பழி-ஜா.தீபா

ராதாய்யாவின் சுருங்கிய தோல் வெய்யில் பட்டு ஒளிர்ந்தது. மதிய சாப்பாட்டுக்கான நேரம் என உணர்ந்து எழுந்து நின்றார். மெல்லிய நடுக்கம் எப்போதும்போலக் காலிலிருந்து தொடங்கியிருந்தது. நிதானித்து மூன்று படிகள் இறங்கி ஆறு அடிகள் வலதுபுறமாகத் திரும்பி மீண்டும் இரண்டு படிகளை விட்டு இறங்கினால், எந்த வண்டியும் தன்னை உரசிச் செல்ல முடியாத இடைவெளியில் நடந்துவிட முடியும் என்பதை அறிவார். இது அவருக்கு பத்து வருடப் பழகிய கணக்கு. எப்போதேனும் வண்டியோட்டிகளின் கவனத்திலிருந்து பிசகும்போது ராதாய்யாவுக்கு அடிபட்டிருக்கிறது. அகிலத்துக்கு அன்று வெந்நீர் ஒத்தடம் வைத்துவிடும் கூடுதல் வேலை சேர்ந்துவிடும். இன்று வியாழக்கிழமை. இந்த நேரம் அகிலம் இட்லிக்கு மாவாட்டிக் கொண்டிருப்பாள். எப்போதும் போல, “உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்.. உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்” என்பதே பாடலாக இருக்கும். தூங்கும் முன், படுக்கையைப் போட்டுக் கொண்டு அவள் முணுமுணுக்கவென ஒரு பாடல்.. “உடியல்லி உடுகஜ்ஜே.. பெரலல்லி ஊங்கூர”.. அவளின்  குரல் ரகசியம் பேசும் தன்மை கொண்டது. குழந்தையைக் கொஞ்சும் பாடலையும், பக்தியாய் அம்பாளிடம் முறையிடும்போதும் ஒரே குரல் தான்.

ராதாய்யா பெடல் சத்தத்தினைக் கூர்ந்து கேட்டு நின்றார். “என்ன அய்யா.. வீட்டுக்கா?” என்றவாறே சைக்கிளில் கடந்து போனான் கண்ணன். அவனுக்குப் பதில் தேவையில்லை. எல்லோருக்கும் தெரிந்த ராதாய்யாவின் வழமை இது. அகிலத்தின் குரல் இப்போது அவருக்குள் கேட்டது.. “ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி” கிரைண்டரின் உரலை இப்போது தூக்கி கீழே வைத்திருப்பாள். “ஸ்ரீ லலிதாம்பிகையே” வியர்வையைத் துடைத்துக் கொள்வாள். மூச்சு வாங்கும்..

மழை வரும் என்று கணித்தார் ராதாய்யா. முன்பு அவர் வாக்கியப் பஞ்சாங்கத்தைக் கொண்டு எல்லாவற்றையும் கணிப்பதை ஒரு வேடிக்கை போலச் செய்து கொண்டிருந்தார். “மகளுக்கு அன்னப்பிராக்ஷ்ணம் செய்யணும்..” என்று எவரேனும் வருவார்கள். அகிலம் இவர் சொல்லாமலேயே.. “ஆவணி ரெண்டாம் வெள்ளிக்கிழமைல பாருங்கோ.. நன்னாத் தான் இருக்கும்.. மகம் தானே உன் பொண்ணு.. ராஜயோகம்” என்பாள். இதற்கு மேல் பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொல்ல என்ன வேண்டி கிடக்கு.. அகிலமே சொல்லிவிட்டாள் என நினைத்துக்கொண்டே பார்ப்பார். அட்சர சுத்தமாய் ஆவணி இரண்டாம் வெள்ளிக்கிழமை நல்ல திரண்ட நாளாக இருக்கும்.

வீடு வந்தது. இடுங்கிய வாசல்படியில் அமர்ந்தார். இன்று அவருக்கு நடை தள்ளாடுகிறதோ என்று தோன்றியது. அடிக்கால் பாதத்தில் எதோ ஒன்று குடைவது போல ஒரு அவஸ்தை. உட்கார்ந்து அடிக்காலை அழுத்தினார். அது பரப்பிவிட்ட சுடு கல் போல கனத்தது.

எழுந்து அகிலம் என்றார். கதவைத் தொடக் கையைஎடுத்தார். தாழ்ப்பாள் நாதங்கியை இரண்டுமுறை அடித்தால் அகிலம் வந்துவிடுவாள். கதவு திறந்தே இருந்தது. அகிலம் கதவுக்குப் பின்னால் நின்று அவரைப் பார்க்கிறாள் போல அவருக்குச் சிறுவனின் குறுகுறுப்பு எழுந்தது. “நான் வந்ததை பார்த்திட்டியா?” என்றபடி உள்ளே போனார். அவர் பின்னால் அகிலத்தின் நிழல் படியவில்லை.

