புதுமைப்பித்தனின் படைப்புலகம்

புதுமைப்பித்தனின் படைப்புலகம்

சங்குக்குள் அடங்கிவிடாத  புதுவெள்ளம்

புதுமைப்பித்தனின் கதைத் தொகுப்பு நூலை எடுத்துப் புரட்டும் போதெல்லாம் ஒரே ஆண்டில் 45 கதைகளை எழுதி வீசிவிட்ட அவரின் அசுரத்தனமான வேகத்தின் பட்டியலை ஒவ்வொருமுறையும் பார்ப்பேன்.  அதைப்  பார்க்கும் போதெல்லாம் –  ச்செ, எடுத்த எடுப்பிலேயே என்ன வேகம்! என்ற மனவெழுச்சி ஏற்படுகிறது.  இதில் 1935-ல் முதல் மாதத்தில் எழுதிய இரு கதைகளையும் 1934- ன் இறுதியில் எழுதியதாகச் சொல்வேன். அவர் இறுதி ஆண்டுகளில் எத்தனை கதைகள் எழுதியிருக்கிறார் என்று பார்ப்பேன். 1947-க்கு ஒரு கதை, 1948-க்கு ஒரு கதை என்ற பட்டியலைப்  பார்க்கும்போது என்னுள் சொல்லமுடியாத துக்கம் ஒன்று  எழும்பும். எனக்கு அது படைப்பாளியாக பல விசயங்களைச் சொல்வதுண்டு. ஆனால் இந்த வாழ்க்கைச்  சக்கரத்தில் நசுங்குவதிலிருந்து விடுபட்டு வர முடிவதில்லை. இளம் வயதில் அகால மரணமடைந்த புதுமைப்பித்தன் 55 வயது  வரையேனும் இருந்திருந்தால் புனைகதையுலகில்  என்னவெல்லாம் சாதித்து இருப்பார் என குழந்தைத்தனமாக நினைத்திருக்கிறேன்.

புதுமைப்பித்தன் மரணமடைந்து எத்தனையோ பத்தாண்டுகள் போய்விட்டன. இன்னும் பத்தாண்டுகள் மட்டும் வாழ்ந்திருந்தால் எப்படியெல்லாம் தனது ஆக்கங்களைத்  தந்திருப்பார் என்று அபத்தமான எண்ணம் இப்போதும் தோன்றுகிறது.  புதுமைப்பித்தனை நினைக்கும்போதெல்லாம் இந்த மனநிலையை, கனவை தடுக்க முடிவதில்லை.  கம்பனுக்கு வாய்த்த சடையப்ப வள்ளல் புதுமைப்பித்தனுக்கு  இல்லாமல் போன துக்கம் தோன்றுவதுண்டு. போகட்டும்,  புதுமைப்பித்தனைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் படிக்க நேர்ந்தும்  குறிப்புகளாகவேனும் ஏதும் எழுதவில்லை. என் மனம் போன போக்கில் இப்போதேனும் எழுதிவிட வேண்டும் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.

புதுமைப்பித்தனின் கதைகள் வாசிக்கின்ற போது, புனைவு மொழியைச் சர்வ சுதந்திரத்துடன் கையாளும் ஆற்றலும் பொய்மைகளைப் போட்டுடைக்கின்ற   பார்வையின் தீவிரமும் உடனடியாக வசீகரிக்கச் செய்கின்றன.  தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் புதுமைப்பித்தனுக்கு  முன்னோடியென்று  யாரும் இல்லை. தடமும் இல்லை.  தன் இஷ்டப்படி புகுந்து சென்ற துணிச்சல் மிக்க கலைஞன் அவர்.  அப்படி முன்னோடிகளோ  தடங்களோ  இல்லாதது பல்வேறு அனுகூலங்களை அவருக்குத் தந்திருக்கின்றன.  இந்த வடிவத்தில் தான் எழுதவேண்டும் இந்த வடிவத்தில் எழுதினால் சரி வராது என்ற  எடுத்துரைப்பியல் முறை அவர் முன் இல்லை. மனதில் தோன்றிய வடிவங்களில் எந்த தயக்கமும் இல்லாமல் எழுதினார். அதை அனாயசமாக கைப்பற்றிக் கொண்ட கலைஞன்.  பிரச்சினைகளை, பிரச்சினைகள் குறித்து தன்னுள் தோன்றும் எண்ணங்களை கொட்டுகிறார். சாட்டையால்  சொடுக்குகிறார்.  மிச்சம் மீதி வைக்காமல் வைக்காமல் சொல்லி விடுகிற  பேராசைக்காரர் அவர்.  பெரும்பாலும்  குறிப்பால் உணர்த்தும் பண்பை ஏகதேசமாக தூக்கிப் போட்டுவிடுகிறார்.  இந்த முற்போக்குத் தன்மை பின்வந்த முற்போக்குவாதிகளின் எழுத்துலகிருந்து  முற்றிலும் வேறொன்றானதாக இருக்கிறது. அவர்களால் கைப்பற்ற முடியாத மனப்போக்கு ஒன்று புதுமைப்பித்தனிடம் பொங்கியபடி இருக்கிறது.  நாம் எதிர்பாராத  உவமைகள்;  நாம் அனுமானித்திராத  விவரணைகள்;  நமக்குள்ளிருந்து கேலியுடன் பாய்ந்துவராத பழந்தமிழ் இலக்கிய வரிகள்; நமக்குத் தோன்றாத பார்வைகள் எல்லாம் அவருக்குள் அவருக்கே உரித்தான எக்காளத்தில் தெறித்தன.  எந்த கொள்கைக்கும் விசுவாசம் காட்டாத மாற்றுப்பார்வை அவரிடம் தீவிரத்துடன் இயங்கியிருக்கிறது.  கடவுளர்களை,  பழம் மரபுகளை, நம்பிக்கைகளை,  சாதிகளை,  மதங்களைத் தூக்கிப்போட்டுப்  பந்தாடுகிற புதுமைப்பித்தன்.  அவற்றிலிருந்து அந்நியப்பட்டுப் பேசுவதில்லை.  அந்தச் சூழலுக்குள் நின்றபடி பேசுகிறார்.  வெளியிலிருந்து கொள்கைகளைக் கொண்டுவந்து அளப்பதில்லை. தன் அனுபவ சாரத்திலிருந்து தனது பார்வைகளை,  மதிப்பீடுகளை வெளிப்படுத்துகிறார்.

