ஜார்ஜ் கோட்டையும் கறுப்பர் நகரமும்
மேற்கிலிருந்து வந்து நம் உழைப்பை, நம் மண்ணின் செல்வத்தை சுரண்டிச் சென்றவர்கள் பலர். அவர்களை வெள்ளையர் என்று பொத்தாம்பொதுவாக சொல்கிற பழக்கம் நமக்குண்டு. வரலாறு என்பது பொத்தாம் பொதுவான ஒன்று அல்ல அதை துல்லியமாக அறிந்துக்கொள்ள நிறைய சாட்சிகளை விட்டுச் செல்கிறது. அப்படியான ஒரு பெரிய சாட்சிதான் புனித ஜார்ஜ் கோட்டை. அந்த கட்டிடத்தை விட அதனுள் நடத்தப்பட்ட அரசியல் வியப்புகள் நிறைந்தது.
உள்ளூரில் நம்மை சுரண்டுபவர்கள் போதாது என்று ஐரோப்பாவிலிருந்தும் வழி கண்டுபிடித்துக்கொண்டு இந்த மண்ணில் சுரண்டுபவன், சுரண்டப்பட்டவன் என இரண்டு பேரையும் சுரண்ட 6000 மைலுக்கு அப்பாலிருந்து வந்தான் பாருங்க, அதுதான் காலத்தின் வரலாற்று வித்தை. வந்தவன், 300 ஆண்டுகளுக்கு மேல் நிறுத்தி நிதானமாக சுரண்டிக்கொண்டு மட்டும் போகவில்லை. கலாச்சார, பண்பாட்டு சமூக வாழ்வியலில் ஒரு பெரும்பாய்ச்சலை, அனைத்து மக்களிடமும் ஏற்படுத்திவிட்டுப்போனான். வரலாறு மட்டுமல்ல, நாமும் மறுக்கவே முடியாது.
நிரந்தரமாக சுரண்டுகிறவன், தற்காலிகமாக சுரண்டுகிறவன் என்கிற இருவேறு ஆபத்தால் சூழப்பட்ட மக்களை, வெள்ளையன் இப்போதும் உள்ளூர் ஆட்களுடன் கூட்டு சேர்ந்து சுரண்டுகிறான். (இதோடு இதை நிறுத்திக்கொள்கிறேன்).
வரலாறை நாம் ஏன் அதன் உண்மைத்தன்மையுடன் பாதுகாக்க வேண்டும்?
இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல போவதில்லை. நம்மை சுரண்ட வந்தவர்கள் பற்றிய சின்ன குறிப்பு தந்த பிறகு கோட்டைக்கு போவோம்.
இந்த மண்ணின் வளம் கருதி மேற்கிலிருந்து, வடக்கிலிருந்து வரலாற்றுக் காலம் முதல் காக்கேசிய இனத்தவர் வந்தபடியேதானிருந்தார்கள். (காக்கேசிய இனம் என்பது வெள்ளையினம், அல்லது ஆரிய இனமென்றும் சொல்லலாம்) வெள்ளையாய் இருப்பவரெல்லாம் ஆரியர் என்று சொல்ல முடியாது.. அதிலே 20-க்கும் மேற்பட்ட கிளையினங்கள் உண்டு அது நமக்கு இப்போது வேண்டாம் சீக்கிரம் கோட்டைக்கு போக வேண்டும்.
நம் செல்வங்களை, கலையை, பண்பாட்டை, நிலத்தை திருட வந்தவர்கள், வணிகம் செய்து லாபமீட்ட வந்தவர்கள்.
ஹூணர்கள், மங்கோலிய இனம், யவணர்கள், காக்கோசிய இனம், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரஞ்சுகாரர்கள், ஆங்கிலேயர்கள் என வரிசையாக வந்தார்கள். கடைசியாக வந்தவர்களே இந்த ஆங்கிலேயர் 1605-ல் வந்து 1947-வரை நம்மை பயன்படுத்தி, பயன்தந்து கிளம்பிப் போனார்கள். அதோடு முடியவில்லை, இன்றும் இவர்கள் நம்மை சுரண்டுகிறார்கள், சுரண்டியவற்றை எடுத்து செல்கிறார்கள். அரசுகளின் அனுமதியுடன் சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிற பெயரில்.
மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் வந்த அத்தனை பேரின் கலப்பினமாக இந்தியா இருக்கிறது. அதனால்தான் இந்தியாவை மாந்தரின் கண்காட்சிக்கூடமென வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கலப்படைந்து, கலப்படைந்து இன்று உறுதியான கறுப்பு நிறத்தவர் குறைவு தான். ஆனால் அடிப்படையில் கறுப்புநிறத்தவரான தமிழர்களால், திராவிடர்களால்(இன அடிப்படையிலான குறி சொல்) நிறைந்த பூமியிது.
ஆங்கிலேயர் 1609-ல் வில்லியம் ஹாக்கின்ஸ் என்பவர் முகலாயர் ஜகாங்கீர் அரசவைக்கு வருகிறார். (இதற்கு முன்பே போர்ச்சுகீசியர்கள் தங்கள் வியாபாரங்களை இம் மண்ணில் துவங்கிவிட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள, வாஸ்கோடகாமா 1498-ல் கள்ளிக்கோட்டை துறைமுகத்துக்கு வந்திருக்கிறார் என்பது வரலாறு). முகலாய மன்னர் ஏற்கனவே போர்ச்சுகீசியருக்கு உரிமைகள் தந்து, பலனாக மேற்கத்திய உயர்ரக மதுவுக்கு கிறங்கி அதன் பலனை அனுபவித்துக்கொண்டிருக்கிறார், அதனால் இப்போது புதிதாக வந்த ஆங்கிலேய வணிகரை நிராகரிக்க, ஜகாங்கீரை சரிகட்ட வேண்டிய விதத்தில் சரிகட்டி.. மது, மாது இன்னும் பலவிதமான பரிசுகளால்தானே அது சரிகட்டப்பட்டிருக்கும்… வரலாறு முழுக்க அது தானே நடக்கிறது. முதலில் அனுமதி மறுத்த ஜகாங்கீர் பலவிதமான மேற்படி மயக்கு வித்தைகளுக்குப் பிறகு சம்மதிக்கிறார். 1613-ல் சூரத்தில் ஆங்கிலேயரின் வியாபாரம் துவங்குகிறது.. அங்கு தொடங்கிய ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்டம் 1858-ல் இந்தியாவெங்கும் பரவி ஆட்சி செய்கிறது.
என்னதான் ஆங்கிலேயர்கள் வடக்கில் தங்கள் ஆட்டத்தை தொடங்கியிருந்தாலும், தெற்கில் புனித ஜார்ஜ் கோட்டைதான் ஆங்கிலேயருக்கான இந்தியாவின் முதல் கோட்டை.
பிரான்ஸிஸ் டே, பாண்டிச்சேரிக்கு வடக்கே கூனி மேட்டில் தான் முதலில் கம்பெனிக்கான இடத்தை தேர்வு செய்தான். பிறகு ஏனோ அதை கைவிட்டு கடலலை வந்து மோதும், பரந்த ஒரு மேட்டுப்பகுதியான இப்போது கோட்டையுள்ள நிலத்தை வாங்க காரணம், தென்புறத்தில், மேற்கிலிருந்து கிழக்காக பளிங்கு நிறத்திலோடும் கூவம் நதி, அதன் கரையோரங்களில் இருக்கும் பூக்கள் சொரியும் மரங்கள், அதன் பசுமையான குளிர்ந்த மணமுள்ள தென்றலென, மிக அழகிய இதமான சூழல், பிரான்சிஸ் டேவுக்கு மிகக் கவர்ந்த இடமாக இருந்தது என்பதுடன் போர்ச்சுகீசிய, டச்சு என்கிற இரண்டு எதிரிகளுக்கு மத்தியில் இருந்து போட்டி வியாபாரம் செய்ய அவர் விரும்பினார், அதை விடவும் சாந்தோமில் அவரை தடுமாறச் செய்யுமளவு ஒரு காதலி இருந்தாளாம்.
தாமர்லா வெங்கடப்பா மூலம் சந்திரகிரி மன்னரிடம் 22-8-1639-ல் நிலஉரிமையை அந்நாளைய வழக்கப்படி தங்கத்தட்டில் பொறித்து தருகிறார்கள். 600 பகோடா வாடகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட, அந்த அரிய, 1746-ல் கோட்டையை தாக்கிய பிரஞ்சுகாரர்கள் கைபற்றி கொண்டு சென்றனர்.
பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன், கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளால் கட்டப்பட்டது.. புனித ஜார்ஜின் நினைவு தினமான ஏப்ரல் 23-ல் முடிந்ததால், அந்த பெயர் வைத்ததாகச் சொல்வது வழக்கமாக அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதுதான். அது திட்டமிட்டு வைக்கப்பட்டது தான், ஆங்கிலேயர் கோட்டைகளுக்கும், கோவில்களுக்கும் புனிதர்களின் பெயர்களை வைப்பது இயல்பான ஒன்றுதான் அப்படி வைத்தால் அவர்கள் காப்பார்கள் என்பது போன்ற வழக்கமான நம்பிக்கை தான்.
உள்ளூர் உழைப்பாளிகளைக் கொண்டு ஆங்கிலக் கட்டுமான நுட்பத்துடன் கட்டப்பட்ட கட்டுமானம் இன்றைக்கும் நமக்கு பயன்படுகிறது என்பதுதான், அந்தக் கோட்டையின் சிறப்பு. அந்தக் கோட்டையிலிருந்து நான்கு புறமும் சுரங்கங்கள் இருப்பதாக சொல்வார்கள், எங்கள் பகுதி மருந்துக்கிடங்கு (பேசின் பிரிட்ஜ்) பகுதியிலிருந்து கோட்டைக்குச் சுரங்கம் போகிறது என்கிற கருத்தும் உண்டு. நானே சில சுரங்கங்களைப் பார்த்திருக்கிறேன். இப்போது அவை தூர்க்கப்பட்டு எளிய மக்களின் குடியிருப்பாக ஆகிவிட்டது.
சாந்தோமில் போர்ச்சுகீசியர் வலுவான அடித்தளமிட்டு வியாபாரத்தில் செல்வாக்காக இருந்த காலமது. அதே நேரம் புலிக்காட்டில் – அதாவது இன்றைய பழவேற்காடு – அங்கு டச்சுக்காரர்கள் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
நம்ம உள்ளூர் ஆட்சியாளர்கள் கடலோர நிலப்பரப்புகளை எட்டிக்கூட பார்க்கறதில்லை போல.. கிழக்குக் கடற்கரை நெடுக்க அன்னிய வெள்ளையர் ஏகபோகம்தான் (நாங்க ஆண்ட பரம்பரை பிகில ஊதிக்கினு கடாரம் கொண்ட சோழன் ஜாவா, சுமத்ரான்னு யாரும் கட்டையெல்லாம் தூக்கிட்டு வர கூடாது….. அது அப்போ……. இப்ப நான் பேசறது 1639…)
இவ்வளவு போராட்டத்துக்கப்புறம் 107.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் 2295 பவுண்டு செலவில் கோட்டை கட்ட வேலைகள் நடக்கிறது. அதை இங்கிலாந்து அரசாங்கத்துக்கும் கடிதம் எழுதி தெரிவிக்கிறார்கள். கூடவே 50 பேர் கொண்ட சிப்பாய்களுக்கு 55 பவுண்டு செலவாகும் என்று சொல்ல எதற்கு இந்த வீண் செலவுகள் என்று கடிந்துக் கொண்டதுடன் பிரான்ஸிஸ் டேவை இங்கிலாந்துக்கு திரும்பி அழைத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, அவர் திரும்ப மெட்ராச பட்டண ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பப்படுகிறார். இரண்டாண்டுகளில் நிலைமைகள் மிக மாறியிருக்கிறது. அடேங்கப்பா என்று மலைத்துப்போகுமளவு இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் பலம் அதிகமானதுடன் ஜார்ஜ்கோட்டை அதில் முதலிடம் பிடித்துள்ளது. அந்தளவு முக்கியத்துவம். அதுவரை முகவராக இருந்த ஆண்ட்ரூ கோகன் இடத்தில் பிரான்சிஸ் டே இப்படி பலபேர் கிழக்கிந்திய கம்பெனி முகவர்களாக பதவியேற்கிறார்கள் பிரான்சிஸ் டே ஓராண்டு தான் அந்த பதவியில் இருக்கிறார். கோகனில் தொடங்கி மொத்தம் 14 ஏஜண்டுகள் கோட்டையை நிர்வகிக்கிறார்கள். அதுவரை கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியின் கொடியே பறக்கிறது. (1640-1681)
கவர்னர் இலிகு யேல் (இன்றைய அமெரிக்க கனெடிகட் மாநிலத்திலுள்ள யேல் பல்கலை கழகத்தின் தாளாளர்களில் ஒருவர். இந்த யேல் பல்கலை கழகத்தில் தான் அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றினார்கள்.)
