி, எனக்கே தெர்ல,’ அவள் சொன்னாள். ‘ திடீர்னு வயசாயிட்டா மாதிரி தளர்ந்திட்டேன். பாருங்க என்னை.’

‘ஏன், நல்லாதான் இருக்கே,’ என்றார் கணவனாக.

வெளியே காற்றின் இரைச்சல் கிளம்பியது. இன்னொரு சத்தம். என்னவோ தொம் என்று விழுந்தாப்போல.

யாரோ படிகளில் கீழிறங்கி ஓடுகிறார்கள். கதவை யாரோ ரெண்டுமுறை தட்டுகிறார்கள். அவள் கொட்டாவி விட்டாள். பணத்தை எண்ணியபடியே போய் கதவைத் திறந்தாள்.

கருத்த வாலிபன் ஒருவன் சடாரென்று சுழற்காற்று போல உள்ளே நுழைந்தான். உடம்பிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.

‘ஷ்ஷ்….’ என கிசுகிசுத்தான்

போலிசைக் கூப்ட்றாதீங்க, தயவுசெஞ்சி போலிஸ் வேணாம்…’

 

பேராசிரியர் தலைநிமிர்த்திப் பார்த்தார்.

அவள் அப்படியே அயர்ந்துபோய்க் கல்லாய்ச் சமைந்து நின்றாள். கதவைச் சாத்தி அதன்மேல் சாய்ந்தபடி அவனும் அப்படியே அசையாது நின்றான். கண்கள் பயத்துடன் அலைபாய்ந்தன.

‘என்ன நடக்குது இங்க?’, என்று கேட்டார் பேராசிரியர். ‘யார் இந்தாளு?’

‘யாரோ திருடன்,’ என்றாள் அவள். குரலில் ஒரு வக்ரம். ‘உங்க பணப்பையை அவனாண்ட குடுத்துருங்க, ஜல்தி.’

‘இல்ல பணம் வேணாம், தயவு பண்ணி வேணாம். பணம் வேணாம். போலிஸ் வேணாம். கூப்ட்றாதீங்க…’

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்

‘உனக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா?’- அவள் கேட்டாள்.

‘ம்ஹும், அதெல்லாம் இல்ல, என்றான் அந்தப் பையன்’ கிசுகிசுப்பான குரலில். பேராசிரியர் தொலைபேசிப் பக்கம் கையைக் கொண்டுபோனார். சட்டென அவர்கையைப் பிடித்துத் தடுத்து, தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான்.

‘போலிசைக் கூப்பிட வேணாம்எனக் கெஞ்சினான்.’ அரைக் கால்சட்டை. சிவப்பு வண்ண டிசட்டை. வெறுங்கால்கள். செருப்பு இல்லை. அவன் நின்ற இடத்தில் தரைவிரிப்பில் சிறு குளமாய்த் தண்ணீர் தேங்கியது.

‘நீ யாரப்பா,’ பேராசிரியர் கேட்டார். இருந்த பரபரப்பில் கலவரப்படக் கூட நேரமில்லாதிருந்தது.

முகத்தை விரலால் வழித்துக் கொண்டான் அந்த இளைஞன். ஒரு துள்ளல் போன்ற அசைவுடன் வெளி உப்பரிகையைக் காட்டினான்.

‘கியூபா’, என்றான் ரகசியம் போல.

அவர்கள் ஒருவரையொருவர் வெறித்தார்கள். என்ன சொல்றான் இவன், என்கிறாப் போல.

‘ஏம்ப்பா நீ கியூபாவில் இருந்து வரும் அகதியா?…’ பேராசிரியர் ஸ்பானிய மொழியில் கேட்டார்.

அவன் செருமிக் கொண்டபோது கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. வேகவேகமாய்ப் பேசினான். ‘கரையில் யாரோ அவர்களுக்காகக் காத்திருந்தார்கள். ஆனால் ஒரு பெரிய அலை வந்ததுகள்ளத்தோணி மூழ்கிவிட்டது. சீன்யோர்சீன்யோரா… (ஐயா அம்மணிஎன ஸ்பானிய மரியாதை த்வனி) ஆனால் என்ன கேடுகாலம்கடல் காவலர் அவர்களைக் கண்டுகொண்டார்கள்போர் ஃபேவர், (தயவுசெஞ்சி) அவங்க தேடிவந்தால் பிடிச்சிக் குடுத்துறாதீங்க…’

ரெண்டு கண்ணிலும் கண்ணீர் சிறு நதியாய்க் கிளம்பி கன்னத்தை நனைத்தன.

‘சரி அழாதே, மனசை திடப்படுத்திக்க,’ என்றார் பேராசிரியர். ஒரு போர்வையை எடுத்து அவனைப் போர்த்திவிட்டார்.

அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள். எதுவும் பேசவில்லை. கதவு மீண்டும் தட்டப்பட்டது. அந்தப் பையன் பதறி நடுநடுங்கினான்.

பேராசிரியர் அவனைக் குளியல் அறைக்குள் தள்ளினார். குளமாய்த் தேங்கிக் கிடந்த தண்ணீரில் பெரிய துண்டு ஒன்றைப் போட்டு மூடினார். மனைவி என்ன சொல்கிறாள் என்கிறாப் போல அவளைப் பார்த்தார்.

பிட்சா வந்திருக்கும்,’ என்றாள் அவள். அவளே போய்க் கதவைத் திறந்தாள். பெட்டியை வாங்கிக்கொண்டு பணங் கொடுத்தாள்.

இந்த மாலை உங்களுக்கு சிறப்பாக அமையட்டும், என்றான் பரிசாரகன்.

