ஹனுக்கா* பண்டிகையின் பொழுது ஊரிலிருந்து நகரத்துக்கான சாலை பனி மூடியிருக்கும், ஆனால் இந்த வருடமோ குளிர் குறைவாக உள்ளது. ஹனுக்கா நெருங்கிவிட்ட போதிலும் பனி சிறிதளவே பொழிந்திருக்கிறது. பெரும்பாலான நேரம் சூரியன் ஒளிர்ந்தது. விவசாயிகள் வறண்ட வானிலையின் காரணமாகக் குளிர்காலத் தானிய விளைச்சல் குறையும் என்று புலம்பினர். புற்கள் புதுத்தளிர் விட, விவசாயிகள் தங்கள் கால்நடைகளைப் புல்வெளிகளுக்கு ஓட்டினர்.
குளிராடை தயாரிக்கும் ரூவெனுக்கு அந்த வருடம் நல்ல வியாபாரம் இல்லை. நீண்ட தயக்கத்திற்குப் பிறகு அவர் ஸ்லதே என்ற ஆட்டை விற்க முடிவு செய்தார். அவள் வயதானவள் என்பதால் குறைவாகவே பால் கொடுத்தாள். நகரத்துக் கறிக்கடைக்காரனான ஃப்வீவெல் அவளுக்கு எட்டு கல்டன் தருவான். அந்தப் பணத்திற்கு ஹனுக்காவிற்கான மெழுகுவர்த்திகள், உருளைக்கிழங்குகள், பணியாரத்திற்கான எண்ணெய், குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்கள், மற்றும் விடுமுறை தினத்திற்குத் தேவையான பிற அவசியப் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். ரூவென் மூத்த மகன் ஆரோனிடம் ஆட்டை நகரத்துக்கு ஓட்டிச் செல்லுமாறு கூறினார்.
ஃப்வீவெலிடம் ஆட்டை கொண்டுசெல்வதன் பொருள் என்னவென்று ஆரோனுக்கு புரிந்திருந்தாலும், அவன் தன் தந்தையின் ஆணையை நிறைவேற்ற வேண்டியவன். அவன் அம்மா லியா அந்தச் செய்தியைக் கேட்டவுடன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். ஆரோனி்ன் இளைய தங்கைகளான அன்னாவும், மரியமும் உரக்க அழுதார்கள். ஆரோன் கம்பளி மேலங்கியும் காதுறை கொண்ட தொப்பியும் அணிந்து கொண்டு, ஸ்லதேவின் கழுத்துப்பட்டையையும் வழியில் தின்பதற்கு வெண்ணெய்யுடன் இரண்டு ரொட்டிகளும் எடுத்துக்கொண்டான். ஆரோன் ஸ்லதேவை மாலையில் கொண்டுபோய் சேர்த்துவிட்டு, இரவு கறிக்கடையில் தங்கி மறுநாள் காலை பணத்துடன் வரவேண்டும்.
குடும்பத்தினர் விடைகொடுத்தவுடன் ஆரோன் ஸ்லதேவின் கழுத்தைச் சுற்றி கயிற்றைப் பிணைத்தான். ஸ்லதே எப்போதும்போல அமைதியாக நின்றுகொண்டிருந்தாள். அவள் ரூவெனின் கையை நக்கினாள். தன்னுடைய சிறிய வெண்தாடியை உலுக்கிக்கொண்டாள். ஸ்லதே மனிதர்களை நம்பினாள். அவர்கள் எப்போதும் உணவு கொடுத்ததன்றி அளவறிய ஒருபோதும் தீங்கு செய்தது கிடையாது.