1687-92
இவ்வளவு காலம் கோட்டையில் பறந்த கிழக்கிந்திய கம்பெனியின் கொடியை இறக்கி, புனித ஜார்ஜ் கோட்டையில் பிரிட்டிஷ் அரசின் யூனியன்ஜாக் கொடியை கவர்னர் யேல் ஏற்றினார். இந்த கோட்டையில் ஜாக் கொடி தவிர்த்து, மற்றவர்களின் கொடி, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அறுபத்தியோரு நாட்களுக்கு பிரான்சின் வெள்ளை கொடி பறந்தது. பிறகு ஒரு 5 மணி நேரம் கைராட்டை கொடி பறந்தது. தர்மச்சக்கரம் பொறித்த நால்வர்ணக்கொடி நிரந்தரமாக பறக்க 260 ஆண்டுகள் கோட்டை கொடிமரம் காத்திருந்தது.
அந்த கொடிமர வரலாறும் மிக விறுவிறுப்பானது தான். கோட்டைக்கு பொருள் ஏற்றி வந்த ராயல் அட்வென்சர் என்கிற கப்பல் புயலில் சிக்கி, கரைதட்டி நிற்க, சிதைந்த கப்பலின் தேக்கு மரக்கட்டைகளை கொண்டு, கோட்டை முகப்புக் கொத்தளத்தில் 150அடி உயர கொடிக்கம்பம் கட்டப்பட்டது. இந்தியாவின் மிக உயரமான கொடிக்கம்பம். மிக சமீபத்தில்தான், 1994-ல் இரும்புக் கம்பமாக அது மாற்றப்பட்டது.
கோட்டை பலகாலமாக, பலவிதமான கட்டிடங்களுடன் வளர்ச்சியடைந்து, பலமான, பாதுகாப்புமிக்க 6 மீட்டர் உயர சுவர் கொண்ட கோட்டையாக மாறியப்பின், கோட்டைக்குள் ஆங்கிலேயர் மட்டுமின்றி ஐரோப்பியர் பலரும் வாழ்ந்தனர். அதிகமாக போர்ச்சுகீசியர்கள் வசித்துள்ளனர். அப்படி வெள்ளையர் வாழ்ந்த ஜார்ஜ்கோட்டை வெள்ளையர் நகரமென்று அழைக்கப்பட்டது. அந்த வெள்ளையர் நகரத்தில் மொத்தம் 126 வீடுகள் இருந்திருக்கின்றன… இப்போதும் சில நல்ல நிலையில் அலுவலகங்களாக இருக்கின்றன, 2 மிகப்பெரிய கிடங்குகளும் இருந்திருக்கிறது, கோட்டைக்குள் இருந்த தெருக்களின் பெயர்களைப் பார்ப்போம்.
நடுத்தெரு, சத்திரம் தெரு, சத்திரம் சந்து, குளு செஸ்டர் தெரு, யார்க் சந்து, சார்லஸ் சந்து, ஜேம்ஸ் சந்து, ஜேம்ஸ் தெரு, செயின்ட் தாமஸ் தெரு, செயின்ட் தாமஸ் சந்து, தேவாலயம் தெருக்கள்.