‘கதவைச் சாத்து,’ என அவர் வலியுறுத்தினார். அவள் பிட்சாவை வட்டவடிவ மேஜையில் வைத்தாள்.

‘நாம என்ன பண்ணலாம்,’ அவள் கேட்டாள். திரும்ப தொலைபேசிக்கு இணைப்பு கொடுத்தாள். ஆனால் எடுத்துப் பேச முயலவில்லை.

‘யோசிச்சி சொல்றேன்,’ என்றார் கணவர். கதவை உள்பக்கம் தாளிட்டார். சங்கிலியையும் போட்டார். திரைகளை இழுத்துவிட்டார்.

‘போலிசுக்கு தகவல் சொல்லணும்,’ என்றாள் அவள்.

அவர் பதில் சொல்லவில்லை. கியூபாவாசியை, ‘ ஏய் வெளிய வாப்பாசாப்பிடுப்பாபசியா இருப்பே.’ என்றார்

வாலிபன் தலையாட்டினான். கடலிலேயே அவர்கள் மூணுநாள் வாசம். கிட்டத்தட்ட சாப்பிடவோ குடிக்கவோ எதுவும் கிடைக்கவில்லை.

பெரிய பெரிய வாயாய்க் கடித்தான். ‘ இந்தா’ என்று இன்னொன்றை எடுத்து நீட்டினார் ஆதுரமாய். அப்படியே தரைவிரிப்பில் உட்கார்ந்து அவரும் ஒரு துண்டு எடுத்துக்கொண்டார்.

பசியில்லை, என்றுவிட்டாள் அவள்.

அறையில் வந்த குழாய்த்தண்ணீரையே அவர்கள் குடித்துக் கொண்டார்கள். அறையைவிட்டு வெளியே வர அவர்கள் விரும்பவில்லை. கண்ணை மூடிக்கொண்டு கடகடவென்று அவன் தண்ணீர் குடித்தான்.

‘புதிய வாழ்க்கை வேண்டும்’ எனக்கு, என்றான் அவன்.

அவரும் அவளும் திரும்ப ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘நாங்களே இங்க சுத்திப்பாக்கன்னு வந்தவங்க தான்,’ அவள் சொன்னாள். ‘உல்லாசப் பயணிகள். சட்டத்துக்குப் புறம்பா நாங்க எதுவும் செய்யேலாது…’

அவளும் ஸ்பானிய மொழி பேசியதில் அவன் கண்களில் பிரகாசம்.

‘அம்மணி, என்னை போலிசுகிட்ட மாத்திரம் பிடிச்சிக் குடுத்துறாதீங்க,’ என்றான் அவன். அப்படியே பேராசிரியரை ஒரு கெஞ்சலான பார்வை பார்த்தான். அவர் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டிருந்தார்.

‘இதைப்பத்தி நான் யோசிக்கணும்,’ என்றார் அவர். ‘அதுக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்…’

கொஞ்சநேரத்தில் வெளியே கீழ்த்தளத்திலிருந்து எதோ பரபரப்பான சத்தங்கள். வண்டிவந்து பிரேக்போட்டு நிற்கும் க்கிர்றீச். கூடத்தில் அதிகாரக் கட்டளைகள் அதிர்ந்தன. ஊய்ங் என விசில். கதவுகள் தடதடவெனத் தட்டப் படுகின்றன. படிகளில் ஜனங்கள் ஏறுவதும் இறங்குவதுமான களேபரம்.

வேட்டையாடப்படும் மிருகம் போல அவன் துள்ளித் தவித்தான். தோளில் இருந்து அவனது போர்வை நழுவி விழுந்தது. அவள் சுவரோடு அழுந்திக் கொண்டாள். அவர் அறையை கவனமாய் நோட்டமிட்டார். உடம்பு ஜில்லிட்டிருந்தது. அந்த கியூபாக்காரனைப் படுக்கையில் படுத்துக்கொள்ளச் சொல்லி சைகை காட்டினார். உச்சிமுதல் பாதம்வரை முழுக்க போர்த்தினார். கனமான கம்பளிப் போர்வை. மேலே ரெண்டு தலையணை. ஒரு சூட்கேஸ் பெட்டி. ‘பையா, மூச்சுவிடப்டாது, ‘ என்றார் கடுமையாக.

கடற்படைக் காவலர்கள் அறைஅறையாக வந்தார்கள். அடையாள அட்டை காட்டிவிட்டு, இடைஞ்சலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, சட்டவிரோதமா கடல் வழியா ஊருக்குள்ள ஊடுருவியிருக்கிற சிலரைத் தேடுவதாகச் சொன்னார்கள். அவர்களுக்கு சட்டவிரோதமா அடைக்கலம் தரக் கூடாது. தந்தால் தந்தவர்களுக்கும் ஜெயில் தண்டனைன்னு தெரிஞ்சிக்கணும், என்றார்கள். பேராசிரியர் தலையாட்டினார். ஈரத் துண்டையும் போர்வையையும் குனிந்து எடுத்தார். ‘ நாங்கள் நீச்சல் குளத்தில் இருந்துதான் வர்றம், எதையும் பாக்கலியே,’ என்றார். அவர் மனைவி அமைதிகாத்தாள். அதிகாரிகள் உள்ளே வந்தார்கள். குளியல் அறைக்குள் எட்டிப் பார்த்தார்கள். திரும்ப மன்னிப்பு கோரினார்கள்.

‘இந்த மாலை உங்களுக்கு சிறப்பானதாக அமையட்டும்.’

‘உங்களுக்கும்,’ என்றார் பேராசிரியர். கதவைச் சாத்திவிட்டு வெளி சந்தடிகளை கவனித்தார். காத்திருந்தார். போய் தலையணைகளை, சூட்கேசை அகற்றினார். கம்பளியை நீக்கினார். அவன் அப்படியே செத்த விறைப்பாய் அசையாமல் கொள்ளாமல் கிடந்தான்.

