”எல்லாமே உயிருள்ள மீனுங்க பார்வதி. பானையில தண்ணிக்குள்ள சலக்குபுலக்குனு வட்டமடிக்குதுங்க. எங்க தாத்தா ஏரிக்குள்ள தூண்டில் போட்டு புடிச்சி குடுத்தாரு. இது போதும் ஒன் தொட்டிக்கு. ஊட்டுக்கு எடுத்தும்போன்னு சொல்லி அனுப்பிட்டாரு. நானும் பானைய தூக்கி இடுப்புல வச்சிகினு ஊட்டுக்கு நடந்து வந்துகினே இருந்தன். ஏரியத் தாண்டி, தோப்பத் தாண்டி, கருமாதி கொட்டாயயும் தாண்டி நடந்துவந்துட்டன். கால்வாய் பக்கமா திரும்பி நடந்துவர சமயத்துல எதுத்தாப்புல திடீர்னு ரெண்டு கோழிங்க ஓடியாந்துதுங்க. கெக்கெக்கேனு ஒன்ன ஒன்னு தொரத்திகினு என் கால் மேல மோதறமாதிரி வந்துட்டுதுங்க. எங்க மோதிடப் போவுதுங்கன்னு பீச்சாங்கை பக்கமா கால தூக்கி வச்சி நவுந்த நேரத்துல எப்படியோ கால் சறுக்கி கீழ உழுந்துட்டன். உழுந்த வேகத்துல இடுப்புல இருந்த பானை கால்வாய்க்கரை ஓரமா கெடந்த கல்லுல மோதி துண்டுதுண்டா ஒடைஞ்சிட்டுது. கண்ண மூடி கண்ண தெறக்கற நேரத்துல எல்லாமே நடந்துட்டுது. நாலு பக்கமும் மீனுங்க தரையில துள்ளித் துள்ளி துடிக்குதுங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே புரியலை. சட்டுனு சுதாரிச்சிகினு எழுந்து எல்லா மீனயும் புடிச்சி புடிச்சி பொழச்சிக்கோ போ பொழச்சிக்கோ போன்னு ஒன்னொன்னா கால்வாய்க்குள்ள வீசினேன். கனவுன்னு தெரியாம கொஞ்சம் சத்தமாவே போபோன்னு சொல்லிட்டேன்போல. பசங்க ரெண்டும் உலுக்கி எழுப்பன பிறகுதான் கண்ண தெறந்து பார்த்தன். அப்புறம்தான் நடந்ததெல்லாம் கனவுன்னு எனக்கே தெரிஞ்சது. பசங்கதான் பயத்துல என்னம்மா என்னம்மான்னு கேட்டுகினே கெடந்துதுங்க. நல்ல கனவோ கெட்ட கனவோ தெரியலை. வெடியற நேரத்துல வந்தது. காலையிலேந்து அதயே நெனச்சி பயந்துகிட்டு கெடக்கறேன்”
தையல் மிஷின் பலகையின் மீது தைத்து முடித்த பள்ளிச்சீருடையை வைத்து மடித்து காஜாவுக்கும் பட்டனுக்குமான இடங்களை கலர் பென்சிலால் புள்ளி வைத்துக்கொண்டே சொன்னாள் அஞ்சலை.
உட்கார்ந்திருந்த ஸ்டூலிலிருந்து சற்றே எம்பி கைநீட்டி அந்தச் சட்டையை எடுத்தாள் பார்வதி. “அசந்து தூங்கற நேரத்துல எல்லாருக்கும்தாங்க்கா இப்படி கனவுங்க வரும். அதயெல்லாம் அந்தந்த நேரத்துலயே மறந்துடணும்க்கா. கழுத்த நெரிச்சி கொல பண்றமாதிரிலாம் எனக்கு கனவு வரும் தெரியுமா? அதுக்கெல்லாம் பயந்தா எப்படிக்கா?”
“என்னமோ பக்கத்துல கால்வா இருந்ததால அந்த மீனுங்க பொழைச்சிகிச்சி. இல்லைன்னா செத்துதான போயிருக்கும். அந்தப் பாவம்லாம் எனக்குத்தான வரும்?”
“ஐயோ அக்கா. பாவம் புண்ணியம்லாம் இதுல எங்கக்கா இருக்குது? நாலு புள்ள பெத்தவங்க மாதிரியா நீங்க பேசறீங்க. இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி பயப்படறீங்க. இதெல்லாம் எப்பவாவது உங்க சின்ன வயசுல இப்படி நடந்திருக்கும். அது மறுபடியும் ஞாபகத்துக்கு வருதோ என்னமோ?”
“இல்லடி பார்வதி. இந்த மாதிரி எதுவும் என் சின்ன வயசுல நடந்ததில்லடி.”
“நேரிடையா உங்க வாழ்க்கையில நடக்காததா இருந்தாலும் யாராவது கூடப் பொறந்தவங்க, கூடப் பழகனவங்க சொல்லி உங்க மனசுல பதிஞ்சிருக்கலாம்”
“அப்படி எதயும் கேட்டதா எனக்கு ஞாபகமே இல்லைடி”
“சரி, அதயே மனசுக்குள்ள போட்டு ஒழப்பரிச்சிகினு கெடக்காம விட்டுத் தள்ளுக்கா.”
“இது நல்ல கனவா, கெட்ட கனவான்னு தெரியலையே. அத நெனச்சிதான்டி வெசனமா இருக்குது”
”ஐய, இதுக்கெல்லாமா வெசனப்படுவ? பெரிய பெரிய துக்கத்தயெல்லாம் தாண்டி கரையேறி வந்து நிக்கற ஆளு நீ. இந்த கனவ நெனச்சி இப்பிடி கொழப்பிக்கறியே. சும்மா இருக்கா”
“எனக்கு எது வந்தாலும் பரவாயில்லைடி. என் புள்ளைங்களுக்கு ஒன்னும் ஆவாம இருக்கணும்டி. கண்ணுமுன்னால அந்த மனுஷன காட்டுக்கு அனுப்பிட்டு, இந்த புள்ளைங்கள வளக்கறதுக்கு நான் படற பாடு கொஞ்சமா நஞ்சமா? எல்லாம் நண்டுசிண்டுங்களா இருக்குதுங்க. இதுங்களயெல்லாம் நல்லபடியா கரையேத்தி உடணும். அத நெனச்சிதான் பயமா இருக்குதுடி”
”இப்ப என்ன நடந்துட்டுதுன்னு இல்லாததயெல்லாம் யோசிச்சி மனச கெடுத்துக்கற? வேணும்னா ஒன்னு செய்யி. அந்த மாரியாத்தாள மனசுல நெனச்சி வேண்டிக்கோ. வர ஆடி மாசம் மொத வெள்ளியில கூழு ஊத்தி ஒரு படையலை வச்சிடு. எல்லாம் சரியாயிடும். மத்தது எல்லாத்தயும் அவ பார்த்துக்குவா”
அஞ்சலை ஒருகணம் முகம் மலர பார்வதியைப் பார்த்தாள்.
“இந்த யோசனை என் அறிவுக்கு வரலை பாருடி. அவரு ஆஸ்பத்திரில படுத்த படுக்கையா கெடந்த சமயத்துல, ஒவ்வொரு நாளும் அந்த மாரியாத்தாவத்தான் தொணயா நெனச்சிட்டு கெடந்தன். ஆனா அவ என்ன கைவிட்டுட்டா. அந்த மனுஷன் மண்ணுக்குள்ள போய் இதோ மூனு வருஷமாய்ட்டுது. அதுக்கப்புறம் இந்த மிஷினே கதின்னு கெடந்துட்டேன். ஏதோ கசப்புல அந்த கோயிலுபக்கமே நான் திரும்பி பாக்கலை. எப்படியாச்சிம் கோயிலுக்கு என்ன இழுக்கறதுக்குத்தான் இந்த கனவு வந்ததோ என்னமோ.”