எல்லாவற்றையும் தன்னுடைய கோணத்தில் எக்களிப்புடன் சொல்லிவிடுகிற எள்ளல் மொழி பெரும் வசீகரத்தைக் கொண்டிருக்கிறது.  அது பிரச்சார தொனிபோன்று  ஒலித்தாலும் பிரச்சாரம் இல்லை.

நாம் உருவாக்கி வைத்திருக்கும் கெட்டுதட்டிப்போன- பெண்களை வஞ்சிக்கிற கருத்தியல்களை உடைத்து தகர்க்கிறதாக இருக்கின்றன.  அவை நம் வாழ்க்கையை விமர்சனம் செய்வதாக அமைகின்றன.  ஒருவகையில் உள்நின்று ஒலிக்கிற குரலாக அமைகிறது.  கயமை செய்தவர்களைச்  சில கதைகளில் முச்சந்தியில் போட்டு கிழித்தாலும், சில கதைகளில் கயமை செய்ய நேர்கிற மனிதர்களை அனுதாபத்தோடு பார்க்கிறார். சாதி வெறியின் அவலத்தைச் சொல்கிற  புதுமைப்பித்தன் மனிதனுள் சாதிய நம்பிக்கை ஆழப் புதைந்து அவனை தத்தளிக்க விடும் கோலத்தைச் சொல்கிறார். விளிம்புநிலை அல்லது தாழ்த்தப்பட்ட பெண்களின் வறுமை அவர்களது கற்பைப் பிடுங்கித் தின்னும் காட்சிகளை ஆவேசத்தோடு சொல்லும் புதுமைப்பித்தன், இல்லத்தரசிகளின் எளிய கனவுகளை மிக்க மதிப்போடு கொண்டாடவும் செய்கிறார்.  இளம்பெண்களின் பாலியலை ஒடுக்கும் நடுத்தர வர்க்க குடும்பத்து வழக்கங்களை  நொறுக்கவும் செய்கிறார்.  மீறல்களைப் பண்பாட்டு கேடாக பார்ப்பதில்லை.  அது இயற்கையின் மகத்தான பண்பு என்று போற்றுகிறார்.  சில பிராமண எழுத்தாளர்கள் விதவைகளின் துயரத்தை பால்ய விவாகத்தை விமர்சனம் செய்வது போல ஒரு  சாந்த-சமாதானச் சுழலுக்குள்  நிறுத்துகிற போது புதுமைப்பித்தன் அந்த அவலத்தை வெயில் உரைக்க நெடுஞ்சாலையில் கொண்டு வந்து நிறுத்துகிறார்.; விதவைகளின்  துயரத்தை ரத்தமாக அள்ளி எடுத்து கடவுளின் முகத்தில் பூசவும் செய்கிறார்.

அறிவார்ந்த பார்வையைப் போற்றும் புதுமைப்பித்தன் எளியவர்களின் உணர்ச்சிகளையும் பேதமைகளையும் மதிக்கிறார். எளிய பெண்களின் உணர்ச்சிகளையும் குழந்தைகளின் பேதைமை மிக்க வெளிப்பாடுகளையும் மனம் தோய்ந்து வெளிப்படுத்துகிறார். கடவுளர்களை விரட்டியும் அடிப்பார். தேடி வந்தால் அச்சத்துடன் கைகுலுக்கி அனுதாபத்துடன் அழைத்தும் செல்வார். பைகள் இல்லை என்பார். சில கதைகளில் அவைகளின் கூத்துகளை பயத்தோடு காட்டுவார். நொறுங்கி குவியலான பழந்தமிழர் பெருமைகளைக் காட்டியவாறே கடலுக்குள் கபாடபுரத்துத் தமிழர்களின் பெருமையைக் காட்ட அழைத்துச்செல்வார். ஞானமார்க்கம் என்பது போலிமார்க்கமாக புதைந்துகிடப்பத்தைச் சொல்லும் அதே புதுமைப்பித்தன், அதிலே நாம் அறிந்திராத ஞானம் இருக்கக்கூடும் என்பதாக இமயமலை பனிச்சிகரத்துக்கு அழைத்துச் சென்றும் காட்டுவார்.

புதுமைப்பித்தனின் இலக்கிய அழகியலை ‘மாற்றுப்பார்வை’ என்பதாக வரையறுக்கலாம். சமூகச்சீர்திருத்தக்காரர்கள் ஒன்றைச் சொன்னால் அது ஆயிரமாண்டுக்காலம் மனிதர்களுள் உளவியல் பிரச்சனையாக மாறிக்கிடப்பதை புதுமைப்பித்தன் சொல்வார். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைத் திருப்பிக்காட்டு என்று போதிக்கிற பாதிரிமார்களின் வேறுவிதமான அடிகளைத் திரை விலக்கிக் காட்டுவார். கற்பு, கற்பு என்று குதிப்போர்களைப் பார்த்து பசி, பசி என்று குதிப்பார். காமத்தைச் சமூக கட்டுக்குள் வைத்து ஒடுக்கும் போதெல்லாம் அது உயிர்களின் இயல்பு என்கிறார். பணக்காரர்களின் கீழ்மையை வெறுக்கிற புதுமைப்பித்தன் எளியவர்களிடம் தோன்றும் மாண்புகளைப் போற்றவும் செய்கிறார். இப்படி எல்லாவற்றிற்கும் மாற்று உலகம் ஒன்று இருப்பதைத் துணிச்சலாகக் காட்டியவர் புதுமைப்பித்தன். எப்படி நோக்கினாலும், அவர் எளியவர்களின் பக்கம் நின்று பேசுவதைக் காணலாம்.