‘நீ எழுந்துக்கலாம்…’

அவள் மெல்ல ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்தாள். அந்த கியூபாக்காரன் நன்றியாய் சில வார்த்தைகள் முணுமுணுத்தான். இன்னுங்கூட அவன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. பதறாதப்பா, அமைதிஎன்றார் பேராசிரியர். அவன்மேல் ஒரு போர்வையைப் போர்த்தினார். அப்படியே போய்த் தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்தார். மியாமியில் ஒரு டாங்கோ நாட்டியப் போட்டி. அதை கொஞ்சம் வெறித்தார்கள்.

‘நமக்குப் பைத்தியம்தான்,’ அவள் ஹிப்ரு மொழியில் சொன்னாள்.

பேராசிரியர் பதில் சொல்லவில்லை. அறைமுழுசும் சிதறிக்கிடந்த காகிதங்களை அவர் சேகரித்தார்.

‘நானும் இவளும் அர்ஜென்டினாவில் பிறந்தவர்கள்,’ என்றார் அந்த இளைஞனிடம். ‘ நான் ஸ்பானிய இலக்கிய ஆசிரியன்.’ காகிதங்களை ஃபைலில் வரிசைப்படுத்தினார்.

‘சென்வான்டெஸ் பத்தி ஒரு சொற்பொழிவு, அதற்கு தயார் செஞ்சிட்டிருக்கேன்,’ என்றார் பாதிவிரிந்த புன்னகையுடன். ‘டான் க்விக்ஸாட் தெரியுமா?’

‘உங்களுக்கு என்ன பைத்தியமா, அவன்ட்டப் போயி…’ என்றாள் அவள்.

‘ஸ்பானிய மொழிலயே பேசு, அது உனக்குக் கஷ்டமா இல்லையின்னா,’ பேராசிரியர் எகத்தாளம் பண்ணினார். ‘ அப்ப நம்ம மூணு பேருக்குமே விளங்கும், இல்லையா?’

அவர் மனைவி அவரை பிரமிப்புடன் பார்த்தாள்.

நாம என்ன காரியம் பண்ணியிருக்கம் தெரியுதா, சட்டத்தை மீறியிருக்கோம்,’ என்றாள் அவள்.

‘தெரியும்,’ என்றார் அவர்.

‘சட்டத்துக்கு விரோதமா உள்ள ஊடுருவிய ஒரு அகதியை நம்மஅறைல ஒளிச்சி வெச்சிருக்கம்…’

‘தெரியும்…’

புதிய பாஷை, அவனுக்குப் புரியாமல் தலையை இப்படி அப்படி அசைத்தான் அவன்

சட்டென பெரும் ஏக்கத்துடன் சொன்னான். ‘ டான் க்விக்ஸாட், டான் க்விக்ஸாட்…’ அவள்முன் மண்டியிட்டான். மெல்லச் சொன்னான்…. ” இளவரசி டல்சீனியா…”

அவள் துணுக்குற்றாள்.

 

இளவரசி டல்சீனியா. என் இதயத்தில் குடியேறியவளே. உன் பாராமுகத்தால் என் நெஞ்சை துக்கத்தில் பரிதவிக்க விட்டவளே. உன் அழகின் சந்நிதியில் இருந்து என்னை வெளியே நிறுத்துகிறாய். பெருமாட்டி. உன் இதயத்தில் என் நினைவுகளை அழித்துவிடாதே. இந்த அடிமை இத்தனை துயரத்திலும் உன் நேசத்தையே எண்ணி ஏங்கிக் கிடக்கிறான்.”

என்ன இதெல்லாம், என அவள் கலவரப்பட்டாள். அதேநேரம் பேராசிரியர் அயர்ந்து போனார்.   

‘இந்த மேற்கோள் எல்லாம் உனக்கு எப்படித் தெரியும்,’ அவர் கேட்டார்.

இளைஞன் பேசவில்லை. ஆனால் இனிய நினைவுகள் உள்ளே கவிந்தாப் போல அவன் முகம் பரவசமாகி யிருந்தது.

‘நான் வளர்ந்ததே டான் க்விக்ஸாட் கதைகேட்டுதான்..’ என்றான் அவன்.

‘அதெப்படி? ‘- என அவர் ஆச்சர்யம் காட்டினார்.

‘நிறுத்துங்கப்பா, நமக்கு ஒரு பிரச்னை, முதல்வேலை அதைத் தீர்க்கிறது…’ அவள் பொறுமை யிழந்திருந்தாள்.

அவன் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டிருக்கவில்லை. அப்படியே தரைக்கம்பளத்தில் கூனி உட்கார்ந்தான். எதுவும் பேசவில்லை.

பிறகு, ‘பயம்மா இருக்கு, பயம்ம்ம்ம்,’ என்றான்.

‘பயப்படாதேநாங்க என்ன செய்யலாம்னு பாத்திட்டிருக்கம், சரியா? என் பேர் ஏனெஸ்ட். இவள் என் மனைவி அமாலியா. கை நீட்டினார்.’ நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறாப் போல, பாய்ந்து அதைப் பற்றினான்.

‘மிகேல், என்று தன் பெயரைச் சொன்னான். (டான் க்விக்சாட் நாவலாசிரியர் பெயர் மிகேல் டி லா செர்வான்டெஸ்.)’ நாற்காலிக்குக் குனிந்து தயங்கினான். அவள் கையைப்பற்றி மரியாதையாய் முத்தமிட்டான்.

அதிரடியாய் உள்ள பூந்திட்டேன், என்றான். பெருமாட்டி மன்னிக்கணும்.

அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள், என்றாலும் கையை உருவிக்கொள்ள வில்லை.

‘இது ஏதோ கனவு போலிருக்குநமக்கு பைத்தியம் பிடிச்சிட்டது.’ அவள் கணவர் கையில் ரிமோட்டை எடுத்து டி.வி. சத்தத்தை அதிகப்படுத்தினார்.

‘அமைதியாயிரு, கலவரப்படாதே,’ அவர் வேண்டிக்கொண்டார். ஆனால் அவரே பதட்டமாய்த்தான் இருந்தார். அந்த கியூபாக்காரன் வானத்தைப் பார்த்து கைதூக்கியிருந்தான்.

துக்க சந்தர்ப்பங்களில் அதிர்ஷ்டம் கதவைத் திறந்து விடுகிறது, ஆறுதல் அளிக்குமுகமாக…” என அவன் சங்கீத எடுப்பாய் மேற்கோள் காட்டினான்.

ஆகா, என ஆனந்தப்பட்டார் பேராசிரியர். பதினைந்தாவது அத்தியாயத்தில் வருகிறது. ”சில யாங்சுசன்களுடே டான் க்விக்ஸாட் சிக்கிக் கொள்கிற சாகசப் பகுதி தொடர்பான அத்தியாயம்…”

‘நீ இலக்கியம் பயிலும் மாணவனா,’ என்று கேட்டார்.

‘என்னால நம்பவே முடியல,’ என்றாள் அவள். இது கனவா நனவா?

இளைஞன் சுருளான கேசத்தை அளைந்தபடி சிரித்தபோது பற்கள் பளபளவென்று பொலிந்தன.

‘தாம்பா இல்ல? அதில் ஈபோர் நகரத்தில் இருந்த சிகரெட் தொழிற்சாலையில் என் தாத்தா வேலை பாத்திட்டிருந்தாரு. ரொம்ப காலம் மின்ன, 1920ல். மூத்த தொழிலாளி. சுருட்டு சுத்தறதில் சூரன். நல்ல மரியாதை அங்க அவருக்குஅங்க ஒராள் இருந்தாப்ல, எல் லெக்தார். (லெக்தார்சர்ச்சில், பொது இடங்களில் சனங்களுக்கு உரக்க வாசித்துக் காட்டுகிறவர். எல் லெக்தார்திருவாளர் லெக்தார் என்கிற மரியாதை த்வனி) மேடைல லெக்தார் உக்காந்துகிட்டு செய்தித்தாள் எல்லாம் தினசரி வாசிப்பார். பாடல்கள் பாடுவார். நாவல்களும் உரக்க வாசிப்பார்எங்க தாத்தாவுக்கு குறிப்பா டான் க்விக்சாட்னா ரொம்ப இஷ்டம். அவர் சொல்லியிருக்காரு. இந்த லெக்தாரோட சாரீரம் ஒரு ஓபரா பாடகனைப் போல அத்தனை அருமையா இருக்குமாம். ஆனந்தமான, இடியிடிச்சாப் போன்ற முழக்கம். எங்க தாத்தா மூத்த தொழிலாளின்றதால லெக்தாரோட கிட்டத்லியே உட்கார்ந்திருப்பார். டான் க்விக்சாட் நாவலின் ஒவ்வொரு வார்த்தையும் எங்க தாத்தாவுக்கு அத்துப்படி…. எங்க பாட்டியும் சிகெரெட் அடைக்கும்…. அவங்க பொண்ணு, அதான் எங்கம்மா பேரே டல்சீனியா தான்! பிற்பாடு ரொம்ப கஷ்டம். அவங்க கியூபாவுக்குத் திரும்ப வந்திட்டாங்கஎங்க தாத்தாவுக்குதான் லெக்தாரை விட்டு வந்தது பெரிய இழப்பாப் பட்டுது. எப்பவும் லெக்தாரைப் பத்தியே சொல்லிட்டிருப்பாரு. எங்க தாத்தாவுக்கு எழுத படிக்க தெரியாது. அவர் எங்க அம்மாவைக் கூப்பிட்டு சென்வான்டஸ் எழுத்தை சத்தமா வாசிக்கச் சொல்லுவாரு. அவ எதாவது வாசிக்கறப்ப தப்பு விட்டால், டக்குனு நிறுத்தி தன் ஞாபகத்திலிருந்து அதை சரியாச் சொல்லி அவளைத் திருத்துவாரு! அவர் காட்டிய அந்த பிடிப்பு, அதனால்தான் நானும் எங்க சகோதரர்களும் முழு டான் க்விக்சாட்டையும் மனப் பாடமா அறிவோம்…’

‘அதிசயமாயிருக்கே,’ என்றார் பேராசிரியர். ஏய், பாத்தியா, நீ என்ன சொல்றேஎன்கிறதாய் மனைவியைப் பார்த்தார். ‘ம் சொல்லு சொல்லு, என்று பையனை மேலும் பேச ஊக்கம் கொடுத்தார்.’

அவள் எழுந்துகொள்ள நினைத்தும் அப்படியே நாற்காலியில் சமைந்து போனாப் போலிருந்தது. தொலைக்காட்சியில் ரிப்பன் ஓட்டமாய் செய்திகியூபாவில் இருந்து அகதிகளை ஏற்றிவந்த தோணி ஒன்று இஸ்லமொராதா கரைப்பகுதியில் கவிழ்ந்து விபத்து. கடற்படைக் காவலர்கள் சடலங்களை மீட்டுவருகிறார்கள்.

இளைஞன் முகத்தைப் பொத்திக் கொண்டான்.