எதிர்ப்புறத்தில் மண்சுவரில் ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த படத்தில் வதங்கிய பூச்சரத்துக்கு நடுவில் தெரிந்த முத்துசாமியின் முகத்தைப் பார்த்தபடி பெருமூச்சோடு சொன்னாலும், அஞ்சலையின் பதற்றம் தணிந்திருப்பதையும் நிம்மதியடைந்திருப்பதையும் அவள் குரல் மூலமாகப் புரிந்துகொண்டாள் பார்வதி. “எப்படியோ ஒன்னு. ஆத்தாள மனசுல நெனச்சிக்கோக்கா. எல்லாம் சரியாய்டும்” என்று அஞ்சலையின் முகத்தைப் பார்த்துச் சொன்னாள்.
அஞ்சலை புன்னகைத்தபடியே மேசையில் சுருட்டிவைத்திருந்த அடுத்த உருப்படியை எடுத்துத் தைப்பதற்காகப் பிரித்தாள்.
முத்துசாமியை திருமணம் செய்துகொண்டு அஞ்சலை அந்த ஊருக்கு வந்த சமயத்தில் கடைத்தெருவில் இரண்டு மிஷின்களும் இரண்டு மேசைகளும் வைக்கும் அளவுக்கு இடம்கொண்ட ஒரு வாடகைக்கட்டிடத்தில்தான் அவன் கடை வைத்திருந்தான். அந்த வட்டாரத்திலேயே நல்ல தொழிலாளி என்றும் கைராசிக்காரன் என்றும் பெயர் எடுத்திருந்தான். திருமணத்துக்கான துணிமணிகளைத் தைப்பதில் அவனுக்கு ஒரு நல்ல பெயர் இருந்தது.
பத்து பன்னிரண்டு வருஷங்களில் நிலைமை மாறத் தொடங்கியது. நேரிடையான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கொஞ்சம்கொஞ்சமாக குறைந்தது. இரண்டாவது மிஷினுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. அதற்குள் நான்கு பிள்ளைகள் பிறந்து பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கிவிட்டார்கள். செலவுகள் பெருகிவந்தன. வருமானம் மட்டும் குறைந்துகொண்டே சென்றது. கடையில் அதுவரை துணையாக வேலை செய்துவந்தவனும் சொந்தக் கடையைத் தொடங்கப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். கடன் தொகையைக் கட்டுவதற்குக் கஷ்டப்படும்போதெல்லாம் ஒரு மிஷினை விற்றுவிட்டு, குறைந்த வாடகைக்குச் சின்ன இடமாகப் பார்த்துக்கொண்டு சீக்கிரமாகச் சென்றுவிடவேண்டும் என்று சொல்லத் தொடங்கினான்.
விற்பனைத்தகவல் கசிந்து பரவத் தொடங்கிய நேரத்தில் ஒருநாள் அஞ்சலையின் அண்ணன் பொன்னையன் கடைத்தெருவில் இறங்கி முத்துசாமியைப் பார்த்தான். ”சரக்கு அனுப்பறதுக்காக விழுப்புரம் புக்கிங் ஆபீஸ்க்கு போற வேலை இருந்தது. அப்படியே உங்கள ஒரு எட்டு பாத்துட்டு போவலாம்ன்னு வந்தன்” என்றான். கடையை மூடிவிட்டு பொன்னையனை அழைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றான் முத்துசாமி. “காலையில கூரையில நின்னு காக்கா கத்தும்போதே யாரோ விருந்தாளி வரப்போறாங்கன்னு நெனச்சிகினே இருந்தேன். வாங்கண்ணே வாங்க” என்று பற்கள் தெரிய சிரித்தபடி வரவேற்றாள் அஞ்சலை. ”இந்தாம்மா மல்லாட்ட உண்டைங்க. பசங்க வந்தா சாப்புடறதுக்கு குடு” என்று பையிலிருந்து ஒரு பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தான். அன்று மதிய உணவை அங்கேயே சாப்பிட்டான் பொன்னையன்.
அவன் சோற்றில் காரக்குழம்பை நன்றாக ஊற்றிப் பிசைந்து சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தாள் அஞ்சலை. “கொஞ்சமா ஊத்து அஞ்சலை. போதும் போதும். புள்ளைங்களுக்கும் வேணுமில்ல?” என்று வாய் சொன்னாலும் இரண்டுமூன்று தரம் குழம்பூற்றும்படி கேட்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு எழுந்தான். ”அப்படியே எங்க அம்மா வைக்கற கொழம்புமாதிரியே இருக்குது. அதே ருசி. அதே வாசனை. நாலு நாளானாலும் வச்சி சாப்புடணும்போல இருக்குது” என்று சொல்லிக்கொண்டே கைகளைக் கழுவினான். முகத்தில் பெருமையும் வெட்கமும் படர முத்துசாமியைப் பார்த்துப் புன்னகைத்தாள் அஞ்சலை.
புறப்படுகிற சமயத்தில் மிஷின் விற்பனை விஷயம் எப்படியோ உரையாடலுக்குள் வந்துவிட்டது. ”என்கிட்ட நேரிடையா கேட்டிருந்தா நானே ஒரு வெலைய சொல்லியிருப்பேனே மச்சான். நீங்க எதுக்கு ப்ரோக்கர் பசங்ககிட்ட போனீங்க? அவனுங்க என்ன நம்ம லாபத்துக்கா பாடுபடுவானுங்க? தனக்கு எவ்வளவு நிக்கும்னுதான யோசிப்பானுங்க” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் பொன்னையன். அவன் கண்பார்வை மட்டும் கூர்மையாக முத்துசாமியின் மீதே பதிந்திருந்தது.
“அதுக்கில்ல….” என்று இழுத்து மழுப்பி எதையோ சொல்ல முனைந்து சரியான சொற்கள் கிடைக்காமல் அசட்டுச்சிரிப்போடு நிமிர்ந்தான் முத்துசாமி. அந்த இடைவெளியில் “சரி போவட்டும் விடுங்க. அந்த மாணிக்கம் ப்ரோக்கர் என்ன வெலைக்குப் போகும்னு சொன்னான்?” என்று நேரிடையாகக் கேட்டான் பொன்னையன். ”அவன் சொல்றதெல்லாம் ரொம்ப அடிமாட்டு வெலைங்க மாமா. ஏதோ நம்ம கஷ்டத்துக்காக விக்கறோம்கறதுக்காக மனசாட்சி இல்லாம கொறச்சி கேட்டா எப்படி மாமா?” என்று சொல்லத் தொடங்கும்போதே முத்துசாமியின் குரல் தழுதழுக்கத் தொடங்கியது.
“அட, ஒரு தொழில்னு சொன்னா அப்படித்தான் பேசுவானுங்க. அவன் சொன்னாங்கறதுக்காக நாம குடுக்கவா போறோம்?”
பொன்னையனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தபடி முத்துசாமி பெருமூச்சுவிட்டான்.
“அவன் விஷயத்த விட்டுத்தள்ளுங்க மச்சான். இப்ப என்ன வெலை வந்தா உங்களுக்கு கட்டுபடியாவும் சொல்லுங்க?”
“யாரு மாமா கேட்டாங்க?”.
“அதெல்லாம் ஒங்களுக்கு எதுக்கு? யாரோ கேட்டாங்க. நீங்க உங்க மனசுல நெனச்சிருக்கற வெலையச் சொல்லுங்க”
அஞ்சலையின் முகத்தை ஒருகணம் திரும்பிப் பார்த்துவிட்டு விலையைச் சொன்னான் முத்துசாமி.
“இதச் சொல்றதுக்கா இப்படி மென்னு முழுங்கனிங்க? சரியான பைத்தியமா இருக்கிங்களே. ஒங்களுக்கு அதவிட ஐநூறு ரூபா சேத்து குடுக்கறேன். போதுமா?”
“மிஷின் யாருக்கு மாமா?”
“அத அப்புறம் சொல்றேன். நான் சொன்னதுக்கு சம்மதமா, அத சொல்லுங்க மொதல்ல”
முடிவெடுப்பதற்குச் சற்றே தயங்குபவன்போல சிறிதுநேரம் உதட்டைக் கடித்தபடி அங்குமிங்கும் திரும்பிப் பார்த்திருந்த பிறகு, மெதுவாக பொன்னையனை நிமிர்ந்து பார்த்து “சரிங்க மாமா” என்றான் முத்துசாமி.
“இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க. எனக்குத்தான் மிஷின் வேணும். எனக்குன்னு சொன்னா நீங்க பணமே வேணாம்னு சொன்னாலும் சொல்லுவீங்க. அஞ்சலையும் பாசம் உறவுன்னு நெனச்சி வேணாம்னு சொன்னாலும் சொல்லிடும். ஆனா அது பாவம் இல்லையா? நீங்களும் மனசுல கொறையில்லாம எடுத்துக் கொடுக்கணும். நானும் மனசுல கொறையில்லாம வாங்கிட்டு போவணும். அதுக்காகத்தான் யாருக்குன்னு சொல்லாம பேச்ச ஆரம்பிச்சேன்.”
மேல்சட்டையின் உள்பாக்கெட்டுக்குள் வைத்திருந்த மணிபர்சை எடுத்து, மிஷினுக்கு விலையாகச் சொன்ன முழுத் தொகையையும் எண்ணிக் கொடுத்தான். இவ்வளவு விரைவாகப் பணம் கைமாறும் என்று முத்துசாமி எதிர்பார்க்கவில்லை. தடுமாற்றத்தோடு கைநீட்டி பணத்தை வாங்கி அஞ்சலையிடம் கொடுத்தான்.
“அடுத்த தரம் விழுப்புரத்துக்கு சரக்கு ஏத்த வண்டி வரும். அந்த சமயத்துல நம்ம கடை ஆளுங்க வருவாங்க. அவுங்ககிட்ட மிஷின கொடுத்தா போதும்”
புறப்படுவதற்குத் தயாரானதுபோல தூணோரமாக வைத்திருந்த கைப்பையை குனிந்து எடுத்துக்கொண்டான் பொன்னையன்.
“சரி, அடுத்து உங்க திட்டம் என்ன வச்சிருக்கீங்க? கடையை என்ன செய்யப் போறீங்க?”
“கடையையும் காலி பண்ணணும் மாமா. அவ்ளோ பெரிய எடத்த வச்சிகிட்டு வாடகை கொடுக்க கட்டுப்படியாவாது. ஒத்த மிஷின்தான? எங்கனா கடைத்தெருவுக்குள்ள சின்னதா ஒரு எடம் பாக்கணும். எதுவும் கெடைக்கலைன்னா வீட்டுலயே இப்படி திண்ணைப் பக்கமா போட்டு தைக்கவேண்டிதுதான்”
“அதுவும் சரியான யோசனைதான். வாடகை மிச்சமாவும். ஒரு வேலை செய்ங்க. இன்னைக்கே விழுப்புரத்துக்கு போங்க. தாசில்தார் ஆபீஸ்க்கு எதுரு வரிசையில பச்சை கலர் பெய்ண்ட் அடிச்ச ஒரு பெரிய கடை இருக்கும். அதுதான் அப்துல் சாதிக் கடை. யார கேட்டாலும் காட்டுவாங்க. அவருக்கு பம்பாய், கல்கத்தா வரைக்கும் ரெடிமேட் வியாபாரம் இருக்குது. துணி அவுங்க கொடுத்துடுவாங்க. அவுங்க சொல்ற அளவுல நாம தச்சி கொடுத்தா போதும். நூறு பாவாடை, நூறு சட்டை, நூறு பனியன்னு எல்லாமே நூறுநூறாதான் அவுங்க கணக்கு. என் பேரச் சொல்லி அறிமுகப்படுத்திக்கங்க. நானும் வீட்டுக்கு போன கையோட போன்ல சொல்லி வைக்கறேன். அவர்கிட்ட மனம் தெறந்து பேசுங்க. நெலமைய சொல்லுங்க. போவும்போது நீங்க தச்ச ரெண்டு மூனு உருப்படி இருந்தா எடுத்தும்போயி காட்டுங்க. உங்களயும் உங்க வேலைப்பாடும் அவருக்கு புடிக்கணும். அதுதான் முக்கியம். புடிச்சிடுச்சின்னா, தொடர்ச்சியா வேலை கொடுப்பாரு”
பொன்னையன் புறப்படுகிற நேரத்தில் பள்ளிக்கூடத்திலிருந்து பிள்ளைகள் வந்துவிட்டார்கள். அவர்களைப் பார்த்ததுமே “வாங்கடா மருமகப்புள்ளைங்களா, படிச்சி முடிச்சிட்டு வரீங்களா? அம்மாகிட்ட மல்லாட்ட உண்ட குடுத்திருக்கேன், வாங்கி சாப்புடுங்க” என்றான் பொன்னையன். அவன் பிடிக்கே அகப்படாமல் நெளிந்துவளைந்தபடி அம்மாவுக்கு அருகில் ஓடி நின்றுகொண்டான் ஒருவன். இன்னொருவன் சுவரில் அடித்திருந்த ஆணியில் புத்தகப்பையை மாட்டிவிட்டு அங்கேயே ஒதுங்கி நின்று வெட்கத்துடன் புன்னகைத்தபடி வேடிக்கை பார்த்தான். மற்றொருவன் முத்துசாமிக்கு பக்கத்தில் போய் நின்றுகொண்டான். மூத்தவன் மட்டும் பொன்னையன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னான்.
“என்னடா படிக்கிற மருமவனே?”
“ஒன்பதாங்கிளாஸ் மாமா”
“ஓ. அப்படின்னா எஸ்ஸெல்சிய நெருங்கி வந்துட்டன்னு சொல்லு. பெரிய படிப்புதான். நல்லா படிச்சி அறிவ வளத்துக்கோடா”
“சரி மாமா.”
“படிச்சிட்டு ஓய்வா இருக்கிற சமயத்துல அப்பா தொழிலயும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கோ மருமவனே. ஒரு கைத்தொழில் நம்மகிட்ட இருக்கிறது எப்பவுமே ஒரு பாதுகாப்பு. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கிலை ஒத்துக்கொள்னு ஒரு பாட்டே உண்டு, தெரியுமில்ல”
அவன் ஒருகணம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முத்துசாமியின் பக்கமும் அஞ்சலையின் பக்கமும் ஒருமுறை பார்த்துவிட்டு, பொதுவாக ”சரி மாமா” என்றான். அதற்குள் அஞ்சலை ஒரு எட்டு முன்வைத்து “அவன் நல்லா படிக்கிற பையன்ண்ணே. அவுங்க க்ளாஸ்ல அவன்தான் பர்ஸ்ட் ரேங்க் எடுக்கறவன்” என்றான்.
“மகராசனா எடுக்கட்டும்ம்மா. நெனச்சா ரொம்ப பெருமையா இருக்குது. அப்படி எடுக்கணும்னுதான நாம அவுங்கள பாடுபட்டு கடன ஒடன வாங்கி படிக்க அனுப்பறோம். நான் அதுக்காக சொல்ல வரலை. தொழில்னு ஒன்னு நம்ம கையில இருந்தா, நாம் எங்கயும் தவிச்சி நிக்க தேவையில்லைம்மா. அதப் புரிஞ்சிக்கணுங்கறதுக்காகத்தான் சொன்னேன்”
புன்னகை மாறாத முகத்துடன் அஞ்சலையைப் பார்த்துச் சொன்ன பொன்னையன், பேச்சை மாற்றும் விதமாக நேசமணியின் பக்கம் திரும்பி “சரி, நீ ஒம்பதாங்கிளாஸ் படிக்கிற, தம்பிங்க என்னென்ன படிக்கறானுங்க?” என்று கேட்டான்.
“தமிழ்மணி அஞ்சாங்கிளாஸ் படிக்கிறான். செல்லதுரை ஆறாங்கிளாஸ். தங்கதுரை எட்டாங்கிளாஸ்”
“எல்லாரும் ஒரே ஸ்கூலா?”
“இல்ல இல்ல. தமிழ்மணி மட்டும் பஞ்சாயத்து போர்டு ஸ்கூல்ல படிக்கிறான். நாங்க மூனு பேரும் ஹைஸ்கூல்ல படிக்கறோம்”
“சரிடா கண்ணுங்களா, வரட்டுமா, முழு பரீட்ச லீவ் விடும்போது அம்மாவோடு ஒரு தரம் வீட்டுக்கு வாங்க, சரியா?”