அவள் கேட்டுக் கொண்டிருப்பாள் என்ற கணக்கில் “இன்னைக்கு மழை வரும்.. என் வேட்டியை கொடியிலருந்து எடுத்துப் போடு.. மடிச்சு வச்சிடறேன்.. மாவு அரைச்சு முடிஞ்சதா? மத்தியானம் சிவகுரு பாக்க வர்றேன்னான்.. அவன் பொண்ணு ருதுவாயிட்டாளாம். உனக்குச் சொல்லியிருப்பானே..” என்றபடி வழக்கமாய் அமரும் சேரில் சாய்ந்தார். அந்த வீடு பழங்காலத்தின் ஒரு அடையாளம். அந்தத் தெருவில் மற்ற வீடுகள் திண்ணையை வண்டி நிறுத்தும் இடமாக மாற்றிவிட்டன. ராதாய்யாவிற்கு வண்டியும் இல்லை, தொடக்கக் காலத்திலிருந்து திண்ணையும் இல்லை. சாலையினை உயர்த்திக்கொண்டே போனதில் கடைசி மூன்று படிகள் பூமிக்கடியில் போய்விட்டன. இன்னும் கூடுதலா படி வச்சிக் கட்டியிருந்தா, ரோடு போடறவன் புண்ணியத்துல நேரா பாதாளலோகத்துக்குப் போய் பூமாதேவியைத் தரிசனம் பண்ணிட்டு வந்துடலாம் என்பாள் அகிலம். சிரித்துக் கொண்டார் ராதாய்யா.

“அகிலம்… கேக்கறியா?”

சத்தமில்லை.

“மாவு அரைச்சிட்டியா?” இன்னைக்கு என்ன அரைச்சு விட்ட குழம்பா.. தாணுக்கு சிவப்பு பூசணி போட்டியோ?”

என்ன இவள் எதற்கும் பதில் சொல்லவில்லை. பக்கத்து வீட்டுக்குப் போயிருப்பாளாக இருக்கும். அவர் தன்னையறியாமல் “துன்பப்புடத்தில் இட்டு தூயவனாக்கி வைத்தாய்” என்று அடிக்குரலில் பாடினார். “நித்ய கல்யாணி.. பவானி.. பத்மேஸ்வரி”

வரட்டும்.. அரைத்த மாவினைக் கொடுக்க சிந்தாமணி வீட்டுக்குப் போயிருப்பாள். சிந்தாமணிக்குப் பேத்தி பிறந்ததிலிருந்து இங்கிருந்து அடிக்கடி உபசாரங்கள் போய்க் கொண்டிருக்கின்றன.

பாதத்தின் அடியில் எதோ ஊர்வது போல இருந்தது. காலைத் தள்ளி வைக்கும்போது பிசுபிசுவென எதுவோ ஒட்டியது. அவர் பாதங்களைத் தூக்கி மடியில் வைத்தார். அடிக்காலைத் தொட்டால் அகிலம் கோபப்படுவாள். “அதே அழுக்குக் கையால வஸ்திரத்தைத் தொடாதீங்கோ” என்பாள். தொடவும் முடியாமல் அதன் பிசுபிசுப்பை வைத்துக்கொண்டு அவரால் உட்கார முடியவில்லை. பின்புறத்துக்குப் போக எழுந்தார். பாதத்தின் பிசுபிசுப்பு அவர் வைத்த ஒவ்வொரு அடியிலும் மேலேறியது.

அகிலம்.. இது என்ன.. எண்ணெய கொட்டிட்டியா? ஏன் தொடைக்கல.. என்றவாறு சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றார். அவருக்கு மனதுக்குள் தப்பென்று ஒலி கேட்டது. அகிலம் என்றார். தரையில் அமர்ந்து துழாவினார். சற்றுத்தள்ளி துழாவியபடி அவர் கைகள் பிசுபிசுப்பின் வழி அகிலத்தைத் தொட்டது. அது அவள் அணிந்திருந்த புடவை. “அகிலம்.. அகிலம்”

அவள் கை விரல்களைப் பிடித்தார். ஐயோ அகிலம்… என்று அவர் குரலெடுக்க, முதலில் அங்கு வந்தது சிந்தாமணியின் கணவர் சிவசைலம். வந்தவர் அதே வேகத்தில் வெளியே போனார். கூட்டம் கூடிவிட்டது. முகம் சிதைந்துள்ளது என்றார்கள். வீடு முழுக்க இரத்தத்தின் வீச்சு வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது. தெரு முனைவரை கூட்டம் அங்கங்கே கும்பலாய் நின்று கொண்டிருந்தது. சிவசைலம் எதையும் யாரும் தொடாதீங்கோ என்று சொன்னதன் பேரில் யாரும் உள்ளே செல்லவில்லை. அகிலத்தின் மீது ஈக்கள் வந்தமர ஆரம்பித்தன. அவை மதிய உணவுக்கு அகிலத்திடம் வரும் பழக்கம் கொண்டவை. இப்போது அவள் அதை விரட்டாமல் கிடந்தாள்.

அகிலம் பாடிக்கொண்டே ஒவ்வொரு முறையும் கீழிறக்கும் அதே குழவிக் கல்லால்தான் இறுதிக் கணத்தை வாங்கியிருந்தாள். ராதைய்யா கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன. “அகிலம் அகிலம்..” என முணங்கிக் கொண்டே இருந்தார். அவரை யாரும் அகிலத்தின் அருகே விடவில்லை. அருகே யாரும் செல்லும் நிலையிலும் அகிலம் இல்லை. கோரத்தினைப் பார்த்து முகத்தினைத் திருப்பிக் கொள்ளும் ஆவலோடு பலர் வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தனர்.