‘நாம எதாவது செய்யலாம்,’ என்றார் பேராசிரியர். கடுமையான கனவு கண்டு பதறியெழுந்தாப் போலிருந்தான் அவன். மெத்தைமேல் விரித்திருந்த பூவேலைப்பாடு செய்த போர்வையை எடுத்து தரைக் கம்பளத்தில் குளியலறை அருகே ஒரமாக விரித்தார். ‘வா இப்டி படு சித்த நேரம்,’ என அவனுக்குப் போர்த்திவிட்டார்.

‘பேசாம தூங்கு, நாங்க உன்னைப் பாத்துக்கறோம், மிகேல்.’

அவன் நன்றியில் அழுது நெகிழ்ந்தான்.

‘நான் தாம்பா போயிட்டா நல்லதுதாத்தா பொழுதன்னிக்கும் பேசிட்டே இருப்பாரே, அந்த இடத்தைப் பாக்கணும். கியூபாக்கார ஒரு பெரியவரின் முகவரி என்னாண்ட இருக்கு. தாத்தாவோட சிநேகிதர், அவர் அங்கதான் இருக்கார், தாம்பாவில்…’ என்றான்

இடுப்பு டிரௌசரைக் கீழ்ப்பக்கமாக மடித்து, சிரமப்பட்டு வயிற்றில் ஒட்டிய ஒரு பொதிவை சர்ரக்கென பிரித்தான். கசங்கிய ஒரு துண்டுக் காகிதம்.

இதோ,’ என்றான் அவன்.

பேராசிரியர் அதை வாங்கி வாசித்துப் பார்த்தார்.

‘ம்…. சரி, நீ தூங்கு. நாம எதாவது பண்ணுவம்.’

‘தாம்பா எங்கருக்கு, ரொம்பத் தொலைவா?..’. என்று கேட்டான் அவன். ‘பொடிநடையாப் போய்ச் சேர்ந்துறலாமா?’

‘நடந்து போகேலாது. டான் க்விக்சாட் போல, குதிரைல கூட போகக் கொள்ளாது.’ அவள் கேலியாய்ப் புன்னகைத்தாள்.

பையன் பேராசிரியரை பணிவுடன் பார்த்தான்.

என் நபருடன் நான் அதைச் செய்திருக்கக் கூடாது என உன் உள்மனம் சொல்கிறது, நான் உறுதியாச் சொல்வேன்…” என அவன் மேற்கோள் தந்தான்.

, பழைய நினைவுகள்அவற்றைப் புரட்டிப் பார்ப்பது, அதை இன்னும் மோசமாக்குகிறது, நண்பனே சான்சோஎன அவர் மெல்லச் சொன்னார். முகத்தில் தேய்ந்த புன்னகை.

இன்னவும் பிறவுமான பேச்சுகளுடன் எஜமானனும் அடிமையும் அவ்விரவைக் கழிக்க நின்றனர்என்று கியூபாக்காரன் உடனே பதிலிறுத்தான். நாவலின் அடுத்த வரி அது. அவன் கண்கள் ஜிவுஜிவுத்திருந்தன. உதடு காய்ந்து கிடந்தது. போய் ஒரு பிளாஸ்டிக் தம்ளரில் தண்ணீர் அருந்தக் கொடுத்தார் பேராசிரியர். ‘இப்ப போதும்ப்பா, கொஞ்சம் ஓய்வெடு.’ இளைஞன் தலையைக் கீழே சாய்ந்தான். மகா களைப்பாய் இருந்தான். அப்படியே அயர்ந்து உறங்க ஆரம்பித்தான்.

அவரும் அவளும் கொஞ்சநேரம் வாளாவிருந்தார்கள்.

‘போலிசைக் கூப்பிடுங்க,’ அவள் ஒருவழியாக வாய்திறந்தாள். அவர் அமைதிகாத்தார்.

‘அவனை ஒப்படைக்கணும்,’ அவள் சொன்னாள். ‘சட்டவிரோதமான, நமக்கு சம்பந்தமில்லாத நபர். அவங்கூட நாம ஒட்டிஉறவாடிட்டிருக்கம். அது தவிர, அவன் ஒரு புளுகன், நிச்சயமாய்ச் சொல்லுவேன். டான் க்விக்ஸாட்டை முழுசா அவன் நினைவு வெச்சிருக்கறதாச் சொல்றானே, அது சாத்தியமே இல்லை. பேராசிரியர் உங்களுக்கே ததுங்கிணதோம்இன்னும் எத்தனை விஷயம்லாம் நமக்குத் தெரியாம வெச்சிருக்கானோஇல்லே?’

‘பைபிளை மனப் பாடமா தெரிஞ்ச ஜனங்களும் இருக்காங்கதானே இவளே?’ என்றார் அவர்.

‘அவன் எழுந்துக்குமுன்னால போலிசைக் கூப்பிடுங்க,’ என்றாள் அவள்.

அவர் ஃபைலை தொலைபேசி மேலே வைத்தார்.

‘வேணா,’ என்றார் தீர்மானமாக.

‘என்ன வேணா? ‘- என்றாள் அவள். ‘அவனை ஒப்படைக்கணும் நாம. நாமளே இங்க புதியவர்கள்.’

‘நாம இங்கியே குடியிருக்கற ஆட்களா இருந்தால், அப்ப மாத்திரம்? ‘ அவர் கேட்டார்.

‘அவனை ஒப்படைக்கிறது நம்ம பொறுப்பா ஆயிருக்கும்…’

‘பொறுப்புஅதை ஒண்ணுக்குமேற்பட்ட விதங்களில் நாம விளக்கலாம்’ என்றார் பேராசிரியர். தொலைபேசி பக்கத்திலேயே இருந்தார், ஒரு பாதுகாப்பு போல.