பொன்னையன் புறப்பட்டுச் சென்ற நாலாவது நாளே வண்டி வந்து மிஷினை ஏற்றிக்கொண்டு சென்றது. முத்துசாமியும் அந்த மாதக் கடைசியில் கடையை காலிசெய்துவிட்டு எல்லாச் சாமான்களையும் ஒரு மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
அடுத்த வாரத்தில் ஒருநாள் விழுப்புரம் அப்துல் சாதிக்கைச் சென்று சந்தித்தான். அவர் முதலில் நூறு தலையணை உறைகளுக்கு ஆர்டர் கொடுத்தார். நாலைந்து ஆர்டர்களுக்குப் பிறகு ஆடை வகைகளுக்கு மாறினார். ஒரு நிரந்தர வருமானத்துக்கு அதன் வழியாகக் கிடைக்கும் பணம் உதவியாக இருக்கும் என்பதில் அவனுக்கு நம்பிக்கை பிறந்தது. வீட்டோடு மிஷின் வந்ததால் முத்துசாமியிடம் கெஞ்சிக் கேட்டு அஞ்சலையும் மிஷினை இயக்கி துணிதைக்கக் கற்றுக்கொண்டாள்.
விழுப்புரத்துக்குச் சென்று தைத்த உருப்படிகளைக் கொடுத்துவிட்டு ஆர்டர் எடுத்துக்கொண்டு வந்த ஒருநாள் இரவு “சாதிக் கடைக்கு பக்கத்துல புதுசா ஒரு ஆள் பரோட்ட கடை போட்டிருந்தாரு. சூடா போடறாரேன்னு நாலு பரோட்டா வாங்கி சாப்ட்டேன். வயிறு என்னமோ மாதிரி திம்முனு இருக்குது அஞ்சலை. சாப்பாடு வேணாம்” என்று அஞ்சலையிடம் சொல்லிவிட்டு ஒரு தம்ளர் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டுப் படுப்பதற்குச் சென்றான். மறுநாள் காலை, மதியம் இரு வேளைகளிலும் அந்தப் பசியின்மை தொடர்ந்தது. அன்று இரவு வற்புறுத்தியதால் ஒரு வாய் சோறு மட்டும் சாப்பிட்டான். ஒரு முழு நாள் தனக்கு சாப்பாடே தேவைப்படவில்லை என்பதை அவனே ஆச்சரியமாக உணர்ந்தான்.
மறுநாள் வீட்டுக்கு அருகிலேயே இருந்த அரசாங்க ஆஸ்பத்திரிக்குச் சென்றான். படுக்கவைத்து வயிற்றை அழுத்திப் பார்த்துவிட்டு டாக்டர் ஒரு சீசாவில் மருந்தும் மாத்திரைகளும் கொடுத்து அனுப்பினார். இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டதும் வயிறு இளகிக் கொடுத்தது. ஆனால் அவனால் ஒருமணி நேரம் கூட உட்கார்ந்து வேலை செய்யமுடியவில்லை. அந்த முறை ஆர்டர் எடுத்து வந்த எல்லா ஆடைகளையும் அஞ்சலையே தைத்து முடித்து கொடுப்பதற்காக எடுத்துச் சென்றாள்.
”முத்துசாமி வரலையா? என்னாச்சி அவருக்கு?” என்று கேட்டார் சாதிக்.
“நான் அவரு பொஞ்சாதிங்க. அவருக்கு வயித்துவலி. எழுந்து நடமாட முடியலை. அதான் நான் வந்தேன்” என்றாள் அஞ்சலை.
“அப்ப புது ஆர்டர் வேணாமா?”
“எடுத்துக்கறேங்கய்யா. நானும் தைக்கத் தெரிஞ்சவதான்”
கடைச்சிப்பந்தியிடம் புது ஆர்டரை அஞ்சலையின் பெயரில் கொடுக்கச் சொன்னார் அப்துல் சாதிக். மூன்று ஆர்டர் வரைக்கும் அவர் கேள்வி எதுவும் கேட்கவில்லை. நான்காவது ஆர்டரின்போது “இன்னும் அவருக்கு உடம்பு சரியாகலையா?” என்று கேட்டார். “எல்லா மருந்தும் கொடுத்துப் பாத்துட்டம்ங்கய்யா. ஒன்னும் வழிக்கு வரமாட்டுது. ஒரு வாய் சோத்த எடுத்து மென்னு முழுங்க ஒரு மணி நேரமாவுது. எப்ப பாரு, வலி வலின்னு துடிக்கறாரு” என்றாள். பதில் சொல்லும்போதே அவளுக்கு தொண்டை கட்டிக்கொண்டது.
“கேக்கறேன்னு தப்பா நெனச்சிக்காதம்மா. குடிக்கிற பழக்கம் ஏதாவது இருக்கா அவருக்கு?”
“ஐயோ, அதெல்லாம் எதுவும் இல்லைய்யா”
அவர் ஒருகணம் மேசையின் மீது பென்சிலால் தட்டியபடி யோசனையில் மூழ்கினார். அதற்குள் அஞ்சலைக்குக் கொடுக்கவேண்டிய ஆர்டர் கட்டுகள் அவர் மேசைக்கு வந்துவிட்டன. எடுத்துக்கொள்ள முற்பட்ட அஞ்சலையிடம் ”குடிக்கற பழக்கம் இல்லாத ஆளுங்களுக்கு இப்படி வயித்து வலி வருதுன்னா, அதுக்கு வேற காரணம் இருக்கும். அத சரியா கண்டுபிடிச்சி மருந்து சாப்ட்டாதான் சரியாவும். இல்லைன்னா, உள்ள கொடைஞ்சிகினேதான் இருக்கும். எந்த ஆஸ்பத்தி்ரில காட்டறீங்க நீங்க?” என்று கேட்டார்.
“எங்க ஊட்டுக்கு பக்கத்துலயே இருக்கிற ஆஸ்பத்திரிலதான்”
“கவுர்மெண்ட் ஆஸ்பத்திரிலயா?”
”ஆமாங்கய்யா”
”ஒரு தரம் பாண்டிச்சேரிக்கு போயி ஜிப்மர் ஆஸ்பத்திரில காட்டிப் பாருங்க. அங்க நல்ல நல்ல டாக்டருங்க இருக்காங்க. அவுங்க எல்லா டெஸ்ட்டும் எடுத்து பார்த்துட்டு என்ன பிரச்சினைன்னு சரியா சொல்வாங்க.”
ஆறு மாதங்களாக வழி தெரியாமல் தவித்திருந்தவளுக்கு அப்துல் சாதிக் சொன்ன சொற்களைக் கேட்டு ஒரு நம்பிக்கை பிறந்தது.
எதிர்பாராத விதமாக ஒருநாள் பொன்னையன் வந்தான். வாசலில் சரக்கு வேன் நின்றது. “இப்படி உடம்பு சரியில்லாம கெடக்கறாருன்னு ஒரு வார்த்த எனக்கு தெரியப்படுத்தமாட்டியா? இன்னைக்கு சரக்கு எடுக்க போன எடத்துல பாய் சொல்லித்தான் தெரிஞ்சிகிட்டேன். ஒருத்தவங்களுக்கு ஒருத்தர் ஒத்தாசையா இல்லைன்னா, கூட பொறந்து என்னம்மா புரோஜனம்? கெளம்பு கெளம்பு” என்று சத்தம் போட்டான். நிற்கமுடியாமல் தடுமாறிய முத்துசாமியை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வேனில் ஏற்றினான்.
அஞ்சலைக்கு வேறு வழி தெரியவில்லை. எப்படியாவது முத்துசாமி குணமடைந்தால் போதுமென்று தோன்றியது. அவன் வேலை செய்து சம்பாதிக்கமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை, பக்கத்தில் ஓர் ஆளாக நின்றால் போதும் என்று நினைத்தாள். மாரியம்மன் கோவில் இருக்கும் திசையைப் பார்த்து மனத்துக்குள் முணுமுணுத்துக்கொண்டாள். பக்கத்துவீட்டுப் பார்வதியிடம் பள்ளியிலிருந்து திரும்பிவரும் பிள்ளைகளிடம் தகவல் சொல்லுமாறு தெரிவித்துவிட்டு ஆஸ்பத்திரி நோட்டுகளோடு அவளும் வேனில் ஏறிக்கொண்டாள்.