சோமசுந்தரம் என இன்ஸ்பெக்டர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். “இந்தத் தெருவுக்கே இதுவரை போலிஸ் எதுக்கும் வந்ததில்லை…. யார் இப்படி செஞ்சுருப்பாங்கன்னு எங்களுக்கு புரியவேயில்ல” என்றார் சிவசைலம். அகிலம் கழுத்தில் போட்டிருந்த ஐந்து பவுன் சங்கிலியும், பீரோவும் உடைக்கப்பட்டிருப்பதை போலிஸ் கண்டுகொண்டது. கொலை செய்தவர் யாரெனக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அவர் மனம் இந்த வழக்கு எந்தத் திசையில் செல்லுமென சோமசுந்தரம் ஊகித்திருந்தார். சிவசைலத்தை அவர் அளவிட்டார். “நீங்க இருக்கற இந்த ஏரியா தான் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாம இருந்தது. இங்க இப்படி நடந்துருக்க வேண்டாம். எவ்வளவு சீக்கிரமா கண்டுபிடிக்க முடியுமோ நாங்க ஆளப் பிடிச்சிடறோம். நீங்க பாயிண்டா பேசறீங்க. உங்க ஒத்துழைப்பு எங்களுக்குத் தேவை. உங்க தெருவுல யாரையும் பயப்பட வேண்டாம்னு சொல்லுங்க. நாங்க பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்றோம்” என்றதும் சிவசைலம் தங்களை சோமசுந்தரம் புரிந்து கொண்டார் என்பதாக  அமைதியானார்.

சோமசுந்தரம் ராதாய்யா அருகில் வந்தார். “உங்க பேர் என்னங்க?”

“அகிலம் நல்லவ சார்”

“இருக்கட்டுங்க.. உங்க பேரு? உங்க பேரு சொல்லுங்க”

“ராதாராமன்”

“யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?”

“சொல்லத் தெரியல.. யாருக்கும் நாங்க எந்தக் கெடுதலும் செய்யலியே.. இந்தத் தெருவுல இருக்கற கோயிலுக்கு அவ எவ்வளவு கைங்கர்யம் பண்ணிருக்கா தெரியுமா? அவ பாவம்”

சோமசுந்தரம் உடன் வந்த மற்றொருவருக்கு கண்காட்டி விட்டு நகர்ந்து கொண்டார்.

சிவசைலம் யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தார். “மாமியோட ஆத்துக்காரர் புரோகிதரா இருந்தார்.. யாரை அவர் பகைச்சுக்கப் போறார்.. பாவம்ண்ணா அவர். இல்ல. அவாளுக்குக் குழந்தைகள் இல்ல. அகிலம் மாமி தான் நம்மாத்து குழந்தைக்கு ஓடி ஓடி பிரசவத்தப்ப வந்து நின்னா.. எந்தப் படுபாவியோ நகைக்கு இப்படிப் பண்ணிட்டாண்ணா.. இல்ல இல்ல விடறதா இல்ல.. யாரானாலும் நாம விடக்கூடாது… நாம யார் வம்பு தும்புக்கும் போறதில்லையே”

சோமசுந்தரம் கேட்டுக்கொண்டே வந்து போனை அணைக்கும்படி சொன்னார். “யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க?’

“ஏன் சார்..?”

“இது மர்டர். உங்களுக்குக் கஷ்டமாத்தான் இருக்கும், ஷாக்கிங்கா இருக்கும். புரியுது. நானும் சின்ன வயசுல எங்க எதிர்வீட்டுல குடியிருந்த அய்யர் வீட்டுல தான் பாதி நேரம் இருப்பேன். அவங்க வீட்டு சாப்பாடுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். அங்க சாப்ட்டு சாப்ட்டு முட்டை கூட எடுக்கறதில்லைனா பாத்துக்கங்களேன்.. அதனால உங்க கஷ்டம் புரியுது. நீங்க இதை எல்லா இடத்துக்கும் சொல்லி பெருசு படுத்தாதீங்க. நான் பொறுப்பெடுத்து உடனே இதை செஞ்சவங்கள கண்டுபிடிக்கறேன்.. பிரஷர் வந்ததுனா எங்களால வேலை பாக்க முடியாது.. நீங்கள்லாம் சொன்னா புரிஞ்சுக்குவீங்க”

“நல்லது சார். ஆனா நான் எங்களோட சங்கத்துல ஒரு பொறுப்புல இருக்கேன். நான் இதை யார்கிட்டயும் சொல்லாம மறைச்சா நாளை பின்ன என் தலையை உருட்டுவா.. சொல்ல வேண்டியவாளுக்கு சொல்லித் தானே ஆகணும்”

“உங்களுக்கெல்லாம் சொன்னா புரியும்னு பேசறேன் சார்.. எங்களுக்கு பிரஷரை கொண்டு வந்துராதீங்க”

“பாக்கலாம் சார்.. சொல்ல வேண்டியவாளுக்கு நான் சொல்வேன்.. லா அண்ட் ஆர்டர் சரியில்ல.. அதான் எங்க வீடு வரைக்கும் வந்து ஒருத்தன் இவ்வளவு பெரியா பாதகத்தை செய்துட்டு போயிருக்கான்.”