பணம், மனிதர்களை வெவ்வேறாக உருட்டியெடுக்கும் எத்தனையோ காட்சிகளைக் காட்டியிருக்கிறார். உழைக்கும் வறியவர்களிடம் கணப் பொழுது எழுந்துவரும் எளிய அன்பை ஆராதிக்கிறார். எளியவர்களின் எல்லா அழுக்குகளையும் ஏற்றுக்கொள்கிற பக்குவம் அவருக்கு உண்டு. சொந்த சாதி பிள்ளைமார்களின் திருகுதாளங்களைத் துணிச்சலோடு ‘நாசகார கும்பல்’ என்று அவரால் சொல்ல முடிகிறது. அதே அளவு கிறிஸ்துவ போதகர்களின் மதமாற்றத்துக்குப் பின் உள்ள சாதிய உணர்வுகளைப் ‘புதிய கூண்டில்’ ஏற்றிவிடக் கூடிய எக்களிப்பும் அவரிடம் உண்டு. ஏகபத்தினி விரதனான ராமன் தரும் விமோச்சனத்தை அது விமோச்சனமல்ல சாபம் என்று காட்டுகிற அறச்சீற்றமும் உண்டு. புதுமைப்பித்தன் மனிதர்களின் உள்ளங்களை ஒரு சட்டகத்திற்குள் கொண்டுவந்து நிறுத்துபவர் அல்ல. சட்டகத்தை மறுப்பவர். மனிதர்களின் எண்ணற்ற தனித்துவ குணங்களாகப் பார்க்கிறார்  என்றாலும் படைப்பின் அறப் பார்வையில் இருந்து விலகாமல் அவற்றை வாசகர்கள் முன் வைக்கிற ஞானம் அவருக்கு இயல்பிலேயே வாய்த்த ஒன்று.

இன்று முடிவுகள் கூறாத, மையத்திற்குள் இழுக்காத, விளிம்பைப் பேசுகிற, அர்த்தத்தைத் திணிக்காத, கொண்டாட்டத்தை போஷிக்கிற, மாயத்தை விரும்புகிற ,விஞ்ஞான உலகத்தின் இரும்புவிதியை மறுதலிக்கிற, தலித்திய பெண்ணிய விடுதலைக்குரலைப் போற்றுகிற, புதிய சொல்முறைகளை ஆராதிக்கிற கதைகளைப் பின் நவீனத்துவக் கதைகளாக முன் வைக்கின்றனர். இவை அனைத்தையும் அவ்விதமான கொள்கை கோட்பாடுகளின்றியே எழுதிக் குவித்தவர் புதுமைப்பித்தன் ‘புரட்சி மனப்பான்மை’, ‘ஞானக் குகை’, ‘பிரம்ம ராக்ஷஸ்’ ‘செவ்வாய் தோஷம்’ ‘ஆற்றங்கரைப் பிள்ளையார்’ ‘எப்போதும் முடிவிலே இன்பம்’, கட்டிலைவிட்டு இறங்காத கதை’, ‘அகல்யை’, ‘அபிநவஸ்நாப்’ ‘கனவுப்பெண்’ ‘திருக்குறள் செய்த திருக்கூத்து’ ‘உபதேசம்’ , என இந்தவகையில் சொல்லத்தக்கக் கதைகள் பல உள்ளன.

விளிம்பு மனிதர்களின் வாழ்க்கையைப் பரிதாபகரப் பார்வையில் வெளிப்படுத்தாமல், உள்ளது உள்ளதுபடி வெளிப்படுத்தியவர் புதுமைப்பித்தன். ‘பொன்னகரம்’ ‘கவந்தனும் காமனும்’ ‘குப்பனின் கனவு’ ‘தெருவிளக்கு’ ‘மகாமாசனம்’ , ‘இது மிஷின் யுகம்’ தனி ஒருவனுக்கு’ ‘நியாயம்’ ‘அவதாரம்’ ‘துன்பக்கேணி’ போன்ற கதைகள் இதற்குச்சான்று.

வைதீக கருத்தியலில் நசுக்கப்பட்ட பெண்களின் குரலை ‘வழி’ ‘ஆண்மை’ ‘வாடாமல்லிகை”சாபவிமோசனம்’ ‘கலியாணி’ போன்ற கதைகளின் உக்கிரமாக வெளிப்படுத்தியுள்ளார். இப்படி இன்றைய பல்வேறு கோட்பாடுகளுக்கு உதாரணங்கள் சொல்லும்படி பல கதைகளை அன்றே எழுதியிருக்கிறார்.

இலக்கிய அரசியல் ஓங்கி நிற்கும் இன்றைய காலகட்டத்தில் புதுமைப்பித்தனின் இம்மாதிரி கதைகளை வகைமாதிரிகளாக முன் வைக்கவேண்டிய சூழல் ஆகிவிட்டது. அனால் இந்த காபந்துகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் படைப்பெழுச்சியின் தனித்துவ ஆளுமையாக நிற்பவர் புதுமைப்பித்தன். பித்தன் மீது வீசப்படும் வசைகளுக்கு, அவரின் கதைகளுக்குள்ளிலிருந்தே சரியான பதில்கள் உண்டு. முன் முடிவு தடிகளோடு சாத்த முயன்ற திருவாளர்களுக்கும் இது தெரியும். ஆனால் புதுமைப்பித்தனின் பதில்களை வசதியாக ஒளித்துவைத்துவிட்டு ஆடும் நர்த்தனத்தை வாசகன் படித்து கண்டடையும்போது அவர்களின் சாயம் வெளுத்தபடியே தான் இருக்கிறது. கோட்பாட்டுத் தடியைக் கொண்டு வீழ்த்தப் பார்த்தவர்களின் நோக்கம் புதுமைப்பித்தன் பிள்ளை சாதியில் பிறந்து விட்டதும், வைதீகம்போல கிறித்துவ பெருமத பாதிரிமார்களின் ஆட்டத்தை போட்டுடைத்ததும் காரணம். மேலாதிக்க பிள்ளை சமூகம் தலித்துகளுக்கு எதிரானது; துரோகம் இழைத்தது என்ற சமூகவியல் அடிப்படையில் பிள்ளைமார் சாதியில் பிறந்த புதுமைபித்தனைத் தூற்றினர். அவர் பிள்ளைமார்களின் அடாவடித்தனங்களை துணிச்சலோடு எள்ளி நகையாடிய இலக்கியப் பேராளுமை என்பது உலகறிந்த விசயம்.  பெருமாள்முருகன் ‘மாதொருபாகன்’  நாவலில் அரைப்பக்கம் -அதுவும் குறிப்பாக எழுதியதற்கே எழுதமுடியாமல் முடக்கப்பட்ட இந்நாளில் புதுமைப்பித்தன் போகிறபோக்கில் பல கதைகளில் பிள்ளைமார்களைக்  கடிந்து கொண்டிருக்கிறார்;  என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதுமானது. இன்று புதுமைப்பித்தன் இருந்தால் இப்படி எழுதமுடியுமா என்பதும் சந்தேகம்தான்.