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் எந்தப் பக்கம் பார்த்தாலும் வரிசை வரிசையாக நோயாளிகள் நின்றிருந்தார்கள். கல்யாணமண்டபம் மாதிரி பெரிய திறந்தவெளிக்கூடம் ஒன்று காணப்பட்டது. நூற்றுக்கணக்கானவர்கள் அதில் சுருண்டு படுத்திருந்தார்கள். உலகத்தில் இவ்வளவு நோயாளிகளா என்று பார்த்து மலைத்தாள் அஞ்சலை.
முத்துசாமியைப் பரிசோதித்த டாக்டர் “இத்தன மாசமா வீட்டுல வச்சிகிட்டு என்னம்மா செஞ்சீங்க? இந்த காலத்துலயும் இப்பிடி இருக்கீங்களேம்மா” என்று சலித்துக்கொண்டார். சில அறை எண்களின் பெயர்களைச் சொல்லி அங்கு சென்று சில சோதனைகளைச் செய்துகொண்டு முடிவு அறிக்கைகளோடு வருமாறு சொன்னார்.
முடிவுகள் எதுவும் அவர்களுக்குச் சாதகமானதாக இல்லை. வயிற்றில் புற்றுக்கட்டி இருப்பதாகத் தெரிவித்தார்.
”இந்த நேரத்துல அதுல கை வைக்கவே முடியாது. கண்ணாடித்துண்டு மாதிரி உடைஞ்சி எல்லா இடங்களுக்கும் பரவிடும். அட்மிஷன் போடறேன். ட்ரீட்மெண்ட அவர் உடம்பு எந்த அளவுக்கு தாங்குமோ தெரியலை, முயற்சி செஞ்சி பார்ப்போம்”
அஞ்சலை உடைந்துபோனாள். கண்ணீர் நிறைந்த கண்களோடு பொன்னையன் பக்கமாகத் திரும்பினாள். ”கடவுள்மேல பாரத்த போட்டுட்டு நாம செய்யவேண்டியதச் செய்வோம் அஞ்சல. கண்டதயும் நெனச்சி கொழப்பிக்காம இரு” என்றான். அவளை முத்துசாமிக்கு அருகிலேயே அமரவைத்துவிட்டு, எங்கெங்கோ அலைந்து யார்யாரையோ பார்த்து ஒரு படுக்கைக்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்தான். அவன் கொண்டுவந்த குறிப்பைப் பார்த்துவிட்டு, அவனுக்கு நோயாளிகள் பிரிவில் ஒரு படுக்கை ஒதுக்கப்பட்டது.
“இந்தாம்மா, இத வச்சிக்கோ” என்றபடி பத்து நூறு ரூபாய்த் தாள்களை எடுத்து அஞ்சலையிடம் கொடுத்தான். அவள் தயங்கியபோது “திடீர்னு யாராவது வருவாங்க. அவுங்ககிட்ட இல்லாத மருந்து மாத்திரைங்கள வெளிய வாங்கிவான்னு சொல்வாங்க. அப்ப உதவும், வச்சிக்கோ” என்றான்.
அவன் புறப்பட்டுச் சென்ற சில கணங்களிலேயே அவள் அச்சத்தில் மூழ்கினாள். அவள் தனக்குத்தானே பேசிக்கொண்டு அமைதியாகக் கண்ணீர் வடிப்பதைப் பார்த்துவிட்டு முத்துசாமியின் படுக்கைக்கு எதிர்ப்படுக்கையில் இருந்தவருக்குத் துணையாக அமர்ந்திருந்த ஒரு பெண்மணி நெருங்கிவந்து பேச்சுக் கொடுத்தாள். அவள் பேச்சு அஞ்சலைக்கு ஆறுதலாக இருந்தது. தன் முழு குடும்பக்கதையையும் அவளிடம் சொன்னாள். அதற்குப் பிறகுதான் தன் மனபாரம் சற்றே குறைந்ததைப்போல உணர்ந்தாள் அஞ்சலை.
“மொதல்ல ஊருக்கு கெளம்புங்க நீங்க. போய் புள்ளைங்கள பாத்துட்டு வாங்க. இங்க என்ன வேணுமோ அத நான் இங்க இருந்து செய்றேன். போங்க”
அவள் சொன்னதையே ஒரு கட்டளைபோல எடுத்துக்கொண்டாள் அஞ்சலை. திரும்பி படுக்கையில் உறங்கும் முத்துசாமியைப் பார்த்தாள்.
“அவுங்க கொடுக்கிற மருந்து மயக்கம் சில சமயங்கள்ல பத்து பன்னெண்டு மணி நேரம் கூட இருக்கும். நீங்க பயப்படாம போய்ட்டு வாங்க”
அந்தப் பெண்மணியைப் பார்த்துத் தலையசைத்துவிட்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தாள் அஞ்சலை. பேருந்து பிடித்து ஊருக்குச் சென்றபோது இரவு ஒன்பது மணி சங்கு ஊதியது.
வாசலில் பார்வதியைச் சுற்றி மூன்று பிள்ளைகள் வட்டமாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்க, மூத்தவன் மட்டும் உள்ளே சுவரில் சாய்ந்தபடி படித்துக்கொண்டிருந்தான். எல்லோருக்கும் கஞ்சி வைத்துக் கொடுத்ததாகச் சொன்னாள் பார்வதி. “அப்பா எங்கம்மா?” என்று கேட்டான் சின்னவன். “ஆஸ்பத்திரியிலயே இருக்காருடா. உடம்பு நல்லானதும் அம்மா கூட்டிட்டு வந்துருவேன். சரியா?” என்றாள் அஞ்சலை.
ஒரு வருஷம் ஓடிவிட்டது. ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைந்து அலைந்து அவள் அடையாளம் தெரியாத அளவுக்கு இளைத்துவிட்டாள். முத்துசாமியை குணப்படுத்தி அழைத்துவந்து விடலாம் என்கிற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்துவிட்டது. கடைசியில் முத்துசாமியை உயிரற்ற உடலாகத்தான் கொண்டுவர முடிந்தது. அதற்கிடையில் மூத்தவன் படிப்பை நிறுத்திவிட்டு பார்வதியிடம் தைப்பதற்குக் கற்றுக்கொண்டான். மூன்று தம்பிகளையும் அக்கறையோடு பார்த்துக்கொள்வது மட்டுமே அவனுடைய கடமையாக மாறிவிட்டது.
இறுதிக்கடன் செலவையெல்லாம் பொன்னையனே ஏற்றுக்கொண்டு எந்தக் குறையுமில்லாமல் நடத்திவைத்தான். அவன் செய்த செலவுக்கணக்கை அவள் எங்கேயும் குறித்துவைக்கவில்லை. “எங்க அண்ணனே இல்லைன்னா, என் பொழப்பு நாறிப் போயிருக்கும். அனாதப் பொணமாத்தான் என் ஊட்டுக்காரன அள்ளிப் போட்டிருப்பாங்க” என்று அவள் சொல்லாத நாளே இல்லை.
காரியம் முடிந்து பத்து பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. திண்ணையையும் வாசலையும் மட்டுமே பார்த்தபடி இன்னும் எத்தனை நாட்கள் ஓட்டுவது என்று அஞ்சலைக்குத் தோன்றியது. மனத்தில் உறுதியை வரவழைத்துக்கொண்டு நேசமணியின் துணையுடன் அப்துல் சாதிக் கடைக்கு ஆர்டர் வாங்கி வருவதற்காகச் சென்றாள்.
அஞ்சலையைப் பார்த்ததும் சற்றே துணுக்குற்றதுபோல எழுந்து நின்றார் அப்துல் சாதிக். ஒருகணம் கைகுவித்து அவளை வணங்கிவிட்டு உட்கார்ந்தார். சிப்பந்தியிடம் சொல்லி ஆர்டர் துணிக்கட்டை விரைவாகக் கொடுக்கும்படி செய்தார். “போய் வரங்க பாய்” என்று விடைபெற்றுக்கொண்டு தெருவில் இறங்கினாள் அஞ்சலை. நேசமணி மூட்டையை வாங்கிக்கொண்டான்.