சோமசுந்தரம் அங்கிருந்து நகர்ந்தார்.

பிணவறையின் வாசலில் மழைக்கு ஒதுங்கி ராதைய்யா அமர்ந்திருந்தார். முகம் மட்டுமே வெளியில் தெரிந்ததை ராதைய்யா அறிந்து கொண்டார். “பாக்கறதுக்கு நம்ம மாமி மாதிரியே இல்ல.. யாரோ மாதிரி இருக்கா” யாரோ சொன்னார்கள். ராதைய்யாவின் விரல்கள் அகிலத்தைத் தடவ, அவருக்குள் இருக்கும் அகிலம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். மூக்கின்  இருபக்க சிறு துளைகளும் அவள் தினமும் அணியும் கல்பேசரியை மங்கலாய் நினைவுக்கு இழுத்து வந்தது.

அகிலத்தை நதியில் கரைத்த அன்று விடாமல் மழை பெய்தது.

தினமும் காலையிலும் மாலையிலும் அருகிலிருக்கும் வயக்காட்டுக்குப் போகும் மாடுகள் கூட இப்போது செல்வதில்லை. அந்தத் தெருவே துண்டாடப்பட்டுக் கிடந்தது.

சங்கத்திலிருந்து கண்டன கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தார்கள். ராதாய்யாவை சிவசைலம் கைப்பிடித்து காரில் அழைத்துப் போனார். “எங்கே போறோம் சிவசைலம்?’

“அகிலம் மாமி போனதுக்கு யார் காரணம்னு இன்னும் போலிஸ் கண்டுபிடிக்கலியே மாமா.. இப்படியே நாம அமைதியா இருந்தா இந்தத் தெருவுக்கு பாதுகாப்பு போயிடும். யார் வேணாலும் வீடு ஏறி வந்து இப்படி செய்துட்டுப் போயிடலாம்னு ஆயிடும்.. நாமளும் மனுஷா தான்னு காட்ட வேண்டாமா?”

“அவளே போயிட்டா ”

“நாம இருக்கோமே மாமா..”

ராதாய்யா அமைதியானார்.

கண்டனக்கூட்டத்தில் ராதாய்யா அமர்ந்திருந்தார். அவர் இதற்கு முன்பு இப்படியான கூட்டத்தில் கலந்து கொண்டதில்லை. பார்வை விளங்கியிருந்தபோதும் கூட கோயில், கல்யாண கூட்டத்தினைப் பார்த்திருக்கிறாரே தவிர இது மாதிரியான ஜனங்களை அவர் ஒரு சேர வேறு எதற்கும் பார்த்ததில்லை. தன்னைப் போல எல்லோரும் சேர்களில் அமர்ந்திருக்கிறார்கள் எனப் புரிந்து கொண்டார். கறுப்பு நிற ரிப்பனை எல்லோரும் குத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றார் சிவசைலம். சட்டை அணிந்திராத ராதாய்யாவுக்கு எங்கே அந்த கறுப்பு ரிப்பனைக் குத்துவது என ஒரு இளைஞன் திகைத்து நின்றான். சிவசைலம் வாங்கி ராதாய்யா இடுப்பின் மீது கட்டியிருந்த அங்கவஸ்திரத்தைக் கழற்றச் சொல்லி அதைத் தோளுக்கு மாற்றி அதில் கறுப்பு ரிப்பனைக் குத்தினார்.

மைக் முன் பேசிய எல்லோருமே கோபத்தில் பேசினார்கள். ராதாய்யாவைப் பேச அழைத்தார்கள். அவர் இருக்கும் இடத்துக்கு மைக் வந்தது,

“என்ன பேசணும்?”

என்றவாறே மைக்கை வாங்கினார். மைக்கைத் தொட்டதும் மூங்கில் கழி போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டார். அகிலம் தினமும் தன்னுடைய மடிப்புடவையை ராமநாமம் சொல்லிக்கொண்டே உயரத்திலிருக்கும் கொடியில் இப்படியொரு மூங்கில் கழி கொண்டு தான் உலர்த்துவாள். அவள் கைபட்டு  வழுவழுப்பு கொண்டிருந்த கழி அது. ராதாய்யாவிற்கு அந்த மூங்கில் கழியை அவள் எப்போதும் சமையலறையின் கதவுக்குப் பின்பு வைத்திருப்பாள் என்று தெரியும்.

“அகிலம் ரொம்ப மடி பாப்பா.. சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணாம ஒருநாளும் அவ சாப்ட்டதில்ல”

சிவசைலம் மெதுவாக ராதாய்யாவிடம், “மாமியை இப்படி பண்ணவாள போலிஸ் ஏன் பிடிக்கலன்னு நாம கூட்டம் நடத்தறோம்.. அது பத்தி பேசுங்கோ”

“அகிலம் தான் போயிட்டாளே.. அவ எந்தக் கெடுதலும் யாருக்கும் செஞ்சதில்ல.. நீங்க எல்லாம் அவளைப் பாத்துருப்பேள்.. யார் யார் வந்திருக்கேள்னு தெரியல.. அவ நல்லவ.. பகவான் அவளுக்கு இப்படி செஞ்சவாளுக்கு என்ன கொடுக்கணுமோ அதைக் கொடுப்பார்.. ஆத்துக்குப் போனா அகிலம் உக்காந்திருக்கறாப்ல இருக்கு.. தனியா உக்காந்துண்டு இருக்கேன். என்னையும் பகவான் அழைச்சிண்டு போனா தேவலை”

சிவசைலம் “மாமா.. குடுங்கோ.. நான் பேசிக்கறேன்” என்று மைக்கை வாங்கிக்கொண்டார்.