‘எனக்கு கிறுக்கு பிடிச்சிரும் போலருக்குநாம சிந்திக்கிற சக்தியை இழந்துட்டம். நீங்க இப்பிடி பிடிவாதம் பிடிக்கிறதால நாம ஜெயில்ல கம்பியெண்ணப் போறம்.’

‘சரி, நீ என்ன சொல்ற?’ அவர் கேட்டார்.

‘ஒப்படைச்சிருங்க அவனை. இப்பவே.’

கதவைப் பார்க்க அவள் போனபோது அவர் வழிமறித்தார்.

‘வேணா,’ என்றார்.

‘911ஐக் கூப்பிடுங்கன்றேன்ல,’ என்றாள் அவள் கோபமாக.

‘வேணாம்மாஉன்னால அவனை ஒப்படைக்க முடியுமா சொல்லு? உன்னை அவன் டல்சீனியான்னு கூப்பிட்டான். அவங்கம்மா பேர். உன் கையை மரியாதையா முத்தமிட்டான்.’

‘நீங்களே டான் க்விக்சாட் ஆயிட்டீங்களா? என் கிழட்டுக் கிறுக்கே.’

‘நாம வந்த சோலி என்ன, நம்ம விஷயம் என்ன, எல்லாத்தையும் காத்துல விட்டாச்சி…’

‘இல்லபார் அவனை. ஆதரவற்ற குழந்தை.’

‘ஆ அதான் விஷயம். இரக்கம். நான் டல்சீனியா அவங்கம்மான்னா நீங்க அப்பான்னு……’

‘கியூபாலேர்ந்து வந்திருக்கிறான்…  அவ்ளதூரத்லேர்ந்து தக்கி முக்கி வந்திருக்கிற அகதியை இங்கத்த அதிகாரிங்க கிட்ட ஒப்படைக்க ஏலாது. திருப்பி அவனை கியூபாவுக்கே அனுப்பிட்டாங்கன்னு வெய்யி, அவளவு தான் அவன் விதியே முடிஞ்சிட்டது.’

‘ஏ… நம்ம விதியப் பாருய்யா,’ என்றாள்.

அவர்கள் எதிரும் புதிருமாய் நின்றிருந்தார்கள். அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். சிறிது யோசித்தார்.

‘பத்து பதினைஞ்சு ஆவுதுநடு சாமம் ஆவட்டும். அவனை எழுப்புவம், தாம்பாவில் அவனை விட்ருவம்.’

‘என் பொணத்து மேல,’ என்றாள் அவள்.

அவர் அவளையே பார்த்தார்.

‘உங்களுக்கு என்னைப் பிடிக்கல…  நீங்க சொன்னதை நான் கேக்கல, அதனால.’

‘அப்டி இல்லப்பா,’ என்றார் அவர் சோகமாக.’ நான் உன்னை நேசிக்கிறேன். ஆனா, என்னன்னாஎப்பவுமே நான் ஏணின்னா நீ நோணின்றே. ஏன்னே தெரியல.’

வெளியே காற்று அடங்கிவிட்டது. அவள் போய் அப்படியே படுக்கையில் குப்புற விழுந்தாள். அழ ஆரம்பித்தாள். பேராசிரியர் சூட்கேசை மூடினார். விளக்குகளை அணைத்தார். தொலைக்காட்சி சத்தத்தை மாத்திரம் அணைத்தார். வெறும் திரைக்காட்சிகள்அவர் வாழ்க்கையை அசைபோடுகிறாப் போல ஒர் உணர்வு ஏற்பட்டது அவருக்கு.

காலத்தால் அழிபடாத பழைய நினைவுகள் இல்லை. மரணம் தாண்டிய துயரங் கிடையாது.” தன் கதாநாயகனை அவர் மேற்கோளாய் தனக்குள் சொல்லிக் கொண்டார். இப்ப பார், இந்த கியூபாவாசி. காலம் அழிக்க முடியாத நினைவாற்றலுடன் இவன். என்ன ஆச்சர்யம், என்ன அற்புதம்என நினைத்துக்கொண்டார்.

நடு சாமத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்தார். மனைவியை எழுப்பினார். அவன் காதில் என்னவோ சொல்லி மெல்ல உசுப்பினார். வெளி வராந்தாவின் வலதுகோடி அறை அவர்களுடையது. அறையைவிட்டு வெளி வந்தார்கள். விறுவிறுவென்று படிகளை நோக்கி மூனு நிழல்களாய்ப் போனார்கள். வாடகைக்காரின் பின்இருக்கையில் படுத்துக்கொள்ளச் சொல்லி அவனுக்கு சைகை செய்தார் அவர். டிக்கியில் சூட்கேசை வைத்தார். மனைவி சீட்பெல்ட்டைக் கட்டிக் கொண்டாளா என்று பார்த்துக் கொண்டார். கார் நிறுத்துமிடத்தில் ஒரேயொரு தெருவிளக்கு மாத்திரம் எரிந்துகொண்டிருந்தது. இன்ஜினை இயக்கி விருட்டென விடுதியில் இருந்து வெளியேறி மரப்பாலம் போகிற கடற்கரைச் சாலை வழியே, வெறிச்சிட்ட பிரதான சாலைக்குத் திரும்பினார்..

சரியா இருக்கியா, அவர் மனைவியைக் கேட்டார். கண்ணை மூடியபடி அவர் பக்கத்தில் அவள் உட்கார்ந்திருந்தாள். பதில் எதையுங் காணோம்.

பின்இருக்கையில் தான் கொண்டுயவந்திருந்த போர்வைக்குள் சுருண்டிருந்தான் பையன். தஸ் புஸ்ஸென்று ஆழ்ந்த மூச்சுகள்.