ஐந்தாறு கடைகளைக் கடந்து நடந்துசென்றபோது ஓர் உணவுவிடுதியிலிருந்து பொன்னையன் வெளியே வந்ததைப் பார்த்தாள் அஞ்சலை. ”எப்படிண்ணே இருக்கீங்க? கருமாதிக்கு பிறகு ஏன்ண்ணே வீட்டுப்பக்கம் வரவே இல்லை?” என்று கேட்டாள்.
“வரணும்னுதாம்மா நெனச்சிட்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் புதுசுபுதுசா ஏதோ வேலை. அதான் வரமுடியலை. பாய் கடையிலேருந்து வரியா?” என்றபடி நேசமணியின் கை பற்றியிருந்த துணிமூட்டையைப் பார்த்தான்.
“ஆமாம்ண்ணே”
“இவன எதுக்கும்மா கூட இழுத்துகினு அலையற?”
“சும்மா தொணைக்குத்தாண்ணே வந்தான். சின்ன புள்ளைங்கள்லாம் பள்ளிக்கூடத்துக்கு போயிட்டானுங்க. இவன அடுத்த வருஷம்தான் அனுப்பணும். தனியாதான ஊட்டுல உக்காந்திருப்பான். பேச்சுத்தொணைக்கு இருக்கட்டுமேன்னு அழைச்சிட்டு வந்தேன்”
“அடுத்த வருஷம்தான அவன் பள்ளிக்கூடத்துக்கு போவணும்? அதுவரைக்கும் ஏன் பொழுத வீணாக்கணும்? பேசாம என் கூட அனுப்பி வைம்மா. ராஜா மாதிரி வீட்டுல வச்சிக்கறேன். ஒனக்கு தெரியாதது ஒன்னுமில்ல. எனக்கு பொறந்ததெல்லாம் பொண்ணா போச்சி. அந்தக் கடவுள் ஒரு ஆம்பள புள்ளயகூட குடுக்கலை. துணி ஏபாரம், பாத்திர ஏபாரம், கல் குவாரி, தேங்கா ஏபாரம்னு எல்லா பக்கமும் தொழில் நடக்குது. நம்பிக்கையா பாத்துக்க ஆளில்லை. இவன் என் கூட இருந்தா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்மா”
நேசமணி சற்றே ஓரடி பின்வாங்கி அஞ்சலையின் முதுகோடு அழுந்தியபடி ஒட்டிக்கொண்டான். அந்த அழுத்தத்தின் பொருளை அக்கணமே அவள் உணர்ந்துகொண்டாள். ஆனால் எதையும் தடுக்கும் நிலையில் அவள் இல்லை.
“அவன் படிக்கிற புள்ளைண்ணே. அவன் ஸ்கூலுக்கு போகணும். அவுங்க அப்பாவுக்குக் கூட அவன் படிச்சி பெரிய ஆளாவணும்கறதுதான் ஆசை.”
“ஆண்டவன் புண்ணியத்துல அவன் நல்லா படிக்கட்டும்மா. ஐஏஎஸ், ஐபிஎஸ்னு பெரிய ஆளா வரட்டும். பார்க்கும்போது எனக்கும் சந்தோஷமாத்தான இருக்கும். அடுத்த வருஷம்தான ஸ்கூலு? அது வரைக்கும் கொஞ்சம் கூடமாட இருக்கட்டுமேன்னுதான் சொன்னேன். இதோ இப்ப உன்கூட ஒத்தாசையா வரலையா, அந்த மாதிரி கொஞ்ச காலம் என் கூட ஒத்தாசையா இருக்கக்கூடாதா? இந்த அண்ணனுக்கு அத கூட செய்யமாட்டியா?”
”செய்யறேன்ண்ணே. கண்டிப்பா செய்யறேன். அதயெல்லாம் இப்படி ரோட்டுல வச்சித்தான் பேசணுமா? வீட்டுக்கு வாங்கண்ணே பேசலாம்”
“வரேம்மா. வரேன். வீட்டுக்கு வந்து பேசனாலும் இதத்தான் பேசணும். இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. அதயும் இப்பவே சொல்லிடறேன்”
“என்னண்ணே?”
“ஒன்னுமில்லைம்மா. இவ்ளோ காலம் ஒனக்கு என்ன கொடுத்தேன், ஏது கொடுத்தேன்ங்கறதயெல்லாம் நான் கணக்கு எதயும் வச்சிக்கலை. ஒரு கூடப் பொறந்த பொறப்புக்கு செய்யற கடமையாத்தான் நெனச்சி நான் செஞ்சேன். ஆனா ஒங்க அண்ணிக்காரி என்ன போட்டு கொடைஞ்சிகினே இருக்கா. வீடு கட்டறதுக்காக அவ சீட்டு போட்டு எடுத்து வச்சிருந்த பணம் அது. அதுலேருந்துதான் எடுத்து எடுத்து கொடுத்தேன். அவ கொடைச்சல என்னால தாங்க முடியலை. பணம் பணம்னு அலையறா.”
அஞ்சலைக்கு நாக்கு உலர்ந்துவிட்டது. “திடீர்னு கேட்டா என்னால பணத்த எப்படிண்ணே பொரட்டமுடியும்?” என்று கேட்கும்போதே அவள் குரல் நடுங்கியது.
“ஐய, ஒன்ன யாரு பணத்த பொரட்ட சொன்னா? நம்ம அப்பா இந்த நெல்லித்தோப்பு பக்கத்துல ஒனக்கும் எனக்குமா ஆளுக்கொரு துண்டு நெலம் எழுதி வச்சிருக்காரே, ஞாபகம் இருக்குதா? அந்த எடத்துலதான் வீடு கட்டணும்னு அந்தக் கழுதை ஒத்தகால்ல நிக்குது. ஒருநாள் நான் வண்டி எடுத்துட்டு வீட்டுப்பக்கமா வரேன். வந்து ஒரு கையெழுத்த போட்டுட்டு போம்மா. அவ புடுங்கல்லேருந்து காப்பாத்தன புண்ணியம் உனுக்கு கெடைக்கும். தெனம் தெனம் என் உயிரை வாங்கிகினே இருக்கா அவ. அந்த டார்ச்சர்ல தூக்கமே வரமாட்டுது”
அதிர்ச்சியில் அஞ்சலையால் பேசவே முடியவில்லை. உறைந்துபோய் பொன்னையனின் முகத்தைப் பார்த்தபடியே நின்றுவிட்டாள். ஆற்றாமையுடன் “அண்ணே” என்று அரற்றினாள்.
“என்ன என்னம்மா பண்ண சொல்ற? இத செய்யலைன்னா, அந்தக் கழுதைகிட்டேர்ந்து நான் தெனமும் மூஞ்சடி மொறத்தடிதான் வாங்கணும்”
அஞ்சலைக்கு மூச்சே நின்றுவிடும்போல இருந்தது.
“சரிம்மா, நீ கெளம்பு. நான் ஒரு நல்ல நாள் பார்த்து ரெஜிஸ்ட்ரேஷன் வச்சிட்டு வண்டிய எடுத்துகினு வரேன். வண்டியில ஏத்திம்போயி வண்டியிலயே கொண்டாந்து விட்டுடறேன். அப்படியே அவனயும் ரெடி பண்ணி வை. வரட்டுமா?”
நேசமணியின் தோளை எட்டித் தொட்டு தட்டிவிட்டு சிரிப்பு மாறாத முகத்துடன் நடந்தான் பொன்னையன்.
அக்கணத்திலிருந்து பொன்னையனை நினைக்கும்போதெல்லாம் அந்தச் சிரிப்பைத்தான் அவள் முதலில் நினைத்துக்கொண்டாள். அடுத்த வாரமே அவன் வீட்டுக்கு வந்து இருவரையும் அழைத்துச் சென்றான். திரும்பி வரும்போது தன் பங்குக்குரியதாக இருந்த துண்டுநிலத்தை பொன்னையனுக்கே எழுதிக் கொடுத்துவிட்டு அஞ்சலை மட்டும் தனியாகத் திரும்பிவந்தாள். நேசமணி கடையில் உதவியாளனாகச் சேர்ந்துவிட்டான்.