ராதாய்யா வீட்டிலேயே கிடந்தார். சிசைலம் வீட்டிலிருந்து உணவு வந்து கொண்டிருந்தது. ராதாய்யாவுக்கு உணவு வேண்டியிருக்கவில்லை. அவர் கண்கள் அகிலத்தின் நடமாட்டத்தை உத்தேசிப்பது போலச் சுழன்று கொண்டிருந்தது. பேசிக்கொண்டே இருந்தார். “எனக்குப் பார்வை மட்டமானது நல்லது அகிலம்.. நீ இருக்கறாப்புல நினைச்சுண்டு பேசமுடியறது பார்.. இப்பல்லாம் கடைவீதில போய் நான் உக்காந்துக்கறதில்ல.. நீ எனக்காகக் காத்துண்டு இருப்பேன்னு கடைவீதில போய் உக்காந்து இருந்துட்டு வருவேன்.. இப்ப போனா, யாருக்காக போகணும் வரணும்?  சொல்லு..”

பேசிக்கொண்டே பாடினார். அகிலம் பாடி அவர் கேட்ட பாடல்கள். நினைவுகளிலிருந்து அவரே மறந்துவிட்டதாக நினைத்த ஒவ்வொன்றும் அவருக்கு மேலெழுந்து வந்து கொண்டிருந்தன.

“தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ..

சகல உலகிற்கும் நீ தாயல்லவோ”

ராதாய்யாவிற்கு தொண்டை அடைத்து குரல் நின்றது.

“அய்யா.. அய்யா”

வாசலில்தான் ஒரு பெண்ணின் குரல் கேட்கிறது. ராதாய்யாவிற்கு அது தனக்கான குரல் இல்லை என்பதாகப்பட்டது. மீண்டும் கேட்ட குரலில் இப்போது ராதாய்யா வந்தாக வேண்டுமென்கிற செய்தி இருந்தது.

ராதாய்யா எழுந்து வாசலுக்குப் போனார்.

“சாமி… என்  வீட்டுக்காரரை போலிஸ் கூப்ட்டு போயிருச்சுங்க..”

வந்திருக்கறவள் யாரென்று ராதாய்யாவுக்கு குரல் கொண்டு தெரிந்துகொள்ள முடியவில்லை.

“நீ யாரும்மா?”

“சாமி.. நான் ஆட்டோ ஓட்டற வள்ளிநாயகத்தோட வீட்டம்மா”

“வள்ளிநாயகம் சம்சாரமா? அவனை எதுக்கு போலிஸ் பிடிக்கணும்”

“அவரை மட்டுமில்லைங்க, பிரவீனையும் பிடிச்சிட்டுப் போயிட்டாங்க.. அவன் சம்சாரமும் என் கூட வந்துருக்கா. ஸ்டாண்டுல இருக்கற ஆட்டோக்காராங்க நாலு பேரையும் பிடிச்சிட்டுப் போயிட்டாங்க, ரெண்டு பேரை விசாரிச்சிட்டு விட்டுட்டாங்க. எங்க ரெண்டு பேர் வீட்டுக்காரங்களை மட்டும் பிடிச்சு வச்சிருக்காங்க”

“எதுக்கும்மா?”

“உங்க வீட்டு மாமி இறந்ததுக்கு இவங்க மேல சந்தேகப்பட்டு அழைச்சிட்டு போயிட்டாங்க.. எங்க வீட்டுகாரவுங்க எத்தனை வருஷமா இங்க ஆட்டோ ஓட்டுறாங்கன்னு உங்களுக்கே தெரியும்.. ஒரு தப்பு தண்டாவுக்கும் போனதில்ல. மாமியே என் வீட்டுக்காரரைத் தங்கமான புள்ளம்மானு என்கிட்டே சொல்லியிருக்காங்க.. அவங்களுக்கு இப்படி ஒரு காரியத்தை செய்வோமாய்யா”

“எனக்கும் வள்ளிநாயகம், தம்பிதுரை, பிரவீன்.. எல்லாரையும் நல்லாத் தெரியுமே.. அவங்கள்லாம் அகிலத்துக்கு இப்படிச் செய்ய மாட்டாங்களே”

“நீங்க இதை ஒரு வார்த்தை ஸ்டேஷனுக்கு வந்து சொல்லணும் சாமி”

“நான் சொல்றேன்.. இப்படியெல்லாம் நடக்கறதுன்னு தெரிஞ்சா அகிலம் கோபப்படுவா.. டீவியில நியூஸ் போடும்போதே எங்க அக்கிரமம் நடந்தாலும் அவளுக்கு எவ்வளவு கோபம் வரும் தெரியுமோ.. அவ போன அன்னைக்கு முந்தின நாள் கூட எவனோ  ஒருத்தன் கார் கண்ணாடியை உடைச்சு உள்ள இருந்த பொருளைத் திருடினான்னு டிவியில் காட்டினானாம்.. அன்னைக்கு முழுக்க அவனைத் திட்டித் தீர்த்துட்டா”

“சாமி.. உடனே கொஞ்சம் புறப்பட்டு வரீங்களா?”