‘ப்ச், அப்பவே அந்த ஷணமே நான் என்வழியப் பாத்துப் போயிருக்கலாம். அப்ப எனக்கு போக்கிடம் இருந்ததுஅப்பவே நான் போயிருந்திருக்கணும்,’ என்றாள் அவள் திடீரென்று. பேராசிரியரின் உடம்பு தூக்கிப்போட்டது. காரில் ரேடியோ நிகழ்ச்சிகளை தாறுமாறாக மாற்றிக்கொண்டிருந்தார் அவர்.

‘என்ன காலக்கொடுமையடா இது, ச்ச்…’ அவர் முணுமுணுத்துக் கொண்டார். பிறகு எதுவும் பேசாமல் காரோட்டுவதில் கவனம் செலுத்தினார். பாலங்கள் விருட் விருட்டென்று கடந்து போயின. நதி தீரங்களின், வயல்வெளிகளின் மங்கல் முகம். அடிக்கடி விளக்கைப் போட்டு ஃப்ளாரிடா வரைபடத்தை ஒரு பார்வை பார்த்துக்கொண்டார். பல மணிநேரப் பயணம்.

காரில் காஸ் நிரப்பிக்கொள்ள ஒருமுறை நிறுத்தினார். போத்தல்தண்ணீர், சல்லாத்தாளில் சுற்றித் தந்த சான்ட்விச்கள் வாங்கிக்கொண்டார். இளைஞன் தூங்கிக் கொண்டிருந்தான்.

‘எதாவது சாப்பிடு இவளே.’

‘இப்படியே தூக்கி எறிஞ்சிருவேன்,’ என்றாள் அவள்.

பேராசிரியர் காரை மேற்காகத் திருப்பினார். நெடுஞ்சாலையைத் தவிர்த்து பக்கசாலைகள் வழியே காரைச் செலுத்தினார். அந்தப் பகுதிகள் எல்லாம் ஒரேசாயலில் இருந்தன. வீடுகள். மகாகடைகள். கார் நிறுத்துவெளிகள் வெறிச்சிட்டுக் கிடந்தன. பிறகு அவர்கள் எவர்கிளேட்ஸ் சதுப்புகள் ஊடான சாலையை எட்டினார்கள். அவர் வாயை இறுக மூடியபடி பேசாமல் காரோட்டிப் போனார். காரை ஊடே எங்கயும் நிறுத்தவும் இல்லை.

இரவுப்பனியை காலைக்கதிர் துடைத்தெறிய ஆரம்பித்தது. ஒரே கோடு போட்ட தெரு, சாலையாக விரிந்தது. போக்குவரத்து அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. லாரிகளின் கடாபுடா சத்தங்கள் காதை அடைத்தன. ஒரு சிக்னலில் நின்றார்கள்.

இளைஞன் எழுந்து உட்கார்ந்தான். எதோ கனவு வெருட்டி எழுந்துகொண்டிருக்கலாம். தலையை உதறிக்கொண்டான். நெற்றியில் ரேகைகள் உழுதிருந்தன. தீபகர்ப்பத்தின் மேல்கரையை எட்டிப் பயணப்பட்ட இந்தச் சில மணிநேரத்தில் முதுமையடைந்து விட்டாப் போல

‘விடிஞ்சிட்டது,’ என்றார் பேராசிரியர். ‘கூடிய சீக்கிரம் நாம அங்க இருப்பம்.’ மெக்சிகோ வளைகுடாவையும், அதன் போக்குவரத்து நெரிசலையும் அவன் விக்கித்துப் பார்த்தான். ஊரின் உட்பகுதி. வானளாவிய கட்டடங்கள் மிளிர்ந்தன. குறுக்கே நெடுக்கே வழிகள். நடைபாதைகள் என்று மக்கள் முட்டி மோதினர்.

சட்டென ஒருபக்கமாக பேராசரியர் ஒதுங்கினார். ஈபோர் நகரத்து எட்டாவது அவின்யூவில் சிறு தெருவை அடையாளங் கண்டார். காரை மெதுவே விட்டார். சிவப்புவண்ணந் தீட்டிய செங்கல் கட்டடங்கள் பக்கத்திலேயே ஓட்டிப்போனார். ஒரு காலத்தில் பரபரப்பான இடம் அது. சிகரெட் தொழிற்சாலைகள் நிறைய இருந்தன. தற்போது இங்கே உணவுவிடுதிகள், கலைப்பொருள் அங்காடிகள், இரவுக் கேளிக்கை விடுதிகள் என வந்துவிட்டன. ஒளி கொப்பளிக்கும் பூ அலங்கார உப்பரிகைகள்.

‘ஒருகாலத்தில் இங்கே தபாகுரோக்கள், புகையிலை வணிகர்கள், வாழ்ந்து வந்தார்கள்…’ என்றார் பேராசிரியர். சின்ன முடுக்குக்குள் நுழைந்தார். பச்சை வண்ணந் தீட்டிய சிறு வீட்டின்முன் நின்றது கார்.

‘இதான்,’ என்றார் பேராசிரியர். கதவிலக்கம் ஒன்பது. பின்இருக்கைக்குத் திரும்பிப் பார்த்தார். ஆனால் பேசவில்லை.

இளைஞன் கண்ணைத் தேய்த்துக் கொண்டான். மூளைக்குள் பரபரப்பாய் ஓடிய நினைவுகளில் மூடிவிட்டிருந்தன கண்கள்.

‘நீ உள்ளாற போற வரை நாங்க இருக்கிறோம்,’ என்றார் பேராசிரியர். ‘எங்களைப் பத்தி ஒருத்தர்கிட்டயும் மூச்சுவிடக் கூடாது. யாராவது எப்பிடி இங்க வந்தேன்னு கேட்டால், சொல்லு, என் குதிரை ரோசினான்டே மேலேறி வந்தேன்னு சொல்லு.’

