1). சாட்சியமிருக்க நேர்ந்துவிட்டது
எந்த அநீதியின் பிள்ளைகள்
நாங்கள்?
செய்த செய்யாத எல்லாவற்றுக்கும்
சாட்சியமிருந்தபடி இருந்தோம்.
அந்திகள் அவசியமா?
அதுபோல
பகல்களும் இரவுகளும்.
அறுத்தோடும் காலத்தில்
எம்மீன் என் மீன்
அல்லது
தூண்டிலாகும் விதியா
அறுத்தறுத்துக்
கடந்தால்
வழியெங்கும் மணற்பாதைகள்
வெகுதூர கானலின் மயக்கங்கள்.
2). தொட்டதெல்லாம்
பரிபூரணமாய் நிகழ்ந்தது அழிவு
மதுவிடுதிகள்
வேசையர் விடுதிகள்
போதை வஸ்துக்கள்
காதல்கள்
பணம்
நீதி கோரல்கள்
எல்லாவற்றையும்
தாண்டி
நிகழ்ந்துகொண்டிருந்தது அது
தொட்டதெல்லாம் கசப்பு
அருந்தியதெல்லாம் அமிலம்
மனது சாரமற்றுக்கொண்டிருந்தது
இந்தக் காலத்தை
எதனாலும் சீர் செய்ய இயலாது.
முதல் தடவையென
எத்தனை தடவை
இதையெல்லாம் பாராதிருப்பது
சாரமற்ற மதுக்களின் காலம்
மலைகள் சிலைகளாகாமல்
சிதைகிற காலம்.
3). அமைதியைப் போதித்தல்
பழிவாங்க எல்லா நியாயங்களும் இருந்தன
ஆனால்
எங்களுக்குத்தான்
அமைதியாக இருப்பதுபற்றி சொல்லித்தந்தார்கள்
கூடவே
ஜனநாயகமாக இருப்பது பற்றியும்
நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம்
பழிவாங்க
எல்லா நியாயங்களும் இருந்தும்
வாழ்க்கை நிகழ்ந்தது
ஒரு அவமானமென.
4). நல்லது
அந்தத் துக்கத்தை இப்போதே ஒத்திகை பார்க்கலாமா
நாளை வாடிவிடும் மலர்களா இவை
உன்னருகில் இப்போது யார் இருக்கிறார்கள்
நீ நம்புகிறாயா இவற்றையெல்லாம்
நல்லது
அந்தத் துக்கங்களை
இப்போதே ஒத்திகை பார்க்கலாம்.
5). சொல்லென ஒரு கண்ணீர்
சொல்லென
ஒரு கண்ணீர்
தொண்டையில் தங்கிவிட்டது
என்னின் எந்த மனதோ
இக்கண்ணீர்
சொல்லாலான கண்ணீரே
இப்பொழுதை விடு.