அதன் பிறகு சரிந்துவிட்ட குடும்பத்தை நிமிர்த்தி நிறுத்துவதற்குக் கடுமையாகப் பாடுபட்டாள் அஞ்சலை. அப்துல் சாதிக் கொடுத்த ஆர்டர்கள் மூலமாகக் கிடைத்த வருமானமே அவளும் பிள்ளைகளும் பட்டினியிலிருந்து மீள உதவியாக இருந்தது.
அடுத்த ஆண்டு பள்ளிக்கூடம் தொடங்கும் சமயத்தில் நேசமணியை அனுப்புவதாகச் சொன்ன பொன்னையன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. முதலில் நாலைந்து தபால்கார்டு வாங்கி எழுதிப் போட்டாள். எதற்கும் பதில் இல்லை. ஒருநாள் போன் நெம்பரை எழுதிச் சென்று சாதிக் கடையிலிருந்து பொன்னையனை அழைத்து நேசமணியை அனுப்பும்படி வலியுறுத்தினாள். “வெண்ணெ தெரண்டு வர நேரத்துல தாழியை உடைச்ச கதையா இருக்குது நீ சொல்றது. அவன் கைராசிக்கு தொழில்ல நல்லா ஒரு புடிமானம் கெடைச்சிடுச்சி. நான் சொல்றத நல்லா புரிஞ்சிக்கோ. அவன பத்திய கவலையே வேணாம். இன்னும் நாலு வருஷத்துல இதே ஊருல அவனுக்கு ஒரு கடையை உண்டாக்கி ஒரு பெரிய ஆளா நிறுத்தப் போறேன் பார்த்துக்கோ. இனிமேல அவன படிக்கவைக்கறேன் எழுத வைக்கறேன்னு எதையாச்சிம் பேசி அவன் மனச கெடுத்துடாத” என்று வழக்கமான சிரிப்போடு சொல்லிவிட்டு பேச்சை முடித்துக்கொண்டான்.
ஒரு வருஷம் கழித்து தீபாவளி விடுமுறையில்தான் நேசமணி வீட்டுக்கு வந்திருந்தான். அவன் முகமே கறுத்திருந்தது. குச்சியாக இளைத்திருந்தான். அதைப் பார்த்ததும் அதிர்ச்சியுடன் “என்னடா வெயில்ல சுத்தற வேலையா? இப்படி கறுத்து போயிட்டியே” என்று கேட்டாள் அஞ்சலை. அவன் “த்ச். அப்படிலாம் ஒன்னும் இல்லம்மா” என்று பதில் சொல்லிக்கொண்டே விலகிவிட்டான். அவன் பார்வையில் படிந்திருந்த நிதானமும் அமைதியும் அவளுக்கு அச்சத்தை ஊட்டின.
“கடையில வேலை செய்யறியா? வேன்ல சுத்தற வேலையா?”
“வேளாவேளைக்கு சரியா சாப்படறியா? அத்தை ஒழுங்கா சாப்பாடு போடறாங்களா?”
“ராத்திரியில வீட்டுக்குள்ளதான படுத்துக்குவ?”
“வாரா வாரம் சனிக்கிழமைல எண்ணெ தேச்சி குளிக்கறியா? ஒடம்பு சூடு அதிகமா போனாலும் கூட நெறம் கருத்திடும் தெரிஞ்சிக்கோ”
அவள் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவன் சரியாகப் பதில் சொல்லவில்லை. அந்தந்த நேரத்துக்குத் தோன்றுவதையெல்லாம் பதிலாகச் சொல்லி சிரித்து மழுப்பினான். அதை நினைத்து அவள் துக்கத்தில் மூழ்கினாள். சட்டென ஒரு குறுகிய இடைவெளியில் அவன் முகமும் போக்கும் முப்பது வயதுடைய ஓர் ஆணுக்குரியதாக மாறிவிட்டன. தன்னை நெருங்கியதுமே அவன் முகம் இறுகிவிடுவதை அவளால் உணரமுடிந்தது.
ஒருநாள் அடுப்படியில் காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்த நேரத்தில் நேசமணியும் தங்கதுரையும் பேசிக்கொண்டிருப்பது அவள் காதில் விழுந்தது.
“நம்ம ஸ்கூல்ல மூர்த்தின்னு யாரோ ஒரு பையன் ஸ்டேட் ரேங்க் வாங்கியிருக்கான்போல. ஐநூறுக்கு நானூற்றி தொண்ணத்தஞ்சி. பேப்பர்ல பார்த்தேன். அவன் போட்டோவெல்லாம் போட்டிருந்தாங்க. அவன தெரியுமா உனக்கு?”
“தெரியும் தெரியும். நல்லாவே தெரியும். ப்ரேயர்ல அவனுக்கு ஹெட்மாஸ்டர் மாலையெல்லாம் போட்டு வாழ்த்தினாரு”
“அவன மாதிரி நீயும் ஸ்டேட் ரேங்க் எடுப்பியா?”
”எடுப்பேன். நிச்சயமா எடுப்பேன்”
”வாயால சொன்னா போதாது. எடுத்துக்காட்டணும். ஒன் படம் பத்திரிகையில வரணும். புரியுதா?”
“கண்டிப்பா வரும்”
“நல்லா படி. நான் உன்ன காலேஜ்க்கெல்லாம் அனுப்பி படிக்க வைக்கறேன், புரியுதா?”
“சரி”
“நீ மட்டுமில்லை. தம்பிங்களயும் நல்லா படிக்க சொல்லு. எல்லாரும் ரேங்க் வாங்கணும்”
நேசமணியின் முகத்தை அவன் அறியாதபடி ஓரப்பார்வையால் பார்த்தாள் அஞ்சலை. ஒரு தந்தைக்குரியவைபோல பாசமும் நேசமும் அவன் கண்களில் திரண்டிருந்தன. அந்தப் பார்வை அவள் மனத்தை நிறைத்தது. அவன் புறப்பட்டுச் சென்ற பிறகான நாட்களின் இருளையெல்லாம் அந்தப் பார்வையின் சுடரால் விலக்கிக்கொண்டாள்.
தீபாவளிக்கு வந்துபோன பிறகு நேசமணி ஊர்ப்பக்கம் வரவே இல்லை. பொங்கல் சமயத்தில் கட்டாயமாக அவன் வந்துவிடுவான் என்று உறுதியாக அவள் நம்பினாள். அந்த நம்பிக்கையை மற்ற பிள்ளைகளிடமும் ஊட்டி வைத்திருந்தாள். அப்போதும் அவன் வரவில்லை. தன்னைவிட்டு தன் மகன் வெகுதொலைவு சென்றுவிட்டானோ என்று நினைத்து நினைத்து கவலையில் உருகினாள் அஞ்சலை.
அப்துல் சாதிக் கடைக்கு ஆடைகளை ஒப்படைக்கச் செல்லும்போதெல்லாம் அங்கிருந்து பொன்னையனுக்கு ஒரு போன் செய்து விசாரிக்கவேண்டும் என்றெல்லாம் அஞ்சலைக்குத் தோன்றும். ஆனால் அவனுடன் பேசுவதற்கே அவளுக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அவனிடம் பேச்சுவார்த்தையே வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஒரு வைராக்கியம் வந்துவிட்டது. சொத்து போனதைப் பற்றிக் கூட அவளுக்குக் கவலை இல்லை. பெற்ற பிள்ளையை அபகரித்துக்கொண்டு போய்விட்டானே என்பதைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிரித்துச் சிரித்து காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் அவன் முகத்தில் நெருப்பைக் கொட்டி எரிக்கவேண்டும் என்று குமுறினாள்.
ஒவ்வொரு நாளையும் எதிர்பார்ப்போடும் ஏமாற்றத்தோடும் கழித்துக்கொண்டிருந்த நேரத்தில் இப்படி ஒரு கனவைக் கண்டதை நினைத்து அவள் மனம் நடுங்கியது.