தன் கைப்பையில் இருந்து ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து அவள் இளைஞனிடம் நீட்டினாள்.

‘பத்திரம். அந்தப்பக்கம் வனாந்திரம், அவள் சொன்னாள்.’ இது அமெரிக்கா, கியூபா இல்லை

இளைஞன் காரைவிட்டு வெளியே இறங்கினான். அந்த ஆப்பிளை நெஞ்சுக்குநேரே வைத்துக்கொண்டான்.

‘போ,’ என்றார் பேராசிரியர்.

வேலிக் கதவு தாண்டி அவன் உள்ளே நுழையும் வரை அவரும் அவர் மனைவியும் அவனையே பார்த்தபடி யிருந்தார்கள். ஆச்சர்யம் தாளாத முதியவர் ஒருவர் வெளிவந்து அவனைத் தழுவிக்கொள்வதைப் பார்த்தார்கள். பேராசிரியர் கார்க் கண்ணாடிகளை இறக்கி விட்டார். பட்சிகள் காலையில் விழித்தெழுந்து ஜெபம் எழுப்புவதைக் கேட்டார்.

‘நான் என்ன நினைக்கிறேனோ, நீங்களும் அதையேதான் நினைக்கறீங்க’, என்றாள் அவள்

‘ஆமாண்டி,’ என்றார் அவர்.

உங்க மாமா தியோ, ஓபரா பாடகர்

‘குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பு,: என்றார் அவர். பாடறேன்னு வீட்டைவிட்டு ஓடினாரு. ஆனால் அதில் வயித்துப்பாட்டைப் பாத்துக்க முடியல அவரால.’

‘திருவாளர் லெக்தார்,’ என்றாள் அவள். ‘தாம்பாவின் ஆகப் பிரபலமான லெக்தாரா ஆயிட்டார். பாட்டு பேச்சா ஆயிட்டது.’

‘எல்லாத்தையும் விட அவருக்குப் பிடிச்ச புத்தகம் செர்வான்டெஸ் எழுதியது…’ என்றார் பேராசிரியர்.

‘உங்க ஆதர்சம் யார்னு இப்ப தெளிவாயிட்டது!’

பேராசிரியர் புன்னகை செய்துகொண்டார். கார் வேகமெடுத்தது.

நாம இப்ப எங்க போறோம், அவள் கேட்டாள்.

எனக்கே தெரியாது, என்றார் பேராசிரியர். நீ எங்க சொல்றியோ அங்க போவம், அமாலியா

 


Islamorada by Rivka Keren

Original in Hebru. translated in English by Dalit shmueli

 

டான் க்விக்சாட் டி லா மன்ச்சா, உலகின் முதல் நாவல் என்கிறார்கள். ஸ்பானிய மொழியில் எழுதப்பட்டது அதன் ஆசிரியர் மிகேல் டி செர்வான்டெஸ்.. இந்த மேற்கோள்கள் 1883ல் அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜான் ஓர்ம்ஸ்பையின் வரிகள்.

      ரிவ்கா கேரன் ஹங்கேரியில் பிறந்து 1957ல் இஸ்ரேலுக்கு வந்தவர். கலை, இலக்கிய, தத்துவ, மருத்துவ மனோதத்துவ இயல்களில் முறையான பயிற்சி கண்டவர். பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்குமாய் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மொழிபெயர்ப்புகள் பங்களிக்கிறார். பல நாடுகளில் அவரது ஓவியக் கண்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. பல்வேறு இலக்கியப் பரிசுகள் பெற்றவர். இவர் படைப்புகள் ஹிப்ரு மொழியில் இருந்து ஜெர்மேனிய, ஆங்கில, ஸ்பானிய, ருஷ்ய, ஹங்கேரிய மொழிகளில் மாற்றம் கண்டுள்ளன. (இதோ தமிழிலும்!)

      டான் க்விக்சாட் நாவலுக்கான ஒரு வீரவணக்கம் போலவே நெகிழ்ந்து படைக்கப்பட்ட கதை இது. மிகை நவிற்சி காலம் முடிந்தும் திரும்பத் தலைநீட்ட வைத்திருக்கிறார் ஆசிரியர். டான் க்விக்சாட் பெருமளவு அடைத்துக் கொண்டதில் பிற விவரங்களை அதிகம் தர முடியவில்லை. வெறிச்சிட்ட மோட்டல் என்று சொல்லிவிட்டு, கடல்காவல் படை வரும்போது பரபரப்பு என்று சொல்வது என்னவோ போலிருந்தது. துண்டு ஈரத்தைக் காட்டி அவர்களிடம் நீச்சல் குளத்தில் இருந்து வந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் குளித்த மிருதுவான அடையாளங்கள் இருக்குமா, கண்டுபிடித்துவிட முடியாதா, என்று தோன்றியது. மோட்டலில் கணக்கு முடிக்காமல் அப்படியே காரில் ஏறி கிளம்பிவிட முடியுமா, என்ற கேள்விக்கு என் அமெரிக்க நண்பர் எழுத்தாளர் அமர்நாத், நாள்வாடகையை முன்பே கொடுத்துவிட்டு பாதி ராத்திரியில் கிளம்புவது அங்கே சகஜம்தான், என விளக்கம் அளிக்கிறார்.

 

Previous articleபிளவு – கார்த்திகைப் பாண்டியன் -சிறுகதை
Next articleமூளையில் பாய்ந்த புல்லட் -மொழிபெயர்ப்பு சிறுகதை
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.