ஆரோன் அவளை நகரத்துக்குச் செல்லும் சாலைக்குக் கூட்டிவந்த போது, அவள் சற்றே ஆச்சரியமடைந்திருந்தாள். அவள் அந்தப் பக்கம் முன்னெப்போதும் ஓட்டிவரப்பட்டது இல்லை. அவன் பக்கம் திரும்பி “என்னை எங்கே கொண்டு செல்கிறாய்?” எனக் கேட்பதுபோல் பார்த்தாள். பின்னர் அவளே ஆடெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்ற முடிவிற்கு வந்தவள்போல் காணப்பட்டாள். ஆனாலும் அந்தச் சாலை வித்தியாசமாகவே இருந்தது. அவர்கள் புதிய வயல்களையும் புல்வெளிகளையும் கூரை வேய்ந்த குடிசைகளையும் கடந்து சென்றார்கள். அங்குமிங்குமாக நாய்கள் குரைத்தபடி அவர்களைத் துரத்தி வந்தன. ஆனால் ஆரோன் அவனது குச்சியால் அவற்றைத் துரத்தியடித்தான்.
ஆரோன் ஊரைவிட்டுக் கிளம்பும்போது வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. திடீரென்று வானிலை மாறியது. கருநீலமான மிகப்பெரிய மேகம் கிழக்கில் தோன்றி மிக வேகமாக வான் முழுக்க பரவியது. குளிர்ந்த காற்று அதனுடன் வீசியது. காகங்கள் கரைந்தபடி தாழ்வாகப் பறந்தன. முதலில் மழை வருவதுபோல தோன்றினாலும் வெயில் காலம்போல ஆலங்கட்டிகள் விழத் தொடங்கின. காலை நேரமாக இருந்தாலும் அந்தியைப்போல் இருள் படர்ந்தது. சிறிது நேரத்தில் ஆலங்கட்டிகள் பனியாக உறைந்தன.
தன்னுடைய பன்னிரண்டு வயதில் ஆரோன் எல்லா வகையான வானிலையையும் பார்த்திருந்தாலும் இதுபோன்ற ஒரு பனியை அவன் ஒருபோதும் அனுபவித்ததில்லை. அதன் அடர்த்தி பகல் வெளிச்சத்தையே போக்கிவிட்டது. குறுகிய நேரத்திலேயே அவர்களது பாதையை முழுமையாக மூடிவிட்டது. காற்று பனிக்கட்டியைப்போல் குளிர்ந்திருந்தது. நகரத்துக்குச் செல்லும் வளைவுகள் மிகுந்த சாலை குறுகலானதும் கூட. ஆரோனுக்கு தான் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை. அவனால் பனியின் ஊடாக பார்க்க முடியவில்லை. குளிர் விரைவில் அவனது கம்பளி மேலங்கியை ஊடுருவியது.
ஆரம்பத்தில் ஸ்லதே வானிலையைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அவளுக்கும் பன்னிரண்டு வயது தான். குளிர்காலம் என்றால் என்னவென்றும் தெரியும். ஆனால் அவளுடைய கால்கள் மேலும் மேலும் பனியில் அமிழ்ந்த போதுதான், தன் தலையைத் திருப்பி ஆரோனை வியப்போடு பார்த்தாள். அவளுடைய சிறிய கண்கள் “ இப்படிப்பட்ட புயலில் நாம் ஏன் வெளியில் இருக்கிறோம்?” என்று வினவுவதுபோல் இருந்தது. ஆரோன் குடியானவன் யாரேனும் தன் வண்டியுடன் வரக்கூடும் என நம்பினான், ஆனால் ஒருவர் கூட தென்படவில்லை.
பனி மேலும் அடர்த்தியாக, சுழலும் பனித்துகள்களாக நிலத்தில் பெரிய அளவில் பொழிந்தது. ஆரோனின் பூட்ஸூக்கு அடியில் உழுத வயல் தட்டுப்பட்டது. அவன் தான் சாலையிலேயே இல்லை என்பதை உணர்ந்தான். அவன் வழி தவறிவிட்டிருந்தான். அவனால் திசைகளையோ, ஊருக்கும் நகருக்கும் செல்லும் வழிகளையோ அறிய முடியவில்லை. காற்றானது கிறீச்சிட்டும் ஊளையிட்டும் பனிச்சுழல்களை உருவாக்கியது. அது பார்ப்பதற்கு வெண்ணிறக் குட்டிச் சாத்தான்கள் வயலை பிடித்து ஆடிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. வெண்துகள்கள் நிலத்தை மூடிக்கொண்டன. ஸ்லதே நின்றுவிட்டாள். அவளால் அதற்கு மேல் நடக்க முடியவில்லை. அவள் பிடிவாதமாகத் தன் பிளந்த குளம்புகளைப் பூமியில் அழுந்த பதித்து தன்னை வீட்டிற்குக் கூட்டிச் செல்லுமாறு கத்தினாள். அவளது வெண்தாடி பனிக்கட்டிகள் படிந்தும் கொம்புகள் உறைபனியில் பளபளத்தும் காணப்பட்டன.