ரயில் கூவும் சத்தம் கேட்ட பிறகுதான் மணி இரண்டாகிவிட்டது என்பதை இருவருமே உணர்ந்தார்கள். அஞ்சலை மிஷினை நிறுத்திவிட்டு எழுந்து நின்று கைகால்களை உதறிக்கொண்டாள். அவள் மடிமீது விழுந்திருந்த துணிப்பிசிறுகள் கோழியிறகுகள் மாதிரி சிதறி விழுந்தன. பட்டன் தைத்து முடித்த சட்டையை மடித்துவைத்துவிட்டு பார்வதியும் எழுந்தாள்.
“கொழம்பு வேணும்னா எடுத்தும் போடி. நேத்து வச்ச கருவாட்டுக் கொழம்பு இருக்குது…”
“இல்லைக்கா. அம்மா எதாச்சும் வச்சிருக்கும். பாக்கறேன். இல்லைன்னா சோத்த மட்டும் போட்டுகினு இங்க வந்து கொழம்ப ஊத்திக்கறன்”
பார்வதி வெளியேறியதும், அஞ்சலை பின்கட்டுக்குச் சென்று முகம் கழுவிக்கொண்டு வந்தாள். அடுப்பிலிருந்த பானையை இறக்கி ஒரு தட்டில் சோற்றை அள்ளிவைத்துக்கொண்டு அதில் குழம்பை ஊற்றினாள். கூடத்துக்கு வந்து மிஷினுக்குப் பக்கத்தில் சுவரோரமாகச் சாய்ந்து உட்கார்ந்தாள்.
நாலாவது வாய் சாப்பிட்டு முடித்தபோது விக்கல் வந்தது. தட்டை கீழே வைத்துவிட்டு பானையிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தாள். மீண்டும் குனிந்து தட்டை எடுக்கச் சென்றபோது வாசலில் ஒரு நிழலைப் பார்த்தாள். அவள் உடல் ஒருகணம் அதிர்ந்தது. உற்றுப் பார்த்தபடி அந்த உருவத்தை நோக்கி அடியெடுத்து வைத்தாள். ஒரு எட்டு வைத்ததுமே அவள் ஆழ்மனம் உணர்ந்துவிட்டது. ”நேசமணி, ஐயா” என்றபடி ஓட்டமாக ஓடி அவன் தோளைப் பற்றிக்கொண்டாள்.
அவளுக்கு அழுகை பொங்கிவந்தது. “நேசமணி, என் ராசா” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அமைதியும் நிதானமும் கூடிய அவனுடைய பார்வை இத்தனை மாதங்களில் கொஞ்சம் கூட மாறவில்லை. அவன் கண்களையே அவள் பார்த்தாள். சட்டென ஒரு துளி கண்ணீர் அவன் விழியோரங்களில் திரண்டு நிற்கக்கூடும் என்று அவள் தன் பார்வையால் தேடினாள். ஒருகணம் சற்றே ஏமாற்றமாக இருந்தாலும், உறுதி மாறாத அவனுடைய பார்வையைக் காண அவளுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. அவனுடைய தலையையும் முதுகையும் ஒட்டிய தோள்களையும் தொட்டுத்தொட்டு பார்த்து தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள்.
“வா, வந்து ஒரு வாய் சாப்புடு”
அவனை அழைத்துச் சென்று மிஷினுக்கு அருகில் உட்காரவைத்துவிட்டு ஒரு தட்டில் சோறு போட்டு குழம்பு ஊற்றிப் பிசைந்து எடுத்துவந்து கொடுத்தாள்.
“ஏம்பா பொங்கலுக்கு வரலை? தம்பிங்கள்லாம் உன்ன எதிர்பார்த்து ஏமாந்துட்டானுங்க தெரியுமா?”
“வேளாவேளைக்கு ஒழுங்கா சாப்புடறியா ராசா?”
“ஏன் இவ்ளோ அழுக்கா சட்டை போட்டிருக்க? கொஞ்சம் நல்ல சட்டையா போட்டுக்கக்கூடாதா?”
“ஒன் அத்த ஒன்ன ஒழுங்கா கவனிச்சிக்கறாங்களா?”
“ஒன்ன அங்க நான் அனுப்பனது தப்புதான் ராசா? அம்மா தெரியாம செஞ்சிட்டேன். இனிமே அங்க போவவே வேணாம். இங்கயே தம்பிங்க கூடயே இருந்துடு. எது வந்தாலும் நாம சேந்து நின்னு சமாளிக்கலாம்”
அவன் அஞ்சலையின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. அமைதியாக சோற்றை உருட்டிச் சாப்பிட்டான். கடைசி வாய் சோற்றைச் சாப்பிட்ட பிறகு த்ச் என்று நாக்கு சப்புக்கொட்டியபடி அஞ்சலையைப் பார்த்த பார்வையில் ஒரு சிறு புன்னகை படிந்திருந்தது. அவன் வேகமாகப் பின்கட்டுப் பக்கமாகச் சென்று கையைக் கழுவிக்கொண்டு திரும்பினான்.
அவன் தன் கைப்பையைத் திறந்து நூலால் சுற்றி வைத்திருந்த இரு கட்டு ரூபாய்த்தாள்களை எடுத்து அப்படியே அஞ்சலையிடம் கொடுத்தான். “ஏதுடா இவ்வளவு பணம்?” என்று சற்றே அதிர்ந்து பின்வாங்கினாள் அஞ்சலை. பிறகு அவளே “உனக்கு சம்பளமா கொடுத்த பணமாடா? இவ்ளோ காலத்துல உங்க மாமன்காரனுக்கு இப்பத்தான் சம்பளம் கொடுக்கணும்னு தோணிச்சா?” என்று கேட்டாள்.
நேசமணி அவளை ஒருகணம் ஏறிட்டுப் பார்த்தான். அவனுடைய உதடுகள் மேலும் காதோரமாகவும் முளைத்துப் படர்ந்திருந்த கருமையைப் பார்த்து நெருங்கி வந்து அவன் கன்னத்தைத் தொட்டுத் திருப்பிப் பார்த்துச் சிரித்துக்கொண்டாள். ஒருகணம் முத்துசாமியின் முகம் அவள் நினைவில் தோன்றிக் கலைந்தது.
“இந்தப் பணத்த யாரும் எனக்குக் கொடுக்கலை. இது நானா சம்பாதிச்ச பணம். எங்கயும் திருடலை. யாருகிட்டயும் பொய் சொல்லலை. தப்பா நடந்துக்கலை. நேர்மையா உழைச்சி சம்பாதிச்ச பணம். என் மேல ஒனக்கு நம்பிக்கை இருக்குதில்ல? நாளைக்கு தம்பிங்க மேல்படிப்புக்கு, வெளியூரு போவறதுக்குன்னு நெறய பணம் தேவைப்படும். நாளைக்கே பேங்க்ல ஒரு கணக்கு தொடங்கி, அதுல சேத்துவை”
மிஷின் மேசை மீது வைத்திருந்த செம்பை எடுத்து தண்ணீர் அருந்தினான்.
“நான் கெளம்பணும், நேரமாய்ட்டுது”
“சாயங்காலமா தம்பிங்க வந்துடுவானுங்கடா, ஒரு நிமிஷம் பார்த்துட்டு போடா”
“இல்லம்மா, அதுக்கெல்லாம் நேரமில்லை. அடுத்த தரம் பார்க்கலாம். அவுங்ககிட்ட நான் கொடுத்தேன்னு கொடு”
மூன்று பெரிய சாக்லெட் அட்டைகளை எடுத்து அஞ்சலையிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தான் நேசமணி. சுவரில் தொங்கிய முத்துசாமி படத்தின் மீது ஒருகணம் அவன் பார்வை பதிந்தது. அதே கோணத்தில் அஞ்சலையின் பக்கமும் திரும்பிப் பார்த்துவிட்டு வெளியே நடந்து சென்றான். அமைதியும் நிதானமும் படிந்த அவன் பார்வையால் தூண்டப்பட்டவள்போல அவனைப் பின்தொடர்ந்து வாசல் வரைக்கும் வந்து நின்றாள் அஞ்சலை.