இப்போதும் கட்டமைப்புகள் பெரிதாக மாறவில்லை. தலைமைச் செயலக புதுக் கட்டிடம் உள்ள இடத்தில் இருந்த கட்டிடங்கள் மட்டும் மிஸ்ஸிங். தொப்புளுக்கு மேல் கஞ்சி ஏறியவுடன், மனிதனின் முதல்கவனம் மதம், சடங்கு என காலம் காலமாக நடப்பது போல், இதுவரை உணவுக் கூடமே பிரார்த்தனை இடமாகவும் இருக்க, இப்போது அவர்களுக்கு நிரந்தரமானதொரு தேவாலயம் கட்ட வேண்டுமென எண்ணம் வர, 1678-ல் கோட்டைக்குள் தேவாலயம்கட்ட ஆரம்பிக்கிறார்கள். பிரஞ்சுகாரர்கள் அடிக்கடி தாக்கும் வாய்ப்பு இருப்பதால், பீரங்கிகுண்டுகளை தாங்கி நிற்கும்படியான வலுவுடன், அதன் கூரை 2 அடி கனத்துக்கும், சுவர்கள் 4 அடிக்கும் இருக்கும்படி உறுதியாக கட்டுகிறார்கள். குறிப்பாக மரம் அதிகம் பயன்படுத்தாத வளைவு, கூரைவடிவ தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டது. இன்றும் கம்பீரமாக நிற்கும் புனிதமேரி ஆலயத்தின் கூடுதல் சிறப்பு, இங்கிலாந்துக்கு வெளியே, ஆங்கில திருச்சபைக்காக கட்டப்பட்ட முதல் தேவாலயம் என்பதாகும். புனிதமேரி ஆலயம் பெயர் காரணம் பழையபடி அப்படியே புனிதமேரி நாளில் கட்டுமானம் துவங்கியதால் அந்த பெயர் என்பதாக வரலாற்று குறிப்பு. ஆனால் உள்குத்துகள் ஏராளம். அவர்களுக்குள்ளும், ஆங்கிலிகன் , கத்தோலிக் , புராட்ஸ்டான்டு எனப் பல பாகுபாடுகள் குழப்பங்கள் உண்டு…. வெள்ளையர்கள் விதிவிலக்கல்ல. இவ்வளவு உள்சச்சரவுக்கிடையே 1710-ல் ஆலயத்துக்கு கூடுதலாக ஒரு கூம்பு கோபுர இணைப்பு ஒன்றும் கட்டப்பட்டது. அந்த கோபுரத்திலிருந்து பார்த்தால், அன்றைய மதராஸின் பரந்த நிலபரப்பு, தெற்கே மலைக்குன்றுகள், மேற்கிலும், தெற்கிலும் மலைக்குன்றுகள் வரையிலான பரந்த வயல் வெளிகள், கிழக்கே கடல் என பரந்த நிலபரப்பு தெரிந்திருக்கும்.
இந்த புனிதமேரி ஆலயத்தில் தான் இராபர்ட் கிளைவ் திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது, வேப்பேரியில் நடந்ததாகவும் குறிப்புண்டு. அதோடு புகழ்பெற்ற கவர்னர் இலிகு யேல் அவர்களின் திருமணமும் இங்கே தான் நடந்தது. இராபர்ட் கிளைவ் 18 வயதில் இந்தியாவிற்க்கு அலுவலராக வந்திருக்கிறார். இன்று நாம் வெளிநாடு போய் சம்பாதிப்பது போல அன்று ஐரோப்பியர் இந்தியாவிற்க்கு பிழைக்க வந்துள்ளனர்… நாம் கூழுக்கு வக்கற்று இருந்த காலத்தில் நம்மூர் சிற்றரசுகள், அந்தப்புர சேட்டைகளிலும், கோயில் கட்டி கும்பாபிசேகம் நடத்துவதிலும், தேவதிருவடியார்களுடன் உல்லாசமாக இருந்தார்கள். அதாவது பண்பாடு கலாச்சாரத்தை காத்துக் கொண்டிருந்தார்கள். இந்த வரலாறு தெரியாத நம் ஆட்களில் ஒருவன், தவறாமல் குறிப்பா நாளை சோற்றுக்கு வழியற்றவன் கூட ஆண்ட பரம்பரை கூச்சல் போடுகிறான்.
வரலாற்றைப் பார்க்கும் போது, நமக்கு சிரிப்பு மட்டுமே மிச்சம், பாவம்.. கூச்சல் போடுகிறவனில் 995 ஆட்கள் வரலாறு தெரியாமலே, கூச்சல், குதூகலத்திலே செத்து போவானே என்கிற வருத்தம்.