தனது ஆரம்பகால படைப்புகளில் புதுமைப்பித்தன் பாத்திரங்களின் பின்னிருந்து கதையை நிகழ்த்துவதில்லை.  ஒரு சிக்கலை,  வாழ்வின் முரணை,  புதிய கற்பனை படிமத்தை சொல்ல தனது விரிந்த விவரணைக்குள் பாத்திரங்களைக்  கொண்டு வந்து ஊன்றுகிறார்.  அதனால் அவரின் மொழி ஜொலிப்பதுபோல பாத்திரங்கள் ஜொலிப்பதில்லை.  முழுக்க புதுமைப்பித்தனின் புதிய கருத்தியல் ஆளுமையைக்  காட்டுவதாகவே அமைகிறது.  பாத்திரங்களின் குரலாக நமக்குள் எதிரொலிப்பதில்லை.  பல நல்ல கதைகள் படிக்கும் போது ஏற்படுத்திய பாதிப்பை நினைவுகளிலிருந்து ஏற்படுத்துவதில்லை.  அதற்கு காரணம் மாந்த உருவாக்கத்தின் மீது அக்கறை அற்று பிரச்சினைகளின் உக்கிரத்திற்கு  முக்கியத்துவம் கொடுத்துத்  தனது எண்ண வெளிப்பாட்டை தீவிரமான மொழியில் வெளிப்படுத்தியது தான். கதாமாந்தர்களின் வழி பிரச்சினையின் தீவிரம் வெளிப்படும் போது அவை சிறந்த, மிகச் சிறந்த கதைகளாக கலையின் ஆற்றலோடு வெளிப்பட்டிருக்கின்றன.  இரண்டாண்டு காலத்திலேயே இவ்விடத்திற்கு வந்துவிடுகிறார்.  சிறுகதை என்பது ஒருவித நிதானத்தில் உருவாவது என்பதை படைப்பாளியாக அவர் உணர்ந்ததும் நல்ல கதைகள் கிடைக்க தொடங்குகின்றன.  ‘வாடாமல்லிகை’  ‘வழி’  இரண்டும் விதவைகளின்  பாலியல் ஒடுக்குமுறையைச்  சொல்கிற கதைகள்தாம்.  தம்பியின் திருமணம்; பக்கத்து வீட்டு புதுமணத்  தம்பதிகளின் சல்லாபம் என்கிற  பின்புலத்தில் இப்பெண்களின் ஒடுக்கப்பட்ட இச்சையை சட்டென சொல்லிவிட்ட கதைகள். அவர்களின் பாலியல் தவிப்பும் இருக்கவே செய்கிறது.  ஆனால் வாழ்வை முழுமையாக நெருங்கி அப்பெண்களின் தவிப்புகளாகப்  புதுமைப்பித்தன் காணவில்லை. ஒரு பொதுப் புத்தியில் அறிந்ததை  ஓங்கி அடிக்கிறார். பொய்யான காருண்யத்தின்  மீதும் சமூகக் கருத்தியல் மீதும் ஏறிச்சாடுகிற இடத்திற்குப் பறந்து விடுகிறார். ‘ வாடாமல்லிகை’  கதையில் வரும் சரசு, தன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று வருபவனை மறுதலிக்கிறாள். திருமணம் இல்லாமலே உறவு இருந்தால் போதும் என்கிறாள். அதற்கு அவன் ‘நீ ஒரு பரத்தை’ என்கிறான்.  அதற்கு ‘ உமது தியாகத்திற்க்கு நான் பலியாக மாட்டேன்.  அதில் எப்பொழுதும் உமக்கு இந்தக்  காலத்து நன்மதிப்பு ஏற்படும். தைரியசாலி என்பார்கள்.  அதை எதிர்பார்க்கிறீர்.  நான் பரத்தை அல்ல- நான் ஒரு பெண்.  இயற்கையின் தேவையை நாடுகிறேன்’  என்கிறாள்.

‘வழி’  கதையில் வரும் இளம் விதவையான அலமி, வசதியான பெண். எதிர்வீட்டு விசாலத்தின்  சந்தோசம் சூசகமாகத் தெரிய வருகிறது.  அலமிக்கு கணவனோடு இருந்த பழைய நினைவுகள் வருகின்றன. தகப்பனிடம் தன் தத்தளிப்பை சொல்ல முடியாது.  அவரும் இதனை புரிந்து கொண்டு நல்ல வழி எடுக்கப் போவதில்லை.  விதவையாகவே கிடந்து அழிய வேண்டியதுதான்.  துக்கத்தோடு கட்டிலில் பொத்தென விழுபவளின் நெஞ்சில் கொத்துச்சாவியின்  முள்வாங்கி விர்ரென பாய்கிறது. ரத்தம் குபுகுபுவென வெளியேறுகிறது.  மகளின் அறையில் இன்னும் விளக்கெரிவதைப் பார்த்து தந்தை உள்ளே நுழைகிறார்.  மகளின் மார்பிலிருந்து ரத்தம் வழிவதைக்  கண்ட தகப்பன் பதறுகிறார். ‘ நெஞ்சின் பாரம் போவதற்குச் சின்னவாசல் என்கிறாள். மயக்கத்தில் ரத்தத்தை அடைக்க முயல்கிறார். ‘ மூச்சுவிடும் வழியை அடைக்க வேண்டாம்’  என்று தடுக்கிறாள். ‘பைத்தியமா?  உனக்கு  ரத்தம் வருகிறதேடி’  என்று கதறுகிறார். ‘ இந்த ரத்தத்தை அந்த பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ’ என்கிறாள்.