ஆரோன் தாங்கள் ஆபத்தில் இருப்பதை மனம்கொள்ள விரும்பாவிடினும் ஏதேனும் ஒரு தங்குமிடத்தை அடையாவிட்டால் பனியில் உறைந்து சாவது உறுதி என்று அறிந்திருந்தான். அது சாதாரணமான புயல் அல்ல. கடும் உறைபனி புயல். பனிப்பொழிவு அவன் கால்முட்டி வரை மூடிவிட்டது. அவனுக்கு கைகள் மரத்துப் பாதங்கள் இருக்கும் உணர்வே இல்லாமல் ஆகிவிட்டது. அவனுக்குச் சுவாசிக்கும் போது மூச்சு திணறியது. மரம்போல ஆகிவிட்ட மூக்கைப் பனியில் தேய்த்துக்கொண்டான். ஸ்லதே அழுவதுபோல கத்தினாள். அவள் நம்பிய மனிதர்கள் அவளை ஏதோ வலைக்குள் சிக்க வைத்துவிட்டனர். ஆரோன் தனக்காகவும் அந்த அப்பாவி விலங்குக்காகவும் கடவுளிடம் வேண்டிக்கொண்டான். திடீரென்று அவன் குன்றுபோல ஒரு வடிவத்தைக் கண்டான். அது என்னவாக இருக்குமென்று வியந்தான். பனியை யார் அவ்வளவு பெரிதாகக் குவித்திருப்பார்கள்? அவன் அதை நோக்கி ஸ்லதேவையும் இழுத்துக்கொண்டு சென்றான். அருகணைந்தபோதுதான் அது பனியால் மூடப்பட்ட மிகப்பெரிய வைக்கோல்போர் என உணர்ந்தான்.
சட்டென்று ஆரோன் தாங்கள் காப்பாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்தான். பெரு முயற்சியெடுத்து பனியில் வழியை உருவாக்கினான். அவன் கிராமத்துப் பையன் என்பதால் என்ன செய்ய வேண்டும் என அறிந்திருந்தான். வைக்கோல்போரை அடைந்தவுடன் தனக்கும் ஸ்லதேவிற்கும் ஒரு கூட்டை உருவாக்கிக் கொண்டான். வெளியே குளிர் எவ்வளவு இருந்தாலும் வைக்கோல்போருக்குள் எப்போதும் கதகதப்பாகவே இருக்கும். அதோடு வைக்கோல்போர் ஸ்லதேவிற்க்கு உணவும் கூட. அவள் அதை மோப்பம் பிடித்த நொடியில் மகிழ்ச்சியாகி உண்ணத் தொடங்கிவிட்டாள். வெளியே பனி பொழிந்த வண்ணம் இருந்தது. அது விரைவாக ஆரோன் தோண்டியெடுத்த வழியை மூடிவிட்டது. அவர்கள் புகுந்திருந்த இடத்தில் காற்று வெகு குறைவாகவே இருந்தது. அவர்கள் சுவாசிப்பதற்காக ஆரோன் வைக்கோலையும் பனியையும் துளைத்து ஒரு வகையான சன்னலை உருவாக்கி அந்த வழி அடையாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டான்.