இந்த இராபர்ட் கிளைவிற்க்கு 50 ரூபாய் சம்பளத்தில் வாழ வெறுப்பாக இருக்க (அந்த நாட்களில் ஒத்தை ரூபாயை கண்ணில் பார்க்காத பெரும்பாலான உழைக்கும் மக்கள் வாழ்ந்த காலம் என்பதை நினைவில் கொள்க) துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாக முயன்று தப்பியுள்ளார். ஆனால் அவர் தன் பணி முடிந்து இங்கிலாந்து திரும்புகிற போது அவர் சம்பாதித்த பணத்தின் மதிப்பு ஒண்ணே முக்கால் லட்சம் பவுண்டு, அதாவது இந்திய பணத்தில் இருபது லட்சம். (அந்த நாள் மதிப்பு). அவ்வளவு பணத்தை எடுத்து செல்வது பாதுகாப்பானதில்லை என்பதால் பெரும் பணத்தை வைரமாக மாற்றிக்கொண்டாராம். அதோடு 1400 தங்கப்பாளங்களையும் கப்பலில் எடுத்துச் செல்ல டோனிங்டன் என்கிற அந்த கப்பல் புயலில் சிக்கி கடலில் மூழ்கிவிட்டதாம். ஆனாலும் பெருஞ்சொத்துடன் போய் சேர்ந்தவரின் விலைமிக்க பொருள் ஒன்றான முகலாயர் காலத்தில் செய்யப்பட்ட வைரம் மாணிக்கம் பதித்த தண்ணீர் ஜாடியொன்று 2004-ல் அவரது வாரிசுகளால் 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விடப்பட்டது. (நவாப் ஒருவரிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற பொருளது.) என்ன இருந்து என்ன? இராபர்ட் கிளைவ் கடைசிக் காலத்தில் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு செத்தார்.
கோட்டைக்குள் அவர் வாழ்ந்த வீடுதான் கிளைவ் ஹவுஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த கட்டிடம் சேமியர் சுல்தானுக்கு சொந்தமானது. ஒரு புகழ்பெற்ற இடத்தில், பெருஞ்செல்வந்தர்கள் தங்களுக்கு ஒரு இடம் வாங்கிக் கொள்வது அந்தஸ்தான ஒன்று என்கிறது. எப்போதும் உள்ளது தானே. அப்படி வெள்ளையர் நகரில் சுல்தான் சொகுசாக வாழ கட்டிய வீட்டை, அதன் அழகில் மயங்கி, கிழக்கிந்திய கம்பெனி வாங்கிக்கொள்ள, அதில் ஆற்காட்டு வீரர் இராபர்ட் கிளைவ் வசித்திருக்கிறார். 1800-க்கு பிறகு அதில் அரசு அலுவலகங்கள் இயங்குகிறது.
அடுத்த சிறப்பு கோட்டை அருங்காட்சியகம்.
1795-ல் கட்டப்பட்ட கட்டிடம் ஆரம்பத்தில் அதிகாரிகளுக்கான உணவு கூடமாக இருந்திருக்கிறது., வணிக உரையாடல்கள் மற்றும் வணிக மையமாக இருந்திருக்கிறது. மதராஸ் வங்கியாகவும் செயல்பட்டிருக்கிறது, லாட்டரி குலுக்கல்கள் நடைபெறும் மையமாக இருந்திருக்கிறது. இப்படியெல்லாம் இருந்த கட்டிடம் 1948-லிருந்து அருங்காட்சியகமாக இருக்கிறது.
திப்பு சுல்தானுடனான போரில், அவரது குழந்தைகளை பிடித்து வந்த காரன்வாலிஸின் சிலை, அதனடியே பிணை கைதிகளாக இருக்கும் திப்புவின் குழந்தைகள் சிற்பம், வெண் பளிங்குக்கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது., கோட்டையின் அன்றைய ஆளுநர்களின் ஓவியங்கள், இராபர்ட் கிளைவ் எழுதிய கடிதங்கள், பிரஞ்சுகாரர்கள் பயன்படுத்திய விளக்குகள், பீங்கான் பாத்திரங்கள், ஐரோப்பியர் வெளியிட்ட நாணயங்கள், பலவகை பீரங்கிகள் அன்றைய கவர்னர்களின் துப்பாக்கிகள், உடைகள் என அத்தனையும் பாதுகாக்கப்படுகிறது. மிக அவசியம் வரலாற்று ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய ஒன்று. திப்பு சுல்தான் வெள்ளையருக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கிறான். ஆனால் அவனிடம் சலாம் போட்டு பிழைத்த பெருங்கூட்டம் திப்புவை பழிக்கிறது. வரலாற்றின் சாட்சியாக கைவிலங்கிட்ட திப்புவின் குழந்தைகள் சிலை…..