“தோ.. வர்றேன்..”

வள்ளிநாயகத்தின் மனைவி அங்கு கிடந்த ரப்பர் செருப்பினை எடுத்து அவர் போட்டுக்கொள்ள வசதியாகக் காலடியில் வைத்தாள். அவர் அணிந்துகொண்டு தெருவில் இறங்கினார். அவர்கள் வரும்போதே ஆட்டோ கொண்டுவந்திருந்தனர். அவர் ஏறிக்கொள்ள மற்றவர்கள் மற்றுமொரு ஆட்டோவில் பின்தொடர்ந்தார்கள்.

ராதாய்யாவிற்கு இந்தக் காலங்களில் காவல்நிலையத்தின் படிக்கட்டுகளின் எண்ணிக்கை தெரிந்திருந்தன. வாசனையைக்கொண்டு நிலையத்தின் வாசலில் லெச்சக்கட்டை கீரை படர்ந்திருப்பதை அறிந்து கொண்டிருந்தார். சிவசைலம் இல்லாமல் அவர் வருவது இதுதான் முதன்முறை. காவல்நிலையத்தின் உள்சென்றதும் வலதுபுறத்தில் உள்ள சேரில் எப்போதும் ராதையாவிற்கு இடம் தருவார்கள். அழைக்காமல் தானே வந்ததால் அங்கு ஏற்கனவே அமர்ந்திருப்பவரை யாரும் எழச்சொல்லவில்லை. சோமசுந்தரம் ராதாய்யாவிடம் “நீங்க எதுக்கு கூப்பிடாம வர்றீங்க? முறையா விசாரணை நடத்திட்டு தான் இருக்கோம்”

“ஆட்டோக்காரால்லாம் எங்க தெருவுல உள்ளவாள்ட்ட நல்லா பழகினவா.. அவாளை ஏன் கூட்டிட்டு வந்திருக்கேள்”

“இங்க வாங்க” என்று ராதாய்யாவை சோமசுந்தரம் அழைத்துப் போனார்.

“நீங்க நிக்கற இடத்துக்கு முன்னாடி ஒரு சுவர் இருக்கு. அதுல ஒரு மேப் வச்சிருக்கோம். இது இந்த ஏரியா லிமிட்டோட மேப். இதுல பச்சை கலர், சிவப்பு கலர்னு புள்ளியா புள்ளியா வச்சிருக்கோம். எதுக்குத் தெரியுமா?”

ராதாய்யா எதிர் சுவரைப் பார்த்தபடி இருந்தார். அந்த வரைபடத்தின் பிம்பம் அவர் கண்களில் பட்டுச் சுருங்கிக்கொண்டிருந்தது.

“பச்சை கலர் புள்ளி வச்ச இடமெல்லாம் எங்களுக்குப் பிரச்சனை தராத ஏரியா. செயின் பறிக்கறது, திருடு நடக்கறது, கைகலப்பு இதெல்லாம் நடக்காது. நீங்க இருக்கற ஏரியா எங்களுக்குப் பச்சை கலர்.. அதை இப்ப சிவப்பு கலரா மாத்தினா என் மேலதிகாரிங்களுக்கு நான் பதில் சொல்லணும். புரிஞ்சுதா?”

“புரியறது சார்.. ஆனா அந்த ஆட்டோக்காரங்க”

“மர்டர் நடக்கும்போது ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்த ஆட்டோகாரங்களைத் தூக்கிட்டு வந்திருக்கோம்.. விசாரணை தான். அனுப்பிருவோம்”

“அவா ஆத்துக்காரி எல்லாம் அழறாளே சார்”

“அதுக்கு என்ன சார் பண்ண முடியும்? கூட அவங்க ஆளுங்க இருக்கற திமிருல இந்த ஆட்டோக்காரன் ஆடிருக்கக்கூடாது. நீங்க இதுல தலையிடாதீங்க. உங்க சங்கத்துல இருந்து வேற பிரஷர் போடறாங்க.. நீங்க கிளம்புங்க. நாங்க விசாரிச்சு அனுப்பறோம்”

ராதாய்யாவால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை.

“சரி நான் வர்றேன். ஆனா இவா செஞ்சிருக்க மாட்டா சார்.. அகிலம் நல்லபடியா போய்ச் சேர்ந்துருக்கலாம். அவளால இத்தனை பேர் கஷ்டப்படறான்னு அவளுக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா” எனும்போதே அழுதுவிட்டார்.

சோமசுந்தரம் அவருக்குத் தண்ணீர் தரச்சொல்ல, பிறகு அவரே “வேணாம்.. அவரு இங்க குடிக்க மாட்டாரு” என்றார்.