ஸ்லதே நிறைவாக உண்ட பிறகு, தனது பின்னங்கால்களில் அமர்ந்து மனிதர்களின் மீதான தன் நம்பிக்கையை மீட்டுக்கொண்டவள் போலக் காணப்பட்டாள். ஆரோன் தன்னுடைய இரண்டு ரொட்டி துண்டுகளையும் வெண்ணெய்யையும் தின்ற பின்னும் அந்தக் கடினமான பயணத்தினால் பசி அடங்காதவனாயிருந்தான். அவன் ஸ்லதேவின் மடி நிறைந்திருப்பதைக் கவனித்தான். அவளிடமிருந்து கறக்கும் பால் தன் வாயில் பீய்ச்சி அடிக்கும் வகையில் அவள் அருகே படுத்துக்கொண்டான். பால் செழிப்பாகவும் சுவையாகவும் இருந்தது. ஸ்லதே அந்த வகையில் பால் தரப் பழகியிருக்கவில்லையெனினும் எதிர்ப்பும் காட்டவில்லை. மாறாக, அவள் ஆரோன் தன்னை சுவர்கள், தரை, கூரை என அனைத்தும் உணவேயான பாதுகாப்பிடத்திற்கு கூட்டி வந்தமைக்காக கைம்மாறு செய்ய விரும்பியவள்போல் காணப்பட்டாள்.
ஆரோனால் சன்னல் வழியாக வெளியில் நடப்பவற்றின் சிறு கீற்றுகளைக் காண முடிந்தது. காற்று பனியை முழு அலைகளாகச் சுமந்து வந்தது. அங்கு இருள் கவிந்திருந்ததால் அவனுக்கு இரவு ஆகிவிட்டதா அல்லது அந்தக் காரிருள் புயலினாலா என்று தெரிந்திருக்கவில்லை. கடவுள் புண்ணியத்தில் வைக்கோல்போர் குளிராமல் காத்தது. வைக்கோலும் புற்களும் வயல்வெளி பூக்களும் கோடை சூரியனின் வெப்பத்தைக் கசியவிடுபவை. ஸ்லதே அடிக்கடி சாப்பிட்டாள்; அவள் மேல் கீழாக, இடவலமாக நாலா திசைகளிலும் மேய்ந்தாள். அவளிடம் இருந்த விலங்குக்குரிய வெப்பம் ஆரோனை அவளோடு ஒட்டியிருக்கச் செய்தது.
அவன் ஸ்லதேவை எப்போதுமே நேசித்திருந்தாலும் இப்போது அவள் ஒரு சகோதரிபோலவே இருந்தாள். அவன் குடும்பத்திலிருந்து துண்டிக்கப்பட்டு தனியாக இருந்தான். பேச விரும்பினான்.
அவன் ஸ்லதேவுடன் பேச ஆரம்பித்தான். “ஸ்லதே, நமக்கு நடந்ததைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” எனக் கேட்டான்.
“மே…” ஸ்லதேவின் பதில்.
ஆரோன் சொன்னான் “நாம் மட்டும் இந்த வைக்கோல்போரைக் கண்டுபிடித்திருக்கவில்லையென்றால் இதற்குள் உறைந்து விறைத்துப் போயிருப்போம்.”
“மே,,,,” என்றாள் அவள் மறுமொழியாக.
“பனி இப்படியே தொடர்ந்து பொழிந்தால், நாம் இங்கேயே சில நாட்கள் இருக்க நேரலாம்” ஆரோன் விளக்கினான்.
“மே…” ஸ்லதே சினைத்தாள்.
“ மே… என்றால் என்ன அர்த்தம்?” ஆரோன் கேட்டான். “நீ கொஞ்சம் தெளிவாகப் பேசலாம்.”
“மே… மே…” ஸ்லதே முயன்றாள்.
“பரவாயில்லை, அது மே…யாகவே இருக்கட்டும்” ஆரோன் பொறுமையாகச் சொன்னான்.
“உன்னால் பேச முடியாது, ஆனால் உனக்குப் புரியுமென்று எனக்குத் தெரியும். எனக்கு நீயும் உனக்கு நானும் தேவை. சரிதானே?”
“மே…”
ஆரோனுக்கு தூக்கம் சொக்கியது. கொஞ்சம் வைக்கோலை எடுத்து தலையணையாக்கி அதில் தலையைச் சாய்த்தபடி கண்ணயர்ந்தான். ஸ்லதேவும் தூங்கிவிட்டாள்.