கோட்டையில் இங்கிலாந்தின் ஜாக் கொடியை இறக்கி முதன்முதலாக ஏற்றப்பட்ட 12அடி அகலமும் 8அடி நீளமும் கொண்ட தேசியக்கொடியை அருங்காட்சியகத்தில் கண்ணாடி பேழையில் வைத்துப் பாதுகாக்கிறார்கள். அதை நாம் பார்க்க முடியும். அந்தக் கொடியை ஏற்றியவர் பற்றிய குறிப்பு நம்மிடம் இல்லை.
தளபதி காம்டி டீ லாலி என்பவனின் தலைமையில் பிரஞ்சுகாரர்கள் 1758-ல் டிசம்பர் 12-ல் புனித ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட ஆங்கிலேயர்களால் பிரஞ்சுபடையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி, கறுப்பர் நகரத்திலிருந்து உழைக்கும் மக்களான 2000 பறையர்களை திரட்டி, ராணுவ உடை ஒரு செட் தருகிறோம் என்பதாகக் கூறி, படை திரட்ட, பறையர் ரெஜிமெண்ட் என்கிற பெயருடன் பிரஞ்சுகாரர்களுடன் மோத, லாலி தலைமையேற்ற பிரஞ்சுப் படை வெஞ்சினத்துடன் சிதறடிக்கபட்டிருக்கிறது. அந்த வீரமிக்க படையை BLACK ARMY என ஆங்கிலேயர் பதிவு செய்துள்ளனர். 1500 பறையர்களையும், குதிரைப்படையையும், மருதநாயகம் KING OF SEPOY வழி நடத்தியுள்ளார். BATTLE OF BLACK TOWN என்று இப்போரை ஆங்கிலேயர் பதிவு செய்துள்ளனர். பிரஞ்சுகாரர்கள் தோற்றோட பறையர் ரெஜிமென்ட்டின் கடும் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாதது மட்டும் காரணமல்ல. அவர்கள் அணியணியாக தொடர்ந்து திரளும் ஆபத்தும் இருப்பதால், 1759-ல் தளபதி லாலி தேல்வியை ஏற்று பாண்டிச்சேரிக்கு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட வரலாறு ஏராளமான ஆவணங்களாக உள்ளது.
காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் தீரத்தைக் காட்டி, மதராசப் பட்டணத்தில் தங்கள் இருப்பைத் தக்க வைத்த வரலாறு கோட்டையுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, இந்த நிகழ்வை, உலக வல்லாதிக்கத்தை நிலைநாட்டிய போர் என வரலாற்று ஆசிரியன் எல்டர் ஸ்மித் சொல்கிறான்.
மதராஸ், சென்னை என இரண்டு பெயர்களுக்கான காரணங்கள் பல குழப்பங்கள் இருந்தாலும் தெளிவாக்கிக் கொள்ள ஆதாரங்களும் இருக்கிறது என்றாலும் நாம் அதை உறுதியாக சொல்லாமல்.. உள்ளதை உள்ளபடி சொல்வோம். குறிப்பும் தருவோம்.
மத்ராஸ், மதராஸ், மதராஸ் பட்டாம், மதராஸ் பட்டிணம், மதராஸ பட்டணம், பிறகு மெட்ராஸ் என்கிற பொது உச்சரிப்புக்கு வந்தாலும், இன்றும் வடஇந்தியர்கள் மதராசா என்கிற சொல்லைப் பயன்படுத்துவதை கேட்கலாம். பாட்ரிக் வார்னர் என்கிற புனித ஜார்ஜ் கோட்டையின் பாதிரி, 1676-ல் இங்குள்ள ஆங்கிலேய இளைஞர்களின் ஒழுக்கக்கேடு பற்றிய புகார் ஒன்றை இங்கிலாந்துக்கு எழுதிய கடிதத்தில் மத்ராஸ் என்று குறிப்பிடுகிறார்.