இந்த இரு கதைகளிலும் வரும் விதவைகள் இருவரும் மரணத்தைத்  தேர்வு செய்கின்றனர்.  புதுமைப்பித்தன் விதவைகளின் பக்கமிருந்து நமது பழங்கருத்தியல்கள்  மீது ஓங்கி அடித்து நொறுக்குகிறார்.  பிராமண எழுத்தாளர்கள் இவ்விதமான கதைகளில் ஒருவித மென்மைப்  போக்கைக் கையாண்டபோது புதுமைப்பித்தன் அக்கருத்துக்கள் மீது வெடிகுண்டுகளை வீசி சிதறடிக்கிறார்.  இரண்டும் முக்கியமான கதைகள்தான்.  விதவைகளின் பாடுகள் வலி அடர்த்தி கூடி வந்திருக்குமானால் ‘சாப விமோசனம்’  போல மகத்தான கதைகளாக வாய்த்திருக்கும்.  பல நல்ல கதைகள் சுருக்கமாகச் சொல்லப்பட்டதாலே அவைகள்  அடைந்திருக்க வேண்டிய  உச்சத்தை அடையாமல் போய்விட்டன.  மொழியின் வழி வெளிப்படும் கிண்டலும் உக்கிரமும் பாதிக்கச் செய்கின்றன. ‘ வாடாமல்லிகை’  கதையில் ‘அவள் பெயர் ஸரஸு;  ஒரு பிராமணப்பெண்.  பெயருக்குப் தகுந்ததுபோல் இருக்க வேண்டும் என்று நினைத்தோ  என்னவோ 17 வயதுக்குள்ளேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக்கலையை மனமுவந்து அளித்தது.  அவள் கணவனுக்குக் காலனுடன் தோழமை ஏற்பட்டுவிட்டால் அதற்குச் சமூகம் என்ன செய்ய முடியும்?  என்று பண்பாட்டுக்கூறுகளை எள்ளலுக்கு உள்ளாக்கி, ‘ புருஷன் வாழ்க்கையின் இன்பத்தைச் சற்று காண்பித்துவிட்டு விடாய் தீருமுன் தண்ணீரைத் தட்டி பறித்த மாதிரி,  எங்கோ மறைந்துவிட்டான்.  என்று ஏக்கத்தைச்  சொல்லி, ‘கொள்கைக்காக நீர் தியாகம் செய்து கொள்ள முயலுகிறீர், அது வேண்டாம். மிஞ்சினால் நான் உமக்குப் போகக்  கருவியாகத்தான் உமது தியாகத்தின் பலிபீடமாகத்தான் நீர் கருதுவீர்.  அது எனக்கு வேண்டாம்.  நான் காதலைக் கேட்கவில்லை.  தியாகத்தைக்  கேட்கவில்லை.  நான் தேடுவது பாசம்…’  என்று பேசவும் வைக்கிறார்.  வாடாமல்லிகை கதை நிகழும் காலம் சமூக சீர்திருத்தம் பரபரப்புடன் வளர்ந்து வந்த காலம் (1934) என்பதையும்  இவ்விடத்தில் நினைவு படுத்திக் கொள்ளலாம்.

‘வழி கதையில் புதுமைப்பித்தன் தம் மொழிவழி உருவாக்கும் பார்வையை இவ்விதம் தருகிறார். ‘ ஒரு வருஷம் சென்றது தெரியாதபடி வாழ்க்கை இன்பத்தின் முன்னொளி போல துரிதமாகச்  சென்றது.  பிறகு அந்த நான்கு வருஷங்களும் பிணிவாய்ப்பட்ட கணவனின் சிக்ருஷை  என்ற தியாகத்தில் வாழ்க்கையின் முன்னொளி செவ்வானமாக  மாறி,  வைதவ்யம் என்ற வாழ்க்கை  அந்தகாரத்தைக்  கொண்டு  வந்தது. ‘ மரண தண்டனையனுபவிக்கும் ஒருவன்,  சார்லிசாப்ளின் சினிமா படத்தை அனுபவிக்க முடியுமா? வைதவ்ய  விலங்குகளைப்  பூட்டிவிட்டு சுவாரஸ்யமான பிரசங்கத்தை கேள் என்றால் அர்த்தமற்ற வார்த்தையல்லவா  அது?  இப்படி சொல்லி வருகிற புதுமைப்பித்தன்,

‘ இந்த வெள்ளைக்காரன் ஒரு முட்டாள் ‘சதி’யை நிறுத்தி விட்டதாகப் பெருமையடித்துக் கொள்கிறான்.  அதை இந்த முட்டாள் ஜனங்கள் படித்துவிட்டுப்  போகிறார்கள்.  முதலில் கொஞ்சம் துடிக்க வேண்டியிருக்கும். பிறகு… ஆனால் வெள்ளைக்காரன்  புண்ணியத்தால் வாழ்க்கை முழுதும் சதியை,  நெருப்பின் தகிப்பை அனுபவிக்க வேண்டியிருக்கிறதே!  வைதவ்யம் என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியுமா?  ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பாகத்  தகிக்கும் சதியல்லவா வைதவ்யம்?  என்று வெள்ளைக்காரன் சட்டத்தின் ஓட்டை மீதும் ஒரு சொடுக்கு சொடுக்குகிறார். ( உரைநடையில் விசயம் சார்ந்து தெறிக்கும் சிந்தனைகளைப்  புனைகதை மொழிக்குள் மிக லாவகமாக கையாண்டவர் புதுமைப்பித்தன்)  இந்த வகையில் வாழ்வின் நெருக்கடிகளைச் சற்று விரிவாக எழுதியிருந்தால் ‘தனி ஒருவனுக்கு’ ‘ மோட்சம்’ ‘ தியாகமூர்த்தி’ ‘ பாட்டியின் தீபாவளி’  ‘நியாயந்தான்’  போன்ற கதைகள் கூடுதல் பரிமாணம் பெற்றிருக்கும்.

ஒரு பக்கத்தில் சொல்லி முடித்து விடுகிற கதைகளிலும் பிரச்சினையின் மையத்தை ஒட்டி வேறு என்னென்ன சொல்லத் தோன்றுகிறதோ அதையெல்லாம் சொல்லி வந்து மையத்தைத் தொடுகிறார்.  இதில் அவர் எடுத்துக்கொள்ளும் சுதந்திர உணர்வு சிறுகதையின் ஒருமைக்கு வெளியே சென்றாலும் அதுபற்றி அவர் கவலைப்படுவதில்லை. புதுமைப்பித்தனின் முத்திரையே அம்மாதிரி இடங்களில்தான் துள்ளிவிழுகிறது. மற்றொன்று, சிறுகதையின் வடிவ ஒருமை குறித்து தீவிரமாக விவாதிக்கப்படாத காலம். வடிவத்தை லேசாக நெகிழ்த்துக்கொண்டு எண்ணத்தின் வீச்சிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறார்.