ஆரோன் கண்விழித்தபோது அது பகலா இரவா என்று அவனுக்குத் தெரியவில்லை. பனி அவனுடைய சன்னலை அடைத்துவிட்டிருந்தது. அவன் அதை அகற்ற முயற்சிதான், ஆனால் அவனுடைய கை நீளத்திற்குத் தோண்டிய பிறகும் கூட அவனால் வெளிப்பக்கத்தை அடைய முடியவில்லை. அதிர்ஷ்டவசமாகத் தன்னிடமிருந்த குச்சியால் அதை உடைத்துத் திறக்கச்செய்தான். வெளியே இன்னும் இருட்டாகவே இருந்தது. பனி தொடர்ந்து பொழிய, காற்று ஒருவர் போலவும் பின்னர் பலர் போலவும் ஓலமிட்டது. சிலநேரங்களில் அதன் ஒலி சாத்தானின் சிரிப்பு போல இருந்தது. ஸ்லதேவும் எழுந்தவுடன் ஆரோன் அவளுக்கு வணக்கம் சொல்ல, அவள் “மே…” என்றாள். ஆமாம், ஸ்லதேவின் மொழி ஒரேயொரு வார்த்தை மட்டுமே கொண்டது, ஆனால் அதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. இப்போது அதன் அர்த்தம் ”கடவுள் நமக்குக் கொடுக்கும் எல்லாவற்றையும் நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் – வெப்பம், குளிர், பசி, நிறைவு, ஒளி, மற்றும் இருள்.”
ஆரோன் பசியோடுதான் கண்விழித்திருந்தான். அவன் உணவு தீர்ந்துவிட்டிருந்தாலும் ஸ்லதேவிடம் நிறையவே பால் இருந்தது.
மூன்று நாட்கள் ஆரோனும் ஸ்லதேவும் அந்த வைக்கோல்போரில் தங்கியிருந்தார்கள். ஆரோன் ஸ்லதேவை எப்போதுமே நேசித்தானாயினும் இந்த மூன்று நாட்களில் அவன் அவளை மிக மிக நேசித்தான். அவள் தன் பாலால் அவனுக்கு உணவூட்டியும் தன் வெம்மையால் அவனுக்குக் குளிராமல் இருக்கவும் உதவினாள். தன் பொறுமையால் அவனுக்கு இதம் அளித்தாள். அவன் அவளுக்கு நிறையக் கதைகள் சொன்னான், அவள் எப்போதும் காதுகளை விடைத்துக் கவனித்தாள். அவன் அவளைச் செல்லமாகத் தட்டிய போது அவன் கையையும் முகத்தையும் நக்கி “மே…” என்றாள். நானும் உன்னை விரும்புகிறேன் என்பதே அதன் பொருள் என்று அவன் அறிந்திருந்தான்.
பனியானது மூன்று நாட்கள் கொட்டியது. ஆனால் முதல் நாளுக்குப் பிறகு அத்தனை அடர்த்தியாக இல்லை, காற்றும் குறைந்துவிட்டது. சில சமயங்களில் ஆரோனுக்கு கோடையென்பதே இல்லையென்றும் தனக்கு நினைவு தெரிந்தது முதல் பனி மட்டுமே பொழிந்து கொண்டிருக்கிறது என்றும் தோன்றியது. அவன், ஆரோன், அப்பாவோ, அம்மாவோ அல்லது தங்கைகளோ யாரும் இல்லாதவன். அவன் பனியில் பிறந்த பனிக்குழந்தை, ஸ்லதேவும் கூட. வைக்கோல்போருக்குள் முற்றமைதியாக இருந்ததால் அவன் காதுகளில் ஒலியின்மை ரீங்காரித்தது. ஆரோனும் ஸ்லதேவும் இரவு முழுவதும் பகலில் பெருமளவும் தூங்கினார்கள். ஆரோனின் கனவுகள் பெரும்பாலும் வசந்தகாலத்தைப் பற்றியே இருந்தன. அவன் பச்சை வயல்களையும் பூத்து குலுங்கும் மரங்களையும் தெளிந்த ஓடைகளையும் பாடும் பறவைகளையும் கனவு கண்டான். மூன்றாம் நாள் இரவு பனி நின்றது. ஆனால் ஆரோனுக்கு அந்த இருட்டில் வீட்டிற்கு வழி தேடிக்கொண்டு செல்லத் தைரியமில்லை. வானம் தெளிந்து வந்தவுடன் நிலவு தன் வெள்ளியிழைகளைப் பனியில் விரித்து ஒளிர்ந்தது. ஆரோன் வழி உருவாக்கி வெளியே வந்து உலகத்தைப் பார்த்தான். அங்கு அனைத்தும் வெண்மையாக, அமைதியாக, சொர்க்கத்தின் பிரகாசக் கனவுகளென இருந்தன.