அன்றைய நாட்களில், போர்ச்சுகீசிய மத்ரா குடும்பம் சாந்தோமில் மிக செல்வாக்கானது. அவர்களின் மாத்ரே டி ட்யூஸ் என்கிற ஆலயத்தோடு தொடர்புடைய உள்ளூர் தலையாரி மத்ராசென், தனது வாழை தோட்டத்தை பிரான்சிஸ் டேவிற்க்கு தந்தபோது தனது பெயரால் நகரை அழைப்பதாக இருந்தால் நிலத்தைத் தருவதாக சொல்ல அதற்கு ஒப்புதலளித்தே மத்ராஸ் என்கிற பெயர் வந்ததாக ஒரு குறிப்பும்..
இப்போதுள்ள கோட்டைக்கு வடக்கே, இரண்டு பர்லாங் தூரத்தில் இருந்த, வட்டாரபலம் பொருந்திய மீனவ தலைவர் மாதரசன் பெயரால் மதராஸ் என்கிற சொல் புழக்கத்துக்கு வந்ததாக ஒரு குறிப்பு..
கோட்டை வருவதற்கு முன்பே நிறைய இஸ்லாமியரின் மதராசாக்கள் இருந்தன. அதனால் மதராசப்பட்டணம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்கிற குறிப்பும் உண்டு.
சென்னை என்பதற்கான காரணங்களில் அவ்வளவு குழப்பமில்லை என்றே தோன்றுகிறது. தாமர்லா வெங்கடப்பா சகோதரர்கள், தங்கள் தந்தை சென்னப்பா பெயரால் நகரம் அழைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையால் சென்னை என்று அழைக்ப்பட்டதாவும் ஒரு வழக்கு உண்டு..
ஆனால் ஆவணங்களின்படி ஆரம்பத்திலிருந்து மதராஸ், மதராஸ பட்டணம் என்கிற வார்த்தைதான் புழக்கத்தில் அடிக்கடி பயன்படுத்தப் பட்டிருக்கிறது..
அமெரிக்க ஆரிகன் மாகாணத்தில் இன்றும் உள்ள மெட்ராஸ் என்கிற சிட்டிக்கான பெயர் காரணம் – 1930-களில் மெட்ராசிலிருந்து அனுப்பப்பட்ட துணி அங்கு லாபகரமான வியாபாரமாக இருந்திருக்கிறது. அதனால் மெட்ராஸ் சிட்டியென்றே இன்றும் அழைக்கப்படுகிறது.
கோயில்கள் சார்ந்து சில குறிப்புகள் உண்டு. அவை வலிந்து திணிப்பது போல் உள்ளது. மெட்ராஸ் என்கிற சொல் உறுதியாக போர்ச்சுகீசிய சொல்லாக இருக்க வேண்டும் அல்லது மீனவ தலைவன் மாதரசன் பெயரால் வழங்கப்பட்ட மாதரச பட்டணம் என்கிற வழியில் வந்திருக்க வேண்டும் ..
கோட்டைக்கு தென்பகுதி சென்னை என்றும் வடபகுதி மதராஸ் என்றும் கருதப்பட்டும் வந்துள்ளது என்றாலும் அதிகமாக மதராஸ் என்ற சொல்லே ஆவணங்களில் அதிகமாக புழங்குகிறது.. கடற்கரை நகரை பட்டினம் என்கிற சொல்லால் விளிப்பது தமிழர் மரபு.
இது கோட்டையும், மதராஸ பட்டணம் குறித்த எளிய பதிவு. வலிய பதிவுகளை தேர்ந்த ஆய்வுடன் ஒரு நாள் எழுதுவோம்.
- கரன் கார்க்கி
அறிவிப்பு : சிவப்பு நிற பேரழகு கட்டிடங்கள் மட்டுமல்லாது முக்கியத்துவம் கருதி சென்னையின் மற்ற வரலாற்று கட்டிடங்கள் குறித்தும் அக்கட்டிடத்தின் பின்னணி குறித்தும் இத்தொடரில் வெளியாகும் .