ஒரு இடத்தைப் பற்றி சொல்லும்போது அவருக்கே உரிய கிண்டல் தொனி மேலோங்கச்  சொல்கிறார்.  ஒருமைப் பண்பாட்டு இழைகளால் பின்னப்பட்டிருப்பதாலே தமிழ் வாசகர்களை  வசீகரிக்கச்  செய்கின்றது. பொன்னகரத்தைப்  பற்றிக்  கேட்டிருக்கிறீர்களா?  நமது பௌராணிகர்களின் கனவைப்போல் அங்கு ஒன்றுமில்லை.  பூர்வ புண்ணியம் என்று சொல்கிறார்களே அந்தத் தத்துவத்தைக்  கொண்டு நியாயம் என்று சமாதானப் பட வேண்டிய விதிதான்.  ஒரு சில ‘மகாராஜாகளுக்காக’  இம்மையின் பயனைத் தேடிகொடுக்கக் கடமைப்பட்டு வசிக்கும் மனிதத்  தேனீக்களுக்கு உண்மையில் ஒரு பொன் நகரந்தான் அது.  என்று பொன்னகரத்தை அறிமுகப்படுத்திவிட்டு பொன் நகரத்து மக்கள் வாழும் பூர்வ புண்ணியத்தெருவை  அடுத்துக் காட்டுகிறார்.

‘ இந்த திவ்விய பிரதேசத்தைத்  தரிசிக்க வேண்டுமானால்…  சிறு தூறலாக மழை சிணுசிணுத்துக்  கொண்டிருக்கும்பொழுது சென்றால்தான் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்,  வழி  நெடுகச் சேற்றுகுழம்புகள். சாலையோரமாக ‘முனிசிபல் கங்கை’  அல்ல.  யமுனைதானே கறுப்பாக இருக்கும்?  அதுதான்.  பிறகு ஓர் இரும்புவேலி.  அதற்குச்சற்று உயரத்தள்ளி  அந்த ரயில்வே தண்டவாளம்.

மறுபக்கம் வரிசையாக மனிதக்கூடுகள்- ஆமாம்,  வசிப்பதற்குத்  தான்!  என்று விவரித்துச் செல்கிறார்.  பொன்னகரத்து அம்மாளு வறுமையால் கற்பு பிறழ்வதை சொல்லவந்த புதுமைப்பித்தன் ஊரின் வறுமையை,  தெருவின் அலங்கோலத்தை,  அங்கு வாழும் மனிதர்களின் பசியைச்  சொல்லி அம்மாளு அடிபட்டுகிடக்கும்  கணவனுக்குப் பால்கஞ்சி வாங்க ஆடவன் அழைத்த இருண்ட சந்துக்குள் ஒதுங்கி காசைப் பெற்று வருவதைச் சொல்கிறார்.  அதை மட்டும் தொட்டு  நிறுத்தாமல் ஒரு குதி குதிக்கிறார்.  திருவிளையாடல்களை நிகழ்த்த கைலாயத்திலிருந்து அடிக்கடி மதுரை நோக்கி இறங்கிவந்த சிவனின் காலடிபட்ட இடம் தான் இந்த பொன்னகரம் என்பதையும் கற்புகனலியால்  எரியூட்டப்பட்ட மதுரை என்பதையும் நினைவிற்குள் கொண்டு வந்து ‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே!  இதுதான் ஐயா,  பொன்னகரம்’  என்று ஒரு போடும் போடுகிறார்.

பிரச்சினைக்குரிய மனிதரைப்  பற்றி அறிமுகம் செய்யும்போது மொழியில் எகத்தாளம் தெறிக்கிறது. ‘தேவ இறக்கம் நாடார் அவருக்கு வல்லின இடையினங்களைப்  பற்றி  அபேதவாதக் கொள்கையோ,  தனது பெயரை அழுத்தமாகச்  சொல்ல வேண்டும் என்ற ஆசையோ எதுவானாலும் அவர் எப்பொழுதாவது ஒரு தடவை இந்த ‘டமிலில்’  எழுதுவது போல எழுதிவிடுவோம்- நல்ல கிறித்தவர்.  புரோட்டஸ்டாண்ட் சர்ச்சில் சேர்மனாக இருந்து,  மிஷனில் உபகாரச்  சம்பளம் பெற்று வருபவர்.  இந்த உலகத்திலே கர்த்தருடைய நீதி வழங்கப் பெறுவதற்காகப் பாடுபட்டதனால் ஏற்படப்போக  இருக்கும், இந்த உலகத்தின் பென்ஷனை  எதிர்பார்க்கிறார்.( நியாயம்)

இரவு நேர சென்னை நகரத்தைப் பற்றி ‘கண்ணைப் பறிக்கும் விளக்குகள், உள்ளத்தைப்  பறிக்கும்  நாகரிகம்!  மனிதனின் உயர்வையும் உடைவையும்  ஒரே காட்சியில் காண்பிக்கும் நாகரிகச் சின்னங்கள்’

‘ இது கலியுகமல்ல,  விளம்பரயுகம் என்பதற்குப் பொருள் தெரிய வேண்டுமானால் இந்த நகரத்தின் இரவைக்  காண வேண்டும்.  இந்தக் கூட்டங்கள்! – ஏன் இவ்வளவு அவசரம்?  இதுதான் நாகரிகத்தின் அடிப்படையான தத்துவம் – போட்டி  வேகம்?  இந்தப் பக்கங்களுக்கு அதற்குமேல் வரவேண்டுமென்றால் ‘ஆசாமியாக இருக்க வேண்டும்;  அல்லது குருடனாக இருக்க வேண்டும்.  அல்லது கண்கள் எல்லாம் எல்லாவற்றையும் பார்ப்பதற்குத்தான் என்ற இரும்புத்  தத்துவம் கொண்ட மனிதனாக இருக்க  வேண்டும்.  என்று மூன்று நகர்வுகளாகக்  காட்டிவிட்டு  திடுக்கென  ஒரு காட்சியை காட்டுகிறார்.

