பொன் நிற டிசைன்
பண்டிகை தினத்தன்று இறந்தவன்
துக்கத்தின் அளவை சிறியதாக்கினான்
பெரிய பாறாங்கல் சிறிய கல்லாக மாற
ஒப்புக் கொள்ளாது
அப்படி வேண்டுமென்றால் அங்கிருந்து
நகர்ந்து செல்ல வேண்டும்
துக்கத்திலிருந்து கிளம்பி
எல்லாரும் வெகுதூரம் சென்றனர்
இறுதிஊர்வலத்தில் தான்
அந்த நிகழ்வு எல்லாருக்கும் நடந்தேறியது
ஒலியெழுப்பியபடி வானத்திற்குச் சென்று
பொன் நிற டிசைனில் சிதறிய வெளிச்சத்தில்
எல்லாரும் எல்லாரையும்
ஒருமுறை பார்த்துக் கொண்டனர்
பண்டிகைக்கேயுரிய அந்த மஞ்சள் ஒளியில்
எல்லாரும் ஒரு கணம் தெரிந்து மறைந்தனர்
நெஞ்சை அழுத்தக்கூடிய மனப்பாரங்களை
ஒரு சிறிய கடுகாக்குவதற்கு
நடுவானில் எவ்வளவு மெனக்கெட்டுப்
பிரிந்து கூடுகிறது அந்த பொன்நிற டிசைன்
குளிரின் வருகை
பரந்த நீர்நிலையைப் பார்த்தேன்
குளிர்காலம் அதைப் போலவே சுற்றிலும்
அகன்றிருந்தது
குக்கூவென்ற குயிலால்
அதன் ஒரு சிறு துண்டைக் கூட
சுருக்க முடியாமற் போயிற்று
என்னையும் சேர்த்து அதன் கண்ணில்
அவர் இவர் மற்றும் எல்லாப் பேர்கள்
கழட்டிப்போட்ட இரண்டு காலணிகளுக்கு
இடையே வருகின்ற பிரிவுக்குக் கூட
என்னுடைய முகம் பொருந்திப் போனது
நோய்மையின் கால்களால் என்னை
கையில் ஒரு காகிதத்தைக் கசக்குவது போல
முடியுமா என்றால் முடிந்தது
அந்த மாலையில் தான் எல்லாவற்றிற்கும்
ஒரு அர்த்தம் கிடைத்தது
அதுவும் மை பேனா எழுத்துக்களின் மீது
தண்ணீர் சிந்தியதைப் போல தெரிந்தது
நழுவுதல்
பிடித்துத் தூக்குகையில்
கையில் ஏந்துகையில் எதெதெல்லாம்
நழுவிக்கொள்கின்றன
ஆம் எல்லாமும் தான்
நழுவுகிற முடிவை அது நம்மிடம் நீட்டியது
எல்லாம் சரியாக இருக்கிறதென
தலையாட்டினோம்
நம் கைகள் அதற்கு ஏற்பாடு செய்தன
நாம் தான் அதற்கு விளக்கு பிடித்தோம்
எப்படி ஏற்றினோமோ அப்படியே
இறக்கி வைத்தோம்
நம் உயிரை நாம் தழுவிக் கொள்கையில்
எவ்வளவு ஒய்யாரமாக நழுவிச் செல்கிறது
நாம் பார்த்துச் செய்து கொண்ட நழுவுகை
அதனால் தான் நம்முடைய மரணத்திற்கு
நாம் அழுவது கிடையாது
காற்று மக்கள்
ஒரு காற்றில் இன்னொரு காற்றின்
கால்தடங்கள்
ஒரு காற்றில் இன்னொரு காற்றின்
சத்தங்கள்
ஒரு காற்று மீது இன்னொரு காற்று
பெய்துகொண்டிருந்தது
அது காற்றுகளின் உலகம்
எங்கு பார்த்தாலும் ஒரே காற்று மக்கள்
இப்பொழுது வெளிச்சம் பரவுகின்றது
எங்கும் காற்று தீபம் ஏற்றியுள்ளனர்
மாமலை
அவன் எப்படிச் சோம்பேறியென்றால்
அவனுடலிலிருந்து அவன் உயிர் வெளியேறுகிறது
என்றால் கூட கையைக் காட்டி தடுக்காதவன்
முதல் மாடிக்கு ஏறி ஆடை மாற்றவேண்டியதிருந்தால்
தரைத்தளத்தில் அவனை
அன்றைக்கு நிர்வாணமாகக் காணலாம்
அவனை மொத்தமும்
சோம்பேறித்தனத்தால் நன்கு போர்த்தியிருந்தான்
அவன் மனைவி மூன்று மாதக் கர்ப்பம்
கருவை நான் சுமக்கிறேன் என்று பிறக்காத சிசுவை
வயிற்றில் தான் வாங்கிக் கொண்டான்
அது எப்படிச் சாத்தியமென்று விளங்கவேயில்லை
எதிரில் யார் நிற்கிறார்கள் என்றுகூட
எனக்குத் தெரியவில்லை
சோம்பேறித்தனத்தை வைத்து
எல்லாவற்றையும் மறைத்துக் கொண்டான்.
-செல்வசங்கரன்