“இல்ல குடுங்கோ..” என்று வாங்கிக் குடித்துவிட்டு நடை தளர்ந்து வெளியே வந்தார். ஆட்டோ ஓட்டுநர்களின் மனைவிகளும் மற்ற ஆட்டோ ஓட்டுநர்களும்  அவரைச் சூழ்ந்தனர்.

“விசாரணை முடிச்சிட்டு அனுப்புவாளாம்மா.. எனக்கு அவர்கிட்ட எப்படிப் பேசறதுன்னு கூடத் தெரியல. நல்லவான்னு சொல்ல முடியும்.. அதை எப்படி நிரூபிக்கறது சொல்லுங்கோ”

“எங்க வீட்டுக்காரங்க இத செய்துருக்க மாட்டாங்கன்னு போலீசுக்குத் தெரியும். ஆட்டோவுல ஒட்டியிருந்த தலைவர் போஸ்டரத்தான் அந்த இன்ஸ்பெக்டர் முதல்ல கிழிச்சுப் போட்டாரு. நீ செஞ்சுருப்பேன்னு சொல்லி சொல்லியே கூட்டிட்டுப் போனாங்க சாமி. அதனாலதான் மத்த ரெண்டு பேரையும் விட்டுட்டு என் வீட்டுக்காரரையும் பிரவீனையும் உள்ள வச்சிருக்காங்க” என்றாள்.

ராதாய்யா உத்தேசமாகக் காவல் நிலையம் இருக்கும் திசையைப் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டார்.

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஒரு அடையாள போராட்டத்தை ராதாய்யாவின் வீடிருக்கும் தெருமுனையிலேயே நிகழ்த்தியது. இரண்டு நாட்களில் சிகிச்சைக்கு வேண்டி அரசு மருத்துவமனையில் வள்ளிநாயகம் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரவீன் தன் வீடு சேர்ந்திருந்தார். ராதாய்யா வள்ளிநாயகம் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து மீண்டும் மீண்டுமாய் துக்கத்தில் ஆழ்ந்தார். சிவசைலத்திடம் வள்ளிநாயகத்தை மருத்துவமனையில் போய்ப் பார்க்கவேண்டும் எனச் சொல்ல,  சிவசைலம் “வேண்டாத வேலை.. பேசாம இருங்கோ..” என்று நிறுத்திக் கொண்டார்.

விடியலுக்கு முன்பே பழக்கப்பட்ட பஜார் சாலை வழியே நடக்கத் தொடங்கினார் ராதாய்யா. பஜார் சாலையைக் கடந்து இடதுபுறம் பாலத்துக்கு அடியில் திரும்பி நேராக நடந்தால் பேருந்து நிலையம் வந்துவிடும். அங்கிருந்து யாரிடம் கேட்டாலும் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் பேருந்தில் ஏற்றிவிடுவார்கள். இந்தக் கணக்கோடு நடந்து கொண்டிருந்தார். பஜார் முடியும்முன்பே யாரோ அவரைக் கைப்பிடித்து நிறுத்தினார்கள். “எங்கே போறீங்க?” பெருமாள் கோயிலில்  வேலை செய்யும் திருவடியின் குரல்.

“திருவடி.. என்னை பெரியாஸ்பத்திரி போற பஸ்ல ஏற்றி விடறியா?”

“ஏன்..உடம்புக்கு என்ன செய்யறது?”

“இல்லடா.. தெரிஞ்சவாள பாக்கணும்”

“சரி வாங்கோ மாமா… போலிஸ் ஸ்டேஷன்ல என்ன சொல்றா?”

“யார் யாரையோ விசாரிக்கறாடா திருவடி. அகிலம் பாடிண்டே நெஞ்சைப் பிடிச்சிண்டு போய் சேர்ந்துருக்கலாம். ஆட்டோக்காரா, நம்ம தெருவுல காலையிலயும் மதியமும் மாடு பத்திண்டு போவானே மாரிமுத்து, அயர்ன் வண்டிக்காரன் எல்லாரையும் விசாரிச்சிட்டாடா.. அகிலம் இருந்தப்போ இவாள்லாம் அவகிட்ட சௌஜன்யமா பழகிண்டு இருந்தா.. இப்ப அவா தினமும் ஒருமுறை அகிலத்தை திட்டுவா. அகிலத்துக்கு எத்தனை கஷ்டமா இருக்கும் இல்லையா?”

“ஆமாம் மாமா. புரியறது. உங்ககூட பேசிண்டே வர்றேனே. என்னைக் கூட பிடிச்சிண்டு போய் விசாரிப்பாளா?’

“மாட்டான்னு தோண்றது.. நீ கோயில்லனா வேலைக்கு இருக்கே.. அவா உன்னை ஒண்ணும் செய்ய மாட்டா திருவடி”

திருவடி பேருந்தில் அவரை ஏற்றிவிட்டான்.

மருத்துவமனையின் ஓசைகளைக் கேட்டபடி நின்று கொண்டிருந்தார். அவருடைய கண்கள் பார்வை கொண்டிருந்த காலகட்டத்தில் இதே கண்களின் சிகிச்சைக்காகப் பலமுறை வந்துபோன இடம்தான். இப்போது கணக்குத் தெரியவில்லை. எத்தனை அடி நடந்தால் எது இடரும், எதில் முட்டிக்கொள்வோம் ஒன்றும் புரியாத கணக்குகள். அவர் அப்படியே நின்றார். கைகளைத் துழாவினார். எதிர்பார்த்தது போல ஒருவர் கேட்டார் “ஐயா எங்க போகணும்?”