‘அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா?  சிருஷ்டித்  தொழில் நடக்கிறது. மனிதர்களா?  மிருகங்களா?  நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்லின் ஷர்ட்டு  உங்கள் ஷெல் பிரேம் கண்ணாடி!  எல்லாம் அவர்கள் வயிற்றில்  இருக்கவேண்டியதைத்  திருடியது தான்.  ரொம்ப ஜம்பமாக, நாஸுக்காகக் கண்ணை மூடவேண்டாம்.  எல்லாம் அந்த வயிற்றுக்காகத்தான’ எந்த இடத்தில் எப்படிச் சொல்வார் என்று அனுமானிக்க முடியாத எழுத்து அவருடையது. ஆனால் மிகப் பொருத்தமானது.  விழிப்புணர்வு மிக்கது. புதுமைப்பித்தனிடம் கிளம்பும் கூர்மையான- தற்செயலான விமர்சன மொழி படைப்பிற்குள் பேரெழிலோடு  ஜொலிக்கிறது.

புதுமைப்பித்தனின் மரபிலக்கிய வாசிப்பு  புனைகதைகளுக்குக்  கூடுதல் பரிமாணத்தைத்  தரும் மொழியாக மாறி செயலாற்றுகிறது.  பசியால் வாடி வதங்கும் பரம ஏழையான அம்மாசிச்  சாம்பானைப்  பற்றி ‘இவனுடைய வளர்ச்சிப் படலத்தைப்  பற்றிய பிள்ளைத்தமிழ் பற்றி யாரும் எழுதி வைக்காமல் போய்விட்டதால் 20 வயது வருமட்டுமுள்ள  சரித்திரக் குறிப்புகள் கிடைக்கவில்லை’  என்று படிக்காத பாமரரின்  ஒன்றுமற்ற தடங்களை எழுதுவார்.  அதேபோல விவரணையில் வந்துவிழும் ஆங்கிலச் சொவிகளுக்கும் ஒரு கவர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. ‘ புரட்சி மனப்பான்மை’  கதையில் ‘மலையாளத்து ரிசர்வு போலீஸ்காரர்கள் சட்டத்தையும் ஒழுங்கையும் தங்கள் சொந்த பாங்கில்  இருக்கும் கரண்ட் டெப்பாஸிட்டாகக்  கருதி அதில் அத்துமீறித் தலையிடுகிறவர்களை சொந்த கோபாவேசத்துக்கு ஆளாக்குகின்றனர்’ என்று எழுதுவார்.

 ராமசாமி பத்தர், அப்பாவின் குலத்தொழிலை வெறுத்து நகரத்தில் ‘ஒர்க் ஷாப்’ வைத்து தொழில் செய்கிறார்.  அத்தொழில் ஏற்றம் இறக்கம் காண்கிறது. பல பெண்களோடு அவருக்கு உறவு ஏற்படுகிறது.  தொழில் முடங்குகிறது.  ஆட்ட பாட்டம் ஒடுங்கி நாற்பது வயதில் வேறு வேலை தேடுகிற பத்தரைப்பற்றி ‘பழைய சல்லாப காலங்களில் சேகரித்த ‘முதல்’ வீணாகப் போகவில்லை. மருந்து என்ற சிறிய தடையுத்தரவிற்குப்  பயந்து இத்தனை நாட்கள் பதுங்கியிருந்த வியாதிகள் மீண்டும் உறவாட ஆரம்பித்தன.’ இப்படி எள்ளலோடு  எழுதுகிறார்.

புதுமைப்பித்தன் சமூகமனநிலையைப்  போகிற போக்கில் தொட்டுக்காட்டிச் செல்லும் போது கதையின் உண்மைதன்மைக்குக்  கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது.  இதே ராமசாமிபக்தர் (தியாக மூர்த்தி) ராமானுஜலு நாயுடு மோட்டார் மெக்கானிக்கில் சேர்ந்து உழைக்கிறார்.  முதலாளி பற்றி ‘ராமானுஜலு நாயுடு குணமுள்ளவர் தாம்.  சில சமயங்களில் ஐந்து  பத்து முன்பின் யோசிக்காமல் கொடுத்து உதவுகிறவர் தாம்.  ஆனால் பணம் சேர்ப்பதற்கு தான் அவர் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தாரே ஒழிய, தொழிலாளர்களுக்குத்  தர்மம் செய்து புண்ணியம் சம்பாதிக்க வரவில்லை.’  என்று மனிதனின் யதார்த்த உளவியலுக்குள் இழுத்து விடுகிறார்.

வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் புதுமைப்பித்தன் தன் எண்ணத்தை, தனது மதிப்பீட்டை,  தனது பார்வையைத்  தனது அனுபவச்சாரத்திலிருந்து  பெற்ற தெளிவைச் சொல்லாமல் விட்டது இல்லை. ‘ எப்போதும் முடிவிலே இன்பம்’ என்ற கதையில் ஒரு கலெக்டர் பங்களாவில் முயல் பதுங்கி வாழ்கிறது. அதைப் பிடிக்க நாய் வரவழைக்கப்படுகிறது.  நாய், முயலுடன் நட்புக்கொள்ள விரும்புவதாகப் பேசுகிறது.  முயல் பதில் அளிக்கிறது.

‘’ நீரோ மாமிசத்தை விட முடியாது என்கிறீர்.  என்னைத் தின்ன மாட்டேன்  என்றாவது சத்தியம் செய்து கொடுப்பீரா?’’

‘’இந்த லோகத்திலே யாராவது குருவைத் தின்பார்களா? உமக்கு ஏன் இந்த சந்தேகம்’’ என்றது நாய்.

‘’லோகத்திலேதான் சில பேர், தம் வயிற்றுக்குள்ளே குரு போய் விட்டால் தாமே குருவாகிவிட்டதாக நினைத்துக்  கொள்கிறார்கள். அது நமக்கு தெரியாது போல இருக்கிறது’’ என்று சொல்லியது முயல்.

‘?’ என்றொரு கதை. அதில் குருவும் சிஷ்யனும் இமயமலைப்பயணம் செல்கின்றனர். குரு சொல்கிறார்:

‘’ அதோ தெரிகிறதே பார்த்தாயா கைலயங்கிரி, உயர்ந்து கம்பீரமாக வானைக் கிழித்துக் கொண்டு! சித்திரத்திலகம் போல அதன் உச்சியில் வான் தகட்டில் தெரிகிறதே ஒரு நட்சத்திரம்- பிரகாசமாக- அதைப்போலத்தான் இலட்சியம், தெய்வம்!.