நான்காம் நாள் காலையில், ஆரோன் பனிச்சறுக்கு வண்டியின் மணியோசையைக் கேட்டான். வைக்கோல்போர் சாலையிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. பனிச்சறுக்கு வண்டியை ஓட்டிவந்த குடியானவன் அவனுக்கு வழி காட்டினான் – நகரத்திற்கோ கறிக்கடைக்காரனான ஃப்வீவெல்லிடமோ அல்ல, கிராமத்து வீட்டிற்கு. ஆரோன் வைக்கோல்போரிலேயே ஸ்லதேவை ஒருபோதும் பிரிவதில்லை என முடிவெடுத்துவிட்டிருந்தான்.
புயலின்போது ஆரோனது குடும்பமும் அண்டைவீட்டுக்காரர்களும் அவனையும் ஆட்டையும் தேடி ஒரு தடயமும் கிடைக்காதிருந்தனர். அவர்கள் வழிதவறியிருப்பார்கள் எனப் பயந்தார்கள். ஆரோனின் அம்மாவும் தங்கைகளும் அவனுக்காக ஏங்கி அழுதார்கள்; அவனது அப்பா மௌனமாக இறுக்கத்துடன் காணப்பட்டார். திடீரென்று பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் ஆரோனும் ஸ்லதேவும் தெருவில் வந்துகொண்டிருக்கும் செய்தியுடன் அவர்கள் வீட்டிற்கு ஓடி வந்தார்.
குடும்பத்தினர் மிகுந்த சந்தோசமடைந்தார்கள். ஆரோன் தான் எப்படி வைக்கோல்போரைக் கண்டுபிடித்தான் என்பதையும் ஸ்லதே எப்படி அவளது பாலால் தனக்கு உணவூட்டினாள் என்பதையும் அவர்களுக்கு கூறினான். ஆரோனின் தங்கைகள் ஸ்லதேவை கட்டிப்பிடித்தும் முத்தமிட்டும் நறுக்கிய கேரட்களையும் உருளைக்கிழங்கு தோலையும் சிறப்பு விருந்தாகத் தந்தார்கள். அவள் பசி மிகுதியில் அவற்றை அள்ளி உண்டாள். அதன் பிறகு யாருமே ஸ்லதேவை விற்பது பற்றி எண்ணவில்லை, அதோடு குளிர்காலமும் தொடங்கிவிட்டதால் கிராமத்தினருக்கு குளிராடை வியாபாரியான ரூவெனின் சேவை மீண்டும் தேவைப்பட்டது. ஹனுக்கா வந்தபொழுது ஆரோனின் அம்மாவால் எல்லா மாலை வேளைகளிலும் பணியாரம் சுட முடிந்ததுடன் ஸ்லதேவும் அவள் பங்கைப் பெற்றாள். ஸ்லதேவிற்கென்று தனி பட்டி இருந்தாலும் அவள் அடிக்கடி சமையலறைக்கு வந்து கதவைத் தன் கொம்புகளால் தட்டி தான் வந்திருப்பதை உணர்த்தும் போதெல்லாம் உள்ளே அனுமதிக்கப்பட்டாள். மாலையில் ஆரோனும் மரியமும் அன்னாவும் டெரிடெல் விளையாடுவார்கள். ஸ்லதே அடுப்புக்கு அருகில் அமர்ந்து குழந்தைகளையும் அலைந்து எரியும் ஹனுக்கா மெழுகுவர்த்திகளையும் பார்த்துக் கொண்டிருப்பாள்.