“ஆம்பளைங்க வார்டுக்கு..”

“ஆம்பளைங்க வார்டே இங்க மூணு இருக்கு”

“ஊமைக்காயம் பட்டா வைத்தியம் பாக்கற இடத்துக்கு”

எவ்வளவு யோசித்தும் அவரால் இப்படித் தான் சொல்ல முடிந்தது.

“சரி.. வாங்க.. பாக்கலாம். பேஷன்ட் பேர் என்ன”

“வள்ளிநாயகம்”

இரண்டாவது வார்டில் வள்ளிநாயகம் இருந்தார். ஒருபக்கமாய்த்தான் படுக்க  முடிந்தது அவரால். வள்ளிநாயகமும் அவரது மனைவியும் ராதாய்யாவை எதிர்பார்த்திருக்கவில்லை.

“வள்ளிநாயகம்..”எனத் துழாவ தயக்கத்துடன் வள்ளிநாயகம் ராதாய்யாவைப் பற்றிக் கொண்டார்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.. அகிலத்தை ஒண்ணும் திட்டிடாத”

“இல்லைய்யா.. அதெல்லாம் இல்ல. என்னை அடிச்சவனுங்களுக்கு வேற கோபம்”

“ரொம்ப அடிபட்டுதா வள்ளிநாயகம்”

வள்ளிநாயகம் ஒருமுறை தன் மனைவியைப் பார்த்தார்.

“விடுங்க.. தண்ணீ குடிக்கறீங்களா? பாட்டில் புதுசு தான். வெயில்ல வந்திருக்கீங்க”

“குடு வள்ளிநாயகம்” என்று வாங்கி அண்ணாந்து  குடித்தார்.

தன் மடியில் சுருட்டி வைத்திருந்த துணிச் சுருக்கினைப் பிரித்தார். திருநீறு மணம் நாசிகளை நிறைத்தது.

“மடத்துலருந்து அனுப்பின விபூதி. எல்லாம் சரியாயிடும்.. வச்சிக்கறியா” என்று விபூதியைத் தாராளமாய் இரு விரல்களால் எடுத்தார். அதன் துகள்கள் பறந்தன. வள்ளிநாயகத்தால் எழ முடியவில்லை. அவரது மனைவி மெதுவாய் ராதாய்யாவின் கையைப்பற்றி வள்ளிநாயகத்தின் அருகில் கொண்டுசென்றாள்.

நெற்றியில் வைத்த கையோடு முகம் முழுக்கத் தடவினார். அவருக்கு அழுகை புரண்டு வந்தது. கைகளைத் தடவினார். வள்ளிநாயகத்துக்கும் கண்ணீர் வந்தது.

“சரியாயிடும் வள்ளிநாயகம்”

“ஆமாய்யா”

வள்ளிநாயகத்தின் மனைவி அவரைப் பேருந்தில் ஏற்றிவிட்டாள்.

சிவசைலம் தனது வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தார். ராதாய்யா வந்ததும் வேகமாக வந்தார்.

“ஆளைப் பிடிச்சாச்சு மாமா.. ரெண்டு பேராம். திருட்டுக்காக இப்படி செஞ்சிருக்கா. சோமசுந்தரம் அந்த ரெண்டு பேரையும் இப்ப கூட்டிண்டு வருவார். அவா அன்னைக்கு என்ன நடந்ததுன்னு இங்க வச்சு சொல்லிக் காட்டணுமாம்” என்றார்.

ராதாய்யா திண்ணையில் அமர்ந்தார். அவர் கண்கள் நிலைகுத்தி ஓரிடத்தில் நின்றன.   

போலிஸ் இரண்டு பேரை அழைத்து வந்தார்கள். யாரும் அங்கு இருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. ராதாய்யா கூடத்துக்குப் போகிற வழிநடையில் நிழலின் ஒருபாகமாக நின்று கொண்டிருந்தார். “அவர் இருக்கட்டும்” என்பதாக சோமசுந்தரம் தலையாட்டினார்.

வந்த இரண்டு பேரில் ஒருவன் வழிப்போக்கனாக மாறினான். மற்றொருவன் அகிலமானான். வழிப்போக்கன் குரல் கொடுத்ததும் அகிலம் உள்ளிருந்து நடந்து வந்ததையும் செய்துகாட்டிக் கொண்டிருந்தார்கள்.

ராதாய்யாவின் கைகள் நடுங்கின. சுவரைப் பிடித்துக்கொண்டு உடலைத் தாங்கினார்.

வழிப்போக்கன் தண்ணீர் கேட்டான். அகிலம் நீருக்காக உள்ளே போனாள். தண்ணீர் சொம்போடு வந்து நின்றாள்.  ராதாய்யா பார்த்தபடி நின்றார். அகிலம் தண்ணீர் சொம்பை நீட்டுகிறாள்.

ராதாய்யா நிழலுக்குள் இருந்து தண்ணீருக்காக வேண்டி கையைத் தாழ நீட்டிக்கொண்டே இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.