‘’ பிரபோ!  நிமிர்ந்து நின்று என்ன பயன்?  உயிரற்றுக்கிடக்கிறதே! பிரகாசமாக இருந்தால் மட்டும் போதுமா?  ஒருவன் எட்டிப் பிடிப்பதற்காக அது இருந்தென்ன அல்லது கண்ணுக்குத் தெரியாமல் போய் என்ன?’’  என்கிறான் சிஷ்யன்!  இப்படி புதுமைப்பித்தனின் மேதமை வெளிப்படும் இடங்கள் பல உண்டு. பொதுவாக,  சொர்க்கம், கைலாசம், வைகுந்தம், எமலோகம், விஷ்ணு, திருமால், பிள்ளையார்- கடவுள் என வாழ்க்கைக்கு எட்டாத விசயங்கள் சமூகத்திற்க்கு, தனிமனிதனுக்கு பயனில்லை என்பதுதான் புதுமைப்பித்தன் கருத்து.  அல்லது இவ்விசயங்கள் புழுதியில் புரளும் மக்களை காருண்யத்தோடு  அனைத்து கொள்ளாதபோது இருந்தும் பயனில்லை என்பது புதுமைப்பித்தனின் கருத்து. (காலனும் கிழவியும்,  மனக்குகை ஓவியங்கள்,’?’,  சாமியாரும் குழந்தையும் சீடையும்,  அன்று இரவு)

நிச்சயத்திருந்த பெண்ணின் திருமணம் பெற்றோர்களால் தடைபடுகிறது கற்பை பறிகொடுத்து விடுகிறாள். புத்திபேதலித்து கணவனைத்  தேடியலைகிறாள். (ஆண்மை) ‘ நடைமுறை உலகத்திலே,  இந்த மகத்தான கலியுகத்திலே,  திருமணம் என்றால் குலப்பெருமை கிளைத்தும் கலகாரம்பம் என்பது எனக்கு தெரியும்’ என்று திருமணம் குறித்த தனது விமர்சனத்தை முன் வைக்கிறார்.

இரண்டாம் உலகப்போர்ச்  சூழலில் மனிதர்களிடம் ஏற்பட்ட பயத்தையும் பதைபதைப்பையும்  மௌன ஓலத்தையும்  சொல்கிறது ‘ படபடப்பு’ கதை. அதிலே ‘உலகிலே- மனிதனுக்கு உலகம் என்பது என்ன?  பூகோள புஸ்தகத்தில் படிப்பதா?  அல்லவே அல்ல. அனுபவ கிரந்தத்தில் படிப்பதேயாகும்.   அது இரண்டரைச்  சதுரமைல் விஸ்தீரணமுள்ள ஓட்டப்போட்டியாக  இருக்கலாம். அல்லது நியூயார்க் மாதிரி ஒரு சின்ன பிரபஞ்சமாக இருக்கலாம்.  அல்லது நாலு முழத் தொட்டிலாக  இருக்கலாம்.  பக்குவத்துக்கு ஏற்றபடி அதுதான் உலகம். அந்த உலகத்தைத்தான் ஆதிசேஷன் தாங்குகிறான்.  சூரிய மண்டலத்தை சுற்றி வரும் உருண்டையான கிரஹ கோலத்தையல்ல…’ என்று அனுபவ உலகைப் பெரும் போர் நிகழ்ந்த சூழலிலும் வேறொன்றாக மேலதிகமான சிந்தனையோட்டங்களைச்  சர்வசாதாரணமாக வெளிப்படுத்தி  ‘வழி’ கதையில் இளம் பெண் விதவையான கோலத்தை,’ ஒரு வருஷம் சென்றது தெரியாதபடி வாழ்க்கை, இன்பத்தின் முன்ன் ஒளிபோல துரிதமாக சென்றது பிறகு முன்னொளி போல துரிதமாகச்  சென்றது.  பிறகு அந்த நான்கு வருஷங்களும் பிணிவாய்ப்பட்ட கணவனின் சிக்ருஷை  என்ற தியாகத்தில் வாழ்க்கையின் முன்னொளி செவ்வானமாக  மாறி,  வைதவ்யம் என்ற வாழ்க்கை  அந்தகாரத்தைக்  கொண்டு  வந்தது. ‘என்று எழுதியது விதவையான பெண்கள் அத்தனை பேருக்குமான ஒரு துயரப்படிமமாக அமைந்து பொருள் தருகிறது. அப்படி காணுகின்ற ஆற்றலைத்தான் மேதமை என்று குறிப்பிடுகிறோம்.

‘ பிரம்மராட்சஸ்’  ஒரு சிக்கலான மாய எதார்த்தக்கதை  மனிதனுக்குள் ஓடும் தேடல் என்ற அதிதீவிரம் உந்த மர்மத்தின் உள்முகங்களைக்  காணப்புறப்பட்டு குகைக்கு உள்ளே கரிக்கட்டையான நன்னயபட்டனின்  கதை இது. நித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு அதன் ரசவாதங்களைச் செய்து பார்த்து தவறான செய்கையால் இழந்த நன்னயபட்டனின் மன உலகைக்  கவித்துவ வரிகளால் எழுதுகிறார்.

‘ அவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. போகத்தை விரும்பவில்லை. மனக்கோடியில் உருவம் பெறாது வைகறை போல் ஆசை எண்ணங்களைத் துருவியறியவே ஆசைப்பட்டான்.  மரணத்தால் முற்றுப்புள்ளி பெறாது ஆராய்ச்சியின் நுனிக்கொழுந்து வளர வேண்டுமென்ற நினைப்பில் அவன் ஏற்றுக்கொண்ட சிலுவை அது’-  இக்கதை முழுக்க எக்களிப்புடன் தீவிரமான படைப்புமொழி பொங்கிவழிவதை வாசகர்கள் படித்து அனுபவிக்க வேண்டியது.  அதில் ஓரிடம். ‘ காற்று அசைவில்லாது நிற்கும் மரங்களிடையே ஒரு துயரம் பொதிந்த பெருமூச்சு எழுந்தது. என்ற வரி இக்கதையின் ஒட்டுமொத்தமான குரலாக மாறும் விந்தையையும் காணலாம்.

தொடரும்..


-சு.வேணுகோபால்


குறிப்பு: எழுத்தாளர் சு.வேணுகோபாலின் “தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி” கட்டுரைத் தொகுப்பிலிருக்கும் இந்த கட்டுரை எழுத்தாளரின் உரிய அனுமதியோடு பதிவேற்றம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.