அவ்வப்போது ஆரோன் அவளிடம் கேட்பான் “ஸ்லதே, நாம் ஒன்றாய் கழித்த அந்த மூன்று நாட்கள் உனக்கு ஞாபகம் உள்ளதா?”
ஸ்லதே ஒரு கொம்பால் கழுத்தைச் சொறிந்து கொண்டு வெண்தாடி தலையை ஆட்டியபடி, தன் அனைத்து எண்ணங்களையும் அத்தனை அன்பையும் வெளிப்படுத்தும், ஒற்றை ஒலியைப் பதிலாகத் தருவாள்.
——————***—————-
*ஹனுக்கா என்பது யூதர்களின் புனிதப் பண்டிகையாகும். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் கிரேக்க மன்னன் ஆண்டியோகஸ் யூதர்களின் புனித நகரான ஜெருசலேத்தை கைப்பற்றினான். யூதர்களைக் கிரேக்க மதத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தினான். கோபம் கொண்டு இந்த அநியாயத்தை எதிர்த்துப் போர் செய்து ஜெருசலேத்தை மீட்டார்கள். வெற்றி பெற்ற பிறகு இடிந்து கிடந்த புனிதக் கோவிலில் ஹனுக்கா மெழுகுவர்த்தியை ஏற்றினார்கள். ஒன்பது தனித்தனி மெழுகுவர்த்திகளைப் பொருத்தி ஏற்றும் கொத்து விளக்குத் தண்டை ஹனுக்கா என்று அழைப்பார்கள். அவர்கள் ஏற்றிய ஹனுக்கா விளக்கானது அணையாமல் ஒன்பது நாட்கள் தொடர்ந்து ஒளி வீசியது. இந்த அற்புதத்தைக் கொண்டாடுவதே ஹனுக்கா பண்டிகையாகும்.
ஜெருசலேமில் இருந்த யூதர்களின் கோவிலை இடித்துத் தள்ளினான். யூத வீரர்களான மக்கபீஸ் இந்த அநியாயத்தை எதிர்த்துப் போர் செய்து ஜெருசலேத்தை மீட்டார்கள். வெற்றி பெற்ற பிறகு இடிந்து கிடந்த புனிதக் கோவிலில் ஹனுக்கா மெழுகுவர்த்தியை ஏற்றினார்கள். ஒன்பது தனித்தனி மெழுகுவர்த்திகளைப் பொருத்தி ஏற்றும் கொத்து விளக்குத் தண்டை ஹனுக்கா என்று அழைப்பார்கள். அவர்கள் ஏற்றிய ஹனுக்கா விளக்கானது அணையாமல் ஒன்பது நாட்கள் தொடர்ந்து ஒளி வீசியது. இந்த அற்புதத்தைக் கொண்டாடுவதே ஹனுக்கா பண்டிகையாகும்.
ஹனுக்கா பண்டிகை நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வரும். ஒன்பது நாட்கள் அணையாமல் மெழுகுவர்த்தி ஒளிர்ந்த அற்புதத்தை நினைவு கூறுவதற்காக ஒன்பது நாட்கள் ஹனுக்கா பண்டிகை கொண்டாடப்படும். அப்போது வீட்டில் உறவினர்கள் எல்லோரும் ஒன்றாகத் தங்கிப் பேசி மகிழ்வார்கள். தினமும் மாலை வீட்டில் ஹனுக்கா விளக்கை ஏற்றுவார்கள். பணியாரம், உருளைக்கிழங்கு வறுவல் என எண்ணெய்யில் செய்த தின்பண்டங்கள் சமைக்கப்படும். குழந்தைகளும் பெரியவர்களும் சேர்ந்து ட்ரைடல் விளையாடுவார்கள்.